திடியன் மலையடிவாரம் பெருமாள் சோலை, வானவனும், வள்ளியும் பெரிய கழுவன் குடி சென்று திரும்பிய நாளிலிருந்து யாகம் வளர்த்து பூஜை செய்கின்றனர். வானவரோடு பூஜையில் அமர்ந்திருந்த தங்கையைப் பார்த்த துரை ராசுவுக்கு, உண்மையில் இவள் தங்கள் தங்கை தானா என்ற சந்தேகம் தோன்றாமல் இல்லை. அந்தளவு காட்டு பெண்ணாய் திரிந்த வள்ளி, வானவன் கரம் பிடித்து, அவரோடு வாழ ஆரம்பிக்கவும் ராணிக்கு உரியப் பொழிவோடு மாறி இருந்தாள்.
வானவருக்குத் திருமணம் செய்து வைத்த பொழுதிலேயே,வல்லபர் ஒரு நிபந்தனையும் விதித்திருந்தார். பெயருக்கு வள்ளியை மணமுடித்து , பூஜைக்கு என மனையில் அமர்த்தினால் மட்டும் போதாது , முழுமையாக அவள் வானவனின் மனையாள் ஆகியிருக்க வேண்டும் என்பதே.
தெய்வ கைங்கரியம்,மனதார வேண்டும் பிரார்த்தனைகள் எண்ணங்களுக்கே வலிமை அதிகம். இரு வேறு நிலம், மொழி, வாழ்க்கை முறையைக் கொண்டவர்களை இணைக்க, எண்ணம் ஒருமித்ததாக இருக்க, தாம்பத்தியமே சிறந்த வழி என்பது வல்லபர் கணக்கு.
வள்ளிக்குப் பால்ய விவாகம் நடை பெற்றிருந்தது. அவள் கணவன் மறைந்திருந்த போதும், கன்னியாகவே தான் இருந்தாள். தாம்பத்திய வாழ்வு வாழ்வு வாழ்ந்து, பூரண மகிழ்ச்சியோடு, கணவனோடு சேர்ந்து மனைவி யாகங்களுக்குப் பலன் கிடைக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை. பெரிய கழுவன் குடியில்,பத்மாசினி, வாசவன் செய்யும் சாம பூஜை நல்லபடியாக நடக்க உற்றவர் செய்யும் வேண்டுதல் இந்த பூஜைகள்.
பெரிய கழுவன் குடியிலிருந்து சிங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி, தங்கை, தம்பி இருவரையும் அங்கு விட்டுத் திரும்பிய தினம், காட்டு மாளிகையில் தங்கினர். சந்தர்ப்பவசத்தால் வானவரை மணந்தாலும் வள்ளிக்கு உள்ளே ஒரு உதறல், அவருக்குத் தான் ஏற்றவளா என்ற தயக்கமும் இருந்தது.
குண்டாற்றங்கரையில் , தங்கராசு, தாமினி சந்தித்த அதே மரத்தடியில் வானவரும், வள்ளியும் அமர்ந்திருந்தனர். தாமினியின் செயல் அவரை மிகவும் பாதித்து இருக்க, இனி தாமனியைப் பற்றிய கவலையே வேண்டாம், தங்கராசு பார்த்துக் கொள்வான் என வள்ளி தேற்ற, சற்றே சமாதானம் அடைந்தார்.
வானவன் வானை வெறித்தபடி மோன நிலையிலிருந்தார். திருமலை வாசன், பத்மாசினியை பார்த்த பிரமிப்பு அவரிடம் இருந்தது. பெருமூச்சோடு வள்ளியைப் பார்த்தவர், “சந்திரகிரி, பெருமாளின் தேசம் வள்ளி. ஏழுமலையான் சேவைக்கு ஜென்ம, ஜென்மமாய் பிறப்பெடுக்கும் ஜோடியைப் பார்த்தாயா?” வினவியவர் அவள் பதிலுக்கும் காத்திருக்காமல் தானே பேசினார்.
“அதே கடமை நமக்கும் உண்டு. சந்திர கிரியை மீட்பது ஒன்றே என் வாழ் நாள் லட்சியம். சந்திரகிரியை வெற்றி கொள்வதோடு மட்டுமின்றி அதை காத்து, தக்க வைத்துக் கொள்வதும் பெரிய போராட்டம் தான். என்னோடு உன் வாழ்க்கை இணைந்ததும் தெய்வ சங்கல்பம் தான். நம் பயணம் அவ்வளவு எளிதானதாக இருக்காது .” எனவும்,
“காடு மேடுன்னாலும், நாடு கடந்து எங்கேயும் உங்களோட வர தயாரா இருக்கேன்” மெல்லிய குரலில் சொன்னாள்.
“ சில நேரங்களில் அரண்மனையும் கிடைக்கும்.நான் அதை சொல்ல வில்லை” எனச் சிரித்தவர், “ நம்ம லட்சியத்தை அடையிற இந்த பயணத்தில், நம்ம விருப்பத்துக்கு எதிரான முடிவுகளும் எடுக்க வேண்டியது வரும். எல்லாமே அவன் செயல்னு மனசை திடமாக்கிட்டு கடந்து வரணும்” என்றார்.
“நானும் அப்படி தானா?” கேட்டுவிட்டாள் வள்ளி. ஏனெனில் திருமணமாகி மூன்று நாள்கள் ஆகியும், இன்று தான் தனிமையிலாவது சந்தித்து இருக்கின்றனர்
அவள் முகத்தைக் கூர்ந்து நோக்கியவர், “நான் கலங்கி நிற்கும் போதெல்லாம் வந்து ஆறுதல் சொன்ன , என் குழந்தைக்குத் தாயாக இருந்த , சோலைக்குள் தீயசக்தி நுழையாமல் காவல் தெய்வமா நின்ன, தாமினிக்காக முடிவெடுக்கும் நேரம் உரிமையாய் கட்டளையிட்ட , இதெல்லாம் நம்மை மீறி நடந்தது. அவன் நினைச்சான், நீ என் பக்கத்தில் இருக்க.”என சித்தபண்டூர் கோவிலை நோக்கி கை காட்டினார்.
“அதுவும் சரிதான். பத்மாசினி மாதிரி ஜென்ம தாண்டிய காதலோ, தாமினி மாதிரி தாளாத காதலோ எல்லாருக்கும் சாத்தியமா என்ன. கடமைக்காக தானே கட்டிக்கிட்டிங்க” அவள் குறை பட்டு முகத்தைத் திருப்பினாள்.
மனையால் என்று வந்து விட்டால் உரிமையும் தன்னால் வந்து விடுகிறதே. வள்ளி மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? தன்னை மறந்து சிரித்தவர், “சோகத்தில் உழன்று கொண்டிருந்தவன், கடமைக்காக உயிர் வாழுறவன்கிட்ட காதலை எதிர்பார்க்கலாமா? நான் கடமையை செய்யிறேன். நீ காதலை நிரப்பு” என்றார்.
காதலென்று சொல்லவுமே அவளுக்கு விதிர் விதிர்த்தது.“ஆமாம், பக்கத்தில வரவே கால் வரலையாம். இதில எங்கிருந்து காதல்” அவள் வேறு புறம் திரும்பிக் கொள்ள, அவள் புலம்பல் தெளிவாகக் காதில் கேட்டது.
“இப்போதிலிருந்து இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கும் வருவது போல் முயற்சி செய்வோமே” என்றவர், அவள் கைகளைப் பற்றி, “பெருமாள் சாட்சியாக விவாகம் செய்து இருக்கேன் வள்ளி. நிச்சயம் அந்த வாக்கைக் காப்பாற்றுவேன்” என அவளை தன்புறம் திருப்ப, வள்ளிக்கு நிஜமாகவே உதறல் எடுத்தது.
அதை உணர்ந்தவர், “ஆஹா, காதலை யாசிக்கிறவளுக்கு, அதை தாங்கும் சக்தி வேண்டாமா” நகைத்தபடி கேட்க, அந்த குரலே அவளை ஏதோ செய்தது. குளிர் காற்றிலும் வியர்வை முத்துக்கள் அரும்பின.
“ வயித்துக்குள்ள என்னமோ பண்ணுதுங்க. நெஞ்சு படபடங்குது. மூச்சு அடைக்கிது. குழந்தையை மட்டும் பார்த்துக்குறேன். இது வேண்டாம்” தன் கைகளை உருவ முயற்சி செய்ய, அவளது பதட்டமும் பயமுமே சுவாரஸ்யத்தைத் தர, வெகு வருடங்கள் கழித்து வானவனுக்குள் இருந்த வாலிபன் உயிர் தெழ, வள்ளியை தன் அருகில் இழுத்து,
“அப்படியெல்லாம் விட முடியாது. எனக்கு என் பொக்கிஷம் வேணும்” அவளிடம் ரகசியம் பேசினார்.
“ராசா விட்டுடுங்க. இந்த காட்டுச் சிறுக்கி அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டேன் “ அவள் உருவிக் கொண்டு ஓடப் பார்க்க
“ சந்திர கிரியை சுற்றிலும் காடு தான். காட்டு மலர்கள் எனக்குப் பிடிக்கும்” என்றவர், இழுத்து அணைக்க, அவள் உடல் மேலும் நடுங்கியது. வள்ளியின் முதுகை வருடி ஆசுவாசப்படுத்தியவர் “வள்ளி, இதை விட மேலான அன்புக்கும் ,காதலுக்கும் நீ தகுதியானவள். என் வாழ்க்கை துன்பம் நிறைஞ்சதுன்னு தெரிஞ்சும் என் கூட இருக்கியே அது தான் காதல்” என அவளை அணைத்துக் கொண்டவர், முழுதாய் தன் மனையாளாய் ஆக்கிக் கொண்டார். இரண்டு நாள் மனம் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து குண்டாற்றில் நீராடி சித்தபண்டூரில் பெருமாளைச் சேவித்து திடியன் மலையடிவாரம் வந்து சேர்ந்தனர்.
வானவர் கை படவும் காட்டு மலரான வள்ளியே, நாகரீக பதுமையாகினாள். பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும். வானவருக்குக் கொடுத்த மரியாதையை வள்ளிக்கும் கொடுத்தனர். அலமேலுவை கூட அதிகம் தூக்க விடாமல்,”நீங்கள் அரசரைப் பாருங்கள். இப்போது தான் அவர் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது” என அரசிக்கு உரிய மதிப்போடு பார்க்க பதிவிசும் பட்டும் நகையும் நீலவள்ளியை மேலும் மெருகேற்றின.
இதோ வல்லபர் சொன்ன பூஜைகள் யாவையும், முழு மனதோடு செய்தனர். சில நேரங்களில் அலமேலுவையும் தன் மடியில் அமர்த்திக் கொண்டே பூஜைகளை செய்தனர். அதில் வானவனுக்கும் மனம் நிறைந்தது.
நலல துவக்கத்துக்கான கணபதி ஹோமம், தடை அகற்ற நவகிரக பூஜை, இறையருள் கிடைக்க சங்கரநாராயணர் பூஜை, ஸ்ரீ தனத்தை எடுக்க, வைபவ லக்ஷ்மி பூஜையும்,பொக்கிஷம் கிடைக்கக் குபேர பூஜை என ஒவ்வொரு நாளும் ஒரு பூஜையைச் செய்தனர்.
ஏகாதேசிக்கு நான்கு நாள் முன்பு, விஷ்ணு சகஷ்ரமநாமத்தை விடாது பாராயணம் செய்யச் சொன்னார். ஏகாதேசி அன்று அங்கே பெருமாள் வெளிப்படும் நேரம், பொக்கிஷம் இருக்குமிடம் பற்றிய குறிப்பும் உங்களுக்குக் கிடைக்கும் “ என்றார். அதன் படி வள்ளியும் வானவனோடு சேர்ந்து பூஜை புனஸ்காரங்களைச் செய்தாள்.
சிங்கராசு தேவன் அறிவுரைப் படி ரங்கராசு தேவன் சின்ன கழுவன் குடியையும், வானவரையும் கவனித்தே வந்தான். துரைராசு தேவனும் அண்ணனின் வார்த்தைக்குக் கட்டுப் பட்டு, பெருமாள் சோலைக்கு அழைத்துச் செல்ல, அவர்கள் கதையைக் கேட்டு வியப்பு தான்.
தங்கை வள்ளியும் இருக்க , வீர விளையாட்டு ஏற்பாடுகளோடு இங்கும் வந்து சென்றான்.
திடியன் சோலையில் பெருமாள் பிரதிஷ்டை செய்த மறுநாள் பலத்த காற்று அடித்ததையும், வேங்கடவனுக்கு வலிப்பு வந்ததையும் நினைவு கூர்ந்த வானவன், சற்று பதட்டமாகவே இருக்க, வள்ளி,”அப்போ போய் பார்த்து விட்டாவது வருவோம்” என அழைத்தாள்.
“பொக்கிஷம் இன்று தான் கண்ணில் தட்டுப்படும், இதை விட்டு அகழக்கூடாது என வல்லபர் அறிவுறுத்தி இருக்கிறார் “ என்ற வானவனுக்குப் பெருமாளை வேண்டுவதைத் தவிர வேறு மார்க்கம் தெரியவில்லை. பெருமாள் அனுக்கிரகம் கண் மூடி பிரார்த்தனையிலிருந்த வானவனுக்கு, பொக்கிஷம் இருக்குமிடத்தைக் காட்டிக் கொடுக்க, அதிகாலையில் பெரிய கழுவன் குடியில் சிலை கிடைத்த நேரம், இங்குப் பொக்கிஷமும் அகப்பட்டது. துரை ராசுவையும், ரங்கராசுவையும் வைத்துப் புதையலை மீட்டனர். மனித புத்தி பேதலிக்கும் அளவுக்குப் பொன்னாக மின்னியது.
பெரிய கழுவன் குடியில், , அன்று மாலையே தங்கராசு தாமினி தேவி திருமணம் எனச் சிங்கம் .அறிவித்தான்.
ராக்காயியும், வல்லபரும் பெருமாளோடே ஐக்கியமானவர்கள் போல் அங்கேயே இருந்தனர். “சாமி போனதரம் மாதிரி சண்டன் வேலையைக் காட்டமாட்டானே, ராசாவுக்கும், ராணிக்கும் எதுவும் ஆகக் கூடாது” ராக்காயி வல்லபரைக் கேட்க,
“கழுவன் குடி எல்லைக்குள் அவனால் எதுவும் செய்ய இயலாது. அதைத் தாண்டி வருவதை நாம் எதிர்கொள்ளத் தான் வேண்டும். மற்றொரு சிலையும் பிரதிஷ்டை செய்துவிட்டால், அவன் முற்றிலும் பலம் இழந்து அழிந்து போவான். சண்டனுக்கு ஜீவ மரண போராட்டம் . அவன் தாக்குதலும் கடினமானதாகத் தான் இருக்கும். திடியன் சோலையில் மேலும் சில இரட்சை கயிறுகளுக்கு உருவேற்றி உள்ளேன். வானவர் எடுத்து வருவார். இருவருக்கும் அதைக் கட்டி விடுவோம்.” என்றார்.
சண்டனின் தாக்குதலைச் சந்திப்பதை விட, மகளுக்கு ஏதேனும் இன்னல் நேர்ந்தால் தொலைத்து விடுவேன் என்ற சிங்கத்தின் கோபத்தை சந்திப்பதே பெரிய சவாலாக இருக்கும் என ராக்காயி நினைத்தாள். அதற்கான மன்றாடல் பெருமாளிடம் தொடர்ந்தது.
பெருமாளை ஸ்தாபித்த பூர்வ ஜென்ம ஜோடி சண்டனை பற்றிய கவலை எல்லாம் இன்றி, இந்த ஜென்மத்தில் அவரவர் உடன்பிறப்பான, தங்கம், தாமினியின் திருமண ஏற்பாடுகளைக் கவனிக்கச் சென்றனர்.
தங்கையைத் தேவதை போல் சிங்காரிக்கச் சொல்லி வேங்கடவன் தாமினியின் சேடிப் பெண்களுக்குக் கட்டளையிட, சிக்க அண்ணையா முகம் கொடுத்துப் பேசுவதில் தாமினிக்கும் மகிழ்ச்சி. அதை வார்த்தைகளாலும் சொல்ல,
“உனக்காக கழுவரிடம் பேசியவன் நான். இந்த விவாகத்தால் சந்தோஷம் தான். நீயாக கழுவன் குடிக்கு வந்தது தான் சங்கடமாக இருந்தது. ஆனாலும் இந்த காதல் படுத்தும் பாட்டுக்கு என் தங்கை மட்டும் விதிவிலக்கா என்ன? தங்கராசு தேவனை நீ மணப்பதில் பூர்ண மகிழ்ச்சி தான்.” என்றான்.
“அண்ணையாவை அழைக்க முடியாதா” அவள் ஏக்கத்தோடு கேட்க,
“தகவல் அனுப்பிருக்கிறேன். மாலைக்குள் வருவது சிரமம். அங்கும் பூஜைகள் நடந்துக் கொண்டு இருக்கின்றன.” எனவும் அவள் முகம் வாடியது. “ராஜ பரம்பரை என்பது பெயருக்குத் தான் தாமினி. ராஜ்ஜியமில்லாத ராஜாவை யார் மதிப்பார்கள்?. இன்றே விவாகம் வைக்க வேண்டும் என்பது சிங்கத்தின் பிடிவாதம். மறுத்துச் சொல்லும் நிலையிலும் நாம் இல்லை. இவர்களை அனுசரித்துத் தான் செல்ல வேண்டும்.” வேங்கடவன் சொல்ல,
“ நான் ஓடி வந்தததால் இந்த நிலை என்பது புரிகிறது அண்ணையா. உங்கள் இருவரையும் மறுத்து சொல்ல முடியாத இடத்தில் வைத்தமைக்கு என்னை மன்னியுங்கள்” சுயபச்சாபத்தோடு சொல்ல, வேங்கடவன் சமாதானம் சொல்லும் முன்,
“உங்கள் தங்கச்சியை வாழ்த்த வந்திங்களா. அவள் தவறை சுட்டிக் காட்டி,உங்கள் நிலைமையைச் சொல்லி புலம்ப வந்தீர்களா?” அதிகாரமாகக் குரல் ஒலிக்க, இருவரும் வாசலைப் பார்த்தனர்.
செம்பதுமம் கையில் துணி கொண்டு மூடப்பட்ட தாம்பாளத்தோடு உள்ளே வந்தாள்.
ஒரு முறைப்போடு, “இப்போது பேசுவது பத்மையா, பதுமமா?” வேங்கடவன் கேட்க, தாமினி தலை அசைத்து பதுமத்தை வரவேற்றாள்.
“ஆளைப் பொறுத்து பதில் மாறுமோ. இங்குப் பேச்சு இளவரசியைப் பற்றி. அவுங்க மணவாழ்க்கையைப் பற்றி” என உள்ளே வந்த பதுமம்தாமினியின் அருகில் தாம்பாளத்தை வைத்து விட்டு, கேள்வியை தொடுத்தாலும், பதிலுக்காக காத்திராமல் தொடர்ந்து பேசினாள்.
“இளவரசி, உங்க அண்ணையா சொல்றதை எல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காதீங்க. எங்க அண்ணனை மட்டும் நினைச்சுக்குங்க. அவரை தேடி வந்ததில உங்க மேல காதல் கூடித்தான் போயிருக்கும். பெரிய ராஜ்ஜியமில்லைபோலும் கழுவன் குடியைக் காவல் காக்குற மகராசன் உங்களை உள்ளங்கையில் வச்சு தாங்குவார்” என்று சொல்ல, தாமினியின் முகம் தெளிவடைந்தது.
“காதலிப்பவரைத் தேடி காதலனோ காதலியோ வந்தால் இணையரின் காதல் பெருகும் அப்படித் தானே. நானும் தான் உன்னைத் தேடி வந்திருக்கேன். பத்மையாக அருகில் வருகிறவள் பதுமமாகத் தூரம் செல்கிறாயே. “குற்றம் சுமத்த
“காதல் மனதிலிருந்தால் போதும், மற்றவருக்கு காட்டவேண்டிய அவசியமில்லை” என்றாள்.
“காதலனுக்கும் கூடவா” வேங்கடவன் வேண்டுமென்றே கேட்க,
“வாய் வார்த்தையால் சொன்னால் தானா. மனதில் உணராமல் தான் புனர் ஜென்மம் எடுத்து வந்தீர்களோ?” என்று விட்டு,
“மதினி, வீரவிளையாட்டுக்கு வர்றவங்க எல்லாருக்குமே நீங்கள் கழுவன் மருமகளா, தங்கராசு மனைவியா தான் அறிமுகம் ஆகணும்னு அப்பாரு நினைக்கிறார். நாளைக்கு எங்க அத்தை வீடு, மாயாண்டி குடும்பம் வர்றாங்க. “ என உறவுமுறை விளக்கமும் சொல்லி, தந்தை முடிவுக்கான காரணத்தையும் சொன்னாள்.
“விளக்கிச் சொன்னமைக்கு நன்றி” என்றாள்.
“ராஜ பரம்பரையை விட உறவு முறைக்குத் தான் அதிக முக்கியத்துவம் தருவீர்களோ” வேங்கடவன் வம்பிழுக்க,
“ஆம். வழக்கமாக அப்படித் தான். அதை உடைச்சு தான் அப்பாரு இவுகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறார்” என்றவள்,
“சல்லிக்கட்டு லையும் அவங்க வீட்டு ஆண் தான் முதலில் இறங்குவான்” என்ற குண்டையும் போட,
“அதனால் என்ன மருதனை என்னைத் தவிர வேறு யாராலும் அடக்க முடியாது” எனச் சவால் விட்டான். தாமினிக்கு பவளம் சொன்னது நினைவில் வந்தது.
“அண்ணையா, ஆபத்தான விளையாட்டு என்றால் எதற்குப் பங்கெடுக்க வேண்டும். நேரடியாகச் சம்பந்தம் பேசுவோம். எங்கள் காரணம், உங்களுக்கும் தானே” தாமினி வினவ,
“உன் அண்ணையா வீரத்தில் உனக்கு நம்பிக்கை இல்லையா தாமி” எனவும், “பறி பூரண நம்பிக்கை இருக்கு. ஆனாலும் ஒரு அச்சம் அண்ணையா “ எனக் கலங்க, தங்கையை உச்சி முகர்ந்தவன்,
“ இதெல்லாம் மண்டையில் போட்டு குழப்பிக்காமல் விவாகத்துக்கு தயராகு” என்றவன், பத்மையிடமும் கண் காட்டி செல்ல, தாமினியை அவள் கவனித்துக் கொண்டாள்.
இந்த முறை சண்டன் தன் சக்தியை, புயல் காற்று மழை என வீணாக்காமல் திருமலை வாசன், பத்மாசினியை மட்டும் தாக்கி அவர்களை பிரிக்கவோ, அல்லது மொத்தமாக முடிக்கவோ ஆனா உபாயத்தை தேடி அதை செயல்படுத்தவும் தொடங்கி இருந்தான். ஆபத்து எவ்விதம் வரும் பொறுத்திருந்து பாப்போம்.
“ஓம் நமோ நாராயணா”
“கோவிந்தா கோவிந்தா”
மாயவன் அவன் லீலைகள் ஆயிரம். அவ்வளவு சுலபமாக ஓரிடம் அமர்ந்து விடுவானா. அங்கிருப்போர் அதற்கு உகந்தவர் தானா என அங்குள்ளவருக்கே உணர்த்தல் வேண்டுமே.
கழுவன் குடும்ப பெரியவர், கருத்தையா, பேச்சியம்மாள், வீரன், வேலாயி,கோதை, முத்து நாச்சி பூங்குயில் முதல் சந்தன கருப்பு வரையான பிள்ளைகள்,தாமினி தேவி அவள் சேடிப் பெண்களும், குடி மக்களுமே குடிலுக்கு அருகே கூடியிருந்தனர்.
ஏற்கனவே ராக்காயி வெளிச்சம் வந்த அன்று நல்லதே நடக்கும், தெய்வம் வெளிப்படும் எனச் சொன்ன வார்த்தைகள் மெய்ப்பட போகிறது எனப் பயபக்தியோடு, அதிகாலையில் குளித்துக் கிளம்பி வந்திருந்தனர்.
மூன்று தினங்களுக்கு முன் வந்த வல்லபர், பெருமாள் கோவில் அமைவதற்கான இடத்தை தேர்ந்தெடுத்து பூஜை புணஷ்காரங்களையும் ஆரம்பித்திருந்தார். அப்போது முதலே வேங்கடவனோடு தாமினியும் அவருக்கு உதவிக் கொண்டிருந்தாள்.
கழுவன் குடும்ப பெண்கள் உற்சாகமாகவே, இடத்தை சுத்தப்படுத்துவது கோலம் போடுவது எனத் திரிந்தனர்.
நாச்சிகள் இருவரும் பிள்ளைகளுக்குப் பயிற்றுவித்திருந்த பதிகங்கள், பாசுரங்களைப் பாட வல்லபருக்கு ஆச்சரியம். தாமினி தேவியும் தெலுங்கு கீர்த்தனைகள் பாட பெருமாள் அனுக்கிரகம் கிட்டியதோ இல்லையோ தங்கராசு அவள் குரலில் மயங்கி இருந்தான்.
“பய பாட்டை கேட்டே உயிர் பொழைச்சுக்குவான்” எனச் சிங்கமே கேலி பேசும் படி இருந்தது.
தாமினியோடு பவளம் முதல் எல்லா பிள்ளைகளுமே மதினி எனப் பாசத்தைக் காட்டின. பெருமாள் சிலை கிடைத்து பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என தாமினி மனதார பிரார்த்தித்துக் கொண்டு இருந்தாள்.
தங்கராசு, முத்துராசு, சாமி கருப்பன் ஆகியோர் இருப்பதிலேயே கனமான சுவாமி சிலையையும் , திருமலை வாசனும், சிங்கமுமாக ஸ்ரீ தேவி சிலையையும், பூதேவி சிலையை முத்தையனும், வல்லபருமாகத் தூக்க, அதனோடு புதைக்கப் பட்டிருந்த சுவாமி நகைகள் ஜடாரி அடங்கிய பொக்கிஷ பெட்டியைத் தாடகையும், பத்மாசினியுமாக எடுத்து வந்தனர்.
ராக்காயி தீப்பந்தம் பிடித்து முன்னே வழிகாட்ட, தங்கராசு தேவன், சிலையைச் சுமந்து வந்தான்.
அதைப் பார்த்த கணம், தாமினியின் கண்களில் கண்ணீர் பெருகியது. திரு வேங்கடம் விட்டு வந்த பெருமாளைத் தன்னவன் சுமக்க, அந்த பாக்கியமே தன்னை அவனோடு பிணைத்து இருக்கிறது என முழுதாக நம்பினாள்.
தங்கராசு காலில் கல்லும் முள்ளும் குத்தியிருப்பதைப் பார்த்த தாமினி தேவி, அடியவருக்கு அடியாராய் இருந்து சேவை செய்வதும் தெய்வ கைங்கரியம் தான், என அவன் வந்த வழித் தடத்தில் உள்ள முட்களை தன் கைகளால் ஒடித்து அகற்றி அவன் காலில் பட்டிருந்த முள்ளையும் குருதியையும் சுத்தம் செய்தாள். அவளோடு இணைந்து சந்தனகருப்பு சித்தினி நாயகருக்கும் தங்கள் அப்பாருக்கும் உதவினான்.
ஒரே வருடத்தில் அழகர் மலையானையும், இதோ இந்த எழுமலையானையும் சுமக்கும் பாக்கியம் கழுவன் குடும்பத்துக்கு வாய்த்தது.
அவர்கள் மலையிலிருந்து இறங்கும் பொழுதே தூரல் மழையாய் வருஷிக்க ஆரம்பித்திருந்தது. “பெருமாளே, உன்னை நல்லபடியா ஸ்தாபிக்க நீ தான் அருள் புரியனும். வேங்கட மலையில் பிறந்த எனக்கு அருள் புரியவென்றே என்னோடு புகுந்த இடத்துக்கும் வருகை தருகின்றீரே. வந்து அமர்ந்து விடுங்கள். என் ஆயுள் முழுதும் சேவை செய்கிறேன்” மனதார வேண்டி பாசுரங்களைப் பாடினாள்.
பெருமழை கண்டு கழுவர்கள் அச்சப்பட, பூர்வ ஜென்ம வாசம் கொண்ட ஜோடிகளும்,வல்லபரும் கலங்காமல் அவனருள் என அகம்மகிழ்ந்து இருந்தனர்.
செம்பதுமம் இன்று பத்மாசினியாய் நகைகள் பூட்டி தேஜஸோடு இருக்க, அவள் சகோதரிகளே அதிசயப்பட்டு அண்ணாந்து பார்த்துத் தான் நின்றனர். சித்தினி நாயக்கரும் ராஜகலையோடு இருக்க, அக்காவுக்குத் தகுந்தவர் இவரே என மனதில் நினைத்தனர்.
ஆனால் செம்பவளத்துக்குப் பதுமத்தின் மேல் கவனம் இல்லாமல் வேங்கடவர் மீதே இருந்தது. மருதன் காளையை இவர் அடக்காமல் போனாலும் பாதகமில்லை, பதுவுக்கு பதில் நான் இவரை மணந்து கொள்வேன் என மனக்கோட்டை கட்டினாள். அதற்காகவே தாமினியோடு நெருக்கமாகவே பழகினாள். பெருமாள் தரிசனம் கிடைக்கும் ஆளாளுக்கு அவரவர் மனோரதம் நிறைவேறப் பிரார்த்தனை செய்தனர்.
பெரிய கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய இன்றைய சூழல் இடம் தரவில்லை. ஆனால் மண்ணிலிருந்த வந்த வராக மூர்த்தி மூலவனை, ஆகாய கங்கையும் ,வருணனும் வாயுவும் வந்து சேவித்துச் செல்ல. சிலை பிரதிஷ்டை செய்ய உத்தேசித்திருந்த குடிலின் மேற் கூரை பிய்த்துக் கொண்டு சென்றது.
“இயற்கையும் பெருமாளைச் சேவிக்கவே வருகிறது. செய்ய உத்தேசித்த காரியத்தைச் சுணக்கமின்றி தொடர்வோம்” வல்லபர் சொல்லி விட, திடியன் மலையடிவாரம் போல் இங்கும் பெரிய பட்டியக்கல்லை நிறுவி அதில் துளையிட்டு ராக்காயி வைத்திருந்த நவரத்தினத்தை வைத்து, பீஜ மந்திரங்கள் சொல்லி ஸ்ரீதேவி, பூதேவிசமேத திருவேங்கடநாத பெருமாளைப் பிரதிஷ்டை செய்தனர்.
ஆகம விதிப்படி நடந்த பிரதிஷ்டையோ, கும்பாபிஷேகமோ இல்லை. மண்ணில் புதையுண்ட பெருமாளை, வெளிக்கொணர வேண்டும் என சங்கல்பம் எடுத்து, வரம் வேண்டி நூற்றாண்டுகள் கடந்து மறு ஜென்மம் எடுத்து வந்த ஆன்மாக்களின் சிரத்தையை மெச்சி, பத்மவாசன் ஏழுமலையில் ,வீற்றிருப்பவன் , எழுமலையிலும் எழுந்தருளினான்.
கழுவன் குடியே கூடி நிற்க, பத்மாசினி, திருமலை வாசன் கண்களில் ஆனந்த பிரவாகம். அவர்கள் உத்தேசித்த இலக்கில் இரண்டை பூர்த்தி செய்து விட்ட திருப்தி இருந்தது. ராக்காயி கையை பற்றிக் கொண்டு இருவரும் நன்றி சொல்ல,
“நான் தான் தாயி உங்களுக்கு சொல்லனும். இந்த கழுவன்குடி பொழைச்சு கிடக்குறதே உங்களால் தான் “ என்றாள்.
“வீர விளையாட்டு முடியும் வரை எச்சரிக்கை யாக இருக்க வேண்டும். சண்டன் எவ்வடிவிலும் வருவான்” வாசவர் நினைவு படுத்த
“கழுவன் குடி எல்லையை மிதிக்க முடியாது ராசா. இதைத் தாண்டி போறவுக சூதானமா இருங்க” என்றார்.
“அப்படியே ஆகட்டும். நடுவில் ஒரு முறை புத்தூர் சென்று வர வேண்டும் பத்மை” வாசவர் சொல்ல,
“ஆகட்டும் வாசவரே.” என்றாள் பத்மாசினி.
ஜென்மங்களாய் தொடரும் பக்தி வேள்வியில், தாமும் சிறு பங்கு ஆற்றினோம் என்ற பேருஉவகை சிலைகளைச் சுமந்த கழுவர்களுக்கும் வந்தது.
வாசி மலை அடிவாரத்தில் எழுமலை வாசவன் இன்முகத்தோடு எழுந்தருளினான். வந்த வேலை முடிந்தது என வருணன் முதலான தேவர்கள் சேவித்து கிளம்ப மழை நின்றது. பூஜைகள் தொடர்ந்தது.
கழுவன் குடியே கூடி நின்று “கோவிந்தா” போட வல்லபர் பூஜைகளை விடாமல் செய்து கொண்டிருந்தார். கொட்டும் மழையில் அவரவர் இடத்தில் அசையாமல் பக்தியுடன் நிற்க, பளிச்சென மின்னல் வெட்டி சிலை மேனியில் பட்டிருக்க, இறை அருள் இறங்கி மூன்று தெய்வங்களும் அம்சமாகப் புன்முறுவல் பூத்தன.
சொன்னபடி சிலைகள் கிடைக்க, அதிர்ந்து நின்றது சிங்கம் தான். சில நாட்களாய் அவன் மனதில் ஏதேதோ சிந்தனைகள். தெய்வ வழிபாட்டையும் கூட, தனக்கு இடப்பட்ட கடமை போல் பாவித்துப் பணி செய்து கிடப்பவனுக்கு, காவல்கார புத்தி, எதையோ காக்க வேண்டும் என்று மட்டுமே, வலியுறுத்திக் கொண்டு இருந்தது. வல்லபர் மூன்று தெய்வங்களுக்கும் பால் சந்தனம் பன்னீரால் அபிஷேகம் செய்து, திருமண் சாற்றி, தூய பட்டாடை அணிவித்து, பத்மாசினி கைகளிலிருந்த ஆபரணத்தைப் பூட்டி, துளசி மாலையும் மல்லிகை மரிக்கொழுந்து, தாமரை சேர்த்துக் கட்டப்பட்ட மாலையையும் போட்டுச் சூட தீபாராதனை காட்டினார்.
மாயவன் மயக்கும் புன்னகையுடன் தன்னை சேவிக்க வந்த அனைவரையும் ஆட் கொண்டு இருந்தார். பட்சிகள் தங்கள் மொழியில் வாழ்த்துப்பா பாடிச் சென்றன. பெரிய மலையைப் புரட்டும் காரியமாக மலைப்பாய் தெரிந்த காரியத்தை, மலையப்பன் சுளுவாக முடித்து அமர்ந்திருந்தான்.
கேள்விப் பட்ட கூழன் முதலான காவல்காரர்கள் புதிதாய் குடி அமர்ந்த பழைய பெருமாளைச் சேவிக்க வந்தனர். பத்மையும், வாசவரும் பதுமமாகவும், வேங்கடவனாகவும் மாறி இருந்தனர். கோதை எல்லாருக்கும் பிரசாதம் விநியோகிக்க, இப்போது தான் பசி தெரிந்தது.
தங்கராசு பெருமாளைச் சேவித்து வந்து தனியே ஒரு மரத்தில் சாய்ந்து அமர்ந்து விட்டான். பெருமாளைச் சுமந்த மேனி புண் பட்டு இருந்தது, தாமினி பிறர் கவனத்தைக் கவராமல் கோதை வைத்துக் கொடுத்த பிரசாதத்தை எடுத்துக் கொண்டு அவனருகில் வந்தமர்ந்தாள். தன் சேலை தலைப்பைக் கொண்டே அவன் உடம்பில் ஒட்டியிருந்த மண்ணை தட்டி விட்டு, காயங்களை அமைதியாக ஒற்றி எடுத்தாள்.
மயங்கி இருந்தவன்,”இளவரசி”என புன்னகைக்க,,”கழுவரே இன்று என் மனம் நிறைந்தது. நாங்கள் வந்த நோக்கம் நிறைவேற நீங்களும் பெரும் உதவி செய்து இருக்கீங்க. இதற்கே நான் ஆயுள் முழுதும் உங்களுக்குக் கடமைப் பட்டவள்” உருக்கமாகச் சொல்லி, அவன் கைகளைக் கண்ணில் ஒற்றிக் கொண்டாள்.
சட்டென அவள் புறம் திரும்பியவன்,“இளவரசி, பெரிய வார்த்தைகள் வேண்டாம். ராச வம்சத்தில் பிறந்து காவல்காரனுக்கு வாழ்க்கைத் துணையா வந்திருக்கியே. உன் பெரிய மனசு” என்றான்.
“ராச குடும்பம் என்றாலும் காட்டில் தானே திரிந்தேன். உங்க மனசில் எனக்கு இடம் கொடுத்திங்களே. அதுக்கப்புறம் தான் நிம்மதியா பாதுகாப்பா உணர்ந்தேன்” எனவும்
“அப்படி ஒன்னும் தெரியலையே, இரண்டு முறையும் உன்கிட்ட நல்லா அடி வாங்கி இருக்கேன். “
“ஆமாம் பரிச்சியம் இல்லாத ஆம்பளையை கொஞ்சவா செய்வாங்க”
மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டு, தங்கராசு கையில் காப்பு காய்த்திருக்கவும், பிரசாதத்தை தாமினியே ஊட்டி விட்டாள்.
செம்பதுமமாக மாறவுமே அவள் தன் குடும்பத்தை நோக்கி சென்று விட, வேங்கடவன் தங்கையும், தங்கராசும் இருந்த இடத்துக்கு வந்தான்.
“நானும் தான் சிலை எல்லாம் தூக்கினேன். நம்மளை கவனிக்க ஒரு ஆள் இல்லை” சத்தமாகச் சொல்லிக் கொண்டே செல்ல,
“அண்ணையா” தாமினி அவசரமாக எழ, பின்னோடு எழப் போன தங்கராசுவை அமர்த்தி தானும் அருகில் அமர்ந்தான்.
“பிரசாதம் தீர்ந்து விட்டது எடுத்து வருகிறேன் அண்ணையா”
“நீ உட்கார்”என கட்டாயப்படுத்தி அமர வைக்க
“இது பரிட்சையா இளவரசே. கட்டாயம் நீங்கள் இருக்குமிடம் பிரசாதம் வரும்” என்றான் தங்கராசு
“சித்தினி நாயக்கரே இந்தாங்க” எனச் சந்தன கருப்பன் வந்து கொடுத்துச் சென்றான்.
“சமாதானம் ஆச்சா” தங்கராசு கேட்க
“உங்களுக்கு என் தங்கையே ஊட்டி விடுறா. பதுமம் பறந்துடுச்சு” எனக் குறை பட
“ஏழேழு ஜென்மம் எடுத்தாலும், குறையும் கூடவே வருமோ” தங்கம் கேட்க
“ஆமாம் வில்லனா, உங்க அப்புவும் தொடர்ந்து வர்றார்” எனச் சிங்கத்தைக் காட்டினான்.
சிங்கராசு தேவனும் அடுத்து நடக்க வேண்டியதை பற்றித் தான் யோசித்துக் கொண்டு இருந்தான்.
நாளை முதல் வீரவிளையாட்டு ஏற்பாடுகளில் முழுதாக இறங்க வேண்டும். பெருமாள் சிலை கிடைத்ததை பற்றி பாளையக்காரர்கிட்ட சொல்லனும் என திட்டமிட்டவன், தூரத்தே அமர்ந்திருந்த வேங்கடவன், தாமினி தங்கராசுவையும் பார்த்தான்.
“என்ன யோசனை”;கையில் பிரசாதத்தோடு வந்த தாடகை சிங்கத்திடம் நீட்ட அவன் வாயைத் திறந்தான்.
“இன்னும் குழந்தைனு நினைப்பு உனக்கு” எனக் குறை பட்ட போதும், பொங்கலை ஊட்டி விட்டு, மீசையில் பட அதையும் தன் முந்தியால் துடைத்து விட்டாள்.
“நீ அப்படி வச்சிருக்க. நான் என்னடி பண்றது” என்றவன் கண்கள் பதுமத்தைத் தேடின.
“பதுவு, தாத்தா, அப்பத்தா, தங்கச்சிங்களோட தான் இருக்கா.” எனவும், பெருமூச்சு விட்டவன்,
“இவைங்கே சொன்னது எல்லாம் நடக்குதுங்கவும் பயந்து வருது” என்றான்.
“இது இரண்டாவது தடவை பயந்து வருதுன்னு சொல்ற. இந்த வார்த்தை எல்லாம் உன் வாயில வர்றது நல்லா இல்லை பார்த்துக்க. பெருமாள் இறங்கி வந்திருக்கார். எல்லாருக்கும் மனசு நிறைஞ்சு கிடக்கு. நீ மட்டும் ஏன் இப்படி சொல்ற” என கோவித்தாள்.
“மனசில உள்ளதை சொன்னேண்டி. உங்கிட்ட சொல்லாமல் யார்கிட்ட சொல்லுவேன். வேணாம்டா இனி சொல்லலை” சிங்கமும் முறுக்க
“தெரியாமல் சொல்லிட்டேன். உன் மனசில இருக்கிறதை சொல்லு. நான் தீர்த்து வைக்கிறேன்” என்றாள்.
கழுவன் குடியையும் தன்னையும் வேறு ஏதோ ஆபத்து நெருங்குவது போல் உணர்ந்த சிங்கம், கழுவன் குடிக்கு அடுத்த தலைவன் தலைவியை அடையாளம் காட்ட நினைத்தான். நான்கு மாத காலத்தில் தங்கராசுவின் செயல்கள், ராயர் விசயத்தைத் தவிர மற்றதில் திருப்தியாகவே இருந்தது.
சிங்கத்தின் முகத்தையே பார்த்திருந்த தாடகை, அவன் நெற்றி முடிச்சுக்களை நீவி விட்டு “என்ன யோசனை” என்றாள்.
“மாயன் குடும்பம் வர்றதுக்குள்ள தங்கராசு கல்யாணத்தை முடிச்சுடுவோம்”
“செய்யலாம்”அவளும் ஆமோதிக்க,
“இன்னைக்கே “ எனவும்
“என்ன விளையாடுறியா. மனை போடனும். புது துணி எடுக்கனும், நகை நட்டு எம்புட்டு இருக்கு. அது ராச பரம்பரை. அவுக அண்ணன் மூத்தவரு வர வேண்டாமா” என அடுக்க
“இது தாண்டி உங்களோட பிரச்சினை. எது முக்கியமோ அதை விட்டுட்டு நீங்கள் சிங்காரிக்கிறதை தான் பார்ப்பிங்க” எனத் திட்டத் தாடகை முறைத்தாள்.
“முறைக்காமல் கேளு. தள்ளி வச்சமுண்டா, நாளை நாளை மறுநாளுண்டு இழுத்துக்கே போகும். அதுக்குள்ள செல்லம்மாக்கா வந்துச்சு, ஆட்டையை கலைச்சு இளவரசியை ஓட விட்டுரும். தங்கம் முதல் கல்யாணம் நம்ம விருப்பத்துக்கு செஞ்சுகிட்டான். அது நிலைக்கல. பிடி கொடுக்காம திரிஞ்சவன் இளவரசிக்கிட்ட மடங்கிட்டான். தாமினிக்கு உன்னளவு வீரம் இல்லையிண்டாலும் அரச குடும்பத்தில் பிறந்தது, பெரும் போக்குதனம் இருக்கும். குடும்பத்தை அரவணைச்சு நடத்த மாமியா நீ சொல்லிக் கொடுத்துடுவ. அவன் மேல வச்ச ஆசைக்கு அண்ணன்களை விட்டுட்டு வந்திருக்கு. ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்க ஆசை, நிறைவா வாழ்ந்துடுவாக” அவன் சொல்ல
“உங்க தம்பியும் இல்லை. முத்து நாச்சி கோவிப்பாலே”
“பொம்பளைங்க விசயம் எல்லாம் நீ பார்த்துக்க. பொண்ணோட அண்ணன் இருக்காப்ல பேசுவோம்” என சிங்கம் எழவுமே, ஏதோ முக்கியமான விசயம் என ஆங்காங்கே இருந்தவர்கள் அவன் முன் கூடினர்.
“தங்கராசு, தாமினி தேவி கல்யாணத்தை இன்னைக்கு சாயிந்திரமே முடிக்கலாமுண்டு இருக்கேன். தங்கம் உனக்கு ஒன்னும் சிரமம் இல்லையே” வினவ
தாமனியைப் பார்த்து மீண்டது தங்கத்தின் பார்வை. அவளுக்கு ஆட்சேபனை இல்லை, ஆசையாக முகம் மலர கண்டவன்,
“சிரமம் இல்லை அப்பு. ஆனால் வீர விளையாட்டு முடியட்டுமே. பதுவுக்கு முடிச்சிட்டு” என்ற பேச்சை இடை வெட்டிய சிங்கம்
“சிரமம் இல்லையாண்டு தான் கேட்டேன்.”என்றவன் வேங்கடவனிடம் பார்வையைத் திருப்ப,
“அண்ணையா வரனுமே” எனத் தயங்கினான்.
“சுபஸ்ய சீக்கிரம் என்பார்கள். தாங்கள் இருக்கிறீர்களே, இப்போதே நடத்தி விடுங்கள்” வல்லபர் சொல்ல,
முத்தையனும், தங்கள் குடும்பத்தினர் வந்து ஆட்சேபனை சொல்லும் முன், மச்சினனுக்கு மணம் விரும்பியவளை மணமுடிக்க வலியுறுத்தினான்.
“அப்பு, மாயாண்டி குடும்பத்துக்கு முறையா சொல்ல வேண்டாமா” கருத்தையா கேட்க,
“அவுக வகைக்கு மாப்பிள்ளை முத்தையன் இருக்காப்ல போதும் அப்பு. அவுக மூத்தவரே வராம தான், கல்யாணம் நடக்க போகுது” சிங்கம் முடிவாகச் சொல்ல,
“இம்புட்டு அவசரம் எதுக்கு அப்பு” என்றார் பெரியவர்,
“உன் மூத்த மருமவ உளறிட்டு போனாலும் அருள்வாக்கு மாதிரி சரிண்டு தலை ஆட்டுறீரு. நான் சொன்னா செய்யக் கூடாதோ” என ராக்கமாவை பேச்சில் கொண்டு வந்தான்.
“மகன் சொன்னா சரியா தான் இருக்கும். தங்கம் கல்யாணத்தை நடத்துங்க” பேச்சியம்மாளே ,சொல்லவும், பெரியவரும் ஒத்துக் கொண்டார்.
அரை நாளுக்குள் திருமண ஏற்பாடு சாத்தியமா ?
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
“சாந்தாகாரம் புஜகசயநம் பத்மநாபம் சுரேசம்
விச்வாதாரம் ககந ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீகாந்தம் கமலநயநம் யோகிஹ்ருத்யாநகம்யம்
வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைக நாதம் … !!!
என வல்லபர் , விஷ்ணு சகஸ்ரநாமாவளியை பாட இருபத்தோயோரு நாட்கள் சாம பூஜைக்குப் பின் பத்மாசினியும், திருமலை வாசனும் முற்பிறப்பில் ஆச்சாரியார் சொல்லிக் கொடுத்த பீஜ மந்திரங்களைச் சொல்லி மருத மரத்தடியில் ஓரிடத்தில் முழுங்காலிட்டு தவந்தபடி இடத்தை அடையாளப்படுத்தி அங்கிருந்த மண்ணை தோண்ட ஆரம்பித்தனர்.
வாசவர், “பத்மை நீ விலகு” என தங்கராசு தேவனைத் துணைக்கு அழைக்க,
“இரண்டு பேரும் விலகுங்க” எனப் பெருந்தலை சிங்கமே சொல்ல, திருமலை வாசனும் மேலே ஏறிவிட்டார்.
கழுவன் குடும்பதின்ஆடவர்கள், தங்கராசு, முத்துராசு,முத்தய்யன், சாமி கருப்பன் ஆகியோர் மண்ணை தோண்ட ஆரம்பித்தனர். ஒருவர் கடப்பாரைப் போட, மற்றொருவர் மண் வெட்டியால் மண்ணை அள்ளிக் கொடுக்க , மற்றொருவர் வாங்கிக் கொட்ட என அரை நாழிகையில் குதிரை மலையின் கடினமான மண்ணை தங்கள் வலுக் கொண்டு தோண்டி அள்ளினர்.
ஆம், சில நாட்களுக்கு முன் வானவர் , கழுவன் குடி வந்த போது , சிம்மராசுதேவன் ராயர்களோடு காரசாரமான சண்டை ஏற்பட்டு, செம்பதுமம் வடிவில் பத்மாசினி வந்து சமாதானம் செய்தாள்.
அவள் விளக்கிச் சொன்ன போது சற்றே மலை இறங்கிய சிங்கம், தன் ஆட்கள் மூலம் கேள்விப்பட்ட செய்தி, முகமதியர்களும், அரையனும் பொக்கிஷத்துக்காகத் தான், ராயர்களைத் தேடுகிறார்கள் என்பதை ஆதாரமாக வைத்து, “உங்களுக்குக் கிடைக்கிற பொக்கிஷத்தில் பாதியை எங்களுக்கு கொடுக்கணும்” என நிபந்தனை விதிக்க, எல்லோருமே அதிர்ந்தனர்.
வானவன், பொக்கிஷத்தில் ஒரு பகுதி கிள்ளி கொடுத்துவிட்டுப் போகத் திட்டமிட்டிருக்க, சிங்கராசு தேவன் பாதியை அள்ளி கொடுக்கச் சொன்னான்.
“கழுவரே, அது எங்கள் மூதாதையர் சொத்து. அதை வைத்துத் தான் படை திரட்டி, எங்கள் ராஜ்ஜியத்தை மீட்க வேண்டும். கோவில்களைப் பராமரிக்க ஒரு பகுதியை உங்களுக்குத் தருகிறோம்.” எனவும்,
“நீங்க சொல்ற கதை படி பார்த்தாலும், எங்காளுகளுக்கும் அதில பங்கு இருக்குல்ல” என மடக்க,
“எங்கள் அடையாளத்தை மீட்க எங்களிடம் உள்ள கடைசி நம்பிக்கை*என்றார்.
“உங்களுக்கு உதவப் போய், எங்களுக்கு ஏதாவது ஆச்சுண்டா, எங்க மக்களுக்கு ஈடு வேண்டாமா” என்றான்.
“உங்கள் வீட்டுப் பெண்களைத் தானே ராணியாக்கிக் கூட்டிச் செல்கிறோம்.” வானவர் வாதாட
“தங்கச்சிக்காகத் தான் பாதி பொக்கிஷம். இல்லையிண்டா எங்க காவல் கோட்டையில் கிடைக்கிறது எங்களுக்குத் தான் சொந்தம்” என்றான்.
“எங்களால் தான் பொக்கிஷம் உங்களுக்குத் தெரிய வந்தது” வானவர் விடப்பிடியாகச் சொல்ல,
“கழுவன் மகளும், மகனும் வந்து தான் எடுத்துக் கொடுத்திருக்காக.
சல்லிக்கட்டு இன்னும் பாக்கி இருக்கு.”என நினைவூட்டினான்.
“அண்ணையா பொக்கிஷத்தை விட, பெருமாளை ஸ்தாபிப்பது முக்கியமானது. பாதி பொக்கிஷத்தை ஏற்கும் பொழுதே, கழுவர் அதை சந்திரகிரி வரை பாதுகாத்துத் தரும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வார், அப்படி தானே” வேங்கடவனாகப் பணிவுடன் சிங்கத்திடம் கேட்க,
“சல்லிக்கட்டுல ஜெயிச்சு, என் மகளை கட்டுணையிண்டா, சந்திரகிரியையே மீட்டுத் தருவோம். அப்படி இல்லையிண்டா பாதி பொக்கிஷத்தை குடுத்துட்டு போயிக்கே இருக்கனும்” சிங்கம் சொல்ல.
“தந்தையே” என பத்மாசினி சிணுங்க, “ஆத்தா, சல்லிக்கட்டு நடத்துறமுண்டு பாளையத்தையே கூட்டி வச்சிருக்கேன்” என்றார்.
“என் இளவலின் வீரத்தின் மீது நம்பிக்கை உள்ளது. எங்கள் வீட்டு மகாலெட்சுமியை முறைப் படி அழைத்து, சந்திரகிரியையும் மீட்டு எடுப்போம்” என்றார்.
“என் மகள் உங்க வீட்டு மருமகள் ஆகட்டும் பொக்கிஷம் என்ன, உங்க ராசியத்தையே பிடிக்கவே கூட வர்றோம்” என்றான் சிங்கம் .
தாமினியை பற்றி பேச்சு வந்தது, “தம்பதி சமேதராய் திடியன் மலையிலும் பூஜை செய்ய வேண்டும், அதனால் நாங்கள் இன்று திரும்புகிறோம். இங்குப் பெருமாள் சிலை பிரதிஷ்டை செய்த பின் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம்” என்ற வானவர், தாமினியை அழைத்துச் செல்வதாகச் சொல்ல
“அதெல்லாம்,எங்களை நம்பி கழுவன் குடிக்குள்ள வந்த பொண்ணை வெளியே விட மாட்டோம்” சிங்கம் சொல்ல, தங்கத்துக்கு மகிழ்ச்சி.
அதற்கு ஒரு வாதம் விவாதம் ஓடி, இங்கிருக்கும் வேங்கடவனோடு ராக்காயி வீட்டுக்கு அருகிலேயே தாமினிக்கு குடில் அமைத்துத் தருவதாகச் சொல்ல,
‘என் குடில்லையே தங்கிக்கட்டும் அப்பு. உதவிக்கு மட்டும் ஆளுங்களை போட்டுக்கலாம்” என்றான் மகன்.
“அதுவும் சரி தான்” சித்தப்பனும், மகனுமாகப் பேச,
“நாங்க எங்கள் தங்கையைப் பார்க்க அனுமதி உண்டா” வானவர் வினையமாகக் கேட்க, “மருமகள் கிட்டக் கேட்டு சொல்றேன்” சிங்கமும் அசராமல் பதில் சொன்னான்.
“அண்ணேன்” என வள்ளி அழைக்கவும், வீட்டு மாப்பிள்ளையாக வானவரையும் கழுவன் குடிக்கு அழைத்தான்.
கழுவன் குடியில் அவர்கள் வீட்டைப் பார்த்து வானவருக்கு ஆச்சரியம். துரை ராசு சாதாரணமாக இருக்கும். இங்குப் பெரிய மாட மாளிகை இல்லை என்றாலும், நடுவில் கழுவன் மாளிகை, மந்தை சுற்றி ஆங்காங்கே வீடுகள் எனச் சீராக இருந்தது.
வானவர் பார்வையின் அர்த்தம் புரிந்து,”காவல்காரன் பாளையக்காரருக்கோ, ராசாவுக்கோ சமமா , மாட மாளிகை கட்டக் கூடாது. வீடு கட்டிக்கிடலாம்” என்றான்.
‘நாயக்கர் ஆட்சியில் இவ்வளவு கட்டுப்பாடு, வரி விதிப்பு முறைகள் இருக்கும் போதே இப்படி ஒரு காவல் கோட்டத்தை ஆள்கிறான். இவன் கையில் பொக்கிஷம் கிடைத்தால் இந்த பாளையத்தையே கழுவன் பாளையம் ஆக்கிக் கொள்வான் என்பதில் சந்தேகமில்லை’என நினைத்தவர், தாடகை நாச்சியை பார்க்கவும் இவர்கள் வாழ்க்கைத் தரத்தின் காரணம் புரிபட்டது.
ராணிகளுக்குக் குறைவில்லாத நிமிர்வோடு, ஆடை ஆபரணமும் அதற்கு தக்கன உடுத்தி இருந்தாள்.
பெரியவர்கள் , வானவரை மரியாதையோடு வரவேற்றனர். சிங்கம் தனது கூட்டுக் குடும்பத்தை அறிமுகப்படுத்த, இதுவே அரச குடும்பம் எனில் தாயாதி சண்டை வந்திருக்கும் என நினைத்தார். கழுவன் குடும்பத்து மேல் நல்ல அபிப்ராயம் வந்தது.
வள்ளியையும், வானவரையும் வரவேற்று உபசரித்தனர்.
தாமனியைப் பார்க்கவும், அலமேலு தாவிச் சென்றது. அந்த பாசத்தில் கண்கலங்கியவள், அண்ணையாவிடம் மன்னிப்பு கோரினாள். வானவரும் தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார். வேங்கடவனும் , “இங்கு வந்தும் உனக்கு என்னை பார்க்கணும்னு தோணலையிலே “ கோபித்துக் கொள்ள, இருவரிடமும் மன்னிப்பு வேண்டி அழுதாள்.
“போதும் இளவரசியை அழ விடாதீங்க. என் தம்பி ராணியாட்டமா வச்சுகுவான்” வள்ளி சொல்ல,
“மதினி, அவுக ஏற்கனவே ராஜ பரம்பரை தான். நம்ம உவமை அவுகளுக்கு பொருந்தாது” முத்தையன் சொல்ல
“அது தானே. பிறகு எப்படி சொல்றது” வள்ளி யோசித்தாள்
“கையிலையே தாங்குவாப்ல. கழுவன் குடிக்கு அடுத்த ராசா ராணி அவுக தான்” முத்தையன் சொல்ல
“உன் மாமன் கிழவன் ஆயிட்டேன். ஓரமா உட்காருண்டு சொல்றியா. அடியே நாச்சியா. தம்பி, தம்பிண்டு முறை கொண்டாடுவ, இங்க பாரு, உன்னை கிழவிண்டு சொல்லிட்டான்” எனக் கோர்த்து விட
“மாமா நான் எப்ப அப்படிச் சொன்னேன். அக்கா பேச்சை சுழிக்கிறார்” எனக் கேலி கிண்டலோடு அவர்கள் இயல்பு போலவே இருக்க, ராயர்களுக்குத் தங்கை விரும்பியவனோடு நிம்மதியாக வாழட்டும். தங்களோடு அலைய வேண்டாம் என்ற எண்ணம் வந்தது.
தங்கராசுவை அழைத்துப் பேசினர். “அவுங்களா வந்துட்டாகண்டு இளவரசி மதிப்பு குறையுமுண்டு நினைக்காதீங்க. இங்கையும் இளவரசியா தான் இருபாங்க” என்றான். பிற்காலத்தில் கழுவன் குடி கட்டவிழாமல் காக்கவே தாமினியை விதி அங்கு அனுப்பியதோ என்னவோ?
தாமினி விசயமும் சுமுகமாகவே முடிந்தது. அவர்கள் அடுத்த நாளே திடியன் கிளம்பி விட, தாமணியின் உடைமைகளையும் சேடிப்பெண்கள் சிலரையும் நிறுத்தி விட்டுச் சென்றார். ஆனாலும் சிவப்பியை தாமினியின் மனம் தேடியது.
சிங்கராசு தேவன் தாடகையிடம் பத்மாசினி விசயத்தைச் சொல்ல , “ இதெல்லாம் சரியா வருமா, எனக்குப் பயந்து வருது” என்றாள். பெருமூச்சு விட்ட சிங்கம், “நம்ம முடிவு பண்ற இடத்திலையே இல்லை. எல்லாமே கை மீறித் தான் நடக்குது. எனக்கு நம்ம மவளை நினைச்சு தான் பயம்” எனவும்,
“நீயே பயமுண்டு சொல்ற” தாடகை கலங்க,
“மனுச ரூபத்தில் வந்தா சமாளிச்சிடலாம். சண்டன், கிண்டன்னு சொல்லுதுங்களே, நமக்கு நம்பிக்கை இருக்குதோ இல்லையோ, அன்னைக்கு மாதிரி பதுவுக்கு எதுவும் ஆகக் கூடாது. நம்ம உசுர கொடுத்தாவது, நம்ம மவள காப்பாத்தணும்” எனவும், தாடகையும் புரிந்து கொண்டாள்.
அடுத்து அவன் சென்றது ராக்காயியிடம் தான். “இல்லை மந்திர கட்டு போட்டுடமுண்டா யாருக்குமே தெரியாது. வீர விளையாட்டு முடிஞ்சு,பதுவு கழுத்தில ராசா கார கயிறை கட்டிட்டாருண்டா, அவுகளை யாரும் பிரிக்க முடியாது.” என்ற நம்பிக்கை தர, “வேற வழி நம்பித்தான ஆகனும்” என்றவன், இவர்கள் அடுத்த செயல்பாடுகள் என்ன என்பதையும் முதல் மணைவியிடமை கேட்டவன், “புத்தூர் மலையில் ஒரு ஆட்டம் இருக்குண்டு சொல்லு” எனவும்,
“முன் ஜென்ம ஞாபகம் வராததுனால தான் தேடிக்கே அலைஞ்சாக. ஆத்தாலும்,ராசாவும் இருக்காகளே, வீர விளையாட்டு முடிஞ்சு, ஜோடியா அதை செஞ்சிடுவாக” என உறுதியாகச் சொல்ல, சிங்கம் கேட்டுக் கொண்டான்.
சிங்கமும், தாடகையுமே பதுமத்தோடு சாம பூஜைக்குச் சென்று வர ஆரம்பித்தனர்.
“அப்பு, மலை ஏற சிரமமா இருக்கும், இங்க உட்காருங்க” என்றாலும்,
“இருக்கட்டும் ஆத்தா, என் காவல் கோட்டையில் என்ன நடக்குதுண்டு, எனக்குத் தெரிய வேண்டாமா.” சற்று சிரமப்பட்ட மலை ஏற , திருமலையாக மாறி இருக்கும் வேங்கடவன் சிங்கத்தை முறைத்தபடியே தான் வருவான்.
“அதென்ன முன் ஜென்மம் நினைப்பு வருதுண்டு கதை விட்டு என்னை முறைக்கிறீரு. எதிர்க்கிறதுண்டா எல்லா நேரமும் எதிர்க்கணும்” சிங்கம் வம்பிழுக்க,
“உம்மால் தான், ஜென்ம, ஜென்மமாக இப்படித் திரிகிறேன்” என்றான்.
“வாசவரே, முன் ஜென்ம நினைவில்லாதவரிடம் எதற்கு வீண் வம்பு” பத்மாசினி ஆட்சேபிக்க,
“நீ வாங்கி வந்த வரம் தான். இவர் மகளாகவே பிறக்க வேண்டும் என என்ன அவசியம்” விடுவேனா என வாசவனும் பதில் பேச
“உமக்குப் பொறாமை அய்யா, மகள் அப்பாரு மேல வைக்கிற பாசத்தைக் கூட காணப் பொறுக்கலை” சிங்கம் மீசையைத் தடவியபடி சொல்ல,
பத்மை சிரிக்க, வாசவனுக்கு முறைப்பதைத் தவிர வேறு வினையாற்ற முடியவில்லை.
“ ராயரே, சல்லிக்கட்டுல முன் ஜென்மத்து ஆளா எல்லாம் கலந்துக்க கூடாது. மருதன் பாவம்” சிங்கம் மீண்டும் வம்பிழுக்க
“மருமகன் பாவம் இல்லை, மருதன் தான் பாவமாக்கும்” தாடகை நொடித்தாள்.
“நல்லா கேளுங்க.” வாசவரும் ஏத்திவிட, தாடகை மருமகனுக்கு ஏற்றுக் கொண்டு சிங்கத்திடம் வார்த்தை வளர்க்க, முற்பிறப்பு என்ற அச்சம், பாகுபாடு இல்லாமல் சகஜமாகவே பழகினர்.
பத்மாசினியாக அவர்கள் இருவரையும் பார்த்தவள், “இந்த சிங்கத்தையும் கட்டிப் போடும் ஆற்றல் உங்களிடம் தான் இருக்கிறது தாயே” என்றாள்.
“நல்லா சொல்லுதா. ஆட்டக்காரியை எல்லாம் பார்த்து பயப்புடுறா. அப்படியா தரம் கெட்டு போயிடுவேன்” சிங்கம் பொரிய.
“அப்படியும் சொல்லி விட முடியாது.மகள் திருமணம் செய்து சென்ற பிறகு மறுமணம் செய்து கொண்ட மனிதர் நீர்” வசவர் எடுத்துக்கொடுக்க,
“அது வேறையா” தாடகைக்கு வயிற்றில் புளி கரைத்தது.
“அதற்கு முன், சிறு வயித்தில் தாயை இழந்த என்னை, தந்தையே தான் வளர்த்தார், அதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றாள் பத்மாசினி.
வீரசிம்மராக, தன் தந்தையின் நல்ல குணங்களை உயர்வாகவே பத்மாசினி சொல்ல, அவர்களுக்கும் வியப்பு.
தங்கள் கதையை ஒவ்வொரு நாளும் சொல்லி வர, சிலை பிரதிஷ்டை நல்லபடியாக நடக்க வேண்டும் எனப் பெற்றவர்களும் மனதார விரும்பினர்.
சிங்கம் வீட்டினரிடம் , பொக்கிஷத்தைப் பற்றி எல்லாம் சொல்லாமல், அவர்களுக்குத் தகுந்தது போல், பெருமாள் விஷத்தை மட்டும் சொல்ல,
“எம்புட்டு பெரிய பாக்கியம். இளவரசி வரவும் எல்லாம் நல்லதாவே நடக்குது” என அகம் மகிழ்ந்தனர்.
ரங்கதுரையிடம் பொக்கிஷத்தைப் பற்றிச் சொல்லி, திடியன் மலைப் பக்கம் ஒரு கண்ணை வைத்துக் கொள்ளச் சொன்னான். சுருட்டு கருப்பனைப் பெருமாள் சிலை ஸ்தாபிக்கும் வரை காவலில் வைக்கச் சொல்லி, பொறுப்பை தங்கராசுவிடம் ஒப்படைத்தான்.
முத்துராசு,முத்தய்யன் விழா ஏற்பாட்டில் மும்மரமாக இருந்தனர். வள்ளி, தங்கராசு விஷயத்தைக் கேள்விப் பட்ட மாயாண்டி குடும்பத்துக்குள் சலசலப்பு இருந்தது. செம்பதுமத்தையாவது தங்கள் மருமகளாக்கிக் கொள்ள வேண்டும் என முத்து கருப்பனைச் சல்லிக்கட்டுக்குத் தயாராக்கி வந்தனர்.
கழுவன் குடிக்கே சில விஷயங்கள் தெரிந்திருக்க, ரதி தேவிக்குத் தெரியாமல் போகுமா. கண்ணால் பார்ப்பது, காதல் கேட்பது, யூகம் வைத்து செய்தி விட்டாள். மந்திர கட்டோடு நடந்ததால் பெருமாள் விஷயம் மட்டும் தெரிய வில்லை.
வீர விளையாட்டு நடக்கும் நாளை கூட்டமே எதிர்பார்த்து இருந்தனர்.
அதற்குள் மற்றவர் கண்களைக் கட்டி ஏகாதேசி நாளில் இதோ அதிகாலையில், குதிரை மலையில் கழுவன் குடும்பமே கூடியிருந்தனர்.
மருத மரத்துக்கு அருகில் பூர்வ ஜென்ம ஜோடிகள் சொன்ன இடத்தில் ஒரு ஆள் உயரம் தோண்டியும் சிலை இருக்கும் சுவடே தெரியவில்லை. சிங்கம் சந்தேகமாய் பூர்வ ஜென்ம ஜோடிகளைப் பார்க்க
“மருதமரம் இருக்கும் புறம் பக்கவாட்டில் தோண்டுங்கள்” திருமலை வாசன் சொல்ல, அதே போல் முன்னேற அங்குள்ள மண்ணை தங்கராசு தேவன், கைகளாலேயே தோண்ட, சட்டென மின்சாரம் பாய்ந்தது போல் ஓர் உணர்வு.
“ராயரே” அவன் கூவி விட, சட்டென உள்ளே இறங்கிய திருமலை வாசன், பீஜ “ஓம் நமோ நாராயணாய” எனச் சொல்லிக் கொண்டே மண்ணை பறிக்க, வராகரூபன், மண்ணிற்குள் இருந்து காட்சி தந்தான்.
பார்த்தவர் கண்களில் கண்ணீர், “கோவிந்தா, கோவிந்தா” வல்லபர் சொல்ல, பத்மாசினியும் அவள் அருகில் நின்ற தாடகை, ராக்காயி ஆகியோர் திருப்பி சொன்னார்கள்.
அந்த நேரம் காற்று வீச, மருத மலர்கள் உதிர்ந்து பெருமாளைச் சேவித்தன. மழைச் சாரலாய் பொழிந்து வேங்கடவனை வணங்கியது. திடியன் மலை அடிவாரத்திலும் இதே போல் இயற்கை பரம்பொருளை வணங்கியது, மற்ற மூவருக்கும் நினைவில் வந்தது.
எழுமலை திருவேங்கடநாத சாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதருடன் ஏகாதேசி திதியில் காட்சி தந்தார்.
வல்லபர் யோசனையின் பேரில் சிலைகளைப் பிரதிஷ்டை செய்வதற்குத் தகுந்த இடத்தை தேர்வு செய்து, எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தனர்.
திடியன் மலை போலவே, தங்கராசு தேவன், பின் முதுகில் சிலையைச் சுமக்க, அண்ணனுக்கு பாரம் குறைக்கவென, முத்துராசும், சாமி கருப்பனுக்குப் பக்கவாட்டில் பிடித்துக் கொண்டனர்.
ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளை முத்தையன், திருமலையுமாகத் தூக்கி வர, சிங்கமும், வல்லபரும் தாடகையும், பத்மாசினியும் உதவினர்.
இங்குச் சிலை கிடைத்த அதே நேரத்தில், திடியன் மலையடிவாரத்தில் உள்ள சோலையில் பொக்கிஷமும் வானவன் கண்களுக்குத் தட்டுப்பட்டது.
பொழுது விடியும் வேளையில் சிலைகளை மலையிலிருந்து சிரமப்பட்டு இறங்கி
ராக்காயி வழிகாட்ட, சிலையைச் சுமந்து கோவிந்தா நாமம் சொல்லிக் கொண்டே குடில் அருகில் இறக்கி வைத்தனர்.
பிரதிஷ்டை செய்யும் முன் திடீரென பெருமழை பிடிக்க, அன்று காற்று போல் இன்று மழையோ எனப் பயந்து கோவிந்த நாமம் சொல்லியபடி வேண்டி நின்றனர்.
செம்பதுமம் , ராக்காயியிடம் சென்று, “அப்பாருக்கு என் விஷயம் தெரியுமா” எனக் கேட்கவும், “ஆம்” எனத் தலையாட்டி நடந்ததைச் சொன்னார்.
முதல் நாள் தங்கராசு தேவனை அவன் குடிலில் வைத்து குடும்பமே கூடி வைத்தியம் செய்தனர். அவன் நித்திரையில் “இளவரசி, இளவரசி” என புலம்ப, “ பித்தம் தலைக்கு ஏறி இருக்கப்பு. உடல் கொதிக்குது, உள்ளுக்கும் மருந்தும், நெத்திக்கு பத்தும் தாரேன், ராத்திரி பூரா போடுங்க” என வைத்தியர் மருந்தைக் கொடுத்து விட்டுச் செல்ல, வேலாயியும் , கோதையும் அவன் அருகிலேயே இருந்து பார்த்துக் கொண்டனர்.
‘குடுங்க, நான் போட்டு விடுறேன்” தாமினி வர, “கண்ணலாம் ஆகலையே” எனத் தயங்கினர். “மதினி, சும்மா குடுங்க. கழுவன் குடும்பத்தில் வாக்கப்பட்டா புருஷனுக்காவது சேவகம் பண்ணனும் . இளவரசிக்கு அதெல்லாம் செய்ய தெரியுமாண்டு பார்க்கனுமுல்ல” சிங்கம் சொல்லவும்,
“அது சரி. இல்லையிண்டா பொண்ணை வேண்டாமுண்டு சொல்லிடுவியா” தாடகை வம்பிழுக்க, அவளை முறைத்தவன்,
“உனக்குன்னாப்ல, நானும், என் குடும்பமும் தானே சேவகம் பண்ணோம். உனக்கு வாரிசா இருந்துட்டு போகுது”
“நாலு மாசமா வீட்டோட கிடந்தியே, நான் பார்க்காம, ஆட்டக்காரியா வந்து பார்த்தா”
“ நீ விட்டா தானடி அவ பார்ப்பா” எனவும், மனைவிமார் இருவரும் முறைக்க,
“ உரிமையா பார்த்துக்கட்டுமுண்டு சொல்ல வந்தேன், நீ தான் பேச்சை திருப்பின” சாமிதுரை, பதுமம் இருவரையும் துணைக்கு வைத்து விட்டுக் கிளம்பினர். வேலாயி மகள் பூங்குயிலுக்குப் பக்குவம் பார்க்கச் சென்றார்.
தாமினி, தங்கராசுவை பொறுப்பாகவே பார்த்துக் கொண்டாள்”
பதுமமும், தாமனியுமாகப் பேசிக் கொண்டனர்.
“தேனூரில் வைத்து முதல் முறை உங்கள் அண்ணையாவை பார்த்தேன். என் அண்ணன் குழந்தையை வைத்துக் கொண்டிருந்தேன், அவள் மூர்ச்சையானத பார்த்து வலுக்கட்டாயமாக என்னையும் சேர்த்து வைத்தியரிடம் கொண்டு சேர்த்தார்” தாமினி நினைவு கூற,
“ம்ம், அண்ணனின் மேனியில் நகக்கீறல்கள் இருந்தது. விவரம் கேட்டப்ப சொல்லுச்சு. நான் கூட உங்களை வஞ்சேன் “ பதுமம் சொல்ல,
“முன் அனுபவம், அவர் உதவி செய்கிறார் என்பதை உணரும் முன் நான் மயங்கி விட்டேன்” இருவருமாக மனம் விட்டுப் பேசிக் கொண்டனர்.
“ உங்கள் காதல் ஜென்மங்களை கடந்ததுன்னு சொல்றாங்களே” தாமினி கேட்க, மென்னகை பூத்த பதுமம் “உங்களுக்கும், கழுவன் குடும்பத்துக்கும் கூட பூர்வ ஜென்ம உண்டு. சரியாகத் தான் ஜோடி சேர்ந்து இருக்கீங்க” என்று சொல்ல, தாமினிக்கு ஆச்சரியம்.
