Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு

வகைகள் :

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


பாண்டிகுடும்பம் -மனச தாடி என் மணிக்குயிலே-1

மணிக்குயில் -1

 

"பூங்குயிலே, பூங்குயிலே கேளு!

நீ பாட்டெடுத்த காரணத்தைக் கூறு!

யாரிடத்தில் உன் மனசு போச்சு.

நூல போல உன் உடம்பு ஆச்சு"

            எனப் பண்பலையில் இனிமையான பாடல் மாட்டு கொட்டத்து வானொலியில் பாடிக் கொண்டிருந்தது. அந்தப் பெரிய வீட்டின் புறக்கடை மாட்டுக் கொட்டத்திலிருக்கும் மூக்கனுக்குத் தான் அந்த வீட்டிற்குள் புக அனுமதி கிடையாது. ஆனால் அந்தப் பண்ணைக்காரன் ரேடியோவிலிருந்த பாட்டுக்கு ஏது தடை, காற்று அந்த மச்சுவீட்டின் ஜன்னல் வழியே ராஜாவின் இசை ராஜாங்கத்தை உள்ளே கடத்திக் கொண்டிருந்தது. அதைக் காதில் கேட்ட பெண்ணவளின் இதழ்களில் ஓர் வெற்று முறுவல் வெளிவந்தது.

 'இந்தப் பூங்குயிலைப் பாடச்சொல்லவும்  நாதியில்லை. அவள் சோகத்தின் காரணத்தைக் கேட்கவும் செவிகள் இல்லை. யாரிடமும் நெஞ்சம் தஞ்சமாகாமலே, நான் நூலானேன். ம்ம்ம் ' எனப் பெருமூச்சோடு தன் விதியை மனதில் நொந்துக் கொண்டாள் பூங்குயில்.

 காற்றில் ஜன்னல் கதவு படீரென அடிக்க, அதில் அதிர்ந்து சிணுங்கிய தன் இரண்டு வயது நிரம்பாத மகளைப் பக்கத்தில் படுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். தன் மகளின் முதுகை மெல்லத் தட்டிக் கொடுத்து, உச்சி முகர்ந்து படித்திருந்த தாயின் அரவணைப்பில், அம்மாவின் இளஞ்சூடான நெஞ்சில் முகம் புதைத்திருந்த குட்டி தேவதை, கையையும், காலையும் தன் தாயின் மீதே போட்டு ஒட்டிக் கொண்டது. தன் வாழ்வே தனது மகள் தான் என்பது போல், பூங்குயிலும் மகளைத் தன்னுள் புதைத்துக் கொண்டாள். குறையான தன் இருள் வாழ்வை நிறைக்க வந்த அழகிய நிலவு என மகளுக்கு 'மதியழகி' எனப் பெயரிட்டிருந்தாள். 

அவளுக்குத் தான் மதி இல்லாமல் போனது, தனது மகளாவது மதியோடு பிழைத்துக் கொள்ளட்டும் என இரு பொருளையும் சேர்த்து வைத்திருந்தாள் இளங்கலை தமிழ் பயின்ற அந்த ஏந்திலை. ஆம் அவள் மட்டுமே யோசித்து இட்ட பெயர். அவளுக்குப் பிள்ளை வரம் தந்தவன், அந்தப் பிள்ளையையும் இதுவரை கண்டதில்லையே!

பூங்குயில், சந்தன நிறத்தவள் வட்ட முகம், எடுப்பான கூர் நாசி, இயற்கையாக வளைந்த வில்லாகப் புருவம், கண்கள் அவளோடு சேர்த்துச் சிரிக்க அழைக்கும், அதரங்களும், அதற்குத் துணை போய், பார்ப்போரை அவளோடு அளவளாவச் சொல்லும். ஆனால் அவள் மனதில் புகுந்துப்  பாரத்தால், தாலி கட்டி ஓர் இரவை அவளின் நகைமுகத்தையும் காணாது கூடி, பிள்ளையை மட்டும் கொடுத்துச் சென்றவனின் புறக்கணிப்பால் மழையின்றித் தவிக்கும் நிலம் போல் அவள் புன்னகையும் வறண்டு, கண்களும் ஒளி இழந்து போனது தெரியும்.

  மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து, பத்து கிலோமீட்டர் தொலைவில், பண்டைய காலத்தின் போர் குணத்தைத் தங்களது கர்வமாகப் பாவித்து வசிக்கும் மானூத்துப்பட்டியில் பிறந்த பெண்மகள் அவள். அந்தப் பெரிய மச்சுவீட்டின் கிழவன் கருத்த பாண்டி கிழவி பேச்சியம்மாளின் மகன் வழிப் பேத்தி பூங்குயில். கழுத்தில் தாலியும், கையில் பிள்ளையும் இருந்தும், அழகும் இளமையும் இருந்தும், பிறந்த வீட்டில் தஞ்சமடைந்து இருக்கும் இவளின் நிலை தான் என்ன?

 சாதி மாற்றிக் கல்யாணம் கட்டிக் கொண்டிருந்தால், அவள் இருந்த இடத்தில் புல் முளைத்திருக்கும். இவளைக் கட்டியவன் கொடுமை படித்தியிருந்தால் பூங்குயிலே கைம்பெண்ணாக இருந்திருப்பாள். ஆனால் இதுவுமில்லை, அதுவுமில்லை ஆக அவள் நிலை தான் என்ன. மகளை அணைத்திருப்பவள் மனதோடு பேசினால் அறிந்து கொள்ளலாம். ஆனால் அவளும் மௌனித்து அல்லவோ இருக்கிறாள்.

  அந்த மாடி அறையை மெல்லத் திறந்து உள்ளே நுழைந்தாள் பூங்குயிலுக்கு மூன்று வயது மூத்த பூங்கோதை , பின்னோடு அவர்கள் தாய் அசோதையும் உள்ளே வந்தார்.

  மகளை அணைத்துப் படுத்திருந்த பூங்குயிலைத் தொட்டு எழுப்பினாள் தாய், " பூவு,அக்காளைச் செத்த ரோடு வரைக்கும் செண்டு இறக்கி விட்டுட்டு வாத்தா. மினிபஸ்ஸை பிடிச்சாண்டா  அவள் மகேன் பள்ளிக்கூடம் விட்டு வர்றதுக்குள்ள வூட்டுக்கு போய் சேர்ந்துடுவா " என மெல்லச் சொன்ன தாயிடம், மகளை ஜாடைக் காட்ட, "நீ எந்திரி நான் பார்த்திக்கிறேன்" என்றார் அசோதை.

