அத்தியாயம் 30
உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியது. போன சட்டமன்ற தேர்தலின் போது, கிரஹாவுடன் கலந்து பேசி திட்டமிட்டதைப் போன்றே இதற்கும் திட்டமிட ஒன்று கூடினார்கள்.
ஆனால் அதில் பேசிய விஷயங்களும் எடுத்த முடிவுகளிலும் விழியனுக்குக் கருத்து வேறுபாடு இருந்ததால் முடிவு எட்டப்படவில்லை.
கிரஹா கூடியவர்களை நோட்டம் பார்த்துவிட்டு ஸ்ரீராம் வரவில்லை என்று கவனித்தாள். “அந்த ஸ்ரீராமை கூட்டிகிட்டு வராம இருந்தது சரியான முடிவு விழியன்.” என்றாள்.
“அவனைப் போல ஆட்கள் சந்தர்ப்பவாதிகள் எதிரிங்க கூட நம்மகூட இருந்துக்கிட்டே தாவிடுவாங்க.” என்றாள். “ரகசியங்கள் அவன் போன்ற ஆட்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது.” என்றாள்.
அவள் அவ்வாறு சொன்னதும், ”இல்ல மேடம், எங்க கூட வளர்ந்தவன்தான் அவன். அம்புட்டு ஒன்றும் கெட்டவன் கிடையாது. காசு மேல ஆசையும் இத்தனை நாள் நட்பா இருந்த நாங்க அவனைக் கழட்டி விட்டுட்டு ரகசியமா கட்சி எல்லாம் ஆரம்பித்தோம்ன்னு வீராப்பில் கெட்டவன் பக்கம் சாய்ந்தான். பட்டு தெளிஞ்சிட்டான் நான் இப்போ அவனை முழுசா நம்புறேன். வாழ்க்கை படிப்பினை கத்துகிட்டவன் இனி மாற மாட்டான்.” என்றான்.
அவன் அவ்வாறு சொன்னதும் கதிர், “பாருங்க மேடம், இவன் இப்படித்தான் இயேசு கடவுள் போலப் பாவ மன்னிப்பு கேட்டதும் மன்னிச்சிருவான். ஆனா நான் அப்படி இல்லப்பா. என் காலுக்குள்ள ஒரு எலும்புக்குப் பதில் கம்பி அவனால வச்சிருக்கேன். அவனை எப்பவுமே தூரமாத்தான் நான் வச்சிருப்பேன்.” என்றான்.
“யூ ஆர் பிரில்லியன்ட் கதிர்!” என்று அவள் கதிரைப் பாராட்டினாள்.
“விழியன் இந்தத் தடவை நாம எப்படியாவது ஜெயிச்சே ஆகணும். அப்போதான் இத்தனை நாள் நாம போட்ட வொர்க்குக்கு அர்த்தம் இருக்கும். அந்த அகத்தியனோட திட்டம் எல்லாமே நம்ம முன்னாடி தோத்துப் போனதால வெறியோட இருக்கான். எவ்வளவு பணம்னாலும் செலவழிச்சு இந்த உள்ளாட்சி தேர்தலில் அவனோட பலத்தைக் காமிச்சி தேர்தலில் வின் பண்ணிடணும்னு நினைக்கிறான்.
அதனால.... போனதடவை போல இல்லாமல் இந்தத் தடவை நாமும் கொஞ்சம் காசை இறக்கிவிடணும் அப்போ தான் நாம ஜெயிக்க முடியும்.” என்றாள்.
மனதினுள் கிரஹா நினைத்துக்கொண்டாள், ‘போன தடவை இவனுக்குத் தெரியாமல் காசை இறக்கிவிட்டோம். இந்தத் தடவை இவனுக்குத் தெரிஞ்சு காசை செலவழிக்கணும். அப்போதுதான் இம்புட்டு காசு நான் செலவழிச்சு உன்னை முன்னிருத்தியிருக்கேன். நீ வேணா பதவியில் இருந்துக்கோ! ஆனால் கட்சி பொறுப்பும் கட்சிக்கான தலைமைப் பொறுப்பும் தலைவியும் நான்தான் என அவனுக்குப் புரியும்.’ என மனதினுள் நினைத்துக்கொண்டாள்.
ஆனால் அவள் அவ்வாறு சொன்னதும் விழியன் மனதினுள், ‘போனதடவை என் கண் மறைச்சு, எனக்கு உதவின்னு நீங்க பண்ணிய இந்த அக்கிரமத்தை இப்போ என்னோட கண் முன்னாடியே செய்யன்னு நினைக்கிறீங்க போல!’ என எண்ணிக்கொண்டவன்,
“எனக்குக் காசு செலவு பண்றதில் உடன்பாடு இல்ல மேடம். காசு கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாதுன்றதை அழுத்தமா பேசித்தான் போன எலெக்சன்ல வாக்குச் சேகரிச்சேன். இப்போ நம்மளே காசு கொடுத்தா அப்போ மத்த அரசியல்வாதிகள் போல என்னையும் பொய்யன்னு மக்கள் நினைப்பாங்க.” என்றான்.
“இந்தத் தடவையும் அப்படியே பிரச்சாரம் பண்ணுங்க விழியன். அதில் எந்த மாற்றுக் கருத்தும் வேணாம். காசு செலவு பண்ண போறது நான். நீங்க இல்ல... என்னோட முழு உழைப்பையும் டீமோட வெற்றிக்காக நான் அர்ப்பணிச்சிருக்கேன். அதேபோலக் காசையும் செலவு பண்ணியிருக்கேன்.
ஆனா காசு செலவு செய்ததை உங்க பார்வைக்கு நான் கொண்டு வந்ததில்லை. ஆனா இந்தத் தடவை அப்படி நமக்குள்ள எந்த ஒளிவு மறைவும் இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன்.
நம்ம கட்சியை அடுத்தச் சட்டமன்ற எலெக்சனுக்குள்ள அதாவது ஐந்து வருசத்துக்குள்ள தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைச்ச ஒரு பெரிய கட்சியா மாத்தணும்.
வெறும் நம்ம தொகுதிக்கு எம்.எல்.ஏவா ஆகுறது மட்டும் நம்ம கட்சியின் எய்ம் இருந்தா பெருசா எதையும் சாதிக்க முடியாது. கட்சியை வளர்க்குறது என் பொறுப்பு..... அடுத்த எலெக்சன் அப்போ நீங்க முதலமைச்சர் வேட்பாளரா இருங்க. எப்பவும் போலக் கட்சியை நான் பார்த்துக்குவேன். நான் சொல்றதை நீங்க கேட்டு நடந்தால் மட்டும் போதும். உங்களைத் தூக்கி உச்சியில் வச்சிடுவேன்.... அதுக்குப் பிறகு நீங்க மக்களுக்கு என்னென்ன செய்யணும்னு நினைச்சாலும் செய்யலாம்.” என்றாள்.
ஏனோ அவளின் வார்த்தைகளை விழியனைத் தவிர மற்ற அனைவரும் சந்தோசமாக ஏற்றுக்கொண்டதை பார்க்கும்போது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ரொம்ப நேரமாக இதற்கு எதிராகவே விழியன் பேசிக்கொண்டிருந்ததால் கிரஹாவுக்குத் தலைவலிக்க ஆரம்பித்தது.
எனவே, “நாளைக்கு மறுபடியும் டிஸ்கஸ் பண்ணலாம் விழியன். நீங்களும் வீட்டுக்கு போய் நல்லா நான் சொன்னதை யோசித்துப் பாருங்க.” என்று விடை கொடுத்தாள்.
வெளியில் வந்த எல்லோரும் அமைதியாக இருந்தனர். விழியன் சொல்வது போலத் தப்புத்தான். ஆனால் இதுபோலப் பெரிய ஆட்கள் சப்போர்ட் இருந்தாத்தான் நாம பதவியில் ஏற முடியும். இல்லாட்டி கடைசி வரை கொடி புடிச்சுகிட்டுக் கோஷம் போட்டுட்டே போய்ச் சேர வேண்டியதுதான் என்ற எண்ணத்தில் மற்றவர்கள் இருந்தனர்.
விழியனோ எந்த அரசியல் சூழலை நான் வெறுத்தேனோ எதுக்கு அகைன்ஸ்ட்டா நான் கொடி பிடிக்கணும்னு நினைச்சு அரசியலுக்குள்ள இறங்கினேனோ அந்த அஸ்திவாரமே ஆட்டம் காணும் நிலையில் இப்போது தன்னுடைய கட்சி இருப்பதாக அவனுக்குப் பட்டது.
தனக்குள் உறுத்தலாக இத்தனை நாள் இருந்த கிரஹாவின் மேல் இருந்த சந்தேகம் இன்று உறுதியாகிவிட்டது. ஆனால் என்னோடு நிற்க வேண்டிய என் நண்பர்களே ஆப்போசிட்டாகக் கிரஹாவின் பக்கம் நிற்பதை அறிந்து சற்றுக் குழம்பித்தான் போனான். எப்படி இவர்களுக்குப் புரியவைக்க என்ற எண்ணம் உண்டானது.
‘ஒருவேளை, நான் தனியா கிரஹாவை விட்டு விலகி வந்தால் இவர்கள் என் பக்கம் நிற்பாங்களா அல்லது கிரஹாவின் பக்கம் செல்வார்களா?’ என்ற பயமும் அதற்கான விடை இரண்டு பக்கமும் ஊசலாட்டமாக அவனுள்.
வீட்டிற்கு வந்து சேரும் முன்பே அவனின் வீட்டு வாசலில் கார் நின்றது.
பூபதிராஜா அவனுக்காக அங்குக் காத்துக்கொண்டிருந்தார். எம்புட்டு பெரிய மனிதர் தனது வீட்டிற்கு வந்திருக்கிறார் என்ற பிரமிப்பில் காளிதாஸ் அவருடன் பேசிக்கொண்டிருந்தார்.
“பூபதி, இதோ என் பேரன் வந்துட்டான்.” என்று பைக் சத்தத்தில் கண்டுக்கொண்டு சொல்லிக் கொண்டிருக்கும் போது தனது வீட்டின் முன் விலை உயர்ந்த பூபதிராஜா முதலாளியின் கார் நிற்பதைக் கண்டு யோசனையுடன் வீட்டிற்குள் வந்தான்.
உள்ளே வந்தவன், “வாங்க, வாங்க.... பார்க்கணும்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நானே வந்திருப்பேனே!” என்ற விழியனிடம்,
“என்ன விழியன் இப்படிச் சொல்லிட்ட? அரசியலில் நீ இப்போ எம்புட்டு பெரிய ஆளு. உன்னைப் பார்க்க நான் என்ன இன்னும் பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் வருவாங்க.” என்றார்.
அப்பொழுது காளிதாஸ் விழியனிடம், “இவர் இங்க வந்து பத்து பதினைந்து நிமிஷம் இருக்கும். நீ இல்லன்னு தெரிஞ்சதும் இருந்து பார்த்து அவர் கூட உன்னைக் கூட்டிட்டு போக, முக்கியமா உன்கிட்ட தனியா பேசணும்னு காத்திருக்கிறார்.” என்றார்.
ஆனால் அந்த முக்கியமான விஷயம் என்ன என்று என்னிடம் சொல்லாமல் தவிர்த்துவிட்டார் என்பதைக் குறிக்கும் ஓர் ஆதங்கம் அவர் குரலில் இருந்தது.
“ஓ அப்படியா?” என்றவனிடம்,
“போலாமா விழியன்?” எனக் கேட்டார் பூபதிராஜா.
“ம்...” என்று தலையாட்டி அவருடன் காரில் கிளம்பினான்.
போகும் வழியில், “எதுவும் முக்கியமான விஷயமா? இப்போதான் கிரஹா மேடத்தோட எலக்சன் விஷயமா பேசிட்டு வந்தேன். ஆனா அவங்க எதுவும் சொல்லலையே!“ என்று யோசித்து மென்று விழுங்கி வார்த்தைகளை யோசனையுடன் வெளியிட்டான்.
“தெரியும் விழியன். நாங்க உன்கூடத் தனியா பேசணும்னு நினைக்கிறோம்.”
நினைக்கிறோம் என்று சொன்னதிலேயே ஒருவருக்கு மேற்பட்டவர்கள் எனத் தெரிந்ததும் அமைதியாகி விட்டான்.
இப்பொழுது கார் கிரஹா வீட்டிற்குப் போகாமல் வேறுபக்கம் போகவும், “எங்க சார் போறோம்?” என்றவனிடம், “எங்க தோப்பு பங்களாவிற்கு.” என்று மட்டும் சொன்னார்.
அய்யனார் கோயில் அருவிக்குப் போகும் வழியில் கார் பயணம் செய்து கொண்டிருந்தது. வழியெங்கும் தோப்புகளும் இடையிடையே பள்ளிகளும் கல்லூரிகளும் இயற்கை மருத்துவம் பார்க்கும் வைத்தியசாலைகளும் அதைச்சுற்றி விதைத்து வளர்க்கப்படும் மூலிகையின் வாசமும் கடந்து அந்தப் பெரிய கேட்டிற்குள் பயணித்தது.
தோப்பிற்குள் ஆங்காங்கே மரங்களில் கண்காணிப்பு கேமராக்களும் ஆங்காங்கே பாதுகாவலர்களும் நின்று கொண்டிருந்தனர்.
குட்டி பங்களா ஒன்று கண்ணைக் கவரும் அமைப்புடன் இருந்ததின் முன் கார் நின்றது.
அவர்களை நோக்கி வந்த இரு பாதுகாவலர்களைக் கை அசைத்து, “அப்படியே உள்ள அனுப்புங்க செக்கிங் பண்ண வேண்டாம்.” என்று குரல் கொடுத்தான் வாசன்.
அழகாக அமைந்திருந்த வராண்டாவில் போடப்பட்டிருந்த மரத்தாலான காபி டேபிளில் எதிரெதிராக அமர்ந்திருந்தனர் கிரஹாவும் வாசனும்.
“வாங்க விழியன்!” என்று கிரஹா விரிந்த சிரிப்புடன் அவனை அழைக்க, வாசன் அமைதியாகத் தலையசைவை மட்டும் கொடுத்தான்.
அந்திசாயும் நேரமாதலால் இதமான தென்றல் காற்றும் பறவைகளின் ஒலியும் அந்த இடத்தை ரம்யமாகக் காட்டியது.
விழியன் அமர்ந்ததும், “கிரஹா, டைரக்டா பேசவேண்டியதை பேசிடு.” என்று கூறினான் வாசன்.
“விழியன், நான் என் மில் காட்டேஜில் வைத்து இன்னைக்கு உங்க கூடப் பேசும்போது நீங்க சரியா எந்தப் பதிலும் சொல்லலை... அதுதான் எங்களுக்குக் கொஞ்சம் உறுத்தலா இருந்தது. எதுவென்றாலும் வெளிப்படையா பேசிடணும்னு தோனியது அதுதான் உங்களை வர வைத்தோம்.
நீங்க நினைக்கிறீங்களா? உங்க நேர்மைக்கும் நல்ல குணத்துக்கும் தான் உங்களுக்கு அம்புட்டு ஓட்டு விழுந்ததா நினைக்கிறீங்களோ? ஆனா உண்மை அது கிடையாது. நாங்க உங்க பின்னாடி இருந்து அத்தனை வேலை செய்திருக்கோம்.
அதுக்குக் காரணம் நீங்க, நாங்க சொல்வதைத் தட்டாம கேட்பீங்க என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. ஆனா இப்போ உங்களோட யோசனை, எங்க கணிப்பு தவறோ என்ற யோசனையைக் கொடுக்குது. இவ்வளவு தூரம் நாம சேர்ந்து பயணிச்சிட்டோம். இன்னும் ஒரு வாய்ப்பு உங்களுக்குக் குடுத்து பார்ப்போம் எனத் தோனுச்சு.
நான் சொன்னதுபோல அடுத்தச் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு முழுக்க இந்தக் கட்சியைக் கொண்டுபோய்ச் சேர்த்து ஒரு பெரிய தனிப்பெரும் கட்சியா வளர்த்துடுவோம். எங்களோட பணபலமும், ஆள்பலமும் அதுக்கு எங்களுக்கு வாய்ப்பு கொடுக்கும். இல்லாட்டி வாய்ப்பை நாங்களே உருவாக்குவோம்.
இப்போதும் முதலமைச்சர் வேட்பாளராக உங்களை நிறுத்தணும்னு முடிவெடுத்துருக்கோம். ஆனா நீங்க ஒரே ஒரு உறுதி மட்டும் சொல்லணும். நாங்க சொல்றதை தட்டாம நீங்க கேட்பீங்க என்ற ஒரு நிபந்தனைக்கு மட்டும் சம்மதம் சொல்லணும்.... இல்ல, அதெல்லாம் முடியாதுன்னு சொன்னா, இப்போவே நீங்க எங்களோட இந்த ஆட்டத்தில் இருந்து விலகிக்கலாம்.
உங்க நண்பர்களில் ஒருத்தரை உங்களுக்குப் பதிலா அந்த இடத்தில் எங்களால கொண்டுவர முடியும். நீங்க எனக்கெதிரா உங்க ஃப்ரெண்ட்ஸ் `கிட்ட பேசிப்பாருங்க, கண்டிப்பா பசங்க பொங்குவாங்க. உங்க பெஸ்ட் பிரண்ட் கதிர் கூட இப்போ என் பக்கம்தான்.” என்றாள்.
இது அவன் எதிர்பார்த்ததுதான். ஆனாலும் நேரில் கேட்கும்போது அவனுக்கு அத்துணை வருத்தமாக இருந்தது.
“எனக்கு ஒரு நாள் மட்டும் டைம் கொடுங்க மேடம்! நாளைக்கு என்னோட முடிவை உங்களுக்குச் சொல்லிடுவேன்.” என்றான் விழியன்.
அப்பொழுது பூபதிராஜா, “தம்பி அரசியலில் நுழைஞ்சு அதில் ஒரு பொசிசனுக்குப் போயிட்டு, பிறகு இறங்கினா வாரவன் போறவன் எல்லாம் உங்களை வச்சு செய்வான். நீங்க பொழைக்கத் தெரிஞ்ச பையன்னு நினைக்கிறேன்.” என்றார்.
அதன் பின் வேற என்னென்னமோ பேச்சுக்கள் அங்கு நிகழ்ந்தது. ஆனால் எதிலுமே விழியனின் மனம் ஒட்டவில்லை.
“அப்போ நான் கிளம்பட்டுமா?” எனப் பொதுப்படையாகக் கேட்டதும், “ஒரு நிமிஷம்.” என்ற வாசன், உட்கார்ந்தபடியே காவலுக்கு இருந்த ஒருவனை அழைத்தான்.
வந்தவனிடம், “சாரை அவர் வீட்டில் டிராப் பண்ணிட்டு வந்துரு.” என்றதும், “ஓகே பாஸ்!” என்றவன் விழியனிடம், “போகலாமா சார்?” என்று கேட்டு அவனை உடன் அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
அவனின் தெரு முக்கு வந்ததும், “நான் இங்கேயே இறங்கிக்கிறேன்.” எனச் சொல்லி இறங்கியவன் நேராக ஜோதியை பார்க்க காந்தாவின் வீட்டிற்குச் சென்றான்.
அந்த நேரம் அவனை எதிர்பார்க்காத அம்மாவும் மகளும், “வாங்க வாங்க” என்று வரவேற்றனர்.
விழியனின் முகம் சோர்ந்து கிடக்கவும், “எதுவும் பிரச்சனையாங்க?” என்று கேட்டாள் ஜோதி.
அவன் காந்தாவின் முன் வெளிப்படையாகப் பேச தயங்குவதைக் கண்டுக்கொண்ட அவர், “நீங்க பேசிட்டு இருங்க, நான் இதோ கடை வரை போயிட்டு வாரேன்.” என வெளியில் வந்தவர் இரண்டு வீடு தள்ளி வாசலில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தவர்களுடன் உட்கார்ந்து கொண்டார்.
“இப்போ சொல்லுங்க! என்ன விஷயம்? உங்க முகமே ரொம்ப டல்லா இருக்குது.” என வருத்தமுடன் கேட்ட ஜோதியிடம், “நான் தோத்துப் போயிட்டேன் ஜோதி...” என்று சொல்லி தோப்பில் நடந்த உரையாடலை அவளிடம் பகிர்ந்துக்கொண்டான்.
அதைக்கேட்ட ஜோதி, “என்னங்க கிரஹா மேடமா அப்படிப் பேசினாங்க? என்னால நம்பவே முடியலை. இப்போ என்னங்க முடிவெடுக்கப் போறீங்க?” என்று கேட்டாள்.
“ஒன்னுமே தோண மாட்டேங்குது. எனக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கி அதில் பயணம் செய்ய ஆரம்பிச்சிட்டேன்.
இனி இதில் இருந்து நான் பின் வாங்கிட்டு முதலில் இருந்து ஆரம்பிச்சு அதன் மூலமா பதவிக்கு வந்து நல்லது செய்யன்னு நான் போனா என்கூட இருப்பவங்களே என்கூட நிப்பாங்களான்ற டவுட் இப்போ எனக்கு வந்துருச்சு.
அதோட நிறைய எதிரிகளை வேற தட்டிக் கேட்கிறேன்னு சம்பாரிச்சு வச்சிருக்கேன். இனி நான் தனியா இந்தக் கூட்டத்தை விட்டு போனா என் உசுருக்கு கூட உத்தரவாதம் இல்ல.
ஆனா இவங்க கூடப் பயணிச்சா முழுசா அவங்க கட்டுபாட்டில் என்னை வச்சுக்குவாங்க. என்னை முன்வச்சு பெரிய அளவில் அவங்களோட பிஸ்னசுக்கான அரசாங்க சேவைகளை வளைச்சுப் பயன்படுத்திப் பெரிய அளவில் கொள்ளைகளில் ஈடுபடுவாங்கன்னு தோனுது.
நான் ஒதுங்கினாலும் அவங்களோட இந்தப் பிளான் எங்களின் ஒருத்தனை வச்சுத் தொடரத்தான் செய்வாங்க.
நான் விலகாம இப்போதைக்கு அவங்க சொல்றதுக்குச் சம்மதம் சொல்லிட்டு பதவிக்கு வந்தபிறகு அந்தப் பவரை வைத்து இவங்களோட போராடி நல்லது பண்ணவா...., அல்லது இப்போதே இவங்களை விட்டு விலகி புதுப்பாதையில் பயணிக்கவான்னு ரெண்டு மனசா இருக்கு..... எனக்கு முடிவெடுக்க முடியலை ஜோதி.” என்று குழம்பிப்போய்ப் பேசினான்.
அவனைத் தனது மார்போடு அணைத்துகொண்டாள் ஜோதி. “நீங்க எந்த முடிவெடுத்தாலும் நான் உங்க பக்கம் நிப்பேங்க. உங்களால் எதையும் சமாளிக்க முடியுங்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.” எனச் சொன்னாள் ஜோதி.
மக்களே,
இப்பொழுது விழியன் என்ன முடிவெடுக்க வேண்டும் என்பதை உங்களின் பொறுப்பில் விட்டுவிடுகிறேன்.
அவன் கிரஹாவுடனே பயணிக்கவா, அல்லது விலகி வந்து முதலில் இருந்து திரும்பி புதிதாய் அரசியல் களம் அமைக்கவா என்ற முடிவை வாசகர்களின் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.
***முற்றும்***
“செவ்விழியன்” (பாகம் 2) விரைவில்
நட்புடன்
தீபாஸ்
அத்தியாயம் 29
கட்சி சம்மந்தமாகப் பேசுவதாக இருந்தால் மட்டுமே வெளியில் அங்கு வராண்டாவில் வரிசையாகச் சேர் போட்டு இருக்கும் இடத்தில் அமர்ந்து பேசுவார்கள்.அப்படி இல்லாமல் வேறு மேலிடத்து ரகசியம் திட்டம் பற்றிப் பேசும் போது ஹாலில் அமர்ந்துதான் பேசுவார் அகத்தியன்.
இன்றும் ஹாலில் அதேபோலத் திட்டத்திற்கான பேச்சு வார்த்தை போய்க்கொண்டிருந்தது.
“நைனா இந்த ரெங்கா போயிட்டான்ல. நமக்காக அவன் மகனையே பலி கெடாவா தரப்போறான்ல. அதுக்குத்தான் ஒரு பத்தாயிரம் பணமும் சரக்கு பாட்டிலும் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிட்டேன்.” என்றார் அகத்தியன்.
வாசலுக்கு வந்த ரெங்கராஜின் காதில் அவ்வார்த்தைகள் விழுந்ததும் தூக்கி வாரிப்போட்டது.
மறு நிமிசமே சுதாரித்துக் கொண்டார். அந்த ஹாலில் பக்கவாட்டு ஜன்னலுக்குப் போய் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனிக்க ஆரம்பித்தார்.
அவர் இதயம் படபடவென அடிக்கத் தொடங்கியது. ஆம் அவர்கள் ஸ்ரீராமை தீர்த்துக்கட்டவும் அந்தப் பழியை விழியன் மேல் போடவும் பிளான் போட்டுக்கொண்டிருப்பதைக் கேட்டு நடுநடுங்கிப் போய்விட்டார்.
‘இனிதான் உள்ளே போய் மொபைலை எடுத்தால் விஷயத்தை நான் அறிந்து கொண்டது அவர்களுக்குத் தெரிந்துவிடும். எனவே தன்னைப் பிடித்து இங்கேயே கட்டிப்போட்டுட்டு தனது உயிரையும் எடுத்து விடுவார்கள். தனது மகனைக் காப்பாத்தியே ஆகணும்’ என நினைத்தவர் வந்த அரவம் காட்டாமல் திரும்பப் போய்த் தனது வண்டியை நடுங்கும் கையோடு எடுத்துக்கொண்டு வேகமாகத் தனது வீட்டிற்கு வந்தார்.
தனது மகனை வெளியில் எங்கும் போக வேண்டாம் எனச் சொல்லி எச்சரிக்க நினைத்து வீட்டிற்கு வந்தார்.
ஏனெனில் ஸ்ரீராமை மொபைலில் அழைத்து ஆள் அரவம் இல்லாத விழியன் தெரு இருக்கும் பக்கத்தில் ரொம்பக் காலமாய் மூடிக்கிடக்கும் ஒரு சினிமா தியேட்டருக்கு அவனை வரவைத்துக் கொலை பண்ணணும் என்று பிளான் போட்டிருந்தார்கள். அவ்விடத்துக்குத் தன் மகன் போவதற்குள் போய்த் தடுத்துவிட வேண்டும் என்று வேக வேகமாக வீட்டுற்கு வந்தார்.
வாசலில் வண்டியை சரியாகக்கூட ஸ்டாண்டு போடாமல் சுவரில் சாய்த்துவிட்டு “ஸ்ரீராம்... ஸ்ரீராம்... டேய் ஸ்ரீ...!” என்று சத்தம்போட்டு அழைத்தார்.
உள்ளே சமையல் அறையில் இருந்த அவரின் மனைவி, “என்னங்க எதுக்கு இப்படி உசுரே போறது போலக் கத்துறீங்க?” என்றபடி வந்தாள்.
“உசுரு போயிடக்கூடாதுன்னுதான் கத்துறேன். எங்கடி என் புள்ள?” என்றார்.
“என்னங்க உசுரு போகக்கூடாதுன்னு கத்துறீங்களா? யாரு உசுருக்குங்க ஆபத்து? அய்யோ அந்தப் பயல் வேற வீட்டில் இல்லையே,
இப்போ ஒரு பத்து நிமிசத்துக்கு முன்னாடிதான் ஒரு போன் வந்துச்சு அம்மா இதோ கொஞ்சம் பக்கத்துலதான் போயிட்டு வாரேன்னு போனான். என்னங்க விஷயம்?” என்று கேட்டாள்.
“என்னது போயிட்டானா? அய்யோ போச்சு போச்சு என் குடியே முழுகி போச்சு. என் புள்ளைய கொலை பண்ண கூப்பிட்டிருக்காங்கடீ...! ஐயோ அது தெரியாம இந்த மடப்பயலும் கிளம்பி போயிட்டானே... இப்போ நான் என்ன செய்ய? போலீஸ்கிட்ட போய்க் கம்ப்ளைண்டு கொடுக்ககூட நேரம் இல்லையே!” என்றவரிடம்,
“என்னது! என் மகனைக் கொலை பண்ணப்போறாங்களா? ஐயோ... ஐயோ... ஓடுங்க... இப்படி மச மசன்னு நிக்கிறீங்களே! போய் என் புள்ளைய காப்பாத்துங்க!!!” என்று பதறினார்.
ஒரு நிமிஷம் என்ன செய்யவென்று புரியாமல் விழித்தவர், ‘தான் மட்டும் தனியாகப் போனால் தன்னையும் சேர்த்து போட்டுருவாங்க. ஆட்கள் கூடப் போகணும். யாரு இப்போ நாம் இப்படின்னு சொன்னா தைரியமா வருவாங்க?’ என நினைத்த போது விழியன் என்ற விடையே அவருக்குக் கிடைத்தது. நிமிடம் கூடத் தாமதிக்காமல் அவனின் வீட்டிற்கு ஓடினார்.
“விழியா... விழியா! என் மகனை காப்பாத்து.” என்றபடியே அவனின் வீட்டிற்குள் வியர்க்க விருவிருக்க நுழைந்தார்.
அவரின் பதட்டம் கண்டவர்கள் யோசனையுடன் இவர் எதுக்கு இங்க இப்படி ஓடி வரார் என யோசித்துக் கொண்டிருந்த போது, விழியன் அவரிடம், “என்ன ஆச்சு? யாரைக் காப்பாத்தணும்?” எனக் கேட்டான்.
“என் மகனை எம்.எல்.ஏ ஆட்கள் மேல தெருவ தாண்டி இருக்கிற லீலா தியேட்டர் மூடிக்கிடக்குதுல்ல, அதில் வச்சு கொலை செய்யப்போறாங்க. உடனே போய்க் காப்பாத்தணும். எனக்கு உதவ உன்னைய விட்டா எனக்கு வேற யாரும் இல்லாய்... உடனே கிளம்பிப் போய் அவனைக் காப்பாத்தணும்பா என்னைய கை விட்டுடாத.“ என்று பதைபதைப்போடு பேசினார்.
அவர் சொன்னதைக் கேட்ட விழியன் தனது நண்பர்களில் ஒருத்தனை, “டேய் ஸ்ரீராம் மொபைலுக்குப் போன் பண்ணி அவன் எங்க இருக்கான்னு கேளு.” என்றான்.
அவன் போன் போட்டுக்கொண்டிருக்கும் போதே, “எம்.எல்.ஏ அகத்தியன் தன் மகனைக் கொன்னு அந்தப் பழியை உன்மேல போட பிளான் போட்டிருக்கான்.” என்று சொன்னார்.
விழியனின் நண்பன், “ஹலோ ஸ்ரீ எங்க இருக்க?” என்றதும்,
“என்ன விஷயம், இங்க பக்கத்துலதான் லீலா தியேட்டர் வாசலில் இருக்கேன்.” என்று ஸ்ரீ பதில் சொன்னான்.
விழியனைப் பார்த்து, “லீலா தியேட்டர் வாசலில் இருக்கானாம்” என்றதும், அவனின் கையில் இருந்த மொபைலை வேகமாகப் பறித்த ஸ்ரீராமின் அப்பா.
“ஸ்ரீ தியேட்டருக்கு உள்ள போகாத.... அப்படியே திரும்பி வா” என்று பதட்டத்தோடு சொன்னதும்,
“நீ என்னப்பா விக்கியோட போனில் இருந்து பேசுற? நம்ம எம்.எல்.ஏ சொல்லித்தான்ப்பா இங்க வந்தேன். அதோ நைனாகூட நிக்கிறார்.” என்று சொன்னான்.
“டேய் அந்த நைனா தான்டா உன்னைப் போட்டுத்தள்ள அங்க வரச்சொன்னான். அப்படியே திரும்பி ஓடி வந்துருடா.” என்று அவர் அவனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது,
விழியன், “வாங்கடா வண்டிய எடுங்க.” என்று சொல்லி எட்டு பேர் நான்கு ஸ்கூட்டரில் ஒருவர் பின்னாக ஒருவர் அந்த இடத்திற்குக் கிளம்பி போக ஆரம்பித்தனர்.
தனது தந்தையின் பதட்டமான குரலில் தியேட்டர் உள்ளே நுழைந்து சில அடி எடுத்து வைத்த ஸ்ரீராம் தேங்கி நின்றான்.
உள்ளே வந்தவன் தொடர்ந்து நடந்து வராமல் நின்றதும் இருந்த இடத்தில் இருந்தே, ‘வா’ என்று கை அசைத்தார் நைனா.
அப்பொழுதுதான் அவரையும் அவன்கூட இருந்தவர்களையும் கவனித்தான் ஸ்ரீராம்.
தடிதடியாக இரண்டு பேருடன் நைனா நின்று கொண்டிருந்ததைப் பார்த்தவனின் மூளை ஆபத்து எனச் சொல்ல வேகமாகத் திரும்பி ஓட ஆரம்பித்தான்.
அவன் திரும்பி ஓடுவான் என்பதை எதிர்பார்க்காத நைனா சுதாரித்து அருகில் நின்ற இருவரிடமும், “டேய் அவன் ஓடுறான்... ரெண்டு பேரும் ஓடிப்போய்ப் பிடிச்சு குண்டுக்கட்டா இங்க தூக்கிட்டு வாங்கடா.” என்று ஏவினான்.
வாசலுக்கு ஓடிவந்த ஸ்ரீராம் பைக்கை எடுக்க முயன்றுகொண்டே பின்னால் திரும்பிப் பார்த்தான்.
அவர்கள் தன்னைப் பிடிக்க நெருங்கி வருவதைக் கவனித்தவன் பைக் சாவியைக் கை நடுக்கத்தில் தவற விட்டதால் கீழே குனிந்து தேடி எடுக்க நினைத்தான். அதற்குள் அவர்கள் தனது அருகில் வந்து விடுவார்கள் என்ற பயத்தில் பைக்கை எடுக்காமல் ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தான்.
அவனைத் துரத்திக்கொண்டே அவர்களும் ஓடிவந்தார்கள். வழியில் இருந்த சிறு பள்ளத்தில் கால் இடறி கீழே விழுந்து முட்டி பெயர்ந்து ரத்தம் வருவதை எல்லாம் கவனிக்காமல் நொண்டியபடி ஓடியவனை அந்த ரவுடிகள் நெருங்கி எட்டிப்பிடிக்கையில், விழியன் அந்த இடத்திற்குப் பைக்கில் வந்து சேர்ந்து விட்டான்.
அவனைப் பார்த்ததும் பிடித்தவர்களின் கையைக் கடித்துத் திமிறி விலகி, “டேய்... என்னைய காப்பாதுடா விழியா!” என்று சொல்லியபடி அவனின் பின்பு பதுங்கினான்.
விழியனின் பைக்கை தொடர்ந்து மூன்று பைக்குகளில் அவர்களின் நண்பர்கள் அங்கு வந்து சேரவும், அந்த ரவுடிகள் சுதாரித்துப் பின் வாங்கி ஓட ஆரம்பித்துவிட்டார்கள்.
அவர்களைத் துரத்தி பிடிக்கப் போன நண்பர்களைப் பார்த்து, “வேணாம் வாங்கடா! பிடிச்சாலும் எதுவும் உண்மை தேறாது. அவிங்க எல்லாம் பக்கா கிரிமினல்ஸ். அதான் இவனைக் காப்பாத்தியாச்சுல்ல போலாம், வாங்க.” என்று ஸ்ரீராமையும் பைக்கில் கூட்டிக்கொண்டு தனது வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.
அவர்கள் வீட்டிற்கு வரும் முன்னே காளிதாசுக்கு விஷயம் ரெங்கராஜ் மூலம் தெரிந்திருந்தது.
பதட்டத்துடன் இருந்த ரெங்கராஜை, “கொஞ்சநேரம் பாப்போம், எதுவும் சேதி வராட்டி வா என்கூட, போலீஸ் ஸ்டேஷன் போகலாம்.” என்று கூறி இருவரும் வாசலை பார்த்தபடி இருக்க, அங்கே ஸ்ரீராமின் அம்மாவும் அடித்துப்பிடித்துக் கொண்டு வந்து சேர்ந்தார்.
“என்னங்க இங்க உட்கார்ந்திருக்கீங்க? போங்க... போய் என் மகனை காப்பாத்துங்க.” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே பைக்கில் ஸ்ரீராம் விழியனுடன் வந்து இறங்கினான்.
முட்டிபேந்து ரத்தம் வழிய, விழுந்ததால் உடையில் ஆங்காங்கே புழுதி படர்ந்து தலையெல்லாம் கலைந்த கோலத்தில் தன் மகனை கண்ட அவனின் பெற்றோர்கள் தங்களுடன் சேர்த்துப் பிடித்துக்கொண்டனர்.
விழியனோ எதுவுமே பேசாது திண்ணையில் உட்கார்ந்து கொண்டான்.
அவனின் நண்பர்கள், “இதுக்குத்தாண்டா நல்லவன்கூடச் சேரணும்னு சொல்றது.” என்று ஸ்ரீராமை பார்த்துத் திட்ட ஆரம்பிக்கவும் விழியன்,
“டேய் எல்லாரும் சும்மா இருங்கடா!” என்று ஓர் அரட்டுப்போட்டு நண்பர்களை அடக்கினான்.
ஸ்ரீராமுக்கு ஒன்று மட்டும் தெரிந்தது. தான் நம்பிய எம்.எல்.ஏ தன்னைக் கொலை செய்ய ஆள் அனுப்பியிருக்கார் என்ற விஷயம் மட்டுமே அவனுக்குத் தெரிந்தது.
விழியனையும், கதிரையும் அகத்தியன் லாரியால் அடிச்சுப்போட தான் ஹெல் பண்ணியது தெரிந்தும் அதை எல்லாம் வினையமாக மனதில் கொள்ளாமல் தன்னைக் காப்பாற்ற ஓடிவந்த விழியனின் தன்மைக்கு முன் தான் அற்பமாகப்பட்டது.
எனவே, “விழியா என்னை மன்னிச்சிருடா.” என்றபடி அவனிடம் வந்தான்.
அவன் மட்டுமல்ல அவனின் அப்பா ரெங்கராஜனும், “தம்பி இத்தனை வருஷம் அந்த எம்.எல்.ஏவுக்காக மாடா உழைச்சிருக்கேன். ஆனால் அதையெல்லாம் பெருசா எடுக்காம அவரோட அரசியல் ஆட்டத்துக்கு என் குடும்பத்தின் கருவறுக்க ஆள் அனுப்பிட்டான் அந்த அகத்தியன்.
கெட்டவன்கூடச் சேர்ந்தா கெட்டதுதான் நமக்கு நடக்கும்னு புரிஞ்சுக்கிட்டேன் தம்பி. என் மகனை மன்னிச்சிடுங்க தம்பி.
அவன் உயிரோட இப்போ இங்க நிக்கிறான்னா அதுக்குக் காரணம் நீங்கதான் இந்த உதவியை ஏழு தலைமுறைக்கும் மறக்க மாட்டோம் தம்பி.” என்றார்.
கதிரும் ரெஸ்ட் எடுக்க அவனுடைய வீட்டிற்குப் போய் இருந்தவன், விஷயம் அறிந்து அங்கு வந்து சேர்ந்திருந்தான்.
கதிரிடம், “டேய் கதிர் என்னை மன்னிச்சிருடா! விழியனை என்னை மன்னிக்கச் சொல்லுடா. ஏதோ காசு பணத்துக்கு ஆசைப்பட்டுத் தப்பான இடத்துக்குப் போய்ப் பட்டு திருந்திட்டேன்.” என்றான் ஸ்ரீராம்.
விழியனோ, “சரி சரி விடு, போய் உன் காலை பாரு!” என்று ரத்தம் வடிந்து நொண்டிக் கொண்டிருந்தவனிடம் சொன்னான்.
கதிர், விழியனிடம் கோபமாக, “டேய் இவனையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் நான் மன்னிக்க மாட்டேன், அவன் காலை பார்க்கணுமாம்ல,
இன்னைக்குக் காலையில்தான் என்னை நொண்டின்னு சொன்னான். அதுக்குத்தான் ஆண்டவன் இப்போ அவனை நொண்ட வச்சிட்டான்.” என்றான்.
கதிரின் கோபம் நியாயமானதுதான். அதனால் அவனைச் சமாதானப்படுத்தும் நோக்குடன் விழியன், “விடுடா விடுடா உசுருக்கு பயந்து ஓடி வந்துருக்கான். இப்போ அவன் செஞ்ச தப்புப் புரிஞ்சிருக்கும். நீ இன்னைக்கே அவனை மன்னிக்க வேணாம். நாளைக்கு மன்னிச்சுக்கோ.” என்று சூழலை இயல்பாக்க அவ்வாறு பேசினான்.
நடந்து முடிந்த நிகழ்ச்சிக்குப் பின், ஸ்ரீராம் ரொம்பவே மாறியிருந்தான். வீடு உண்டு, விழியனின் அருகாமை உண்டு என்று இருந்தான். ஏனோ அதன் பின் பயத்தின் காரணமாக அவன் எங்குமே தனியாகப் போகப் பயந்தான்.
ஆனால் விழியன் என்ன சொன்னாலும் அதைத் தட்டாமல் கேட்கும் தன்மை உள்ளவனாக மாறியிருந்தான். அவன் நண்பனாக இல்லாமல் தனக்கு ஒரு சேவகன் போல் இருப்பதைக் கண்ட விழியனுக்குத்தான் அலுப்பாக இருந்தது.
இதற்கிடையில் நண்பர்கள் மூவரும் சேர்ந்து ஆன்லைனிலேயே மொத்தமாகக் கேட்டரிங் ஆர்டர் எடுத்து டோர் டெலிவரி செய்ய என்று ஆரம்பித்து அதில் காந்தாவின் மேற்பார்வையில் சமையலுக்கு என்று ஒரு டீமை உருவாக்கி விட்டான் விழியன்.
எனவே கையில் கொஞ்சம் காசு புழங்க ஆரம்பித்ததால் தனியாக ஆபீஸ் போட்டு நண்பர்களுடன் கட்சி பணிகள் பற்றிப் பேச திட்டமிட என்று வாடகைக்கு ஒரு வீட்டைத் தேடிக்கொண்டிருந்தான். ஜோதியுடன் வாழ்க்கையைத் துவங்க நினைத்தான். மனைவி என்று ஆனபின் தள்ளி நிற்க அவனால் முடியவில்லை.
***
அத்தியாயம் 28
அகத்தியன் அவனது கட்சித் தலைமை குழுவுடன் அமர்ந்திருந்தான். அவனின் ஆட்கள் வாசன்தான் கிராஹாவின் பக்கம் இருப்பவன் எனத் தெரிந்து கொண்டார்கள். வாசனின் மேல் அகத்தியனின் ஆட்கள் கை வைத்ததைப் பெரிய விஷயமாகக் கருதி அவனையும் பெரிய ஆளாகப் பாவித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.
அகத்தியனைப் பார்த்து, “எப்படியா சூறாவளி காத்துப்போல இருக்குற வாசன் மேலேயே கை வைச்ச? நீ பெரிய ஆள்தான். அவன் கிட்ட போகவே இந்தியாவில இருக்கிற பெரிய பெரிய ஆட்களே பயப்படுவாங்க. அத்தனை பெரிய கைகளும் அவனது கண்ட்ரோல்ல தான் இருப்பாங்க. நீ என்னென்னா சாதாரணமா உன் ஆட்கள் அவனைக் குத்திட்டாங்கன்னு சொல்ற...? அதுக்குப் பிறகும் உன்னைய அவன் விட்டு வச்சிருக்கான் என்றால் நீ பெரிய அப்பாடக்கருதான். இப்போ அவன் எப்படி இருக்கான்? பொழச்சுக்கிட்டானா? எங்க இருக்கான் அப்படின்ற விஷயம் எதுவும் தெரியுமா உமக்கு?” என விசாரித்தார்கள்.
அவர்கள் பேசுவதை வைத்தே ஊருக்குள்ள வந்துருக்கிறவன் சாதாரண ஆள் இல்லை என்ற விஷயம் அகத்தியனுக்குத் தெரிந்தது. ஒருவகையில் எல்லோரும் தன்னைப் பெரிய அப்பாடக்கருன்னு சொல்வதைக் கேட்டு அவனுக்குச் சந்தோசமாக இருந்தது. ‘அப்போ நம்மளோட சேப்ட்டரையும் அவன் முடிச்சிருவானோ?’ என்ற பயமும் மனதில் உண்டானது.
அதேபோல ஹாஸ்பிடலில் இருந்து வாசன் கிளம்பும்போது டெல்லி பக்கம் ஒரு டீம், கிரஹா வீட்டுப்பக்கம் இன்னொரு டீமுமாக இரண்டு டீமாகப் பிரிந்து கார்கள் பயணம் ஆனது. ஹாஸ்பிடலை உற்றுக் கவனிப்போருக்கு கூட வாசன் எந்தப் பக்கம் போனான் இந்தப் பக்கமா, அந்தப் பக்கமா? என்று கண்டுக்கொள்ள முடியாதது போலவே அந்த ஏற்பாடு இருந்தது.
எனவே அவன் எங்கு இருக்கிறான்? எப்படி இருக்கிறான்? என்று கேட்டதற்குச் சரியான விடையை அகத்தியனால் கண்டுகொள்ள முடியவில்லை.
“தெரியலையே தலைவரே! ஆம்புலன்ஸ் ஊரை விட்டு வெளியில ஹைவேயில போனதுன்னு ஒருத்தர் சொல்றாங்க. இல்ல, கிரஹா மில்லுக்குப் பின்னாடி இருக்கிற பங்களாவுக்குத் தான் அவன் போயிருக்கான்னு சிலர் சொல்றாங்க. போனதுக்குப் பிறகு பசங்களை வச்சு நோட்டம் பாக்க சொல்றேன் தலைவரே.” என்றான்.
அப்பொழுது அந்த டீமில் உள்ளவர்களில் உள்ள அயோக்கிய அறிவு ஜீவியில் ஒருத்தன், “தலைவரே! இவரால எல்லாம் வாசனை எங்கயிருக்கான்னு கண்டுபிடிக்க முடியாது. காக்கா உட்கார பனம்பழம் விழுந்ததுன்ற கதையா. இவர் யாருக்கோ வைத்த குறியில் அந்த வாசன், அவனாவே வேணும்னு வந்து தலையைக் குடுத்துருக்கிறான்.” என்று விஷயத்தை நேராகப் பார்த்தது போலச் சொன்னவர், இன்னும் ஒன்றையும் சொன்னார்.
“அந்த வாசன் ஒருத்தருக்கு பின்னாடி நின்னு ஒரு வேலை பார்க்குறான்னா அதுக்கு ஆயிரம் காரணம் இருக்கும்.... நல்லா கவனிச்சு பாருங்க, அகத்தியனை எதிர்த்து நிக்கிறவன் ரொம்பச் சாதாரணமானவன். மிஞ்சி மிஞ்சி போனா அவன் குடும்பத்து ஓட்டும் எந்தக் கட்சிக்கும் ஓட்டு போட ஆசைபடாத நோட்டோவுக்கு விழுகிற சில வாக்குகளும் வேணா அவனுக்கு விழும். நம்ம அகத்தியன்தான் இந்தத் தடவை அங்க ஜெயிப்பான்னு நினைச்சோம். நாம நினச்சது போல ஜெயிக்கத்தான் செஞ்சார்..... ஆனா, அகத்தியனா அந்த விழியனான்ற இழுபறியிலேயே போய்க் கடைசியில் சொற்ப ஓட்டு வித்தியாசத்திலேயே நம்ம ஆளு ஜெயிச்சுருக்கார்.
ஊருக்குள்ள நல்லா விசாரிச்சுப் பார்த்தா பெரிய பெரிய புள்ளி எல்லாம் திடீர்னு களத்தில் இறங்கி அந்த விழியனுக்கு வேலை செஞ்சிருக்காங்க. இது எல்லாம் அந்த வாசனோட வேலைதான். நாம கவனமா இருக்க வேண்டிய நேரம், நாம அலார்ட்டா புத்திசாலித்தனமா இருந்தாத்தான் நம்மளை பீட் பண்ணி இன்னொருத்தன் வளராம செய்ய முடியும்.” என்றார்.
அதற்கு அவர்களது தலைவர், “எப்பா எல்லோரும் அந்த வாசனை பத்தி சொல்லி பயமுறுத்த பார்க்குறீங்களே தவிர, இதுக்கு ஒரு தீர்வு யாரும் சொல்ல மாட்றீங்க...! சரி விடுங்க நானே ஒரு தீர்வு சொல்றேன். அந்த வாசனையோ அவன் பாதுகாப்பில் இருக்கிற அந்தக் கிரஹாவையோ நெருங்குறது ஈசியான காரியம் இல்லை. ஆனா அந்த விழியன். அவனை வச்சு நாம கேம் தொடங்கலாம்.” என்றார்.
“அப்போ தலைவரே, அவனை முடிக்கச் சொல்றீங்களா?” என்றதும்,
“டேய் கேன, அவன் கதையை முடிச்சா அப்புறம் அவன் மகான் ஆகிடுவான் போட்டோவில். அதைக் காரணம் காட்டி நாம தான் அதைச் செய்தோம்னு பேசி பேசியே அனுதாப ஓட்டு அந்த விழியனோட அண்ணனுக்கோ தம்பிக்கோ வாங்கி விழியனோட இடத்தில் இன்னொருத்தனை வர வச்சிடுவாங்க.....
இதுக்குத் தீர்வு, நம்மளோட சைடு உள்ளவனை நாம போடணும். அதை அவன் செய்ததுபோலக் காட்டணும். அதுக்கு விழியனை ஜெயிலில் புடிச்சு போடணும். இப்போதுதான் அந்தக் கட்சி துளிர்க்க ஆரம்பிச்சிருக்கு. வேர் ஆழமா ஊன்றதுக்குள்ள பிடிங்குவது ஈசி. மக்கள் ஒரு சந்தேகத்தையும் நம்பிக்கையும் ஒரே நேரத்தில் அந்தக் கட்சி மேல வச்சிருப்பாங்க. ஒரு சின்ன அசமந்தம் போதும் அவங்களை மக்கள் அயோக்கியன்னு முத்திரை குத்தி காணாம போக வைக்க.
இப்போ சொல்லு அகத்தியன். நம்ம பக்கம் அதாவது உன் ஊரில் உன் பக்கம் நிக்கிற, ஆனா விழியனோட எதிரின்னு எல்லோருக்கும் தெரிஞ்ச யாராவது ஒருத்தன் இருக்கானான்னு யோசிச்சு சொல்லு. அவனைப் போட்டு தள்ளிட்டு அந்தப் பழியை அந்த விழியன் மேல போட்டுடலாம்.” என்றான்.
அவர் அவ்வாறு சொல்லவும், “இருக்கான் தலைவரே! அவனோட பிரண்டு, பேரு ஸ்ரீராம். இப்போ என்கிட்டதான் இருக்கான். அவனும் இவனும் பப்ளிக்கா முட்டிகிட்டாங்க ஆஸ்பத்திரியில் கூட. பணத்துக்கு ஆசைபட்டு அந்த ஸ்ரீராம் நம்ம பக்கம் இப்போ நிக்கிறான். அவனை வேணா முடிச்சுடலாம். நீங்க சொல்றது போலச் செய்துட்டு வாரேன்.” என்று சொல்லி எழுந்தான் அகத்தியன்.
இச்சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிவிட்டது. தேர்தல் முடிந்து இப்பொழுதுதான் மறுபடி பதவி ஏற்றிருக்கிறோம் சில நாட்கள் போகட்டும். மக்கள் இந்தத் தேர்தல் அலப்பறைகளை எல்லாம் மறந்து நார்மல் வாழ்க்கைக்குத் தயார் ஆகட்டும் எனக் காத்துக்கிடந்தான். நாட்கள் உருண்டு ஓடின. வாசனும் எழுந்து நடமாடும் அளவு உடல் தேறியிருந்தான்.
கதிர் கூட ஆக்சிடெண்டில் உண்டான பாதிப்புகளுக்குச் செய்த அறுவை சிகிச்சையின் ரணங்கள் எல்லாம் ஆறி ஊன்றுகோல் உதவி இல்லாமல் நடக்கப் பழகி கொண்டிருந்தான்.
அதேபோல விழியனும், ஜோதியும் இன்னும் கலந்து வாழவில்லையாயினும் அவர்களுக்குள் காதல், ஊடல், அதற்கான சமாதானம் என்ற பேரில் சின்னச் சின்னத் தேடல்கள் எல்லாம் கொஞ்சம் அத்துமீறியே போய்க்கொண்டிருந்தது.
அவளின் உடைகள் கூட விழியனின் ஓட்டுவீட்டில் ஒரு பச்சைநிற ஸ்டீல் பீரோ காந்தாவால் கொண்டுவரப்பட்டு அதில் குடியேறி இருந்தது. இரவு படுக்கைக்கு மட்டும் ஜோதிக்கு அவள் வீட்டில் விழியனுக்கு அவனின் பூர்வீக வெ௩எடு என்று இருந்தது.. ஆனால் காலையில் எழுந்ததும் இங்கு வந்து குளித்து வாசல் தெளித்துக் கோலமிட்டு, டீ முதல்கொண்டு விழியனுக்குப் போட்டு கொடுத்து காலை, மதியம் உணவுகளைச் சமைத்து வைத்து விடுவாள்.
விழியன் போடும் உடைகளை அவன் கண்ட இடத்தில் கழற்றிப் போட்டு வைத்திருப்பதைக் கண்டு, “இப்படியா வீட்டை குப்பை போலப் போடுவீங்க?” என்று திட்டியபடி எடுத்துக்கொண்டுபோய் லான்ட்ரி பேக்கில் போடுவது முதற்கொண்டு அவளே பார்த்துக்கொள்வாள்.
அவனின் துணிமணிகளை மட்டும் விழியனே குளிக்கும்போது துவைத்துவிடுவான். ஜோதி அவனின் உடுப்புகளைத் துவைகிறேனென எடுத்தால் தடுத்து விடுவான் அவனே தனது உடைகளைத் துவைத்துக்கொள்வான்.
மேலும் அடுப்பாங்கரையில் அவள் சமைத்துக் கொண்டிருக்கும்போது மற்ற வேலைகளை எல்லாம் புறம் தள்ளிவிட்டு அவளுடனேயே இருக்க முயல்வான். அந்த நேரம் அவளையே சுற்றி சுற்றி வருவான். சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம் அவளைக் கொஞ்சி சிவக்க வைப்பான்.
இன்றுமே அவள் தோசை வார்க்கும் போது பின்னால் அவளை நெருங்கி நின்று, “ஜோதி அதென்ன வட்டமாத்தான் தோசை சுடணுமா? இப்போ பாரு! நான் டிசைன் டிசைனா எப்படிச் சுடணும்னு உனக்குக் கத்துத்தரேன்.” என்று அவள் கரண்டி பிடித்திருக்கும் கையின் மேல் கைவைத்து அழிச்சாட்டியம் செய்து கொண்டிருக்கும்போது,
வெளியில் சலசலவென்று குழப்பத்திற்கான ஆரவாரமும், அதைத் தொடர்ந்து காளிதாஸ், “விழியா இங்கவா! தெரு முக்கில் கதிருக்கும், ஸ்ரீராமுக்கும் இடையில் வாக்குவாதம் நடக்குது. கதிர் இப்போதான் கொஞ்சம் தேறி வந்திருக்கான். அடிதடியாகி காலில் பட்ட இடத்திலேயே பட்டுடப்போகுது. நீ போய் என்னெனு பாரு...” என்று சொல்லியபடி உள் நுழைந்தார்.
அவர் பேச ஆரம்பித்ததுமே அவளை விட்டு விலகி வந்துவிட்டவன் அவர் சொல்லி முடித்ததும், “இதோ போறேன் தாத்தா.” உள்பனியனுடன் இருந்தவன் மேற்சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டே தெரு முக்குக்குச் சென்றான்.
கதிர் தெருவுக்குள்ளேயே ஸ்டிக் இல்லாமல் சிறிது நடைபயிற்சி செய்து கொண்டிருந்த போது எதிர்திசையில் வந்த ஸ்ரீராம் அவன் கூட வந்தவனிடம், “இவனுங்களுக்கு எல்லாம் ஒரு தடவை கால ஒடைச்சும் அறிவு வரலை. எலெக்சனில் தோத்து மூக்கு அறுபட்டதுக்குப் பிறகாவது திருந்தியிருக்கணும். பொழைக்கத்தெரியாத கூமுட்டைங்க.” என்று சத்தமாக அவன் காதில் விழுமாறு சொன்னான்.
அவனைப் பார்த்ததும் வெறுப்பாய் முகம் திருப்பிக்கொண்ட கதிர் காதில் விழுந்த வாக்கியத்தில் கோபமானான். எனவே, “ஏலேய் யாரைப்பார்த்து கூமுட்டைன்னு சொன்ன? காசு சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு. ஒரு அயோக்கிய பயலின் காலைக் கழுவி அந்த அசுத்தத்தில் துட்டு சம்பாதிக்கிறவன் தானே நீயி!” என்றான்.
“எடு செருப்ப, நொண்டி பயலுக்குத் துட்டு சம்பாதிக்க வக்கில்லாத பொறாமையில் வாய்க்கு வந்ததெல்லாம் உளறுனா கொன்னுடுவேன்.” என்று சொன்னதும்,
“யாரை பார்த்து நொண்டிப்பயல்ன்னு சொன்ன? சினேகித துரோகி!” என்று கதிர் பதிலுக்குப் பேச, வார்த்தைகள் இருபுறமும் தடிக்க ஆரம்பித்தது.
ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள முயல அங்கிருப்பவர்கள் இடையில் புகுந்து அடித்துக் கொள்ளவிடாமல் தடுத்துக்கொண்டிருந்த வேளை அங்கு வந்த விழியன், “டேய் கதிர்!” என்று ஒரு சத்தம் போட்டான்.
அவனைப் பார்த்த கதிர், “பாருடா அவனை, சும்மா போறவனை வம்பிழுத்தது அவன்தான். அவன் பேசுறதை நான் கேட்டுகிட்டு கம்முன்னு இருக்கணுமா?” என்றான்.
விழியன் ஸ்ரீராமிடம், “உனக்கு இப்போ என்ன பிரச்சனை? அதுதான் உன் வழி வேற எங்க வழி வேறன்னு ஆகிடுச்சுல்ல. எதுக்குக் குறுக்க வர? ஒழுங்கா ஓடிப்போயிடு!” என்றான்.
ஸ்ரீராம் கோபத்துடன் விழியனை, “புதுசா ஒரு கொடியை புடிச்சு நாலுபேரு உன்னைத் தூக்கி வச்சு பேசுனா நீ பெரிய தலைவனா? நீ என்னைப் பார்த்து போயிடுன்னு மிரட்டுனா நான் போயிடணுமோ? அதான் தேர்தலில் மண்ணைக் கவ்விட்டீங்கல்ல. இன்னும் அடங்க மாட்டீங்களா நீங்க?” என்றான்.
“டேய் நான் எதுக்குடா அடங்கணும்? நியாயத்துக்குக் குரல் கொடுக்கக் கூடியிருக்கோம். பார்த்தேல்ல முதல் முறை தேர்தலில் நிக்கிற என்கூட இத்தனை வருஷம் பதிவியில இருந்த உங்க தலைவன் இழுபறியில் தான் ஜெயித்தான். நல்லவங்க பக்கம் நிக்காம நீயெல்லாம் ச்செய்... கூட ஒன்னாவே பழகி வளர்ந்தவங்களோட உசுர எடுக்க அவனுங்க கூடச் சேர்ந்து நின்னவன்தானே நீ?” என்றதும்,
அவன் சொன்ன உண்மையில் அத்தனை பேர் முன்னாடி தான் அசிங்கப்படுவது போல் ஆனதால் கோபத்தில் அவனின் மேல் பாய்ந்தான்.
ஒற்றைக் கையில் அவனைத் தடுத்து கையை முறுக்கி, “நீ என்ன பெரிய ரவுடியா, கை எல்லாம் ஓங்குற? கொன்னே போட்டுருவேன்” என்று மிரட்டும் போது ஸ்ரீராமின் அம்மா தனது மகன்கூட விழியனும் கதிரும் சண்டை போடுறாங்க என்று அறிந்து ஆத்திரத்துடன் அங்கு வந்தவள், “அடியாத்தி! விடு என் பையனை, டேய், விழியா... யார் மேல கை வைக்கிற, என் மவன் மேலயா? கேக்க ஆள் இல்லைன்னு நினைச்சியா? அவன் அப்பனுக்குத் தெரிஞ்சா உன்னை வகுந்து போட்டுருவார் வகுந்து.” என்று சொல்லிக் குறுக்கே வந்தார்.
“இந்தாங்கம்மா உங்க மகன கூப்பிட்டுகிட்டு போங்க. பேசிக்கிட்டே அவன் கை வைக்கப் பார்ப்பான் நாங்க கம்முன்னு இருக்கணுமோ? வீட்டுக்கு கூட்டிட்டுப் போய்த் தொட்டிலில் போட்டு ரோராட்டுங்க.” என்று சொல்லிவிட்டு,
“கதிரு வா! காலங்கார்த்தால ஏழரைகூடப் போய்!” என்று சொல்லிக்கொண்டே அவனைக் கூட்டிக்கொண்டு தனது வீட்டிற்குக் கிளம்பினான்.
ஸ்ரீராமின் அப்பா ரெங்கராஜன் எம்.எல்.ஏ விடம், “தலைவரே இன்னைக்குத் தெருக்குள்ள அந்த விழியனுக்கும், என் பையனுக்கும் தகராறு ஆகிடுச்சு. என் பொண்டாட்டி போய் அந்த விழியனை கிழிகிழின்னு கிழிச்சிட்டா!” என்று பெருமையாகச் சொன்னார்.
அவர் சொன்னதும் அகத்தியன் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம். தான் எதிர்பார்த்து இருந்த நேரம் வந்துடுச்சு என்ற குஷி. ‘விழியனுக்கும் ரெங்கா மகனுக்கும் தெருக்குள்ள சண்டை நடந்துருக்கு, இந்த நேரம் அந்த ஸ்ரீராமை போட்டுத் தள்ளிட்டோம் என்றால் அந்தப் பழியை ஈசியா அந்த விழியன் மேல போட்டிடலாம்.
அவனைக் கொலை கேசுல ஜெயிலுக்குள்ள போட்டுட்டா, அவனை வச்சு ஆட்டம் போட்டிட்டுயிருக்க அந்தக் கிரஹாவோட கொட்டம் அடங்கிடும். பின்னாடி இருந்து அந்த விழியனுக்கு எல்லாத்துக்கும் ஹெல் பண்றவள் அவள்தான்.
செய்யப்போற கொலையில் அவளே நேரடியா சம்பந்தப்படுத்திச் சந்தேகக் கேசில் இணைக்க முடியாட்டியும் அவள்தான் இந்தக் கொலைக்கு மூளையாகச் செயல்பட்டது, அப்படின்ற ஒரு புரளியை கிளப்பி விட்டுடலாம்’ என மனதிற்குள் கணக்கு போட்டார்.
எனவே, “ரெங்கா. கேக்க குளுகுளுன்னு இருக்கு. இந்தா பத்தாயிரம்.” என்றவர் மேஜையின் கீழ் இருந்த இழுவையைத் திறந்து அதில் இருந்து ஒரு மது பாட்டிலையும் எடுத்து ரெங்காவிடம் கொடுத்து, “ஜமாய்!” என்றார் அகத்தியன்.
“இது போல அந்த விழியனுக்குத் தொடர்ந்த இடைஞ்சல் கொடுத்துக்கிட்டே இரு. இன்னைக்கு உனக்கு லீவு வீட்டுக்கு போய் என்ஜாய் பண்ணு.” என்று அனுப்பினார்.
காரணம் ரெங்கராஜை வைத்துக்கொண்டே அவரின் மகனின் ஜோலியை முடிப்பதை பற்றிப் பேச முடியாதல்லவா. தலைவர் தனக்குப் பணமும் குடிக்கப் பாட்டிலும் கொடுத்து வீட்டுக்குப் போகச் சொன்னதால் சந்தோசம் அடைந்தவர், “அப்படியே செஞ்சுடுறேன் தலைவரே!” என்று சொன்னபடி எழுந்தவர், பாட்டிலை தனது சட்டையைத் தூக்கி இடுப்பில் கட்டியிருந்த வேட்டியின் மேல் முடிச்சை அவிழ்த்து அதில் பாட்டிலை வைத்து சுருட்டி செருகிக்கொண்டார்.
“இனி பாருங்க, தலைவரே டெய்லி அவனுக்கு ஏழரைதான்.” என்று சொல்லிவிட்டு, “அப்போ நான் வாரேன் தலைவரே.” என்று வாசலுக்கு வந்தார்.
வந்தவர் அங்கு நிப்பாட்டியிருந்த தன்னுடைய டி.வி.எஸ் பிப்டியை எடுக்கும் போதுதான் தனது பட்டன் போனை உள்ளேயே விட்டுவிட்டு வந்தது நினைவு வந்தது.
எனவே அதை எடுக்கத் திரும்ப நடைபாதையில் நடந்து பில்டிங்கை அடைந்தார்.
அத்தியாயம் 27
இதற்கிடையில் போலீஸ் ஸ்டேஷனில் கிரஹாவை கொலை செய்ய முயற்சி செய்த அந்த நபர் எம்.எல்.ஏ அகத்தியனின் ஆள் என்று தெரிந்தாலும் எதுவும் செய்ய முடியவில்லை. ஏனெனில் அவன் பூபதிராஜாவின் மில்லில் கிரஹாவின் மேனேஜ்மென்டில் வேலை செய்த முன்னாள் தொழிலாளி என்று ஆதாரத்துடன் சொன்னான்.
மேலும் தொழிலாளி முதலாளி மனக்கசப்பினாலேயே அவளை, தான் கொலை செய்ய முயற்சி செய்ததாகச் சொல்லிவிட்டதால் அந்தக் கேசில் எம்.எல்.ஏ அகத்தியன் மாட்டாமல் தப்பித்து விட்டான். அந்த அக்யூஸ்டின் வாக்குமூலத்தை அப்படியே போலீஸ் ஏற்றுக்கொண்டதற்கு அகத்தியனின் எம்.எல்.ஏ பதவி காரணமாகியது.
அகத்தியனுக்குத் தான் மாட்டாவிட்டாலும் அவன் எய்த அம்புகள் எதுவும் சரியாகக் கிரஹாவை தாக்காமல் விட்டது அவரின் ஆத்திரத்தை அதிகரித்தது. எனவே கட்சி மேலிடத்தில் தங்கள் கட்சிக்கு எதிராகப் புதுக்கட்சி ஒன்று உருவாக ஆரம்பித்திருப்பதையும், அதை முளையிலேயே கிள்ளி எடுக்கவும் முறையிட்டான்.
ஆனால் இவன் அங்குப் பேசுவதற்கு முன்பே கட்சி மேலிடம் இங்கு நிகழும் நிகழ்வுகளை மோப்பம் பிடித்திருந்தது. மேலும் விழியன், கிரஹா, பூபதிராஜா எல்லாம் அவர்களுக்குப் பெரிய விசயமாகப் படவில்லை. ஆனால் திடீரென்று இடையில் புகுந்த வாசனை பார்த்துத்தான் பயந்தார்கள். அவனாக இருக்குமோ என்ற குழப்பமும் பீதியும் அவர்களுக்குள் உண்டாகியிருந்தது. எல்லோரும் ஒன்று போலக் கூறியது அவன் வலிமை உள்ள டேஞ்சரான பார்ட்டி எனப் பேசப்பட்டது.
இதற்கிடையில் சாப்பிட்டுவிட்டு கிரஹாவுடன் ஹாஸ்பிடலுக்கு வாசனை டிஸ்சார்ஜ் செய்து அழைத்துக் கொண்டு வர பூபதிராஜாவும் ஹாஸ்பிட்டலுக்குச் சென்றிருந்தார்கள்.
வாசனை ஆம்புலன்சில் கூப்பிட்டுக்கொண்டு வீட்டிற்கு வருகையில், அவர்களின் பயணம் மிகவும் பாதுகாப்பாகவும் உள்ளே துப்பாக்கி ஏந்திய பயிற்சி பெற்ற குண்டர்கள் சாதாரண உடுப்பில் நார்மலாக இருப்பது போலத் தோற்றத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர்.
ஆம்புலன்சில் வீட்டிற்கு வந்ததும் வாசனுடனான கலந்துரையாடலில் விழியன் பெயரே பெரிதும் அடிபட்டது. அப்பொழுது கிரஹாவிடம், “எதுக்குக் காலங்கார்த்தால அந்த விழியன் இங்க வந்தான்?” எனக் கேட்டான் வாசன்.
விழியன் வந்த விஷயம் அங்கு அவளுக்குப் பாதுகாப்புக்கு இருந்த ஆட்கள் மூலம் மருத்துவமனையில் இருந்த அவனுக்குச் செய்தி பகிரப்பட்டிருந்தது.
”நான் தான் வரச்சொன்னேன். நம்ம விஷயம் பத்தி நான் அண்ணன் கூடத் தனியா பேசி கன்வெனியன்ஸ் பண்ண முடியாதுன்னு அவனை எனக்குச் சப்போர்ட்டுக்கு அண்ணன்கிட்ட பேச வர சொல்லியிருந்தேன்” என்றாள் கிரஹா.
“ஆஹான். அவன் என்ன அம்புட்டு பெரிய அப்பாடக்கரான ஆளா? உன் இடத்தில் உனக்காக அவன் பேசும் அளவுக்கு எல்லாம் அவன் பெரிய ஆளு இல்லயே! உன் அண்ணனும் நானும் சேர்ந்து நிறைய முடிவெடுத்திருக்கிறோம், வருகிற உள்ளாட்சித் தேர்தலில் நாம கட்டாயம் ஜெயிக்கிறோம். நாம நில்லுன்னா அந்த விழியன் நிக்கணும், உட்காருன்னு சொன்னா உட்காரணும். அந்த அளவு அவனை டிரைன் பண்ண வேண்டியது நீ தான் கிரஹா. கட்சி பேர் சொன்னதும் தமிழ்நாட்டில் இருக்கிற மக்களுக்கு நாமதான் அந்தக் கட்சியோட மேலிடம்ன்னு தெரியிறது போல வளரும் வரை அவன் தலைமையில் இருக்கிறது போல ஒரு மாயையை உருவாக்கி வைக்கணும்.
கட்சியை ஆள் செல்வாக்கு, பணச்செல்வாக்கு இதையெல்லாம் யூஸ் பண்ணி எப்படியும் அடுத்தச் சட்டமன்ற தேர்தல் வரும் இன்னும் ஐந்து ஆண்டுக்குள்ள தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைத்த ஒரு தலைமையின் கீழ கட்சி செயல்பாடு இருக்கிறது போலச் செய்திடணும். அடுத்த எலெக்சனில் முதலமைச்சர் வேட்பாளராக விழியன் இருக்கட்டும். ஆனால் கட்சியின் தலைவியா கிரஹா தான் இருக்கணும். உன்னை வச்சுத்தான் நானும் என்னோட அடையாளத்தை விட்டு வெளியில் வர முடியும்.” என்றான் வாசன்.
***
நேற்று இரவே காந்தா வீட்டில் இருந்து வந்த விழியன் காளிதாசிடம், “நாளைக்கு மேல்தொட்டி அமைத்துத் தண்ணீர் சப்ளைக்கு ஏற்பாடு செய்யணும் தாத்தா. ஜோதி இங்க வாரா.
அன்னைக்கு ஒருநாள் நம்ம வீட்டுல கீழ இருக்கிற பாத்ரூமில் நான் குளிக்கப் போயிருந்தப்ப ஜோதி பப்ளிக் டாய்லெட் அடைச்சு கிடந்ததால் கஷ்டபட்டத்தைப் பத்தி அவங்க வீட்டில பேசுறதை கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன்.
அதனாலத்தான் எலெக்சனுக்கு முன்ன நான் ஹோட்டல் லீஸ்க்கு எடுக்கும் விஷயமா அகத்தியனை பார்க்க போனபோது தண்ணி வசதி செய்யச் சொன்னேன். அதனால இனி அவளை வெளிய எங்கயும் போக வேணாம்ன்னு சொல்ல நினைச்சேன். அப்பவே அம்மாகிட்ட அந்தப் புள்ளைய நம்ம வீட்டுப் பாத்ரூமை யூஸ் பண்ணிக்கச் சொல்லுங்கம்மான்னு சொன்னேன். ஆனா அம்மா அதுக்குச் சம்மதிக்கலை.” எனவும் சொன்னான்.
அவரும் விழியன் ஜோதிக்காக யோசித்து “அவ புழங்க, இங்க வசதி செய்யணும் தாத்தா!” எனச் சொல்லியதால் அதற்கான வேலையில் இறங்கி விட்டார்.
விழியனின் கையிருப்பு பற்றியும் அவனது தேவை குறித்தும் உணர்ந்தவர், தானாகவே தன்னுடைய செலவில் பிளம்பிங் வேலை செய்வதற்கு ஆனவற்றை விழியனின் நண்பர்களை வைத்து ஏற்பாடு செய்து வேலை ஆரம்பிக்கப்பட்டது.
ஜோதியை விழியனுக்கு அவர் முன்னின்று கல்யாணம் செய்து வைத்ததால், இதுவரை எந்தச் சூழலிலும் அவரிடம் முகம் திருப்பிப் பேசாத அவரின் மருமகள் வாணி இப்பொழுது முகம் கொடுத்துப் பேசுவதை நிறுத்தி விட்டார்.
எனவே அவருக்கு அங்குச் சாப்பிட கொள்ளக் கஷ்டமாக இருந்தது. எனவே காந்தா கொண்டு வரும் சாப்பாட்டையே அவரும் இங்கேயே சாப்பிட ஆரம்பித்திருந்தார்.
மேலும் ஒற்றைப் பொம்பளை காந்தாவின் உழைப்பில் இரு ஆண்கள் எதுவும் கொடுக்காமல் உட்கார்ந்து சாப்பிடுவது உறுத்தலாக இருந்தது. கல்யாணத்திற்கு முன்பு வரை காசுக்கு எடுப்புச் சாப்பாடு என்றிருந்ததை அதன்பின் காந்தா ஏற்றுக்கொள்ளவில்லை.
எனவே அவருக்கு, ‘இங்கு ஜோதி வந்துவிட்டால் வீட்டிலேயே சமைத்துக் கொடுப்பாள். நான் சாமான் வாங்கிப்போட்டு சின்னஞ்சிறுசுக குடும்பம் நடத்த உதவியா இருக்கலாம். அப்படி இருப்பதால உரிமையா நாமளும் உறுத்தல் இல்லாது இங்கன சாப்பிட வழி பிறக்கும்.’ என்று எண்ணினார். எனவே ஆசையாக ஜோதி இங்குத் தனது பேரன்கூட வந்து குடும்பம் நடத்த தேவையான காரியங்களை மேற்கொண்டார்.
ஜோதியைக் கூப்பிட்டு விட்டவர், “எங்கெங்கு குழாய் போடணும். சமையல் செய்ய என்னென்ன வேணுமென லிஸ்ட் போட்டுக்கொடு.” எனப் பேசிக்கொண்டிருந்தார்.
ஜோதி, காளிதாஸ் கூப்பிட்டுவிட்டதாகச் சொல்லவும் அவருக்கும் விழியனுக்கும் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு விழியனைப் பார்க்க ஆவலுடன் வந்தவளுக்கு, அவன் இல்லை எனத் தெரிந்ததும் ஏமாற்றமாகவே இருந்தது.