“சிக்க அண்ணையா என் மீது கோபமாக இருப்பார்கள். கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கள்” தாமினி கோரிக்கை வைக்க, “ சொல்லவும் வேண்டுமா. அது என் கடமை” என்றவள், “சாம பூஜை இருக்கு பவளத்தை அனுப்பி வைக்கிறேன், அவளிடம் இதையெல்லாம் வாய் திறந்து விடாதீர்கள்” என எச்சரித்துக் கிளம்பினாள்.
ஆனால் பவளம் வந்தது முதல் வேங்கடவனைப் பற்றியே விசாரித்தாள்.
“பதுமத்தைக் கல்யாணம் கட்டனுமுண்டு, சல்லி கட்டுல போட்டி போடுறேன், மருதனை அடக்கனுமுண்டு இருக்காரு. மருதன் ரொம்ப பொல்லாதது. உங்க அண்ணனை கலந்துக்க வேண்டாமுண்டு சொல்லுங்க.” எனவும்,
“அவர் விரும்பும் பெண்ணை மணக்க இது தான் வழி என்றால், செய்து தானே ஆகணும்” என்றாள் தாமினி.
“மருதனை யாராலயும் அடக்க முடியாது. உங்க அண்ணனே ஒரு தரம் முயற்சி செஞ்சு ஆபத்தில் மாட்டிகிட்டார். பதிவு போனாலோ உயிர் பிழைச்சார். அவளுக்கும் தெரியும். தெரிஞ்சும் சித்தினி நாயக்கர் உசுரை எதுக்கு பணையம் வைக்கணும்” என தாமனியைக் குழப்பி விட்டாள்.
வேங்கடவன், தங்கராசுக்கு இணையான வீரன் தான். சமாளித்து காளையை அடக்கி விடுவான் என்றே தாமினி நம்பிக்கை கொண்டிருந்தாள். பவளம் சொல்லவும், அண்ணன் மேல் உள்ள பாசத்தில் கொஞ்சம் கவலையாகவும் இருந்தது.
பதுமம், பவளத்தைச் சாட்டி விட்டு தங்கள் வீட்டுக்குத் திரும்பியிருக்க, வேங்கடவரும் இன்னும் திரும்பவில்லை ,ராக்கு இரவில் ஊசலாடிக் கொண்டே இருக்கச் சிங்கத்துக்குச் சந்தேகம் வந்தது.
தாடகை நாச்சி உறங்கிய பின் வெளியே கிளம்ப, செம்பதுமமும் ஒளி பொருந்திய முகத்தோடு அருள் வந்தவள் போல் மலையை நோக்கிச் செல்வது தெரிந்தது. சிங்கம் நொடியும் தாமதிக்காமல் கட்டையை வைத்துக் கொண்டு சற்று சிரமப்பட்டே அவளை பின் தொடர்ந்தான். ராக்காயி வீட்டுக்குள் சென்ற பதுமம், அன்று ரதி தேவி தந்த நகை அணிந்து மேனி ஜொலிக்க தேவி போல் வெளியே வந்தாள்.
பார்த்து நின்ற சிங்கத்துக்கே மேனி சிலிர்த்து விட்டது. அவனையறியாமல் உள்ளத்தில் பேருவகை. ஜென்ம ஜென்மமாய் காணத் தவித்தவளைக் கண்ட உணர்வு. கண்ணில் நீர் பெருக வார்த்தைகள் வரவில்லை. அடுத்து குதிரை சத்தமும் அதைத் தொடர்ந்து வேங்கடவனும் வந்திருக்க, அவன் முகத்திலும் அப்படியொரு காந்தி.
குதிரை மலையே ஜொலித்தது. ராக்காயி அவர்கள் கையிலிருந்த சிறிய பெருமாள் விக்கிரகத்தைத் தர அவர்கள் மலையை நோக்கிச் சென்றனர். பழைய சிங்கமாக இருந்தால் மலை ஏறியிருப்பான். கால் ஒத்துழைக்க மறுக்க , என்னவென அறிந்து கொள்ளும் ஆவலில் ராக்காயி முன் வந்து நிற்க, அவள் மருண்டு விழித்தாள்.
“இங்க என்ன நடக்குது” அவன் உரும, “என் ராசால்ல கோவப்படாமல் நான் சொல்றதை கேளு” தெளிவாகப் பேசினாள்.
“இம்புட்டு தெளிவா பேசுறவ, பிச்சியா நடிச்சியா” அடுத்த கணையைத் தொடுக்க
“இல்லை,பத்மாசினி ஆத்தா வந்த பிறகு தான் சித்தம் தெளிஞ்சது” என்றவள்
“உன் மகளா வரனுமுண்டு வரம் வாங்கி வந்தது. என் கருவுல வந்தும் தங்காம போச்சு. மலை மேல இருக்க மருத பட்டையை அரைச்சு குடிச்சா குழந்தை தங்கு முண்டாக. மரத்தைத் தேடிப் போனேன். ஏதேதோ ஞாபகம் மயங்கிக் கிடந்தேன்.அப்பலை புடிச்சே பிச்சியா திரிஞ்சேன். நடுவுல நினைப்பு வந்து போகும். சாமியார் பத்மாசினி வரனுமுண்டு வேண்டுண்டு சொன்னாரு. நீ தான் என்னை ஒதுக்கிட்டியே. கோதையைக் கட்டி வச்சேன். அவளுக்கும் நிற்கலை. நாச்சி வயித்தில தான் வந்து பிறந்திச்சு. பதுமம் பிறந்தவுடனே அந்த சாமியார், இந்த குழந்தையை காப்பாத்துறது உன் கடமையிண்டாரு. பார்த்துக்கிட்டே திரியிறேன். இப்ப தான் ஒரு மாசம் முன்ன, ஆத்தாளுக்கு நினைப்பு வரவும், எனக்கு தெளிஞ்சது”என்றவள் பூர்வ ஜென்ம கதையையும் சொன்னாள்.
முழுதும் கேட்டு விட்டு, அவர்கள் வரும் சத்தம் கேட்கவும் சிங்கம் மறைவிடத்துக்குச் செல்ல, “ஒன்னுமே சொல்லாம போற” என்றாள் ராக்காயி.
“எல்லாம் தெரிஞ்சவ நீ நடத்து. என் மவளுக்கு மட்டும் எதாவது ஆச்சு. ராயர் கூட்டத்தை கூண்டோட அழிச்சு புடுவேன்.” எச்சரித்து மறைந்தான்.
சொல்லி முடித்த ராக்காயி, “உன் அப்பு, உன் மேல உசுரையே வச்சிருக்கு ஆத்தா, அது தான் அப்பிடி பேசுது.” எனவும்,
“எனக்கும் புரியுது ஆத்தா. ஆனால் அப்பாருக்கு கடவுள் நம்பிக்கை கூட கிடையாது. கோவிலுக்கு வந்தாலும் மத்தவுங்களுக்காக கூட நிப்பாரு. பூர்வ ஜென்மம் சொன்னால் நம்புவரா”
“கண்ணால பார்த்துச்சு இல்ல, அப்புறம் நம்புறதுக்கு என்ன. ஆனாலும் வீம்பு புடிச்ச மனுஷன். உன் அம்மாளைக் கண்டு, இத்தனை வருஷம் சமாளிக்குது” ராக்கு தெளிவாகவே பேசப் பதுமத்துக்கு அது ஒரு சந்தோசம்.ஆனாலும் அங்கு என்ன நடக்கிறதோ என்ற அச்சம் தோன்ற பத்மாசினியாய் குதிரை ஏறி விட்டாள்.
அங்கே ராயர் கூடாரத்தில் வேங்கடவனுக்கும், சிங்கத்துக்கும் தான் முட்டிக் கொண்டு நின்றது. சிங்கராசு தன் குடும்பத்தை ராயர்கள் உபயோகித்துக் கொள்ளவதாக குற்றம் சுமத்தினான்.
“இது இரண்டு குடும்பத்துக்கும் பொதுவானது. மண்ணில் புதையுண்டு இருக்கும் பெருமாள் சிலைகளைப் பிரதிஷ்டை செய்தால் மட்டுமே விமோச்சனம்” என்றார் வானவன்.
“வடக்கைக் கண் காணாத தேசத்திலிருந்து, உங்க பெருமாளு இங்கன வந்து
புதைஞ்சு இருக்காரு, அதை நான் நம்பனும்” இளக்காரமாகக் கேட்க,
“நம்பிக்கை இல்லாவிட்டால் திடியன் மலையடிவாரம் வாருங்கள். அவர்கள் பிரதிஷ்டித்த பெருமாள் இருக்கிறார். அவர்களுக்கு உதவியவர், உங்கள் அண்ணன் மகன், கழுவன் தங்கராசு தேவர்” எனவும், சிங்கத்தை முறைக்க,
“அப்பு, தன்னை மறந்த நிலையில் சேவகம் பண்ணியிருக்கேன்” என கை கூப்ப,
“அவன் கண்ணையும் காதல் மறைச்சிருக்கே “ எனவும்,
“அதையும் எங்கள் சூழ்ச்சி என்கிறீர்களா” திருமலை வாசனாக மாறியிருந்த வேங்கடவன் வேகமாகக் கேட்க,
“இல்லையா பின்னே” என்ற சிங்கத்தின் முகத்தில் ஒரு இளக்காரம் இருக்க , வாசவரின் பொறுமை எல்லை கடந்தது “உமக்குக் காலம் காலமாக, ஏன் ஜென்மம், ஜென்மமாகப் புரிதலின்றி எங்களோடு சண்டை போடுவதே வழக்கம். இந்த ஜென்மத்திலாவது திருந்தித் தொலையும்” வாசவனாக வீரசிம்மரிடம் போன ஜென்மத்தில் போட முடியாத சண்டையை இப்போது போட,
ஹாஹாவெனச் சிரித்த சிங்கம், “நானும் பூர்வ ஜென்மத்தில் பொறந்தேண்டு சொல்றியா. அப்போ எனக்கும் நினைப்பு வரட்டும். அப்புறம் பேசுவோம்” பிடிவாதம் பிடிக்க வாசவனுக்குச் சினம் எல்லை கடந்தது.
மற்றவர் வேங்கடவனை அணுகவும் அச்சப்பட்டுத் தள்ளி நிற்க, வானவன் மட்டுமே,”தம்புடு கொஞ்சம் பொறுமை” எனப் பேசிக் கொண்டு இருந்தார்.
பூர்வ ஜென்ம வாசனை கொண்ட வாசவனிடமாவது பேச முயன்றனர். சிங்கம் தனியாக நின்று வேட்டையாடியது.
“ஆத்தி, நாச்சியாளை கூட்டியாந்திருக்கனும். அவுகளால மட்டும் தான் சமாளிக்க முடியும்” தங்கராசு சொல்ல,
“ஆமாம்டா மவனே, மதினியை கூட்டியா”துரை ராசுவும் ஒத்து ஊதினார்.
“சும்மா இருங்க அண்ணேன்” என்ற வள்ளி, “ஆத்தா பதுவு, பத்மாசினி உன் அப்பாரை வந்து சமாதானம் பண்ணு” என மனதில் சொல்ல , அங்கே பதுமம் குதிரையில் கிளம்பியிருந்தாள்.
“ராயரே, உன் பேச்சுக்கே வாறேன். நீ சொல்றது உண்மையிண்டா. என் புள்ளைக்கு அன்னைக்கு மேனி வெட்டி வெட்டி இழுத்துச்சே. பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தா. உசிரு போயிருந்தா யாருக்கு நட்டம்” எனக் கேட்க
“உம்மை விட, எனக்குத் தான் நஷ்டம் அதிகம்” என்ற வாசவர் கண்கலங்க
“அம்புட்டு கஷ்டப்பட்டு அந்த பெருமாள் சிலையை நட்டமா நிறுத்தி என்ன செய்ய போறீங்க”எனவும்
“அது ஜென்ம கடன், அதைத் தீர்க்கத் தான் இந்த பிறப்பு” என்றான்.
“மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா” என்றவன்,
“நீ கழுவன் குடியில வந்து தங்குறதுக்கு தான் என் மவளை பொண்ணு கேட்ட, சல்லிக்கட்டு நடத்துண்ட . நானும் ஏமாந்து ஊருக்கே சல்லிக்கட்டு அழைப்பு விடுத்து வச்சிருக்கேன். மதுரை கோட்டை வரைக்கும் சேதி சொல்லியாச்சு. கழுவன் மகளை கட்டனுமுண்டு அம்புட்டு பேரும் வருவானுங்க. நீ என்னடாண்டா சாமத்தில எம்மவளை கூட்டிட்டு பூசை பண்றமுண்டு மலை மேல திரியிற. அதுக்கு என் பொண்டாட்டி காவல் வேற. அப்புறம் என்னத்துக்கு சல்லிக்கட்டு. இது தெரிஞ்சா சாதி சனம் என் மூச்சியில காரி துப்ப மாட்டானுங்க. என் காவல் கோட்டையில் என் கண்ணுல மண்ணை தூவி, வேற என்னவெல்லாம் செய்யிற” எனக் கேட்க
“அப்படி தான் செய்வேன். பத்மை என் மனைவி. அவளிடம் எனக்குச் சகல உரிமையும் உண்டு. நாளை விடியலில் என் மனைவியாகி இருப்பாள்” சவால் விட
“அடேய்” எனச் சிங்கம் வேங்கடவன் மேல் துண்டை பற்றியிருக்க, அவனும் சிங்கத்தின் மேல் துண்டை பற்றியிருந்தான். மற்றவர் கூச்சலிட்டும், விலக்க நினைத்தும் முடியவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் கழுத்தை நெறித்துக் கொண்டு நின்றனர்.
“ராயரே, உன் பேச்சுக்கே வாறேன். நீ சொல்றது உண்மையிண்டா. என் புள்ளைக்கு அன்னைக்கு மேனி வெட்டி வெட்டி இழுத்துச்சே. பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தா. உசிரு போயிருந்தா யாருக்கு நட்டம்” எனக் கேட்க
“உம்மை விட, எனக்குத் தான் நஷ்டம் அதிகம்” என்ற வாசவர் கண்கலங்க
“அம்புட்டு கஷ்டப்பட்டு அந்த பெருமாள் சிலையை நட்டமா நிறுத்தி என்ன செய்ய போறீங்க”எனவும்
“அது ஜென்ம கடன், அதைத் தீர்க்கத் தான் இந்த பிறப்பு” என்றான்.
“மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா” என்றவன்,
“நீ கழுவன் குடியில வந்து தங்குறதுக்கு தான் என் மவளை பொண்ணு கேட்ட, சல்லிக்கட்டு நடத்துண்ட . நானும் ஏமாந்து ஊருக்கே சல்லிக்கட்டு அழைப்பு விடுத்து வச்சிருக்கேன். மதுரை கோட்டை வரைக்கும் சேதி சொல்லியாச்சு. கழுவன் மகளை கட்டனுமுண்டு அம்புட்டு பேரும் வருவானுங்க. நீ என்னடாண்டா சாமத்தில எம்மவளை கூட்டிட்டு பூசை பண்றமுண்டு மலை மேல திரியிற. அதுக்கு என் பொண்டாட்டி காவல் வேற. அப்புறம் என்னத்துக்கு சல்லிக்கட்டு. இது தெரிஞ்சா சாதி சனம் என் மூச்சியில காரி துப்ப மாட்டானுங்க. என் காவல் கோட்டையில் என் கண்ணுல மண்ணை தூவி, வேற என்னவெல்லாம் செய்யிற” எனக் கேட்க
“அப்படி தான் செய்வேன். பத்மை என் மனைவி. அவளிடம் எனக்குச் சகல உரிமையும் உண்டு. நாளை விடியலில் என் மனைவியாகி இருப்பாள்” சவால் விட
“அடேய்” எனச் சிங்கம் வேங்கடவன் மேல் துண்டை பற்றியிருக்க, அவனும் சிங்கத்தின் மேல் துண்டை பற்றியிருந்தான். மற்றவர் கூச்சலிட்டும், விலக்க நினைத்தும் முடியவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் கழுத்தை நெறித்துக் கொண்டு நின்றனர்.
புயல் போல் உள்ளே நுழைந்த பத்மாசினி, “வாசவரே என் தந்தை மீதிருந்து கையை எடுங்கள். அப்பாரு நீங்களும் தான். இரண்டு பேரும் மல்லுகட்டினா, நான் என்னை முடிச்சுக்குவேன்” என குறுங்கத்தியை தன் கழுத்துக்கு நேராகப் பிடித்து மிரட்டினாள்.
“பத்மை” வேங்கடவன் அதிர்ந்து, சிங்கத்தின் மேலிருந்து கையை எடுக்க,
“ஆத்தா என்ன காரியம் செய்ய துணிஞ்ச” எனச் சிங்கமும் வேங்கடவனை விட்டு மகளிடம் சென்று, அவள் கையிலிருந்த குறுங்கத்தியை வாங்கி கீழே வீசிவிட்டு, மகளை அணைத்துக் கொண்டான்.
சிங்கத்துக்கு மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. “தந்தையே” என அவள் அழைத்து அவர் கையை பற்றச் சிங்கத்துக்கு உணர்வு குவியலான நிலை. மகளின் கண்ணீரைத் துடைத்தான்.
“தந்தையே, சென்ற பிறப்பில் உங்கள் சொல்லை மீறியதால் நானும், உங்கள் பிடிவாதத்தால் மரகதபுரியும் கூண்டோடு அழிந்தது. அந்த நிலை எனக்கோ, உங்களுக்கோ நம் கழுவன் குடிக்கோ வேண்டாம். எனக்காக நம் குடும்பத்துக்காக நான் சொல்வதைக் காது கொடுத்துக் கேளுங்கள்”என மன்றாட
“உனக்காகத் தான் ஆத்தா போறாடுறேன். அன்னைக்கு ஒரு நாள் வந்து உடம்பு தூக்கிப் போட்டு துடிச்சியே, அது மாதிரி திரும்ப ஒன்னு வராதுண்டு என்ன நிச்சயம்“ எனவும், முரட்டுத் தந்தைக்குள் உள்ள மகளின் மீதான பாசம் மற்றவர்களுக்கும் புரிந்தது.
சிம்ம ராசுத் தேவன்,இது வரை வானவனையும்,வாசவரையும் கேட்ட அத்தனை கேள்விகளையும் பத்மாசினியிடமும் கேட்க
“இதையெல்லாம் இப்படியே விட்டுட்டு போனாலும் உங்க மக உசிருக்கு ஆபத்து தான் தந்தையே “ அவளே அப்பனுக்குத் தாயாகி தன் மொழியில் சொல்லிப் புரிய வைத்தாள்.
“சரி ஆத்தா. நான் உன் நிழலா இருப்பேன். அதுக்கு நீ ஒத்துக்கும்” இயல்பாக மகளாகப் பாவித்தே பத்மாசினியிடம் சிங்கம் பேச, வானவன் முதல் முறையாக பத்மாசினியை பார்த்து சிலையாகி நிற்க, வள்ளி கண் இமைக்காமல் பார்த்திருந்தாள்.
துரை ராசு, “ஆத்தா நான் சின்ன பிள்ளையில இந்த ராணியைத் தான் பார்த்தேன்”
“ஆமாம் அண்ணேன் கழுவன் குடியையே சுத்திட்டு இருந்திருக்கும் போல” என கண்ணீர் மல்கியது,
தங்கராசு கோபமாக முறைத்து நின்ற திருமலை வாசவராய வேங்கடவனை, சமாதானம் செய்து கொண்டிருந்தான்.
“உன் தங்கச்சி என்ன காரியம் செய்யத் துணிந்தாள்?” உரும
“நீங்களும் மாமனார் கூட சண்டை போடலமா. நியாயப்படி என் தங்கச்சி தான் உங்கள் மேல கோபபடனும். வெண்ணெய் திரண்டு வரும் போது தாளியை உடைக்கிறீங்களே ” எனவும் அவனை முறைத்தான்.
“ராயரே, இருபத்தியோரு நாள் பூஜை செய்யனும். பெருமாளை மண்ணுக்குள்ள இருந்து தூக்கனும். பிரதிஷ்டை பண்ணனும். சண்டன் வருவான், சல்லிக் கட்டு இருக்கு. என் கல்யாணம் நடக்கனும், எல்லாம் சிங்கம் கண் அசைச்சா தான் நடக்கும். வாசவரா இருந்தா கோபக்காரரா இருக்கீங்க. வேங்கடவரா வாங்க” என வேண்டு கோள் விடுக்க வேங்கடவனாகி அங்கிருந்த ஆசனத்தில் பொத்தென அமர்ந்து விட்டார்.
“சரித்தா, இப்ப என்ன தான் செய்யனும்கிற” மகளுக்காக உச்சாணிக் கொம்பிலிருந்து இறங்கி வந்து கேட்க, தங்கம் சொன்ன அத்தனையும் அவளும் பட்டியலிட்டாள்.
வேங்கடவனாக மாறியிருந்தவன், “கழுவரே பெருமாள் சிலை பிரதிஷ்டை வரை உங்கள் மகளோடு பூஜை செய்ய அனுமதியுங்கள். கோவிலும் சிறப்பாக அமையும். அதனால் உங்களுக்கும் பாளையத்துக்கும் பெருமை தான். மந்திர கட்டுக்குள் பிறர் அறியாமல் நாம் மட்டுமே கலந்து கொள்வோம். உங்கள் பெயருக்கு எந்த கலங்கமும் வராது” எனப் பணிவாக எடுத்துச் சொல்ல, சிங்கம் அவனை ஏற இறங்கப் பார்த்தான்.
வானவர், “கழுவரே, பெருமாள் சிலைகளைப் பிரதிஷ்டை செய்து இங்குள்ளதை உங்களிடமும், திடியன் மலையில் உள்ளதை உங்கள் தம்பியிடமும், புத்தூர் மலையடிவாரத்தில் உங்கள் மருமகனிடமும் ஒப்படைத்துச் செல்கிறோம். எங்கள் கடமை முடிந்தால் போதும்” என வாக்கு தந்தார்.
“முக்கியமான விசயத்தைப் பத்தி பேசலையே” எனவும்
“தாமினியா. தகுந்த சீரோடு கழுவன் குடி மருமகள் ஆவாள்”
“உங்க மகள், எங்க மவன் தான் வேணுமுண்டு எங்க எல்லையை மிதிச்சப்பவே எங்கூட்டு மருமவதாண்டு முடிவான விசயம்” என்றான்.
“வேறு என்ன” வானவனும், வேங்கடவனும் ஏன் கழுவன் வம்சமும் என்ன வென யோசனையாய் பார்த்திருக்க, சிங்கம் போட்ட நிபந்தனையில் எல்லோரும் அதிர்ந்து நின்றார்கள்.
கழுவன் குடியின் எல்லையில் வீர விளையாட்டு நடத்துவதற்காகச் சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் தண்டு இறக்கியிருந்தனர் ராயர் பரிவாரம். புதிதாக அமைக்கப்பட்ட கூடாரத்தில் இருக்கைகள் போடப் பட்டிருக்க, சிம்மராசு தேவனும், வானவரும் பேசிக் கொண்டு இருந்தனர். விவாதம் சற்று காரசாரமாகவே இருந்தது.
முன்னதாக கொம்பு சத்தமும் அதைத் தொடர்ந்து முத்துராசு தேவனும் வந்து சொன்ன தகவல் சின்ன கழுவன் குடி துரைராசு தேவனோடு சித்தினி நாயக்கரின் அண்ணன் வானவரும் உத்தப்பரும் வந்திருக்கின்றனர். வானவர், நீலவள்ளியை மணந்திருக்கிறார் என்ற தகவலையும் சொன்னான். இதுவுமே துரை ராசுத் தேவன் வாய் மொழி அறிந்தது.
விவரம் சொல்லவும் , சிங்கம் தன் அம்மா பேச்சியிடம் கேலியாகவே ஆராத்தி கரைக்கச் சொன்னான். தனது கோட்டைக்குள், குடிக்குள் தன்னவர்களே எத்தனை விசயத்தை மறைத்தது இருக்கின்றனர். ஒவ்வொன்றாய் வெளிச்சத்தால் வெளிச்சத்துக்கு வந்து கொண்டு இருக்கிறது.
அதற்குள் தங்கராசு தேவனும் தம்பி சொன்ன செய்தியைக் கேட்டு அவசரமாகத் தயாராகினான். முத்தையன் தங்கள் குடிலுக்குச் சென்றிருக்க, தாமினுக்குப் பதட்டம் தொற்றியது.
“கழுவரே, என்னை விட்டுக் கொடுத்து விட மாட்டீரே” கண் கலங்கக் கேட்க, அவளைக் கையை பிடித்து ,
“என் குடிலுக்குள்ள தங்கராசு பொண்டாட்டியா தான் நிக்கிற. அப்புவே உன்னைக் கூட்டிக்கிட்டு வந்ததால உங்க கூட்டமே எதிர்த்தாலும் பயப்படாத. நீ கழுவன் வீட்டு மருமகள் தான் ” என்றவன், “வா” வென, தங்கள் வீட்டுக்குள் அழைத்துச் சென்றான்.
இரண்டாம் கட்டில் குடும்பமே கூடியிருந்தது. தாமினி எல்லாருக்கும் பொதுவாக ஒரு வணக்கத்தை வைக்க, எல்லோருமே அவளுக்குத் தலையசைத்தனர்.
“ஒத்தை நாள்ல எல்லாரும் பழகியாச்சா” தங்கம் வியக்க
“ ராசா மகாராசா மவ, நீ தான் எல்லாமுண்டு வந்திருக்கு. அதுக்கிட்ட பழகாமலா” பேச்சி கிழவி ஆரம்பித்துச் சிறு பிள்ளைகள் வரை தாமினி தேவி புகழ் பாடினர்.
“பேரன் உன் கழுத்தில காரை கயிறு கட்டுற வரைக்கும் கிழவி கருப்பட்டியா தான் பேசும்.” தாடகை நாச்சி சொல்லிக் கொடுக்க,
“அவ கிடக்கா மதிலேறி வந்தவ. ஒத்தையா திரிஞ்ச முரட்டுக் காளை எம் பேரனை மடக்கி புட்டியே. அதுக்கே என் நகையை உனக்கு தாறேன்” நீட்டி முழங்கினார் பேச்சி.
“ம்க்கும், ராச பரம்பரையில இல்லாத நகை கழுவன் பொண்டாட்டிகிட்ட இருந்துட போகுது, அதையும் பக்குமானம குடுக்கிறேங்கிறவ ” கருத்தையாவே மனைவியை வார, வெள்ளையம்மாள் பொக்கை வாய் தெரியச் சிரித்தார். பேச்சிக்கு இன்னும் வேகம் வந்தது.
“ராசா மகராசாவுக்கு வாக்கப்பட அஞ்சி, என் பேரன் தான் வேனுமுண்டு வந்திருக்கு. அப்பக் கழுவன் அப்பத்தா நகையும் உசத்தி தானே” பேச்சியம்மாள் சரியான வாதத்தைப் பிடிக்க,
“ஆமாம் அவ்வா, உசத்தி தான். கொடுங்க போட்டுக்குறேன்” தங்கராசுவை பார்த்த படி தாமினி சொல்ல, “மகராசி” என்றவர் தன் கழுத்தில் கிடந்த தங்கம் பிடித்த முத்து மாலையை கழட்டி , தாமினி கழுத்தில் போட்டு விட, பெண்கள் வாய் பிளந்தனர். உண்மையில் தங்கராசு தனித்து நின்று விடுவானோ என அஞ்சியவருக்கு தாமினியை பார்க்கவும் .மகிழ்ச்சி தான். ஆனாலும் , ராச வாழ்க்கை ஏவிய வேலைக்குச் சேவகம் செய்ய ஆட்கள் இருந்த வாழ்க்கைக்குப் பழகியவள், அவனுக்கும் குடும்பத்துக்கும் ஒத்து போவாளா என்ற சந்தேகம். அதையும் நேற்று தகராசுவுக்கு சேவகம் செய்து போக்கி இருந்தாள் தாமினி தேவி. அதிலிருந்து பேச்சி கிழவிக்கு தாமினி மேல் பாசம் பொங்கி வழிந்தது. இதோ இன்று தனது முத்து மாலையைக் கழட்டிப் போட்டு விட்டார்.
அறைக்குள்ளிருந்து வந்த சிங்கம், “ஆத்தா, ராசா மகாராசா வந்திருக்காருண்டு தெரிஞ்சு, அதுக்குள்ள இளவரசியை உன் வூட்டு மருமவளா பரிசம் போடுற பாரு. உன் ராசா தந்திரம் யாருக்கு வரும்” எனச் சிலாகிக்க, தங்கராசு ”அப்பு” என அடுத்த வார்த்தை வராமல் தவித்தான்.
தோளோடு அணைத்தவன், “ வீரனோட வாழ்க்கையில் வீரத்தோட காதலும் இருக்கனும்டா “ என்றவன்,
“என்னத்தா, உன் கழுவர் என்ன சொல்றாரு” தாமினியிடமும் கேட்டான்.
“அண்ணையா இரண்டு பேரையும் பார்க்கனுமாம்” எனவும்
“அவுகளே வந்துட்டாங்களே, மந்தையில வச்சு கார கயிறை கட்டுனா (கழுத்தை ஒட்டி கார எலும்பில் படுப்படியாக, கருப்பு கயிற்றை பெண்ணின் கழுத்தில் கட்டுவார்கள், பின்னர் அதுவே கருகமணி தாலியாகமாறியது ) கல்யாணம் முடிஞ்சது ” என்றவன், அரசல் புரசலாகத் தெரிந்த விசயங்களைச் சொல்ல, அதிகமாக அதிர்ந்தது தாமினி தான்.
‘அண்ணையா அதுக்காக தான் அழைச்சிருப்பாங்களோ, நான் தான் அவசரபட்டுட்டேனோ’ மனதில் நினைத்தாள்.
“உள்ளே கூட்டிட்டு போங்க வர்றதை பார்த்துக்குவோம்” சிங்கம் சொல்ல, கோதை தாமினியை அழைத்துச் சென்றாள். மற்ற பிள்ளைகளும் சென்று விட, செம்பதுமம் வெள்ளையம்மாளுக்கு உதவிக் கொண்டிருந்தாள்.
தாமினி செல்லவும், “வள்ளியவா கல்யாணம் பண்ணாக, அவுகல்ல இதெல்லாம் பழக்கமில்லையே” தாடகை வியக்க,
“பொட்ட புள்ளைக்கு வாழ்க்கை கிடச்சிருக்கு அது முக்கியமில்லை, ஆராய வந்துட்டா” மருமகளை நொடித்தார் பேச்சி.
“அவ சொல்றதிலையும் விசயமிருக்கு ஆத்தா. குலம் கோத்திரம் பார்க்கிறவுக கழுவன் குடும்பத்தையே ஏன் சுத்தனும்” என்ற சிங்கம் செம்பதுமத்தை அர்த்தமாகப் பார்த்தான்.
“கோட்டையில வளர்ந்த நாச்சியா கழுவன் குடிக்கு வரலையா. அப்படி தான் அப்பு” இதுவரை மறு பேச்சு பேசாத பதுமம் கருத்து சொல்ல
“இதென்ன அப்பாரை மடக்கி பேசுற பழக்கம்” தாடகை மகளைக் கடிய, அவள் தீர்க்கமாகப் பார்த்தாள். சிங்கம்,”கருத்துச் சுதந்திரம் எல்லாருக்கும் இருக்கு விடு” என்றான்.
கருத்தையா விடம் “அப்பாரு நீங்க என்ன சொல்றீங்க” எனவும்,
“பொண்ணு, நம்ம பயலைப் பார்த்து ஆசைப் பட்டு வந்திருக்கு அதில சந்தேகமில்லை. நம்ம வீட்டு பொண்டுகளை அவுக ஏன் கட்டனும். யோசிக்க வேண்டிய விஷயம்” என்றார். வீரனும் தந்தையை ஆதரித்தே கருத்துச் சொன்னார். வேலாயி மகளுக்குப் பக்குவம் பார்க்க தங்கள் குடிலுக்குச் சென்றிருந்தார்.
அந்த நேரம் அவசரமாக வந்த ரங்கராசு, “அண்ணன், நொண்டி கருப்பனை, தனி இடத்தில வச்சிருக்கேன்.நீங்க வந்து பார்த்துட்டு என்ன செய்யலாமுண்டு சொல்லுங்க” எனவும்,
“இரண்டு நாள் செல்லட்டும்” என்றான் சிங்கம்.
“சொன்னபடி சரணடைச்சுட்டானா அப்பு. அவனை நம்ப முடியாதே” தங்கராசு கேட்க,
“நேருக்கு நேர் நிண்டு மோதுறவனை கூட நம்பலாம். ஆணை படுத்தா குதிரை மட்டமுண்டு என் ரத்தமே என் கிட்ட உண்மையை மறைக்கிறீங்க, இதை எந்த கணக்குல சேர்க்கிறது” எனவும்,
“அப்பு, உங்க கிட்ட எதையும் மறைக்கனுமுண்டு நினைக்கலை அப்பு” தங்கராசுவுக்கு கண் கலங்கிவிட, செம்பதுமம் யோசனையாக அப்பாரை பார்த்தாள் .“ஏப்பு , ஒரு பொண்ணை மனசில நினைச்சது தப்பா, அதுக்கு இந்த வார்த்தையை சொல்லிப்புட்ட. நீ நாச்சியாளை கூட்டிட்டு வரும் போது , நான் ஏத்துக்கிடலை. அப்படியே செஞ்சிருந்தாலும் உன்னை பார்த்து வளர்ந்தவன், உன் பாதையில் தானே போறான்” பேச்சி மகனை தேற்ற,
“அப்பாரு, அண்ணனைச் சொல்லலை அப்பத்தா . என்னைத் தான் சொல்றாரு” என எழுந்து வந்த பதுமம் சிங்கம் முன் மண்டியிட்டு, “உங்களுக்கு விருப்பம் இல்லாத எதையும் செய்ய மாட்டேன் அப்பாரு. எனக்குன்னு கடமை இருந்தாலும், நீங்களும் நம்ம குடும்பமும் எனக்கு முக்கியம்” கையை பிடித்துக் கொண்டு வாக்கு தர,
“ஆத்தா, நானும் உன் ஆத்தாளுங்களும் ஆசை தீர வாழ்ந்துட்டோம். இனி பிள்ளை குட்டிண்டு உங்களை பத்தின கவலை தான். மூத்தவுக, நீங்க இரண்டு பேரும் போற போக்குல தான், உங்க தம்பி தங்கச்சிகளும் வருங்க. நாளைக்கு என்ன நடக்குமுண்டு தெரியாது, உங்களையும் காத்துகிட்டு, வம்சத்தையும் காக்கிறது உங்க கையில் தான் இருக்கு” என்றான்.
செம்பதுமம் போலவே தங்கராசுவும் மண்டியிட்டு, “என் தம்பி, தங்கச்சிங்க நம்ம வம்சத்தையே காத்து நிற்பேன் அப்பு. உறுதியா தெரியாத விஷயத்தை சொல்லி, உங்களைக் குழப்ப வேண்டாமுண்டு எதையாவது சொல்லாமல் விட்டிருப்பேன். அதுக்கு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க அப்பு” என்றான்.
“இந்தா என்னாத்துக்கு, புள்ளைங்ககிட்ட இப்படியெல்லாம் பேசுற. இருக்கும் போதே உனக்குக் கிறுக்கு புடிச்சிடும்.”தாடகை நாச்சி கணவனைத் திட்டவும்,
“அம்மா, இது எங்க அப்பா, மக்களுக்குள்ள உள்ளது. இதுக்குள்ள நீ வராதே” என்றாள் பதுமம்.
“ரொம்ப தாண்டி வாய் நீளுது. நான் இல்லாமல் நீ வந்துட்டியோ” நாச்சி முறைக்க, ஹாஹாவெனச் சிரித்தவன், “நீ இல்லையிண்டா இன்னொருத்தியைக் கொண்டு வந்திருப்பேன்” மனைவியை வம்பிழுக்க,
“அதை செய்யி. உன் கூட இழுபட என்னால முடியலை” அவள் அடுப்படிக்குள் செல்ல, “ஒரு நாள் போல இருக்காது, இப்படிப் பேசாத ராசா” பேச்சி இப்பொழுதெல்லாம் மகனின் இந்த பேச்சை மட்டும் எதிர்க்க ஆரம்பித்திருந்தார்.
தங்கராசுக்கு வானவன் வள்ளி திருமணம் ஆச்சரியம் தந்தது. அவனைப் பொறுத்தவரை வள்ளி ராணி மகாராணியாக அருகதை உள்ளவள் தான். ஆனாலும் இவ்வளவு அவசரம் ஏன்! மனதில் கேள்வி எழப் பதில் தர துரைராசு தேவன் மட்டும் கழுவன் குடி வந்தார்.
உரிமையாக கூடத்துக்குள் வந்து பெரியவர்களை வணங்க,
“ கூட்டத்தோட வந்தேண்டு சொன்னாங்க. ஒத்தையா வந்திருக்க “ சிங்கம் கேட்க,
“ அரசர் வந்திருக்கார் அண்ணேன்” என்றார் தயங்கியபடி.
“ எந்த நாட்டுக்கு “
“அது… அவர் தான் சொல்ல வேண்டும். நீங்க வந்திங்கண்டா நல்லா இருக்கும்”
“இம்புட்டு தூரம் வந்தவருக்கு இப்ப காவல்காரண்டு நினைப்பு வந்திடுச்சு” வம்பு பேசினாலும் அண்ணன் வந்து விடுவார் என்றே நம்பிக்கை இருக்கச் சிங்கமும் பொய்யாக்கவில்லை.
கால் அடிபட்ட பின் மாட்டு வண்டியில் பயணித்து வந்த சிங்கம், மன வலிமையோடு குதிரையில் ஏறி அமர்ந்து விட, பார்த்திருந்தவர்களுக்கு மனம் பதறியது.தாடகைக்குக் கணவன் இனி யாரையும் நம்ப மாட்டான் என்ற பெருமூச்சு வந்தது.
சீற்றத்தோடு வந்து இறங்கிய சிங்கத்தை நேர் எதிர் சந்தித்தது வள்ளி தான். தனக்குத் தெரியாமல் ஏதேதோ நடக்கிறது என்ற கோபத்தில் இருப்பார் என உணர்ந்தவள், “ கும்புடுறேன் அண்ணேன்” எனக் காலில் விழ, பூ, பொட்டோடு பட்டு நகைகள் அணிந்த அவள் மங்கள தோற்றம் சற்றே மனதைக் கரைத்தது. “நல்லா இருத்தா. ராணியா அரசாள கிளம்பிட்ட. எங்க உன் அரசர்”
“அண்ணேன், ராணியாகிற ஆசை எல்லாம் எனக்கு இல்லை. தாயில்லா புள்ளைக்கு தாயா போறேன்”
“ஏன் கழுவன் மகள் ராணியாக அருகதை இல்லையா. நீயே உன்னைக் குறைவா நினைச்சுக்காதே” என்று விட்டு துரை ராசுவோடு அவளைக் கடந்தான்.
தங்கராசு அக்காளை இப்படிப் பார்ப்பதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.
வெட்கத்தில் தலை குனிந்தவள், அவனைத் தனியாக அழைத்துச் சென்று “இளவரசியை விரும்புறமுண்டு ஒரு வார்த்தை சொல்லலை*
“நீ மட்டும் வானவரை விரும்பினதை சொன்னியா”
“அது எதேச்சையா நடந்தது. அவுககிட்ட அப்படியெல்லாம் பேசிட முடியுமா”
“இங்கேனாப்ல இளவரசி எம்புட்டு ரப்புண்டு தெரியுமில்ல. “
“சிவப்பி எல்லாம் சொன்னா. உன் தங்கச்சிக்கு சல்லிக்கட்டை ஏற்பாடு பண்ணி புட்டு நீ காளையை அடக்கிட்டு திரியிறவன். அதுவும் காட்டுக் காளை” அவள் சிரிக்க
“நீ போட்டுவிட்டது தான் அக்கா. வீரமா இருக்கனுமுண்டு வேல்கம்பு விட்டு பழகுனாக. அந்த உழக்கு அதைச் சொல்லலையா”
“சொன்னா. அக்காளை ஓட்டி விட்டதையும் ஒத்துக்கிட்டா, உத்தப்பர் அவுக அப்பாகிட்ட திருப்பி அனுப்பிட்டார்” “சரி விடு. இரண்டு சிங்கத்துக்கு இடையில் நீ தான் வெள்ளைக் கொடி ஆட்டனும். அங்க போ”
“நானா” அவள் அதிர, “அரச வம்சம் காரியம் ஆன பிறகு நிமிர்ந்து தான் நிக்கும். அப்பு நம்ம மேலையே கோவத்தில் இருக்காரு. சூதானமா இருக்கனும்” அக்காளையும் அழைத்துக் கொண்டு முன்னேற எதிரே வேங்கடவன் வந்தான்.
“வணக்கம் இளவரசே , உங்கள் தங்கை கழுவன் குடி வந்தது எனக்கும் இன்னைக்கு காலைல தான் தெரியும்” தன்னை விளக்கிச் சொல்லும் முனைப்பில் அவசரமாகச் சொல்ல
“அவள் மனதைப் பற்றி உங்களிடம் சொன்னவனும் நான் தானே. அவள் ஓடி வந்தது தான் பெரிய சங்கடம். எங்கள் இருவரையும் தவிர்த்து சிங்கத்திடம் சரணடைந்து, இப்போ தேவையில்லாத பிரச்சினையை இழுத்து வைத்திருக்கிறாள்” என்றான் அதிருப்தியோடு .
“நீங்களே புரிஞ்சுகலைனா எப்படி” தங்கராசு தன்னவளுக்காக பரிந்து பேச
“காதல் தவறென நான் சொல்லவில்லை. உண்மையில் சுல்தான் தாக்குதலுக்குப் பின் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தவள், உங்களிடம் பாதுகாப்பை உணர்ந்திருக்க வேண்டும். உங்களைத் தேர்ந்தெடுத்ததில் நிறை தான். முறை என்று ஒன்று உள்ளதே. உங்கள் தங்கையை மணக்க முறையாய் பெற்றவரிடம் தானே கேட்டேன். “ எனவும்.
“அந்த குறை உங்களுக்கு வேண்டாம். உங்கள் தங்கையை எனக்கு மணம் செய்து கொடுங்கள்” தங்கம் நேரடியாகக் கேட்கவும் புன்சிரிப்போடு.
“மகளாக வளர்த்தது அண்ணையா தான். எங்கள் இருவர் மீதும் அவருக்குத் தான் உரிமை அதிகம் “என மழுப்ப
“அப்போ, இளவரசி செய்ததும் சரி தான்” என்றவன்,
“கோட்டைக்கு போயிட்டு வர்றதுக்குள்ள இந்த கூத்து. எத்தனை பேரைச் சமாளிக்க வேண்டியது வருமோ” தங்கராசு வாய்விட்டுப் புலம்ப, வேங்கடவனுக்கு பத்மையை நினைத்து கவலை அதிகரித்தது. இந்த முறை எத்தனை தடங்கள் வந்தாலும் அதை வெற்றி கொண்டு, சந்திரகிரிக்கு அவளை அழைத்துச் சென்றிட வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. ஆனாலும் கடக்க வேண்டிய நிகழ்வுகளும் தொல்லைகளும் தொலைவும் நிறைய உள்ளதே. இந்த ஜென்ம ஜென்மமாகச் சோதித்துக் கொண்டு தான் இருக்கிறார்.
இரண்டு தலைகள் நேருக்கு நேர் முட்டிக் கொள்ளும் நிலை வந்துள்ளது. வார்த்தை தடித்தால் குடும்பத்துக்குள் குழப்பம் வரும். சம்பந்தப்பட்ட மூவரும், வானவர் குடிலை நோக்கிச் சென்றனர்.
வானவரே பாதி தூரம் வந்து சிம்மராசு தேவனை வணக்கம் சொல்லி வரவேற்க, “எங்க காவல் கோட்டை, பாளையம் ராஜ்ஜியத்துக்குள்ள வந்திருக்க உங்களை நாங்க தான் வரவேற்கனும். நீங்களே மாறு வேடத்தில் ஜவுளி வணிகராக வரும் போது, அதற்கு உரிய மருவாதி தானே கிடைக்கும்” முதல் வார்த்தையிலேயே சிங்கம் சீறியது.
வானவர் பொறுமையாக, “ஊழ்வினை, யாரை விட்டது. அரசனையும் ஆண்டியாக்கி அலைக்கழிக்கிறது” தத்துவம் பேசி கூடத்துக்குள் அழைத்துச் சென்றார். வேங்கடவன், தங்கராசு, துரை ராசு, வள்ளி நால்வரும் அவர்கள் அறைக்கு வந்தனர்.
அறையிலிருந்தவர்களை ஒரு முறை பார்த்து விட்டு, “உங்கள் உண்மையான பரிச்சயம் சொல்லுங்கள். மற்றவர் வாய் மொழியாக வந்த எதுவும் வேண்டாம்” சிங்கம் கேட்க,
“வீர நரசிம்ம வானவ ராயர், விஜயநகர வழி வந்த அரவிடு மரபு, சந்திரகிரி ராஜ்ஜியத்தை ஆண்டவர்கள். இவன் என் இளவல் திருமலை வாச வேங்கட ராயர்” என தம் வம்சத்தை அறிமுகப் படுத்த, கழுவ வம்சத்துக்கே அதிர்ச்சி.
“இவ்வளவு கீர்த்தி உடைய நீங்கள், கழுவன் வம்சத்தோடு சம்பந்தம் வைத்துக்கொள்ளக் காரணம்.? என் தங்கை வள்ளி, இதை விடப் பெரிய ராஜ்ஜியத்தையே ஆள உடையவள். ஆனாலும் கைம்பெண் , உங்கள் மரபில் கைம்பெண்களை மணக்கும் பழக்கம் இல்லை. எங்கள் இனத்தவர்களை தாம் கீழாகவே நினைப்பீர்கள். அப்படி இருந்தும் எங்களோடு சம்பந்தம் செய்யக் காரணம்” முகத்துக்கு நேராகக் கேட்க,
“தாங்கள் சொலவது வாஸ்தவம் தான். மரபுகளை மீறி உங்களோடு சம்பந்தம் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதை நன்றிக் கடன் என்றும் சொல்லலாம்” வானவர் பூசி முழுக்க பார்க்க,
“ராயரே, இந்த கதையை வேறு யாரிடமாவது சொல்லுங்கள். கழுவன் குடும்பத்தைப் பலி கொடுத்து, நீங்கள் பொக்கிஷத்தை எடுத்துச் செல்ல திட்டமிட்டுருக்கிறீர்கள். உங்கள் சூழ்ச்சிக்கு, வள்ளி, தங்கராசு, செம்பதுமம் மூவரும் பகடைக் காய்கள்” சிங்கம் நேரடியாகக் குற்றம் சுமத்த,
“கழுவரே, ஆதாரம் இன்றி சந்திரகிரி அரசன் மேல் பழி சுமத்துவதை, நான் அனுமதிக்க மாட்டேன்” வேங்கடவன், சிங்கம் முன் கர்ஜித்து நிற்க,
“பூர்வ ஜென்ம கதையை என் குடும்பம் நம்பும், நான் இல்லை.” சிங்க ராசு ஒரே போடாக போட அந்த அறையிலிருந்தவர் அதிர்ந்து நின்றனர். வாத விவாதங்கள் சூடு பறந்தது.
அதே நேரம், ராக்காயியின் வீட்டில், “அப்பாருக்கு , என் விஷயம் தெரியுமா. எப்படி தெரியும் சொல்லுங்க ஆத்தா” என செம்பதுமம் கேட்டு நின்றாள்.
திடியன் மலையடிவாரம் திருமாலிரும் சோலைக்குள் இருந்த வானவனுக்கு தாமினியின் செயல் மிகுந்த வருத்தத்தைத் தந்தது.
இங்கிருந்து சீக்கிரம் கிளம்ப வேண்டும் என உத்தேசித்த வானவன், தங்கைக்குத் தகுந்த வரன் தேட உத்தப்பர், நல்லமன், வல்லவனிடம் சொல்லி வைத்திருக்கச் செஞ்சியின் இளவரசனை வரனாக கொண்டு வந்திருந்தார் உத்தப்பர்.
“இந்த சம்பந்தம் முடிந்தது எனில் சந்திர கிரியை மீட்க அவர்கள் உதவுவார்கள்” என்றும் கணக்கிட்டனர்.
வானவனுக்கும் உகந்ததாகத் தோன்றியது. வள்ளியை மணம் முடிப்பது குறித்தும் தங்கை தம்பியிடம் பேச வேண்டும் என இருவருக்குமே தூதுவர்களை அனுப்பினார்.
சின்ன கழுவன் குடியில் தங்கும் வசதி இல்லை என்று தான் தகுந்த பாதுகாப்போடு காட்டு மாளிகைக்கு அனுப்பி வந்திருந்தார். மீண்டும் அண்ணையா எதற்கு அழைக்கிறார் எனச் சந்தேகம் வந்து தூதுவரைக் குறுக்குக் கேள்விகளாகக் கேட்க, செஞ்சி விவரத்தைச் சொல்லி விட்டான்.
அண்ணையா ராஜியத்தை திரும்ப கைபற்றுவதை கருத்தில் கொண்டே அழைக்கிறார் என்பது புரியவும், தாமினிக்கு மனம் பொறுக்கவில்லை.
சற்று முன்னர் தான் தங்கராசு தேவன் அவளிடம் தன் மனதைத் திறந்து விட்டுப் போயிருக்க, கழுவனே தன் கணவன் என முடிவெடுத்து விட்டாள்.
குழந்தை அலமேலு அவளைப் பார்த்துக் கொள்ளும் வயோதிக பெண்மணி சேடி பெண்கள், வீரர்கள் என ஐம்பது பேர் கொண்ட படை தான் பிரயாணம் செய்யும். இது பாளையங்களில் சகஜம் என்பதால் பெரிய கட்டுப்பாடு விசாரிக்கும் காவலரிடம் உத்தப்பர் பெயரைச் சொல்லிப் பயணிப்பர்.
திருமணம் என்றவுடன் தாமினியின் மூளை வேகமாக வேலை செய்து, சிவப்பியைச் சரி கட்டி, குதிரை கோச்சு வண்டியில் குழந்தையையும் அவளையும் மட்டும் அனுப்பி, அண்ணையாவிம் சேதியும் சொல்லி விட்டாள்.
முக்காடு போட்டுக் கொண்டு கழுவன் குடிநோக்கி கிளம்பியவளை நான்கு ஆட்கள் பின் தொடர்ந்தனர். அவர்கள் கண்ணில் மண்ணை தூவி மேல திரு மாணிக்கம் கோவில் வரை வந்து விட்டாள்.
அடைக்கலமாக வேறு இடம் இல்லாவிடினும் தங்கராசு வரும் வரை கோவிலில் காத்திருக்கவோ அல்லது வேறு யாருடைய துணையாவது கொண்டு கழுவன் குடியை அடையத் திட்டமிட்டாள்.
தெய்வமே குறுக்கே வந்தது போல் சிம்மராசு தேவன், தாடகையிடமே அவள் தஞ்சமடைய, தங்கராசு என அவள் சொன்ன பெயரே போதுமானதாக இருந்தது. வயது பையன் ஒற்றையாய் நின்று விடுவானோ என்ற கவலையும் தீர்ந்தது என தங்களோடே அழைத்துச் சென்று தங்கராசு குடிலில் தங்க வைத்தனர்.
அன்றைய சாமத்தில் பதுமம் பத்மாசினியாய் திருமலை வாசனை சந்தித்து குதிரை மலை சென்று பூஜை செய்து வந்த போதும் கூட தாமனியைப் பற்றி பதுமமோ பத்மையோ வாய் திறக்க வில்லை. அண்ணனின் தூது வந்த அடுத்த நாள், தங்கராசு வந்த தினத்தில் வேங்கடவன் சின்ன கழுவன் குடி சென்றான்.
சோலைக்குள் வானவன், வேங்கடவன், வல்லபர், வள்ளி, சிவப்பி, குழந்தை அலமேலு, துரை ராசு, சித்திரை செல்வி ஆகியோர் இருந்தனர். செல்விக்கு கணவன் சொன்ன விசயங்கள் யாவும் புதிது. ஆனாலும் வள்ளிக்கு வாழ்க்கை கிடைக்கிறது எனவும் ஏற்பாட்டுக்கு ஒத்துக் கொண்டாள். வள்ளியிடமிருந்த தயக்கத்தையும் உடைத்துப் பட்டு சீலை கட்டி விட்டு பூவும் பொட்டும் நகையும் அணிவித்து அழைத்து வந்திருந்தாள்.
சோலையும், பெருமாள் சிலையும் பார்க்கவும் அதிர்ச்சி, ஆச்சரியம் அடைந்தாள்.
சிவப்பி இன்று மௌனமாகத் தலை குனிந்தபடி நிற்க, வள்ளி குழந்தை அலமேலுவை வைத்திருந்தாள்.
வள்ளியின் தோற்றத்தில் மாற்றம், தலை வாரி பூ வைத்து, குங்குமமும் வைத்திருக்க, வந்தவுடன் வேங்கடவன் அதைக் கவனித்து விட்டான்.
வானவன் தெலுங்கில் இங்குப் புதைந்திருக்கும் பொக்கிஷத்தை எடுத்தாலும் அதை நல்வழியில் பயன்படுத்த பிரதிஞை எடுக்க வேண்டும். தம்பதி சமேதராய் ஹோமம் பூஜை செய்ய வேண்டும் என்கிறார் வல்லபர். கழுவரும் அவர் தங்கையும் நமக்கு நிறையச் செய்திருக்கின்றனர். அலமேலுவுக்கு வள்ளியை விடச் சிறந்த தாய் கிடைக்கமாட்டாள். அதனால்…” வானவர் நிறுத்த,
மீண்டும் வள்ளியை நோக்கிய வேங்கடவன், “நல்ல முடிவு தான் அண்ணையா. கால தாமதம் வேண்டாம். இன்றே திருமண சடங்கை முடித்து விடுங்கள்” என்றான். வல்லபரும் அதை வலியுறுத்தினார்.
“அண்ணனை விடத் தம்பி வேகம் தான் “ வள்ளி மனதில் நினைக்க, துரை ராசுவிடமும் வேங்கடவன் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தவன் வதினா என முறை சொல்லி அழைக்க ஆரம்பித்தான்.
வல்லபர் ஹோம குண்டத்தில் அக்னி வளர்த்து, திருமண சடங்கை ஆரம்பிக்க மலர் மாலைகள் தயாராகவே இருந்தது.
முறைப்படி துரைராசு தேவன், வள்ளியை வானவருக்கு தாரை வார்த்துக் கொடுக்க மனைவியாக ஏற்றார். அக்னி வலம் வந்து, திருநாண் பூட்டி வகிட்டில் பொட்டும் வைத்து முழுதாய் தம் மனையாள் ஆக்கிக் கொண்டார். அவர்களை இணைக்கும் பாலமாக அலமேலு இருந்தது. வள்ளிக்கு உணர்வு பூர்வமான நிலை. இந்த சென்மத்தில் அற்று போனதாக நினைத்த உறவு, கணவன் பிள்ளை என அவளும் வாழ போகிறாள். அதுவும் ராயர் குடியில். வானவனோடான வாழ்வு, கரடு முரடாக ஓடிக் கொண்டே இருப்பதாக தான் இருக்கும். ஆனாலும் பூரண மகிழ்ச்சி.
இந்த திருமண வைபவத்தில் தங்கை கலந்து கொள்ள வேண்டும் என நினைத்தார். அது நடவாததில் மிகுந்த வருத்தம். “தம்புடு, அவளை என் மகள் போலத் தானே வளர்த்தேன். என்னிடம் எதற்குத் தயக்கம். சொல்லாமல் ஒரு ஆடவனைத் தேடிச் சென்றால் அவர்கள் குடும்பத்தில் தான் என்ன மதிப்பு இருக்கும். இவளுக்காகத் தானே சாந்தம்மா தன் உயிரையே கொடுத்தாள்” எனக் கண்ணீர் விட,
இளையவன், “நானும் கழுவன் குடியில் தானே இருக்கிறேன். என்னையும் அவள் சந்திக்கவில்லை அண்ணையா” என வருத்தப்பட்டான்.
“காதல் புகுந்து விட்டால் கள்ளமும் புகுந்து விடுகிறது. ” என்றவர் அடுத்து என்ன செய்யலாம் என விவாதித்தனர்.
வள்ளிக்கு இப்போது பேசும் உரிமை வந்து விட்டது, “உங்க தங்கச்சி உங்க மேல வச்சிருக்க பாசத்தில் தான் இப்படி முடிவெடுத்திருக்கு." எனவும், இருவரும் அதிர்ந்து பார்க்க, "உங்க பேச்சைத் தட்டும் நிலைமை வரக்கூடாதுன்னு, தனக்கு பிடிச்சவனை தேடி போயிருக்கு. என்னையவே ஏத்துக்கிட்டிங்களே. என் தம்பிக்கு இளவரசியைக் கட்டிக் கொடுக்கிறதில என்ன சங்கடம். சின்னவரும் கழுவன் மகளைக் கட்டத்தானே சல்லிக்கட்டு காளையை அடக்குறோமுண்டு நிக்கிறார்” வினவ
“பெண்கள் வலியச் சென்று மணமுடிப்பதை இந்த உலகம் தப்பாகப் பேசும்” என்றார் வானவர்.
"நம்மளே நடத்தி வைப்போம்" வள்ளி சொல்ல, வேங்கடவனுக்கும் அதுவே சரி என பட்டது.
“அண்ணையா தாமதம் வேண்டாம். நாளை வதினாவை அழைத்துக் கொண்டு கழுவரோடு பெரிய கழுவன் குடிக்கு வாருங்கள். தீர்வு கானுவோம்” எனக் கிளம்பி விட்டான்.
வழி நெடுக வேங்கடவனாய் பதுமம் மீதும், வாசவனாய் பத்மை மீதும் கோபம் இருந்தது. அதைச் சித்தினியின் மீது காட்ட, அது பாய்ந்து சென்றது.
இரண்டாம் ஜாமம் முடியும் நேரமானது ராக்காயி வேங்கடவன் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்ததில் மந்திர கட்டை போட மறந்திருந்தார்.
வழக்கம் போல் செம்பதுமம், பத்மாசினியாக மூன்றாம் ஜாமத்தில் ராக்காயி இல்லத்தை நோக்கி நடக்க மற்றொரு உருவமும் பின் தொடர்ந்தது. சற்று நேரத்தில் வேங்கடவனும் வந்து சேர, இருவருமாகக் குதிரை மலை மருத மரத்தடிக்கு கையோடு எடுத்துச் சென்றிருந்த சிறு பெருமாள் விக்கிரகத்தை வைத்து பூஜை செய்து ராக்காயி வீட்டுக்குத் திரும்பினர்.
வாசவர் ஒரு வார்த்தையும் பேசாமல் வர, பத்மைக்கு வித்தியாசமாகத் தோன்றியது. “வாசவரே, என் மீது கோபமா” எனவும் முறைத்து,முகத்தைத் திருப்பி விட்டார். பத்மாசினி இழுத்துப் பிடித்து, தன்னை நோக்க வைக்க,
“வேங்கடவனின் தங்கை இங்கு எத்தனை நாளாய் இருக்கிறாள்”
“நேற்று மாலை முதல்” எனவும்
“நேற்று சந்திக்கும் போது ஏன் சொல்லவில்லை” சினந்து கேட்க
“அவள் கேட்டுக் கொண்டதால்” எனப் பதில் தந்தாள்.
“இது முறையில்லை பத்மை”
“முற்பிறப்பில் நான் உங்களோடு வரவில்லையா”
“அதற்கான பலனை உன் தந்தை மூலம் ஜென்மங்கள் தொடர்ந்தும் நாம் அனுபவித்து வருகிறோம்” எனவும் அதிர்ந்த பத்மாசினி
“அவள் இந்த ஜென்மத்தில் உங்கள் தங்கை தானே. உங்களுக்கும் தங்கம் அண்ணையாவுக்கு பெண் கொடுப்பதில் மறுப்பு இருக்காது. பிறகு என்ன” விளக்கம் கேட்க
“வானவருக்கும் அவள் தங்கை” என்றவன் , தாமினிக்கான அவரின் ஏற்பாடு இன்று வள்ளியை மணந்தது. அடுத்து அவர்கள் ஜோடியாகச் செய்ய இருக்கும் பூஜை வரை சொல்ல
“ஓ வள்ளியம்மை. அக்கையா. அவரோடு இருக்கும் பொழுது தான் முதல் முறை என்னை உணர்ந்தேன். சரியான ஜோடி தான். முற்பிறப்பிலும் உங்கள் வதினா தான் “ என்றும் சொல்ல வாசவர் அதிசயித்துக் கொண்டார்.
“அப்போது தாமினி”எனக் கேட்க,
முற்பிறப்பிலும் இதே உறவு. சித்தபண்டூரில் நமக்கு முன் உயிரைத் துறந்தவள். விட்ட குறை உங்கள் குடியில் பிறந்தாள்”
“ஏழுமலையான் விளையாட்டை யார் அறிவார். இந்த சம்பந்தங்கள் நடந்தேற, நம் சம்பந்தத்தைப் பற்றி அச்சம் வருகிறது” எனவும்.
“ஆகா, கழுவன் மாட்டை அடக்க அச்சம் என்று சொல்லுங்கள்” அவள் பரிகசிக்க “எனக்கு என்ன அச்சம். சிங்கத்தோடே சமர் புரிவேன்”
“அதற்கும் ஏற்பாடு செய்து விடுவோம். அப்பாரு இருக்கிறார்” எனப் பேசி சிரித்தவள்,
“நேரமாகிறது” என நகையைக் கழட்டி ராக்காயி பெட்டிக்குள் பத்திரப் படுத்தி விட்டுக் கிளம்பினாள்.
“ஆத்தாடி” நெஞ்சில் கை வைத்துக் கொண்டு அந்த உருவமும் வந்தபடி திரும்பிச் சென்றது.
அதிகாலையிலேயே தங்கராசு தேவனுக்கு விழிப்பு வந்து விட்டது. அவன் குடிலில் உள்ள மரகட்டிலில் பஞ்சு மெத்தையில் படுத்திருந்தான். அழகாயி இறந்த பின் கட்டாந்தரையில் அவன் படுக்கை. அதுவே வித்தியாசமாய் தோன்ற, நெற்றியில் போடப்பட்டிருந்த மருந்து பத்து , தன்னை மறந்த தூக்கம் வித்தியாசம் தோன்றத் தலையை உலுப்பிக் கொண்டு நினைவு படுத்திப் பார்க்க, கழுவன் குடி வந்து சேர்ந்தது, பதுவு, சாமியைச் சந்தித்தது வரை நினைவிலிருந்தது. அடுத்து யோசிக்க, தாமினி நினைவு ,வந்தது.
“இளவரசி” என்ற படி துள்ளிக் குதித்து அறைக்குள் இருந்து வெளியே வர முயல,
“கழுவரே, பொறுங்கள். தலைச் சுற்றும்” என இளவரசியே வந்து தாங்கிக் கொள்ள, “ இளவரசி, உனக்கு ஒன்னும் ஆகலையே” அவளை கட்டிக் கொண்டவன், “காட்டு மாளிகையில் உன்னை காணமுண்டு பயந்து வந்திருச்சு” என்றவன் அடுத்து “ராசி…” என ஆரம்பிக்க, அவன் உதட்டின் மீது ஒரு விரலை வைத்தவள், “நிறைய கேட்டுட்டேன். ஒன்னும் சொல்ல வேண்டாம்” எனவும் அவளையே பார்த்திருந்தவன், கண்ணைக் கசக்கிக் கொண்டான்.
“சற்று உட்காருங்கள் நீராகாரம் கொண்டு வரேன்” எனவும்,
“இது கழுவன் குடி. என் குடில். நீ எப்படி இங்கே.” வினவ,
“போதுமடா ராசா, இப்பவாவது நினைப்பு வந்துச்சு” முத்தய்யன் குரல் கேட்கவும், தாமினி தலையசைப்போடு வெளியேற,
“மாமு, நீ தான் இளவரசியை கூட்டியாந்தியா. அது யாருன்னு தெரியுமா” அவசரமாக வினவ,
“அது யாருண்டு கழுவன் குடிக்கே தெரியும். உனக்கு என்ன வேனுமுண்டு உன் குடும்பத்துக்கே தெரியும். இங்கே கூட்டிட்டு வந்தது உன் அப்பு, சிங்கம், வேற எதுவும் விவரம் வேணுமா ” செல்ல முத்தய்யன் அடுத்தடுத்து சொன்ன வார்த்தைகள் தங்கராசுவுக்கு அதிர்ச்சியைத் தந்தன.
“நாலு நாள் மதுரை கோட்டைக்கு போயிட்டு வந்தது குத்தமா, என் காவல் கோட்டையில் என்ன நடக்குதுண்டே எனக்குத் தெரியலை” புலம்ப
“நாலு நாளைக்கே இப்படி சொல்றியே, நாடே சுத்துன சிங்கம் நாலுமாசமா உட்கார்ந்து இருக்கு.” எனவும்
“சங்கடம் தான் “ என்றவன் நீராகாரத்தோடு வந்த தாமினியிடம் “நீ எப்படி வந்த” விவரம் கேட்க
“நான் சொல்லுவேன். ஆனா திட்டக் கூடாது”என்ற பீடிகையோடு ஆரம்பித்து அவன் முறைப்பினோடு முழுவதும் சொல்லி முடிக்க, “சரி கிளம்பு, முதல்ல வேங்கடவரை பார்ப்போம். அப்புறம் வானவரையும் பார்ப்போம்” எனவும், அவள் சிணுங்கினாள்.
"இளவரசி, அடுக்கடுக்காய் தவறுகள் செய்திருக்க. அவங்க நிலையை யோசிச்சு பார்த்தியா"
"அன்னையா பேச்சை மறுக்க முடியாதுன்னு தான் அப்படி செஞ்சேன். இப்போ என்ன அந்த செஞ்சி இளவரசனுக்கு கழுத்தை நீட்டி இருக்கணும்னு சொல்றிங்களா." தாமினி மூக்கை உறிஞ்ச,
"அழுகாதே தாயே" கையெடுத்து கும்பிட்டான்.
அவர்கள் உரையாடல் கணவன் மனைவிக்குள் இருப்பது போல் புரிதலோடு இருக்க, முத்தையன் முன் இரவில் பூங்குயில் புலம்பியதைப் புறந்தள்ளி, “இவர்கள் ஜோடி சேர வேண்டும் “என மனதார நினைத்தான். தங்கராசுவோடு வாழ அழகாயிக்கு தான் கொடுத்து வைக்க வில்லை. அவன் விரும்பியவளோடாவது வாழட்டும் என நினைத்தான்.
பொழுது விடியவும் கழுவன் குடி பரபரப்பானது. மந்தையில் கூடிய மக்கள், “நேற்று குதிரை மலையில் முழு நிலவு மாதிரி வெளிச்சம் வந்தது. “ என்றவர்கள் ஆளாளுக்கு தங்கள் கற்பனையில் ஒன்றைச் சொன்னார்கள் .
ஊர் சுற்றி வரும் வணிகன்,” வால் நட்சத்திரம் விழுந்து இருக்குமோ. அது நல்லது இல்லையே” என வியாக்கியானம் பேச சிம்மராசு தேவன் குடும்பமும் எழுந்து வந்திருந்தது. சிங்கத்திடமும் முறையிட்டனர்.
ரதி தேவி, “தேவரே, அன்று ஒரு ஆபரணம் கொடுத்தேனே. அதன் ஒளியாக இருக்கும். மீண்டும் அந்த மோகினி நம் குடிக்கு வந்தாளோ, என்னவோ” எனப் பதுமத்தைச் சந்தேகமாகப் பார்க்க , கழுவன் குடி மக்களுக்குப் பீதியைக் கிளப்பியது.
அதே நேரம் அவர்கள் குறி சொல்லி ராக்காயி அவ்விடம் வர, “அவளைத் தானே கேளுங்க” சிங்கம் முதல் மனைவியைக் கைகாட்ட,”ஆத்தா” எனக் காலில் விழுந்து வணங்கினர்.
“ஒளி வந்தா நல்லது தான். அழகர் மலையான், ஏழுமலையான், எழுமலையானாவும் வருவான். குளிச்சு சுத்த பத்தமா விரதமிருங்க. கனாவுல சாமி வந்து சொல்லும். “ என்று விட்டு மீண்டும் ஓடி விட, மக்களுக்கு ஆசுவாசம்.
“உன் அக்கா இம்புட்டு தெளிவா பேசிபுட்டா” சிங்கம் தாடகையிடம் உடைசல் விட,
“அவுக என்ன சொன்னாலும் பிரச்சனை தான்” தாடகை உள்ளே செல்ல, கோதை செம்பத்துமத்தை கையோடு இழுத்து சென்றாள்.
ரதி தேவி “தேவரே” என அழைத்து ரகசியம் பேச, “நான் பார்த்துக்குறேன்” என அனுப்பி வைத்தான்.
திரும்ப வந்த தாடகை ,”ஆட்டக்காரிக்கு என்னாவாம்” என கேட்க,
“மறந்துட்டு உள்ள போயிட்டியோ” சிங்கம் வம்பிழுக்க
“என்ன மறந்தேன்” தாடகை கேட்க
“ரதி தேவிகிட்ட என்னைத் தனியா விட்டுட்டு போயிட்டியே” எனக் கேட்க
“இந்த விளையாட்டை இத்தோட நிறுத்திக்க, எங்குட்டாவது அவளோட சேர்த்து வச்சு எசகு பிசாக உன்னைப் பார்த்தேன். அத்தோட என்னை மறந்திரு. ஏழேழு சென்மத்துக்கும் உன் மூஞ்சியில் முழிக்க மாட்டேன்”ஆங்காரமாய் சொல்ல
“ஏன் அப்பு காலையில் அவளை வாயை பிடுங்குற. பத்தினி வாக்கு பலிச்சிட போகுது. உங்களை வச்சு தான் நாங்க” எப்போதும் வம்பு பேசும் பேச்சி இன்று உணர்ச்சி வயப் பட்டுப் பேச,
“ஒன்னும் ஆகாது ஆத்தா. உட்கார்தே கிடக்குறவனுக்கு அவ தான் பொழுது போக்கு. நீ கவலை படாதே அடுத்தடுத்து வாரிசுகளை தயாராக்கிட்டு தான் உன் மவேன் ஓயுவேன்”என்று சொல்ல
“எங்க, இந்தா தங்கராசு ஒத்தையா நிக்கிறான்” பேச்சி ஆரம்பிக்க, 'அதெல்லாம் ஜோடி சேர்ந்திருச்சு" என்றவன்,
“அடியேய், தங்கம் குடில்ல என்ன சேதிண்டு பார்த்துட்டு வா” உள்ளே குரல் கொடுத்தான்.
அதே சமயம் காவல் ஆட்களின் சங்கேத ஒலி ஒலிக்க,”அது யாரு உறமுறை. மாயாண்டி குடும்பம் வருதோ” என எதிர்பார்த்திருந்த நேரம் , காவல் பணியிலிருந்த முத்து ராசு, குதிரையை விரட்டிக் கொண்டு வந்து, குதித்து, சிங்கத்தின் காதில் ஏதோ சொல்ல,
“என்னாடா அதிசயம். நிசமா தானா. அண்ணன், அவன் குடில்ல இருப்பான், கூட்டியா” என அனுப்பி விட்டவன்.
“ஆத்தா, உன் வாய் முகூர்த்தம் ஒத்தை ஆளுங்க எல்லாம் ஜோடி seruthu . உன் மருமகன்களை ஆராத்தியை கரைக்க சொல்லு . வராதவுக வாராக” புதிர் போட, யாரு, என்ன விஷயம் என கழுவன் குடும்பமே மந்தையில் கூடி விட்டனர்.
மதுரைக் கோட்டைக்குச் சென்று, வீர விளையாட்டு நடத்த அனுமதியும் பொன் முடிப்பும் பெற்றுத் திரும்பிய தங்கராசு தேவனைக் கழுவன் குடும்பமே பெருமையாகப் பார்த்தது.
“இளவரசரையே பார்த்தியா அப்பு. அவுகளே வறோமுண்டு சொன்னாகலா” சீயான் கருத்தையா விசாரிக்க,
“ஆமாம் சீயான், பாளையத்தையும், அப்புவையும் சொல்லவுமே இளவரசரே அடையாளம் கண்டுகிட்டார் அப்பு. தேனூருல பேட்டி கண்டதை சொல்றாரு” சிங்கத்திடம் பொற்கழஞ்சுகளை ஒப்படைத்து விட்டு தங்கம் சொல்லி வியக்க, சிங்கத்துக்கும் பெருமை தான். புண் சிரிப்போடு அமர்ந்திருந்தான், ஆனாலும் உள் மனதில் ஓர் நெருடல்.
‘நம்மளை நினைப்பு வச்சிக்கிற அளவுக்கு என்னா செஞ்சோம். அன்னைக்கு ஒரு நாள் தானே பேட்டிக் கண்டோம்’ யோசிக்க, அதற்கு விடையாய் பேச்சோடு பேச்சாக வீரன், “வேற யாரையெல்லாம் பார்த்த” வினவ,
“இளவரசரைப் பேட்டி கண்டுகிட்டு வாறேன், முத்தரையன் நிண்டாரு. எங்களுக்கு அழைப்பு இல்லையாண்டு, ஒரண்டை இழுத்தாரு” என்றான்.
“இந்தா வந்திருச்சில்ல முத்தின கத்திரிக்கா. அவரு நம்மளை மட்டும் கன்னம் வச்சு கருவறதுக்கு என்னா காரணம்” தாடகையைப் பார்த்தபடி சிங்கம் கேட்க,
“அவரு கோட்டையிலிருந்து நாச்சியார்களை தூக்கியாந்தம்ல அண்ணேன்” ரங்கம் அர்த்தமாகச் சொல்ல
“எலேய், அப்படியிண்டா எதுக்கு இத்தனை வருசம் காத்திருக்கனும். எட்டு புள்ளை பெத்த கிழவியைக் கொண்டு போய், அவன் என்ன செய்வான்” என கேட்கவும்
தாடகையும் வந்த வம்பை விடுவதாக இல்லை,”உனக்குத் தான் கண்ணுல கோளாறு. அவருக்குச் சரியா தெரியுதோ என்னமோ” என்றாள்.