   பூங்குயில் மகள் தூக்கம் கலையாமல், தலையணையை மகளுக்கு அண்டக் கொடுத்தாள். தன் மற்றொரு மெல்லிய சேலையை மகளுக்குப் போர்த்தி விட்டே எழுந்தாள்.

"யம்மா, நான் போய்ட்டு வாரென். நீ விசனப்படாத இரு. நல்லதையே நினைப்போம்" என்ற பூங்கோதை, வாசலை நோக்கி நகர எத்தனித்த வேளை.

 "ஆத்தா பூங்கோதை, நான் சொன்னதை நினைப்புல வச்சுக்க. சமயம் பார்த்து உன் மாப்பிள்ளைக்கிட்டச் சொல்லி ஆகுறது பார்க்கச் சொல்லு" என்ற அம்மாவிடம்.

   "நான் பார்த்துக்கிறேன்மா, நீ விசனப் படாதா .பெரியம்மா உள்ளே படுத்திட்டாக போல இருக்கு  நீ சொல்லிபுடு." என்றவாறு மூலையில் சாய்த்து வைத்திருந்த கட்டப்பையை எடுத்துக் கொண்டாள்.

  பூங்குயில் அம்மாவிற்கு ஓர் முறைப்பைத் தந்து விட்டு, தன்சேலையைச் சரி செய்து கொண்டு தன் அக்காளைத் தொடர்ந்தாள். அந்தக் குறுகலான உயரமான மாடிப்படியை ஒருவர் பின் ஒருவாரக இறங்க, மேலே ஏற வந்த அவர்களது பெரியப்பா மகன் செல்லப் பாண்டி , அவர்களுக்கு வழி விட்டு கீழே நின்றான்.

"என்ன கோதை  இப்பதான வந்தவ பொசுக்குனு கிளம்பிய்டவ. இருந்து காபித் தண்ணி குடிச்சிட்டு போகலாம் , நான் கொண்டாய்ந்து விடுறேன்" என்ற செல்லப் பாண்டியிடம்.

"இல்லைய்ணே, மதுரைக்குப் போன மச்சான் வந்திருவாக, என் மகேன் வேற பள்ளிக் கூடம் விட்டு வந்திடுய்வான். என்னைய காணலைனா நிமிசத்துல வீட்டை இரெண்டாய்க்கிப் புடுவான். என் மாமியாவால ஒத்தையில சமாளிக்க முடியாது, அது தான் கிளம்பிய்டேன். வாரென்ணே, மதனியிட்டே சொல்லியிடுங்க பஸ்ஸுக்கு நேரமாச்சு" என்றாள். "சரித்தா  போய்ட்டு வா. நான் இறக்கி விடவா" என்ற அண்ணனிடம்.

  "அண்ணே நீயே  அலுத்து செலுத்து இப்பத்தான் வந்திருக்க, நீ போய் ரெஸ்ட் எடு, நான் அக்காளை பஸ்ஸில் ஏத்திவிட்டுட்டு வாரென்" என்ற பூங்குயில், பக்கத்திலிருந்த அம்மாவின் ரூம் நிலைப்படி ஆணியில் மாட்டியிருந்த வண்டி சாவியை எடுத்தாள்.

   "பார்த்து சூதானமா வண்டியை ஓட்டுப் பூவு. கோதை மச்சானைக் கேட்டேமுண்டுச் சொல்லு" என்ற படி அவன் விறுவிறுவென மேலேறினான். பின்னோடு வந்த அவன் மனைவி மலர்க்கொடி , பெயருக்கு ஏற்ற கொடி போன்றவள், கணவனுக்கு மதிய உணவை பரிமாறி விட்டு மாடியிலிருக்கும் அவர்களது அறைக்குப் போக வந்தவள், ஒரு பையில் தோட்டத்தில் விளைந்த காய்கறியை நாத்தனாரிடம் நீட்டினாள்.

   "கோதை, உங்க அண்ணே, இப்பத்தான் பறிச்சாந்தாரு, எங்க அண்ணனுக்குப் பொரிச்சுக் கொடு. பச்சு பச்சுன்னு இளசா இருக்கு, போனாவொடனே, ரவைக்குச் செஞ்சுப் போடு எங்க அண்ணே, உன்னையவே  சுத்திகிட்டே  வருவாரு" எனப் பூங்குயில் இருப்பதை மறந்து கோதையிடம் கண் சிமிட்டி முருங்கைகாயையும் நீட்டினாள் மலர்.

  பூங்குயில் கண்டும் காணாதது போல் கூடத்துக்குச் சென்று விட, கோதை தங்கைக்காக வருந்தி பெரு மூச்சு விட,மலர் வாயைப் பொத்தியபடி "அடியாத்தி,நான் கவனிக்காம சொல்லிப்புட்டேன், பூவு தப்பா நினைச்சுக்கப் போகுது" எனப் பதறினாள் மூத்த மதினி.

"விடுங்க மதினி,அவளுக்கு என்னாத்த தெரியும், ஒத்தை ராத்திரியில் கண்ணைக் கட்டினமாதிரி ஏதோ நடந்தது, வயித்தை ரொப்பிக்கிட்டு வந்துட்டா, இன்னும் சின்னப் புள்ளையாத் தான் இருக்கா. நான் வாரென் பஸ்ஸுக்கு நேரமாச்சு" என விரைந்தாள் கோதை.

 மாடிப் படி முடிவிலிருந்து  திரும்பியவள், இரண்டு படி இறங்கி, வளைந்து நடுக் கூடம் வழியாக நடந்த போது, பேச்சியம்மாள் பிடித்துக் கொண்டார். 'இன்னைக்குப் பஸ்ஸைப் பிடிச்ச மாதிரி தான்' என மனதில் கோதை பதட்டத்தோடு அவசரமாகத் தன் அப்பத்தாவிடம் ,"அப்பத்தா, பஸ்ஸுக்கு நேரமாச்சு. மறுக்கா வரும் போது ,விலாவரியா பேசலாம். நான் வாரென், தாத்தாக்கிட்டயும் சொல்லிடுங்க" எனப் பதிலுக்கு நிற்காமல் வெளியேற,

  "இன்னைக்கு இருக்கக் கொமரிகளுக்கு, நிண்டுப் பேசனும்னு மருவாதை தெரியிதா, என்னமோ மதுரையவே ஆள்ற மீனாட்சி கணக்கா, குதிச்சிக்கிட்டு போறாளுக" என்றவரின் வசைபாடல், பின்னோடு செவியில் மோதிய போதும் கோதை நின்றாள் இல்லை. அதற்குள் பூங்குயில் மற்ற இரண்டு திண்ணைகளையும் கடந்து செட்டிலிருந்து, வண்டியை எடுத்திருந்தாள்.