ஆனால் தான் திருமண வாழ்க்கையைத் தொடங்க அந்த வீட்டை தயார்ப்படுத்தும் வேலையில் தன்னுடைய கருத்து கேட்கப்பட்டதால் உற்சாகம் அடைந்தாள். அவளை அறியாமல் அது தன்னுடைய வீடு என்ற எண்ணம் அவளுக்குள் உருவாக ஆரம்பித்தது. அவ்வேளையில் காரில் வந்து இறங்கிய விழியனை பார்த்தவளின் கண் விழி காதலால் அகண்டது. அவளின் ஆர்வமான பார்வையை எதிர்கொண்ட விழியனின் பசர்வை ரசனையாக அவளின் மீது படிந்தது,
தாத்தாவின் விழியா என்ற அழைப்பில் கவனம் அவரின் மீது திருப்பினான். “எங்க போன?” என்றவரின் கேள்விக்குப் பதில் சொல்லவேண்டிய இடத்தில் நின்றான்.
விழியன், கிரஹா வீட்டில் இருந்து கிளம்புவதற்கு முன் அங்கு நடந்த உரையாடல்கள் மற்றும் வாசன், கிரஹா பற்றிய உண்மைகளும்... அவர்கள் இருவரும் இணைந்து வாழ்வது பற்றி மூவரை தாண்டி யாருக்கும் தெரியப்படுத்தக்கூடாது என அவனிடம் உறுதி கேட்டு வாங்கியிருந்தார்கள்.
எனவே அவர்களிடம் கட்சி விஷயம் பற்றிப் பேசப் போயிருந்ததாகச் சொல்லிச் சமாளித்தான். கிரஹாவுடன் பேசி வந்ததில் கிடைத்த தகவலில் எதுவோ ஒன்று முரணாக இருப்பதாகவே விழியனுக்குத் தோன்றியது.
ஆனால் அது எதுவென்று அவனால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. வாசனின் தன்மை தெரிந்ததில் இருந்து, ‘அவனுடனான சகவாசம் நான் நினைத்திருப்பதுபோல மக்கள் பணிக்கு சரிப்பட்டு வருமா?’ என்ற எண்ணம் எழுந்தது.
ஆனால் அவனின் சக தோழர்கள் விழியன் அங்குப் போய் வந்ததைக் கேட்டதும் அத்துணை ஆரவாரம் செய்தார்கள். அவனிடம், “விழியன், வீட்டிலும் அதேபோலத்தான் பாதுகாப்பு ஏற்பாட்டோடு இருந்தாங்களா? எம்புட்டு பெரிய ஆட்கள் சப்போர்ட்டு நமக்கு இருக்குது. இனி அடுத்த எலெக்சன்ல பாரேன் பெரிய அளவு ஓட்டு வாங்கி ஜெயித்துடலாம். எல்லாத்துக்கும் காரணம் கிரஹா மேடம்தான்டா.... அவங்களோட ஹெல்ப் இல்லாட்டி நாம கொஞ்சநாளில் இவ்வளவு ஓட்டு வாங்குவதுபோலப் பெரிய ஆளா வந்திருக்க முடியாது...” என்று கிரஹாவின் புராணமே பாடப்பட்டது.
மேலும் வாசனின் தன்மையும் அங்குப் பெரிய அளவில் பிரமிப்பாகக் கடை விரிக்கப்பட்டது. அவர்கள் அவ்வாறு பேசுவதைக் கண்டவன், ‘இவர்களிடம் போய் எனக்கு அவர்களிடம் ஏதோ முரணாகத் தெரியுதுன்னு எப்படிச் சொல்ல?’ என்று யோசித்தான்... தான் சொன்னால் கிரஹாவுக்கு அவர்கள் சப்போர்ட் செய்து போர்க்கொடி தூக்கும் நிலை வரும் எனப் புரிந்து கொண்டான்.
எனவே மன அழுத்தம் ஏற்பட்டது. அதில் இருந்து இப்போதைக்குத் தப்பிக்கக் கவனத்தை மற்றதில் செலுத்த நினைத்தான்.
தான் வந்ததும் நண்பர்கள் தன்னைச் சூழ்ந்ததால், தனது அருகில் வந்து பேச முடியாது ஓரமாகத் தனித்து அமர்ந்துகொண்டு தன்னையே ரசனையுடன் பார்த்துக்கொண்டிருந்த ஜோதியின் புறம் அவனின் கவனம் திரும்பியது.
தனது தாத்தா காளிதாஸ் பிளம்பிங் வேலைக்குச் சாமான் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்த பில்களை அவளின் அருகில் அமர்ந்து விரித்து வைத்து, தான் கொடுத்த பணத்துக்கும் மீதம் பணத்துக்கும் கணக்கு எழுதுகிறேன் என்று நோட்டை சீரியஸாகச் சரிபார்த்துக் கொண்டிருந்தார்.
அவர்களிடம் வந்தவன், “ஒய் ஜேம்ஸ்பாண்டு. என்ன நான் வரதுக்குள்ள வேலையைப் பசங்களை வச்சு ஆரம்பிச்சாச்சு போல...! ஆமா நீங்க சாப்டாச்சா? நான் போன இடத்தில் சாப்டாம வீட்டில் சாப்பிடணும்னு பசியோட வந்துட்டேன்.” என்றான்.
அவனைப் பார்த்து, “என் பேரன் என்ன முன்னாடி போல வெட்டிப்பயலா? கட்சிப்பொறுப்பு நிறைய இருக்கும். அவன்தான் பெரிய தலைவர் ஆகிட்டாருல்ல. இனி வீட்டுல வேளா வேளைக்கும் சாப்பாட்டுக்கு வாருவான்னு எதிர்பார்த்து நான் உட்கார்ந்திருக்க முடியுமா? அதுதான் நான் உனக்கு முன்னாடியே ஒரு கட்டு கட்டிட்டேன்.” என்றவர்,
“எம்மா ஜோதி அவனுக்கு உங்க அம்மா செஞ்சு கொடுத்த அந்தக் குடல் குழம்போட இட்லியை பரிமாறு. பயலுக்கு இப்படி டேஸ்ட்டா சாப்பிட்டா நாக்கு தடிச்சு போயிடும். போடா போய்ச் சாப்பிடு, நான் கணக்கு பார்க்கணும்.” என இருவரையும் விரட்டினார்.
விழியனின் வீட்டில் எந்நேரமும் அவனின் நான்கு ஐந்து நண்பர்களுடன் காளிதாஸை பார்க்க வருபவர்கள் என்று ஆண்கள் கூட்டமாகவே இருந்தனர். அது கொஞ்சம் ஜோதியை சங்கடப்பட வைத்தாலும், ‘அவரின் கட்சி வேலை பொது வேலைக்கு அப்படித்தான் இருப்பாங்க’ என்று மனதோடு பேசிக்கொண்டாள்.
வந்ததும் தன்னைச் சைட்டர்டித்த கணவனின் பார்வை இப்போது இல்லை என்று கண்டுகொண்டாள். அதே நேரம் கிரஹா பற்றிய யோசனையுடன் இருந்தவன் அவளின் முகத்தில், சிந்தனை ரேகை ஓடுவதைக் கண்டான்
பிளம்பிங் வேலைக்கு அடுப்படிக்குள் பைப் கனெக்சன் கொடுக்க வேலை செய்து கொண்டிருந்தவரை ஒதுங்கிக்கிடச் சொல்லி கை கழுவிவிட்டுக் கட்டிலில் உட்காரும்போது அவளிடம், “என் பொண்டாட்டிக்கு என்ன யோசனை?” என்று சன்னமான குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொல்லிக்கொண்டே அமர்ந்தான்.
“இல்ல, நான் வாழவரும் இடத்தில எந்நேரமும் ஆம்பளைங்க கூட்டமாவே இருக்கே...! எப்படிப் பிரைவசியா இருக்க வழி கண்டுபிடிக்கன்னு யோசிக்கிறேன்.” என்றாள்.
அவளின் சங்கடத்தை அவளின் வார்த்தையில் புரிந்து கொண்டான். இருந்தும் அதைக் குறையாக எடுத்துக் கொள்ளாமல், இதில் இருந்துகொண்டே சமாளிக்க என்ன செய்யன்னு தானே யோசிக்கிறா.... என்ற திருப்தியும் உண்டானது.
எனவே, “இங்க ஒரு ரூம் மட்டும்தானே இருக்கு. ஆபீஸ் வேற இடத்தில் போட்டா இங்க ரொம்ப ஆட்கள் வராம சமாளிச்சிடலாம். கொஞ்ச நாள் பொறுத்துக்கோ ஜோதி. நீயும் படிப்பு முடிக்கணும் நானும் கொஞ்சம் செட்டில் ஆகணும். அதுக்குப் பிறகு நாம லைப்பை ஸ்டார்ட் பண்ணுவோம் ஜோதி?
அதுவரை நீ இங்கயும் உன் அம்மா வீட்டிலேயும் சூழலுக்குத் தக்க மாறி மாறி இருந்துக்கிறயா? சாரி ஜோதி! உன்னோட முடிவுதான் ஃபைனல். ஆனா சூழல் என்னைய அப்படிக் கேக்க வைச்சிடுச்சு.
அதுக்காக எனக்கு உன் மேல விருப்பம் இல்லைன்னு மட்டும் நினைச்சிடாத. நேத்து உன்னைப் பார்த்துட்டு வந்தபிறகு உன் உருவம் என் கண்ணை விட்டு மறையலை. அந்த அளவு கொஞ்ச நாளிலேயே நீ எனக்குள்ள அழுத்தமா பதிஞ்சு போயிட்ட.” என்றான்.
அவனின் வார்த்தைகளில் உள்ள நிதர்சனமும் உண்மைத்தன்மையும் அவளுக்குப் புரிந்தது. அத்தோடு தான் அவன் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டதாக அவன் கூறியதிலே பெண்ணவள் பூரித்துப்போனாள்.
எனவே, “இதுக்குப் போய் ஏன் இம்புட்டு வருத்தப்படுறீங்க? நீங்க கல்யாணத்துக்குப் பிளான் பண்ணி எல்லாம் ரெடி பண்ணியா நம்ம கல்யாணம் நடந்துச்சு! எனக்கு உங்கமேல நிறைய நம்பிக்கை இருக்கு. சீக்கிரம் எல்லாத்திலேயும் செட்டில் ஆகிடுவீங்க. அதுவரை நான் காத்துகிட்டு இருப்பேன்.” என்றாள்.
அவள் அவ்வாறு சொன்னதும், “ஜோதி, ஒருவேளை நான் நினைச்சது போல நடக்காம போனா. நான் செட்டில் ஆகாம தோத்துப்போனா?” என்றவனிடம்,
“நான் சம்பாதிச்சு என் புருஷனை ராஜாவாட்டம் காப்பாத்துவேன். காசு, பணம் இல்லாம வாழ்க்கையைச் சந்தோசமா எப்படி வாழணும்ன்ற ரகசியம் எனக்குத் தெரியும்.” என்று ஹஸ்கி குரலில் காதல் ததும்பச் சொன்னாள்.
அவளின் பதிலில் கண்களில் காதல் மின்ன, “ஆண்டிபட்டி கனவா காத்து ஆள தூக்குதே அக்காமக என்ன தாக்குதே ஒரு வெள்ளைக்காரி காசு தீந்தா வெறுத்து ஓடிபோவா, இவ வெள்ளரிக்கா வித்துக் கூட வீடு காத்து வாழ்வா.” எனக் கண்ணடித்துப் பாடினான்.
இருவரும் மனம்விட்டுப் பேசிக்கொண்டே சாப்பாட்டை முடித்ததும் விழியன் பிளம்பிங் வேலை பார்ப்பவனுடன் என்னென்ன எவ்வாறு செய்ய என்று சொல்வதில் பிஸியாகி போனாலும், அவனின் கண்கள் தன்னவளுடன் கதை பேசிக்கொண்டே இருந்தது.
மதிய சமையலுக்கு ஒத்தாசைக்குத் தனது அம்மா வரச்சொன்னதால் வேறு வழியில்லாமல் அங்கிருந்து கண்களால் விழியனிடம் விடைபெற்றுக்கொண்டு வீடு நோக்கி நடந்தவளின் மனதினை முழுமையாகக் கொள்ளையடித்திருந்தான் விழியன். அதே போல விழியன் மனதிலும் அவள் முழுவதுமாக நிறைந்துவிட்டாள்.
***
அத்தியாயம் 26
“ம்... காதலிச்சோம்…. அப்போ நான் காலேஜ்ல படிச்சிக்கிட்டு இருந்தேன். திலீப்பனின் அப்பாவும் வாசனும் ஸ்கூலில் ஒன்னா படிச்சு வளர்ந்தவங்க. திலீபனின் அப்பாவுக்கு என் மேல் காதல் இருந்திருக்கு. ஆனால் அவர் அதை என்கிட்ட காமிச்சதில்லை.
என்னோட ஃப்ரெண்டு வசந்தியும் வாசனும் கூடப் பிறந்தவங்க. அவள் என் வீட்டிற்கு வருவா, நான் அவள் வீட்டுக்கு போவேன். அதேபோலத் திலீபனின் அப்பா என்னுடைய ஒன்னுவிட்ட மாமா மகன், வீட்டில ஏதாவது விசேஷம் என்றால் வருவார்.
வாசன் அப்போ ரொம்ப ஸ்டைலா ஆக்டிவா இருப்பார். நான் வசந்தி வீட்டுக்கு போறதுக்கு மறைமுகமான காரணம் வாசன்தான். இரண்டுபேரும் கண்களாலேயே பேசிக்குவோம். ஆனா வாய் வார்த்தையில் ஒருத்தருக்கு ஒருத்தர் காதலை சொல்லிக்கலை.
ஒருநாள் நான், வசந்தி வீட்டுக்குப் போய்க் காரில் இருந்து இறங்கினேன் அப்போ திலீபனின் அப்பாவும் வாசன் வீட்டுக்கு வந்து வாசலில் ஃப்ரெண்டுக்காகக் காத்துக்கிட்டிருந்தார்.
என்னைப் பார்த்து ஆச்சர்யத்துடன் “கிரஹா, நீ எங்க இங்க?” ன்னு கேட்டதான், ‘நான் வசந்தியோட பிரண்டு... அவளைப் பார்க்க வந்தேன்’னு சொன்னேன். நான் வாசனோட ஃப்ரெண்டு’ அப்படின்னு அவர் சொல்லிகிட்டு இருக்கும் போது வாசனும் உள்ளிருந்து வந்தார்.
நாங்க இரண்டுபேரும் பேசிக்கிட்டு இருந்தததைப் பார்த்த வாசனுக்குப் பொறாமை வந்தது. நான் தீபனின் அப்பா கூடப் பேசுறது பிடிக்கலை. அத வாசனின் கண்களிலேயே நான் அப்போ பார்த்தேன். வாசனுடைய ரியாக்ஷனை திலீபனின் அப்பாவும் கவனித்திருக்கிறார். எங்களுக்கு இடையில் காதல் இருக்குதுனு உணர்ந்தும் கொண்டார்.
சமூகத்தில் பெயர் சொல்லக்கூடிய பெரிய குடும்பத்தின் வாரிசுதான் வாசன். எங்களது காதல் கைகூடும் சாத்தியக்கூறும் இருந்தது.
தீபன், வாசன் நட்பு வட்டத்துக்குள் இருந்த இன்னொருத்தன் டேவிட் அவனோட பேக்ரவுண்ட் மோசமானது.
டேவிட் வீட்டில் அவன்தான் முதல் பட்டதாரி. வாசனுக்குச் சாகசம் பண்றது, திரில்லான விஷயங்கள் செய்வதில் ஈடுபாடு அதிகம். டேவிட்டோட ஃப்ரெப்ன்ஷிப் வாசனின் சாகசத்துக்குத் தீனி போட்டது. எனவே இருவருக்குமான நட்பு வளர்ந்தது.
டேவிட் மூலம் படகு சவாரி செய்யவும், துறைமுகத்தில் உள்ள ஆட்களோட பழக்கம் செய்து கப்பலுக்குள் சென்று வருவதும், காட்டுக்குள் சாகச பயணம் போவதுன்னு இருந்தார்.
அன்டர்கிரவுண்டில் கஞ்சா சப்ளை தொழில் செய்யும் டேவிட்டின் அப்பாவுடைய நண்பர்களுடன் காட்டுக்குள் திரில் பயணம் செய்வதில் இணைந்தவனுக்கு அவங்க கூடவும் ஃப்ரெண்ஷிப் ஏற்பட்டுச்சு...
இதை அரசல் புரசலாக அறிந்திருந்த திலீபனின் அப்பா மறுநாள் நண்பர்களுக்குள் பகிர்ந்திருந்த போட்டோஸ்களை எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் காட்டி, ‘வாசன் ஸ்மக்லிங் குரூப்போடு தொடர்பில் இருப்பவன் அவங்க வீட்டுக்கு போகாதே.’ எனச் சொன்னார்.
போலீசால் தேடப்படும் முக்கிய ஒரு குற்றவாளியுடன் வாசன் சிநேகமாகப் பேசி சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோவை ஆதாரமாகக் காட்டியதும் நான் அப்போ சின்னவள்தானே, பயந்துட்டேன்.
நான் கடைசி வருட படிப்பில் இருந்ததால் திலீபனோட அப்பா அவங்க வீட்டில் பேசி என் வீட்டில் என்னைப் பெண் பார்க்கும் வைபவமும் கல்யாண தேதியும் முடிவாகியது.
முன்பு எல்லாம் தூரத்தில் இருந்தே கண்களால் பேசும் வாசன், நான் அவனைக் கண்டு பயந்து ஒளிய ஆரம்பித்ததும், என்னிடம் காரணம் தெரிந்து கொள்ள, அவரோட காதலை எனக்குச் சொல்லிப் புரியவைக்க, நான் போகும் இடம் எல்லாம் தொடர்ந்து வர ஆரம்பிச்சார்..
அந்த நேரம்தான் கல்யாண ஏற்பாடு நடந்தது. கடைசியில் அவனோட தங்கையையே தூது அனுப்பி ஒரு தடவை மட்டும் என்னை அவன் கூடப் பேசச்சொல்லி சொன்னதும், அதுக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்க அவனின் தங்கை முன்பு என்றால் பேச ரெடி எனச் சொன்னதால் ஒரு ரெஸ்டாரெண்டில் மூணுபேரும் கூடினோம்.
எனக்கு வாசனை ஏன் அவனைப் பார்க்க பயமாக இருக்கு என்ற விஷயத்தைக் கூறி, போட்டோவில் நான் பார்த்தவைகள் எல்லாம் சொன்னேன்.
அதைகேட்ட வாசன் ஒரு திரில்லுக்குத்தான் அவங்ககூடப் பேசுறேன் மத்தபடி நான் தப்பானவன் இல்லை எனச் சொன்னதை நான் நம்பாமல் கிளம்பி வீட்டுக்கு வந்துட்டேன்.
என்னாலும் வாசனை மறக்க முடியல, என் மனது அவனை விட்டு டைவர்டாக வீட்டில் கல்யாணம் பேசியதும் சம்மதிச்சுட்டேன். எனக்குக் கல்யாணம்னு தெரிந்ததும் ஒருநாள் என் வீட்டிற்கே வந்தான் வாசன்.
எல்லோர் முன்னாடியும் என்னைக் கூப்பிட்டு அன்னைக்குத் தங்கையின் முன் நாங்கள் இருவரும் பேசிய பேச்சை அவள் தங்கை வீடுவரை கொண்டு போனதால் வீட்டில் அவனுக்குப் பிரச்சனைக் குடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.
எல்லாம் உன்னால்தான் இருந்தாலும் என்னால் உன்னை மறக்க முடியல. என்கூட இப்போவே வந்துரு, நான் எல்லாத்தையும் விட்டுட்டு உன் கூட நல்லபடி கல்யாணம் செய்து நல்லா பார்த்துக்கிறேனு சொன்னார்..
நான் அவன் கூடப் போகவா வேண்டமா என்ற குழப்பத்தில் நிற்க, என் வீட்டில் உள்ளவங்க வீடு தேடி வந்து என் வீட்டுப் பெண்ணையே நீ மிரட்டுறியா என்று அவனை அடித்து வெளியே இழுத்துட்டுப் போக ஆரம்பித்தாங்க.
அப்போதான் அவன் சத்தமா என் காதில் விழுகுமாறு ஒன்றைச் சொன்னான். கிரஹா இந்த நிமிஷம் வரை நான் ஒரு அட்வேஞ்சர் டிரிப்புக்காக்காகத்தான் அவங்க கூடப் பழகினேன்.
நான் எந்த ஸ்மக்லிங்கிலேயும் இதுவரை இறங்கியது இல்லை. நீ மட்டும் எனக்குக் கிடைக்காம போனா, நான் உண்மையிலேயே அந்தக் கூட்டத்தில் ஒருத்தனா சேர்ந்துடுவேன். என்னோட வாழ்க்கை எப்படி ஆகணும்னு நீதான் முடிவு பண்ணனும்னு கத்தியது இன்னும் என் காதில ஒலிக்குது.
அதுக்குப் பிறகு நான் இரண்டு மனதோடு சுத்திகிட்டு இருந்தேன். கல்யாண வேலையும் அதற்கான நாளும் நெருங்கிக்கொண்டிருந்தது.
அந்தச் சூழலுக்குப் பின்னாடி என் வீட்டில் வாசனுக்குப் பயந்து என்னைத் தனியாக எங்கும் அனுப்பலை. எனக்கு எப்பவுமே ஒரு பாதுகாப்பு வளையம் இருக்குமாரு பார்த்துக்கிட்டாங்க. இப்படித்தான் நான் திலீபனின் அப்பாவை கல்யாணம் செய்தேன்.
ஆனால் கல்யாணத்திற்குப் பிறகு இருவருக்குள்ளும் மனதிற்குள் ஒரு நெருடல். ஏனோ மனம் ஒட்டி, என்னால் திலீபன் அப்பாவோட வாழவும் முடியலை, அவரை ஒதுக்கவும் முடியலை.
நான் ரொம்ப ஒட்டாம இருந்ததால் அவரும் என் மேல் அடிக்கடி கோபப்படுவார். இப்படிப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையும் பாதியில் முடிஞ்சு திலீபன் மட்டும் அந்த வாழ்க்கையின் அடையாளமாக என் கையில் மிஞ்சினான்.
இதற்கிடையில் ஒரு தடவை வசந்தியை நான் ஷாப்பிங் மாலில் பார்த்தேன். அப்போ அவள், என் மேல பயங்கரக் கோபத்தில இருந்தாள்....
என்னால்தான் அவள் அண்ணன் வீட்டை விட்டு வெளியில் போய் விட்டான்ற கோபம். நீ மட்டும் அவன் காதலை ஏற்றுக்கொண்டிருந்தால் இப்போ அவனும் நல்லபடி மத்தவங்க போலக் குடும்பம் குட்டி, நல்ல வேலைன்னு வாழ்ந்திருப்பான். உன்னால என் அண்ணன் அந்தக் கூட்டத்தோடு போய்ச் சேர்ந்துட்டான். எனச் சொன்னது அடிக்கடி என்னை உறுத்தும். நான் வாசனுக்குச் செய்த துரோகத்துக்குத் தான் தனிமரமா நிக்கிறேன்னு தோனும்.
இதோ இப்போகூட, எனக்காக அவர் உயிரையே கொடுக்கத் துணிஞ்சிருக்கார். அப்போ இருந்து இப்போ வரை அவரோட பார்வை நான் எங்கு இருக்கேன், எப்படி இருக்கேன், எனக்கு எதுவும் பிரச்சனை என்றால் மறைமுகமா உதவி கொண்டே இருந்திருக்கிறார்.
அந்த விஷயமெல்லாம் தெரிஞ்ச பிறகுதான் நான், இனி அவர் கூட வாழணும்னு முடிவெடுத்தேன்.
இப்போ சொல்லுங்க விழியன், இது தான் என் முடிவு. இதுக்கு என் அண்ணனை நான் சம்மதிக்க வைக்கணும். ஆனால் என் அண்ணன், என்னை அவர் கூட வீட்டுக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்தினா என்னால அவர்கிட்ட ஸ்டப்பன்னா இருக்க முடியாது.
என் அண்ணன்கிட்ட என் மனநிலையை எடுத்துச் சொல்லி எனக்காகப் பேசணும். அவரை என் முடிவுக்குச் சம்மதம் சொல்ல வைக்கணும்.
நான் கைம்பெண்ணாவே கடைசி வரை இருக்கணுமா? என்று பேசணும். அவர் என்னைத் தனிமரமா இருக்கச் சொல்லலை. நான்தான் மறு கல்யாணம் வேணாம்னு நின்னேன். ஏன்னா என் வீட்டில் வாசனை அப்போதும் எனக்குத் துணையா பார்க்கலை. ஏன்னா வாசன் எங்க வீட்டில் உள்ளவங்க பார்வையில் கெட்டவன்.
ஆனால் இப்போதும் வாசன் கெட்டவன்னு சொல்லி என் அண்ணன் தடுக்காம இருக்கணும் என்றால் கொஞ்சம் கடுமையாத்தான் பேசணும். எங்க இரண்டு பேரோட மன அமைதிக்கு இதை விட வேற நல்ல வழி தெரியலை.” என்றாள்.
அப்போது பூபதிராஜா அங்கு வந்து சேர்ந்தார். ஆனால் கிரஹா நினைத்ததுபோல அவரின் பேச்சு இல்லை.
“வாங்கண்ணே!” என்ற கிரஹாவை பார்த்து தலை அசைத்தவர், மரியாதைக்காக எழுந்து நின்ற விழியனை, அவர் உட்கார் என்று சைகை காட்டிக்கொண்டே, “விழியன் நீ எப்போப்பா இங்க வந்த?” என்று கேட்டதும்,
“இப்போதான் வந்தேன் முதலாளி, ஒரு ஒருமணி நேரம் இருக்கும்.” எனச் சொன்னான்.
“ம்...” என்று புன்னகையுடன் கேட்டுக்கொண்டவர் கிரஹாவிடம், “நான் இங்க வருவதுக்கு முன்ன ஹாஸ்பிடல் போய் வாசனை பார்த்துட்டுத்தான் வாரேன். வாசன் சொன்னார் அவரை நீதான் பார்த்துக்கிட போறதா... இனி அவர் கூடத்தான் நீ இருக்கப்போறதா.... இரண்டு பேரும் சேர்ந்து முடிவெடுத்துருக்கிறதா சொன்னார்.
கல்யாணத்துக்கு முன்னாடியே நீ எடுத்திருக்க வேண்டிய முடிவு ரொம்ப லேட்டா இப்போ எடுத்திருக்க. ஆனா இதற்கு இடைப்பட்ட காலத்தில் ரெண்டு பேரோட வாழ்க்கையும் திசைமாறிப் போயிடுச்சு.
இப்போ நீங்க ரெண்டுபேரும் சேர்ந்து இருக்கணும்னு எடுத்த முடிவோட சாதகபாதகம் யோசிச்சுப் பார்த்தேன். இதில் பாதிக்கபடப் போறது திலீபனா இருக்கக்கூடாது. திலீபன் கூட வாசன் ஏற்கனவே உன்னோட பாதுகாவலர் டீம் ஹெட் என்ற முறையில் அறிமுகமாகி இருக்கிறான். நீங்க ரெண்டுபேரும் இணைவதை அவன் அப்ஜெக்ட் பண்ண மாட்டான். ஏன்னா அவன் உன்னோட வளர்ப்பு.
என்கிட்ட ஏற்கனவே ரெண்டு தடவை அம்மாவுக்கு ஏன் மாமா நீங்க இன்னொரு கல்யாணம் செய்யாம விட்டீங்கனு கேட்டிருக்கான். அதனால கட்டாயம் இந்த முடிவை ஏத்துக்க முடியும். ஆனா என்னோட கவலை என்னென்னா அவனுக்கு இந்தச் சூழல் வேணாம்.
வாசன் உலகம் வேற, அந்த உலகத்துகிட்ட திலீபன் போகக் கூடாது. அவனை மேற்படிப்புக்கு லண்டனுக்கு அனுப்ப ஏற்பாடு நான் செய்திடுறேன். பார்க்கணும்னு தோனினா நீ போய்ப் பார்த்துட்டு வந்துடு. அதுதான் நல்லது.” என்றார்.
தனது அண்ணன் பேசப்பேச கிரஹாவின் கன்னத்தில் அவளது கண்ணீர் துளிகள் வழிந்து உருண்டன. கிரஹா அவள் அண்ணனிடம், “இப்பவும் நான் உன்னைத் தப்பாவே புரிஞ்சுக்கிட்டேன். நீ சம்மதிக்க மாட்ட, கோபப்படுவ. ஒரு கருப்பு பக்கத்துக்குள் இருப்பவன் கூட, கைகோர்த்து வாழப்போற. வெளியில் தெரிஞ்சா குடும்பத்துக்கு எவ்வளவு அவமானம்னு அண்ணி சொல்வாங்க. அதில் உண்மையும் இருக்கு. அதனால நீ குழம்புவ அப்படியெல்லாம் யோசிச்சேன். ஆனா நீ.... என் ஆசை, என் விருப்பம் அதையே முன்ன வச்சு பார்க்குற.... உன்னைப் போல அண்ணன் கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கணும்.” என்றாள்.
அப்பொழுது விழியனும், “கிரேட் சார் நீங்க, உங்க தங்கச்சியை நல்லா புரிஞ்சு அவங்களுக்கு எது விருப்பம்னு தெரிஞ்சு அவங்க நினைச்சதை செய்யப் பக்கத்துணையா நிக்கிறத பார்க்க, அம்புட்டு கவிதையா இருக்குது.” என்றான்.
“அண்ணே நேரா ஏர்போட்டில் இருந்து வந்துருக்க, வா வா சாப்பாடு எடுத்து வைக்கிறேன். உள்ள போய் ரெப்ரஷ் ஆகிட்டு வா! நம்ம மூனு பேரும் சேர்ந்து சாப்பிட்டு ஹாஸ்பிடல் போலாம். இன்னைக்கு அவரை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்துடுவேன். டாக்டர்ஸ் இப்போ வேணாம்னுதான் சொன்னாங்க. ஆனா இவரோட டீம்ல இரு எம்.பி.பி.எஸ் இருக்கிறார். அவர் வந்து டாக்டர்ட்ட பேசி அவரோட அன்டர்டேக்கன்ல கூட்டிட்டுப் போகச் சம்மதிச்சிட்டாங்க.” என்றாள்.
“மேடம் இன்னொரு நாள் நான் வந்து சாப்பிட்டுக்கிறேனே, ஒரு முக்கியமான வேலை இருக்கு.” எனச் சொல்லி விழியன் எழுந்து கொண்டான்.
அவன் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே இரண்டுதடவை அவனுக்குப் போனில் அழைப்பு வந்திருந்தது எனவே, “முக்கியமான வேலைன்னு சொல்றதால இன்னைக்கு உங்களை விடுறேன் விழியன். அடுத்தத் தடவை நீங்க வரும்போது நாம எல்லோரும் சேர்ந்து கட்டாயம் சாப்பிடணும்.” எனச் சொல்லி கிரஹா விடை கொடுத்தாள்.
பூபதிராஜாவோ, “எதில் வந்தீங்க தம்பி?” எனக் கேட்டதும், “ஆட்டோவில் வந்தேன் முதலாளி.” என்றான்.
“இருப்பா...” என்றவர் வெளியில் தனது காரில் இருந்த டிரைவருக்குப் போன் செய்து, “கார் எடுத்து ரெடியா வை. விழியன் தம்பி வருவாரு, அவரைக் கூட்டிட்டு போய் வீட்டில் டிராப் பண்ணிடு.” எனச் சொன்னார்.
“எதுக்கு அதெல்லாம்? நான் வாசலுக்கு வெளிய போய் ஆட்டோ பிடிச்சு போயிருவேன்.” என்றவனிடம்,
“எப்பா விழியா! நீ முன்னாடி போல இப்போ கிடையாது. நீ தனியா ஆட்டோவில் வந்ததே ரிஸ்க்தான். இப்போ தேர்தலில் ஓட்டு ஓரளவு வாங்கி ஜெயிக்காட்டிலும் மக்கள்கிட்ட செல்வாக்கு உள்ளவனா ஆகிட்ட.
அதனால கண்ணுக்கு தெரியாத எதிரிகளோட பார்வை உன் மேல இருக்கும். வெளியில இங்க கொஞ்சம் ஆள் நடமாட்டம் கம்மியா இருக்கும். இனி இதுபோல எந்த முன்னேற்பாடும் இல்லாம தனியா வராத” என்றார்.
அவர் அவ்வாறு சொல்லவும் அதற்கு மேல் மறுத்துப்பேச முடியாமல் விழியனும் அவர் சொன்னது போலவே அவர் காரில் செல்ல சம்மதித்து விடைபெற்றான்.
அத்தியாயம் 25
ஜோதி வீட்டில் கக்கூஸ் வசதி இல்லாமல் அவள் கஷ்டப்பட்டதை மனதில் வைத்துப் பேசியதை காந்தா அக்கா வேறுவிதமாக எண்ணி தன்னையும் ஜோதியையும் சேர்த்து ஒரே இடத்தில் தங்க வைக்க முடிவெடுத்துட்டாங்க’
அவர் அவ்வாறு சொல்லும் போது வேண்டாம் என்று மறுத்து கூற முடியாமல் ஒரு மார்க்கமாகத் தலை ஆட்டிவிட்டு சாப்பிட்டுவிட்டு ஓடி வந்துவிட்டான்.
எல்லா விஷயத்திலும் ரொம்பத் தெளிவாகச் சரியாக முடிவெடுக்கும் தான், பெண்கள் விஷயத்தில் மட்டும் முடிவெடுக்கத் தெரியாமல் தத்தியா இருக்கிறோமே என்ற எண்ணம் உண்டானது.
‘ஜோதியை இங்குக் கொண்டுவந்து விடவேண்டாம் என்று எப்படி நான் சொல்ல...?
ஆக்சிடெண்ட்டில் குலோப்ஸான பைக்கை ரிப்பேர் செய்ய முடியாது. அதனால் எக்சேஞ் செய்யணும். அதுக்குச் செய்த இன்சூரன்ஸ் இருக்குதான், சிறிது சிறிதாகச் சேர்த்து வைத்திருந்த தொகை கொஞ்சம் இருக்கு.
இதுக்கு முன்பு வேலைப் பார்த்த அலுவலகத்தில் பெண்டிங்கில் இருந்த தனது சம்பளம் இப்போதுதான் கையில் கிடைத்தது, எல்லாம் சேர்ந்து கையில மூன்று லட்சம்தான் இருக்கு. அதில் தான் புதுப் பைக் வாங்கியது போக மீதி பணத்தில் தாராளமாக மேல் தொட்டி அமைத்து பைப் கனெக்சன் போட்டுக் கொடுத்துவிட முடியும்’ என்ற நம்பிக்கையில்தான் காந்தாவிடம் வாய் விட்டான்.
‘இப்போது ஜோதியை இங்குக் கொண்டுவந்து விட்டு விட்டால் சாப்பாட்டுக்கு நான் கொடுக்கும் ஐயாயிரத்துக்குள் எங்க ரெண்டுபேர் சாப்பாட்டுச் செலவை மெயிண்டெய்ன் செய்துடுவாளா...?’ என்ற கேள்வி அவனுள்.
‘சரி சாப்பாடு மட்டும் போதுமா? பொண்டாட்டின்னு ஆயிட்டா அவளைப் பார்க்கும்போது தொட்டு பேசி கலந்துடணும்ற எண்ணம் ஏதோ மேஜிக்கலா அதுபாட்டுக்கு எனக்குள் வந்துடுது. அப்போ அதுமட்டும் என் உரிமைன்னு எடுத்துகிட்டா அவளுக்கு என்னோட கடமையை சரியா செய்து ஆகணும். ஆனால் அதுக்கான தகுதி இப்போ எனக்கு இருக்கா...?’ என்ற பல கேள்விகள் அவனுள்.
‘சரி வருவது எதுவென்றாலும் சமாளித்துத் தானே ஆகவேண்டும். முதலில் ஆன்லைன் ஜாப்பிற்கான நேரத்தை அதிகரிக்க வேண்டும். நேரத்தை கையாள தெரிந்தவனே காலத்தில் வெற்றி அடைய முடியும். நல்லவேளை கேட் முடிச்சதால் டிசைனர் வேலைக்கான ஆர்டர் ஆன்லைனில் எடுத்துக் காசு பார்க்க முடியுது. இனிமே கொஞ்சம் பெரிய பெரிய ஆர்டர்கள் எடுக்க வேண்டும். கதிருடன் இணைந்து பெரிய ப்ராஜக்ட் வருசத்துக்கு மூனு எடுத்தால் கூடப் போதும் ஓரளவு காசு பார்த்திடலாம்.
அத்தோடு கட்சி வேலைக்கென்று தினமும் நேரம் ஒதுக்கணும். புத்தகமும் வாசிக்கவும் தூங்குவதற்கு ஆறுமணி நேரம் மட்டுமே இருக்கு. இதில் பொண்டாட்டின்னு ஒருத்தி கூடவே இருந்தால் ஈர்ப்பு விசை அவப்பக்கம் இழுத்து கொஞ்ச நேரத்தை எடுத்துக்கிடும். நேர அட்டவணை போட்டு செயல்பட்டால்தான் இனி சரிபட்டு வரும்’ என எண்ணிக்கொண்டான்.
அரசன் என்பவன் செயல்திறன் உள்ளவனாக இருக்க வேண்டும், அரசனே மந்தமாகச் சோம்பலாக இருந்தால் குடியும் சோம்பலாக இருக்கும். தளர்ச்சி உள்ளவனாகத் தலைமையில் உள்ளவன் இருப்பான் என்றால், அவனுடைய செல்வ வளங்கள் உண்டே தீர்க்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதனால் ஆற்றல் உள்ளவனாகச் சோம்பல் இல்லாதவனாக இருக்க, அவனுடைய பகல், இரவு ஆகிய ஒவ்வொன்றையும் ஒன்றரை மணி நேரமுடைய எட்டுப் பருவங்களாகப் பிரித்துக் கொண்டு அவனது கடமைகளை அட்டவணை போட்டு அதுபடி செயல்படுத்த வேண்டும். எனக்கால அட்டவணையோடு கொடுத்திருக்கிறார் சாணக்கியன் என்று வாசித்தது அவ்வேளையில் அவனுக்கு நினைவிற்கு வந்தது.
இவ்வாறு எண்ணங்களுள் மூழ்கித் தூங்கிப் போனவனைக் காலையில் ஆறுமணிக்கு, கிரஹாவிடம் இருந்து வந்த போன் அழைப்புதான் எழுப்பியது.
அதனை அட்டர்ன் செய்த விழியனிடம், “விழியன், ஏழு மணிக்கு கிரஹா மில் தெரியும்ல அதுக்குப் பின்னாடி இருக்கிற என்னோட காட்டேஜூக்கு வர முடியுமா?” எனக் கேட்டார்.
என்ன ஏது என்று கேட்காமலேயே, “இதோ இப்போவே கிளம்பிடுறேன் மேடம். சரியா எழு மணிக்கு அங்க இருப்பேன். ஏதாவது பிரச்சனையா?” என்றான்.
“என் அண்ணன் டெல்லிக்குப் பிஸ்னஸ் விஷயமா போயிருந்தவர், இங்க நடந்த விஷயம் தெரிஞ்சு கிளம்பி வாரார். அவர் வீட்டைவிட்டு நான் வந்ததுக்கு எமோசனலா என்கிட்ட பேசுவார். என்னால என்னைய அவருக்குப் புரியவைக்க முடியாது. அவர் பேச்சை என்னால தட்டியோ மறுத்தோ பேச முடியாது.
எனக்குப் பதில் என் சார்பா நீங்கதான் அவர்கிட்ட பேசணும். அதுக்கு முன்னாடி நாம ரெண்டுபேரும் பேசணும் விழியன். எனக்கு இந்த நிலையில் உங்களைத் தவிர வேற யார்கூடவும் பெர்சனலை பத்தி பேசுவதுக்கு நம்பகமானவங்களா படலை. வருவீங்கல்ல விழியன்....?” என்றவர்,
“அண்ணன் பத்துமணிக்கு வந்துருவார் அதுக்குள்ள நாம பேசிட்டோம்னா, உங்களால் என் பக்கம், என் அண்ணன் முன்னாடி என்ன பேசணும் என முடிவுக்கு வர முடியும்.” என்றார்.
“நிச்சயம் வரேன் மேடம், இதோ கிளம்பிட்டேன்.” என்று எழுந்தான்.
‘நான் எப்படி அவங்க குடும்ப விஷயத்துக்குள் பேச?’ என்ற தயக்கத்துடனே கிரஹா வீட்டை ஆட்டோவில் சென்றடைந்தான்.
அவன் தனியாகத்தான் அங்குச் சென்றான். ஏனெனில் பெர்சனல் விஷயம் பேசவேண்டும் எனச் சொன்னதால் நண்பர்களுடன் அங்குச் சென்றால் கிரஹாவிற்குச் சங்கடமாக இருக்கும் எனத் தனியாகவே அங்கு வந்தடைந்தான்.
எப்பொழுதும் போல அவளுக்கென்று இருந்த பாதுகாவலர்கள் அவனைச் சோதனை செய்துவிட்டே உள்ளே அனுப்பினர்.
அவன் வரவுக்காகவே காத்திருந்த கிரஹா, “வாங்க விழியன், வாங்க உட்காருங்க.” என்றார்.
அந்த வீடு அல்ட்ரா மாடலாக இருந்தது. ஒவ்வொரு இடுக்கிலும் புதுமையும் செல்வச்செழிப்பும் தென்பட்டது. பழமையான கட்டிடத்திற்கு உள்ள கம்பீரத்தினை அந்த நவீன புதுக்கட்டிடமும் கொண்டிருந்தது.
அதில் ஒரு நவநாகரீக ராணி போல அமர்ந்திருந்தார் கிரஹா. புளூ லெனின் லாங்டாப் உடுத்தி இருந்தார். அதே அடர் ஊதா நிற கல்வைத்த கம்மல் மட்டுமே அவர் அணிந்திருந்த ஆபரணம். ஆனால் இத்தனை வயதிலும் பார்பி டால் போன்ற உடல் வாகுவுடன் கம்பீரமாக இருந்தார்.
ஆனால் விழியனோ இவை எதையும் கண்டுகொள்ளவில்லை. அவன் ‘அவரின் பிரச்சனை என்னவாக இருக்கும்? தன்னால் அவர் சொல்வதுபோலப் பூபதிராஜாவுடன் பேசி அவருக்கு உதவ முடியுமா?’ என்ற எண்ணத்தில் இருந்தான்.
மனிதன் எதையும் யாரிடமும் கடன் படக்கூடாது. உதவி என்பது பணமாக மட்டும் இருக்க வேண்டியதில்லை. ஒருவர் தன்னுடைய நேரத்தை மற்றவர்களுக்குக் கொடுத்து உதவி இருந்தால், அதுவும் அந்த மற்றொருவனைச் செய்நன்றி கடன்காரன் ஆக்கும்.
பணத்தைக் கொடுத்து உதவுவதை விட நேரத்தை ஒதுக்குவதே பெரியதென்று நான் நினைக்கிறேன். எப்போதும் செயல் ஆற்றலோடு இருப்பவர்கள் மற்றவருக்காகத் தங்கள் நேரத்தை ஒதுக்குகிறார்கள் என்றால் அந்த நேரம் கொடுக்கும் நன்மை பணத்தைக் கொடுத்து உதவுவதைவிட மேலானது.
பிரச்சனைகளை விட்டு மேடேற தோள் கொடுத்து அவனை உந்தி ஏற்றிவிடும் பெரும் பொறுப்புள்ளவர்களாகச் செயல் ஆற்றல் உள்ளவர்கள் நடந்து கொள்வார்கள்.
பணமானது செலவழிந்து விடும்... ஆனால் நேரத்தினைத் தனக்காக ஒருவர் செயல் ஆற்றல் தருவதற்கு ஒதுக்குவதென்பது அந்தச் செயல் ஆற்றலைப் பெறுபவருக்கு வாழ்க்கைப் பாடம் ஆகிறது. அவரின் வாழ்க்கையின் கடைசி வரை கூட வரும்.
அத்தகைய செயல் ஆற்றலை கடனாகக் கிரஹாவிடம் இருந்து பெற்றவன் விழியன். நிறைய மனிதர்களின் அறிமுகமும் அவளால் இப்பொழுது பெற்றதோடு அல்லாமல், எத்தன்மை உள்ளவர்களை எப்படி எப்படி அணுக வேண்டும், பேச வேண்டும் என்ற படிப்பினையும் அவன் கிரஹாவின் மூலம் அடைந்திருந்தான்.
அத்தகைய வல்லமை உள்ளவளுக்குத் தான் எங்ஙனம் உதவ முடியும்? என்ற யோசனையால் மற்ற எதுவும் பேசாமல் நேரடியாகவே விஷயத்திற்கு வந்தான் விழியன்.உட்கார்ந்ததுமே,
“சொல்லுங்க மேடம்... பூபதிராஜா முதலாளியிடம் நானு என்ன பேசணும்? முதலாளி பேசுறதுக்கு எதிரா நான் பேசணும் என்றால் சரியான காரணம் வேணுமே..... அப்போதானே பேச முடியும். அதோடு உங்க குடும்ப விஷயத்தில் நான் தலையிடுவதை அவர் விரும்புவாரோ, ஏற்பாரோ என்ற டவுட் இருக்கு.
அதைவிட முக்கிய விஷயம் நான் சொல்வதை அவர் காதில் போட்டுக்கொள்ளும் அளவு நான் ஒன்னும் பெரிய ஆளோ அவரை விட எந்த விதத்திலும் பெரியவனோ இல்லையே. இத்தனையும் யோசிச்சிட்டு சொல்லுங்க மேடம். ஆனால் ஒண்ணு மட்டும் உறுதியா சொல்வேன். உங்களுக்காக நான் எதையும் செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். நீங்க சொல்லி ஒரு விஷயத்தை என்னால செய்யமுடியாதுன்னு சொல்ல மாட்டேன்.” என்றான்.
“ஹேய் விழியன்.... ரிலாக்ஸ், ரொம்ப இறுக்கமா இருக்கீங்க. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க... முதலில். இந்தாங்க, இந்த டீ குடிங்க. நான் பேசத்தானே உங்களைக் கூப்பிட்டிருக்கேன்.
உங்களோட வெளிப்படையான தன்மை நல்லகுணம் இரண்டும்தான் வயதில் சின்னவங்களா நீங்க இருந்தாலும் ஒரு நண்பனா உங்களை நான் நினைத்ததுக்குக் காரணம்.
நீங்க என்கிட்ட ஒரு ஃபிரண்டு கூடப் பேசுவதுபோல இயல்பா இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். உங்களுக்கு அதிகப்படியான டென்ஷன் அழுத்தமும் இந்த அரசியல் பிரவேசம் கொடுத்துருக்குதுன்னு நினைக்கிறேன்.
கொஞ்சம் உங்களுக்குப் பிடிச்ச, உங்களை இறுக்கத்தில் இருந்து வெளிய கொண்டு வர்ற விஷயத்துக்குத் தினமும் கொஞ்சநேரம் ஒதுக்குங்க விழியன். அப்போதான் இன்னும் கொஞ்சம் உங்க எனர்ஜி அதிகமாகும்.
அப்போதான் இறுக்கம் இல்லாம தெளிவா அமைதியா இருக்கமுடியும். எதிரில் உள்ளவங்களும் உங்களைக் கூல் பெர்சன்னு நினைக்க வைக்க முடியும்.” என்றார்.
“மேம், இவ்வளவு தெளிவா இருக்கீங்க... உங்களுக்கா பிரச்சனை...!? அப்போ நான் எல்லாம் எம்மாத்திரம்னு தோனுது.” என்றவனிடம்,
“என்கிட்டயும் வீக்னஸ் இருக்கு விழியன். அதுவும் அன்பு, நன்றிகடன் அப்படின்ற வட்டத்துக்குள் மாட்டுறவங்க எவ்வளவு தெளிவா இருந்தாலும் அந்தப் பாண்ட் உள்ளவங்ககிட்ட சில விஷயங்கள அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுத்தான் போகணும்.
இப்போதும் நிச்சயமா என் அண்ணாகிட்ட அவர் சொல்றதுக்கு எதிர்த்து ஒரு வார்த்தை பேச முடியாது. சரின்னுதான் சொல்ல முடியும். ஆனால் நான் அவருக்காக அவர் கூட வீட்டுக்கு போறதால என் அண்ணனுக்கும் அண்ணிக்கும் இடையில மனக்கசப்பு வரும்.
எனக்கு அவர் செய்ததெல்லாம் போதும். அவர் வாழ்க்கையை அவர் வாழட்டும். நானும் என் வாழ்க்கையை வாழப்போறேன். நாங்க ஒரே வீட்டில் இருந்தால் அந்த இரண்டுமே நடக்காது” என்றாள்.
அவளின் வார்த்தையில் அவள் வாழ்க்கைன்னு எதைச் சொல்கிறாள் எனப்புரியாமல் பார்த்தவனிடம், “என் வாழ்க்கையை நான் வழப்போறேன்னு சொன்னதும் எப்படின்னு யோசிக்கிறீங்களா விழியன்...? என் கல்யாண வாழ்க்கைக்கு ஆயுள் சரியா இரண்டு வருடம்தான், நான் வாழவே இல்லை. அதுக்குக் காரணம் வாசனோட கண்ணீர்ன்னு எனக்கு அடிக்கடி தோனும்.
திலீபன் அப்பா இறந்த பிறகும் எனக்காக எல்லாம் விட்டு வரேன்னு சொன்ன மனுஷன் கூட, அப்போவே போயிருந்தால் இந்நேரம் அவரும் நல்லா இருந்திருப்பார், நானும் நல்லா இருந்திருப்பேன். ஆனா சமூகம், என் குடும்பக் கெளரவம், என்னோட உடல்நிலை அப்படின்னு யோசிச்சு அப்பவும் மாட்டேன்னு சொல்லிட்டேன்.
ஆனா, அது எவ்வளவு பெரிய தப்புனு இப்போதான் என் தனிமை எனக்குப் புரிய வச்சது. எனக்கு மன அமைதி வேணும், எனக்காக ஒருத்தர் வேணும். என் அண்ணன் இருக்கிறார்தான். ஆனால் நான் அவருக்குப் பாரம். அதேநேரம் எனக்காக இருக்கும் வாசன் கூட நான் இருப்பது வாசனுக்குப் பெரும் வரம்.
இப்போ அவர் இருக்கும் உடல் நிலையில் அவரைப் பக்கத்தில் இருந்து பார்த்துக்கக் கூட அவர் குடும்பத்தில் யாரும் முன்வர மாட்டாங்க. ஏன்னா, அவர் தேர்ந்தெடுத்து போன பாதை அப்படி. நிழல் உலகம் அவரை இழுத்துக்கிடுச்சு.
அவரோட திறமைக்கும் குணத்துக்கும் நல்லமுறையில் அவரை நான் கல்யாணம் செய்து அவரோட பாதையையும் நல்ல விதத்தில் கொண்டு போயிருக்கலாம். ஆனா அப்போ அப்படிச் செய்யாததால் இப்போ, அந்த நிழல்கூட நானும் நிழலாக வாழப்போறேன்.” என்றாள்.
“அப்போ வாசன் சாரும் நீங்களும் கல்யாணத்துக்கு முன்னாடி காதலிச்சீங்களா மேடம்?” எனக் கேட்டான்.
***
அத்தியாயம் 24
விழியனுக்கும் அவனது நண்பர்களும். ஹாஸ்பிடலில் நடந்தவற்றைப் பார்த்ததிலிருந்து பிரமிப்பு உருவாக்கியிருந்தது.
கதிர் அவர்களிடம், “டேய் எம்புட்டு பெரிய ஆட்களா இருக்காங்க.... சினிமாவில் பார்க்கிறது போலப் பவுன்சர்ஸ் எல்லாம் பாதுகாப்புக்கு வச்சிருக்காங்க.... அதுவும் துப்பாக்கி வைத்திருக்கும் ஆட்கள் பாதுகாப்போட இருக்காங்க.... காசு இருக்கிறவங்க வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் போ...!?” என்றான்.
மற்றவர்களும் அவன் பேசுவதை ‘ஆமாம்...’ எனச்சொல்லும் விதமாகத் தலையாட்ட, விழியன் மட்டும் மனதிற்குள் யோசனையுடன் இருந்தான்.
பெரிய வசதிவாய்ப்பு உள்ளவர்களை அவன் சந்தித்திருக்கிறான். பூபதிராஜா வீடு பிரமாண்டமானதாக இருக்கும். ஆனால் எப்போதும் போல வாசலில் காக்கி உடுப்பு போட்ட வாட்ச்மேன், அந்த ஏரியாவிலிருந்து வீட்டு வேலைக்கு என்று வந்திருக்கும் பழகிய எளிய மக்களின் சாயல் உள்ள வேலையாட்கள், அமைதியான சூழல் இப்படித்தான் பார்த்திருக்கிறான்.
எம்.எல்.ஏ அகத்தியன் வீட்டில் வேலைக்கு இருக்கும் ஆட்கள் அந்த ஏரியாவில் உள்ள அவரின் கைக்கூலிகள். இவர்கள் இப்படித்தான் என்று கணிக்கக் கூடிய ரவுடிகள் அகத்தியனின் பாதுகாப்புக்கு என்று அங்கேயே சுற்றிக் கொண்டிருப்பவர்கள். இருந்தாலும் அவர்களிடம் பழகிய மக்களின் சாயல் இருக்கும்.
இப்படித்தான் இருப்பார்கள்.... இங்கு இதைச் செய்வார்கள்... என்று கணிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.
ஆனால் கிரஹாவின் நலம் விரும்பியாகப் புதிதாக முளைத்திருக்கும் வாசன் வந்த பிறகு, கிரஹாவின் பாதுகாவலுக்குப் பயிற்சி பெற்ற, கூர்மையான பார்வையுள்ள, மிகப்பெரிய தலைகளுக்குப் பயிற்சிப் பெற்ற பாதுகாவலர்களுக்கு இணையான பயிற்சி எடுத்துக்கொண்ட மிடுக்கான உடையுடன் இருந்த அவளின் பாதுகாவலர்கள். இவன் பழகிய சூழலில் இல்லாத அந்நியமான ஆட்களாகத் தெரிந்தார்கள்.
மேலும் அவனுக்கு வாசனின் அறிவு செருக்கு முகமும் அவனின் ஆஜானுபாகுவான உருவமும் பார்க்கும்போது, அழகான இன்டர்நேசனல் கிரிமினல் தலைவன் போன்ற தன்மை இருப்பதாகப் பட்டது.
நடந்து முடிந்த எலெக்சனில் தான் வாக்குக்குக் காசு கொடுக்கவில்லை. ஆனால், சில இடங்களில் தான் காசும் பிரியாணி பொட்டலங்களும் கொடுத்ததாகத் தகவல் வந்திருந்தது.
தனக்கு ஆதரவாகக் கொஞ்சம் பெரிய ஆட்கள் எல்லாம் மறைமுகமாகச் சப்போட் செய்வதும் அவனுக்குப் புரிந்தது. ஆனால், ஒரு சந்தேகத்திலேயே அந்தப் புரிதல் இருந்ததால் ஆராயாமல் அவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அலட்சியமாக விட்டுவிட்டான்.
மேலும் தனக்காக ஓட்டுக்குத் துட்டை அள்ளி இறைக்க எந்தக் கேனையன் முன் வருவான். ஏதாவது வதந்தியாக இருக்கும் என அவனுக்கு அவனே சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான். ஆனால் இப்பொழுது யோசித்துப் பார்த்தால் உண்மை அவனுக்கு விளங்கியது.
தன்னுடைய தன்மைக்காக ஒன்றும் இம்புட்டு வாக்குகள் தனக்குக் கிடைத்துவிடவில்லை. தனக்குப் பின் இருந்து ஒரு சக்தி தன்னை ஜெயிக்க வைக்கப் பணபலம், ஆள்பலம் எல்லாவற்றையும் செலவழித்திருக்கிறார்கள் என்ற உண்மை புரிந்தது.
அவ்வாறு புரிந்த உண்மைக்குச் சாட்சியாகக் கிரஹாவும், அவளின் பொருட்டு வாசன் இந்த வேலை எல்லாம் செய்திருப்பதும் இப்போது புரிந்தது.
ஆனால் இந்தப் புரிதல் அவனுக்கு உவப்பானதாக இல்லை. ஆனால் இப்போதைக்கு இதைப்பற்றி நண்பர்களுடன் பேச வேண்டாமென நினைத்துக்கொண்டான்.
அரசியல்வாதி தன்னோடு இருப்பவர்களைப் பற்றி ஓரளவு புரிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களின் தன்மை பற்றி உணர்ந்தவனாக இருக்க வேண்டும். தன்னைச் சுற்றி நடக்கும் காரணக் காரியங்களை உற்றுக் கவனிப்பவனாக இருக்க வேண்டும் என்ற சாணக்கியனின் கூற்று அவ்வேளையில் நினைவுக்கு வந்தது.
மேலும் மனிதன் என்பவன் எதை எப்போது செய்வான்? எதற்காக எப்படிச் செயல்படுவான்? என்பதை உறுதியிட்டு காண்பது கடினம். ஆள்பவன் மனோதத்துவம் ஓரளவு தெரிந்தவனாக இருக்க வேண்டும்.
அவ்வாறு இருந்தால்தான் மற்றவர்களின் நோக்கங்கள், தன்மைகள் அவர்களின் செயல்களால் உண்டாகும் விளைவுகள் ஆகியவற்றை முன்கூட்டியே கணித்துத் திட்டமிட்டு காய் நகர்த்த முடியும்.
இவ்வாறெல்லாம் அவன் யோசித்துக்கொண்டே வருகையில், ‘நான் ஒரு நல்ல தலைவரைத்தானே தேடினேன். பிறகு நானெப்படி தலைவன் ஆனேன்?
கிரஹா மேடமும் ஏதோ ஒரு காரணத்துக்காக எலெக்சனில் நிப்பாட்ட ஒரு நல்ல கேன்டிடேட் தேடிக்கிட்டு இருந்தாங்க. அப்போ ஆரம்பத்திலேயே என்னுடைய நோக்கம் தவறிட்டேன்.
அவங்களோட எண்ணத்துக்கு வடிவம் கொடுக்க என்னைத் தலைவர் என்ற இடத்தில் கொண்டு வந்துருக்காங்களோ?’ எனப் பல யோசனைகள் அவனுள்.
“விழியா என்ன அமைதியாகிட்ட?” என்று உடன் இருப்பவர்கள் கேட்டதும், “இல்ல... இல்ல, அப்படியெல்லாம் இல்ல...” என்றான்.
“டேய், புது மாப்பிள்ளை இப்போதான் ஜோடியா தனியா பேசுனாங்க. அதுக்குள்ள நாம சூழ்நிலையால பிரிச்சு இங்க கூட்டிட்டு வந்துட்டோம். மேடத்துக்கு எதுவும் பிரச்சனை இல்லன்னு தெரிஞ்சதும் கனவுக்குப் போயிருப்பான்.” என்று கிண்டல் செய்தனர்.
“டேய்! நீங்கவேற சும்மா இருங்கடா!” என்று சிரித்துக்கொண்டே கூறியவனுக்கு உண்மையாகவே ஜோதியின் நினைவு வந்து ஒட்டிக்கொண்டது.
விபத்தில் அவனின் வண்டி பழுதாகிவிட்டது. எனவே தனது நண்பர்களின் பின்னால் அமர்ந்தே பைக் சவாரி செய்து கொண்டிருந்தான்.
தெருவுக்குள் நுழைந்து அவன் அம்மா வீட்டுக்கு அருகில் வந்ததும் அவன்தான் இங்குத் தங்கவில்லையே என்ற எண்ணத்தில் நிறுத்தாமல் போனவனிடம், “டேய் டேய், நிப்பாட்டு.” எனக் குரல் கொடுத்ததும் நிறுத்தியவன்,
“என்னடா, அப்போ தாத்தா வீட்டில் இன்னைக்குத் தங்கலையா?” எனக் கேட்டான்.
“அங்கதான் தங்குவேன். கிட்டத்தானே நான் போய்கிறேன்.” என்று சொல்லியபடி இறங்கியவன் அவன் வீட்டின் அருகில் உள்ள சந்திற்குள் நுழைந்தான்.
உடனே அவர்கள், “டேய் மாப்பிள்ள, உன் மாமியார் வீட்டுக்குப் போகப் போறேன்னு சொல்ல வேண்டியதுதானே.” என்று சொல்லிவிட்டுச் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டனர்.
அவர்களின் கிண்டலில் அவனுக்குமே இதழ்க்கடையில் மலர்ந்த சிரிப்பு விரிந்தது. நான்கைந்து எட்டிலேயே ஜோதியின் வீட்டை அடைந்தான்.
அன்று சாயங்காலம் இட்லியுடன் கொஞ்சம் வாழைக்காய் பஜ்ஜியும் போட்டு விற்பனை செய்திருந்த காந்தா, அது விற்காமல் தேங்கி போனதால் அதைத் தெருக்களில் கூவி விற்றுவிடச் சென்றிருந்தார்.
மேலும் கையில் வைத்திருக்கும் காசுடன் வடை விற்ற காசையும் சேர்த்து நாளை ஞாயிற்றுக்கிழமைக்குக் கறி எடுத்து தனது மருமகனுக்குச் சாப்பாடு செய்து மகளிடம் கொடுத்து விடுவோம் என்று நினைத்து கடைக்குப் போய்ச் சரக்குக் கொஞ்சம் வாங்கிட்டு வரலாம் எனச் சென்றிருந்தார்.
‘சூழ்நிலையைக் காரணம் வைத்து விழியனுடன் தனது மகளுக்குக் கல்யாணம் முடித்துவிட்டோம். அந்தத் தம்பி ஒட்டாமல் இருந்துருச்சுனா என்ன பண்ண?’ என்ற பயம் அவருள் அழுத்திக்கொண்டிருந்தது. இன்று விழியனை பார்த்து வந்ததும் பூரித்த முகத்துடன் இருந்த ஜோதியை கண்டதும் அந்த அழுத்தம் சற்று விலகியிருந்தது. தனது மகள் முகத்தில் மலர்ந்த சிரிப்புடன் வலம் வந்ததைக் கண்டவருக்கு, மகள் கணவனுடன் சேர்ந்து வாழ்ந்துவிடுவாள் என்ற நம்பிக்கை பிறந்திருந்தது.
“ஜோதி....” என்று இயல்பாக அழைத்தபடி சொந்த வீட்டிற்குள் வருவதுபோல உரிமையாகச் சாத்தியிருந்த கதவை தள்ளித் திறந்துகொண்டு அவளின் முன் நின்றான் விழியன்.
வீட்டில் இருந்த ஜோதியோ இரவாகி விட்டதால் இனி யார் வரப்போறாங்க என்ற எண்ணத்தில் சேலையை மாற்றிவிட்டு சுரிதாரின் டாப் மட்டும் அணிந்துகொண்டு, தரையில் எதுவும் விரிக்காமல் குப்புறப் படுத்துக்கொண்டு காலாட்டிக்கொண்டிருந்தாள்.
கடைவீதிக்குச் சென்றிருக்கும் தனது அம்மா வரும் நேரம் ஆதலால் கதவை தாழிடாமல் புத்தகம் படிக்கிறேன் என்று தனது கணவன் தன்னை முத்தமிட்டதையே நினைத்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது நினைவில் நின்றவன் உண்மையாகவே கண்முன் தனது பெயரைச் சொல்லிக் கொண்டு வந்து நின்றதைக் கண்டு அதிர்ந்தது, ஒரு நிமிடம் தான் காண்பது உண்மையா? பிரமையா? என்று புரியாமல் விழித்தாள்.
அவள் படுத்தபடி காலாட்டிக்கொண்டே தன்னை நிமிர்ந்து பார்த்து விழித்துகொண்டு இருப்பதையும், அதனால் தெரிந்த அவளின் எழில்களைக் கொஞ்சம்கூட வெட்கமும் வஞ்சனையும் இல்லாமல் கண்களாலேயே அளவெடுத்தான்.
அவனின் அழுத்தமான பார்வையில் லஞ்சையாகி, “வாங்க...” என்று உள்ளே போன குரலில் சொல்லியபடி டக்கென்று எழுந்தாள்.
டாப் அவளின் முட்டிக்குக் கீழ் வரை மட்டுமே மறைத்திருந்ததால், வெயில் படாத இடம் கூடுதல் வெளிச்சத்துடன் அவனின் கவனத்தை ஈர்த்தது.
உடனே நெளிந்தபடி அங்கிருந்த ஒற்றை ஸ்டூலை காட்டி சன்னமான குரலில், “உட்காருங்க... இதோ வரேன்.” என்று சிட்டாக மறைவாக உள்ளிருந்த அடுப்படிக்குள் நுழைந்து கொண்டாள்.
தன்னைத்தானே மனதினுள், ‘லூசு லூசு’ என்று தான் இருந்த கோலத்தை எண்ணி தன்னையே திட்டிக்கொண்டு, வேகவேகமாகச் சுடிதார் பாட்டத்தையும் ஷாலையும் போட்டுக்கொண்டு வெளியில் வந்தாள்.
ஏனோ விழியனின் கண்கள் ஏமாற்றத்தைப் பிரதிபலித்தன. ‘நான்தானே சும்மா அப்படியே இருந்தால் என்ன?’ என அவனுக்குள்ளேயே சொல்லிக்கொண்டவன்,
தனக்குத்தானே மனதினுள், ‘டேய் அடங்குடா! இன்னும் சரியா பழகாத நிலையில், நீ பார்க்குற பார்வைக்கு எப்படி அவளால் இயல்பாய் இருக்க முடியும்...? அவளுக்கும் கொஞ்சம் டைம் கொடு. ஒரு நாள் சாப்பாடு கொண்டு வந்ததுக்காகப் பொண்டாட்டினாலும் ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்காத’ எனச் சொல்லிக் கொண்டாலும், தனது உரிமையை அவளுக்கு ஏதோ வகையில் உணர்த்த வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
எனவே அவன் அணிந்திருந்த மாஸ்க்கை கழற்றியபடி, “டஸ்ட்பின் எங்க? இதைப் போடணும், எனக்குச் சாப்பாடு எடுத்துவை ஜோதி... செம பசி” என்றான்.
அவன் பசி என்றதும் பெண்களுக்கே உண்டான தாய்மையில், “இதோ ஐந்தே நிமிசத்தில் தோசை சுட்டு எடுத்துட்டு வாரேன்.” என்றவள் வேகமாக உள்ளே சென்று பார்த்தாள்.
நல்லவேளை ஒரு நாலு தோசை சுடும் அளவுக்கு மாவும் சாம்பாரும் தக்காளி சட்னியும் இருப்பதைக் கண்டு தோசைக்கல்லை எடுத்து அடுப்பில் வைத்து அடுப்பை பற்ற வைத்தவள்,
“உங்களுக்கு எலெக்சன் வேலைக்குப் பக்கபலமா பூபதிராஜா முதலாளியோட தங்கச்சி இருந்தாங்கலாம்ல, அவங்களைத்தான் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறதா தாத்தா சொன்னாங்க. இப்போ எப்படி இருக்காங்க...?” என்று இவனிடம் கேட்டுகொண்டே தோசை வார்த்தாள்.
ஸ்டூலில் அமர்ந்திருந்தவன் எழுந்து வந்து அடுப்படி வாசலில் நின்று அவளை எட்டிப் பார்த்துக்கொண்டே, “ம் ரொம்ப அடி இல்ல லைட்டாதான்.” என்றான்.
அவன் வாசலுக்கே வந்து தன்னுடன் இயல்பாகப் பேசுவதும், அவனது வீடு போலவே இங்கும் புழங்குவதும் அவளுக்கு அத்தனை திருப்தியாக இருந்தது.
அதனால் அவனின் மேல் இருந்த மரியாதை இன்று அவனுக்குச் சாப்பாடு கொண்டு போனபின் காதலாக மாறி, இப்பொழுது அக்காதல் முகிழ்ந்து குலுங்கியது.
அதேநேரம் காந்தா சரக்குகளோடு இயல்பாகச் சாத்தியிருந்த கதவை திறந்துக்கொண்டு உள்ளே வந்தவரும், அங்கு விழியன் இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியில் கண்கள் பனிக்க உதட்டில் சிரிப்புடன், “வாங்க தம்பி வாங்க...” என்று வரவேற்றார்.
அதுவரை இயல்பாக இருந்தவனுக்குக் கொஞ்சம் சங்கோஜமாக ஆகிவிட்டது. எனவே விருட்டென்று போய் ஸ்டூலில் அமர்ந்துகொண்டவன், “இல்ல... ஜோதி சாப்பாடு கொண்டு வந்திருந்தாளா எனக்கு வெளிய முக்கியமான வேலை வந்ததால சாப்பிடாம போயிட்டேன். அதான் வந்தேன்.” என்று சற்றுத் தடுமாற்றத்துடன் பேசினான்.
“ஜோதியும் சொன்னா தம்பி, அந்தக் கிரஹா அவுங்களுக்கு ரொம்பக் காயமா தம்பி?” என்றதும்,
“இல்லக்கா லேசாதான்.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“ஏங்க, தோசை சுட்டுட்டேன். உள்ள வந்து கை கழுவிக்கோங்க. நான் தட்டில் எடுத்து வைக்கிறேன்.” என்று சொன்னாள் ஜோதி.
அவனும் அந்த அடுப்பாங்கரையில் சென்று, பாத்திரம் தேய்க்கவும், குளிக்கவும் சமையல் அறை மூலையில் இருந்த இடத்தின் அருகில் சிமிண்ட் தொட்டியில் இருந்து தண்ணீரை எடுத்துக் கை அலம்பிவிட்டு வந்து தரையில் தட்டு வைத்திருந்ததின் முன் அமர்ந்தான்.
“ஏட்டி ஜோதி! இந்தா, நீ போய்த் தம்பிக்கு பக்கத்தில உட்கார்ந்து பரிமாறு நான் தோசை சுடுறேன்.” என்றார் காந்தா.
அதன்பின் அவனின் உடல்நிலை, கட்சிப்பணி பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்ட காந்தா விழியனிடம், “பொதுக்குழாயில் தண்ணி நேத்து வந்தது இன்னும் வரலை. ஓட்டு போடுற வரை சரியா மேலத்தெரு போலவே நம்ம தெருவுக்கும் தண்ணி எடுத்து விட்டாங்க. இதோ போன ரெண்டு தடவையும் இழுத்தடிச்சுத்தான் தண்ணி விடுறாங்க!” என்றார்.
அவர் அவ்வாறு சொன்னதும், “அப்போ பப்ளிக் டாய்லெட்டில தண்ணி இருக்கா ஜோதி? திறந்துதான் இருக்கா? இல்லன்னா தண்ணி இல்லைன்னு அன்னைக்கு போல அடைச்சு போட்டுட்டாங்காளா?
அப்படி அடைச்சிருந்தா இனி நீ வெளியில் எல்லாம் போக வேணாம் காலையில ஓட்டு வீட்டுக்கு வந்து அங்க இருக்கிற டாய்லெட்டை யூஸ் பண்ணிக்கோ.
நாளைக்கே அங்க மேல ஒரு சிண்டெக்ஸ் வச்சு வாட்டர் சப்ளை கொடுக்க ஏற்பாடு பண்ணிடுறேன். அங்கேயே குளிச்சுட்டு வந்து எனக்குச் சாப்பாடு கொண்டுவா.” என்றான் அவனை அறியாமல்.
அவன் உள்ளத்தில், ‘இத்தனை நாள் வெளில போக வேணாம் இங்க வந்து பாத்ரூம் யூஸ் பண்ணிக்கச் சொல்வோமா’ எனச் சொல்ல நினைத்து, ‘ஆனால் நான் சொன்னா சங்கடப்படுவாளோ ஜோதி’ என்று சொல்லாமல் விழுங்கிக் கொண்டிருந்த வார்த்தைகள் வெளியேறிவிட்டது.
அவன் திடீரென்று அவ்வாறு சொன்னதும் என்ன பதில் சொல்ல எனப் புரியாமல் விழித்துக் கொண்டிருந்த தனது மகளை முந்திக்கொண்டு காந்தாவே பதில் அளித்தார்.
“தம்பி, நாளைக்கு மறுநாள் முகூர்த்தநாள். ஊருக்குள்ள நிறையக் கல்யாணம் அன்னைக்கு வச்சிருக்காங்க, அன்னைக்கே நான் சாமான்சட்டு எல்லாம் என் மகளுக்கு அங்க ஓட்டு வீட்டில வாங்கிக் கொண்டு வந்து போட்டுருறேன்.
அதுக்குப் பிறகு அங்கனையே இருந்து என் மக உங்களுக்குப் பொங்கி பெருக்கி போடட்டும் இங்கைக்கும் அங்கைக்கும் சாப்பாடுக்கு தண்ணிக்குன்னு அலைச்சல் மிச்சமாகும். அதுவரை எப்பவும் போல இங்கனயே இருந்துக்கிடட்டும்.” எனச் சொன்னார்.
***
அத்தியாயம் 23
கிரஹாவை பார்க்க வந்தவர்களை வாசலில் இருவர் பாதுகாப்புக்கென நின்றிருந்த அறைக்குள் கூட்டிச்செல்ல முயன்றபோது உள்ளேவிடாமல் தடுத்த ஒருவன். அவர்களிடம்,
“சார், தப்பா எடுத்துக்காதீங்க பிளீஸ், கோவாப்ரேட் பண்ணுங்க.” என்று சொல்லி, இவர்கள் ஒவ்வொருவராக மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதித்த பின்பே உள்ளே அனுமதித்தனர்.
உள்ளே போனவர்கள், தலையில் ஒற்றைக் கட்டுடன் கோபம், பிடிவாதம் கொண்ட முகத்தோடு படுக்கையில் அமர்ந்திருந்த கிரஹாவைப் பார்த்ததும், ‘அப்பாடா பெரிய அளவில் அடி எதுவும் படவில்லை’ என்று நிம்மதியானார்கள்.
அந்த அறையில் இருந்த சோபாவில் அவளுகுக் குறையாத கோபத்துடன் அமர்ந்திருந்த சாந்தாவையும் அவரின் பக்கத்தில் முகத்தை யோனியுடன் வைத்துக்கொண்டிருந்த கிரஹாவின் மகன் திலீபனையும் பார்த்தவர்கள், ஏதோ பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது என்பது வரை யூகித்துக் கொண்டனர்.
இவர்கள் வந்ததைத் திரும்பிப் பார்த்த கிரஹா, “வாங்க... வாங்க... உட்காருங்க. எனக்கு எதுவோன்னு பயந்துட்டீங்களா...? அதெல்லாம் எனக்கு எதுவும் ஆகலை. ஆனா வாசன்...!? வாசனுக்கு ஆபரேஷன் தியேட்டரில் டிரீட்மென்ட் போய்கிட்டு இருக்கு.... எனக்காகக் கத்திக்குத்தை வாங்கி இப்போ உள்ள உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கார்... அவருக்காகத்தான் நான் இப்போ ஹாஸ்பிடலில் இருக்கேன்...” என்றவள் தனது அண்ணியை நோக்கி
“அதோ இருக்குது பாருங்க, அந்தப் பெட்டில் அவரை மாத்தி அவர் நல்லா ஆகிட்டார்ன்னு தெரியும்வரை நான் இங்க இருந்து வர மாட்டேன்.... என் வாழ்க்கையில் இருக்கிற இன்னொருத்தரையும் இழந்துடுவேனோன்ற பயம் இப்போ என்னை ஆட்டிவைக்குது.....