“ஆத்தாடியாத்தி, கோட்டையில் இல்லாத அழகி.” பேச்சியம்மாள் நொடிக்க
“அப்படிண்டு தான, இரண்டு கல்யாணம் கட்டினதை மறைச்சு உன் மகன் என்னை தூக்கியாந்தாரு”
“கோட்டையில் இருந்து குதிச்சு உசிரை மாய்ச்சிக்குவியேண்டு கூட்டியாந்தான். என் மவன் மனசு பலாப்பழம்” வழக்கமான மாமியார் மருமகள் ஓட, தங்கராசுக்கு கண்கள் சொருகியது.
“உங்க சண்டையை அப்புறம் வச்சுக்குங்க.”சிங்கம் அமட்ட,
“உனக்கு போட்டியாளுண்டு ரோசம் வருதாக்கும்.” தாடகை கணவனிடம் பாய,
“அடியேய், அவன் என்னை விட மூப்பு. ஆடின ஆட்டத்துக்கு அந்த காலத்திலேயே கிழடு தட்டி தான் இருந்தான்.எப்பவும் அடங்காதது காசு ஆசை ஒன்னு தான். அதுக்காக என்னண்டாலும் செய்வாப்ல” சரியாக நூல் பிடித்த சித்தப்பனை தங்கராசு மனதில் மெச்சிக் கொண்டான்.
“எந்த பாளையம், யாரு காவலுண்டு அறிஞ்சு வச்சிருப்பாக. நம்மளூடே அவுகளுக்காக வேவு பார்க்கிற ஆளும் இருக்கும். பொதுவா நம்பகிட்ட இருந்து தான் கப்பம் வாங்குவாக. நமக்கு கொடுத்திருகாகண்டா, ஆதாயம் இல்லாம இருக்காது. யோசிக்கனும்டா மவனே.
காசை கொடுத்திருக்காக விழாவைத் தடபுடலா ஏற்பாடு பண்ணிடுவோம்” எனவும் அவரவர் வேலையைப் பிரித்துக் கொண்டு கிளம்பினர்.
தங்கராசு மனதில் தாமினை பற்றிய கவலை இருந்தது. காட்டு மாளிகையிலிருந்து சட்டென மறைந்த காரணம் என்ன?”
அண்ணன் மகனின் முகத்தைப் பார்த்த சிங்க ராசு”வேற எதுவும் சொல்லனுமா”
”இல்லைங்க அப்பு” என்ற தங்கராசு
தூரத்தில் வேங்கடவன் நடந்து சென்றதைப் பார்த்த அவனிடம் செல்ல உத்தேசிக்க,
“கை கொடு மவனே, அறைக்கு போகனும்”
“கால் குணமாகும் முன்ன அலட்டிக்காதிங்க அப்பு” என்றபடியே உடன் சென்றான்.
“நல்லா சொல்லு. மருதனை பழக்குறோமுண்டு மலையடிவாரம் போறது. பாளையக்காரர் மீனாட்சி கோவிலுக்கு வருவார். அங்க வச்சாவது கண்டுகிட்டு வாறமுண்டு, நொண்டிக் காலை வச்சுக்கிட்டு சுத்திக்கிட்டே இருக்கிறது”தடாகை திட்ட
“நொண்டி காலுண்டுல்லாம் சொல்லாதீங்க. விழாவுக்குள்ள அப்பு ராச நடையே நடக்கும். மதுரை கோட்டையிலிருந்து தைலம் வாங்கியாந்து இருக்கேன். அதை தேச்சு விடுங்க” தங்கராசு சொல்ல
“பாசக்கார பயடா” அவன் கன்னத்தில் தட்டியவன்,
“உன்னை முத்தம் கொஞ்சனுமுண்டு கூடத் தான் ஆசையா இருக்கு. ஆம்பளைக்கு ஆம்பளை முத்தம் குடுத்துகிறாய்ங்கண்டு, உன் சின்னம்மாகாரி வேற பேர் கட்டி விட்டுறுவா” சிங்கம் அசராமல் சொல்ல,
“அசிங்கம் புடிச்ச மனுசா. தங்கத்துக்குக் கல்யாணம் கட்டனும். வாயை வச்சுகிட்டு சும்மா இரு. தங்கம் நீ நாலு அடி தள்ளியே நில்லு” தாடகை சொல்லி விட்டு வெளியேற
“அடியேய்” என்றவன்,
“இவளுக்குக் கொழுப்பை பார்த்தியா. உன் பேர் கெட்டுப் போகக் கூடாதாம். அப்ப எம் பேர் கெட்டுப் போகலாமா. என்ன நினைச்சுக்கிட்டு இருக்கா இவ” என்று பாய மகன் சிரித்துக் கொண்டான்.
“நாலந்தாரம் கட்ட மாட்டேண்டு தகிரியம். இருடி உன்னை பார்த்துக்குறேன்” கருவ
“அப்பு விடுங்க” என்றான் தங்கம்.
தங்கராசுவை அமர்த்தி, கோட்டையின் மற்ற விசயங்களைக் கேட்டு அறிந்து கொண்டான். “அப்போ மகாராசா முடியாமல் இருக்காரு. அவருக்கு வாரிசு இல்லை. இளவரசர் ராசாவா ஆவாருண்டு அரையன் அவரை சுத்துராப்ல” தன் அனுமானத்தைச் சொன்னவன்,
“மவனே, எனக்கென்னமோ அரையன் மகாராசா சித்தினி நாயக்கர் குடும்பத்து மேல கண்ணு வச்சு தான், நம்ம பாளைத்துக்கு வர துடிக்கிறாப்லையிண்டு தோனுது”
“என்னப்பு சொல்றீங்க.” தங்கராசுக்கு தூக்கிப் போட்டது, சமாதானமாக “அவுககிட்ட அம்புட்டு செல்வம் இருந்தா காஞ்சியிலிருந்து, இங்க எதுக்கு வரனும்” தானே ஒரு காரணத்தைக் கண்டு பிடித்துச் சொல்ல…
“இது தங்கராசு இல்லையே, விசயத்தை முழுசா சொல்றதுக்குள்ள குறுக்கப் புகுந்து பேசுற. என்ன விஷயம்” எனவும்.
ஆத்தி என அரண்டவன், ”அதெல்லாம் ஒண்ணும் இல்லை அப்பு. பயண களைப்பு. செத்த தூங்கி எந்திரிக்கனும்”
“அது சரி தான். உன் குடிலுக்குக் கிளம்பு” உத்தரவு கொடுக்கவும்.
“ஏதோ சொல்ல வந்தீங்களே” மகனை முறைத்தவன் பார்வையில் ‘இப்போ தூக்கம் வரலையா’ வினா தொக்கி நிற்க.
“பரவாயில்லை சொல்லுங்க” என அமர்ந்து விட்டான்.
“சித்தினி நாயக்கருக்கு ஒரு தங்கச்சி இருக்குது.”அடுத்த அதிர்ச்சி, ‘வீட்டிக்குள்ள இருந்தே எல்லாத்தையும் ஆராய்சிருவாப்ல” அடுத்தும் அப்புவின் வாயிலிருந்தே வரட்டும் என மகன் காத்திருக்க
“எனக்கு எப்படி தெரியுமுண்டு பார்க்கிறியா. சின்னம்மா சொன்னா. அழகான பொண்ணுங்களை கண்டா தான் அரையனுக்கு மூக்கில் வேர்த்திடுமே. அந்த பொண்ணை தூக்கிட்டு போய் இளவரசருக்கு காணிக்கை யாக்கலாமுண்டு திட்டம் போட்டுருப்பான்” எனவும்
“அப்பு” என உருமலோடு எழுந்து நின்ற தங்கராசு தேவன், “ எங்க தைரியமிருந்தால் வந்து கையை வைக்க சொல்லுங்க. அப்புறம் தெரியும் இந்த கழுவன் யாருண்டு” விறைத்தபடி எழுந்து நின்று மீசை முறுக்க,
“அந்த பொண்ணைச் சொன்னா, உனக்கு என்னத்துக்கு இமம்புட்டு நரம்பு பொடைக்கிது” எனவும் சுயம் உணர்ந்தவனாக,
“இல்லை அப்பு நம்ம பாளையத்துக்குள்ள வந்து ஒரு பொண்ணை தூக்க விட்டுருவோமா” சமதானம் சொல்ல
“அதெப்படி விடுவோம். வளரி ஒன்னு பத்தாது. ஆனாலும் விழா நடக்கும் தண்டி சூதானமா இருக்கனும். கேள்வி படுற விசயமெல்லாம் ஒன்னும் சரியில்லை” சிங்கம் பூடகமாகவே சொல்ல, தங்கராசுவுக்கு இருப்புக் கொள்ள வில்லை. “வறேன் அப்பு” தன் குடிலுக்கு எதிர்புறம், வேங்கடவன் சென்ற திசையில் செல்ல, உள்ளே வந்த தாடகை, “அதை ஏன் இந்த பாடு படுத்துற” எனவும்,
“அப்புறம் எங்கிட்ட மறைச்சிருக்கான். ஒரு பொம்பளையை பிடிச்சிருச்சிண்டா எம்புட்டு தடங்கள் வந்தாலும் தூக்கி வர்றவன் தான் கழுவன்” மீசையை முறுக்க,
“ரொம்பத் தான்” என்றாள் தாடகை.
வேங்கடவன் சென்ற திசையில் பின் தொடர தங்கராசுவுக்கு அவர் அகப்படவில்லை, “அதுக்குள்ள எங்க போனாரு” தங்கம் யோசிக்க
“யாரை தேடுறீங்க அண்ணேன்”என சாமியும், பதுமமும் எதிர் வந்தனர்.
“வேங்கடவர் எங்கே” என கேட்க,
“சித்தினியோட இப்ப தான் பறந்தார்.”சாமி சொல்ல
“ஏதேனும் ஆபத்தா”தங்கம் பதட்டம் அடைய
“இரவைக்குக் கட்டாயம் வந்துடுவார். ஆத்தா வீட்டில் தான் தங்கியிருக்கார்”
“அது தெரியும். இப்போ எதுக்கு போனார். அவர் தங்கைக்கு எதுவும் ஆபத்தோ” மனம் போன படி சிந்தித்து கவலைப்பட
“அதெல்லாம் இல்லை. எழுமலை மீனாட்சி கோவிலுக்கு வந்தாங்களே” பதுமம் சொல்லவும்,
“எப்போது, என்ன, ஏதென” தங்கராசு நச்சரிக்க, “சித்தினி நாயக்கர் வந்து தகவல் சொல்லுவார். நீ கொஞ்ச நேரம் தூங்கி எந்திரி” பதுமம் சிரித்தபடி சொன்னாள்.
தங்கராசு வேறு எங்கோ செல்லப் போனவனை, “உங்களுக்கு என்ன தெரியனும். நான் விசாரிச்சுட்டு வர்றேன்” சாமி சொல்ல,
நான்கு நாள் தூக்கங் கெட்டது, தங்கராசுவுக்கு கீழே கொண்டு தள்ளியது.
“அண்ணன்” என்றவர்கள் வழுக்கட்டாயமாக அவன் குதிரையைக் குடிலுக்குத் திருப்ப, நான்கு நாள் அலைச்சலில் சோர்ந்து கண் மயங்க, மேனி நெருப்பாகச் சுட்டது.
குதிரையிலேயே தங்கராசு மயங்குவதைப் பார்த்த சாமி சுதாரித்து அண்ணனை பிடித்துக் கொள்ள, தொட்டுப் பார்த்த செம்பதுமம் வழியில் விசாரித்தவரிடம் வைத்தியரை அனுப்பச் சொன்னாள்.
அண்ணனும் தங்கையுமாக மூத்தவனைப் பிடித்து இறக்கி அவன் குடிலில் படுக்க வைத்தனர். நான்கு நாள் இரவு பகல் பாராத அலைச்சலில் முற்றுமாகச் சோர்ந்து இருந்தான்.
உடல் சோர்வை விட தாமனியைக் காணவில்லை, தன் ராசி தான் அவளுக்கும் ஏதோ நேர்ந்திருக்கிறது என்ற நினைவே அவனை மயக்கத்தில் தள்ளி இருந்தது. நினைவே கனவாக மாறி, அதிலும் புலம்பினான்.
“இளவரசி, இதுக்கு தான் உங்களை விலக்கியே வைத்திருந்தேன்” மனதில் உள்ளதை எல்லாம் புலம்ப, சுற்றி அமர்ந்து கழுவன் குடும்பமும், சம்பந்தப் பட்டவளுமே கேட்டுக் கொண்டிருந்தனர். விஷயம் அறிந்து அரண்டது பூங்குயில் தான். மாயாண்டி குடும்பத்துக்குப் பதில் சொல்லியாக வேண்டுமே.
முன்னதாக சிங்கராசு தேவன், முன்தினம் தாடகையையும், பெண் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு எழுமலை பாளையத்தின் பிரசித்தி பெற்ற , கழுவன் குடிக்கு அருகில் உள்ள, மேலதிருமாணிக்கம் சுந்தரேஸ்வரர், மீனாட்சியம்மன் கோவிலுக்குச் சென்றான். திங்கள் கிழமை, சோமவாரம் எனப் பாளையக்காரர் சுந்தரேசரைத் தரிசிக்க வருவார்.
பதுமத்துக்கு இந்த கோவிலுக்குள் வரவுமே, பத்மாசினியாக பூர்வ ஜென்ம நினைவு வந்தது. அப்போதே இந்த கோவில் கட்டப்பட்டு இருந்தது. ஆந்திர தேசத்திலிருந்து வந்த ஆதி மூர்த்தி என்ற அந்தணர் இங்குத் தெய்வ கைங்கரியம் செய்து கொண்டிருந்தார்.
ஐந்து தலை நாகம் ஒன்று அந்த கோவிலில் இருப்பதாகவும், அந்தணரின் வருமையைப் போக்க மாணிக்கக் கல் கக்குவதாகவும் பேச்சு இருந்தது. சிவ கைங்கரியம் செய்த அவரை பார்க்கவும் தனது தந்தை வீர சிம்மர் நினைவு வந்தது. பெருமாள் சிலைகளை மறைத்து வைப்பதற்காக இடம் தேடி வந்த போது, சுந்தரேஸ்வரர் மீனாட்சி சந்நிதியில் அவர்களுக்கு உத்தரவு கிடைத்தது.
ஊரை விட்டு காலி செய்யும் குடும்பத்தினர் தங்கள் குலதெய்வத்துக்கான ஆடை ஆபரணங்களைப் பெட்டியில் வைத்து, அந்த நாகத்தின் கண்காணிப்பில் விட்டுச் செல்லும் பழக்கமும் இருந்தது. ஏனெனில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கற்றளியாக்கப் பட்டிருந்த பூர்வ கோவில். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் முற்பட்டது.
சிங்கத்தை மணமுடித்த வந்தபோது மனம் ஒட்டாமல் இருந்த தாடகை நாச்சி மனம் மாறியதற்கு இந்த கோவிலின் சானித்தியமும் ஒரு காரணம். மீனாட்சி அம்மையைத் தரிசிக்க, தனது தாயின் மடியில் இருப்பது போன்ற உணர்வு வந்திருந்தது.
எந்த ஒரு நல்ல காரியம் செய்யும் முன்பும் குல தெய்வத்துக்குக் காணிக்கை முடிந்து வைத்து விட்டு, கணவனை இழுத்துக் கொண்டு வருவாள். சிங்கத்திடம் பக்தி இல்லையென்றாலும் மனைவிக்காக வருவான்.
கோவிலுக்குள் வரவுமே, அம்மா, மகள் அவரவர் நினைவில் கரைந்தவர்கள், சிம்ம ராசு தேவன் அழைப்பில் கலைந்தனர்.
“பாளையக்காரர் வரலையாம். சட்டுபுட்டுனு கிளம்புங்க. வீட்டுக்குப் போகலாம்” எனவும்
“உன் காரியம் ஆகலைங்கவும் கிளம்ப சொல்லுவியே. செத்த இரு. பிள்ளைகள் சாமி கும்பிடட்டும்” என்றவள்
“பதுவு சல்லிக் கட்டு நல்லபடியா நடக்கனுமுண்டு மனசில் நினைச்சு. இந்த விளக்கை ஏத்து” என்றாள்.
“சரிமா” மோன நிலையில் செல்ல, மற்ற பிள்ளைகளும் அக்காவுக்கு உதவின. விஸ்தாரமான கோவிலில் இறைவனை வணங்கி விட்டு மகிழ்ச்சியாகவே சுற்றித் திரிந்தனர்.
அந்தி சாயும் முன் கிளம்பலாம் என்றாலும் தாமதப்படுத்தும் மனைவியை வம்பிழுத்துக் கொண்டு மற்றொரு நுழைவாயில் மண்டபத்தில் சிங்கம் அமர்ந்திருக்க பிரசாதமாகப் படைத்திருந்த பொறி உருண்டை, தேங்காய், வாழைப் பழத்தைக் கணவனுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தாள் தாடகை. நேரம் கோவிலுக்கு வெளியே ஏதோ சத்தம் கேட்க, நுழைவாயிலில் கோவில் திண்ணையில் அமர்ந்திருந்த போது ,காலில் அடிபட்டதையும் மறந்து சிங்கம் குதித்து வெளியே ஓடினான்.
அங்கே ஓர் இளம் பெண் முக்காடிட்ட படி ஓடி வர, நான்கு ஆட்கள் துரத்தி வந்தனர். தன் காவல் கோட்டையில் தன் கண் முன்னே ஒரு பெண்ணை துரத்தி வருவதைச் சிங்கத்தால் பொறுக்க முடியவில்லை. இடுப்பில் தயாராக வைத்திருந்த இரண்டு வளரிகளை வீசி நால்வரையும் கீழே சாய்ந்திருக்க, அந்த பெண் சிங்கத்தைத் தாண்டி வெளியே கணவனுக்குத் துணையாகக் களம் இறங்க தயாராக இருந்த தாடைகையிடம் தஞ்சம் அடைந்திருந்தாள் .
கூச்சல் கேட்கவும் எச்சரிக்கை அடைந்த செம்பதுமம், செம்பவளத்திடம் தங்கைகளைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு, வாளோடு வெளியே வர, வளரியால் தாக்கப்பட்டு எழுந்து ஓட முயன்றவர்களை செம்பதுமம் வாள் கொண்டு தடுத்து நிறுத்த, வேறு வழியின்றி அவளோடு அவர்கள் சமர் புரிந்தனர்.
சிங்கம் ஒரு வித சங்கேத ஒலி எழுப்ப, அடுத்த சில நிமிடங்களில் ஒரு காவலர் அங்கு ,வர, சில நிமிட இடைவெளியில் மேலும் மூன்று காவல்காரர்கள் ஓடி வந்திருந்தனர். சிம்ம தேவன் கட்டமைத்த காவல் சங்கிலி அவ்வளவு வலிமையானது.
அதையும் மீறி இந்த பெண்ணை துரத்தி வந்தது யார்? என்ற கேள்வி எழுந்தது.
சிங்கத் தேவன் முன்னிலையில் காவல்காரர்கள் அவர்களை மிதிக்க செம்பதுமம் அப்பாவின் அருகில் வந்து நின்று கொண்டாள்.
தாடகை இளம் பெண்ணை கோவிலுக்கு உள்ளே அழைத்துச் சென்று, தண்ணீர் கொடுத்து முக்காட்டை விலக்கிய போது தான் நாகமலை அடிவாரத்தில் பார்த்த தாமினி தேவி என்பது புரிந்தது.
“இவுகளை நம்ம நாகமலை அடிவாரத்தில் பார்த்திருக்கோம்.” ஆளாளுக்கு நினைவு கூர்ந்து, “சித்தினி நாயக்கர் தங்கை” என்பதை உறுதி செய்ய, சிங்கமும், செம் பதுமமும் கூட உள்ளே வந்திருந்தனர்.
“ யாரு ஆத்தா நீயி. அவனுங்க யாரு” சிங்கம் வினவ, செம்பதுமம் தீர்க்கமாகப் பார்த்துக் கொண்டே நின்றாள்.
“நான் தாமினி தேவி. வானவர், வேங்கடவர் என இரண்டு அண்ணையா இருக்காங்க. காஞ்சியிலிருந்து சேத்ராடணம் போக வந்தோம்” என்றவள், காட்டு மாளிகையில் தங்கியிருந்ததையும்
மூத்தவர் திருமண சம்பந்தமாகப் பேசத் தன்னை அழைத்ததாகவும், மனதில் ஒருவரைக் கணவராக வரித்து விட்டதால் வேறு யாரையும் மணக்க முடியாது என்றும்.
அண்ணையா திருமணத்தைப் பேசி உறுதி செய்திருந்தால் என்னால் மீறவும் முடியாது. அதனால் அண்ணையாவை சந்திப்பதைத் தவிர்த்து ஓடி வந்தேன் என்றாள்.
“ஒன்னு தகிரியமா உங்க அண்ணனை எதிர்த்து நிற்கனும். இல்லையிண்டா மனசில நினைச்சவனை வரச்சொல்லி அவன் கூட போகனும்."
" ரண்டும் இல்லாமல் இது என்ன சிறுபிள்ளைத் தனம்” சிங்கமும், தாடகையும் மாற்றி மாற்றிக் கேட்டனர்.
“அப்படி எந்த பேடி பயலை மனசில நினைச்ச. இந்த நேரத்தில் கூட நிற்காமல் எங்க போயிருக்கான்” எனக் காட்டமாகச் சிங்கம் கேட்க, தாமினிக்கும் கோபம் வந்தது.
“என்னவரை தகாத சொல் சொல்லிப் பழிக்க உங்களுக்கு உரிமை இல்லை. அவர் இந்த பாளையத்துக்காக முக்கியமான வேலையாக வெளியூர் சென்றிருக்கிறார். அதற்குள் அண்ணையாவை மீறிய பழி வேண்டாமே என்று தான் கழுவன் குடியை நோக்கி போயிட்டு இருக்கேன். “ எனவும்
“சின்ன அண்ணையாவை பார்க்கவா” செம்பதுமம் கேட்க,
“இல்லை, சின்னவரும் பெரிய அண்ணையா சொல்லைத் தட்ட மாட்டார். என் புகுந்த வீட்டினரிடம் அடைக்கலம் தேடி வந்தேன்* அவள் சொல்ல
“அப்படி எந்த கழுவன் குடி வீரன் உம் மனசில இடம் பிடிச்சது” சிங்க ராசு வியப்போடு கேட்டான்.
“கழுவர் தங்கராசு தேவர்” மரியாதை பன்மையில் அவள் சொல்ல செம்பதுமத்தை தவிரக் கழுவன் குடும்பமே அதிர்ந்தது.
“தங்கராசையா சொல்ற, அது பொம்பளை பிள்ளைகளைத் திரும்பியும் பார்க்காதே” தாடகை அதிசயமாகக் கேட்க
“அதெல்லாம் இல்லை, அவர் என்னை மூன்று முறை தொட்டு தூக்கியிரூக்கார்.” என விவரம் சொன்னாள்.
சிங்கம்,”அது காவல்காரன் வேலை” என்றார்.
“ஓஹோ பசியாறி விட்டு, என் சேலை தலைப்பில் முகம் துடைத்தாரே. அது எந்த உரிமை. இதுற்கு மேலும் சொல்வேன். சிறு பிள்ளைகள் இருப்பதால் இத்தோடு நிறுத்திக் கொண்டேன்” என்றாள்.
“அடியேய் கேட்டுக்கிட்டியா, பய உம் புருஷனை விட வேகமா இருக்கான்” என்ற சிங்கம்
“நீ சொல்றதுக்கு ருசு எங்கே” கேட்க, தாமினிக்கு அதிர்ச்சி எனில் தாடகை,”கூறுகெட்ட மனுசன்” எனத் திட்டப்
பதுமம் “அப்பாரு, போதும் விடுங்க. நம்மளோட குடிக்கு கூட்டிட்டு போகலாம் “ எனப் பரிந்துரைத்தாள்.
“சரி தான். ஆனால் கூட பிறந்தவர் தேடுவாரா இல்லையா” நியாயமாகக் கேட்க
“என் தோழி சிவப்பி மூலமாகச் செய்தி அனுப்பி விட்டேன்” என்றாள்.
“இந்த ஆளுங்க யார், எதுக்கு பின் தொடர்ந்து வர்றாங்க” வினவ
”ரகசியமாகத் தான் கிளம்பி வந்தேன். எங்களை பின் தொடர்ந்து இருப்பார் போலும். தனியாக வரவும் கடத்த முயன்றனர். நான் போக்கு காட்டி ஓடி வந்து விட்டேன்” என்ற சொல்ல
“சற்று நேரத்தில் யாரெனத் தெரிந்துவிடும்”என்றவர்,
“ தங்கராசு வரும் வரை உன் பாதுகாப்பு என் பொறுப்பு. வந்த பிறகு அவன் முடிவெடுப்பான்” என்றும் சொல்ல அவள் ஒத்துக் கொண்டாள்.
தனது ஆள் ஒருவனை அனுப்பி தாமினி பாதுகாப்பாக இருப்பதாக வானவனுக்குத் தகவல் சொல்லி வர சொன்னான்.
“என்னவர் வரும் வரை சிக்க அண்ணையாவிடமும் சொல்ல வேண்டாம். தர்ம சங்கடமான நிலையாகி விடும்” தாமினி வேண்டுகோள் விடுக்க, சிங்கம் அப்படியே ஆகட்டும் என்று விட்டான்.
அதனால் பதுமமும் வேங்கடவனைச் சந்தித்த போது சொல்ல வில்லை.
சின்ன கழுவன் குடியில் தங்கையின் செயலால் வானவர் மிகவும் வேதனை உற்றிருந்தார். இளவலுக்கு அழைப்பு விட, வேங்கடவனும் கிளம்பிச் சென்றிருக்கிறார்.
இரண்டாம் சிலை பிரதிஷ்டை வரை தங்கராசு தேவன் தங்கள் விசயத்தைத் தள்ளிப் போட நினைக்க, தாமினியின் பயம் இந்த சூழலில் நிறுத்திருந்தது.
அடுத்து என்ன பொறுத்திருந்து பார்ப்போம்.
தொட்டப்ப நாயக்கனூரில் மாயாண்டி வீடு, கழுவன் முத்துராசு தேவன் வில்லு வண்டி நிறையப் பொருட்களோடு விழாவுக்கு அழைக்க வந்திருந்தான்.
“ ஏண்டா மாப்பிள்ளை, இங்க கிடைக்காததா, இம்புட்ட கட்டிட்டு வந்திருக்கவன்” முத்தையன் கேட்க,
“கழுவன் வீட்டு பொன்னடி மக்கள் இருக்காகலாம், இதெல்லாம் கொண்டு போனாலே ஆச்சுண்டு , அப்பத்தாலருந்து அப்பு வரைக்கும் ஆளுக்கு ஒன்னை குடுத்துவிட்டாக. அத்தை இந்தாங்க” கோணிப் பைகளையும், மூங்கில் கூடைகளையும் செல்லம்மாளிடம் கொடுத்தான்.
“ஆத்தே, என் பிறந்த வீட்டுச் சீரே தனி ரகம் தான். பெருமையாக வாங்கி கொண்டவர்,” ராசா அக்காளோட பேசிகிட்டு இரு கோழி அடிச்சிட்டு வாறான்” என வாயெல்லாம் பல்லாகக் கோழியைப் பிடிக்கச் சென்றார். அத்தையம்மா மகிழ்ச்சியைப் பார்த்து வேலாயியின் சூட்சம் புத்தியை மெச்சிக் கொண்டான்.
அதன் பின்னரே, “அக்கா, இந்தா உனக்கு” எனக் கொடுத்ததில் வேலாயி மகளுக்கு எனப் பிரத்தியேகமாகக் கொடுத்து விட்ட தின் பண்டங்கள் இருந்தது.
“எதுக்குடா இம்புட்டு”பூங்குயில் வினவ
“வழிப் பயணத்தில் சாப்பிட்டுக்கே வருவியாம்” என்றான்.
“இந்த வயித்தை வச்சுகிட்டு நான் எங்க பயணப்பட போறேன்” வளையணிந்த கரத்தோடு தின்பண்டங்களைப் பிரித்து ருசி பார்த்துக் கொண்டே அவள் கேட்க,
“கழுவன் குடிக்குத் தான்” என்றாள்.
“ஆத்தே, இப்ப தான் பஞ்சாயம் ஓஞ்சு இருக்கு, நீ உடுக்கையை அடிச்சு விடாத. இங்கனையே பிள்ளையை பெத்ததுக்குவேன்”
“வேலாயி அப்படி விட்டுருமாக்கும். மகளுக்குப் பிரசவம் பார்க்கனுமுண்டு பாளையத்துக்கே சமைச்சு போட தயாராகிடுச்சு”
“விளக்கமா சொல்லு. இதுங்க மதினியும் நாத்தனார் பஞ்சாயத்தில், என்னைப் போட்டு உருட்டி எடுக்குங்க” அவள் மூக்கால் அழுதாள்.
அக்காவும் தம்பியும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட முத்தையன் “அட உன் தம்பி என்ன சொல்ல வர்றாண்டு கேளு, அப்புறம் உன் பாட்டை படிப்ப. மாப்பிள்ளை, விசயம் இல்லாமலா வில்லு வண்டியெல்லாம் கட்டிட்டு வந்திருக்கான்” எனவும்,
“இன்ன வரைக்கும் உம்ம காதுக்குத் தாக்கல் வராமலா போயிருக்கும்” முத்து ராசு சிரித்தான்.
“நாங்க என்ன என்னமோ கேள்விப் படுவோம். உன் விஷத்தை சொல்லு அப்பு” எனவும், வீர விளையாட்டு , சல்லிக்கட்டு திருவிழா எல்லாவற்றையும் சொல்ல,
“ஆத்தி, பெரிய எடுப்பா தெரியுது” பூவு வியக்க,
“அப்பு உங்களையும், அக்காவையும் கையோட கூட்டிகிட்டு வர சொன்னாரு” என்றான்.
“அம்புட்டு தான் விஷயமா” எனவும்,
“உனக்குத் தெரியாததா மாமு” என்றவன் வேங்கடவன், சிங்கத்திடமே செம்பத்துமத்தை பெண் கேட்டதையும், சிங்கம் சல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்திருப்பதையும் ஒளிவு, மறைவின்றி அக்காள் கணவனிடம் ஒப்பித்து விட்டான்.
“முந்தியே மாமன் சொன்னது தானே, பதுவு வீரத்துக்குச் சல்லிக்கட்டு தான் சரி என்றவன், “எங்கூட்டு பெரிசு, சிறிசு எல்லாருக்கும் சொல்லிடு” என அழைத்துச் செல்ல,
தாம்பூலத் தட்டோடு, சிங்கத்தின் சார்பில் வீர விளையாட்டுக்கும், செம்பதுமத்துக்காக நடக்கும் சல்லிக் கட்டுக்கும் அழைப்பு விடுத்தான்.
“வீர விளையாட்டு சரி, பொண்ணை கட்டுகிறதுக்கு, தாய் மாமன் வீடு இல்லை. அப்போ அத்தை முறை நாங்க தானே முறைகாரைங்க. எங்க ஆளுங்களை தான் முதல்ல மாடு பிடிக்க இறக்கணும் “ பெரிய மாயாண்டி கறாராகச் சொல்ல,
“சீயானும், இதைத் தான் மாமா சொன்னாரு. உங்க குடும்பத்துக்குத் தான் முதல் உரிமை.” பவ்யமாகவே சொன்னவன், பூங்குயிலைப் பிறந்தகம் அழைத்துச் செல்ல அனுமதி கேட்க, ஆண்களுக்கு ஆட்சேபனை இல்லை.
செல்லம்மாள் தான் நொடித்துக் கொண்டார். சிங்கத்தின் பெயரைச் சொல்லியே மடக்க,
“போட்டது, போட்டபடி வர முடியாது. அக்காவையும், மாமாவையும் கூட்டிகிட்டு போ, பத்து நாள் செண்டு வாறன்” எனச் செல்லாமல் வாய் மொழியாகவே சொல்ல வைத்து பூங்குயிலையும் முத்தையனையும் அழைத்துச் சென்றான்.
சின்ன கழுவன் குடியில் துரைராசுவையும் அழைக்க, “சிறப்பா செஞ்சுடுவோம், அண்ணனை வந்து பார்க்கிறேன்” என்றார்.
“அத்தை, நீ இப்படியே எங்களோட கிளம்பு” வள்ளியை அழைக்க,
“புதுசா ஒரு வேலையைச் செய்யுமோ முண்டு ஒத்துகிட்டு இருக்கேன். நெருக்கு வட்டத்தில் வாரேன்” என்றாள்.
சின்ன கழுவன் குடியில் துரைராசுவையும் அழைக்க, “சிறப்பா செஞ்சுடுவோம், அண்ணனை வந்து பார்க்கிறேன்” என்றார்.
“அத்தை, நீ இப்படியே எங்களோட கிளம்பு” வள்ளியை அழைக்க,
“புதுசா ஒரு வேலையைச் செய்யுமோ முண்டு ஒத்துகிட்டு இருக்கேன். நெருக்கு வட்டத்தில் வாரேன்” என்றாள்.
முத்தையனும், துரைராசுவும் சிலை தேடல் பற்றிக் கலந்து கொண்டனர். தனியாக அழைத்துச் சென்றவர், “இங்குட்டு முடிஞ்சது மாப்பிள்ளை. பெரிய கழுவன் குடி. அப்புறம் உங்க பாளையம். இதில் மந்திர தந்திரமெல்லாம் இருக்கு மாப்பிள்ளை. நீ உன்னோட வச்சுக்க” என பத்மாசினி வரை தான் அறிந்ததைச் சொல்ல,
“ஆத்தாடி சரித்திர நிகழ்வில் இருக்க முண்டு சொல்லு” முத்தையன் சரியாகக் கருத்தைப் பிடித்தான்.
“பெரிய கழுவன் குடியில் நில்லு. நம்ம சேவை, அளவுகளுக்கு தேவையிண்டா கூப்பிட்டுக்குவாக” என்றார்.
வானவனுக்கும், வள்ளிக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டு இருக்க, அலமேலு வை தூக்கி வரும் முன் துரைராசுவிடம் பேசி விடுவது தான் முறை என நினைத்தவர் பெருமாள் சோலைக்குள் வைத்து, வல்லபர் முன்னிலையில், “உங்கள் தங்கை வள்ளியை எனக்கு மணமுடித்துக் கொடுங்கள் கழுவரே “ எனக் கேட்டு விட்டார்.
இதைக் கேட்கவும் துரை ராசு ஆடிப் போய் விட்டார், “அரசே அவள்…” வார்த்தைகளின்றி தவிக்க
“எனக்கும் தெரியும் கழுவரே. தாமனியைத் தகுந்தவருக்கு மணமுடித்துக் கொடுத்து விட்டு, வடக்கு நோக்கிச் செல்ல வேண்டும். அலமேலுவுக்கு வள்ளியை விடச் சிறந்த தாய் கிடைக்கமாட்டாள். உங்கள் முடிவு தான் ” என்றார்.
வானவன் கைகளைப் பற்றிக் கொண்ட துரைராசு,”அரசே, தங்கச்சி வாழ்க்கை இப்படி ஆச்சேண்டு நான் ரத்த கண்ணீர் வடிக்காத நாளே இல்லை. இதை விட வேறு என்ன பாக்கியம் வேணும்.” எனும் போதே, வள்ளி இருவருக்குமான உணவோடு வந்தாள்.
தங்கையைக் கவனமாக ஆராய்ந்த துரைராசுவுக்கு, வானவன் ஏற்கனவே வள்ளியிடம் பேசியிருக்க வேண்டும் என்றே தோன்றியது.
எப்போதும் போடும் கொண்டை தான், ஆனால் இன்று திருத்தமாய் போட்டிருந்தாள். சீலை கட்டும் சுருக்கங்கள் இன்றி பதவிசாக இருந்தது. நகைகள் பூட்டி பூ சூடி விட்டால், அவளும் அழகி தான். வானவன் பார்வையிலும் மெச்சுதல் தெரிந்தது.
“வா ஆத்தா, உன்னைய பத்தி தான் பேசிகிட்டு இருந்தோம்” துரை சொல்லவும், அவள் வானவனைக் கூர்ந்து பார்க்க, “கழுவரிடம் உன்னை மணக்க பெண் கேட்டு விட்டேன்” அண்ணன், தங்கை தயக்கம் புரிந்தவராகச் சொல்லிவிட்டார்.
“எனக்குச் சங்கடமா இருக்கு அண்ணன்.”எனவும்,
“வானவர் மேல் விருப்பம் இல்லையா” வல்லபர் கேட்க,
“அவுகளை கடிக்கிறதைப் பத்தி ஒன்னும் இல்லை. அலமேலுவையும் பார்த்துக்குவேன். மத்தவுக முன்ன வரச் சங்கடம்” பொதுவாக சொல்ல, இருவருக்கும் அவள் மனநிலை புரிந்தது.
“அங்கு பத்மாசினியும், வாசவரும் பூஜை செய்கின்றனர். இங்கும் சில பூஜைகள் தம்பதி சமேதராய் செய்ய வேண்டும். வானவரை மணம் செய்யக் கட்டாயப் படுத்துவதாக இருந்தேன். கூடிய விரைவில் முடிவெடுங்கள் “ என்றார். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
பெரிய கழுவன் குடி முத்தையனும், பூங்குயிலும் வரவும் களைக் கட்ட ஆரம்பித்தது. நிறைமாதமாக இருக்கும் பிறந்த வீட்டில் பூங்குயிலை வாஞ்சையாக அழைத்துக் கொண்டனர். வேலாயி மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும் அளவில்லை.
“மதினி, அப்புறமென்ன விழா வேலையெல்லாம் சிறப்பாக செஞ்சிடலாம்ல” சிங்கம் கேட்க
“சமையல் சாப்பாடு என் பொறுப்புண்டு சொல்லிட்டேன். பார்த்துக்கலாம்” வேலாயி அகமகிழ்ந்து சொல்ல,
“இன்னைக்கு தாண்டி சிரிச்சிருக்கா” என்றார் பேச்சியம்மாள்.
பூங்குயிலை உல் கூடத்துக்கு அழைத்து சென்றனர், வெள்ளையம்மாள் அங்கே தான் அமர்ந்திருந்தார், "வந்துட்டியா, வா" என பேத்தியை வரவேற்றார்.
“பெரியத்தையும் தான் இருக்காக, சின்னவுகளுக்கு தான் மகளை ஒன்னு சொல்ல கூடாது " என்றார் வேலாயி.
“அழகாயிக்கும் நம்மளே பிரசவம் பார்த்திருந்தா, சிங்க கணக்கா பேரன் இருந்திருப்பான். தங்கராசும் வெளி வேலையிண்டு ஓடாமல் வீடு தங்கியிருக்கும்” என்று கோதை கவலை பட,
“சத்தமா சொல்லாத, முத்தையன் தம்பி மனசு சங்கடப் படும்”என்றாள் தாடகை.
பூங்குயில் “மாமனுக்கும் புரியும் சின்னம்மா.இங்கே அப்பத்தாவிலிருந்து நீங்க எல்லாரும் ஒண்ணும் மண்ணுமா நிண்டு பிரசவம் பார்த்திடுறீக. அங்குட்டு எல்லாம் போட்டியும் பொறாமை தான்” என்றவள்,
“தங்கம் அண்ணனுக்கு ஒன்னு விட்ட கொழுந்தியாளைக் கட்டணமுண்டு பேசுறாக “ உபரி தகவலும் தந்தாள்.
“அது தான் பிடி கொடுக்கவே மாட்டேங்குதே. இந்த தடவை எல்லாருமா கூடி கட்டாயப் படுத்துவோம்” என்றாள் முத்து நாச்சி.
“இப்படி தான் அந்த மதினியும் கட்டி வச்சிங்க.”பவளம் இடை சொருக
“உன் அண்ணனுக்கு பெரியப்பார் மாதிரி, பொண்ணை தூக்குற சாமர்த்தியம் இல்லையில்ல, அப்புறம் நம்ம தான் செஞ்சு வைக்கணும்” வேலாயி சந்தடி சாக்கில் போட்டு விட, "அக்கா" என தாடகை முறைக்க, மற்றவர் சிரித்தனர்.
“அண்ணனை விட்டுக் கொடுக்க மாட்டங்க. பேசி சரி கட்டி வைங்க அம்புட்டு தான் சொல்லுவேன்” என்றாள் பூங்குயில்.
“ பதுவுக்கு வேற பந்தயம் வச்சிட்டமே அதுக்கும் எதுவும் சொல்லுவாகளா”கோதை கேட்க
“பெரிய மாமா, அவுங்க மகனுக்குத் தான் முதல் வாய்ப்பு கொடுக்கனுமுண்டு சொல்லியிருக்காக” பூங்குயில் சொல்லவும் பதுவு சிரித்தாள்
“என்னாடி, மார்க்கமா சிரிக்கிற” பூவு கேட்க,
“மருது, பழக்க வந்தவைங்களையே மிரட்டி விடுது. மந்தைக்கு வந்தா என்ன செய்யுமுண்டு யோசிச்சேன்”
“பயங்காட்டாதடி. என் கொழுந்தன் பாவம் ” என்றாள்.
“சித்தினி நாயக்கருக்கும் அதே தானே?” என்ற பவளத்தின் பேச்சில் நெடி இருந்தது. இவளுக்கு மட்டும் என்ன சிறப்பு ஏற்பாடு, அதுவும் வேங்கடவனை பெரியப்பாரே ஒத்துக் கொள்வது போல் பேசவும் கொஞ்சம் பொறாமை சேர்ந்து இருந்தது.
“ஆமாம் திறமை இருக்கவுக மருதனை அடக்கி, என்னைக் கட்டட்டும். இல்லையிண்டா எங்கப்பாருக்கு மகளா கன்னியாவே இருந்துட்டு போறேன்” பதுவு சொல்லவும்.
“வாயைத் கழுவு”
“கன்னி வாக்கோ, கழுதை வாக்கோண்டு பழிச்சிட போகுது. “
“மிளகாயை அரைச்சு அப்புங்கடி” ஆளாளுக்கு செம்பதுமம் மேல் பாய, பதுமம் அமைதியானாள்.
“ஆத்தா அதெல்லாம் கவலைபடாதீங்க. சித்தினி நாயக்கரு மருதனை மட்டும் தான் தொடலை. கழுவன் குடியில் இருக்கக் காளை எல்லாம் அடக்குறார். கழுவன் குடி காவல்காரவுகளோட மல்யுத்தம், குஸ்தி சண்டை, சிலம்பமுண்டு அவர் செய்யாத பயிற்சி இல்லை. மருதனை அடக்கி பதுவை தூக்கிடுவார்” சாமி கருப்பன் சொல்ல,
‘நான் அறியாமல் இதெல்லாம் வேறு செய்கிறாரா’ பதுவு மனதில் குறித்துக் கொண்டாள்.
“அது சரி வீராங்கனையை அடக்கி ஆளும் வீரனா தான் இருக்கனும்” கோதை மெச்சிக்கொண்டாள்.
“அவுரு ஜெயிச்சாருண்டா, பதுவை வடக்க காஞ்சிக்குல்ல கூட்டிட்டு போயிடுவாரு” பூங்குயில் சொல்லவும்
“அக்காளை எங்களையும் விட முடியாது. சித்தினி நாயக்கர் வேணுமுண்டா வீட்டோட மாப்பிள்ளையா இங்கேயே இருக்கட்டும்” சித்திரை, குமுதம் செம் மீனா என தங்கைகள் பதுமத்தைச் சுற்றிக் கட்டிக் கொண்டனர்.
“ஏத்தா உங்க அயித்த மகன் மாதிரியே அக்காளுங்களுக்கு வர்ற மாப்பிள்ளை எல்லாம் கழுவன் குடியே கதியிண்டு குடியிருப்பாண்டு நினைச்சிகளா” முத்தையன் கேட்க,
“அதிலென்ன சந்தேகம். எல்லாரும் இருப்பாக” என்றனர்.
கழுவன் குடியில் வாள் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. பதுமம் தங்கைகளுக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். வாளை லாவகமாகப் பிடித்து சுழற்றும் அழகில், அவளது அண்ணன் சாமி கருப்பனுக்கும் தங்கையோடு போட்டிப் போட ஆசை வந்தது.
“பதுவு” என அவளிடம் ஒரு கேடயத்தைத் தூக்கிப் போட்டு, போட்டிக்கு அழைக்க, தாடகை “சாமி, தங்கச்சியோட என்ன போட்டி” ஆட்சேபித்தார்.
“உன் மவன் தோத்துடுவாண்டு பயமா” சிங்கம் ரேக்கி விட
“பெண் பிள்ளையை விட, அவனுக்கு வலு அதிகம். பதிவுக்கு படாத இடத்தில் பட்டு விட்டால்”
ஹாஹா வென சிரித்த சிங்கம் ,”கண் முன்னே என் மவ வீரத்தை பார்த்தவ, மகனை காப்பாத்துறேண்டு சொல்லு ஒத்துக்குறேன்.”
“அவனும் உன் மவன் தான்”
“யாரு இல்லையிண்டு சொன்னா. புத்தி பிசகின உன் சக்காளத்தியே, அவனை நானுண்டு தான் நினைச்சுகிட்டு இருக்கா” என்றான்.
“மக்கா, போட்டி போட்டி தான். வெற்றியோ, தோல்வியோ அனுபவமா எடுத்துக்கனும். தலைக்கு ஏத்திக்க கூடாது” எனவும்
“சரிங்க அப்பாரு” என இருவருமே பெற்றவனை வணங்கி தயாராக,
பதுமம்,” அண்ணா, தங்கச்சி, பொண்ணுனுல்லாம் பார்க்காத. முழு பலத்தையும் காட்டு. அது தான் எனக்கு உண்மையான பயிற்சி” எனவும்
“சரி பதுவு. நீ ஜெயிச்சாலும் எனக்குப் பெருமை தான்” வாளை சுழற்ற ஆரம்பித்தனர்.
“சபாஷ்” எனச் சீயான் கருத்தையா முதல் ஒவ்வொருவராய் வந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.
செம்பதுமம் சேலையை தார் பாச்சாவாக இழுத்துக் கட்டிக் கொண்டு வாளை நளினமாகச் சுழற்ற, ராணியின் அம்சம் என ஆசையாகவே பார்த்தனர்.
சுற்றிச் சுழன்று இரட்டையர் போல் அவர்கள் சண்டையிடச் சுற்றி ஆட்கள் கூடிவிட்டனர். “சாமி விட்டுறாத” ஆண்கள் அவனுக்கு ஆதரவு தெரிவிக்கப் பெண்கள் கூட்டம் பதுவுக்காக கை தட்டியது.
சுற்றியுள்ள கூட்டத்தின் பக்கம் சாமியின் கவனம் செல்ல, அந்த ஒரு நொடியில் பதுவு அவன் கையிலிருந்த வாளை தட்டி விட்டாள்.
சாமி சிலையாக நின்றவன், பின் தங்கைக்குத் தலை வணங்கி, “வீர மங்கை செம்பதும நாச்சியார் வாழ்க” என்றான்.
“வாழ்க, வாழ்க “ என மற்றவரும் சொல்ல, சிங்கம், தாடகை போல் வேங்கடவனுக்கும் பெருமை”
“என்ன நாயக்கரே, பொண்ணு வீரத்தை பார்த்திங்கல்ல, பயந்து வருதா” முத்தையன் கேலி பேச
“நாகமலை அடிவாரத்தில் அவள் வீரத்தைப் பார்த்த பின்பு தானே பத்ம தாசன் ஆனேன்” வேங்கடவன் சொல்ல, "அது சரி" முத்தையன் சிரித்தான்.
பதுமம் வேல் விழியால் ஒரு அம்பை தொடுத்துச் செல்ல வேங்கடவனுக்கு நிலை கொள்ளவில்லை. சாமம் வரை காத்திருக்க வேண்டுமே அவன் பத்மையைக் காண.
இதே போல் மற்றொரு வீரனும் நிலை கொள்ளாமல் தான் திரிந்தான். அவ்வப்போது அசட்டுச் சிரிப்பு வேறு, “இளவரசி, இளவரசி” என அவள் செயல்களுக்கெல்லாம் ஆட்சேபனை சொல்லிக் காட்டுக் காளையை அடக்கியவன், கடைசியில் தான் கட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொண்டோமே என்ற வெட்கம்.
ஆம் தாமினி தேவி தங்கராசுவின் மனைவி என்பது போல் சகல உரிமையோடு சாப்பாடு பரிமாறினாள். வயிறார உண்டு, கை கழுவி வந்தவனுக்கு தன் சேலை முத்தியை கை துடைக்கக் கொடுத்து, அவன் மீசையில் ஒட்டியிருந்த சோற்று பருக்கையையும் துடைத்து விட, காவலன் கட்டவிழ்ந்தான்.
தாமினி யின் உரிமையான செயல்கள் அவனை கிறங்கடித்தன. இருவரும் ஒருவரை ஒருவர் பிரிய முடியாமல் தவித்து நின்ற நேரம், மரத்தின் பின்னால் அவளை இழுத்துச் சென்று இதழோடு இதழ் பொருத்தி விட்டான். முதலில் அதிர்ந்தவள் பின் இயைந்து கொடுக்க, அவளில் தன் தேடுதலைத் தொடங்கினான். மனைவி மறைந்த பின் பிடிவாதமாய் மறந்திருந்த அவன் உணர்வுகள் வேகம் கொண்டது , வாய்ப்பு கிடைக்கவும் கட்டவிழ்ந்து விட்டான். இருவருக்குமே பார்த்த நாள் முதல் பற்றியிருந்த தீ, இன்று உரசிக் கொண்டது. எதிர் பாலின ,ஈர்ப்பும், அவள் மனதிலும் தான் இருக்கிறேன் என்ற நினைவும் ,அவளிடம் உரிமை பாராட்டச் சொன்னது.
சட்டெனச் சுதாரித்த பெண்ணவள் , “கந்தர்வ மணம் என்றாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் உங்களோடே கழுவன் குடி வந்துவிடுவேன்” அவள் மிரட்டச் சிரித்துக் கொண்டவன்,
“சிங்கமே, சின்னம்மாவை அப்படி தான் கூட்டிட்டு வந்தார். அது பிரச்சினை இல்லை. ஆனால் வேங்கடவன் காரியம் முடியட்டும்.” என்றான்
“ஒரே பொழுதில் எப்படி இவ்வளவு மாற்றம்.”அவள் வியக்க,
“நான் கட்டுப்பாட்டோடு தான் இருந்தேன். நீ தான் “ என இழுத்தான்.
“கட்டுப்பாடு எனும் போதே, அங்கே ஆசை இருந்தது என்று தானே அர்த்தம்” அவள் கிடுக்கிப்பிடி போட,
“ஆம். நான் கிளம்புறேன். இனி நிண்டா ஆபத்து” என வேகமாய் குதிரையில் ஏறிப் பறந்து விட்டான்.
பாளையத்து வேலையாக மதுரை பட்டிணம் வரை வந்த தங்கராசு தேவனுக்கு, உலகே வண்ணமயமாக இருந்தது. ஒரு பெண்ணின் காதலுக்கு இவ்வளவு வலிமையா என்ற ஆச்சரியம். அவன் முதல் மனைவி அழகாயி, இருக்குமிடம் தெரியாமல் இருந்து விட்டுச் சென்றவள். கூச்ச சுபாவம், அவனிடம் பேசவே தயங்குவாள். இரவின் கூடல் மட்டுமே அவர்களுக்கான பொழுது. திருமணமான உடனே கருத்தரித்து விட, ஏழாம் மாதமே பிறந்த வீட்டுக்குச் சென்று, குறைப் பிரசவத்தில் இறந்தும் போக, பெண் வாடையே வேண்டாம் என ஒதுங்கி விட்டான்.
அவன் தொட்டுத் தூக்கிய இரண்டாவது பெண் தாமினி மோதலில் ஆரம்பித்த உறவு மெல்லக் காதலாக மலர்ந்திருக்கிறது. அசட்டுச் சிரிப்போடே அலைந்தவனுக்கு வாத்திய கருவியைப் பார்க்கவும் தான் உடைத்தது நினைவில் வந்தது. அவள் வதினாவுடையதை இனி வேலைக்கு ஆகாது என்றுவிட்டனர். புதிதாக ஒன்று வாங்கி கொடுத்து விடுவோம் என விரைந்தான். அங்கு விதவிதமான வாத்தியங்கள் இருக்க, தான் உடைத்தது தம்புராவா, வீணையா என்ற குழப்பம் வர இரண்டையுமே வாங்கிக் கொண்டான்.
மதுரையில் கோட்டை தளபதியைப் பேட்டி கண்டு, தங்கராசு தேவன் வீர விளையாட்டுப் போட்டியைப் பற்றிச் சொல்ல, “ஆகா, நல்ல யோசனை. சிறுவர்களுக்கும் ஆர்வம் வரும். போர்க்கலையை விரும்பி பயில்வார்கள். நமக்குப் படை வீரர்கள் கிடைப்பார்கள் ” எனப் பாராட்டியவர்,
“இளவரசர் திருமலை இங்கு தான் இருக்கிறார். அழைப்பு விடுத்துப் பாருங்கள், வந்தாரெனில் உங்கள் பாளையத்தின் புகழ் ராஜ்யமெங்கும் பரவும்” என்றார்.
தங்கராசுக்கு, ராயர்கள் பற்றிய கவலையும் இருந்தது. இது ஏதடா கிணறு வெட்டப் பூதம் கிளம்புகிறது என நினைத்தவன்,முகம் மாறாமல் இளவரசரைப் பேட்டி கண்டு, விழாவுக்கு அழைத்து விட்டான்.
“அடுத்த பௌர்ணமி திதியா, இங்கு இருந்தால் அவசியம் வருகிறேன். கோட்டை தளபதி தகவல் கொடுப்பார்” என்றவர், ஊக்க நிதியாகப் பதினாயிரம் வராகன் தங்கப் பணத்தையும் கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டார். தங்கராசு தேவன் அகம் மகிழ்ந்தாலும், மனதில் இளவரசருக்கு வேறு வேலை வந்து விட வேண்டும் என்றே குலதெய்வத்தை வேண்டி கொண்டான்.
இளவரசரிடம் பொன் வராகன்கள் பெற்ற மகிழவை அனுபவிக்கும் முன் சாந்தன் முத்தரையன் நந்தியாகக் குறுக்கே வந்தான்.
“எங்களுக்கு எல்லாம் அழைப்பு இல்லையா”
“சிராப்பள்ளி வரை அழைப்பு விடுக்கும்படியான பெரிய விழா அல்ல. சிறிய அளவில் சுற்றி உள்ள மூன்று பாளையங்களை மட்டுமே அழைத்திருக்கிறோம். “
“இளவரசர் தலைமை தாங்கும் விழா சிறியதா”
“நாங்கள் சிறியதாகத் தான் திட்டமிட்டு உள்ளோம். அது பெருவிழாவாக மாறுமேயானால், இளவரசரின் பெருந்தன்மையே அதற்குக் காரணம்” எனப் பேச்சைக் கத்தரித்து வணங்கிக் கிளம்பி விட்டான்.
ஊர் திரும்பும் வழியில் மீண்டும் காட்டு மாளிகைக்கு வந்து, தாமினி தேவியைத் தேட, அந்த மாளிகையை யாருமில்லாமல் வெறிச்சோடி கிடந்தது. சிங்கத்தின் ஆட்கள் கட்டையன், தலைபிரட்டு ஆகியோர், சுருட்டு கருப்பன் ஆட்களோடு அவனைத் தேடிச் சென்றிருந்தனர். அவன் வந்து விட்டானோ, அவன் வேலையோ. அரையன் முகமதியர்களை அனுப்பி இருப்பானோ, அல்லது சண்டன் பத்மாசினி, திருமலை முயற்சியைத் தடுக்க, தாமினியை அபகரித்து விட்டானோ. என் அதிஷ்டம் கெட்ட தனம் அவளையும் பற்றி விட்டதோ எனப் பலறாக யோசித்த படி தேடி அலைந்தான்.
தாமினி தேவி எங்கே?
வானவராயன், ராயர் வம்சத்தின் அரவிடு மரபில் வந்தவன். பாட்டன் காலத்திலேயே பங்காளிகளால் கை விடப் பட்டவர்கள். இங்குச் செல்வம் தான் அத்தனையும் தீர்மானிக்கும். படைக்கு ஆட்கள் சேர்க்க, குடிகளுக்குப் பங்கிட்டுக் கொடுக்க,என எல்லாவற்றிற்கும் செல்வமே அடித்தளம். பக்கத்து ராஜ்ஜியங்கள் உதவ வேண்டும் என்றாலும், அதற்கும் கப்பம் கட்ட வேண்டும்.
காலம் காலமாகத் தாயாதிகள் துரோகமும், சுல்தான்களின் வன்முறையுமே இவர்கள் நாடு இழக்கக் காரணமாக அமைந்தன.
ஆனாலும் இந்த முறை தன் மனைவி சாந்தம்மாவை இழந்ததை அவரால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. தங்கள் குலத்தின் சாப விமோச்சனமாக பெருமாள் சிலை பிரதிஷ்டையும், இங்குள்ள பொக்கிஷங்களும் இருக்கும் என்றே தம்பி, தங்கையோடு தெற்கு நோக்கி வந்தார்.
அவர்கள் உத்தேசியம் நிறைவேறிக் கொண்டு தான் இருக்கிறது. அவரது இளவல் பெருமாள் சிலைகளுக்குப் பின் அலைய, பொக்கிஷமும் கை வந்துள்ளது. இவர் படை திரட்டுவதில் கவனம் செலுத்தினார். உத்தப்பர் நல்லவன், வல்லவனை உதவி கேட்க, “ இங்கேயே பாளையம் அமைக்கலாமே” என யோசனை தந்தனர்.
வானவருக்கு அதில் விருப்பம் இல்லை. தங்களைப் போல் மீண்டும் தெலுங்கு தேசம் செல்ல விரும்புபவர்களை தங்களோடு அனுப்பி வைக்கும் படி கேட்டுக் கொண்டார். அவரது மெய்காவல் படையையும், அடுத்துச் செய்ய வேண்டிய பணிகளை உத்தேசித்துஅலுவலை பிரித்துக் கொடுத்திருந்தார்.
புத்தூர் மலை கபிலன், வானவனோடு வரச் சம்மதித்து இருந்தான். அவன் மூலமும் படையைத் திரட்டிக் கொண்டு இருந்தார்.
முதல் வேலையாக, சாந்தம்மாவைக் கொன்ற சுல்தான் தளபதி சம்சுதீன் தலையைக் கொய்ய வேண்டும் என்ற வெறி மட்டுமே இருந்தது. உடன் பிறந்தவர்களோ, மற்றவர்களோ அவரோடு இருக்கும் போது இந்த எண்ணம் மட்டுப்பட்டு இருக்கும். பெருமாள் சோலைக்குள் மனம் அமைதியுற்று விடும். அதனாலேயே வலிந்து சாந்தம் மாவின் நினைவுகளோடு சஞ்சரிக்கச் சோலைக்கு வெளியே, அன்று தங்கராசு தேவன் படுத்திருந்த கல் மேடையில் படுத்திருந்தார்.
வானவருக்கும், வல்லபருக்கும் உணவு கொடுப்பது வள்ளியின் பணி. மந்திர கயிற்றோடு உள்ளே சென்று வல்லபரைத் தேட அவர் நிட்டையில் இருந்தார். உணவை மூடி வைத்து விட்டு, பெருமாளுக்கும் ஒரு கும்பிடு போட்டு வெளியே வந்தாள்.
வானவன் வெட்ட வெளியில் கல் மேடையில் அநாதரவாக படுத்துக் கொண்டு இருந்தார். புறங்கையால் கண்ணை மூடி சயனித்திருந்தவர் கண்களிலிருந்து நீர் வடிந்து கொண்டு இருக்க வள்ளிக்கு மனதை ஏதோ செய்தது. அலமேலுவை போலவே அவள் தகப்பனையும் தலை கோதி நெஞ்சோடு அணைக்கும் எண்ணம் தோன்றியது. உடன். “ஆத்தி, வெக்கம் கெட்டவளா இருக்கேனே” தலையில் தட்டியும் கொண்டாள்.
வானவர் கற்பனையில் சாந்தம்மா தோன்றி, “பிரபு, இதென்ன சிறுபிள்ளைத் தனம். அழுது புரண்டாலும் மாண்டார், மீளார் என்பது உங்களுக்குத் தெரியாதா. எனக்காகப் பார்க்காதீர்கள். உங்கள் புது வாழ்வைத் தொடங்குங்கள்” என்றாள்.
“லேதம்மா. புனர் ஜென்மம் எடுத்து மாண்டார் மீண்டு வருகின்றனர். நீயும் வாயேன். எனக்கு இப்போதே நீ வேண்டும் “ குழந்தையாய் அவர் அடம் செய்ய
“நிஜ உலகுக்கு வாருங்கள். நான் நிழல் தான் நிஜமில்லை” எனச் சொல்லிக் கொண்டே சாந்தம்மா விலகிப் போனார்.
“சாந்தம் மா விலகிப் போகாதே”தெலுங்கில் சொன்னவர், கண்ணை மூடிக் கொண்டே எழுந்து நடக்க ,
தன்னை நொந்துக் கொண்டு இருந்த வள்ளி,“அரசே, அரசே” என அவர் எதிரே சென்று நிறுத்த சேலை அகப்படவும் கண் திறவாமலே, “பங்காரம்” என அவளைக் கட்டிக் கொண்டார்.
வள்ளிக்கு உடல் சிலிர்த்தது ஏதேதோ செய்தது. சற்று முன் தான் நினைத்தது போல், அவர் அவளை அணைத்து நிற்க, ஆண் வாசனை அறியா பெண் மனம் அவரை விலக்க நினைத்தது. பின் அவர் நிலையைக் கருத்தில் கொண்டு,”இருக்கட்டுமே” என்றும் நினைக்க, “நிஜமாவே மானங்கெட்டவளா தான் போனேன்” எனக் கண்ணீர் பெருகியது.
தன் மார்பில் ஈரம் உணர்ந்தே வானவன் கண் விழித்தார். யாரோ ஒரு பெண்ணை வலுவில் தான் அணைத்து நிற்பதைப் பார்த்து மனம் பதைபதைக்கச் சட்டென விலகிவிட்டார்.
அவள் வள்ளி எனத் தெரியவும், கண்ணில் நீரோடு துடி துடித்துப் போனார்.
“அம்மாயி , என்னை மன்னிச்சிடு. யாரை என்ன செஞ்சு வச்சிருக்கேன். பெரும் பாவம். கழுவர் என்னை நம்பி தங்கையை அனுப்பி வைக்க, நான் இப்படிச் செய்வேனா?” முகத்தில் அறைந்துக் கொண்டு, மடங்கி அவள் முன் மண்டியிட்டவர், கை கூப்பி,
“மன்னிச்சிடு தாயே” எனக் கதற, வள்ளிக்கும் அதற்கு மேல் பொறுக்க வில்லை.
அவர் முன் நின்றவள், “செத்த முன்னாடி, நீங்க அனாதரவா படுத்திருந்ததைப் பார்க்கும் போது, அலமேலு மாதிரி, உங்களை நெஞ்சோடு அணைச்சுக்கனும்னு தோணிச்சு. அப்ப நானும் பாவி தானே. என் பாவத்தை எந்த கணக்கில் சேர்க்க” தன் உள்ளத்தை மறைக்காமல் கூறி, அவரின் ஒரு தலையசைப்புக்காகத் துடிதுடித்து நின்றவள், அவர் தயங்கவும்,
“நான் தாலியறுத்தவ தான். உங்க உயரத்துக்கு ஏணி வச்சாலும் எட்டாது. மனசிலிருந்ததை சொல்லிபுட்டேன். தப்பா இருந்தா மன்னிச்சுக்குங்க. இனி உங்க கண் முன்னாடி வரமாட்டேன்” என அவள் திரும்ப,
“வள்ளி” என முட்டி போட்டு நின்றவர், "நானும் மனைவியை இழந்தவன் தான். உன்னை அப்படியெல்லாம் நினைக்கலை. உன் அண்ணனுக்கு என்ன பதில் சொல்லுவேன்" என்றார்.
"ஒன்னும் சொல்லவேண்டாம். அப்படியே மறந்துடுங்க. நான் தான் வெட்கங்கெட்ட சிறுக்கி. ராசா மகாராசா பழகவும், நம்மளை மாதிரி மனுசங்க தானேன்னு நினைச்சுட்டேன். உங்க மகளுக்கு தாதியா வரகூட எனக்கு தகுதி இல்லைகிறத புரிஞ்சுக்கிட்டேன் " என்றவள் வார்த்தை அவர் மனதை தைக்க,
“நான் உசத்தி, நீ கீழ்னு நினைக்கலை. அலமேலு பல் குத்தி அழும்போது, மார்போடு அணைச்சுகிட்டியே. அது கோபத்தை உன்கிட்ட காட்டியதும் தெரியும். அலமேலு அம்மாவா இருக்க, இதை விட என்ன தகுதி வேணும் “அவர் மனம் திறக்க, அவள் அதிசயமாக பார்த்தாள். வானவருக்கும் அந்த நொடி ஒரு ஆதரவு, அரவணைப்பு தேவை பட்டது,
"உரிமையோடு தான் உன்னை நெருங்கனும்" அவர் தடுமாற, சட்டென ஒரு எட்டு எடுத்து வைத்து, அவரை அனைத்துக் கொண்டாள். வானவரும் அவள் இடையைக் கட்டிக் கொண்டார்.அவளுக்கும் உதிர்க்க வார்த்தைகள் இல்லை. நடுங்கும் கையோடு அவர் சிகையைத் தொட,
“துணையை இழந்த வாழ்க்கை கொடுமை. சொல்லி அழ வழியில்லாமல் மூத்தவனா பிறந்தது இன்னும் கொடுமை. அரசனாக இருந்தவனுக்கு அவன் உயரமே தண்டனை” எனவும் தயக்கம் மறைந்து அவர் தனிமை போக்கும் தேவதையாக, அவரை தழுவிக் கொண்டவள், சிகையை வருடி, பிடதியை தடவிக் கொடுத்து அவர் கட்டுக்குள் வரவும், எழுப்பி கல் மேடையில் அமர வைத்தாள். கொண்டு வந்த உணவை அவருக்குப் பரிமாற, அதன் மணம், ஆவலாக வாயில் விட்டார்.
“ எண் ஜான் உடம்புக்கு வெட்கமே இல்லை. எத்தனை சங்கடம் இருந்தாலும், தன் பாட்டை பார்த்துக் கொள்கிறது” வயிற்றில் அடித்துக் கொள்ள, வேகமாக வந்து அவர் கையை பற்றியவள்.
“ சாமி படைச்ச எல்லாமே கடமை தவறாம நெறியோட தான் இருக்கு. மனுச மனசு தான் கட்டுக்கு அடங்காமல் திரியுது” என்றவள்
“குடும்பத்துக்கு மூத்தவர் அலுமேலுவுக்கு மட்டுமா அப்பாரு. தம்பி, தங்கச்சி உங்க குடிங்க அம்புட்டு பேருக்கும் நீங்க தான் அப்பாரு. மனசு உடைஞ்சு கிடக்குண்டு உடம்பை கவனிக்காமல் விட்டா, நாளைக்கு அதுவும் கெட்டு போச்சுண்டா, நட்டம் யாருக்கு. சும்மா விசனபடாமல் சாப்பிடுங்க” வள்ளி மிரட்ட, வானவன் சிரித்துக் கொண்டார். இதையே சாந்தம்மா மென்மையாகச் சொல்வார். வள்ளி அவள் மொழியில் சொல்கிறாள் என அவளையே கண் எடுக்காமல் பார்க்க, அவளை ஏதோ செய்தது.. வள்ளி சட்டென அங்கிருந்து விலகி விட்டாள்.
”சாந்தம் மாவும் இப்படி தான் சொல்லும். அது தான் “ தன் பார்வைக்கு விளக்கம் கூற அவள் மறைந்தே நின்றிருந்தாள்.
“மனசு விட்டுப் பேச நம்ம இணை இல்லாதது பெரிய குறை தான். ஆம்பளைனு பெரிசா சொல்றோம். ஆனால் பெண்களுக்கு இருக்கிற தைரியம் மனசில் இருக்கிறது இல்லை” வானவன் சொல்ல
“விசனப் படாமல் சாப்பிடுங்க. நான் இங்க தான் நிக்கிறேன்” என்றாள்.
“கழுவரிடம் உன்னை பெண் கேட்டு விடவா. அலமேலுவுக்கு அம்மாவா வந்துடுறியா”
“பொசுக்குண்டு கேட்டு புட்டிக” வள்ளி மிரள
“அவர் என்னை நம்பும் போது. இது தான் முறை. வானவன் மனைவியாகிய விட்டால் உன்னைத் தவறாகப் பேச மாட்டார்கள் “
“எனக்கு ராணி ஆகனுமின்னு எல்லாம் ஆசை இல்லை “
“எனக்கு ராஜ்ஜியமும் இல்லை, நான் ராஜாவும் இல்லை” என்றார்.
“ராஜ்ஜியம் இல்லையிண்டாலும், ராசக்கலை உங்ககிட்ட இருக்கு. உங்களோட ஜோடி போட்டு மயில் கூட்டத்தில் காக்கா கணக்கா வர்ற மாதிரி எனக்குத் தோனும். அலமேலுக்கு அம்மாவா. உங்களுக்குச் சோறாக்கி போட்டுட்டு இருந்துக்குறேன்” அவள் சொல்ல
“சரி தான். மீதமிருப்பதையும் போட்டு விட்டால், சாப்பிட்டு உங்க அண்ணன் கிட்ட பேசிடுவேன்” என்றார்.
“ஆத்தாடி எம்புட்டு வேகம்”
“அலமேலு வை தூக்கிட்டு வந்துடுவா. எத்தனை நாள், பெரிய குழந்தை கிட்டச் சின்ன குழந்தை பொறுப்பைக் கொடுக்கிறது” எனவும்.
“தூக்கிட்டு வாங்க. அலமேலு வை நான் பார்த்துக்குறேன். மத்த பேச்சு இப்ப வேண்டாம்” என்றாள்.
“ஏனாம். சாப்பாடு பரிமாறி, நாலு வார்த்தை யார் பேசுவா” எனக் கேட்க
“இப்ப யார் செய்றாங்கலாம். அலமேலு அம்மா செய்வா” என்றாள்.
பெரிய கழுவன் குடி பரபரப்பாக இருந்தது. ரங்கமும், தங்கமுமாக எழுமலை பாளையக்காரரிடம் பேசி, வீர விளையாட்டுக்கு அனுமதி வாங்கி விட்டனர். அடுத்து தங்கராசு தேவன், மதுரை கோட்டைக்குச் சென்று தங்கள் குடும்பம் சார்பிலும், பாளையத்தில் சார்பிலும் அழைக்க இருக்கிறான்.
போகும் வழியில் வேங்கடவன் கேட்டுக் கொண்டதற்காகக் காட்டு மாளிகை சென்று தாமினி தேவியின் நலனை உறுதிப்படுத்திக் கொள்ள நினைத்தான்.
“வேங்கடவன் கேட்டுகிட்டதுக்காக தான் போற. உனக்கு ஒன்னுமில்லை” காவலனின் மனசாட்சி இடித்துரைக்க,
‘தங்கச்சிக்கு என்னை பிடிச்சிருக்குண்டு சொன்னாருல்ல ஆராய்ந்து பார்ப்போம் ‘ மனசாட்சிக்குச் சால்ஜாப்பு சொல்லிக் கொண்டே, குண்டாற்றங்கரையில் பயணிக்க, அங்கே ஒரே களேபரமாக எல்லோரும் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தனர்.
.
'என்ன ஏதுண்டு விசாரிப்பது தானே காவலன் கடமை' என்னவென்று பார்க்க முன்னேற, தாமினி தேவி, வாள் வேல் வில் அம்பு குறுங்கத்தி அத்தனையும் மரத்தடி மேடையில் பரப்பி வைத்துக் கொண்டு, ஒவ்வொன்றாய் முயன்று கொண்டிருக்க, எதிரே வருபவர் உயிர் உத்திரவாதம் இல்லாமல் ஊசலாடிக் கொண்டிருந்தது. அனுபவப்பட்டவர் யாரோ தகவல் கொடுத்து விட, அவர்கள் ஆட்களே, “இளவரசி இருக்கும் பக்கம் போகாதே” என கிசுகிசுத்து தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தனர்.
ஒரு மரத்தில் இலக்கு குறிக்கப்பட்டு இருந்தது. “இரு நாட்களாய் முயற்சி செய்கிறேன், எதுவுமே இலக்கை தாக்க வில்லையே “ வேல் கம்பை பிடித்துக் கொண்டு தாமினி சந்தேகம் கேட்க,
“அது தான் அக்கா, எந்த ஆயுதம் உங்களுக்குத் தோதுண்டு யோசிச்சிட்டு இருக்கேன்” சிவப்பி ஒத்தையா ரெட்டையா போட்டு ஆயுதங்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்க தங்கராசுவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
குதிரை மீதிருந்தவன் ஹாஹாஹா வன சிரித்து விட வேல் கம்பை விட்டெறியக் குறி பார்த்துக் கொண்டிருந்தவள், அவனை முறைத்துக் கொண்டே வேகமாக வீசி விட்டு அவன் பக்கம் திரும்பினாள். அது புதருக்கு அப்பால் சென்று விழுந்தது.
“கழுவரே என்ன சிரிப்பு”தாமினி அதிகாரமாகக் கேட்க,
“இது என்ன விளையாட்டு இளவரசி” அடக்கப்பட்ட சிரிப்போடு அவன் கேட்க,
“விளையாட்டா? பயிற்சி. உங்கள் குடியில் வீர விளையாட்டு வைத்திருக்கிறீர்களாமே அதற்கான பயிற்சி” எனும் போதே…
“அக்கா ஓடு, ஓடு. நீ எறிஞ்ச வேல் கம்பு காட்டுமாடு மேல பட்டுடுச்சு போல, துரத்திக்கிட்டு வருது” எனச் சொல்லிக் கொண்டே சிவப்பி தாமினியையும் தாண்டிக் கொண்டு ஓடி அருகிலிருந்த மரத்தின் மேல் ஏற, தாமினி செய்வதறியாது திகைத்தவள் ஓட முயன்று சேலை தடுக்கி அப்படியே கீழே விழுந்து விட்டாள்.