  "பூவு, ஏறிக்கிட்டாடி" எனக் கேள்வியோடு, ஒரு ஜெர்க் கொடுத்து ஏறினாள் பெரியவள். அதற்குத் தயாராகக் கால்களைத் தரையில் ஊண்டி பேலன்ஸ் செய்து நின்ற சின்னவள், சிட்டாகப் பறந்தாள்.

 மானுத்துப்பட்டி உசிலம்பட்டி, எழுமலை ரோட்டில் அமைந்த அழகான ஊர். மதுரையிலிருந்து வரும் போது உசிலம்பட்டிக்கு வலது புறம் உள்ள ஊர்கள் வறண்டு கிடக்க, இடது பக்கம் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள இவர்கள் ஊர்ப் புறம், வயல்வெளிகள் செழிப்பாகவே இருக்கும். நிலத்தடி நீர் கொண்டே பம்ப்செட் மூலம் விவசாயம் செய்கின்றனர். ஆங்காங்கே குளம் குட்டை கண்மாய்களும் மழை நேரத்தில் நிரம்பிஇருக்கும். ஆடு,மாடு நீர் அருந்த போதுமானதாக இருப்பதால் ஆடு,மாடு வளர்ப்பதும், மேய்ச்சலும் தொழிலாகவே இருக்கிறது.

  பூங்குயில், லாவகமாகத் தன் அக்காளோடு, கிளைச் சாலையிலிருந்து பிரதான சாலைக்கு வண்டியைச் செலுத்த, அவர்கள் கண்முன்னே, சிற்றுந்து ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.

 "அடியே பூவு, பஸு போயிடுச்சேய்டி " எனக் கவலை கொண்ட அக்காவை,

"அக்கா, கவலைப்படாதே, கல்லுப்பட்டி மெயின் ரோட்டில இறக்கி விடுறேன். அங்குட்டு  நெறைய பஸ்ஸு வரும், இல்லாங்காட்டியும், ஷேர் ஆட்டோ வரும். வெறசா போயிடுவ" எனத் தேற்றினாள் பூங்குயில்.

 சொன்னது போலவே, கல்லுப்பட்டி- உசிலம்பட்டி மெயின் ரோட்டில் பூங்கோதையை இறக்கிவிடவும், ஒரு டவுன் பஸ் வரவும் சரியாக இருந்தது. பூங்கோதை தங்கைக்குக் கையைக் காட்டிவிட்டு, பஸ்ஸில் ஏறிக் கொண்டாள். அவள் கருமாத்தூரில் திருமணம் முடித்து வாழ்கிறாள் , அவள் கணவன் கட்டுமானப் பொருட்களுக்கான கடை வைத்து நடத்திக் கொண்டு இருக்கிறான். உசிலம்பட்டி போய், மற்றொரு பஸ் மாறி அரைமணியில் வீட்டுக்கு  சென்று விடுவாள்.

   அவளை இறக்கிவிட்டுத் திரும்பப் போன பூங்குயிலை "ஏ ஆத்தா, இம்பூட்டூத் தொலைவு வந்தவளுக்கு, இங்கனத்தானே அத்தைன்னு ஒருத்தி இருக்கா பார்க்கனுமுண்டுனு நினைப்பு வந்துச்சா" என்றவரின் குரலில் பூங்குயில் திரும்பிப் பார்க்க, பின் கொசுவம் வைத்த சீலைக் கட்டோடு தலையை அள்ளி முடிந்திருந்த பருத்தி சீலையிலும் தைரியமான பேரிளம் பெண்ணாக நின்ற செல்லம்மா அத்தை, அவளது அப்பா வீரபாண்டியனோடு கூடப் பிறந்த பெரிய அக்கா நின்றிருந்தார்.

 கோதை ஏறிய பஸ்ஸில் பின்புறம் இறங்கியிருப்பார் போலும் " இங்க பாருடா,  அத்தே நீங்க இறங்குனதை கவனிக்கலையே. இல்லையினாக்க கண்டுக்காமப் போவேனா " என்றபடி ஓர் புன்னகையைக் கண்களில் ஆச்சரிய பாவனையைக் காட்டி உதிர்த்தவள், அவர் கையிலிருந்த கட்டப்பையை  வாங்கி வண்டியின் முன் பகுதியில் வைத்துக் கொண்டாள், "அத்தே ஏறுங்க, உங்களை வீட்டுல விட்டுட்டுப் போரேன்" என்றாள்.

  "பார்த்து, சூதானமா ஓட்டிடுவேய்யில்ல. வயசானக்காலத்துல எங்கனையாவது கொண்டித் தள்ளிப்புடாதே. கஞ்சி ஊத்த மகளும் இல்ல, மருமகளும் இல்ல ,அப்புறம்  நீதான் வந்து பார்க்கனும்" என வக்கணை பேசியவர், அவள் தோள் பட்டையை அமுக்கி ஏறி அமர்ந்தார். அவர் பிடித்ததில் வலித்தது. 'ஆத்தி, ஆத்தாளும் மகனும் பிடிச்சா உடும்புப் பிடி தான். எம்பூட்டுக் கணக்குது'என மனதில் நினைக்க அந்த அத்தை மகன் ஓர் நொடி மின்னலாக வந்து சென்றான்.

  'நான் நல்லா வாழனமுண்டு  நினைச்சையின்னா, என் கண் முன்னாடியே வந்து நிக்காத மாமா. எங்கனாலும் கண் காணாமல் போயிடு. என் கண் முன்னாடி வாராத. உன்னைய பார்க்கையிலே, நீ கேட்டதுதேன் நெஞ்சுக்குள்ள வந்து நிக்கும் . அடுத்தவனுக்குப் பரிசம் போட்டவளை கையைப் பிடிச்சுக் கேட்கிறமேண்டு கொஞ்சமாவது யோசனை இருக்கா. எனக்குப் பச்சநாவியா வருது" என இவள் கோபமாக வார்த்தைகளை உதிர்த்ததும், அவன் மனம் துடித்து அடிப்பட்ட பார்வையோடு கையையும் விட்டு விலக்கிச் சென்றவன் தான். அவன் முகத்தின் அடிபட்ட வலியே கண் முன் படமாக ஓடியது. அன்று அவள் தன் மற்றொரு அத்தை மகன் வாசுதேவனைக் கல்யாணம் செய்துகொள்ளும் முன் அவனிடம் கொட்டிய வார்த்தைகள். அதன் பிறகு அவள் செல்வ மணியைப் பார்க்க நேரிடவே இல்லை.