அன்னைக்கே எனக்குச் செக்யூரிட்டிக்கு ஏற்பாடு செய்யும்போதே அண்ணன்கிட்ட கேட்டேன். வசந்தி அண்ணன் வாசன்கிட்டயா எனக்குச் செக்யூரிட்டிக்கு ஏற்பாடு நடப்பதை பத்தி பேசுறீங்கன்னு...? அவர் இல்லைன்னு சொல்லிட்டார். ம் ஆனா அது அவர்தான்னு காலம் என் கண் முன்னாடி காட்டிக்கொடுத்துடுச்சு.... ஆனா இரத்தவெள்ளத்தில...”
என்று சொல்லும்போதே அவள் தலையை அழுத்திப் பிடித்ததும், வேகமாக அவரின் அருகில் வந்து தலைவலிக்கு அவர் போடும் டேப்லட்டை எடுத்துத் தண்ணீர் பாட்டிலுடன் முகத்தின் முன் நீட்டினான் மகன் திலீபன்.
தனது அம்மாவிடம், “வாசன் அப்பாவுக்கு எதுவும் ஆகாதும்மா.... நீங்க பேனிக் ஆகாதீங்க, இங்க இருந்தா இப்படித்தான் நீங்க ஃபீல் பண்ணுவீங்க..... பாருங்க அத்தை வேற கோபமா இருக்காங்க. அவங்க சொல்றது போல வீட்டுக்கு போகலாம்மா” என்றான்.
அவனைப் பார்த்து, “நான் பயப்படலை திலீப்... ஆனா வீட்டுக்கு இப்போ வர மாட்டேன்.” என்று சொன்னவள் சாந்தாவை பார்த்து, “அண்ணி டிரைவருக்கு ஃபோன் பண்ணி வரச்சொல்லி நீங்க கிளம்புங்க.” என்றாள்.
மேலும் தனது மகனிடம், “அம்மாவுக்குத் துணையா என்னோட ஃப்ரெண்ட்ஸ் வந்துட்டாங்க, அதனால நீ அத்தை கூட வீட்டுக்கு போ...” என்றாள்.
அவள் அவ்வாறு சொன்னதும், “நல்லா இருக்குது கிரஹா நீ சொல்றது...?! அம்புட்டும் ஆம்பளை ஆட்களா இருக்காங்க. குடும்ப......” என்று எதுவோ பேச வரவும்,
“அண்ணீ... என்ன என் மருமக(பூபதிராஜா சாந்தாவின் மகள்) இருக்கிற வீட்டில நான் இருக்கிறதால் என்னோட கேரக்டரால அவளுக்கு நல்ல மாப்பிள்ளை வராம போயிடும்னு தானே சொல்ல வாரீங்க...!
இனி நான் அங்க நம்ம வீட்டுக்கு வரலை.... என் மகன் உங்களை வீட்டில விட்டுட்டு எங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கிட்டு கிரஹா மில்லுக்குச் சொந்தமான என்னோட காட்டேஜுக்கு வந்துடுவான்.
நானும் என் மகனும் இனி தனியா அங்கேயே இருந்துக்குறோம். இனி என்னால உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது.... என் லைஃபை நான் பார்த்துக்குறேன்.” என்றாள்.
அவள் அவ்வாறு சொன்னதும், “கிரஹா, உன் நல்லதுக்கு எதுவும் நான் சொல்லக்கூடாதுன்னு சொல்ற...! எல்லாம் அவர் உனக்குக் கொடுக்கிற இடம். அருமை தங்கச்சி நீ சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டுறாருல்ல. அதுதான் உனக்கு நல்லது கெட்டது எடுத்து சொல்ற எங்களைப் பார்த்தா பிடிக்கமாட்டேங்குது.
நான், என் வாயால உன்னைய வீட்டை விட்டு வெளிய போன்னு சொல்லலை.... உன் அண்ணன் காரணம் கேட்டா என்னைய மாட்டிவிடாம இருந்தா சரி....” எனச் சொல்லிக்கொண்டே, அவள் ஜார்ஜ் போட்டிருருந்த மொபைலை எடுத்து அதன் ஜார்ஜருடன் ஹேண்ட் பேக்கிற்குள் வைத்தார்.
வா... எனும் விதமாகக் கிரஹாவின் மகன் திலீபனை தலையசைத்து விட்டு, மேலும் நான்கு பேர் அங்கு இருப்பதைத் துளியும் கண்டுகொள்ளாது வாசல் நோக்கி நடையைக் கட்டினார்.
தனது அம்மாவைப் பார்த்து தலை அசைத்துவிட்டு அவனும் தனது அத்தையைப் பின் தொடர்ந்தான். கிரஹா அவர்கள் நான்கு பேரையும் பார்த்து, “உட்காருங்க.” என்று சோபாவை காண்பித்தாள்.
கதிரை பார்த்து, “உங்க உடல் நிலை சரியாகலை.... இன்னும் ஸ்டிக்கோட ஹெல்புல தானே நடந்துகிட்டு இருக்கீங்க! பிறகு எதுக்கு நீங்களும் இவங்க கூட அடிச்சு பிடிச்சு ஓடி வரணும்...? ஒவ்வொருத்தருக்கும் உலகத்தில் இருக்கிற எல்லாத்தையும் விட முக்கியம் அவங்க அவங்களோட ஹெல் தான். உடல் நல்லா இருந்தாத்தான் மத்தவங்களுக்கும் நீங்க செய்யணும்னு நினைக்கிறதை செய்ய முடியும்...? அதனால நீங்க கம்ப்ளீட் ரெஸ்ட் எடுத்து சரியாக்கணும் உங்களை...ஓகே..?.” என்றாள்.
“என்ன மேடம் இப்படிச் சொல்லிட்டீங்க? உங்களைக் கொலை செய்ய முயற்சி செய்து, நீங்க ஹாஸ்பிடலில் அட்மிட்டாகி இருக்கீங்கன்னு தெரிஞ்ச பிறகு என்னால எப்படி வீட்டில உட்கார்ந்திருக்க முடியும்?” என்றான்.
“என்ன ஆச்சு மேடம்? உங்களை அட்டாக் பண்ணினவங்களைப் பிடிச்சாச்சா....? இது யாரோட வேலை...? நீங்க தனியா எதுக்கு மார்க்கெட்டுக்கு போனீங்க...?” என்றான் விழியன்.
“விழியன், நாம தோத்துட்டோம்னு நியூஸ் வந்தப்போ உங்ககூட மொபைலில் ஒரே வார்த்தை மட்டும் பேசினேன். என் அண்ணன் வீட்டில் என்னால மனசு விட்டு பேசும் சூழல் அப்போ இல்லாம போயிடுச்சு.
நாம எதிர்பார்த்ததைவிட அதிக ஓட்டுதான் வாங்கியிருக்கோம். சொற்ப ஓட்டு வித்தியாசத்தில்தான் அகத்தியன் ஜெயித்திருக்கான். நாம தோத்துப்போனது எனக்குப் பெரிய சறுக்கலா படலை. சொல்லப்போனா ஒரு பிரைட் பியூச்சர் நமக்கு இருக்குன்ற எண்ணம்தான் வந்துருக்கு.
எப்படியும் இன்னும் ஏழு எட்டு மாதங்களில் வரும் பஞ்சாயத்துத் தேர்தலில் விழியனை ஜெயிக்க வைத்துடலாம். அதுக்கு இப்போ இருந்தே நாம களத்தில இறங்கி வேலை பார்க்கணும். அதைப்பத்தி உங்ககிட்ட பேசணும்னு நினைச்சேன்.
அதனால டிரைவர் இல்லாம நானே காரை எடுத்துக்கிட்டு வரும் வழியில், முதல்முறையா உங்க வீட்டுக்கு போறோம் பழம் ஏதாவது வாங்கிக்கிட்டு போவோம்னு ஒரு பழக்கடை முன்னால காரை நிப்பாட்டிட்டு இறங்கினேன். என்னைய ஃபாலோ செய்து இரண்டு ராஸ்கல்ஸ் பைக்கில் வந்திருக்காங்க... அதில் ஒருத்தன் என் பக்கத்தில சாதாரணமா வருவது போல, கத்தியால என்னைக் குத்த வந்தான்...
என் பாதுகாப்புக்காகச் சீக்ரெட்டா என்னைத் தொடர்ந்து வாசன் வந்திருக்காங்க..., என்னை ஃபாலோ செய்தவங்களைக் கவனிச்சுகிட்டே வந்ததால அவிங்க என்னைய அட்டாக் பண்ணப் போவதை கவனிச்சு, அந்த நேரத்தில் என்னைய காப்பாத்த குறுக்கே விழுந்து கத்தியை அவர் வயித்துல வாங்கிக்கிட்டார்.
அந்த இரண்டு பேரில் இன்னொருத்தன், என்மேல திரும்பவும் பின்னாடி குத்தவருவதைக் கவனித்த வாசன், அதில் இருந்து காப்பாற்ற என்னைப் பின்புறம் தள்ளிவிட்டார். அதில் கீழே விழுந்த எனக்குத் தலையில் அடிபட்டு ரத்தம் வர ஆரம்பித்தது.
அதற்குள் செக்யூரிட்டி டீமில் உள்ள மற்றவர்கள் ஓடி வந்து கொலை செய்ய முயற்சி செய்த இருவரையும் பிடிக்க டிரை பண்ணினாங்க.
அதில் ஒருத்தன் மட்டும் மாட்டிக்கிட்டான். மற்றொருவன் தப்பிச்சிட்டான்.... இப்போ அவனைப் போலீஸ் கஸ்டடியில் ஹென்டோவர் பண்ணியிருக்கோம். அவனை யார் அனுப்பியதுன்னு வாயை தொறக்கமாட்றான். ஆனா, நம்ம பக்கம் விசாரிச்சதில் அவன் அகத்தியனின் கைக்கூலின்னு தெரிய வந்திருக்கு.” என்றாள்.
“நல்லவேளை மேடம், சரியான நேரத்தில் உங்க செக்யூரிட்டி வந்து உங்களைக் காப்பாத்திட்டார்.” என்றவனிடம்,
“ஆனா அவர் கத்திக்குத்து வாங்கிட்டாரே! அவர் சாதாரணமானவர் இல்லை, எனக்காக எதுவும் செய்யக்கூடியவர். அவர் வாழ்றதே எனக்காகத்தான். அப்படிப்பட்டவர் பத்திரமா ஆபரேஷன் ரூமில் இருந்து வெளில வரணும். அவருக்கு எதுவும் ஆகக்கூடாது.” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது மருத்துவர் ஒருவர் உள்ளிருந்து வந்தார்.
“மேடம், நல்லவேளை இன்னர் ஆர்கன்ஸ் எதுவும் டேமேஜ் ஆகலை, காயத்துக்கு டிரீட்மென்ட் கொடுத்து. தையல்போட்டுப் பிளீடிங் அரஸ்ட் பண்ணியாச்சு.... பிரச்சனை எதுவும் இல்ல... ஆனா, காயம் ஆறுறவரை ரொம்பக் கவனமா இருக்கணும். இன்னும் பதினைந்து நிமிசத்தில் இங்க பெட்டுக்குக் கொண்டு வந்துடுவாங்க” என்றார்.
பின் யோசனையுடன், “விசிட்டர்ஸ் நிறைய அலவ் பண்ண வேணாம் பேஷண்டுக்கு இன்ஃபெக்சன் ஆகச் சான்ஸ் இருக்கு.” என்றார். “ம் ஓகே டாக்டர்.” என்றாள்.
அங்கே ஒவ்வொருவருக்கும், ‘அந்த வாசன் யார்? எப்படி இருப்பார்? இவங்களுக்கும் அந்த வாசனுக்கும் என்ன தொடர்பு?’ எனப் பல கேள்விகள் மனதில் இருந்தது. ஆனால் யாரும் வெளிப்படையாக வாய்திறந்து உரிமையுடன் கேட்க முடியவில்லை.
வாசன் நிழல் உலகத்துக்கு மிகவும் பரிச்சயமானவன். பெரிய அரசியல்வாதிகளும் பிஸ்னஸ் ஆட்களும் மில்லினியர்களும் அவனது பெயரை ரகசியமாக முணுமுணுப்பார்கள். எளிதில் அவனை நேரில் பார்த்துவிட முடியாது.
அவனது குடும்பம் அவனை விலக்கி வைத்திருந்தது. சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து இருக்கும் அவனது குடும்பத்தில் தப்பிப் பிறந்தவன். அவன் குடும்பத்தை விட்டு நிழல் உலகத்திற்குள் முழுமையாக அவனைத் திணித்துக் கொண்டதற்குக் காரணம் கிரஹா.
இதோ வாசன் ஸ்ட்ரெக்சரில் படுக்கைக்குக் கொண்டு வரப்பட்டார். அவனோடு வந்த டாக்டர்ஸ் கிரஹாவிடம் வாசனை, “பிரேவ் மேன், ரொம்ப அலார்ட்டா இருக்கிற ஹெல்தியா ஸ்ட்ராங்கா இருக்கும் மனிதன்.
மயக்க மருந்து நார்மல் அளவு இன்ஜெக்ட் செய்தும் கான்சியஸ் இருந்ததால் ஹெவி டோஸ் கொடுத்தோம். ஆனாலும ஸ்டிச்சர்ஸ் போட்டு முடிக்குறதுக்கு முன்னாடியே கான்சியஸ் திரும்பிடுச்சு. ஏற்கனவே ஹெவி டோஸ் கொடுத்ததால் திரும்ப மயக்க மருந்து இன்ஜெக்ட் பண்ணவும் முடியாது.
ஆனா, உணர்வு திரும்ப ஆரம்பித்த நிலையிலும் கூட வலியை பொறுத்துக்கொண்டு எங்களுக்குக் கோவாப்ரேட் பண்ணினார். ஹி இஸ் எ டெவில், யாராலயும் இதுபோல உணர்வு லேசாகத் திரும்பிய நிலையில் வலியை தாங்கிக்க முடியாது” என்றார்.
அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஸ்டெச்சரில் கொண்டு வந்த வாசனை ஆறுபேர் சேர்ந்து கட்டிலுக்கு மாற்றினர். பெட்டில் படுத்திருந்தவனின் பார்வை அங்கு உள்ளவர்களின் மேல் அலைபாய்ந்தது.
எதுவோ அவன் சொல்ல நினைப்பதை கண்டு அவனின் அருகில் குனிந்து என்ன என்று கேட்கும் விதமாகக் கண்களில் வினவியவளிடம், “யார் இவங்க...? சீக்கிரம் அனுப்பிடணும்.... எவ்வளவுதான் எச்சரிக்கையா இருக்கோம்னு நினைச்சாலும் ஒரு சின்ன மிஸ்டே கூடப் பெரிய ரிஸ்க் ஆயிடும்.” என்றான்.
“காம்டவுன் வாசன், வெளியில் உங்க ஆட்கள் இருக்காங்க இவங்க...” என்று திரும்பிப் பார்த்து விழியனை சைகை காட்டி அருகில் வரவைத்தாள்.
அவனை வாசனுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக, “இவர்தான் விழியன். சுயேட்சையாகத் தேர்தலில் நான் சொன்னேன்றதுக்காக நின்னவர். இவரை ஜெயிக்கவைக்கத் தான் நாம எஃபர்ட் போட்டோம்.” என்றாள்.
அவனைக் கூர்ந்து அளவிடும்படி பார்த்த வாசன், அறிமுகத்தை ஏற்றுக்கொள்ளும் பொருட்டு அவனைப் பார்த்துக் கண் மூடித்திறந்தார்.
விழியனுக்கு அதிகப்படியான வாசனின் எச்சரிக்கை உணர்வு, வாசலில் நின்று கொண்டிருந்த ஆட்களின் தோரணை மற்றும் ஹாஸ்பிடலில் அவர்கள் இருந்த அறையின் செல்வச்செழிப்பு எல்லாம் பார்த்து அவனுக்குள் பலவித எண்ணங்கள்.
அவனும், “ரெஸ்ட் எடுங்க சார், கெட் வெல் சூன்!” என்று சொல்லியவன்,
“கிரஹா மேடம், நீங்க சாரை பார்த்துக்கோங்க. எங்களால உங்க வீட்டில் உள்ள பெரியவங்களோடு வேற பிரச்சனை.
நீங்க எனக்குத் தேர்தல், அரசியல் இரண்டிலும் பக்க பலமா இருக்கிறீங்க. இப்படி ஒரு சூழலில் உங்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவியா இருக்கணும்னு நினைக்கிறேன்.
ஆனா என்கிட்ட உதவி வேணும் என்று வந்து நிக்கிற நிலையில் நீங்க இல்லை. அதனால எதுவும் ஹெல்ப் நான் செய்யவான்னு கேட்பதுகூட அபத்தமா இருக்கு. உங்களுக்கு ஏதாவது வேலை செய்து தர நான் தேவைபட்டா ஒரு போன் பண்ணுங்க.
அடுத்த நிமிஷம் உங்க முன்னாடி நிப்பேன். நம்ம கட்சியோட அடுத்த மூவ் பற்றி ரெண்டு நாள் சென்று சூழ்நிலை கொஞ்சம் சரியானதுக்குப் பிறகு பேசலாம்” என்றான்.
“ம்... சரி விழியன், தேவைன்னா உங்களைத்தான் நான் முதலில் கூப்பிடுவேன். இதுபோல நீங்க பெரியவங்க நாங்க சின்னவங்கன்னு பேசி எஸ்ஸாக எல்லாம் விடமாட்டேன்.” என்று சூழலை சற்று இயல்பாக்க கூறினார்.
அந்த நேரம் வாசலில் நின்று கொண்டிருந்தவன் வந்து, “ஜீ, மினிஸ்டர் தேவராம் பி,ஏ டெல்லியில் இருந்து கொஞ்சம் முன்னாடி கால் செய்து உங்க கூடப் பேசணும்னு சொன்னாங்க. உங்களுக்கு டிரீட்மென்ட் போய்கிட்டு இருக்குனு சொன்னேன். இன்னும் பதினைந்து நிமிசத்தில் கால் பண்றேன்னு சொல்லி இருக்கார். உங்களால் பேசமுடியுமா? என்ன பதில் சொல்ல?” என்றதும்,
“ஏதாவது இம்பார்ட்டென்ட் விஷயமாக இருக்கும். ஐ கான்ட் ஸ்பீக் நார்மல் நவ். ஒரு பத்து நிமிசத்தில் நாமே கால் பண்றோம்னு டெக்ஸ்ட் பண்ணிடு. நான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிக்கிறேன். அதுக்குள்ள நார்மலா பேச என்னைக் கொஞ்சம் திடப்படுத்திக்குறேன்.” என நலிந்த குரலில் சொன்னான் வாசன்.
‘இனி நாம் அங்கு இருப்பது அவர்களுக்குத் தொந்தரவாக இருக்கும்’ என நான்கு பேரும் விடைபெறுவதற்காக வாசன், கிரஹா இருவருக்கும் கை குவித்து வணங்கி வாசல் நோக்கிச் சென்றனர்.
அப்போது கதிர் கிரஹாவை திரும்பிப் பார்த்து “உங்க தலையிலும் காயம் இருக்கு! கவனமா காயம் ஆறுறதுக்கு மருந்து மாத்திரைகளை எடுத்துக்கோங்க மேடம்.... அப்போ நாங்க கிளம்புறோம்.” என்றான்..
---தொடரும்---
****
திண்ணையில் எப்பவும் போலத் தனது வயது பெருசுகள் இருவருடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த காளிதாஸ், அவள் வருவதைக் கண்டு,
“வாம்மா... வாம்மா... ஜோதி, சாப்பாடு கொண்டு வந்திருக்கியா? உள்ள போய் விழியனுக்கு வை... நான் சாப்பிட நேரமாகும்.” என்றவர்,
மேலும் வீட்டிற்குள் இருக்கும் விழியனை நோக்கி,
“விழியா, உனக்கு என் பேத்தி இட்லி கொண்டு வந்துட்டா!” என்று சத்தம் கொடுத்தார். அதில் விழியன் மட்டுமில்லாது அவனுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மற்ற இரு நண்பர்களும் திரும்பிப் பார்த்தனர்.
மேலும் உள்ளே எட்டிப் பார்த்த படி... “ஏலேய் நீங்க ரெண்டுபேரும் உங்க வீட்டில போய்ச் சாப்புட்டு வாங்க. அவன் காலையில் இருந்து சரியா சாப்பிடாம கொள்ளாம கிடக்குறான். என் பேத்தி அவனுக்கு மட்டும்தான் சாப்பாடு கொண்டு வந்துருக்கா.” என்று சொல்லி அவர்களை விரட்டினார்.
“தாத்தா...” என்று அவரின் வார்த்தையை அடக்கச் சத்தம் போட்டவனை நோக்கி...
“நீ பேசாத விழியா! கல்யாணம் முடிச்சு கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆகிடுச்சு. இவளைப் போய்ப் பார்க்கணும்னு உனக்குத் தோனுச்சா?
பாவம் என் பேத்தி, உனக்கு ஒரு சங்கடம் வந்ததும் நீ போய் அவளைப் பார்க்கலைன்னு நினைச்சுச் சலிப்பு போட்டுக்கிட்டு இருக்காம அவளே சாப்பாடு கொண்டு வந்துருக்கா பாரு.” என்றார்.
அவனின் உடன் இருந்தவர்கள் இனி தாங்கள் அங்கு நிற்பது அபத்தம் எனப் புரிந்துகொண்டு, “அப்போ நாங்க கிளம்புறோம், மத்ததைப் போனில் பேசிக்கலாம்.” என்றவர்கள் ஜோதியிடம், “வரோம் தங்கச்சி!” என்று சொல்லிச் சென்றார்கள்.
அவனின் தாத்தாவும், “அப்போ நீங்க சாப்பிடுங்க, நான் இதோ இப்போ வந்துடுறேன்.” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.
ஜோதிக்குச் சங்கடமாக இருந்தது... தங்களுக்குத் தனிமை கொடுக்கத்தான் தாத்தா இத்தனை அலம்பல் பண்ணுகிறார் என்று தெரிந்த போதும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற லஞ்சை உண்டானது.
தாத்தா சொன்ன வார்த்தையில் தனது தவறு புரிந்தது விழியனுக்கு எனவே “சாரி ஜோதி” என்றான்.
“ஹய்யோ, சாரி எல்லாம் என்கிட்ட கேக்காதீங்க” என்றவள் மேற்கொண்டு பேச போக,
“ஹேய்... இரு இரு! நீ நான் வந்து பேசாததை பெருந்தன்மையா எடுத்தாலும் நான் செய்தது தப்புதானே.... தப்புக்கு மன்னிப்பும் என் பக்க காரணமும் நான் சொல்லணும்ல.... உன்னைய பார்க்க வராம இருந்ததுக்குக் காரணம் எலெக்சன் வேலைனு பொய் சொல்ல மாட்டேன்....
என் வீட்டுப் பக்கம் வர கொஞ்சம் சங்கடமா இருந்தது. உன்னைய பார்க்க என் வீட்டை தாண்டித்தான் வரணும். அம்மா வாசலில் நின்னா அவங்களைப் பார்த்து பேசாம வரவும் முடியாது.
ஒருவேளை அவங்க என்மேல உள்ள கோபத்தில் என்னை யாரோ மாதிரி கண்டுக்காம போனாலும் அது என்னை வருத்தப்படுத்தும்.... அதனாலதான் நான் வரலை. ஆனா உன்னைய அவாய்ட் பண்றதுக்காக நான் வராம இருந்தேனு நெனெச்சுடாத....” என்றான்.
அவன் வருந்துவது பொறுக்காமல், “அப்படிலாம் நினைக்கலை அதனாலத்தான் நான் இப்போ வந்தேன். இனி, நானே உங்களைப் பார்க்க வந்துடுறேன். இன்னைக்குக் காலையில் எலெக்சன் ரிசல்ட் தெரிஞ்சதில் இருந்து பயங்கர அப்சட் ஆகிட்டேன்...
உங்களை எப்படியாவது வந்து பார்த்து வருத்தப்படாதீங்கன்னு ஆதரவா நாலு வார்த்தை பேசணும்னு நினைச்சேன். ஆனா கொஞ்சம் தயக்கமாவும் இருந்தது.
நம்ம மக்களுக்கு நல்லவங்க யாரு! கொள்ளையடிக்கிற அயோக்கியன் யாருன்னே தெரியலை...! நீங்க ஜெயிக்காம போனது இந்தத் தொகுதி மக்களுக்குத்தான் கெட்டது.
ஊருக்கு நல்லது செய்யணும்னு கிளம்புன உங்களுக்கு எம்புட்டுக் கஷ்டம்.... வீட்டை விட்டு வெளிய வந்து, ஆக்சிடெண்டாகி, அந்தக் காயத்தோடவே எலெக்சன் வேலை, அது பத்தாதுன்னு நம்மளோட இஸ்யூஸ். இதையெல்லாம் மீறி மனசு உறுதியோட தேர்தலை சந்திச்சவங்களுக்கு இப்படி ஒரு தோல்வி கிடச்சிருக்கக் கூடாது.” என்றவள் தானே இத்தனையும் அனுபவித்ததுப்போலத் தாரை தாரையாகக் கண்ணீர் கொட்டினாள்.
“ஏய் ஜோதி அழாத.” என்று அவளின் கண்ணீரில் பதறி, அவளின் அருகில் வந்தவனின் கைகள் அன்னிச்சையாக எழுந்து அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டன.
அவனின் அச்செயலில் சட்டென்று தனது உணர்வுகளை மறைத்து, “இல்ல இல்ல நான் அழல. அதுவா கண்ணீர் ஊத்துது. கண்ணில தூசிபட்டுருச்சோ என்னவோ?” என்று எதிர்பாராத அவனின் ஸ்பரிசத்தில் விதிர்விதிர்த்து போனவள், சங்கோஜத்தில் அவனைத் தள்ளி நிறுத்த அவ்வாறு சொன்னாள்.
சொல்லிலும் செயலிலும் தெரிந்த வளர்ந்த பெண்ணில் கண்ட குழந்தைத்தனத்தில் ஈர்ப்பு உண்டானது விழியனுக்கு. எனவே கண்கள் விரிய அவளைப் பார்த்தபடி உதட்டில் தவழ்ந்த சிரிப்புடன்,...
“அதெப்படி திடீர்னு கண்ணுல தூசி விழும்?” என்று குறும்பாக வினவியவன், அவளின் கைப்பற்றி இழுத்து அன்று வெண்ணிலாவுடன் அமர்ந்திருந்த அதே கட்டிலில் தனக்கு நெருக்கமாக ஜோதியை அமர்த்தினான்.
அவளின் தோள் மீது கை போட்டு ஹஸ்கி வாய்சில், “உனக்கு என்னைப் பத்தி எல்லாம் சொல்லிடுறேன் ஜோதி. நீ இங்க வந்தா வெண்ணிலாவை பற்றித் தான் முதலில் என்கிட்ட விசாரிப்பனு நெனச்சேன்.
ஆனா அதுபத்தி கேட்காம என்னோட நிலையை யோசிச்சு அதுக்காக நீ பீல் பண்ணின பார்த்தியா. அதிலேயே நான் உன்கிட்ட விழுந்துட்டேன்.
வெண்ணிலாவுக்கு அப்பறம் என் லைஃப்பில் இன்னொரு பொண்ணே இல்லைன்னு நினைச்சிருந்தேன். ஆனா அதைக் காலம் உடைச்சு என் துக்கத்தைச் சந்தோஷத்தை பகிர்ந்து வாழ உன்னை எனக்குக் குடுத்துருக்கு. எனக்கு இது போதும், இந்த அன்பு போதும்.
நீ என் வாழ்க்கைக்குள்ள வருவதுக்கு முன்னாடி எனக்குன்னு வருரவளுக்கு என் அன்பு மட்டும் போதாதுன்னு நினைச்சிருந்தேன்.
என்னோட வாழ்க்கையில் அரசியல் களப்பணிக்கு தான் என்னோட நேரம், என்னுடைய உழைப்பை எல்லாம் போடணும்னு நெனச்சதால அன்பையும், அடிப்படை தேவையும் தவிர வேற பெருசா எதுவும் ஒரு பொண்ணுக்கு என்னால கொடுக்க முடியாதுன்னு புரிஞ்சது.
அதனால கல்யாணமே வேண்டாம்னு முடிவை வெண்ணிலாவின் செயல் என்னை எடுக்க வச்சிருந்தது” என்றவனிடம்.
“அவங்க உங்க லைஃப்ல முன்னாடி இருந்தது பத்தி எந்த நெருடலும் இல்ல... அன்னைக்கு உங்களைப் பேசியதை வச்சே அவங்க குணம் தெரிஞ்சிடுச்சு... அப்போ உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் முடியலை... ஆனாலும் உங்களுக்கு அவங்க வேணாம்னு தான் நினைச்சேன்.” என்றாள்.
அவளின் வார்த்தைகள் விழியனுக்குப் பெரும் நிம்மதியை கொடுத்தது... இவள் எனக்குக் கிடைத்தது என் அதிர்ஷ்டம் என்று எண்ணிக்கொண்டான்.
“நீ இப்படிச் சொன்னது எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்குது ஜோதி, இருந்தாலும் முன்னாடி என் வாழ்க்கையில இருந்த அவளைப் பற்றி முழுசா ஒரு தடவை உன்கிட்ட சொல்லிடுறேன்.
ஏன்னா இனி எந்தச் சூழலிலும் அவளை வைத்து நமக்குள் வேற சந்தேகமோ சண்டையோ வந்துடக்கூடாது.
நானும் அவளும் இரண்டு வருசமா காதலிச்சோம். காதலிச்ச புதுசில் என் மேல ரொம்ப அன்பாத்தான் இருந்தா... அப்போ நான் என்னோட பைனல் இயர் எஞ்சினியரிங் படிப்பில் இருந்தேன். படிப்பு முடிஞ்சதும் நான் உள்ளூரில் சொந்தமா அப்பாவை போல ஹோட்டல் நடத்தணும்னு சொன்னபோதுதான் எனக்கும் அவளுக்கும் இடையில் முதல் பிரச்சனை வந்தது.
காலேஜ் காம்பஸ் இண்டர்வியூவே அட்டன் பண்ணலை. ஏன்னா நான் டிகிரி வாங்குறதுக்கு மட்டும்தான் படிச்சேன்.
படிச்ச படிப்புக்கான வேலைக்குப் போக எனக்கு மனசு வரலை. ஏன்னா எனக்கு உள்ளூரில் இருக்கணும்... நான் நினைச்சதை தடையில்லாமல் செய்வது போலத்தான் வேலை வேணும்னு நினைச்சேன்.
இன்டர்வியூ அட்டன் பண்ணலை எனக்குக் கிடைக்கிறதுக்குப் பதிலா அந்த வேலை வேணும்னு நினைக்கிறவங்களுக்குக் கிடைக்கட்டும்னு இருந்துட்டேன். அதைத் தெரிஞ்சுகிட்ட வெண்ணிலா என்கிட்ட ரொம்பக் கோவிச்சதுபோலவே, வீட்டிலும் என் அம்மா, அப்பா எல்லாரும் என்னோட அந்தச் செயலுக்கு ரொம்பத் திட்டினாங்க.
அப்போதான் வீட்டையும், வெண்ணிலாவையும் நினைச்சு அவங்களுக்காகப் போய்தான் பார்ப்போமே எனச் சென்னையில ஒரு கம்பெனியில் இன்டர்வியூ அட்டன் செய்து வேலையில் சேர்ந்தேன்.
ஆனா அங்க எனக்குச் செட்டே ஆகலை.
நாமதான் தப்பா எதுவும் நடந்தா தப்பு பண்றவங்க ஆபீசரா சீனியரான்னு பார்க்காம எதிர்த்து கேக்குற பழக்கம் இருக்கே, அதனால அங்க அடிக்கடி தகராறு வந்தது.
அவகிட்ட எதையும் மறைக்க மாட்டேன் அங்கு நடப்பதை சொல்வேன். அதைக் கேட்டுட்டு அவ எப்பவும் சொல்றது, அட்ஜஸ்ட் பண்ணு... காசு வேணுமில்ல... பிறகு எப்படி முன்னேற...? நீதான் உலகத்தைத் திருத்த போறியா...? இதுபோல வார்த்தைகள் வரும்.
ஆனாலும் நான் மாறாததால் அவள் சொன்னாள், உன் முன் கோபத்தால நீ எந்த வேலையிலும் உருப்படியா தங்கமாட்டப்போல. உன்கூட வாழப்போறதை நினைச்சா பயமாயிருக்குனு சொன்னாள்.
அவளுக்குக் கார் வாங்க, வீடு வாங்க, ஜுவல் வாங்கன்னு நிறைய ஆசைகள் இருக்கு. அதுக்கு நிறைய நான் சம்பாதிக்கணும்னு எதிர்பார்ப்பு இருந்துச்சு. ஆனால் என்னால அதெல்லாம் அவளுக்குச் செய்ய முடியும்னு தோணலைன்னு சொன்னாள்.
அப்போதான் எனக்கு இரண்டு பேருக்கும் சரிப்படாதுனு புரிய ஆரம்பிச்சது. இரண்டுபேரும் விலகிடுறதுதான் பெஸ்ட்ன்னு நினைச்சேன். அவளும் அதையேத்தான் ஃபீல் பண்ணினா.
நாங்க மியூச்சுவலா பேசித்தான் எங்க லவ்வ பிரேக்கப் பண்ணினோம். முதலில் எனக்குக் கஷ்டமாத்தான் இருந்தது.
யோசிச்சுப் பார்க்கும்போதுதான், கல்யாணம், பொண்ணுங்க, குடும்பம்னா இப்படித்தான் இருக்கும்போல என்ற பயம் எனக்குள் வந்துருச்சு. எனவே கல்யாண வாழ்க்கையில் மாட்டக்கூடாதுன்ற எண்ணம் வந்துச்சு.” என்றான்.
அவன் பேசி முடித்ததைக் கேட்ட ஜோதி, “இங்க பாருங்க, நான் நீங்க நினைக்கிறதுபோல இல்ல... எனக்கு உங்ககிட்ட புடிச்சதே இப்படி எளிமையா வாழறதும், மத்தவங்களுக்கு உதவும் உங்க குணமும்தான். நானும் உங்களுக்குத் துணையா இருப்பேன். உங்களை டார்ச்சர் எல்லாம் பண்ணமாட்டேன் தெரியுமா!” என்றாள்.
உடனே, “ஹாஹாஹா!” என்று வாய்விட்டுச் சிரிப்பை உதிர்த்தவன்,
“அது நீ பேச ஆரம்பிச்சதுமே புரிஞ்சுகிட்டேன். நீ என் வெளித்தோற்றத்தை வச்சு என்னைப் பார்க்கலை. என் மனசைத்தான் நீ பார்க்குற! இப்படிப்பட்ட ஒரு தேவதை எனக்குக் கிடைச்சிருக்கே... இதைவிட வேறு என்ன வேணும்...!?
நடந்து முடிஞ்ச தேர்தலில் நான் ஜெயிக்கமாட்டேன்னு எனக்குத் தெரியும்... அதனால நான் தோற்றுப்போனது வருத்தத்தைத் தரலை. பதவிக்கு ஆசைப்பட்டு நான் தேர்தலுக்கு வரலை. பதிவியில் இருக்கிறவங்க மக்களுக்குச் செய்யவேண்டிய உதவிகளை, பணிகளை, திட்டங்களை சரியா செய்யாததால எதிர்த்துக் கேள்வி கேட்டுச் சரியா செய்ய வைக்கணும்.
அப்படிச் செய்யாட்டி அந்த ஆளை பதவியை விட்டு இறக்கணும். ஒரு நல்ல கேண்டிடேட்டை அந்த இடத்தில் உட்கார வைக்கணும்னு தான் அரசியலுக்குள்ள வந்தேன். ஆனா நான் தேடிய நல்லதன்மை உள்ளவங்க யாருமே அரசியலுக்கு வர ரெடியாயில்ல. அதனால வேற வழி இல்லாம நானே நிக்க வேண்டியதா போச்சு.
ஆனா, என்னை நம்பி இப்போ களத்தில் நிறையப் பேர் இறங்கி இருக்காங்க. அதனால நல்ல திட்டங்களுக்கான செயல்பாடுகளுக்கு அந்தக் கூட்டத்தை ஒருங்கிணைச்சு பெரிய அளவில் வளர்கணும்ற எண்ணம் இப்போ வந்துருக்கு. இதுபோன்ற நல்ல சிந்தனை உள்ள ஒரு கூட்டத்தோடு பதவியில் உட்கார்ந்தா நிறைய நல்லது செய்யலாம். ஆனால் அது உடனே நடக்காதுன்றதும் எனக்குத் தெரியும். அதுக்கு நீயும் என்கூடச் சப்போர்ட்டா இருப்பியா ஜோதி?” என்று கேட்டதும்,
அவன் கைபிடித்துக் குழந்தைபோல அடித்து, “சத்தியமா சொல்றேன், உங்களுக்கு உதவியாத்தான் நான் இருப்பேன்..., எப்பவும் உங்களோட கட்சி வேலைக்கு நான் உபத்திரமா இருக்க மாட்டேங்க.” என்றாள்.
அவளின் வார்த்தையில் மனம் குளிர்ந்து அவளின் மேல் அன்பு கூடியது, தன்னுடன் சேர்த்து ஆசையாக அணைத்துக்கொண்டான்.
முதல் அணைப்பு... அவனின் அணைப்பில் காமமில்லை... அன்பு மட்டுமே முதலில் இருந்தது...
பெண் அவளுக்கோ எதிர்பாராத அணைப்பு சட்டென உடலில் மின்சாரம் பாய்ந்ததுபோல ஆனது... அணைத்தவனின் கரங்கள் அவளின் மென்மையை உணர்ந்ததும் இன்னும் இன்னும் அவளைத் தொட்டுப் பார்க்கவேண்டுமென்ற ஆர்வமும் கிளம்பியது. உரிமை இருந்ததாள் அது கொடுத்த தைரியம் இன்னும் முன்னேற சொல்லி அவனுக்குள் உணர்வுகளைக் கட்டவிழ்த்தது.
அந்த நேரம் அவனின் மொபைல் ஒலி எழுப்பியது. ஆமாம் அகத்தியன் ஜெயித்ததுமே அவனின் கைவரிசையைக் காண்பிக்க ஆரம்பித்துவிட்டான்.
மொபைல் அழைப்பை ஏற்றவனிடம் பேசிய அவனின் நண்பன், “விழியா, கிரஹா மேடத்தைக் கத்தியால் குத்த பார்த்துருக்காங்க. அப்போ அவங்க செக்யூரிட்டி ஆட்கள் மேடத்தைக் காப்பாத்தியிருக்காங்க. ஆனாலும் பாடிகார்டா வந்தவனுக்குக் கத்திக்குத்தி விழுந்துருக்கு. மேடத்துக்கும் அடிபட்டு ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருக்காங்க.” என்று சொன்னதும்,
விழியன் மிகவும் அதிர்ந்து, “என்னடா சொல்ற? இதோ நான் இப்பவே வரேன். எந்த ஹாஸ்பிடல்?” என்று கேட்டுவிட்டு... கேட்ட செய்தியால் கணத்தில் தன்னவளுடனான உணர்வுகள் தணிந்துபோய் அப்படியே கிளம்ப ஆயத்தமானான்.
“என்னங்க யாருக்கு என்ன ஆச்சு...? அச்சோ நீங்க சாப்பிடாம கிளம்புறீங்க.” என்றவளைத் திரும்பிப் பார்த்தவன், கோபத்துடன் அவளை இழுத்து அவள் உதட்டில் அழுத்த முத்தம் கொடுத்துவிட்டு உடனே விலகி, “இதோ சாப்டாச்சே” என்றான்.
அவள் கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிடாததால் உண்டாகும் அவளின் மனவருத்தத்தை மாற்றவே அவ்வாறு அணைத்துவிட்டவனுக்கும் அணைப்பில் அடங்கி முதல் முத்தத்தில் இருந்து விடுபட்டது கூடத் தெரியாமல் ஃப்ரீஸ் ஆகி நின்றிருந்தாள்.
இத்தனை விரைவில் இருவருக்கும் நெருக்கம் உண்டாகுமென எண்ணவில்லை... முதலில் தங்களின் அன்பை பகிர்ந்து மெல்ல மெல்ல காதலில் திளைத்து கால ஓட்டத்தில் மெல்ல இணைவோம் என்றே எண்ணி இருந்தனர்.
ஜோதியின் அன்பு அவனைச் சட்டென வீழ்த்திவிட்டது. என்னவள் என்று மயங்க வைத்துவிட்டது. தனது அதிரடி இதழ் முத்தத்தில் ஃப்ரீஸ் ஆகி நின்றவளை கன்னத்தில் தட்டி.... உதட்டுக்குள் அடக்கிய சிரிப்புடன் “இப்போ சாப்பாடு முடிஞ்சது.. அடுத்து பசிக்கும் போது சாப்பிட்டுகலாம். உன் புருஷனுக்கு முக்கியமான வேலை வந்துருச்சு கிளம்புறேன் ஜோதி” என்று சொல்லிக்கொண்டே சட்டையை எடுத்து அதன் பட்டனை போட்டுக்கொண்டே ...
“போயிட்டு வந்து பேசுறேன். என் ஃபோன் நம்பர் நோட் பண்ணிக்கோ.” என்று கடகடவென்று அவனின் நம்பரை சொல்ல சொல்ல, அவன் அதிர்ச்சி வைத்தியத்தில் இருந்து மீண்டு, அவன் கூறிய நம்பரை உள்வாங்க முடியாமல் திணறியவளைக் கண்டவன்,
“சரி விடு. இப்போ உன் மண்டையில் ஏறாது. தாத்தாட்ட கேட்டு வாங்கிக்கோ.” எனச் சொல்லிவிட்டு கிரஹாவுக்கு எதுவும் ஆகக்கூடாது... என எண்ணியபடி வெளியேறினான்.
வாசல் விட்டு சற்று தள்ளி நின்று கொண்டிருந்த அவனது நண்பர்கள் இருவர் அவனது வரவுக்காகவே காத்திருந்தது போல அவனுடன் இணைந்து கொண்டனர்.
குளோபல் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருந்த கிரஹாவை பார்க்க மருத்துவமனை வாசலுக்கு அவன் போனபோது, ஆட்டோவில் அங்குக் கையில் ஸ்டிக் உதவியுடன் வந்து இறங்கினான் கதிர்.
வாசல்படி ஏறப்போகும் நண்பனைப் பார்த்து, “விழியா!” என்று சத்தம் கொடுத்தான் கதிர்.
திரும்பிப் பார்த்த விழியன் வேகமாக அவனின் அருகில் போய் அவனது மற்றொரு காலுக்கு ஊன்றுகோலாய் நின்று கொண்டான்.
“நீ ஏன்டா இப்போ வந்த...? இப்போதான் கொஞ்சம் சரியாயிருக்கு” என்று கேட்க வாய் திறக்கும் முன்பே, கதிர் அவனிடம்,
“டேய் ஏன்டா என்னைய கூப்பிடாம நீ வந்துட்ட? மேடத்துக்கு மட்டும் எதுவும் ஆச்சு. கொய்யால இதை எந்த மூதேவி செஞ்சுச்சோ அதை நான் போட்டு தள்ளிட்டு ஜெயிலுக்குப் போயிருவேன்.” என்று சொன்னான்.
“டேய் லூசு.” என்று அவனின் பேச்சைக் கேட்டு பல்லைக் கடித்தபடி அதட்டினான் விழியன். “நாம பப்ளிக் பிளேசில் இருக்குறோம். வாயை அடக்கி பேசு கதிர்.... நம்மளோட ஒவ்வொரு மூவையும் இப்போ கண்காணிச்சுக்கிட்டு இருப்பாங்க.... நம்ம வார்த்தைகளில் ஒண்ணு தப்பா வந்தாலும் மீடியாவில் வச்சு செஞ்சிடுவாங்க.”
சத்தமே வராமல் முறைத்து பார்த்து மெதுவாக முணுமுணுத்தவன், அவனைக் கூட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தான். விழியனின் செயல் பார்ப்பதற்குக் கதிர் பேசியதற்கு அவனை திட்டுகிறான் என்பது போன்றே வெளியில் தெரிந்தது.
உள்ளே ரிஷப்ஷனில் கிரஹா அட்மிட் ஆகியிருக்கும் வார்டு பற்றி விசாரித்ததுமே.... அங்கு நின்றுகொண்டிருந்த இரண்டுபேர் அவர்களிடம் வந்து,
“நீங்க யாரு...?” கேட்டனர். அவர்களில் ஒருவன் கேள்விக்குப் பதில் சொல்லும் முன்பே விழியனை அடையாளம் கண்டு “மிஸ்டர் செவ்விழியன்..?” என்றதும் ஆமெனத் தலையசைத்தான்.
“எங்க கூட வாங்க மேடம் ரூமுக்குப் போலாம்” என்றதும் நண்பர்கள் இருவரும் பின்னால் வந்த மற்ற இரு நண்பர்களையும் தங்களுடன் அழைத்துக் கொண்டு கிரஹா இருக்கும் அறைக்குச் சென்றனர்.
***
அத்தியாயம் 21
விழியன் ஊர் கூட்டத்தில் பிராது கொடுப்பேன் என்று சொல்லிமுடிக்கும் முன்பே காளிதாஸ் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.
விழியனின் எண்ணமும் சொல் செயல் எல்லாமே பொதுவாழ்வின் பக்கம் முழுதாகத் திரும்பி விட்டதே... அவன் மணவாழ்க்கையில் இனி ஆர்வம் இல்லாமல் போய்விடும் சாத்தியக்கூறு அதிகம் இருப்பதாய் உணர்ந்து மனதினுள் வருந்திக் கொண்டிருந்தார்.
மேலும் அவர் விழியனின் நண்பர்களின் மூலம் ஊருக்குள் இவர்களைப் பற்றிய வதந்தி ஆரம்பித்ததுமே அன்னைக்கு வீட்டுக்கு வந்த பெண் (வெண்ணிலாவை) யார் என விசாரித்து, அன்று நடந்த உண்மைகளையும் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தார்.
காதல் தோல்வியில் முடிந்த விழியன், அவன் வாழ்க்கை பயணத்தில் இனி இன்னொரு பெண்ணை அவ்வளவு எளிதில் திரும்பி சேர்க்கமாட்டான் என்பதையும் அதற்கு அவனின் அரசியல் பிரவேசமும் ஒரு காரணமாக அமையும் என்பதையும் உணர்ந்தவர்,
‘இந்தப் பிரச்சனையைச் சாக்காக வைத்து ஜோதியை அவனுக்குக் கல்யாணம் முடித்துவைக்கப் பார்க்கணும். இல்லையேல் அவன் கல்யாணம் முடிக்காமல் கடைசி வரை ஒத்தையில் நின்றுவிடும் வாய்ப்பு இருக்கு’ என நினைத்துக்கொண்டார்.
எனவே, “நீ கொஞ்சம் சும்மா இரு விழியா...!” என்றவர்
“எம்மா காந்தா, என் பேரன் சொன்னதைக் கேட்டேல்ல. அவன் படிப்பு... அவனோட வருமானம்... எல்லாத்தையும் கேட்டேல்ல.., இதுதான் அவன் நிலைமை.
இப்போ நீதான் பதிலை சொல்லணும், இப்படிப் பேச்சு ஊருக்குள்ள வந்துருச்சு, இதுக்கு என் பேரனுக்கே உன் மகளை நீ கல்யாணம் செய்து கொடுத்துட்டா, இந்தப் பேச்சை வச்சு யாரும் வம்பு பேசினாலும் புஸ்வானமாய்ப் போயிடும்.
இல்லன்னா உனக்கு மான நஷ்டமா நாங்க என்ன செய்யச் சொல்றீயோ அதைச் சொல்லு செய்துடுறோம்... நீ காசுக்கு சாப்பாடு போட்டயோ சும்மா போட்டியோன்னு எல்லாம் நான் யோசிக்கலை.
நீ போட்ட உப்பை கொஞ்ச காலம் நாங்க சாப்பிட்டு வாழ்ந்துட்டோம். அன்னம் இட்ட உனக்கே என் பேரனால ஒரு அவச்சொல் வருறதை நான் விரும்பலை.
என் பேரனுக்கு உன் மகளைக் கல்யாணம் செய்யத் தகுதி இருக்கிறதா உனக்குத் தோனுச்சுன்னா இப்போவே இங்கேயே உன் பொண்ணை என் பேரனுக்குக் கல்யாணம் செய்துகொடுக்குறதா சொல்லிட்டுப்போ... ” என்றார்.
வீட்டில் இருந்த ஜோதியிடம், “உன் அம்மா, காளிதாஸ் அய்யா கூட அவர் வீட்டுக்கு முன்னாடி சத்தம் போட்டுகிட்டு இருக்காங்க.” என்று கேள்விப்பட்ட ஜோதி தனது அம்மாவை இழுத்துக்கொண்டு போக அங்கு ஓடி வந்தவள் காதில் காளிதாஸ் சொன்ன வார்த்தைகள் விழுந்தது.
‘ஐயோ! ஒரு தப்பும் செய்யாத என்னையும் அவரையும் இப்படி அசிங்கப்படுத்துறாங்களே!
இப்போ எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்தைச் செய்தால் நாங்க தப்பாகப் பழகுனோம்றதை ஒத்துக்கொண்டது போல ஆகாதா? இந்தத் தாத்தா எப்பவும் சரியாகப் பேசுவாரே, இதென்ன இப்போ மட்டும் இப்படிப் பேசுறாங்க?’ என நினைத்து விக்கித்துப் போய் நின்றாள்.
ஆனால் காந்தா, அவரிடம் எதிர்பார்த்தது இந்தப் பதிலைத்தான்.
‘ஆமாம் சும்மாவே தான் போடும் நகைநட்டுக்கு நல்ல மாப்பிள்ளையைத் தேடி கண்டுபிடித்துத் தன மகளுக்குக் கொண்டுவருவது சிரமம்.
இருந்தாலும் அந்த ஒத்தைப்பத்தி வீட்டுக்கும் தான் சேர்த்து வைத்திருக்கும் ஐந்து பவுனுடன் இன்னும் மூன்று பவுன் கஷ்டப்பட்டுச் சேர்த்துவிட்டால் ஆகும் எட்டுபவுன் நகைக்கும் சம்மதித்து.... காலேஜ் மூன்றாவது வருஷம் படித்துக்கொண்டு இருக்கிற ஜோதி ஏதோ ஒரு கடை கண்ணிக்கு அவ படிப்புக்கு ஏத்தது போலச் சம்பளத்துக்கும் வேலைக்கும் போய்விட்டால் உழைக்கிற ஒருத்தனுக்குக் கட்டிக்கொடுத்துட்டு அவ நிம்மதியா வாழுறதை பார்த்தா போதும்னு நான் இருந்தேன்.
வினையா பெரியவங்க காளிதாஸ் சொன்னாரேன்னு அவர் பேரனுக்குச் சாப்பாடு குடுக்கப்போய் அவப்பேர் வந்ததுமில்லாம விழியனோட, அம்மாவே இப்படிக் கண்டபடி பேசுனதுனால இனி கண்டவனும் ஆள் இல்லாத வீடுன்னு கைவச்சு பார்ப்போம்னு இதைச் சாக்கா வச்சு வருவாங்க.
இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கணும்னா வாணி பேசுன பேச்சுக்கு சரியான பதிலடி கொடுக்கணும்னா அந்த விழியனையே என் மகளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறதுதான் இதுக்குத் தீரவென முடிவெடுத்தே இங்கு வந்து தகராறு செய்தார்.
காளிதாஸ் விழியனுக்குத் தன் மகளைக் கல்யாணம் செய்யச் சம்மதம் சொல்லிட்டுப்போ என்றதைக் கேட்டு, “உண்மையாத்தான் சொல்றீங்களா?” என்று காந்தா பேச ஆரம்பித்தார்.
அவர் கல்யாணத்துக்குச் சம்மதம் தான் சொல்லப்போகிறார் என்பதை உணர்ந்துகொண்ட விழியன் வேகமாகக் குறுக்கே புகுந்து, “காந்தாக்கா, ஜோதியோட விருப்பம் தெரியாம அவகிட்ட சம்மதம் கேக்காம நீங்களா முடிவெடுக்காதீங்க” என்று சொன்னான்.
அதைக்கேட்ட காந்தா ஆத்திரத்துடன், “என் மக நான் கிழிச்ச கோட்டை தாண்டமாட்டா... அதுசரி உங்களுக்குத்தான் ஒருவேளை உங்க அம்மா சொன்னதுபோல...” என்று பேச ஆரம்பித்ததும்,
“எனக்குச் சம்மதம்க்கா, ஆனா ஜோதி வாயால இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதம்னு சொல்லணும். அப்போதான் இந்தக் கல்யாணம் நடக்கும்.” என்றான்.
ஜோதி திருதிருவென முழித்துகொண்டு முன்னால் நிற்பதை திரும்பிப் பார்த்த காந்தா, “இங்க வாடி! நான் சொல்றேன், இந்தக் கல்யாணத்தில் சம்மதம்னு சொல்லு....” என்றாள்.
அவளால் அம்மாவை மறுத்துப் பேசமுடியாமல், “ம்... சம்மதம்” என விழித்தபடி சொல்லவும்,
“ஜோதி...” என அழைத்த விழியனை ஏறிட்டுப் பார்த்தவளிடம், “என்னோட சம்பளம் இப்போ பத்துப் பன்னெண்டாயிரம்தான்.
நான் முழுநேரத்து அரசியல்வாதியா.... பொது வாழ்க்கைக்குதான் என் லைஃப்பில் முதலிடம் கொடுப்பேன்.....
என்னால உன் வயிறு நிறையச் சாப்பாடு மட்டும்தான் போட முடியும். பெரிய வசதியோ, ஆடம்பரமான வாழ்க்கையைக் கொடுக்க முடியாது.” என்று சங்கடத்துடன் தனது நிலையைச் சொல்ல முயன்றான்.
“என்னங்க இப்படிச் சொல்றீங்க? நான் பிறந்து வளர்ந்ததில் இருந்து உங்களையும்... உங்க நல்ல குணத்தையும், ஓரளவு வசதி வாய்ப்பு இருந்தும் எளிமையான உங்க வாழ்க்கையையும், மத்தவங்களுக்கு ஹெல் பண்ற உங்க குணத்தையும் பார்த்து இருக்கேன். இதை விடவா வசதி வாய்ப்பு பெருசு எனக்கு. எனக்குத்தான் உங்களைக் கல்யாணம் செய்யத் தகுதி இருக்கோ என்னவோன்ற கவலை.
அதுமட்டுமில்ல இப்போ நமக்குக் கல்யாணம் நடந்தால், நீங்க என்கூடத் தப்பா பழகுனீங்கன்னு பரவிய அவதூறு உண்மைன்னு ஆகிடும்ற வருத்தம்தான். மத்தபடி உங்களைப்போய் நான் வேணாம்னு சொல்வேனா?” எனச் சொல்லி முடித்தாள்.
அவள் அவ்வாறு சொன்னதும் மலர்ந்த முகத்துடன் பெரியவர், “இதோ இப்படிப் பெருந்தன்மையா பேசுறயே! ஈரேழு உலகத்திலேயும் உன்னைவிட வேற எந்தப் பொண்ணும் என் பேரனுக்குப் பொருத்தமா கிடைக்க மாட்டா.... அப்போ சிம்பிளா மூனு நாளில் பதிவு திருமணம் பண்ணிடலாம்.
காந்தா, கல்யாணம் முடிஞ்சாலும் உன் மக படிக்கப் போகட்டும். என் பேரனும் தேர்தல் வேலையை நல்லபடி முடிக்கட்டும். பிறகு அதுக வாழ்க்கையைத் தொடங்கட்டும் சரிதானே!” என்றவர்,
“இனி எவனும் புருஷன், பொண்டாட்டி ஆனவங்களை வச்சு இது போலப் பேச முடியாது.” என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
எம்.எல்.ஏ அகத்தியன், விழியனுக்கு எதிராகப் போட்ட பிளான் எல்லாம் ஏதோ ஒருவகையில் தவிடுபொடி ஆனது.
பேசியது போலவே அன்றிலிருந்து மூன்றாம்நாள் விழியனுக்கும் ஜோதிக்கும் மிக எளிமையாக ரிஜிஸ்டர் ஆபீசில் வைத்துக் காளிதாஸ், காந்தா, மதி மற்றும் கிரஹா, விழியனின் நண்பர்கள் மட்டும் சூழ திருமணம் நடந்து முடிந்தது.
அரசியலில் அவன் ஈடுபட்டதுக்கு அவனின் தந்தை எந்தளவு எதிர்ப்பு காண்பித்தாரோ, அதை விட அதிகமாக ஜோதியை விழியன் கல்யாணம் செய்வதற்கு வாணி எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால் வாணியின் கோபத்துக்கு, காளிதாசும், விழியனும் செவிசாய்க்கவே இல்லை.
கல்யாண பந்தத்துக்கு மனதளவில் தயாராகாமல் அதைப் பற்றிச் சிந்திக்காமல் இருந்ததால், சாதாரண நண்பர்கள் போல மட்டுமே ஜோதிக்கும், விழியனுக்கும் இடையில் பேச்சு இருந்தது.
எனவே கல்யாணம் முடிந்த அன்றிலிருந்தே அவள் தானுண்டு தனது படிப்புண்டு என்று எப்பொழுதும்போலக் காந்தாவுக்கு மகளாக மட்டுமே இருந்தாள். விழியனும் தேர்தலுக்கான வாக்குச் சேகரிப்பில் மிகவும் பிசியாக இருந்ததால் வேளா வேளைக்குச் சாப்பிடக்கூட வீட்டிற்கு வரவில்லை.
*
இதோ தேர்தல் நாளும் வந்துவிட்டது. கதிரும் தேர்தல் அன்றே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜாகி வாக்குச்சாவடிக்கு வந்து தனது நண்பனுக்கு வாக்கைப் பதிப்பித்தான்.
விழியனுக்கு எதிரான முயற்சி எல்லாம் முறியடித்து இதோ மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்ற ஆவலில் தேர்தலையும் சந்தித்து அதன் முடிவுக்காகக் காத்திருந்தனர்.
விழியனோ எந்தவித அலட்டலோ ஆர்ப்பாட்டமோ இல்லாது அடுத்தடுத்து என்ன செய்யவேண்டும், கட்சியை, கட்சியின் கொள்கைகளை எவ்வாறு வலுப்படுத்த வேண்டும் போன்ற சிந்தனைகளையும், அரசியல் கோட்பாடுகளையும், சாணக்கிய அரசியல் பற்றியும் புத்தகங்கள் மூலமும் தன்னைச் சுற்றி உள்ளவர்கள் மூலமும் கற்றுக்கொண்டிருந்தான்.
மேலும் நாட்டின் நிலவரங்களை உற்றுக் கவனித்துத் தன்னுடைய கருத்துக்களையும் நிலைப்பாட்டையும் அவனுக்கென்று இருக்கும் நண்பர்களுடன் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் உலகுக்கு அறிவித்துக் கொண்டிருந்தான்.
எலெக்சன் முடிவுகள் வந்தது. எப்பவும் போலப் பணநாயகமே ஜெயித்தது ஆம் அகத்தியனே தேர்தலில் வெற்றிப் பெற்றான்..
விழியனோ முதல்முறை தேர்தலை சந்தித்துத் தோற்கும் மற்றவர்கள் போல் இல்லாமல் கணிசமான வாக்குகளைப் பெற்றே தோல்வி அடைந்தான்.
ஜோதியால்தான் விழியன் தோற்றுப்போனதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆனால் விழியன் இத்தோல்வியை எதிர்பார்த்தே இருந்ததால் அது அவனைச் சோர்ந்து போகச் செய்யவில்லை.
அகத்தியன் வெற்றிபெற்றாலும், விழியனை விடச் சொல்லிக் கொள்ளும்படியான வாக்கு வித்தியாசத்தில் அவன் வெற்றி பெறாதது சற்றுக் கலக்கத்தை உண்டு பண்ணியது.
திறமையுள்ள ஒருவன், தற்போதைய தனது குணத்திற்கு எதிர்குணம் உள்ள நல்லதன்மை உள்ள ஒருவன் தனக்குப் போட்டியாக மிக வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதைக் கண்டவன், தனது அரசியல் வாழ்க்கை அவனால் தான் அஸ்தமனம் ஆகப்போகிறதோ என்ற பயம் எழுந்தது.
உடனே இதை இப்படியே விடக்கூடாது, கட்சி மேலிடத்துக்குக் கொண்டு போகணும் அடுத்த உள்ளாட்சி தேர்தல் வருவதற்குள் இவனுக்கு ஏதாவது முடிவு கட்டணும் என்று எண்ணிக்கொண்டான்.
*
ஏனோ கல்யாணம் முடிந்த மறுநாளில் இருந்து ஜோதி அவனுக்குச் சாப்பாடு கொண்டுபோய்க் கொடுக்கவோ, நேரில் பார்க்கவோ இல்லை.
எலெக்ஷன் முடிவு வெளியான அன்று இரவு இட்லி, சட்னி, சாம்பார் ரெடி செய்து கொண்டிருந்த காந்தாவிடம், ‘நான் சாப்பாடு அவருக்குக் கொண்டு போகட்டுமா...ம்மா?’ என்று கேட்பதற்குத் தயங்கிக்கொண்டே நின்றாள்.
இன்று காலையில் விழியன் தேர்தலில் தோற்றுவிட்டான் என்று தெரிந்ததில் இருந்தே முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு உம்மென்று சரியாகச் சாப்பிடாமல் கொள்ளாமல் கவலையில் அமர்ந்திருந்த ஜோதியை நோட்டம் விட்டுக்கொண்டுதான் இருந்தார் காந்தா.
தாய் உணராத சேயா! மகளின் எண்ணம் உணர்ந்து, “எதுக்கு என் முகத்தை முகத்தைப் பார்த்துட்டு இருக்க... என்ன வேணும் உனக்கு?” எனக் கேட்டார்.
“அம்மா...” என்று சொன்னவளை,
“உன் அம்மாதான் நானு சொல்லுடி!” என்று லேசாகச் சிரித்தபடி கேட்டதும்,
“நான் கொண்டுபோய் அவருக்குச் சாப்பாடு கொடுத்துட்டு வரட்டா? அதுதான் கல்யாணம் ஆகிடுச்சே, யாரும் தப்பா பேசுனா என்ன பேசாட்டி என்ன?
அவர் வருத்தத்துல இருப்பாரு, நான் போய் இரண்டு வார்த்தை ஆறுதலா பேசிட்டு வரட்டா?” என்று படபடவெனத் தன் மனதில் உள்ளதைக் கொட்டிவிட்டாள்.
அவளைப் பார்த்தவர், “போ, போய் நல்லதா ஏதாவது சேலை எடுத்து கட்டிட்டு தலைவாரிட்டு போ! இப்படியே பங்கறையா போகாத.” என்றவர் தயக்கத்துடன்,
“ஆனா கல்யாணத்துக்குப் பிறகு தம்பி இன்னும் ஒரு தடவைகூட இங்கன வீட்டுக்கு வரலை. உன்னைய பார்க்கவாவது ஒரு எட்டு வந்துட்டுப் போயிருக்கலாம்.
என்னமோ போ! எதுவும் முறையா நடக்காம உன் கல்யாணம் முடிஞ்சு கிடக்கு. அந்த ஆண்டவன்தான் ஒரு விடியலை கொடுக்கணும்.” என்றார்.
அவர், “போ...” என்றதுமே அவளின் உடலில் ஒரு பரபரப்பு அவளை அறியாமல் தொற்றிக்கொண்டது.
அவளின் எண்ணம் முழுக்க அவன் தேர்தலில் தோற்று வருத்தத்தில் இருப்பானே என்ற ஆதங்கம்தான் இருந்தது.
‘ச்சே... நல்லவங்கள தான் கடவுளை ரொம்பச் சோதிக்கிறார்.
ஊருக்கு நல்லது செய்யணும்னு அரசியலில் இறங்க வீட்டை எதிர்த்து வெளியே வந்த அவருக்குத்தான் அடுக்கடுக்காய் எத்தனை சோதனை.
சரி போனதெல்லாம் போகட்டும், தேர்தலில் ஜெயித்திருந்தாலாவது பட்ட கஷ்டத்துக்கு ஒரு வெகுமானம் கிடைச்சதுபோல இருந்திருக்கும்.
ஆனா நம்ம ஜனங்க எங்க நல்லவங்களுக்கு ஓட்டு போடுறாங்க. அந்த அராஜகம் புடிச்ச அகத்தியனை தான் திரும்ப ஒய்யாரத்தில் தூக்கி வச்சிருக்காங்க. நியாயமே இல்லாத உலகம் இது!’
என அவளுக்குள் புலம்பியபடி, முதல் வருடம் கல்லூரியில் நடந்த பாவை விழாவுக்கு எடுத்த அந்த டிசைனர் சேலையை உடுத்திக் கொண்டாள்.
தனது நீண்ட தலைமுடியை பின்னி சாமிக்கு போட வைத்திருந்த பூவில் ஒரு ஜான் மட்டும் கடவுளுக்குப் போனால் போகட்டும் என்று வைத்துவிட்டு மற்றதை தனது தலையில் சூடிக்கொண்டாள்.
அந்த வருத்தத்திலும் தான் அவனின் முன் பாந்தமாகத் தெரியவேண்டும் என்ற எண்ணத்துடன் சிறிதாக ஒப்பனை போட்டதே தெரியாதவாறு செய்துகொண்டாள்.
“ம்மா... இந்தாம்மா டிபன், இதுல நீ இட்லியை எடு, நான் சாம்பார் சட்டினியை எடுக்குறேன்” என்று சிட்டாகப் பறந்து பத்தே நிமிடத்தில் ரெடியாகிவிட்டாள்.
“அடியாத்தி மணி ஆறரை தான் ஆகுது, இப்பவே சாப்பாடு கொண்டுபோக ரெடியாகிட்ட! தம்பி சாப்பிட பத்துமணிகிட்ட ஆகிடும். போனதும் இப்போவே சாப்பிடுங்க இட்லி ஆறிடும்னு சொல்லிப்பாரு. இந்தா எடுத்துட்டுப் போய்ப் பக்கத்தில இருந்து பரிமாறிட்டு வா“
என்று சொல்லியதும் சாப்பாட்டுக் கூடையுடன் விழியனின் ஓட்டுவீட்டை நோக்கி நடந்து சென்றாள். அவளுக்கு எல்லோரும் தான் போவதையே குறுகுறுவென்று பார்ப்பதுபோல ஓர் எண்ணம்.
‘கொள்ளிக் கண்ணுக, என் புருஷனுக்குத் தானே சாப்பாடு கொண்டுட்டு போறேன்’ என்று தனக்குள் கூறியவளுக்கு, ‘ஐயையோ நான் பாட்டுக்கு மூச்சுக்கு முன்னூறு தடவை என் புருஷன்... என் புருசன்னு சொல்லிக்கிறேன், ஆனா அவங்க சூழ்நிலையால என்னைக் கல்யாணம் செய்திருக்காங்க. ஓவரா எதிர்பார்க்காத ஜோதி.
அச்சச்சோ... அவர் முன்னாடி வழிஞ்சு காட்டி கொடுத்துடாத, அவரே நொந்து போய் இருக்காரு’ என்று அவளுக்குள் அவளே சொல்லிக்கொண்டு பல்வேறு மனநிலையைத் தனக்குள் ஏந்தியபடி விழியனின் வீட்டை அடைந்தாள்.
அத்தியாயம் 20
மனுத்தாக்கல் செய்யத் தேவையான அனைத்தும் தகவல்களாகச் சொல்லியிருந்த கிரஹாவின் வார்த்தைகளை நினைவில் கொண்டு தாயாராகினான் நிலவன்
மதியம் பன்னிரெண்டு மணிக்கு மேல் கிரஹா சொன்ன நேரத்துக்குத் தேர்தலில் சுயேட்சையாக நிற்க மனுதாக்கல் செய்யத் தாலுகா ஆபீஸ் வாசலை நண்பர்களுடன் வந்தடைந்தான் விழியன் .
அதே நேரம் கிரஹாவும் ஒரு வக்கீலோடு அங்கு வந்து சேர்ந்தாள். ஏனெனில் விழியன் தாக்கல் செய்யும் மனுவை ஏதாவது ஒரு குறையைக் காரணம் காட்டி கடைசி நேரத்தில் தள்ளுபடி பண்ணிவிட வாய்ப்பு உள்ளது. அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்ற யோசனையில் முன்னெச்சரிக்கையாக வந்தாள்.
எனவே அனுபவம் மிக்க வக்கீல் மனுவை பரிசீலனை செய்து டாக்குமெண்ட் அனைத்தையும் போட்டோ காப்பி எடுத்துக்கொண்டு அவரின் வழிகாட்டலில் மனு தாக்கல் செய்ய உள்ளே நுழைந்தார்கள்.
அகத்தியன் வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து அவனுக்குப் பின் தொண்டர்கள் என்ற போர்வையில் அவன் கண்ணசைவில் எதையும் செய்யத் துணிந்த ரவுடிகள் கூட்டத்தோடு உள்ளிருந்து வாசலுக்கு வந்தான்.
இருவேறு துருவங்கள் எதிரெதிரே சந்தித்துக் கொண்டன.
விழியனைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பை உதிர்த்தபடி, “டெபாசிட் போயி அம்போன்னு நிக்கப் போறவன்லாம் நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு எனக்கு முன்னாடி எப்படித்தான் மனுதாக்கல் பண்ண வாராங்களோ...?” என்று அகத்தியன் சத்தமாகச் சொல்ல, அங்கிருப்பவர்கள் கொல்லென்ற சிரிப்பை உதிர்த்தனர்.
“நல்லவங்க வாக்கே இப்போ பலிக்க மாட்டேங்குது. உங்களோட வாக்கா பலிச்சிட போகுது? அப்படியே உல்டாவா எம்.எல்.ஏ சாருக்கே அவர் வார்த்தை திரும்பிடப்போகுது.” எனச் சிரிக்காமல் பதில் கொடுத்தான் விழியன்.
“விழியன் கண்டதையும் பேசி டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்.” எனச் சொல்லி அவனை உள்ளே அழைத்துக்கொண்டு போனாள் கிரஹா.
கிரஹா நேரிடையாக விழியனுக்காகத் தாலுக்கா ஆபீசுக்கே வருவாள் என எதிர்பார்க்கவில்லை. எனவே அங்கேயே அவனின் மனுவை நிராகரிக்க ஏதேனும் செய்ய நினைத்திருந்த அகத்தியனின் பிளான் தோல்வி அடைந்துவிட்டது.
ஆம் விழியனின் மனுவில் ஏதேனும் ஒரு சிறு பிழையைக் கண்டுபிடித்து அல்லது உருவாக்கி மனுவைத் தள்ளுபடி செய்து விட அவன் செய்து வைத்த ஏற்பாடுகள் கிரஹாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தவிடு பொடியானதைக் கண்டு அவனுக்குள் திகுதிகுவெனக் கோபம் எழுந்தது.
மேலும் கிரஹாவின் பின்னேயே பயிற்சி பெற்ற பாதுகாவலர்கள் வருவதைக் கண்டு அவளை நெருங்குவது எளிதல்ல என்பதையும் புரிந்து கொண்டான்.
அவன் அன்று இரவே ஸ்ரீராம் மூலம் அகத்தியன் சார்பில் மக்களின் வாக்குகளைச் சேகரிக்கத் திரட்டும் மக்கள் கூட்டத்துக்கு, காசும் பிரியாணியும் அத்துடன் மதுபிரியர்களுக்கு மது பாட்டில்களும் சப்ளை பண்ண ஏற்பாடுகள் பண்ண ஆரம்பித்தான்.
அவன் கொடுத்ததைச் சப்ளை செய்யும் ஸ்ரீராம் வீடு ஒரே பரபரப்பாக இருந்தது. எம்.எல்.ஏ சீட்டிற்குத் தேர்தலில் நிற்கும் விழியனின் வீடுகூட அத்தனை ஆர்பாட்டத்தோடும்... நிறைய ஆட்கள் வந்து போகும் இடமாக இல்லை.
இந்நிலையில் விழியன் எம்.எல்.ஏவுக்கு நிற்பதை அவனின் வாட்சப் ஸ்டேடஸ் வைத்து அறிந்து கொண்ட வளவனுக்கு அத்தனை மகிழ்ச்சி.
வளவன், விழியன் தோப்புக்குப் போகும் வழியில் ஊரைவிட்டு சற்றுத்தள்ளி வாழும் பளிங்கர் கூட்டத்தைச் சேர்ந்தவன்.
எப்பொழுதும் தோப்புக்குச் செல்லும் வழியில் தனது நண்பர்களுடன் செல்லும் விழியன், வளவனின் கூட்டத்தில் உள்ளவர்களோடு வழியச் சென்று பேசிப் பழக ஆரம்பித்தவனுடன் அவர்களும் நட்பாகப் பழக ஆரம்பித்தனர்.
அவர்கள் காட்டுக்குள் சென்று தேன் எடுத்துக்கொண்டு வந்து மக்களிடம் அற்ப விலைக்கு விற்பதை கவனித்த விழியன், அவர்களின் தேன் தேவைப்படுவோர்க்கு நல்ல விலைக்கு அனுப்பி வருவாய் அதிகரிக்க உதவிக் கொண்டும் இருக்கிறான்.
மேலும் அவர்கள் கூட்டத்தில் உள்ள வளவனின் மகனையும் கூட்டத்தில் இருப்போரின் பிள்ளைகளையும் படிக்க வைக்க ஸ்பான்சர் செய்வோர்களைத் தேடிபிடித்துக் கொண்டுவந்தான்... அவனும் உதவி செய்தான்.... எனவே அவர்களுக்கிடையேயான தொடர்புக்கு மொபைல் நம்பரை பகிர்ந்து கொண்டிருந்தனர்.
அத்தகைய நல்லவன் தேர்தலில் ஜெயித்து வந்தால் தங்களின் நிலையில் கட்டாயம் முன்னேற்றம் உண்டாகுமென வளவன் உணர்ந்தான்.
அவர்களின் கூட்டத்தில் பொழுது போகவென ஆடும் பறையாட்டத்தைத் தங்களின் இளைஞர்களுக்குச் சொல்லிகொடுத்து சிறப்புடன் கலையை வளர்த்து வந்தனர்.
தங்களின் ஆட்டக் குழுவை விழியன் பிரச்சாரம் போகும்போது மக்களை ஈர்க்கும் வண்ணம் கூடவே பறை ஆட்டம் ஆட, அனுப்பி வைக்கிறேன் என்று வந்து நின்றான் வளவன்.
இவ்வாறு தேர்தல் களம் சூடுபிடிக்க, மக்களின் கவனம் கொஞ்சம் விழியனின் பக்கம் திரும்புவதைப் பொறுக்க முடியாத அகத்தியன் தனக்கு முன் நின்ற ஸ்ரீராமிடம்
“அவன் மனு தாக்கல் செய்றதுக்குள்ள நம்ம லைனை விட்டு தூக்கி போட்டுறணும்னு பார்த்தேன்.., ஒண்ணுமே செய்ய முடியலை.... இப்போதாவது எதையாவது செய்து அவன் பேர் ரிப்பேர் ஆகுறது மாதிரி அவதூறு கிளப்பி விடமுடியுமா...?” எனக் கேட்டார்.
ஏற்கனவே வெண்ணிலா மூலம் அன்று நடந்த விஷயத்தையும்... கோபத்தில் அங்கு இருந்த ஜோதியை அவள் விழியனுடன் தரக்குறைவாக இணைத்து வாசலில் நின்று கத்திப் பேசிவிட்டு வந்ததும் அறிந்திருந்ததால் வேகமாக, “முடியும் தலைவரே அதுவும் பொண்ணு விஷயத்துல...” என்று சொல்லி குரூரமாகச் சிரித்தான் ஸ்ரீராம்.