சிவப்பி சொன்னது போல், புதர் பக்கமிருந்து காளை மாடு ஒன்று சீற்றத்தோடு பாய்ந்து வந்தது. அது வரும் வேகத்துக்கு நிச்சயம் தாமினியை முட்டி இழுத்துச் செல்லும். தெய்வாதீனமாகக் கடந்து சென்றாலே கூட, அதன் கால்களில் மிதி படுவது திண்ணம். நொடியில் யூகித்தவன், “இளவரசி” கத்திக் கொண்டே அவளை நோக்கி ஓடினான். இரண்டு நேர் எதிர்த் திசைகளிலிருந்து வந்த இரண்டு காளைகளும் அவளை நோக்கி ஓடிவந்தன.
முதலில் தாமினியை அடைந்த தங்கராசு அவளை மறைப்பது போல் அவள் மேனியை உரசாமல் கைகளை மண்ணில் ஊன்றி அவள் மேலே படர்ந்திருந்தான். மறு திசையிலிருந்து வந்த காட்டு மாடு நான்கு கால் பாய்ச்சலில் அவர்களை மிதித்து விட்டு ஓட, வீரனான தங்கராசுவே வலியில் முகத்தைச் சுளித்து விட்டான். “கழுவரே”பயத்தில் அவனைக் கட்டிக் கொள்ள, கை சறுக்கி அவள் மீதே கிடந்தான்.
அதெல்லாம் யோசிக்க அவகாசமில்லை, “மாமா, மாடு திரும்புது” சிவப்பி எச்சரிக்கை விடுக்க, அவளோடு உருண்டு, நொடியில் எழுந்து விட்டான்.
காட்டு மாட்டின் விலாவில் தாமினி எறிந்த வேல் குத்தியிருக்க , அதன் காரணமாக அது தலை தெறிக்க ஓடி வந்திருந்தது. எதிரே நின்ற குதிரை காலை தூக்கி கனைக்க, பயந்த மாடு வந்த வழியே திரும்ப ஓடி வர,
“மாமா, மாடு திரும்ப வருது” சிவப்பி மரத்தின் மேலிருந்து கத்த, சட்டெனத் திரும்பி எழுந்தவன், அவளையும் எழுப்பி விட்டு மாட்டை நோக்கி ஓடினான்.
வேல் கம்பு பட்டதால் துடிதுடித்த மாடு, ஆக்ரோஷமாக அவனைத் தாக்க வர, லாவகமாய் குனிந்து அதன் கழுத்தைக் கட்டிக் கொண்டவன், சிறிது தூரம் அப்படியே பயணித்து, பக்கவாட்டில் குத்தியிருக்கும் வேல் கம்பை பிடுங்கினால் மட்டுமே அதன் சீற்றம் குறையும் எனக் கணக்கிட்டவன், அதன் முன்னங்கால்களை தன் கால்களால் பற்றிக் கொண்டு ஒரு கையால் திமிலை பற்றி கொண்டு மறு கையால் வேல் கம்பை உருவ, “மா” எனக் கத்திக் கொண்டு அது மண்ணில் சாய்ந்தது.
தங்கராசு துரிதமாகச் செயல் பட்டு சில மூலிகைகளைப் பறிக்க, பின்னோடு வந்த தாமினியும் அதே இலைகளை உருவினாள். “தாவணியைக் காட்டுங்கள்” அவள் முழிக்க, முந்தானையை எடுத்துக் கொடுத்து கையில் ஏந்தச் சொல்லி, மூலிகைகளை அதில் போட்டு விட்டு, தான் மற்றொன்றைப் பறிக்க ஓடினான்.
அதே வேகத்தில் வந்து கசக்கி அதன் காயத்தில் வைத்து அடைத்தவன், மற்றொரு மூலிகையை அதன் மூக்கில் நுகரச் செய்தான். தாமினி முடிந்த வரை உதவி செய்ய, சிவப்பியும் பயந்தபடி வந்தவள், “மாமா, அது மூர்ச்சை தெளிஞ்சு மறுபடியும் நம்மளை முட்ட போகுது” எனவும் , அவளை முறைத்தவன்,
“அதுக்குன்னு ஒரு உசுரு துடிக்கும் போது பார்த்துகிட்டு நிற்க சொல்றியா. மனுஷங்களை விட, அதுங்களுக்கு நன்றி அதிகம்” என்றவன், “தண்ணீர் எடுத்துட்டு வா” அவளை விரட்ட, கல்மேடையில் வைத்திருந்த தோல் குடுவையிலிருந்த தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தாள் .
இடுப்பில் குறுக்காகக் கட்டியிருந்த துண்டை எடுத்து, அதை நனைத்து, மாட்டின் முகத்துக்கு நேரே பிழிய, முழித்துப் பார்த்தது. “ஒன்னும் இல்ல டா” என அதன் நெற்றியில் தடவிக் கொடுக்க, நாக்கை வெளியே நீட்ட, தண்ணீரை அதில் பிழிந்து விட்டான்.மாட்டுக்கு சிருஷைகள் முடிந்தது. அவன் கையை நக்கி விட்டு, அது மெல்ல எழுந்து நடந்து சென்றது.
அவனின் ஒவ்வொரு செயல்களையும் கண்னெடுக்காமல் பார்த்திருந்த தாமினி, அப்போது தான் அவன் முதுகிலிருந்த காயத்தைப் பார்த்தாள்.
“கழுவரே” என தன் சேலையால் காயத்தின் மீதிருந்த மண்ணை தட்டி விட்டவள் , “இளவரசி” அவன் பதறி எழுந்து விட்டான்.
“சிவப்பி, அவருக்கு உண்ண ஏதாவது கொண்டு வா” என அனுப்பி விட்டாள்.
“பேசாமல் உட்காருங்கள்” என அவன் தோளைப் பிடித்து அமர்த்த, பணிவதைத் தவிர வெறு வழியில்லை. ஓடி சென்று ஒரு கூடையிலிருந்து, மஞ்சள், வேப்பிலை பத்தை எடுத்து வந்தவள், அவன் நெளிவதையும் பொருட்படுத்தாமல், முந்தியால் அவன் முதுகை மெல்ல வருடித் துடைத்தாள்.
“இளவரசி, இதெல்லாம் எனக்குப் பழக்கம் தான்” அவன் எழ முயல,
“என் மீது ஆணை, உட்காருங்கள்” கட்டளை இட்டுவிட்டாள்.
அவன் காயத்துக்கு மஞ்சள் பத்தை போட்டு விட, வீரன் நெளிந்தான். கவனத்தைத் திசை திருப்புவதற்காக, “ அடிபடும் எனத் தெரிந்தே மருந்து கொண்டுவந்தீர்களா” எனக் கேட்க,
“ஆம் பயிற்சியின் போது எனக்கு அடிபட்டால், அதற்காகக் கொண்டு வந்தது ”
அவள் விளக்கம் சொல்ல,
“சரி தான், ஆனால் அது உங்களை விட மற்றவருக்குத் தான் அதிகம் தேவைப்படும். மாட்டைக் கூட விட்டு வைக்க வில்லையே நீங்கள்” சிரிக்காமல் சொல்ல,
“போதும் உங்கள் பரிகாசம்” கையில் வைத்திருந்த மயில் பீலியால் அவனை அடித்தாள். அவன் சிரிக்க, “நல்ல வேலை நீங்க வந்திங்க. உங்களுக்கும் இல்லாமல், மாட்டோடு மடிந்திருப்பேனே” பீலியில் வருடியபடியே
“இளவரசி” என எழுந்து விட்டான்.
“ஏன், என் உயிரைக் காப்பாற்றிய உங்களுக்கு நான் சேவகம் செய்யக் கூடாதா”
“அது தான் செய்து விட்டீர்களே. போதும்” என்றும்.
உங்களுக்கு பிடதியில் கண் இருக்கிறதோ, இன்னும் எத்தனை காயங்கள் மருந்து போடாமல் இருக்கிறது” அவள் கணக்கு சொல்ல,
“போதும் இளவரசி, யாரவது பார்த்தால் கதை கட்டி விடுவார்கள்” அவன் சொல்ல, “என்ன வென்று” அவள் விடாப்பிடியாகக் கேட்க, அவன் முறைத்தான்.
“இந்த முறைப்பெல்லாம் வேண்டாம். கழுவருக்கு உரிமைப்பட்டவள் செய்கிறாள் என்று சொல்லுங்கள்”
“இளவரசி’ ,ஆட்சேபனையாய் குரல் உயர்த்தி சொல்ல, “என்ன கழுவரே’ என்றவள், தன் முந்தானை தலைப்பைக் கொண்டு அவன் மார்பில் ஒட்டியிருந்த மண்ணையும் துடைக்க, அவள் கையை பற்றி விட்டான்.
“செய்யறது என்னனு புரிஞ்சு தான் செய்யிறீங்களா “ அவன் உரும,
“நான் செய்யாமல் யார் செய்வா. புரிந்து தான் செய்கிறேன். வீர விளையாட்டுக்கு முன்பே என்னை மணந்து கொள்ளுங்கள். கழுவன் குடும்ப மருமகளாய் உடன் நிற்பேன்”
“நடைமுறைக்கு ஒத்து வருவதைச் சொல்லுங்கள்” எனவும்,
“ஏன் வராது, உங்கள் இதயத்திலும் நான் தான் இருக்கிறேன். அது எனக்குத் தெரியும்” என அவன் இதயத்தைத் தொட, அது வேகமாய் அடித்தது.
“கழுவரே என்ன இது” கிட்டத் தட்ட அவனை அணைத்தது போல் அவன் மார்பில் சாய்ந்து செவி கொடுக்க,
“இளவரசி” பலகீனமாகவே வந்தது அவன் குரல். அவள் கலகலவென நகைத்து , அவன் மார்பில் இதழ் பதித்தவள், “இதற்கு மேலும் என்னை மறுப்பீர்களா” அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்துக் கேட்க,
கண்ணில் நீர் வழிய, “நான் ராசியற்றவன்” என்றான்.
“நானும் அப்படி தான், அப்போது ஜோடிப் பொருத்தம் சரி தானே” தலை சரித்துக் கேட்டவள்,
“இனி ஒன்றும் பேச வேண்டாம். முறைப்படி அண்ணையாவிடம் பெண் கேட்டு, கழுவன் குடிக்கு அழைத்துச் செல்லுங்கள். உங்களுக்காகக் காத்துக் கொண்டு இருப்பேன்” அவள் பேசி முடித்து விட, தங்கராசுக்கு தான் மறுமொழி சொல்ல முடியவில்லை.
“வேங்கடவர் சொன்னது உண்மை தான்” என்றான்.
“அண்ணையா என்ன சொன்னார்” புருவ முடிச்சோடு கேட்க,
‘அவர் தங்கை என்னிடம் காதலைச் சொல்லும் போது , என்னால் மறுக்க முடியாது என்றார்”
“சரியாகத் தானே சொல்லி இருக்கிறார்” என பேசிக் ,கொண்டிருந்தவள், சிவப்பி கொண்டு வந்த உணவை அவனுக்குப் பரிமாறி, சாப்பிட வைத்தே அனுப்பினாள்.
கழுவன் சிங்க ராசு தேவன், கால் அடிபட்டதில் தன் செல்வாக்கு சரிந்ததாக எண்ணம் கொண்டு தாடகையிடம் புலம்ப, “அதுக்கு என்ன செய்யலாமுண்டு பாரு” என்றவள் தந்த யோசனை தான் பதுமத்துக்காக ஏற்பாடு செய்யப்படும் சல்லிக் கட்டை கழுவன் குடியிலேயே வைத்து , பெரிய விழாவாகச் செய்வது. சுற்று வட்ட பாளையங்களுக்கும் சல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் அழைப்பை அனுப்பச் சொன்னாள்.
“நம்ம பாளையத்துக்காரர் காதில் போட்டு அனுமதி வாங்கிட்டு செய்வோம்” என்ற சிங்கம் “ அதுக்கு முன்ன மருதனை நான் பார்க்கனும்” எனக் கம்பு ஊண்டி நடந்தே மகளை அழைத்துக் கொண்டு அவர்கள் வளர்க்கும் காளை மருதனைப் பார்க்கச் சென்றான்.
நீண்ட நாட்களுக்குப் பின் சிங்கத்தைப் பார்ப்பதால் , மருதன் முதலில் சீறிக் கொண்டுவந்தது. பதுமம் அதன் மீது தளையை (கயிறு) போட ,முயல ,
“இருத்தா , இன்னைக்கு நானா, அதுவாண்டு பார்த்துருவோம்” என நன்றாக இருக்கும் காலை அழுத்தமாக ஊண்டி கொண்டு காளையை எதிர்க்க ஆயத்தமாகி நிற்க, மருதன் ஓடி வந்து சிங்கத்தை முட்டி தூக்கியது. அதை எதிர் பார்த்தவன் போல் , மாடு முட்டியதையே உந்து சக்தியாக மாற்றி, பல்டி அடித்து அதன் மேல் சவாரி செய்வது போல் படுத்து, அதன் திமிலை கெட்டியாகப் பற்றிக் கொண்டு, தன் கால்கள் இரண்டையும் அதன் பக்கவாட்டில் அழுத்திப் பிடித்து, ஹேய் ஹேய் எனக் குரல் கொடுக்க மருதனுக்குப் பிடித்திருப்பவன் யாரெனத் தெரிந்தது.
அடுத்து தலையை ஆட்டிக் கொண்டு, அவனை உலுப்பித் தள்ள முயன்று அவனோடு விளையாட ஆரம்பிக்க, “டேய், திருட்டு பயலே. அப்பனை தெரிஞ்சுக்கிட்டயாடா” அதன் காதில் பேச, கழுத்தில் கட்டியிருந்த மணி அசையப் பதில் தந்து, அந்த கரடு முழுவதும் சிங்கத்தைச் சுமந்து கொண்டே சுற்றி வந்தது.
முரட்டுக் காளையை அடக்கச் சிங்கத்துக்கு சொல்லியா தரவேண்டும். சாம பேத தண்டம் என அத்தனையும் உபயோகித்து அதை அடக்கி, தன் ஆளுகைக்கும் கொண்டு வந்து விடுவான். இதோ அவன் குரலுக்கும், கொடுக்கும் அழுத்தத்துக்கும், தொடுகைக்குமே மருதன் உற்சாகமாகச் சுற்றித் திரிகிறான்.
“போதும், அப்பாரும் மகனும் கொஞ்சிகிட்டது. மருதா அப்பாரை இறக்கி விடு” செம்பதுமம் சொல்ல, அவள் அருகில் வந்து நின்றது.
“புத்திசாலி பயடா நீயி” எனத் தட்டிக் கொடுத்து விட்டு, காலை தூக்கி ஒரு பக்கமாய் போட்டு, குதிக்க, “அப்பாரு” பதுமம் அவனைப் பிடிக்க ஓடி வந்தாள்
கட்டாந்தரையில் ஒரு காலை ஊன்றி நின்றவன், மகளின் தோள் மீது கை போட்டுக் கொண்டு, மருதன் நெற்றியில் தடவிக் கொடுத்து,
“அக்காளுக்கு மாப்பிள்ளையை உன்னைய வச்சு தாண்டா தேட போறோம்.” எனவும் பதுமம் சிரிக்க,
“முதவே தேடிட்டிங்களா. உன் அக்கா பதட்டப் படாமல் இருக்கே” ராக்காயி வீட்டு நின்று இவர்களை வேடிக்கை பார்த்த வேங்கடவனைப் பார்த்தபடி சொல்ல,
“அப்பாரு, அப்படியெல்லாம் கள்ளத்தனம் பண்ணமாட்டேன். திறமை இருக்கவர் பரிசை ஜெயிக்கட்டும்.” பதிவு சத்தமாகவே சொல்ல, வேங்கடவன் கட்டை விரலைத் தூக்கிக் காட்டினான்.
“ஆத்தா, ஒரு வேளை சித்தினி நாயகர் ஜெயிச்சா, உன்னை வடக்க கூட்டிட்டு போயிடுவாப்லயே , பிறகு எப்படி என் மவளை பார்ப்பேன்” வாஞ்சையாய் அவள் தலையைத் தடவ, “அப்பாரு” எனச் சிங்கம் மார்பில் சாய்ந்து கண்ணீர் விட்டாள்.
“இல்லைத்தா, இல்லை "என சமாதானப்படுத்தியவன் இப்படி சொன்னமுண்டு உன் அம்மா கிட்ட சொல்லிப்புடாதே, என்னைய மட்டும் திருச்சி கோட்டையிலிருந்து கொண்டுக்கிட்டு வந்தண்டு ஆரம்பிச்சுடுவா” சிரித்தபடியே சொன்னவன் கூரைக்குள் சென்று அமர்ந்தான்.
சிங்கத்துக்குக் கூழை கலயத்தில் கொடுத்து விட்டு , மருதனுக்குத் தவிடு புண்ணாக்கு பயறு வகைகளையும் கலந்து வைக்கச் சென்றாள்.
சிங்கத்தின் கட்டளையின் பேரில் அவர்கள் குடியில் உள்ள சில இளவட்டங்கள் தட்டிக்கு மறு புறம் நின்று மருதனைக் கலவரமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிங்கம் திரும்பிப் பார்க்கவும், “அப்பு வர சொன்னிங்களே” பம்மிக் கொண்டு கேட்க, “ஆமாடா உள்ள வாங்க” எனவும், “அப்பு” அரண்டு, மருதன் பக்கம் கை காட்டினர்.
“பதுமம் இருக்கு சும்மா, பயப்படாம உள்ள வாங்கடா” என்ற போதும்.
“நாச்சியா, காளைக்குத் தளையை போடு” என அவள் கழுத்தில் கயிற்றைக் கட்டிய பிறகே உள்ளே வந்தனர்.
“மருதனைப் பழக்க வாங்கடாண்டா , பம்மிக்கிட்டே வரீங்க” சிங்கம் கர்ஜிக்க,
“இதுக்கு இன்னும் பழக வேற வேணுமாக்கும். போங்கப்பு” வாய்க்குள்ளேயே முனங்கிக் கொண்டவர்கள். பதுமமும், சிங்கமும் இருந்த தைரியத்தில் காளையை நோக்கி முன்னேறினர்.
மருதன் காளை தான் விழா நாயகன். போட்டியின் உச்சம் இந்த காளையும், அதன் பரிசும் தான். இது இல்லாமல் விருப்பப்படுபவர்கள் தங்கள் காளையோடு பங்கேற்கலாம். அதற்கு தக்கண சன்மானம் கொடுக்கலாம் எனவும் முடிவெடுத்தனர்.
கழுவன் குடும்பம் இதைப் பற்றி ஆலோசிக்க, “நல்ல விசயம் தான். நம்ம பெருமை கூடும்” வீரன் சொல்லவும் “ம்க்கூம்” வேலாயி நொடிக்க
“ஆத்தாளுக்கு அவுங்க மகளைத் தவிர வேற யோசனை இல்லை” என்றான் முத்து
“மதினி, இதைச் சாக்கு வச்சு பூவை இங்க கூட்டிட்டு வந்துடுவோம்” சிங்கம் சொல்ல, “அப்பச் சரி. சமையல் எம் பொறுப்பு” வேலாயி ஏற்றுக் கொண்டார்.
“பாளையத்தில் அனுமதி வாங்கனுமுல்ல” தங்கராசு கேட்க,
“பாளையம் மட்டும் இல்லை மதுரை கோட்டையிலும் தாக்கல் சொல்லிட்டு வரனும். நீயும் தங்கமும் போயிட்டு வந்திருக்க” எனவும் ரங்கம் தலையை ஆட்டினான்.
தங்கம், “காவல் ஆளுங்களை அதிக படுத்தனும். விழா ஏற்பாட்டை கவனிக்கனும்” வேலைகளை அடுக்க,
“ விழா ஏற்பாட்டை அப்புவும், நானும் பார்த்துக்குறோம்” தாடகை சொல்ல
“சின்ன கழுவன் குடிக்கும், தொட்டப்பனூருக்கும் தாக்கலைச் சொல்லி செல்வத்தையும், பூவையும் கூட்டியாரனும் யார் போறீங்க ” எனவும்
“நான் சொல்லிட்டு வந்துடுறேன் அப்பு” என்றான் முத்து.
“அக்காளை கையோட கூட்டியாந்துரு” அசோதை மகனிடம் வலியுறுத்தினார்.
“எல்லாம் சரி. செலவு நிறைய ஆகுமே” கருத்தையா சொல்ல,
“பாளையத்துக்கார்கிட்ட ஒரு மொய்யை போட்டுருவோம். கடை கண்ணி போடுறவுக கிட்ட வரியை வசூல் பண்ணிடுவோம்” சாமி கருப்பன் சொல்ல,
“நகையை தாரேன்” என்றாள் தாடகை. செலவு, மகளுக்குத் திருமணம் என்பதை எல்லாம் விடக் கணவனின் மனச்சோர்வைப் போக்க வேண்டும் “ என்பதே குறியாக இருந்தது.
“சல்லிக்கட்டு மட்டும் இல்லாமல் வீர விளையாட்டையும் வைப்போம்”தங்கம் யோசனை சொல்ல, நல்ல யோசனை என்றனர்.
“சரி அப்பு. தினத்துக்கும் இரவைக்கு ரதி தேவி நடனம் வச்சுக்குவோம்” சிங்கம் சொல்லத் தாடகை கோணை வழித்தாள்.
“அப்போ கட்டாயம் வைக்கிறோம்” என்றான் சிங்கம்.
“விழாவை எப்போ வைக்கலாம்” என்ற கேள்வி எழ,
“சல்லிக்கட்டு மட்டுமுண்டா நம்ம மந்தை போதும். விளையாட்டு எல்லாம் வைக்கனுமுண்டா பொட்டல்ல தான் வைக்கணும். பாளையக்காரங்களை கூப்படனுமுண்டா, உட்கார்ந்து பார்க்க மேடை வசதியும் செஞ்சு தரணும். கம்பு தட்டி கட்டணும், அவகாசம் வேணும் அண்ணன்” ரங்கராசு விளக்கமாகச் சொல்ல
“ஒரு திங்கள் அடுத்த பௌர்ணமிக்கு வச்சுக்குவோம்” என நாள் குறிக்க,
“அதுவும் சரி தான். அதற்கு முந்தைய ஏகாதசியில் பெருமாள் சிலையைப் பிரதிஷ்டை செய்து விடலாம் என பத்மாசினியும் கணக்கிட்டால், அதன் பின் வரும் ஆபத்து அறியாமல்.
வேலையை ஆளுக்கு ஒன்றாகப் பிரித்துக் கொண்டனர். ரங்கம், தங்கம், முத்து, சாமி ஆகியோர் வேலையைப் பார்க்கக் கிளம்பினர்.
கழுவன் குடி மந்தை மீண்டும் களைக்கட்ட ஆரம்பித்தது. இந்த முறை ஆடல் பாடல்கள் இல்லாமல், வாள் வீச்சு, வேல் கம்பு மல்யுத்தம் என்று நடக்க, வேங்கடவனையும் இழுத்து விட்டு சிங்கம் அவனை எடை போட்டார்.
அன்று, தன்னை சந்திக்க வந்த காவல்காரர்களை , “குஸ்தி போடுங்கடா” எனக் களம் இறக்கி விட, “ஆமாம் அப்பு. ரொம்ப காலம் ஆச்சுது” எனத் தலைவனை மகிழ்விக்கும் எண்ணத்தோடு இரண்டு இரண்டு பேராக் கை கலந்தனர்.
“அப்படி தான்” “போடு” “குத்து” எனச் சிங்கம் ஆர்ப்பரிக்க அவர்களும் உற்சாகமாகவே கலந்து கொண்டனர்.
வேங்கடவனுனம், அவர்கள் வீர விளையாட்டைக் கண்டு ரசித்துக் கொண்டிருக்கச் சிங்கம், “சித்தினி நாயகரே, நீங்களும் ஒரு கை பாருங்க” என்றான்.
“மாட்டைத் தானே அடக்கணும்னு சொன்னிங்க, மனுசரையுமா” வேங்கடவன் கேட்க
“இந்த மனுசங்களையே , மருது புரட்டி போட்டுடுவான். பயிற்சியா இருக்கும்”எனவும்
“சித்தினி நாயக்கரே வாங்க” ஆஜானுபாகுவாய் நின்ற சமையன் அழைப்பு விடுக்க, பெண்களோடு பெண்களாய் பதுமமும் ஆர்வமாக வந்து நின்றாள்.
அவள் ஆர்வத்தைப் பார்த்தவன், “ஜெயிச்சா என்ன தருவ”அவளோடு கண்களால் பேச, ‘முதலில் ஜெயித்து காட்டுங்கள்” என்ற பதில் வர,
“ பார்த்துடுவோம்” எனத் தயாரானான்.
“பொண்ணை பார்த்தா தானப்பா இறங்குறேன்கிறாரு” எனவும், வேட்டியைக் கட்டிக் கொண்டு குஸ்தி களத்தில் இறங்கி விட்டான்.
சமையன், சிங்கத்துக்கு முன் தன் திறமையை நிரூபிக்க முழு பலத்தோடு தாக்க, வேங்கடவன் திறமையாகச் சமாளித்தான். நீண்ட நேரம் போட்டி சுவாரஸ்யமாக இருந்தது. வேங்கடவன் தடுப்பு முறையை மட்டுமே பிரயோகித்தான். சிங்கம் அவன் போர் முறையை மனதில் மெச்சிக் கொண்டான்.
ஒரு நிலையில் சமையன் சோர்ந்து விட, தன் முறையை மாற்றி கிடுக்கு பிடி போட்டு செயல் படாமல் மட்டுமே செய்தானே ஒழிய, காயப்படுத்த வில்லை. நீண்ட நேரம் பிடித்து வைத்ததால் வேங்கடவன் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.
“நாயக்கரே, நீங்க ஏன் திருப்பி தாக்கலை” சமயன் கேட்க,
“இது போட்டி தானே. நிஜமல்லவே. நம்மவரையே தாக்கி, பலமிழக்கச் செய்வதில் என்ன லாபம். தாங்களும் நிகரற்ற வீரர் தான்* எனவும் சமையனுக்கும் பெருமை , மகிழ்ச்சியோடு தலை வணங்கிச் சென்றான்.
சிங்கம்,” காவல்காரனுக்கும், ராச பரம்பரைக்கும் வித்தியாசம் இது தான். நீங்க எந்த ராஜ்ஜியமுண்டு சொன்னிங்க” வினவ
“ ராஜ்ஜியத்தை இழந்தவன் எப்படி உரிமை கொண்டாட முடியும். காஞ்சியிலிருந்து வந்தேன்னு தான் சொன்னேன். உங்கள் மகளை மணந்த பிறகு, ராஜ்ஜியத்தை உருவாக்கிக் கொள்வேன் “
“சரி தான். பொழைச்சுக்குவீர்” சிரித்தார் சிங்கம்.
எல்லோரும் கூடியிருக்கும் சமயங்களில் இது போன்ற பயிற்சிகள் நடக்கும். அதுவும் சிங்கம் களமிறங்கும் சமயங்களில் தங்கம் மட்டுமே சரிக்குச் சரி நிற்பான். மற்றவர்களை முதல் சுற்றிலேயே மண்ணை கவ்வ வைத்துவிடுவார்.
அந்த வேலையை இப்போது வேங்கடவன் செய்தான்.ஆனால் அவனால் வெல்லப்பட்டவனின் அன்பையும் வேங்கடவன் பெற்றுக் கொண்டிருந்தது தான் ஆச்சரியம். பெண்கள் கண்கள் வேங்கடவன் மீது இருக்க, அவன் பார்வை செம்பதுமத்தை தான் தொடர, சிங்கத்தின் பார்வை இருவரையும் அளவெடுத்தது.
அன்றைய சாமத்தில் பத்மையாக வாசனை சந்தித்தவள், கன்னி போயிருந்த அவன் மேனிக்கு ராக்காயி தயாரித்து வைத்திருந்த சூடு ஒத்தடத்தைக் கண்ணீர் சிந்திய படி கொடுக்க, “பத்மை என்ன இது” எனக் கடிந்தான்.
“இத்தனை சிரமமும் என்னால் தானே” எனவும்
“ஆம் உனக்காக உன் தந்தை மனதை ஜெயிக்க. வீர சிம்மர் போல், சிம்ம தேவரும் மகளை வெறுக்கக் கூடாதே” எனவும்
“அது ஒரு காலும் நடக்காது. அப்பாரு காதல் மணம் புரிந்தவர். நம்மைப் புரிந்து கொள்வார்” என்றாள்.
“புரிந்து கொள்ளட்டும். மாட்டை அடக்கிய பிறகும். மறுக்கக் கூடாது பார்”
“உங்களுக்கு ஏன் அப்படி தோன்றுகிறது. அவர் வாக்கு தவறாதவர்” என்றாள்.
“பூர்வ ஜென்ம வாசனை. சரி வா பெருமாளைச் சேவித்து வருவோம்” அழைக்க,
“அப்பாரு தானே முன் நின்று மருதுக்குப் பயிற்சி கொடுக்கிறார்”அவள் சொல்ல
“மருமகனுக்கும் பயிற்சி கொடுக்கிறார். அதை மறந்து விட்டாயே.” என் சிரிக்க
“அப்படி இருந்தால் நலம் தான்” அவன் வார்த்தையை அவள் படித்தாள்.
தாமினி தேவி காட்டு மாளிகைக்கு வந்து விட்ட செய்தி தங்கராசு தேவன் மூலம் வேங்கடவனுக்கும் தெரிய வர, “கழுவரே, தங்கள் பாதுகாப்பு வட்டத்துக்குள் என் தங்கையையும் வைத்துக் கொள்ளுங்கள். என்னால் இங்கிருந்து இருபத்தியோரு நாட்களுக்கு நகர முடியாது. நித்திய பூஜை இருக்கிறது” எனவும்
“பூசை எப்போ செய்றீங்க. இதுவரை சிங்கத்துக்குத் தெரியாமலா நடக்கிறது” வினவினான்.
“சாமத்தில், ராக்காயி அம்மா மந்திர கட்டோடு நடக்கிறது. அதனால் யாருக்கும் தெரியாது”என்றவன்
“தாங்கள் இன்னும் என் தங்கை பொறுப்பை எடுத்துக் கொள்வதாக சொல்லவில்லையே” விடாப்பிடியாகக் கேட்க
“காட்டு மாளிகை இரண்டு கழுவன் குடிகளுக்கு மத்தியில் தான் இருக்கிறது. அதன் பாதுகாப்பை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் “
சிரித்துக் கொண்ட வேங்கடவன், "சிலை பிரதிஷ்டை முடிந்து நாங்கள் குடி பெயர்ந்தாலும், தாமினி தங்கள் குடிக்குத் தான் வரவே விரும்புகிறாள். அந்த பொறுப்பைச் சொன்னேன்” எனவும்,
“இளவரசே” என அதிர்ந்தவன், “நான் சாதாரண காவல்காரன். அவர் ராஜ்ஜியம் ஆளப் பிறந்தவர். ராயர் வம்ச சம்பந்தம் எல்லாம் அவங்களுக்கு கிடைக்கும் “
“என் தங்கையை உயர் குடி ராணியாக்க, இங்குப் பதுக்கி வைத்துள்ள எங்கள் பொக்கிஷம் ஒன்றே போதும். ஆனால் இருமுறை தன்னை காத்த கழுவரை தான் விரும்புகிறாள்”
“அவர்களே சொன்னார்களா?” சந்தேகமாகக் கேட்க
“பத்மை, என்னை விரும்புது உங்களுக்கு எப்போது தெரிய வந்தது” வேங்கடவன் பதிலுக்குக் கேட்க
“அது வைகையில் கரையேறினீர்களே, அப்போதிலிருந்து அவள் பார்வை மாறியது” என்றான்.
“நாங்கள் முதன் முதலில் அன்று தான் சந்தித்தோம்
“உங்களுடையது பூர்வ ஜென்ம பந்தம்”
“நானும் மறுக்கவில்லை. பதுமம் மனதை நீங்கள் படித்தீர்களா இல்லையா. அப்படி தான் தாமினி மனதில் நீங்கள் இருப்பதை நான் படித்தேன்” என்றான்.
“தற்சமயம் அப்படி தோணலாம். ஆனால் அது சாத்திய படாது. நான் மணமானவன். சாதாரண காவல்காரனுக்கு இரண்டாம் தாரமாக வர, இளவரசிக்கு என்ன தலையெழுத்து”
பெருமூச்சு விட்ட வேங்கடவன், "காதல் யாருக்கு யாருடன், எப்போது வரும் என யாராலும் யூகிக்க முடியாது. அப்படி வந்து விட்டால், தடைகளைத் தாண்டி அது பயணிக்கும். நிறைகுறையோடு இணையை ஏற்றுக் கொள்ளும். வீர சைவ மரபில் பிறந்தவளை தந்தையை மீறி வைணவனை மணக்க வைக்கும். ஜென்மங்கள் கடந்தும் தொடர்ந்து வரும். காரியத்தை சாதிக்கும் வல்லமை கொடுக்கும். ஏன் வைராக்கியம் கொண்ட உங்கள் சிற்றன்னை சிங்கத்துக்கு மூன்றாம் தாரமாக இருக்கச் சம்மதிக்க வில்லையா” வினவ தங்கராசு தேவன் அமைதி காத்தான்.
“அவ்வளவு ஏன், என்னிடம் இவ்வளவு வாதாடுகிறீரே. தாமினி நேரடியாக உங்களிடம் தன் மனதைச் சொல்லும் போது உங்களால் மறுக்க இயலாது” என்றான். அதைக் கேட்கவும் ஊரைக் காக்கும் காவலனுக்குக் கண்கள் கலங்கி விட்டது.
“வேண்டாம் ராயரே, நான் அதிஷ்டம் கெட்டவன். பிறந்தவுடன் தாய் தந்தையை விழுங்கினேன். உடன் வந்தவளும் பிரசவத்தில் மகனோடு சென்றாள். அடுத்த ஒரு இழப்பை என்னால் தாங்க இயலாது. நீங்கள் வரும் வரை உங்கள் தங்கை என் பாதுகாப்பு வட்டத்தில் இருப்பார்” என வாக்கு தந்து அகன்றார்.
வேங்கடவன் சொன்ன காதல், காட்டுச்சிறுக்கியாய் திரிந்த நீலவள்ளியையும் தாக்கியது. அலமேலுவின் அப்பாவின் மேல் உள்ள காதலை உணர்வாளா?
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ். இவர்கள் வாழ்வில் என்ன என்ன மாற்றங்களைக் கொண்டு வரும் பார்ப்போம்.
திடியன் மலையடிவார சோலைக்கு வல்லபர் வரவுமே அவர் பொறுப்பில் பெருமாளை ஒப்படைத்து விட்டு பெண்கள் மூவரும் கிளம்பினர். வல்லபரோடு வானவனும், துரைராசுவும் மட்டுமே இருந்தனர்.
வல்லபர்,”அரசே, இனி தாங்கள் சிலையைத் தேடும் பணியைத் தொடர வேண்டாம்” எனவும் வானவருக்கு அதிர்ச்சி.
“தேடாமல் எப்படிக் கண்டு பிடித்து பிரதிஷ்டை செய்ய முடியும் சுவாமி” என வினவ,
“இங்கிருக்கும் பெருமாள் உங்கள் தேடலிலா கிடைத்தார்?” பதிலாகவும் வினாவை எழுப்ப,
“மருதமரம் மட்டுமே எங்கள் கண்ணில் தட்டுப்பட்டது. கண்டுபிடித்தது என் இளவல் தான்” என்றார்.
“அவர் மட்டுமாக கண்டுபிடிக்க இயலாது. அரசனும், அரசியும் வந்தால் மட்டுமே, பெருமாளும் தாயார் சமேதராக வெளிப்படுவார்”
“விளக்கிச் சொல்லுங்கள் சுவாமி. எல்லாம் மாயமாக இருக்கிறது” வானவன் வேண்டுகோள் விடுக்க , நகை முகத்தோடே பத்மாசினி, திருமலை வாசன் பூர்வ ஜென்ம கதையைச் சொன்னார்.
“நான் சிறுவயசா இருக்கும் போது , ஒரு ராசாவும், ராணியும் இந்த காட்டுல உலாவுறதை பார்த்துருக்கேன். கனவா , நினைவாண்டு தெரியலை. இவுக தானா” துரைராசு கேட்க,
“இருக்கலாம். அவர்கள் இந்த பெருமாள் சிலைகளைக் காக்க, பிரதிஷ்டை செய்ய வரம் வாங்கி வந்தவர்கள். பூர்வ ஜென்மத்தில் அவர்களுக்கு உதவி செய்தவர்களும் சேர்ந்து பிறப்பெடுக்கும் பொழுது, பிரதிஷ்டை சாத்தியம். நம் எல்லோரும் பூர்வ ஜென்மம் முதலே, இதனோடு பிணைக்கப் பட்டவர்கள் தான்” என்ற வல்லபர்,
பத்மாசினி,திருமலை வாசன், கழுவன் குடும்பம் பற்றியும் சொல்ல, “இந்த சிலைகளை பிரதிஷ்டை செய்தது?” என யோசித்த வானவன், வேங்கடவன் மயங்கி இருந்ததையும், தங்கராசு தேவன் உடலில் பெருமாள் சிலையின் அச்சு இருந்ததை தாமினி குறிப்பிட்டுச் சொன்னதும் நினைவு வர, “வேங்கடவன், தங்கராசு தவிர பத்மாசினி யார்?”எனக் கேட்டார்.
“உங்கள் அனுமானம் சரி. பூர்வ ஜென்மத்தில்திருமலை வாசராக இருந்தது உங்கள் இளவல், பத்மாசினியாக இருந்தவர், இந்த ஜென்மத்தில் பெரிய கழுவன் குடி, சிம்ம ராசு தேவன் மகள் செம்பதுமமாக அவதரித்து உள்ளார்” எனவும்,
“என் அண்ணன் மகள் பதுவா?” வியந்த துரை ராசு , “இருக்கும், இருக்கும் நாகமலை அடிவாரத்தில், சுருட்டு கருப்பனை வாலை சுருட்டி ஓட வைத்தவள் ஆச்சே” எனச் சிலாகித்தவர், “அம்மா, எங்க வம்சத்தில் பிறந்தது நாங்க செஞ்ச பாக்கியம்” என்றார்.
“எனக்குக் கருத்தில் வரவில்லையே” வானவன் கவலைப்பட,
“உங்கள் இளவல் கருத்தில் பட்டு விட்டார். கவலை வேண்டாம்” எனப் பரிகசித்த வல்லபர்,
“இங்குச் சிலைகளைப் பிரதிஷ்டை செய்தவர்கள் அவர்கள் தான்.” அந்த விவரமும் சொன்னார்.
“தம்புடு உங்களைப் பார்க்கக் கிளம்பி வந்தானே” வானவன் வினவ,
“சந்தித்தோம், வாசவராகவே சந்தித்தேன். பெரிய கழுவன் குடி சென்றிருக்கிறார். தம் இணையை மனையாளாக்கிக் கொள்ள, அவர் பெற்றவரிடம் பெண் கேட்டு விட்டார்”
“ஆத்தாடி, அண்ணன் ஆராய்ஞ்சுடுவாரே” துரைராசு அதிர்ந்தார்.
“ தெரியட்டும் கழுவரே. நான் நேரடியாகவே சென்று கூட தம்புடுக்காக பெண் கேட்கிறேன். என் குலத்தின் தாயை நாங்கள் முறையாய் அழைத்துக் கொள்வோம் “ என்றவர் , “சிம்ம ராசு தேவர் என்ன சொன்னார்” எனக் கேட்க,
“மாட்டை அடக்கி காட்டினால் , மகளைக் கல்யாணம் கட்டி வைப்பதாக, வாசவரையும் தன்னுடனே பெரிய கழுவன் குடிக்கு அழைத்துச் சென்று விட்டார்” என்றார்.
“அப்போ அண்ணன் ஒரு முடிவோட தான் இருக்கார்” என்ற துரை, அவர்களிடமிருந்து விடை பெற, மற்ற இருவருமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
“சுவாமி, பெருமாள் சிலையோடு எங்கள் பரம்பரை பொக்கிஷமும் இருப்பதாகக் குறிப்பு இருந்ததே” என வானவன் அதனைப் பற்றிய விவரம் கேட்க
“ வீர நரசிம்மயாதவராயராக தாங்கள் அனுப்பி வைத்த பொக்கிஷம் தான். சிலைகள் கூடவே புதைத்து வைத்தோம். சமயம் வரும் பொழுது உங்கள் இளவல் அதன் விவரத்தைச் சொல்வார்” என்றார்.
“இங்குத் தெய்வ காரியத்தை நிறைவேற்றி பொக்கிஷத்தின் ஒரு பகுதியைக் கொடுத்து தகுந்தவர்களிடம் கோவில் பொறுப்பையும் ஒப்படைத்து விட்டால், மீதி உள்ள செல்வதை வைத்து காஞ்சிக்கு வடக்கில் சிதறி உள்ள படைகளையும், மக்களையும் ஒன்று சேர்த்து நம் ராஜ்ஜியத்தை மீட்டு விடலாம்” வானவன் கணக்குப் போட, வல்லபர் சிரித்துக் கொண்டார்.
தனது இல்லத்துக்கு வந்த துரை ராசுக்கு ஒரே யோசனை. அவர் மனைவி செல்விக்கு விஷயம் எதுவும் தெரியாது. ஆகவே தங்கை வள்ளியிடம் ஆலோசனை செய்தார்.
“இளவரசரை , அண்ணன் பெரிய குடிக்கு கூட்டிகிட்டு போயிருக்காறாம்” விவரம் சொன்னவர், “அண்ணன் , நம்மளைத் தப்பா நினைப்பாரா” கேட்க,
“விஷயம் வெளியே வரும் போது பார்த்துக்கலாம் அண்ணன். இப்போவே வெசன படாதீங்க” எனத் தேற்றியவள், “பதுவை, தன் தம்பிக்குக் கல்யாணம் கட்டி வைக்கணுமுன்னு மதினி நினைச்சுகிட்டு இருக்கு. அதை மட்டும் சமாளிச்சுக்க” எனவும்,
“அவுக இளவரசியாம் ல, பத்மாசினி தாயி.எல்லாம் தெரிஞ்ச நம்மளே குறுக்கப் போகலாமா” துரை பயபக்தியோடு சொல்ல,
“அது அண்ணன் மகள் தான்.இம்புட்டு பயப்பட அவசியமில்லை” என்றாள்.
“இது பயமில்லை ஆத்தா, மருவாதி. அம்புட்டு வைராக்கியமாக பொம்பளை, நம்ப வம்சத்தில் வந்து பிறந்திருக்கு இல்ல. நதி மூலம் தெரியுமுன்ன சரி, உசந்ததுன்னு தெரிஞ்ச பிறகு, அதுக்கு தக்கண மருவாதி கொடுக்கணும்”
“மருவாத குடுகுறோமுண்டு, எங்கப்பன் குத்துக்குள்ள இல்லையிண்ட மாதிரி உன் மகளைக் காட்டி குடுத்துறாதே” எனவும், அதுவும் சரிதான்என தலையை ஆட்டிக் கொண்டார்.
திடியன் மலையடிவாரத்தில் கூடாரத்தில் தங்குவதை விட, காட்டு மாளிகை வசதி என அலமேலுவை அழைத்துக் கொண்டு, தாமினியும், சிவப்பியும் தங்கள் ஆட்களோடு சென்று விட, வானவனுக்கும் உணவு கொடுக்கும் பணி வள்ளியுடையது ஆகியது.
பெரிய கழுவன் குடியில் சித்தபண்டூரிலிருந்து வந்து இறங்கிய சிங்க ராசு தேவன்,ஏதோ அசம்பாவிதம் உள்ளது எனகுடியிருப்பை சோதனையிட மகன்களுக்குக் கட்டளையிட அவர்களும் நாலாபுறமும் சென்று வந்தார்கள்.
பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்ததே தவிர வேறு ஆட்களைக் காணவில்லை. மீண்டும் மாருதம் தாக்கியதோ, வேறு ஏதேனும் அசம்பாவிதமோ பெரிய அப்பத்தா வெள்ளையம்மாளை காண சாமி ஓட, அவர் சாவகாசமாக வெற்றிலையை உரலில் இடித்து, வாயில் அதக்கிக் கொண்டிருந்தார்.
“அப்பு, அப்பத்தா சாவகாசமா வெத்திலை இடிச்சுக்கிட்டு இருக்காக” எனக் குரல் கொடுக்க, சிங்கம் கீழே இறங்கி இருந்தான்.
அவர்கள் வந்த திசைக்கு மறு புறம் இருந்து நான்கு பேர் , “ஆத்தா , எங்களை மன்னிச்சு விட்டுடு” என கத்திக் கொண்டே ஓடிக்கொண்டிருக்கக் கையில் மாட்டை அடிக்கும் சாட்டையைக் கொண்டு குதிரையில் விரட்டிக் கொண்டிருந்தார் ராக்காயி. அவர் சென்ற வழி புயல் கடந்த தடமாக மர கிளைகள் ஒடிந்து, சாமான்கள் உருண்டு ரணகளமாகி இருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பயந்தே, கழுவன் குடி பெண்கள் அவரவர் வீட்டுக்குள் முடங்கி இருக்க, ஆண்கள் சிறுவர்கள் ராக்காயியை பின் தொடர முடியாமல் மூச்சு வாங்கி வந்தனர்.
அவர்கள் பின்னோடு தேட சென்ற வேங்கடவன் சிரித்த படி வர, மற்ற இரண்டு திசைகளிலும் சென்றிருந்த, தங்கமும், முத்துவும் ஆளுக்கு ஒருவனைத் தூக்கி வந்தனர்.
ராக்காயி விரட்டி வந்தவர்கள் சிங்கத்தைப் பார்க்கவும், “அய்யா சாமி எங்களை காப்பாத்துங்க” அவன் காலில் விழ ,
“டேய் எந்திரிச்சு ஒடுங்கடா” ராக்காயி கண்ணை உருட்டிக் கொண்டு மிரட்டிக் கொண்டிருந்தார்.
“அடியே கூறு கெட்டவளே. யாரு இவனுங்க” சிங்கம் கேட்க, பதில் சொல்லாமல் அதே முறைப்பு.
“இந்தா மலை இறங்கு” எரிச்சலாக மொழிய, கோதை, “ஆத்தி, என்னத்தை பண்ணி வச்சிருக்குன்னு தெரியலையே” என அக்காவிடம் செல்ல,
சிங்கத்திடம் வந்த தாடகை, “ காரணம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டாங்க. அக்கா யார் இவுங்க” விசாரிக்க, செம்பதுமமும் இறங்கி இருந்தாள்.
“குரங்கு பயலுக. வேவு பார்க்க வந்திருக்கானுங்க. நொண்டி கருப்பன் ஆளுங்க. சிங்கம் காலை முடக்குனவனுங்க.” குதிரையின் கடிவாளத்தை இழுத்துப் பிடித்து அதன் கால்களால் கீழ் இருப்பவன் நெஞ்சில் மிதிக்கப் போக,
“அப்பு, எங்களை மன்னிச்சுக்கிடுங்க. உங்க கூட்டத்தில் சேரத் தான் வந்தோம்” எனக் கையெடுத்துக் கும்பிட, சிங்கம் கால்களைத் தூக்கிநிற்கும் குதிரையின் கழுத்து பகுதியைத் தடவிக் கொடுத்து, “அடங்கு. நான் விசாரிச்சுக்குறேன்” எனவும், குதிரை அமைதியானது.
“இவைங்களை விசாரிங்கடா” கீழே கிடந்தவர்களைக் காட்டி சொல்ல, தங்கமும், முத்துவுமாக அள்ளி சென்றனர்.
குதிரைமேலிருந்தவள் சிங்கத்தை முறைத்தபடி இருக்க, கோதை பேச்சு அவள் அக்காளின் காதில் எட்டவில்லை.
“இவனுங்களை பிடிக்கத் தான், ஊரையே இரண்டு பண்ணி வச்சியாடி” பேச்சியம்மாள் நொடிக்க,
“ஆத்தே அடை வச்சிருந்த கோழியை காணோம்” என வேலாயி மிஞ்சியதைத் தேடிச் செல்ல, சுற்று வட்ட கழுவன் குடி பெண்கள், பேச்சியிடம் மருமகள் ஆட்டத்தை அவலறியாமல் சொல்ல வந்தனர்.
ராக்கு இன்னமும் குதிரை மேல் அமர்ந்து முறைத்திருக்க,
“அடியேய் மலை இறங்குண்டு சொன்னேன்ல” சிங்கம் மிரட்ட , பதில் முறைப்பு மட்டுமே.
“அட கிறுக்கிக் கொல்ல போறேன் பாரு” விரலைக் காட்ட,
“அவுக இறங்குவாக. ராசநடை நடக்கிற மாமன் இப்படி இருக்கியேண்டு விசனத்தில அவனுங்களை அடிச்சு துரத்தி இருக்காக. உன் மேல எம்புட்டு பிரியம் பாரு” தாடகை சொல்ல, “ம்க்கும்” கோதை நொடிக்க, சிங்கம் மீசையை முறுக்கிய படி சிரித்துக் கொண்டான்.
“ஆத்தா, இறங்கு” செம்பதுமமும், சாமியும் அழைக்க, “என் ராசா” என சாமியைக் கன்னம் வழித்துக் கொஞ்ச, விவரம் புரிந்தவர்கள் நமுட்டு சிரிப்பு சிரிக்க, “ஆத்தா, உன் ராசா அங்க நிக்கிறார், நான் இல்லை ” சாமி அவசரமாகச் சொன்னான்.
“அது சரி, அவன் சிங்கமுண்டா, என்னை யாருண்டு நினைச்சுகிட்டு இருக்கா?” இடுப்பில் கை வைத்து சிங்கம் கேட்க,
“சிங்கத்துக்கு சீயாண்டு . உன் தாடியும், மீசையும்” என முனங்கி விட்டு தாடகை உள்ளே செல்ல, “அடியேய், வரவர எவளுக்கும் பயமில்லாமல் போச்சு. இதுக்காகவாவது பழைய நடை நடக்குறேன் பாரு ” என்ற படியே பெண் சிங்கம் பின் சென்றது ஆண் சிங்கம் . ராக்காயியை பார்த்த ரதி தேவி சத்தமின்றி தன் ஜாகைக்கு சென்று விட்டாள்.
ராக்காயியை இறக்கி, கோதை, செம்பதுமம், சாமி ஆகியோர் விவரம் கேட்க, “இரண்டு நாளா இங்குட்டே சுத்துனானுங்க. அது தான் நான் சுத்த விட்டேன்” என்றவள், செம்பதுமத்தை , “ வந்துட்டியா வா ஆத்தா” எனக் கொஞ்சியவர், வேங்கடவன் வணக்கம் சொல்லவும், “கும்புடுறேன் எசமான்” என்றவள், “உங்க மாளிகை தயாரா இருக்கு” எனக் கைப்பிடியாக அழைத்துச் சென்றாள். பத்மைக்கு கண் காட்டி விட்டு அவன் செல்ல, பதுமத்துக்கு இப்போதும் பயம் தான். மனதுக்குள் மனம் கவர்ந்தவனோடு சேரவேண்டும் எனக் குல தெய்வத்தை வேண்டிக் கொண்டிருந்தாள்.
வேங்கடவனை தன் குடிலுக்கு அழைத்துச் சென்ற ராக்காயி, “உங்க பொருள்” எனப் பழங்காலத்து வாளையும், குறுங்கத்தி பாதுகை, தலைப்பாகை எனத் திருமலை வாசனுடையதைக் கொடுக்க, வாங்கி பார்த்தவன்,
“தங்கள் மகளை அழைத்து வாருங்கள் தாயே” என்றான்.
“ சாமத்துல பதுமம் தேடி வரும். ஒரு திங்கள் இரண்டு பெரும் சேர்ந்து யார் கண்ணுலையும் பட்டுடாதீங்க. சந்திக்கிற நேரம் மந்திர கட்டு போட்டுடலாம்.
“ஆளுங்க உங்களைத் தேடித் தான் “திரியிறாங்க” என்றும் சொல்ல,
“விஷயம் தெரிந்தால், அதற்கேற்ப முடிவெடுத்துக் கொள்வோம்” என்றான்.
கழுவன் குடி சீராகிக் கொண்டிருந்தது, “இரண்டு நாள் போயிட்டு வர்றதுக்குள்ள, இவ ஆடுற ஆட்டம் தாங்க முடியலை”பேச்சி புலம்ப,
“ஒத்தை மனுசியா நிண்டு, இத்தனை பயலுகளை ஆட்டி வச்சிருக்கு, அதுக்கு மெச்சிக்குவியா” கருத்தையா மருமகள் பக்கம் பேச,
“கூழன் கிட்டச் சொல்லியிருந்தாலும் போதும். இவை ராஜ்ஜியம் தனி தான்.சித்தினி நாயக்கரையும் கூட்டிகிட்டு போயிட்டா” சந்தனக்காப்பு வச்ச பெயரே, கழுவன் குடும்பத்தில் வேங்கடவன் பட்ட பெயரானது.
சிங்கராசு தேவன், சயனத்தில் சாய்ந்தபடி கையை தலைக்குப் பின்னால் கட்டி கண்ணை மூடி யோசித்திருக்க, வட்டில் தேங்காய் எண்ணெய்யை எடுத்து வந்த தாடகை அவனருகில் வந்து அமர்ந்து, “என்ன யோசனை” என்றபடியே அவன் சிகையைக் கோதினாள்.
சட்டென அவள் கை பிடித்து இழுத்தவன், “இந்த தாடிக்கும்,மீசைக்கும் என்னடி. அம்புட்டு கிழவனாவ தெரியுறேன்” அவள் முகத்தில் தேய்க்க,
“ம்ப்ச், கிழட்டுச் சிங்கம், இதைத் தான் யோசிச்சுகிட்டு இருந்தியா”அவன் முகத்தைத் தள்ளி விட்டு, சிகையை முரட்டுத் தனமாகப் பற்றிய தாடகை கேட்க,
“அடியேய், கிழட்டுச் சிங்கமுண்டா சொன்ன” என்றவன், அவள் மீது பாய்ந்து தன் வேகத்தை அவளிடம் காட்ட, தாடியும், மீசையும் தாடகையின் மேனியெங்கும் தண்டனையைக் கொடுத்தது.
அவளும் அடங்குபவளா என்ன, சிங்கத்தை ஆட்டி படைப்பவள் ஆயிற்றே, ராக்குவின் நினைப்பை வைத்தே, சிரிப்பு பொங்கியது. அதை ரசித்தவன், அந்த அதரத்துக்கும் பலமான தண்டனையை வழக்க, “ம்ம்”மனையாள் அவன் குடுமியைப் பிடித்திருந்தாள்.
“இதுக்கே, நாளைக்கு செறைக்கணும்டி” என்றவன், வன்மையாய் அவளைப் பாடாய்ப் படுத்தியே ஓய்ந்தான்.
புயலுக்குப் பின் அமைதி போல், சமத்தாகச் சிகையை அவளிடம் ஒப்படைக்க, துளி, துளியாய் எண்ணெய்யைக் கையில் தொட்டு அவன் சிகைக்குள் செலுத்தி, தலைக்கு அழுத்தம் கொடுத்து, மன அழுத்தத்தைப் போக்க முயன்றாள் தாடகை. அவனின் வேகத்தை வைத்தே, சிந்தனை ஓட்டத்தையும் கணித்து விடுவாள்.
“எத்தனை நாளுக்குடி இப்படி, என் கோட்டையிலே எவனவனோ வர்றான். என்னென்னமோ நடக்குது. நேரா காணாமல் எந்த முடிவுக்கும் வர முடியலை” புலம்ப, அவன் மன உளைச்சலை அறிந்தவளாக,
“மத்தவுகளையும் நம்பு. உன் தம்பியோ, தங்கமோ,முத்துவோ உனக்கு விரோதமா எதுவும் செய்ய மாட்டாங்க” எனத் தேற்றினாள்.
“அவனுங்களை சொல்லலைடி. ஆணை படுத்தா குதிரை மட்டம். இந்தா பத்து பேருக்கு உள்ள வர தகிரியம் வந்துடுச்சு பாரு”
“அதைச் சரி பண்ண என்ன என்ன செய்யலாமுண்டு யோசி ” மதியூக மந்திரியாகி தாடகை சில யோசனைகள் சொல்ல, சிங்கமும் யோசிக்க ஆரம்பித்தான்.
ராக்காயி போட்ட மந்திர கட்டு, மூன்றாம் சாமத்தில் செம்பதுமத்தை, பத்மாசினியாக வாசவர் நோக்கி அழைத்து வந்தது.வேங்கடவன் ராக்காயி வீட்டு திண்ணையில் கட்டாந்தரையில் படுத்திருக்க, பத்மைக்கு பார்க்கப் பொறுக்கவில்லை.
மெல்ல அவன் தலைமாட்டில் வந்தமர்ந்து அவன் கைக்குப் பதிலாக தன் மடியைக் கொடுக்க, சௌகரியமாக படுத்துக் கொண்டவன், “பத்மை” என அவள் இடுப்பைச் சுற்றி வளைக்க, “ம்ம்” என எச்சரித்தாள். அண்ணாந்து அவள் முகத்தைப் பார்க்க, அவளின் குனிந்த முகம் பேரழகாய் தெரிய, “பத்மை” தன்னை மறந்து அவள் கழுத்தை வளைத்து, முத்தமிட்டுக் கொண்டான்.
“வாசவரே,தெய்வ காரியம். சுத்தம் முக்கியம்” என்று சொல்ல, எழுந்து அமர்ந்தவர், “நீ தாங்கி இருக்கும் உடல் கன்னிப்பெண்ணுக்குரியது என்பதை மறந்தவனல்ல” என முகம் திருப்ப,
“ கோபமா” வாசவரை நெருங்கி அவர் தோளில் சாய, “தெய்வ காரியம் . சுத்தம் முக்கியம்.இடைவெளி விட்டு உட்கார் பத்மை” வேண்டுமென்றே கடுமை காட்டினார்.
“அப்படியே ஆகட்டும்” என அவன் முன் வந்து அமர்ந்தவள், நேருக்கு நேர் முகம் பார்க்கக் கோபமெல்லாம் பறந்தது “பிரமிப்பாக உள்ளது வாசவரே” என்று சொல்ல.
“ஆம் தேவி, உன் தவத்தின் பயன். பெருமாளைச் சேவித்து வந்து விடுவோமா?” எனக் கேட்க, “வாருங்கள்” என வாசி மலையை நோக்கிச் சென்றனர்.
மருத மரத்தடியில் நின்று சில மந்திரங்களைச் சொல்லி வழிபட்டனர். இருபத்தி ஒரு நாட்கள் வழிபட்டு, மண்ணில் இருப்பவரை வெளிக்கொணர உத்தேசித்தனர்.
அடுத்த நாள் சிங்கம் தலைமையில் வாள் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. தங்கத்தின் ஏற்பாட்டின் படி, பதுமம் பெண் பிள்ளைகளுக்கும் கம்பு சுற்றவும், வேல் வீசவும் பழக்கி விட்டுக் கொண்டிருக்க , சிங்கம் கர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆடல் பாடலை விட, இது போன்ற வீர விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். அதனாலேயே தனக்கு ஈடு கொடுக்கும் தாடகை மேல் அவ்வளவு பிரியம்.
“ஏன் அப்பு. கால காலத்தில் கல்யாணம் கட்டிக் கொடுக்க வேண்டிய பொட்ட பிள்ளைகளுக்கு , கம்பு சுத்த சொல்லி கொடுக்குறியே , இதெல்லாம் நல்லவா இருக்கு. செல்லம்மாவை பரிசம் போட வர சொல்லலாம்ல “ பேச்சி மெல்ல பேச்செடுத்தார்.
“என்ன ஆத்தா சொல்ற, வேல்கம்பு தான் பொட்ட பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு .மாயன் குடும்பத்துக்கும் சொல்லி விடத் தான் போறேன். மாட்டை அடக்குறவனுக்கு தான், என் மகள். எந்த மாற்றமும் இல்லை” என்று விட மகனிடம் அடுத்துப் பேச முடியாது என அறிந்து கொண்டவர், மருமகளிடம் சென்றார்.
“இது என்னடி காலக்கொடுமையா இருக்கு. நாயக்கருக்குத் தான் பதுவு கட்டி குடுக்குறதுண்டு புருசனும் பொண்டாட்டியும் முடிவோட இருக்கீங்களா.” வினவ,
“உங்க மகன் இரண்டு வருஷமா காளையை வளர்த்து வர்றாரு. அதை அடக்குற வீரன் யாருண்டு பார்க்க வேண்டாமா. என் மகளும் வீரத்தில் குறைஞ்சவ இல்லையே” தாடகை பெருமையாகச் சொல்ல,
“ பொண்ணை கட்டி குடுத்துருக்கோமே, அந்த குடும்பத்துக்கு என்ன பதில் சொல்ல” வேலாயி மகளையும் , நாத்தனார் குடும்பத்தையும் நினைத்துக் கேட்டார்.
“அவுக மகனும் கலந்துக்கட்டும் அக்கா” எனத் தாடகையே முன்னைக்கு மகளின் வீரத்தைப் பார்க்கவும் மனம் மாறி இருந்தாள் .
கோதை,“பதுமம், இல்லையிண்டா பவளம், சித்திரை, குமுதமுண்டு பொண்ணுங்களுக்கா பஞ்சம். மதினியை சமாளிச்சுக்கலாம். நீங்க விசனப் படாமல் இருங்க” என்றாள் .
வேலாயி வீரன் மகள் பூங்குயிலுக்கு பிரசவக்காலம் நெருங்க , தாயின் மனம் அடித்துக் கொண்டது. “ஏதாவது சாக்கு வச்சாவது மகளை இங்கு அழைத்துக் கொள்ள வேலாயி திட்டமிட்டார்.
ரங்கராசு தேவனும், தங்கமும் கழுவன் குடியில் பிடி பட்டவர்களைத் தனி இடத்துக்குக் கூட்டிச் சென்று விசாரித்தனர். ஒற்றர்கள் எல்லோரையும் ஒரே இடத்தில் பாசறையில் வைப்பதும் ஆபத்து. கூறிய மூளையை உபயோகித்துத் தப்பி விடுவார்கள் அதனாலேயே , தனித் தனி இடத்தில் வைத்து விசாரித்தனர்.
பல கட்ட சோதனைகளுக்கு உட்படுத்த பின்னும் , “சுருட்டு கருப்பன் எசமான், உங்க எசமானோட சமாதானமா போக ஆசை படுறாரு. நம்ம சேர்ந்து நிண்டமுண்டா, பாளையகாரவுகளே ஒதுங்கித் தான் போகணும். நம்பச் சேர்ந்து மறவர் பாளையமா நிண்டுக்கலாம் ” என்ற செய்தியையும் சொல்லி விட,
சிங்கமும் “வர சொல்லு பார்க்கலாம்” என்றிருந்தான்.
திடியன் மலையடிவாரத்தில் பெருமாளிரும் சோலை, சீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாளுக்கு, நீல வள்ளி, தாமினி தேவி பெண்கள் இருவரும் பூமாலையும், பாமாலையும் சூட்டிக் கொண்டிருக்க, குழந்தை அலமேலு சோலையெங்கும் மகிழ்ச்சியாய் ஓடித் திரிந்தது. சிவப்பி மூவருக்கும் உதவிக் கொண்டிருந்தாள். சிவனுக்கு உழவாரப்பணி செய்து கொண்டிருந்த வள்ளியையும் பெருமாள் தம் சேவைக்கு அழைத்துக் கொண்டார். கல் மேடையைச் சுற்றித் திரைச் சீலை கள் அமைத்து, திருப்பள்ளி எழுச்சி முதல் பள்ளியறை பூஜை வரை தங்கள் சிற்றறிவுக்கு எட்டிய வரை செய்தனர். ஆண்கள் வெளி வேலையாக அலைந்து கொண்டிருக்க, மற்றவர் கண் படாமல், தெய்வீகம் நிறைந்த சோலை அவர்களுக்கு வைகுந்தமாகவும் சில நேரம் பிருந்தாவனமாகவும் தோன்றியது.
தாமினி தான் அறிந்த திருமால் பெருமைகளையும், சந்திரகிரி ராஜ்ஜியத்தைப் பற்றியும் சொல்ல அவர்களது இழப்பு யாதென மற்ற இருவருக்கும் புரிந்தது. மறைந்து வாழும் போது சுல்தான் தளபதியிடம் இருந்து தன்னை மீட்க, வானவன் மனைவி சாந்தம்மா உயிர்த் தியாகம் செய்ததை எண்ணி கண்ணீர் விட, வள்ளி தேற்றினாள்.
“ஆத்தி, பொம்பளை சென்மத்துக்கு எங்கையுமே பாதுகாப்பு இல்லை” சிவப்பி புலம்ப,
“நம்ம பாதுகாப்பு நம்ம கையில் தான் இருக்கு. யாரொரு ஆம்பளையும் வந்து காப்பாத்தனும்னு எதுக்கு நினைக்கனும். வேல் கம்பும், வீச்சரிவாளும் நம்மளும் பழகிக்கனும்” என செம்பதுமம், தாடகையைப் பற்றி வள்ளி சொல்ல,
“என் கண் முன்னாடி தான் அது நடந்தது” தாமினியும் அன்றைய நிகழ்வைச் சொல்லி, செம்பதுமத்தை வெகுவாக பாராட்டினாள். சிக்க அண்ணையா மனம் கவர்ந்த வதுவை என்ற எண்ணம். நீலவள்ளிக்கு மருதமரத்தடியில் மயங்கிய பதுமம் நினைவில் வர, “பதுவு தெய்வ பிறப்பு தான்” என்றாள்.
தெய்வ பிறப்பு தான், தெய்வமே வரம் அருளிய, தெய்வத்துக்காக ஜென்ம நினைவுகளை வந்த பிறப்பு. அதன் பயனாகத் தானே, வாராக மூர்த்தியான பெருமாள் மண்ணிலிருந்து வெளிப்பட்டு அவர்கள் முன்னே நிற்கிறார்.
குழந்தை அலமேலு வள்ளியிடம் நன்றாக ஒட்டிக் கொண்டது. அண்ணன் மகன்களை வளர்ந்திருந்த வள்ளி, பெண் பிள்ளையை இன்னும் ஆசையாகவே சீராட்டினாள். அலமேலுவின் வயிற்றை நிறைத்து, தூங்க வைப்பது முதல் கடமையாக இருக்க, அங்கிருக்கும் மரத்தில் தொட்டில் கட்டி, தாலாட்டு பாடி தூங்க வைப்பாள். பெருமாளுக்கும் அதுவே தாலாட்டாக அமைந்தது.
அவர்கள் அரசகுடும்பம் என்பதை மறந்து வள்ளி இயல்பாகப் பழக ஆரம்பித்திருந்தாள். தாமினியும் வள்ளியோடு பேசுவதில் ஆர்வம் காட்டினாள். இரண்டு முறை அவளைத் தொட்டுத் தூக்கி விட்ட, கழுவரை பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமே.
அவன் மணமானவன் என்ற போது மனதில் சுணக்கமும், அந்த பெண் தலை பிரசவத்தில் இறந்ததையும் சொல்ல, ஐயோ பாவமே என அவளுக்கு இருந்தது.
“மறு கல்யாணம் செஞ்சு வைக்கலையா”
“உங்க அண்ணையா செஞ்சுக்கிட்டாரா”
“வதினா இறந்து கொஞ்ச நாள் தான் ஆயிருக்கு. பெருமாள் சிலைகளை மீட்ட பிறகுதான் மற்றது” தாமினி சொல்ல,
“அது சரி, ராஜாவுக்கு ராணி தேவை தான். காவல்காரனுக்கு எதுக்கு” எனவும்,
“ஏன் அவர் மனிதர் இல்லையா, அவருக்கென குடும்பம் தேவையில்லையா” தாமினி வக்காலத்து வாங்க,
“தங்கத்துக்கு அப்பனும், ஆத்தாளும் சின்ன வயசுலயே போயிட்டாக . பொண்டாட்டியும் வருஷம் நிக்கலை. அதுனால தன் ராசி மேல பயம், யாரையும் தன்னை நெருங்க விடுதில்லை. நானும் அதுவாட்டம் துணையை இழந்தவ, அது ரணம் எனக்கு புரியுமுண்டு என்கிட்ட நல்லா பேசி பழகும்” எனவும்,
“அதுக்காக அப்படியே விட்டுடுவீங்களா. அவர் அப்பா அம்மா இருந்தா இப்படி விடுவாங்களா”
“அப்படிச் சொல்லி புடாதிங்க. பெரியப்பார் குடும்பம் மறுகல்யாணம் கடிக்கச் சொல்லி, சொல்லிக்கே தான் இருக்காங்க. இது தான் பிடி கொடுக்கலை. அதையும் மடக்க ஒருத்தி வராமலா போயிடுவா”
“நல்லா மடங்குவாரு உங்க தம்பி. அம்புட்டும் நொரண்டு பிடிச்சதுங்க” சிவப்பி இடை சொருக,
“நீ ரொம்ப கண்டவ” வள்ளி திட்ட
“கண்டுக்கிட்டதுனால தான் சொல்றேன். அவுக தம்பி ஒரு ஆள் இருக்காரே” எனக் கழுவன் முத்து ராசுவை பற்றிச் சொல்ல,
“ஒரு முடிவோட தாண்டி இருக்க.” என்றாள் வள்ளி.
“ம்ம்க்கும், கழுவன் குடியில் வாக்கப்படனுமுண்டு தொண்ணாந்துகிட்டு இருக்கேன். நடக்குற கதையைப் பேசு” சிவப்பி சொல்ல
“மனசில் ஆசையிருந்தா வாய்ப்பு கிடைக்கும் போது சொல்லிபுடனும்டி. அது நடக்குது, நடக்காதது அப்புறம்” வள்ளி சொல்ல, கன்னிப் பெண்கள் இருவர் மனதிலும் கழுவன் குடும்பத்து வாரிசுகள் வந்து சென்றனர்.
துரை ராசுவும், வானவனும் வல்லபரை அழைத்துக் கொண்டு சோலைக்குள் வந்தனர். வல்லபர் , பெருமாள் சிலையைப் பார்க்கவும் இமைக்க மறந்து உணர்வு பெருக்கோடு அதன் முன்னே சென்று நின்று விட்டார்.
தங்கைகள், அவரவர் அண்ணன்களிடம் விவரம் கேட்க, வேங்கடவன் சந்திக்கச் சென்றது இவரைத் தான் என்றனர்.
முன்னதாக கடா விருந்து பரிமாறிக்கொண்டிருந்த இடத்துக்கு வேங்கடவன் வரவும், பதுவுக்குள் இருந்த பத்மாசினி சிரித்துக் கொள்ள, செம்பதுமத்துக்கு பதட்டம் தொற்றியது.
செம்பவளம், “பதுவு , சித்தினி நாயக்கர் எதுக்குடி இங்க வந்திருக்காரு, ரதி தேவி பெரியப்பாருகிட்ட வத்தி வைக்க போறா” இரு பாவைகளின் பார்வையும் வேங்கடவனை பின் தொடர்ந்தது.
“கல்யாணம் கட்டினா, இப்படி ஆம்பளையை கட்டணும். செவந்த மேனி என்ன, மிடுக்கு என்ன, நிமிர்வு என்ன” பவளம், வெளிப்படையாகவே மூத்தவளிடம் தன் மனதின் ஆசையை வெளிப்படுத்த,
“யாராவது கேட்க போறாங்க. வாயை மூடுடி” பதுமம் கடுகடுக்க, ‘உனக்கு ஏன் பொறாமை” அவள் நொடித்தாள்.
வேங்கடவன் சிங்கத்தைப் பேட்டி காணும் முன்பே, “தேவரே, இவரோட தான் உங்கள் மகள் சென்றாள்” ரதி தேவி கோர்த்து விட்டிருந்தாள்.
“வணக்கம் கழுவரே. நான் வேங்கடவன். காஞ்சி தேசத்திலிருந்து வந்துள்ளேன்” தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, பதில் வணக்கம் வைத்த சிங்கம், ‘கழுவரே’ என்ற அழைப்பிலேயே எதிர் நிற்பவனை எடை போட ஆரம்பித்தான்.
வேங்கடவன் சிரித்த முகமாக, “ தங்கம் மகள் , செம்பதுமத்தை மணக்க விரும்புகிறேன்” எனவும், சிங்கம் புருவத்தை உயர்த்த, ரதிதேவி,
“நான் சொன்னது உண்மைதான். அவரையே விசாரியுங்கள், தேவரே ” வலியுறுத்த, பெண்களின் கவனம் இவர்கள் மேல் பதிந்தது.
“அக்கா, ஆட்டக்காரி சொல்லை மெய்ப்பிக்க, அவர் வந்து நிக்கிறார் பாரு” முத்து நாச்சி, தாடகையை எச்சரிக்கை செய்தாள். சற்று முன்பு வரை, தங்கள் வீட்டுப் பெண்ணை, தவறாகச் சித்தரிக்கிறாள் எனப் பேச்சி முதல் வரை பேசியிருந்தனர். அதன் காரணமாகவே தன்னை மெய்ப்பித்து, சிங்கத்திடம் நற்பெயர் பெற்று விட வேண்டும் என ரதிதேவி முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
“ அவர்கள் சொல்வது உண்மை தான் கழுவரே. கள்ளழகர் வைபவம் முதலே உங்கள் மகளை கவனிச்சிட்டு வர்றேன். உங்கள் குடிக்கு வியாபாரத்துக்கு வந்த போதும் பார்த்திருக்கிறேன்.” எனவும்,
“ நம்ம குடியில் வியாபாரத்துக்கு வந்தார். உத்தப்பர் சொந்தம்” என்றார் கருத்தையா.
“அவள் வீரமும், விவேகமும் எனக்குப் பிடித்திருந்தது.”எனவும், சிங்கம் யோசனையாகப் பார்க்க,
“நாகமலை அடிவாரத்தில் நம்ம பக்கம் நிண்டு சுருட்டு கருப்பனோட சண்டை போட்டார்” சாமி கருப்பனும் சொல்ல, சிங்கம் பெண்கள் முகத்தையும் நோட்டமிட்டான். கழுவன் குடும்பமே வேங்கடவனை அறிந்தவர்களாக இருந்தனர்.
வேங்கடவன் “மாதங்கள் கடந்தும் பத்மை என் நினைவிலிருந்ததால், சற்று முன் தங்கள் மகளிடம் தான், என்னை மணக்கக் கேட்டேன். அவள் மூர்ச்சையாகி விட்டாள். பிறகு தான் என் பிசகு புரிந்தது. பெற்றவரிடம் கேட்பது தானே முறை. அது தான் நேரடியாக கேட்கிறேன்” எனவும் சிங்கம் மகளின் முகத்தையும் ஆராய்ந்தார், அவள் முகத்தில் பதட்டமும் , ஆசையும் மாற்றி மாற்றி இருந்தது.
