ஒரு கத சொல்ட்டா..?!"
எங்கம்மா, பாட்டி, தொத்தா (சித்தி), நானுனு எல்லோரும், ரெண்டு கிலோமீட்டர் தள்ளியிருக்ற எங்கூரு தியேட்டர்ல, ஈவ்னிங் ஷோ பார்த்துட்டு வெளியே வந்தோம்...
அப்போ, நைட்ஷோவுக்கான 'உத்தமப் புத்திரன்' பட போஸ்டர்ல, ராகிணியை ராவா காமிச்சுட்டு, பத்மினியின் கச்சையை முக்கால்வாசி மூடியிருந்த 'இன்றே கடைசி' ன்ற அரையடி 'பிட்டு' போஸ்டரை கை காட்டி, அதை நான் பார்த்தேயாகணும்'னு அடம்புடிச்சப்போ எனக்கு வயசு ஆறு!
இந்தக் கொழந்தயோட ஆசையை நிறைவேத்த, நைட்ஷோவுக்கும் டிக்கெட் எடுத்துட்டு பால்கனியில உட்கார்ந்து படம் பார்த்துக்கிட்ருந்தோம்...
கொஞ்ச நேரத்துல, "யாரடீ நீ மோகினீ..." னு பாட்டு ஓடிக்கிட்ருந்தப்போ.., எல்லாரும் ஸ்டைலான சிவாஜியை ரசிச்சுக்கிட்டிருந்தாங்க...
நான் மட்டும், அது டாப் ஆங்கிள்' ஷாட்'னு கூடத் தெரியாம.., கிறுகிறுகிறு'னு சுத்திக்கிட்டிருந்த அந்த ரெண்டு நாயகிகளோட முட்டியாச்சும் தெரிஞ்சிடாதா'னு, முட்டிபோட்டு குனிஞ்சு பார்த்துக்கிட்ருந்தேன்... ஆனா.., கால் கட்டைவிரல் கூடத் தெரியாதபடி தரையைப் பெருக்குற அளவுக்குப் பாவாடையைக் கட்டியிருந்தாங்க அவங்க! அடுத்தமுறை தரை டிக்கெட் எடுத்துவந்து பார்த்துடணும்'னு முடிவு செய்தேன்.
இந்த நேரத்துல தான்.., திடீர்னு அந்தப் பாட்டுல வர்ற சாட்டையடி மட்டும் எனக்கு பொளீர்... பொளீர்னு DTS ல கேட்குது...
என்னடா விஷயம்னு திரும்பிப் பார்த்தா.., சிவாஜிக்கு பதிலா, என் அப்பா கையில சாட்டையோட பக்கத்துல நின்னுக்கிட்ருக்காரு...
மாலைக்காட்சிக்குப் போனவங்க, இரவு பதினோரு மணியாகியும் வீடு திரும்பாததால.., எங்களைத் தேடிக்கிட்டு தியேட்டர் பால்கனிக்கே வரிஞ்சுக்கட்டிக்கிட்டு வந்த என் தகப்பர்.., எல்லாத்துக்கும் காரணமான என்னய விட்டுட்டு, அம்மா, சித்தினு என்னோட உட்கார்ந்திருந்த எல்லா பொம்பளைங்களையும் பொள.. பொள'னு பொளந்துக்கிட்ருக்காரு...
தடுக்கப் பார்த்தப் பாட்டியை, பெத்த ஆத்தானு கூடப் பாக்கலையே.., சும்மா.., வுட்ட அடியில, பாட்டிக்கு கடவாப்பல்லு பேந்துடுச்சி!!
இப்ப கூட, அந்தப் பாட்டு டிவியில ஓடும்போதெல்லாம்... சம்பவத்தை நெனச்சு பயத்தோடவே பகிர்ந்துக்குவாங்க, எங்க அம்மா.
ம்ம்.., முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்துட்டேன்...,
அன்னிக்கி, அனுமதியின்றி "உத்தமப்புத்திர"னைப் பார்த்ததற்காக உதை வாங்கிய எங்க வீட்டுப் பொம்பளைங்களுக்கு.., ஈவ்னிங் ஷோ பார்க்க மட்டும் முழுச் சுதந்திரம் இருந்தது... ஏனெனில், அப்படத்தின் பெயர்... "அடிமைப்பெண்!"
- ப்ரியா வெங்கடேசன் @ 8056584237.