“அப்போ... பொம்பளை விஷயத்தில் அவனை ஈசியா மோசமானவனாகக் காமிச்சிடலாமா...? மக்கள்கிட்ட இப்படிப் பட்டவனுக்கு ஓட்டு போட்டா நல்லாவா இருக்கும்... தனி மனுஷ வாழ்க்கைல ஒழுக்கத்தைப் பத்தி பேசுறவன் லட்சணத்தைப் பாருங்கன்னு ஈசியா அவதூறு கிளப்பிடலாமா...? அப்போ பொம்பளை புள்ளைக விஷயத்துல அவன் வீக்கானவனா? இது தெரிஞ்சிருந்தா எப்பவோ அவனை மாட்ட வச்சிருக்கலாமே...” என்றார்.
“தலைவரே! நீங்க வேற, அனாவசியமா வழிஞ்சு கூட யார்கூடவும் பேச மாட்டான். அவன் லவ் பண்ணிய வெண்ணிலா கூட அவளாத்தான் அவன்கிட்ட பிரப்போஸ் பண்ணி அவனை லவ் பண்ண வச்சா.
ஸ்கூலில் அவனுக்கு ஹீரோ இமேஜ் இருந்தது. அதனால லைஃப்பில் பெரிய ஆளா வருவான்னு நினைச்சு அவனைப் பிடிச்சா. ஆனால் அவனின் வெட்டி கொள்கையினால பைசா பிரயோஜனம் இல்லைன்னு தெரிஞ்சு ஒதுங்கிக்கிட்டா.
ஆனாலும் அவ ஏற்படுத்திவிட்ட பழிச்சொல் மூலமாகத்தான் விழியனை மாட்ட வைக்கப் போறேன்.
எப்பவும் பொய்யான விஷயம் அதுவும் பொம்பளை ஆம்பளை தொடர்பான விஷயம் மட்டும் சட்டுன்னு பரவிடும். நான், நீங்க ஆசைப்பட்டதுபோல அவன் பேரை டேமேஜ் செஞ்சு முடிச்சிட்டு வாரேன்.” எனச் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தான்.
ஏற்கனவே அன்று ஜோதியையும் விழியனையும் இணைத்து வெண்ணிலா பேசிய பேச்சால் வதந்திகள் புகைய ஆரம்பித்திருந்தது. அதை விசிறிவிட்டுத் தீயாகப் பரவவிட முடிவு பண்ணினான் ஸ்ரீராம்.
எனவே தனது அம்மா தனக்குச் சாப்பாடு போடும்போது, “ம்மா இந்த விழியன் இப்படி எல்லாம் இருப்பான்னு நான் நினைக்கவே இல்லைமா.... எங்க ஸ்கூல்ல படிச்ச பொண்ணு ஒருத்தியை இவன் காலேஜ் படிக்கும் போது லவ் பண்ணினான். அந்தப் பொண்ணுகூட நெருக்கமா எல்லைத்தாண்டி பழகிட்டு இப்போ அவங்க வீட்டு பக்கத்துல இருக்கிற இன்னொரு பொண்ணு கூடப் பழக்கமாகி காதலிச்ச பொண்ணைக் கழட்டி விட்டுட்டான்....
பாவம் முதலில் லவ் பண்ணின அந்த ஜோதிப்பொண்ணு என்கிட்ட வந்து எப்படியாவது விழியனை திருத்தி என்கூடச் சேர்த்து வைங்கனு சொல்லி அழுகுது. எனக்கு அவன்கூட எனக்குப் பிரச்சனையா இருக்கு, நான் பேசுனா கேக்க மாட்டான்னு சொல்லி அனுப்பி விட்டேன்.” என்றான்.
“ஏலேய் ஸ்ரீ, அப்போ காந்தா மக ஜோதியையும் அவனையும் சேர்த்துத் தப்பா பேச்சு அடிபடுதே அது உண்மை தானா...?” என்று கேட்டார் அவனின் அம்மா.
அதற்கு, “எம்மா நீ வேற... சும்மா இருக்க மாட்ட, ஏற்கனவே அவனுக்கும் எனக்கும் பிரச்சனை.... இந்த நேரத்தில் இந்த விஷயத்தை நான் சொன்னேனு யார்கிட்டயும் சொல்லிக்கிட்டு அலையாத. என்ன உலகம்டா இது...? அப்படிப்பட்ட அயோக்கியனை தான் இங்க எல்லாரும் நல்லவனு சொல்றாங்க!” என்றான்.
‘சொல்லாதன்னு சொல்லியாச்சுல்ல... இனி என் அம்மா எப்படியும் இதைப் பத்து பதினைந்து பேர்கிட்டயாவது சொல்லாம இருக்கமாட்டாங்க.... நாளைக்குக் காலையில் இதை வச்சு தெருவுக்குள்ள ஏதாவது ஒரு பெரிய நடக்கும்’ என அவனுக்குள் அவனே சொல்லி சிரித்துக் கொண்டான்.
கதிரின் அறுவை சிகிச்சைக்குப் பின் வரும் ரணத்தின் வலி, அசையாமல் படுக்கையில் இருந்ததனால் மட்டுப்பட்டு இருந்தது. மேலும் குளுக்கோஸ் ஏற்றுவதை நிறுத்தி எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய கஞ்சி போன்ற உணவுகள் கொடுக்கலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தார்.
படுக்கையில் இருந்தவன் பொழுதுபோக அவனின் மொபைலை எடுத்து அவனது வாட்சப் பக்கத்தைத் திறந்தான். அவர்களின் வாட்சப் குரூப்பில் கிரஹாவும் இணைந்திருந்தார். மேலும் அட்மின் இடத்தில் விழியன், கிரஹா மற்றும் கதிர் மூவரும் இருந்தனர்.
நிறையத் தேர்தல் பற்றிய கலந்துரையாடல்கள் நடந்திருந்தது. அதுமட்டுமல்ல, அதில் உள்ள தனது எண்ணுக்கு வாட்சப்பில் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்ட கிரஹா,
“கதிர் இப்போ எப்படி இருக்கீங்க? வலி எல்லாம் ஓரளவு கம்மியாகிடுச்சா? டாக்டர் சொன்னதைக் கவனமாகக் கேட்டு அதுபடி இருந்துக்கோங்க. சீக்கிரம் நன்றாகி நார்மல் வாழ்க்கைக்கு வந்திருவீங்க.” என்று மெசேஜ் அனுப்பியிருந்தாள்.
பெரிய இடத்துப் பெண்ணாக இருந்தாலும் எளிமையான பழக்கமும்... இயல்பான இனிமையான பேச்சும்... கதிருக்குள் கிரஹாவின் மேல் ஒரு தோழமையை உருவாக்கியிருந்தது.
விழியன் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டதால், அவனால் கதிரை ஹாஸ்பிடலில் தினமும் வந்து பார்க்க முடியவில்லை. இருந்தாலும் நேரம் வாய்க்கும்போது அவனுடன் மொபைலில் உரையாடி நலம் விசாரித்துக் கொண்டிருந்தான்.
மேலும் அவனை அந்தந்த ஏரியாவில் இருக்கும் பெரிய மனிதர்களிடம் பூபதிராஜா மற்றும் நண்பர்களின் மூலமாகவும் அறிமுகப்படுத்தி வைத்த கிரஹா அவர்களிடம் தேர்தலில் வாக்கு சேகரிக்கும் பணியில் அவர்களையும் இணைத்துகொண்டு தீவிரமாகக் களப்பணி ஆற்றிக்கொண்டிருந்தாள்
மக்கள் சிலர் நேரிடையாகவே செவ்விழியனிடம் அவனுக்கு ஓட்டு போட ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவு ரூபாய் தருவீர்கள்? என்று கேட்டபோது நொந்து போனான்.
இருந்தாலும் அவர்களுக்குப் புரியவேண்டும் என்பதற்காக, “நீங்க எனக்கு ஓட்டுபோட சொல்லி ரூபாய்க் கொடுத்தால் பதவிக்கு நான் வந்த பிறகு போட்ட பணத்தை வட்டியோடு எடுக்க நீங்கள் பச்சைக்கொடி காட்டுவதாக நினைக்கறது போல ஆகும்.
அதனால இதுபோல் நீங்க கேட்பதும் அரசியல்வாதிகள் ஓட்டுக்குப் பணம் கொடுகிறதும் நடந்தால்... நாட்டைச் சுரண்டி... வளங்களை வித்துட்டு போக ஒவ்வொருத்தரும் காரனமாகிடுவோம்.
அடுத்தத் தலைமுறைக்கு நம்ம பூமியை அப்படியே ஒப்படைக்கும் பொறுப்பில் இருந்து தவறி.... கொள்ளையரின் பிடியில் நாட்டை ஒப்படைப்பது போல ஆகிடும்.” எனப் பொறுமையாக விளக்கம் கொடுப்பான்.
“இப்படிக் கேக்காதீங்க... ஓட்டுக்குப் பணம் கொடுக்கிற அரசியல்வாதிகளையும் புறக்கணிங்க.” என்றான்.
அந்தந்த பகுதிகளுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய வசதிகளும் தான் பதவிக்கு வந்ததும் செய்து தருவதாகவும் உறுதியளித்தான்.
மேலும் அரசு மருத்துவமனையில் உள்ள நிர்வாகத்தின் செயலை சரி செய்ய என்னென்ன செய்ய வேண்டும் என்ற தகவல்களைத் திரட்ட ஆரம்பித்தான்.
கல்வி நிறுவனங்கள் சாதியை அடிப்படையாகக் கொண்டு செயல்படாது இருப்பதற்கு என்னென்ன செய்யலாம் என்று நினைக்கையில் அது தீர்க்க முடியாத பிரச்சனையாகப் பூதாகரமாக எழுந்து நின்றது. இருந்தாலும் முடிந்த மட்டும் ஒழுங்குபடுத்த என்னென்ன செய்யலாம் என நண்பர்களுடன் விவாதித்தான்.
இவ்வாறாக அவன் பிசியாக இருந்ததால், அவன் வீட்டைச் சுற்றிய மக்கள் அவனையும் ஜோதியையும் இணைத்து தவறாகப் பேசிய வதந்திகளைக் கவனியாது விட்டுவிட்டான்.
அன்று காலை எழும்போதே வீட்டு வாசலில் காந்தா அவனது தாத்தாவுடன் அழுதுகொண்டே பேசும் சத்தத்தில்... என்ன ஆச்சு...? எழுந்த கேள்விக்கு விவரம் அறிய வாசலுக்கு வந்தான்.
அப்பொழுது அவனின் தாத்தா, “யார் அப்படிப் பேசுனது? சொல்லு, கழுத்தை சீவிடுறேன்.” என்று ஆக்ரோஷமான குரலில் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.
காந்தாவோ, அவன் தாத்தாவிடம், “ஐயா ஒருத்தர் ரெண்டு பேரு பேசினா சொல்லலாம் எந்தப்பக்கம் போனாலும் எல்லோரும் இப்படியே பேசுனா நான் என்ன செய்வேன்...?
ஆம்பளை துணை இல்லாத பொம்பளை நானு... ஒத்த பொட்டப்புள்ளையைப் பொத்தி பொத்தி இதுவரை வளர்த்தேன்.
இதுவரை என்னையும் என் மகயையும் ஊருக்குள்ள நாக்குமேல பல்ல போட்டு யாரும் ஒத்த குத்தமும் சொல்லாம வாழ்ந்துகிட்டு வந்தேன். பெரிய வீட்டில் உள்ளவங்க மனசும் பெரிய மனசா இருக்கும்னு நினைச்சேன்.
இட்லி விக்கிரதால தானே என்கிட்ட வந்து இரண்டு வேளை மாசத்துக்கு இட்லி தர பேசுரீங்கன்னு சரின்னு சொல்லிட்டேன்.
ஆனா ஊர்ல உள்ளவங்க... உங்க வீட்டு பிள்ளையை மயக்குறதுக்கு நான் சும்மா உங்களுக்குச் சாப்பாடு பொங்கி கொடுக்கிறதா பேச்சு வந்துருச்சு...
மத்தவங்க பேசுறதே தப்புண்றீங்களே... உங்க வீட்டு மருமகளே பேசுறாங்க..., என் வீட்டு வாசலுக்கு வந்து ‘இனி என் புள்ளைக்கு நீ சாப்பாடு கொண்டு போய்க் கொடுக்க வேண்டாம். அவன் படிப்புக்கும் அந்தஸ்துக்கும் பெரிய இடத்தில் இருந்து சம்பந்தம் வரும். ஏதோ போதாத நேரம், இந்த அரசியலில் நிக்கப் போறேன்னு சொல்லப்போய் அவர் கோபப்பட்டார்,
அதுக்கு வீட்டில கோவிச்சுகிட்டு சாப்பிடாம இருக்கான். அதைச் சாதகமாக்கி நீயும் உன் மகளும் என் வீட்டுக்குள்ள புற வாசல் வழி நுழையப் பார்க்குறீங்களா? நானே நாளையிலிருந்து எங்க கடைப்பையன்கிட்ட சொல்லி என் புள்ளைக்குச் சாப்பாடு கொடுத்து விடுறேன்... நீ இனி கொடுக்கக்கூடாது. இந்தா என் புள்ளைக்கு இத்தனை நாள் நீ கொடுத்த எடுப்பு சாப்பாட்டுக்கு என்று வாசல்படியில் ஐயாயிரம் ரூபாயை வச்சிட்டு போகுறாங்க.
அதைக்கேட்டு என் மக அழுதே கரையிறா...! கேப்பாரு இல்லாததாலத்தானே எங்களுக்கு இந்த நிலை... ஒருநாள் பாவப்பட்டு... அடிபட்ட பிள்ளைக்குச் சாப்பாடு எடுத்து பரிமாறிய என் மகளுக்கு.... நல்ல கைம்மாறு பண்ணிட்டீங்க....” என்றாள்.
வாணியின் செயலால் காந்தாவின் முன்பு தலை கவிழ்ந்தார் காளிதாஸ்.
வாசலுக்கு வந்த விழியனுக்குக் காந்தாவின் பேச்சில் இருந்து என்ன நடந்திருக்கும் என்பது விளங்கியது.
அவனின் இதயம் கோபத்தில் வேகமாகத் துடித்தது. தன்னைக் கீழே இழுத்துவிட வேண்டும் என்பதற்காக ஓர் அப்புராணி தாயையும் மகளையும் தன்னுடன் இணைத்து அசிங்கப்படுத்திய வெண்ணிலா மற்றும் ஸ்ரீராமின் மீதும் கோபம் வந்தது.
தான் வளர்ந்த தெருவில இதுவரை ஒரு பொண்ணையாவது தப்பா பார்த்தோ பேசியோ யாரும் பார்க்காத நிலையில் தான் நடந்து இருந்தும், தன்னைப் பெண்பித்தன் என்பதுபோலப் பேசிய மக்களின் அறியாமையில் சலிப்பு வந்தது.
ஊர் வதந்தியில் தன்னால் பாதிக்கப்பட்ட காந்தாவையும், ஜோதியையும் மேலும் அசிங்கப்படுத்திய தனது தாயின் மீதும் அத்தனை கோபம் எழுந்தது.
எனவே, “காந்தாக்கா என்னை மன்னிச்சிடுங்க. நான் போய் ஜோதியை அப்படி எல்லாம்...” என்று பேச்சை இழுத்தவன் யோசனையுடன்,
“அக்கா, நான் இப்போ பணக்காரன் இல்லை... என் படிப்பு மட்டும்தான் என்கிட்ட இப்போ சொத்தா இருக்கு... என் அம்மா என்னைப் பெரிய ஆளுன்னு சொன்னது உண்மையில்ல இப்படி உங்ககிட்ட அவங்க பேசுனதுக்கு நான் ரொம்ப வருத்தப்படுறேன். ஒண்ணே ஒண்ணுதான் என்னால இதற்குத் தீர்வா இப்போ சொல்ல முடியுது.
நான் தேர்தலில் ரொம்பக் கவனமா இருக்கேன். ஆன்லைன் ஜாப்பில் மாதம் பன்னிரெண்டாயிரம் மட்டுமே சம்பாதிக்கிறேன். நான் அரசியல்தான் என் வாழ்க்கைன்னு முடிவெடுத்து என் வீட்டை விட்டு வெளிய வந்துட்டேன்.
உங்க பொண்ணை மட்டும் இல்லை எந்தப் பொண்ணையும் நல்லா வச்சி காப்பாத்தும் தகுதி எனக்கு இப்போ இல்லை. உங்களைவிட நான் தகுதி கம்மியானவனாகத்தான் உங்க முன்ன நிக்கிறேன்.
இனிமேல் நீங்க எனக்கு மாதத்துக்கு அமர்த்திய சாப்பாட்டைக் கொடுக்க வேணாம் நிப்பாட்டிருங்க.
தெருக் கூட்டத்தில் எல்லோர் முன்பும் இதைப் பிராது கொடுங்க... என்கிட்டே நஷ்ட்ட ஈடு கேளுங்க. தனிப்பட்டு நான் எதுவும் செய்தால் அதுவும் தப்பாதான் பார்க்கப்படும். என்னால உங்க மகளின் வாழ்க்கை பாதிப்படையக் கூடாது...,
ஊர் கூட்டத்தில் நாங்க அப்படி இதுவரை பழகவில்லை இது பத்தி யாராவது பேசுனா அவதூறு வழக்குத் தொடுப்பதாக நான் சொல்லிடுறேன் என் அம்மா பேசிய பேச்சுக்கு ஊர் முன்ன நான் மன்னிப்பு கேக்குறேன் ” என்று சொன்னான்.
அத்தியாயம் 19
ஜோதி கொடுத்த தண்ணீரை குடித்துவிட்டு, “இல்ல ஜோதி, ஹாஸ்பிடலில் கதிரை பார்க்க போகணும். அங்க அவனுக்குத் துணையா நாலு பேரை உட்கார வச்சிட்டு, நான் இங்க வந்து படுத்துக்கிட்டேன். என்னைய இன்னும் காணலையேன்னு நினைப்பாங்க. கொஞ்சம் வெளி வேலையும் இருக்கு.” என்றான்.
பவெண்ணிலாவிடம், “நானு, என் அம்மாவுக்கு அடுத்து பயப்படுற ஒருத்தர், எனக்கு வொய்ஃபா வரவங்களாகத்தான் இருக்கும். ஏன்னா அவங்கதான் இதைச் செய்யாத அதைச் செய்யாத அப்படின்னு ஒரே அன்பு டார்ச்சர் தருவாங்க.” என்று வெண்ணிலாவைப் பார்த்துக் கண்களில் குறும்புடன் கூறினான்.
அவளோ, “பிறகு...... அவங்க இரண்டு பேரும் தானே நீங்க நல்லா... வசதியா... சொகுசா... வாழணும்னு நினைக்கிறவங்க, அதனால அப்படித்தான் சொல்லுவாங்க. பாருங்க நான் கூட அப்படித்தான் பேசுவேன்.
உங்க ஃப்ரெண்ட் ஸ்ரீராம் ஹோட்டல் பிஸ்னஸ்ல உங்க கூடச் சேர்ந்து செய்ய ஏற்பாடெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கும் போது, நீங்க எதுக்கு இந்த அரசியல் அது இதுன்னு இறங்கணும்.
இனி இதுபோல அரசியல் பேச்சை எல்லாம் மூட்டை கட்டிட்டு ஒழுங்கா உங்க ஃப்ரெண்டு கூடச் சேர்ந்து பிஸ்னசில இறங்குங்க. அப்போ தான் சீக்கிரம் செட்டில் ஆகமுடியும், நம்மளோட கல்யாணம் நல்லபடியா காலாகாலத்தில் நடக்கும்.” எனச் சொன்னாள்.
அவள் ஸ்ரீராம் பெயரைச் சொன்னதுமே இவனின் புருவம் யோசனையில் நெறிய ஆரம்பித்து விட்டது.
எல்லாத்தையும் மூட்டைக்கட்டி வச்சிட்டு அவன்கூடச் சேர்ந்து பிஸ்னஸ் செய்யச் சொன்னதுமே அவளின் உள்நோக்கம் ஓரளவு புரிந்து கொண்ட விழியனின் மலர்ந்திருந்த முகம், திரும்பவும் இறுக்கத்தைத் தத்தெடுத்துக் கொண்டது.
“நீ கிளம்பு வெண்ணிலா... உன்னோட நோக்கம் என்னென்னு எனக்குப் புரிஞ்சிடுச்சு. உன்னோட மைண்ட் செட்டுக்கும் எனக்கும் ரொம்பத் தூரம். இனி என்னைப் பார்க்க எப்பவும் நீ வரவே வேணாம.” என்று பட்டென்று சொல்லி விட்டான்.
டக்கென்று அவ்வாறு அவன் சொல்லுவான் என்று எதிர்பார்க்காத வெண்ணிலாவும், அங்கு அவன் சாப்பிடும்வரை நின்று பரிமாறிவிட்டு செல்ல காத்திருந்த ஜோதியும் அதிர்ந்து அவனைப் பார்த்தனர்.
ஆனால் மறுநிமிடம், அமர்ந்திருந்தவள் கோபத்துடன் எழுந்தாள். தன்னை அவன் அவமானப் படுத்திவிட்டதாக உணர்ந்தாள். எனவே அவன் மனதை காயப்படுத்த வேண்டும் என்ற வேகம் அவளுக்குள் உருவானது.
எனவே அவனைக் கைநீட்டி, “பெண்பாவம் பொல்லாதது விழியன்... இத்தனை நாள் என்கூட நல்லா பழகிட்டு இப்படித் தூக்கி எறியிற உங்களை உலகம் ரொம்ப நல்லவன்னு சொல்லுது. ச்சைய்... இனி நீங்களும் என் மூஞ்சியிலேயே முழிக்காதீங்க.” என்று வாசலுக்கு விறுவிறுவென்று சென்றவளுக்கு இன்னும் ஆத்திரம் தீராமல் உள்ளே திரும்பிப் பார்த்தாள்.
அங்கு ஜோதி அவன் அருகில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தவள், ”அதானே வரும்போதே நீங்க ரெண்டு பேரும் அப்படிக் குளோசா இருக்கிறதை பார்த்தப்பவே நான் சுதாரிச்சிருக்கணும்.
இப்போ இவளை புடிச்சிருக்கீங்க, அதான் நான் கசந்துட்டேன் உங்களுக்கு. ஓ... அரசியலில் இறங்குறீங்கல்ல அதுக்கு இதுதான் முதல் தகுதியோ?” என்று நக்கலாகப் பேசிவிட்டு அவன் கோபமாகப் பேச எத்தனிப்பதைப் பொருட்படுத்தாது விறுவிறுவென்று நடையைக் கட்டினாள்.
அவள் வாசலில் நின்று சத்தமாகப் பேசியதால் அக்கம்பக்கத்து வீட்டில் இருப்பவர்களின் கவனம் அவர்களின் மேலும் அவள் சொல்லிய வார்த்தைகள் மீதும் விழுந்தது.
ஒரே சமூகமாக, மக்கள் வசிக்கும் தெருவை வைத்து ஜாதியை தெரிந்து கொள்ளுவது போன்ற சூழல்களில் மனிதர்கள் வசிக்கிறார்கள்.. ஜாதிகள் ஒழிந்துவிட்டது என்று சொல்பவர்கள் இறங்கி தேடிப்பார்த்தால் நான் சொல்வது உண்மை என்று உணர்ந்து கொள்ளமுடியும். ஜாதிக்கு ஒரு தெரு, ஜாதிக்கு ஒரு பள்ளிக்கூடம், கல்லூரி என்று சமூகமாக வாழும் கூட்டம் இங்கு அவ்வளவு சீக்கிரத்தில் ஜாதியின் பேரில் மாஸ் அட்டாக்கில் பங்கேற்பதில் இருந்து மீள முடியாது.
இதில் கொடுமை என்னவென்றால் ஒருவர் தன் ஜாதி பள்ளிக்கூடம் விட்டு வேறு பள்ளியில் தனது குழந்தையைச் சேர்ப்பதற்கு அவர்களின் சமூகத்துக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் வரை இருக்கும் ஊர்களும் உள்ளன.
படிக்கும் பிள்ளைகளின் மனதில் ஜாதியை திணிக்கும் முறையும், ஜாதிப்பள்ளிக்கூடங்கள் போன்ற அபத்தமும், அதை நிர்வகிக்கும் ஜாதிவெறி தூண்டி அதன் மூலம் ஆதாயம் தேடும் கூட்டம் எல்லாம் என்று ஓயுமோ!
விழியனின் வீடும் ஒரு சமூகக்கூட்டம் வாழும் பகுதியிலேயே இருந்தது. அவனும் அவர்களின் இனத்தான் என்னும் அடிப்படையிலேயே அடையாளம் காண்பர் அங்குள்ளவர்கள்.
தனிப்பட்ட அவனின் குணநலன்களில் ஒன்றான சமூகச் சீர்த்திருந்த ஆர்வத்தைகூடத் தங்களில் ஒருவனாக இருக்கும் அவன் தங்களின் ஆட்களே செய்யும் உதவிகளில் முதன்மை வழங்க வேண்டும் என்று எதிர்பார்பார்கள்.
தற்போது அவனின் வீட்டாரோடு அவனுக்கு ஏற்பட்டிருக்கும் பிணக்குக்குக் காரணத்தையும் ரகசியமாய்க் கிசுகிசுத்துக்கொண்டிருந்தனர்.
அரசியலில் அவன் அடி எடுத்து வைப்பதற்கு அவன் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டில் உள்ளோருடன் பிரச்சனையாகி வெளியே வந்துட்டான் என்ற பேச்சுக் கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருப்பவர்கள் வாயில் மெல்லப்பட்டுக் கொண்டிருந்து.
பொதுவாக விழியனிடம் குதர்க்கமாகப் பேசுபவர்களுக்குச் சுள்ளென்ற சாட்டை அடியுடன் வார்த்தைகள் கிடைக்கும். எனவே அவனின் முகத்துக்கு நேராக இதுபோலப் பேச்சுகளை அவனை அணுகிப் பேச சற்று அஞ்சுவர்.
ஆனால் அவனின் அம்மா வாணியிடம் வருவோர் போவோரின் இவர்களின் வீட்டுப் பிரச்சனை குறித்துக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் அல்லாடினார், அத்துடன் தனது மகனைப் பற்றிய வருத்தத்திலும், அவனின் உடல்நிலை பற்றிய சோகத்திலும் ஆழ்ந்து போய் இருந்தார்.
விழியன் தங்கி இருக்கும் வீட்டில் என்ன நடக்குது? ஏது நடக்குது? என்பதை அறிய ஆவலுடன் காத்திருந்த வம்பர்களால் ‘ஜோதி, அவனுக்குச் சாப்பாடு கொண்டு போனதும்.... அதைத்தொடர்ந்து அந்தத் தெருவில் இல்லாத வேறு ஒரு பெண்பிள்ளை அங்கு அவனைப் பார்க்க வந்ததும்... கூர்ந்து கவனிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
அந்த வேளையில் வாசலில் நின்று வெண்ணிலா விழியனையும் ஜோதியையும் இணைத்துப் பேசிய வார்த்தைகள் காட்டுத்தீயாகத் தெருவுக்குள் கண்ட படி கண் மூக்கு வாயென உருவம் கொண்டு வதந்திகளாகப் பரவ ஆரம்பித்தது.
***
அரசு மருத்துவமனைக்கு இன்றும் கதிரைப் பார்க்க கிரஹா வந்திருந்தாள். கதிருக்கு உணர்வு திரும்பியதால் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுப் பார்வையாளர்களுக்குப் பார்வையிட அனுமதித்ததால் கதிரின் முன் அமர்ந்திருந்தாள் கிரஹா.
சற்றுத்தள்ளி அவனின் அம்மாவும் அவனின் நண்பர்களும் நின்றுக்கொண்டிருக்க, இன்னும் இருவர் கருப்புநிற யூனிபார்முடன் அந்த அறையின் வாசலில் கிரஹாவை தொடர்ந்து வந்த அவளின் செக்யூரிட்டீஸ் டீம் ஆட்களும் நின்று கொண்டிருந்தனர்.
கதிர் முகத்தில் அவனின் சோர்வு, வலியை மீறியச் சிரிப்புடன் கிரஹாவிடம் பேசிக்கொண்டிருந்தான். இத்தனையையும் உள்ளே வரும்போதே கவனித்தபடி வந்தான் விழியன்.
வெண்ணிலா செய்த காரியமும் அதனால் தன்னுடன் ஒன்றும் அறியாத ஜோதிக்கு ஒரு அவச்சொல் வந்ததை எல்லாம் நினைத்து தன் மனதினை வதைத்துக் கொண்டிருந்தான். தனது வருத்தையும் ஆதங்கத்தை ஓரம் தள்ளி வைத்தவன்.
“கதிர்... டேய் கதிர், எப்படிடா இருக்க...? எப்போ வெளி வார்டுக்கு உன்னை மாத்தினாங்க....? சாரிடா என்னாலத்தான்...” என்று சொல்லி முடிக்க முடியாமல் கண்கலங்கியவன் தன் உணர்வுகளைத் திசைதிருப்பும் வகையில், “வாங்க மேடம்” என்று கிரஹாவை பார்த்துச் சொன்னான்.
மெலிந்த குரலில் கதிர் விழியனிடம், “டேய் லூசு... சாரி எல்லாம் கேட்டா அடி பிச்சிருவேன்... மேல் எல்லாம் வலிக்குது தான். ஆனா, மேடம் பார்த்ததும் வலியே தெரியலை....” என்று அந்நேரத்திலும் சூழலை இயல்பாக்க பகடியாய்ப் பேசினான்.
அவனின் தன்மையில் அங்கிருந்தவர்கள் மனம் இளகியது.
விழியன் கிரஹாவிடம், “மேடம் உங்க பாதுகாப்புக்கு செக்யூரிட்டி எல்லாம் போட்டிருக்குற இந்த நிலையில் நீங்க எதுக்கு இங்க...? மொபைலில் பேசியிருக்கலாம்ல...!” என்றான்.
“அவங்களைப் பார்த்துப் பயந்துட்டீங்களா விழியன்! அகத்தியன் உங்களோடு சேர்த்து என்னையும் டார்கெட் பண்ணியிருக்கிறதா அண்ணனுக்கு நியூஸ் வந்துருக்கு, பொதுவா அண்ணன், நான் விருப்பப்பட்டுச் செய்ற எந்த விஷயத்தையும் செய்யாதனு தடுக்க மாட்டாங்க.
இருந்தாலும் அவங்களுக்குள்ள எனக்கு ஏதாவது ஆயிடுமோன்ற பயம் வந்துருச்சு போல. அதான் இந்தச் செக்யூரிட்டி ஏற்பாடு பண்ணியிருக்காங்க. நீங்களும் கொஞ்சம் கவனமா இருங்க. கதிர் உங்களைவிட ஸ்ட்ராங், படு ஸ்மார்ட். பாருங்க, நான் கூட அவர் மனசு உடைஞ்சு போயிருப்பாங்க. மனதளவில சப்போர்ட்டுக்கு நாம கூட நிக்கணும்னு நினைச்சுகிட்டு இங்க வந்தேன். ஆனா அவங்க எனக்கு ஆறுதல் சொல்றாங்க. வெல்டன் கதிர் இப்படித்தான் இருக்கணும்.
நான் டாக்டட் கிட்ட பேசிட்டேன். உங்க லைஃப் ஸ்டைலிலோ உடலிலோ இந்த ஆக்சிட்டென்டால் எந்தப் பாதிப்பும் வராதுன்னு சொல்லிட்டாங்க. என்ன.... காயங்கள் கொஞ்சம் ஆழமா இருக்கிறதால் ஆறுவது வரை கொஞ்சம் கவனமா இருந்துக்கிடணும்” .
என்றவள் அவனின் அம்மாடம் “இந்தாங்கம்மா நிறையப் பழச்சாறு குடுங்க.” என்று சொல்லியபடி தனது கண்ணசைவில் அங்கு நின்று கொண்டிருந்தவன் கொண்டு வந்த பழக்கூடையைக் கையில் வாங்கிக் கதிரின் அம்மாவிடம் கொடுத்தவள், அத்துடன் பணம் இருந்த கவரையும் கொடுத்தாள்.
“பணமெல்லாம் எதுக்கும்மா நீங்க பார்த்து ஆறுதல் சொல்ல வந்ததே போதும்.” என்று சொன்ன அவனின் அம்மாவிடம்,
“சீக்கிரமா சத்தான ஆகாரம் கொடுத்து கதிரை எழுப்பிவிட இந்தப்பணம். பிளீஸ் வேணாம்னு சொல்லாதீங்க.” என்றதும் மறுக்கமுடியாது வாங்கிக் கொண்டார்.
“அப்போ நான் கிளம்புறேன்.” எனச் சொல்லவும்,
“கதிர் மேடத்தை வழி அனுப்பிட்டு வந்துடுறேன்.” எனச் சொல்லிய விழியன், அவளோடு எலெக்சன் பற்றிப் பேச சந்தர்ப்பம் அமைத்துக்கொண்டு அவளுடன் நடந்தான்.
விழியனிடம் கிரஹா கேட்டாள். “உங்க ஏரியாவில் உள்ளவங்க ஓட்டை நம்ம பக்கம் கொண்டு வந்திட முடியும்ல...? போன எலெக்சன்ல யாருக்கு உங்க ஏரியாவில் ஓட்டு விழுந்துச்சு?” எனக் கேட்டாள்.
“போன தடவை எம்.எல்.ஏ. அகத்தியனுக்குத்தான் முக்கால்வாசி பேர் ஓட்டு போட்டாங்க. அதுக்குக் காரணம் போன எலெக்சன் அப்போ எங்க சாவடிக்கு இரண்டு இலட்ச ரூபாய் ரொக்கம் கொடுக்குறதா சொல்லி, எங்க சமூகத்து ஆளுங்க ஓட்டை எல்லாம் அவனுக்கே போட சொல்லி கேட்டு அதே போலக் கொடுக்கவும் செய்தான். காசுக்கு ஓட்டை வாங்குற ஜோலி அப்படித்தான் நடந்துச்சு.
நம்ம மக்களுக்கு வாக்கை காசுக்கு விக்கிறது நாட்டுக்கு பண்ற பெரிய துரோகம்னு புரியலை. ஜனநாயகத்தோட தன்மையே பணத்துக்கான முக்கியத்துவத்தில் அடிபட்டுப் போவதை உணராமல் காசு வாங்குறாங்க. கை நீட்டி காசு வாங்கியாச்சு. எல்லாரையும் விட அவன் நிறையப் பணம் வேறு கொடுத்திருக்கான். நம்ம மனசாட்சிக்கு பொதுவா அவனுக்கே போட்டுருவோம். கை நீட்டி காசு வாங்கிட்டோம்ல! என்று காசில் அவர்கள் விலை போனதை மட்டுமே நினைவுல வச்சு ஓட்டு போடுறாங்க.
அவங்க பிள்ளைகள் பிள்ளைகளின் பிள்ளைகள் வாழபோற பூமியை காப்பாத்தி கொடுக்கிற தலைவர்கள் கிட்ட நாட்டை ஒப்படைக்காம, இருக்கிறதை சுரண்டி பூமியை பொத்தலாக்கும் கயவர்களிடம் நாட்டைக் கொடுக்குரோம்றதை உணராமல் இருக்காங்க.
இது நம்ம சந்ததிகளுக்கு நாம இழைக்கும் மிகப்பெரிய துரோகம் எனப் புரியாம காசு கொடுத்தவனின் சுரண்டலுக்குப் பச்சைக்கொடி காட்டி ஓட்டை போட்டுறாங்க... இதை எல்லாம் மாத்தணும் புரிய வைக்கணும் மேடம்.” என்றான்.
“ம் நீங்க சொல்றது சரிதான் விழியன். சிட்டி சைடில் ஓட்டுகளைச் சாதியை வச்சு தேத்த முடியிறது சொற்பம்தான். பொதுவா தனி மனுசனுக்குக் கொடுக்கிற காசுதான் அங்க ஓட்டை தீர்மானிக்குது.
பொதுவா நம்ம தென்மாவட்டங்களில் ஒவ்வொரு இனத்துக்கும் தனித்தனியா சாவடி தலைவர் அப்படின்ற போர்வையில சாதியக் கட்டுப்பாட்டை வளர்கிறோம்ன்ற பேரில் அரசியல்வாதிங்க அந்தச் சாதியக்கூடு கலைய விடாம மறைமுகமா லஞ்சம் கொடுத்து சாதி வெறியை அணைய விடாம பார்த்துக்கிறாங்க.
ஏன்னா, ஜாதி ஓட்டுதான் இதுபோல இடங்களில் அவங்களோட வெற்றிக்கு வழிவகுக்குது. தேவையானபோது அந்த வெறியை கலவரமா உருவாக்க, இந்த ஜாதிக்கூட்டை உடையாம தூபம் போட்டு வளர்த்து வச்சிருக்காங்க.
இப்படி ஒவ்வொரு சாதி அமைப்பிடமும் போய் அந்த இனத்தின் மீது பற்று இருப்பதாகக் காட்டி கல்யாண மண்டபம், சாவடி பள்ளிக்கூடம் இதுகளுக்கெல்லாம் நன்கொடைன்ற பேரில் ஒரு தொகையைக் கொடுத்து அண்டர் கிரவுண்டில் அந்தப் பணம் அவர்களின் வாக்குகளாகத் தேத்தி எடுக்கும் வேலையைப் பார்க்கிறார்கள்.
வளர்ந்த இங்க இருக்கிற பெரியவங்கக்கிட்ட இனி சாதிய எண்ணத்தைக் களைய முடியாது. பள்ளிக்கூடத்தில் படிக்கிற பிள்ளைகள் மனதில் இந்த ஜாதிய பிரிவினை எண்ணம் வராம பார்த்துக்கிடணும்.” என்றாள்.
“அட நீங்க வேற மேடம். என் மாமா வேலை பார்க்கும் ஸ்கூலில் நடந்த ஒரு சம்பவத்தையும் அவர் அபதாரம் கட்டிய சூழலையும் சொல்றேன் கேளுங்க.
அவர் வேலை பார்க்குற ஊர் ஒரு பேரூராட்சி நிலையில் உள்ளது தான். அங்கு ஜாதிக்கு ஒரு ஸ்கூல் வீதம்ன்னு பத்துக்கும் மேற்பட்ட பள்ளிக்கூடம் உள்ளது.
இது போல ஜாதிக்கு ஒரு பள்ளிக்கூடம்னு உள்ள ஊரில் அந்த இனத்துகாரர்கள் அவர்களின் பிள்ளைகளை ஜாதிப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மீறி, வேற ஸ்கூலில் சேர்ந்தால் பத்தாயிரம் அபராதம் வசூலிக்கிறதை ஜாதிச்சங்கம் வழக்கமா வச்சிருந்தாங்க.
பொதுவாக ஆண்டு இறுதியில் ஆசிரியர்கள் பிள்ளைகளைத் தங்களது பள்ளியில் சேர்க்க சொல்லி வீடுவீடாகச்சென்று பெற்றோர்களிடம் பேசும் வழக்கம் உள்ளது.
காரணம், ஆசிரியர் மாணவர்களுக்கான விகிதாச்சாரம் கம்மியாகி பிள்ளைகளின் வருகை குறைந்ததால் ஸ்கூல் ஸ்ட்ரென்த் ஆட்டம் கண்டதால் பிள்ளைகளை எங்கள் ஸ்கூலுக்கு அனுப்புங்க என்று மூளைச்சலவை செய்ய வேண்டிய நிலை.
ஆசிரியர்கள் இப்படிப் போவது பத்தாதென்று, ஜாதிக்கு பத்துபேரை பெரியாள்ன்ற பேரில் திரட்டிக்கொண்டு பிள்ளைகளை ஸ்கூலில் சேர்க்க கவுன்சலிங் என்ற பேரில் கவுன்சலிங் என்ற பேர்ல மூளை சலவை செய்றாங்க.
அவங்க இனத்தில் உள்ள பிள்ளைகள் வேறு ஸ்கூலில் ஏற்கனவே படித்துக் கொண்டிருந்தால் அந்தப் பிள்ளையோட ஆதார் அட்டையைக் கேட்டு அதில் இருக்கிற நம்பரை வைத்துத் தங்கள் சமூகத்திற்கான பள்ளிக்கூடங்களில் அட்மிசன் போட்டுருறாங்க.
இப்ப எல்லாம் டிசி வாங்காமலேயே ஆதார் அட்டையை வைத்தே பிள்ளைகள் சேர்க்கை ஸ்கூலில் நடந்துடுது. கம்ப்யூடரைஸ் மயமானதால் ஒரு மாணவனின் ஆதார் எண் மற்றொரு ஸ்கூலில் பதிவாச்சுன்னா பழைய பள்ளியில் இருந்து அந்த மாணவரின் பெயர் தானாக ஆட்டோமெடிக்கா பதிவில் இல்லாம போயிடும்..
என் மாமா வேலை பார்க்கும் வகுப்பில் மொத்தமே எட்டுப் பிள்ளைகள். அதில் இருந்து சில பிள்ளைகளை இதேபோல ஜாதிய மேட்டுமைவாதிகள் ஆதார அட்டை எண் வச்சு அவர்க சலுக ஸ்கூலில் அட்மிசன் போட்டாச்சு... என்று சொல்லிட்டுப் போயிட்டாங்கலாம்.
விஷயம் அறிந்த என் மாமா, தனது வேலையைக் காப்பாத்திக்க ஸ்கூல்ல ஸ்டூடன்ட் ஸ்ட்ரெந்த் காப்பாத்த. தனக்குத் தெரிந்த ஆட்களை வைத்து அந்தச் சங்கத்திடம் பேசி அந்தப் பிள்ளைகளைத் திரும்பத் தனது ஸ்கூலுக்கு மீட்டெடுக்கப் பத்தாயிரம் அபராதம் கட்டினார்.
இந்த லட்சணத்தில் எங்க ஜாதி அமைப்பை உடைக்க...?, இதுபோலச் சிறுவயதிலேயே பள்ளியிலேயே பாகுபாடு வளர்த்து சாதியை விதைச்சிடுறாங்க. இதில் எங்க சின்னவர்களிடம் இருந்து மாற்றத்தை கொண்டுவர...” எனச் சலித்தான்.
பின் அவனே, “ம்கூம் முயற்சி செய்யணும்... ஆயிரம் பெரியார் வந்தாலும் இவங்களை மாத்த முடியாது என்ற டயலாக்கை முடிஞ்ச அளவு உடைக்கப் பார்ப்போம் மேடம்.” என்றான்.
அவன் அவ்வாறு பேசவும் புன்னகையுடன், “ம்... இதுபோல என்னென்ன செய்யலாம்னு நிறைய யோசிங்க.
நான் நைட்டு மனுதாக்கலுக்கு வேண்டிய டீடைல்ஸ் என்னென்ன வேணும்ற விஷயத்தையும், முக்கியமான கொள்கைகள் பத்தியும் பேசி முடிவெடுக்கக் கான்பரன்ஸ் காலில் பேசுறேன். பாப்போம் விழியன்.” எனச் சொல்லி விட்டுக் காரில் புறப்பட்டு விட்டாள்.
***
ஜோதி, விழியனுக்குச் சாப்பாடு கொடுக்கப் போயிருந்தபோது அங்கு நடந்ததைத் தனது அம்மாவிடம் சொல்லவில்லை. அவள் சிறுவயதில் இருந்து பார்த்துவரும் விழியனின் தன்மையில் அத்துணை மரியாதை கொண்டிருந்தாள்.
மற்றவர்களுக்கு ஒன்றென்றால் ஓடிவந்து உதவும் அவனின் குணமும், அதேபோலத் தப்பென்றால் யாராக இருந்தாலும் எதிர்த்து நின்று கேள்விகேட்கும் தன்மையும், படிக்கும் பிள்ளைகளுக்கு அவன் செய்யும் உதவியும் கண்டு அவனின் மேல் நல்லெண்ணம் அவளுக்குள் வளர்ந்து நின்றது.
அப்படிபட்டவன் எலெக்சனில் நிற்கப்போவதும் அதற்கு அவன் வீட்டிலுள்ள எதிர்ப்பையும் கேட்டு அறிந்திருந்தாள். அதே நேரம் ஆக்சிடெண்டில் அவன் காயம்பட்டு அவஸ்தை படுவதையும் செவி வழிச்செய்தியாக அறிந்த ஜோதிக்கு அத்தனை வருத்தம் வந்திருந்தது.
ஹீரோ இமேஜ் வைத்திருக்கும் விழியனின் கஷ்டத்தில் ஏதாவது ஒரு வகையில் உதவ முடியுமா என நினைத்துக் கொண்டிருக்கும் போது தான் அவளின் அம்மா சாப்பாடைக் கொண்டு போய்த் தரச்சொன்னார்.
இட்லி வாங்க தொடர்ந்து ஆட்கள் வந்து கொண்டிருந்ததால் வேலை காரணமாக விழியனுக்குக் காந்தாவால் சாப்பாட்டைக் கொண்டு போய்க் கொடுக்க முடியவில்லை.
எனவே ஜோதியிடம், “விழியனுக்குப் போய்ச் சாப்பாட்டை அவனின் வீட்டில் வைத்துவிட்டு அங்கு ஒரு நிமிடம் கூட நிற்காமல் ஓடி வந்துடு. அந்தத் தம்பி எடுத்துப்போட்டு சாப்பிட்டுக்கிடும். வயசு பையன் வீட்டில் மசமசன்னு நிக்கக்கூடாது.”
என்று சொல்லி அனுப்பிவிட்டதையும் மீறி அவனுக்குத் தான் பரிமாறியது தெரிந்தால் கொன்னே போட்டுவாங்க.... என்று நடந்ததைச் சொல்லாமல் மறைத்து விட்டாள்.
வெளியில் தனது மகளையும் விழியனையும் சேர்த்து வைத்து தவறான பேச்சு அடிபட ஆரம்பித்திருப்பது தெரியாமல் அன்று இரவும் அவளிடமே இரவு உணவை கொடுத்து விட்டார் காந்தா.
அவள் இரவு உணவை விழியன் வீட்டுக்குக் கொண்டு சென்ற நேரம் விழியனுடன் மற்ற இரு நண்பர்கள் இருந்தார்கள். கான்பரன்ஸ் காலில் கிரஹாவுடன் பேசுவதற்காகக் கூடி இருந்தனர்.
அங்கு மற்றவர்கள் இருந்ததால் அப்பாடா என்ற பெருமூச்சுடன் வாசலில் இருந்தே குரல் கொடுத்து எடுத்துக்கொள்ளச் சொல்லி திண்ணையில் வைத்துவிட்டு ஓடிவந்து விட்டாள்.
மேலும் வெண்ணிலாவுடனான விழியனின் காதல் தோல்வியும், ஏனோ அவளுக்கு விழியனின் மேல் சற்றுப் பரிதாபத்தை வரவைத்திருந்தது. மேலும் வாசலில் நின்று வெண்ணிலா பேசிய பேச்சை கண்டவள், ‘விழியனுக்கு இவள்கூட லவ் பிரேக்கப் ஆனது நல்லதுக்குத்தான். பொண்ணா அவ..? பேய்...’ என அவளுக்குள் அவளே சொல்லிக் கொண்டாள்
***
---தொடரும்---
அத்தியாயம் 18
அதேவேளையில் ஸ்ரீராமிடம் எம்.எல்.ஏ அகத்தியன், “என்னடா விழுந்த அடியில அந்த விழியனுக்குக் கொஞ்சமாவது புத்தி வந்துருக்கா...? இல்ல, இன்னும் அடங்க மாட்டோம்னு துள்ளிக்கிட்டு தான் இருக்கானா...?” என்றவரிடம்,
“தலைவரே! அடங்குனது போலத் தெரியலை. அவன் அடங்கவும் மாட்டான்.” என்றான்.
“என்னது அடங்க மாட்டானா...? அப்போ ஆள் அரவம் இல்லாம ஜோலியை முடிச்சிட வேண்டியது தான். ஆனா... இந்தப் பயலை முடிக்கிறதவிட இவனைப் பின்னாடி இருந்து தூண்டி விடுற அந்தக் கிரஹாவைத் தான் எதையாவது செய்து அடக்கணும்.
இந்தச் சுள்ளிப்பயலை வச்சு உலை கொதிக்க வைக்கப் பார்க்குறாள் கிரஹா, இவன் இல்லாட்டி இன்னொரு சுள்ளியை தேடி போவாள்.... ஆனா, விறகை நமத்து போக வச்சா அது கூடவே போராடிக்கிட்டு இருப்பாள்.
இந்த விழியனை எப்படி மடக்குறது? அவன் வீட்டுக்கு அடங்குறவன் போலத் தெரியலையே! ஏதாவது லவ்வு கிவ்வுன்னு இவனுக்கு இருக்கா? பெரிய இவனாட்டம் சிலுப்பிகிட்டு இருக்கிறவனும் பொண்ணுங்க விஷயத்தில் வீக்காகத்தான் இருப்பாங்க.” என்றதும், ஸ்ரீராமின் முகத்தில் தவுசன்ட் வோல்டேஜ் எரிந்தது.
“ம் இருக்கு தலைவரே! எப்படித்தான் இவனைப் போய் அந்த வெண்ணிலா, ச்சே...” என்று வெறுப்பாய் குரல் கொடுத்தான்.
அவனின் வெறுப்பைக் கண்ட அகத்தியன் ஒரு இகழ்ச்சியான சிரிப்பை உதட்டில் வழிய விட்டபடி, “ஏன்...? உனக்கு அவளைப் புடிச்சிருக்கா? உன் கிட்ட திரும்பி அவளை வரவைக்க உனக்கு ஒரு சான்ஸ் ஏற்படுத்தித் தாரேன்.” என்றார்.
***
வெண்ணிலா தனது தோழியுடன் சென்னையில் இருந்து அந்த விரைவு சொகுசு பேருந்தில் வந்து இறங்கினாள்.
அவளின் மொபைல் ஒலி எழுப்பியது. பெயர் பதியாத ஏதோ ஒரு எண்ணில் வந்த அழைப்பை யோசனையுடன் எடுத்து காதுக்குக் கொடுத்து, “ஹலோ யாரு?” என்று கேட்டதும்,
“வெண்ணிலா தானே? நான் ஸ்ரீராம்.“ என்றான்.
இவன் எதுக்குப் பேசுறான் என்ற யோசனையுடன், “ஹாங் ஸ்ரீ, எப்படி இருக்கீங்க?” என்றதும்,
“நான் நல்லா இருக்கேன். ஆமா எப்போ ஊருக்கு வருவீ...ங்க?” என்று யோசனையுடன் ‘ங்’ சேர்த்துச் சொன்னான்.
“நான் இப்போ தான் ஊருக்குள் பஸ்ஸில் வந்து இறங்கியிருக்கேன். என்ன திடீர்னு எனக்குப் போன் பண்ணியிருக்கீங்க, என்ன விஷயம்?” என்றாள்.
“ஓ... மை காட், நல்ல நேரத்தில் வந்திருக்கீ...ங்க” என்று தடுமாற்றத்துடன் பேசியவனை, “உங்களை விட நான் சின்னவ தான சும்மா ‘வா...’, ‘போ... ’னு சொல்லியே பேசுங்க. ரெண்டும் இல்லாம ‘ங்க’னு யோசிச்சு யோசிச்சு சொல்றதுக்கு அது பெஸ்ட்னு நினைக்கிறேன்.” என்றாள்.
“அப்பாடா வா போன்னுதான் உன்கிட்ட பேச வருதா, ஆனா அப்படிச் சொன்னா கோவிச்சுக்கிடுவியோன்ற பயம் இருந்துச்சு. சரி விஷயத்துக்கு வாரேன். விழியனும் கதிரும் போன பைக் ஆக்சிடென்டாகி இப்போ கதிர் ஆஸ்பத்திரியில ஐ.சி.யூவில் இருக்கான்.” என்றான்.
“அச்சச்சோ எனக்குத் தெரியாது ரொம்ப அடியா?” என்றாள்.
அவள் குரலில் நினைத்த அளவு பதட்டம் இல்லாதது இவனுக்குள் ஒரு குரூர ஆறுதல். எனவே உற்சாகத்துடன், “சீமாட்டி ஜவுளி ஸ்டோர் முன்னாடியா நிக்கிற? அங்க தானே சென்னையில் இருந்து வர பஸ் எல்லாம் நிக்கும்.” என்றவனிடம்,
“ஆமா, என் ஃபிரண்ட் வீட்டில் இருந்து அவளைப் பிக்கப் பண்ண ஆள் வரும்வரை கூட நிக்கச் சொன்னா. அதுக்குப்பிறகு நான் ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு போகணும்.” என்றாள்.
மனதிற்குள், ‘நல்லதா போச்சு, இப்போவே போய் நேரில் அவளுடன் பேசிடலாம்.’ என்ற எண்ணத்தில், “நான் அந்தப் பக்கம்தான் இருக்கேன். ஓர் ஐந்து நிமிசத்தில் நீ நிக்கிற இடத்துக்கு வந்துருவேன். உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.” என்றான்.
“ஐந்து நிமிசத்தில் வந்தா பார்க்கலாம். இல்லாட்டி அவ போனதுக்குப் பிறகு ஒத்தையில் எல்லாம் இங்க நிக்க முடியாது. முக்கியமா பேசணும்னா சீக்கிரம் வர பாருங்க ஸ்ரீ.” எனச் சொல்லி மொபைலை வைத்தாள்.
இவனும் அடித்துப்பிடித்துத் தனது டூவீலரை எடுத்துக் கொண்டு வேகமாக இயக்கி அவ்விடம் வந்து சேர்ந்தான்.
இருவரும் பரஸ்பரம் பார்த்து ஒருவருக்கொருவர் புன்னகைத்துக் கொண்டனர்.
ஸ்ரீ அவளிடம், “வாயேன் வெண்ணிலா! பக்கத்தில ஆனந்தாஸ் வெஜ் ஹோட்டல் இருக்கே, ஒரு தோசையும் சூடா காபியும் குடிச்சுக்கிட்டே பேசலாம்.” என்றான்.
இவளுக்கும் ரோட்டில் நின்று பேச இஷ்டம் இல்லாததால் அவனுடன் ஹோட்டலுக்குச் சென்றாள்.
மேஜையில் எதிர் எதிராக அமர்ந்தவர்களிடம் வந்த சர்வர் “என்ன சாபிடுரீங்க..?” என்றவரிடம் ஆர்டர் கொடுத்து அவர் நகர்ந்ததும்,
“வெண்ணிலா உனக்கு நான் சொல்லித்தான் விழியன், கதிர் ஆக்சிடெண்ட் பத்தி தெரிஞ்சிருக்கு. ஆனாலும் நீ, அவங்களைப் பெருசா எதுவும் என்கிட்ட விசாரிக்கலை. அப்போ உங்க ரெண்டு பேருக்குள்ள முன்னாடி போல...” என்று இழுத்தான் ஸ்ரீராம்.
“ம் ஆமா நாங்க பிரிஞ்சிட்டோம். எங்களுக்குள்ள சகஜமான பேச்சு வார்த்தை கூட இப்போ குறைஞ்சு போயிருச்சு.” என்றாள்.
“அதானே, நீதி நியாயம்னு வெட்டியா பேசி சீன போட்டுப் பொழைக்கத் தெரியாத அவனை நம்பி, எப்படி ஒரு பொண்ணு வாழ்க்கையில் நுழையும். இப்போ கூடப் பாரு நம்ம ஊர் பஸ் ஸ்டாண்ட் பக்கம் எம்.எல்.ஏ ஹோட்டல் ஒன்னு மூடி கிடக்குது, அது லீசுக்கு வந்தது.
நான், இவன் சும்மா சுத்திகிட்டு இருக்கானேன்னு அந்தக் கடையை லீசுக்கு எடுக்க, விழியனையும் ஜாயின் பண்ணிக்குவோம்... மெயினான இடம் பிக்கப் ஆச்சுனா நீயும் செட்டில் ஆயிடுவேன்னு சொல்லி எம்.எல்.ஏ அகத்தியன் கிட்ட கூட்டிட்டு போனேன்.... போனோமா வந்தோமான்னு இருக்காம அவர் பேச்சு சரியில்லை, அந்த ஆள் சரியில்லைன்னு சொல்லி அவருக்கு எதிரா எலெக்சன்ல நிக்கப் போறேன்னு கிளம்பி இருக்கான்.
அதுக்குத்தான் எம்.எல்.ஏ, என்னைய கூப்பிட்டு விழியனுக்கு ரொம்ப வேண்டியவங்க யாரையாவது வச்சு அவன் கிட்ட பேசி எலெக்சன்ல நிக்கிற அவனோட எண்ணத்தை மாத்த சொன்னார்.
அப்படி மாத்திட்டா நான் லட்ச ரூபா கொடுக்குறேன்னு சொன்னாரு. அதுதான் உன்னைய அவன்கிட்ட பேச வச்சு அந்தப் பணத்தை உனக்கு வாங்கிக் கொடுக்கலாம்னு நினைச்சேன்.” என்றான்.
“பேசலாம் தான். ஆனா, அவன்கூடப் பிரேக்கப்னு சொல்லிட்டு இப்போ போய் இதுக்காகப் பேசினா கேட்பானா...?” என்றாள்.
“அவனுக்கு அடிபட்டிருக்குதுல, அதைச் சாக்கா வச்சு பார்க்க போறது போலப் போ..! பிரேக்கப் செய்ததுக்குச் சாரி சொல்லு... அப்படியே உன்னைய மறக்க முடியலைன்னு அடிச்சு விடு.... அதுக்குப்பிறகு இந்தப் பேச்சை ஆரம்பி.
அவன் சரின்னு சொல்லிட்டா எலெக்சன் மனுதாக்கல் நாள் முடியும் வரை அந்த நாடகத்தைக் கண்டினியூ பண்ணு. இதெல்லாம் செய்தா லட்ச ரூபாய் சுளையா உன் கையில் நான் கொண்டு வந்து தாரேன்.” என்றான்.
பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்து அவனின் வார்த்தைக்குப் பதில் சொல்லாது யோசனையுடன் வெளி வந்ததும் அவளை அங்கு ரோட்டில் நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏற்றி விடும்போது, “பதில் எதுவும் சொல்லலை நீ...” என்ற ஸ்ரீராமிடம்,
“ம் டிரை பண்றேன்.” என்றாள்.
“அப்போ நாளைக்கே அவனைப் பார்த்து பேசிடு. நாளைக்கு மறுநாள் எலெக்சன் மனுதாக்கல் நடக்க ஆரம்பிச்சிடும். பை வெண்ணிலா, போன்ல இது பத்தி பேசிக்கலாம்.” எனச் சொல்லி அனுப்பி வைத்தான்.
***
நேற்றை விட இன்று முட்டி கை கால் புண்கள் நிறைய வலித்தது விழியனுக்கு.
காலையில் எழுந்ததுமே ஹாஸ்பிடலில் கதிருடன் தங்கி இருந்த நண்பர்களிடம் மொபைலில் பேசி நண்பனின் நிலையை அறிந்து கொண்டான்.
‘இன்றும் தான் ஹாஸ்பிடல் போய்க் கதிரை பார்த்துவிட்டு வலி நிவாரணத்துக்கு ஊசி போட சொல்லணும்.’ என்று நினைத்தவன், ‘இன்று இரவு கிரஹா மேடத்துடன் கான்பரன்ஸில் பேசணும். சுயேட்சையாக முதலில் நின்று பின்பு தனிப்பட்ட ஒரு பெருங்கட்சியாகத் தன்னால் வளர முடியுமா?
தேர்தலில் தோத்து போயிட்டா அதை ஏத்துக்கிட மனதில் எனக்கு வலு இருக்கு. ஆனால், என்னை நம்பி களத்தில் என்னுடன் நிக்கிறவங்களுக்கு...?
இங்க நல்லபடி அரசு இயந்திரம் செயல்பட ஓட்டுப்போடுங்கன்னு சொல்லுவோம், நம்மை நம்பி ஓட்டு போடுறவங்க போடட்டும்.
பெரும்பான்மையான மக்கள் நமக்கு ஒட்டு போடாம போனாலும் நாம சோர்ந்து போகக்கூடாது.
ஓர் அமைப்பாக இருந்து அடுத்து வரும் எலெக்சன் வரை அரசிடம் இருந்து வரும் உதவிகளை முடிந்த அளவு மக்களிடம் எடுத்துக்கொண்டு போகவும், திட்டங்களுக்கு ஒதுக்கிய பணம் முடிந்த அளவில் தேவைக்குப் பயன்படுதா என்று கண்காணித்துக் கரெப்சன் செய்றவங்க முகத்திரையைக் கிழித்து வெளியில் காட்ட முயல்வோம். நம்மாலான நற்பணிகளையும் செய்வோம்.
அடுத்த எலெக்சனில் நம்மை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று இந்த நேரத்திலேயே உடன் இருப்பவர்களை மனதளவில் தயார் படுத்தணும்.’ என்ற பல சிந்தனைகள் அவனுள்.
அவ்வாறு மனதோடு பேசிக்கொண்டிருக்கும் போது அங்கிருக்கும் திறந்த அலமாரியில் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களின் மேல் தூசு படிந்திருந்ததைக் கண்டு, அதைத் தூசி தட்டி பார்த்தவன் கையில் முதலில் சிக்கிய புத்தகம், ‘பகத்சிங்கும் இந்திய வரலாறும்’ என்ற புத்தகம்.
அதைத் தொடர்ந்து, தீண்டாத வசந்தம், பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் போன்ற புத்தகங்களைக் கண்டவன், இன்றைய அவன் மனநிலைக்கு ஏற்ற புத்தகங்கள் என்ற நினைப்பில் எடுத்து வாசிக்க அமர்ந்துவிட்டான்.
ஒரு மனிதனின் அறிவை தீட்டும் ஆயுதம் புத்தகம். அரசியலில் அடியெடுத்து வைக்கப் புத்தகத்தின் மூலம் புத்தியை பலத்தும் முதல் அடியை எடுத்து வைத்தான்.
அமர்ந்து வாசிக்க ஆரம்பித்தவனுக்கு நேரம் சென்றதே தெரியவில்லை.
காந்தாவின் மகள் ஜோதி, “உங்களுக்குச் சாப்பாடு கொண்டு வந்திருக்கேன், உள்ள வரலாமா?” என்று திறந்திருந்த கதவைத் தட்டியதும், வாசித்துக் கொண்டிருந்தவன் கவனம் கலைந்தது.
“ம்... வா ஜோதி அதுக்குள்ள மதியம் ஆகிடுச்சா? அம்மாவ காணோம், நீ எதுக்கு? உனக்குச் சிரமம் தானே?” என்றான்.
“ம்கூம், அதெல்லாம் இல்ல.” எனச் சொல்லிக் கொண்டே கூடையில் வைத்திருந்த மூன்றடுக்கு கேரியரை எடுத்தவள், “தட்டு எங்க இருக்கு?” என்று கேட்டதும், அவன் தடுப்பைச் சுட்டிக் காட்டினான்.
அங்குச் சென்று, இருந்த இரண்டு டம்ளர் இரண்டு தட்டில் ஒரு ஜோடியை மட்டும் எடுத்துக்கொண்டு, அவன் உட்கார்ந்திருந்த கட்டிலின் முன்பு அங்கிருந்த ஸ்டூலை நகர்த்திப் போட்டு, அதில் தட்டை வைத்து பரிமாற ஆயத்தமானாள்.
உடனே கைக் கழுவ அவன் எந்திரிக்க முயன்ற வேளையில், “நீங்க உட்காருங்க. காலிலும் உங்களுக்கு அடிபட்டிருக்குதுன்னு அம்மா சொன்னாங்க. நான் கை கழுவ கப்பில் தண்ணீர் எடுத்துட்டு வாரேன்.” என்று சொல்லியவள் கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள்.
ஏனோ விழியனுக்குச் சங்கடமாக இருந்தது. அவளின் அம்மா வந்திருக்கலாம் என மனதினுள் நினைத்தான்.
வயது பெண்ணின் உதவியை ஏற்றுக்கொள்ளச் சற்றுச் சங்கடமாக உணர்ந்தான், ஆனாலும் தவிர்க்க இயலவில்லை.
அதேநேரம் சோதனையாக அங்கு வெண்ணிலாவும் நுழைந்தாள்.
விழியனின் அருகில் நின்று நீர் கோப்பையை ஜோதி பிடித்துக்கொண்டும் அவன் அதில் கைவிட்டுக் கழுவிக்கொண்டும் இருந்த தோற்றம், இருவரும் அந்நியோன்யமாக இருப்பதைப் போன்ற மாயையை உருவாக்கினாலும் அதைக் கண்டுகொள்ளாத பாவனையை முகத்தில் தருவித்தாள் வெண்ணிலா.
அவளைச் சுத்தமாக அங்கு எதிர்பார்த்திராத விழியனுமே சற்று அதிர்ந்து, அதனால் ஒரு நிமிடம் மௌனமாகிப் பின்பு சுதாரித்து, “வா வெண்ணிலா.” எனக் கூறினான்.
“உங்களுக்கு அடிபட்டிருக்குதுன்னு ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லணும்னு தோனலையில்ல. அந்தளவுக்கு நான் உங்களுக்கு அந்நியமாய்ப் போயிட்டேனோ?
என்னமோப்பா இந்த ஆம்பளைங்க லேசா பழகினவங்களைத் தூக்கி போட்டுடுறாங்க. பொண்ணுங்க எங்களால அப்படி எல்லாம் இருந்துட முடியல....” என்று சொன்னபடி அவன் அமர்ந்திருந்த கட்டிலில் சற்றுத்தள்ளி அமர்ந்தாள்.
“ஏய், இது ஒண்ணும் மரக்கட்டில் கிடையாது, இரண்டு பேர் உட்கார்ந்தா தாங்குமோ என்னமோ?” எனக் கூறினான்.
அவள் சட்டென்று உட்கார்ந்ததால் சற்று உள்ளிறங்கியது கட்டிலின் வயர், அதை உணர்ந்தே அவ்வாறு சொன்னான்.
உடனே, “நான் ஒன்னும் அம்புட்டு வெயிட்டெல்லாம் இல்லை. ஆமா இவங்க யாரு?” என அங்கு அவனுக்கு இட்டிலிகளைப் பரிமாறிக் கொண்டிருந்த ஜோதியைப் பார்த்துக் கேட்டாள்.
“என் சொந்தக்கார பொண்ணு தான், எனக்கு அடிபட்டு இருக்கிறதால சாப்பாடு கொண்டு வந்து கொடுத்துப் பக்கத்தில் இருந்து சாப்பிட வைக்கச் சொல்லி காந்தா அக்கா அனுப்பி விட்டுருக்காங்க.” என்றவன்,
“நீயும் சாப்பிடு... ஜோதி இருக்கிறதை உள்ள இருக்கிற தட்டை கொண்டு வந்து இரண்டு பேருக்கும் பரிமாறு.” என்று சொன்னான்.
“ஐயய்யோ, எனக்குச் சாப்பாடு எல்லாம் வேண்டாம். ஊரில் இருந்து நான் வந்திருக்கேனு, எனக்குப் புடிச்சதா எங்கம்மா சமையல் செய்து என்னைச் சாப்பிட வைத்துத்தான் வெளியில் விட்டாங்க.
அதுசரி நீங்க எவ்வளவு ஸ்பீடா போனாலும் கவனமாத் தானே போவீங்க? அப்படி இருந்தும் பைக்கிலப் போய்கிட்டு இருந்த உங்களை அடிச்சுப் போட்டுட்டு போயிருக்காங்க.
உங்க காலில் எம்மாம் பெரிய கட்டு! அய்யோ இரண்டு காலிலேயும் கட்டுப் போட்டிருக்கு. ரொம்ப அடியா விழியன்?
ஆமா கதிர் எப்படி இருக்காங்க? சாரி விழியன் நான் பிரேக்கப் சொல்லியிருக்கக் கூடாது. என்னால உங்க கூடப் பேசாம நினைக்காம இருக்க முடியலை விழியன்.” என்றாள்.
ஏனோ அவளின் வார்த்தைகள் அவனுக்கு அத்தனை இதமாக இருந்தது.
அவனின் வீட்டில் அவனுக்கான இடம் இப்பொழுது வெற்றிடமாக ஆனதால், அவன் மனதுக்கு ஓர் அணைவும் ஆதரவும் தேவைப்படுவதை வெளியில் காண்பிக்காது உள்ளுக்குள் ஏங்கிக் கொண்டிருந்தது.
எனவே அவளின் வார்த்தையில் சட்டென்று நெகிழ்ந்து, ”லூசு, என்கூட மனசு விட்டு பேச எதுக்குத் தயக்கம்? நீ எப்பவும் என் வெண்ணிலா தான்.” என்றவன்,
“ஆனா, நமக்குள்ள வந்த பிரச்சனைகளுக்கான காரணம் இன்னும் சால்வ் ஆகலை வெண்ணிலா. சொல்லப்போனா இப்போ நீ சண்டை போட்ட காரணம் இன்னும் கொஞ்சம் அதிகமாத்தான் ஆகியிருக்கு. அதுதான் கொஞ்சம் பயமாயிருக்கு.” என்றான்.
“ம்க்கும்... நீங்க போய் எனக்குப் பயப்படுவீங்களாக்கும், அதை இந்த உலகம் நம்பும்னு நினைக்கிறீங்க?” என்றாள்.
அவளின் பேச்சில் சற்று அதுவரை இருந்த இறுக்கம் விடுபட ஜோதி பரிமாறிக் கொண்டிருந்த சாப்பாட்டைச் சாப்பிட்டுக்கொண்டே “ஹாஹாஹா...” எனச் சிரித்ததும் புரையேறிவிட்டது.
உடனே பதறிப்போன ஜோதி வேகமாக டம்ளர் தண்ணீரை எடுத்து, “இதை முதலில் குடிங்க.” என்று சொல்லியபடி, அவளை அறியாமல் அவனின் தலையைத் தட்டிவிடக் கை நீண்டது. ஆனால் சுதாரித்து அடக்கிக் கொண்டாள்.
“சாப்பிட்ட பிறகு பொறுமையா உட்கார்ந்து பேசுங்க.” என்றாள்.
---தொடரும்---
அத்தியாயம் 17
வீட்டில் கிரஹா அவளின் அண்ணன் பூபதிராஜாவின் முன் அமர்ந்திருந்தாள்.
நடந்ததை அவளின் மூலம் அறிந்தவர், “உன்னோட இன்ட்ரஸ்ட் எனக்குப் புரியுது கிரஹா. ஆனா, அந்த எம்.எல்.ஏ அகத்தியன் பதவி வெறி புடிச்சவன். நமக்குப் பயந்துக்கிட்டு அடங்கி இருக்கிறதுபோலப் பாவலா காண்பிக்கிறது எல்லாம் பதவியில் இருக்கிற வரை தான். அந்தச் சீட்டை தக்க வச்சுக்கணும்றதுக்காகத்தான் அவன் அயோக்கியத்தனத்தைச் சத்தமில்லாது பண்றவன்..
அவனோட பதவிக்கு ஆபத்து வரப்போகுதுன்னு தெரிஞ்சா அதைத் தடுக்க எந்த எல்லைக்கும் போவான்.... அதனால இந்த விஷயத்தில் நீ அந்தப் பையனுக்குப் பின்னாடி நிக்கிறேன்னு தெரிஞ்சா உனக்கும் ஆபத்துதான். நீ சொல்றதை பார்த்தா ஆரம்பத்திலேயே உன்னை அவன் மோப்பம் பிடிச்சிருக்கான்!” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவரின் மொபைல் ஒலி எழுப்பியது.
பொதுவாக நம்பர் கால் என்றால் பேசாதவர் இன்று தாங்கள் பேசிக் கொண்டிருக்கும் பேச்சினால் ஒருவேளை அவனாக இருக்குமோ? என்ற எண்ணத்தில் மொபைலை அட்டன் பண்ணினார்.
“முதலாளி பூபதிராஜாவா... என்னை யாருன்னு தெரியுதா?” என்றதும்,
“வாசன் தானே... உன் குரலை எப்படி மறக்க முடியும்? இங்க ஒரு பிரச்சனைனு வந்ததுமே உனக்கு மூக்கு வேர்த்திருச்சா? உன் நம்பரை மாத்திக்கிட்டே இருக்கறதால நானும் உன் பேரை ஸ்டோர் பண்றதில்லை.” என்றவரிடம்,
“என் பேரை எல்லாம் நீங்க எதுக்கு ஸ்டோர் பண்ணனும்? ஏதாவது பிரச்சனைனா மொபைல் தான் ஆதாரமே.... அதனால நானே தேவைன்றப்ப போன் பண்றேன்.” என்றான்.
“அதுவும் சரிதான்... எப்படி இருக்க வாசன்? இப்போ என்ன விஷயமா போன் பண்ணின?”
“நேரத்துக்குத் திங்க கறியும் சோறும். என்னைக் காப்பாத்திக்கக் கையில துப்பாக்கி மட்டும் போதும். இது எல்லாம் கிடைச்சிருக்கு. அப்போ நான் நல்லா இருக்கேன்னு தானே அர்த்தம்.... இங்க கிரஹா மேடத்தோட பேரு அடிபடுது. கிரஹா மேடத்தை ஒழிச்சுக்கட்ட எம்.எல்.ஏ அகத்தியன் காசை கொட்டி கொடுக்க ரெடியா இருக்கான்.
உங்களுக்காக அவனோட அப்ளிகேசனை எடுத்துக்கிட கொஞ்சம் தயங்குறாங்க. அதனால எவனும் காசு வாங்கலை. அகத்தியன் கிட்ட ஒரு தடவை உங்களைப் பார்த்து பேசி ஒரு முடிவு எடுக்கச் சொல்லியிருக்காங்க.
நீங்க தேவையில்லாத இதுபோலப் பிரச்சனைகளில் தலையிடாம ஒதுங்கிப் போயிடுவீங்கன்னு சொல்லி அனுப்பியிருக்காங்க. ஆனா, அவன் உங்ககிட்ட சமாதானம் எல்லாம் பேச வர மாட்டான்.
அந்த அகத்தியன் ரொம்ப மோசமானவன். அவன் அவனுக்குன்னு வச்சிருக்கச் சர்கில் ஆட்களை வச்சு எதையாவது கிரஹாவுக்கு எதிரா செய்யவும் வாய்ப்பிருக்குது....
அதுதான் ஜாக்கிரதையா கிரஹா மேடத்தை இருக்கச் சொல்ல போன் பண்ணினேன்.... முடிஞ்சா இந்தப் பஞ்சாயத்துக்குள்ள மாட்டாம இருக்கச் சொல்லுங்க.” என்றான்.
“உனக்கு அவ குணம் தெரியும் தானே.... நான் ஜாக்கிரதையாய் இருக்கச் சொல்லுறேன் வாசன், அவளுக்கு ஒரு செக்யூரிட்டி டீம் ஏற்பாடு பண்றேன்.”
“அதுசரிதான் செக்யூரிட்டிக்கு ஆள் வேணும்னா மனோஜ்க்கு போன் பண்ணி பேசுங்க. நான் அவனையே செக்யூரிட்டி டீமுக்கு இன்சார்ஜா இருக்கச் சொல்லிடுறேன்.
வேற ஏதாவது என்கிட்ட பேசணும்னு சூழல் வந்தா மனோஜ் கிட்ட சொல்லுங்க. அடுத்த நிமிஷம் நான் உங்ககிட்ட பேசுறேன்.” எனச் சொல்லி மொபைல் இணைப்பை துண்டித்தான் வாசன்.
அவர் யாருடன் பேசுகிறான் என்பது தெரியா விட்டாலும் தன்னைப் பற்றிய பேச்சு தான் என்பது கிரஹாவுக்குப் புரிந்தது.