  ' நீ செல்வம் மாமா, மனசை நோகடித்ததுக்குத் தான் கடவுள், உன் மனசை நோகடிக்க ஒருத்தனை அனுப்பியிருப்பாரு. நல்லா வேணும்டி உனக்கு' என்ற அவளது மனசாட்சியை அடக்கி, இதையே தான் அதுவும் மூன்று வருடமாகச் சொல்கிறதே. மனதில் ஓடிய நினைவுகளைப் புறந்தள்ளி சாலையில் கவனம் பதித்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலிருந்த அல்லிக்குண்டம் என்ற ஊரில் அத்தை செல்லம்மாளை அவர் வீட்டில் இறக்கி விட்டாள் பூங்குயில்.

 "ஏன் அத்தே, இப்படி வக்கணை பேசிக்கிட்டுத் தனியாக் கிடக்கிறதுக்கு, அங்கிட்டு  நம்ப வீட்டுக்கே வந்திடலாம்ல. அப்பத்தா பொலம்பிகிட்டே கிடக்கு. உன் அண்ணே, தம்பி எல்லாரும் பாசமாத் தானே கூப்பிடுறாக" என வினவினாள் பூங்குயில்.

   "நம்ப வீடா, எங்கனையிருந்து அது நம்ப வீடாகுது. என்னைக்கு புருஷன் கையாள தாலி வாங்குனமோ, அந்த நிமிசமே பொட்டச்சிகளுக்கு அது ஆத்தா வீடா போயிடுது. ஓலைக் குடிசையிண்டாலும் , கட்டுனவேன்  இல்லாம என்னை மாதிரி முண்டச்சியா நிண்டாலும் , இது தான் என் வீடு, இங்கிட்டு கஞ்சி குடிச்சா தான் எனக்கு  மதிப்பு" என்றபடி வீட்டின் கதவைக் கூரையில் மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்துத் திறந்தார் செல்லம்மா.

   அவர் சொல்லில் விழுக்கென நிமிர்ந்த பூங்குயிலின் கண்கள் கலங்கியது. "அப்ப நான் எந்த ரகத்தில் சேர்த்தி அத்தே. இதுவும் மச்சு வீடுதான், அதுவும் மச்சு வீடு தான். இரண்டுக்குமே நான் வேண்டாத விருந்தாடியாகிட்டேனே. " என்ற தம்பி மகளைப் பார்த்திருந்த செல்லம்மாள், அவளை அவரின் சிறிய வீட்டுக்குள் அழைத்து அமர வைத்தவர், தண்ணீர் எடுத்து வந்து குடிக்கக் கொடுத்தவாறு,

   "எந்தச் சிறுக்கி உன்னை வேண்டாமுண்டா. சோலையம்மா எதுவும் சொன்னாளா. தான் கொண்டுகிட்டு போனது பத்தாதுண்டு , பிறந்த வீட்டிலிருந்து அண்ணன் மகளத்தான் , தன் மகனுக்குக் கட்டுவேண்டு , கொக்கு கணக்கா ஒத்தைக் காலில் நிண்டு கட்டிக்கிட்டுப் போனா. இப்ப என்னத்த சொல்றா" எனப் பொரிந்தார் செல்லம்மாள். தன் மகன் செல்வத்திற்குப் பூங்குயில் மேல் நோக்கமிருப்பது தெரிந்தும், வயது வித்யாசமும், அந்தஸ்து வித்யாசமும் பார்த்து தம்பி மகளை மகனுக்குக் கேட்காமல் மௌனியானவர் செல்லம்மாள்.

    "அவுகளுக்கு ஆசை, அதுக்காக என்னைய கட்டிக்கிட்டுப் போனாக. அவுக மகனுக்கு என் மேல நோக்கமில்லையே. சோலையம்மா அத்தே, மருந்த குடிச்சிடுவேன்னு மிரட்டி, தாலி கட்ட வச்சிருக்கும் போல. எல்லாம் என் தலையிலே எழுதி இருக்கிறது தானே நடக்கும். உங்க தைரியத்தில் பாதி இருந்தாலும் சுயமரியாதையாவது மிஞ்சியிருக்கும். அதுவுமில்லாதே, மலுமட்டையாப் போனேன். " என வருந்தி நின்றாள் பூங்குயில்.

 "எல்லாரும் எனக்குப் புருஷனை முந்தியில் முடிஞ்சுக்கத் தெரியலையின்னுச் சொல்றாக அத்தே. நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீங்களா? " என்ற தம்பி மகளைப் பார்க்கவே பாவமாகத் தோன்றவும், அவளைத் தன் அருகில் அமரவைத்தவர், அவள் தலையை வாஞ்சையாகத் தடவி, "உன்னைய போல ஓர் மகராசிய வேண்டாங்குறான்னா, அவனுக்குத்தேன் அறிவு இல்லைய்னு அர்த்தம். அத்தே ஒன்னுச் சொன்னாக் கேப்பியா" என்றவர், அவள் சொல்லு என்பது போல் தலையாட்டவும்.

   "காலுக்கு உதவாத செருப்பைக் கழட்டி எறி. உன்னை ராணியாத் தாங்க ஒருத்தேன், இனிமேலாப் பொறக்கப் போறான். கட்டாயம் பொறந்து இருப்பான். அவனைக் கட்டிக்க. நம்ம சாதிசனத்தில் இது ஒண்ணும் புதுசு இல்லை. வாழ்க்கை தொலைச்சு நிண்டுகிட்ட இருக்குற பொட்டை புள்ளைகளை, புதுவாழ்க்கை தந்து அரவணைக்கத் தெரிஞ்சவைங்க தான். இப்போ இன்னும் காலம் மாறிக் கிடக்கு உனக்காக நான் வந்து பேசுறேய்ன்" என்ற பெரிய மனுசியின் வார்த்தைகளைக் கண்ணீர் மல்கக் கேட்டிருந்தவள், 

    "நீ எனக்காக யோசிச்சதே போதுமத்தே, இனி ஒரு ஆம்பளைய நம்பறதா இல்லை. நான் என் மகளைச் சொமந்துக்கிட்டே காலத்தை ஓட்டிடுவேன்" என்றாள் பூங்குயில்.

  "இப்படிப் பொறந்த வீட்டிலேயே கடந்து அப்பன் ஆத்தாளுக்குச் சேவகம் பண்ணப் போறியா. எத்தனை நாளுக்குச் செல்லும். சிறு வயசு உனக்குன்னு ஆசை கிடையாது, பேசுறாப் பேச்சு. அங்கிட்டு  இருக்கிற கிழடு கட்டைக்கும் அறிவு மழுங்கிப் போச்சு " என தனது அப்பன் ஆத்தாளையம் சேர்த்து திட்டினார் செல்லம்மாள்.