“கழுவன் மகண்டா எல்லாருக்கும் ஆசை வரத் தான் செய்யும். முன்ன பின்னத் தெரியாத ஆளுக்கு, பொசுக்குண்டு பொண்ணை கட்டி கொடுக்க முடியாது." சிங்கம் கர்வமாகவே சொல்ல,
“இவுகளுக்காக தான், சின்ன கழுவன் குடிக்குப் பக்கத்தில் காடழிச்சு நாடு ஆக்குறாக” என்றான் தங்கராசு.
“என்னைப் பரிட்சித்து பார்த்து முழுதும் அறிந்து கொண்டே பெண்ணை கொடுங்கள். எனக்கு ஆட்சேபனை இல்லை” வேங்கடவன் சொல்ல,
“ வேற்று ஆளுக கிட்டச் சம்பந்தம் பண்ணினது இல்லையே" என்றான் சிங்கம்.
“உங்கள் மகளுக்கும் விருப்பம் இருந்தால்” வேங்கடவன் இடை வெட்ட,
சிங்கம் முறைத்ததில், “எதுவாக இருந்தாலும், வழியில் வைத்துக் கேட்பது முறை இல்லை” தாடகை இடை புகுந்தாள்.
“கோவிலில் வைத்துத் தானே கேட்டேன்” வேங்கடவன் விடாப்பிடியாக நிற்க,
“ நான் வளர்கிற காளையை அடக்குறவனுக்கு தான் என் மகளைக் கொடுக்கிறதா இருக்கேன்” சிங்கம் அடுத்த அஸ்திரத்தைக் கையில் எடுக்க,
“அப்டிண்டா சித்தினி நாயகருக்குச் சுலுவு தான்” பொடியன், பெரிய மனிதனாகக் கருத்துச் சொல்ல, சாமி அவன் வாயைப் பொத்தினான்.
“மாட்டை அடக்கவும் தயார்” என்றான் வேங்கடவன்.
“ எங்க குடியில் என் பார்வையில் ஒருமாசம் தங்குங்க. அப்புறம் தான் மாட்டு கொம்புல சல்லியை கட்டுறதா இல்லையாண்டு முடிவு எடுப்போம்” என்று விட வேங்கடவனும் மகிழ்ச்சியாக ஒத்துக் கொண்டான்.
மனதில், ‘பத்மை, இப்போது என்ன சொல்கிறாய்’ சவால் விட, ‘வாசி மலை பெருமாள் விக்கிரகம் பிரதிஷ்டை செய்த பின் கேட்டு இருக்கலாம். அவசரப் பட்டு விடீர்கள்’ பத்மாசினி குறை பட,
‘தந்தை சம்மதிக்க வேண்டும் என்றது யார்’ கேள்வி எழுப்ப, பெருமூச்சு மட்டுமே வந்தது. ஜென்மங்கள் கடந்தும் பிரச்சனைகள் ஓய்வதில்லை.
சிங்கத்துக்கு , தங்கராசு இவர்களைப் பற்றி தகவல்களைச் சொல்லியிருந்த போதும், சாந்தன் முத்தரையனே தேடும் இவர்கள் யார், பூர்வீகம் என்ன, தான் இன்றிருக்கும் நிலையில் அருகில் வைத்து தகவலைத் திரட்ட வேண்டும் என சிம்மராசு தேவன் முடிவெடுத்தான்.
திரும்பிச் செல்லும் போது , சந்தனம் சித்தினி நாயக்கருடன் ஒப்பந்தம் போட்டு சித்தினியில் வேங்கடவனுடனே சவாரி செய்ய, பதுமம், செம்பவளம் சித்திரை எனப் பருவ பெண்களின் பார்வையும் வேங்கடவன் மீது தான் இருந்தது.
“ பெரியப்பாரு கிட்டையே நேரா பொண்ணு கேட்டுட்டாரே. தகிரியம் ஜாஸ்தி தான்” செம்பவளம், பதுமத்தின் காதை கடிக்க,
“எனக்கே பயந்து வருது. நீ ஒருத்தி பேசாமல் வாடி” பதின்ம வயதினளாக பதுமம் கிசுகிசுக்க, குதிரையில் வண்டிக்கு முன்னும், பின்னும் பக்கவாட்டிலுமாக வந்த வேங்கடவன், அவனுள் இருக்கும் திருமலை வாசனுக்கு வேடிக்கையாகவும், புது வித உணர்வாகவும் இருந்தது.
சிங்கம் தாடகையோடு பின்னால் ஏறிக்கொள்ள, காவல் ஆட்கள் வண்டியைச் செலுத்தினர். சித்திரை செம்மீனா ,சாமந்தி எனச் சிறுபிள்ளைகள் அவர்கள் வண்டியில் பயணித்தனர்.
மதுரைக்குக் கிழக்கே ஆணை மலையடிவாரத்தில் நொண்டி கருப்பன் வகையறா வம்ச பெயருக்குப் பொருத்தமாக, சிங்கத்தால் முடமாக்கப்பட்ட சுருட்டு கருப்பன் ஆவேசமாக அமர்ந்திருந்தான். சிங்கத்தின் ஆட்கள் அவனை ஒரு இடத்தில் நிற்க விடாமல் துரத்திக் கொண்டு இருக்க, உயிருக்குப் பயந்து சகாக்களோடு ஓடிக் கொண்டிருந்தான். இந்த முறை அவன் கைவைத்தது சிங்கத்தின் மீது ஆயிற்றே.
“இன்னும் எத்தனை நாளைக்கு அப்பு, ஓடுறது. சாட்சிக்காரன் காலில் விழுறதுக்கு பதிலா சண்டைக்காரன் காலில் விழுந்துடலாம்பா.” கூட்டாளிகளில் ஒருவன் சொல்ல, அவனைக் கட்டையால் அடித்தவன்,
“எமன்கிட்ட போறதும், அவன் கிட்டப் போறதும் ஒன்னு தாண்டா. பெரிசா ரோசனை சொல்ல வந்துட்ட.”
“அவன் சொன்னது சரி தான். அந்த எமன் காலுலையே போய் விழு” அதிகாரமாய் ஒரு குரல் ஒலிக்க ,’ இவரு எங்க இங்க வந்தார்?’ எனச் சாந்தன் முத்தரையன் குரல் கேட்டு அவசரமாய் ஒற்றைக் காலில் எழுந்து நின்றான் சுருட்டு கருப்பன்.
“கும்புடுறேங்க எசமான். அதுக்குண்டு உசுரை விட சொல்லுங்க, விடுறேன் ” தலை குனிந்த படி சொல்ல,
“அதுவும் தான், எனக்காக உன் உசுரை கொடு.” என்றவன், எழுமலை பாளையத்தில் மன்னருக்குத் தெரியாமல் ஏதோ நடப்பதாகவும், அதற்கான ருசுவை கொண்டு வந்து விட்டால் போதும். காவல் குடும்பத்தின் மீது பலி சுமத்தி, அந்த பொறுப்பை நொண்டி கருப்பன் வகையறாவுக்கு மாற்றித் தருவதாக வாக்கு தந்தான்.
“அது சாத்தியங்களா” சந்தேகமாக வினவினான்.
“சாத்தியந்தான். உன்னை ஒரு குடும்பத்தைத் தேடச் சொன்னேனே, அவுங்க சாதாரண குடும்பம் இல்லை. ராயர் வம்சம். செஞ்சி, வேலூர், தஞ்சை இன்னும் அவுகளுக்கு உதவுற ராஜ்ஜியம் நிறைய இருக்கு. அம்புட்டையும் விட்டுட்டு எழுமலை பாளையத்துக்குள்ள ஏன் திரியனும். இதுக்கான காரணம், ஆளுங்களை கையும், களவுமா புடிச்சா, மூணு பாளையத்துக் காவலும் உன் வகையறா கையில தான்.” அரையன் சொல்லவும்,அவனுக்கு கண்ணில் ஆசை எட்டிப் பார்த்தது.
“உனக்கு வேண்டிய காசு, ஆள் பலம் நான் தரேன். சிங்கராசு தேவன் காலில் போய் விழு. உறவாடிப் பகை முடிக்கிறோம்.” எனத் திட்டம் வகுக்க, சிங்கத்தின் ஆட்களிடம் அகப்பட மறைவிடத்திலிருந்து வெளியே வந்தான் சுருட்டு கருப்பன்.
சித்தபண்டூரிலிருந்து கழுவன் குடிக்குள் வரும் போதே ஏதோ சரியில்லை என யூகித்து சிம்மராசு தேவன், “பொம்பளைங்க வண்டியை விட்டு இறங்க வேண்டாம். தங்கம், முத்து, சாமி என்னண்டு பாருங்க” எனக் கட்டளையிட வேங்கடவனும் அவர்களோடு சேர்ந்து குதிரையிலிருந்து இறங்கி நாலாபுறமும் தேடினர்.
சித்தபண்டூர் கருப்பன் சன்னிதியில் கழுவன் குடும்பம் தங்கள் பெண் மகள் செம்பதுமத்துக்காக காத்திருக்க, தலை தெறிக்க ஓடிவந்து, கோவிலில் மூச்சு வாங்க நின்றாள். சிங்கம் கேட்கும் முன், “பெருமாளுக்கு முன்ன பாட்டு பாடுனவ, அதுக்குள்ள எங்குட்டு போயிட்டவ, உன்னை காணலையிண்டு ஊரே கூப்பாடு போட்டு தேடிக்கிட்டு கிடக்கு” பேச்சியம்மாள் முந்திக் கொள்ள,
“அது தான் வந்திடுச்சில்ல. நேரம் கடக்கும் முன்ன கருப்பனுக்கும் நேத்தி கடனை நிறை வேத்துங்க” என்றார் கருத்தையா.
“தேவரே, உங்க பொண்ணு வேற்று ஆணோடு போனதை, நான் என் கண்ணால் பார்த்தேன். உங்க சின்ன பையனும் அதே தான் சொன்னான். என்னனு விசாரிங்க” ரதி தேவி, சிங்கத்திடம் மாட்டி விடும் முனைப்போடு சொல்ல, சிங்கம் பார்வையாலேயே மகளை விசாரிக்க, தாடகைக்குக் கோபம் பலியாக வந்தது. அவள் எதுவும் பேசும் முன், தங்கை முத்து நாச்சி அக்காவின் கையில் எதுவும் பேசாதே என அழுத்தம் கொடுத்தாள்.
“நீயே ஒண்ட வந்தவ. எங்க பிள்ளையைப் பத்தி எங்களுக்குத் தெரியும். நீ பேசாத இரு” என்றாள் கோதை
“அப்பாரு, இவுக யாரை சொல்றாங்க, யார் பின்னாடி போனேன்னு எனக்குத் தெரியலை” என்றாள்.
“ஆமாம் அப்பு. மரத்தடியில் மயங்கி உட்கார்ந்து இருந்துச்சு. நான் எழுப்பிச் சொல்லவும் இங்குட்டு ஓடியாந்துச்சி” மெய்யில் ஒரு பாதியை மட்டும் தங்கராசு சொல்ல,
மகள் கண்ணில் தெரிந்த நேர்மையில் , “சரித்தா. மனசில் கருப்பை வேண்டிக் கிட்டு, அருவாளை அண்ணன் கிட்டத் தொட்டுக் கொடு” எனப் பணித்தான்.
““என்ன நேர்த்திக்கடன்” பதுமம் புரியாமல் கேட்க
“உனக்காக நேந்துகிட்டது தாண்டி” தாடகை நாச்சி விலக்கிச் சொல்ல,
“அப்பாருகிட்ட வர்மம் படிச்சது தான் நினைப்பு இருக்கு. அப்புறம் என்ன நடந்தது” வெள்ளந்தியாக பதுமம் கேட்டாள்.
“ஆத்தி, நான் சொல்லலை. என் மகளுக்கு அருள் அடிச்சு கிடந்திருக்கு.”கோதை புலம்ப,
“ நான் அன்னைக்கே சொன்னேனே. இந்த மனுசன் தான். வர்மத்தை வச்சு என்கிட்ட வித்தை காட்டுற மாதிரி, என் மகள் கிட்டையும் காட்டியிருக்காரு” தாடகை குற்றப்பத்திரிக்கை வாசித்தாள்.
“இருக்கும், இருக்கும். ஏன் மாமா, உன் வித்தையை எங்கிட்ட காட்டினது பத்தாதா. பத்த பிள்ளை கிட்டுமா காட்டுவ” கோதை கேட்கவும் இருவரையும் முறைத்தான். “எங்களுக்கு எப்ப என்ன செய்யனுமுண்டு தெரியும். வாயை மூடுங்க” என்றவனது சிடுசிடுப்பில், ரதி தேவி பின்னடைய, தாடகை சுளிப்போடு மகளை மெல்ல விசாரித்தாள்.
அதற்கும் குறை சொன்ன சிங்கம், “ஆத்தா, அருவாளைத் தொட்டுக் கொடு” என்றான்.
பழமையான அருவாளைத் தொடும் போதே, பதுமத்துக்குள் பத்மாசினி விழித்தாள்.
“இந்த முறை தடையாக வரும், எதையும் வெட்டி வீழ்த்தி, எடுத்த காரியம் ஜெயமாக அருள் புரிந்து துணை நிற்க வேண்டும்” என வேண்டிக் கொண்டாள்.
பூசாரி, தீபம் ஏற்றி சாம்பிராணி போட்டு, அந்த இடத்தை தெய்வீகமான மாற்றி இருந்தார். உருமி மேளம் கொட்டி, உடுக்கு அடிக்கப்பட்டது.
அவ்வளவு நேரமும் அமைதியாக நின்ற தங்கராசு தேவன், உடலை முறுக்கிக் கொண்டு ஆக்ரோஷமாகக் கத்த,
கருப்பன் அருகில் சொருகப் பட்டிருந்த அருவாளைப் பதுமம் சுலபமாக எடுத்து , தங்கராசு கையில் கொடுத்தாள். கூடியிருந்தவருக்கு ஆச்சரியம்.
இதுவரை அந்த அருவாளை எடுத்தவர் யாருமில்லை. கடாவெட்டுக்காக பக்கவாட்டில் மற்றொரு அருவாள் வைத்திருந்தனர், பதுவு அதை எடுத்துக் கொடுப்பாள் என யூகித்திருக்க, பத்மாசினியாய் முற்காலத்தில் அவர்கள் அடித்து வைத்த அருவாளையே தூக்கிக் கொடுத்தாள்.
அதைக் கையில் வாங்கிய நொடி, தங்கராசு வானத்தையும் பூமியையும் அளப்பது போல் துள்ளிக் குதித்துச் சாமியாடினான். கோவிலைச் சுற்றி வந்தவன், பூசாரி எலுமிச்சையைக் குறுக்க வெட்டி குங்குமம் தடவி வைத்திருந்ததைத் திசைக்கு ஒன்றாகப் போட, கூறியிருந்தோம் மனதில் நிம்மதி பிறந்தது.
கழுவன் குடும்பம் உணர்வு குவியலாய் பக்தியோடு வணங்கி நின்றது.
“அய்யா கருப்பா, எங்க வம்சத்தைக் காத்துக் கொடு. காத்து, கறுப்பு, பகை எதுவும் அண்டாமல் உன் மக்களைக் காப்பது உன் பொறுப்பு” கருத்தையாவும், வீரனும் மாற்றி மாற்றி வாக்கு கேட்க,
“என் எல்லையை மிதிச்சவுக, கெட்டதா சரித்திரம் இல்லடா. நான் நிண்டு காத்துக் கொடுப்பேன்” என வாக்கு தர, குழுவின் குடும்பமே திருநீறு வாங்கிக் கொண்டனர்.
பூசாரி, தங்கராசுவுக்கும் திருநீறு போட அருள் கட்டுக்குள் வந்தது. அடுத்து ஆட்டுக் கடாயைக் கொண்டு மாலை போட்டு மஞ்சள் நீர் ஊற்றி, சம்மதம் கேட்க ,ஆடு தலையைச் சிலுப்பவும் சம்மதம் வந்துவிட்டதாகப் பலி பீடத்துக்கு அருகில் கொண்டு போய் நிறுத்திப் பலி கொடுத்தனர்.
முன்னதாக, செம்பதுமம் தொட்டுக் கொடுத்து பின் தான் கிடாயை வெட்ட வேண்டும் என சிங்கராசு தேவன் பிடிவாதம் பிடிக்க, தங்கராசு தேவன் தான் அழைத்து வருவதாகச் சந்தனத்தின் பின் வந்தான்.
காட்டு மாளிகையில் பூர்வஜென்ம வாசனையோடு அவர்கள் இருக்க , முற்பிறப்பிலும் தமையானார் நின்று காத்தவன் நீ என்ற வார்த்தைகளே அவனுக்கு போதுமானதாக இருந்தது.
சந்தனகருப்பை பேசியே திசை திருப்பி அனுப்பி விட்டு, தான் அவர்களைப் பேட்டி கண்டான்.
வல்லபரும் உடன் நின்று நினைவூட்ட, “பூர்வ ஜென்ம ஞாபகம் வர்ற அந்த வரம் வாங்கிட்டு வந்தவன் இல்லை. தமையன்னு சொல்லிட்டிகல்ல ஒத்தை வார்த்தை போதும். உங்களுக்குத் தேவையான நேரத்தில் உங்க சேவைக்கு நிற்பேன் “ என்றவன், “தேவைப்படும் சமயம் தவிர மத்த நேரம் குழுவின் குடும்பத்து பெண்மகளா, செம்பதுமமாகவே இருக்கனும்” வேண்டுகோள் விடுக்க ,திருமலை வாசன் ஆட்சேபிக்க, பத்மாசினி நகை முகத்தோடு,
“சண்டனை அடக்கியவருக்கு , மருதன் பெரிய விசயமில்லை வாசவரே. வேங்கடவராக வந்து, செம்பதுமம் நேசத்தையும், குழுவின் குடும்பத்தவர் மனதையும் வெல்லுங்கள். பத்மாசினி செய்த தவற்றைப் பதுமம் செய்ய மாட்டாள். கழுவன் குடும்ப சம்மதத்துடன் தான் தங்கள் கரம் பிடிப்பேன்” தீர்க்கமாகச் சொன்னவள்,
அங்கிருந்த மரத்தின் அடியில் சென்று அமர்ந்து கண்ணை மூடினாள்.
வேங்கடவன் வடிவிலிருந்த திருமலை வாசகனுக்குப் புரிந்து விட்டது. ஆனாலும் அவளை தன்னகத்தே வைத்துக் கொள்ளும் காலம் இன்னும் நெருங்கவில்லை என அமைதியாக வேடிக்கை பார்த்தான்.
செம்பதுமம் மரத்தடியில் மூர்ச்சை ஆகி இருந்தாள். “பத்மை, பதுவு” இருவருமாக எழுப்பினர். அவளைக் கண்ணை மூடி திறக்கும் போது உடல் மொழி, பாவம் யாவும் செம்பதுமமாக மாறி இருந்தது.
விழிப்பு நிலைக்கு வந்து சுற்றும் பார்த்தவள், வேங்கடவன் இடமிருந்து விலகி தங்கராசு விடம் சென்று, “அண்ணேன். எங்க வந்திருக்கோம்.” வினவியவள், வேங்கடவனைப் பார்த்து அதிர்ச்சியுற்றாள்.
“அண்ணேன், அவர்” பேச்சு தடுமாற,
“இதில் அச்சப்பட என்ன இருக்கிறது பத்மை. உன் தமையனிடமும் இப்போது தான் உன்னை மணக்கக் கேட்டேன் ” என்றான்.
தங்கராசு உணர்ச்சிகளைக் காட்டாமல் மௌனமாகப் பார்த்திருக்க, பதட்டமான பதுமம், “அண்ணேன், அவர் பேச்சை தீவிரமா எடுத்துக்க வேண்டாம். நாம எங்கே இருக்கோம். புது இடமா தெரியுதே”
“சித்தபண்டூர் வந்தோம் பதுவு. கருப்பனுக்குக் கிடா வெட்டும் நேரம் அப்பு உன்னை காணோம்னு தேடினார்” எனவும், அவள் முகத்தில் கலவரம்,
“அப்பாரு தேடினாரா. போகலாம் அண்ணேன்” அவசரமாக கிளம்ப,
“பத்மை எனக்குப் பதில் சொல்லி விட்டு போ” வாசன், விடாப்பிடியாகக் கேட்க,
“எங்கப்பாரு கிட்ட வந்து கேளுங்க* அவசரமாகச் சொல்லை உதிர்த்து விட்டு, வல்லபரையும் கணக்கில் எடுக்காமல் கருப்பன் கோவில் நோக்கி ஓடினாள். தங்கராசு தேவனும் தங்கை பின் சென்றான்.
வல்லபர்,”அரசே நீங்கள் மீண்டும் குழல் வாசிக்க கற்றுக் கொள்ள ஆயத்தமாக உங்கள்” பரிகாசம் செய்ய,
“ மாயவனாக இருந்தால் குழல் ஊதி மாடு மேய்க்கலாம். நான் வேங்கடவன், குழுவின் மகளை கரம் பிடிக்கக் காளையை அடக்கத் தான் வேண்டும் “ எனவும்,
“காளையை அடக்குவதையும் விட ஆபத்தானது சிங்கத்தை எதிர் கொள்வது” வல்லபர் பூடகமாகச் சொல்ல,
“கழுவன் மகள் வேண்டும் எனில் களத்தில் இறங்கத் தானே வேண்டும்” என்றான்.
“,அடுத்த சிலை பிரதிஷ்டை. வாசி மலை தான். தாங்கள் பெரிய கழுவன் குடிக்குச் செல்வது சால சிறந்தது”
“நல்லது. திடியன் சோலையில் ஸ்ரீநிவாசரை சேவித்து விட்டு வாருங்கள். அடுத்த ஏகாதசி திதியில் வாசி மலையில் சந்திப்போம்” என வல்லபரை அனுப்பி விட்டான் திருமலை வாசன்.
தங்கராசு தேவன், கிடா விருந்துக்கு வேங்கடவனுக்கு அழைப்பு விட்டுச் சென்றிருக்க, கோவிலில் வைத்தே மகளைப் பெண் கேட்டு விடலாம் என்ற முடிவோடு, கழுவன் சிங்கராசு தேவனை நோக்கிச் சென்றான் வேங்கடராயன்.
யாதவராயர் காலம்…
சித்தபண்டூரில் ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோவில் அமைந்த பின்பு, மதுராபுரி வணிகர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் அங்கு வந்து வணங்கிச் சென்றனர். மதுராபுரி வணிகர்கள் பத்மாசினி, திருமலை வாசனிடம் தங்களிடமிருந்த தெய்வ சிலைகளையும், ஆபரணங்களையும் ஒப்படைத்தனர். முதலில் வந்த வணிகர், சொன்னது போல் நான்கு சிலைகள் மட்டுமில்லை, 9 சிலைகளுமே மதுராபுரியிலிருந்து வந்திருந்தது. கருடன் வழிகாட்டுதல் படி தெற்கில் உள்ள பாளையங்களில் பத்மாசினி, திருமலை வாசனுமாகச் சென்று பிரதிஷ்டை செய்து வந்தனர். தற்போது அவர்களிடம் மூன்று ஜோடி சிலைகள் மட்டுமே மிஞ்சி இருந்தது. எழுமலை , திடியன் மலை, புத்தூர் மலை ஆகிய இடங்களைத் தேர்ந்தெடுத்து விட்டனர்.
சித்தபண்டூரில் முதல் சிலையைப் பிரதிஷ்டை செய்யவும் மரகதபுரியிலிருந்த முதல் கட்டு உடைந்து, வீரசிம்மரும் விடுதலை அடைந்தார். நாற்பத்தெட்டு நாட்கள், ஒரு மண்டலம் பத்மாசினி சித்தபண்டூரில் அமர்ந்து பூஜை , நாமாவளி அர்ச்சனைகள், ஆச்சாரியார் உபதேசம் செய்த மந்திரங்களையும் சொல்ல, சொல்ல அந்த இடத்தின் தெய்வீகத் தன்மை அதிகரித்தது.
சண்டன் நாற்பத்தெட்டு நாள் பூஜையைக் கெடுப்பதற்காக வித,விதமாக யட்சிணிகளையும், ஏவல் பூதங்களையும் அனுப்பிக் கொண்டிருந்தான்.
இரவு பகல் பாராமல், ,திருமலை வாசன், வல்லபர், கழுவன் குடும்பம், வணிகர்கள் எனக் காவல் காத்து, பதமாஷினி மண்டல பூஜையை முடிக்க உறுதுணையாக இருந்தனர்.
மரகதபுரி முற்றிலுமாக சண்டன் கட்டுப்பாட்டிலிருந்து மீண்டது. வீரசிம்மருக்கு தான் செய்த பிழை புரிந்தது. நாட்டில் பெருமாள் விக்ரகங்கள் இடம் பெயர்ந்தது மட்டுமின்றி, தான் வணங்கி வந்த கோவில்களும் பின்னப்பட்டு இருப்பதைக் கண்டு ரத்த கண்ணீர் விட்டார்.
பகைமை மறந்து, மகளைச் சந்திக்க சந்திரகிரி ராஜ்ஜியம் செல்ல, வீர நரசிங்கர் அவரை அன்புடன் வரவேற்று, அவரின் பேரப் பிள்ளைகளை அறிமுகம் செய்து வைக்க, அவர்களை அள்ளி அரவணைத்துக் கொஞ்சினார்.
மகளையும் , மருமகனையும் விசாரிக்க, திருமலை வாசன், பதமாஷினி செய்த முயற்சிகளையும், தற்போது மதுராபுரிக்கு மேற்கே தங்கி ஏழுமலையான் ஆணைப்படி, தெய்வ கைங்கரியம் செய்வதையும் சொன்னார்.
“நூறு ஆண்டுகளுக்கு முன், திருமலை அடிவாரத்தில் செய்யப்பட்ட ஒன்பது பெருமாள் சிலைகளை ,வணிகர்கள் உங்கள் தேசத்துக்குக் கொண்டு வந்தார்கள். உங்கள் வைணவ துவேஷத்தைப் பயன் படுத்தி, சண்டன் அதை வெளியேற்றி விட்டான். அந்த சிலைகள் இரண்டு தேசத்துக்கும் பொதுவானவை அதனால் வாசனும், பத்மாசினியும் தகுந்த இடத்தில் அதை பிரதிஷ்டை செய்துவிட்டு வருவதாகச் செய்தி அனுப்பினார்கள். நானும் நமது கருவூலத்தில் ஒரு பகுதியை அனுப்பி திருப்பணியை முடிக்கச் சொன்னேன். ஆயிற்று, ஆறு சிலைகளைப் பிரதிஷ்டை செய்து விட்டனர். இன்னும் மூன்று தான், மிஞ்சியுள்ளது அதை முடித்துத் திரும்பி வந்து விடுவார்கள்” நரசிங்கர் சொல்ல,
“வேற்று மத துவேசத்தால் எவ்வளவு பாக்கியங்களை இழந்துள்ளேன், பெற்ற மகள் முதற்கொண்டு மரகதபுரி மக்களையும் துன்ப படுத்தி இருக்கிறேன். பாதக செயலுக்குத் தணிகை வேலவனும் என்னை மன்னிக்க மாட்டான்” என வருந்தினார்.
“செய்த தவற்றை உணர்ந்து விட்டால், அதை விடப் பெரிய காரியம் இல்லை. அரியும், சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை நிலை நிறுத்த இந்த லீலைகள் நிகழ்ந்திருக்கும்.” என்ற நரசிம்மர், சைவரான, வீர சிம்மரை திருவேங்கட மலை அழைத்துச் சென்று, வேங்கடவனைச் சேவிக்க வைத்தார்.
வீரசிம்மர், வேங்கடவன் முன், தன்னை மறந்து, பேச்சிழந்து கண்ணில் நீர் வடியக் கசிந்துருகி நிற்க, ஏழுமலையான் புண் சிரிப்போடு, ஏறுமயில் வாகனனாகவும் காட்சி கொடுக்க, “கோவிந்தா, அரியும், சிவனும் ஒன்றே எனும் அரும் பெரும் உண்மையை மறந்தேன், இந்த பாவியையும் மன்னித்து அருள்கின்றீரே” என அங்கம் புழுதியில் பட, ஏழு மலையான் கோவிலை உருண்டபடி, அங்கப்பிரதட்சணமாய் வலம் வந்தார்
மலையில் இருப்பவன், எல்லோர் மனதையும் கவருபவன், மணிவண்ணனாக இருந்தால் என்ன? அவன் மருகன் முருகனாக இருந்தால் என்ன?
அள்ளி கொடுப்பவன். வேண்டுபவர்க்கு வேண்டியதை அள்ளி கொடுப்பதில் வல்லமை பெற்றவன். கோவிந்தன் நாமம் சொல்லி, வீர சிம்மர், ஏழுமலையானை அங்கப்பிரதட்சணமாய் வலம் வர, அதுவும் பகதர்கள் பாவம் தொலைக்க, நேர்த்திக்கடன் செய்ய ஒரு கிரியை ஆனது.
மலையிலிருந்த ஆச்சாரியார், “வீரசிம்மரே, ஆனாலும் கலி பிடிக்கும் காலத்தில், அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்பது இயற்கை விதி. இனி வரும் காலம் இன்னும் கொடுமையானது. உங்கள் ராஜ்யத்தில் ஏற்பட்டது முன்னோட்டம் தான். நாடெங்கும் கொடுமைகள் பல நடக்க உள்ளது. உம்மை போன்ற தீவிர பக்தர்கள், மக்களிடம் இறை நம்பிக்கை அற்று விடாமல் ,காக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும். உமது மகள் தென்னகத்தில் இறை நம்பிக்கை வேர் ஊன்ற பாடு படுகிறாள். நீர் மரகத புரியை விடுத்து, இந்த தேசத்திலும், காஞ்சியிலும் உமது கடைமையை ஆற்று” தெய்வ வாக்காகச் சொல்ல, “ அப்படியே ஆகட்டும் ஆச்சாரியாரே” என்றார்.
வீரசிம்மர் பேரன்களுடன் சிறிது காலம் தங்கியவருக்கு மகளைக் காணும் ஆவல் பிறக்க, நரசிம்மரிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினார். பத்மாசினியின் மூத்த மகன் ஸ்ரீநிவாசன் உடன் வருவதாகப் பிடிவாதம் பிடிக்க, நரசிம்மர் தக்க பாதுகாப்போடு அனுப்பி வைத்தார்.
ஒன்பது சிலைகளும் பிரதிஷ்டை செய்தால், சண்டன் முழுவதுமாக அழிக்கப்படுவான். துர் சக்திகளைப் பயன்படுத்தி சிலைகள் பிரதிஷ்டை செய்வதைத் தடுக்க முடியாத சண்டன் வேறு உபாயம் செய்தான். மதுரையை ஆண்ட சுல்தான் தளபதி ஒருவனின் உடலில் புகுந்தவன், படைகளை மதுரைக்கு மேற்கே குண்டாற்றின் பக்கம் திருப்பி விட்டான்.
பத்மாசினியும், திருமலை வாசனும், வணிகர்கள் கொடுத்த சிலைகளை முதலில் இந்த காட்டு மாளிகையில் தான் பத்திரப் படுத்தி இருந்தனர். சுல்தான் ஆட்களின் அட்டகாசம் அதிகரிக்கவும் சிலைகளைப் பாதுகாக்கவும், வழிபடவும் தகுதி உள்ள இடங்கள்,மனிதர்களைத் தேர்ந்தெடுத்து தெற்கில் சென்று ஸ்தாபித்தனர். அப்படி அவர்கள் செல்லும் போது , இங்குள்ள சிலைகளுக்குக் குந்தகம் வரக் கூடாதென எழுமலை, திடியன், புத்தூர் ஆகிய இடங்களில் சிலைகளைப் புதைத்து வைத்து, அடையாளத்துக்கு மருத மரத்தையும் ஊன்றி, அவர்கள் இருவருமாக வந்து எடுத்தால் தான் சிலைகள் வெளிப்பட வேண்டும் என மந்திரக்கட்டும், வாக்கும் சொல்லி மறைத்து வைத்தனர்.
மூன்று இடங்களைப் பற்றிய குறிப்பையும் பத்மாசினி பாடல் குறிப்பாக எழுதி வைத்தாள். சித்த பண்டூர் மற்றும் சுற்றி உள்ள ஊர் மக்களையும், கோவில்களையும் காப்பாற்ற வேண்டும், தங்கள் எல்லைக்குள் சுல்தான் ஆட்களை வர விடக் கூடாது, தங்கள் வாழவதாரத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்தனர். சுல்தான் ஆட்கள் அவர்களைத் தேடி வரும் முன், தாம் முந்தி செல்ல வேண்டும் என, திருமலைவாசன், பத்மாசினி, வல்லபர், கழுவன் மற்றும் மற்ற காவல் குடும்பங்களும் முடிவெடுத்து ஒரு படையாகத் திரண்டு முன்னேறினர்.
சுல்தான் படைத் தளபதிக்குள் புகுந்த சண்டன், இவர்களை நோக்கி படையைத் திருப்பி விட்டான். குண்டாற்றின் மறு கரையில் “ஜெய் ஜக்கம்மா” “வெற்றி வேல், வீரவேல்” என்றும் கூட்டாகச் சுல்தான் படையை எதிர்த்தனர்.
இன்று பிளக்கிறோமோ இல்லையோ, மீண்டும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பக்கம் வரும் துணிவு இருக்கக் கூடாது என ஆக்ரோஷமாகச் சண்டையிட்டனர். காவல் படைக்கு ஜீவ மரண போராட்டம். மனதில் உள்ள வெறியெல்லாம் வைத்து எதிரிகளை அவர்களைப் போலவே கொடூரமாய் தாக்க , சுல்தான் படி வீரர்கள் சுருண்டனர். படைத் தளபதிக்குள் புகுந்திருந்த சண்டன், திருமலை வாசன், பத்மாசினியை குறி வைத்து சரமாரியாகக் கத்திகளை வீச , வாசவனைக் காக்க பத்மையும், பத்மையை காக்க வாசவனுமாகக் கத்திகளைத் தாங்கி, கை கோர்த்தபடி சாய்ந்தனர்.
வல்லபரும், தங்கமுமாகத் தாம் படுகாயம் பட்டிருந்த போதும், சண்டன் புகுந்திருந்த படைத் தளபதியை வெறி கொண்டு வெட்டி வீழ்த்த, சண்டன் அந்த உடலை விட்டுப் பறந்திருந்தான். காயம் பட்ட, பத்மாசினியையும், திருமலை வாசனையும் சுமந்து கொண்டு காட்டு மாளிகைக்கு வந்தனர்.
ராக்காயி, “நான் பெறாத மகளே, என் வம்சத்தை காக்குறேன்னு சொன்ன வாக்கைக் காக்க உன்னையே பலி கொடுத்தியா”என ஒப்பாரி வைத்த நேரம், வீரசிம்மனும், ஸ்ரீனிவாசனும் சந்திரகிரி மெய்காவலர்களோடு வந்தனர்.
“பத்மா” என அவர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழ, “தந்தையே, மறுஜென்மத்திலாவது உங்களுக்கு உற்ற மகளாக நான் பிறக்க வேண்டும்” எனவும்,
“பத்மா, நீ சிறந்த மகள் தான், உன்னைப் பெற்றவனுக்குத் தான் புத்தி கெட்டுப் போனது. அதற்கான பலனை நீ அனுபவிக்கின்றாயே” எனக் கதறினார். “நான் பிரதிஷ்டித்த கோவில்கள் , இனி உங்கள் பொறுப்பு” என்றாள்.
பத்மாசினி, திருமலை வாசன், வாழ்க்கையில் தெய்வ கைங்கரியத்தில் இணைந்தது போல், வைகுண்டத்தை நோக்கிய பயணத்திலும் இணைந்தனர்.
“பத்மை, ஏழேழு பிறப்பிலும் நீயே என் மனையாளாக வேண்டுமென, வேங்கடவனிடம் வரம் வேண்டியுள்ளேன்” என்றான்.
“ஆம் வாசவரே, நம் கடமை இருக்கிறதே” என்ற பத்மாசினி, மகனைக் கன்னம் வழித்துக் கொஞ்ச,
“அம்மா , நானய்யா உங்களை இப்படிப் பார்க்கத் தான் வந்தேனா” என அழுதான்.
“ஸ்ரீநா, உன் வம்சத்தில் தான் பிறப்பெடுப்பேன்.” எனத் திருமலை வாசன் வாக்கு தர, “ நீடு வாழ்க” மகனை வாழ்த்தி, வல்லபரிடம் ஒப்படைத்தார்கள்.
“ சிலைகளைப் பிரதிஷ்டை செய்ய, மறுஜென்மம் எடுத்து வாசவரோடு பத்மாசினியும் வருவேன். ஏழுமலையான் மீது ஆணை” என ராக்காயி கையில் அடித்து சத்தியம் செய்தபடி இருவரும் உயிர் துறந்தனர்.
பதின்ம வயது ஸ்ரீநிவாசன் பெற்றவரை இழந்த இந்த மண்ணை வெறுத்து சந்திரகிரி திரும்பி விட, வீர சிம்மர், மகள் பிதிஷ்ட்டை செய்த பெருமாள் கோவில்களுக்கும் , தன் பாவத்தைப் போக்கச் சிவன் கோவில்களுக்கும் பணி செய்து கிடந்தார்.
நாயக்கர் காலம்
பத்மாசினியை காட்டு மாளிகைக்கு அழைத்து வந்திருந்த திருமலை வாசன், அவளை ஆரத் தழுவி முகமெங்கும் முத்தமிட்டு, குனிந்து அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டான். கைகள் அவளை இறுகப் பற்றியிருக்க, ஆலிங்கனமும் அப்படி தான்.
முன்பு படையெடுப்புக்காகப் பிரிந்து சென்று திரும்ப வரும் நாள்களில் ஒரு வாரத்துக்கு அவளை நகர விடமாட்டான். சதா ஆலிங்கனமும், அவள் மடியில் படுப்பதுமாகத் தான் இருப்பான்.
ஜென்மங்கள் தாண்டி, அதே தாபத்தை அவன் வெளிப்படுத்த, சற்று நேரம் அனுமதித்தவள், சிகையை வருடி, “வாசவரே” காதில் அழைக்க, “ம்ம்” என மயங்கியே கிடந்தான்.
“வாசவரே, இது என்ன சிறுபிள்ளைத் தனம். நான் தாங்கியிருக்கும் உடல் செம்பதுமத்துக்கு உரியது. அவள் இன்னும் கன்னிப் பெண்” நினைவூட்ட,
“அதனால் என்ன”
“புரிந்து தான் பேசுகிறீர்களா. இந்த ஜென்மத்தில் இன்னும் மணமாகவில்லை”
“செய்து கொள்வோம். மீண்டும் மணம் செய்து கொள்வோம் பத்மை. உன்னை மணக்கோலத்தில் பார்க்க எனக்குக் கசக்குமா, என்ன” செஞ்சாந்து நிறம் கொண்ட கன்னத்தில் ஆசையாய் முத்தமிட்டவன், அடுத்து அவள் அதரத்தை , தன்னுடையதால் அளக்க முற்பட, நெற்றியில் முட்டி அவன் செய்கையைத் தவிர்த்தவள்,
“தள்ளி நில்லுங்கள் வாசவரே, அவ பெயர் பதுமத்துக்கு வந்தாலும் பத்மைக்கு வந்தாலும் ஒன்று தான். வந்த காரியம் மறந்து விட்டதா, நாம் மணப்பதையும் விட முக்கியம், சிலைகள் பிரதிஷ்டை” கண்டிப்பாகச் சொல்ல, விலகிச் சென்று கோபமாய் நின்று கொண்டான்.
“ஸ்ரீநா கூட இவ்வளவு அடம் இல்லை” வாய் வார்த்தையாகச் சொன்னவள் கண்கள் கலங்கி, “ஆசையாய் பார்க்க வந்த பிள்ளை முகத்தைக் கூட காணாமல் , நாம் உயிர் ஈந்தோமே” தாய்மையின் குரல் பிசிறடிக்க,
“பத்மை” என அவளை அணைத்துக் கொண்டவன், “ஊழ்வினை யாரை விட்டது” என அவள் கண்ணீரையும் துடைத்தான். ,
“அன்று மிகவும் துன்பப் பட்டு விட்டாயா, உடல் வெட்டி இழுத்தது என்று பேசிக்கொண்டார்கள்” கரிசனையாய் கேட்க,
“உங்கள் நிலையும் அது தானே. அடுத்து ஆக வேண்டியதைப் பார்ப்போம். நம் இருவருக்கும் உள்ள நினைவு , அண்ணையாவுக்கு கிடையாது. அன்றே அவரை பிரமிக்க வைத்துத் தான் உதவ வைத்தேன்.” அவள் சொல்ல,
“தெரியாமலே நிறைய உதவிகள் செய்தார். நாமே அழைத்துச் சொல்லிவிட்டால் என்ன”
“அண்ணனுக்கு விஷயம் தெரிந்து விட்டால், அப்பாரிடம் அவரால் மறைக்க இயலாது. அப்பாவைச் சுற்றி ஒற்று வேலை செய்பவர்கள் இருக்கின்றனர். இப்போதைக்கு நம் விஷயம், நம்மோடு இருப்பதே நல்லது”
“காலம் கடந்து விட்டது. உன் விஷயம் சிங்கம் வரை சென்று விட்டது” என இருவரையும் உற்றுப் பார்த்த படி தங்கராசு தேவன் சொல்ல,
“அக்கா, சித்தினி நாயக்கரோட நீ போனதை அப்பாருக்கு நான் தான் சொன்னேன்” சந்தன கருப்பன் தங்கத்தின் பின்னிருந்து முன் வந்து சொன்னான்.
சந்தனத்தைப் பார்க்கவும், பத்மாசினிக்கு தன மகன்கள் நினைவு ,அவன் கையை பிடித்து, கொண்டு “என்னவென்று சொன்னாய்” எனக் கேட்க
“சித்தினி நாயக்கரோட போனேன்னு சொன்னேன். சொன்னது தப்பா.”
“உண்மையைத் தானே சொன்னீர், அது “எப்படி தவறாகும்” வாசவன் புன்னகையோடு கேட்டார்.
“அக்கா, சித்தினி நாயக்கர் மருதனையே அடக்கி இருக்காரு. உனக்கும் அவரை பிடிக்குமுண்டா கல்யாணம் கட்டிக்க. அப்பாரு கோவிக்க மாட்டார்.” யோசனை சொல்ல “டேய்” தங்கம் மிரட்ட…
“அவ்வளவு பெரிய மனுஷன் ஆகிட்டியா” பத்மாசினி சந்தனத்தின் காதை திருக, “சித்தினி நாயக்கரே காப்பாத்துங்க” என்றான்.
“பத்மை சின்ன கழுவர் என் வேலையை சுலபமாக்கிட்டார். உங்கள் தந்தையிடம் போவோமா” வாசவனாக இருந்த வேங்கடவன் கேட்க, பத்மாசினி ஆட்சேபனையாய் பார்த்தாள்.
“சந்தனம் அக்காளை நான் கூட்டிட்டு வரேன். நீ முன்ன போ. சித்தினி நாயக்கரைப் பத்தி வாயைத் திறக்கக் கூடாது” தங்கராசு எச்சரிக்க,
“ஏன் சொல்லக் கூடாது” என்றான்.
“சித்தினியை அப்பாரு வாங்கிக்குவாரு. உனக்குக் குதிரை சவாரி பழகனுமா , வேண்டாமா” எனவும், “இல்லை, நான் ஒன்னு சொல்லை, நம்ம அப்புறம் பார்க்கலாம் சித்தினி நாயக்கரே” எனப் பொடியன் ஓடி விட்டான்.
தங்கராசு தேவன், “ என் தங்கை செம்பதுமம் உருவிலிருந்தாலும், நீங்கள் அவளில்லை. வைகை கரையிலும், நாகமலை அடிவாரத்தில் பார்த்த வேங்கடவர் வடிவிலிருந்தாலும் நீங்க அவரில்லை. உங்களைப் பார்த்தவுடன் கையெடுத்துக் கும்பிட தோன்றுகிறது. உங்கள் கட்டளைகளை நிறைவேற்றுவது, என் கடமை என உள்ளுணர்வு சொல்கிறது, நீங்கள் யார்” கை கூப்பி நின்று காவலன் கேட்க,
“இப்போதே தெரிய வேண்டுமா. கருப்பனுக்குக் கிடாய் வெட்டு நிறைவேறட்டும். பொறுமையாய் கேளுங்கள்” அங்கு வந்த வல்லபர் சொல்ல தங்கராசு தேவன் மலங்க முழித்தான்.
“ கடாய் வெட்டுக்கு முன்னரே, அண்ணையாவுக்கு நான் யார் என்று அறியும் உரிமை உள்ளது. செம்பதுமத்துக்கு மட்டுமில்லை, பத்மாசினிக்கும் தாங்கள் தான் தமையன். காவல் தெய்வம் கருப்பனைத் தாங்கி நின்று, என்னையும், என் கணவரையும், பூஜையையும் சண்டனிடமிருந்து , அன்றும், இன்றும் காத்துக் கொடுத்தவர்” எனப் புன்னகை சிந்த, தங்கராசு தேவன் புல்லரித்து நின்றான்.
குண்டாடற்கரையில் , சித்தபண்டூர் கோவிலுக்கு அருகில் அமைந்த காட்டு மாளிகையிலிருந்த வேங்கடவனுக்குப் பூர்வ ஜென்ம வாசம் வந்திருந்தது. திடியன் மலையடிவாரம் திருமால் சோலையில் கிடைத்த புல்லாங்குழலை ஊதியவனுக்கு, முதலில் நாராசமான மட்டுமே வர, பின் முயன்றதில் அவள் சொல்லித் தந்த குழலிசையும், பூர்வ ஜென்மமும் முழுதாய் நினைவில் வர “பத்மை” என அழைத்தான். கழுவன் குடும்பத்தோடு பயணித்த பதுமத்துக்கு, தன் உயிரானவன் அழைப்பதை உணர்ந்தாள்.
“வாசவரே, சற்று பொறுங்கள். இதோ வந்து விட்டேன்.” மனதோடு பேச, அவனுக்குத் தான் பொறுமை இல்லை.
பத்து தினங்களுக்கு முன்…
திடியன் மலையடிவாரத்தில் ஒரு மாதமாகத் தேடியும், சிலைகள் கிடைக்கப் பெறவில்லை. வேங்கடவனுக்கு அவ்வப்போது பூர்வ ஜென்ம நினைவுகள் வந்து சென்றது. “திருமலை வாசனும், பத்மாசினியும் சேர்ந்து வந்து தேடினால் மட்டுமே, பெருமாளும் தம்பதி சமேதராக பிரத்தியட்சம் ஆவார்.” என்பது அவர்கள் பொழுதே வாங்கி கொண்ட வாக்கு.
பல ஜென்மங்களாகப் பிறப்பெடுத்த போதும், இவர்களைச் சேர விடாமல் சண்டன் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான்.
இந்த முறை, எல்லா காரணிகளும் அனுகூலமாக வந்தது. சந்திரகிரியில் வேங்கடவனும், கழுவன் குடியில் பதுமமாகப் பிறந்த போதும், கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் போது சந்தித்ததும் நலமாய் அமைந்தது.
ஒவ்வொரு இடத்திலும் இறைவன் திருவருள் அவர்களை இணைத்தே பயணித்தது. திடியன் மலையடிவாரத்தில் தேடிய வேங்கடன், பூர்வ ஜென்ம நினைவு வந்த சமயம், “உயிரை மாய்த்துக் கொள்வேன்” என மிரட்டி, கட்டாயப்படுத்த, சிம்மராசுதேவனின் வர்மக்கலை உபயத்தால் நினைவுகள் தூண்டப்பட்டு, பூர்வ ஜென்ம நினைவு வந்து, ராக்காயியின் உதவியோடு நள்ளிரவில் குதிரையில் பறந்திருந்தாள்.
பெரிய கழுவன் குடியும், எழுமலை பாளையமும் சலங்கை சத்தம், மோகினி பேய் என அல்லோகல பட்டது அன்று தான். சிம்மராசுதேவனின் முதல் ராக்காயிக்கு, செம்பதுமம் பிறந்து, தூக்கிய போதே உணர்வுகள் உந்தப்பட்டு, பிச்சி போல் அலைந்தவளுக்கு, சிலகாலம் முன்பு பூர்வ ஜென்ம நினைவும் வந்திருந்தது. பதுமத்துக்கு உணர்வுகள் தூண்டப்பட்டு, பத்மாசினியான பின் அவள் முதலில் சென்றது ராக்காயியிடம் தான்.
அவள் வீட்டுக்குள் சென்று, “தாயே” என அழைக்க, “வந்துட்டியா தாயி, உனக்காகத் தான் மறுஜென்மம் எடுத்து காத்திருக்கேன்” என உச்சி முகர, “வாசவர் அழைக்கிறார் தாயே” என்றாள்.
“போயிட்டு வா தாயி, விட்ட குறையை நீதானே முடிக்கணும்” என்றவர்
வீட்டுக்குள் சென்று மறைத்து வைத்திருந்த பத்மாசினி நகை, துணி மணிகளை அவளுக்கு அணிவித்து விட, அது மேனியில் படவுமே, தனி சக்தியும், தேஜஸும் வந்திருந்தது. நவரத்தின சூடியும், பதக்கம் வைத்த அட்டிகையும், மூக்குத்தியும் இவள் ஜென்மங்களை கடந்து, தெய்வ அருள் பெற்ற அணங்கு என புரிந்தது. ஜென்மங்கள் கடந்தாலும் நினைத்த காரியத்தை நடத்தாமல் விட மாட்டாள்.
“என் தாயி” எனத் திருஷ்டி கழித்த ராக்காயி ,அவள் கையில் மந்திர கயிற்றையும் கட்டி விட்டு, “உங்க உதவிக்குக் கழுவனும் அங்க இருக்கான்” மடியில் சில பொருட்களையும் கட்டி, சிங்கத்தின் குதிரை சின்ன கருப்பனுக்கும் மையைத் தடவி, அவள் புருவங்களில் தடவி, “எல்லார் கண்ணையும் கட்டிடம் தகிரியமா போயிட்டு வாங்க” என அனுப்பி வைத்தாள். முன்ஜென்மத்தில் தன் குலம் காத்தவளுக்கு , ஜென்மஜென்மமாய் பணி செய்வதே தன் கடன் என தன்னை ஒப்பு கொடுத்தவள் ராக்காயி.
குதிரை அவள் மனோவேகம், வாயுவேகமாக திடியன் மலை நோக்கிச் செல்ல, அங்கே வேங்கடவன், “பத்மை, இதற்கு மேலும் என்னால் பொறுக்க இயலாது. இந்த சனமே வருகிறாயா, உயிர் துறக்கட்டுமா” என மிரட்டிக் கொண்டிருக்க, “வாசவரே” என அழைத்து , அவன் கையிலிருந்த குற்றுவாளைத் தட்டி விட்டாள் .
பூரண அலங்கார பூஷிதையாய் தன் பத்மையை பார்த்தவனுக்கு உணர்வு பெருக்கில் கண்ணீர் பெருகியது.
“இடையில் ஜென்மங்கள் பிறப்பெடுத்து, சந்திக்காமலே போனோம்” எனக் கையை விரிக்க, “வாசவரே” என அவனை ஆலிங்கனம் செய்து கொண்டாள்.
பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ, இங்கே ஜென்மங்கள் கடந்து இரு ஆன்மாக்கள் ஒன்று சேர்ந்திருந்தன. அதுவும் பூர்வ ஜென்ம நினைவோடு. அவர்கள் குல தெய்வம் ஜக்கம்மாவும், இஷ்ட தெய்வம் ஏழுமலையானும் , காவல் தெய்வம் கருப்பனும் சேர்ந்து தந்த வரம்.
திருமலை வாசனுக்கு மனைவியைப் பிரியவே மனமில்லை, “பத்மை, பத்மை” என உரு போட்டுக் கொண்டிருக்க, “வாசவரே, இரண்டு நாழிகைக்குள் நான் திரும்ப வேண்டும்” நினைவு படுத்தினாள்.
பெரு மூச்சுடன், “தெய்வ காரியம் முடிந்தவுடன், செம்பதுமமாக, வேங்கடவனை மணந்து கொள்ள வேண்டும்” என்றான்.
“கட்டாயம், அது என் பாக்கியம்” என்றவள், அவன் கையில் ஒரு மந்திர கயிற்றைக் கட்டி விட்டு, “வாருங்கள்” எனவும், இருவருமாக மருத மரத்தடி சென்றனர். பத்மாசினி தரையில் அமர்ந்தவள், மடியிலிருந்து பூஜை பொருட்களையும் முன்பு ஆச்சாரியார் தந்த சிறிய பெருமாள் சிலையையும் வைத்து, மந்திரம் சொல்லி பூஜை செய்ய, வாசனும் உடன் செய்தான்.
பின்னர், மடியிலிருந்து மூலிகைகளைச் சோலையின் எல்லையை சுற்றி தீய சக்திகள் அண்டாதவாரும், மற்றவர் கண்ணனுக்கு மறைக்கும் விதமாக மந்திர கட்டை போட்டவள், மருத மரத்தடியில் வந்து நிற்க, வேங்கடவன் கவனமாக கைகளால் மண்ணை விலகினான்.
“பத்மை, ஒரு கை குறைகிறதே “ எனச் சிரிக்க, “ சகோதரர் வந்து விடுவார்” என்றாள். இருவருமாகப் பெருமாள் சிலையைச் சுற்றியிருந்த மண்ணை அகற்றினர். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஸ்ரீனிவாசன் பெருமாள் தோன்றியிருக்க, “சோலைக்கு நடுவே, கல் மண்டபத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்” என்றவள், குதிரை சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்க, தங்கராசு தேவன் கை கூப்பிய படி நின்றான்.
வாசவனும், பத்மாசினியும் அவனை நோக்கிச் சென்றனர். “வாருங்கள் கழுவரே. கருப்பன் அருள் தாங்க நீர் வருவீர் என எமக்குத் தெரியும்” வாசவன் கட்டியணைக்க, “வாருங்கள் அண்ணையா” என பத்மாசினி அவன் கையில் மந்திர கயிற்றைக் கட்டினாள். மந்திரித்து விட்டது போல், பேச்சு மொழி மறந்து தங்கராசு தேவன் அவர்கள் பின்னால் சென்றான்.
நெடிந்து நின்ற பெருமாள் சிலையை, காட்டிய பத்மாசினி, “நான் சொல்லும் போது தூக்கி வாருங்கள்” என்று விட்டு, வாசவனைக் கல் மேடையின் நடுவே துளையிடச் சொன்னவள், மடியிலிருந்து நவரத்தின கற்களையும், அரக்குப் போல் ஒன்றையும் தடவினாள். அதே போல் சற்று இடைவெளியில் தாயார் சிலைகளைப் பிரதிஷ்டை செய்யவும் நவரத்தினத்தை நிரப்பி, மந்திரங்களை உச்சரித்தாள். வாசவன் சில மூலிகைகளை சேர்த்து, சிலைகளை பிரதிஷ்டை செய்ய சாந்து குழம்பு தயார் செய்தான்.
தங்கராசுவை, பெருமாள் சிலைகளைத் தூக்கி வரச் சொல்ல, அருள் வந்த கருப்பன சாமி போல், முதுகில் சுமந்து கொண்டு வர, கல் மேடையில் , நவரத்தின கற்களுக்கு மேல் நிறுத்தி, செஞ்சாந்தை பூசி , மூவருமாக பிரதிஷ்டை செய்தனர். தாயார்களையும் அதே போல் பிரதிஷ்டை செய்து முடிக்க, மரங்கள், பூக்களை சொரிந்து பெருமாளை சேவித்தன.
தெய்வ சிலையோடு புதைக்கப்பட்டிருந்த ஜடாரி, பூஜை பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு புதையலை அதிலேயே மூடி வைத்தனர். பத்மாசினி கிளம்பும் நேரம் வந்தது.
"வாசவரே, நான் கிளம்புகிறேன். நாளை சண்டன் தாக்கக் கூடும். அதுவரை சோலைக்குள் இருங்கள். நினைவு மறந்தாலும் அதுவும் நன்மைக்கே. மீண்டும் சந்திப்போம்” என விடை பெற, வாசன் அங்கேயே மயங்கிச் சரிந்தான். தங்கராசு தேவன் , பத்மாசினியை தொடர்ந்து சோலைக்கு வெளியே வந்து மூர்ச்சை அடைய , இரண்டு குதிரைகளுமே பெரிய கழுவன் குடியைச் சேர்ந்தவை, அவசரத்தில் வந்த குதிரையை விடுத்து தங்கராசுவின் குதிரையில் பறந்தாள்.
கழுவன் குடியில் வீட்டின் அருகில் சென்று இறங்கியவளை ராக்கம்மாள் அழைத்துக் கொண்டு சென்றாள். அதைப் பார்த்த ரதிதேவியின் வேலையாள் ராமி, குதிரை அருகில் வந்து பார்க்க, நெற்றி சூட்டிக் கிடந்தது. அதை எடுத்துப் பத்திரப்படுத்தியவள் அதன் ஒளி தாங்கமாட்டாமல் பிச்சி போல் ஓடி ஓரிடத்தில் மூர்ச்சையாகி விழுந்தாள்.
பெருமாள் பிரதிஷ்டை செய்யவுமே சண்டனுக்கு அதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தது. “பத்மாசினி, இன்னும் ஜென்மம் “எடுத்தாலும் உன் நோக்கம் நிறைவேற விட மாட்டேண்டி” என எழுந்தவன், மாருதனை வரவழைக்கும் யாகங்களைச் செய்ய ஆரம்பித்தான்.
காலையில் அதனை ஏவி விட, தவறாது பத்மாசினி, திருமலை வாசன் தாக்கியது. பூர்வ ஜென்ம பலனால் , உடனிருந்த கழுவன் வம்சத்தினர் துணையால், அதிலிருந்து மீண்டனர். சண்டனுக்கு, துர் சக்திகளை தன்வச படுத்த நீண்ட காலம் பிடிக்கும், அதைப் பிரயோகம் செய்து விட்டால், அதிலிருந்து மீண்டு வர, சில காலங்கள் பிடிக்கும். தற்போது சாந்தனின் சக்தி மீள்வதற்குள், அடுத்த சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
செம்பதுமத்துக்கு வலிப்பு வந்தது. தீய சக்திகள் தாக்கியது, அதை நினைத்தே சித்தபண்டூர் பெருமாளை வணங்கவும், கருப்பனுக்குக் கிடா வெட்டவும் கழுவன் குடும்பம் வந்தனர்.
வேங்கடவன், இன்று காட்டு மாளிகைக்குள் வந்து அமர்ந்து குழல் வாசிக்கவும், பத்மாசினி நினைவு வந்து விட, “பத்மை” என புலம்பிக் கொண்டே இருந்தான்.
பத்மாசினி கோவிலுக்கு வந்த பின், அங்கு வல்லபரைப் பார்த்து வணங்க,
“வணக்கம் தாயே, உங்களைத் தரிசிக்கவே ஜென்மம் எடுத்து வந்தேன்” என்றார்.
“அவரவர் ஜென்மம் எடுத்ததின் உத்தேசத்தை நிறைவேற்ற, ஏழுமலையான் அருளட்டும் வல்லபரே. பிரதி பலன் கருதா உங்கள் சேவைக்கு, வேங்கடவன் ஆசி உள்ளது” என்றாள்.
“உங்கள் வேள்வியில் என்னுடையது சிறு பங்கு தான்” என்றார். ஆனால் வேங்கடவனை வழி நடத்தியவர் அவர் தானே. “திடியன் மலையடிவாரத்தில் முதல் திருப் பணி வெற்றியடைந்தமைக்கு வாழ்த்துக்கள் ” என கை கூப்பினார்.
பதிலுக்கு வணங்கியவள், “தங்களை போல் நானும் ஒரு கருவி தான். ஆட்டி வைப்பவன் அவனல்லவா” சன்னதியை நோக்கி சொல்ல,
“அதுவும் சரி தான்” என்ற நேரம், வேங்கடவனும் வந்து சேர, “அரசே” என வணங்கினர்.
“இந்த ஜென்மத்தில், நீர் தான் எமக்கு குரு “ வல்லபரை வணங்கிய வாசன்,
“வரும் போதே, சாகசத்தை காட்டியாகி விட்டதா” பத்மாசினியை வினவ,
“சண்டன் வேலையை காட்டும் பொழுது, நாமும் பதில் தந்து தானே ஆகா வேண்டும்” என்றவள்,
“அதிக நேரம் நிற்க இயலாது. குடும்பத்தினர் தேடுவர்” எனவும்,
“ஜென்மம் கடந்து, பெரிய குடும்பம் என்ற ஆசையையும் நிறைவேறி உள்ளது” வாசவன் கேட்க,
“பதமாசினி, வீரசிம்மருக்கு ஒற்றை மகவு. செம்பதுமம் கழுவன் வாரிசுகளுக்கு சகோதரி. ராக்காயி அம்மாவுக்கு கொடுத்த வாக்கு. மிகவும் பிடித்திருக்கிறது” கழுவன் வாரிசுகளை ஆசையோடு பார்த்தாள்,
“வீரசிம்மரை விட, சிங்கராசுதேவன் அதிக பலம் கொண்டவர்.” வல்லபர் நினைவூட்ட
“ஆம், மூன்று மனைவிகள் எட்டு பிள்ளைகள்” வாசவன் பரிகாசம் செய்ய, முறைத்த பத்மாசினி, “பாசமிகு தந்தை, பூர்வ ஜென்ம நினைவுகளை முடுக்கி விட்டவரும் அவர் தான்” ஆட்சேபிக்க.
“மாமனாருக்கு உரிய மரியாதை கொடுப்பேன் பத்மை” என்றார்.
“தங்கள் குரலில் பாசுரம் கேட்க ஆசை தாயே” வல்லபர் வேண்ட,
“ஆகட்டும் வல்லபரே” என குடும்பத்தோடு இணைந்தாள்.
சன்னிதியில் நிற்கும் போதே, பதமாஷினிக்கு பரவசம், “ஏழுமலையானே, உன்னை சேவிக்க ஏழேழு ஜென்மமும் காணாது” நெகிழ்ந்து நின்றாள்.
பூஜை நேரத்தில், செம்பதுமமாக இருந்த பத்மாசினி, தாடகை சொல்லி கொடுத்த பாசுரங்களைப் பாடினாள்.
‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி “என தூய தமிழில் ஆண்டாள் பாசுரங்களைப் பாட, சிம்மராசு தேவனைத் தவிரக் கழுவன் குடும்பமே கூடி விட்டனர்.
கோதை, தாடகையிடம்” நாச்சி, கோவிலுக்குள்ள வந்து பாட்டெல்லாம் பாடுறாளே, அருள் அடிக்கலையோ” எழுப்ப,
“அருமையா பாடுறா. அதை கேளு. உன் சந்தேகத்தை அப்புறம் கேட்கலாம்” என்று விட, “அதுவும் சரிதான்” என்றவளும் மெய்மறந்து தான் போனாள்.
கழுவன் கருத்தையா, பேச்சியம்மாள் முதல் சந்தன கருப்பன் வரை, பதுமம் பாடுவதைப் பெருமையாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
“அடியே பொண்டுகளா, பாட்டை காதில் வாங்கி கிட்டே, பொங்கலை வைங்க” பேச்சி குரல் கொடுக்க , அவர் மருமகள்கள் மூன்று பானைகளில் ஆளுக்கு ஒரு பொங்கல் வைத்தனர்.
புதிதாக வந்த வணிகர் ஒருவர் வல்லபரிடம் “சுவாமி, இந்த கோவிலை ஸ்தாபித்த வரலாறு சொல்கிறேன் என்றீர்களே” எனக் கேட்க, அவர் பத்மாசினி, திருமலை வாசன் கதையைக் கோவில் ஸ்தாபித்த வரை சொன்னார்.
சித்தபண்டூர், ஶ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேஷ பெருமாளுக்கு , தேங்காய், கனிகள், அப்பம், பொங்கல் தளுகை போட்டு நைவேத்தியம் நடந்தது.
கழுவன் குடும்பத்தில், இளசுகளும், பெண்களும் பயபக்தியாய் சேவித்து நின்றனர். பதுமம் பெருமாளைச் சேவிக்கவுமே , வேங்கடவன் அழைத்து விட்டான். மற்றவர் கவனத்தைக் கவராமல், பூர்வ ஜென்ம ஜோடி காட்டு மாளிகைக்குச் சென்றனர்.
கருப்பன் கோவிலில் சிங்கராசு தேவன், ஆகவேண்டிய வேலைகளைப் பார்த்து அமர்ந்து விட்டான். தாடகை நாச்சி, பெருமாள் கோவிலிலிருந்து பிரசாதத்தை வாங்கி வந்தவள், “இம்புட்டு தூரம் வந்தவர், கோவிலுக்குள்ள வந்தா என்னாவாம்” வினவியபடி, பொங்கலை அவனருகில் வைத்து விட்டு, முந்தியில் முடிந்து வைத்திருந்த குங்குமத்தை அவன் நெற்றியில் வைக்க வர, “என்னாது” தலையை இழுக்க,
“ம்ம்” அவளின் மிரட்டலில், “என்னாண்டு பார்த்தேண்டி… வச்சு விடு” என நெற்றியைக் கட்டினான். அத்தனை நேரம் சிங்கத்துடன் கதையளந்து கொண்டிருந்த ரதி தேவி, தாடகை வருவதை பார்த்து அங்கிருந்து அகன்று இருந்தாள்.
“அங்க வந்தா என்னவாம்” நாச்சி மீண்டும் கேட்க,
“உன் பேச்சுக்கே வருவோம். அழகரை தோளில் சுமந்து தூக்கியாந்தேனா இல்லையா. அப்புறமும் உன் பெருமாள், என் காலை தானே காவு வாங்குனாரு. நொண்டி பயலா வீட்டில முடங்கி கிடக்குறேன்.“ சிங்கம் குறை பட,
“காவல்காரனுக்கு அடி படுறது சகஜம்னு நீதான சொல்லுவ. அப்புறம் என்ன. சீக்கிரம் ராச நடையே நடப்ப. சும்மா சாமியோட மல்லுக்கட்டாத. இந்த சாமியைப் பிரதிஷ்டை பண்ணும் போது வந்த துஷ்ட சக்தியை, உன் முப்பாட்டன் உடம்பில் அருள் வந்து நிண்ட கருப்பன், எப்படி ஓட விட்டாருண்டு ,கோவில்ல துறவி சொல்லிகிட்டு இருந்தாரு. உன் மக்களுக்கெல்லாம் பெருமை தான் போ ”
“நீ வாக்கப்பட்ட வம்சமுண்டு உனக்குப் பெருமையில்லையா” சிங்கம் மீசையை முறுக்கியபடியே கேட்க, பொங்கலை நீட்ட, “ஊட்டி விடு” என்றான்.
“ம்க்கும், பெருமை தான், அதைச் சுமக்க மாட்டாமத்தானே, உன்கிட்ட கொட்ட வந்திருக்கேன் “ “பெருமைக்கும், சடவு சொல்றவ நீதான்”
இரண்டு வாய் ஊட்ட, “இனிச்சு கிடக்கு. போதும்” என்று விட்டான்.
“ஆத்தாடி, கழுவன் வம்சம் தனி அகராதி படைச்சவைங்க தான். அடுத்த பெருமை வருது.” எனக் கண் காட்ட, தங்கராசு தேவன், சித்தப்பனை தேடி வந்தான். அவனுக்கும் பிரசாதத்தைக் கொடுத்தவளுக்கு, வல்லபர் சொன்ன கழுவன், தங்கராசாகவே தோன்றினான்.
“ஏலேய் மவனே, என்ன நடக்குது இங்க. எவனவனோ வாறான். எல்லா பயலுகளுக்கும் குளிர் விட்டு போச்சா. தயவு தாட்சணியம் பார்க்காமல் தண்டனையைக் கடுமையாக்கு. அப்பத் தான் பயம் வரும். சிக்கினா செத்தோமுண்டு பயம் இருக்கனும்” மிரட்டலாகச் சொன்னான்.
“உன் பாணில காட்டிட்டு தான் அப்பு வர்றேன். இரண்டு நாள்ல உண்மையை கக்கிடுவாய்ங்கே. பாளையத்தில சொல்லி, அரையன் மேல பிராது கொடுப்போம். எங்க இருந்து எங்க வந்து வாலாட்டுறது” தங்கம் கோவப்பட
“தலை அவன் பக்கம் இருக்க தகிரியம். பிராது கொடுக்கிறது, எல்லாம் ஆகாத வேலை. அவன் களவு அம்புடுற அன்னைக்கு, உள்ள புகுந்து அடிக்கனும். “ சித்தபனும் மகனுமாக ஆக்ரோஷமாகப் பேசிக் கொள்ள,
“அப்பனும் ,மகனும் அடங்குங்க. கருப்பனுக்குத் தான் கடா. உங்களுக்கு இல்லை” என்றாள் தாடகை.
“ கருப்பனே எங்க மேல தாண்டி வருவான். மவனே இன்னைக்கு ஒரு ஆட்டத்தை காட்டுடா ” எனவும்
“அட நீ வேற ஏம்பா. சும்மாவே அப்படி தான் அலையிறேன்” என்றவன் பதுமத்தை பற்றி கேட்க, மகளின் வீரத்தைப் பற்றி புராணம் பாடியவர்கள், “கோவில்ல போயி பாரு” என்றனர்.
கருப்பனுக்குக் கடா வெட்டும் பூசைக்கான ஆயத்தம் செய்தனர். கடா வெட்டிய பிறகு பெருமாள் கோவிலுக்குள் செல்ல மாட்டார்கள். அதனால் தான் அங்கு முதல் பூசை செய்து, கொடி மரத்தில் இருந்த கருப்பனுக்குத் திருமஞ்சனம் பூசி வழிபாடு செய்தனர்.
கருப்பன் மேனி குளிர்ந்து. பூசாரி கழுவன் குடும்பத்துக்கு விபூதி கொடுத்து, ஆட்டு கிடாவுக்கும் திரு நீறு போட்டு விட்டார்.
பெருமாள் கோவிலுக்குச் சற்று தள்ளி இருந்த கருப்பன் சன்னதிக்கு ஆட்டுக் கிடாயைக் கூடி சென்றனர். கழுவன் கருத்தையா முதலாய் நிற்க, வீரன், சிம்மராசு, ரங்கராசு, தங்கராசு, முத்துராசு,சாமிகருப்பன், சந்தன கருப்பன் என அவர்கள் வம்சமே வரிசை கட்டி நின்றது.
பெண் மக்கள் சற்று தள்ளியே நின்றனர். “அம்புட்டு பேரும் வந்து கிடாயைத் தொட்டு கும்பிட்டுக் கருப்பனை வேண்டிக்குங்க” பெரியவர் சொல்ல, வரிசையாக வந்தனர்.
“எல்லாரும் வந்தாச்சு, பதிவு எங்கே” சிங்கம் கேட்க,
“சித்தினி நாயகரோட” என ஆரம்பித்த சந்தனத்தை தங்கராசு அமுக்கி இருக்க, “பதுவு, பதுவு” என ஆளாளுக்கு தேடினர்.
காட்டு மாளிகையில், “இப்போவே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்” வேங்கடவன் அடம் பிடித்துக் கொண்டிருக்க, அவள் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“அது வரட்டும், பூஜையை ஆரம்பிங்க” தாடகை சொல்ல, மனைவி எதையும் மறைகிறாளோ எனச் சிங்கத்துக்குச் சந்தேகம். “பதுவு எங்கே” மீண்டும் கேட்க, ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னார்கள்.
இது தான் சமயம் எனக் கணக்கிட்ட ரதி தேவி, “தேவரே, உங்க பொண்ணு. ஜவுளி விற்க வந்த நாயகரோடு காட்டுப் பக்கம் போச்சு. நான் என் கண்ணால பார்த்தேன்” எனக் கொளுத்திப் போட்டு விட,
“வாய்க்கு வந்ததைப் பேசாதே” தாடகை சொல்ல, கோதை கண்களால் எரித்தாள்.
“அப்படி இல்லையினா உங்க மகள் எங்கே சொல்லுங்க” விடாப்பிடியாக ரதி தேவி கேட்க, பேச்சி , “என் பேத்தி என் கிட்ட சொல்லிட்டு தான் போனா, வாயை மூடு” என்றார்.
“தங்கராசு, பதுமத்தை கூட்டிட்டு வா. அவ தொட்டுக் கொடுத்துத் தான் கிடாயை வெட்டணும்” சிங்கம் பிடிவாதம் பிடித்தான்.
ஆளுக்கு ஒருபக்கம், அவளைத் தேட முனைய, “அப்பாரு, அக்கா சித்தினி நாயகரோட தான் இருக்கு. நான் “கூடியாருறேன்” எனச் சந்தன கருப்பன் , காட்டு மாளிகையை நோக்கி ஓடினான்.
சிங்கம் கர்ஜிக்குமா…
மரகதபுரியில் கட்டுகளைத் தாண்டி, உள்ளே நுழைய முயன்ற பத்மாசினியும், திருமலை வாசனும் வீர சிம்மன் நிலையைப் பார்த்து பின்னடைய, சண்டனின் தந்திரத்தால் பாலாற்றின் கரை வரை விரட்டப்பட்டனர். எல்லை தாண்டி நின்ற பின் சண்டன் எச்சரிக்கையை ஆராய்ந்தார்கள்.
“மந்திர கட்டை உடைத்து உள்ளே சென்றால், ஏவல் செய்தவனுக்குத் தான் பாதிப்பு வரும். சண்டைக்குப் பாதிப்பு வருமென்று தான் கணக்கிட்டோம். வீரசிம்மனுக்கு பாதிப்பு எனில், அவரை வைத்தே சண்டன் வினையை ஏவியிருக்கிறான்” வல்லபன் சொல்லவும்,
“இதற்கு என்ன தான் பரிகாரம்” எனக் கேட்டாள் பத்மாசினி.
“ஆச்சாரியார் உபதேசங்களை நினைவு படுத்துவோம், ஏதேனும் மார்க்கம் கிடைக்கும்” என திருமலை வாசன் சொல்ல, பாலாற்றில் நீராடி, பத்மாசினி பெருமாளுக்கு நித்திய பூஜை செய்ய ஆரம்பித்தாள்.