“யார்கிட்ட அண்ணே பேசுனீங்க? வாசன்னா நம்ம வசந்தியோட அண்ணன் வாசனா? எனக்குச் செக்யூரிட்டி ஏற்பாடுன்னு பேச்சு அடிபட்டதே!” என்றவளிடம்,
“இது வேற வாசன் கிரஹா. இப்போ நீ கையில எடுத்திருக்கும் பிரச்சனை கொஞ்சம் ரிஸ்கானது. கூலிப்படை கிட்ட உன்னைப் பினிஷ் பண்ணச் சொல்லி அகத்தியன் அப்ரோச் பண்ணியிருக்கான்.
என்னோட நலம் விரும்பி ஒருத்தன் அந்தக் கூட்டத்துல மெயின் ஆளா இருக்கான். அதனால உன் விஷயத்தை என்கிட்ட பேசி கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கச் சொன்னான். முடிஞ்சா ரிஸ்க் விட்டு விலகி இருக்கச் சொன்னான்.” என்றார்.
“அண்ணே... ம்கூம்... முடியாது. நான் சொல்லி விழியன் என் பேச்சுக்கு கட்டுப்பட்டு எலெக்ஷனுக்கு ரெடி ஆகிறான். அவனுக்குப் பக்கபலமா இருந்த இன்னொருத்தனை ஹாஸ்பிடலில் அட்மிட்ட பண்ண வச்சிட்டாங்க.... இந்த நிலையில இனி நான் பின் வாங்குறது சரியில்லை. உனக்கு என்னால சிரமமா அண்ணே?” எனக் கேட்டாள்.
“ஏய்... பைத்தியமா நீ? நீ என்னோட தங்கச்சி. நீ எனக்கு வரம். கொஞ்சம் ஜாக்கிரதையா இரு. உனக்கு எப்பவும் சப்போர்ட்டா அண்ணன் நிப்பேன்.” என்று கூறினார் பூபதிராஜா.
***
ஹாஸ்பிடலில் கதிருக்குத் துணையாக அவனது அம்மாவையும் நண்பர்களில் இருவரையும் மருத்துவமனையில் விட்டுவிட்டு தன்னுடைய ஓட்டு வீட்டுக்கு வந்திருந்தான் விழியன்.
அவ்வளவு நேரம் இல்லாத உடல்வலியையும், ரணத்தின் வலியையும் அப்பொழுதுதான் உணர ஆரம்பித்தான்.
“டாக்டர் கொடுத்ததில் பெயின் கில்லர் இருக்குமே! அதைப் போட்டுவிட்டுப் படுக்கலாமென்றால் சாப்பிடாமல் எப்படிப் போட?” என நினைத்துக் கொண்டிருக்கும் போதே அங்கு, “தம்பி...” என்ற காந்தாவின் குரல் கேட்டது.
‘ஆஹா தாத்தா சொன்னது போல எனக்குச் சாப்பிட இட்லி கொண்டு வந்துட்டாங்க போல. அப்பாடா...” என்ற நிம்மதி பெருமூச்சுடன், “வாங்கக்கா” எனச் சொல்லியபடி அங்குத் தற்போது அவன் தூங்கி எழுந்துகொள்ளப் போடப்பட்டிருந்த வயர் கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தான்.
உள்ளே நுழைந்த காந்தாவோ, எழும்போது காயத்தில் உண்டான வலியில் அவனை அறியாமலே, “ஸ்...” என்ற சத்தத்துடன் முகம் சுளித்து வலியை வெளிப்படுத்த,
அவனைப் பார்த்து, “மெதுவா தம்பி மெதுவா... ஆண்டவா... என்ன தம்பி இம்புட்டு காயத்தோட ஒத்தையில எப்படிச் சமாளிப்பீங்க. சரி சரி அதைப் பத்தி பிறகு பேசலாம். சூடா சட்னி, சாம்பாரோட இட்லி கொண்டு வந்திருக்கேன்.
நீங்க கைகழுவ எல்லாம் எழுந்து போக வேணாம் தண்ணீ கொண்டு வாரேன். கழுவிட்டு அப்படியே உட்கார்ந்து சாப்பிடுங்க. டாக்டர் புண்ணுக்குக் கொடுத்திருக்கும் மாத்திரையைப் போட்டுக்கோங்க உன் சிநேகிதன் கதிர் இப்போ எப்பிடி இருக்கான்?
அவனுக்கு ரொம்ப அடியாம்ல பொழைச்சதே மறு பொழப்புன்னு பேசிக்கிட்டாங்க.” என்றபடி தடுப்புக்கு அப்பால் சென்று அங்கிருந்த சிறு தொட்டியில் தேக்கி வைத்திருந்த தண்ணீரை நெகிழிக் கோப்பையில் எடுத்துக்கொண்டு அவனிடம் வந்தார்.
அதேநேரம் அவனின் அம்மா வாணியும் பதட்டத்துடன் உள்ளே நுழைந்தார்.
“விழியா என்னடா ஆச்சு! அய்யோ என் புள்ளையின் கை காலில் எல்லாம் அடிபட்டிருக்கே...! இப்படி இருக்கும் போதும் ஏன்டா தனியா இங்க வந்து, யாரும் இல்லாதது போல இருக்கணும்....?
நீ முதலில் என்கூட வீட்டுக்கு கிளம்பி வா... இந்த நிலைமையில் நீ ஒன்னும் தனியா இருந்து எதையும் சாதிக்க வேணாம்.” என்றவர்,
“காந்தாவா வா வா... உனக்கு எப்படித் தெரியும்? இவன் ஆஸ்பத்திரியில் இருந்து வந்துட்டான்னு.” எனக் கன்னத்தில் அழுகையால் வழிந்த கண்ணீரை துடைத்தபடி தன் வீட்டிற்கு வந்திருக்கும் மற்றொருவரை விசாரிக்கும் விதத்தில் கேள்வி எழுப்பினார்.
“பெரியவர்தான் மதினி இரண்டு வேளை தம்பிக்கு டிபன் குடுக்கச் சொல்லி என்னை மாசம் பேசி அமர்த்தியிருக்கார். அதான் ஆட்டோவுல தம்பி இங்க வந்ததைப் பார்த்துட்டு நான் சாப்பாடு எடுத்துட்டு வந்தேன். சுடச்சுட இட்லியும், பாசிப்பருப்பு சாம்பாரும், சட்னியும் கொண்டு வந்திருக்கேன்.
தம்பி ரொம்பக் களைப்பா தெரியிறாங்க. எழுந்து போய்க் கை கழுவிட்டு வந்தா அவர் காலில் இருக்குற புண்ணு ரணமா வலிக்கும்னு கப்புல தண்ணி பிடிச்சிட்டு வந்திருக்கேன். இதில் கை கழுவிட்டு தம்பியை சாப்பிட சொல்லுங்க மதினி.” என்றார்.
அவனின் காயம் பற்றியும் பசி பற்றியும் பேசியதால், “ராஜாவாட்டம் இருந்த என் புள்ள ரத்தம் எல்லாம் வெளியேறி வாடி வதங்கி போயிருக்கான். முதலில் அதைத் தட்டில வச்சு கொடு காந்தா சாப்பிடட்டும்.” எனச் சொல்லி சாப்பாட்டைத் தட்டில் வைத்து கொடுத்ததை விழியனிடம் கொடுக்காமல்,
“ஊட்டி விடுறேன் அடிபட்ட கையோட எப்படிச் சாப்பாட்டை எடுத்துச் சாப்பிடுவ...?” எனச் சொல்லியபடி இட்டிலியை பிட்டு சட்னி, சாம்பாரில் தோய்த்து அவனுக்கு ஊட்டி விட்டார்.
“கதிரு எப்படி இருக்கான்...? அவனுக்குத் தலையிலும், கையிலும் ரொம்ப அடி பட்ருக்காம்ல, ஐ.சி.யூல இருக்கான்னு சொன்னாங்க.... கொஞ்சம் மெதுவா பார்த்து போயிருக்கலாம்ல. இப்போ பாரு வேதனை உனக்குத் தான். என்னால உன்னைக் கவனிச்சுக்கிடத்தான் முடியும். உன் வேதனையை நான் வாங்கிக்கிடவா முடியும்?” எனக் கண் கலங்கியபடி சொன்னார்.
அப்போது அங்கு வந்தார் அவனின் அப்பா அறிவழகன். வந்தவர், “நீ வேற இவன் ஓரமாத்தான் போயிருக்கான். எலெக்சன்ல நிக்கிறேன்னு சொன்னான்ல, அதுக்கே இவனைப் பயம் காட்ட சாம்பிளுக்கு லாரியை வச்சு அடிச்சு தூக்கியிருக்காங்க.” என்றார்.
“என்னங்க சொல்றீங்க? அப்போ இது தற்செயலா நடந்த ஆக்சிடெண்ட் இல்லையா?” எனப் பதட்டத்துடன் கேட்டார் வாணி.
அவரின் பதட்டம் கண்டு, “அம்மா, அதெல்லாம் ஒண்ணுமில்லமா.... என்னைய நான் பார்த்துக்கிடுவேன்... நீங்க பயப்படாதீங்க.” என்றான்.
“என்னடா பார்த்துக்கிடுவ? ஏதோ அவிங்க தலைக்குக் குறிவச்சது தலைப்பாகையோட போச்சு. ஆனா, இன்னுமும் நீ பயப்படாம எலெக்சன்ல நிப்பேன்னு சொன்னா உன்னோட உயிரை பறிக்காம அவிங்க ஓயமாட்டாங்க. ஆள்பலம் பணபலத்தோட இருக்கிறவங்க கூட உன்னால மோதி ஜெயிக்க முடியாதுடா.
அப்பா இவ்வளவு சொல்றாங்கல்ல, விட்டுடேன் விழியா... துஷ்டனை கண்டா தூர விலகிப்போவது தான் புத்திசாலித்தனம்.” என்றார்.
“அம்மா... இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சு தான் நான் அரசியலுக்குள் இறங்குனேன். இதுகெல்லாம் பயந்து பின்வாங்க முடியாதும்ம....” என அவன் சொல்லி முடிக்கும் முன்பே கோபத்தில் கர்ஜித்தார் அறிவு.
“இவனோட பிடிவாதத்தில இவன் கூடவே சுத்திகிட்டு இருந்த ஒருத்தனை ஐ.சி.யூ வில் சேர்த்தாச்சு. அடுத்து நம்மளையும் இவன் கூடச் சேர்ந்து சாகடிக்காம விடமாட்டான்.
ஒழுங்கா அரசியல், கழுத, குதிரைன்னு பேசுறதெல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு ஒழுங்கா இருக்கச் சொல்லு. இல்ல... எனக்கு யாரை பத்தியும் கவலை இல்லை, அவனைப் பத்தியும் அவனுக்குக் கவலையில்ல, நான் நினைச்சது போலத்தான் செய்வேன்னு திரிஞ்சா. நம்ம மூஞ்சில முழிக்ககிறது இதுவே கடைசியா இருக்கணும்.” என்றார்.
“என்னங்க நீங்க, அடிபட்டு வந்துருக்கிற புள்ளை கிட்ட இப்படிப் பேசுறீங்க. மத்ததை எல்லாம் பிறகு பேசலாம், இப்போ அவன் உடம்புதான் முக்கியம்.” என்றவரிடம்,
“அம்மா நீங்க கிளம்புங்க.” என்றான் விழியன்.
“விழியா என்னடா இப்படி...” எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“அதான் கிளம்புன்னு சொல்லிட்டான்ல. ம்... கிளம்பி வா! தனியா இருந்து தவிச்சாத்தான் பெத்தவங்க அருமை தெரியும்.” என்றவரிடம்,
“அவன்தான் புரியாம பேசிக்கிட்டு இருக்கான், நீங்க இப்போ போய்க் கோபப்படுவது நல்லா இல்லீங்க.” என்று சொன்னார்.
“அப்போ நீயும் உன் மகன் கூடவே இங்க இருந்துரு, நான் கிளம்புறேன்.” என விடுவிடுவென வெளியேறியவரின் பின், “என்னங்க என்னங்க...” என்று கெஞ்சும் குரலில் சொல்லிக் கொண்டே தனது மகனையும் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே அவரும் வெளியேறினார்.
காந்தா முன்பே இத்தனையும் நடந்து முடிந்தது. அங்கு நடந்த உரையாடல்களை வைத்து நிலவரத்தை யூகித்த காந்தா, “தம்பி நீங்க படிச்ச பையன். நம்ம ஏரியாவில இருக்கிற பிள்ளைகளுக்கு ஏதாவது தெரிஞ்சுக்கணும்னா உங்ககிட்ட வந்துதான் பேசி விவரம் கேட்டு போவாங்க. அப்படிப்பட்ட நீங்க உங்க அம்மா, அப்பாவை நோகடிக்கலாமா?” என்றதும்,
“தப்புதான்கா... இருந்தாலும் நான் நல்லது செய்யணும்னு நினைக்கிறேன். என்மேல நம்பிக்கை வச்சு என்கூட அவங்க நிக்கணும். அப்படி இல்லாட்டியும் பரவாயில்லை, கெட்டவங்களுக்குப் பயந்து என்னை எதுவும் செய்யாத, கம்முன்னு பொறந்தோம்... வாழ்ந்தோம்... செத்தோம்னு... இருன்னு சொல்லாமலாவது இருக்கலாம்.” என்றான்.
“அதுதான் நீங்களே சொல்லிட்டீங்களே தம்பி! எதுத்து நிக்கப் போறது கெட்டவங்கனு, அப்போ வீட்டில் இருக்கிறவங்க பயந்து கண்டிக்கத்தான் செய்வாங்க. சரி கண்டதை போட்டு உலட்டிக்காதீங்க, எல்லாம் சரியாகிடும். பாருங்க ரொம்பச் சோர்வா தெரியிறீங்க! மாத்திரையைப் போட்டுட்டு படுங்க.
உங்க உடல்நிலை சரியாகும்வரை காலையில் டீ முதல்கொண்டு மூணு நேர சாப்பாடும் நான் செய்து கொடுத்துடுறேன். எனக்கே உங்களை இந்த நிலமையில ஒத்தையில் விட்டுட்டு போக மனசு கஷ்டமா இருக்கு. பாவம் உங்க அம்மாவுக்கு எம்புட்டு கஷ்டமா இருக்கும். உனக்கும் உன் அப்பாவுக்கும் இடையில மாட்டிகிட்டு கலங்கி நிக்கிறாங்க.” எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போது அங்கு வந்து சேர்ந்தார் காளிதாஸ்.
“அவன் எதுக்குத் தனியா இருக்கப் போறான்? அதுதான் நான் வந்துட்டேனே..... அதெப்படிடா நான் இல்லாத நேரம் தான் உன் அப்பனுக்கும் உனக்கும் இடையில் உரசல் வருமா?
பென்சன் பணம் ஏ.டி.எம்ல எடுக்க மதியோடு போயிட்டு வாரதுக்குள்ள இங்க ஒரு கலவரமே நடந்து முடிஞ்சிருக்கு. நீர் அடிச்சு நீர் விலகாது. எம்மா காந்தா... நேரத்துக்குச் சாப்பாடு கொண்டு வந்துடு. இங்க பேசியது எல்லாம் நமக்குள்ளேயே இருக்கட்டும்.” என்றார்.
“நான் எதுக்கு வெளிய இதெல்லாம் பரப்பி விட்டுக்கிட்டு இருக்கப் போறேன், எனக்கு வேற வேலை இல்லை... அப்போ, நான் வாரேன் தம்பி, உடம்பை பத்திரமா பார்த்துக்கோங்க.” என வெடுக்கென்று சொல்லி விட்டு வெளியேறி விட்டாள்.
***
---தொட்யரும்---
அத்தியாயம் 16
அவர் கிளம்பியதும், “மேடம், டாக்டர் உங்களுக்கு ஹெல்த் இஸ்யூஸ் இருக்குதுன்னு சொல்றார்.... அதனால, நீங்க கிளம்புங்க மேடம்.... கொஞ்ச நேரத்தில் என்னோட பிரண்ட்ஸும், கதிரின் வீட்டில் உள்ளவங்களும் வந்துருவாங்க, நான் சமாளிச்சிருவேன்.” எனச் சொன்னதும்,
“ம்... கிளம்புறேன் விழியன். ஆனா... அதுக்கு முன்னாடி இங்க எல்லாம் எப்படி இருக்குதுன்னு பார்த்துட்டு கிளம்புறேன். எனக்கும் ஆக்சிடென்டாகி இதே போல ஐ.சி.யூ வார்டில் நானும் அட்மிட்டாகி இருந்திருக்கிகேன்.... அந்தப் பாதிப்பு என் லைஃபையே புரட்டி போட்டுருச்சு. என்னோட நிலையில் இப்போ கதிர் இருக்கார்...
இந்த நேரம் உங்க ஃப்ரெண்ட்டோட மனசுக்கும் நிறையச் சப்போர்ட் வேணும். அப்போதான் இதில் இருந்து அவரால சீக்கிரம் மீள முடியும். அக்ஷிடெண்டுக்கு முன்னாடி போல டிரீட்மென்ட் முடிஞ்சு எழுந்தாலும் அவங்க லைஃப்பை நல்லபடியா கொண்டு போக முடியும்ன்ற நம்பிக்கைய சுத்தி இருக்கிற நாமதான் கொடுக்கணும்.
ஆபரேஷன் தியேட்டரில் இருந்து கதிரை எமெர்ஜென்சி வார்டுக்கு மாத்தினப்பிறகு... நான் பார்த்து பேசிட்டு கிளம்புறேன.” என்றாள்.
செவ்விழியன் விசாரித்தவரை ‘எமெர்ஜென்சி வார்டுக்குள்ள சிகிச்சை தருற டாக்டர் மட்டும்தான் போக முடியும். மத்தவங்க கண்ணாடி டோர் வழியாகப் பார்த்துக்கலாம்....
கதிர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிட்டான். இப்போ தலையில் அடிபட்ட இடத்திலயும், கால் பிராக்சருக்கு ஆப்பரேசனும் நல்லபடியா முடிஞ்சு டாக்டர்ஸோட நேரடி பார்வையில் இருக்கான்.
இனிமே கண்விழித்து உணர்வுகள் திரும்பும் வரை எமெர்ஜென்சி வார்டில் தான் இருப்பான். இரண்டு நாளில் நார்மல் வார்டுக்கு மாத்திடுவாங்க. அந்த நேரத்தில கூடவே ஒருத்தர் இருக்கலாம். விசிட்டர்சும் அனுமதிப்போமெனச் சொல்லியாச்சு...
அங்குள்ள சூழலை கவனித்துப் பார்த்த கிரஹா, “விழியன் இந்தப் பகுதியில இருக்குற ஆபரேஷன் தியேட்டர், ஐ.சி.யூ, எமெர்ஜென்சி வார்டு எல்லாம் நல்லா பாதுகாப்பா சுகாதாரமா இருக்கு.... ஆனா, இதைத்தாண்டி பொது வார்டும் அதைச் சுற்றி இருக்கும் இடங்களும் சுகாதாரமே இல்லாம இருக்கு....
டாக்டர் சொல்வதுபோல உயிர் காக்கும் நடவடிக்கை மட்டும் நல்லபடி செய்து முடிச்சு கொடுத்துடுறாங்க..... அதுக்குப் பிறகு பேஷன்டுக்கான படுக்கை, சாப்பாடு, கழிப்பிட வசதி இதெல்லாம் நல்லபடி செய்றது போல ஹாஸ்பிடல் நிர்வாகம் இல்லதானே..!?
அரசு மருத்துவனையின் கட்டமைப்புச் சிறப்பாத்தான் இருக்கு... நிர்வாகத்த செயல்படுத்துறவங்களோட மெத்தனப் போக்கை மட்டும் சரி செய்தால் போதும். ஹாஸ்பிடல் பக்காவா ஆகிடும்.
பிரைவேட் ஹாஸ்பிடல் நிர்வாகம் பக்காவாக இருக்கும்.... ஆனா... உள்கட்டமைப்புப் பணத்தினை வைத்தே நிர்ணயிக்கப்படுது.
தனியார் மருத்துவமனையில் உயிர்களின் மதிப்பு நோயாளிகள் கொடுக்கும் பணத்துக்கு முக்கியத்துவம் தந்தே மருத்துவமும் கவனிப்பும் தராங்க....
நோயாளிகளுக்கான முக்கிய உயிர்காக்கும் கட்டமைப்பு பணத்தின் மூலமே அங்கு நிர்ணயிக்கப் படுது.... இதெல்லாம் மருத்துவம் பணமயமாகியதை குறிக்கிறதுல்ல. இது பெரிய சாபக்கேடு விழியன்.
மக்கள் கிட்ட நாம எலெக்சன் பிரச்சாரத்தில முன் வைக்கிற முக்கியக் கோரிக்கையா அரசு மருத்துவமனையின் நிர்வாகத்தை மேம்படுத்துவதில் முனைப்பு காமிப்போம்ன்னு சொல்லணும்.
அனைத்து மக்களுக்கும் இலவசமான மருத்துவம் அதுவும் சுகாதாரமான முறையில் கிடைக்க வழி செய்வோம்ற கருத்தை எடுத்து வைக்கணும். இதைச் சரி செய்ய என்ன செய்ய முடியும்ற வழிமுறைகளைத் தேடிப் போகணும விழியன்.” என்றாள்.
“நீங்க சொல்றது ரொம்பச் சரி மேடம். இன்னைக்குத் தேதியிலிருந்து அஞ்சு நாளைக்குப் பிறகிருந்து தானே எலெக்சன் மனுத்தாக்கல் செய்ய ஆரம்பிக்க அனுமதிப்பாங்க. நாம எட்டாம் தேதி எலெக்சன் மனு தாக்கல் செய்யலாம்னு நினைக்கிறேன் மேடம்.” என்றவனிடம்,
“குட் விழியன். இந்தச் சூழலில் நீங்க பின் வாங்கிடுவீங்கன்னு நினைச்சேன்.... ஆனா, நீங்க அப்படி இல்லைன்னு சொல்லாம சொல்லிட்டீங்க. நான் அதுக்குரிய ஏற்பாட்டை எல்லாம் பார்த்துக்குறேன். நீங்க இங்க கவனிச்சுக்கோங்க. நாளைக்கு நைட்டு நம்ம கட்சி முக்கியச் செயல்பாடுகள் பத்தி பேசி முடிவெடுக்கணும்.
உங்களுக்கும் அடிபட்டிருக்கு. நீங்க உங்க பிரண்டை காப்பாத்தணுங்கற எண்ணத்தில உங்களுக்குப் பட்ட அடியை பெருசா எடுத்துக்காம அலைஞ்சுக்கிட்டு இருக்கீங்க. உங்க காயத்தையும் கவனிங்க.... இந்தக் காயத்தோட என்னைப் பார்த்து பேச நேரில வர வேண்டாம். வாட்சப்பில், கான்பரன்ஸ் காலில் பேசிக்கலாம்.
உங்ககூட இருக்கிறவங்கள்ல ரொம்ப முக்கியமானவங்களை வாட்சப் கான்பிரன்ஸ்ல ஜாயின் பண்ணி விடுங்க விழியன். உங்க ஹெல்த்தையும் கவனிச்சுக்கோங்க. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.
ஆனா, மனசளவில் போராளியா இருக்கிற நீங்க இதில் துவண்டு போகாம உடனே எந்திரிச்சு நின்னுடுவீங்கன்னு நினைக்கிறேன்.” என்றவளிடம்,
“உங்களைப் போல நல்ல மனசு இருக்குற பெரியவங்க சப்போர்ட் இருக்கும் போது, போராட எனக்கு எப்படித் தயக்கம் வரும...?” என விழியன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவனின் நண்பர்கள் மற்றும் கதிரின் வீட்டில் இருந்து அவனின் அப்பாவும் அம்மாவும் பதட்டத்துடன் அங்கு வந்து சேர்ந்தார்கள்.
எல்லோரும் வந்ததால் நான் கிளம்புகிறேன் என்னும் விதமாகத் தலையசைத்து விட்டு கிரஹா நகர்ந்து விட்டாள்.
கதிரின் அம்மா, “என்னப்பா ஆச்சு? என் மகன் எப்படி இருக்கான்? அவனை நான் பார்க்கணுமே...” எனப் பதறிச் சொன்னதும்,
“அம்மா எமெர்ஜென்சி வார்டில் இருக்கான் கதிர். உள்ள யாரையும் விட மாட்டாங்க. டாக்டர் வரட்டும் உங்களை உள்ள விடச்சொல்லி பேசிப்பார்ப்போம்.
லாரி பைக்கை இடிச்சதில் வண்டி தூக்கி அடிச்சிருச்சு.... நான் விழுந்த இடத்தில மண்ணு இருந்ததால எனக்கு இதோட போச்சு.
கதிர் விழுந்த இடத்தில இருந்த மைல் கல்லில அவனோட தலையும்... முட்டி கால் தரையிலும் மோதினதால கால் எலும்பு சேதம் ஆகிடுச்சு.
ஆனா, சரியான நேரத்தில் ஹாஸ்பிடல் வந்து உடனே ஸ்கேன் எடுத்து, தலையில ஏற்பட்ட காயத்தால மூளையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படலைன்னு சொல்லிட்டாங்க.
ஆழமான காயத்துக்கு டிரீட்மென்ட் கொடுத்து ரத்தம் கசியாமல் நிப்பாட்டி கால் எலும்பு பிராக்சருக்கு ஆப்பரேசனும் செய்தாச்சு.
அதனால உயிருக்கு எந்தப் பயமும் இல்ல. நடக்கவும் எந்தப் பிரச்சனையும் இருக்காது. சத்தான ஆகாரம் கொடுத்துப் புண்ணெல்லாம் ஆத்திட்டா சரியாகிடும்னு டாக்டர் சொல்லிட்டாங்க.” என்றான் விழியன்.
கதிரின் அப்பா, “என் புள்ளையைத் தனியார் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்கலாம்ல. இங்க எப்படிக் கவனிப்பாங்களோ? ஏம்பா ஆக்சிடெண்ட் ஆனதும் உனக்கு நினைவு இருக்கத் தானே செஞ்சது எங்களுக்கு ஒரு போன் பண்ணி இருக்கலாம்ல?” என்றார்.
அவர் அவ்வாறு சொன்னதும் மனதினுள் கிரஹா சொன்ன தனியார் ஆஸ்பத்திரியை பற்றிய முரண்கள் அவன் மனதினுள் வந்து போனது.
எனவே, “அப்பா, என் போன் ஆக்சிடென்டான இடத்தில என் பாக்கெட் விட்டு எங்கயோ விழுந்து காணாம போயிடுச்சு.
அதோட அவன் இருந்த நிலைமையில் எப்படியாவது உடனே ஹாஸ்பிடலுக்குக் கொண்டு போயி காப்பாத்திடணும் என்ற நினைப்பு மட்டும் தான் அப்போ எனக்கு இருந்தது.
சரியா அந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்ததால அவன் கூடயே இங்க வந்து அவசரப்படுத்தி அவனை அவசர பிரிவுக்குக் கொண்டு போய்க் காப்பாத்தியாச்சு.
இதே நேரம் நான் பிரைவேட் ஹாஸ்பிடலுக்குக் கொண்டு போயிருந்தா உயிர் காக்கும் பஸ்ட்டெய்ட் மட்டும் செஞ்சுட்டு டிரீட்மென்ட்டுக்கு இம்புட்டுப் பணம் உடனே கவுண்டரில் கட்டுங்கன்னு சொல்லி நம்மையும் பதட்டப்பட வச்சு ரூபாய் புரட்ட ஓட வச்சு மனசை ரணமாக்கியிருப்பாங்க.
இங்க என்ன பிரச்சனைன்னா, அவனுக்குக் கான்சியஸ் வந்ததும் ஜெனரல் வார்டுக்கு மாத்திட்டா, அதுக்குப் பிறகு தனியார் ஆஸ்பத்திரியில இருக்கிறது போலக் கவனிப்பும் அனுசரணையும் இருக்காது.
அதுக்கும் ஏதாவது நான் வேற ஏற்பாடு பண்றேன்ப்பா... கதிர் என்னோட உயிர் நண்பன்ப்பா... அவனுக்கு இப்படி ஆகியிருக்கக் கூடாத....” எனச் சொல்லும்போது வந்திருந்த நண்பர்களுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த ஸ்ரீராம் முன்னால் வந்தான்.
“டேய் விழியா, உன்னால தான்டா கதிருக்கு இந்தக் கதி வந்தது... எம்.எல்.ஏ அகத்தியனுக்கு எதிரா நீ எலெக்சன்ல நிக்கிறதுக்கு அவன் சப்போர்ட் பண்ணியதுக்குத் தான்டா அவனுக்கு இப்படி நடந்துடுச்சு.”
எனச் சொன்ன மறுநிமிடம் பாய்ந்து அவனின் சட்டை காலரை பிடித்து உலுக்கியபடி, “டேய், என்ன சொன்ன? என்னாலயா? இது எம்.எல்.ஏ அகத்தியனோட வேலைன்னு உனக்கு மட்டும் எப்படிடா தெரிஞ்சது?” எனக் கேட்டான்.
அவன் அவ்வாறு ரெளத்திரமானதும், “அது... அது வந்து...” எனப் பயத்தில் வார்த்தை வராமல் குழறியவனிடம்,
“துரோகி! நீ இன்னைக்குக் காலையில் இருந்து எங்க பின்னாடியே ஃபாலோ பண்ணிட்டு இருந்ததை நான் கவனிக்கலைன்னு தானே நெனச்ச! ஆனா, நான் என் வீட்டுக்கு போகும் போது நீ அம்மன் கோயில் பின்னாடி மறைஞ்சு நின்னதையும் பார்த்தேன்.
தெரு முக்கிலக் கதிர் எனக்காகக் காத்துக்கிட்டு நின்னப்ப கூட, நீ எங்களை ஒளிஞ்சு நின்னு நோட்டம் பார்த்ததையும் பார்த்தேன். ஆனா, நீ இப்படிக் கூலிப் படையோட கைக்கூலியா நடந்துக்கிடுவேன்னு நான் நினைக்கலை.
அவன் எப்படித் துடிச்சான் தெரியுமா? எப்படிடா உனக்கு மனசு வந்தது.
உன் கூடவே ஒன்னா வளர்ந்தவங்களை இப்படிக் கொலைகாரக் கூட்டத்தோடு சேர்ந்து கொல்ல ஹெல் பண்ண எப்படிடா உன்னால முடிஞ்சது?” எனச் சொல்லி சொல்லி அவனை அடித்தான்.
ஒன்றிரண்டு அடிக்கு மேல் விழியனின் கையால் ஸ்ரீராம் அடி வாங்காமல் உடன் இருந்த நண்பர்கள் இருவரையும் பிரித்து விட்டனர்.
“விழியன் இது ஹாஸ்பிடல், இங்க வச்சுப் பிரச்சனை வேணாம். இப்போதைக்கு அவனை விட்டுடு.” என நண்பர்கள் சொன்னதால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
அவன் பிடியிறுக்கம் சற்றுத் தளர்ந்திருந்த வேளை, அந்த இடத்தில் இருந்தால் மேலும் பல கேள்விகள் தன்னிடம் எழுப்பப்படும் எனப் புரிந்த ஸ்ரீராம் வெடுக்கென்று உருவிக்கொண்டு வெளியேறினான்.
‘அவனுடன் இணைத்து அரசியல் களத்தில் நிற்க இனி நண்பர்களுக்குள் ஒரு பீதி உருவாகியிருக்கும்’ என நினைத்துக் கொண்டான்.
விழியனால் கசங்கப்பட்ட தனது சட்டையின் காலர் பக்கத்தையும், அவன் தனது கன்னத்தில் விட்ட இரு அடியால் சிவந்திருந்த கன்னத்தையும் மாறி மாறி நீவி விட்டுக்கொண்டே அங்கிருந்து வெளியேறினான்.
அதே நேரம் விழியனுக்கும் கதிருக்கும் ஆக்சிடென்டாகி மருத்துவமனையில் இருப்பதைக் கேள்விப்பட்டுத் தாத்தா காளிதாஸ் மற்றும் மதி இருவரும் அவர்களைப் பார்க்கப் பதட்டத்துடன் அங்கு வந்து நின்றவர்கள், விழியனுக்கும் ஸ்ரீராமுக்கும் இடையில் நிகழ்ந்த கைகலப்பையும் பேச்சு வார்த்தையையும் கேட்டு விபத்து தற்செயலாக நடந்தது இல்லை என உணர்ந்து கொண்டனர்.
எப்பொழுதும் மிடுக்கான உடையில் கம்பீரமாக நிமிர்ந்த நடையுடன் பார்த்துப் பழகிய விழியன், காலில் மருந்து போட்டு கட்டுப்போட முட்டிவரை வெட்டிவிட்டு முட்டியில் கிழிந்து தொங்கும் பேண்டுடனும், கை, கால் மற்றும் தலையில் மருந்திட்டுப் போடப்பட்ட கட்டுகளுடனும், இரத்தம் தோய்ந்த உடை மற்றும் கலைந்த தலையுடன்.. எப்பொழுதும் அவனிடம் இருக்கும் துடிப்பையும் மீறி சோர்வாகத் தெரிந்த விழியனைக் கண்டு காளிதாசின் மனம் ரணமானது.
‘தனது மகன் அறிவு இதற்காகத்தான் இவனை அரசியலில் எல்லாம் இறங்க வேண்டாம் எனத் தடுத்தான் என்பதை அந்நேரம் உணர்ந்தவர், இந்நிலையில் இவனை வாணி பார்த்தால் அழுதே கரைந்திருப்பாள்...’ என நினைத்துக் கொண்டார்.
ஆனாலும் இந்த நிலையிலும் அவன் ஸ்ரீராமிடம் காட்டிய ருத்ரமுகத்தையும் செயலையும், எதிரில் உள்ளோரால் தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடுவதையும் கண்டார்.
தன பேரனைபோலத் தீரத்துடன் இருப்பவனை விடக் குள்ளநரிகளுக்கே இது காலமென உணராது இருக்கும் தனது பேரனிடம், “அப்போ நடந்தது தற்செயலா நடந்த ஆக்சிடெண்ட் இல்ல... அப்படித்தானே விழியா? கதிர் எப்படி இருக்கான்? அவனுக்குப் பெருசா ஆபத்து எதுவும் இல்லைதானே?” எனக் கேட்டார்.
“ம்... உடனே ஹாஸ்பிடல் கொண்டு வந்து டிரீட்மெண்ட் குடுத்ததால் காப்பாத்தியாச்சு தாத்தா... நீங்க எப்படி வந்தீங்க? உங்களுக்கு யார் சொன்னது? வீட்டில அம்மாவுக்குத் தெரிஞ்சிருச்சா?
எனக்கு எதுவும் இல்லைன்னு முதலில் போன் போட்டு அவங்களுக்குச் சொல்லுங்க. இல்லைன்னா பயந்துடுவாங்க... அதனால பிபி ரெய்ஸ் ஆகி அவங்க ஹெல்த்துக்குப் பிரச்சனை ஆகிடும்.” எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவரின் மொபைல் ஒலி எழுப்பியது.
அவனைப் பார்த்து, “உங்க அம்மா தான் பேசுறா, நாங்க உனக்கு ஆக்சிடென்டாகியதை சொல்லலை. ஆனா, இந்நேரம் தெருவில் யார் மூலமாவது அவ காதுக்கு விஷயம் போயிருக்கும்.” எனச் சொல்லி விட்டு அழைப்பை ஏற்றார்..
“மாமா என் புள்ளைக்கு...” எனப் பதட்டத்துடன் வாணி பேச ஆரம்பித்ததும்,
“இப்போ எதுக்குமா நீ பதட்டமாகுற? பதறாதம்மா.. இதோ என் முன்னால தான் விழியன் நின்னுக்கிட்டு இருக்கான்... அவனுக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல...” எனச் சொன்னார்.
“இந்த வார்த்தையைக் கேட்டதும் தான் என் உயிரே வந்தது மாமா. அவனை ஒழுங்கா வீட்டுக்கு வரச் சொல்லுங்க. நீங்க சொன்னா அவன் கேட்பான். வீட்ட விட்டு போன அன்னைக்கே ஆக்சிடெண்டுன்னு கேள்விப்பட்டு நான் ஆடிப் போயிட்டேன்.
அரசியலில் இறங்கணும்னு அவன் சொன்ன நிமிசமே இப்படி ஆனது எனக்கென்னமோ அபசகுணமாப்படுது. அவனை எப்படியாவது பேசி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருங்க. அவனுக்கு எதுவும் இல்லை தானே? இந்த விஷயத்தில் நீங்க பொய் சொல்ல மாட்டீங்கன்னு நான் நம்புறேன் மாமா.” என்றார்.
“இல்லம்மா லைட்டா கை, காலில் உரசியிருக்கு. மத்தபடி எந்தப் பிரச்சனையும் இல்ல.... நான் அவன்கிட்ட பேசுறேன், நீ டென்சன் ஆகாம இரு.” எனச் சொல்லி விட்டு மொபைல் இணைப்பை துண்டித்தார் காளிதாஸ்.
அவரிடம் விழியன், “இனி பின்வாங்க முடியாது தாத்தா...! அபசகுணம் அது இதுன்னு சொல்லி என்னைய எல்லாத்தையும் விடச்சொல்லி கூட்டிட்டு வரச்சொல்லி இருப்பாங்க அம்மா. ஆனா... என் ஃப்ரெண்டு அந்நேரம் துடிச்ச துடிப்பு இன்னும் என் கண் முன்ன நிக்குது.... இதுக்காகவே இனி அந்த அகத்தியனை அவ்வளவு சீக்கிரம் இந்த எலெக்சன்ல ஜெயிக்க விடமாட்டேன்.
அவனைப் போல ஜந்துக்களைப் பார்த்துப் பயந்து பின் வாங்கிட்டே போனோம்னா நம்மளை அகழியில் விழவைக்கிற பயங்கரவாதிகக்கிட்ட நாட்டை ஒப்படைப்பது போல ஆகிடும்.” என்றான்.
“விழியா, நீ நினைக்கிறது போல அவங்களை எதிர்த்து நிக்கிறது ஈசி இல்லை.... இங்க ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ரெண்டு பேர்ல ஒருத்தரைத்தான் அரசியலில் களம் ஆட அவங்க விடுவாங்க.... அவங்களைத் தவிர வேற ஒருத்தரை இங்க பெரியாளாக இரண்டு பேருமே விடமாட்டாங்க...
அப்படி இன்னொருத்தன் அரசியலுக்கு வரணும்னா இவிங்க இரண்டு பேரில் ஒருத்தனை கொன்னுட்டுத்தான் மூணாவது உள்ளவன் களத்தில் நுழைய முடியும். நாம அப்படியெல்லாம் செய்ய மாட்டோம்.... ஆனா, இரண்டு பேரும் சேர்ந்து மூணாவதா இருக்குற நம்மளை தீர்த்துக்கட்டிருவாங்க.” என்றார்.
“தாத்தா எத்தனை நாள் தான் இப்படிப் பயந்துக்கிட்டே இருக்குறது. எதுக்கும் முடிவுன்னு ஒன்னு இருக்கும்ல. இந்தப் பயம் என்னால ஒரு முடிவுக்கு வந்தாலும் வரலாம்ல.” என்றான்.
“இதோ பார் விழியா, அரசியல்னு பேச்சு ஆரம்பிச்சதும் உன்னைய அடிச்சுப்போட்டு ஆஸ்பத்திரிய மிதிக்க வச்சுட்டாங்க.” என்றார்.
“அதாவது அவங்க எங்களைப் பார்த்து பயப்படுறாங்கனு அர்த்தம் தாத்தா... ஓடுவதைக் கண்டாத்தான் துரத்துறதுக்கு வேகம் வரும். திரும்பி பார்த்து மோத ரெடியாகிட்டோம்னா துரத்தினது பயந்து ஓட ஆரம்பிச்சிடும்.” என்றான்.
அவன் பேசுவதைக் கேட்ட அவனின் அண்ணன் மதி, “டேய் நீ இவ்வளவு தன்னம்பிக்கையா பேசுவதால, நான் உனக்குச் சப்போர்ட் பண்றேன். அம்மா, அப்பாக்கிட்ட உனக்காகப் பேசி உன்னை இப்படியே ஏத்துகிட சொல்லி பார்க்கிறேன். உனக்கு ஏதாவது ஆகிடுமோன்னு அவங்களுக்குப் பயம்! அரசியலில் இறங்கி குடும்பம் வேலைன்னு செட்டில் ஆகாம போயிடுவியோன்னு பயம்.
ஒரு வகையில் நான் பக்கா சுயநலவாதி... என் தம்பியா உன்னைய பார்க்கையில் உன்னோட இந்தக் குணம் ஏன் எனக்கு இல்லாம போச்சுனு என்னை நானே கேட்டு பார்க்குறேன்....
நினைச்சதை, ஆசைப்பட்டதைச் செய்யாம வேலை மூலமா வரும் பணத்தை மட்டும் எய்ம் பண்ணி சுத்திட்டு, வேற எதையும் கண்டுகொள்ளாம இருக்கப் பழகிட்டேன்.... இது போல வாழ்வதால வாழ்க்கையில் எப்பவுமே மனது நிறைவில்லாமலேயே நகர்ந்துகிட்டு இருக்கிறது போல ஆகிடுது.
ஆனா நீ உன் மனசுக்கு நிறைவான விஷயத்தைச் செய்ற..., பணத்திற்காக வேலை அப்படின்றதை எல்லாம் பெருசா நினைக்காம மனசுக்காக நீ வாழுற விழியா... என் தம்பின்னு உன்னை நினைக்கப் பெருமையா இருக்க.” என்றான்.
விழியனுக்குத் தனது அண்ணனின் ஆதரவான வார்த்தைகள் நிம்மதியையும் தெம்பையும் கொடுத்தது. தன் வீட்டில் தனது தாத்தா மட்டுமே என் பக்கம் இருப்பார் என நினைத்திருக்க, அவருமே தான் எதிர்பார்த்த அளவில் தனக்குச் சப்போர்ட் செய்யாமல் அம்மா அப்பாவின் பக்கமே நின்றதால் மனதளவில் கொஞ்சம் சோர்ந்து தான் போய்விட்டான்.
தான் பிறந்து வளர்ந்த நிழல் தன்னை விட்டு விலகுவதை யாரால்தான் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியும்...? இருந்தாலும் கொண்ட கொள்கைக்கு உறுதியாக, சுடும் மணலில் நடக்கத் தன்னை மனதளவில் தயார்ப்படுத்திக் கொண்ட விழியனுக்கு, தனது அண்ணனின் ஆதரவான வார்த்தைகள் கொஞ்சம் இளைப்பாற நிழல் தந்ததைப்போல ஓர் ஆசுவாசத்தைக் கொடுத்தது.
அதனால் அவனிடம் நெகிழ்ந்த குரலில், “தேங்கஸ் மதி... ஆனா, எனக்காக நீ அம்மா, அப்பாவை எதிர்த்துப் பேச வேணாம். நான் என்னைக் கவனிச்சுக்குவேன். என்னை நீ புரிஞ்சுகிட்ட தானே அதுவே போதும்.” எனச் சொன்னான்.
ரவுண்ட்ஸ் வந்த டாக்டர் கதிர் இருக்கும் அறைக்குள் செல்வதைக் கண்டு, “அதோ டாக்டர் போறாரு. அம்மா வாங்க பார்த்து பேசி உங்களை உள்ளே விடச் சொல்லுவோம்.” எனச் சொன்னான்.
விருட்டென்று ஓர் அடி எடுத்து வைத்த விழியனின் காயத்தால் வலியில் அவன் முகம் சுருங்குவதைக் கண்ட அவனின் தாத்தா காளிதாஸ், “நான் போய்ப் பேசுறேன், நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு.” என்றவர்,
“மதி, நீ போய்ப் பக்கத்தில் இருக்கிற ஏதாவது கடையில் அவன் இப்போ உடுத்தியிருக்கிற கிழிஞ்ச டிரஸ் மாத்தி போட புதுசு வாங்கிவந்து கொடு. இப்படி இவனைப் பார்க்க முடியலை.” எனச் சொல்லிவிட்டு கதிரின் அம்மா, அப்பாவுடன் டாக்டரை பார்க்கச் சென்றார்.
***
அத்தியாயம் 15
மீட்டிங் முடியும் நேரமாகியும் இன்னும் விழியனும் கதிரும் அங்கு வந்து சேராததால், கிரஹாவிற்கு ‘ச்சே, சின்னப் பசங்கன்றது சரியாகத்தான் இருக்கு... நான் வரச்சொன்ன நேரத்தை தாண்டி அரைமணி நேரம் ஆகிடுச்சு.
மீட்டிங் முடிச்சதும் முக்கியமான விஷயம் பேசணும். நம்மைச் சந்திச்சுப் பேச ஆட்கள் வருவார்கள் எனச்சொல்லி இங்க இருக்கிற எல்லோரையும் காக்க வைப்பது அம்புட்டு நல்லா இருக்காதே.’ என யோசித்த கிரஹா, விழியனின் மொபைல் நம்பருக்கு டயல் செய்தாள்.
அவள் டயல் செய்ததும் அழைப்பை ஏற்றவர், “யாரும்மா பேசுறீங்க?” என்றார்.
“நான் கிரஹா, இது விழியன்றவரோட நம்பர் தானே?”
என்று யாரோ வயதானவர் பேசுவதைக் கண்டு குரல் பேதத்தில் குழப்பமறைந்து கேட்டாள்.
“இது என்னோட போன் இல்லம்மா. பெரிய மில் ரோட்டில் பைக்கில இரண்டு இளவட்ட பசங்க வந்துகிட்டு இருந்தப்போ ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு.
நல்லவேளை நான் ஸ்பாட்டில் இருந்ததால் உடனே ஆம்புலன்சுக்கு போன் போட்டுட்டேன். இந்தப் போன் ஆக்ஸிடெண்ட் ஆன இடத்தில் கிடந்தது. அந்தப் பசங்களோடதா தான் இருக்கும்.
ஒருத்தனுக்கு ரொம்ப அடி. இன்னொருத்தருக்கும் அடிதான். ஆனா, உசுருக்குப் பயம் இல்ல. இரண்டு பேரையும் ஜி.ஹெச்சுக்கு ஆம்புலன்சில் கொண்டு போயிருக்காங்க.” என்றார்.
அவர் சொன்னதும் அதிர்ச்சியில் ஒரு நிமிடம் பேச மறந்து பின் சுதாரித்து, “சார் அந்தப் போனை ஜி.ஹெச்சுக்கு வந்து என்னிடம் கொடுக்க முடியுமா?
நான் இன்னும் பத்து பதினைந்து நிமிசத்தில் ஹாஸ்பிட்டலுக்கு வந்துருவேன். என் பேர் கிரஹா. நான் மில் முதலாளி பூபதிராஜாவோட தங்கச்சி.” என்றாள்.
“என்னது முதலாளி பூபதிராஜாவோட தங்கச்சியா? உங்களுக்கு வேண்டிய பட்டவங்களுக்கா ஆக்சிடெண்ட் ஆச்சு? இதோ இப்பவே நான் ஜி.ஹெச்சுக்கு வாரேன் மேடம்.” எனச் சொன்னார் அந்த நபர்.
கிரஹா மீட்டிங் முடிவதற்கு முன்பே முக்கியமானவர்களுக்கு ஆக்சிடெண்ட் நடந்திருப்பதாகக் கூறி ஹாஸ்பிடல் விரைந்து வந்தாள்.
ஹாஸ்பிடலில் ரிசப்சனில் பெரிய மில் ரோட்டில் பைக் ஆக்சிட்டென்டில் காயம்பட்டு அட்மிட் ஆகியிருப்பவர்கள் எந்தப் பிளாக்கில் இருக்கிறார்கள் என விசாரித்து ஆபரேஷன் தியேட்டர் இருந்த ஈ.பிளாக்கிற்கு வந்தடைந்தாள்.
கிரஹாவை பார்த்தவர்கள், யார் அவள் என்ற விவரமும் அவளின் செல்வாக்கும் புரிந்தவர்களாய் இருந்தனர். மேலும் அவளுக்குத் தெரிந்த மருத்துவரும் பணியில் இருந்தார்.
ஆதலால் அவர்களிடம் ஃபோன் செய்து அவள் விசாரிக்க, அவரே நேராகக் கிரஹாவை தேடி வந்து அவளை ஆப்பரேசன் பிளாக்கிற்கு அழைத்துச் சென்றார்.
ஆபரேஷன் தேட்டர் அறைக்கு வெளியில் விழியன் கை, கால் மற்றும் தலையில் கட்டுடன் அமர்ந்திருந்தான். அவனின் கையில் இருந்த மொபைல் ஆக்சிடெண்டில் தவற விட்டதால் மற்றவர்களை அவனால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
மேலும் ரோட்டில் அவர்கள் இருவரும் சென்று கொண்டிருந்த வாகனத்தைப் பின்னால் இடிப்பது போலக் கனரக வாகனம் வருவதைக் கண்டு சுதாரித்து ஓரமாக ஓதுங்கியதால் இவர்கள் இருவரும் உடல் நசுங்காமல் தப்பித்தார்கள் இல்லையேல் வண்டி இவர்களும் மொத்தமாக நொறுங்கியிருப்பார்கள்.
இவர்களின் பைக் வேகத்தில் இருந்ததால் பின்னால் லேசாக அக்கனரக வாகனம் தட்டியதில் வண்டியில் இருந்து இருவரும் தூக்கி எறியப்பட்டனர்.
எறிந்ததில் கை, கால்களில் பலத்த அடியுடன் தட்டுத்தடுமாறி எழுந்த விழியன், சற்றுத் தொலைவில் தலையில் இரத்தம் சொட்ட துடித்துக் கொண்டிருந்த கதிரிடம் வேகமாக வந்தான்.
அதே வேளையில் எதிரில் வந்த இருவர் அந்த ஆக்சிடெண்ட் கண்டு பதறி, அவர்களின் அருகில் வந்தவர்கள் உடனே ஆம்புலன்சுக்கு போன் செய்தனர்.
நல்லவேளை இவர்களின் கெட்ட நேரத்திலும் நல்ல நேரம் ஆம்புலன்ஸ் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஸ்பாட்டுக்கு விரைந்து வந்துவிட்டது.
கடந்த அந்த ஐந்து நிமிடமும் நரகமாகக் கழிந்தது விழியனுக்கு.
துடித்துக் கொண்டிருந்த தனது நண்பனின் தலையில் வழிந்த ரத்தத்தைக் கட்டுப்படுத்த தன்னுடைய சட்டையைக் கழட்டி அவன் தலையில் இறுக்கமாகக் கட்டு போட்டான்.
கதிரின் உணர்வு தப்புவதைத் தடுக்க அவனின் கன்னத்தில் தட்டி அவனை முழிக்க வைத்து, “டேய் கதிர், உனக்கு ஒன்னும் இல்லடா. இதோ ஆம்புலன்ஸ் வந்துடும் பொறுத்துக்கோ என்கிட்ட பேசு.” எனப் புலம்பினான்.
தனது உடம்பில் பட்ட காயத்தில் இருந்து ரத்தம் வருவது கூட உணராது சொரணை இழந்து, அவனை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று எண்ணம் கொண்டு துடித்துக் கொண்டிருந்தான்.
ஜி.ஹெச் வந்ததும் கதிரின் நிலை கண்டு உடனே தலையில் சிகிச்சைக்கு ஏற்பாடு நடந்தது.
ஒன்று மட்டும் உறுதி, அரசு மருத்துவமனையின் உள்ளே சென்றுவிட்டால் உயிர்களைக் காப்பத்தில் எந்தவித சலிப்பும் எழுவதில்லை. முடிந்த அளவில் அதற்கான அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டு விடுகின்றனர்.
ஆனால் அத்தோடு அவர்களின் பணி முடிவடைந்ததாக ஒரு மெத்தனப் போக்கு அங்கு நிலவுவது என்னவோ உண்மை.
ஆமாம் கதிர் தலையில் ஏற்பட்ட காயத்திற்குச் சர்ஜிக்கல் அறையில் அவனுக்கான ஆபரேஷன் செய்து அவன் உயிர் பிழைக்க முதல் வகைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, அவனது உயிருக்கு ஆபத்து நீங்கிவிட்டது என டாக்டர் கூறிச் சென்றது வரை விழியன் தனக்கு ஏற்பட்டிருந்த காயத்திற்கு எந்தச் சிகிச்சையும் செய்ய அனுமதிக்கவில்லை.
அதன் பின்பே அவனின் அடிபட்ட காயத்தின் வலியை உணர்ந்து அதற்குச் சிகிச்சை அளிக்க ஒத்துழைத்தான். அதே நேரம் அங்கு வந்து சேர்ந்தாள் கிரஹா.
கிரஹா வருவதற்கும், விழியனின் மொபைலில் பேசிய அந்த நபர் அங்கு வந்து சேர்ந்த நேரமும் ஒரே சமயமாக இருந்தது.
மொபைல் வைத்திருக்கும் ஆள் தனியாக அங்கு வரவில்லை கூடவே எம்.எல்.ஏ அகத்தியனும் வந்து சேர்ந்தார்.
“தம்பி இந்தா உன் போன்.” என்று தன்னிடம் இருந்த மொபைலை நீட்டினான் அகத்தியன்.
கிரஹாவை பார்த்தபடி, “பார்த்தியா தம்பி. பெரிய இடத்தில் சப்போர்ட் இருக்குதுன்னு நமக்கு எதிரா நீ கிளம்பியதால என்ன ஆச்சுன்னு பார்த்தேல்ல... ஆனாலும் உனக்கு ஆக்சிடெண்ட் ஆனதும் காப்பாத்த உடனே ஸ்பாட்டில் நின்னு ஆம்புலன்சை வரவச்சதும் என் ஆளுதான்.
எத்தனை பெரிய சப்போர்ட் இருந்தாலும் என் முன்னாடி எதுவும் வேலைக்கு ஆகாதுன்னு இப்போ புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.” என்றார்.
அவர் அவ்வாறு சொன்னதும் விழியன், “அப்போ எனக்கு ஏற்பட்ட ஆக்சிடெண்டுக்குக் காரணம் நீங்க தானா? இதோ, உள்ள என் பிரண்ட் உயிருக்கு ஆபத்தான நிலையில் இங்கு வந்து சேர்ந்தான். அவன் உயிருக்கு எதுவும் ஆகியிருந்தா இப்போ ஒரு கொலைகாரனா என் முன்ன நின்னு இருப்பீங்க.” என்றான்.
அவன் அவ்வாறு சொன்னதும், “அட அட அடடா... என்ன தம்பி இன்னும் பச்ச புள்ளையாவே இருக்கீங்க?
இது ஒரு வார்னிங் தான். அப்படியே ரோட்டில் சாகட்டும்னு விடாம காப்பாத்திய நானே உங்கள் கதையை அங்கேயே முடிக்கச் சொல்ல எம்புட்டு நேரமாகியிருக்கும்?
ஆனா, நான் அப்படிச் செய்யலை. ஒரு சான்ஸ் குடுத்து பார்ப்போம்னு நினச்சேன். இது உனக்கும் உன் கூட இருக்கிறவனுக்கும் மறு ஜென்மம்னு நினச்சுக்கோ. இத்தோட ஒதுங்கிகிட்டா நல்லது.” என்றார்.
ஒரு கூடையில் இருந்த பழங்களை அவனுக்கு அருகில் வைத்துவிட்டு விடைபெறும் தோரணையில் கை கூப்பினார்.
கிரஹா மேடத்தைப் பார்த்து, “அம்மணி நீங்க பெரிய இடத்து பொண்ணு. இங்க எல்லாம் உங்க ரேஞ்சுக்கு வருவது அம்புட்டுப் பாதுகாப்புக் கிடையாது.
கொரோனா காலம் வேற பார்த்து இருந்துக்கோங்க. வீட்டில் அண்ணனை கேட்டதா சொல்லுங்க.” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
விழியனுக்கும் கிரஹாவுக்கும் அத்தனை கோபம் எழுந்தது.
“இதுக்காகவே எலெக்சன்ல நான் கட்டாயம் நிப்பேன் மேடம். என் பிரண்டோட இந்த நிலமைக்குக் காரணமான இந்த ஆளை இனி சும்மா விடக்கூடாது. இந்த ஆளை பதவியில் இருந்து இறக்கியே ஆகணும்.” எனச் சொன்னான்.
அப்பொழுது, “சார் பேசண்டை பெட் மாத்தணும் ஒரு பைவ் ஹன்ரட் கொடுங்க” எனச் சொல்லி அங்குப் பணிபுரியும் கம்பவுண்டர் வந்து நின்றான் விழியனிடம்.
ஆக்சிடெண்டான போது அவன் சட்டையைக் கூடக் கழட்டி கதிரின் தலையில் ரத்தம் வழிவதை தடுக்கக் கட்டிவிட்டு விட்டான். அவன் வைத்திருந்த பர்ஸ் என்ன ஆனதென்று அவனுக்கு நினைவில்லை.
இப்பொழுது வெறும் ரத்தக்கறை படிந்த பனியனுடனும் முட்டிகளில் உராய்வால் கிழிந்து போன பேண்டுடன் இருந்த விழியனிடம் தற்சமயம் ஒரு பைசா கூட இல்லை.
எனவே அந்தக் கம்பவுண்டரிடம், “சார் அதுவும் உங்க டியூட்டி தானே. என்கிட்ட இப்போ ஒத்த பைசா இல்ல. வீட்டில் உள்ளவங்க வந்தாத் தான்.” என இயலாமையில் கூறினான்.
“சாரே எத்தனை கேஸ் இதே போல நாங்க பார்க்கணும். துட்டு கொடுத்தா எல்லாம் பக்காவா நடக்கும். இல்லாட்டி என்னைக் குத்தம் சொல்லி பிரயோஜனம் இல்லை.” எனச் சொல்லி,
அங்கிருந்து நகரப் போகையில், “இந்தாங்க முதலில் அவரைப் பத்திரமா சிப்ட் பண்ணுங்க.” எனச் சொல்லி இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை அந்தக் கம்பவுண்டரிடம் நீட்டினாள் கிரஹா.
அவனும் கொஞ்சம் கூடச் சங்கோஜமே இல்லாது அவள் கொடுத்த ரூபாயை வாங்கிக் கொண்டு அங்கிருந்து ஆபரேஷன் அறையில் இருந்து கதிரைத் தீவிர கண்காணிப்புப் பிரிவு பகுதிக்கு மாற்ற சென்றான்.
கிரஹா வரும்போது அவளுடன் அங்கு வந்த டாக்டர் சரண் அவசர வேலை என்று வந்ததால், “இதோ வருகிறேன்.” எனச் சென்றவர் அங்கு வந்தார்.
விழியனோ தன்னிடம் பைசா கூட இல்லாததால் கிரஹாவை தடுக்க முடியாத சங்கடத்துக்கு ஆளானான்.
எம்.எல்.ஏ அகத்தியன் கொடுத்துச் சென்ற தனது மொபைலில் இருந்து நண்பர்களை அழைத்து ஆக்சிடெண்டாகி தாங்கள் மருத்துவமனையில் இருப்பதாய் கூறி, கதிரின் வீட்டில் பக்குவமாகப் பேசி கூட்டிக் கொண்டு வருமாறு சொல்லியவன், கொஞ்சம் பணத்தையும் கொண்டு வந்து தருமாறு கூறினான்.
கிரஹாவோ அங்கு வந்த டாக்டர் சரணிடம், “என்ன டாக்டர் இது? பொதுமக்களுக்கு வரிப்பணத்தில் இருந்து இலவச ட்ரீட்மெண்டுக்கு உருவாக்கிய கவர்மெண்ட் ஹாஸ்பிடல் தான் இது. இங்க வரும் மக்கள்கிட்ட காசு கேட்பது எந்த விதத்தில் நியாயம்?” என்றாள்.
“நீங்க சொல்றது சரிதான் மேடம். ஆனால் என்னோட டியூட்டி மருத்துவம் பார்க்கிறது மட்டும்தான். பொதுவா இங்கே வரும் சீரியஸ் கேஸ் எல்லாத்தையும் முடிஞ்ச அளவு ட்ரீட்மெண்ட் கொடுத்து உயிர் பிழைக்க வச்சுடுவோம்.
முடியாத பட்சத்தில் தான் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்புவோம். நாங்க உயிர் பிழைக்க வைக்கிறதில் காட்டும் அக்கறையோடு எங்க டியூட்டி முடிஞ்சுடுது.
அதுக்குப் பின்பு அவர்களை நல்லபடி கவனித்து அப்சர்வேசனில் வைத்து எங்களுக்கு ரிப்போர்ட் அனுப்புறதுக்கும் மேற்படியான படுக்கை வசதி மற்றும் போஸ்ட் சர்ஜிக்கல் பார்மால்டி எல்லாம் எங்களின் நேரடி பார்வையில் வச்சுக்கிட முடியாது.
அதுக்கு இங்க பெரிய டீமே இருக்கு. அதன் நிர்வாகத்தில் டாக்டர்ஸ் நாங்க தலையிட முடியாது. ஆனா ஒன்னு உறுதியா என்னால சொல்ல முடியும்.
தனியார் மருத்துவமனை போலச் சுத்தமும், துட்டு கொடுப்பவங்களுக்கும் பெரிய இடத்து ஆளுங்களுக்கும் சிறப்புக் கவனிப்பு போன்ற பாகுபாடு இங்க உள்ள குறையாயிருக்கலாம்.
ஆனா, இங்க டேஞ்சர் கட்டத்திலோ அவசர சிகிச்சையிலோ அனுமதிக்கப்படுறவங்களோட உயிரை முடிந்த அளவு போராடி டிரீட்மெண்டில் பிழைக்க வைக்க அத்தனை முயற்சியும் பிரதிபலன் எதுவும் எதிர்பார்க்காது டாக்டர்ஸ் கடமையை மட்டுமே கண்ணாகச் செய்து எழுப்பிவிட்டுடுவோம்.” என்றார்.
விழியன் மொபைலில் பேசி முடித்துவிட்டு அந்நேரம் அவர்களின் அருகில் வந்தான்.
அவனிடம் டாக்டர், “என்னப்பா இங்க வரும் போது நீங்களும் உங்க பிரண்டும் எப்படி வந்தீங்க? வந்ததுக்குப் பிறகு இங்க சரியான டிரீட்மெண்ட் கொடுத்து இப்போ உங்க பிரண்டை எழுப்பி விட்டுட்டோம்ல. பணம் அது இது அப்படின்னு அப்போ ஏதாவது பேசி டிரீட்மெண்டை தாமதப் படுத்தினோமா?” எனக் கேட்டார்.
“ம்கூம் இல்ல டாக்டர்” என்றான்.
“நாங்க எங்க வேலையை சரியா செய்ததால் இப்போ உங்க பிரண்ட் உயிரோட இருக்கார் சரி தானே?” என்றவரிடம்,
“ம்... சரியான நேரத்தில் ஆம்புலன்சில் வந்து சேர்ந்ததும் உடனே அவசர பிரிவுக்குக் கொண்டு போய்த் தேவையான டிரீட்மெண்ட் கொடுத்து என் கதிரை காப்பாத்தி கொடுத்துட்டீங்க டாக்டர்.
நான் அவனுக்கு என்னவாவது ஆகிடுமோன்னு. ரொம்பப் பயந்துட்டேன். இப்போ தான் எனக்கு உயிரே வந்தது போல இருக்கு.” என்றான்.
“இனி பயம் இல்ல, ஆனா, எழுந்து நடக்க எப்படியும் ஒரு மாசம் ஆகும். நிறைய ரத்தம் வெளியே போயிடுச்சு. கவனமா டாக்டர் கொடுக்கிற மருந்து மாத்திரையோட சத்தான ஆகாரம் எடுத்துகிட்டா சீக்கிரம் சரியாகிடுவாங்க.
இங்க உங்களைப் பெரிய பெரிய ஆட்களெல்லாம் வந்து பார்க்குறாங்க. அதனால் நல்ல பசை உள்ள பார்டின்னு மத்த ஸ்டாப்ஸ் காசு எதிர்பார்ப்பாங்க.
அவங்களோட எதிர்பார்ப்புத் தப்புதான். ஆனால், இது என்னோட ஹாஸ்பிடல் இல்ல. நான் தட்டிக் கேட்டா பல சிக்கல்கள் எனக்கு வரும். அதைப் பேஸ் பண்ற சக்தி எனக்கில்ல.
இருந்தாலும் எனக்கு வேண்டியவங்க கவனிச்சுக்கோங்கன்னு ஒரு வார்த்தை சொல்லி வைக்கிறேன்.” என அவனிடம் சொன்னார்.
“அப்போ கிரஹா மேடம் நான் கிளம்பட்டா? எனக்கு இது டியூட்டி டைம்.” என்று சொன்ன டாக்டர் சற்று தயக்கத்துடன்,
“உங்க ஹெல்த் கண்டிஷனுக்கு இங்க ரொம்ப நேரம் நிக்கிறது சரியில்லை மேடம். இந்தச் சூழல் உங்களுக்கு மைக்கிரேன் வரவைக்கும். நீங்க சீக்கிரம் இங்கிருந்து கிளம்பிடுங்க.” எனச் சொன்னார்.
“ம் இதோ கொஞ்ச நேரத்தில் கிளம்பிடுறேன். உங்க டியூட்டி என்னால் டிஸ்டர்ப்பாக வேண்டாம். பை டாக்டர். ஏதாவது உதவி தேவைப்பட்டா உங்களை நான் காண்டாக்ட் செய்வேன்.” என்றவளிடம்,
“ம் எப்பவும் நீங்க என்கூடப் பேசலாம். பார்ப்போம் மேடம் பை.” என அங்கிருந்து கிளம்பினார்.
***
---தொடரும்---
அத்தியாயம் 14
விடிகாலை வேளையில் விழியன் தனது வீட்டிற்குள் நுழைந்தான். இரவு முழுவதும் வீட்டிற்கே அவன் வராததால் தனது மகன் எதிர்ப்பட்டதும் அவனின் அம்மா வாணி,
“டேய் விழியா, நைட் வீட்டுக்கு வராம ஏன்டா கதிர் வீட்டில தங்கின? உன் அப்பா உன்னைய கோபமா ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா?
இல்ல இப்போ தான் புதுசா உன்னைத் திட்டுறாங்களா…? அவர் ஒரு வார்த்தை சொன்னா உன்னால பொறுத்துக்க முடியாதா?
செய்யாதன்னு அவர் சொன்னா சரிப்பானு சொல்லணும். அதைவிட்டு அப்படித்தான் செய்வேன்னு வெளியில தங்கி இப்படி என்னைய பதற வைக்கிறது எல்லாம் சரியில்லை.” என்றார்.
‘தனது அம்மா மறைமுகமாகத் தன்னை வீட்டைவிட்டு வெளியில் போகவும் கூடாது அதே போல அப்பா சொல்வதைக் கேளு எனச் சொல்லி முட்டுக்கட்டையை எமோசனலாகப் போடுறாங்க.’
அப்பா சொல்றதைக் கேளு என்பதே அம்மா வார்த்தையின் சாராம்சம் எனப் புரிந்ததும்.
“அம்மா... சாரிம்மா. நான் எலெக்சன்ல நிக்குறதா முடிவு பண்ணிட்டேன். உங்க பேச்சை மீறி நான் நடந்தாலும் கெட்ட விசயத்தைச் செய்யல. நான் வீட்டில இருந்து அரசியல் பண்ணினா அப்பா சொல்றது போல இங்க இருக்கிறவங்களுக்குப் பிரச்சனை வர சான்ஸ் இருக்கு.
அதனால நான் வெளியில் போறேன். நீங்க கொடுத்த படிப்பும் இந்த உடலும் எனக்குப் போதும். இதில் வரும் கஷ்ட நஷ்டத்துக்கு நானே பொறுப்பு. என்னை மன்னிச்சிடுங்கம்மா!
கொஞ்சம் டிரஸ், என்னோட ஆபீஸ் பைல், தேவையான திங்ஸ் மட்டும் எடுத்துக்குறேன்.” என்றான்.
“டேய் என்னடா சொல்ற? வேணாம் விழியா! என்னங்க அவனைப் போக வேணாம்னு சொல்லுங்க.” என்று இருவரும் பேசுவதைக் கேட்டு அங்கு வந்த தனது கணவரிடம் சொன்னார் வாணி.
அவர் இறுக்கமாகப் பதில் பேசாது நின்றார்.
“விழியா என்னடா பேச்சு இது?” என்றபடியே அவனின் தாத்தா அங்கு வந்தார்.
“தாத்தா பிளீஸ், நான் முடிவெடுத்துட்டேன். கொஞ்சம் என் மனசுக்கு சரின்னு படுறதை செய்ய விடுங்க.” என்றான்
“ஓ... நீங்க அம்புட்டு பெரிய மனுஷன் ஆகிட்டீங்களோ? இருக்கட்டும்பா... உங்க முடிவுக்கு நான் குறுக்க நிக்கலை. அதே போல உன் அப்பா பக்கமும் நான் நிக்கலை. ஆனா, உன்னை இப்படியே நடுரோட்டில் விட என்னால முடியாது.
வா நாம ரெண்டு பேரும் நம்ம பூர்வீக வீட்டில் தங்கிக்கலாம். இதுக்கு நீ சம்மதிச்சு தான் ஆகணும்.” என்றார் காளிதாஸ்.
“தாத்தா அது வந்து...” எனப் பேச போனவனை,
“என்ன வந்து போயின்னு சொல்லிகிட்டு இருக்க? உன் மனசுபோல எதுனாலும் பண்ணு. உன் அனுமதி இல்லாம உன் அரசியல்ல நான் தலையிட மாட்டேன்.
வீட்டை விட்டு உன்னைய என் மகன் துரத்திட்டான்னு வெளியில பேச்சு வர்றதை நான் விரும்பல. குடும்பத்துக்குப் பெரியவன்ற முறையில இந்த முடிவ நான் எடுத்துருக்கேன். அதுக்கு நீ கட்டுப்பட்டுத்தான் ஆகணும்.” எனச் சொன்னார்.
விழியனால் தனது தாத்தாவின் வார்த்தையை மீற முடியவில்லை. இதற்கு மேலும் மறுத்துப் பேசுவது தங்கள் வீட்டாரை தான் அவமானப்படுத்துவதாக இருக்கும் எனப்பட்டது விழியனுக்கு.
“ம்... சரி தாத்தா, எனக்குத் தேவையானதை மட்டும் இங்கிருந்து எடுத்துக்குறேன்.” எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போது அவனின் அண்ணன் மதியும் அங்கு வந்தான்.
“டேய் விழியா வந்துட்டயா?” எனக் கேட்டவன்,
“அம்மா! நான் சொன்னேன்ல அதெல்லாம் அவன் அப்படிப் போக மாட்டான் வந்துடுவான்னு சொன்னேன்ல.” எனச் சொன்னதும்,
“இல்லடா, துரை ரொம்பப் பெரிய மனுசனா ஆகிட்டார். அவர் பாதையைப் பார்த்துட்டு அவர் போக ஆரம்பிச்சுட்டாராம். நாம வழிவிட்டு நிக்கணுமாம். போகட்டும் விடு.” என்றார் அறிவழகன்.
தனது மனைவியிடம், “ஏய்! நீ ஏன் மசமசன்னு நின்னுகிட்டு இருக்க. நாம பெத்து வளர்த்ததில் ஒன்னு நமக்குப் பிள்ளையா இல்லாம பழுதா போயிடுச்சு.
இதோ இன்னொரு பிள்ளை இருக்கிறான்ல அவனுக்காகவாவது வாழணும். நீ போய் வேலையைப் பாரு.” என்றார் வாணியைப் பார்த்து.
வாணியால் அவரின் வார்த்தையை மீறி பேச முடியாமலும் தனது மகனை விட்டுவிட முடியாமலும், இருவருக்கும் சமாதானம் செய்ய முடியாததால் உண்டான இயலாமையில் கண்ணீர் உற்பத்தியாகி கன்னத்தில் வழிந்து ஓடியது.
இன்னும் அங்கு நின்று கொண்டிருந்தால் உணர்வுகளால் தன்னைப் பெற்றவளுக்குக் காயம் அதிகமாகும் என உணர்ந்த விழியன் அவசர அவசரமாகத் தேவைப்பட்டதை அள்ளிப் போட்டுக் கொண்டு சட்டென வெளியேறி விட்டான்.
அவன் வீட்டை விட்டு சற்றுத் தள்ளி அவனுக்காகக் காத்திருந்த கதிர், அவன் வந்ததும் அவனை நோக்கி வந்தவன்,
“டேய் எல்லாம் எடுத்துக்கிட்ட தானே? வா இப்போதைக்கு என் ரூமில் வச்சிட்டு கிரஹா மேடமை போய்ப் பார்க்கலாம். அவங்க சொன்ன டைமுக்கு அங்க போய் நிக்கணும்.” எனச் சொன்னான்.
“கதிர் அங்க பாரு தாத்தா வாரார்.” எனப் பின்னால் திரும்பிப் பார்த்தான் விழியன்.
அவன் எதற்குச் சொல்கிறான் எனப் புரியாமல் அவன் பார்த்த பக்கம் தனது பார்வையை ஓட விட்டான் கதிர்.
இவன் வேகமாக வெளியேறி விட்டதால் இவனின் அவசரத்துக்கு ஈடுகொடுக்க முடியாது மெதுவாக அந்த வீட்டுச் சாவியை எடுத்துக்கொண்டு இப்பொழுதுதான் வீட்டைவிட்டு வெளியேறி இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார் தாத்தா காளிதாஸ்.
கதிரிடம், “டேய், என் தாத்தா ஏதோ பிளான் போட்டுருக்கார்டா. என்னை வீட்டில் எல்லோர் முன்னாடியும் பேசி கன்வின்ஸ் செய்து எங்க ஓட்டுவீட்டுல நான் தங்கிக்கிட சம்மதிக்க வச்சிட்டார்.
கையில் அந்த வீட்டுச் சாவியோடு வாரார். இப்போதைக்கு அங்க தங்கலாம். நமக்கு இப்போ தங்க இடம் தேடி அலைய தோதும் இல்லை நேரமும் இல்லை. இதுவும் ஒரு வகையில் நல்லது தான்.” என்றான்.
“டேய் சூப்பர்டா! நான் கூட மனசளவில் கொஞ்சம் உன்னை எங்க தங்க வைக்கன்ற யோசனையிலேயே சுத்திட்டு இருந்தேன். ஆனா, உன்கிட்ட சொன்னா நீ ரொம்ப வருத்தப்படுவன்னு தான் சொல்லலை. அப்பாடா ஒரு பிரச்சனை இப்போதைக்கு முடிஞ்சது.” எனக் கதிர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர்களின் அருகில் காளிதாஸ் வந்துவிட்டார்.
இருவரையும் பார்த்தவர் எதுவும் பேசாமல், ‘வா என்கூட’ என்னும் விதமாக விழியனை பார்த்துவிட்டு முன்னால் நடக்க ஆரம்பித்துவிட்டார்.
இங்கு இவ்வாறு இருக்க விழியனின் நடவடிக்கையைப் பின்னால் இருந்து மற்றவர்கள் அறியாமல் வேவு பார்த்த ஸ்ரீராம், எம்.எல்.ஏ அகத்தியனின் வலதுகை நைனாவிடம் மொபைலில் சொல்லிக் கொண்டிருந்தான்.
நேற்று எம்.எல்.ஏ அகத்தியன் ஸ்ரீராமிடம் அவனது அப்பாவை அவரைப் பார்க்க வரச் சொன்னதைச் சொன்னான். அவரும் உடனே அவசர அவசரமாகக் கிளம்பிச் சென்று எம்.எல்.ஏவை பார்த்தார்.