   "அப்பாரு இந்த வருஷம் பீஎட் சேர்த்து விடுறேண்டு  சொல்லி இருக்காரு அத்தே . அதுக்கு மட்டும் செலவு பண்ணாகண்டா போதும், ஒரு வேலைக்குப் போயி, என் மகளைப் பார்த்துக்குவேன்" என அத்தையிடம் மனம் திறந்தாள் பூங்குயில். அதற்குள் அவள் அம்மாவிடமிருந்து போன் வந்தது. எடுத்து விவரம் சொன்னாள்.இவள் பேசிக் கொண்டிருக்கும் போதே, நான்காவது படிக்கும் அத்தையின் மகள் வழிப் பேத்தி மீனாட்சி பள்ளிக்கூடம் விட்டு வந்தாள்.

  கருத்தபாண்டியன்- பேச்சியம்மாள் தம்பதிக்கு ஆறு பிள்ளைகள். நான்கு ஆண்கள், இரண்டு பெண்மக்கள். கருத்த பாண்டியன், ஓர் முறை எம்எல்ஏவாக இருந்தவர், பின்னர் உசிலம்பட்டி ஊராட்சியிலும் கட்சியிலும் பற்பல பதவிகளை வகித்தவர். தான் ஓய்வு பெற்று, பெரிய மகன் சிவப்பாண்டியனை அரசியல் வாரிசாக்கினார் .அவர் மனைவி சந்திரா பெரிய வீட்டு மருமகளாக, சாதிசனம் செய்முறையிலிருந்து விசேசம் வரை அத்தனையும் பார்த்துக் கொள்வார். இரண்டு மகன்கள், செல்லப் பாண்டி ஜெயப்பாண்டி, மணமாகிவிட்டது. பெரியவனுக்கு ஒரு மகன்,மகள் இருக்க,சின்னவனுக்குப் பிள்ளைகள் இல்லை.

  அடுத்தது செல்லம்மாள், பக்கத்து ஊரில் காத்தமுத்து என்பவருக்கு வசதியான வீட்டில் மணமுடித்துக் கொடுக்க, காத்தமுத்துவின் தவறான பழக்க வழக்கங்களால் இரண்டு பிள்ளைகள் பிறந்த பின்பு ஒருவனிடம் கத்திக் குத்துப் பட்டு இறந்து போனார். கைம்பெண்ணாக இருந்த செலலம்மாள், தனது அம்மாவின் சுள்ளென்ற வார்த்தையில், பிறந்த வீட்டில் அண்டாமல், சிறிய அளவில் ஹோட்டல் நடத்தித் தன் பிழைப்பைப் பார்த்துக் கொண்டார்.

செல்லமுத்து, செல்வமணி என ஓர் மகளும், மகனும் உண்டு. செல்லமுத்து கலப்புமணம் புரிந்து வெளியூர் சென்றுவிட்டாள். மகள் ஓடியதில் செல்லம்மாள் ஒடிந்து போனார். கலப்பு மணத்தை எதிர்த்தவர்களும் , முன்பகை கொண்டவர்களுமாக  இரண்டு வருடம் கழித்துத் தாயைக் காண வந்த, செல்லமுத்துவையும், அவள் கணவனையும் கள்ளிக்காட்டிற்குக் கடத்தி வெட்டி சாய்க்க, அவளின் ஒரு வயது மகளை, தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும் என வளர்க்க ஆரம்பித்தார்.பிறந்த வீட்டிலிருந்தே எதிர்ப்பு வந்த போதும் அசைந்து கொடுத்தாரில்லை.

 இவரின் மகன் தான் செல்வ மணி, இவனுக்குப் பத்து வயதாக இருக்கும் போது, அவன் தந்தை கொலைசெய்யப் பட, அது முதல் தனது தாய்க்கு உதவியாக இருந்தவன், தத்தி முத்தி பத்தாவதைத் தாண்டினான். அதன் பிறகு ஐடிஐ படித்தவன், படிப்பை முடித்தானோ இல்லையோ தொழிலைக் கற்றுக் கொண்டான். தனது அக்காளுக்கு நேர்ந்த கொடுமையையும் பார்த்தவன் திருமணத்தை வெறுத்தான்.

  ஆனாலும் தனக்குப் பத்து வயதாக இருக்கும் போது பிறந்த மாமன் மகளைத் தேவதை போல் மனதில் இருத்தி இருந்தான். அவளுக்குக் காவலாக, ஆபத்து நேரும் போது தாய் பறவை போல் அடை காப்பான். சிறுவயதில் விகற்பமில்லாமல் பழகிய பூங்குயில், வயதுக்கு வந்த பிறகு அம்மாவின் அறிவுரையில் பள்ளிக் கல்லூரித் தவிர வீட்டோடு முடங்கினாள்.

  திடீர் மாற்றமாக அவளைச் சில மாதங்கள் சென்று பார்த்த செல்வ மணியின் நெஞ்சில், அவளுக்கு பூப்படைந்தபோது, பூங்குயிலின் மாமன் வெளியூர் சென்றதில், இவனை குச்சு கட்ட அழைத்த தருணத்தில் ,மஞ்சள் பூசி மருண்ட விழிகளோடு இருந்த இளம்பெண்ணே, சிறுவயதிலிருந்து அவன் மனதில் தேவதைப் பெண்ணாக இருந்த பூங்குயிலே மணிக்குயிலாகவும் குடியேறினாள். அவள் சொன்ன வார்த்தைக்காகத் தன்னைத்தானே நாடு கடத்திக் கொண்டான் செல்வ மணி.

  தற்போது அரேபிய வளைகுடா நாட்டில் எலெக்ட்ரீசியன் வேலைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான். மூன்று  ஆண்டுகளுக்கு முன் சென்றவன் தான் இதுவரை வந்தான் இல்லை. அவனது ஆரண்ய வாசத்துக்கு மூல காரணம் தாம் தான் என்பதை இந்தப் பெண்ணரசி பூங்குயில் மனதில் உணர்ந்தாள் இல்லை.

 கருத்த பாண்டியின் மூன்றாவது மகன், ராஜபாண்டியன், குவாரி காண்ட்ரேக்ட், ரியல் எஸ்டேட் எனக் கொடி கட்டிப் பறக்கும் வியாபார காந்தம்.  இவர் மனைவி கௌசல்யா கணித பேராசிரியை. இரண்டு மகன்கள், மருது பாண்டி, தங்கப்பாண்டி, அனுராதா என்ற ஓர் மகளும் உண்டு. மதுரைக்கு அருகிலேயே துவரிமான் பகுதியில் பெரிய வீடு கட்டி வசிக்கிறார்.