“உங்களுக்கான பெரும் பணி காத்திருக்கிறது. தென்னகம் எங்கும் ஸ்ரீனிவாச பெருமாளை ஸ்தாபித்து, கடவுள் நம்பிக்கையை வலுப்பெறச் செய்வது உங்கள் கடமை. கருடன் வழி காட்டுவான். அவன் சித்தப்படி உங்கள் பயணம் தொடரட்டும்” என்ற ஆச்சாரியார் உபதேசத்தை நினைவு கூர்ந்தனர்.
திருமலை வாசன்“மரகதபுரியிலிருந்து தெய்வசிலைகள் அகற்றப் பட்ட பிறகு தான், தீய சக்திகள் குடி புகுந்து இருக்கின்றன. வணிகர்கள் பெருமாள் சிலைகளைத் தூக்கிச் செல்வது மட்டுமே நமக்குக் கிடைத்த தகவல். வைணவ மதத்தைத் தான் வீரசிம்மர் எதிர்த்தாரே தவிரச் சைவ சமயத்தை அல்ல. சிவ ஸ்தலங்கள், சாக்தம், கெளமாரம் கோவில்களின் சாநித்யம் என்ன ஆனது. அதையும் சிந்திக்க வேண்டும்” என்று கூற
“மற்ற கோவில் சிலைகளைப் பின்னப்படுத்தி இருக்கிறார்கள் அரசே. மரகத புரியிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சிலைகளைப் பிரதிஷ்டை செய்தால், இதற்கான தீர்வு கிட்டுமோ என்னவோ” வல்லபர் யோசனை சொல்ல, மற்ற இருவரும் தங்களுக்கு வழி காட்டுமாறு பிராத்தித்தனர்.
அவர்கள் பிரார்த்தனைக்கு இறைவன் செவி சாய்த்ததை போல், வானில் கருடன் தோன்றினான். “வாசவரே, கருடன். ஆச்சாரியார் சொன்னது போல், கருடன் வழிகாட்டுவான்” பத்மாசினி கன்னத்தில் போட்டுக் கொள்ள, அந்த திசையை நோக்கிக் கிளம்பினர்.
தெற்கு நோக்கிச் சென்ற இவர்கள் குழு, வழி நெடுகிலும் சமீபத்திய சுல்தான்கள் படையெடுப்பால் பாதிக்கப் பட்டு இருப்பதைப் பார்த்தார்கள். அங்கங்கே சிறு படைகள் மக்களை விரட்டி துன்புறுத்த , தங்களால் முடிந்தவர்களைக் காப்பாற்றிக் கொண்டும், மரகதபுரியிலிருந்து கிளம்பி வந்த வணிகர்களைத் தேடிக் கொண்டும் வந்தனர்.
ஆறு மாத கால பயணத்தில் சிலர் இவர்களோடு சேர்ந்து இருந்தனர். சுல்தான் படை வீரர்களைத் தாக்கியதில் அவர்களிடம் இருந்து பொன் பொருளையும் மீட்டு இருந்தனர். தேவைப் படுவோருக்கு உதவிக் கொண்டே பயணித்ததில் பத்மாசினியின் வாள் வீச்சின் சிறப்பும் வெளிப்பட்டது
“பத்மை, எந்த முகூர்த்தத்தில் போருக்கு அழைத்துச் செல்லச் சொன்னாயோ, இந்த பயணம் அவ்விதமாக மாறி விட்டது பார்” என வியக்க,
“ஆம் வாசவரே, பெருமாள் சித்தம் இது தான் போலும். இன்னமும் மரகதபுரி வணிகர் ஒருவரை கூட காண வில்லையே “
“ஏழுமலையான் சித்தம் என்ற பின், இதில் வருந்த என்ன இருக்கிறது பத்மை . அவன் வழிகாட்டுதல் படி செல்வோம். நானும் வல்லபனும் மாத கணக்கில் பயணித்து இருக்கிறோம். உன்னோடு பயணிப்பதில் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்கிறது. என் பத்மையின் வீரத்தையும், வேகத்தையும் , விவேகத்தையும் கண்டு பூரித்து இருக்கிறேன்” என்றான்.
“போதும் உங்கள் பரிகாசம், தந்தை இப்படி மாறிப் போவார் எனக் கனவிலும் நினைக்கவில்லை. இவர்களுக்காக நம் பிள்ளைகளையும் அல்லவா விட்டு விட்டு வந்திருக்கிறோம் “ வருந்த
“ பிள்ளைகள் பதின்ம வயதை அடைந்து விட்டனர். அண்ணையைவிடம் தானே ஒப்படைத்து இருக்கிறோம். இனி அவர் அவர்களைக் கவனித்துக் கொள்வார். அதையும் விட வேங்கடவன் பெரிய பணியை நம்மிடம் ஒப்படைத்து இருக்கிறான். பலனை எதிர்பாராமல் அதைச் செய்வோம் “ எனத் தேற்ற, “சரிதான் வாசவரே” என நிமிர, அடுத்த இலக்கை நோக்கி கருடன் அவர்களை வழி நடத்த, பயணத்தைத் தொடர்ந்தனர்.
வழி நெடுக, கோவில்கள் கொள்ளையடிக்கப் பட்டு மக்கள் பாதுகாப்பான வாழ்விடம் நோக்கிச் சிதறி ஓடிக் கொண்டிருந்தனர். பதமாஷினி ஜோடியும், மேலும் பயணித்து மதுரையம்பதி வரை வந்து சேர, அங்கு நிலைமை இன்னும் மோசமாக இருந்தது.
கருடன், இருகரை தொட்டு வேகமாய் ஓடும் வைகை ஆற்றைக் கடந்து அக்கரைக்குப் பறந்து செல்ல, அவர்களும் ஆற்றைக் கடக்கும் மார்க்கம் தேடினர்.
அந்த நேரம், ஒரு பெண் பயந்து ஓடிவந்து கொண்டிருக்க, மூன்று ஆடவர் அவளைத் துரத்தி வர, சட்டென அவர்களை தாக்கி பத்மாசினி அந்த பெண்ணை காப்பாற்றினாள்.
“நன்றி தாயே” அவள் காலில் விழப் போக, “ உங்களுக்கு என் அம்மாவின் வயது. இந்த பாவத்தைச் செய்யாதீர்கள்” அவள் யார் என கேட்கவும், அவள் தங்கள் கதையைச் சொல்ல, உங்கள் பெயர் என வினவினாள்.
“நான் ராக்காயி, கழுவன் வம்சத்தில் வாக்கப்பட்டவ தாயி, கோட்டை கொத்தள காவல் தலைமையிண்டு, எங்க வம்சமே பாண்டிய ராசா காலத்தில் சீரும் சிறப்புமா மருதை கோட்டையைக் காவல் காத்துட்டு இருந்தவுக. இன்னைக்கி அம்புட்டும் கையி காலு போயி குத்துயுரும், கொலையுயிருமா கிடக்குதுக. போன ஆளுகளை புதைச்சுட்டு மிஞ்சுணுவகள மாட்டு வண்டியில அள்ளி போட்டு, ஒட்டிக்கிட்டு வந்தேன். படுபாவிக துரத்திக்கிட்டு வந்துட்டானுக. அவைங்களை திசை திருப்பத் தான் வண்டியை மறைச்சு வச்சுட்டு, நான் மட்டும் ஓடியாந்தேன். என் உசுரை மட்டுமில்ல என் வம்சத்தையே காப்பாத்தி இருக்கத் தாயி. இங்குட்டு நிக்கிறது சரியில்லை. மறுகரை போயிட்டமுண்டா காடு, மலையிண்டு எங்க பூர்வீகம் இருக்குது. ஒருத்தன் எங்களை கண்டுக்க முடியாது.”
“உன் வம்சத்தைக் காப்பது என் பொறுப்பு” என்ற பத்மாசினி சொல்லும் போதே, திருமலை வாசனும் வந்து சேர, ராக்கம்மா அவர்கள் பரிச்சயம் கேட்டார். தங்கள், பரிச்சயம் சொல்லி மரகதபுரி வணிகர்கள் பற்றி விவரம் கேட்டனர்.
“இந்த அரக்கனுக கிட்ட இருந்து தப்பிக்க, அக்கரை போயிருப்பாகத் தாயி. சாமி வழிகாட்டுறாருண்டா வாங்கப் போவோம்” ராக்காயி அழைப்பு விடுக்க,
“உங்கள் ஆட்கள் எங்கே” என வினவ, மறைவிடத்திலிருந்த இரு மாட்டு வண்டியைக் காட்டினார்.
பெண்களும் சிறுவர்களும்,கைகால் வெட்டப்பட்ட நிலையில் சில ஆண்களும் , உயிருக்கு போரடிக் கொண்டு இருக்க, வாசவனும், பத்மாசினியும் அவர்களுக்கு வைத்திய உதவி செய்து, ஆகாரம் கொடுத்துக் கைப்பற்றினர்.
மேலும் ஒரு கூட்டமே சுல்தான் படைகளிடமிருந்து தப்பி, ஒருவருக்கு ஒருவர் உதவிக்கு கொண்டு தேனூரில் ஆற்றை கடந்து கருடன் வழிகாட்ட பயணித்தனர். அந்த இரவில் குண்டாற்றங்கரையில் பத்மாசினி , திருமலைவாசன், ராக்காயி கூட்டத்தோடு மற்றொரு வணிகர் கூட்டமும் மரகதபுரி பெருமாளும் வந்து சேர்ந்தது தான் ஆச்சரியம்.
பொழுது புலர்ந்த வேளையில் பத்மாசினி குண்டாற்றில் நீராடி, ஆச்சாரியார் கொடுத்த பெருமாள் விக்ரகத்துக்கு அபிஷேகம் ஆராதனை செய்து பாசுரங்களைப் பாட, சந்திரகியிலிருந்து வந்தவர்களைத் தவிர மொத்த கூட்டமும் அதிசயித்துப் பார்த்தது.
திக்கற்றவருக்குத் தெய்வமே துணை.இன்று அந்த தெய்வ சிலைகளையே பதுக்கி , பாதுகாத்துக் கொண்டு வந்து சேர்க்கும் அவல நிலை. மக்கள் உயிருக்குப் பயந்து ஓடும் நேரத்தில், ஆபத்பாந்தமாக, ஆபத்பாந்தவனின் பாசுரம் அங்கிருந்த மக்கள் மனதில் ஒரு புதிய தெம்பைப் பாய்ச்சி நம்பிக்கை ஊட்ட எல்லோரும் கண்ணீர் மல்க பத்மாசினிக்கு பின் அணிவகுத்து நின்றனர்.
வணிகர்களுக்கு பத்மாசினியை அடையாளம் தெரிந்தது. “வீரசிம்மரின் மகள், வணக்கம் தேவி. சந்திரகிரி இளவரசருக்கும் எங்கள் வணக்கம்.” என்ற வணிகர், மரகதபுரியில் நடந்த நிகழ்வுகளை நேரடியாகச் சொல்ல, பத்மாசினியின் கண்களில் நீர் பெருகியது.
“என் மேல் உள்ள சினத்தை, தந்தை உங்கள் மீது காட்டிவிட்டார். அவர் சார்பில் நான் மன்னிப்பு வேண்டுகிறேன்”என அவள் கை கூப்ப ,
“இல்லை தேவி, விநாச காலம் விபரீத புத்தி. வினைப்பயன் சிவநேச செல்வரான வீர சிம்மரையே பற்றி இருக்கிறது. உங்கள் மூலம் தான், இதற்கான தீர்வு கிட்டவேண்டும் என்பது வேங்கடவன் சித்தம்.” என்றார் வணிகர் “ஆத்தாடி, நம்ம மதுரா புரியில அரக்கத்தனமான மனுஷன் தான் ஆட்டம் கட்டுனாண்ட, மரகதபுரில அரக்கனே இருப்பான் போலவே” சற்றே தெம்பு வந்திருந்த கழுவன் வகையறா பேசிக்கொள்ள,
“நம்ம கருப்பன் பூமிக்கு வந்துட்டோம், எந்த அரக்கனா இருந்தாலும், இனிமே நம்மளை ஒன்னும் பண்ண முடியாது” என்றார் மற்றொருவர்.
பத்மாசினி அருள் வந்தவள் போல், “மரகதபுரியின் அவல நிலைக்குக் காரணமான சண்டனை அழித்து, அங்குள்ள மக்களை மீட்பேன். நான் பாடிய பதிகத்துக்கும், பாசுரத்துக்கும் சக்தி உண்டு எனில், அரியும், சிவனும் ஒன்றே என்ற என் எண்ணத்தின் மீது நம்பிக்கை வைத்து இந்த தெய்வங்களைக் கேட்கிறேன்,நான் வணங்கும் தெய்வங்கள் நாளை இரவுக்குள் இதற்கான தீர்வை எனக்குக் காட்டிக் கொடுக்க வேண்டும்” எனப் பெருமாள் சிலைக்கு முன் சங்கல்பம் எடுத்தாள்.
கேட்டவர்களுக்கு மேனி சிலிர்த்தது, “ஏழுமலையான் நிச்சயம் அருள் புரிவான்” திருமலை வாசன் நம்பிக்கை தெரிவித்தான். அன்றை இரவில் பாதி ஆட்கள் காவலுக்கு விழித்து, மீதி ஆட்கள் உறங்கினர்.
கழுவன் கூட்டத்தில், பத்மாசினியின் ஒரு மூலிகையிலேயே ராக்காயின் மகன் தங்கத்தின் ரணங்களில் நல்ல குணம் தெரிந்தது. மற்ற பொடிசு பிள்ளைகள், “ஆத்தா, அத்தா” அவளையே சுற்றி அமர்ந்திருக்க, பத்மாசினி தந்த தானியத்தில் பிள்ளைகளுக்கு வெகு நாள் கழித்து, வயிறார உணவிட்டு, வயிறும், மனசும் நிறைந்து,
“மகராசி, நீ நல்லா இருக்கனும்” பத்மாசினியை மனதார வாழ்த்தினார்.
வணிகர்கள் தொடர்ந்து பயணிக்க எண்ணி, பூஜைப் பொருள்கள் மற்றும் பெருமாள் விக்கிரகம் வைத்திருந்த பெட்டிகளைத் தூக்க முயன்ற போது, அவற்றை அசைக்க முடியவில்லை! வேறு வழியில்லாமல், பெட்டிகளோடு அங்கேயே தங்கினர்.
அன்று இரவு, ஒரு பெரியவர் கனவில் பெருமாள் காட்சி தந்து, “யாரும் பயம் கொள்ள வேண்டாம். இப்பகுதி மக்கள் உங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள். நாளை காலை, பெட்டியிலிருந்து ஒரு வஸ்திரத்தைக் கருடன் தூக்கிச் சென்று கண்மாக்குக் கீழ்ப்புறத்தில் புளியமரத்தில் போட்டு, மூன்று முறை குரல் எழுப்பும். அந்த இடத்தில் என் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்புங்கள்" என்று சொல்லி மறைந்தார். கண் விழித்த பெரியவர், இதைச் சொல்ல,
“எனக்கும் இதே போல் கட்டளை வந்தது” என பத்மாசினி, திருமலை இருவருமே கூறினார். பெருமாள் அருளை வியந்து போற்றினர்.
மறுநாள், வானத்தில் வட்டமிட்ட கருடன், பெட்டியிலிருந்த அங்கவஸ்திரத்தைத் தூக்கிச் சென்று, அருகிருந்த புளியமரத்தில் போட்டது. திருமலை வாசனும், வல்லபனும் கருடனைத் தொடர்ந்து சென்று புளியமரத்தை அடையாளம் கண்டு வந்தனர்.
“சித்த பண்டு” என மக்கள் தூரத்திலிருந்தே கூச்சலிட்டனர். அந்த இடத்திலேயே விக்கிரகத்தை அமைத்து, தேவியர் சகிதராக பெருமாளைப் பிரதிஷ்டை செய்து, வழிபட உத்தரவும் கிடைத்தது.
கோவில் இல்லாத ஊரில் குடி இருக்காதே என்பார்கள். இங்குக் கோவிலைப் பிரதிஷ்டை செய்து, குடிகளை நிறுவும் பணியைச் செய்தனர், வாசனும், பத்மையும். வணிகர்கள் கொண்டுவந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளைப் பெருமாளை பிரதிஷ்டை செய்ய வாசனும், பத்மையும் ஆளோடு ஆளாக உடல் உழைப்பையும் தந்தனர்.
பேச்சோடு, பேச்சாக வணிகர் இந்த சிலைகள் திருப்பதி மலையடிவாரத்தில் செய்ய பட்டவை என்ற தகவலையும், ஒரே போல் ஒன்பது பெருமாள் சிலைகள் வடிக்க பட்டு மரகதபுரிக்கு அனுப்ப பட்டதையும் சொன்னார்.
“மற்ற சிலைகள் எங்கே” பத்மாசினி வினவ, நான்கு சிலைகளை தங்கள் வணிகர் கூட்டம் தூக்கி வந்ததாகவும், மற்றவர்கள் முன்பே கிளம்பி விட்டார்கள். பௌர்ணமி திதியில் எழுமலை திருமாணிக்கம் கோவிலில் சந்திப்பதாக பேச்சு” என்ற தகவலையும் சொன்னார்.
“ முதலில் இந்த சிலைகளை பிரதிஷ்டை செய்வோம். அடுத்தடுத்து உத்தரவு வரும்” என வேளையில் இறங்கினர்.
பெருமாள் சிலைகளைப் பிரதிஷ்டை செய்யும் நாளும் வந்தது. வைணவ பட்டர்களை ரகசியமாக வரவழைத்து யாகங்களை வளர்த்து மந்திரம் ஜபித்து மூன்று ஜாம பூஜைகளைச் செய்து சிலைகள் உரு ஏற்ற பட்டன.
இங்கே விக்கிரகங்களுக்குச் சக்தி கொடுக்க அங்கே மரகதபுரியில் சண்டனுக்கு உடல் எரிச்சல் தர ஆரம்பித்தது. தெய்வ சக்திகளை முடக்கி, தன் சக்திகளைப் பெருக்கி வைத்திருந்தான். உடல் எரிச்சல் அடையவும் யட்சிணிகளை ஏவி, விவரம் அறிந்து வர சொன்னான்.
சித்தபண்டூரையும், பத்மாசினி, திருமலை வாசனையும் அது காட்டிக் கொடுக்க, யாகத்தை அழிக்கவும், பிரதிஷ்டையைத் தடுக்கவும், தான் வசப்படுத்தி வைத்திருந்த துர்சக்தி கருமனை சித்தபண்டூரை நோக்கி அனுப்பி வைத்தான்.
கருமான், கரும்புகை போன்ற ஓர் உருவம், சித்தபண்டூருக்குள் வந்தது. அந்த உருவத்தைப் பார்த்து அஞ்சி நடுங்கிய வணிகராக, “நம் முயற்சிகள் யாவும் தோல்வியா” எனக் கலங்க, திருமலைவாசன், பத்மாசினி வல்லபன் மூவர், அதனைத் தாக்க ஆயத்தமாகி நின்றனர்.
மனிதர்களுக்கெல்லாம் அடங்காத பிசாசாக, பிரம்மாண்டாக மனித ஆற்றலுக்குக் கட்டுப் படாததாக யாகத்தை நோக்கி வர, அவ்வளவு நேரமும் காலை நொண்டியபடி குறுகி அமர்ந்திருந்த ராக்கம்மாள் மகன் தங்கம், ஆஜானுபாகுவாக தண்டம் தாங்கி உயர்ந்து நின்று,
“யார் எல்லையில் வந்து உன் வேலையை காட்டுகிறாய். இது கருப்பன் பூமி, என் அய்யன் வேங்கடவன் சேவைக்கே பிறப்பெடுத்து, அவன் எல்லையைக் காவல் காப்பவன்” எனக் கருப்பன் கர்ஜித்து நிற்க, கருமனும் “பார்க்கலாம்” என நெடிந்து நின்றது.
காற்றின் வேகத்தில் வந்து வெள்ளைக் குதிரை ஒன்றில் கருப்பன் ஆயுதங்கள் இருக்க, ஒரே பாய்ச்சலில் அதன் மீதேறி ஆக்ரோஷமாய் பாய்ந்தது.
கருப்பனுக்கு முன் கருமானால் தாக்கு பிடிக்க முடியவில்லை, தன சக்தியெல்லாம் வடிந்து அங்கேயே விழுந்து, “என்னை சம்காரம் செய்து மோட்சம் கொடுங்கள்” என வேண்ட, “பெருமாள் பிரதிஷ்டையின் போது, எப்படி ரத்தம் சிந்துவது” திருமலை தயங்கினார்.
அடங்காமல் கொண்டிருந்த கருப்பை பார்த்த பத்மாசினி,
“கட்டாயம் பிரவேச பலி கொடுக்கணும்.” என்றவர், கருப்பனை , “உன் காவல் எல்லைக்குச் செல் அப்பனே. நான் உன் பலியைக் கொண்டு வருகிறேன்” என விண்ணப்பித்துக் கொண்டாள்.
“பலியைக் கொடு. இந்த இடத்துக்கு நிண்டு காவல் காக்குறேன்” தங்கத்தின் மேல் ஆவாகனமாகியிருந்த கருப்பன் சொல்ல,
பத்மாசினியும் அருள் வந்தவளாக அதன் எல்லைக்குச் சென்று, கருமனைப் பலி கொடுத்தது. ஒரு தீச சக்தியைப் பாலி கொடுக்க, அதன் துற ஆற்றல்களைக் கறுப்பன் தன் காலடியில் பொசுக்கி, பலியையும் ஏற்று ,
“இங்கும், இந்த கோவிலின் துவஜ கம்பத்திலும் நிலைத்து நிற்பேன்” என வாக்கு தந்தது. எந்த தடையும் இன்றி பெருமாள் விக்ரகங்கள் பிரதிஷ்டை நடந்தேற, திருப்பதி மலை வாழ் வேங்கடவன் மந்தகாச புன்னகையோடு, அடுத்த லீலைகளை அரங்கேற்றக் காத்திருந்தான்.
நாயக்கர் காலம், சித்தபண்டூர் ஸ்ரீதேவி-பூதேவி உடன் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் கோவிலில் பொங்கல் வைத்து , படையல் போட்டு வைணவ பூசையை முடித்து அமர்ந்திருந்த கழுவன் குடும்பத்திடம் யோகி வல்லபர் பத்மாசினி கதையைச் சொல்லிக் கொண்டிருக்க, முந்நூறு ஆண்டுகள் கழித்து மறுஜென்மம் எடுத்திருந்த திருமலை வாசன்-பத்மாசினியும், வேங்கடவன்-பதுமமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
“மற்ற சிலைகள் என்ன ஆனது, எழுமலை கோவிலில் சந்திச்சாங்களா. மரகதபுரிக்கு என்ன ஆச்சு. வீர சிம்மன் பிழைத்தாரா. சுண்டனுக்குத் தண்டனை கிடைத்ததா” கழுவன் குடும்ப பிள்ளைகள் ஆர்வமாகக் கேட்க,
“ சாமியை சேவிச்சுட்டு வாங்கோ. பிறகு சொல்றேன்” என்றார் யோகி.
இந்த கதை நடக்கும் காலத்திற்கு ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகளுக்கு முன்,நாயக்கர், ராயர் வம்சம் உருவாகும் முன் நாராயண வனத்திலிருந்து, சந்திரகிரி, வேங்கடம், காளஹஸ்தி, தொண்டை நாடு வரையான நாட்டை ஆண்டவர்கள் சாளுக்கிய யாதவராயர். மலைக் கோட்டைகளைக் கொண்டதால், மாளவராயன் , சந்திர குலத்தில் வந்ததால் சந்திரகுல திலகம் என்ற பட்ட பெயர்களைக் கொண்டனர். சாளுக்கியச் சோழர் காலத்தில் மேன்மையுற்றிருந்த இவர்கள் வம்சம்.
சந்திர கிரியை நரசிங்கராயர் எனும் தமையன் ஆள, இளவரசன் திருமலை வாசன் படைகளுக்குத் தலைமை தாங்கி, போர்களுக்குச் சென்று வந்தான். வீரநரசிங்கராயர் , போசள தண்டநாயகன் மகளை மணந்தவர்.
திருமலைவாசன், மரகதபுரி ராஜ்யத்தின் வீரசிம்மன் மகள் பத்மாசினியை அவள் தந்தையை எதிர்த்து காதல் மணம் புரிந்து, சந்திரகிரிக்கு அழைத்து வந்து விட்டான். வைணவனை மணம் புரிந்து சென்ற மகளையும் சேர்த்து வெறுத்து ஒதுக்கினார் வீரசிம்மன்.
ஆனால் நரசிம்மராயர் தம்பியின் விருப்பத்துக்கு மரியாதை தந்து, பத்மாசினியை தங்கள் வீட்டு மருமகளாக ஏற்றார். திருமலை வாசனும், பத்மாசினியும் நல்லறமாக, இல்லறம் நடத்தி வந்தனர். வீர சைவ மரபில் பிறந்து பதிகங்களைப் பயின்றிருந்தவளுக்கு, வைணவ பாசுரங்களும், திருமால் பெருமைகளையும் கேட்கத் திகட்டவில்லை. ஏழுமலையான் முழுதுமாய் ஆட்கொண்டிருக்க, நித்திய பூஜைகளை விடாமல் செய்தாள். பதினான்கு ஆண்டுகள் கடந்திருந்தது.
பத்மாசினி இரு வீர மகன்களைப் பெற்றிருந்தாள். அவர்களுக்கு ஆயகலைகள் பயிற்றுவிக்கும் பொறுப்பை ஏற்றிருந்ததால், வாள், வேல் வித்தையையும் கணவனிடமே பயின்று, அவன் வெளிதேசம் சென்றிருக்கும் சமயங்களில் தானே மகன்களுக்குப் பயிற்றுவித்து வீரப்பெண்மணியாக திகழ்ந்தாள்.
புகுந்த வீட்டில், நாட்டில் எவ்வளவு செல்வாக்கு பெற்றிருந்த போதும், மரகத புரியும், தகப்பன் வீரசிம்மனும் தன்னை ஏற்க வில்லையே என்ற குறை இருந்தது. பத்மாசினி சிறுவயதில் தாயை இழந்தவள், பன்னெடுங்காலம் தனி மனிதனாய் நின்று மகளை வளர்த்தவர், இவள் சந்திரகிரி வந்த பின், மற்றொரு பெண்ணை மணந்ததாகச் செய்தி வந்தது.
முதலில் அதிர்ந்தாலும், அவருக்கும் துணை வேண்டுமே என ஆசுவாசம் அடைந்திருந்தாள். சில வருடங்களாக எந்த தகவலும் இல்லை. விசாரிக்க வேண்டும் என மனதில் எண்ணிக் கொண்டாள்.
போசாளர்கள் தில்லி சுல்தான்கள் தாக்குதலை சமயத்துக்குத் தகுந்தாற் போல், பதுங்கியோ, பாய்ந்தோ, கப்பம் கட்டியோ சமாளிக்க, யாதவராயர்களும் அதற்கேற்றாற்போல் செயலாற்றினார்.
திருமலைவாசன், போசாளர்களுடன் இணைந்து சுல்தான்களின் ஒரு பிரிவை அடக்க வடமேற்கில் படையெடுத்துச் சென்றிருந்தவன் இன்று தான் திரும்பி வந்திருந்தான். சுல்தான்கள் எங்கெங்கோ கொள்ளையடித்து வைத்திருந்ததைச் செல்வங்கள் இவர்கள் வசமாக, தங்கள் பங்கை அரண்மனைக்குக் கொண்டு வந்திருந்தான். இப்படி வரும் செல்வதை நான்கு பகுதியாக்கி ஏழுமலையான், வீரர்கள், அரசன் மற்றும் கருவூலத்துக்கு எனப் பிரித்து அனுப்பி விடுவார்கள்.
பத்மாசினி தங்கள் மாளிகையின் உப்பரிகையில் கணவனுக்காகக் காத்திருந்தாள். அவளது வாசவராயன் சென்று வென்று வந்த கதையைக் கேட்பதில் அவளுக்கு அவ்வளவு பிரியம்.
பள்ளியறை எங்கும் அகிற்புகை போட்டு, ஆங்காங்கே அலங்கார விளக்குகள் ஏற்றி, திரைச்சீலைகள் அசையும் பொழுது காற்றோடு சுகந்தமும் வருவது போல் குவளைகளில் பூக்களை அடுக்கி, தானும் செவ்விதழ் பதுமம் சூடி, கவனமாய் அலங்கரித்து அவனுக்காகக் காத்திருந்தாள். வாசனும் குளித்து புத்தாடை உடுத்தி, அத்தரும் ஜவ்வாதும் மணக்க, கையில் ஒரு நகைப் பெட்டியை ஏந்தியபடி அவளைத் தேடி வந்தான். இன்முகத்தோடு இருவரும் ஆறத் தழுவிக் கொண்டனர்.
“பத்மை பகலில் தான் மலரும் என்பார்கள், அது பொய்யோ” அவள் முகத்தை நிமிர்த்திக் கேட்க,
“பத்மை இருளை விரட்டும் இரவி யை பார்த்து மலரும், எனது ஒளி என் வாசவர் தானே” அவன் முகத்தை ஆசை தீரப் பார்த்து,அவன் கன்னத்தில் தன் இதழ் பதிக்க, திருமலை வாசனுக்கு ரோமம் எல்லாம் சிலிர்த்தது.
“அன்று மலர்ந்தது போல், இன்றும் உன் விழிகளில் எனை காணும் ஆவல் நேசம், பதின் வருடங்களில் பன்மடங்காகியிருக்கிறதே தவிர,ஒருநாளும் மங்கியதில்லை. என்ன மாயம் பத்மை” அவன் வியக்க,
‘அதை நானல்லவா கேட்க வேண்டும். அப்படி என்ன மாயம் செய்தீர். உங்கள் மீது நேசம் வளர்ந்து கொண்டே போகிறதே. ஒரு வேளை பெயர் பொருத்தம். மலைமேல் அமர்ந்திருப்பவரைப் போலவே, நீங்களும் மாயக்காரரோ, என்னை மயக்கும் வித்தை தெரிந்து வைத்திருக்கிறீர்கள்”
“அதை நானல்லவா சொல்ல வேண்டும், பதுமம் நிறை முகத்தைக் காண ஓடோடியல்லவா வந்துள்ளேன்”
“ஆஹா, பகலில் கோட்டைக்குள் வந்தவர், இரவு இரண்டாம் சாமத்தில் ஓடோடி வந்ததிலிருந்தே தெரிகிறது உங்கள் ஆவல்” அவள் குறைபட,
“என்ன செய்யட்டும் பத்மை. என் அலுவல் அப்படி.” என்றவன், மனைவியை மஞ்சத்தில் அமர்த்தி தானும் அருகில் அமர்ந்து, “சுல்தானின் பொக்கிஷத்திலிருந்தது. என் பொக்கிஷத்தின் மீதல்லவா இருக்க வேண்டும்”என மரப் பெட்டியிலிருந்து அட்டிகை,நெத்திசூடி இரண்டையும் எடுத்துக் கொடுக்க, அதன் மிளிர்வில் அந்த அறையே ஒளிர்ந்தது.
“வாசவரே, இதென்ன இவ்வளவு ஒளி பொருந்தியவையாக இருக்கின்றன” ஆச்சரியப் பட
“ஆம் தேவி, நவரத்தினங்களை வைத்துச் செய்யப்பட்டது. உனக்குப் பொருத்தம் என எடுத்து வைத்தேன். சூட்டிக் காட்டு” அவள் கழுத்தில் வைக்க,
“உயர்வான ஆபரணம் எனில், வேங்கடவனுக்குக் காணிக்கை ஆக்கலாமே” அவள் தயங்க,
“இதிலும் பன்மடங்கு ஒளி பொருந்தியதைக் கோவிந்தனுக்கு எடுத்து வைத்தாகி விட்டது. நாளை சென்று ஏழுமலையானுக்கு சாத்தி விட்டு வருவோம்” என விடாப்பிடியாக பத்மாசினிக்கு, நவரத்தின அட்டிகையையும், சூட்டியையும் தானே சூட்டி விட, அவள் தெய்வ அம்சமாக மிளிர்ந்தாள்.
“சாட்சாத் பத்மாசினி அம்மை தான்.தனி சோபையுடன் அம்சமாய் இருக்கிறாய் பத்மை” அவன் புகழ.
“போதும் உங்கள் பாராட்டு.அடுத்த முறை படையெடுத்துச் செல்லும் போது, என்னையும் உடன் அழைத்துச் செல்லுங்கள்.” என்றாள்.
“ எதற்காம். நீ இருக்கும் தைரியத்தில் தான் சந்திரகிரி கோட்டையை விட்டுச் செல்கிறேன். சென்றவாரம் இளையராணி நிகழ்த்திய சம்ஹாரத்தை நாடே பேசுகிறதே” எனப் பாராட்ட,
“கோவிலுக்குச் செல்லும் வழியில் வழிப்பறியில் ஈடுபட்ட கள்வர்களுக்குப் பாடம் புகட்டினேன். பிறகு உங்களிடம் கற்ற கலையை எங்காவது உபயோகப் படுத்த வேண்டும் அல்லவா? அதனால் தான் மாறுவேடத்தில் உங்கள் மெய்காப்பாளனாக இருந்து கொள்கிறேன் என்கிறேன் ” அவள் சிணுங்க,
“உன் மெய்யை அருகில் வைத்துக் கொண்டு? என் கவனம் முழுதும் அதில் அல்லவா இருக்கும்.?” விஷமமாய் வினவியவன் பார்வையும் அவள் மெய்யை மேய, பத்மாசினியின் முகம் மட்டுமின்றி, வதனமே செம்பதுமம் நிறத்துக்கு மாற, வாசவரும் கள் உண்ட வண்டு போல் அவளை மொய்க்கப் பாவை அவள் பார்வையைத் தழைத்துக் கொண்டாள்.
அன்று முதல் திருமலை வாசன் போட்டு விட்ட நெற்றி சூட்டியும், கழுத்தை ஒட்டிய அட்டிகையும் பத்மாசினியின் அடையாளங்கள் ஆனது. பண்டை கால மங்கையர் போல் காதல், வீரம், பக்தி என எல்லாவற்றிலும் பத்மாசினி சிறந்து விளங்கினாள்.
திருமலைவாசன் வெற்றியுடன் திரும்பி வந்தமைக்கு நரசிம்மராயர் விழா எடுத்தார். பெரியவருக்கு இரண்டும் பெண் பிள்ளைகளாய் போக, இளையவரின் மகன்களை இளவரசர்களாக வளர்த்தார். அவர்களும் பெற்றவரிடம் வீர கலைகளை கற்றவர்கள், சலுகை கொஞ்ச பெத்த நாயினா, பெத்தம்மாவிடம் தான் சென்றார்கள்.
வெற்றி விழா வெகு சிறப்பாக நடக்க, உப்பரிகையில், இரு மகன்கள், அண்ணன் மகள்கள் மனைவி பத்மாசினியுடன் அமர்ந்து திருமலைவாசன் மக்களுக்குக் காட்சி கொடுத்தான். சற்று பொறுத்து நரசிம்மராயரும் மனைவியோடு வந்து சேர, வாழ்த்தொலி சந்திரகிரி கோட்டையை நிறைக்க, மகன்களுக்கும் பெருமை, “நயினா, இதே போல் நாங்களும் போர் புரிந்து வெற்றி பெறுவோம்.”எனவும், திருமலை வாசன்,”ஜெய் ஜக்கம்மா” என்று சொல்ல, மகன்களும் மக்களும், மன்னனும் மொத்த கூட்டமும், “ஜெய் ஜக்கம்மா” என்றது.
வீரர்களுக்கும், தளபதிகளுக்கும் அவரவர் பங்கு வழங்கப்பட, அங்குக் கூடியிருந்த பொது மக்களுக்கும் பொற்காசுகளை பரிசாய் வழங்கினர்.
“ராசா, மகாராசா நல்லா இருக்கனும்” என குடியானவர்கள் வாழ்த்தினர். விழா உற்சாகமாக நடந்துக் கொண்டிருக்க, சோகமே வடிவாக ஒரு பெண் தனியாக நின்றிருக்க, பத்மாசினியின் கண்ணில் அவள் தென்பட்டாள். கூர்ந்து நோக்க, மரகதபுரியில் சண்டனிடமிருந்து அவர்களால் காப்பாற்றப் பட்ட தோழி.
விழா முடியவும், அவளை தன்னிடம் அழைத்து வரச் சொல்லி, சேடிப்பெண்ணை அனுப்பி விட்டாள்.
பதமாஷினி, திருமலை வாசனின் விதி அடுத்த கட்ட பயணத்துக்கான வ அவர்களை அழைத்துச் செல்ல வந்தது. பாரத நாடெங்கும் பீடித்த ஊழ்வினையும் அந்நிய படையெடுப்பும் அவர்கள் வாழ்விலும் மாற்றங்கள் நிகழ பெரும் காரணிகளாக அமைந்தன.
இரவு நேரமாகிவிட்டதால், காலையில் தான் அந்த பெண்ணுக்கும் பேட்டி கொடுத்தனர். அதற்குள் மரகதபுரி பற்றி அறிந்து கொள்ளும் பரபரப்பு பத்மாசினியிடம் காண பட, “பத்மை, இன்றைய நாளின் மகிழ்வை மனதார அனுபவிப்போம், மற்றதை நாளை பார்த்துக் கொள்வோம்” என்றான்.
“மனம் ஒரு நிலையில் இல்லை வாசவரே” மஞ்சத்தில் சாய்ந்திருந்தவன், நெஞ்சத்தில் சாய்ந்து கொண்டு அவள் புலம்ப, தன்னை நோக்கி அவளைத் திருப்பிக் கொண்டவன், “மனதை வாசவன் மேல் செலுத்த பத்மை” அவள் நெற்றி சூட்டியில் இதழொற்ற, “சூட்டிக்கு தானோ, பத்மைக்கு இல்லையோ” அவள் சிணுங்க, “பத்மை சூடியிருப்பதால் தானே, நெற்றி சூட்டிக்கே அழகு கூடியிருக்கிறது” அவன் காதல் வசனம் பேச, “ஆஹா அப்படியா”அதிகபடியாய் வியக்க இருவருக்குள்ளும் பேச்சு விரிந்து,சிரிப்பு மலர்ந்தது.
மரகதபுரியில் முன்பு இவர்களால் காப்பாற்றப் பட்ட தோழி, அவர்கள் தேசத்தில் சண்ட மாருதன் அட்டகாசம் அதிகரித்ததாகவும், வீரசிம்மனை வசியம் செய்து, அடாத காரியம் செய்கிறான். துக்கிரி மலையிலிருந்தவன், தற்போது அரண்மனைக்குள் வந்து அமர்ந்திருக்கிறான். மந்திர தந்திரங்களைச் செய்து உக்கிரமான தெய்வங்களை வழிபடுவதாகவும், அதன் ஒரு வழியாக, நாடெங்கும் உள்ள பெருமாள் கோவில்களில் சிலைகளை பின்னபடுத்தி சக்தி இழக்க வைக்கச் செய்கிறான். இதைக் கண்ட வணிகர்கள் நாட்டை துறந்து வெவ்வேறு பகுதிகளுக்கு சாமி விக்கிரகங்களையும் சுமந்துகொண்டு கூட்டம் கூட்டமாக வெளியேறுகின்றனர். மரகதபுரியை காப்பாற்ற தங்களால் தான் முடியும் எனக் கோரிக்கை வைத்தாள்.
அவள் சொன்னதைக் கேட்டு பத்மாசினிக்கு மனம் பொறுக்க வில்லை. அவளது தந்தை ஆக சிறந்த சிவபக்தர். சோழர்கள் தொகுத்த தேவார பதிகங்களை மரகதபுரி மக்களுக்குச் சொல்லிக் கொடுக்க வாத்தியார்களை ஏற்பாடு செய்தவர். எங்கே எப்படித் தவறு நேர்ந்தது, எனச் சிந்தித்தவள், திருமலை வாசனிடம் சொல்லிக் கலங்கினாள்.
திருமலை, தன் நண்பனும் படைத் தளபதியுமான வல்லபனை அழைத்து விவரம் சேகரித்து வரச் சொன்னார்.
“வாசவரே, அந்த கால தாமதமும் தான் எதற்கு, நாமே சென்று பார்ப்போம்.” எனவும் யோசித்த யாதவராயர் இளவல், மூத்தவரிடம் பேசச் சென்றான்.
அதற்குள் பத்மாசினி கிளம்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தாள். மகன்களை அழைத்து அறிவுரைகள் கூற, “தாங்கள் எங்கே செல்கிறீர்கள்” வினவ, மரகதபுரியை பற்றிச் சொன்னவள், “பெற்ற கடன் தீர்த்து விட்டு வருகிறேன்” என மகன்களை உச்சி முகர்ந்தாள்.
வாசனோடு, ராஜாவும், ராணியும், இரண்டு மகள்களுமே வந்து விட்டனர். “பத்மா, அவசியம் நீ சென்று தான் ஆகவேண்டுமா. மந்திரம், தந்திரம் என்று ஏதேதோ சொல்கிறார்களே” ராணி வினவ,
“ஒரு முறை நேரில் கண்டுவிட்டால், மனம் ஆசுவாசம் அடையும் அக்கா” எனச் சொல்ல,
“தம்பி, மரகத புரி கிளம்பும் முன் ஏழுமலையானைத் தரிசித்து வந்து விடலாம். மலையில் ஆச்சாரியார் இருப்பார், அவரிடம் மந்திர, தந்திரங்களுக்கும் ஏதேனும் தீர்வு இருக்கும்” ராஜ நரசிம்மர் யோசனை சொல்ல, அதன் படி மலைக்கும் சென்றனர்.
பத்மாசினியும்,திருமலை வாசனும், ஏழுமலையான் முன் மெய் மறந்து நின்றார்கள். விலையுயர்ந்த நகைகளைச் சமர்ப்பித்து விட்டு, தாம் செல்லும் காரியம் நல்ல படியாக நடக்க அருள்புரியச் சொல்லிப் பிரார்த்தித்தனர். பெருமாளைப் பிரியப்போகும் கவலை, பத்மாசினி கண்ணில் கண்ணீர் தாரையாக ஊற்ற, “பெருமாளே, எப்போதும் நீ என்னுடனே இருக்க வேண்டும். ஜென்ம, ஜென்மமாய் உனக்குச் சேவை செய்ய வேண்டும். அந்த பாக்கியத்தை மட்டும் கொடு” என வேண்டிக் கொண்டாள்.
சன்னிதியில் நின்ற ஆச்சாரியார் வெளி பிரகாரத்தில் வந்து அமர்ந்து விட்டார். அவருள் அவன் பேசினான், “ஆகட்டும் ஸ்ரீவாசா”தலையை ஆட்டிக் கொண்டவர் முன், தம்பதிகள் வந்து நின்றனர்.
“உங்களுக்கான பெரும் பணி காத்திருக்கிறது. தென்னகம் எங்கும் ஸ்ரீனிவாச பெருமாளை ஸ்தாபித்து, கடவுள் நம்பிக்கையை வலுப்பெறச் செய்வது உங்கள் கடமை. கருடன் வழி காட்டுவான். அவன் சித்தப்படி உங்கள் பயணம் தொடரட்டும்” என ஆசீர்வதித்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் விக்ரகத்தை அவர்கள் கையில் கொடுத்தவர், “நித்திய பூஜையைத் தவறாமல் செய்யுங்கள். ஏழுமலையான் வழி நடத்துவான்” என்றார். பத்மாசினியும், திருமலை வாசனும் பக்தியுடன் பணிந்து வாங்கிக் கொண்டனர்.
சந்திரகிரி கோட்டைக்கு வந்தவர்கள், மகன்களிடம் சொல்லிக் கொண்டனர்.
“பாரத தேசத்திற்குக் கடுமையான காலம் என்றார் ஆச்சாரியார், வடமேற்கிலிருந்து ஊடுருவி இருக்கும் வேற்று மதத்தினர் சிலை மறுப்பு கொள்கை உடையவர்கள் நாட்டை சூறையாடுகின்றனராம். அரண்மனை கோட்டைகளைக் கொள்ளையடிப்பது போல் கோவில்களிலும் தமது கை வரிசையைக் காட்டுகின்றனர். நமது ராஜ்ஜியமே ஆபத்தில் தான் இருக்கிறது என்கின்றனர்.ஆனாலும்,பெருமாள் நம்மைக் காத்து அருள்வான். மரகதபுரியிலிருந்து உதவி எனக் கேட்பவருக்கு மறுக்க இயலாது. முதலில் வணிகர்களைத் தடுத்து நிறுத்துங்கள். பிள்ளைகள் இங்கே இருக்கட்டும். “ வீர நரசிம்மர் உத்தரவு தர, மகன்களை அவரிடம் ஒப்படைத்து விட்டு, வல்லபனுடன் மரகதபுரிக்கு கிளம்ப, சிறு படையும் சாதாரண குடிகள் போல் பத்மாசினி, திருமலை வாசனுடன் கிளம்பினர்.
பத்மாசினியும், திருமலை வாசனும் மரகதபுரி நாட்டுக்குள் நுழைய முடியாமல், சண்டன் யட்சினிகளை ஏவி இருந்தான். பத்மாசினி ஆச்சாரியார் கொடுத்த பெருமாள் விக்ரகத்தை மனமார பிரார்த்தித்து மந்திரங்களை உச்சரித்து பூஜை செய்தாள்.
வல்லபன், தெற்கே பயணித்துக் கொண்டிருந்த வணிகர் கூட்டத்தை நிறுத்தி தகவல் அறிந்து வந்தார்.கடந்த பதினான்கு வருடத்தில் வீரசிம்மனின் வைணவ எதிர்ப்பு கொள்கையானது, சிவ பூஜையையும் நித்திய வழிபாட்டையும் துறக்கும் அளவு எல்லை மீறி சென்றிருக்கிறது. சண்டனால் வரும் ஆபத்தை விட,வீர சிம்மனால் தொல்லைக்கு ஆளாகின்றனர். பெரும்பாலான வணிகர்கள் தங்கள் வணிக துறைமுகத்தை மாற்றி அமைத்துக் கொண்டனர்.
சண்டன், வீரசிம்மனின் வைணவ எதிர்ப்பை தனக்குச் சாதகமாக்கி அவருக்கு உதவுவது போல், சில சித்து வேலைகள் செய்து,வைணவர்களைப் பயமுறுத்தி நாட்டை விட்டு ஓட செய்தான். சில யாகங்களைத் தம்பதி சமேதராக செய்தால் கூடுதல் நன்மை என்று சொல்லி, தான் வசியப்படுத்தி வைத்து இருக்கும் பெண்ணையே வீர சிம்மனுக்கு மணமுடிக்க வைத்து, அவள் மூலமே அவரையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தான். வல்லபர் இந்த விவரங்களைச் சொல்ல, “இறைவா ஏன் இந்த சோதனை. முன்பு அவர் செய்த நல்வினைகளுக்காகவாவது கருணை காட்டக் கூடாதா” பத்மாசினி மனமுருகி வேண்டினாள்.
இறைவனும், மகள் மூலமே தந்தைக்கும் விமோசனம் என எழுதி வைத்திருப்பான் போலும், பத்மாசினி தொடர்ந்து பெருமாள் நாமாவளியும், சைவ திருப் பதிகங்களையும் பாட, பாட மரகதபுரியை சுற்றி கட்ட பட்டிருந்த கட்டுகள் தகர்ந்தன.
திருமலையில் ஆச்சாரியார், வாசவனிடம் சில பீஜ மந்திரங்களைச் சொல்லி, இடை விடாமல் நூற்றியெட்டு முறை சொல்லச் சொல்லி இருக்க, அதனை தற்போது உபயோகித்தான்.
இது தந்திரங்களுக்கு மாற்றான மந்திரங்கள். இதை உச்சரிப்பதன் மூலம், தந்திரம் பயனற்று செய்தவனைச் சென்று தாக்கும். சண்டனின் மந்திர தந்திரங்களை வென்று விட்டால், அவனைக் கொள்வதும் சுலபம் எனக் கணக்குப் போட்டனர்.
ஆகவே, மந்திரங்களை உச்சரிக்க, மார்கதபுரிக்கு செல்ல பாதை கிடைத்தது. கவச மாலைகள் அணிந்திருந்தவர்கள், அதனுள் பயணித்து மாளிகை வரை சென்று விட, அங்கே வீரசிம்மன் உடல் வெட்டி இழுக்கத் துடித்துக் கொண்டிருந்தார். இவர்கள் முன்னேற, முன்னேற வீரசிம்மன் உடலில் மாற்றங்கள் நிகழ்ந்தது.
"அங்கேயே நில் மீறி வந்தால் உன் தகப்பன் உயிர் பிரியும், அதே நேரம் மரகதபுரியும் மண்ணோடு மண்ணாகிப் போகும்” என மிரட்ட, தந்தை படும் பாட்டை பார்த்து பின் வாங்கினாள்.
"அங்கேயே நில் மீறி வந்தால் உன் தகப்பன் உயிர் பிரியும், அதே நேரம் மரகதபுரியும் மண்ணோடு மண்ணாகிப் போகும்” என மிரட்ட, தந்தை படும் பாட்டை பார்த்து பின் வாங்கினாள்.
அதோடு நில்லாமல் சண்டன் ஏவிய யட்சிணி அவர்களை தெற்கு நோக்கி துரத்துகிறது. பத்மாசினியும், திருமலைவாசனும் பெருமாள் விக்ரகத்தோடு செல்ல கருடன் வழி காட்டியது.
வழி எங்கும் சுல்தான் படைகள் அட்டகாசம் செய்ய, சிலைகளைப் பாதுகாத்துக் கொண்டே இயன்றவர்களை காப்பாத்திக் கொண்டு மதுராபுரி வந்து சேர்ந்தனர்.
வைகை காட்டாற்று பிரவாகமாகத் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்க, பதமாசினியும், வாசவனும் அதனைக் கடக்கும் மார்க்கத்தை தேடிக் கொண்டிருந்தனர்.
அந்த நேரம், ஒரு பெண் பயந்து ஓடிவந்து கொண்டிருக்க, மூன்று ஆடவர் அவளைத் துரத்தி வந்தனர். சட்டென அந்த பெண்ணை காப்பாற்ற முடிவெடுத்த பத்மாசினி அவர்களை நோக்கி சென்றாள்
ஓடி களைத்த புள்ளி மானை சிறு நரிகள் வேட்டையாடப் பாய்வதைப் போல், பாய முனைய, மூவரும் நொடியில் மண்ணில் உருண்டனர். மாமிச மலை போல் இருந்தவர்கள் தாக்கியது யாரெனத் திரும்பிப் பார்க்கும் முன், பெண்ணை சூறையாட முற்படும் பெண் பித்தர்கள் , குற்றுயிராய் ஆகியிருந்தனர். ஆகரோசமாக் தாக்கும் பத்மாசினியை, தங்கள் மீனாட்ச்சை அம்மையின் மறு அம்சமாகவே நினைத்து,
“நன்றி தாயே” அவள் காலில் விழ போக, “ உங்களுக்கு என் அம்மாவின் வயது. இந்த பாவத்தைச் செய்யாதீர்கள்” அவள் யார் என கேட்கவும், அவள் தங்கள் கதையைச் சொல்ல, உங்கள் பெயர் என வினவ,
“ராக்காயி, கழுவன் வம்சத்தில் வாக்கப்பட்டவ” என்றாள்.
குண்டாற்றின் ஒரு கரையில் ராயர்கள் தங்கியிருக்கும் காட்டு மாளிகையும் மறு கரையில் சித்தபண்டூரில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலும் இருந்தது. இன்று கழுவன் குடும்பம் வேண்டுதலை நிறைவேற்ற அங்கு வருகின்றனர்.
வேங்கடவன் , காட்டு மாளிகைக்கு வந்திருந்தான். வானவனும் , தாமினியும் சின்ன கழுவன் குடியில் இருப்பதால், அவர்கள் கூட்டமும் அங்கே இடம் பெயர்ந்து இருந்தது. வீரர்களும், தற்போது காடழிக்கும் வேளையில் ஈடுபட்டு இருக்க, சிலர் புத்தூர் மலையடிவாரத்தில் கபிலன் தலைமையில் தேடுதலிலிருந்தனர்.
காட்டு மாளிகை ஆளரவமின்றி அமைதியாய் இருக்க, அந்த ஏகாந்தம் அவனுக்கு பிடித்தமான இருந்தது. கையில் ஒரு புல்லாங்குழல், திடியன் மலையடிவாரத்தில் பெருமாள் வெளிப்பட்ட தினத்திலிருந்து, இது அவனோடு உள்ளது.
“இந்த குழலை எனக்கு இசைக்குத் தெரியுமா.” நூறாவது முறையாகக் கேட்டுக் கொண்டான்.
அத்துவான மாளிகை, அபஸ்வரமாக வந்தாலும்,யாரு பரிகசக்க மாட்டார்கள். கழுதை கூட வரும் வாய்ப்பில்லை என மனம் தெளிந்தவன், “வாசித்துத் தான் பார்ப்போமே” அதரத்தில் குழலை வைத்து உதடு குவித்து காற்றைச் செலுத்த, “ஊ, பூ ,கூ” என்ற ஒலிகளே வந்தன. மீண்டும் முயல, கலகலவென நகையொலி.
“மாய குழலா, மாயவன் குழலா இல்லை, இல்லை மாயப்பெண் குழல்” என்றபடி மீண்டும் குழலை அதரத்தின் அருகில் கொண்டு செல்ல,
இந்தமுறை நகையொலி விரிந்து வலையோசை,கொலுசோசையோடு, பெண் உருவாக அவன் முன் தோன்றியது.
“ மாயவன் குழல் நகைக்கவும் செய்யுமோ வாசவரே” எதிர் இருந்து கேள்வி வர, “ பறக்கும் பாவை இருக்கும் பொழுது, மாய குழல் இருக்காதோ” பதிலாய் வந்தது கேள்வி .
“ பாவைக்குச் சிறக்கும் இல்லை, அவள் பறக்கவும் இல்லை, ஆபத்பாந்தவராய் வந்து சண்டனிடமிருந்து காத்தது நீங்கள் தான்.” அவள் நன்றி நவில, “யாரவன்”
“ வடக்கே தெரியும் மலையில் வாழும் துஷ்டன். மந்திர தந்திரங்கள் அறிந்தவன், பெண்களைப் பலி கொடுக்க கவர்ந்து செல்வான். நேற்று என் தோழிகளில் ஒருத்தியைக் கவர்ந்து சென்று கொண்டிருந்தான்.எனக்குத் தெரிந்த வித்தையைப் பிரயோகித்தும் அவனைத் தடுக்க முடியவில்லை, தக்க சமயத்தில் ஆபத்பாந்தவராய் தாங்கள் வந்தீர்கள்”
“அப்படியும் சொல்லி விட முடியாது, மலை போன்று இருந்த அரக்கனை, குறுங்கத்தியை வைத்துத் தாக்கிய துணிச்சல் பாராட்ட தக்கது “ என்றான்.
“போதும் உங்கள் புகழ் மொழி, தாங்கள் யாரென அறிந்து கொள்ளலாமா”
“பரிச்சயம் அறிந்தால், பாராமல் செல்லும் அபாயமும் இருக்கிறதே ” அவன் புதிர் போட,
“நன்றி மறத்தல் நன்றன்று, என நான் படித்திருக்கிறேன். உங்களுக்கு என்றும் கடமை பட்டவள், தைரியமாக உங்கள் பரிட்சயம் சொல்லலாம் “
அவன் தன் பரிச்சயம் சொல்ல, “ஆ”என அதிர்ந்தாள்.
அவன் திருமலை வாசன், யாதவராயர் குலத்தவன். இம்மதி நரசிங்க யாதவராயர் நாராயண வனத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்ய, அவரது இளவல் திருமலை வாச யாதவராயன் சந்திரகிரி கோட்டையை நிர்மாணித்துக் கொண்டிருந்தான். பெரும் பகுதி கட்டுமானம் முடிந்தது. இளவலுக்கு மணம் முடித்து அதில் குடியேற்ற மூத்தவர் எண்ணம் கொண்டு, இளவலுக்கு ஏற்ற இளவரசியைத் தேடிக் கொண்டிருந்தார்.
அவள் பத்மாசினி, சந்திரகிரி ராஜ்யத்துக்கும், காஞ்சி தேசத்துக்கும் இடைப்பட்ட மரகத புரி ராஜ்யத்தின் மன்னன் வீரசிம்மன் மகள்.
சிற்றரசு ஆனாலும் செல்வ வளம் மிக்கது . அங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் கடல் வணிகம் செய்பவர்கள். பல்லவ, சோழர்காலம் முதலே, திரைகடல் ஓடி திரவியம் தேடியவர்கள். கெளமாரத்தை தங்கள் சமயமாக ஏற்றவர்கள், வீரசைவர்களாகவும் இருந்தனர். பெருமாள் வாசஸ்தலமான திருப்பதி அமைந்திருக்கும் சந்திர கிரியை பகை ராஜ்யமாகக் கருதினர்.
சிறு வயதிலேயே பதமாஷினி அதற்கான காரணத்தைக் கேட்க, கொங்கண சித்தர் ஜீவசமாதி அடைந்த இடம், நம் கௌமாரம் திருமுருக வழிபாட்டு தலமாக இருந்த திருமலையை வைணவர்கள் அபகரித்துக் கொண்டதால் வந்த பகை, தணிகை மலையில் வீற்றிருக்கும் நம் குலதெய்வத்தையும் வணங்க முடியாமல் நாம் தவிப்பதற்கும், புலம் பெயர்ந்து இங்கு வந்ததற்கும் அவர்கள் தான் காரணம்" என்றார் வீரசிம்மன்.
“பிறகு எதற்கு பத்மாஷினி எனப் பெருமாள் நாயகி பெயரை .எனக்கு வைத்தீர்கள்” என்று கேட்க, பெரு சினம் கொண்ட வீர சிம்மன்,
“பதமாஷினி என்றால் கமலத்தில் உறைந்தவள், நம் வழிபாட்டுக் கடவுளான கந்தன் ஆறு தாமரையில் மலர்ந்தவன்,என்பது நினைவிருக்கட்டும். ஆராய கமலங்கள் அவன் அன்னைமடியை தான் குறிக்கும். ஸ்கந்தமாதாவை நாம் பத்மாசினி என்போம். திருத்தலத்தை மட்டுமின்றி, பத்மாசினி என்ற பெயரையும் அவர்கள் அபகரித்துக் கொண்டார்கள்.” வீர சைவரான அவள் தகப்பன் சொன்ன விளக்கம் அவளுக்குச் சரி எனப் பட்டாலும்,புராணங்கள், பாசுரங்களைப் பயின்றவளுக்கு , பெருமாள் மீது ஈர்ப்பு வந்தது.
மரகதபுரியின் வடக்கே உள்ளது துக்கிரி, அல்லது துஷ்டி மலை. பாலை நிலத்தில் அமைந்திருந்ததால் அந்த பெயர். அங்கு சண்டன் என்ற மந்திரவாதி இருந்தான்.அவன் ஆயுள் பல நூறு வருடத்துக்கு முற்பட்டது என்பார்கள். மரகதபுரி நாட்டினர் சண்டனின் தந்திர, மந்திரங்களுக்குப் பயந்து ஆடு, மாடு, குதிரை, தானியங்கள், செல்வங்களை அனுப்பி வைத்தனர். அவன் ஆட்டை கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடிப்பவனாக, பலிக்குப் பெண்களைக் கேட்டான்.
எல்லோரும் எதிர்க்க, அமைதியாகச் சென்று விட்டான். சில மாதங்களுக்குப் பின் ஒவ்வொரு அமாவாசை தினத்துக்கு முன்பும் பெண்கள் காணாமல் போனார்கள். இந்த மாதம் பத்மாவின் தோழியை அவன் தூக்கிச் செல்ல, மற்ற பெண்கள் சேர்ந்து கூச்சல் போட்டனர்.
கைலாச நாதர் கோவில் நந்தவனத்துக்கு வந்த பெண்களிடம் , தற்காப்புக்காக வைத்திருந்த குறுங்கத்தி மட்டுமே இருந்தது. அவற்றைச் சேகரித்துக் கொண்டவள், மரத்தின் மேலேறி அவன் முதுகை, கால்களைக் குறி வைத்து எறிந்தாள். மற்ற பெண்களும் கிடைத்த பொருட்களை அவன் மீது விட்டெறிந்தனர். அவன் திரும்பி நின்று இவர்களை முறைத்துப் பார்த்த தருணத்தில், ஒரு கத்தியை பத்மா அவன் கண்ணை நோக்கி எறிய , குறி தவறாமல் பட்டது. தூக்கிச் சென்ற பெண்ணை கீழே போட்டு விட்டு, அவன் இவளை நோக்கி வர, பத்மா மரத்தின் உச்சிக்குத் தாவினாள். சண்டன் மரத்தின் மீது ஏறும் பொது, தான் குதித்துத் தப்பி விட வேண்டும் என எண்ணியிருந்தாள் .
சண்டன் மரத்தையே பெயர்க்கும் வல்லமை கொண்டவனாக இருக்க, அடி மரத்தை அசைத்ததில் அந்தரத்தில் ஆடி , கீழே விழும் நேரம் ஆடவன் ஒருவன் கைகளிலிருந்தாள்.
சண்டனாக இருக்குமோ அவள் இதயம் துடித்தது. “அச்சம் வேண்டாம் தேவி” என்றவன், அவளை இறக்கி விட்டு, சண்டனோடு சண்டையிடத் தயாரானான்.
வலிமை மிக்க சண்டனுடன் துவந்த யுத்தமா செய்ய முடியும், வில்லை வளைத்து அம்புகளைத் தொடுக்க, அவனுக்கு முள் குத்துவது போல் தான் இருந்தது. பிடுங்கி எரிந்து விட்டு அவர்களை நோக்கி வந்தான். பத்மாவை தனக்குப் பின்னால் மறைத்தவன்,
இரண்டு கைகளிலும் வாளை சுழட்டியபடி ஓடி, அவன் கைகளுக்கு அகப்படாமல், உடலைக் காயப்படுத்த, நிலை குலைந்தான்.
ஒரு கண் ஏற்கனவே பாழாகி இருக்க, ஆடவன் மறு கண்ணைக் குறி வைக்க , சட்டென தன மந்திர வித்தையால் ஒரு புகையை உருவாக்கி அவ்விடத்தில் பரவ விட்டு , எதிர் வந்தவர்களை தாக்கி கொண்டே துஷ்டி மலைநோக்கி சென்று விட்டான்.
பெண்கள் அங்கும், இங்கும் அலைபாய்ந்து கலவரமாக, ஆடவனுக்கு, அவன் நண்பனுமாகப் பாதுகாத்து நகருக்குள் அனுப்பினர்.
நன்றி தெரிவித்த பெண்ணவள், “தங்கள் பெயர் “ என வினவ, “நான் திருமலைவாசன், என் நண்பன் வல்லபன்” என்றான். மேலும் விவரம் கேட்கும் முன் கூட்டம் கூடி விட, “நாளை அதே நந்தவனத்தில் சந்திக்கிறேன்” என்றாள் .
“அவனும் வந்து விட்டால்”
“தாங்கள் இருக்கிறீர்களே” என்றாள். அவள் பெயரைக் கேட்கும் முன், “பத்மா, உன் தந்தை உக்கிரசேனர் அழைக்கிறார்” என்று ஒருத்தி குரல் கொடுக்க, அவள் யார் என்பதை அறிந்து கொண்டான். அவள் சென்ற பின்னரே, அவளைப் பிடிக்கும் போது , அவளிடையில் சொருகி இருந்த குழல் அவன் உடையில் சிக்கி இருக்கும் போலும்,
இதோ இன்று வாசித்துப் பார்க்க, பறக்கும் பாவையே வந்து சிரித்தாள்.
“சந்திரகிரியா” அவள் அதிசயிக்க, “ஆம்” என்றான்.
“உங்கள் திருமலையில் வாசம் செய்யும் பெருமாளைச் சேவிக்க எனக்குப் பேராசை , ஆனால் என் தகப்பன் சம்மதிக்க மாட்டார்” என வருந்தினாள்.
“திருமலை வாசன் திருவுள்ளம் இருந்தால், உங்கள் ஆசை ஈடேறும். தகப்பனால் தடுக்க இயலாது” அவன் பூடகமாகச் சொன்னான்.
“என்ன ” என அவள் முறைக்க, “. ஏழுமலையானைச் சொன்னேன். எங்கள் புது கோட்டையிலிருந்து மலைக்குச் செல்ல பாதை அமைத்திருக்கிறோம்” என விவரங்களைச் சொல்ல, அவனோடு பேசுவதாய் அவள் உள்ளம் விரும்பியது.
அடுத்து வந்த ஐந்து தினங்களில் தவறாமல் சந்தித்தனர்.
திருமலை வாசன், ஏழுமலை வாசன் பெருமைகளைச் சொல்லியே, அவள் மனதில் தங்கள் ராஜ்யத்தைப் பற்றிய .ஆர்வத்தைத் தூண்டினான்.
குழல் ஊத அவள் சொல்லிக் கொடுக்க, வாள் வீச அவன் கற்றுத் தந்தான்.
இரண்டிலும் , இருவரும் விற்பன்னர்கள் ஆனார்கள். நட்பு காதலாய் மலர, காலமும் கடந்தது. வாரம் தவறாமல் நந்தவனத்தில் சந்தித்தனர். அவள் தகப்பனுக்குத் தெரியவர,
“நீ வழிப்போக்கனைச் சொல்லியிருந்தாலும் மணம் முடித்துக் கொடுத்திருப்பேன். வைணவன் மட்டும் வேண்டாம் என்றார்.
அவள் பிடிவாதம் செல்லுபடியாக வில்லை, வேறு வரன் பார்க்க ஆரம்பிக்க, வாசவனுக்கு விட்டு அவனோடு கிளம்பினாள்.
தகப்பன்,மகளோடான உறவை முடித்துக் கொண்டான்.
பெற்றவரை மீறி உற்றவனோடு சந்திரகிரி கிளம்பிச் சென்றாள் . திருமலையில் ஏழுமலையானைச் சன்னதியில் திருமலை வாசன் கையால் திருப்பூட்டு பூட்டிக் கொண்டாள். பெருமாள் அவளை ஆட்கொள்ள, பெருமாள் சேவையே தன் லட்சியமாக கொண்டாள்.
வேங்கடவன், அதரத்தில் வைத்திருந்த புல்லாங்குழலில் தன் மூச்சுக் காற்றை நிறைக்க முன் ஜென்ம நினைவுகளோடு அது இசைத்தது. மறு கரையில் குடும்பத்தோடு வந்து இறங்கியவளுக்கும் குழலோசை காதில் விழ, மென்னகை புரிந்து கொண்டாள்.
சற்று முன்…
கழுவன் குடும்பம், செம்பதுமத்துக்காக வேண்டுதல் ,நிறைவேற்ற வண்டிகளைக் கட்டிக் கொண்டு வந்திருந்தனர். இரண்டு மாதங்களுக்குப் பிறகு சிங்க தேவனும் , மனைவி மக்களோடு மாட்டு வண்டியில் பயணித்தான்.
காலை நொண்டிக்கொண்டு ஏறுவதில் சற்று சிரமம் இருந்த போதும், பிடிவாதமாக ஏறி, வண்டியையும் ஓட்டினான்.
“அப்பு, சிரமம் இல்லையே” கேட்காதவர் பாக்கியில்லை, ஒரு முறைப்பிலேயே அனைவரையும் அடக்கியவன் அருகில் சந்தன கருப்பனை உட்கார அழைக்க, “அப்பாரு, அண்ணன் கூட குருதையில வாரேன்” அனுமதி வாங்கி, சாமியோடு குதிரை தொற்றிக் கொள்ள, தாடகை கணவனின் அருகில் அமர்ந்தாள்.
“ என் மேல நம்பிக்கை இல்லையோ” சிங்கம் முறைக்க,
“நான் உட்காராமல், எவளை உட்கார வைக்கனுமுண்டு நினைச்ச” இடக்காகக் கேட்க, “நினைப்புக்கு என்ன, ஏதேதோ நினைக்கும்” என்றான்.
ரதி தேவி எந்த வண்டியில் ஏறுவது எனத் தோது பார்த்தவள்,
“தேவரே, வெகு நாட்களுக்குப் பிறகு இப்படிப் பார்ப்பதில் மகிழ்ச்சி” என அடுத்த வார்த்தை பேசும் முன், “இதில பிள்ளைகள் ஏறும், நீ என் கூட வாத்தா” என் பேச்சி இழுத்துச் சென்றார்.
செம்பதுமத்தை, தாடகை தன்னுடனே வைத்துக் கொண்டாள். இந்த ஒரு வாரத்தில் அவளிடம் தேஜஸ் கூடியிருந்தது. தாமரை போல் மலர்ந்த முகத்தோடு இருந்தாள். தம்பி, தங்கைகளிடம் வாஞ்சையாகப் பழகியவள், கழுவன் குடியைப் புதிதாகப் பார்ப்பவள் போல் தம்பி, தங்கைகளோடே சுற்றி வந்தாள். தாடகையும், கோதையும் முதலில் வெளியே செல்ல ஆட்சேபித்தனர்.
“சிங்கம் மகளை நெருங்குற தகிரியம், எவனுக்கு இருக்கு. நீ சும்மா சுத்தி வாத்தா” அப்பாரே அனுமதி கொடுக்க, தீயசக்திகள் அண்டாமல் இருக்கக் கருப்பு கயிறை வலது காலில் கட்டி அனுப்பினர்.
கழுவன் குடியைச் சுற்றியவள் ராக்காயி குடிசையில் வந்து நிற்க, “வா ஆத்தா , இப்போ தான் வழி தெரிஞ்சதா” என உள்ளே அழைக்க,
“நீ தானே அம்மா, அழைத்து அடைக்கலம் கொடுத்த” என அவள் வீட்டின் உள்ளறைக்குச் சென்று, மரப்பெட்டியைத் தொட்டுப் பார்த்து விட்டு, “காவல் பலமாக “இருக்கட்டும்” என்று சொல்ல,
“என்னை மீறி ஒரு பய உள்ளே வரமாட்டான், அடுத்த சம்பவம் எப்ப” எனக் கேட்க, “சித்த பண்டூர் சென்று வந்து சொல்கிறேன்” என்றாள்.
இதோ இன்று, சிங்கமும், தாடகையும் இருக்கும் வண்டியில் ஏறியவளுக்கு எலியும், பூனையுமான அவர்கள் சண்டை சுவாரஸ்யத்தைத் தந்தது.
சின்ன தங்கைகள் இருவரை அருகில் அமர்த்திக் கொண்டவள்,
“தந்தையின் பார்வை தாயிடம் தான், அம்மைக்குத் தான் அப்பனிடம் நம்பிக்கை இல்லை” தன கணிப்பைச் சொல்ல, சிங்கம் சிரிக்கத் தாடகை மகளை முறைத்தாள்.
“இத்தனை வருஷம் கழிச்சு இப்ப தான் கண்டு புடிச்சியாக்கும்” என்று கோதை கேட்க,
“நீ இப்படி உன் புருஷனை முடிஞ்சு வச்சிந்தேனா, நானாவது தப்பி இருப்பேன்” தாடகை நொடிக்க,
“ அரையனுக்கு, நாலந்தாரமா போயிருப்ப” என்றான்.
“அது ஒருநாளும் நடந்திருக்காது, உசுரை மாய்ச்சுகிட்டு இருந்திருப்பேன்”
“இப்ப என்ன குறைஞ்சு போச்சு, கழுவன் குடியை ராணியா ஆண்டுக்கிட்டு தானே இருக்க. இன்னும் மருமகன் எடுக்கிற வரைக்கும் சொல்லிக் காட்டு, மெச்சிக்குவாக.” கோதை, இன்று தைரியமாகச் சக்களத்தியைப் பேசி விட, தாடகை முகம் வாடிப் போனது, அதை பொறுக்காத சிங்கம்,
“ஏய் விடு புள்ளை , அவளை வஞ்சுகிட்டு இருக்கவ. பிள்ளைகளைச் சூதானமா பிடிச்சுக்க,வண்டி இப்ப பறக்க போகுது” என “ஹாய், ஹாய் என விரட்டி ஓட்ட, மற்ற வண்டிகளை பின் தள்ளி, இவர்கள் வண்டி காத தூரம் முன் சென்றது. சாமி கருப்பு குதிரையையும் ஓரம் கட்டி மாட்டு வண்டி முன்னேற,
“அண்ணன் முந்தி போ” எனச் சின்னவன் நச்சரித்தான்.
ஏற்கனவே முத்துராசு முன்னே சென்றிருக்க, பின்னே வரும் வண்டிகளைக் காப்பது தன கடமை என சாமி நிதானமாகவே வந்தான்.
அன்று சிறைப்படுத்திய இருவரை மீட்க, மேலும் சிலர் பாலையாயத்துக்குள் ஊடுருவி இருப்பதாகத் தகவல் வர, தங்கராசு, ரங்கராசு பாசறைக்குச் சென்றிருந்தனர்.
முத்து ராசு பாதையில் ஏதும் ஆபத்து இருக்கிறதா என வெள்ளோட்டம் பார்க்கக் குதிரையில் முன்னே சென்றிருந்தான். மேலும் மூன்று மாட்டு வண்டிகளில், முத்து நாச்சி, வேலாயி,வீரன் மற்றும் பெரியவர்கள் வரக் காவல் ஆட்கள் வண்டியை ஓட்டி வந்தனர்.
முத்து ராசு முன்னே சென்றவன் அபாயத்தை அறிவிக்கும் ஒலியை எழுப்பினான். மாடுகளின் மணிச் சத்திலும், சக்கரம் உருண்டோடும் இரைச்சலிலும் சிம்மராசு தேவனுக்குக் கேட்கவில்லை, கேட்டிருந்தாலும் வண்டியை விரட்டி இருப்பான், அதுவே அவன் குண விசேஷம். பின்னே வந்த சாமிதுரை, சந்தனத்தைத் தாத்தாவிடம் ஒப்படைத்து விட்டு வர தாமதமாகியது.
அதற்குள் சிங்கம் செலுத்திய வண்டி முத்து ராசு இருக்கும் இடத்தை அடைய, அவன் வேல் கம்பை வைத்து பத்து பேரை முன்னேற விடாமல் சமாளித்துக் கொண்டு இருந்தான்.