“என்னய்யா ரெங்கா, நம்ம கோட்டைக்குள்ள நீ இரண்டு வில்லங்கத்தைக் கூட்டிக்கிட்டு வந்ததால அந்த ரெண்டும் நமக்கு எதிரா கொடி பிடிக்க ரெடி ஆகிடுச்சுங்க.
உன் மகன் கூட வந்த அந்த ரெண்டு பொடியன்கள் ஏதோ நம்மளுக்கு எதிரா கம்பு சுத்த பார்க்குறாங்கனு கேள்விப்பட்டேன். என்ன மொத்தமா கூண்டோட தொலைச்சு கட்டிடவா?” எனக் கேட்டார்.
“தலைவரே! நான் உங்க நாய்ங்க. என் மகன் கடை நடத்தணும்ற ஆசையை அந்தப் பசங்க சாதகமா பயன்படுத்திக் கூடத் தொத்திக்கிட்டு வந்து இப்போ கழுத்தறுக்கப் பார்க்குறாங்க. எங்களைப் போய் நீங்க சந்தேகப்படலாம்ங்களா?” என்றார்.
ஸ்ரீராமின் அப்பா அவ்வாறு சொன்னதும் அவரின் அருகில் இருந்த நைனா, “ரெங்கா தலைவருக்கு எதிரா உன்னைச் சேர்ந்தவங்க எலெக்சன்ல நிக்கப் போறாங்கன்னு சொல்றதை இல்லைன்னு புரூவ் பண்ண நீ என்ன செய்யப் போற? அதைச் சொல்லு. சும்மா வாயில மட்டும், தலைவரே நான் விசுவாசின்னு சொன்னா அது வேலைக்கு ஆகாது.” என்றான்.
நைனா அவ்வாறு சொன்னதும் இத்தனை வருடம் அவர்களுடன் இருந்த அனுபவம் அவருக்குச் சூழ்நிலையை உணர வைத்தது. எனவே,
“தலைவரே என்ன செய்யணும்னு சொல்லுங்க. அந்தப் பொடியன்களைப் போட்டுத்தள்ள என்னென்ன செய்யணுமோ அத்தனையும் நான் முன்ன நின்னு பண்ணுறேன். நீங்க சொல்வதை அடி பிசகாம செய்து முடிக்கிறேன்.” என்றார்.
ஏனெனில் அவ்வாறு சொல்லா விட்டால் அவரின் எதிரி லிஸ்டில் தன்னையும் தனது மகன் ஸ்ரீராமையும் சேர்க்கும் எண்ணம் அவர்களுக்கு வந்துவிடும் எனப் புரிந்தது.
அவ்வாறு வந்துவிட்டால் அது தங்களின் நிலைக்குப் பெரிய கேடு எனப் புரிந்ததால் அவர் நம்பிக்கையைப் பெற எந்த எல்லைக்கும் செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் ரெங்கன்.
அவன் சொன்னதும் அழுத்தமான பார்வையை அவர்மீது வீசியபடி, “நீ பெருசா எதுவும் செய்ய வேணாம் ரெங்கா. இந்த நிமிஷத்தில இருந்து அவிங்க எங்க போறாங்க, எங்க இருக்கிறாங்க, அப்படின்னு தொடர்ந்து ஃபாலோ பண்ணி நம்ம நைனாகிட்ட சொல்லிகிட்டே இருக்கணும்.
எலெக்சன்ல அவிங்க நிக்கிறதுக்கு, மனு தாக்கல் பண்றதுக்கு முன்ன ஒரு அடி பலமா அவிங்க உடம்புல விழணும். அதை ஒரு வார்னிங்கா நினைச்சு ஒதுங்கிக்கிட்டா அவிங்களுக்கும் நல்லது. நமக்கும் ஒரு தொல்லை இல்லாம போயிடும்.
எலெக்சனுக்கு நாமினேசன் மனு தாக்கல் செய்ய இடையில் ஒரு நாள் தான் இருக்கு.
எலெக்சன்ல நிக்கப் போறோம்னு அவிங்க வெளிப்படையா அறிவிச்ச பிறகு அவிங்க மேல கை வச்சா அது நமக்கு எதிரா ஓட்டுல திரும்ப வாய்ப்பிருக்கு.
அதனால அதுக்குமுன்ன அவிங்களை நல்லா பலமா தாக்கணும். அதாவது நேச்சுரலா நடந்ததுன்னு மத்தவங்க நினைக்கிறது போல நடத்தி முடிச்சாகணும்.
இதைச் சரியா செய்து முடிச்சா, நீ எனக்கு விசுவாசின்னு புரூப் ஆகிடும். என்ன ரெங்கா உன்னால முடியுமா?” எனக் கேட்டார்.
“தலைவரே இந்த நிமிசத்தில் இருந்து அவிங்க எங்க இருக்கிறாங்க, என்ன பண்றாங்க அப்படின்ற விஷயம் முழுக்க முழுக்கக் கண்காணிக்க ஆரம்பிச்சுடுறேன்.
நீங்க சொன்னதைச் செய்து முடிச்சிட்டு உங்க முன்னாடி வந்து நிப்பேன்.” எனச் சொன்ன ரெங்கராஜ், “நைனா எப்பவும் போனில் நாம காண்டாக்டுலேயே இருப்போம்.” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறி வீட்டிற்கு வந்த ரெங்கா, தனது மகனிடம் விழியன் கதிர் இருவரையும் கண்கொத்தி பாம்பாகப் பின்தொடர அனுப்பி வைத்தார்.
நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல் விழியனும் கதிரும் அவசர அவசரமாக ஓட்டு வீட்டில் விழியனின் உடமைகளை வைத்துவிட்டு அங்கிருந்த ஒரு தடுப்பின் மறைவில் குளித்துக் கொண்டிருக்கும் போது, திண்ணையில் அமர்ந்திருந்த காளிதாஸ் அங்குத் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவனைப் பார்த்து, “ஏலே விக்கி” எனக் குரல் கொடுத்தார்.
“என்ன தாத்தா?” என்றபடி அவரின் அருகில் வந்த அந்தப் பையனிடம்,
“அடுத்தத் தெருவில் இருக்கிற என் வீடு தெரியுமில்ல?” என்றதும்,
“விழியன் அண்ணே வீடுதானே, தெரியுமே.” என்றான் அந்தப் பையன்.
விக்கியிடம், “ஆமா விழியன் வீடுதான். அந்த வீட்டை ஒட்டி போற சந்தில் இட்லி போட்டு விக்கும் காந்தா தெரியும்ல, அவளை நான் வரச்சொன்னதா சொல்லி கையோட இங்கன கூட்டிகிட்டு வா.” என்றார்.
அவர் சொன்னதும் விக்கி அங்கு விளையாடிக் கொண்டிருந்த மற்ற பிள்ளைகளிடம், “டேய், நான் போயிட்டு ஐந்து நிமிசத்தில் வந்துடுவேன். என் ஆட்டையை யாரும் விளையாடக்கூடாது.” என்று சொல்லிவிட்டு சிட்டாகப் பறந்து சென்றான், காளிதாஸ் சொன்ன காந்தாவைக் கூப்பிட.
விழியனும் கதிரும் அவசர அவசரமாகக் கிளம்பி வெளியில் வந்தபோது காந்தாவுடன் காளிதாஸ் பேசிக் கொண்டிருந்த சாராம்சம் காதில் விழுந்தது.
“அப்போ நாம பேசுனது போலச் சரியா காலையிலேயும், நைட்டுலேயும் இட்லி, தோசை டிபன் ஐட்டமும், மதியம் ஒரு கூட்டு பொரியலோட சாப்பாடு இரண்டு பேருக்கு ஏத்தது போலச் சமைச்சுக் கொண்டு வந்து இங்கன ரூமில் வச்சிட்டு போயிடணும். மாசம் ஐந்தாயிரம் நான் பேசுனதுபோலக் கொடுத்திடுறேன். உன்னால முடியும்ல காந்தா?” எனக் கேட்டார்.
“என்னங்கய்யா இப்படிக் கேட்டுட்டீங்க. நம்ம விழியனுக்குச் செஞ்சு கொடுக்குறதுக்கு நான் மாட்டேன்னு சொல்லுவேனா?” எனச் சொன்னார்.
“என்ன தாத்தா இது? காந்தா அத்தை மூனு வேலை சாப்பாடு எல்லாம் வேண்டாம். காலையில் நைட்டு டிபன் மட்டும் உங்க இட்லி கடையில் இருந்து கொடுங்க. தாத்தா சொன்னதுபோல ஐயாயிரம் நான் சாப்பாடுக்கு கொடுத்திடுறேன், அவர்கிட்ட பணம் வாங்கக் கூடாது.“ எனச் சொன்னான் விழியன்.
அவன் அவ்வாறு சொன்னதும் காளிதாஸ், “அப்போ காந்தா, அவன் சொன்னது போலவே செய்திடு. நான் ரூபா கொடுத்தா என்ன? அவன் கொடுத்தா என்ன? எல்லாம் ஒன்னுதான். பய மத்தியானம் வெளிய வேலையா போற இடத்தில் சாப்பிட்டிருவான்.” என்றார்.
“அப்போ சரிங்கய்யா. விழியன் தம்பி இன்னைக்கு இராவில் இருந்தே சாப்பாடு கொண்டு வந்திடுறேன். நான் கிளம்புறேன்.” எனச் சொல்லி அவள் கிளம்பினாள்.
விழியனும், “வீட்டுச் சாவி இரண்டு இருக்குல்ல ஒன்னை நான் எடுத்துக்குறேன். நான் வரும்போது வீடு பூட்டி இருந்தா உங்களைத் தேடிக்கிட்டு இருக்க முடியாது.”
எனச் சொல்லி கதவில் இருந்த சாவியை எடுத்து தனது பேன்ட் பாக்கெட்டுக்குள் போட்டுவிட்டு டூவிலரை ஸ்டார்ட் செய்தான். கதிர் ஏறி அமரும் நேரம் காளிதாஸ், “ரொம்ப அவசரமா எங்கயோ இரண்டு பேரும் கிளம்புறீங்க போல இருக்கு?” எனக் கேட்டார்.
“ஆமா தாத்தா. பெரிய மில் ரோட்டில் இருக்குற பூபதிராஜா டிரஸ்ட் ஆபீசில் எதுவோ ரோட்டரி கிளப் மீட்டிங் நடக்குதாம். கிரஹா மேடம் வரச் சொன்னாங்க. அந்த இடம் எங்க இருக்குன்னு தெரியுமா? உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க... இல்லன்னா, அங்கன போய் விசாரிச்சுகிறோம்.” என்றான் விழியன்.
அவரும் அது இருக்கும் இடத்தின் அடையாளத்தைச் சொல்ல, அதைக் கேட்டுவிட்டு அங்கிருந்து டூவீலரில் கிளம்பினர் கதிரும் விழியனும்.
இவர்கள் பேசும் அனைத்தையும் சற்றுத் தள்ளி ஒரு மறைவான இடத்தில் இருந்து கேட்ட ஸ்ரீராம், அவர்கள் செல்லும் இடத்தை நைனாவிடம் மொபைலில் பகிர்ந்து விட்டான்.
இவர்கள் இருவரும் தேசிய நெடுஞ்சாலைக்குப் போகும் முன்பே இவர்களின் இருசக்கர வாகனத்தை அதன் செல்லும் வேகத்தில் பின்னால் இருந்து இடித்துத் தள்ள, கனரக வாகனம் ஒன்று அங்கு ரெடியாகக் காத்திருந்தது.
***
---தொடரும்---
அத்தியாயம் 13
விழியனும் கதிரும் மொட்டை மாடியில் படுத்திருந்தனர். போட்டிருந்த உடையும் தனது இருசக்கர வாகனம் மட்டுமே விழியனிடம்.
அவன் மனதினுள் பல கேள்விகள். ‘வீட்டிற்குப் போய் டிரஸ் எடுக்கவா, வேணாமா? என்னோட லேப்டாப், நான் கையில் வச்சிருக்கும் மொபைல் சார்ஜர் முதல்கொண்டு வீட்டில் தான் இருக்கு.
வீட்டுக்குப் போய் இதெல்லாம் எடுத்துட்டு வெளியில் வரணும்னா மனசு ஹெவியா இருக்கும். அம்மா அழுவாங்களோ? அப்பா அழுத்தமா இருப்பாரோ? அல்லது அம்புட்டு திமிரா உனக்குன்னு அடிச்சு பிடிங்கி வைப்பாரோ? அண்ணன் என்ன சொல்லுவான்? தாத்தா திட்டுவாரு. இதை எல்லாம் கடந்து எப்படி வெளியேற? அதற்குப் பிறகு...
தங்குறதுக்கு ஒரு வீடு வேணுமே. ஒன்னு ரெண்டு நாளைக்கு ஹோட்டல்ல ஒத்த ரூம் எடுத்துத் தங்கிடலாம். என்னோட அரசியல் பிரவேசத்துக்குப் பசங்ககூடத் தங்க முடியாது, தனியா வீடு எடுத்துத் தங்கணும்.
ஹோட்டலில் இருந்துக்கிட்டே கம்மியான ரெண்ட்டுக்கு ஒரு வீடு பார்க்கணும். இதுலேயே என் கவனமும் நேரமும் போச்சுன்னா இரண்டு நாளில் எலெக்சன்ல நாமினேசன் தாக்கல் செய்ற வேலையை எப்படிப் பார்க்க?
சும்மா பேருக்கு நானும் எலெக்சன்ல நிக்கறேன்னு எந்தக் குறிக்கோளும் இல்லாம போய்த் தாக்கல் பண்ணினா மத்தவங்களைக் குறை சொல்ல எனக்கே அருகதை இல்லைன்னு ஆகிடும்ல.’ என நினைத்தான்.
இவன் இவ்வாறு பலவற்றையும் நினைத்துக் கொண்டு இருக்கக் கதிரோ தனது மொபைலில் எஃப்பிப் பக்கத்தை ஸ்குரோல் பண்ணிக் கொண்டே படுத்திருந்தான்.
அவனிடம், “டேய் கதிர், ஆரம்பமே என்னடா இப்படி? தங்குறதுக்கு வீடு கூட இல்லாம எப்படிடா? ரொட்டீன் லைஃபுக்கு என்ன சம்பாதிக்க என்ன செய்யன்னு யோசிக்கவா? அல்லது எலெக்சன் வேலையைப் பார்க்கவா?” என்று கேட்டான்.
கதிரோ, “எதற்கு விழியா? கவலைய விடுடா, எதுனாலும் பார்த்துக்கலாம். நம்ம பசங்க நம்மளை நம்பி இறங்கி வேலை பார்க்குறேன்னு சொல்லும்போது என்ன கவலை!
சாவடி இடத்தில் மூலையில் ஒரு டென்ட் போட்டு தங்கி, கிடச்சதை வாயில் போட்டுட்டு தீயா உழைக்க நமக்குத் தெம்பு வந்துரும். என்ன ஆனாலும் பரவால்லன்னு ஒரு கை பார்த்துருவோம்டா.” என்றான்.
அப்படிப் பேசிக்கொண்டே பேஸ்புக் மெசஞ்சரில் காலையில் கிரஹாவிடம் சேட் செய்ததைத் திறந்து பார்வையிட்டான்.
அந்த நேரம் கிரஹாவும் டைம் லைனில் இருந்ததால், “டேய் கதிர், கிரஹா மேடமும் டைம் லைனில் இருக்காங்கடா! பேசுவோமா?” என்றான்.
“டேய், மணி பத்தாகப் போகுது, இப்போ போய்ச் சேட் போனா ஏதாவது சொல்ல போறாங்கடா! எதுனாலும் காலையில் பதில் சொல்வோம்.” என்றான்.
“எந்தக் காலத்தில் நீ இருக்க? இப்போ எல்லாம் பிஸ்னஸ் டீலிங் அரசியல் முடிவு எல்லாமே இப்படி நைட் சாட்ல தான் முடிவாகுது.” எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
‘ஹாய் கதிர். என்ன முடிவெடுத்திருக்கீங்க? இதோ கொஞ்ச நேரத்தில் பதில் சொல்றேன்னு சொன்னீங்க? ஆனா, ஆளையே காணோம்? நீங்க அமைதியா இருக்குறதை பார்த்தா அரசியலில் இறங்க வேணாம்னு முடிவு எடுத்துட்டீங்கன்னு நான் எடுத்துக்கட்டுமா?’ என்ற மெசேஜ் கிரஹாவிடம் இருந்து வந்தது அவனுக்கு.
கதிர், நைட் சாட்ல தான் இப்போ எல்லாமே முடிவாகுது எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போது அவரிடம் இருந்து மெசேஜ் வர, “டேய்... டேய் பாருடா. அவங்க கேக்குறாங்க! இப்போ என்னடா சொல்ல?” என்றான் கதிர்.
“மேடத்துக்கிட்ட நாங்க அரசியலில் இறங்குறதா முடிவெடுத்துட்டோம்ன்னு சொல்லுடா.
பசங்க கூட மீட்டிங்கில் முடிவெடுக்க நைட் ஆகிடுச்சு, அதுதான் காலையில் சொல்லாம்னு நெனச்சோம் என டைப் பண்ணுடா.” எனச் சொன்னான்.
அவன் சொல்ல சொல்ல இவனும் டைப் பண்ணி முடித்ததால், “நீ எள்ளுன்னா நான் எண்ணையா இருப்பேன்ல... பாரு நீ சொல்லும் போதே அப்படியே டைப் பண்ணி சென்ட் பண்ணிட்டேன்.” என்றான் கதிர்.
‘குட்’ எனப் பதில் மெசேஜ் அனுப்பிய கிரஹா,
‘நாளைக்கு மார்னிங் எங்க டிரஸ்டில் ஒரு மீட்டிங் இருக்கு. அப்படியே நம்ம எலெக்சன் விஷயம் அவங்கட்ட பேசலாமா வேணாமான்னு கன்பியூசா இருந்தது. நான் அவங்க கூடப் பேசிடலாம் தானே?’ என்று கேட்டாள்.
‘ம்... பேசிடுங்க. இதோ செவ்விழியன் கூடத்தான் இருக்கேன். நாங்க சேர்ந்து பேசி முடிவெடுத்துட்டோம். இனி பின் வாங்க மாட்டோம்.’ என டைப் பண்ணி சென்ட் பண்ணினான்.
‘ஒருநாள் சென்று எலெக்சனுக்கு நாமினேசன் தாக்கல் பண்ணணும். நீங்க என்ன செய்றீங்க... எங்க டிரஸ்ட் ஆபீசுக்கு நாளைக்கு ஒரு மூனு மணி போல வந்துடுங்க.
அடுத்தடுத்து என்ன செய்யலாம்! எப்படி எலெக்சனை பேஸ் பண்ணலாம்னு டிஸ்கஸ் பண்ணுவோம்.’ எனச்சொல்லி ஒரு ஸ்மைலி இமோஜூடன் விடை பெற்றுக்கொண்டார் கிரஹா.
அதே நேரம் ஸ்ரீராமிடம் எம்.எல்.ஏ அகத்தியன் பேசிக் கொண்டிருந்தார்.
“என்ன தம்பி சொல்ற? உன் கூட வந்த அந்த இரண்டு சுண்டைக்கா பசங்கள்ல ஒருத்தன் எலெக்சன்ல நிக்கப்போறானாம்ல?
அந்தக் காளிதாஸ் ஐயாவோட பேரன் ஒருத்தன் ஈடுபாடா இருந்தானே அவன் பார்க்க கொஞ்சம் பெரிய மண்டைக்காரன்(அறிவாளி) போல அன்னைக்கே எனக்குத் தெரிஞ்சான்.
நம்ம பக்கம் நின்னா பயலை யூஸ் பண்ணிக்கலாம்னு நினைச்சேன். ஆனா, என்ன பண்ண? ஊர் நிலவரம் பத்தி தெரியாத முட்டாளா இருக்கிறான். இந்த அகத்தியனை பத்தி தெரியாம எதிர்த்து நிக்கக் கிளம்பிட்டான். இவனை யாருன்னே தொகுதி ஜனங்களுக்குத் தெரியாது!
டெபாசிட் போய் அசிங்கமா தோத்து போய் என் பகையும் சம்பாதிக்கப் போறாங்க! நீ உன்னோட பிரெண்ட்ஸ் கிட்ட கொஞ்சம் சொல்லி வை தம்பி.” என்றார்.
“இல்லை தலைவரே! அவிங்க இந்த விஷயத்தில் என்னை ஒதுக்கி வச்சிட்டாங்க. இதுவரை எது செஞ்சாலும் கூட என்னையும் சேர்த்துக்குவாங்க.
ஆனா, என்கிட்ட எந்த மூச்சும் காமிக்காம ஒதுக்கி வச்சுத்தான் எலெக்சன் பத்தி எல்லாம் முடிவு பண்ணியிருக்காங்க.
நான் ஃபோன் பண்ணி பேச பார்த்தேன். ஆனா, அப்புறம் பேசுறேன்னு என்னைக் கழட்டி விட்டுட்டு மத்த பசங்களை ராக்காச்சி மலையில் இருக்கிற அவன் தோப்புக்கு கூட்டிட்டு போய் மீட்டிங் போட்டு பேசியிருக்காங்க.” என்றான்.
அவன் சொன்னதும் சற்று நேரம் அமைதியான அகத்தியன், “என்ன தைரியத்தில் இவிங்க எலெக்சன்ல நிக்கிறேன்னு கிளம்பியிருக்காங்க?
ஒருவேளை அவங்களுக்குப் பின்னாடி இருந்து ஏதாவது பெரிய கை சதி பண்றாங்களா? யாராவது பெரிய இடத்தில் அவிங்களுக்குப் பழக்கம் இருக்கா?” எனக் கேட்டார்.
எம்.எல்.ஏ அகத்தியன் அவ்வாறு கேட்டதும், “ஆமா, அவங்க தோப்புல பேசுன பசங்ககிட்ட தனிப்பட்ட முறையில் அப்படி என்னடா பேசுனீங்கன்னு விசாரிச்சேன்.
அவன் சொன்னான் மில் முதலாளி பூபதிராஜா அவனுக்குச் சப்போர்ட் பண்ணுவதாவும், அவரோட தங்கச்சி கிரஹான்றவங்க தான் இவனை நிக்கச் சொன்னதாவும் சொன்னான். அவனுக்குப் பின்னாடி இருந்து எல்லா உதவியும் செய்றதா சொல்லி இருக்குறதா சொன்னான்.” என்றான்.
அவன் அவ்வாறு சொன்னதும் எம்.எல்.ஏ அகத்தியன் சற்று நேரம் அமைதியாகி விட்டான்.
“பூபதி ராஜா பவர் புல் ஆன ஆளு. ஆனா, அனாவசியமா எதிலயும் தலையிடாம ஒதுங்கிப் போயிடுவார். ஆனா, அவரோட தங்கச்சி அந்தக் கிரஹா டேஞ்சரஸானா ஆளு. அந்த அம்மாவுக்கு உலக நியாயத்தையே அதுதான் தூக்கி பிடிச்சு நிறுத்தறதா எண்ணம்.
அது விழியனின் பின்னாடி நின்னா அது நமக்கு ரிஸ்க் தான். மத்தவங்க விஷயம்ன்னா ஒதுங்கி போற பூபதிராஜா தங்கச்சின்னா ஓடி வந்து நிப்பாரு.
அதனால ரிஸ்க் இன்னும் அதிகம் தான். இருந்தாலும் அரசியல் பத்தி ஆனா ஆவன்னா கூடத் தெரியாத இவிங்களை எப்படித் தட்டி அடக்கணும்னு எனக்குத் தெரியும்.
சரி தம்பி, அப்பாவ உடனே நான் வரச் சொன்னதா சொல்லு. நான் வச்சிடுறேன்.” எனப் போனில் பேச்சை முடித்தார் அகத்தியன்.
***
”பொழுது விடிஞ்சதும் எங்க தான் கிளம்புவ நீ, ஆமா புருசன்னு ஒருத்தன் இருந்தா அவனைக் கவனிக்கணும்ற எண்ணம் இருக்கும்.
அதுதான் இல்லைன்னு ஆகிடுச்சே! என்ன பொறுப்பு உனக்கு? கோயில் மாடாட்டம் ஆம்பளை கணக்கா சுத்த என்ன தடை?
அதுதான் வீட்டில் எல்லாம் கவனிச்சுக்க உனக்கும் சேர்ந்து மாடா உழைக்க நான் இருக்கேனே...” எனச் சொன்ன சாந்தாவிடம் கிரஹா,
“அண்ணி! இப்போ என்ன வேலை வீட்டில் இருக்குது சொல்லுங்க. நான் அதை முடிச்சுட்டு கிளம்புறேன். எனக்காக நீங்க எதுக்கு மாடா உழைக்கணும்?” எனச் சொன்னாள்.
“நீ போயிட்டு வாடிம்மா. பிறகு நான் என்னமோ உன்னைக் கொடுமை படுத்தியதா அவர் வந்து என்கூடச் சண்டைக்கு நிப்பார். இதெல்லாம் எனக்குத் தேவையா?” என்றார்.
மனதினுள் கிரஹாவுக்கு அத்தனை ஆதங்கம் இருந்தது. ‘அண்ணியின் மேற்பார்வையில் செய்து முடிக்க, சமையல் முதற்கொண்டு வீட்டில் அத்தனை வேலைக்கும் ஆள் இருக்கு. பிறகு என்ன வேலை எனக்காக இவங்க செஞ்சு தவிச்சு போறாங்க? இவங்களை நானா வெளியில் போகாதீங்கனு சொன்னேன்!
அவங்க கூடப் பியூட்டி பார்லர், கோயில், கெட் டு கெதர் பார்டிக்கு எல்லாம் போனா எனக்குச் செட் ஆகாது. அதுபோல அவங்களுக்குச் சோசியல் ஆக்டிவிட்டிஸ் செட் ஆகாது.
நான் அவங்க பண்றதை எதையாவது குறையா நினைக்கிறேனா? பேசுறேனா? நான் செய்றது என் மனசு திருப்திக்காக!
என்னால எதுவும் செய்யாம வீட்டில் இருக்க முடியாது. அதுபோலப் பார்ட்டி, கோயில் இப்படிச் சுத்துனா ஒருத்தராவது நான் விடோன்றதை ஏதாவது வகையில் சுட்டிக் காட்டிடுவாங்க.
அதோ கிரஹா வாரா. நல்லது நடக்குது அவ கண் படாம நைசா பேசி நவடிட்டு அங்குட்டுப் போ என்று அவர்களுக்குள் கண் ஜாடை காட்டுவதை நான் கண்டுகொள்ளாமல் இருப்பேன். இருந்தும் மனதினுள் ஒரு சுருக்கெனத் தைக்கத்தானே செய்யும்.
எனக்கு இதுபோலக் குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இதனால் பிடிக்காமலே போயிடுச்சு. நான் என்ன பண்ண?
எனக்கு இந்தப் பகட்டான சொசைட்டிக்கிட்ட ஒட்டி உறவாடுவதை விட உதவி தேவைப் படுறவங்களுக்கு என் நேரத்தை செலவழிச்சா ஒரு நிம்மதி கிடைக்கும். அதோட என்னோட மனசும் அலைபாயாம இருக்கும்.
கைம்பெண் ஆனதில் என்னிடம் என்ன குறை வந்துவிட்டது. என் கணவன் இறந்ததால் என்னுடைய தனித்துவம் எப்படி மாறிப்போனது?
இதெல்லாம் நான் எனக்குள்ளேயே கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விகள். இதற்கான விடை எங்கு எங்குக் கிடைக்கும்?
நடந்ததை அண்ணன் காதுக்குக் கொண்டு போனா தேவையில்லாம அண்ணனுக்கும் அண்ணிக்கும் இடையில் மனக்கசப்பு வரும்.’ என அவளுக்குள் தர்க்கம் செய்து கொண்டே தட்டில் இருந்த பதார்த்தத்தை வயிற்றுக்குள் தள்ளிவிட்டு, தனது ஹேண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள்.
தன்னுடைய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காரை செட்டில் இருந்து வெளியில் எடுத்தவள் தனது கணவர் இறந்த பிறகு கார் ஓட்ட பழக வேண்டும் என்று சொன்ன போது வந்த எதிர்ப்புக்களையும் மீறி தனக்குச் சப்போர்ட் செய்த தன் அண்ணனை நினைத்தாள்.
‘கடவுள் எனக்குக் கொடுத்த மிகப்பெரிய கிஃப்ட் என் அண்ணன். அவருக்காக இந்த அண்ணி என்ன சொன்னாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.’ என நினைத்து டிரைவர் இருக்கையில் அமர்ந்த அவளால், இன்று டிரைவ் செய்ய முடியாது எனத் தோன்றியது.
எனவே, “முருகன், என்னைக் கிளப் வரை கொண்டு போய் விட்டுட்டு காரை அங்கேயே வச்சிட்டு, பஸ் பிடிச்சு வீட்டுக்கு வந்துடுங்க. அண்ணிக்கு எதுவும் வெளியில் போகும் சோலி இருந்தால் நீங்க இங்க இல்லையென்றால் கோபப்படுவாங்க.” எனச் சொல்லி வீட்டு டிரைவரிடம் தனது கார் கீயை கொடுத்தவள், பின் இருக்கையில் அமர்ந்து கொண்டவளுக்கு இன்னும் நினைவலைகள் ஓயாது சுற்றியது.
இது போன்ற வேளைகளில் அவளுக்கு வரும் தலைவலி எட்டிப் பார்ப்பது போல ஃபீல் ஆனதும் தனது ஹேண்ட் பேக்கில் இருந்த மாத்திரைகளை எடுத்து விழுங்கினாள்.
‘என் வாழ்க்கையில் இன்ப துன்பத்தில் எப்போதும் உடன் இருப்பேன் என்று சொன்ன என் கணவர் இறந்ததும் தான் எனக்கு ஒரு விஷயம் புலப்பட்டது.
இந்த உலகை அவருடன் சேர்ந்து எதிர்கொள்ள என்னைப் பழக்கவிடாது அவரின் ஆதிக்கத்தின் கீழ் காங்கிரீட் கூட்டினுள் என்னைத் தாலி என்னும் வேலி என்ற வார்த்தையில் இச்சமூகம் கட்டுப்பட வைத்திருந்தது.
கல்லூரி முடித்ததும் வேலைக்குச் செல்ல ஆசைப்பட்டேன். கல்யாணம் செய்து உன் கணவர் சம்மதித்தால் போ என்று பிறந்த வீட்டில் கட்டுப்பாடு விதித்தார்கள்.
கல்யாணம் முடிந்ததும் நானே ஒரு கம்பெனி முதலாளி நீ எதுக்கு இன்னொரு இடத்தில் வேலைக்குப் போகணும்? என்னைக் கவனிப்பது மட்டும் உன் வேலையா இருக்கட்டும் எனச் சொல்லி விட்டார்.
அவர் இல்லாத நேரம் நண்பர்களுடன் வெளியில் செல்ல ஆசை வந்தது. டிரைவர் அவருடன் தேவைக்கு அலுவலகத்தில் கொண்டு போய் விட்டுவிட்டு அங்கேயே அவருக்கு அவசர தேவைக்கு உதவ என்று இருந்து கொள்வதால், என்னை வெளியில் கூட்டிச் செல்ல டிரைவரை அனுப்பச் சொல்வேன்.
அப்பொழுது நான் இல்லாம நீ மட்டும் போய் என்ஜாய் பண்ண போறியா? அதெல்லாம் வேண்டாம் எனச் சொல்லி நண்பர்களுடனான என் பழக்கத்தை நிறுத்தியாகி விட்டது.
சமையல், வீடு, சுற்றத்தாரின் விஷேசங்களுக்கு இவருடன் போவது மட்டுமே என் அன்றாட வாழ்க்கை ஆகிடுச்சு. அவரும் பிஸ்னஸ் அது இது என்று பிசியாக இருந்ததால் நான் வீட்டுச் சிறைப்பறவை ஆனேன்.
வீட்டில் அவர் இருக்கும் நேரங்களில் பெரும்பாலும் நான் வெளியில் எங்காவது கூட்டிக்கொண்டு போக வேண்டும் என நினைப்பேன். அவர் வெளியில் நிறைய நேரம் சுத்துவதால் கிடைக்கும் நேரத்தை வீட்டில் தூங்கி எழுந்து சாப்பிட்டு ஓய்வில் இருக்கணும் என நினைப்பார்.
இரண்டு பேரின் எதிர்பார்ப்புகள் எதிர்ப்பதமாக இருப்பதால் நிறையச் சண்டை வரும். அந்தச் சண்டையின் முடிவு இளமையின் தேடலாக முடியும்.
இருவரும் ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்து கொண்டோமா என்பதை உணரும் முன்பே குழந்தை.
குழந்தைக்கு ஒரு வயசு ஆகும் முன்பே நான் கல்யாணம் முடிந்த நாளில் இருந்து கூட்டிக் கொண்டு போகச் சொன்ன கோவா டிரிப். அதன் முடிவில் சந்தித்த ஆக்சிடெண்ட். அந்த ஆக்சிடெண்டில் அவர் இறந்தது கூடத் தெரியாது என் தலையில் அடிபட்ட காரணத்தால் அந்தச் சம்பவம் நடக்கும் சூழல் மட்டும் என் நினைவில் இருந்து தப்பி விட்டது என் தலையில் ஏற்பட்ட காயத்தால்.
பாதி நினைவு தெளிந்த நிலையில் டாக்டர் சொன்ன வார்த்தை என் காதில் இன்னும் கேட்பது போல இருக்கு.
‘தலையில் பிளீடிங் ஆகுது உடனே ஆபரேஷன் செய்து பிலீடிங் நிறுத்தணும் பெரிய ஆபரேஷன் தான் முடிந்த அளவு முயற்சி செய்வோம்.’ எனச் சொன்னது.
எனக்கு உணர்வு மரத்துப் போனது என் உடல் பாகங்களை என்னால் அசைக்க முடியவில்லையே தவிரக் கரக் கரக் என்று என்னை அறுப்பது எனக்குத் தெரிந்தது.
அங்கிருந்து எழுந்து ஓடவேண்டும் போல ஒரு எண்ணம். ஆனால் என்னால் எதுவும் செய்ய முடிய வில்லை. என் கைகள் கால்கள் எதுவும் இயங்கவில்லை.
எனக்கு எதுக்கு ஆபரேஷன் பண்றாங்க என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஏன் என்றால் நாங்கள் கோவாவுக்குக் கிளம்புவதற்கு முன்பு வரை உள்ளது மட்டுமே என் நினைவில் இருந்தது.
கோவா போனதோ அங்கு என்ஜாய் செய்ததோ அதில் ஆக்சிடெண்டில் மாட்டியது எதுவுமே எனக்கு நினைவு இல்லை.
அதற்கடுத்து ஐ.சி.யூ மாத்தணும் என்று சொன்னது மட்டும் தான் எனக்கு நினைவுக்கு உள்ளது.
ஐ.சி.யூவில் இருந்தவர்கள், அவர்களின் வாழ்க்கையின் எல்லை வரை அந்த நரகம் நினைவில் இருந்து அகலாது.
ஐ.சி.யூவில் அட்மிட் பண்ணுங்க என்று சொன்ன மறுநொடி அவர்களின் மூச்சுக்குழலில் உள்ள சளி நீக்கப்படும். உணவு பாதையில் இருக்கும் கழிவுகள் அகற்றப்படும்.
அவர்களின் உடலில் போட்டிருந்த அத்துணை உடைகளும் உருவப்பட்டு மேற்பகுதியை மட்டும் போர்த்தி வைக்கும் பச்சை நிற ஸ்கிரீன் துணியைக் கட்டுவது போலக் கவுனுடன் ஆன உடை அணிவிக்கபடும்.
மூச்சுக்குச் செயற்கை குழாய்ப் பொருத்தப்படும். சிறுநீர் போக ரப்பர் குழாயுடன் இருக்கும் பை அவர்களின் உறுப்பில் பொருத்தப்படும்.
குளுகோஸ் உடலினுள் அவர்களின் நரம்பில் ஏற்றப்படும் குழாய்களின் மூலம் அனுப்பப்படும். உணவு தண்ணீர் எதுவும் அவர்களின் வாய்வழி கொடுப்பது நிறுத்தப்படும்.
கைகால்கள் உலட்டி உடலில் மாட்டிருக்கும் இத்தனை வயர்களில் ஏதாவது ஒன்றை உருவி விட்டால் என்ன செய்ய என்று கையையும் காலையும் கட்டிலுடன் சேர்த்துக் கட்டப்படும்.
அதாவது அவர்கள் பழுதடைந்த இயந்திரமாக அப்பழுதை சரி செய்ய என்று கட்டிலுடன் கட்டிப்போட்டு சரி பார்க்கப்படும் ஒரு இயந்திரமாகப் பாவிக்கப்படுவார்கள்.
ஐ.சி.யூ சிக் வீட்டுக்குப் போனதும் சரியாகிடும். இதுதானே இன்றைய கார்ப்பரேட் உலகின் ஐ.சி யூ நிலை.
டாக்டர்கள் சொல்வதை எந்தவித மறுப்பும் சொல்லாது ஏற்கும் உறவினர்கள். எப்படியோ காப்பாற்றிக் கையில் கொடுத்திடுங்க எம்புட்டுப் பணம் வேண்டும் என்றாலும் செலவழிக்கிறேன் என்ற வார்த்தை மட்டுமே உதிர்க்கும் மக்கள்.
இதே எமர்ஜன்சி அறைகள் இந்தக் கார்ப்பரேட் உலகிற்கு முன்பும் இருந்தது தானே.
ஆனால் அப்பொழுது ஐ.சி.யூவில் இருக்கும் மனிதருடைய மனநிலை இந்தளவு பாதிப்பு ஏற்படுமா?
கூடவே ஒரு நர்ஸ் ஐ.சி.யூவில் இருப்பாங்க. அட்மிட் ஆகியிருப்பவர் வயதானவராக இருந்தால் தாத்தா கைய காலை உலட்டாதீங்க டியூப் விலகிடும். கொஞ்சம் பொறுத்துக்கோங்க சரியாகிடும் போன்ற வார்த்தைகள்.
வீட்டில் இருந்து கூடவே இருக்கும் ஒரு உறவினர். மருத்துவரின் ஆதரவான பேச்சு போன்ற மனதளவில் பேஷண்டுக்குத் தன்னைச் சுற்றி நம்பிக்கையூட்டும் மனிதச் சூழல் இருக்கும் என்ற என் கருத்தில் ஏதேனும் மாற்றுக் கருத்து இருக்கிறதா? என்னோட புரிதலில் ஏதேனும் தவறு இருக்கிறதா?
நோயாளியின் மனநிலை இப்பொழுது உள்ள ஐ.சி.யூ.வில் என்னமும் பண்ணிக்கோங்கடா. எனக்கு எல்லாம் வெறுத்து போச்சு. என்னால் உங்களை மீறி ஒன்றும் செய்ய முடியாது. இத்தனை நாள் நான் கட்டிக்காத்த உணவு உடை போன்ற அடிப்படையே இங்குத் தகர்ந்திருச்சு. இன்னும் என்ன? என்ற மனநிலை பேஷண்டுக்கு வந்துவிடுவது சரியா?
இன்றைய மிகப்பெரிய மருத்துவமனையில் உள்ள பேஷண்டின் உளவியல் நிலை என்ன என்று நான் நினைக்கிறேன். இது சரியா?‘கிரஹா தான் மருத்துவமனையில் இருந்த நாட்களின் பயத்தை மறக்கயியலாது அசை போட்டபடி காரில் பயணம் செய்கிறார்.
வருடங்கள் ஆகியும் தனது வாழ்வு புரட்டிப்போட்ட சம்பவங்களைத் தனது அண்ணனின் துணைகொண்டு மீண்டுவந்தாலும் தன்னைத் துரத்தும் அமங்கலி என்ற நிலையின் விளைவுகளைச் சந்திக்கும் வேளைகளில் அவள் அடிக்கடி நினைவில் பின்நோக்கி நகர்ந்துவிடுவது தவிர்க்கமுடியாமல் போய்விடுகிறது
***
---தொடரும்---
அத்தியாயம் 12
நண்பர்களிடம் “நான் தோத்து போயிட்டா இன்னைக்கு நான் பட்டினி. என்னைப் பார்க்க வச்சு நீங்க சாப்பிடலாம்!” எனக் கதிர் சொன்னதும்,
அங்கிருந்தவர்கள் அவர்களுக்குள்ளேயே, “டேய்! இவன் ஒன்னும் அம்புட்டு பெரிய அப்பாடக்கரு இல்லையே! நம்மகூடப் படிச்சவன் தானே. அவனோட தமிழ் பத்தி நமக்குத் தெரியாதா? என்னமோ டிரிக் பண்றான் என்னவா இருக்கும்?” என அவர்களுக்குள்ளாகவே பேசிக் கொண்டார்கள்.
“கதிர், காடை கறியை பத்தி சங்க காலத்தில் என்ன சொல்லியிருக்காங்க... கொஞ்சம் சொல்லு. அதையும் தான் கேப்போமே.” என்றான் அவர்களில் ஒருவன்.
“இது எல்லாம் எனக்கு அசால்ட்டு! இப்போ பாரு சொல்றேன்.” எனக் குனிந்து என்னவோ அவனுக்குள் சொல்லிக் கொண்டவன், முதலில் ஒரு கவி சொல்லுகையில் எப்படிச் சத்தமாகச் சொன்னானோ அதே போல இப்பொழுதும் அவன் வார்த்தை சத்தமாகவே வந்தது.
“நெய்கனி குறும்புழ் காய மாக ஆர்பதம் பெருக
தோழி அத்தைபெருங்கல் நாடன் வரைந்தென
அவனெதிர்நன்றோ மகனே யென்றனென்நன்றே
போலும் என்றுரைத் தோனே!
அதாவது நண்பர்களே, குறுந்தொகையில் வந்த இப்பாடலுக்கு விளக்கம் என்னன்னா... தலைவன் பிரிவினில் வாடிய தலைவியைச் சந்தித்த அவளது பணிமகன் தான் தலைவனைச் சந்தித்த நற்செய்தியை கூறுகிறான்.
அதனால் அளவில்லாத ஆனந்தமடைந்த தலைவி, அந்தப் பணிமகனுக்கு நெய்யினால் பொறிக்கப்பட்ட சுவை மிகுந்த காடை கறியை உண்ண கொடுத்தாள் என்பதை அறியலாம் நாம்.” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டு, “டேய் கதிரு எப்படிடா இப்படி? தமிழ் டெஸ்டில் என்னைப் பார்த்துப் பிட் அடிச்சவன் தானடா நீ? பிறகு எப்படிடா இப்படி!” என்றான்.
அவனிடம் வில்லத் தனமான செயற்கையான ரஜினியை போன்ற, “ஆஹா... ஹாஹா” என்ற சிரிப்பை காட்டி விட்டுச் சொன்னான்.
“அது அறியாத வயசு. இப்போ நாங்க பல புத்தகங்களைப் படிச்சு எங்க தமிழ் அறிவை வளர்த்துக்கிட்டோம்ல...” என்றான்.
அவன் அவ்வாறு சொல்லவும், “சரி, அதென்ன எங்க முகத்தைப் பார்த்து சொல்லாம, இலையில் இருக்குற கறிய பார்த்துட்டே சொல்ற?” என்றான் ஒருவன்.
அதற்குச் சீரியஸாக முகத்தை வைத்தபடி, “அதென்னமோ தெரியல கறி சாப்பாட்ட பார்த்தாத்தான்டா இதெல்லாம் எனக்குச் சொல்ல வருது! அதுதான் இந்த இலையில் இருக்கும் முயல் கறித்துண்ட பார்த்துகிட்டே சொல்றேன்.” என்றான் கதிர்.
அவனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே குரூப்பில் இருந்த ஒருவன் இன்னொருவனுக்குச் சிக்னல் காட்ட, அவன் தரையில் நான்கு காலில் ஆமை ஊர்ந்து நகருவது போலக் கதிரின் கண்களில் மாட்டதவாறு அவனின் முதுகுப்பக்கம் விரைந்தான்.
கதிரிடம் பேச்சுக் கொடுத்தவன், “அப்போ நீ தமிழில் பெரிய அறிஞர் ஆகிட்டன்னு சொல்லு!” என்றவன்,
“ஆமா, அந்தக் காலத்தில உடும்பு கறி எல்லாம் சாப்பிடுவாங்கன்னு எங்க அப்பத்தா சொல்லி இருக்கு. அதைப் பத்தி கொஞ்சம் தமிழ் இலக்கணக் கவிதையோடு சொல்லேன் கேப்போம்.” என்றான்.
சற்று யோசிப்பது போலப் பாவனைக் காட்டிய கதிர், “இதோ சொல்றேன் கேட்டுக்கோங்க...
களர் வளர் ஈந்தின் காழ் கண்டன்ன,
சுவல் விளை நெல்லின் செவ்அவிழ்ச் சொன்றி
ஞமலி தந்த மனவுச்சூழ் உடும்பின்
வரைகால் யாத்தது வயின் தொறும் பெருகுவிர்!”
எனச்சொல்லி கதிர் நிமிர்கையில் அவனின் மிக அருகில் குமாரு மூஞ்சி தெரிந்தது. ஒருநிமிடம் அதிர்ந்து பின் கதிர் சுதாரிக்கும் முன் அவன் சாப்பாட்டு இலையில் வைத்திருந்த அவனின் மொபைலை குமார் கைப்பற்றி இருந்தான்.
அவன் நண்பர்களிடம், “இப்போ நம்ம தமிழ் பண்டிட் கதிர் சொன்ன செய்யுளுக்கு விளக்கம் நான் சொல்றேன் கேட்டுகோங்க.” என்றவன் அந்த மொபைல் ஸ்கிரீனில் சங்ககால அசைவ உணவு என்ற தலைப்பில் கீழ இருந்த அந்தப் பதிவை வாசித்தான்.
“தம் வீடு தேடி வருவோரை சிறப்பிக்க மேட்டு நிலத்தில் விளையும் சிகப்பரிசியையும், தாம் வேட்டையாடிய உடும்பினையும் சமைத்து உயர்தரமாக உபசரித்துள்ளனர் பாலைநில எயினர்.” என்று முடித்துவிட்டு, “என்னடா? டேய் என்னடா இது? இப்படிப் பார்த்து வாசிக்க எங்களால மட்டும் முடியாதா? அடச்செய் இதுல பெட்டு வேற..” என்றான்.
குமார் அவ்வாறு சொல்லவும் கதிர், “நான் சொல்றேன்னு சொன்னேன். பார்க்காம சொல்லுவேன்னு நான் சொல்லலையே! ஏமாந்தது உங்க குத்தம்.” என்று சொன்னதும், அங்கிருந்த எல்லோரும், “டேய்...” என்றபடி சிரிப்பும் ஏமாற்றமுமாக அவனைச் செல்லமாகத் தட்டிவைக்கக் கதிரைச் சுற்றி வளைத்து நெருங்கினர்.
இதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த விழியனோ எதிலும் கலந்து கொள்ளாது சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான்.
அவன் மனதில், ‘அரசியல் தான் இனி வாழ்க்கைன்னு முடிவெடுத்தாச்சு. நான் சொன்னேன்ற ஒற்றை வார்த்தைக்காக இத்தனை பேர் என் பின்னால் நிக்கிறேனு சொல்லிட்டாங்க. ஆனா, என் அப்பா அரசியலில் இறங்கினால் வீட்டில் இருக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாரே!
அதனால வெளியேறித்தான் ஆகணும். ஒரு நாள் அவங்களே புரிஞ்சு என் பின்னாடி வந்து நிப்பாங்க. ஆனா, இனி வீட்டில் இருந்து அரசியல் பண்ணக்கூடாது. லாபமோ நட்டமோ அது என்னோடு போகட்டும்.
வீட்டை விட்டு வெளியில் வந்தா தங்க ஒரு நல்ல இடம் வேணும் எனப் பசங்ககிட்ட சொன்னா பயந்துடுவாங்க. இதைத் தனியா தான் டீல் பண்ணனும். இன்னைக்கு ஒரு நாள் கதிர்கூட அவன் வீட்டு மொட்டை மாடியில் தங்கிடணும்.’ எனப் பல எண்ணங்கள் அவனுள் ஓடிக்கொண்டிருந்தது.
***
விழியன் வீட்டில், அவனின் தாத்தா வீட்டிற்குள் வரும் போதே வீட்டு நிலவரம் சரியில்லை என உணர்ந்து கொண்டார்.
அவரின் அறைக்குள் போனதும் அவரின் பின்னாலேயே, ‘எப்படா அவர் வருவார்.’ எனக் காத்திருந்த மதியும் உள்ளே சென்றான்.
“தாத்தா, விழியன் மேல அப்பா செம கோபத்தில் இருக்கார்.” என்றான்.
“என்ன மதி சொல்ற? எதுக்குக் கோபம்?” எனக் கேட்டவருக்கு, ‘அவன் பூபதி ராஜா வீட்டிற்குப் போய்க் கட்சி விஷயமா பேசியது தான் பிரச்சனையா இருக்குமோ?’ என்ற எண்ணம் ஓடியது.
அப்பொழுது மதி சொன்னான். “எலெக்சன்ல விழியன் நிக்கப் போறேன்னு சொல்றான் தாத்தா! நானும் அம்மாவும் அதெல்லாம் வேணாம்னு சொல்லிப் பார்த்தோம், அவன் கேக்குறது போல இல்ல. அதனால அம்மா அப்பாகிட்ட அவனைக் கண்டிச்சு வைக்கச் சொன்னாங்க.
அப்பாவும் விழியன்கிட்ட நீ எலெக்சன்ல நிக்கிறது எனக்கு விருப்பமில்லை. அதையும் மீறி நீ நிக்கணும்னு நினச்சா இந்த வீட்டுக்குள்ள இருந்து அரசியல் நீ பண்ணக்கூடாது வெளிய போயிடணும்னு சொன்னாங்க.
அதுக்குச் சரிப்பா நான் நிக்கலைன்னு விழியன் சொல்லுவான்னு எதிர்பார்த்தோம் நானும் அம்மாவும். ஆனா, அப்படிச் சொல்லாம கோபமா வெளியில போயிட்டான்.” எனச் சொன்னான்.
உடனே அவர் கோபமாக, “அறிவு... அறிவு... இங்க வா!” என்று ஹாலில் நின்று கொண்டு சத்தம் கொடுத்தார்.
அவரின் சத்தம் கேட்டு ஹாலுக்கு வந்த விழியனின் அப்பாவை பார்த்து, “என்ன அறிவு, வளர்ந்த பிள்ளைய போய் வீட்டை விட்டு வெளியில் போன்னு நீ சொல்லலாமா?” என்றார்.
அவர் அவ்வாறு சொன்னதும், “அப்பா, அவன் கண்ணுல ஒரு பிடிவாதம் தெரியுதுப்பா! எலெக்சன்ல அவன் நின்னே ஆகணும்னு முடிவெடுத்துருக்கிறான். அவனைத் தடுக்க வேற வழி எனக்குத் தெரியலை. ஒருவிதத்தில் அவன் அரசியலில் இறங்குறதுக்கு ஒரு வகையில் நீங்க தான் காரணம்.
முன்னாடி நீங்க அரசியல் பண்றேன்னு கிளம்பினா, அம்மா வாய்வார்த்தையா உங்ககிட்ட மல்லுக் கட்டுவாங்க. அதுக்குக் காரணம் அப்பவே நீங்க அரசியலில் இறங்கிடக் கூடாது குடும்பம் பிள்ளைகள்னு இருந்திடணும்றதுக்காக. அது நியாயம்னு நெனச்சதினாலத் தானே நீங்க ஆசை இருந்தும் அரசியலில் இறங்காம இருந்தீங்க.
நானும் அம்மா பேசுறது போலத்தான் என் மகன் அரசியலில் இறங்கக் கூடாதுன்னு கடுமையா பேசுறேன். அதை நியாயம்னு நினைக்கிறேன்.” என்றார்.
ஆனா, உங்களைப் போல அவன் புரிஞ்சு அடங்கி இருப்பான்னு எனக்கு இப்போ தோனலை. அவன் வீட்டுக்குள்ள இருந்துக்கிட்டு அரசியல் பண்ணினா வீடு வரை நிறையப் பிரச்சனை வரும்.
அவன் மட்டும் எனக்குப் பிள்ளை இல்ல! இதோ இன்னொரு மகனையும் வச்சிருக்கேன். நாளைக்கு அவன் உள்ள இருந்துகிட்டு இழுக்குற பிரச்சனை இவனையும் பாதிக்கும். இதெல்லாம் விழியன் நெனச்சு பார்க்கணும்.
தன்னைச் சுத்தி இருக்குறவங்களை நினைக்க மாட்டேன்னு இஷ்டத்துக்கு அரசியலில் இறங்கியே ஆவேன்னு அவன் பிடிவாதம் புடிச்சா என் முடிவு இதுதான்.” என்றார்.
அவர் அவ்வாறு சொன்னதும் அவரின் மனைவி வேணி, “என்னங்க நீங்க? அவனைக் கண்டிச்சு வைப்பீங்கன்னுதான் நினைச்சேன். ஆனா, அடுத்தவங்ககிட்ட பேசுறது போலப் பெத்த பிள்ளைக்கிட்ட வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பேசிக்கிட்டு இருக்கீங்க!” என்றார்.
அப்பொழுது தாத்தா காளிதாசும், “இங்க பாரு அறிவு, நீ பேசுறது சரியில்லை! வேணி சொல்றது போல அவனைக் கண்டிச்சு வை. அதை விட்டுட்டு தலைக்கு மேல வளர்ந்த புள்ளையை வீட்டுல இருக்கக்கூடாதுன்னு பேசக்கூடாது.
அவன் நம்ம நிழல் விட்டுப் போகத் தயங்குற சின்னபிள்ளை இல்ல. அடிச்சாலும் திரும்ப வந்து நம்மளையே தூக்கச் சொல்லி கையக்காட்டும் குழந்தைன்னு நீ நெனச்சுகிட்டு இருக்க.
இந்த வயசுல சுயமரியாதையைத் தட்டி எழுப்புனா, அது பெத்தவங்களானாலும் உடனே அவங்க முன்ன தன்னால சுயமா இருக்க முடியுமுன்னு முடிவெடுக்க வைக்கும் வயசு.
அந்த முடிவு அவங்களுக்கு நல்ல விளைவையும் கொடுக்கும், அவங்களை அதல பாதாளத்திலேயும் தள்ளும். இப்போ ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ! இப்போ உன் மவன் வந்து வீட்டை விட்டு வெளிய போறேன்னு சொன்னா, என்னால உன்னைப் போல அவனை அம்போன்னு விட முடியாது.” என்றார்.
காளிதாசிடம், “அப்பா அப்படி எனக்குப் பிடிக்லைன்னு விழியனுக்குத் தெரிஞ்சும் வெளிய போயாவது அரசியல் பண்ணுவேன்னு சொல்றவனை என்ன செய்யணும்னு சொல்றீங்க?
நான் பெத்தவனுக்கே இம்புட்டுப் பிடிவாதம் இருந்துச்சுன்னா! அவன் அப்பன் எனக்கு எம்புட்டு இருக்கும்?” என்றார்.
“அப்போ நீங்க ரெண்டு பேரும் முறைச்சிட்டு நிப்பீங்க. அதை நான் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கணுமா?” என்றவர்,
“ஏலே மதி, என் கபோர்டில் மேற்கு வீட்டுச் சாவி இருக்கு அதை எடுத்துட்டு என்கூட வா! அந்த ஒத்த பத்தி வீட்டை போய்ச் சுத்தம் செஞ்சு வைக்கணும்.” என்றார்.
அவர் அவ்வாறு சொன்னதும், ”அப்பா அதை எதுக்குச் சுத்தம் பண்ணணும்? அதுதான் வாரம் ஒரு தடவை சமுத்திரம் அங்க துடைச்சு எடுக்குறாங்க தானே.” என்றார்.
“அது மட்டும் உங்க வீடு இல்ல. இதுவும் உங்க வீடுதான். நான் இங்க முடிவெடுக்கக் கூடாதுன்னு நீங்க நெனச்சா, நான் தான் குடும்பத்தோட வெளியேறணும். நீங்க எதுக்கு மேல வீட்ட சுத்தம் பண்ணப் போறேன்னு கிளம்புறீங்க.” என்றார்.
அதற்கு அவர், “அட கூறு கெட்டவனே! நான் எதுக்கு அங்க போயி தங்கப் போறேன்? நீ பாட்டுக்கு பொசுக்குன்னு விழியனை வீட்டை விட்டு போன்னு சொல்லிட்ட. அவன் எங்க போய் நிப்பான்? என் பேரனை ரோட்டுல ஒன்னுமில்லாம என்னால விட முடியாது.
அதான் நானும் அவன்கூட அந்த வீட்டில தங்கப் போறேன். என் கூடவான்னு சொல்லி கூட்டிட்டு போய் அந்த வீட்டில உட்கார வச்சிடுறேன்.
ஆனா, எனக்கு மூணு நேர சாப்பாடும் இங்க தான். வீட்டு சாப்பாடு தான் எனக்குச் சரிப்படும். விழியனுக்குச் சாப்பிட கொள்ள ஏதாவது ஏற்பாடு செஞ்சுட்டு நான் இங்க வந்துருவேன்.” என்றார்.
இத்தனையும் அவர்கள் வீட்டு மருமகளாக வந்திருக்கும் திவ்யா முன்பு தான் பேசினார்கள். திவ்யா எதுவும் சொல்லாமல் இவர்களின் பேச்சை அடுத்தவர்கள் போல வேடிக்கை பார்த்துக்கொண்டே மதிய உணவை உண்ண சாப்பாட்டு மேஜையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
தன்னிடம் சாவியைக் கொண்டு வந்து மதி கொடுத்ததும், “சரி நீயும் என்கூடவா. அங்க உள்ள புத்தகத்தை எல்லாம் அலமாரியில அடுக்கி பத்திரப்படுத்திட்டு வந்துருவோம்.” என்றார்.
அது அவர்களின் பூர்வீக வீடு. ஒரே பத்தி மட்டும்தான் அதில் இருக்கும். அதன் அக்னி மூலையில் தடுப்பு வைத்து சமையல் அறையாகப் பிரித்திருப்பார்கள்.
காளிதாஸ் சிறு வயதாக இருக்கும் போது அந்தத் தடுப்பு கூட இருக்காது. அப்பொழுது தரை சாணம் போட்டு மெழுகி, சுவரைச் சுற்றி ஒரு ஆள் உயரத்துக்கு மேல் உள்ள பகுதியில், பலகைகள் கம்புகளில் படுக்க வைக்கப்பட்டிருக்கும். அதில் தான் வீட்டுச் சாமான்கள் அடுக்கப்பட்டிருக்கும்.
அந்த அறையின் அக்னி மூலையில் அழகாகச் சாணம் மெழுகி அதில் கோலம் போடப்பட்ட விறகு அடுப்பு இருக்கும்.
அதில் இருக்கும் சமையல் முடிந்த பாத்திரங்கள் கூட அடிப்பகுதி கறி அடுப்பின் காரணமாகக் கருப்பாக இருந்தாலும் மேல் பகுதி சாம்பல் கொண்டு விளக்கி அதில் பட்டையாக விபூதி பூசி அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.
ஆனால் அவர் தலை எடுத்தபின் அந்த வீட்டில் சிமெண்ட் தரை போடப்பட்டுக் கூரை வீடு ஓட்டு வீடாக மாறி இருந்தது.
காளிதாஸின் கல்யாணத்துக்குப் பிறகு அவரின் பத்தினியின் தூண்டுதலில் சிக்கனமாக இருந்து, அவரின் நகையை விற்று வாங்கிய நிலத்தில் காளிதாஸின் உழைப்பில் இப்பொழுது அவர்கள் வசிக்கும் வீடு கட்டப்பட்டது.
ஏனோ புது வீடு கட்டிய பின்பு காளிதாஸ் அந்த வீட்டை லைப்ரரியாக மாற்றிக் கொண்டார்.
அவர்கள் வீட்டை ஒதுக்கும் போது அவர் பொக்கிஷமாகச் சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களை அங்கு அடுக்கி இடத்தை அடைக்கவா என அவரின் மனைவி சுணக்கம் கொண்டார்.
அந்தப் புத்தகங்களுக்காகவும், அவரின் தனிப்பட்ட அரசியல் நண்பர்களுக்கான சந்திப்பிற்காகவும், அவர் செய்ய நினைக்கும் பொது விஷயங்களை மனைவியின் கண் பார்வை விட்டு மறைத்து செய்யவும் அந்த வீட்டை வைத்துக் கொண்டார் காளிதாஸ்.
இப்பொழுதும் அவரின் நண்பர்களுடன் அங்கு நேரம் செலவழிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
ஆனால் முக்கியமானவர்கள் தவிர மற்றவர்களை அந்த ஒரு பத்தி வீட்டின் முன்பு சற்றுப் பெரியதாக இருக்கும் திண்ணையில் அமர்த்திப் பேசியே அனுப்பி விடுவார்.
காரணம் அங்கு வைத்திருக்கும் ஒவ்வொரு புத்தகமும் அவரின் சொத்தாகப் பேணி பாதுகாத்தார். புத்தகத்தின் அருமை மற்றவர்களுக்கு அவ்வளவாகத் தெரியாததால் அவர் யாரையும் அங்கு அனுமதிப்பதில்லை.
உள்ளே ஒரு மேஜையும், மரத்தாலான வயர் பின்னப்பட்ட ஒரு சாய்வு நாற்காலியும், அதைச்சுற்றி சற்று ஒழுங்கில்லாது அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களும், மூலையில் நித்தம் மாற்றி வைக்கப்படும் மண்பானைத் தண்ணீர் மட்டுமே அங்கு உண்டு.
ஓட்டு வெக்கை இறங்காமல் இருக்க அட்டை அடிக்கபட்டிருக்கும் மேற்கூரையில். இவ்வளவு காலம் அதில் யாரையும் புழங்க அனுமதிக்காதவர் இன்று விழியனுக்காக அந்த வீட்டை திருத்தி சுத்தப்படுத்தி அவனுக்குக் கொடுக்க அங்குச் செல்ல நினைத்தார்.
அவர் மதியை கூப்பிட்ட மறுநிமிடம், “என்னங்க நீங்க இன்னும் சாப்பிடலை முதலில் சாப்பிடுங்க.” என்றாள் மதியின் மனைவி திவ்யா.
உடனே வேணியும், “ஆமா வாங்க, சமைத்தது அப்படியே இருக்கு. எல்லாரும் வந்து சாப்பிடுங்க.” எனத் தனது வருத்தத்தைப் புறம் தள்ளிவிட்டு கூறினாள் வேணி.
எல்லோரும் அமைதியாகச் சாப்பிட அமர, திவ்யாவும் மதியுடன் சாப்பிட அமர்ந்துவிட்டதால் வாணியே எப்பொழுதும் போல் மூவருக்கும் பரிமாறினாள். நாலாவதாக இருந்த அந்தச் சேரில் தனது இளைய மகன் அமர்ந்து உண்ணாதது அவளுக்கு வருத்தத்தைக் கொடுத்தது.
மேலும் நடக்கும் நிகழ்வுகளையும் பேச்சுகளையும் கவனிக்கையில் விழியன் இனி இந்தச் சேரில் அமர்ந்து சாப்பிடாமலேயே போய் விடுவானோ என்ற பயம் அவளுக்கு எழுந்தது. உடனே அவரை அறியாமல் கண்ணீர் உற்பத்தியாகி கன்னத்தில் உருண்டு வீழ்ந்தது.
***
----தொடரும்---
அத்தியாயம் 11
மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஊர் ராஜபாளையம். அங்குள்ள ராக்காச்சி அம்மன் கோவில் சிற்றருவி தான் விழியன் தனிமை வேண்டி போகும் இடம்.
இப்பொழுதும் அவனின் இருசக்கர வாகனம் அங்கேயே விரைந்தது. மாந்தோப்புகளுக்கு இடையில் இயற்கை அன்னையின் அழகில் லயித்தபடி பயணம் செய்தவன், எதிர்வரும் சில்லென்ற காற்றைச் சுவாசிக்கும் போதே அவனின் மனம் சற்று நிலை கொள்ள ஆரம்பித்தது.
வழியில் ஓடும் சிற்றோடையில் இறங்கிக் கடந்தே ராக்காச்சி கோயிலுக்குப் போக வேண்டும்.
சுற்றி உள்ள ஊர்களில் இருந்து அந்தக் கோயில் சாமியை குலதெய்வமாகக் கொண்டவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தவும், வாரிசுகளுக்குக் கெடா வெட்டி, முடியிறக்கி, காது குத்தவும் கூட்டம் கூட்டமாக அங்கு வருவார்கள்.
அது வனப்பகுதி, சுற்றுலா தளம் கிடையாது. இருந்தாலும், காலம் காலமாய் அக்கோயிலுக்கு வரும் சுற்று வட்டார மக்களைத் தடை செய்ய முடியவில்லை.
மேற்குத்தொடர்ச்சி மலையில் எங்கோ ஒரு மூலையில் தூரல் விழுந்தால் மாயமாகச் சிற்றோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து, அவ்வோடையைக் கடக்கும் ஆட்களை இழுத்துக்கொண்டு போய்விடும்.
எனவே எப்பொழுதும் அந்தச் சிற்றோடையைக் கடந்து ராக்காச்சி அம்மனையும் சிற்றருவியையும் தரிசிக்கும் மக்கள் ஒரு எச்சரிக்கை மனநிலையிலேயே அங்குப் பயணம் செய்வர்.
விழியன் எப்போதும் தனியாக வரும் வேளைகளில் அருவிக்கரையை நாட மாட்டான். சிற்றோடை அருகில் அமர்ந்து தண்ணீரில் பாதம் நனைய விட்டு சற்று ஆழமான இடம் சென்று முங்கிக் குளிப்பான்.
அங்கு அவனின் முன்னோர்கள் காலத்திலிருந்து வழிவழியாக அவர்களின் கைக்கு வந்திருக்கும் மாந்தோப்புக்கு சென்று, அங்குக் காவலுக்குப் போட்டிருக்கும் சோமுவிடம் பேசி மாங்காய்கள் பறித்து உண்டுவிட்டு வருவது வழக்கம்.
அங்குப் பரம்பரையாகத் தோப்பு வைத்திருப்பவர்கள் ஒன்றும் மிகப்பெரிய செல்வந்தர்கள் கிடையாது.
அதே போல இவர்களின் தோப்புகளைக் கண்டு பெட்டி நிறையப் பணத்தைக் கொண்டு வந்து இவர்களின் வறுமையைச் சாதகமாக்கி வாங்க முயல்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
வாழ்க்கையில் எந்த ஒரு கஷ்டம் வந்தாலும் பரம்பரையாகப் பாதுகாத்துக் கொண்டாடப்படும் அவர்களின் தோப்புகளையும் அதன் நிலங்களையும் யாருக்கும் விட்டுக்கொடுக்கவோ விலை பேசவோ மாட்டார்கள்.
இன்றும் சிற்றோடையில் கால் நனைத்து உட்கார்ந்திருந்தான். ஆனால் முடிவெடுப்பதில் குழப்பமாகவே இருந்தது. தண்ணீரில் முங்கி நீராடி, மண்டைச்சூடு தணித்தால் தான் ஒரு முடிவுக்கு வர முடியும் என நினைத்தான்.
தனது டூவீலரையும், மொபைலையும் தோப்பில் காவல் இருக்கும் சோமுவிடம் ஒப்படைத்துவிட்டுக் குளிக்கலாம் என எழுந்தான்.
அங்குச் சில குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே சிக்னல் கிடைக்கும். வழக்கமாக வரும் அவனுக்கு எந்த இடத்தில் லேசான டவர் கிடைக்கும் எனத் தெரியும். அந்த இடத்தைக் கடக்கும் போது யாராவது போன் செய்திருக்கிறார்களா பாப்போம் என மொபைலை எடுத்தால் கதிரிடம் இருந்து அவனுக்குப் போன் வந்தது.
‘இவனைக் காத்திருக்கச் சொல்லிட்டு நான் பாட்டுக்கு கிளம்பி வந்துட்டேன். திட்ட போறான்.’ என நினைத்தபடி மொபைலை எடுத்தவனிடம், “டேய் எங்கடா இருக்க? நான் கிரஹா மேடம் கூட எஃப்பி மெசெஞ்சர்ல பேசினேன்டா. அவங்க என்ன முடிவெடுத்திருக்கீங்கனு கேட்கிறாங்கடா.
நான் கொஞ்ச நேரத்தில் அவங்களுக்குப் பதில் சொல்றேன்னு சொல்லிட்டு உன்னைத் தேடி உன் வீட்டுக்குப் போனேன். என் கெட்ட நேரம் நீ உன் வீட்டில் இல்லை. அங்க எல்லாரும் என்னை வில்லனை பார்ப்பதுபோலப் பார்த்தாங்கடா!
அதில உங்க அம்மா ஒரு படி மேலே போய் உன்னைய உருப்புடாம போறதுக்கு ஏத்தி விடுறதே நான் தான்னு என்கிட்டயே என்னைய ஜாடையா திட்டுறாங்கடா.
எப்படியோ என்னமோ சொல்லி சமாளிச்சு உங்க வீட்டில இருந்து எஸ் ஆகுறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு. நீ பாட்டுக்கு மாற்றம் வேணும் புதிய களம் அமைப்போம்ன்னு வாட்சப்ல குரூப்ப சேர்த்துப் பசங்களைக் கிளப்பி விட்டுட்ட. ஆனா, வீட்டுல உள்ளவங்களை மீறி எப்படிடா இதெல்லாம் சாத்தியமாகும்?
என்னமோ பெருசா செய்றோம்ன்னு ஒரு பரபரப்பும் இருக்கு. அதே நேரம் ஐயய்யோ இதெல்லாம் எங்கே கொண்டு போய் நம்மளை நிறுத்துமோன்னு பயமாவும் இருக்கு.
டேய் விழியா, இப்போ நீ எங்க இருக்க? இதுக்கு முன்னாடி நான் உனக்கு இரண்டு தடவை ஃபோன் பண்ணினப்போ, யுவர் ஃபோன் இஸ் அவுட் ஆஃப் ரீச்ன்னு வந்தது.” எனப் படபடவெனப் பேசினான்.
“நான் எங்க தோப்புக்கு வந்துருக்கேன் கதிர்.” என்றான் விழியன்.
“டேய் என்னடா திடீர்னு? சரி போகும் போது என்னையும் கூடக் கூட்டிட்டு போயிருக்கலாம்ல! மனுசனாடா நீ? காட்டுக்குள்ள ஒத்தையில போறீயே, உன்னை எல்லாம் பெத்தாங்களா அல்லது செஞ்சாங்களா?
சரி நீ ஒன்னும் குளிக்க வேணாம். அப்படியே யூ டேர்ன் போட்டு இங்க வா. ஒரு வேலையை ஆரம்பிச்சிட்டு என்னைய மட்டும் வாட்சப் குரூப்லேயும், கிரஹா மேடத்துக்கிட்டையும் தனியா மாட்டி விட்டுட்டு நீ எஸ் ஆகப் பார்க்குறயா?
நீ வரல... நான் இப்போ பசங்களைக் கூட்டிட்டு அங்க வந்துருவேன் பார்த்துக்கோ!” என்றான்.
அவன் அவ்வாறு சொன்னதும் சிறிது நேரம் யோசித்தவன், “கதிர், நீ சொல்றதும் நல்லாத்தான் இருக்கு. இன்னும் அரைமணி நேரத்தில் நம்ம வாட்சப் குரூப்பில் இருக்குற பசங்களில் எத்தனை பேரை உன்னால் திரட்ட முடியுதோ அத்தனை பேரையும் கூட்டிக்கிட்டு இங்க வந்துரு.
நேர்ல பசங்க கூட உட்கார்ந்து பேசுனாத்தான் நானு எலெக்சன்ல நின்னா, கூட நிப்பாங்களானு தெரிஞ்சுக்கிட முடியும்.
அதுக்குப் பிறகு முழு மூச்சா எலெக்சன்ல இறங்கிப் பார்ப்போமா வேணாமான்னு முடிவெடுப்போம்.” எனச் சொன்னான்.
“டேய் விழியா, லாஸ்ட் நிமிஷத்தில் வான்னு சொன்னா பசங்க என்ன சொல்வாங்களோ? பேசி பார்த்துட்டு கூப்பிடுறேன்.” எனச் சொல்லிவிட்டு மொபைல் இணைப்பை துண்டித்தான்.
“இவன் பாட்டுக்கு கூட்டிட்டு வான்னு சொல்லிட்டான். என்னத்த சொல்லி இவிங்களை வர வைக்க?” என யோசித்தான்.
‘எலெக்சன் பத்தி பேசுவோம் முடிவேடுப்போம் வாங்கன்னு சொன்னா வருவாங்களா?’ என்ற சந்தேகம் கதிருக்குள் முளைத்தது.
‘ஓடையில் தண்ணி நிறையப் போகுது, மாங்கா சீசன் வேற விழியன் குளிக்க வாங்கடான்னு கூப்பிடுறான். கோழி, மீன் எல்லாம் காட்டுல அவன் தோப்பில் வெந்துகிட்டு இருக்கு வந்து ஜாயின் பண்றவங்க பண்ணிக்கோங்கன்னு சொல்லுவோம்.
அவிங்களையே டூவீலரை எடுத்துட்டு வாங்கன்னு கொளுத்தி போடுவோம். கறிச்சோறு, தண்ணில ஆட்டம்ன்னு சொன்னா, அம்புட்டு பயலும் அடிச்சு புடிச்சிட்டு ஓடி வருவாங்க.’ எனக் கணக்குப் போட்டான் கதிர்.
கதிர் அந்த இருபத்தி ஏழுபேர் கொண்ட வாட்சப் குரூப்பில், ‘ராக்காச்சி அம்மன் கோவிலுக்கு வரணும்னு நினைக்கிறவங்க, அதுவும் இந்தக் குரூப் உறுப்பினர்கள் மட்டும் வரலாம். கூடக் குரூப்பில் இல்லாதவங்களைக் கூட்டிட்டு வர அலோவ்டு இல்லை.’ன்னு மெசேஜ் போட்டு,
கூடவே, ‘விழியன் தோப்பில் மீன், கோழி சமையல் ரெடி ஆகிட்டு இருக்கு. டூவீலர் எடுத்துகிட்டு வரணும்னு நினைக்கிறவங்க சாவடி கிரவுண்டில் அரை மணி நேரத்தில் ஆஜர் ஆகுங்க.’ எனவும் மெசேஜ் டைப் செய்து குரூப்பில் அனுப்பி விட்டான்.
அவன் நினைத்தது போன்றே, ‘என்னப்பா அரைமணி நேரத்தில் வரச்சொல்ற? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, கொஞ்சம் முன்ன பின்ன ஆகலாம். நான் ஜாயின் பண்ணிக்குவேன்.’
‘டேய் மச்சான், நேத்தே சொல்றதுக்கென்ன? அய்யோ நான் இது தெரியாம வேற வேலையில் கமிட் ஆகிட்டேனே! இருந்தாலும் எப்படியும் சமாளிச்சு வந்துருவேன்.’ என்றும்,
‘டேய் கதிர், எனக்கு ரொம்ப நாளா சரக்கு இப்படிப் பசங்களோட சேர்ந்து அடிக்கணும்னு ஆசை. அதுக்கு ரெடி பண்ண முடியுமாடா?’ என்பது போன்ற விதவிதமான மெசேஜ்கள் குரூப்பில் குவிந்தன.
அத்துடன் பசங்க மட்டும் அந்தக் குரூப்பில் இருக்கோம் என்ற நினைப்பில் ஏட்டிக்குப் போட்டியான குளியல் என்ஜாய், தண்ணீர் பார்டியில் என்ஜாய் பண்ணுவது போல் இருக்குற இமேஜ்களும் வாட்சப் குரூப்பில் வந்து குவிந்தன.