   இதில் மருது பாண்டி அப்பாவோடு தொழில் பார்க்க, இரண்டாவது மகன் தங்கப்பாண்டியன் ஐ.பி.எஸ் ஆகிவிட்டான். வடக்கே மத்தியபிரதேசம் போபாலில் தற்போது வேலை பார்க்கிறான். தனது பேட்ச்மெட்டான ஐய்யங்கார் வீட்டு அழகு, தான்வி ரகோத்தமன் ஐஏஎஸ் இடம் மனதைப் பறிகொடுத்து, திருமணம் முடிக்கும் வகைத் தெரியாமல் முழிக்கும் வீரத்திருமகன். அனுராதா திருமணமாகி கணவனோடு மதுரையில் வசிக்கிறாள்.

  நான்காவது வீரபாண்டியன்- அசோதை. இந்தக் குடும்பத்தின் விவசாய நிலங்கள் அத்தனையும் இவர் கட்டுப் பாட்டில் தான் உள்ளது. நல்ல உழைப்பாளி. மூத்தவர் சொல்லைத் தட்டாத வெள்ளந்தி மனிதன். தங்கை மீது கொண்ட பாசத்தால் மகளைக் கொடுத்து விட்டுத் தற்போது வழி தெரியாமல் நிற்கிறார். இவர்களுக்கு இரண்டு  மகள்கள், பூங்கோதை, பூங்குயில், ஒரு மகன் முத்துப் பாண்டி, சித்தப்பாவின் சொல்லைத்த தட்ட மாட்டாமல் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கிறான்.

  ஐந்தாவது சோலையம்மா, அவரது கணவன் மாயத்தேவன். இவர்கள் மூத்த மகன் வாசுதேவன், பொறியியல் முடித்தவன் காவல்துறை தொலைத்தொடர்புத் துறையில் எஸ்ஐ ஆகத் சென்னையில் பணி புரிகிறான். அவனுக்கும் பூங்குயிலுக்கும் மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு நாள் உறவோடு போனவன், ஆயிரம் காரணங்களைச் சொல்லி, கட்டியவளைப் பார்க்கத் தவிர்த்து வருகிறான். 

  பக்கத்திலிருக்கும் செல்லம்பட்டியில் வசிக்கும் இவருக்கு, மகளைத் தங்கப் பாண்டியனுக்குக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை, தான்வி வந்த போது அவளைத் தன பேச்சால் விரட்டி அடித்தார்.ஆனாலும் தங்கப் பாண்டி பிடி கொடுக்காததால் ,வேறு ஒரு பெரிய வீட்டில் மகளைக் கொடுத்து விட்டார்.

  ஆறாவது மகன் துரைப் பாண்டியன், தமிழ்நாடு காவல்துறையில் ஆய்வாளர், தற்போதையப் பணி திருச்சியில். மனைவி கலைச்செல்வி மாற்றலாகிச் சென்று கொண்டே இருக்கும் கணவனின் பதவிக்காக வங்கி வேலையைத் துறந்த இல்லத்தரசி. மகன் தினேஷ் பாண்டியன், மகள் ஐஸ்வர்யா பள்ளிப் படிப்பில் இருக்கின்றனர். துரைப்பாண்டியன் வார்த்தைக்கு இளையவர்களிடம் எப்போதும் மதிப்பு உண்டு. 

  கருத்தபாண்டி குடும்பத்தை எடுத்துச் சொல்லவே இந்த அத்தியாயம் பத்தாது போல இருக்கப்போய். என்ன பண்ண சொல்லித்தானே ஆகனும், அவுக குடும்பத்துக்குள்ளேய்யே நடக்குற கதைக்கு அவுங்களச் சொல்லனுமே, அதுக்குத்தான் இவ்வளவு பாடு.

 பள்ளியிலிருந்து வந்த மீனாவுக்குப் பூங்குயிலைப் பார்த்து மிக்கச் சந்தோஷம். "அம்மாச்சி, இந்த அத்தை வச்சிருக்காங்கல்ல, இது மாதிரி போன் வாங்குனிய்னாக்க மாமாவைப் பார்த்திக்கிட்டே பேசலாம். என் சினேகிதி அவள் அப்பாவோட, அப்படித்தான் பேசுறா" என்றாள்.

அவளையே புன்னகையோடு பார்த்திருந்த பூங்குயிலிடம், "அத்தே,என் மாமனைப் பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு, உங்க போனில் போட்டுக் குடுக்குறீங்களா" என வெள்ளந்தியாக ஆசையாகக் கேட்ட மீனாவிடம்,

"என்கிட்ட உன் மாமா போன் நம்பர் இல்லையே" என்றாள் பூங்குயில்.

         "அம்மாச்சி போனில் இருக்கு, அம்மாச்சி உன் போனைக் கொடு" என மீனாப் பிடுங்கவும், செல்லம்மாளின் கண்களிலும் மகனைப் பார்க்கும் ஆவல் தோன்றியது.

   பூங்குயிலுக்குத் தான் தர்ம சங்கடமாக இருந்தது, எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவனிடம் பேசுவது என்ற சங்கடம். ஆனாலும் வயதான அத்தையையும், இளந்தளிர் மருமகளையும் ஏமாற்ற விருப்பம் இல்லாமல் மீனா கொடுத்த நம்பரை வாங்கி, மனதில் பதட்டத்தோடு வாட்ஸ்அப் வீடியோ கால் போட்டாள்.

 ரிங் போகவுமே மீனாவிடம் கொடுத்து விட்டாள் பூங்குயில், நமது நேரம் நான்கு மணி அவனுக்குச் சாப்பாட்டு நேரமாக இருந்தது. புது எண்ணிலிருந்து வீடியோகாலைப் பார்க்கவும், தன்னைச் சீராக்கிக் கொண்டு எடுத்தான். இங்குக் காட்டானாகக் கசங்கித் திரியும் செல்வம், அங்கே அடர் வண்ண சீருடையில், குளிரூட்டப்பட்ட பகுதிகளில் தனது வேலைகளை முக்கால் வாசி நேரம் பார்ப்பதால், நிறம் கூடி ஜம்மென இருந்தான்.

  "மாமோய்,நல்லா இருக்கீங்களா, செம்ம டக்கரா இருக்க மாமோய். உன் கலரு ஏறி சினிமா ஹீரோ கணக்கா இருக்கீங்க" என அக்காள் மகளின் புகழ்ச்சியில்  ஹாஹாவென ஆண்மை பொங்கச் சிரித்தவன்,

  "நல்லா இருக்கேன் மீனாக்குட்டி. பள்ளிக்கூடம் போய்ட்டு வந்துட்டியா. அம்மாச்சி எப்படி இருக்கு, யாரு போனிலிருந்து பேசுறீங்க" என அடுக்காக  மூன்று கேள்விகளைக் கேட்டான். அவன் கேள்விக்குப் பதில் சொல்லி, தனது அம்மாச்சியையும் அவனுக்குக் காட்டி மகிழ்ந்தது ஒன்பது வயது சிறுமி மீனாட்சி. செல்லம்மாள் தனது மகனைக் கண்ட பூரிப்பில் கண் கலங்கினார்.