தூரத்திலிருந்தே பார்த்த சிங்கம், வண்டியை நிதானித்து, வளரியை வீசி ஒருவனைத் தாக்கி , தான் இறங்க முயல தாடகை தடுத்தாள். அவர்களுக்குள் வாக்கு வாதம் நடந்த இடைவெளியில், கோதையைத் தாண்டிக் கொண்டு கீழே குதித்த செம்பதுமம், சீலையை வாரிச் சுருட்டி தார்பாச்சு போல் கட்டிக் கொண்டு, இரண்டு கைகளிலும் வாள் ஏந்தி, “ஜெய் ஜக்கம்மா” என ஆவேசத்தோடு ஓடினாள்.
தாடகை கவனத்தை, கணவனிடமிருந்து மக்களிடம் திரும்பியவள், “பதுவு , சூதானம்” என தானும் குதித்து மக்களிடம் செல்வதா, கணவனிடம் நிற்பதா எனத் தடுமாறி நின்ற வேளையில்… முன்னே அதிசயம் நிகழ்ந்தது.
செம்பதுமம், ஓடியபடியே பாதை ஓரத்திலிருந்த மரத்தின் கிளையைப் பற்றி வளைத்துக் கொண்டு மேலிருந்து கீழாக எதிரிகள் மேல் மீது பாய்ந்தாள்.
கண் இமைக்கும் நேரத்தில், இருவரைச் சேதப்படுத்தியிருந்தவள், குதிரையிலிருந்து ஒரு வீரனின் கால்களைப் பற்றித் தூக்கி எறிந்து , தான் தாவி ஏறி, மற்றவர்களை உதைத்தும், மிதித்தும், வாள் கொண்டு வீசி, எதிர்த்தவன் அங்கங்களை வெட்டி ஆக்ரோஷமான போர் புரிய, “செம்பா, அப்படி தான், வெற்றி வேல், வீர வேல்” என முத்து ராசு கூச்சலிட , அவள் “ஜெய் ஜக்கம்மா” என்றபடி சண்டையிட்டாள்.
திரும்பி வந்த வளரியைப் பற்றியிருந்த சிங்கம், மீண்டு அதனை எரிய முயலாமல் செயலற்று பார்த்திருந்தான். தாடகை மகளின் தாக்குதலைப் பார்த்திருக்கிறாள் தான், ஆனால் இவள் முற்றிலும் வேறு ஆளாகத் தெரிந்தாள்
சாமிதுரை வருவதற்குள் நிலைமை கட்டுக்குள் வந்திருந்தது. சிங்கமும் வண்டியிலிருந்து இறங்கி, தாடகை உதவியுடன் செம்பதுமம் நின்ற இடம் வந்திருந்தான்.
செம்பதுமம் இன்னும் ஆக்ரோஷமாக, ஒருவனைத் தாக்கி, அவன் கழுத்தில் வாளை வைத்தபடி, “அனுப்பியவனிடம் போய் சொல், இந்த முறை பத்மா அவள் இலக்கை அடைந்தே தீருவாள்” என வாளை சுழட்டியவள் கீழே கிடந்தவனின் வலது தோளில் அதனைப் பாய்ச்சி, அவன் கதறுவதைப் பார்த்த வண்ணம் நிற்க, “பதுவு” எனத் தாடகை அவளை அசைக்க, ஒரு நொடி கண்ணை மூடி சம நிலைக்கு வந்தாள் .
முத்து ராசுவும், சாமி கருப்பனுமாக வீழ்ந்து கிடந்த வீரர்களின் கைகளைக் கட்டி சிறைப்படுத்தினர்.
தாடகை “பதுவு , கையில் ரத்தம் பாரு” எனப் பதறியபடி தன் இடுப்பில் சொருகியிருந்த துணி கொண்டு துடைத்து கட்டு போட,
சிங்கம், “ஆத்தா, உன் வீரத்தைப் பார்த்து, என் மவளா இதுண்டு சிலையா நிண்டுட்டேன். எங்குட்டு இருந்துத்தா இம்புட்டு வித்தையும் கத்துகிட்ட” எனக் கையை விரிக்க, “உங்க கிட்டத் தான் அப்பாரு” என அவன் காலை தொட்டு
வணங்கியவள், “எதிரிகளை ஜெயிக்கணும்னு ஆசீர்வாதம் பண்ணுங்க” எனவும்,
“ உன்னை எதிர்க்கிறவன், உசுரை காப்பாத்திக்க ஓடி ஒழிஞ்சு போவான் ஆத்தா. ஜெயம் உனக்குத் தான்.” வாழ்த்தினான்.
மனைவிகளைப் பார்த்து “என் மகளை காப்பாத்தனுமுண்டு துண்ணூறு போட்டீங்க, கிடா வெட்டுறோமுண்டு நேந்துகிட்டிங்களே , அவள் கழுவன் குடி என்ன இந்த பாளையம் முச்சூடையும் காப்பாத்துவா” எனச் சிலாகித்தான். பொதுவாக, சிங்கராசு தேவன் , தங்கள் குலதெய்வத்தை மட்டுமே வணங்குவான். பெருமாளைத் தூக்கிச் சுமந்து கூட இந்த ஜென்மத்தில் கழுவன் குடி பெருமையை நிலை நாட்ட தான். ஆனால் அவனறியாமல் பெருந்தெய்வங்கள் அவனுக்கு அருள்பஅளித்துக் கொண்டிருந்தன.
பூர்வ ஜென்மம் கற்றுத் தந்த பாடம், ஆழ் மனதில் படிந்திருக்க, பதுவு “எவ்வளவு திறமையும், வீரமும் இருந்தாலும், பெற்றவர் ஆசி இல்லையெனில் எல்லாம் வீண். உங்கள் ஆசி எப்போதும் எனக்கு வேண்டும் “ என வணங்கி நின்றாள்.
கோதை, தாடகையிடம்,” பதுவு , பேச்சே ஒரு தினுசா இருக்குதில்ல” எனக் கேட்க, “உனக்கும் அப்படி தோணுதா” அதிர்ச்சியாய் கேட்க,
“வேற பொம்பளையாட்டம் தெரியுது. அருளடிச்சு இருக்குமோ” அவள் வினவ,
“அப்படியிண்டா கோவிலுக்குள்ள வர முடியாதே, இன்னைக்கு சோதிச்சு பார்த்துருவோம்” என ரகசியமாய் பேசிக் கொண்டு சித்த பண்டூர் அழைத்துச் சென்றனர்.
பிடிபட்ட வீரர்களை, கையை கட்டி, பாசறைக்கு இழுத்து செல்ல, கடைசியாக பதுவினால் தாக்கப்பட்டவன் மட்டும் மற்றவர் கண்களில் மண்ணை தூவி விட்டு மாயமாய் மறைந்திருந்தான்.
சித்தபண்டூரில் என்ன லீலை அரங்கேறும் பொறுத்திருந்து பார்ப்போம்
பெரிய கழுவன் குடியில் இரண்டு ஆட்களைப் பிடித்த அதே நாளில், தொட்டப்பனூரிலும், சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரிக்க, துளு நாட்டை சேர்ந்த வணிகர்கள் என்றனர். விற்பனைக்கு என அவர்கள் வைத்திருந்த பொருட்கள் நூதனமாக இருக்க, ஒரு கணிப்புக்கு வரமுடியாமல், தங்கள் பார்வையிலேயே வைத்திருந்தனர். முத்தய்யன் துரைராசு தேவன் காயம்பட்ட செய்தி அறிந்து சின்ன கழுவன் குடிக்கு வந்தான்.
அந்திசாயும் முன், தங்கராசு தேவன் பெரிய கழுவன் குடி வந்து விட்டான். பாளைய எல்லையிலேயே தம்பி முத்து ராசு தன் காவல் பொறுப்பை மற்றொருவனுக்கு மாத்தி விட்டு , அண்ணனோடு இணைந்தவன் தான் கேள்விப் பட்டதைச் சொல்ல, அதற்கடுத்து தென்பட்ட காவல்காரர்கள் நேற்றைய அனுபவங்களைப் பகிர்ந்தனர்.
தங்கராசு, கவனமாகச் செவி மடுத்தவன், “ நம்ப குலசாமி, காவல் தெய்வம் கழுவன் கருப்பு இருக்க வரைக்கும், கெட்ட நோக்கத்தோடு வர்ற எந்த சக்தியும் நம்பலை ஒன்னும் பண்ண முடியாது. பூசாரிக்கிட்ட சொல்லி, கயிறு மந்திருச்சு கட்டிக்குங்க. காவல்காரனே பயந்தாண்டா, ஊரை யாரு காவல் காக்கிறது. நம்ம ஒவ்வொருத்தரும், காவல் கருப்பனோட அம்சம்” என நம்பிக்கை ஊட்ட, “ஆகட்டும் தலை” எனத் தலையாட்டி சென்றனர்.
முத்துராசு, “எப்படி அண்ணேன் “ என வியக்க, “தகிரியம் மனசில இருந்தா போதுமடா தம்பி, மோகினிப் பிசாசு என்ன, மோகினி மாதிரி அழகான பொம்பளையே வந்தாலும், மீண்டு வந்திடலாம்” என்றவனின் நினைவில் தாமினி தேவி வந்து சென்றாள்.
அண்ணனின் பேச்சி கேட்ட தம்பி, “ அதென்ன அண்ணன், பேய் கூட பொம்பளையும் சேர்த்து சொல்றவன். புதுசா எந்த மோகினி பொம்பளை மயக்க பார்த்துச்சு” சுவாரஸ்யமாக அவன் கேட்க, “அது மோகினி இல்லை. காளியாத்தா” எனவும், “அப்ப மடங்கித்தான் ஆகணும்” என அண்ணனை ஆராய்ந்து , இலவச முறைப்பையும் பெற்றுக் கொண்டான்.
“பிடிபட்டவனுங்க யாருண்டு தெரிஞ்சுதா”
“பெருச கேட்டா தெரியும்” என இருவருமாக ஊர் எல்லையில் கூழன் குடிசையில் வந்து நின்றனர்.
“வாங்கப்பு “ என வரவேற்றவர், காய்ச்சிய கூழில் ஆளுக்கு ஒரு குடுவை கொடுத்து விட்டு, “ சின்னவரு விசாரிச்சாப்ல, ஒருத்தன் துளுக்கன், இன்னொருத்தன் சிராப்பள்ளி” என்றார்.
“ பாளையம், மூலமா தளவாய் கிட்டச் சொல்லலாமா” என வினவ,
‘அனுப்பினதே , பெரிய புள்ளியா இருந்தா வேலைக்கு ஆவாது. ஒற்றன் உசுருக்கு பயந்து காட்டிக்கொடுக்க மாட்டான். அவனுங்களை பார்த்தா தகவல் அறிய வந்தவனுங்களாட்டம் இருக்கு.” என்றார்.
“யாரு கிட்ட இருந்து” தங்கம் கேட்க, “ஆட்டக்காரி கூட வந்த எடுப்பு ஒருத்தி இருக்காலே “ என ராமி கதையையும் சொன்னவர், "அவசரப்பட்டு சிங்கத்துக்கிட்ட சொல்ல வேண்டாம். ருசுவை வச்சுக்கிட்டு பேசுவோம்" என்றவர், திடீரென தாக்கிய சூறைக்காற்று, ஆகியவற்றைப் பற்றியும் சொன்னார்.
“பயலுவ, குதிரை குளம்படி சத்தம், சலங்கை சத்தம், மல்லிகை மணத்துச்சு, மோகினி பேய் சுத்துதுண்டு அரண்டு போயி கிடக்குறானுவ. அவனுங்க சந்தேகத்தைப் போக்கி, நம்பிக்கை தரவேண்டியவன் நீ தான்.” கூழன் சொல்ல, “ஏற்கனவே அண்ணேன் அந்த வேலையை செஞ்சுட்டு தான் வந்திருக்கு” முத்து பதில் தந்தான்.
அண்ணனும், தம்பியும் கழுவன் இல்லம் வரும் போது , அந்தி சாய்ந்திருந்தது.
பேச்சி, வேலாயி ஜோடிகள் திண்ணையில் அமர்ந்திருக்க, வந்த உடனே, செம்பதுமத்து நடந்ததைச் சொல்லி விட்டனர்.
“கோதை பார்த்துட்டு கத்தினா, நாங்க உள்ள போயி பார்க்கிறோம், புள்ளைக்கு வெட்டி,வெட்டி இழுக்குது” எனச் சேதி சொல்ல, நேரம் காலத்தைக் கணக்கிட்ட தங்கராசு மனதில் , ‘அதே நேரம் தான் வேங்கடவனுக்கும் இதே போல் ஆனது, அடர் வனத்துக்குள் சூறைக் காற்றும் வந்தது’ என ஒப்பிட்டுப் பார்த்தான். சின்ன கழுவன் குடியில் நடந்ததை வெளியே சொல்ல வேண்டாம் என முடிவெடுத்து வைத்திருந்தனர்.
அண்ணன்கள் இருவரும், தங்கையைப் பார்க்கச் சென்றனர். கூடத்தில், தம்பி, தங்கைகள் புடை சூழ இருந்தாள். முத்து, “செம்பா” என அழைக்க, அவள் திரும்பினாள். தங்கராசு ஒரு கணம் உறைந்து நின்றான்.
செம்பதுமத்தின் முகத்திலிருந்த குழந்தைத் தனம் மாறி, அமைதியும் ஆளுமையும் வந்திருந்தது. மூக்கில் ஜொலித்த வைர மூக்குத்தி, அவன் கண்ணை ஈர்த்து, ஏதேதோ நினைவலைகளுக்குள் இட்டுச் சென்றது. ஆனால் எதுவும் முழு உருவாய் நினைவுக்கு வரவில்லை.
“அண்ணேன் , அண்ணேன் “ எனத் தம்பி, தங்கைகள் அவனைப் பிடித்து உலுக்கவும் தான் சுய உணர்வு வந்தது, அதுவரை கண்கள் செம்பதுமத்தையே பார்த்திருந்த அவன் கண்கள், எல்லையற்ற உணர்வுகளைக் காட்டிக் கொண்டிருந்தது. ஒரு வேளை, வேறு உலகில் உரையாடல் நடைபெற்றது என்னவோ!
“ஆத்தா” என கையை நீட்டிக்கொண்டு செல்ல, “நல்லா கேளு சாமி, ஒரு பொழுது வீட்டையே கதிகலங்க வச்சுப்புட்டா” என கோதை குறை படிக்க, அதற்குள் அவளிடம் நெருங்கி இருந்தவன் கையை, செம்பதுமம் பற்றி , “நீங்க எல்லாரும் இருக்கும் பொது, எனக்கு என்ன அண்ணன். எத்தனை சென்மம் எடுத்தாலும், எனக்கு ஒண்ணுண்டா நீ ஓடி வந்து நிற்ப” அவள் தெய்வ வாக்கு போல் சொல்ல, கண்ணீர் சொரிந்த தங்கராசு, “அதை விட, எனக்கு வேற என்ன வேலை ” வார்த்தை வராமல் தவித்தான்.
“இனிமேலுக்கு, குதிரை மலை, கோம்பை மலையிண்டு எங்கயும் விட மாட்டேன். இங்கனையே சின்னத்தா கிட்ட, ஆட்டம், பாட்டுன்னு கத்துக்க போதும். வாளு , வேல் கம்பு , வளரியும் பிடிக்கக் கூடாது” கோதை வரிசையாய் அடுக்கினாள்.
“இதையே தான் அன்னைக்கு தேனூர்ல வச்சு அக்கா சொல்லுச்சு. அதுக்கு சண்டைக்கு வந்தே” முத்து நாச்சி கேட்கவும்,
“நீங்க அக்காளும், தங்கச்சியும் மெத்த படிச்சவுக. எனக்குப் பட்டா தானே புத்தி வருது” என்றாள்.
“இரண்டு பேரும் சும்மா இருக்கீங்களா, பதுவு மாதிரியே சின்ன குட்டிகளுக்கும், வாளும் , வேலும் வீசச் சொல்லி தரணும். கழுவன் குடி பொண்டுகள்னா, தப்பு செய்யிறவனுக்கு பயம் வரணும்” தங்கம் சொல்லவும், பிள்ளைகள், “அக்காளை மாதிரி நாங்களும் கத்துக்குறோம்” என்றனர். தலைமகன் சொன்ன பிறகு மறுப்பேது. தாய்மார்கள் அமைதி காத்தனர்.
“தங்கம் வந்துட்டியா” என சிங்கராசு, தன் அறையிலிருந்து கூடத்துக்கு வர, “ஆமாம் அப்பு” என்றவன், தாடகைக்குப் பதில், தான் தோள் கொடுத்து, சித்தப்பனை அளித்து வந்து கூடத்தில் அமர்த்தினான்.
முக்கியமான விஷயம் பேசுவார்கள் எனப் பிள்ளைகள், சாப்பாட்டுக் கூடத்துக்கு நகர்ந்தனர். பதுமம், முத்துராசு மட்டுமே அங்கிருந்தனர்.
“திடியன் மலையில் என்ன சங்கதி” சிங்கம் வினவவும், ஒரு கணம் முழித்து, பதுமத்தைப் பார்த்து விட்டு மீண்டவன், “உத்தப்பர் கூட்டத்துக்கு காடழிச்சு நாடாக்க அனுமதி குடுத்துருக்காக, மலையடிவாரத்தில் அந்த வேலை நடக்குது” எல்லோருக்கும் தெரிந்த விவரத்தைச் சொன்னான்.
“நான் சொன்ன ஆட்களை விசாரிச்சியா” என வினவ, “அந்த வேலையே அவுங்களுக்காக தான் அப்பு. காஞ்சிபுரத்திலிருந்து வந்திருக்காங்க. இங்க கூட பட்டுக் கொண்டு வந்தாங்களாம்” என வேங்கடவனை அடையாளம் சொல்ல, தாடகை, “ஆமாம், ஒரு வாரம் நம்ம குடியில் தங்கி, நம்ம பாளையத்தில் வியாபாரம் செஞ்சார்” என்றாள் .
“இதை என் கிட்டச் சொல்லவே இல்லை” சிங்கம் கேட்க,
“ நீ அடிபட்டு வந்த நாள்ல இருந்து , என் உலகமே நீயா தான் இருக்க. அப்புறம் எங்கிருந்து மத்ததை யோசிக்க” அவன் தான் அவளுக்குப் பிரதானம் என்று சொன்ன சொல்லில் மகிழ்ந்த சிங்கம், சகஜமாக மற்ற விஷயங்களைப் பேசினான்.
இரண்டு ஆட்கள் பிடிபட்டதைப் பற்றிப் பேசினார்கள், கூழன் ரதிதேவி உடன் வந்தவளை பற்றிச் சொல்லியிருக்க, தானே நேரில் சென்று விசாரித்த பின்னர் தான் சிற்றப்பனிடம் பேசவேண்டும் என நினைத்தான்.
ரதி தேவி கையில் ஒரு சின்ன மரப்பெட்டியுடன் ,தயங்கியபடி உள்ளே வந்தாள்.
“இங்க யாரும் ஆட்டத்தைப் பார்க்கிற நிலையில் இல்லை” என்றாள் தாடகை .
“நானும் ஆடுறதுக்கு வரலை, பதுவுக்கு முடியாமல் போனதில் நானும் வருத்தத்தில் தான் இருக்கேன்” எனவும் அவளை எல்லோரும் ஏற இறங்கத் தான் பார்த்தார்கள். சிங்கம் முன் வருகிறோம் எனக் கவனமாகத் தன்னை சிங்காரித்துக் கொண்டு வந்திருந்தாள். சிங்கமே நக்கலாகச் சிரிக்க, செம்பதுமம் அவளையே பார்த்தபடி இருந்தாள்.
“உன் எடுபிடி அந்த ராமிக்கு எங்க வீட்டுக்கிட்ட என்ன வேலை. பொழுதன்னைக்கும் இங்குட்டு தான் சுத்துறாண்டு ஆளுங்க சொன்னப்ப கூட நான் பெருசா எடுத்துக்கலை. வேவு பார்க்க வந்திருக்காண்டு இப்போ இல்லை தெரியுது” என்றவள்,“நம்ம அறைக்கு பக்கவாட்டுல தான் மயங்கி கிடந்திருக்கா” சிங்கத்திடம் சொல்ல, ரதி தேவி நடுவே புகுந்தாள்.
சிங்கம் சக்களத்தி சண்டை போல் பாவித்து அதைக் கவனித்துக் கொண்டிருக்க, “அரசியல் காரணங்களையும், அந்தரங்கத்துக்குள் இழுப்பது பெண்களின் சுபாவம் போலும். இந்த சின்னம்மா கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம்’ மனதில் நினைத்துக் கொண்டான்.
“தேவரே, அதைப் பத்தி தான் சொல்ல வந்தேன், யாரோ ஒரு பொம்பளை எங்க வீட்டுப் பக்கம் இருந்து, உங்க அறை பக்கம் ஓடினாளாம். உண்ட வீட்டுக்கு ஆபத்து வருதேன்னு , எச்சரிக்கை செய்யத் தான் ராமி வந்திருக்கா. அந்த பொம்பளை இவளையும் தாக்கிட்டு ஓடி போச்சாம்” கதை அளக்க,
“அவளுக்கு தான் பேச்சே வரலைண்டு சொன்னாங்க. உன்கிட்ட மட்டும் பேசினாளாக்கும். இங்க கொண்டு வந்து விடு, நாங்க விசாரிச்சுக்குவோம்” தாடகை கிடுக்கு பிடி போட்டாள்.
“இப்பவும் அவளுக்குப் பேச்சு வரலை. அவள் அபிநயம் பிடித்துச் சொன்னதை தான் உங்ககிட்ட சொல்ல வந்தேன்.” என்றவள், சட்டென சிங்கத்தின் அருகே சென்று அமர்ந்து அவன் கால்களைப் பற்றியவாறு, “தேவரே, என் மானத்தை காப்பாற்றினவர் நீங்க. உங்களுக்குத் தீங்கு நினைப்போமா” என கண்ணீர் விட, மற்ற ராசுக்கள் இருவரும், பின்னே இரண்டு அடி தள்ளிச் செல்ல, சிங்கம் ரதி தேவியின் அழுகையில் மனம் உருகிப் போனான். செம்பதுமம், அவள் நடத்தும் நாடகத்தைப் பார்த்தபடி இருக்க, தாடகைக்கு முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது.
“சரித்தா எந்திரி, உன்னைய யாரும் எதுவும் சொல்லலை “ சிங்கம் அவளைச் சமாதான படுத்தவும் மேலும் கண்ணீர் விட்டு, அவன் வேட்டியிலேயே துடைத்துக் கொண்டாள். தாடகை பல்லை கடித்தாள்.
“நீங்க நம்புவீங்க. மத்தவுக நம்ப மாட்டங்க. அதுனால தான் எனக்கு கிடைச்ச ருசுவை உங்க கிட்ட கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன். உங்க குதிரை நின்ன இடத்தில், இந்த சூடி கிடந்தது” என அவள் மரப்பெட்டியை நீட்ட, சிங்கம் அதை வாங்கி திறக்கப் போனான். அவள் எழுந்து அவசரமாகத் தடுத்து,
“தேவரே, இது ஒளி மிகுந்தது. முன்னேற்பாடு செய்து கொண்டு திறக்கலாம்” என்றாள்.
“மிகைப் படுத்திச் சொல்லாதே, ஆபரணம் என்ன செய்து விடும் “ தாடகை , சிங்கத்தின் கையிலிருந்து வாங்கி திறக்க, ரதி தேவி மறைந்து நிற்க , மற்றவர் கண்கள் வியப்பில் உயர்ந்தது.
“விலை உயர்ந்த வைரம், வைடூரியம் , மாணிக்கம் பதித்த நெற்றி சூடி, பழைய காலத்து ஆபரணம் ‘ எனத் தனது மதிப்பீட்டைச் சொன்ன தாடகைக்கு இதை வைத்திருக்கும் அளவுக்கு ரதி தேவியிடம் செல்வ வளம் இருக்காது என்றே தோன்றியது. உண்மையில் அந்த சூடியைப் பார்த்த ராமி அரண்டு, அரற்றி , இதைத் தூக்கிப் போடு எனச் சைகை காட்டியிருந்தாள். ராமி சொன்ன விஷயங்கள் , அரசல் புரசலாக பேசப்பட்ட விஷயங்களைக் கோர்த்துப் புனைந்தது விட்டாள்.
மரப்பெட்டியைத் திறந்த சற்று நேரத்திலேயே அதன் ஒளி பரவ, கழுவன் குடும்பமே அங்குக் கூடி விட்டனர். “இதென்ன மாயம், என்ன, என்ன” என மாற்றி, மாற்றிக் கேட்க ஒளியின் வேகம் அதிகரித்தது.
காண முடியாமல் அங்கிருந்தோர் கண்கள் கூச, செம்பதுமம் முகத்தில் அதன் ஒளி எதிரொளித்து தனி சோபையைத் தந்தது. தாடகை, பெட்டியைத் தவற விட, தக்க சமயத்தில் அதைப் பிடித்த பதுமம், ஆசையோடு அதைத் தடவிப் பார்க்க, எங்கிருந்தோ வந்த ராக்கம்மாள் , பதுவின் கையிலிருந்து பிடுங்கி, பெட்டியை மூடி, “குடும்பத்துக்கு நல்லதில்லை கொடு” என எல்லோர் கண் முன்னும் வாங்கிக்கொண்டு சென்று விட்டாள் . தங்கராசின் பார்வை செம்பதுமம் மீது தான் இருந்தது. சூடியிலிருந்து வந்த ஒளியைக் காட்டிலும், அவள் முகம் மிளிர்ந்தது.
“இதென்ன மாயம், ஏதேதோ நடக்குது” தாடகை புலம்ப, விஷயம் என்ன வென மற்றவர் கேட்க, அவள் விவரம் சொன்னாள்.
ஒரே நாளில் காலை யில் சூறைக் காற்று, மாலையில் கண்ணைப் பறிக்கும் ஒளி என இயல்புக்கு மாறான விஷயத்தைப் பார்க்கவும் , குடும்பம் கலங்கியது.
கருத்தய்யா, “சிம்மா, வழக்கத்துக்கு மீறின சம்பவம் நடக்குது, என்னெண்டு விசாரிக்கணும்” கவலை தோணுதா குரலில் சொல்ல, “ ஆகட்டும் அப்பாரு, அது என்னெண்டு பார்க்கிறதுக்குள்ள , கிறுக்கு பிடிச்சவ தூக்கிட்டு போயிட்டா. தங்கம் அதைக் கேட்டு வாங்கியா” சிங்கம் சொல்ல,
“ராக்கு கிட்டயே இருக்கட்டும், மறுக்கா வீட்டுக்குள்ள கொண்டு வர வேணாம் ராசா” என்றார் பேச்சி. நான்கு மருமகள்களும் அதற்கு ஒத்து ஊத,
ஹாஹாவென , சத்தமாகச் சிரித்த சிங்கம், “ முதல் முறையா, பொம்பளைங்க ஆபரணத்தைப் பார்த்து அரண்டு இருக்காக, அப்படி என்ன தான் இருக்குண்டு அந்த நகையை ஆராயனும்” என்றான்.
தாடகைக்குக் கணவனின் பேச்சு பிடிக்கவில்லை “தங்கராசு கோடாங்கியை கூட்டிட்டு வா, கோவில் வீட்டில வச்சு கேட்போம் ” என்றாள். சிங்கராசு அதில் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் வீரன் “கேட்போம் ஆத்தா “ என்றார்.
இத்தனை ஆர்ப்பாட்டத்துக்கும் நடுவில் மென்னகை மாறாமல் அமர்ந்திருக்கும் பேத்தி பதுமத்தைப் பார்த்த வெள்ளையம்மாள், அவளை அழைக்க, “அப்பத்தா” என அவர் அருகில் சென்று அமர்ந்தாள்.
வாஞ்சையாக அவள் கன்னத்தைத் தடவியவர், “என்ன என்னமோ சொல்றாக, உனக்குப் பயந்து வருதா ஆத்தா” என கேட்க, “பயமா, செத்த முன்ன அண்ணேன் என்ன சொல்லுச்சு. கழுவன் குடும்ப பொண்டுகள்னா, தப்பு செய்யிறவனுக்கு பயம் வரணும் சொல்லுச்சே.கழுவன் குடும்பத்தில் பிறந்ததே மத்தவங்களுக்கு பயம் காட்டத் தானே.” எனக் கண்கள் ஒளிரச் சிரிக்க, மூத்த வாவரசிக்கு, தைரியமான பெண்களை அடக்கி ஆளவேண்டும் என ஆண்பிள்ளைகள் நினைப்பார்களே, இவளுக்கும் தாயை போலவே பெரும் போராட்டம் காத்திருக்கிறதோ என அவர் ஒருதிசையில் யோசிக்க, வேறு திசையில் நிகழ்வுகள் நிறைவேறக் காத்திருந்தன.
அடுத்து வந்த நாட்கள் பெரிய ஆர்ப்பாட்டம் இன்றி கடக்க, பிடிபட்டவர்களில் ஒருவன் சுல்தான் ஆள், மற்றொருவன் அரையன் ஆள் என்பது உறுதியானது. சிங்கம், “இப்போதைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். பாசறையில் காவலில் வைங்க. காலம் வரும் போது வேலைக்கு ஆவாய்ங்கே” என்றான்.
சின்ன கழுவன் குடியில், பெருமாள் சிலைகள் கிடைத்த செய்தி, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே தெரியும். சின்ன கழுவன் குடிக்கு வந்த முத்தையனுக்கு, ஒரே நாளில் காயங்கள் ஆறி, உடல் நலம் தேறியிருந்த மாமனைக் காணவும் ஆச்சரியம். வள்ளியும், துரைராசுவும் நடந்ததை சொல்ல, “அதிசயமா இருக்கே, புத்தூர் மலை தேடுதலையும் வெரசு படுத்துவோம்.” என்றவன்,
“சிலையோட புதையல் எதுவும் கிடைக்கலையா.எனக்கென்னமோ இத ராயருங்க அதை வந்திருப்பாக்கண்டு தோணுது” தன் கருத்தையும் சேர்த்து சொல்ல, வள்ளி, “இருக்கும் கொழுந்து, ,இதுக்கு தான் நாளேடுத்துக்கு போய் வந்து, நாலு விஷயம் தெரிஞ்சு வச்சுக்கணும். ஆராய்ஞ்சிருவோம், நம்மளை மீறி இங்குட்டு போயிடுவாங்க. இந்த சின்ன ராசா மேல தான் பெரிய கண்ணை வச்சுக்கணும்” என வேங்கடவனைப் பற்றிச் சொன்னாள்.
“நாகமலை அடிவாரத்தில் பார்த்துருக்கேன், எப்போ பதுங்கனும், எப்போ பாயனுமுண்டு விஷயம் தெரிஞ்ச ஆளு “ என்றான்.
ராயர் குடும்பம், பெரும் பொழுதை அதனுள்ளே கழித்தனர். மூலிகை காற்று, சிலைகளின் சானித்தியம் காயம் பட்டவர்களையும் விரைவில் குணமாகியது.
இரண்டு இரட்சை கயிறுகளை வைத்துக் கொண்டே, இரண்டு குடும்பங்களும் பெருமாள் சோலைக்கு வந்து சென்றனர்.
குழந்தை அலமேலுவையும் அங்கே தூக்கி வந்து வைத்துக் கொண்டு, பூக்களைப் பறித்து, மாலையாய் கட்டிப் போடுவதும், பாசுரம் பாடுவதுமாக இருக்க, அவளது மனநிலை தேறி ஒரு வித அமைதி குடி கொண்டது.
வேங்கடவன், அடுத்த உத்தரவுக்காகக் காத்திருந்தான். தினமும் தன் பத்மையோடு மனதுக்குள் பேசுவான். கற்பனையிலும் கூட, பதுமம் முறைத்துக் கொண்டு, “என் அப்பாருக்கு இதெல்லாம் பிடிக்காது. நான் வேணும்னா, மருதனை அடக்கி, என்னை கலயாணம் கட்டிக்குங்க” என அசட்டையாகவே பேசினாள் . பெரிய கழுவன் குடி சென்று பத்மையை பார்த்து வரலாமா, என்ற ஆவல் தோன்றியது.
மூன்றாம் நாள் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி விட்டான். சதுரகிரி சென்றிருப்பான் என வானவனும், எண்ணியிருக்க, அவன் வந்து சேர்ந்த இடம் அவர்கள் காட்டு மாளிகைக்கு அருகில் உள்ள சித்த பண்டூர் பெருமாள் கோவில். அதனருகே கோவில் கொண்டுள்ள கருப்பனுக்குக் கிடா வெட்டி நேர்த்தி கடன் செலுத்தக் கழுவன் குடும்பமும் வந்திருந்தது.
பெருமாள் கோவிலின் கொடி மரத்தில் கருப்பன் எவ்விதம். வைணவ கோவிலில் நாட்டார் தெய்வமான கருப்பன் எப்படி, கிடா வெட்டு நடக்கிறதே!
அப்பகுதிக்குப் புதிதாய் வந்த வணிகர் கேட்க, தலபுராணமாக, திருமலைவாசன், பத்மாசினி கதையைச் சொன்னார் முக்காலம் அறிந்த துறவி சொல்ல, வணிகரோடும், கழுவன் கூட்டத்தோடும் ,செம்பதுமமும், வேங்கடவனும் கேட்டிருந்தனர்.
பத்மாசினி கதையை அடுத்த அத்தியாயத்தில் நாமும் கேட்போம்.
திடியன் மலையடிவாரம், சின்ன கழுவன் குடியை ஒட்டிய காட்டுப் பகுதியில் , பளிங்கர்களும், ராயர்களுமாகச் சிலைகளை ஒரு மாதமாகத் தேடுகின்றனர். குறிப்பின் படி மருத மரத்தைக் கண்ட பின்பும் கூட, கண்கட்டு வித்தையாய் அருகில் வரும் போது மரமே மறைந்து விளையாட்டு காட்டியது. வேங்கடவனை பின் தொடர்ந்த போதும் , பாதை மர்மங்கள் நிறைந்ததாக துரைராசு, கபிலன், வானவன் மெய்க்காப்பாளர்கள் ஆகியோருக்கு, ஆபத்தும் காயங்கள் மட்டுமே மிஞ்சியது. கடைசியாக இரண்டு நாட்களாக வேங்கடவனையும் காணவில்லை.
இன்று அடர் வனத்துச் சோலைக்குள் மாயவன் வெளிப்பட்டது எப்படி. சற்று முன் அவ்விடத்தையே புரட்டிப் போடும், சூறைக் காற்று வீசியது, இப்போது தென்றலாய் வருடுகிறதே எப்படி. ஆயிரம் கேள்விகள் உதயமாகின. பதில் சொல்வார் தான் யாருமில்லை.
வானவன், துரைராசு,தங்கராசு மற்றும் பெண்கள் மூவரும் சோலைக்குள் தான் இருந்தனர். சூறைக் காற்று நின்று, அவ்விடம் இயல்புக்கு வந்த பின், பெருமாள் சிலைகளைப் பற்றி நின்ற தங்கராசு, வானவனும் அதனை நிலை நிறுத்தி விட்டு, தள்ளி நின்றனர். வேங்கடவன் நிலையும் சற்று மேம்பட்டு இருந்தது. தாமினி, தனக்குத் தெரிந்த எல்லாம் பாடி முடித்திருந்தாள்.
வள்ளியும், சிவப்பியும் இன்னும் சில மூலிகைகளுடன் நின்று தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.
துரைராசு, வானவன் இருவரும், அங்கு நடந்தது யாதென விசாரித்தார்கள். தங்கராசுவுக்கும் எதுவும் நினைவு இல்லை, ஏதோ ஒரு சக்தியால் உந்தப்பட்டு பெண்களை அவ்விடம் அழைத்து வந்ததாகச் சொன்னான்.
“அது சரி தங்கம், ஆனால் அதுக்கு முன்னாடியே உன் மேனியில் சிராய்ப்புகள் இருந்துச்சு , அது எப்படி” என வினவ, நினைவில் இல்லை என்றான்.
தாமினியும் அப்போது தான் அவனை ஊன்றி கவனித்தாள், முன்பு கண்ணில் பட்டும், கருத்தில் படாதது, இப்போது பட்டது. அவனருகில் வரவும், தன் பார்வையைத் தழைத்துக் கொண்டு நகரப் பார்த்தான்.
“சற்று பொறுங்கள்” எனப் பனித்துவிட்டு, அவனைச் சுற்றி வந்து பார்க்க , தங்கராசுவுக்கு தர்ம சங்கடமாக இருக்க, மேல் துண்டை சரியாகப் போட்டுக் கொண்டான். அவன் அவஸ்தையை உணர்ந்த வானவன், “ தாமு, அவரை சங்கடப் படுத்த வேண்டாம்” என்றார்.
“என் பார்வையே அவருக்குச் சங்கடம் தரும் எனில், அவர் என்னை வலுவில் தூக்கிச் சென்றார்” அவள் குற்றம் சுமத்த,
“மன்னிக்கணும், குழந்தைக்காகத் தான்.” வாய்க்குள் சொல்லிக் கொண்டவன், அவளை ஏற்றெடுத்துப் பார்க்க, “அதுமட்டும் தானா” என அவள் பார்வை அவனைக் குற்றம் சுமத்தியது. முடிவுக்கு வந்தவனாய்,
“இப்போ என்ன செய்யனுமுண்டு சொல்றீங்க” நேருக்கு நேர் நின்று கேட்க, “மேல் துண்டை எடுங்க” எனக் கட்டளையிட்டவள், “வள்ளியம்மை, இங்க வாங்க” எனச் சளைத்தவள், அவன் மார்பிலும் , முதுகிலும் பதிந்திருந்த அச்சு தடங்கள் , சிராய்ப்புகள் ஆகியவற்றைக் காட்டி, பெருமாள் சிலையையும் காட்டியவள், “ அவர் மார்பில் பதிஞ்ச அச்சு, இப்போ நம்ம கண் முன்னாடி பதிஞ்சது. இந்த காயம், சிலையின் கூர் பகுதி குத்தியதால் வந்தது. முதுகிலும் அதே போல் இருக்கு பாருங்க. அப்போ இவர் தான் சிலையை சுமந்துட்டு வந்திருக்கணும் “ என நேரில் பார்த்தது போல் சரியாக நூல் பிடித்துச் சொல்ல,
துரைராசுவும் எழுந்து வந்து அண்ணன் மகனை ஆராய்ந்தவர், “இளவரசி சொல்றது வாஸ்தவம் தான். எப்படி தங்கம்” என அவர் குறுக்குக் கேள்வி கேட்க, வானவன் யோசனையாக அவனையே பார்த்திருந்தார்.
தாமினியின் பேச்சிலிருந்த அதிகாரம் அவனைக் குற்றம் சுமத்துவது போல் இருக்க, வானவன் முன் அவளை முறைக்க முடியாமல், “அப்பு, அவுக தான் முகத்துக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுறாகண்டா, நீயும் ஒப்பாமல் பேசுறவன். பெருமாளை தூக்கியிருந்தா, உன் ஊர்ல எதுக்குயா வைக்கிறேன், எங்க ஊருக்கு கொண்டுக்கிட்டு போயிருக்க மாட்டேனா. ரவைக்கு உன் ஊர்ல தங்கினது தான் பிழையா போச்சு. என்னமோ செய்ங்க, நான் கிளம்புறேன்” ஆதங்கத்தைக் கொட்டி விட்டு தங்கராசு கிளம்ப முயல,
“ கழுவரே, என் தங்கை தங்களைக் குற்றம் சுமத்த வில்லை, இங்கு நடத்தை யூகமாகச் சொல்கிறாள்” வானவன் விளக்க உரை கொடுக்க,
“காவல்காரனை, திருட்டு பயண்டு நினைக்காமல் இருந்தா சரிதான். நான் கிளம்புறேன்” அவன் எட்டுக்களை ,எடுத்து வைக்க,
“யோவ் மாமா, இதென்னவோ மாயம், மந்திரமா இருக்கு. இந்த இடத்தில இருந்து என்னைய வெளியே கொண்டி விடு. அப்புறம் என்னண்டோ பொழைச்சுக்குறேன்” சிவப்பி அவனைத் தடுக்க,
“இவளொருத்தி” எனச் சிவப்பியை முறைத்த வள்ளி, “தம்பி நில்லு, காயத்துக்கு மருந்தாவது போட்டுக்கிட்டு போ” என அவனை அழைத்துச் சென்று, மேலும் சில மூலிகைகளைப் பறித்து, அரைத்து அவன் காயத்துக்குப் பத்து போட்டவள், அதே மருந்தை தன் அண்ணனுக்கும் போட்டு விட்டு, தாமினியிடம் கொடுத்து, வானவனுக்கும் பூசி விடச் சொன்னாள் .
“நன்றி, தம்பி முழிக்கட்டும், அப்புறம் போட்டுக்குறேன். “ வானவன் மறுக்க, தாமினி தயங்கி நின்றாள்.
“அதிகாரம் எல்லாம், காவல்காரவுகிட்ட மட்டும் தானாக்கும்” என தாமினியை ஜாடை பேசிய வள்ளி,
“வீட்டுக்கோ, நாட்டுக்கோ தலைவன் திடகாத்திரமா இருந்தா தான் மத்தவுகளை கவனிக்க முடியும்” என்றவள், வலுக்கட்டாயமாக வானவன் காயத்துக்கும் மருந்தைப் பூசச் சொல்ல, அவரின் காயம் இன்னும் ஆழமாக இருந்தது. தாமினுக்குச் சரிவரக் கட்டும் போட வரவில்லை.
“வள்ளி, அவுகளுக்கு பழக்கம் இருக்காது,பெரியவுகளுக்கும் உன் கையாள மருந்து கட்டி விடு, நேத்து ரவைக்கு நீ மருந்துக்கு, நல்ல குணம் தெரியுது. ராசா ஆபத்துக்குப் பாவம் இல்லை, வள்ளி கையாள கட்டு கட்டிக்குங்க” துரை ராசு இருபக்கமும் எடுத்துச் சொல்ல, வள்ளி, வானவனின் காயத்தை ஆராய்ந்து, சிவப்பியையும், தாமணியையும் வேலை வாங்கி, மருந்தைப் போட்டு, தன் சிகிச்சையை முடித்தாள்.
இரண்டாம் பகலில் வேங்கடவனுக்கு மூர்ச்சை தெளிந்து நினைவு வந்தது. கண் முன் இருந்த பெருமாள் சிலைகளை முதல் முறை பார்ப்பவன் போல் அதிசயித்து, “அண்ணய்யா, சிலைகளைக் கண்டுபிடித்து விட்டிர்களா, எங்கே இருந்தது. யார் தேடி எடுத்தது” என வினவ, அவனை வினோதமாகப் பார்த்தார்கள்.
தங்கள் ஆட்களைத் தவிர அதிகப் படியாக இருந்த தங்கராசுவை கேள்வியாகப் பார்த்தவன், “ பத்மையின் தமையன், நீங்கள் இங்கே எப்படி” என வினவ, “தம்புடு, உனக்கு எதுவுமே நினைவு இல்லையா, நீ மாயமாகி இன்று மூன்றாம் நாள். மாயவனின் பாதத்தில் மூர்ச்சையுற்று கிடந்தாய்” வானவன் , தான் அறிந்ததைச் சொல்ல, அவனும் குழம்பினான்.
“சின்னம்மா, எல்லாம் சரி, இப்போ நம்ம சோலையை விட்டு எப்படி வெளியே போறது. எல்லாரும் போயிட்டமுண்டாலும் பெருமாள் இங்கனையே இருப்பாரா, திரும்பத் தேட விட்டுட போறாரு” எனச் சிவப்பி தன் சந்தேகத்தைக் கேட்க, மற்றவர்களும் யோசிக்க ஆரம்பித்தனர்.
தங்கராசு, “அந்த இரட்சை கயிறு தான், இந்த இடத்தை காட்டும்” சிவப்பி கையிலிருந்ததை சுட்டி கட்டி சொல்ல, அதே போல் ஒரு கயிறு வேங்கடவன் கையிலும் கட்டப்பட்டு இருந்ததை அப்போது தான் கவனித்தனர்.
சில புதிர்கள் அவிழ்ந்தால் , பல புதிர்கள் புதிதாய் விளைந்தது. “யோகி வல்லபரைக் கேட்டால், அடுத்து ஆகவேண்டியதுக்கான வழி கிட்டும் ” என்றான் வேங்கடவன்.
“அவரை தேடி திருமலை வரை செல்லவேண்டுமா’ வானவன் கேட்க, “இல்லை, பெருமாள் வெளிப்படும் காலம், ஏழுமலையின் உயர்ந்த கிரிக்கு, தாம் வந்து சேர்ந்துவிடுவேன் என்று சொன்னார்”
“ உயர்ந்த கிரி எனில் கோம்பை மலையா” எனத் துரை ராசு குழம்ப, “சதுரகிரியாக இருக்கும்.” என்றான் தங்கராசு.
“ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் அரும்பாடுபட்டுக் கிடைத்த கிடைத்த பொக்கிஷம், நித்திய பூஜை அவசியம் செய்யவேண்டும் “என்றாள் தாமினி.
“கட்டாயம் செய்வோம்” என்ற வானவன், “இரட்சை கயிறு தான் வழிகாட்டி எனில், குறிப்பிட்டவர்கள் மட்டும் அதன் துணையோடு இங்கு வந்து செல்வோம்” என்றார், வள்ளியும், தாமினியும் நித்திய பூஜை செய்ய முன் வந்தனர். வேங்கடவன் , வல்லபரைத் தேடி சதுரகிரி சென்று வருவதாக அறிவித்தான்.
பெருமாளை வணங்கி, காவலர் குடும்பம் கிளம்ப, தாமினி, தங்கராசுவிடம், “என் பேச்சில் பிழை இருந்தால் மன்னித்து…” என அவள் வார்த்தையை முடிக்கும் முன், “ ராணி மார், வேலைக்காரனை அதிகாரம் செய்ய உரிமைப்பட்டவங்க தான். கும்புடுறேன்” எனக் கிளம்பிவிட்டான்.
தங்கராசு, சிவப்பியிடம் ,”ஆத்தா, இரட்சை கயிறு கட்டியிருக்கவளே, கிளம்பு. உன் பின்னாடி தான் வரணும்” எனவும், “அப்படியா” எனச் சிரித்துக் கொண்டவள், தாமினியிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப, காவலர் குடும்பம் உடன் சென்றது.
பெரிய கழுவன் குடியிலும் பரபரப்பு அடங்கி அமைதி திரும்பி இருந்தது. செம்பதுமத்துக்கு வலிப்பு அடங்கி மூர்ச்சையிலிருந்தால். மகள் கண் விழிக்கும் வரை, சிங்கமும் அந்த அறையை விட்டு அங்கே, இங்கே நகரவில்லை. தகப்பன் கால் மாட்டில் தவமிருக்க, தலைமாட்டில் ராக்கம்மாவும், மற்ற இருபுறம் தாடகையும் கோதையும் அமர்ந்திருந்தனர்.
அந்த ஒரு பொழுதுக்குள் குலதெய்வத்திடமும், தங்கள் இஷ்டதெய்வத்திடமும் ஆளாளுக்கு, பொங்கல் வைக்கிறேன், கிடா வெட்டுறேன்,முள் பாதம் நடக்குறேன் என வேண்டி இருந்தனர்.
தற்போது, வைத்தியர் கொடுத்த சிகிச்சைக்குப் பலன் இருந்தது. செம்பதுமம் திறக்க, தாய்மார்கள் நன்றி சொன்னார்கள். பதுமம் கண் திறக்கவும் எதிரே இருந்த சிங்கத்தைப் பார்த்து, “நாணாகாரு” என மென்னகை புரிந்த படி மீண்டும் கண்ணை மூட, ராக்கம்மா முணுமுணுக்க ஆரம்பித்தார்.
“ஆத்தா, பதுவு “ எனச் செம்மண்ணில் நடந்தது போல் சிவந்திருந்த, அவள் உள்ளங்காலைத் தேய்த்து விட்டு, சில வர்ம புள்ளிகளை அழுத்த, சோர்வு நீங்கி மீண்டும் கண் திறந்தாள்.
எதிரே, சிங்கம் தன் பாதத்தைப் பற்றியிருப்பதைப் பார்த்து, “அப்பாரு” என எழுந்து தந்தையின் கைகளைப் பிடிக்க, “பார்த்து, சூதானமா” என மற்றவர் குரல் கொடுத்தனர்.
“என் காலை எதுக்கு அப்பாரு பிடிக்கிறிங்க” வருந்திய மகளின் முகம் கூட இன்று வடிவழகாய் மிளிர்ந்தது.
“ அப்பனுக்கே பயம் காட்டிட்டியே ஆத்தா. நான் வர்மம் சொல்லி குடுத்ததில தான் குத்தமுண்டு சொல்லிப்புட்டா உன் அம்மா” என்றவன், பேச்சோடு பேச்சாகவே, அவள் நாடியைப் பிடித்துப் பார்க்க, “என்ன ஆச்சு அப்பாரு” என தன்னையும், தன்னை சுற்றிலும் பார்க்க, அவள் திருநீரிலும், சுற்றி உள்ளவர் கண்ணீரிலும் குளித்திருந்தனர். தலைமாட்டில் நின்ற ராக்கு, திருநீற்றைப் பூசி விட்டு, பதுமத்துக்கு திருஷ்டி சுற்றி சொடக்கிட்டு விட்டு, கன்னம் வழித்து கொஞ்சி விட்டு, சிட்டாகப் பறந்தார்.
புரியாமல் விழித்த பதுமம், “என்ன ஆச்சு” எனக் கேட்க, கோதை காலையில் கண்ட காட்சியைச் சொல்லி, ஒப்பாரி வைக்க ஆரம்பிக்க, “ அட ச்சே, செத்த சும்மா இரு” என அதட்டிய சிங்கம், “ஒன்னும் இல்லை ஆத்தா, நீ எந்திரிக்க நேரம் செண்டுச்சுண்டு , உன் ஆத்தாமார் ஊரை கூட்டிபுட்டாளுங்க” என சமாளித்த சிங்கம், கண் காட்ட மற்றவர் களைந்து சென்றனர்.
தாடகை,வர்மம் பயின்றதில் ஏதோ பிசகு என்றே நினைத்தாள். கணவனோடு பிணக்கு கொண்டு அவள் பேசாதிருக்கும் பொழுது, அவளை மலை இறக்கவே , சிங்கம் பரிகாசமாக சில வேலைகளைச் செய்வான். மக்கள், மகன் என வரும் பொழுது அப்படிச் செய்யமாட்டான் தான், ஆனாலும் அவனே நிற்க முடியாமல் இருக்கும் போது, ஏதேனும் பிழை நேர்ந்து விட்டதோ என்ற பயம்.
மகளை தன் பக்கம் திருப்பி, “தூக்கம் வருதுண்டு ராத்திரி வந்து படுத்தவளுக்கு என்ன ஆச்சு, என்ன செஞ்சுது” வரிசையாகக் கேள்விகளைத் தொடுக்க, “எனக்கு எதுவுமே நினைவில் இல்லைம்மா” என்ற ஒரே பதில் சொல்ல, “அதெப்படி தெரியாமல் போகும், பெண்பிள்ளைக்குச் சுதாரிப்பு வேண்டாமா” ஆதங்கமாகக் கேட்க, சிங்கராசுவுக்கு எரிச்சல் வந்தது.
“அடியேய் புள்ளை, பொழைச்சு எந்திரிச்சு வந்திருக்கு, அதுக்கு சேவகம் பண்றத விட்டு புட்டு குறுக்கு விசாரணை நடத்துறவ. அப்புறம் வச்சுக்க. கோதை, அவளுக்குக் கொண்டுவா” எனச் சிங்கம் பேசும் முன், பேச்சியம்மாள் நடுவில் புகுந்தார்.
மந்தையில் கிடத்தியிருந்த ராமிக்கும் மூர்ச்சை தெளிந்து இருந்தது. கழுவன் கூட்டம் அவளை விசாரித்துக் கொண்டிருக்க, அவள் பேசும் நிலையில் இல்லாமல் எதையோ பார்த்து அரண்டவள் போல் இருந்தாள். ரதி தேவி கையை பிசைந்து கொண்டு அருகில் நிற்க, அவளிடமும் கேள்வி கேட்டு குடைந்தெடுத்து விட்டனர். சிங்கராசு தேவன் வந்தால் ஏதாவது கதை புனைந்து தப்பித்துக் கொள்ளலாம் என அவன் வரவை எதிர்நோக்கி இருந்தாள்.
ராக்காயி கைப்பற்றி வைத்திருந்த இரண்டு ஆட்களை , ரங்கதுரை, சமையன் முதலான ஆட்கள், “யாரையிடா வேவு பார்க்க வந்த” எனத் துவைத்து எடுத்து விட்டனர். அப்போதும் அவர்கள் வாயைத் திறக்காமல் இருக்க, “ சமையா இவனுங்களை பாசறைக்கு கொண்டு போய் எந்திரத்தில் கட்டு. அங்கையும் வாயை திறக்கலையிண்டா, தோலை உரிச்சு உப்பு கண்டம் போட்டுருவோம். சிங்கம் சிகிச்சை தான் சரி “ என்று விட்டுக் கிளம்ப, அவர்கள் கண்களில் பீதி தெரிந்தது.
சண்டமாருதன் அனுப்பிய சூறைக் காற்று அதன் இலக்கில் தாக்க முடியாமல் , சென்றதை இரண்டு மடங்கு வேகத்தில் திரும்பி வந்து துஷ்டி மலையைத் தாக்க வந்தது. சண்ட மாருதனுக்கு எடுபிடியாக இருக்கும் குட்டி பூதம் அவனை எச்சரித்தது. தன் மந்திர கோலை பற்றிக் கொண்டவன், “ஜாம்பா நாம் பாதாள குகைக்குள் செல்ல வேண்டும். மிருக்காங்கன் சினம் தனியவும் திரும்ப வரலாம்“ என்றான்.
சண்டனிடம், பஞ்ச பூதங்களில் ஒவ்வொன்றின் ஆற்றலையும் பெற்ற ஏவல் பூதங்கள் உண்டு. நீண்ட கால தவம், மந்திர, தந்திரங்களை கற்று தன சக்தியை பெருக்கி வைத்திருந்தான்.
அதில் ஒன்றான சூறை காற்று வடிவில் இருக்கும் மிருகாங்கனை அனுப்பி வைத்திருந்தான். இந்த வகை துர்சக்திகள் ஏவிய பணியை செய்யமுடியாமல் அவனையே வந்து பலமாய் தாக்கி, சில நாட்களுக்கு அவனை செயற்ற விடாமல் முடக்கி போடும், இதன் விளைவு அறிந்தே தான் எழுமலை பகுதிக்கு அனுப்பி வைத்தான்.
கழுவன் குடியை பாதுகாக்கும் பஞ்சபூத சக்திகளின் அம்சமான காவல் தெய்வங்களை மீறி , உள்ளே நுழைய முடியாமல் , இதோ சென்றதை விட அதிகமான வேகத்துடன் திரும்பி வந்து கொண்டிருக்கிறது. ஏவியவனே தாக்கு பிடிக்க முடியாமல் ஓடி ஒளிய முயன்றான். ஜாம்பா பாதாளத்துக்கு சென்றுவிட, சண்டன் பாதாளத்துக்குள் செல்லும் முன் மிருக்காங்கன் அவனை தாக்கியது.
துஷ்டி மலையிலிருந்து யாக குண்டம், சூலம், மண்டை ஓடுகள் எல்லாம் சந்தனோடு சேர்ந்து காற்றில் பறந்தன. தன் மந்திர கோலை உறுதியாக பற்றிக் கொண்டு, மிருக்காங்கனை தன கட்டுக்குள் கொண்டுவரும் மந்திரத்தை ஜெபித்தான். ஜென்மங்களாக அவன் சேர்த்து வைத்த சக்தி குறைய ஆரம்பித்தது.
பத்மாசினி, “ஹா, ஹா” வென சிரித்து, “இந்த முறை உன் முயற்சிகள் யாவையும் முறியடிப்போம். உன் முடிவு எங்கள் கைகளில்” எனச் சூளுரைப்பது போலிருக்க,
“விட மாட்டேன், விட மாட்டேன். நீ எத்தனை ஜென்மம் எடுத்தாலும், உன் எண்ணம் ஈடேற விடமாட்டேன்” அவனும் கத்த , “பார்க்கலாம் வாடா” எனத் திருமலை வாசன் சவால் விட, அவர்களுக்குப் பின், அருவாள் வைத்துக் கொண்டு காவல் தெய்வங்கள் நின்றன.
20. பத்மாசினி
திடியன் மலையடிவாரம் , சின்ன கழுவன் குடி வனப்பகுதியில் ,அடர்ந்த சோலைக்குள் கல் மேடையில் பெருமாளும், அவர் பாதத்தில் ஒரு மனிதனும் கவிழ்ந்து கிடக்க , அவ்விடத்தை அடைந்த நால்வருக்கும் மனதில் வெவ்வேறு விதமான உணர்வுகள்.
பெருமாளைப் பார்க்கவும், தாமினி தேவிக்கு உடல் சிலிர்த்தது. கண்களில் நீர் பிரவாகம், இந்த சிலைகள், அவர்கள் குடும்பத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நன்கு அறிந்தவள். இதைத் தேடித் தான் தெற்கு நோக்கி வந்தனர். கைகூப்பியபடியே சிலையை நோக்கி ஓடியவளுக்கு, உடன் சென்ற தங்கராசு கவிழ்ந்திருந்தவன், தலையை நிமிர்த்தவும், தமையன் என்பது தெரிந்தது. “அண்ணையா” அவன் அருகில் அமர்ந்து வேங்கடவனை எழுப்ப முயன்றாள் .
ஆம், பெருமாளுக்கு முன் மண்டியிட்டிருந்த மனிதன் சாட்சாத் வேங்கடவன் தான். தன்னுணர்வின்றி மயங்கிக் கிடக்க , தாமினுக்குப் பதட்டம் தொற்றியது, கண்ணீரோடு தொடர்ந்து அழைத்த வண்ணம் இருக்க, “இளவரசி, சற்று பொறுங்கள்” என தங்கராசு, வேங்கடவனைத் தூக்கி வந்து சம தரையில் படுக்க வைக்க முயல, தாமினி சட்டென அமர்ந்து, தன் மடியில் தமையனைத் தாங்கிக் கொண்டாள் .
வள்ளியும், சிவப்பியும் பெருமாள் சிலையின் சானியத்தில், அருகில் செல்லவும் அச்சப்பட்டு சற்று தள்ளியே நின்றனர். சிவப்பி, “சின்னம்மா “ என வள்ளியின் கையை பிடித்துக் கொள்ள, “பெருமாள் சாமி தான். எம்புட்டு அருளு” வள்ளிக்கும் உடல் ஆடியது.
பெரிய கழுவன் குடியில் கூழன் , ரங்கராசுக்கு தகவல் தரச் சொன்னார்.முத்து ராசு பாளையத்தின் அரண்மனை பக்கம் இருக்க, வீட்டிலிருந்த ரங்கத்துக்கு தகவல் தந்தனர். சமையன் சங்கேத ஒலி தரவும், தனக்கானது என ரங்கம் எழுந்து வந்து விட்டான். விவரம் பகிரப்பட, “எல்லா இடத்தையும் சோதனை போடுங்க” அவனும் ,முதலில் தங்கள் வீட்டைச் சுற்றி வந்தான். கொள்ளை புறத்தில் முக்காடு போட்ட உருவம் மயங்கிக் கிடக்க, “யாருடா இது” என ரங்கமும், சமையனுமாக கவனமாகத் திருப்பி பார்க்க,
ரதிதேவிக்கு துணை வந்த ராமி. “இந்த பொம்பளை எப்புடி இங்க விழுந்து கிடக்குது, உசிர் இருக்குதா ” எனச் சமையன் நாடியைப் பிடித்துப் பார்த்து , மற்றொருவனுமாகத் தண்ணீரை அவள் முகத்தில் அடித்து எழுப்பினர்.
அதற்குள் அவ்விடமே பரபரப்பாகி வீரன், வேலாயி மற்றும் சிலர் கூடி விட்டனர். ராமி கண் விழித்தவள் , சற்று தொலைவில் நின்ற உருவத்தைப் பார்த்து வீல் என் அலறியபடி மீண்டும் மூர்ச்சையாக , மற்றவரும் திரும்பிப் பார்க்க, அங்கே ராக்காயி நின்றாள்.
“ராக்கு, கருக்கல்ல ஏன் இங்குட்டு திரியிறவ” வேலாயி கேட்க, அவரை சட்டை செய்யாமல் சமையனை வரச் சொல்லி சமிக்கை செய்து விட்டு அவள் முன்னே, ,நடக்க, “பெரியாத்தா எதுக்கோ கூப்பிடுது “ என்றான்.
“என்னெண்டு போயி கண்டுக்கிட்டு வா”ரங்கம் அனுப்பி வைக்க, சமையன் ராக்குவின் பின்னோடு சென்றான்.
இரவில் காவலர்களோடு காவலாக , இந்த கழுவன் குடியைக் காப்பது ராக்காயி தான். காவலர் கண்ணில் தப்பினாலும் அவள் கண்ணிலிருந்து தப்பாது. சிங்கத்தின் மனைவி என்பதில் கழுவன் குடி மக்கள், அவளை மரியாதையாகவே பார்த்தனர். அவள் சொல் அவர்களுக்குத் தெய்வ வாக்கு.
வீரன், “இது ஆட்டக்காரம்மா வீட்டு பொம்பளை தானே, அதுக்கு சேதியை சொல்லு” எனவும், “பொழுதுக்கும் நம்ம வூட்டு பக்கமே ஊசலாடிட்டு திரியிவா, என்னத்தை செஞ்சாலோ” வேலாயி சந்தேகப்பட, ரங்கம் ஆட்களைக் கூப்பிட்டு, ராமியை மந்தைக்குத் தூக்கி வரச் சொன்னான்.
அதற்குள் “ஆத்தே, நான் என்ன செய்வேன், என் மவளுக்கு வெட்டி, வெட்டி இழுக்குதே. நாச்சியா இங்க வந்து பாரு” எனக் கோதை ஒப்பாரி வைக்க, மற்ற பிள்ளைகள் அலறி புடைத்து எழுந்து, அறைக்குள் ஓட, சின்னவள் சாமந்தி தன் அன்னையை அழைக்க ஓடினாள். ரங்கம், வேலாயி இருவரும் வீட்டுக்குள் விரைய, வீரன் பின்னோடு சென்றார்.
செம்பதுமம் கட்டிலில் படுத்திருந்தவளுக்கு திடீரென,உடல் தூக்கிப் போட ஆரம்பித்தது. மனதில் ஏதேதோ எண்ணங்கள் உழன்று யாரையோ அழைக்க முயன்றாள் . ஆயினும் வாய்ப் பூட்டுப் போட்டது போல், சொல்லும் வராமல், செயலும் இன்றி ஏதோ ஒரு சக்தியின் ஆளுமைக்கு உட்பட்டு சிரமப் பட்டாள்.
சின்ன கழுவன் குடியில் தங்கராசு வேங்கடவனின் பாதத்தில் சில வர்ம புள்ளிகளை ,அழுத்தியவன், தாமினிக்கு அவன் உள்ளங்கையைத் தேய்க்கப் பணித்து “,அக்கா, மூர்ச்சை தெளிய வைக்கிற மூலிகையை பறிச்சிட்டு வா” வள்ளிக்குக் கட்டளையிட, தம்பியின் குரலில் உணர்வு மீண்டவள், “இதோ” என அங்கும், இங்கும் தேடி, முன்பு வைத்தியர் காட்டிக் கொடுத்த மூலிகை கண்ணில் பட்டது. பறித்து வந்து, தம்பியிடம் காட்டி சரி பார்த்து விட்டு , அதைக் கசக்கிச் சாறெடுத்து, வேங்கடவனுக்குப் புகட்ட வர,
தாமினி தேவி, “முதல்ல எனக்கு கொடுங்க, எனக்கு ஒன்னும் ஆகலையினா, அண்ணையாவுக்கு கொடுக்கலாம்” எனச் சிகிச்சைக்குத் தடை விதிக்க,
சிவப்பி, “ அக்கா, அவுகளுக்கு வைத்தியமெல்லாம் அத்துப்படி, பயப்படாதீங்க” என தேற்றியும் தாமினி பிடிவாதம் பிடித்தாள்.
தங்கராசு, வள்ளியின் கையிலிருந்த விழுதைக் கேட்கவும், அவன் உத்தேசம் புரிந்து “தம்பி, இது மூர்ச்சையானவுகளுக்கு , நீ குடிச்சா நாலு நாள் தூங்க மாட்ட” என மறுக்க,
“பரவாயில்லை, நான் சமாளிச்சுக்குவேன் கொடு” எனப் பறித்து உண்டவன், சில பொழுது தாமதித்து, “நல்லா தான் இருக்கேன், சந்தேகம் தீர்ந்ததா, இப்போ கொடுக்கலாமா”என ,வினவ, அவள் மௌனமாக இருக்க, அதையே சம்மதமாகப் பெற்று,வள்ளி வேங்கடவனுக்கு மருந்தைப் புகட்டினாள்.
தங்கராசு தொடர்ந்து வர்ம புள்ளிகளை அழுத்த இதற்கு நடுவே சிவப்பியிடம் ஆட்களை அழைத்து வரச் சொல்ல,
“வேண்டாம் தம்பி, இது ஏதோ மர்ம பாதையா இருக்கு, எல்லாருமா போயிக்கலாம்” முன்தினம் தன் அண்ணன் சொன்ன அனுபவங்களைக் கேட்டிருந்த வள்ளி தயங்க, தாமினியும் வானவனின் அனுபவம் வைத்து, வள்ளியை ஆதரித்தாள்.
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது “ எனத் தீர்க்கமாகச் சொன்ன தங்கம், அப்போது தான் தன் வலது கையில் கட்டியிருந்த இரட்சை கயிற்றைப் பார்த்தான். ஏதோ ஒரு சக்தி உந்த, சிவப்பியின் கையை நீட்டச் சொல்லி, தன் கையிலிருந்ததை அவிழ்த்து அவள் கையில் கட்டி விட்டு, “நீ வெளியே நிண்டுகிட்டு, வானவருக்கு, இந்த கயிற்றைக் கட்டி அனுப்பி வை” எனக் கட்டளையிட, அவ்வளவு நேரம் இருந்த அச்சம் கலைந்தது, தைரியமாகவே வெளியே ஓடினாள்.
தேவைக்கு அதிகமான நேரம் ஆகியும், வேங்கடவன் மூர்ச்சை தெளியாமல் இருக்க, வள்ளி அவன் நாடியைப் பரிசோதிக்க, தாமினுக்குக் கிலி பிடித்தது.
அவள் மீண்டும், தங்கராசுவை குற்றம் சுமத்தி, அடுக்கடுக்காக கேள்விக் கணைகளைத் தொடுக்க,
‘பொறுமையற்றவளாக இருக்கிறாளே, தம்பியின் மேனியிலும் எவ்வளவு காயம் , அவனுக்கு நினைவில் இல்லாததை என்ன வென்று சொல்வான்’ என நினைத்தவள், “எங்களை வையறதுக்கு, உன் பெருமாளை போயி கும்பிடு, அவர் தானே இந்த கதிக்கு ஆக்கி வச்சிருக்காரு” தன் பங்குக்கு தாமினியை பேச தங்கராசு வேண்டாம் எனக் கண் காட்ட, இருவரும் வேங்கடவனுக்குச் சிகிச்சையைத் தொடர்ந்தனர். வேங்கடவனின் மூடிய இமைக்குள் கண்மணி உருள்வது தெரிந்தது. இதோ மூர்ச்சை தெளிந்து விடும் என அவர்கள் எதிர்பார்த்த நேரம், வேங்கடவன் மேனி வெட்டி இழுத்தது.
தாமினிக்கு கிலி பிடித்தது, யாரை என்ன சொல்கிறோம் என்பதே இல்லாமல், வெறி கொண்டவளாக தங்கராசுவையும், வள்ளியையும் தள்ளி விட்டு, “அண்ணையா, அண்ணையா” என அரற்ற, இம்முறை தங்கராசுவுக்கே கோபம் பலியாக வந்தது.
அவளை வலுவில் பிடித்து இழுத்து, வள்ளியை வேங்கடவனைப் பார்க்கப் பணித்தவன், அவன் பிடியிலிருந்து திமிறிக்கொண்டு, சூழலைப் புரிந்து கொள்ளாமல் செயலாற்றுபவளுக்கு அதிர்ச்சி வைத்தியமாக, ஓங்கி ஓர் அறையும் விட, வள்ளி “தம்பி” எனப் பதறினாள்.
கண்ணாலேயே அவளை அடக்கி விட்டு, தாமினியை நேருக்கு நேர் நோக்கி உறுத்து விழித்து, “தாமினி தேவி, எங்கள் முயற்சியில் பிழை இல்லை, உன் சிந்தனையில் பிழை. எங்களை வைத்தியம் செய்ய விடு. திக்கற்றவருக்குத் தெய்வமே துணை, அங்கே போய் முறையீடு” எனப் பெருமாளைக் காட்ட, மந்திரித்து விட்டவள் போல் அவன் குரலுக்கு அடி பணிந்து, பெருமாள் சிலை முன்பு நின்று அண்ணனைக் காப்பாற்றச் சொல்லிப் புலம்பித் தவித்தாள்.
வள்ளியும், தங்கமும் வேங்கடவனுக்குச் சிகிச்சையைத் தொடர்ந்தனர், “தம்பி, இது வைத்தியத்துக்குக் கட்டு படுற மாதிரி தெரியலை. எதோ, மந்திர, தந்திர வித்தையா போல” வள்ளி தன் அனுமானத்தைச் சொல்ல, இருவரும் அடுத்து என்ன செய்வது என அறியாமல் தவித்தனர்.
பெரிய கழுவன் குடியில், செம்பதுமம் அறையில் கழுவன் குடும்பமே கூடி விட்டது. பிள்ளைகளை முத்து நாச்சி, அங்கிருந்து அப்புறப்படுத்த, சாமி கருப்பன் வைத்தியரை அழைக்க ஓடினான்.
தாடகை, “நேத்து, இந்த மனுஷன் வர்ம பாடம் எடுத்தாரு, அதுல எதுவும் ஆகி போச்சோ” எனப் பரிதவிக்க, சிங்கமும் பின்னாடியே நொண்டியபடி வந்து விட்டான். கோதையும், தாடகையும் ஆளுக்கு ஒரு பக்கம், செம்பதுமத்தை பிடித்தனர். வியர்வை சலவையாய் கொட்ட, பேச்சியம்மாள் துடைத்து விட்டார்.
கழுவன் குடும்பமே ஆளுக்கு ஒரு கருத்தைச் சொல்ல, சிங்கம் மகள் முகத்தில் தெரிந்த தேஜஸையும், அவளுக்கு வெட்டி இழுக்கும் முறையையும் கவனமாக ஆராய்ந்தவன், வேகமாக வந்து நாடியைப் பார்த்து, கால்களில் சில நரம்புகளை இழுக்க வர,
“நீ சும்மா இரு, வைத்தியர் வந்து பார்க்கட்டும்” எனத் தாடகை , கணவன் மீது எரிந்து விழ , “அடியே, என் வித்தையினால வந்தது இல்லடி” எனச் சமாதானம் சொல்ல முயல,
“வைத்தியர் வந்தே பார்க்கட்டும், நீ சும்மா இரு மாமா” கோதையும் சுருக்கெனச் சொல்லி விட்டாள் . மனைவிமார் இருவரையும் முறைத்தவன், பேச்சியம்மாளை பார்த்து, “ஆத்தா, உன் பெரிய மறுமவளை கூட்டியா, அவ தான் இதுக்கு தோது “ என்றான் சிங்கம்,
“ராக்கம்மாவை யா சொல்றவன்” என சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டவர், வேலாயியை பார்க்க, ரங்கம், மதினியைத் தான் அழைத்து வருவதாகச் சென்றான். வைத்தியர் மூலிகை பெட்டியோடு உள்ளே வந்து, வலிப்பை நிறுத்தவும், மூர்ச்சை தெளியவும் வெகுவாக முயன்றார்.
சின்ன கழுவன் குடியில், வள்ளி மந்திரம், தந்திரம் எனச் சொல்லவும்,
“ இருக்கும் அக்கா” என ஆமோதித்த தங்கம், கண்ணை மூடி ஒரு நிமிடம் யோசித்து விட்டு, “இதோ வர்றேன்” என, பெருமாள் பாதத்திலிருந்த திருமண்ணையும், சடாரியையும் எடுத்து வந்து வேங்கடவனுக்குத் திருமண்ணைப் பூசி விட்டு, சடாரியை அவன் தலையில் வைக்க, வேங்கடவன் வலிப்பு குறைந்தது. ஆனால் மூர்ச்சை தெளியவில்லை.
தாமினி தேவி, தெய்வத்திடமும், தமையனிடமுமாக இங்கும் அங்கும் ஓடி அலைந்தாள். தமையன் சற்றே நிலை பெறவும், தமையனுக்காகப் பெருமாள் பாசுரங்களைப் பாட, மரம் அசைந்து மலர்கள் சொரிந்து, பூதேவி, சமேத ஸ்ரீனிவாசரை அர்ச்சிக்கும் பாக்கியம் பெற்றன. அவ்விடமே தெய்வீகம் சூழ்ந்தது.
பெரிய கழுவன் குடியில் வைத்தியர், “ இது வைத்தியத்துக்குக் கட்டுப் படாத, கண்கட்டு வித்தையா இருக்கு. உங்கள் குலதெய்வத்தை நினைச்சு துன்னூறு போடுங்க” என்றார்.
சிங்கராசு தேவன், மனைவிமாரை ஒரு பார்வை பார்க்க, சமையனை அழைத்துச் சென்றிருந்த ராக்காயி, ஓரிடத்தில் கட்டிப் போட்டிருந்த இருவரைக் காட்டி விட்டு, ரங்கம் அழைக்கும், முன்பே பறந்து அடித்து ஓடி வந்தாள் . வாசலிலேயே ரங்கம் விஷயத்தைச் சொல்ல, தங்கள் குலசாமி கோவிலுக்குள் சென்று, பஞ்சபூதங்களின் அடையாளங்களாய் வீற்றிருக்கும் குல தெய்வத்தை வேண்டி, திரு நீரை அள்ளிக் கொண்டு மகளிடம் விரைந்தாள்.
சிங்கம் சொன்னது போலவே, ராக்காயி ஏதோ முணுமுணுத்து, திருநீரை செம்பதுமத்தின் நெற்றியில் வைத்து விட்டு, கை , கால்களில் எல்லாம் தொடர்ந்து பூசிக்கொண்டே இருக்க வலிப்பு கட்டுக்குள் வந்தது. மூர்ச்சை மட்டும் தொடர்ந்தது.