இதை எல்லாம் பார்த்த கதிர், ‘அட கொக்கா மக்கா! நேத்துவரை கொள்கை அது இதுன்னு இந்தக் குரூப்பில் பேசிட்டு இருந்தவங்களை இப்படிக் கிளப்பி விட்டுட்டேன்னு விழியனுக்குத் தெரிஞ்சா அம்புட்டுத்தான்.
பிறகு எப்படிப் பசங்களைக் கிளப்பி அங்க கூட்டிட்டு போக. என்னைய கூட்டிட்டு வரச்சொன்னா இப்படித்தான் செய்வேன்.
அங்க போனதுக்குப் பிறகு மாங்காயை மீனாவும் கோழியாவும் நினைச்சு சாப்பிட சொல்லிடணும். குளியல் மட்டும் ஒரு ரவுண்டு பசங்களோடு போய் முங்கி எழுந்துடணும்.’ என எண்ணியபடி பைக்குடன் கிரவுண்டில் போய் நின்றான்.
சரியாக அரைமணி நேரத்தில் இரண்டு இரண்டு பேராகப் பைக்குகளில் வந்து சேர்ந்தனர். ஒரு ஆறு பேரை தவிர்த்து அத்தனை பேரும் வந்து சேர்ந்து விட்டனர்.
“டேய், மாஸ்க் போட்டுக்கோங்க! இரண்டு இரண்டு பைக்கா இடைவெளி விட்டு போகணும். மொத்தமா போனா போலீஸ்காரன்ட மாட்டி கப்பம் கட்டி மீண்டு போக முடியாது.” எனச் சொன்னான்.
கதிர் விழியனுடன் தோப்பிற்கு ஏற்கனவே நிறைய முறை சென்றிருந்ததால் சரியாக அவர்களுடன் அங்குச் சென்று அடைந்தான்.
விழியன் கதிரிடம் பேசிவிட்டு அவனின் தோப்புக்கு சென்ற நேரம், தோப்புக் காவலாளி சோமு இரண்டு காட்டு முயல்களைச் சட்டத்துக்குப் புறம்பாகப் பிடித்துக் கொன்று சமைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தான்.
விழியன் திடுதிப்பென்று அங்கு வரும் விஷயம் அவர் அறிந்திருக்கவில்லை.
“என்ன சோமு இப்படி? தெரிஞ்சா பிரச்சனை ஆகிடும்.” என்று அவரின் செயலை கண்டு லேசாக அதட்டல் போட்டான்.
அதற்குச் சோமுவோ, “தம்பி, நான் காட்டுக்குள்ள வேட்டைக்குப் போகலை. நம்ம தோப்புக்குள்ள வந்துச்சு பிடிச்சு அடிச்சிட்டேன். கழிவுகளை எல்லாம் தென்ன மரத்துக்கு உரமா போட்டுப் புதைச்சிட்டேன்.
இல்லன்னா நைட்டு விலங்குகள் இரத்த வாடைக்கு இங்க வந்துரும். நீங்க வந்ததும் நல்லது தான்.
இரண்டு முயலும் சேர்ந்து எப்படியும் நாலு அஞ்சு கிலோ கறி தேறும் நான் ஒருத்தனா எப்படிக் காலி பண்ணன்னு யோசனை பண்ணிட்டு இருந்தேன்.” எனச் சொன்னார்.
அவர் அவ்வாறு சொன்னதும் விழியன் யோசித்தான். ‘பசங்களைப் பார்ட்டி, விருந்து அப்படின்னு ஏமாத்தி ஆசை காட்டி தான் இந்தக் கதிர் கூட்டிக்கொண்டு வருவான்.’ எனப் புரிந்து வைத்திருந்தான்.
காட்டுச் சூழலுக்குப் பழக்கம் உள்ள சோமு இவர்களின் காட்டில் காவலாளியாகப் பணியில் அமர்ந்திருப்பவர்.
இரவு அங்குக் கட்டி வைத்திருக்கும் ஒற்றை மோட்டார் ரூமில் தங்கி கொள்வார். அந்த அறை சற்றுப் பெரியதாக இருக்கும். அதில் சமையலுக்குத் தேவையான சட்டி, பானை, கொஞ்சம் மசாலா சாமான்கள் எல்லாம் வாங்கி வைத்திருப்பார்.
எனவே விழியன் அவரிடம், “சோமு ஒரு இருபது பசங்க இங்க வருவாங்க. உங்களால இந்தக் கறியை வச்சு அவங்களுக்கும் சேர்ந்து சாப்பாடு ரெடி பண்ண முடியுமா?” எனக் கேட்டான்.
இவன் கேட்டதும், “நான் ஆக்கிருவேன் தம்பி. ஆனா, நம்ம சமையல் புடிக்குதோ என்னமோ? இருந்தாலும் நீங்க சொல்லி செய்யாம இருப்பேனா? தெரிஞ்ச அளவு சமைச்சு வைக்கிறேன். பசங்க நம்ம தோப்புக்கு வராங்க, நாம தான கவனிக்கணும்.” எனச் சொல்லி சமையலில் மும்முரமாகி விட்டார்.
ஆர்பாட்டமாக இரண்டு இரண்டு பேரை சுமந்தபடி ஒன்பது பைக்குகளில் ஒன்றன் பின் ஒன்றாக வந்து இறங்கினர்.
சோமுவிற்கு உதவியாகச் சமைக்கத் தண்ணீர் பிடித்துக் கொடுத்து, தனக்குத் தெரிந்த அளவில் வெங்காயம் அரிந்து கொடுக்க என்று பிசியாக இருந்தான் விழியன்.
வந்து இறங்கியதும் கதிர் விழியனிடம், “டேய் என்னமோ சமையல் எல்லாம் நடக்குது? நான் கூடப் பசங்களை வரவைக்கிறதுக்கு ஒரு பேச்சுக்குத்தான் இங்க கோழி, மீன் எல்லாம் வெந்துகிட்டு இருக்குன்னு சொன்னேன். ஆனா, உண்மையிலேயே இங்க கறி வேகுது!” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டு, “ஹாஹாஹா... உன் புத்தி எனக்குத் தெரியும் கதிர். அதுதான் காட்டில் இரண்டு வளர்ப்பு முயல் இருந்தது. அதை அடிச்சுப் பசங்களுக்குத் தெரிஞ்ச அளவு சோமுவை சமைக்கச் சொன்னேன்.” என்றான்.
காட்டு முயலைப் பிடித்து அடித்தோம் எனத் தெரிந்தால், அதுவும் தான் அரசியலில் இறங்கும் இந்த நேரம் தெரிந்தால், அதுவே பின்நாளில் இஸ்யூ ஆகும் எனப் புரிந்து சாணக்கிய அவதாரம் பூசிக்கொண்டான் விழியன்.
அருகில் இருந்த சோமு அவன் அவ்வாறு சொல்லவும், ‘அப்படியா?’ என்னும் விதமாக அவனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார்.
‘ஆமா! அப்படித்தான், நீயும் சொல்லணும்.’ என்ற கட்டளையைக் கண்களால் அவருக்குப் பிறப்பித்தான்.
அவரும் அவன் வார்த்தையை மறுத்துக் கூறாமல், ஆமாம் என்னும் விதமாக அமைதியாகி விட்டார்.
ஆனால், கதிரைத்தான் கூட வந்த நட்பு வட்டம் வார்த்தையால் வறுத்து எடுத்தனர். “டேய் மீன் ஃபிரை, கோழி குருமா, குஸ்கா அப்படி எல்லாம் சொல்லி ஆசை காட்டிட்டியேடா! நாங்களும் அத்தனையும் சாப்பிடுறது போலக் கனவு கண்டுட்டு வந்தா அம்புட்டும் பொய்யா?” எனக் கோபத்துடன் கதிரிடம் எகிறினர்.
உடனே கதிர், “நான் என்ன பண்ண? எலெக்சன்ல நிக்கிறது பத்தி எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து பேசி முடிவெடுக்கணும்ன்னு உங்களை எல்லாம் கூட்டிட்டு வாங்கன்னு காட்டுக்குள்ள இருந்து இவன் சொல்றான்.
அதுதான், இப்படிச் சொன்னாத்தான் எல்லோரையும் வேகமா திரட்டி இங்க இழுத்திட்டு வர முடியும்னு பொய் சொன்னேன்டா. நண்பனுக்காக இந்தப் பொய் கூடச் சொல்லக் கூடாதா?” என்று பொய்யாக வருந்துவது போல நடித்தான்.
அப்பொழுது சோமு வந்தவர்களிடம், “தம்பிகளா, மீன், கோழி கூட ஊருக்குள்ள கிடைக்கும். ஆனா, இப்படிக் கிடைக்கிறதை வச்சு இயற்கையான சூழல்ல விறகு அடுப்புல வெறும் உப்பு மிளகா போட்டு சமைச்ச இறைச்சி கிடைக்கிறது தான் கஷ்டம். நீங்க போய்க் குளிச்சிட்டு வாங்க. அதுக்குள்ள கறி நல்லா பதமா வெந்துரும்.
நானும் உங்களுக்குச் சாப்பிட பரிமாற நம்ம தோப்புல நல்லா பெருசான தேக்கு இலைகளா பார்த்து பறிச்சு வச்சிடுவேன்.” என்றார்.
அப்போது விழியன், “குளிக்கப் போகலாம். ஆனா, அதுக்கு முன்ன... நான் எலெக்சன்ல நின்னா என்கூடச் சேர்ந்து களத்துல இறங்கி வேலை பார்க்க எத்தனை பேர் ரெடியா இருக்கீங்க? அதைச் சொல்லுங்க கேப்போம்.
நான் எலெக்சன்ல நிக்கிறதுக்குக் காரணம்…” கடை லீசுக்கு எடுக்குற விஷயமா எம்.எல்.ஏ அகத்தியனை பார்க்கப் போனதில் இருந்து அங்கு நடந்த அகத்தியன் அவனது கட்சி ஆள்களிடம் நடத்திய பேச்சை கேட்டதும்,
அதனால அகத்தியன் போன்ற ஆட்கள் இனிமே பதவிக்கு வரக்கூடாதுன்னு பூபதி ராஜாவை பார்க்க போனதும் அவர் விழியனையே எலெக்சன்ல நிக்கச் சொல்லி சொன்னதும்,
அவரின் தங்கையான கிரஹா மேடம், அவங்க டிரஸ்ட் மெம்பர்ஸ், லேடீஸ் கிளப் மக்களை எல்லாம் திரட்டி தனக்கு எலெக்சன்ல சப்போர்ட் பண்ணுவதாகவும், அதற்கான ஆலோசனையும் பின்னால் இருந்து செய்து தருவதாகக் கூறியது முதற்கொண்டு சொல்லி முடித்தான்.
அவன் சொல்லி முடித்ததும் வந்திருந்த நண்பர்களில் பெரும்பாலானோர், “சரி தான்டா! இனி இங்க அது போல அரசியல்வாதி வரக்கூடாதுடா.” என்று சொன்னார்கள்.
அவ்வாறு சொல்வதைக் கேட்ட விழியன், “வரக்கூடாது தான். ஆனால், ராஜபாளையம் அதைச் சுற்றி இருக்கிற பஞ்சாயத்து எல்லாம் சேர்ந்து தான் நம்ம ஊர் தொகுதி.
எல்லா ஏரியா மக்களும் இருக்காங்க. பெரும்பான்மையா உள்ளவங்களுக்கு நான் யாருன்னே தெரியாத நிலையில என்னை எப்படி ஆதரிப்பாங்க? ஆனா, அவங்களை ஆதரிக்க வைக்கணும் அதுக்குப் பிரச்சாரம் பண்ணனும்.
அது ஒன்னும் அத்தனை ஈசி இல்லை. ஒவ்வொரு ஏரியாவில் இருக்குற நமக்குத் தெரிஞ்ச பசங்க மூலம் அங்க இருக்குற பெரிய ஆட்களைப் பிடிச்சு மக்கள் முன் அறிமுகமாகணும்.
நிறைய வேலை இருக்கு. ஏரியா வாரியா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பக்கம் கவனிச்சுக்கணும். நிறைய எதிர்ப்பு வரும், கேலி கிண்டல் வரும், எதிர்மறை கருத்து வரும் அத்தனையும் சமாளிச்சு நிக்கணும்.
குறிப்பா வெற்றி, தோல்வி இரண்டையும் ஏத்துக்குற மனநிலை இருக்கணும். ஆனா, தோல்வியை நினைச்சு தளர்ந்து போகாத தன்மை நம்ம ஒவ்வொருத்தர் கிட்டயும் இருக்கணும்.
தூய அரசியல் களப்பணி மட்டுமே நம்மளோட முதல் நோக்கமா இருக்கணும். இது இந்தத் தேர்தலோட முடிஞ்சு போயிடக் கூடியதா இருக்கக் கூடாது.
எப்பவும் மக்களுக்கான களப்பணியில் முன்னாடி இருக்கிற ஒரு டீமா இருக்கணும். இத்தனையும் மனசில வச்சுகிட்டு என்கூட நிக்கப் போறது யார் யாருன்னு சொல்லுங்க.” என்றான்.
அவன் தீவிரமாக இதெல்லாம் பேசவும் நண்பர்களுக்குள் சலசலப்பு அடங்கி ஓர் ஆழ்ந்த அமைதி உண்டானது. உள்ளூரில் வேலை பார்க்கிற நான்கு பேர் முதலில் முன் வந்தனர்.
“எங்களுக்கு உன்னைத் தெரியும் விழியா. எப்பவும் நியாயமா இருப்ப, யாருக்கு ஒரு பிரச்சனை என்றாலும் முன்ன நிப்ப நீ. நாங்க உன் பக்கம் எப்பவும் நிப்போம் விழியா.” என்றனர்.
அவர்கள் அவ்வாறு சொன்னதும் இன்னும் ஒரு ஆறு பேர் சேர்ந்து, “விழியா, நீ என்ன செய்யன்னு சொல்லுடா. நீ சொல்றதை செய்வோம். நமக்குள்ள ஒருத்தர் இதுபோலக் காரியம் செய்யணும்னு நினைக்கும்போது நாங்க பக்கப்பலமா இருப்போம்டா.” என்றனர்.
அப்படியே எல்லோரும் ஒன்றன்பின் ஒன்றாக விழியனின் பக்கம் நிற்பதாகக் கூறி ஒன்றிணைந்தனர். அதன் பின் ஒவ்வொருவரும் தேர்தலை எதிர்கொள்ளத் தங்களது கருத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தனர்.
ஆனால், கதிர் மட்டும் நைசாக நழுவி, அந்த மோட்டார் ரூமின் வெளிப்புறத் திண்ணையில் சோமு ஆக்கி வைத்திருந்த முயல்கறியை தேக்கு இலையில் பரிமாறிக் கொண்டு, தனியாக ருசி பார்க்கிறேன் என்ற சாக்கில் உண்டு கொண்டிருந்ததை நண்பர்கள் கவனித்து விட்டனர்.
“டேய் அங்க பாருடா! அவன் மட்டும் மொக்கிகிட்டு இருக்கான்.” எனச் சொல்ல,
அவனை நோக்கி, “ஏலேய் மாப்ள! எங்களை எல்லாம் விட்டுட்டு நீ மட்டும் திங்கிறியே, உன்னை எல்லாம்...” என்று திட்டிக் கொண்டே அவனை நோக்கி ஓடி வந்தனர்.
கதிரோ சத்தமாக,
“மென்புலத்து வயல் உழவர்
வன்புலத்துப் பகடு விட்டுக்
குருமுயலின் குழைச் சூட்டோடு
நெடுவாளை அவியல்.
முல்லை நிலத்தில் தன் எருதுகளை மேயவிட்டு, சிறிய முயலின் குழைவான இறைச்சியோடும், பல்வேறு வகை அவியல்களோடும் பழைய சோற்றை உண்ண மறுத்த நிலா உழவன் பற்றிய புறநானூறு பாடல்டா இது.
சங்க காலத்தில இப்படி எல்லா வகை இறைச்சிகளையும் நம்ம தமிழ் மக்கள் ரசித்து உண்டதுக்கான பாட்டை அதோட சூழ்நிலையோட பாடி இருக்காங்கடா!
டேய் எவனும் என்கிட்ட வரக்கூடாது. அப்படி என்கிட்ட வந்து கறியில கை வைக்கணும்னா என்னைய தோக்கடிக்கணும்டா!
ஆடு, கோழி, மீன் இன்னும் என்னென்ன கறி இருக்கோ, அதில் ஒரு பேரை சொல்லுங்க. நான் சங்க கால நூலில் வந்த பாடலுடன் அந்தக் கறி எந்தச் சூழலில் புசிக்கப்பட்டதுன்ற விவரத்தை டான் டான்னு சொல்லுவேன்.
அப்படிச் சொல்ல முடியாம நான் தோத்து போயிட்டா இன்னைக்கு நான் பட்டினி. என்னைப் பார்க்க வச்சு நீங்க சாப்பிடலாம்!” என்றான்.
***
---தொடரும்---
அத்தியாயம் 9.2 &10
அப்பொழுது பூபதிராஜாவின் கைபேசி ஒலி எழுப்பியது அதை எடுத்து டிஸ்பிளேயை பார்த்தவர், “அலாரம் வச்சிருந்தேன், எனக்கு மில்லில் ஒரு முக்கியமான வேலை இருக்கு. நீங்க ஒரு முடிவெடுத்துட்டு என்னோட ஹெல்ப் வேணும் என்றால் கேளுங்க, கட்டாயம் செய்றேன்.” என எழுந்துகொள்ள முனைந்தபோது,
விழியன் கிரஹாவை பார்த்து, “மேடம் நீங்களும் மாற்றத்தை எங்களைப் போல எதிர்பார்க்குறீங்கன்னு சொன்னதும், எங்களோட வொர்க் பண்ண முன்வந்ததும் கேக்க சந்தோசமாய் இருக்கு. நாங்க முடிவெடுத்துட்டு நாளைக்கே என்னோட பதிலை உங்களுக்குச் சொல்றேன்.” என்றான்.
அவன் நேரடியாகத் தனது தங்கையிடம் பேசவும், ‘நானே உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்கிறேன்.’ எனச் சொல்ல நினைக்கும் முன் கிரஹா வாய் திறந்தாள்.
“இதோ இது எங்க டிரஸ்ட் விசிடிங் கார்ட். இதில் என்னோட மொபைல் நம்பர் இருக்குது பாருங்க. உங்க பதிலை அதில் இருக்கிற என்னோட நம்பருக்குக் காண்டாக்ட் செய்து சொல்லுங்க.”
என்று அவர்களின் எதிரில் இருந்த அந்த மரத்தினால் செய்யப்பட்ட டீபாயில், ஒரு அழகிய பேழையில் விசிடிங் கார்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்ததில் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினாள் கிரஹா.
அதனால் தான் சொல்ல வந்த வார்த்தைகளைச் சொல்லாமல் விழுங்கி கொண்டார் பூபதிராஜா. ‘பாவம் சின்னப் பசங்க. அதுவும் காளிதாஸ் அய்யாவோட பேரன். ஊருக்கு நல்லது நடக்கணும் என்று அந்த அய்யாவை போலவே மனசு உள்ள நல்ல பிள்ளையா இருக்கான்.
அதேபோல எனக்கு நல்லா தெரிஞ்சவங்க, நல்ல பசங்கலாய் இருப்பாங்கன்ற நினைப்பில் கிரஹாவும் அவங்க கூடச் சகஜமா பேசுறாள்.
காலையில் சாந்தா பேசியதை வைத்து அவளைப் போல நானும் யோசிக்க ஆரம்பிக்கிறது தப்பு’ என அவருக்கு அவரே மனதினுள் சமாதானம் சொன்னபடி இருவருக்கும் விடை கொடுத்தார்.
***
ஸ்ரீராம் தண்ணீர் லாரியின் முன் முண்டி அடித்துக்கொண்டு தண்ணீர் பிடிக்க நின்றுகொண்டிருந்த மக்களிடம், “வரிசையா வாங்க. அப்போதான் தண்ணீர் சப்ளை பண்ண சொல்லுவேன். நம்ம எம்.எல்.ஏ வை பார்த்து நாங்க தான் நம்ம ஏரியாவில தண்ணீர் வரலைன்னு சொல்லி வண்டி தண்ணி அனுப்ப சொல்லி பேசினோம்.
சொன்னதுமே அவர் போன் செய்து வண்டி இன்னைக்கு வந்திருக்கு.
ஒழுங்கா வரிசையில் சண்டை சச்சரவு இல்லாம பிடிச்சா ஆற்றில் தண்ணி நமக்கு வந்து முனிசிபல் தண்ணி வரும்வரை வண்டி தண்ணி கிடைக்க ஏற்பாடு பண்ணுவேன்.
இல்லைன்னா நானே தண்ணி வண்டி அனுப்பினா ஒரே சண்டையா இருக்கு வேணாமுன்னு சொல்லிடுவேன், வரிசையா நில்லுங்க.” எனச் சொல்லிக் கொண்டிருந்தான்.
அந்த நேரம் அங்குப் பூபதிராஜா வீட்டில் இருந்து கிளம்பி டூவிலரில் தங்கள் தெருவுக்குள் நுழைந்த விழியனும் கதிரும், தண்ணி வண்டி நிற்பதையும் அங்கிருக்கும் மக்களைத் தனது வார்த்தையால் தண்ணீர் பிடிக்க வரிசையில் ஒழுங்குபடுத்தும் ஸ்ரீயையும் பார்த்தனர்.
“டேய் விழியா, இப்போ இவனை எப்படிச் சமாளிக்க? எம்.எல்.ஏ வேற தண்ணி வண்டி அனுப்பிட்டான் போல. அப்போ இவன் எம்.எல்.ஏவுக்கு ஆதரவா மக்களிடம் பேச ஆரம்பிச்சிருப்பானே. நம்மளையும் அவனோட கூட்டு சேர்ப்பான். எப்படி இதை டீல் பண்ண போற?” எனக் கதிர் விழியனிடம் கேட்டான்.
“யதார்த்தத்தைப் பேசுவோம் கதிர், நீ என்கூட நில்லு. மத்ததை நான் கவனிச்சுக்கிறேன்.” எனச் சொன்னான் விழியன்.
இவர்கள் இருவரும் பைக்கில் லாரியின் அருகில் சென்றதும், அந்தச் சூழலில் லயித்திருந்த ஸ்ரீராம் தற்செயலாக அங்கு வந்த பைக்கை ஏறிட்டுப் பார்த்தான்.
“டேய் எங்கடா போயிட்டீங்க இரண்டு பேரும்? உங்க மொபைல் கூட ஸ்விச் ஆஃப் ன்னு வந்தது.” என்றான்.
அப்பொழுது கூட்டத்தில் இருந்து சத்தமாக, “என்ன ராஜம்மாக்கா, உங்க வீட்டில மொத்தமே மூனு பேரு தான் உங்களுக்கும் மூனு கொடம் தண்ணி. எங்க வீட்டுல ஏழு பேரு, எங்களுக்கும் மூனு கொடம் தண்ணின்றது எப்படி நியாயம் ஆகும்?” எனக் கேட்டார் ஒரு பெண்.
அதற்கு அந்தப் பெண், “அதெல்லாம் தெரியாது வசந்தியக்கா! வீட்டுக்கு மூனு கொடமுன்னுதான் சொல்லி இருக்காங்க. நீங்களும் மூனு கொடம் தான் பிடிக்கணும்.” என்று சொல்ல,
வசந்திக்கு பரிந்து கொண்டு நாலுபேரும் ராஜம்மாவுக்குப் பரிந்து கொண்டு நாலு பேரும் பேச அங்குச் சண்டை மூளும் சூழல் வந்தது.
“அதோ விழியன் வந்துட்டான் அவனே இதுக்கு ஒரு முடிவு சொல்லட்டும்.” எனக் கூறி, விழியனையும், கதிரையும் நிறுத்தினர்.
பேசிக்கொண்டிருந்த ஸ்ரீராமை பொருட்படுத்தாது, “எப்பா விழியா... இங்க பாரு, உங்க சின்ன அத்தை ராஜம்மா பேசுறதை!” என்று பஞ்சாயத்து பண்ண அவனை அழைத்தாள் வசந்தி.
சற்று நேரம் தான் கவனமில்லாமல் ஃபோனை பார்த்துவிட்டு, விழியன் பைக் வரவும் அவனை நிறுத்தி பேச ஆரம்பித்ததில் ஒழுங்குபடுத்தி வைத்திருந்த வரிசை குழம்பி, அங்குக் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதைக் கண்டு கடுப்பாகி அவன் பேசுவதற்குள் விழியன் அவர்களிடம்,
“என்ன அத்தே! அவங்க சின்னத்தைன்னா நீங்க எனக்குப் பெரியத்தைதானே. இப்போ என்ன, யார் எத்தனை குடம் தண்ணி பிடிக்கணும்றதுதானே பிரச்சனை?
வசந்தி அத்த, உங்க வீட்டுல இரண்டு குடும்பம் இருக்கு. நீங்களும் உங்க சின்ன மகனும் ஒரு குடும்பம். உங்க பெரிய மகனும் அவன் பொண்டாட்டி புள்ளங்க ஒரு குடும்பம்ன்னு ஆக மொத்தம் இரண்டு குடும்பம் இருக்கு உங்க வீட்டுல. அதனால நீங்க மூனு குடம், உங்க மருமக மூனு குடம் பிடிச்சுக்கோங்க.
ராஜம்மா அத்தை, நாளைக்கு உங்க மவனுக்குக் கல்யாணம் ஆன பின்னாடி நீங்க ஒரே வீட்டில இருந்தாலும் ஆறு குடம் பிடிச்சுக்கலாம். ஆனா, அதுவரை நீங்க ஒரே குடும்பம்தான் இப்போ மூனு குடம் மட்டும் புடிச்சுக்கோங்க.” எனச் சொன்னான்.
விழியன் பேசும் முன்பு வரை ராஜம்மாவுக்குச் சப்போர்ட்டாகக் கிளம்பிய கூட்டம் அதன் பின், “விழியன் சொல்றதும் சரிதான்!” எனச்சொல்லி வசந்தியின் பக்கம் பேச ஆரம்பித்ததும் ராஜம்மா முணுமுணுத்துக் கொண்டே வேறு வழி இல்லாமல் வசந்தி ஆறு குடம் தண்ணீர் பிடிப்பதை பார்த்துக் கொண்டு நின்றார்.
அப்போத்து அங்கிருந்த நெட்டை பால்பாண்டி என்று எல்லோராலும் அடையாளப்படுத்தப்படும் நபர்,
“எப்பா விழியா, நீங்க மூனு பேர் போய் எம்.எல்.ஏ வை பார்த்து பேசி தெருவுக்குத் தண்ணிய கொண்டு வந்துட்டீங்களே, நல்ல வேலை செய்தீங்கப்பா. பொறுப்பான புள்ளைங்கதான்!
காளிதாஸ் அய்யா இரத்தம்ல அதுதான் ஊரு காரியத்துல பொறுப்பா இருக்கீங்க.” என்றார்.
அப்பொழுது ஸ்ரீராம், “பார்த்தீங்கல்ல, நம்ம எம்.எல்.ஏ அகத்தியன்றதால போய்ப் பார்த்துப் பேசி தண்ணி வண்டி தெருக்குள்ள வரவைக்க முடிஞ்சது. வேற யாரும் எம்.எல்.ஏவா இருந்தா இப்படிச் செய்ய வைக்க முடியாது. அதனால இந்தத் தடவை எலெக்சன்லையும் அவருக்கே ஓட்ட போடுங்க.” என்றான்.
அவன் அவ்வாறு சொன்னதும், “ஏ நெட்டை பால்பாண்டி நீ வேறப்பா, ஓட்டு போட்டு அந்த ஆளை எம்.எல்.ஏவாக்கி ஐந்து வருஷம் முடிய போகுது. இதுவரை தொகுதிக்குள்ள எட்டிக்கூடப் பார்க்கலை அந்த ஆளு.
இன்னும் இரண்டு நாளில் தேர்தலுக்கு மனு தாக்கல் பண்ண போறாங்க. அப்போ ஓட்டு கேட்டு எந்த மூஞ்சியை வச்சு கிட்டு வரன்னு நினச்சு இப்போ தண்ணி வண்டி அனுப்பியிருக்கார்.” என்றார் மற்றொருவர்.
அந்த ஆளிடம் ஸ்ரீராம், “நீங்க எதிர்கட்சி ஆளுன்றதால எல்லாத்தையும் குதர்க்கமாவே பார்க்காதீங்க அண்ணே!” என்று கூறினான்.
அதற்கு விழியனோ, “அடிப்படை வசதி தண்ணி. அதைச் செய்து தருவது தொகுதி எம்.எல்.ஏவோட வேலை.
இதில் அவரைப் புகழணும்னு இல்லை தூத்தணும்றதும் இல்லை. நமக்குத் தண்ணி தேவை. தேவை நிறைவேற்றும் இடத்தில் இருந்து தேவை கிடைச்சிருக்கு அம்புட்டுத்தான்.
சரி கக்கூசுக்கு தண்ணி அடிச்சு திறந்து விட்டுட்டாங்களா?” எனக் கேட்டான் விழியன்.
“ம்... அது கக்கூசுக்கு விடிகாலை ஆறு மணிக்கே தண்ணி வண்டி அடிச்சுட்டாங்க.” என்றான் ஸ்ரீராம்.
அவனிடம், “நீ இங்க கவனிச்சுக்கோ ஸ்ரீராம். நாங்க இரண்டுபேரும் காலையில் இருந்து இன்னும் சாப்பிடலை, சாப்பிட்டுட்டு வாரோம்.” எனச் சொன்னான் கதிர்.
“அது சரிடா, காலையிலேயே எங்க போனீங்க? என்கிட்ட கூடச் சொல்லாம?” எனக் கேட்டவனிடம்,
“வந்து சொல்றோம்டா... இப்போ நாங்க கிளம்புறோம்.” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டனர் விழியனும், கதிரும்.
விழியனின் வீட்டு வாசலில் இறங்கிக் கொண்ட கதிர், “டேய் அந்தக் கிரஹா மேடம் சப்போர்ட் பண்ணுறேன்னு சொல்றதுக்காகவே எலக்சன்ல நீ நிக்கலாம்டா. என்ன பொண்ணு அவங்க! என்னமா அறிவா போல்டா பேசுறாங்க! என்ன ஒரு அழகு!” என்றான்.
“டேய் கதிரு அடங்குடா, உனக்கு ஒரு மணி நேரம்தான் டைம். நம்ம பசங்க யார் யாரை குரூப்பா திரட்டலாம். சீக்ரட்டா பேசி முடிவெடுக்கலாம்னு நான் ஒரு லிஸ்ட் எடுத்துட்டு உன்கிட்ட பேசுவேன். அதுக்குள்ள நீ சாப்பிட்டு வேலை எல்லாம் முடிச்சிட்டு என் வீட்டுக்கு வர.” என்றான்.
அவன் அவ்வாறு சொன்னதும் கதிர், “ஆமா ஆமா, முடிவெடுத்து கிரஹா மேடம்ட்ட சொல்லணும்ல. நீ யார் யார் கிட்ட நாம பேசலாம்ன்ற டீடெய்ல் ரெடி பண்ணு. நான் கிரஹா மேடம் பத்தியும் அவங்களை எப்ஃபி, டிவிட்டர் அக்கவுண்டில் எப்படி ஃபாலோ பண்ணலாம்ன்னு பார்க்குறேன். முடிஞ்சா பிரண்ட் ரெக்வஸ்ட் அனுப்பிட்டு வாரேன்.” என்றான்.
“டேய் கதிர், ஓவரா போரடா! நீ விளையாட்டா பேசுறன்னு எனக்குத் தெரியுது. ஆனாலும் அவங்க கூட நாம செய்யப்போற களப்பணி பெரிசு. அதுக்குத் தக்கன மெச்சூர்டா இல்லாம இருந்தா அவங்களுக்கு நம்ம மேல நல்ல அபிப்ராயம் இல்லாம போயிடும். கொஞ்சம் அடக்கிவாசி” எனச் சொல்லிவிட்டு வீட்டினுள் சென்று விட்டான் விழியன்.
***
அத்தியாயம் 10
கதிர் குளித்து முடித்துத் தனது மடிக்கணினியில் மெயில் எதுவும் வந்துள்ளதா எனப் பார்க்க நினைத்தான்.
அப்போது அவனின் மனதில், கிரஹா மேடத்தைத் தான் சோசியல் மீடியாவில் பாலோ செய்யப்போவதாக விழியனிடன் சொல்லி வந்தது நினைவில் ஆட அவனின் முகநூல் பக்கத்தைத் திறந்தான்.
தேடும் கட்டத்தினுள் கிரஹாவின் பெயரில் அவளின் முகநூல் பக்கத்தைத் தேடி பார்த்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அதே நேரம் செவ்விழியன் வாட்சப்பில் தனக்கு நெருக்கமான முக்கிய நண்பர்கள் உள்ள ஒரு குழுவை கட்டமைத்துக் கொண்டிருந்தான்.
அதில் அவன் திரட்டும் நபர்களிடம், அரசியல் மாற்றம் விரும்புபவர்கள் மட்டும் மற்றொரு புது வாட்சப் குரூப்பின் லிங்க் அதில் கொடுத்து, அதில் குதிக்குமாறு இன்ஸ்ட்ரக்சன் கொடுத்தான்.
அவ்வாறாக மாற்றத்தை விரும்பும் வெறும் இருபத்தி ஏழு பேர்களை மட்டுமே அவனால் அப்போதைக்கு அந்தக் குழுமத்தில் இணைக்க முடிந்தது.
அந்த நேரம் மதி தனது அம்மாவிடம், “விழியன் வந்துட்டானாம்மா? அவன்ட்ட பைக் கீ வாங்கணும். நான் கொஞ்சம் வெளியில் போக வேண்டியிருக்கு.” என்றான்.
“அவன் வந்தாச்சு. இப்போ எதுக்குத் தேவையில்லாம நீ வெளியில போற? கொரோனா நேரத்தில் வெளியில நீ போறன்னு தானே உன் மேல திவ்யா கோபப்படுறா. உன்னோட பிரண்ட்ஸ் கூடப் போன்ல பேசு அது போதும்.
உன் தம்பி உள்ள போனை நோண்டிட்டு இருக்கான். நீ போய்ப் பேசி அவன் மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்கான்னு தெரிஞ்சுகிட்டு வந்து என்கிட்ட சொல்லுடா.
இரண்டு பேரையும் ஒரே போலத்தானே பெத்து, நல்லது கெட்டது சொல்லி வளர்த்தேன். ஆனா, அவன் மட்டும் ஏன்டா இப்படிச் சொல் பேச்சு கேக்காம அடங்காம இருக்குறான்?” என்றாள்.
விழியன் தனது தாத்தாவின் அறையில் உள்ள மேஜை முன்பிருந்த சேரில் அமர்ந்து, நண்பர்களை வாட்சப் குரூப்பில் இணைக்கும் வேலை செய்து கொண்டிருந்த போது அவனின் அண்ணன் மதி அங்கு நுழைந்தான்.
“டேய் விழியா எங்கடா போன? அம்மா நீ கலையில எழுந்ததும் சாப்பிடாம செய்யாம, வீட்லையும் யார்கிட்டயும் சொல்லாம ஊர் சுத்த போயிட்டன்னு ஒரே வசவு. அப்படி எங்க போன நீ?” எனக் கேட்டான்.
“முக்கியமான ஒருத்தரை பார்க்க போனேன் மதி, நீ சாப்பிட்டியா? எத்தனை நாள் லீவுக்கு வந்திருக்க. அண்ணி எங்க, மாடியில தான் இருக்காங்களா?” என அவனின் பேச்சை திசை திருப்ப முனைந்தான்.
“டேய் நல்லவனே எதுக்குப் பேச்சை மாத்துற? முக்கியமானவங்களா! எனக்குத் தெரியாம யாருடா அந்த முக்கியமானவங்க?
சென்னையில் வேலைக்குப் போகமாட்டேன்னு சொல்லிட்டியாமே. இங்க இருந்து என்னடா பண்ணப்போற?” என அவனுக்குப் பக்கவாட்டில் இருந்த கட்டிலில் அமர்ந்தபடி கேட்டான் மதி.
அவன் அவ்வாறு கேட்டதும், ‘இன்னைக்கு இல்லைன்னாலும் இன்னும் இரண்டு நாளில் எலெக்சன் வேலை ஆரம்பிக்கும் போது வீட்டுக்கு தெரிஞ்சுதானே ஆகணும். இன்னைக்கே மதிக்கிட்ட சொல்லிடலாம்.’ என நினைத்து சற்று நேரம் அமைதியாகிவிட்டான்.
எதுவோ தன்னிடம் பெருசாகப் பேச போறான் என்று அவனின் ஆழ்ந்த சிந்தனை தோய்ந்த முகத்தைப் பார்த்தே உணர்ந்தவன் சொல்லட்டும் கேப்போம் என மதியும் பொறுமை காத்தான்.
“மதி, நான் எலெக்சன்ல நிக்கப் போறேன்.” எனச் சொன்னான் விழியன்.
“என்னடா சொல்ற! போச்சு போச்சு... உனக்கு யாருடா இப்படி எல்லாம் யோசிக்க ஐடியா கொடுத்தாங்க?”
என்ன பேக்ரவுண்ட் நம்மகிட்ட இருக்குதுன்னு நினச்சு நீ அரசியலில் இறங்க போற? இருக்குற கொஞ்ச நஞ்ச நிம்மதியும் இல்லாம போயிடும்டா!
என்கிட்ட நீ எலெக்சன்ல நிக்கப்போறேன்னு சொன்னதை அம்மா அப்பாகிட்ட நான் சொன்னேன்... அம்புட்டுத்தான் உன்னைய உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாங்க.
நீ அப்பாவை போலக் கடை எடுத்து நடத்த போறேன்னு சொன்னதே அம்மாவுக்குப் பிடிக்கலை.
இருந்தாலும் தாத்தாவும் அப்பாவும் அவங்களைச் சமாதானப்படுத்துனதுனால அதையாவது உருப்படியா செய்யட்டும்னு சமாதானமாகி இருக்காங்க. இப்போ இது மட்டும் தெரிஞ்சது அம்புட்டுத்தான்! வீட்டுல ஒரு கலவரமே நடக்கும்! விழியா, ஏன்டா இப்படி எல்லாம் யோசிக்கிற?” எனக் கேட்டான்.
“மதி எனக்குச் சென்னையில் வேலை செட் ஆகலை. அதைவிட எனக்கு வருமானம் இரண்டாம் பட்சம்தான். மூனுவேளை யார் கையையும் எதிர்பார்க்காம சாப்பிடணும் அதுக்குச் சம்பாதிச்சா போதும்.
உனக்கே தெரியும் நான் ஸ்கூல் படிக்கிறப்போ இருந்து என்னைய சுத்தி இருக்கிற பிரச்சனைகளைக் கண்டுக்காம ஒதுங்கிப் போக முடியாம பேசி பிரச்சனை ஆகியிருக்கு,
சென்னையில வேலை செய்ற இடத்தில் மட்டும் என்னால எப்படி எதுவும் கண்டுக்காம என்னோட வேலை மட்டும் பார்க்க முடியும்.
அங்கேயும் ஹெச்.ஆர் கூடப் பிரச்சனை, சீனியர் இருக்கும் போது ஹய்யர் அத்தாரிட்டிக்கு தெரிஞ்சவங்கன்றதால வேறவங்களுக்குப் பிரமோசன் கிடைச்சது.
அதனால பாதிக்கப்பட்ட கொலீக் குமாருக்காகவும் பேசி, அங்கயும் மேல் இடத்தோட பிரச்சனை ஆகுது. இன்னும் நிறைய அங்க எனக்குப் பிரச்சனை இருக்கு. எனக்குச் சென்னை வேலை எல்லாம் செட் ஆகலை” என்றான்.
அதனைக்கேட்ட மதி, “டேய் நீ சின்னப் பையனா இருந்தப்போ, உலகம் தெரியல. இப்பவும் அப்படி இருந்தா எப்படி விழியா? கொஞ்சம் நெளிவுசுளிவோட நடந்துகிட்டாத்தான் பிரச்சனையில் மாட்டாம பீஸ்புல்லா வாழ முடியும்.
சென்னை வேலைக்குப் போகாட்டி கூட விடு. அப்பாவைப் போல ஹோட்டல் பிஸ்னஸ் பண்ணு. நல்ல கடையா தேடு, முன்னபின்ன இருந்தாலும் நானும் இருக்குறேன் சமாளிச்சிடலாம்.
ஆனா, இந்த எலெக்சன்ல நிக்கிறேன் அரசியலில் குதிக்கிறேன்னு எல்லாம் பேசாதடா. நம்ம குடும்பத்துக்கு அதெல்லாம் ஒத்துவராது.
மொள்ளமாரி, ரவுடி, கொலைகாரன், கொள்ளைக்காரன் தான் இப்போ அரசியல் பண்ண முடியும்.
முதலில் எலெக்சன்ல நிக்கணுன்னா காசு நிறையச் செலவழிக்கணும். அவனவன் ஓட்டுக்கு தலைக்கு ஐநூறு, ஆயிரம் கொடுக்கிறான்.
நீ அப்படிச் செலவழிக்காட்டியும் கூட்டம் திரட்ட, அடியாட்கள் போல ஆட்களைப் பக்கத்தில் வச்சுக்கச் சாப்பாடு, சரக்கு, அடிதடி, போலீஸ் கேஸு இதெல்லாம் பார்க்கணும்.
நம்மளால முடியாதுடா! சொன்னா கேளு, இந்த நினைப்பை இத்தோட மறந்திடு.” என்றான்.
மதியை விழியனிடம் பேசச்சொல்லி அனுப்பிய அவர்களின் அம்மா வேணி, ‘என்ன தான் பேசுறாங்கன்னு போய்க் கேப்போம்’ என அங்கு வந்தார்.
‘அடிதடி, போலீஸ் கேஸு இதெல்லாம் நம்மளால் முடியாதுடா, சொன்னா கேளு. இந்த நினைப்பை இத்தோட மறந்திடு’ என மதி விழியனிடம் பேசியதை மட்டும் உள்வாங்கிக்கொண்டு உள் நுழைந்தார்.
“என்னடா! என்ன பிரச்சனை? போலீஸ் கேஸ் ஆகுற அளவு என்னடா பண்ணினான் விழியன்?” என மதியிடம் கேட்டவர்,
“டேய் விழியா, நம்ம வீட்டுல இதுவரை யாரும் போலீஸ் ஸ்டேசன் வாசல்படி மிதிச்சது இல்லடா. நாலுபேரு முன்னாடி கெளரவமா வாழ்ந்துட்டு இருக்கோம்.” என்றார்.
அவர் அவ்வாறு சொன்னதும், “அம்மா என்னமா நீங்க? போலீஸுன்னா ஏன்மா பயப்படுறீங்க? நான் ஒன்னும் தப்பு பண்றவன் கிடையாதும்மா, தப்புப் பண்றவங்களை எதிர்த்துக் கேள்வி கேக்கிறவன்மா.” என்றான்.
“அதை எதுக்கு நீ கேக்கணும்ன்னுதான் நான் வருத்தப்படுறேன் விழியா.
நம்ம பொழப்பு, ஜோலியை பார்த்துட்டுத் துஷ்டனை கண்டா தூரமா ஒதுங்கி போயிடாம, குறுக்கபோய் விழுந்து பிரச்சனையை உன் தலைமேல ஏன்டா இழுத்துக்குற?
படிச்சு முடிச்சோமா, ஒரு உத்தியோகத்துல உட்கார்ந்தோமா, நல்ல பொண்ண பார்த்துக் கல்யாணம் செய்து வாழ்க்கையில செட்டில் ஆனோமான்னு நீ இருந்தா என்னவாம்? உன் கூடப் பொறந்தவனைப் பார்த்தாவது உனக்குப் புத்தி வரலையா?” என்றார்.
“அதுதான் உங்க ஆசையை நிறைவேத்த உங்க பெரிய மகன் இருக்கான்ல. என்னையும் அப்படியே இருன்னு சொல்லாதீங்க. நான் கல்யாணம் பண்றதை பத்தி எல்லாம் யோசிக்கறதா இல்லை. எலக்சன்ல நான் நிக்கப் போறேன்.” என்றான்.
“எடு அந்தத் துடப்பக்கட்டைய! நானும் போனாப்போகுது போனாப்போகுதுன்னு பார்த்தா நீ ரொம்ப ஓவராத்தான் போற...
மதி, நீ இப்போ உடனே உங்க அப்பாவுக்குப் போனை போட்டு வீட்டுக்கு வரச்சொல்லு. இவனை இப்படியே விட்டா உருப்புடாம போயிடுவான்” என்றார்.
“இருங்கம்மா... அப்பாவை எதுக்கு டென்சன் பண்ணனும்? நாமளே பேசுவோம் அதெல்லாம் கேட்பான்” என்ற மதியிடம்,
“இல்ல மதி, நான் எல்லா ஏற்பாடும் பண்ண ஆரம்பிச்சிட்டேன். இனி பின்வாங்க மாட்டேன். அன்னைக்கு ஹோட்டல் லீஸ் எடுக்க எம்.எல்.ஏ வீட்டுக்கு போனப்ப, அங்க கட்சிக்காரங்க கூட அந்த எம்.எல்.ஏ அகத்தியன் பேசுனதை கேட்டுட்டு தான் இந்த முடிவுக்கு வந்தேன்.
இந்த எலெக்சன்ல அந்த அகத்தியனோ, அவனைப்போல மத்த அரசியல்வாதிகளோ நம்ம ஏரியாவில் எம்.எல்.ஏ ஆகக்கூடாது.” என்று தொடர்ந்து பேசப்போனான்.
அவனைக் கண்டுகொள்ளாது அவனின் அம்மா, “மதி, நீ பொண்டாட்டியோட வந்திருக்குற நேரம் வீட்டில் இவனால பிரச்சனை வேணாம்னு அமைதியா பேசலாம், சொல்லி திருத்தலாம்ன்னு நினச்சேன்.
ஆனா இவன், என் பொறுமையை ரொம்பச் சோதிக்கிறான். இரு நானே, அந்த மனுசனுக்குப் போன் பண்ணி வரச் சொல்லி இவனை என்ன ஏதுன்னு கேக்க சொல்றேன்.”
என்று ஹாலுக்குச் சென்று அங்கு வைத்திருந்த தனது மொபைலை எடுத்து தனது கணவருக்குப் போன் செய்து, வீட்டிற்கு உடனே வரச்சொல்ல முனைந்தார்.
அப்பொழுது விழியனின் மொபைலுக்குக் கதிரிடம் இருந்து போன் வந்தது. அதை அட்டன் செய்த விழியன்,
“கொஞ்சம் பொறு கதிர். இங்க கொஞ்சம் பிரச்சனை ஆகிருச்சு. பேசி சரி பண்ணிட்டு வாரேன்” என்றான்.
அவன் கதிரிடம் பேசியதை கவனித்த மதி, “டேய் விழியா, யார்கிட்ட கதிர்கிட்டதான பேசுன? அவனும் உன்கூடச் சேர்ந்துகிட்டு உன்னைப் போலவே பேசுவான். உன்னை ஏத்தி விடுறதே அவன் தான்.” என்றான்.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது தொடர்ந்து நோட்டிபிகேஷன் விழியனின் மொபைலுக்கு வந்துகொண்டே இருந்தது.
ஸ்ரீராமை அந்தக் குரூப்பில் விழியன் ஆட் பண்ணவில்லை. இருந்தாலும் இவர்களின் நட்பு வட்டத்தில் பெரும்பான்மையானவர்கள் ஸ்ரீராமுக்கும் தெரிந்தவர்கள் ஆதலால் விஷயம் அவனுக்குச் சென்று விட்டது.
எனவே விழியனுக்கு அவனிடம் இருந்து மொபைல் அழைப்பு வந்தது. ‘ச்சே இவன் வேற’ எனக் கட் பண்ணிய மறு செகண்டு திரும்பவும் ஸ்ரீராம் அழைத்தான்.
‘அவனுக்கும் விஷயம் தெரிந்திருக்கும், சரி என்னதான் சொல்றான் பார்ப்போம்’ என நினைத்து அழைப்பை ஏற்றான்.
“விழியா என்னடா பண்றீங்க? பசங்க என்னென்னமோ சொல்றாங்க! நீ சுயேட்சையா எலக்சன்ல நிக்கப்போறதா கேள்விப்பட்டேன்!
காலையில் பார்த்தப்போ கூட என்கிட்ட எதுவும் நீ சொல்லலையே, இப்படி எல்லாம் நீங்க செய்தா எம்.எல்.ஏ ஹோட்டலை நமக்கு லீசுக்கு குடுக்க மாட்டார்டா.
நான் சாவடிக்கு வரேன், நீயும் வா இப்போவே இதுக்குப் பேசி நமக்குள்ள ஒரு முடிவு எடுக்கணும். உங்களை நம்பி ஒரு காரியத்தில் நான் இறங்குனதுக்கு நல்லா வச்சு செய்றீங்கடா!” எனச் சொன்னான் ஸ்ரீராம்
விழியன் அவனிடம் வீட்டு நிலவரம் சொல்ல இஷ்டப்படாததால், “நானும் உன்கிட்ட பேசணும் ஸ்ரீ. வீட்டில கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சிட்டு நான் உன்னைக் கூப்பிடுறேன்.” எனச்சொல்லி மொபைல் இணைப்பை துண்டித்தான்.
ஏற்கனவே விழியனின் அப்பா அறிவழகன் வீட்டிற்கு வரும் நேரம் ஆதலால், வீட்டிற்கு அருகில் தனது டூவீலரில் வந்ததால் தனது மனைவியின் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை.
வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தி தனது போனில் மிஸ்டு காலில் அழைத்தது தனது மனைவி என அறிந்து கொண்டார்.
எனவே வீட்டிற்குள் நுழையும் போதே, “வேணி… வேணி, எதுக்குப் போன் போட்ட? நான் வீட்டு கிட்ட வந்துட்டேன் அதுதான் போனை அட்டன் பண்ணலை.”
என ஹாலில் அமர்ந்திருந்த தனது மனைவியிடம் சொன்னவர், அவரின் முகம் பார்த்து எதற்கோ மிகவும் கோபத்தில் அவள் இருக்கிறாள் எனப் புரிந்து கொண்டார்.
தனது கணவனைக் கண்டதும் விழியனின் எண்ணத்தை அவரிடம் கொட்டி, “நீங்க பேசுங்க அப்போதுதான் அவன் வழிக்கு வருவான்.” என்றார்.
நடந்த விஷயங்களைக் கேள்விப்பட்டவர் ஹாலில் அமர்ந்தபடியே சத்தமாக “விழியா... இங்க வா!” என உறுமினார்.
“போச்சு... அப்பா கோபமாயிட்டாங்க. போடா விழியா போ கூப்பிடுறாங்க, என்ன சொல்லி சமாளிக்கப் போறியோ?” என்றான் மதி.
சிறுவயதில் இதே போன்ற கண்டிப்பான அப்பாவின் குரலை கேட்டிருக்கிறான் விழியன். ஆனால் அவன் ஓரளவு வளர்ந்த பிறகு இதுபோலப் பேசாமல் சற்று பொறுமையாகவே பேச ஆரம்பித்துவிட்டார்.
இப்பொழுது கேட்ட அவரின் குரலில் இருந்த கோபத்தில் மனதினுள் கொஞ்சம் பயம் ஏற்படவே செய்தது விழியனுக்கு. அது அவரின் மேல் இருந்த அன்பு, மரியாதையின் பொருட்டு உண்டான பயம். ஹாலுக்கு வந்தவனிடம் அவனின் அப்பா கூறினார்.
“விழியா, உனக்கு இரண்டு சான்ஸ் தான். ஒன்னு நாங்க சொல்றபடி கேட்டுச் சென்னை வேலைக்குப் போகணும், அல்லது நீ சொன்னேல்ல ஹோட்டல் நடத்தப்போறேன்னு அதைச் செய்யணும்.
ஆனா, மூணாவதா இப்போ உன் அம்மாகிட்ட சொன்ன பாரு எலக்சன்ல நிக்கப் போறேன்னு, அதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன். நாங்க சொல்றதை எல்லாம் கேக்கவே மாட்டேன், எலக்சன்ல நின்னுதான் ஆவேன்னு இருந்தா அதுக்குப் பிறகு என் கிட்ட எதுக்கும் வந்து நிக்கக் கூடாது.
அதே போல நம்ம வீட்டுக்குள் இருந்துகிட்டு அரசியல் பண்ணினா வீடுவரை பல பிரச்சனைகள் வரும். எனக்கு அதில் உடன்பாடு இல்லை.
தேர்தல், கட்சி, சண்டை, போலீஸ் இதுக்கெல்லாம் இங்க இடம் இல்லை. அதனால நாங்க சொல்றதை கேக்காம தேர்தல்ல நின்னேன்னா நம்ம வீட்டுல நீ இருக்க வேணாம். இப்போ சொல்லு உன் முடிவை!” என்றும் கூறினார்.
இதை விழியனோ, அவனின் அம்மா வேணியோ, ஏன் மதியும் கூட எதிர்பார்க்கவில்லை.
“அப்பா...” என்று அதிர்ந்து போனான் விழியன்.
“நீ இப்போ எடுத்திருக்குற இந்த முடிவில் எனக்குச் சுத்தமா உடன்பாடு இல்லை விழியா. அதே போல, உன்னால உன் விருப்பத்தை மாத்திக்க முடியாட்டி இதைத் தவிர்த்து என்னால வேற முடிவும் எடுக்க முடியாது.” எனச் சொன்னார்.
அவரிடம் பதில் எதுவும் சொல்லாமல் விழியன் வீட்டை விட்டு வெளியில் கோபத்துடன் வந்துவிட்டான்.
அவனுக்கு நிறைய யோசிக்க வேண்டியிருந்தது. அதுவும் விரைவில் உடனே முடிவெடுக்க வேண்டிய சூழலில் அவன் இருந்தான்.
எனவே, தனிமையான ஓர் இடத்தில் உட்கார்ந்து சிந்தித்து ஒரு முடிவெடுக்கக் கிளம்பினான்.
***
---தொடரும்---
அத்தியாயம் 08 & 09.1
விழியனும், கதிரும் உயரமான அழகிய வேலைப்பாடுடன் இருந்த பெரிய கேட்டின் முன் நின்றனர். இரண்டு கார்கள் உள்ளே ஒரே சமயம் நுழையும் படி இருந்த அந்தப் பிரமான்த்யமான வாயிலின் இரட்டை கதவுகள் கருப்பில் தங்க நிற எனாமல் வேலைப்பாடுடன் கம்பீரமாக நின்றது.
அந்தக் கேட்டில் இருந்த வாட்ச்மேனிடம், “பூபதிராஜா அய்யா எங்களை இந்த நேரம் பார்க்க வர சொன்னாங்க.” எனச்சொல்லி, தன்னைக் காளிதாசின் பேரன் என விழியன் சொன்னதும் அங்கிருந்தே தொலைபேசியில் விவரம் கேட்டு உள்ளே செல்ல கேட்டை திறந்து விட்டான் வாட்ச்மேன்.
இருவரும் வந்த இருசக்கர வாகனத்தைக் கேட்டின் அருகிலேயே நிறுத்திவிட்டுக் கார் ஓடுதளத்தில் நடந்தனர்.
அந்தப் பாதையின் இருமருங்கிலும் சரியான இடைவெளி விட்டு நட்டிருந்த அசோகமரம், தரையில் பச்சை கம்பளமாய் விரிந்திருந்த புல்வெளி என்று பிரமாண்டமாகச் சீராக இருந்தாலும் ஆர்ப்பாட்டமில்லாத கம்பீரத்தோடு இருந்தது அந்த மாளிகையின் சூழல்.
அதன் வலது பக்கம் இருந்த வெற்றிடத்தில் கட்டப்பட்டிருந்த டென்னிஸ் போர்டில் ஒரு அழகிய பெண்ணும் ஓர் அரும்பு மீசை முளைக்கும் வயதில் இருக்கும் பையனும் டென்னிஸ் விளையாடிக்கொண்டிருந்தனர்.
“பார்டா விழியா, நாம எல்லாம் விளையாட கிரவுண்ட தேடி போகணும், இவங்கயெல்லாம் வீட்டுக்குள்ளேயே கிரவுண்ட் கட்டி விளையாடுறாங்க.
ஆனாலும் நேத்து மழைக்கு முளைச்ச காளான் அந்த எம்.எல்.ஏ வோட பங்களாவில் இருந்த ஆர்ப்பாட்டம் இந்தப் பில்டிங்கில் இல்ல. ஆனால், அதை விட இது கம்பீரமான பிள்டிங்டா.
ஊருக்குள்ள இருக்குற வீடுக்குள்ள தோப்பே இருக்கு. ஆனா வெளியில இருந்து பாக்குற யாரு கண்ணுக்கும் தெரியாதது போல. சுத்தி கோட்டை சுவரே ஒரு வீடு உயரத்துக்கு எழுப்பியிருக்காங்கடா அந்தக் காலத்து ஜமீன் பங்களா இப்படித்தான் இருக்கும் போல!” என்று சொன்னான்.
அப்பொழுது அவர்களின் முன்பு இறகு பந்து வந்து விழுந்தது. அதை எடுக்க நடையா? ஓட்டமா? என அறுதியிட்டு சொல்ல முடியாதபடி இளமங்கை போன்ற தோற்றத்தில் இருந்த பேரிளம்பெண் கிரஹா அங்கு வந்து சேர்ந்தாள்.
இவர்கள் இருவரையும் பார்த்து, “யார் நீங்க..? அண்ணனை பார்க்கவா வந்திருக்கீங்க? ஏன் மாஸ்க் போடாம வந்தீங்க?” எனக் கேள்விக் கணைகளைத் தொடுத்தாள்.
“மாஸ்க் இதோ இருக்கே!” என இருவரும் தங்களின் பாக்கெட்டுக்குள் வைத்திருந்த மாஸ்க்கை எடுத்து மாட்டிக்கொண்டு, “பூபதி ராஜா அய்யாவை பார்க்க வந்தோம்.” எனச் சொன்னார்கள்.
“அதோ அங்க ரிசப்சன்ல சேர் போட்டிருக்கு அங்க உட்காருங்க. அண்ணன் இப்போ வந்துடுவார்.” எனச்சொல்லி கீழே இருந்த பந்தினை அவள் எடுத்துக்கொண்டு திரும்புகையில்,
“அம்மா... எனக்கு ஆன்லைன் கிளாஸ் ஆரம்பிக்க அரைமணி நேரம் தான் இருக்கு. நான் பிரஷ் ஆகிட்டு உட்காரணும். இன்னைக்குப் போதும்.” என அவளிடம் டென்னிஸ் விளையாடிய பையன் சொல்வது காதில் விழுந்தது.
அதைக் கேட்டபடி அவர்கள் இருவரும் ரிசப்ஷன் என அவள் கைகாட்டிய இடத்தை நோக்கி முன்னேறினார்கள்.
அப்பொழுது கதிர், “டேய் அந்த லேடியை அந்தப் பையன் அம்மான்னு சொல்றான்டா! அம்புட்டு பெரிய பிள்ளை இருக்குறது போலவா இருக்காங்க. என்ன ஒரு அழகு, வயசே தெரியலைடா?” என்று தணிந்த குரலில் விழியனிடம் சொன்னான்.
“கதிர் அடி வாங்க போற. எங்க வந்துட்டுச் சைட் அடிச்சுகிட்டு இருக்குற?” எனக்கடிந்தான்.
“அதான் அவங்க அண்ணனையா பார்க்க வந்திருக்கீங்க என்று கேட்கும் போது உனக்குப் புரியலையா அவங்க பூபதிராஜாவோட தங்கச்சின்னு, அப்போ பெரியவங்களாத்தான் இருப்பாங்கன்னு நீ ஏன் கெஸ் பண்ணலை.
உன் வால்தனத்தைக் கொஞ்சம் சுருட்டி வை. இது ஒன்னும் நாம படிச்ச காலேஜ் கேம்பஸ் இல்ல. அதுவும் இல்லாம அவங்க மாஸ்க் போடாததுக்கு நம்மை விரட்டுனதை பார்த்தேல்ல. ரொம்ப ஸ்ட்ரிக்டான ஆளுங்களா இருக்காங்க. முதுகு பத்திரம்டா!” என நக்கல் அடித்தான் விழியன்.
அவ்வாறு பேசிக்கொண்டே அவர்கள் வந்தடைந்ததும் உள்ளிருந்து பூபதிராஜாவும், “வாங்க தம்பி...” என்று இருவரையும் பார்த்து புன்னகைத்துக் கொண்டே வந்தார்.
அவரைக் கண்டதும் அமராமல் நின்று கை குவித்து வணக்கம் செலுத்தினர்.
“உட்காருங்கப்பா... உங்க ரெண்டு பேர்ல யார் காளிதாஸ் அய்யாவோட பேரன்?” எனக் கேட்டார்.
அவர் அமரச்சொல்லி அவரும் ஓர் இருக்கையில் அமர்ந்ததும் இவர்களும் இருக்கையில் அமர்ந்தபடி விழியன் அவரிடம், “நான் தான் சார். என் பேரு செவ்விழியன், எல்லோரும் விழியன்னு கூப்பிடுவாங்க. இது என் பிரண்ட் கதிர்.” எனச் சொன்னான்.
“சொல்லுங்க விழியன், எதுக்கு என்னைய பார்த்தே ஆகணும்னு பிடிவாதம் பிடிச்சீங்க? அரசியலில் எல்லாம் எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லையே. ஆனா காளிதாஸ் அய்யா சொன்னதுக்காக உங்க கூடப் பேச சம்மதிச்சேன்.” என்றார்.
“என்ன சார் இப்படிச் சொல்றீங்க? உங்களைப் போல நல்லவங்க எல்லாம் அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கப் போய்தான் அராஜகம் பண்றவங்கலாம் அரசியலில் இருக்காங்க.” என விழியன் சொன்னான்.
அவன் அவ்வாறு சொன்னதும், “இப்படி அரசியல்ல இருக்குற ஓட்டு மொத்த பேரையும் மோசமானவங்கன்னு நீங்க சொல்றது தப்பு தம்பி. அரசியல்வாதி ஒன்னும் வானத்தில் இருந்தோ இல்ல பாதாளத்தில் இருந்தோ நம்மகிட்ட வந்தவங்க இல்லை. அவங்களும் நம்மைப்போல மக்களில் ஒருவராக இருந்து தான் அரசியலுக்கு வந்திருக்காங்க.
கவர்மெண்டை தனி மனுஷன் அவனோட தேவைகளுக்கு வளைக்க அரசியல்வாதிகளைப் பயன்படுத்துறாங்க. அரசியல்வாதியை வளைஞ்சு கொடுக்கக் கருப்புப் பணம் கொடுத்து அவனைப் பேராசைக்காரனா மாத்திட்டாங்க. அதனால மக்கள் பக்கமும் தப்பு இருக்கு. இரண்டு முனைகளும் சரியா இருக்கணும்.” எனச் சொன்னார்.
அவர் அவ்வாறு சொன்னதும், “அய்யா தலைவர்களுக்குன்னு சில பொறுப்புகள் இருக்குதுதானே? சாதாரண மக்களை விடத் தலைவர்களாக உருவெடுத்து அரசியலில் ஈடுபடுறவங்க பக்குவமா இருக்கணும் தானே.
அந்தப் பக்குவம் இருந்தாத்தானே அவன் தலைவன். சாதாரண மக்கள் கிட்ட அறியாமை தானே இருக்கும். தலைவர்களோட பொறுப்பு அந்த அறியாமையைத் தெளிய வைப்பதுதானே.
ஆனா பாருங்க நம்ம தொகுதி எம்.எல்.ஏ வீட்டுக்கு அவரோட கடையை லீசுக்கு எடுக்கும் விஷயமா பேசப் போனோம். அப்போ அவர் அவங்க கட்சிக்காரங்க கூட வரும் எலக்சன்ல என்ன என்ன செய்து ஜெயிக்கணும்ன்னு பேசியதைக் கேட்டேன்.
அவங்க பேசியது எதுவுமே நியாயமானதாக இல்லை. அவர் சொல்றாரு, ‘காசு வாங்கிட்டு ஓட்டு போட்ட நாய்களுக்கு ரோசம் ஒரு கேடா?’ என, செலவழிச்ச காசை வட்டியோட அவர் திரும்பி எடுத்தாத்தானே அடுத்தத் தேர்தலுக்குச் செலவழிக்க முடியுமாம். அதனால அவருக்கு எதிராக இருக்குறவங்களைப் பணத்தையும் குண்டர்களையும் வைத்து அடக்கி எலக்சன்ல ஜெயிக்கணுமுன்னு முடிவெடுத்துருக்காங்க.
அப்படி நடந்தா அது போல நாட்டுக்கு கேடு வேற எதுவும் இல்லை. அதுதான் உங்க கிட்ட பேசி அவருக்குப் பதில் உங்களைப் போல நல்லவங்களை நிறுத்தி ஜெயிக்க வைக்கணும்னு தான் நான் பேச வந்துருக்கேன்.” என்றான்.
அப்பொழுது கிரஹா கையில் காபி டிரேயில் மூன்று டீ கோப்பைகளைக் கொண்டுவந்து அவர்களிடம் கொடுத்தாள்.
அவள் வரும்போதே விழியனின் வார்த்தைகளை உள்வாங்கிய படிதான் அங்கு வந்தாள்.
அவளும் விழியனின் கேள்விக்குத் தனது அண்ணனின் பதிலை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அங்கே நின்றாள்.
டீ கோப்பைகள் மூவரும் கையில் வாங்கினாலும் அதைப் பருகும் ஆர்வத்தை விட, விவாதத்தின் சுவையையே ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எதிர்கொள்ள ஆயத்தமானார்கள்.
பூபதிராஜன் விழியனைப் பார்த்து, “தம்பி உதவி செய்யும் நல்ல மனசு இருக்கிறவங்க எல்லோரும் தலைவர்களாகவோ, அரசியல் பதவிக்கு ஏற்றவர்களாகவோ ஆக முடியாது. சமூகச் சேவையில் உள்ளவங்க எல்லாரும் அரசியல் தலைவர்களாக முடியாது. இப்படி வேணா சொல்லலாம், அரசியல் தலைவர்களுக்குத் தேவையான முக்கியத் தகுதியில் ஒன்று மக்களுக்குச் சேவை செய்யணும் என்ற குணம் இருக்கணும்னு சொல்லலாம்.” என்றார்.
அவர் அவ்வாறு சொன்னதும், “அது தாங்க நானும் சொல்றேன், அந்த நல்ல குணம் இருக்குற உங்களைத் தேர்தலில் நிற்கணும்னு சொல்றேன். இப்போ இருக்குறவன் எல்லாம் பணபலமும் அடியாள் பலமும் மட்டும் வச்சிருக்குறான் நல்ல மனசோ மக்களுக்குத் தேவையான நல்ல திட்டங்களோ, அத்திட்டத்தை வகுக்கும் அறிவோ இல்லாதவனா இருக்குறாங்க.” என்றான் விழியன்.
அவனின் வாதத்தைக் கண்டு உதட்டில் சிரிப்போடு நிதானமாக, “விழியா, நீ சொல்றது போல அறிவில்லாதவனால பதவியில தொடர்ந்து சோபிக்க முடியாது. அதேபோல வெறும் நல்லவனாக இருந்தா மட்டும் தலைவன் ஆகிட முடியாது.
ஐரோம் சானு சர்மிளா மணிப்பூரின் இரும்பு மங்கை. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் இந்திய அரசாங்கம் திரும்பப் பெறவேண்டுமுன்னு பதினாறு வருஷமா உண்ணாவிரதம் இருந்தவங்க. சமூக ஆர்வலரான அவங்க தேர்தலில் நின்னப்போ வெறும் 90 ஓட்டுகள் மட்டுமே வாங்கித் தோத்துப் போனாங்க.
அவங்களை ஏன் சொல்லணும் என்னையே எடுத்துக்கோ, நான் சரியா உன் வயதிருக்கும், அதாவது என்னோட டிகிரி முடிச்ச மறு வருஷம் இதே போலத்தான் அரசியலில் இருந்தா மக்களுக்கு நல்லது செய்யலாம்னு நினைச்சுத் தேர்தலில் நின்னேன். இப்போ உதவி கேட்டு எம்புட்டு மக்கள் என்கிட்ட வரிசையில் வந்து நிக்கிறாங்க. ஆனா, இப்படி என் அப்பாகிட்ட உதவின்னு அப்போ கேட்டு வந்தவங்க கூட எனக்கு ஓட்டு போடலை.
எனக்கு டெபாசிட் போகலை. ஆனா, நான் ஜெயிக்கவும் இல்ல. பயங்கர ஓட்டு வித்தியாசத்தில் தோத்தேன். அரசியலில் தலைவராகணும்னா ஒரு கூட்டத்தைத் திரட்ட சக்தி வேணும் அது புத்தியால வரணும்.
அவர் சொன்னா சரியாத்தான் இருக்கும். அப்படின்னு ஏத்துக்குற ஒரு கூட்டத்தை அவனுக்குன்னு சம்பாதிச்சிருக்கிறவனா அரசியல்வாதி இருக்கணும். தன் எதிரில் உள்ளவனைப் பேச்சு, செயல்களால் கட்டிப்போடும் தன்மை இருக்கணும்.
முக்கியமா நாட்டோட, உலகத்தோட முந்தைய வரலாறு தெரிஞ்சிருக்கணும். அப்போதான் சவால்களைச் சமாளிக்கவும் திட்டங்களை வகுக்கும் யுக்தி அவனுக்குக் கைவரும்.
தன்னைச் சுற்றி இருக்கிறவங்களைப் படிக்கத் தெரிஞ்சவங்களா, மனித மனம் வாசிக்கும் உளவியல் தெரிஞ்சிருக்கணும். நினைவாற்றல் உள்ளவனாகத் தன்னைச் சுற்றி அறிவார்ந்த கூட்டத்தைக் குழுவாக வைத்திருக்கணும்.
அவர்களிடம் கலந்து பேசி சுய விருப்பு, வெறுப்பு இல்லாத பழிவாங்கும் மனநிலையும் இல்லாது தான் திரட்டியுள்ள கூட்டத்துக்கும் மக்களின் நல்வாழ்விற்கு எது சரியோ அதை அறிவார்ந்த தனது குழுவில் உள்ளோர்களுடன் கலந்து பேசி முடிவெடுத்து அதைச் செயல்படுத்தும் தன்மை உள்ளவனாக இருக்கணும்.
அரசியல்வாதி தன்னைச் சுற்றியுள்ள மக்களின் மொழி, சமயம், இனப்பிரிவுகள் எல்லாவற்றையும் அவர்களின் உணர்வுகளையும் அதனை மதித்து நடக்கும் தன்மையும், எல்லாரையும் சமமாக மனித வாழ்வியலுக்குக் குந்தகம் வராத வகையில் கையாளும் தன்மை உள்ளவனாக இருக்கணும்.” என்றார்.
அவரின் சொற்பொழிவை கேட்ட கிரஹா “அண்ணே, நான் ஒன்னு சொல்லட்டா?” அவர்களின் வாதத்துக்குள் தன் வார்த்தைகளை வைக்க அனுமதி கேட்டாள்.
கிரஹா பேசவுமே அவளை ஏறிட்டுப் பார்த்த பூபதிராஜா, “நீ பேசுனா இந்த அண்ணனை வில்லங்கத்தில் இழுத்து விட்டுடுவ கிரஹா. ஆனா, நாரதர் போல நீ செய்ற, சொல்ற வார்த்தை நல்லதைத்தான் கொடுக்கும். ஒன்னு என்ன ஒன்பது கூடச் சொல்லு. ஆனா இந்த அண்ணன் மேலயும் அதில் கொஞ்சம் பரிவு இருக்கட்டும்.” எனச் சொன்னார்.
அவளும் அவளின் அண்ணனின் பக்கத்தில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு, “நீ சொன்ன எல்லாக் குணமும் அரசியல்வாதிக்கு அவசியம்தான். ஆனால் இதை விட முக்கியம் தனி மனித ஒழுக்கம். அது என் அண்ணனான உங்ககிட்ட இருக்கு. ஆனா நம் தொகுதி எம்.எல்.ஏ கிட்ட அது கிடையாது. தனிமனித ஒழுக்கம் இல்லாதவன் அற்பமான ஆசைக்குத் தனது அதிகாரத்தைத் திறந்து விடுவான். அது நாட்டுக்கு பெரும் கேடு தானே. மேலும் அவனே தவறான உதாரணமாகவும் ஆயிடுறான்.
நீ மேலே சொன்ன எல்லாக் குணமும் இல்லைன்னாலும் தனிமனித ஒழுக்கமும் மக்களுக்குச் சேவை செய்யணும்ற எண்ணமும் உன் கிட்ட ரொம்ப இருக்கு. அதுபோதும் தலைவராக. என் அண்ணனுக்குத் தெரியாத உலக வரலாறே இல்ல. உன்னோட ஆளுமையைப் பத்தி எனக்குத் தெரியும்.
என்னைத் தவிர யாராலும் உன் முன்னே உன் வார்த்தைக்கு மறு வார்த்தை பேச முடியாது, இதுதானே ஆளுமை. நீ உனக்குன்னு தலையாட்டுற ஒரு கூட்டம் வேணும் என நினைக்கலை. அவங்களைச் சேர்க்க நீ இதுவரை எந்த முயற்சியும் பண்ணலை. இதோ இவங்க ரெண்டு பேரும் அதுக்கு உதவுறேன்னு சொல்றாங்க.
நீ ஏன் அண்ணே இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கக் கூடாது?” எனக் கேட்டாள் கிரஹா.
***
அத்தியாயம் 09.1
கிரஹாவிடம் பூபதிராஜா கூறினார். “கிரஹா, இப்போ எனக்கு இருக்குற வேலைகள்ல அரசியல்னு இறங்கினா நிறைய நேரம் அதுக்குச் செலவழிக்கணும்.
நான் முன்னாடி அரசியலில் இறங்கிய அப்பவே அதில் உறுதியா இருந்திருக்கணும். அப்போ எனக்குக் கிடைத்த முதல் தோல்வியே என்னைய சோர்வடைய வச்சு அரசியலில் இருந்து தூரமா போக வச்சிடுச்சு.
இப்ப எனக்கு இருக்குற நிதானம், பொறுமை அப்போ இல்லை. நிதானமும் பொறுமையும் இப்போ இருந்தாலும் தொழில் என்னோட நேரத்தை முழுசா எடுத்துக்கிடுது.
நான் ஒரு பொறுப்பான ஆளை எனக்கு அடுத்து என் தொழில்களை எடுத்துட்டு போக ஏற்பாடு செய்யணும். அந்த இடத்துக்கு உன் மகன், அது தான் என் மருமகன் திலீபன் ஐந்து வருஷத்தில் தயாராகிடுவான்.
அதுக்கு அடுத்து இரண்டு வருஷம் சென்று என் மகன் விக்ரமை தயார்படுத்தணும். இரண்டு பேருக்கும் பொறுப்ப பிரிச்சுக் கொடுத்துட்டுத்தான் நான் மத்தது எதுலையும் என் நேரத்தை செலவழிக்க முடியும்.” என்றார்.
விழியனைப் பார்த்து, “ஏன் தம்பி, நீங்களே சுயேட்சையா நில்லுங்களேன்? நான் உங்களுக்குச் சப்போர்ட் பண்ணுறேன். அதுவும் உங்க செயல்பாடு எனக்குச் சரியா இருக்குதுன்னு தோனுனா கண்டிப்பா உங்க பக்கம் தான் என் ஆதரவை தருவேன்.” என்றார்.