 

 மீனாவின் வர்ணனையிலும்,செல்வத்தின் குரலிலும், சிரிப்பிலும் முதல் முறையாகப் பூங்குயில் தன்னைத் தொலைத்தாள். அவனைப் பார்க்கும் ஆவல் ஒரு புறமும், அவனைத் தான் காயப்படுத்தியது மறுபுறம் வந்து அவளை இம்சித்தது. ஆனால் அக்காள் மகளோடே இத்தனை வாஞ்சையாகப் பேசுகிறானே. தனது மகளென்றால் எப்படிக் கொண்டாடுவான். எனமனதில் ஏக்கம் தோன்ற, தனக்குத் தாலி கட்டியவன் தன்னை மூன்று மாதங்களுக்குப் பின் பார்த்தும், கருவைக் கலைக்கச் சொன்னது தான் நினைவில் வந்தது. அத்தையின் குரல் நினைவுக்கு கொண்டு வர அவர்கள் பேச்சை கவனித்தாள்.

 "நான் அழுகலை ராசா, அழுகலை. நீ எப்ப வருவச் சொல்லு. கூழோ கஞ்சியோ இங்கிட்டு  இருக்கிறதை வச்சி குடிச்சிக்கலாம்யா. நீ லட்சலட்சமா சம்பாதிக்கலைண்டு நான் கேட்டனா. உன்னைப் பார்க்காமல் கண்ணு ஏங்குது. இங்கிட்டு  வந்திடு. ஆத்தாளுக்கு முன்னே மாதிரி ஒண்ணும் முடியல. அடிக்கடி தலையைச் சுத்துது. நீ ஊருக்கு வந்திடு" என நா தழுதழுத்துக் கொண்டிருந்தார் செல்லம்மாள்.

  "ஆத்தா, உனக்கு ஒண்ணும் ஆகாது, என் கூட்டாளி செந்தில வரச் சொல்லுறேன், நீ டவுனு ஆஸ்பத்திரியில் போய் ஃபுல் செக்கப் பண்ணிட்டு வா. வீடியோல பார்க்கங்காட்டி உண்மை புரியுது. இல்லையினா அம்புட்டையும் மறச்சுபுடுற" எனத் தாயைக் கடிந்து கொண்டிருந்தான் செல்வம்.

  "இங்கபாரு, நீ இங்கிட்டு  வந்து ஆஸ்பத்திரிக்கு கூட்டிய்டுபோ நான் வாறேய்ன். உன் கூட்டாளி, சோக்காளியெல்லாம் ஒருத்தனையும் அனுப்பக் கூடாது. நான் போக மாட்டேய்ன்" எனப் பிடிவாதம் பிடித்த ஆத்தாளை வழிக்குக் கொண்டு வரும் வழி தெரியாமல் நெற்றியைப் பிடித்துக் கொண்டிருந்தான்.

 "செல்வம், நம்ப பூங்குயிலு நிண்டுகிட்டு இருக்கு , அதுகிட்டயும் ஒரு வார்த்தை பேசிப்புடு. அது மகளை நீ பார்த்ததில்லைய, அப்படியே அச்சு உறிச்சுப் பூவுதாய்ன். நீ சின்னதுல இதைத் தூக்கிக்கிட்டேய்த் திரிவியே, இப்ப வந்தைனாக்கும் அதே மாதிரி பூவு மகளை, அதென்ன பேரு அழகி, ஹாங் மதியழகியைத் தூக்கிக்கிடலாம். இந்தா, இந்தா பேசு" எனச் செல்லம்மாள் பூங்குயிலிடம் போனைக் கொடுத்து விட்டு, வெளியே யாரோ கூப்பிடும் அரவம் கேட்டு முதலில் பேத்தியை எட்டிப் பார்க்கச் சொல்லியிருந்தவர், தானும் பின்னோடு வெளியேறினார். போனை பிடித்திருந்த இரண்டு பக்கமும் பதற்றம் தொற்றியது.

 வெளிச்சம் தன் மீது படும்படி நின்று, கேமராவை தனது புறம் பூங்குயில் திருப்பும் முன், பதின்ம வயது பையனாகச் செல்வம் பரபரப்புக்கு உள்ளானான். ஆனாலும் அவள் உன் தம்பி மனைவி என வழுக்கட்டாயமாக நினைவில் கொண்டு வந்தவன், அவளைக் காணத் தயாரானான். 

 பூங்குயிலும் அவனின் தோற்றத்திலும் பார்வையிலும் தனது அடிவயிற்றில் ஏதோ பிசையத் தொண்டைக் குழியிலிருந்து வார்த்தை வராமல் திக்கித் திணறி மெல்ல நலம் விசாரித்தாள். அந்தப் புறம் அவன் கேட்ட கேள்வியிலும்  சொன்ன பதிலிலும்  இந்தப் புறம் இவள் விக்கித்து நின்றாள்.

 

பாண்டிகுடும்பம் -மனச தாடி என் மணிக்குயிலே- அறிமுகம். 

பாண்டிக் குடும்பம் -அறிமுகம். 

பாண்டிக் குடும்பம் -வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம். 

எனது மூன்றாவது கதையான மனச தாடி மணிக்குயிலே, அதன் இரட்டை கதையான தான்வி கல்யாண வைபோகமே , இந்த கதைகளினால் கிடைத்த பொக்கிஷமே, நம் பாண்டிக் குடும்பம். 

மதுரை வட்டார வழக்கில், ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தின் வாழ்வியலை, சொல்ல வருவது தான் இந்த கதை. இதுவரை நான்கு  பாகங்கள் வந்து விட்ட நிலையில் , இன்னும் இந்த குடும்பத்தின் கதை தீர வில்லை. 

பாண்டிக் குடும்பம் எனும் ஆலமரத்தில் , அதனைத் தாங்கி நிற்கும் ஆணி வேர்கள் கருத்த பாண்டி ஐயா, பேச்சியம்மாள். இந்த அடி  மரத்தின் விழுதுகள், புதிதாகக் கிளை விட்டுக் கொண்டே தான் இருக்கின்றன. நாம் பார்க்கவே நாலு தலைமுறை வந்து விட்டது. 

எனது புதிய தளம், புதிய வாசகர்களின் வசதிக்காக, பாண்டிகுடும்பம் பற்றிய அறிமுகம்.  