திருமலைக்கு தெற்கே, தனித்த பாறை குன்று, சுற்று வட்டாரத்தில் ஒரு புல் ,பூண்டு கூட முளைக்காமல், மக்களால் கைவிடப்பட்ட பகுதியாக , துர்தேவதைகள் வாழும் மலை தூக்கிடி மலையில், பன்னெடுங்காலம் வாழும் சாபம் பெற்றவன் போல் ஒருவன், அகோரமாக , “இல்லை, ஜென்மம் எடுத்தாலும், உங்கள் எண்ணம் ஈடேற அனுமதிக்க மாட்டேன்” என இடியன் எனப் பெயர்கொண்ட சண்ட மாருதன் அலறிக்கொண்டு இருந்தான்.
அவன் வணங்கும் துர்தேவதையின் முன் சென்று அமர்ந்து, தன் யோக வலிமையால் , அக்கினியை உருவாக்கி, சைகை முறையில் மந்திர, தந்திர உச்சாடனம் செய்து, ஆகுதியாகத் தனது ரத்தத்தையும் கொடுக்க, சூறைக் காற்று சம்பந்தப் பட்ட இடத்தை தாக்கப் பயணித்தது.
துக்கிரி மலையிலிருந்து, சண்ட மாருத இடியன் அனுப்பிய சூறைக் காற்று திடீரென பெருமாளிரும் சோலையைத் தாக்கியது. காற்று அதிகமாய் வீச, சிலைகள் சாய்ந்து விடுமோ என்ற நிலை, தாமினி வேகமாய் சென்று சிலையின் ஒரு புறத்தைப் பற்றி , “கழுவரே வேகமாய் வாரும்” என அழைக்க, வேங்கடவனை வள்ளியின் பொறுப்பில் விட்டு விட்டு, தங்கராசு சிலைகளைக் கல் மேடையோடு சேர்த்து தாமினியையும் அணைத்து நின்றான்.
“ஏழுகுண்டல வாடா, கோவிந்தா இது என்ன சோதனை, எங்கள் குலத்தின் மீது உனக்குக் கருணை இல்லையா. ஏழேழு ஜென்மத்துக்கும் உமக்கே பனி செய்து கிடப்போம். சாபம் நீக்கி எங்களைக் காப்பாற்று” எனப் பெருமாள் பாதங்களைப் பற்றி மன்றாட, தங்கராசு, தாமினியின் கோரிக்கையை ஏற்குமாறு மனதார வேண்டிக் கொண்டவன்.
“இளவரசி, உமக்குத் தெரிந்த பெருமாள் நாமாவளிகளைச் சொல்லிக் கொண்டே இரு. இந்த காற்றைக் கடக்க அது ஒன்றே வழி” என அவள் செவியில் சொல்ல, அதை ஆமோதித்தவளாக , மந்திரங்களை ஜபிக்க ஆரம்பித்தாள்.
“தம்பி, சூதானம், நானும் வரவா” எனக் குரல் கொடுக்க, “இல்லை அக்கா, வேங்கடவன் தலையிலிருந்து சடாரியை அகற்றாமல், பிடித்துக் கொண்டே இரு” எனப் பணித்தான்.
பெரிய கழுவன் குடியிலும் , திடீரென ஆடு மாடுகள் சத்தம் கொடுத்தன. பலத்த காற்றும் வீச, மணிகள் அடித்தன. “கருக்கல்ல இதென்ன விசித்திரம்” என அச்சப்பட்ட கழுவன் குடும்பம், குல தெய்வத்தை வேண்டி, வீட்டின் இரு வாசலிலும், சாமி அருவாளை நட்டு வைத்தனர்.
துர் சக்தி எதுவும் மகளை அண்டக் கூடாதென, ரக்க்காயி தொடர்ந்து திருநீரை பூசிக்கொண்டே இருக்க, கழுவன் கருத்தய்யன்தாத்தா முதல் பெரியவர்கள் எல்லோருமே பதுமத்துக்கு திருநீறு பூசி வேண்டிக் கொண்டனர்.
இரண்டு கழுவன் குடியிலும் இருந்தவர்கள் தம்மை அறியாமலே முற்பிறப்பின் பயனாய் , பெருமாள் சேவையில் தங்கள் பங்கினை செலுத்தி, திருமலை வாசன்- பத்மாசினி தம்பதிக்குப் பெரிய உபகாரம் செய்து கொண்டிருந்தனர்.
சிவப்பி, இரட்சை கயிற்றின் உதவியோடு சோலையிலிருந்து வெளியேறியவள், ராயர் கூடாரங்களை நோக்கி விரைய, அவளுக்கு அலைச்சல் இல்லாமல், வானவனும், துரை ராசுவும் தங்களுக்குப் பட்ட காயங்களையும் புறந்தள்ளி, வேங்கடவனைத் தேடி வந்தனர். வழியிலேயே அவர்களைச் சந்தித்தவள், தந்தி மொழியாக வேங்கடவன் கிடைத்தது சொல்லி மூச்சு வாங்கியவள், வாங்கியபடி தன்னை பின் தொடருமாறு சைகை செய்து முன்னே செல்ல, மகிழ்ச்சியுடன் அவர்களும் பின் தொடர்ந்தனர்.
சோலையின் எல்லை வரவும், அவர்கள் தயங்கி நிற்க, “இந்த கயிற்றைக் கட்டிக்கிட்டா நம்ம பாட்டுக்குப் போகலாம். தங்கராசு மாமா அப்படி தான் கூட்டிட்டு போனார்”எனச் செய்தி சொல்ல, இருவருக்கும் தங்கராசா என அதிர்ச்சி. விட்டகுறை, தொட்ட குறை எனச் சமாதானம் ஆனவர்கள், சிவப்பியை முன்னே விட்டு, பின் தொடர்ந்தனர்.
சோலைக்குள் நுழையும் பொழுதே சூறைக் காற்று ஆரம்பித்திருக்க, மீண்டும் ஒரு சோதனை என வானவன் அதைச் சந்திக்கத் தயாராகவே வந்தார். பெருமாள் சிலைகளைத் தாங்கி பிடித்திருக்கும் தாமினி, தங்கராசுவை பார்த்தவர், அங்கே விரைந்து, சிலைகளை நிலை நிறுத்த தோள் கொடுத்தார்.
துரைராசு , சிவப்பி வழிகாட்டத் தன்னை அழைத்த தங்கையிடம் விரைந்தார்.
“சின்னவருக்கு என்ன ஆச்சு” என்றவரிடம்,
“சடாரியை இவர் தலையில பிடிச்சுக்கிட்டு , பக்கத்திலேயே உட்காரு அண்ணன். இதோ வந்துடுறேன்.” வள்ளி, வேங்கடவனை அவர் வசம் ஒப்படைத்து விட்டு, துர்சக்திகளை விரட்டும் வல்லமை பெற்ற மூலிகைகளான மருதாணி பூ, வெண்கடுகு, அருகம் புல் , வெள்ளெருக்கு ஆகியவற்றை வள்ளி, சிவப்பிக்கு காட்டிக் கொடுத்து, வேகமாய் பறிக்கச் சொன்னாள்.
சில நிமிடங்களில், இரு பெண்களுமாக மூலிகைகளைப் பறித்து, ஒன்றாகக் கலந்து, அஷ்ட திக்கு எனப்படும், எட்டுத் திசைகளிலும் தூவி விட, சிவப்பி கையிலிருந்த இரட்சையும் சேர்ந்து, துக்கிரிமலை இடியன் அனுப்பிய காற்றை விரட்டியது.
வேங்கடவன், செம்பதுமம் இருவரும் மூர்ச்சை தெளியுமா. சின்ன கழுவன் குடியில் பெருமாள் சிலை வெளிப்பட்டதின் பின்னணியில் உள்ள ரகசியம் என்ன. யாரந்த பத்மாசினி-திருமலை வாசன். துஷ்டி மலையில் இருக்கும் சண்ட மாருதன் யார்.
அவர்களுக்கும், இவர்களுக்கும் என்ன சம்பந்தம். பொறுத்திருந்து பார்ப்போம்.
எழுமலை கழுவன் குடி நள்ளிரவில் காவல்காரர்கள் கையில் சலங்கை கட்டப்பட்ட வேல் கம்புடன், நடமாடுவர். சிலர் உரக்கப் பாட்டுப் பாடியபடியே உலா வந்து அவ்விடத்தில் எல்லாம் சுகமே எனச் சமிக்ஞை செய்ய, பக்கத்துக்குக் காவல்காரனும் அவ்விடத்தில் எல்லாம் சரியே என்பதாகக் கம்பை தட்டி சமிக்ஞை ஒலி எழுப்புவார்கள். களவு, கபடு சந்தேகத்துக்குரியது, உதவி தேவை எனில் கம்பை தட்டும் விதத்திலும், சலங்கை ஒலியில் தகவலைக் கடத்தி, எங்கு உதவி தேவையோ அங்கே அதிகப்படியான ஆட்கள் விரைந்து செல்வர். சிங்கராசு தேவன் அடிபட்டு வந்ததிலிருந்தே, காவற்படை மேலும் கவனத்தோடு எச்சரிக்கையாகவே காவல் காக்கின்றனர்.
அந்தி சாயும் முன் சோறாக்கி இரவின் முதல் சாமத்தில் உண்டு, அவரவர் கூட்டில் அடங்கி விடுவார்கள். காவல்காரர்கள் மட்டுமே ஊரைச் சுற்றி வருவார்.
சிங்கராசுதேவன், காயம் பட்ட காலத்திலிருந்து முதல் சாமத்தின் நடைமுறை சற்றே மாற்றம் கண்டு வாரத்தில் இரண்டு நாட்கள் ரதி தேவியின் நாட்டியத்தோடு கடந்தால், மற்ற நாட்களில் கழுவன் குடும்பம், குடிகளின் சுவாரஸ்யமான பேச்சில் ஓடும்.
ஒரு மாத காலம் தங்கியிருந்த நீல வள்ளி கிளம்பியிருக்க, செம்பதுமம் கொஞ்சம் சுணங்கி தெரிந்தாள். வயதில் மூத்தவள், அத்தை முறையானாலும் கூட , ஒரு மாத காலம் ஒன்றாக வாசி மலையில் சுற்றித் திரிந்ததில் அவளோடு ஓர் பிணைப்பு உண்டாகி இருக்க, அவள் பிரிந்ததில் சற்றே வருத்தம்.
முகம் கூம்பித் திரிந்த மகளை அழைத்த சிங்கம், அவள் பயிற்றுவிக்கச் சொல்லிக் கேட்ட வர்மக்கலையைப் பற்றிப் பேச , செம்பதுமமும் உற்சாகமானாள். சாமி கருப்பனையும் அழைத்து வர சொல்ல,தமையனை கையோடு அழைத்து வந்தாள்.சமத்தாக தகப்பன் பாதம் தொட்டு வணங்கி மக்கள் இருவரும் பவ்யமாக முன்னே நிற்க, கல் ஆசனத்தில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு போதித்த சிவனார் போல், சிங்கமும் அடிபட்ட காலை தொங்க விட்டு, மற்றதை மடக்கி நிமிர்ந்து அமர்ந்து வர்ம கலையை போதிக்க தயாரானான். கணவன், ரதி தேவியைப் பற்றிப் பிரஸ்தாபிக்காமல் பிள்ளைகளோடு உரையாடுவதில் தாடகைக்கும் மகிழ்ச்சி.
“சூதானமா கேட்டுக்குங்க மக்கா, இந்த வர்மத்தில வைத்தியம்,தற்காப்பு, தாக்குறதுகுண்டு மூணும் இருக்கு. கொஞ்சம் பிசகினாலும், தப்பாகிடும், உசுரே போற ஆபத்தும் உண்டு . சூதானமா கத்துகிடனும். பிரயோகமும் அப்படி தான்.” சிங்கம் சொல்ல, “சரிங்க அப்பாரு” என இருவரும் சிரத்தையாகவே செவி மடுத்தனர்.
தேர்ந்த வைத்தியன் போல், தனக்கே உரியப் பாமர மொழியில் மனிதனின் சரீர அமைப்பு, உடற்கூறியல் , நரம்பு மண்டலங்களைப் பற்றிய வகுப்பு எடுக்க, மக்கள் இருவரும் தகப்பனை வியந்து பார்த்திருந்தனர்.
“ அருமையான கலை, நல்ல முறையில் உபயோகிக்கிறது நம்ம கையில் தான் இருக்கு. எனக்குக் கத்து கொடுத்த ஆசான், யார் உசிரையும் எடுக்க கூடாதுண்டு சத்தியம் வாங்கி கிட்டு தான் கத்து குடுத்தாரு. இன்ன வரைகும் அதை கடைபிடிச்சிட்டு வாறேன். நீங்களும் வாக்கு கொடுங்க “ சிங்கம் தன் கையை நீட்ட, அவனுக்கு முன்னே தரையில் அமர்ந்திருந்த இருவரும், முன்னே நகர்ந்து முழுங்காலிட்டு தகப்பன் கை மேல், தங்கள் கைகளை வைத்து
“ சொல்லனுமா அப்பாரு. நாங்க சிங்கம் பெத்த பிள்ளைங்க. நல்லதுக்கு மட்டும் தான் உபயோகிப்போம்” எனப் பதுமமும், “ வர்ம கலையை விதிகளுக்குப் புறம்பாகப் பயன்படுத்த மாட்டோம் “ என சாமியும் வாக்கு தர, இருவரையும் அணைத்து , தலையில் கை வைத்து ஆசீர்வதித்து ஆசானாய் உயர்ந்தான் அந்த தந்தை.
சிங்கம் அமர்ந்த நிலையிலிருந்தே, சாமி கருப்பனை நிறுத்தி, தற்காப்புக் கலையில் சில வர்ம முறைகளை கற்றுத் தர, பதுமம் கவனமாகக் கவனித்தாள். ஒரு அடியில் சாமி கருப்பன் சுருண்டு விழ, “அப்பனும் மகளும் பழகிறதுக்கு என் மகன் தான் கிடைச்சானோ, போதும் நிறுத்துங்க” என சாமிக்கு மாற்று வர்ம சிகிச்சை செய்து மகனைத் தாடகை விடுவிக்க, “அம்மா, உனக்கும் தெரியுமா” செம்பதுமத்துக்கு ஆச்சரியம்.
“இதெல்லாம் கத்துக்காமல் இருந்திருந்தா,உன் அப்பனை சமாளிச்சு, இத்தனை வருஷம் குடும்பம் நடத்தி இருக்க முடியுமா” என நொடிக்க, சிங்கத்துக்கு ஏக பெருமை.
சாமி தன்னிலையில் மீண்டவன், சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருக்க, தாடகை நீராகாரம் கொண்டு வந்து கொடுத்தாள். மகனுக்கும், மகளுக்குமாக வர்ம தாக்குதல், அதிலிருந்து லாவகமாகத் தப்பித்தல் எனச் சிலதை மட்டும் சொல்லிக் கொடுக்க, செம்பதுமத்துக்கு சில வர்ம புள்ளிகள் தூண்டப் பெற்றன. அவளுக்கு மயக்கம் வரும் போலிருக்க, சமாளித்து நின்றாள்.
“இன்னைக்கு, இது போதும்” எனக் கண்டித்த தாடகை, “நாளை மறுநாள் பழகலாம்” அவரவர் ஜாகைக்கு அனுப்பி வைக்க, வழக்கம் போல் கணவன் மனைவிக்குள் சம்பாஷணை ஓடியது.
கேலி, கிண்டலுக்குப் பின், “ இன்னைக்கு, இந்த பொழுதில் இதைக் கத்து கொடுக்க வேண்டிய அவசியமென்ன” தாடகை கேள்வி எழுப்ப,
“பதுவுக்கு அவசியம், கத்து கொடுண்டு உள் மனசு சொல்லுச்சு. நேத்து வைத்தியரோட சேர்ந்து என் மக எண்ணெய் தேய்ச்சு விடும் போது, அம்புட்டு கருத்தா கவனிச்சது. கொஞ்சம் சொல்லி குடுத்தமுண்டா போதும், கற்பூர புத்தி, பிடிச்சுக்கும்” என மகளை பற்றி பெருமையாக பேச, தாடகைக்கும் பூரிப்பு தான். அவ்வளவு எளிதில் சிங்கம் யாரையும் புகழ்ந்து விட மாட்டான். மகள் என்பதையும் தாண்டி செம்பதுமத்தின் திறமை அப்படி பேச வைக்கிறது எனபதை தாடகையும் உணர்ந்தே இருந்தாள்.
“நம்ம பதுவு, ராணியா அரசாள வேண்டியவ. உன்னையும், என்னையும் விட ஒரு நாள் உசந்து நிற்பா பாரு” காட்சியைக் காண்பவன் போல் சிங்கம் சொல்ல, தாய் மனம் கிலி பிடித்தது.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நிம்மதியா, சாதாரண வாழ்க்கை வாழ்ந்தால் போதும். செல்வி தம்பிக்கு , நம்ம பதுமத்தைக் கட்டி வச்சிட்டா, பூவும், முத்தய்யணுமே பார்த்துகுவாக. நம்ம கண்ணு முன்னாடியே இருப்பா. நம்மளும் கவலை இல்லாமல் இருக்கலாம், அவுகளை கூப்பிட்டுப் பேசு” என்றாள் தாடகை.
“யாருக்கு எங்கண்டு இருக்கோ அங்க தானே முடியும், சிராப்பள்ளி கோட்டையில இருந்தவ, சிங்கத்துக்கு மூணாந்தாரமா வரனுமுண்டு இருந்த விதியை மாத்த முடுஞ்சுதா” அவன் கண் சிமிட்டி நக்கலாகச் சிரிக்க, “அது உன்னோட சூழ்ச்சி” தாடகை அன்றைய சிங்கபுராணத்தை ஆரம்பிக்க, அவர்கள் பொழுது சுவாரஸ்யமாகவே கழிந்தது.
செம்பதுமம் தாமதமாக வந்ததால், மற்ற பிள்ளைகள் கோதை அருகில் இடத்தை பிடித்திருந்தனர், அதுவும் சரியே எனத் தனது அறைக்கு வந்து படுத்து கண்ணை மூடினாள்.
கனவா, நினைவா எனப் பிரித்து அறிய முடியாத நிலையில், தன்னை தானே கண்டாள். தற்போதும் இருக்கும் வயதை விடச் சற்றே அதிகமாக, உயர்ந்த பட்டுக் கட்டி, ஆபரணம் பூண்டு வாளேந்தி நிற்க,
“இன்று, இந்த பந்தயம் அவசியம் தானா பத்மை” அவன் வினவினான்.
“அவசியம் தான். அன்று தந்தையின் அழைப்புக்குப் பதில் தந்த நேரம் என்னை சாய்த்து விட்டீர்கள். இன்று இருவரில் ஒருவர் யாரென பார்ப்போம்” அவள் சிலிர்த்து நிற்க,
“என்னையே உன்னிடம் ஒப்புக் கொண்ட பின், நீயா, நானா பந்தயம் எதற்கு, வென்றது நீ என்றே வைத்துக் கொள்வோம்” அவன் சமாதானத்தை முன் வைத்தான்.
“அதெல்லாம் கிடையாது, போட்டி, போட்டி தான், பந்தயம், பந்தயம் தான். பிடியுங்கள் வாளை “ என அவனை நோக்கி மற்றொரு வாளை இருந்தவள், கண நேரத்தில் தாக்குதலையும் தொடுக்க,
“அம்மோ” என அதிர்ந்தவனாய் அவனும் நகைப்போடே வாள் ஏந்தி விளையாடினான்.
பள்ளி அறையில் ,வாளேந்தி நிற்கிறாளே புதுமண பெண், விருப்பமில்லா விவாகமோ? “ வாயிற் கதவை அடைத்துச் சென்ற அந்தப்புரத்துப் பணிப்பெண், அவள் தோழியைக் கேட்க,
“ நன்றாகச் சொன்னாய் போ, மணாளனாகத் திருமலை வாசன் தான் வேண்டுமென, ஏழுமலையனிடம் வேண்டி விரும்பி , தவமிருந்து கட்டிக் கொண்டவள். அவர்களுக்குள்ளான ஊடலும், கூடலும் இப்படி தான்” தோழி பெண் கதை பேச, அந்தப்புரத்து மகளிர் கதை கேட்டுக் கொண்டிருந்தனர்.
திருமலை வாசன் எனச் சொல்லப்பட்டவன், வாளில் வித்தை காட்டி, அவளுக்குப் போக்கு காட்டி, தாவிக் குதித்து தம் இலக்கான மஞ்சத்தில் விழ, அவன் சூழ்ச்சி அறியாதவளோ, அல்லது அறிந்தும் அறியா பேதை போல் இருந்தவளோ அவளும் தொடர்ந்து தாக்கினாள் .
சில பொழுதில், விளையாட்டு வினையாக, “பத்மை” எனச் செயலற்று விழ, வாளை விட்டெறிந்து விட்டு, “வாசவரே” என அலறிய படி அவனிடம் ஓடினாள்.
அன்றைய இரவின் இரண்டாம் சாமம், சிங்கமும், தாடகையும் கதை பேசி ஓய்ந்திருக்க, கழுவன் வீட்டைச் சுற்றி வந்த முக்காடு போட்ட உருவம், தூபம் போட்டுச் செல்ல, சுற்று வட்டத்திலிருந்த அனைவரும் ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றனர்.
அதிகாலை , இரவின் நான்காம் சாமம் கழுவன் குடி காவலர்கள் சிலருக்குக் குதிரை குழம்படி சத்தம் கேட்டது. ஆனால் ஆட்கள் யாரையும் காணவில்லை. யாரோ கடந்தது போல் இருந்தது, உருவம் தெரியவில்லை.
தங்கள் பிரமை என்று தைரியத்தை அதிகப்படுத்தக் காவல் கம்பில் உள்ள சலங்கையை ஆட்டி ஒலி எழுப்பினர்.
அதிகாலை நான்கு மணிக்கு, எழுமலை பாளையம் எல்லையில் உள்ள மூத்தவர் கூழன் குடிலுக்கு வந்த சமையன் என்பான், “ ஆசானே,ஆசானே” எனத் திண்ணையில் படுத்திருந்தவரை எழுப்பினான்.
“இந்த நேரத்தில எவண்டா” என்ற படி அவர் எழுந்து வர, அதிகாலையிலும் வியர்வை பூத்தவனாக, நடந்ததைச் சொன்னான்.
“அடேய், உன்னைக் காவல் காக்க சொன்னா, கனாக் கண்டு வந்து கதையா சொல்ற, சிங்கத்துக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமில்ல” அவர் மிரட்ட,
“பெரிய மனுஷன், அனுபவம் இருக்குமேன்டு உன்கிட்ட வந்து சொன்னேன் பாரு, என்னையவே தூங்குனமுண்டு குத்தம் சொல்றவன், அட சத்தியமா தான்யா சொல்றேன்.” சமையன் வாதாடிக் கொண்டிருக்க,
“ஆசானே, கழுவன் குடியில என்னமோ சுத்துதுயா” என மற்றொருவன் வந்தான்.
ஒவ்வொருவராய் பேர் கூடிவிட, “சலங்கை சத்தம் கேட்டது, அது ஒரு வாடை, மணந்துக்கிட்டு கரும் புகையாய் ஓர் உருவம் பறந்தது.” காவல்காரர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர ,மோகினியோ, பேய், பிசாசோ, அணங்கோ, இடாகினியோ, குறளி வித்தையோ யூகங்களும் வித, விதமாக வந்தது. சிலர் கண்களில் ஆர்வமும், பலர் கண்களில் கலவரமும் .தோன்றியது.
இந்த பயத்தை அப்படியே விடுவது சரியில்லை என நினைத்த கூழன் ,“ஏலேய் , காவக்காரவுனுக உங்க கண்ணைகட்டிப்புட்டு, எவனோ களவாணி பய ஊருக்குள்ள ஊடுருவி இருக்கான். அவனைப் பிடிக்கிறது விட்டு புட்டு கதை அளக்கிறவனுங்க. ரெவ்வெண்டு பேரா போயி, ஆடு ,மாடு கண்ணு குட்டி உறுப்புடி கணக்கு சரியா இருக்குத்தாண்டு பாருங்கடா. சிங்கத்துக்கு தெரிஞ்சது , நல்ல வெகுமானம் கொடுப்பாப்ல” என முடுக்கி விட, பொழுது புலரும் நேரம் ஆனதால், சற்று தைரியத்தோடு கூழன் பணித்த வேலையைச் செய்யப் போனார்கள்.
ஆடு, மாடு, குதிரை எண்ணிக்கை எல்லாம் சரியாக இருந்தது, "ஆனால் தங்கம் குதிரை இங்க இருக்கு, சிங்க குதிரையை காணோம் " ஒருவன் சொல்ல, "இது பெரிய விஷயமா, சின்னது, பெருசு குதிரையை எடுத்துட்டு போயிருக்கும்." மற்றொருவர் சமாதானம் சொன்னார். அதுவும் சரி தான், என மற்ற இடங்களை சோதனை இட்டனர். கழுவன் வீட்டுக் கொள்ளை புறத்தில் முக்காடு போட்ட உருவம் மயங்கிக் கிடக்க, அதிகாலையில் கழுவன் குடியே பரபரப்பானது.
அதே நேரம் சின்ன கழுவன் குடியும் பரபரப்பாகத் தான் இருந்தது. ஏற்கனவே துரை ராசு ,வானவன் மற்றும் சிலர் காரணமாகவும், வேங்கடவனைக் காணவில்லை என்ற பதட்டம் இருந்ததால், நீலவள்ளிக்கு துணைக்கு வந்த தங்க ராசுவும் அங்கே தான் இருந்தான்.
முதல் நாள் மாலையில், வானவன் தன் கூடாரத்துக்குச் சென்ற போதே, தாமினி தேவி குழந்தை அலமேலுவை தூக்கிக் கொண்டு அங்கே வந்திருந்தாள். சின்ன அண்ணனைக் காணவில்லை என்ற செய்தி கேட்டு வந்தவள், பெரிய அண்ணனின் நிலையைப் பார்க்கவும், கண்ணீர் விட்டுக் கதறியே விட்டாள். வானவன் தங்கையை அணைத்து ஆறுதல் சொல்லித் தேற்ற, அவருக்கான பணிவிடை செய்தாள்.
இரவிலேயே வேங்கடவனைத் தேட செல்வது அறிவீனம் என உணர்ந்தவள், அதிகாலையில் சிவப்பியை மட்டும் துணைக்கு அழைத்துக் கொண்டு மலைப் பக்கம் வந்தாள். வெகுநாள், மண்ணையும், மலையையும் பிரிந்திருந்த நீல வள்ளி, அவற்றைக் காணும் ஆவலோடும், தங்கராசுவை தேடியும் கோவில் பக்கம் வர, சிவப்பியையும், தாமினியையும் கண்டாள். சாயலை வைத்தே வானவன் தங்கை என்பதைப் புரிந்து கொண்டாள்.
சிவப்பிக்கு, வள்ளியை ஏற்கனவே அறிமுகம் இருந்தது, “சின்னம்மா’ என முறை கொண்டாடி, தாமினியையும் அறிமுகப் படுத்தி வைக்க, சம்பிரதாயமாக வணக்கம் சொல்லிக் கொண்டனர்.
“அதிகாலையிலேயே, என்ன இந்த பக்கம்” வள்ளி விசாரிக்க, “சின்னவரைத் தேடி வந்தோம்” சிவப்பி பதில் சொல்ல, “ ராசாதி ராசர் இவங்களோட அண்ணன் , வீராதி வீர காவல்காரன் என் அண்ணன் , இரண்டு பேரலையும் முடியாததை நீங்க சாதிச்சுடுவீங்களா” வள்ளி வினையமாகக் கேட்க, தாமினிக்கு கோபம் வந்தது. ஆனாலும் அதைக் காட்டும் நேரம் இதுவல்லவே.
“ராசாதி ராசர் , வீராதி வீரர்களால் முடியாதது, என சின்னமாவால முடியும். அதுக்காக தான் உங்களைத் தேடி வந்தோம்.இந்த மலையைப் பத்தி உனக்கு தெரியாததா. உதவி பண்ணு சின்னம்மா” சிவப்பி அடுக்க,
“ இந்த உதவியை செஞ்சீங்கன்னா, எங்களுக்குப் பெரிய உபகாரமா இருக்கும்” தாமினியும் கை கூப்ப, அவள் கையை பற்றிய வள்ளி,
“பெரிய வார்த்தை எல்லாம் வேண்டாம். முயற்சி செஞ்சு பார்ப்போம் வாங்க” என அழைத்துச் சென்றாள் .
திடியன் மலையைத் தாண்டிய காட்டுப் பகுதிக்கு முன்பே, மாமரத்தடியில் ஒரு குதிரை நின்று கொண்டிருந்தது, அதன் அருகிலேயே ஒரு ஆடவன் படுத்திருப்பது தெரிய வர வேங்கடவனாக இருக்குமோ என வேகமாக தாமினி அவ்விடம் விரைந்தாள். வேற்று ஆடவன் என வள்ளியும், சிவப்பியுமே தயங்கி பின் தங்கினர்.
ஆனால் அங்குப் படுத்திருந்தது தங்கராசு தேவன், அருகில் நின்றது சின்ன கருப்பன் குதிரை. தாமினி வேகமாகத் தொட்டுத் திருப்பியதில் விழித்தவன், கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்க்க, தாமினி தேவி, நீதானா என்பது போல் முறைத்தபடி நின்றாள்.
சிவப்பி, “அட கிரகமே எங்க போனாலும், இந்த கழுவன் மாமனுங்க மூஞ்சியில் தான் முழிக்க வேண்டியது இருக்கு” சலித்துக் கொள்ள, வள்ளி சட்டெனத் திரும்பிப் பார்த்து, “தங்கம், ராத்திரி திண்ணையில் படுத்துகுறேண்டு சொல்லிட்டு வந்தவன், இங்க எப்படி வந்த” என வினவ,
“தெரியலை க்கா” என அவன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தான். அவன் மேனியில் அதிகப்படியான கீறல், சில இடங்கள் கன்றி போய் இருந்ததை பார்த்து, ஏதோ யூகித்துக் கொண்டாள்.
“இரு வர்றேன்” என வள்ளி எங்கோ ஓட, தான் எப்படி இங்கு வந்தோம் என முன் தினத்தை நினைவில் கொண்டு வரப் பார்க்க, சின்ன கருப்பன் கனைத்தது.
“ அதே குருதை, அதே மனுஷன்” எனச் சிவப்பி கேலியில் இறங்க, அப்போது தான் குதிரையைக் கவனித்த தங்கம், ‘இது சின்னக்கருப்பன், சிங்கத்துடைய குதிரை, நான் இதில் வரலையே, வேற யாரும் வந்திருப்பாங்களோ, முத்து வந்திருப்பானோ’ என, எதிரே ஒருத்தி முறைத்து நிற்பதையும் மறந்து யோசனையில் ஆழ்ந்தான்.
“இங்கே என்ன செய்றே, இது உன் ஊர் இல்லையே” தங்களை வேவு பார்க்க வந்திருக்கிறான் என யூகித்த தாமினி அதிகாரமாகவே கேட்க, அவளைத் திரும்பிப் பார்த்தவன், “அதை நான் கேட்கணும்” என்ற படி, குதிரையைத் தடவி கொடுத்தான்.
வள்ளி, இரண்டு நீர் கலையத்தோடு வந்தவள், ஒன்றைச் சிவப்பியிடம் தந்து விட்டு, அவன் மறுத்தும் கேட்காமல், தன் ஈரச் சேலை கொண்டு தம்பியின் முகத்தைத் துடைத்து விட்டு, “இதைக் குடி” எனக் குடுவையையும் அவன் கையில் திணித்தாள்.
“அக்கா, நான் நல்லா தான் இருக்கேன்” அவன் சமாதானம் சொல்ல, நல்லா தான் இருக்க, பரவாயில்லை குடி” என்ற கண்டிப்பில், மடமடவென பதனியை வாயில் சரித்து கொண்ட பின் தான் தெம்பு வந்தது.
“அப்படி என்ன பெரிய வேலை பார்த்துக் களைத்துப் போனானாம்” தாமினி , வள்ளி, தங்கத்துக்குச் செய்யும் சிருஷைகளை பார்த்து மனதில் குமைந்தாள்.
வள்ளி, ‘என்ன தம்பி, என்ன நடந்தது” விசாரிக்க, “ஒன்னும் நினைப்புக்கு வரலை அக்கா” என்றவன், யோசனையோடு விடுவிடுவென காட்டுக்குள் செல்ல, மூன்று பெண்களும் , ஓட்டமும், நடையுமாக அவனைத் தொடர்ந்தனர்.
தாமினியும், சிவப்பியும் மாற்றி, மாற்றி கேள்வி கேட்டுக் கொண்டே வர,
“பேசாமல் வர்றதா இருந்தா வாங்க. இல்லயிண்டா நடையை கட்டுங்க.” முதல் முறையாக தங்கராசு, தன் கடுமையை தாமினியிடம் காட்ட, அவள் பேச்சற்று போனாள். வள்ளி, பேசாமல் வரச் சொல்லி சைகை கட்டி விட்டு அவன் பின்னே விரைந்தாள்.
தங்கராசுவுக்கு அதுவெல்லாம் கருத்தில் படவே இல்லை, எதோ ஒரு சக்தி அவனை இயக்க, பாதையில் சென்று அவன் நின்ற இடம், மரங்கள் அடர்ந்த சோலையாக, துளசிச் செடியின் மணம் கமல இருந்தது. அவ்விடமே தெய்வீகத் தன்மையுடன் இருக்க, ஒரு கருங்கல் மேடையில், சீதேவி , பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் பிரதட்சயம் ஆகியிருக்க, பெருமாள் காலடியில் தலை சாய்த்து, ஒரு மனிதன் மயங்கிக் கிடந்தான்.
சின்ன கழுவன் குடிக்குள் நுழையும் போதே வள்ளிக்கு, சூழல் வித்தியாசமாகப் பட்டது. வழக்கத்துக்கு அதிகமான ஆட்கள் நடமாட்டம் , புதிதாய் முளைத்த குடில்கள், மாட்டுவண்டி, குதிரைகள் எல்லாமே அதிகப்படியாய் தோன்றியது.
அவள் மனதில் நினைத்ததைப் படித்தவன் போல், தங்கராசு “பாளையக்காரவுககிட்ட அனுமதி வாங்கி, உத்தப்பரு அவுக ஆளுங்களை குடியமர்த்துறாரு” பதில் தர, வள்ளியிடம் பெருமூச்சு மட்டுமே பதிலாக வந்தது.
“ ஆளும் பேரும் வந்தா தொழில் பெருகும், நல்லது தானே அக்கா?” அவன் வினவ, “ பெரும் பாதி அவுக சனமா ஆகிடுச்சு. நம்ம மண்ணு நமக்குச் சொந்தமில்லாமல் போகுது. விதி விட்ட வழி” என்ற வள்ளி, வீட்டை நோக்கி வேக நடையோடு சென்றாள்.
பெரிய கழுவன் குடியில் சிங்கராசு தேவனுக்காக, தங்கள் வைத்தியரை நிறுத்தி விட்டு வந்திருந்தாள். இங்கு வந்து பார்க்க, துரைராசுவுக்கும் வைத்தியரின் சேவை என்பது போல், கை , கால், தலையில் கட்டோடு அமர்ந்திருக்க, வள்ளிக்குப் பதட்டம் தொற்றியது.
“ அண்ணேன்” என வேகமாக உள்ளே வர, “எனக்கு ஒன்னும் இல்லை ஆத்தா.” துரை தேற்ற, எப்படி நடந்தது, என்ன, ஏது அடுக்கடுக்காய் கேள்விகளைத் தொடுத்து “மதினி எங்கே” செல்வியைத் தேட, அப்போது தான் கூடத்திலிருந்த மற்றவர்களையும் பார்த்தாள்.
துரையை விட அதிக காயம் பட்டவராக வானவனும், லேசான காயங்களோடு பளிங்கர் இனத் தலைவன் கபிலன் மற்றும் இரு மெய் காவலர்களும் தென்பட்டனர். வானவனுக்கு அருகில் கவலை தோய்ந்த முகத்தோடு உத்தப்பர் அமர்ந்திருக்க, அவர்கள் வீட்டுக் கூடத்தில் முக்கியமான ஆலோசனை நடந்து கொண்டிருந்தது போலும்.
வள்ளிக்கு மற்றவர்களை எதிர்கொள்வதில் சங்கடம் இருந்த போதும், நடந்தது யாதென அறியாமல் அவ்விடம் விட்டு நகர்வதாக இல்லை.
தங்கராசுவை பார்த்து அவர்கள் பேச்சை நிறுத்தியிருக்க, தங்கம் சித்தப்பா துரை ராசுவை கண்ணால் வினவி நின்றான். வந்த இருவரும் தன் குழந்தையை ஒவ்வொரு விதத்தில் காத்துக் கொடுத்தவர்கள் என்பதால், வானவன் தானே வலியத் தலையசைத்து வரவேற்றார்.
வள்ளியின் கவனம் அண்ணனிடம் இருக்க, தங்கராசு வானவனை வணங்கி, “பிரபு, குழந்தை சௌக்கியங்களா, வேற ஆபத்து எதுவும் இல்லைங்களே” அவர் கட்டுகளைப் பார்த்த வண்ணம் வினவினான்.
வானவன் “ ஆபத்து இல்லாத வாழ்வு ஏது? “ என விரக்தியாய் சிரிக்க, குழந்தைக்கு எதுவுமோ? என வள்ளியும் அவரை ஏறிட்டுப் பார்த்தாள் . அதன் அர்த்தம் புரிந்து “உங்கள் இருவரின் புண்ணியத்தில் குழந்தை அலமேலு சௌக்கியம்.” என்றவர், “இது வேறு சம்ஸயம். தொடர்ந்து எங்களால் உங்கள் குடும்பத்துக்குச் சங்கடம். அது தான் வருத்தம்” என்றார்.
“பிரபு, தெய்வ பணியில் எங்கள் குடும்ப பங்கும் இருப்பது, எங்கள் பாக்கியம்” துரைராசு பணிவோடு சொல்ல, “அப்படிச் சொல்லுங்கள் கழுவரே. வடக்கே வாசம் செய்யும் ஏழுமலையான், நம் மலைகளில் எழுந்தருளுவது எவ்வளவு பெரிய பாக்கியம். அதில் சோதனை வந்தாலும், நாம் வானவரோடு துணை நிற்போம்” உத்தப்பர் உற்சாகமாகப் பேச, அக்காவும், தம்பியும் மொழி புரியாதவர் போல் திகைத்தனர்.
செல்வி மோர் குடுவைகளோடு கூடத்திற்கு வர, வீட்டு ஆளாகத் தங்கம் மற்றவருக்கு எடுத்துக் கொடுத்தான்.
வானவன், “குடும்பத்தினர் உரையாடட்டும். நாம் பிறகு சந்திப்போம்” எனவும், “பிரபு, வீடு தேடி வந்து என் நலம் விசாரிக்க வந்தமைக்கு நன்றி. “ துரை எழ முயன்றார்,
“இருக்கட்டும் கழுவரே, இன்று ஓய்வெடுங்கள். நாளைக்குள் நல்ல செய்தி வருமென நம்புவோம்” என விடை பெற்று முன்னே நடக்க, மற்றவர்களும் பின் தொடர்ந்தனர்.
மெய்காவலரில் ஒருவன், தன்வந்திரி வைத்திய சாலையில், தங்கராசுவை எதிர்த்தவன், அதே முறைப்போடு அவன் செல்ல, பின் வந்த கபிலனை தங்கராசு யோசனையோடு பார்த்தான்.
அவர்கள் கிளம்பவும், அண்ணனின் காயங்களை ஆராய்ந்த வள்ளி, தான் கொண்டு வந்திருந்த சில மூலிகைகளை அரைத்துப் பூசி விட்டபடி மீண்டும் கேள்விகளைத் தொடுக்க, துரை ராசு பெரிய பீடிகையோடு ஆரம்பித்தார்.
“தங்கம், நான் சொல்ற விஷயத்தில் உனக்கு நம்பிக்கை இருக்குதா, இல்லையாண்டு எனக்குத் தெரியாது. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நான் சொல்லிடுறேன். சிங்கத்துக்கிட்ட விஷயத்தைச் சொல்லலாமா இல்லையாண்டு, நீயே முடிவு பண்ணிக்க. எதுனாலும் சந்திக்க நான் தயாரா இருக்கேன்”
“இந்த திடியன் மலை அடிவாரத்தில் சின்ன வயசிலருந்து சுத்துறேன், என் கால் படாத இடமே கிடையாதது. நான் சின்ன பயலா இருந்தப்ப நடந்த சம்பவம் ஒன்னு இருக்கு. அடர்ந்த காட்டுக்குள்ளையிண்டாலும் போயிட்டு வந்திருக்கேன். நாள் கணக்கா காணமுண்டு, அப்பனும், ஆத்தாளும் தேடுவாக. அப்படி ஒரு தரம் தேடும் போது , ஒரு மருத மரத்தடியில தூங்கிட்டு இருந்தவனை தூக்கிட்டு வந்ததா சொன்னாங்க.
வீட்டுக்கு வந்து, முழிப்பு வந்த பிறகு, எப்படி அங்குட்டு போன, என்ன ஏதுண்டு விசாரணை வச்சாங்க. எனக்கு எதுவுமே நினைப்புக்கு வரலையிண்டு சொன்னேன். நிசத்துக்கும் விசாரிக்கும் போது , என் நினைப்புக்கு வரலை. ஆனா நிறைய நாளு கனாவுல, ஒரு ராசாவும், ராணியும் வருவாக.
சாமி சிலைக்கு முன்ன நிண்டு கும்புட்டுக்கிட்டு இருப்பாக. நான் மறைஞ்சு நிண்டு பார்க்கிறேன். நான் பார்க்கிறதே ராணியும் பார்க்குது. எனக்கு பயத்தில நெஞ்சு துடிக்க வேர்க்குது, அந்த ராணி என்னைய கூப்பிட்டு, இந்த பெருமாளை நீயும் கும்பிடும் காலம் வருமுண்டு சொல்லி, என் கையில் ஒரு தாமரைப் பூவை கொடுத்துச்சு.
இந்த கனா ஒரு நாள்ல வந்தது இல்லை, அப்பப்போ வந்தது கோர்த்து சொல்றேன். அப்ப தொட்டு பெருமாளை கும்புடனுமுண்டு மனசில தோணும்.
நம்மளுக்கு சாமி, கழுவன், கருப்பன், இந்த சிவன், அப்பறம் எப்புடி பெருமாள் வர்றாரரு, சரி, நம்ம அழகரை குறிப்பு காட்டுதுண்டு அழகர் மலை வரைக்கும் போயிட்டு வந்தேன்.
இருப்பது, இருபத்திரண்டு வருசமா கனா வரலை, நானும் அதை மறந்துட்டேன். இப்போ சமீபத்தில உத்தப்பர் என்னைய கூப்பிட்டு , நம்ம ஊருல பெருமாள்கோவில் கட்டலாமுண்டு சொன்னார். மறுபடியும் என் கனா நினைவு வந்து அவருகிட்ட சொன்னேன். அவர் தான், உனக்கு வந்தது கனவு மட்டுமில்லை, அது நடக்க வாய்ப்பு இருக்குண்டு ராயர்களைப் பத்தி சொன்னார்.” என அவர்கள் விவரமும் சொல்லி, புத்தூர் மலையில் அனுமதி கிடைத்ததையும், பளிங்கர்கள் தேட உதவுவதையும் சொன்னார்.
“காடு அழிக்க அனுமதி வாங்கிட்டோம், தேடுதல் தொடருது. பிரபு வானவ ராசா தம்பி சின்னவருக்கு , ஜக்கம்மா அருள் இருக்கு. அவர் காட்டுற வழியில தான் நாங்க தேடி திரியிறோம்” என்றவர் வேங்கடவன் திடியன் மலைக்கு வந்து பின் நடந்தது சொன்னார்.
“ஏழு மலைகளின் ஊடே, மூவிடங்களில் ஸ்ரீனிவாச சமேதரும் , ஸ்ரீயும் , ஈஸ்வரன் எல்லையில் புதையுண்டு மறைந்திருக்கின்றனர் ”
இந்த குறிப்பின் படி முதலில் ராயர்கள் அடையாளம் கண்ட இடம் திடியன் மலையடிவாரம். ராயர் ஆட்கள், கள்ளி செடிகளையும், புதர்களையும் வெட்டிக் கொண்டிருந்தனர். ஒரு காத தூரம் காடு அழித்த பிறகு, சமணர் படுக்கையில் ஏறி நின்று பார்த்த பொழுது, மேற்கே மருத மரம் தென்பட்டது.
உடனே வானவன், வேங்கடவனுக்குச் செய்தி அனுப்ப, இளையவனும் அங்கே விரைந்தான்.
வேங்கடவன் வந்ததும், வானவன் தாம் அடையாளம் பார்த்து வைத்திருந்த இடத்தை காட்ட அழைத்துச் செல்ல, கண்கட்டு வித்தையாய் மருதமரம் தென்படவில்லை. வேங்கடவன், மனதில் தெய்வங்களையும்,துறவியையும், பிராத்தித்து நிஷ்டையில் அமர்ந்தான்.
இரு தினங்கள் கழித்து, உத்தரவு கிடைக்க, வேங்கடவன் நொடியில் கிளம்பி விட்டான். காட்டுக்குள் சென்றதைப் பார்த்தார்களே தவிர பின் தொடர முடியவில்லை. செய்வதறியாது, அவன் மறைந்த இடத்திலேயே காத்திருக்க, இரண்டு நாழிகைக்குப் பின் மற்றொரு இடத்திலிருந்து வெளியே வந்தவன், கேள்விக்குப் பதிலேதும் சொல்லாமல் மலைக் குகையில் சென்று அமர்ந்து விட்டான். இதே கதை ஏழு நாளும் தொடர, வானவன் காத்திருப்போம் என்று விட்டார்.
ஒரு நாளில் சில நாழிகை நேரம் மட்டுமே வேங்கடவனுக்கு முன் ஜென்மம் நினைவு வரும். அந்த நேரத்தில் அதே மரத்துக்கு அருகில் வந்து நின்று, ஏதோ மந்திரங்களைச் சொல்லி, அவ்விடம் விட்டு மறைவான். எட்டாவது நாளில், தான் செல்லும் பொழுது கூடவே வந்துவிட்டால் மந்திர கட்டை தாண்டி அவ்விடம் சென்று விடலாம், அதற்கான அனுமதி வாங்கி விட்டதாகச் சொன்னான்.
எந்த நேரம், வேங்கடவனுக்கு அருள் வரும் என்று தெரியாது, ஒவ்வொரு முறையும் வேங்கடவனைக் கவனித்து உடன் செல்பவர்கள், பாதையை அடையாளம் காண, ஒவ்வொரு முறைகளைக் கடைப் பிடித்தனர். தானியங்கள், கோலமாவு ஆகியவற்றை தடம் நெடுக போட்டுச் சென்றாலும், அடுப்புகரி, குருங்கத்தி ஆகியவற்றால் மரங்களில் அடையாளப்படுத்திச் சென்றனர். ஆனாலும் அதற்குப் பயனில்லை. அடுத்த முறை செல்லும் போது , முன்னர் வந்தமைக்கான சுவடே தெரியாமல் போனது.
மூன்று நாள் முன்பு “நான் பாதம் பதிக்கும் இடத்தில். இருபுறமும் நான்கடி இடைவெளிக்குள் மட்டுமே, பாதம் பதித்து என்னைத் தொடருங்கள். புறம் சென்றால் ஆபத்து “ என வேங்கடவன் முன்னே செல்ல, வானவன்,துரைராசு, மெய்காவலர்கள் இருவர் , பளிங்கர் இனத் தலைவன் கபிலன் பின் சென்றனர்.
இரண்டு புறமும் சமதளமாக இருக்க, நான்கடிக்குள் ஏன்? அதுவும், வளைந்து, நெளிந்து செல்கிறாரே , எப்படிக் கணக்கிடுவது என மெய்காவலர்கள் குழம்பியபடி, ஆனால் இளையவரின் வார்த்தைக்கு ஏதேனும் பொருள் இருக்கும் என் எச்சரிக்கையாகவே பின் தொடர்ந்தனர்.
வேங்கடவன் சொன்னது புரியாமல், சமதளம் தானே எனத் துரை ராசு அசட்டையாய் கால் வைக்க, மண் சறுக்கி விழுந்தார், காலுக்கடியில் புதைகுழி இழுக்க, “பிரபு” என அவர் அலறிய அலறலில் வானவானும், அவரை பிடிக்கமுயன்று அவரோடே சறுக்கினார். இருவரும் உருண்டதில் சரியான அடி . மலையடிவாரத்தில் இப்படி ஒரு புதைகுழியை இவர்கள் எதிர்பார்க்க வில்லை
பளிங்கரின தலைவன் கபிலன் அவனது ஆட்கள், , மெய்காவலர்கள் முயன்றும் முடியவில்லை. இவர்களை விட்டு முன்னேறிச் சென்று கொண்டிருந்த வேங்கடவன், சட்டெனத் திரும்பி வந்து , அந்த இடத்தில் தொன்று தொட்டு வாழ்ந்தவன் போல், கையில் குத்தீட்டி தோளில் கனமான கொடி ஆகியவற்றை வைத்து அசாத்தியமாக இறங்கி இருவரையும் கட்டி தூக்கி விட, மற்றவர்கள் மேலிருந்து தூக்கிக் கொண்டனர்.
துரை ராசு, இந்த பகுதியிலேயே வளர்ந்தவர், சிறுவயதில் அவர் கால் படாத இடமே இல்லை. இருந்த போதும் தன் வாழ்வில் போன்ற மரண குழியைப் பார்த்தது இல்லை.
“பிரபு, மேலும் சில ஆயத்தங்களைச் செய்து கொண்டு முன்னேறலாம்” எனவும், வானவனுக்கும் அதுவே சரி எனப் பட்டது.
வேங்கடவனை அழைக்க, அவனோ வேறொரு உலகிலிருந்தான். இளையவனை விட்டுச் செல்ல மனமில்லாமல் , முன்னேறவும் முடியாமல், மெய்காவலர்களோடு துரையை அனுப்பி விட்டு, தான் தம்பியைத் தொடரும் முடிவை எடுத்தான்.
விசுவாசமான மெய் காவலர்களில் ஒருவன், வானவன் பாதுகாப்பும் முக்கியம் என வலியுறுத்தி, துரை , வானவன் இருவரையும் அனுப்பி விட்டு, தாங்கள் வேங்கடவனை பின் தொடர்வதாக வாதிட்டனர்.
துரையின் நிலை மோசமாக இருக்க, வானவனுக்கும் தான் திரும்புவது உசிதம் எனப் பட, கவனமாக வெளியேறி விட்டனர். மெய்காவலர் இருவருடன் வேங்கடவன் மேலும் சில தூரம் சென்றான்.
தற்போது, வானவன், துரை இருவருக்கும், எங்கிருந்து வெளிவந்தோம் என்பதே புரியாத புதிராக இருந்தது. இரண்டு நாழிகை சென்ற பின் வேங்கடவனோடு மெய்காவலர்களும், ஒரு மரத்துக்கு வெளியே .வர, வானவன் அந்த இடத்தை அடையாளப் படுத்திக் கொண்டான்.
தற்போதைய பிரச்சினை , நேற்றிலிருந்து வேங்கடவனைக் காணவில்லை. மெய்காவலர்கள் கண்ணிலும் மண்ணை தூவி மாயமாகி விட்டான். வானவனுக்கும், உத்தப்பரும் இளையவரைப் பற்றிய கவலை. அடுத்து என்ன செய்யலாம் என்பதைப் பற்றி ஆலோசிக்கவே சின்ன கழுவன் இல்லம் வந்தனர்.
துரைராசு ஆதியோடு அந்தமாக, வள்ளி, தங்கராசு இருவரிடமும் தனக்குத் தெரிந்ததைச் சொல்ல, இருவரும் இதை நம்புவதா, வேண்டாமா. ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில், இவர்களை பின் தொடர்கிறாரே, எனக் குழம்பிப் போனார்கள்.
துரை ராசுவின் கூற்றுப் படி, வானவனும், வேங்கடவனும், தாமினியும் கூட ராயர்கள் என்ற உண்மை தங்கராசுவுக்கு பிடிபட, அவர்கள் யாருக்கும் தெரியாமல் நாயக்கர் ராஜ்யத்துக்குள் வந்திருக்கிறார்கள் என்பது , பெரிய பிரச்சினை ஆகுமோ என காவலன் மூளை யோசித்தது.
அதையே கேட்கவும் செய்தான், “ அவுங்க நாடு பிடிக்க வரலைத் தங்கம். முன் வினை தீரனுமுண்டு சாமியைத் தேடிக் கண்டுபிடிக்க வந்திருக்காக” என்றார்.
‘சரி அப்பு, சாமி காரியமுண்டு வச்சுக்குவோம், இதுனால நமக்கு என்ன ஆதாயம். ஆதாயம் இல்லையிண்டாலும் போகுது, ஆபத்து வந்துச்சுண்டா, யார் பொறுப்பு” வள்ளி குறுக்கிட்டாள்.
“ உத்தப்பர் பொருள் செலவழிக்கிறார், நம்ம எல்லையில் இருக்கக் காட்டை , நாடாக்குறாக. ஆடு, மாடு வளர்க்கலாம், விவசாயம் செய்யலாம். தொழில் பெருகும். சாமியையும் இங்க தான் வச்சிட்டு போவாங்க” துரை ராசு நம்பிக்கை தெரிவித்தார்.
“பெரிய இடத்து சவகாசம் , புலி வாலை பிடிச்ச கதை தான் . அவர் சொல்லிட்டு போன மாதிரி , பந்தம் தொடர்ந்து வருது. நடக்கிறது நடக்கட்டும்” என தங்கராசுவும் பெரு மூச்சு விட்டான்.
“சிங்கத்துக்கு , இந்த விஷயம் எதுவும் தெரியுமா” துரை கேட்க,
“முத்தரையனும், சுருட்டு கருப்பனும், சாயுபு கூட சேர்ந்து யாரையோ தேடி திரியிறானுங்க. பாளையத்துக்குள்ள யார் புதுசா வந்துருக்காண்டு பாருன்னு, என்கிட்டே தான் பொறுப்பை ஒப்படைச்சு இருக்காப்ல” என்றான் தங்கம்.
“ வீட்டுக்குள்ள உட்கார்துக்கே சிங்கம் ஊரையே காவல் காத்துரும். அவருகிட்ட இருக்க ஆளுங்க அப்படி” துரைராசுவும், அண்ணன் சிங்கத்தின் திறமையைப் பெருமையாகவே சொன்னார்.
“ நடமாட முடிஞ்சதுண்டா, எனக்கு முன்னே இங்க இருந்திருப்பாப்ல. நான் சமயம் பார்த்து சொல்லிக்கிறேன். நீ சூதானமாவே இரு அப்பு” என எச்சரித்த தங்கராசு, அன்றைய பொழுதைச் சின்ன கழுவன் குடியிலேயே கழித்தான்.
சின்ன கழுவன் குடியில் என்ன நடக்கிறது, இந்த வேங்கடவன் தான் தேனூரிலும், நாகமலையிலும், பெரிய கழுவன் குடியிலும் செம்பதுமத்தை தொடர்ந்தது. சந்தன கருப்பன் சொன்ன சித்தினி நாயக்கர். தங்கைக்காகவாவது, வேங்கடவனைப் பற்றி ஆராய்வது அவசியம் என திடியன் மலையடிவார காட்டை சுற்றி வர, அன்றை இரவில் அவன் கண்ட காட்சி, எதற்கும் அஞ்சாத சிங்கம், பாண்டி நாட்டுத் தங்கம், எழுமலை கழுவன் தங்கராசு தேவனின் நெஞ்சையே உறைய வைத்தது.
சித்தப்பன் துரை ராசு தேவன், கனாக் கண்டதாக தானே சொன்னார். சொன்னது உண்மையோ, யார் இந்த ராஜா, ராணி. பூரண அலங்கார பூஷிதர்களாய், முகம் ஒளிர தேஜஸோடு, தூரத்தே அந்த காட்டை உலா வந்து கொண்டிருந்தனர்.
அந்த ராணியின் முகம், அவன் பார்த்துப் பழக்கப்பட்ட முகம். கருணை வடிவானது, இன்று ஒளி பொருந்தி தீட்சண்யமாய் மிளிர்கிறது.
தாயே யார் நீ? உன்னை எங்கே பார்த்திருக்கிறேன்?
அவன் மனதில் அரற்ற, ராணி திரும்பினாள்…
மலர்ந்த செம்பதுமம் போல் புன்னகை பூத்தாள் - பத்மாசினி- வேங்கடவனின் அணங்கு அவள்.
தங்கராசுவுக்கு காலடியில் பூமி சுற்றியது.
பத்மாசினி- வருவாள்.
சின்ன கழுவன் குடி, திடியன் மலை அடிவாரம், வானவன் அழைப்பின் பேரில், வேங்கடவன் அங்கு விரைந்திருந்தான். திடியன் மலையடிவாரத்தில், காடு அழித்து நாடு உருவாக்க அனுமதி பெற்று , ஒரு கூட்டம் அதற்கான வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர். துரைராசு தேவன் காவலிலிருந்ததால், வேறு எவருக்கும் பதில் சொல்ல அவசியமின்றி மெல்ல வேலை செய்தனர்
அதற்கு நேர்மாறாக , அப்பால் இரண்டு காத தொலைவில், ராயர்களிடமிருந்த அடையாள வரைபடம், சங்கேத சொற்கள் , அருள் வாக்கு , வேங்கடவன் உதிர்க்கும் வார்த்தைகள் என எல்லாவற்றையும் கோர்த்து ஒரு அனுமானத்தில் மண்ணுக்குள் இருக்கும் வராக அவதாரத்தைத் தேடிக் கொண்டிருந்தனர். வேங்கடவன் சொன்னது போலவே, மருத மரம் தென்படவும், வானவன், வேங்கடவனுக்கு அழைப்பு விடுக்க, அங்கு விரைந்தான்.
சுல்தான்களின் தாக்குதலுக்கு முன்பு, திருப்பதி மலை அடிவாரத்தில் வசித்த போது , வானவன் மனைவி சாந்தம் மாவின் இறப்புக்கும் முன், குலதெய்வம் கோவிலுக்குச் சென்ற போது , அங்கிருந்த துறவி ஒருவர், ஏழுமலையான் கட்டளை என வேங்கடவன் தலையில் கை வைத்து, சிலமந்திரங்களை உபதேசித்து , தியானத்தில் அமர்ந்து இதனைப் பாராயணம் செய், உன் துன்பம் தீரும் என்றார்.
தங்களிருப்பிடம் திரும்பிய போது, துயர சம்பவங்கள் நடந்திருக்க, துறவி சொன்னதை மறந்தே போனான். தெற்கு நோக்கிக் கிளம்பி, காஞ்சிபுரம் அடைந்த பொழுது, பௌர்ணமி நாளில், அதே துறவி அவன் முன் தோன்றி, “நான் சொன்ன சொல்லை மறந்து விட்டாயே” என்றது போலிருக்க, அடித்துப் பிடித்து எழுந்து பார்த்தான் யாருமில்லை. ஆனால் துறவி சொன்ன சொல் மட்டும் எதிரொலித்துக் கொண்டே இருக்க, அது சத்திய வாக்கு, என்றுணர்ந்தவன், நடு இரவில் குலத்தில் முங்கி எழுந்து, தங்கள் குலதெய்வம் ஜக்கம்மாவையும், ஏழுமலையானையும் , துறவியையும் மனதார வணங்கி கண்மூடி அமர, வெகு சீக்கிரமே தியானம் வசப்பட்டது.
அன்று முதல், இரவில் தொடர்ந்து தியானம் செய்ய, துறவி மானசீகமாக அவனை வழி நடத்தினார். அவனுள்ளே அவன் முன் ஜென்மத்தைப் பார்க்க முடிந்தது. பத்மாசினி முகத்தையும், தன்னவள் என்பதையும் கண்டு கொண்டவன், அவளைத் தேட வேண்டுமே என மலைத்து நின்றான்.
வானவனிடம் விஷயத்தைச் சொல்ல, தம் முன்னோர் பாதுகாத்த பெட்டியைத் திறந்து பார்த்தனர். மலைகள் சூழ்ந்த பாளையத்தின் வரைபடமும், அடையாள குறிப்புகளும் இருக்க, “ஸ்ரீனிவாச சமேதருடன், ஸ்ரீயும் , ஈஸ்வரன் எல்லையில் புதையுண்டு மறைந்திருக்கிறது” என்ற குறிப்பு இருந்தது.
செல்வம் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என அறிந்தவர்கள்,அந்த இடம் எங்கே இருக்கிறது, என்பதை அறிய தங்கள் குலதெய்வத்தை வேண்டி கம்பளத்துக்காரர்களிடம் வாக்கு கேட்க, அவர்கள் தென் திசையைக் காட்டினார்கள். தங்கள் முன்னோரின் வரலாற்றை ஆராய, அவர்கள் வேலூர், செஞ்சி, தஞ்சை எல்லாம் கடந்து மதுரைக்கு வந்தனர்.
ஜக்கம்மா வாக்கு, அழகர் மலையான் ஆற்றில் இறங்கும் வைபவம் என்றது. நீண்ட பிரயாணத்துக்குப் பின் தேனூர் அடுத்ததிருமால் நத்தம் வந்து சேர்ந்தனர். வேங்கடவன், தன மனதில் படிந்த முகத்தைத் தேடிக்கொண்டே இருந்தான்.
கள்ளழகர் வைகையாற்றில் இறங்கிய பின், பாய்ந்து ஈட்டியைப் பிடித்த பெண்ணின் பால் அவன் கவனம் திரும்பியது. ஆணாலும் முகம் தெளிவாகத் தெரிய வில்லை.
ஆழ்மனம் உந்த, பின் தொடர்ந்த போதும் அவள் முகம் காண முடியவில்லை. விசாரித்து வைத்திருந்தவன், மாலையில் அழகரைத் தரிசிக்க வந்த மங்கையைக் கண்டு, கட்டுண்டான். அந்த நேரப்பூர்வ ஜென்மத்தினராய் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர்.
வேட்டு சத்தத்தில் இருவரும் இயல்புக்குத் திரும்ப, இந்த ஜென்ம வேங்கடவனுக்கு அவளைப் பார்த்தது தற்காலிகமாய் மறந்தது. அங்கே சுற்றித் திரிந்தவன், அவள் கண்ணில் பட, பதுமமும் தன்னையறியாமல் அவனைப் பின்தொடர்ந்து வைகையில் வீழ்ந்து எழ, அறிமுகமாகிக் கொண்டனர்.
வேங்கடவன் , பெரிய கழுவன் குடியில் , சமயம் வாய்த்த பொழுதெல்லாம் பதுமத்திடம் இந்த விஷயங்களைப் பகிர்ந்து, “பத்மை, நம் பந்தம் ஜென்ம ஜென்மாக தொடர்வது, நீயும் உள் நோக்கி யோசி” என்றான். அதன் விளைவே அவள் அன்று மயங்கிவிழுந்தது.
ஆனால் அதேநேரம், சின்ன கழுவன் குடியில் மருத மரத்தடியில் நின்ற வேங்கடவன், மனதில் தெய்வங்களையும்,துறவியையும், பிராத்தித்து நிஷ்டையில் அமர்ந்தான்.
இரு தினங்கள் கழித்து, உத்தரவு கிடைக்க, மற்ற ஆட்களை விடாமல், வானவன்,வேங்கடவன், துரைராசு, மெய்காவல்கள் இருவர் மட்டும் தேடும் பணியைத் தொடர்ந்தனர். அவ்வளவு எளிதானதாக இல்லாமல், பெருமாள் சோதித்தார்.
எழுமலை பாளையத்தின் காவல் பொறுப்பு முழுவதும் தற்போது தங்கராசு தேவன் தோள்களில் விழுந்தது. விளை நிலங்கள், விவசாய பொருட்கள், ஆடு, மாடு, வணிக பொருட்கள் என எல்லா இடத்திலும் தகுந்த காவல் ஆட்களை நிறுத்துவது, வரிவசூலில் மணியம், கர்ணம் என ஊர்த் தலைவர்களுக்கு உதவுவது, பாளையக்காரர் உடனான சந்திப்பு என சிங்கராசுவின் வேலையையும் சேர்த்து இழுத்துப் போட்டு உணவு உண்ணவும் நேரமின்றி அலைந்து திரிந்தான்.
அதோடு அவன் மனதில் உருத்திக் கொண்டே இருந்த வானவனின் குடும்பம். சிங்கராசுவின் கவனத்தையும் ஈர்த்து, அவனும் விசாரிக்கச் சொல்லியிருக்க, ஒவ்வொருவர் வாய் வார்த்தையையும் பிடுங்கி, அவர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தான்.
வள்ளி வானவனைப் பற்றிச் சொல்லியிருக்க, சாமி கருப்பன், பதுமத்திடம் வேங்கடவனைப் பற்றி விசாரித்தான். சாமியை விட, சின்னவன் சந்தன கருப்பனுக்கு விவரம் தெரிந்திருந்தது.
“ சித்தினி நாயக்கரு ,நம்ம மருதனையே அடக்கிட்டாரு அண்ணேன்” என அவன் , அவர்களுக்குள் நடந்த ஒப்பந்தத்தைப் பற்றிச் சொல்லி, “நான், அவருக்குக் காவல்காரனாக்கும். இப்போதைக்குக் கழுவன் குடிக்குள்ள மட்டும் தான் என் சேவகமுண்டு சொல்லிட்டேன்” அண்ணன் கேட்கும் முன், அவசரமாக ஒப்பிக்க, சிறுவனின் ஆர்வத்தைக் கெடுக்காமல்,உற்சாகமாகப் பேசி, அடுத்தமுறை வந்தால், உன் எஜமானரை அறிமுகப்படுத்தி வை” எனக் கொக்கியையும் போட்டு வைத்தான்.
யோசனையோடு, குண்டாறு ஓரமாகக் குதிரையைச் செலுத்தியவனுக்கு, தற்காப்புக்காகத் தன்னை தாக்கிய பெண் தாமினி தேவியின் நினைவும் வராமல் இல்லை. அவள் தாக்குதலிலிருந்த மூர்க்கம், முன்னரே பாதிக்கப் பட்டவள் போலிருந்ததே, அய்யோ பாவம், இரண்டு சகோதரர்கள் இருந்தும் இந்த நிலையா? “ என்று யோசித்தவனுக்கு, தன் குடும்பமும் இப்படி தானே சிக்கியது, ‘தாடகை மற்றும் பதுமத்தின் வீரமும்,விவேகமும் அவர்களைக் காப்பாற்றியது. மற்ற கழுவன் குடும்பத்துப் பெண்களுக்கும், அவசியமான வர்மக் கலை தாக்குதலையாவது சொல்லிக்கொடுக்கவேண்டும்’ என்றும் நினைத்தான்.
தன்னை போல் யோசித்துக் கொண்டு வந்தவனின் செவியில், யாரோ பாடும் ஓசைக் கேட்டது. குரல் நன்றாக இருந்தது, ஆனால் சோகம் இழையோடியது போல் தோன்றியது. தெலுங்கில் பாடப்பட்டதால் பொருள் விளங்கவில்லை, பாடலை தொந்தரவு செய்ய விரும்பாமல், குதிரையை விட்டு இறங்கி மெல்ல நடந்து சென்றான்.
ஆல மரத்தடியில், மண்மேட்டில் அமர்ந்து கையில் தம்புராவோடு கண்ணை மூடி, கோவிந்தனை வரச் சொல்லி மெய்யுருக பாடிக்கொண்டிருந்தாள். கூர்ந்து நோக்க, சற்று முன் யாரைப் பற்றி யோசித்தானே சாட்சாத் அவள் தான் தாமினி தேவி.
விழி எடுக்காமல், அவளைத் தொந்தரவும் செய்யாமல் , ஆலமர விழுத்துக்களுக்கு ஊடே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். கண்கள் அனிச்சையாய் மேலே , செல்ல விழுதுகளோடு ,விழுதாகக் கட்டுவிரியன் பாம்பொன்று, அவள் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்தது.
அவ்வளவு தான் நொடியில் அவ்விடத்தை அடைந்தவன், அவளை அள்ளிக்கொண்டு பின் நோக்கி நகரவும், பாம்பு சொத்தென மண் மேட்டில் விழவும் சரியாக இருந்தது. மேலும் அது அவர்களை நோக்கியே வர, கையில் தாமினி தேவி இருந்ததால், ஓடுவதைத் தவிர வேறு வழி இல்லை. தாமினி தான் ஒருவன் கையிலிருப்பதை உணர்ந்தவள், அன்றுபோல் இன்றும் மூர்க்கமாகத் தாக்க முயல, “ இளவரசி பாம்பு” என அலறியவன் , அவளோடு சேர்ந்து குண்டாற்றுக்குள் குதித்தான்.
அதற்குள் தங்கராசுவை அடையாளம் கண்டிருந்தவளும் , அவனை இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள். அவனும், அவளும், தம்புராவும் சேர்ந்தே ஆற்றுக்குள் குதிக்க, அவள் தம்புராவைத் தவற விட்டு அவனைக் கட்டிக் கொண்டாள் .
ஆற்றில் நீர் முழங்கால் அளவே இருக்க, சட்டடியாய் கீழே விழுந்த அவர்களைக் கழுத்து வரை மட்டுமே நனைத்துச் சென்றது .
பாம்பு கரையோடு மேலே செல்ல, குதிரையைத் தீண்டிவிடுமோ எனத் தங்கத்துக்குக் கவலை. ஆனால் ஐந்தறிவு ஜீவன்கள் நம்மை விடப் புத்திசாலி என மனதைத் தேற்றிக் கொண்டான்.
தாமினியோடு சேர்ந்து விழுந்த தங்கராசுக்கு முதுகில் சரியான அடி. ஒரு பெண்ணின் முன் வலியைக் காட்ட முடியாதே சகித்துக் கொண்டான். அவன் மேல் விழுந்து கிடந்தவள், எழ முயன்று , தோற்று அவன் மேல் பாம்பு போல் நெளிந்தாள்.
அதில் சங்கடமாக உணர்ந்தவள், அவன் முகம் நோக்கி, “காப்பாத்த வேற வழியே தெரியலையா. மணமாகாத பெண்ணை இப்படி தான் தூக்குவிங்களா, இது இரண்டாவது முறை. ச்சீ… காட்டான் ஆம்பளை கிட்ட இதை விட வேற என்ன எதிர் பார்க்க முடியும்” அதிர்ச்சியிலிருந்தவள் வாய் வார்த்தையை விட்டாள்.
அவ்வளவு நேரம் இலகுவாக இருந்தவன், உடல் விறைக்க அவளை விடுத்துத் தான் மட்டும் எழுந்து கரையை நோக்கிச் செல்ல,
மீண்டும் ஆற்றுக்குள் விழுந்தவள், நீரில் துழாவி கல்லும் மண்ணுமாக எடுத்து அவன் மேல் விட்டெறிந்து, “இது தான் காப்பாத்துற லட்சணமா, காட்டான்” எனக் கத்த , திரும்பியும் பார்க்காமல் மேலே சென்று தன் குதிரை பத்திரமாக இருக்கிறதா எனப் பார்த்து விட்டு, அதன் தன் பக்கவாட்டிலிருந்த ஈட்டியை உருவி வந்து, அவள் அருகில் நட்டு வைத்தான்.
அவன் மேலேறிச் சென்றது முதல் சரமாரியாகத் தெலுங்கில் திட்டிக் கொண்டிருந்தவள், அவனின் இந்த செய்கைக்கும் முறைப்பைப் பரிசாகத் தந்து , ஈட்டியைப் பிடித்தே எழுந்தாள். தானும் சளைத்தவன் இல்லை என வேறு புறம் திரும்பி நிற்க, தன் உடைகளைச் சீராக்கிக் கொண்டவள், ஈட்டியை ஊண்டியே மேலேறும் நேரம், “தேவுடா”என அலற ,மறுபடியும் கீழே விழுந்து விட்டாளோ என அவசரமாகத் திரும்பினான்.
“என் தம்புரா”என இரண்டாக உடைந்து கிடந்த கருவியைப் பார்த்து கண்ணீர் விட்டவள், “இது ஒண்ணு தான் என் மனசுக்கு ஆறுதல். அதையும் போட்டு உடைச்சிட்ட” என்றவாறு, புதருக்குள் இருந்த மற்றொரு பாகத்தை எடுக்கப் போக,
“இளவரசி, நான் எடுத்துட்டு வர்றேன்,நீங்க மேலே ஏறுங்கள்” கட்டளையாகச் சொன்னவன், “ஈட்டியில் பலத்தைக் கொடுத்து, உடம்பை லேசாக்கி ஏறுங்கள்.மண் சறுக்கும் அபாயமுள்ளது. உங்களை தொடாமல் காப்பாத்த முடியாது. அதுக்கும் காட்டான்னு வசை சொல்லுவீங்க’ முன் பாதியைச் சத்தமாகவும்,பின் பாதியை முணுமுணுத்தும் சொல்ல, சண்டை கோழியாக அவனைத் திரும்பிப் பார்த்து முறைக்க, இடைவெளி விட்டு வந்த காட்டன் தான் மீண்டும் காப்பாற்ற வேண்டியதாகிப் போனது. ஒரு வழியாக இருவரும் கரை ஏறினர்.
முதலில் மரத்தடியில் அமராமல் ஒரு கல்லில் அமர்ந்தவள், “பாம்பைத் தட்டி விட்டிருந்தால் கூட போதுமானது” மீண்டும் ஆரம்பிக்க,
“அம்மா தாயே, தெரியாமல் காப்பாத்திட்டேன், என்னை மன்னிச்சுக்கோ. இனி நீ இருக்கும் பக்கம் கூட வரமாட்டேன்” என ஒரு கும்பிடு போட்டு அவன் கிளம்ப முற்பட்டான்.
“அதெப்படி, என் தம்புராவுக்குப் பதில் சொல்லாமல் போவ” அவள் வீம்பு பிடிக்க, “ ராச குடும்பத்துக்கு புது தம்புரா வாங்கக் கூட முடியாதோ ?” எனவும்,
^இது என் வதினா ஞாபகமா வச்சிருந்தது “
“இரண்டு நாள் அவகாசம் குடுங்க. சரி செய்து தர்றேன் “ எனத் தம்புராவை எடுக்க,