மனச தாடி என் மணிக்குயிலே,  ஒரு பெண்ணின் மறுமணத்தை பற்றி பேசும் கதை. அதன் இரட்டை கதையாக, கலப்பு மணம் பற்றி  தான்வி கல்யாண வைபோகமே  சமகாலத்தில் நடக்கும் கதையாக எழுதினேன்.  அதைத் தொடர்ந்து, ஏழு வருட இடைவெளியில் நடந்த சம்பவங்கள், பெரிதாகப் பேசப் படாத குடும்ப உறுப்பினர்களின் கதைகளும் , பாண்டி குடும்ப மூன்றாவது கதையாக, மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே! மற்றொரு ஆறு வருட இடைவெளியில்  ராகம் தேடும் வானம்பாடிகள்!  கதையும் எழுதி முடித்து விட்டேன். 

இந்த வரிசையில், ஐந்தாவது கதையாக - மணிப்புறாவோ! மாயவன் அழகியோ! இனி எழுத வேண்டும். 

 

பாண்டிக் குடும்பம்- கதையின் தலைப்பிலேயே, புரிந்திருக்கும்.  வைகை நதி பாயும், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சிதறல்கள் ஊடே, கரிசல் காட்டுப் பூமியாம் , மதுரைக்கு மேற்கே அமைந்திருக்கும், உசிலம்பட்டியை மையமாக வைத்து வாழும், மண்ணின் மைந்தர்களாகிய ஒரு கூட்டு குடும்பத்தைப் பற்றிய புனைவு.

வீரம் செறிந்த, எதற்கும் துணிந்த, எதார்த்த வாழ்வு வாழும் ஓர் கூட்டுக் குடும்பத்தின் கதை.  பல தலைமுறைகளைக் கண்ட இந்த பாண்டிக் குடும்பத்துக்கு, அவர்களது குலம் காக்கும் வாலாந்தூர், ஆதிசிவன் வாலகுருநாத சுவாமி, காமாட்சி அம்மன், கருப்பன், மக்கட் செல்வம், மண்,மாளிகை, வயல் வரப்பு, தொழில், செல்வாக்கு, அரசியல் செல்வாக்கும் , அருளி சொந்த பந்தம், சாதி சனங்களுக்கு மத்தியில் நல்ல அந்தஸ்தோடு வைத்திருந்தது. 

பெரிய குடும்பம் எனும் போது , சொந்த பந்தம், சாதி சனம், பங்காளிகள், சம்பந்தக்காரர்களுக்கும் குறைவில்லை, அதே போல் , திருவிழா, கொண்டாட்டம் பஞ்சாயத்துக்களுக்கும் குறைவில்லை. 

பாண்டி குடும்பத்தின் பெரியவர், கருத்த பாண்டி ஐயா, அவருடைய மனைவி பேச்சியம்மாள். அவர்கள் பிள்ளைகள், உடன் பிறந்தவர்கள், பங்காளிகள், சம்பந்திகள் அவர்களோடான , உறவு பகை ஆகியவற்றைச் சொல்ல வருவதே பாண்டிக் குடும்பம். 

பாண்டி குடும்பத்தை தொடர்ந்து, இதன் கிளை கதியாக பங்காளிகளான துரைக்குடும்ப கதையை எமகாதகனும், எலிசபெத் ராணியும் என்ற தலைப்பில் எழுதி உள்ளேன். இவ்விரு குடும்பங்களுக்கான முன் கதையாக பத்மாசினி- வேங்கடவனின் அணங்கு இவள்- தற்போது தொடராக இதே தளத்தில் வருகிறது. 

இந்த தொடர்கள் அனைத்தையுமே, தனி தனி கதைகளாகவும் வாசிக்கலாம். அதற்க்கு ஏற்பவே புனையப்பட்டுள்ளது. 

புதிய தளத்தில் , ஒவ்வொரு கதையாக பதிவேற்றம் செய்கிறேன். கதையோடு பயணித்து, கதை  மாந்தர்களை , மண்ணின் மைந்தர்களை அறிந்து கொள்ளலாம் வாருங்கள். 

உங்கள் ஆதரவைத் தொடர்ந்து வழங்குங்கள்.  

தொடர் கதையில் சரித்திரம் படைப்போம். 

தீபா செண்பகம். 

 

கதாபாத்திரங்கள்-பாண்டிக் குடும்பம் 

மூத்ததலைமுறை

கருத்த பாண்டியன்-தாத்தா (முன்னாள் எம்.எல்ஏ)

பேச்சியம்மாள் - அப்பத்தா.

அடுத்த தலைமுறை. 

  1. சிவபாண்டியன் - மனைவி  சந்திரா 

மூத்த மகன்

1) செல்லப்பாண்டியன் -மனைவி மலர்க்கொடி 

பேரன்- ஹரிஷ் பாண்டி  

பேத்தி- ஹரிணி 

            2) இளையமகன்.

ஜெயபாண்டியன்- மனைவி பூமா.

  1. செல்லம்மாள்- காத்தமுத்து. 

          1)மூத்த மகள். செல்லமுத்து பேத்தி  மீனா . 

          இளைய மகன் 

          2)செல்வமணி- கதையின் நாயகன். 

           மனைவி பூங்குயில் -மகள் மதியழகி 

  1. இராஜ பாண்டியன் -கௌசல்யா. 

            மூத்த மகன் 

            1).மருது பாண்டியன்- சுமித்ரா. 

            பேரன்  ஹித்தேஷ் பாண்டி. 

            2).இளைய மகன். 

            தங்கப் பாண்டியன் IPS-  காதலி தான்வி 

           3). மகள் 

           அனுராதா-  கணவன் மாதவன். 

            பேத்தி அரசி. 

  1. வீரபாண்டியன்- அசோதை.

         1). மூத்த மகள் 

             பூங்கோதை- விருமன் 

             ஆதி சிவா.

        2). இளைய மகள்.

            பூங்குயில்- நாயகி.- முதல் திருமணம் வாசு தேவன் /

            மறுமணம் -செல்வமணி. பேத்தி மதியழகி. 

          3) இளைய மகன் முத்துப் பாண்டியன்.

  1. சோலையம்மா- மாயத்தேவன். 

             1).மூத்த மகன் வாசுதேவன்.   பூங்குயிலை முதல் மணம்)

                மனைவி சரயு.

                பேரன் சரண்தேவா. 

            2). இளைய மகள் - அனுசுயா- கணவன். 

  1. துரை பாண்டியன்- செல்வி  

            1).மகன் தினேஷ் பாண்டி.   2).மகள் ஐஸ்வர்யா

 

WhatsApp

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!