“என்னங்கய்யா இப்படிச் சொல்றீங்க? எங்களை நம்பி யார் வருவா? சமூகத்தில் உங்களைப் போல ஒரு அடையாளம் உள்ளவங்களைத் தேர்தலில் நிறுத்தினாத்தான் மக்களைக் கவனிக்க வைக்க முடியும். நாங்க எப்படி?” எனக் கூறினான் விழியன்.
அவன் அவ்வாறு சொல்லவும் கிரஹா விழியனிடம், “உங்களால் ஏன் முடியாது? அண்ணன் சொல்றது போல அவரோட வேலை நேரம் எனக்குத் தெரியும். ஆயிரகணக்கான வேலையாட்கள் அண்ணன் நிர்வகிக்கிற மூன்று மில்லில் இருக்குறாங்க. அவங்களோட வாழ்வாதாரம் எல்லாம் அண்ணன் தொழிலை கவனிக்காம அரசியலில் இறங்கினா கேள்வி ஆகிடும்.
ஆனா, நீங்க இப்போதான் படிச்சு முடிச்சு வெளிய வந்திருக்கிற சின்ன வயது ஆட்கள் போலத் தெரியிறீங்க. நீங்க ஆரம்பிக்கிற கட்சிக்கு நான் பக்க பலமா இருப்பேன். ஏன்னா நிறைய விஷயங்கள் இங்க சரியில்ல.
எங்க டிரஸ்டில் உதவி கேட்டு வருறவங்க, எங்க தொழிலாளர்களின் பிரச்சனைக்குச் சில நேரம் பஞ்சாயத்து போலீஸ்ன்னு போகும்போது கவனிச்சிருக்கேன். அரசியல்வாதிகளின் சப்போர்ட் இருந்தா மட்டுமே போலீஸ் ஸ்டேசன்ல கட்ட பஞ்சாயத்து போலப் பிரச்சனைகளை அரசியல்வாதிகளின் ஆளுமையில் நல்லபடி முடிக்க முடியுது.
ஆனா, அதுக்காக அப்பாவி மக்கள் அரசியல்வாதிக்கும் காசு அழுறாங்க. போலீசுக்கும் காசு லஞ்சமா கொடுக்குறாங்க. இதை மாத்தணும்ன்னு நினைக்கிறவங்க கையில் பதவி இருக்கணும். அந்த எம்.எல்.ஏ அகத்தியன் போலப் பதவியில இருக்குறவங்களைச் சரியானவங்களா மாத்த முடியாது. ஆனா, உங்கள போல நல்லது நடக்கணும்னு அக்கறை உள்ளவங்களை அந்த இடத்தில அமர்த்த முடியும்.
நம் குடும்பச் சூழலில் நான் சமூகச் சேவைன்னு இறங்கி வெளியில போறதே பெரிய இஸ்யூஸ் ஆகுது. இதுல நான் எப்படி நேரடியா அரசியலில் இறங்க முடியும்? இப்போதைக்கு என்னால முடியாது.
ஆனா, உங்களுக்குப் பின்னாடி இருந்து என்னால செயல்பட முடியும். என் அண்ணன் உங்க ரெண்டு பேர்கிட்டயும் இந்த அளவு இறங்கி பேசுவதிலேயே உங்களின் மீதான அவரின் நல்ல எண்ணம் எனக்குப் புரிஞ்சது.
அண்ணே, நீங்க எலக்சன்ல நிக்கிறீங்களா அல்லது இவங்க பின்னாடி நான் உன் இடத்தில் நின்னு அரசியல் பண்ணட்டுமா?” என்றாள் கிரஹா.
அவள் அவ்வாறு சொன்னதும், ‘காலையில் சாப்பிடும் போது தனது மனைவி, கிரஹா சேவை செய்ய ஆண்களுடன் வெளியில் போவதையே கண்ணு, காது, மூக்கு வச்சு பேசுறா. இப்போ அரசியல் அது இதுன்னு போனா நிச்சயம் குடும்பத்துக்குள் விவாதம் வரும்.’ என மனதினுள் நினைத்தார்.
மேலும், சிறு வயதில் இருந்தே அவளின் குணம் இது. யாருக்குப் பிரச்சனை என்றாலும் முன்னாடி போய் நிற்பாள். ஆனால், அவளையே வாழ்க்கை வஞ்சித்து விட்டது. கடந்த ஏழு எட்டு வருடங்களாகத்தான் முன்பு இருந்த கிரஹாவாக மாறி வருகிறாள்.
‘அவளுக்குப் பிடிச்சதை செய்ய விடுங்க, பின்னாடி சப்போர்ட்டா இருங்க, அப்போதான் அவங்க நார்மலா ஹெல்தியா ஆவாங்க’ என்று டாக்டர் தேவன் சொன்னது போலச் செய்ததால்தான் இப்போதைக்கு அவள் அவளாக மாறி இருக்கிறாள்.
இனி பிரச்சனை இல்லை, கிரஹாவோட மனதும், உடலும் ஆரோக்கியமாக இருக்கிறது என்று டாக்டர் தேவன் சொன்னாலும் அவளுடைய செயல்களை முடக்கவோ! தடை செய்யவோ! பூபதி ராஜாவுக்குப் பயம்.
அவ்வாறு செய்து ஸ்ட்ரெஸ் ஆகி முன்பு போல மயக்கம், மூளையில் இரத்தக்கசிவு போன்ற பிரச்சனை வந்தால் அவள் உயிருக்கே ஆபத்தாகிடும் என்று கவலை அவருக்கு உண்டானது.
அவர், அவளுக்குப் பதில் சொல்ல அதுவும் வெளியாட்களின் முன் பேச தயங்கி அவளின் முகம் பார்த்தார்.
அவரின் தயக்கம் உடைக்க ஏற்கனவே இது போன்ற அரசியல் பிரவேசம் குறித்து எண்ணிக் கொண்டுதான் இருக்கிறேன் என்பதைத் தனது அண்ணனுக்குப் புரிய வைக்க அவரிடம் பேசினாள் கிரஹா.
“அண்ணே நம்ம மில்லில் லேபராக இருக்கிற ஒரு இருபது வயசு பொண்ணை ஏற்கனவே கல்யாணம் முடிச்சு சூப்ரவைசர் வேலை பார்த்த ரஞ்சித் ஏமாற்றியதுக்காக அவனை வேலையை விட்டு டிஸ்மிஸ் செய்தோமே உங்களுக்கு நினைவிருக்குதா? அவனை வேலையை விட்டு தூக்குன பிறகு அவளால்தான் வேலை போச்சுன்ற கடுப்பில் அந்தப் பொண்ணுகிட்ட வம்பிழுத்திருக்கான்.
அவளிடம் நான்தான், இப்போ உங்க மில்லில் வேலை செய்யலையில்ல, உங்க கிரஹா மேடம் இப்போ என்னைக் கேள்வி கேட்க முடியாதுன்னு பேசியிருக்கிறான்.
அந்தப் பிரச்சனை போலீஸ் வரை போயிருக்கு. அந்த ரஞ்சித் எம்.எல்.ஏ அகத்தியனோட சொந்தக்காரனாம். அதனால எம்.எல்.ஏவுக்குத் தெரிஞ்சவன்றதால, அந்தப் பொண்ணைப் பிராத்தல் ரேஞ்சுக்குப் போலீஸ் பேசி நடத்தியிருக்காங்க.
என்கிட்ட அதுக்குப் பிறகு விஷயம் வந்தது. அப்போதான் பதவியில் இருக்கிறவங்களோட பவரையும் அதை எப்படித் துஷ்பிரயோகம் செய்றாங்கன்னும் தெரிஞ்சு கொதிச்சுப் போயிட்டேன்.
நம்ம வக்கீல் கோபாலு கைடன்சிலும், நம்ம டிரஸ்ட் பவரும் வச்சு அந்தப் பொண்ணைப் பிரச்சனையில் இருந்து கஷ்டப்பட்டு வெளியில கொண்டு வந்தேன்.
அப்போவே அந்த அகத்தியன் போல ஆட்கள் அடுத்தத் தடவை எலக்சன்ல ஜெயிச்சு பதவிக்கு வரக்கூடாது ன்னு நினச்சேன். இதோ என்னைப் போலவே இவங்களும் நினைக்கிறாங்க.
அண்ணே, நான் பொதுக் காரியத்தில் ஈடுபடுறதுல உனக்கு ஒன்னும் அப்ஜெக்சன் இல்லையே, நான் தேர்தலில் நேரடியா இறங்கப் போறது இல்ல. இவங்க பின்னாடி சப்போர்ட்டா என்னோட நட்பு வட்டத்தை வச்சு அந்த அகத்தியனை தோற்கடிக்க முயற்சிப்பேன் அவ்வளவுதான்.” என்றாள்.
“கிரஹா முதலில் அவங்க தேர்தலில் நிக்கவா வேண்டாமான்னு முடிவெடுக்கட்டும் அதுக்குப் பிறகு நாம ஆதரவு கொடுப்பதைப் பத்தி பேசுவோம். ” எனச்சொல்லி அப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
***
----தொடரும்---
அத்தியாயம் 07
கதிர் விழியனிடம், “டேய் விழியா நீ சொல்றதெல்லாம் நடக்குற காரியமா....?
இங்க அவனவன் பிழைப்பை பார்த்துட்டு கம்முன்னு போனா தான் சேதாரமில்லாம வாழ முடியும்.
இங்க நாற்காலிக்குச் சண்டை போடும் பிசாசுங்க கூட மல்லுக்கட்டிக்கிட்டு நாம அரசியல்ல இறங்கினா அவ்வளவுதான் கதை கந்தல்.
விழியா... நல்லா யோசிச்சுக்கோ. நீ படிக்கிறப்போ அங்க நடக்குற பாலிடிக்ஸை தட்டி கேட்டதுக்கே எத்தனை தடவை உன் அப்பா, அம்மா பிரின்சிபால் முன்னாடி வந்து பதில் சொல்ல வேண்டியது வந்தது.
பெத்தவங்க அடி உதைக்காகக் கடைசியில நீ மனசுக்குள்ளயே குமுறிட்டு கம்முன்னு இருக்க வேண்டியதும் நடந்திருக்கு.” எனச் சூழ்நிலையை விளக்கினான்.
அதற்கு விழியன், “கதிர் அப்போ இருந்து நம்மளை பணிஞ்சு போக வச்சது நம் வீட்டில உள்ளவங்கதான்.
இப்படி எல்லோரும் பிரச்சனைன்னா நமக்கு எதுக்குன்னு ஒதுங்கி போனா, கடைசியில் யாரு நல்லதுக்குத் துணை நிக்க? அநியாயத்துக்கு எதிரா குரல் கொடுக்க?
இப்படி எல்லோரும் ஒதுங்கி போறதால் தான் அட்டூழியம் செய்றவங்களோட அராஜகம் பெருகி போச்சு.
எம்.எல்.ஏ பேசுனதை நீயும் தானே கவனிச்ச? அதுபோல ஆட்கள் கிட்ட நாடு போச்சுன்னா எதிர்காலத்தில காசு வச்சிருக்கிறவன் கிட்டயும், தடி எடுக்குறவன் கிட்டயும் நாடு இருக்கும்.
அவங்ககிட்ட எல்லோரும் அடிமையா போயிட வேண்டியதுதான். இதுக்கு ஏதாவது நான் செய்யணும்.
என்னால சாதிக்க முடியுதோ முடியலையோ அதைப்பத்தி எல்லாம் கவலைப்பட மாட்டேன்.
ஆனா, என்னாலான முயற்சி செய்தேன்ற ஒரு திருப்தி எனக்குக் கிடைக்கும் கதிர். அது போதும்டா எனக்கு.
இதுக்கு முன்னாடி நான் சின்னப் பையன். அம்மா, அப்பா நிழலில இருந்தேன். ஆனா, இப்போ வளர்ந்தாச்சு. நான் என்ன செய்யணும் எது நல்லது, எது கெட்டதுன்னு பிரிச்சு பார்க்கிற வயசு வந்திருச்சு.
வீட்டுல அம்மாவோட எமோசனல் பிளாக்மெயிலை சமாளிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா சமாளிச்சுத்தான் ஆகணும். நல்லவேளை அவங்களுக்கு நான் மட்டும் பிள்ளை இல்லை.
அவங்களோட ஆசைக்கு ஏத்தது போலச் சமத்தா அவங்க நினைச்சதுபோலவே செட்டில் ஆகியிருக்கிற என் அண்ணன் ஒருத்தன் இருக்கான்.” என்று பேசினான்.
அவன் சொல்வதை எல்லாம் கேட்ட கதிர், “டேய் விழியா, ஆனா நான் வீட்டுக்கு ஒத்தே ஒத்த ஆம்பளை பிள்ளைடா.
நீ போனா, நானும் உன் பின்னாடியே பழக்க தோஷத்தில் வந்துருவேன். எங்க அம்மா, அப்பா பாவம்ல!” என்றான்.
அவன் அவ்வாறு சொன்னதும், “ஹாஹாஹா... மவனே நீ வராட்டி நான் உன்னைக் கட்டி தூக்கிட்டுப் போயிடமாட்டேன்... நண்பன்டா நீ!” என்றான்.
“டேய் ச்சேய், மொறப் பொண்ண கட்டிக்க மாமன் கடத்திட்டுப் போறது போல என்னைய தூக்குவேன்னு சொல்ற, அய்யே... இந்தக் கருமத்துக்குத் தான் என் ஆயா உன் கூடச் சேராத சேராதன்னு ஆயிரம் புத்திமதி சொல்லுச்சு.” என்றான்.
“உங்க ஆயாவுக்கு உன்னைவிட என்னையத்தான் ரொம்பப் பிடிக்கும். அந்தப் பொறாமையில் என் லட்டு பேபி மேல பழியப் போடாத கதிரு.” என்றான்.
“அதை விடு விழியா, இப்போ சீரியஸாகத்தான் கேக்குறேன். சென்னை வேலைக்குப் போகாம கொஞ்சமா கிடைக்கும் ஆன்லைன் ப்ராஜக்ட் மட்டும் பார்த்தா, மாசம் ஏதோ மூவாயிரமோ நாலாயிரமோ தான் கிடைக்கும்.
ஏற்கனவே சென்னை வேலைய விடப்போறேன்னு சொன்னதுக்கே உனக்கும் வெண்ணிலாவுக்கும் இடையில் பிரச்சனையாகிப் போய்க் கிடக்குது.
இதுல இந்த விஷயம் உன் ஆளுக்குத் தெரிஞ்சா ரெண்டு பேருக்குள்ள நிறையச் சண்டை வரும்.
நீ வெண்ணிலாவை கல்யாணம் செய்யப் போறது உறுதி தானே! அப்போ அந்தப் பிள்ளைக் கிட்ட கலந்துக்கிட்டு முடிவெடுத்துருக்கலாம்.” என்றான்.
“இல்ல கதிர், பிரேக்கப்னு முடிவு பண்ணிட்டேன். ம்ஹூம் இரண்டு பேரோட குணத்துக்கும், மைன்ட் செட்டுக்கும் ஒத்துவராது.
என்னை எமோசனலா பிளாக்மெயில் பண்ணி பண்ணி அவ நினைக்கிறதை என்கிட்ட சாதிச்சுக்கிட பார்க்குறா.
என்னோட மனநிலையை யோசிக்கத் தெரியலைன்னா கூட அதை நான் புரிய வச்சிடுவேன். ஆனா என்னோட மைன்ட் செட்டே தப்புன்னு நினைக்கிறா.
காசு, பணம்தான் முக்கியம் அவளுக்கு. ஆனா, எனக்குத் தேவைக்குக் காசு போதும்.
என்னைச் சுற்றி இருக்குற பிரச்சனைகளைக் காசு பணம் சம்பாதிகணும்கிற ஆசையில் கண்டுக்காம போக என்னால முடியாது.
அதனால நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் செய்தோம்னா கடைசிவரை இந்த நீயா நானா போராட்டம் தொடரும்.
ஏன், இப்போவே அந்தப் போராட்டம் தொடங்கிருச்சு. என் மேல இருக்குற அவளோட காதலும் காணாம போக ஆரம்பிச்சிடுச்சு.
இந்த ஸ்டேஜில் பிரிஞ்சிடுறது பெஸ்ட். கசந்து போயி ஒருத்தரை ஒருத்தர் வெறுத்து பிரியறதுக்குப் பதில், அவ மனசுல என்னோட இருந்த பசுமையான நினைவுகள் இன்னும் சாகாம இருக்குற இந்த ஸ்டேஜில் பிரிஞ்சிடலாம்னு நினைக்கிறேன்.
அவளோட மொத்த வெறுப்பைச் சம்பாதிக்க நான் விரும்பலை.” என்றான்.
“டேய் என்னடா இப்படிச் சொல்ற? வெண்ணிலா உன் மேல அத்தனை பிரியம் வச்சிருக்குதுடா. இதெல்லாம் பாவம்டா!” என்றான் கதிர்.
“நீ வேற கதிர், அவ சென்னைக்கு எப்ப போனாளோ, அன்னைக்கே வேற வெண்ணிலாவா மாற ஆரம்பிச்சிட்டா.
நீ முன்னாடி இருந்த வெண்ணிலாவா அவளை நினச்சுக்கிட்டு இருக்க. ஒரு வகையில் அவள் இதை எதிர்பார்த்துத்தான் இருப்பா!”
“விழியா, இப்படி எல்லாம் அவளை விடுவதுக்குச் சாக்கு சொல்லாதடா. பெண் பாவம் பொல்லாதது. நல்லா பழகிட்டு இப்படிக் கழட்டி விடுறது வேணாம். அதுவும் நீ இப்படிப் பண்ண கூடாது.
என் பிரண்ட் நல்லவன்னு பெருமையா சொல்லுவேன். ஆனா நீ அந்தப் பிள்ளைய விட்டுட்டேன்னு அவ வருத்தப்பட்டு எதுவும் தப்பான முடிவெடுத்துட்டானா உன்னைக் கேள்வி கேக்கும் முதல் ஆளே நானாகத்தான் இருப்பேன்.” என்றான்.
***
பூபதிராஜா வீட்டில் அவரது மனைவி சாந்தா, சாப்பாட்டு மேஜையில் அமர்ந்திருந்தவரின் முன் தட்டு வைத்து அவருக்குச் சாப்பாடு எடுத்து வைத்துக்கொண்டே, ‘எப்படி இவரிடம் பேச்சை ஆரம்பிக்க?’ என்ற தயக்கத்தோடு அவருக்குத் தேவையானதைப் பரிமாறிக் கொண்டிருந்தார்.
தனது மனைவி சாந்தாவின் உடல் மொழியிலேயே அவரின் உள்ளம் உணர்ந்து கொண்ட பூபதி ராஜா,
“ரொம்ப நேரமா என்கிட்ட எதுவோ சொல்ல தயங்கி தயங்கி என் மூஞ்சியவே பார்க்குற என்னது? எதுனாலும் சொல்லிடு. கேக்க வந்ததைக் கேக்காம மனசுக்குள்ள வச்சா டென்ஷன் தான் ஏறும்.” என்றார்.
“உங்க தங்கைய பத்தித்தான் பேச வந்தேன். ஆனா நீங்க கோபப்படுவீங்களோன்னுதான் சொல்ல யோசிக்கிறேன்.” என்றார் சாந்தா.
“அதுவும் கிரஹாவ பத்தி சொல்றதா சொல்லிட்ட. இனி என்னென்னு தெரிஞ்சுக்காம நானும் இங்க இருந்து நகற மாட்டேன். ம்... சொல்லு!” என்றார்.
அவர் சொல்லு என்றதும் தன்னைச் சுற்றி கண்களால் நோட்டம் விட்டார் சாந்தா.
அதைக் கவனித்த பூபதிராஜா, “அவ உள்ள இல்ல. அவளும் தினேசும் டென்னிஸ் விளையாட வெளிய கோர்ட்டுக்கு போயாச்சு.” என்றார்.
“அவளுக்கு என்னங்க நாம குறை வச்சோம்? புருஷன் இல்லாதவப் புள்ளையோட நம்ம கூடவே வந்துருக்கா. அந்த வருத்தம் அவளுக்குத் தெரியக்கூடாதுன்னு நீங்களும் பார்த்து பார்த்து அவளுக்குச் செய்றீங்க.
ஆனா, அவளோ நம்ம குடும்ப மானத்தைக் குழிதோண்டி பொதைக்கிறது போலவே ஒவ்வொன்னும் செய்றா.
சமூகச் சேவை செய்யப் போறேன்னு தெருத்தெருவா நாலு ஆம்பளைங்க கூடப் போய்ப் பிட் நோட்டிஸ் கொடுக்குறா! அதைப் பார்த்துட்டு நாலு பேர் என்கிட்ட போன் பண்ணி குறை சொல்றாங்க.
எப்பேர்பட்ட குடும்பத்தில இருக்கோம் என்ற எண்ணம் இல்லாம இருக்கா. நாலு பேரு நாலு விதமா கதை கட்டி விட ஆரம்பிச்சா நல்லாவா இருக்கும்!
இன்னார் குடும்பத்து பொம்பளை அப்படின்னு பேசுறது நம்ம குடும்பத்துக்குத் தானே அசிங்கம்.
நம்மளுக்கும் ஒரு பொம்பளைப் பிள்ளை இருக்கு. பின்னாடி அவளையும் உங்க தங்கச்சியை வச்சு எடை போட்டா நல்ல இடத்தில் சம்பந்தம் எப்படிப் பண்ண முடியும்?
உங்க தங்கச்சி டிரஸ்ட் ஆபீசிலிருந்து உதவி தேவைன்னு சொல்லுறவங்களுக்கு, முடிஞ்சதை செக்காவோ கேஸாவோ கொடுத்துட்டு நீட்டா கெளரவமா அடக்காமா இருக்காம, தெருவுல நாலு ஆம்பளைங்களோட இறங்கி வேலை பார்க்குறது நல்லாவா இருக்கு?
புருஷன்காரன் கூட இருந்தாலாவது நாக்கு மேல பல்ல போட்டு நாலு பேரு பேச பயப்படுவான். ஆனா புருஷன் இல்லாத பொம்பளை நிலை அப்படிக் கிடையாது.
ஆம்பளைகளோட பார்வையும் ஆண்களோட அவளைப் பார்க்குற மத்தவங்க வாயும் ஆயிரம் கதை கட்டும்.
அவ பையனுக்கு விவரம் தெரியறதுக்கு முன்னாடியே அவளுக்கு இரண்டாவதா ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சிடணுமுன்னு சொன்னேன்.
அப்படிப் பண்ணியிருந்தா அவன் பாடு உங்க தங்கை பாடுன்னு போயிருக்கும். நான் அப்போ சொன்ன எதையும் கேக்கமாட்டேன்னு சொன்னவ அடக்கமா வீட்டில இருக்கணும்ல. நீங்க கொஞ்சம் அவளைக் கண்டிச்சு வைங்க.” என்றார்.
அவளை ஏறிட்டு பார்த்தபடி பூபதி ராஜா கூறினார். “கிரஹா மேல மத்தவங்க பார்வை எப்படியும் இருக்கட்டும். உன்னோட பார்வை எப்படின்னு சொல்லு?” என்றார்.
அவரின் வார்த்தையைக் கேட்டு, “கடவுளே...!” என்று அதிர்ந்து கூறியவள் கண்களில் கண்ணீர் துளிகள் முட்டிக்கொண்டு நின்றன.
ஆனால் அதை வழியவிடாமல் சமாளித்தபடி, “இதுக்குத்தான் நான் உங்ககிட்ட சொல்ல யோசித்தேன்.” என்றாள்.
“இங்க பாரு சாந்தா... சொல்றவங்க ஆயிரம் சொல்லுவாங்க. ஆனா நம்ம கிட்ட அவளை இதுபோல மோசமா பேசுறவங்களைத் திட்டி அவங்க மறுபடி பேச இடம் கொடுக்காம செய்யணும்.
எங்க வீட்டு பிள்ளைய பத்தி எங்களுக்குத் தெரியும் அப்படின்னு சொல்லி இருக்கணும் நீ.
அவள் கொரோனா விழிப்புணர்வு பத்திய பிட் நோட்டிஸ் மட்டும் கொடுக்கப் போகல சாந்தா. கொரோனா பாசிடிவ்வால தனிமைபடுத்த பட்டவங்க குடும்பத்துக்குச் சாப்பாடு ரெடி பண்ணி டோர் டெலிவரி பண்ண தனிப்பட்ட முறையில் ஆக்சன் எடுக்குறா.
அதைச் சிறப்பா செய்ய நினைச்சு அவளே களத்துல குதிச்சிட்டா. இதுக்கு அவளைப் பாராட்டத்தான் செய்யணும். அதை விட்டுட்டு நீ???
இப்படி அவள் அலையிறதால அவளுக்குக் கொரோனா வந்துட போகுதோன்னு பயந்து கண்டிக்கச் சொல்லி இருந்தா கூட நான் அவளைக் கண்டிச்சு வைக்க நினைச்சிருப்பேன். ஆனா நீ???” என்று சொல்லி,
“ச்சே...” என்று வெறுப்பாக ஒரு சத்தம் இட்டு அரைகுறை சாப்பாட்டோடு போதும் என எழுந்து கொண்டார்.
சாந்தாவுக்கு விக்கியது போல ஆகிவிட்டது அவரின் வாதம். ஏனெனில் சாந்தா பிறந்த வீட்டிலிருந்து அவளின் வயதான அம்மா இவளிடம் இவ்வாறு கிரஹாவை பற்றிச் சொல்லும்போது அவரின் வாதம் சரியே எனத் தோன்றியது அவருக்கு.
“ஏட்டி சாந்தா, உன் நாத்தனா கிரஹா புருஷன் இல்லாதவ. அவ நாலு ஆம்பளையோட மெயினான ரோட்டில தண்ணீர் பந்தலில் நின்னு வாரவங்க போறவக்களுக்குப் பிட் நோட்டிஸ் கொடுக்குறாளே, என்ன கண்றாவிடி இதெல்லாம்?
தாலி அறுத்தவ, அதுவும் நன்னா இன்னும் தளதளன்னு இருக்கிறவ கூட நாலு ஆம்பளை நிக்கிறான்.
அதுவும் நம்ம முக்கு வீட்டு மல்லிகா புருஷன் வேற அதில் ஒருத்தனாம். மல்லிகா என்கிட்ட வந்து சொல்லுறா.
அவ புருசன், ‘கிரஹா மேடம் கிரஹா மேடம்னே எந்நேரமும் அந்த மனுசர் பேசுறாரு மாமி’ அப்படிங்கிறா.
‘அந்தக் கிரஹா அம்புட்டு நல்லவங்க, வல்லவங்கன்னு சொல்றாரு. அதைப் பார்த்து தான் இந்த மனுசர் அவங்க பின்னாடி சுத்துறாங்கன்னா நினைக்கிறீங்க, அந்தப் பொம்பளை அம்புட்டு அழகா இருக்குது. பெரிய பையன் அவங்களுக்கு இருக்குதுன்னு நீங்க சொல்லித்தான் எனக்கே தெரியும்.
கல்யாணம் ஆகாத சின்னப்பொண்ணு போல என்ன அழகா, ஸ்டைலா இருக்கு. அதுக்குப் புருஷன் வேற இல்லையாக்கும்.
உங்க வீட்டு மூத்த மருமகன் மில் முதலாளி பூபதிராஜாவோட தங்கச்சியாம்ல அந்தக் கிரஹா மேடம். அவர் வீட்டுல தான் இருக்குறாங்களாம்ல.
என்னமோ போங்க, என்ன துட்டு இருந்து என்ன புரயோஜனம்? நாத்தனாரை வீட்டோட வச்சிருக்கிற உங்க மக பாவம்தான்னு’ சொல்லுறா டீ. அவளெல்லாம் உன் வீட்டை பத்தி பேசுறது போல ஆகிடுச்சு.
உன் புருசன்கிட்ட சொல்லி இது போலப் பேச்சு வருது வீட்டோட அவர் தங்கச்சிய அடக்கி வைக்கச் சொல்லு. உன் குடும்ப மானம் அவளால காத்துல பறக்குது.” எனச் சொன்னதும் அது சரியே என்று சாந்தாவுக்குப் பட்டது.
ஆனால் தன் கணவன் தன்னைப் புரிந்து கொள்ளாது இவ்வாறு பேசுகிறார் என்றே நினைத்தாள் சாந்தா.
பெரும்பாலும் இங்கே பெண்களே பெண்களுக்கு எதிராகச் சிந்திக்கிறார்கள். அவர்களின் மனநிலை தான் முதலில் மாற்றத்துக்குத் தயாராக வேண்டும்.
இச்சமூகத்தில் துணையில்லாது இருக்கும் ஆணையும், பெண்ணையும் கொஞ்சம் எட்டியே வைக்க நினைக்கும் சமூகம். அதுவும் பெண் என்றால் ஒரு படி மேல் சென்று அவளின் நடத்தையில் குறை சொல்லி அவரை ஒதுக்கி வைக்கவே முனைவர்.
தன்னோட இணையைச் சலனப்படுத்தி விடுவார்களோ தனது வீட்டுப் பிள்ளையை அவர்களின் தனிமைக்கு இரை ஆக்கிவிடுவார்களோ? என்ற மனோபாவம் மனிதனுக்கு உண்டு. இதுபோன்ற ஆரோக்கியமற்ற சிந்தனைகள் களையப்பட வேண்டும்.
மேலை நாடுகளில் துணையை இழந்து தனித்திருக்கும் ஒருவரை ஆண், பெண் பாகுபாடின்றி வேறு துணையைத் தேர்ந்தெடுக்க அவர்களைச் சார்ந்தவர்கள் ஊக்கபடுத்தி இயல்பாக ஏற்றுகொள்வது உண்டு.
அதுபோல, இங்கும் குறிப்பாகப் பெண்ணுக்கும் அந்தச் சுதந்திரத்தை எந்தவித நெருடலும் இல்லாது இயல்பாக மறுமணத்தை அவர்கள் தயக்கமின்றிப் பேசும் சூழலை சமூகம் அமைத்து தர வேண்டும்.
***
----தொடரும்----
அத்தியாயம் 06
தனது பேரனின் மனம் அலைக்கழிப்பில் உள்ளதை கண்ட காளிதாஸுக்கு. விழியனின் வாட்டம் போக்க வேண்டும் என்ற உந்துதல் உண்டானது.
எனவே, “விழியா, விடுய்யா விடுய்யா... உன்னோட நல்ல மனசுக்கு உனக்கு எல்லாமே நல்லதா தான் அமையும். நீ ஆசைப்படுவது போல ஒருத்தி உன் மேல ஆசையோட வருவா! உன்னோட பொண்டாட்டி ஏற்கனவே எங்கேயோ பிறந்து உனக்காக வளர்ந்து இருப்பா. நேரம் கூடி வரும்போது, காலம் உன் கண்ணுல அவள காட்டும்..” என்றார்.
“தாத்தா, அவ வரும்போது வரட்டும். ப்ளீஸ் தாத்தா, இப்போ அந்தப் பூபதிராஜா கூட நான் பேசுறேன். ஏதாவது ஒன்னை உருப்படியா செஞ்சேன்னு திருப்தி பட்டாத்தான், லைஃப்பில் தனிப்பட்ட முறையில் நான் செட்டிலாகணும்னு முடிவு பண்ணிட்டேன்.
உங்களுக்கே தெரியும் ஒன்னு செய்யணும்னு நினைச்சுட்டேனா, அதைச் செஞ்சு முடிக்காம வேற எதிலேயும் நான் கவனம் செலுத்த மாட்டேன்ற விஷயம். அதனால ஒரு தடவை மட்டுமாவது பூபதிராஜாவை சந்திச்சு பேசி எலக்சன்ல நிக்க வைக்க முயற்சியாவது செய்து பார்க்கிறேனே தாத்தா.” என்றான்.
அவர் ஒரு நிமிடம் வாசலை நோட்டமிட்டார். தாங்கள் இருவரும் பேசுவதை அவ்வப்போது எட்டிப் பார்த்துக் கொண்டு என்ன பேசுகிறோம் எனப் புரிந்து கொள்ள முனையும் மருமகள் வாணி நிற்கிறாளா? என நோட்டம் விட்டார்.
வாணி அடுப்பங்கரைக்குள் சென்றுவிட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு, “விழியா, மத்தவங்களுக்குத்தான் லெட்டர். உனக்குப் பேசணும்னா நான் ஃபோன் பண்ணியே அவரிடம் சொல்றேன்.” எனக்கூறி அவர் மொபைல் நம்பரை எடுக்க, ஃபோன் நம்பர்கள் குறித்து வைத்திருக்கும் அந்த நோட்டை எடுக்கச் சென்றார்.
அதைப் பார்த்த விழியன், “தாத்தா ஸ்மார்ட் ஃபோன் வாங்குங்கன்னு எத்தனை தடவ சொல்லுறேன். வாங்க மாட்றீங்களே. அதே நோக்கியா பட்டன் போன்தான் வச்சுக்குவேன்னு அடம்புடிக்கிறீங்க. சரி அதை விடுங்க, ஒருநாள் அந்த நோட்டில் இருக்குற எல்லா நம்பரையும் இதில் பதிஞ்சு கொடுக்குறேன்.” எனச் சொன்னான்.
“போடா, போடா... இதையே எத்தனை தடவை சொல்லிட்ட, ஆனா அந்த ஒருநாள் தான் வரவே மாட்டேங்குது.” எனச் சொல்லிக்கொண்டே பூபதிராஜா மொபைல் நம்பரை நோட்டில் பார்த்து டயல் செய்தார்.
“ஹலோ பூபதிராஜாவா? நான் காளிதாஸ் பேசுறேன்.” என்றார்.
“நல்லா இருக்கேன், நீங்க நலமா, வீட்டில் எல்லோரும் சௌக்கியமா?” எனக் கேட்டார்.
“என் பேரன் செவ்விழியன் கடை லீஸ்க்கு எடுக்க எம்.எல்.ஏ அகத்தியனை பார்க்கப் போனான். அங்க கட்சி ஆளுகளுக்குள்ள நடந்த சம்பாசனையைக் கேட்டவன் ரொம்பக் கொந்தளிச்சு போயிட்டான். இந்த எலக்சன்ல அந்த ஆளுக்கு எதிரா நல்ல மனசு உள்ள ஒருத்தரை நிப்பாட்டணும்னு நினைக்கிறான். அதுக்கு உங்களைப் பார்த்து பேச நினைக்கிறான்.”
“ம் சரிதான். உங்களுக்கு இப்போ அரசியல் எல்லாம் பெரிய இன்ட்ரஸ்ட் இல்லைன்னு நான் அவன்கிட்ட ஏற்கனவே பேசிட்டேன். ஆனா அவன் ஒரு தடவை உங்களைப் பார்த்துப் பேசணும்னு முடிவோட நிக்கிறான். நீங்களே அவன்ட உங்க நிலைப்பாட்டையும் நிலவரத்தையும் சொன்னா சாந்தம் ஆகிடுவான்.” என்றார்.
“ஓ... அப்போ நாளைக்குக் காலையில் அவனை உங்க வீட்டுல வந்து பார்க்க சொல்றேன். நீங்க என் மேல மரியாதை வச்சு எனக்காக அவன்கிட்ட பேசுறேன்னு சொன்னீங்களே, அதுவே எனக்குப் போதும். ம் நல்லதுங்க அப்போ வச்சிடுறேன்.” எனச்சொல்லி மொபைல் இணைப்பை துண்டித்தார்.
“விழியா, நாளைக்குக் காலையில் எட்டரைக்கு டான்னு பூபதிராஜா வீட்டுக்குப் போய் அவரோட பேசிடு. பிறகு மத்ததைப் பத்தி முடிவெடு! அதுவரை இதை நமக்குள்ளேயே வச்சுக்குவோம்.
வீட்டில என்னைய மாட்டிவிட்டுடாதே விழியா... நான் வயசானவன், வயசுல வாங்குற வசவு பேச்சுகளைத் துடைச்சு போட்டுட்டுப் போறது போல இப்போ போக முடியாது.” என்றார்.
“அட ஜேம்ஸ்பாண்டு, இம்புட்டுத்தான் உங்கள் வீரமா? சரி அதை விடுங்க. நான் யார்கிட்டயும் நீங்கதான் எனக்குப் பூபதிராஜாவோட அறிமுகம் கிடைக்க ஹெல் பண்ணினீங்க அப்படின்றதை சொல்ல மாட்டேன் போதுமா?” என்று பேசிக் கொண்டிருக்கும் போது வீட்டு வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது.
“டேய் விழியா... மதியும் அவன் பொண்டாட்டியும் வந்துட்டாங்க.” எனச் சொல்லிவிட்டு அவசர அவசரமாகத் தனது கைத்தடியை எடுத்துக் கொண்டு வாசலுக்கு விரைந்தார் காளிதாஸ்.
ஆனால் விழியனோ எந்தவித அலட்டலும் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சாவகாசமாக அங்கிருக்கும் கண்ணாடி பார்த்து தலைவாரி விட்டு அசால்டாக வாசலுக்குச் சென்றான்.
காருக்குள் இருக்கும் லக்கேஜ்களை இறக்கி வைத்துக் கொண்டிருந்தனர் மதியும் அவனது மனைவி திவ்யாவும். அங்கு அவர்கள் இருவரும் இறக்கியிருந்ததைக் கைக்கொள்ளும் அளவில் எடுத்த வாணி உள்ளே வைக்கப் போயிருந்தார்.
வாசலுக்கு வந்த விழியன் நிலை சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டு, “டேய் மதி, வந்தாச்சா!” என்று தனது அண்ணனை பார்த்துக் கேட்டான்.
அவன் அவ்வாறு கேட்டதும் மதி திரும்பாமலே, “ம் ஹப்பா... ஒரு வழியா வீடு வந்தாச்சு, என்னவொரு வெயிலு, இந்த வெக்கையில் டிராவல் பண்ணி வருவதுக்குள்ள போதும் போதும்னு போயிடுச்சு.” என்று சொல்லிக்கொண்டே லக்கேஜ்களை இறக்கினான்.
ஆனால் அவனின் மனைவி திவ்யாவோ, விழியன் தன் கணவனை டா போட்டு கூப்பிடுகிறானே என்ற கோபத்தில் அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்.
அவள் முறைப்பதைக் கண்டுகொள்ளாமல், “அண்ணியாரே வாங்க, அடேயப்பா எம்புட்டு லக்கேஜு! அங்க இருக்குற வீட்டையே ஒதுக்கிவிட்டு வந்துட்டீங்க போல!” என நக்கலாகக் கேட்டான்.
அப்பொழுது கையில் தூக்கிக்கொண்டு போனதை உள்ளே வைத்து விட்டு திரும்பி வந்த வாணி, “டேய் விழியா, மதிக்குக் கல்யாணம் ஆகிடுச்சு இன்னும் என்ன டா போட்டு பேசுற? ஒழுங்கா அண்ணா வாங்க போங்கன்னு பேசு.” என்று அதட்டியவர்,
“மசமசன்னு நிக்காம அண்ணன் கூடச் சேர்ந்து சாமான்களை வண்டியில் இருந்து இறக்கி வீட்டுக்குள்ள கொண்டு வா.” என்று சொல்லிவிட்டு மருமகள் திவ்யாவிடம்,
“நீ எதுக்கும்மா பெட்டி தூக்குற? வெயிட்டா இருக்கும், உள்ள வா அவிங்க இரண்டு பேரும் சேர்ந்து இறக்கி உள்ளே கொண்டு வந்துருவாங்க” எனச்சொல்லி மருமகளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்.
விழியன் அவர்கள் உட்செல்வதைத் திரும்பிப் பார்த்து உறுதி செய்துவிட்டு, “டேய் மதி, இனி உன்னை, அண்ணன் வாங்க போங்கனு சொல்லி நான் பேசணுமாம், அம்மா சொல்றாங்க.” எனச் சொன்னான்.
அதனைக் கேட்டவன், “எப்பா சாமி, உனக்கு எப்படிச் சொல்லி கூப்பிட பிரியமோ அப்படிக் கூப்பிடு. வந்ததுமே என் வாயை கிளறி வம்பிழுக்காதே!” என்றான் மதி. இருவரும் கைகளில் பொதிகளுடன் உள்ளே நுழைந்தனர்.
உள்ளே வந்தவர்களை எதிர்கொண்ட திவ்யா தனது கணவனிடம், “அந்தப் பிளாக் டிராலியை மட்டும் இப்போ மாடிக்கு தூக்கிட்டு வாங்க. கோவிட் காலத்தில வெளில இருந்து வந்து அப்படியே வீட்டில் மிங்கிளாக வேண்டாம். போய்க் குளிச்சு டிரஸ் மாத்திட்டு கீழே வரலாம்.” எனச் சொல்லிவிட்டு வாணியிடம் ,
“அத்தை, மாடி நாங்கள் யூஸ் பண்ண ரெடியாத் தானே இருக்கு?” எனக் கேட்டாள்.
“அதெல்லாம் நீங்க வரப் போறதை மதி ஃபோன் பண்ணி சொன்னதுமே, நான் சமுத்திரத்தை வைத்து மாடியை சுத்தபடுத்தி வச்சிட்டேன். ரெண்டு பேரும் போய்த் துணிமணி மாத்திட்டு வாங்க. நீங்க வந்ததும் சாப்பிட ரெடியா சாப்பாட்டை மேஜையில் எடுத்து வைக்கிறேன்.” எனச் சொன்னார்.
அவர்கள் செல்வதைக் கண்டு கொள்ளாது தன் அம்மா சமைத்து வைத்திருந்த பதார்த்தங்களைச் சுவை பார்த்துக் கொண்டிருந்தான் விழியன்.
மதியும், திவ்யாவும் மாடிக்குப் போனதும் தனது அம்மாவிடம், “என்னம்மா மட்டன் மட்டும் செஞ்சிருக்கீங்க, மத்த ஊருவது, பறக்குறது எதையும் காணோம்?” என்றான்.
அதற்கு அவர், “மதிதான் மட்டன் மட்டும் போதும். இந்த வெயிலில் டிராவல் பண்ணிட்டு மத்ததைச் சாப்பிட்டா உடம்பு தாங்காதுன்னு ஃபோனில் சொல்லிட்டான்.” என்றவர்,
“சரி, அதை விடு விழியா, காலையில் ஏதோ என்னமோ பண்ண போறேன், அதுக்கு எம்.எல்.ஏவை பார்த்து பேசப்போறேன்னு சொல்லிட்டுப் போன. ஆனா, வந்ததும் எதுவும் சொல்லாமல் கவுந்தடிச்சு படுத்துகிட்ட. அது பத்தி நேரடியாகக் கேட்க கூடாதுன்னுதான் நினைத்தேன்.
அதுக்காகத்தான் உன் தாத்தாவிடம் மதி வருவதுக்குள்ள உன்கிட்ட விசாரிச்சு சொல்லுங்கன்னு சொன்னேன். ஆனா, அவரும் உன்கூடச் சேர்ந்து கதை பேச ஆரம்பிச்சிட்டாரு. உன் அண்ணி வருவதுக்குள்ள சொல்லு விழியா! போன விஷயம் என்ன ஆச்சு? என்ன முடிவு பண்ணி இருக்க?” எனக் கேட்டார்.
“அம்மா அங்க நடந்த சூழல் எனக்கு மனசுக்கு ஒப்பலை, வேற ஏதாவது கடைய பார்க்கலாம்.” என்றான்.
“என்னடா சொல்ற மனசு ஒப்பலையா? வேற கடை தேட போறியா? அங்க என்ன நடந்ததுன்னு முழுசா சொல்லேன். எந்த வேலை செய்யப் போறேன்னு முடிவு பண்றவரை சென்னை வேலையில் இருந்து விலகிடாத விழியா!” எனச் சொன்னார்.
“போங்கம்மா, அதெல்லாம் இனி அந்தச் சென்னை வேலைக்குப் போறதா இல்லை. நான் ஒன்னும் சும்மா அப்படியே வெட்டியா வீட்டிலும் இருந்துட போறதில்லை. சில சில ஆபீஸ் டிசைன் வொர்க் வீட்டில் இருந்தே ஆன்லைன்ல செய்ய ஆர்டர் கிடைக்கும். அதில பெருசா வருமானம் கிடைக்காட்டிலும் என்னோட தேவைகளுக்கு இப்போ அது போதும்.
நீங்களும் கொஞ்சம் என்னைப் புரிஞ்சிக்கோங்கம்மா. எப்ப பாரு இதைச் செய்யி, அதைச் செய்யின்னு சொல்றீங்களே தவிர எனக்குப் பிடிச்சதை செய்யின்னு என்னைக்காவது சொல்லி இருக்கீங்களா? இந்தத் தடவை நான் ஆசைப்பட்டதைத் தான் செய்யப்போறேன். நீங்க என்ன சொன்னாலும் என் முடிவ மாத்திக்கப் போறதா இல்லை.” என டென்சனுடன் பேச ஆரம்பித்தான்.
“என்னடா விழியா இப்படிப் பேசுற? நான் உன்னைப் பெத்தவடா. நான் சொல்லாம உனக்கு யாரு நல்லது, கெட்டது எடுத்துச் சொல்லுவாங்க! இந்தக் காலத்தில் படிச்சு நல்லா சம்பாதிச்சாலே பொண்ணு கிடைக்கிறது கஷ்டம்.
நீ என்னடா என்றால் கையில இருக்குற களாக்காயை விட்டுட்டு, மரத்திலிருக்கிற பலாக்காய் வேணுமேன்னு அடம்பிடிக்கிற. அதல பாதாளத்தில் விழுந்துடுவியோன்னு பயமா இருக்கு எனக்கு. நான் சொல்லுற பேச்சை கேட்க மாட்டியா நீ?” என்று இன்னும் வார்த்தைகளைக் கொட்ட போன மருமகளிடம்,
“விடும்மா வாணி, மதி இப்போதுதான் வீட்டுக்குள்ள வந்திருக்கிறான். வந்ததுமே பிரச்சனை பற்றி அவன் பொண்டாட்டி முன்னாடி பேசினா அவனுக்குச் சங்கடமாகிடும். இதோ அவுங்க இரண்டு பேரும் வருவது போலத் தெரியுது, பிறகு பேசலாம்.” என அப்போதைக்கு அந்தப் பேச்சை ஒத்திப் போட்டார் தாத்தா காளிதாஸ்.
விழியனோ மிகவும் அமைதியாகி விட்டான் அவன் மனதினுள் பல கேள்விகள்.
காலையில் தன்னுடன் கதிரேசனை அழைத்துக்கொண்ட செவ்விழியன், தொழிலதிபரும் சமூகச் சேவையைச் சத்தமில்லாமல் செய்பவருமான பூபதிராஜாவை பார்க்க, அவரின் இல்லம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் பயணப்பட்டுக் கொண்டிருந்தான்.
“டேய் விழியா, எங்கடா போறோம்? நீ கூப்பிட்டதும் என்ன ஏதுன்னு கேக்காம நான் வந்தேன்ல. அதுக்காகவாவது போற இடத்தைச் சொல்லேன்டா!” என்றான்.
“மில் முதலாளி பூபதிராஜா வீட்டுக்கு!” என்று பதில் சொன்னான் விழியன்.
“அங்க எதுக்குடா? ஒருவேளை அவரின் மில்லில் எதுவும் பெரிய போஸ்டிங் காலியா இருக்கா, அந்த வேலையை நமக்கு ஒதுக்குறதை பத்தி பேச கூட்டிட்டு போறியா? அப்படி எல்லாம் இருக்காதே. மில்லில சூப்ரவைசர் வேலைன்னா.” என இழுத்துக் கொண்டு போனவனை,
“ம்ஹூம் இல்ல கதிர், அவரை வேலை செய்யச் சொல்ல போறேன். அதுவும் எம்.எல்.ஏவா நம்ம தொகுதியில இறங்கி வேலை செய்யச் சொல்லப் போறேன்.” என்றான்.
அவன் அவ்வாறு சொன்னதும், “டேய் என்னடா சொல்ற? நான்தான் எப்பவும் லூசு போல உளறுவேன். இன்னைக்கு என்னடா நீ உளறுற?” என்றான் கதிர்.
“உளறல கதிர், உண்மையாவே அவரை எலக்சன்ல நிக்கச் சொல்லப்போறேன். அதுக்குதான் நாம ரெண்டு பேரும் இப்போ அங்க போறோம்.” என்றான்.
அவன் சொல்லி முடிக்கும் போது, “வண்டியை நிறுத்து விழியா... வண்டியை நிறுத்து... டேய் டேய் வண்டிய நிறுத்துடா!” எனக் கூவினான் கதிர்.
அவனின் குரலில் இருந்த பதட்டத்தில், “என்னடா?” எனக் கேட்டபடி அவனின் பதற்றம் தொற்றிக்கொள்ள, வண்டியை சடனாக நிறுத்தினான் விழியன்.
“என்ன ஆச்சா? நீ சொன்னதைக் கேட்ட பிறகு உன் பின்னாடி வர எனக்கு என்ன லூசா பிடிச்சிருக்கு? நாம ரெண்டு பேர் மட்டும் போய்ப் பெரிய வி.ஐ.பி கிட்ட எலக்சனுக்கு நில்லுங்கன்னு சொல்லுவோமாம். அவரும் உடனே சரிங்க தம்பி, அந்தக் கடவுள் போல வந்து சொல்றீங்க, நானும் நிக்கிறேன்னு சொல்லுவாராம்.
இதப்பாரு விழியா நாம ரெண்டு பேரும் சாதாரணப் பட்டதாரிங்க. நம்ம கூட அவர் பேசுறதே பெரிய விஷயம். ஒரு கூட்டமா பெரிய பெரிய ஆட்கள் கூடப் போய்ப் பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயம் இது.” எனச் சொன்னவனைப் பார்த்து விழியன் கோபமாக முறைப்பதை கண்டு,
“இங்க பாருடா இப்போ எதுக்கு முறைக்கிற? சரி நீ சொல்றது போலவே போய்ப் பேசுவோம். ஆனா இப்ப இல்ல, நம்ம கூட ஸ்ரீராமையும் கூட்டி கிட்டு போவோம்டா. கூட இன்னும் ஒரு ஆள் இருந்தா பேச வசதியா இருக்கும்ல!” எனச் சொன்னான் கதிர்.
மனதிற்குள், ‘கடவுளே இவன் சரின்னு சொல்லிடணும் அங்க போய்ப் பேசி அசிங்கமாகிட கூடாது’ என்று நினைக்க, அவன் நினைத்ததற்கு எதிர்ப்பதமாக விழியனிடமிருந்து கோபத்துடன் பதில் வந்தது.
“அந்த டேஷ்சை பத்தி பேசாத என்கிட்ட. அன்னைக்கு அந்த எம்.எல்.ஏவை பார்த்துட்டு வெளியில வந்து பேசும்போது தான் ஸ்ரீராமுக்கு அந்த ஹோட்டல் மோகம் புடிச்சுருக்கும் விஷயம் புரிஞ்சது.
நான் ஒத்த வார்த்தை தான் அந்த எம்.எல்.ஏ அகத்தியனை சொன்னேன் அதுக்கே எம்புட்டு கோபப்பட்டான். அந்த எம்.எல்.ஏவை ஓட்டுப் போட்டு பதவியில உட்கார வச்ச மக்களை எல்லாம் அற்பமா நினைச்சுப் பேசுறான். அவன் கொள்ளையடிக்கிறதை கம்முன்னு பொத்திகிட்டு பார்க்கணும்னு சொல்றான். எதிர்க்கிறவங்ககளை ஒழிச்சு கட்ட பிளான் போடுறான்!
இத்தனையும் கேட்டுட்டு எதுவும் கண்டுக்காம அந்த எம்.எல்.ஏ ஹோட்டலை லீசு எடுக்கணும்ற காரணதுக்காக அவனின் பக்கம் நிக்கணும்னு சொல்றானே ஸ்ரீராம்.
தண்ணி வண்டி அனுப்புறேன், கக்கூஸ் தொறந்து விட ஏற்பாடு செய்றேன் அப்படின்னு அந்த எம்.எல்.ஏ சொன்னதைப் பெருசா பேசுறான் அவன்.
தண்ணி, கக்கூஸ் வசதி இரண்டும் நமக்கு அவசியம்தான். ஆனா அந்த அவசியத்தைப் புரிஞ்சுகிட்டா அந்த எம்.எல்.ஏ நமக்கு ஏற்பாடு செய்றான்? இல்ல, எலக்சன் வருதுல்ல அதுக்கு லஞ்சமா நினைச்சுப் பண்றான்.
இப்போ அவன் தானே நம்ம தொகுதி எம்.எல்.ஏ, அப்போ அடிப்படை வசதி செய்வது அவரோட வேலைதான். அந்த எம்.எல்.ஏ வோட கருப்புப் பக்கத்தைக் கண்டுக்கக் கூடாதுன்னு சொல்றான்.
இதை எல்லாம் நான் சொன்னதுக்கு ஸ்ரீராம் என்ன சொன்னான்னு கேட்டேல்ல, அகத்தியனை அப்படி எல்லாம் பேசக்கூடாதாம், எந்த அரசியல்வாதி நேர்மையா இருக்கான்? நீயே நாளைக்கு ஏதோ ஒரு சூழல்ல பதிவியில உட்கார்ந்தா அகத்தியனை போலத்தான் நடந்துக்குவேன்னு என்னைப் பார்த்துச் சொல்றான்.
அந்த இடத்துல அப்படிப்பட்டவன் தான் உட்கார முடியுமாம். நமக்கு நம்ம பொழப்பு முக்கியமாம். அந்தக் கடை வச்சு அவன் ஆயிரம் கனவு கண்டு கிட்டு இருக்கானாம். இனி இதுபோல எம்.எல்.ஏ சரியில்ல கொள்ளையடிக்கிறான்னு நான் உளறுனா என் வாயையே பஞ்சர் ஆக்கிடுவானாம்!
அவன் அப்படிப் பேசியதும் அவன் வாயை உடைக்கணும்ன்னு தான் முதலில் தோனுச்சு. ஆனா அப்படிப் பண்ணினா நமக்குள்ள பகை மட்டும்தான் வளரும். அதுதான் அடக்கிக்கிட்டேன்.
அவனும் அந்த எம்.எல்.ஏவை போலப் பணத்துக்குப் பேராசை பட ஆரம்பிச்சிட்டான். அதுக்காகவே இன்னொரு நல்ல கேண்டிடேட்டை அகத்தியனை எதிர்த்து நிக்க வைக்க எல்லா ஏற்பாட்டையும் செஞ்சு முடிச்சுட்டு, அவனுக்கும் வேப்பிலை அடிச்சு நம்ம பக்கம் இழுக்கலாம். அதுவரை இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேணாம்.” என்றான்.
***
---தொடரும்---
அத்தியாயம் 05
வீட்டிற்குள் நுழைந்த விழியனை எதிர்கொண்ட அம்மா வாணி மனதினுள், ‘சென்னையில போய் வேலை பார்க்குறதுக்கு விருப்பமில்லைனு சொல்றவனை நான் கட்டாயப்படுத்த கூடாதாம், அவரும் சொல்றாரு வீட்டு பெரியமனுஷனும் சொல்றாங்க..
கேட்டரிங் படிக்க ஆசைப்பட்டவனை நாம கட்டாயப்படுத்தி இன்ஜினியரிங் போனு அனுப்பினோம். அவனும் கடனேன்னு படிச்சு முடிச்சு இதோ ஒரு வருஷமா நம்ம சந்தோசத்துக்காகச் சென்னைக்கு வேலை பார்க்க போனான்.
ஆனா, அவனுக்கு அது செட் ஆகலை. தோளுக்கு மேல வளர்ந்துட்டான். இனி பிள்ளைங்க முடிவுக்குக் குறுக்க நிக்கக் கூடாது. முடிஞ்சவரை சப்போர்ட்டா இருப்போம்னு சொல்லிட்டாங்க.
இனி நான் என்னத்த சொல்ல. இதையாவது உருப்படியா செஞ்சு முன்னேறினா நல்லது தான்.
ஆனா, எம்.எல்.ஏ வை பார்க்கப் போயிட்டு வந்ததில் இருந்து உம்முன்னு அங்கிட்டு இங்கிட்டு அலையிறானே ஒழிய, போன காரியம் என்னாச்சுன்னு சொல்ல மாட்றானே!’ என யோசனையோடு மகனை நோட்டமிட்டார் வாணி.
‘இன்னும் ஒரு மணி நேரத்தில் பெரியவன் வேற பொண்டாட்டியோடு வந்துருவான். அதுக்குள்ள இவன் வாயத் தொறந்து சொன்னாத்தானே....
மதி வந்த பிறகு அவன் கிட்டயும் இது பத்தி கலந்து பேசி ஒரு முடிவெடுக்கணும். இந்தப் பய பாட்டுக்கு திடீர் திடீர்னு முடிவெடுத்து எல்லோரையும் கிறுக்கு புடிக்க வைக்கிறானே!
என்னை இப்படிப் புலம்பவிட்டுட்டு குப்புற படுத்திருக்கான். அங்க என்ன நடந்துருக்கும்?’ என மனதிற்குள் தர்க்கம் செய்து கொண்டிருந்தார்.
அப்பொழுது, எப்போதும் போலக் காலை உணவிற்குப் பின் வெளியில் சென்று தனது வயதொத்த நண்பர்களுடன் அளவளவி விட்டு திரும்பும் அவனின் தாத்தா காளிதாசும் வீட்டினுள் நுழைந்தார்.
உள்ளே வந்தவர் மருமகளிடம், “எம்மா வாணி தண்ணி கொடும்மா, இந்த வெயிலுக்கு எம்புட்டு தண்ணி குடிச்சாலும் தாவு அடங்கவே மாட்டேங்குது.” என அடுக்களை வாசலில் நின்று சத்தம் கொடுத்தார்.
அவருக்குத் தண்ணீர் கொண்டு வந்து நீட்டிய வாணியிடம், “ எம்.எல்.ஏ கிட்ட கடை அட்வான்ஸ் பத்தி பேச போறேன்னு சொல்லிட்டு போனவன் வந்துட்டான் போல, வெளியில அவனோட பைக்கும் வாசலில் செருப்பும் கிடக்குது. பய உன்கிட்ட ஏதாவது சொன்னானா?” எனக் கேட்டார்.
“என்னத்த சொன்னான்? ஒன்னும் சொல்லல! வந்ததில் இருந்து அவன் மூஞ்சியே சரியில்லை. உள்ள போய்க் கவுந்து படுத்து கிடக்குறான்.” என்றார் வாணி.
அதைக்கேட்டு யோசனையுடன், “ஏனாம், நீ என்ன ஏதுன்னு விசாரிக்கலையா?” எனக் கேட்டார்.
“நான் எதுக்குக் கேக்கணும், நாம சொல்லித்தான் அவன் எல்லாம் முடிவு பண்றானா? அவனுக்குக் கடை எடுக்கப் பணம் வேணுமுன்னா அவனா வந்து கேக்கட்டும்.
ஆனா, அவன் மூஞ்சிய பார்த்தா போன விஷயம் நல்லபடியா முடியலையோன்னு தோனுது. நீங்க போய் உங்க பேரன்கிட்ட விசாரிங்க மாமா, பெரியவன் பொண்டாட்டியோட வரதுக்குள்ள என்ன ஏதுன்னு என்கிட்ட சொல்லுங்க.” என்றார் வாணி.
அறைக்குள் சென்ற காளிதாஸ் அவன் உறங்காமல் படுத்திருக்கிறான் எனக் கண்டு கொண்டார்.
எனவே, “என்ன தொரை? என்னமோ எம்.எல்.ஏ கிட்ட அவரோட கடையை லீசுக்கு எடுக்குறதை பத்தி பேசப்போறேன்னு போனவன், வந்து வீட்டில எதுவும் சொல்லாம இப்படிக் கவுந்து படுத்திருந்தா என்ன அர்த்தம்? ஏன் கடையை உங்களுக்குக் குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாரா எம்.எல்.ஏ?” எனக் கேட்டார்.
அவர் அவ்வாறு கேட்டதும் அதற்கு மேல் மனதில் உள்ள வெம்மையை மறைக்க முடியாமல் அவரிடம் தனது ஆதங்கத்தைக் கொட்டினான்.
“ஏன் தாத்தா, இவனெல்லாம் ஒரு எம்.எல்.ஏன்னு கொண்டு போய் ஒய்யாரத்தில தூக்கி வச்சிருக்கோம். சரியான கிரிமினலா இருக்கான். வர எலக்சன்ல அந்தக் கட்சியில் மறுபடி அவனுக்குத்தான் சீட் கொடுக்குறாங்க. ஆனா, இந்தத் தடவை அவனை ஜெயிக்க விடக்கூடாது தாத்தா. வேற ஒரு நல்ல கேன்டிடேட்டா பார்த்து ஜெயிக்க வைக்கணும்.” என ஆதங்கத்துடன் சொன்னான்.
“வேற யாரை ஜெயிக்க வைக்கப் போற விழியா? ஒன்னு இவன் வருவான், இல்லனா இப்போ எதிர்கட்சியில இருக்குற இவனைப்போல வேற ஒருத்தன் வருவான்.” என்றார்.
“ஏன் தாத்தா, இங்க நல்லவங்க யாருமே அரசியல்வாதியா இல்லையா? அரசியல்வாதினாலே கொலைகாரன், கொள்ளைக்காரன் தான்னு ஆகிடுச்சு. அரசியல்வாதி கூடப் பழக்கம் இருக்குன்னா கூட அவனைப் பார்த்து பயந்து ஒதுங்கிப் போறது போல ஆகிடுச்சு. அரசியல்வாதி இருக்குற பகுதியில நடமாடக்கூட, ஏன் சத்தமா பேசக்கூடப் பயமா இருக்கு.
இதோ இன்னைக்கு நான் போன எம்.எல்.ஏ வீடு இருக்குற தெருக்குள்ள போனதும் அங்க... அங்க... குண்டர்கள் நிக்கிறாங்க. கொஞ்சம் சத்தமா எதுவும் பேசினா கூட நம்மைப் பொளந்து கட்டிடுவாங்களோன்னு பயமா இருக்கு. அப்படிப்பட்டவன் எப்படி நல்லது செய்வான்? அரசியல்வாதினாலே கொலைகாரன் கொள்ளைக்காரன் தானா? ஏன் தாத்தா இங்க நல்லவங்க யாருமே அரசியல்வாதியா இல்லையா?” எனக் கேட்டான்.
அவன் சொன்னதைக் கேட்ட அவனின் தாத்தா, “அதான், இங்கயிருக்கிற அரசியல்வாதி எல்லாம் கொள்ளையடிக்கிறவன்னு நீ சொல்லிட்ட தானே. கொள்ளையடிக்கிறவன் யாரு?
திருடன் கிட்டயே கஜானா சாவியைப் பல வருசமா நாம கொடுத்துட்டோம். அந்தத் திருடன் என்ன பண்ணுவான். அவனோட திருட்டு கும்பலுக்குப் பலமான அஸ்திவாரம் எழுப்புவான், அது தான் இங்க நடந்துருக்கு.
அரசியல்வாதிங்கற போர்வையில் உள்ள திருடன் கிட்ட நாம ஆட்சியைக் கொடுத்துக் கஜானா காசை செலவு செய்ற அதிகாரத்தையும் இரண்டு தலைமுறையா கொடுத்துட்டோம்.
அரசாங்கம் திட்டங்களைப் போடுவதும், செயல்படுத்துவதும் இந்த அரசியல்வாதிகளை வைத்துத்தான். இந்த அரசியல்வாதிங்க திட்டத்துக்கு ஒதுக்கும் பணத்த தன்னோட திருட்டு கூட்டங்களோடு பகிர்ந்து உண்டு ருசி கண்ட பூனையா கொழுத்துட்டான்.
ருசி கண்ட திருட்டுப் பூனை இனி அந்த ருசியை விடுமா? அந்த ருசிய தக்க வச்சுக்க என்னென்ன செய்யணுமோ! யாரை யாரை குத்தி கவிழ்க்கணுமோ! அத்தனைக்கும் அடியாள் திரட்டி தன்னோட கூட்டமா கொள்கைன்ற போர்வையைப் போர்த்தி, நல்லவன்ற முகமூடிய மாட்டி அரசியலில் வேட்டையாடிட்டு இருக்கிற அவனோட தேவை பணம். அந்தப் பணத்தைச் சம்பாதிக்க அதிகாரம் மட்டுமே அவங்களோட குறிக்கோள்.
அந்தப் பணம் வச்சிருக்குற பெரும் வியாபாரிகள் கூட இப்போ இந்த அரசியல்வாதிகள் கூடக் கூட்டணி வச்சுக்கிறாங்க. வியாபாரியோட எண்ணம் பணம் சம்பாதிப்பது. அதுக்கு வியாபாரத்தைப் பெருக்கப் பணத்தால் அரசியல்வாதிகளை வளைத்து தங்களின் கையாளாக வைத்திருக்காங்க பெரும் வணிகர்கள் விழியா!
இப்போ அரசியலில் உள்ளவங்க அரசியல் பலமும், பண முதலைகளின் பலமும் கொண்ட கூட்டமா இருக்குது. அதனாலதான் சாதாரண மக்கள் அரசியல்ன்னு சொன்னாலே அலறி அடிச்சுக்கிட்டு ஓடிடுறாங்க.
என் புள்ள டாக்டர் ஆகணும், இஞ்சினியர் ஆகணும், பெரிய ஆடிட்டர் ஆகணும்னுதான் சொல்றாங்களே தவிர யார் வீட்டிலாவது என் மவன் எம்.எல்.ஏவாகணும், மந்திரியாகணும், பிரதமராகணும், நல்ல அரசியல் தலைவராக ஆசைப்படுறாங்களா? குழந்தைகளுக்கு அந்த எண்ணத்தை விதைக்கணும்னு நினைக்கிறாங்களா? ம்ஹூம் பயம். அரசியல்வாதின்னா ரவுடியா தன் பிள்ளை வளர்ந்து நிக்கணும்ற அளவு அரசியல்வாதின்ற பிம்பம் மக்கள் மனதில் அத்தனை அகோரமா பதிஞ்சிருக்கு.” என்றார்.
“அப்போ அரசியல்னாலே இப்படித்தான்னு எல்லாரும் ஒதுங்கிக்கிட வேண்டியதுதானா?” எனக் கேட்டான் விழியன்.
“மனிதன் எப்போ குழுவாக வேட்டையாடி பகிர்ந்து உண்ண ஆரம்பிச்சானோ, அன்னைக்கே அரசியல் ஆரம்பிச்சிடுச்சு. பகிர்ந்து குடுக்க ஒரு தலைவன், அத்தலைவனைச் சுற்றி அவனின் மேல் நம்பிக்கை இருக்கிற ஒரு கூட்டம் எப்போ உருவானதோ, அப்பவே அரசியல் என்பதும் உருவாகிடுச்சு.
அரசியல் இல்லைனா ஒரு நாகரீகமான சமூகம் உருவாக முடியாது. குழுவாக வாழும் மனிதர்கள் தங்களின் பிராந்தியத்தைப் பாதுகாக்க, அதற்கான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்க, ஒரு ஒழுங்கின் கீழ் அச்சமூகம் செயல்பட, சட்டங்கள் இயற்றப்பட அரசாங்கமும் அரசியலும் அதற்கான அரசியல்வாதிகளும் தேவை விழியா.
அரசாங்கமும் அது இயங்க அரசியலும், அரசியல்வாதிகளும் இல்லை என்றால் ஒரு ஒழுங்கான வாழ்க்கை முறை யாருக்கும் வாய்க்காது. ஒரு நாளை கூட யாராலும் எளிதாகக் கடக்க முடியாது.
ஒரு நாடு நல்ல முறையில் சிறப்பாகச் செயல்பட, மக்கள் அமைதியாக வாழ, வாழ்க்கை தரம் உயர, அறிவில் உயர, தேவையான கல்வி கிடைக்க, நல் ஒழுக்கம், பண்பாடு காக்க, நல்ல அரசியல் அந்நாட்டில் நிலவ வேண்டும்.
ஆனால், அரசியலில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறவன் அறிவாளியாகப் பலபேரை தனக்குக் கீழே திரட்டி ஒரு கட்டுக்கோப்பான ஒரு கட்சியை உருவாக்கிக் கொள்ளும் தலைமைப் பண்பு கொண்டவனாக இருந்தால் மட்டும் போதாது. உண்மையான மக்கள் நலம் விரும்பியாக இல்லாமல் அவர்களுக்குச் சேவை செய்யும் பண்பு இல்லாதவனா இருந்தால் அவன் செலுத்தும் ஆட்சி நல் ஆட்சியாக இருக்காது விழியா...!” என்றார்.
விழியன், அவன் தாத்தா சொன்னதைக் கேட்டு, “அப்போ சேவை பண்றவங்களே இங்க இல்லையா தாத்தா? அப்படி இல்லன்னு சொல்ல முடியாது! நீங்களே படிக்க முடியாத பிள்ளைகளுக்கோ அல்லது ஏழ்மையில் மருத்துவச்செலவு செய்ய முடியாம திணறுபவர்களுக்கோ உதவி கிடைக்க லெட்டர் கொடுத்து, பூபதிராஜா அவங்களைப் பார்த்து அந்த லெட்டரை கொடுங்க, அவர் உதவி செய்வார்ன்னு சொல்லி அனுப்பியதை நான் பார்த்திருக்கேனே.
அவங்களும் அவர்கிட்ட போய் உதவி கேட்டு பயனடைந்து இருப்பதையும் நானே பார்த்திருக்கேனே. ஏன் தாத்தா அவரையே நம்ம தொகுதியில் சுயேட்சையா நிக்கச் சொன்னா என்ன? அவர் போலச் சமூகச் சிந்தனை, அக்கறை உள்ளவங்க பதவிக்கு வந்தாத்தான் நாடு உருப்படும். நீங்க எனக்கு லெட்டர் குடுங்க தாத்தா நான் அவரைப் பார்த்து பேசுறேன்.” என்றான்.
அவன் அவ்வாறு சொன்னதும் காளிதாஸ் சொன்னார். “நீ நினைக்கிறது போல அரசியலுக்கெல்லாம் அவர் வரமாட்டார். நிறையச் சொத்துள்ள மனுஷன். அதே போல உதவணும்ற மனசும் உள்ளவர். ஆனா, அரசியலில் எல்லாம் ஆர்வம் கிடையாது.
எனக்குத் தெரிஞ்சு ஒரு இருபது இருபத்தைந்து வருஷம் முன்பு உன் வயசு இருக்கும்போது, ஒரு தடவை எலக்சன்ல பூபதி சுயேட்சையா போட்டி போட்டிருக்கார். ஆனா ஜெயிக்கலை. அது பல கஷ்டத்தையும் அனுபவத்தையும் அவருக்குக் குடுத்துருச்சு என நினைக்கிறேன், அதான் இந்த அரசியலே எனக்கு வேணாம்னு ஒதுங்கி இருக்கார்” என்றார்.
“என்ன சொல்றீங்க தாத்தா? ஏற்கனவே எலக்சன்ல நின்னுருக்காரா அவர், அப்போ கட்டாயம் அரசியல் பற்றிய புரிதல் இருக்கும். நான் அவரைப் போய்ப் பார்த்தே ஆகணும்.
நம்ம ஏரியாவில் இவர் போல மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறவங்கதான் ஆட்சியில் இருக்கணும். பிளீஸ் தாத்தா, உங்க பேரன், நான் அவர்கிட்ட பேசணும்னு லெட்டர் கொடுங்க. அப்போதான் அவரைப் பார்க்க அவரின் பங்களாவிற்குள் என்னை விடுவாங்க. பிளீஸ், பிளீஸ், பிளீஸ் தாத்தா!” என்றான் விழியன்.
“வேணாம் விழியா. உன் அம்மாவுக்கு நீ இப்படி அரசியல் பக்கம் போறது எல்லாம் சுத்தமா பிடிக்காது. உன்னை ஊர் வம்பை இழுத்து போட்டுச் செய்ய வைக்கத் தூண்டுறது நான்னு என் மேல அவளுக்கு வருத்தம் இருக்கு. உன் அண்ணனை பாரு படிப்பு, வேலை, கல்யாணம்னு செட்டில் ஆகிட்டான்.
இது போல அரசியல்ல இறங்கினா தனிப்பட்ட வாழ்க்கையில் நீ செட்டில் ஆக முடியாது. அப்படி ஒரு நிலையில் உன்னை வச்சு, உன் அம்மாவால பார்க்க முடியாது, அதுவும் இல்லாம நீ சென்னையில் கம்பெனி வேலைக்கெல்லாம் போக இஷ்டமில்லைனு சொன்னதைக் கேட்டு, நீ எப்படியாவது செட்டில் ஆனா போதும்னு முடிவுக்கு வந்தாங்க.
‘பிஸ்னஸ்தான் செய்வேன்னு ஒத்தக்காலில் நிக்கிறான், அதாவது உருப்படியா செய்யட்டும், நாம கூடத் துணையா நிப்போம்னு’ பேசி முடிவெடுத்துருக்காங்க. நீ அதையும் செய்யாம, அரசியல் அது இதுன்னு இறங்கினா அவங்களுக்கு ரொம்ப வருத்தம் ஆகிடும். சரி அவங்ககிட்ட என்ன பதில் சொல்லப்போற ஹோட்டல் லீஸ் எடுக்குறதைப் பத்தி?” எனக் கேட்டார்.
“வீட்டுல அம்மா அப்பாட்ட சொல்லணும் தாத்தா. ஆனா, அவங்க எதிர்பார்ப்பை என்னால் பூர்த்திச் செய்ய முடியாது அதுக்கு மன்னிப்பு கேக்கணும். அதேபோல நான் எனக்குத் தேவையான எதுக்கும் யார்கிட்டயும் போய் நிக்கமாட்டேன். அதே போல என்னோட பாதை இது போல விஷயத்துல திசை மாறிப்போயிடுச்சுனா என்னை நம்பி வர பொண்ணோட எதிர்பார்ப்பை என்னால பூர்த்திச் செய்ய முடியாது.”
இதை விழியன் சொல்லும்போது அவனின் மனதில் வெண்ணிலாவின் முகம் மின்னி மறைந்தது. அதை நீண்ட மூச்சுடன் சமாளித்தவன் அதனால, “நான் கல்யாண லைப்பை பத்தியோ! ஏன் கல்யாணம் செய்வேனான்னு கூடத் தெரியல?” என்றான்.
“விழியா! டேய் என்னடா இப்படிச் சொல்ற? கல்யாணம் பண்றதே சந்தேகமாம்ல ஒழுங்கா வேலையைப் பார்த்தமா, கல்யாணத்த முடிச்சு அதோட நாலு நல்லது செய்தோமான்னு இருக்குறதா இருந்தா மட்டும் தான் நான் சப்போர்ட் பண்ணுவேன். இல்லன்னா உனக்கு எதிரா நிக்கிற முதல் ஆளே நானாத்தான் இருப்பேன்.” என்றார்.
அவர் அவ்வாறு சொன்னதும், ‘தாத்தாவ சமாளிச்சுருடா விழியா’ என மனதிற்குள் சொன்னபடி, “ஹஹாஹா... அட ஜேம்ஸ்பாண்டு, உங்களை டென்சன் ஆக்கிட்டேனா? சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன். நம்மளால ஒண்டிக்கட்டையா எல்லாம் வாழ முடியாது.” என்று சொன்னவன்,
“ஆனா, வாழ்க்கையை ரசிச்சு வாழணும்னா கொஞ்சம் என் மனசு சொல்றதை செஞ்சாத்தான் எனக்குன்னு வரும் துணையோடு நான் சந்தோசமா இருக்க முடியும் தாத்தா.
நீங்களே எத்தனை தடவை என்கிட்ட சொல்லியிருக்கீங்க. பாட்டி உங்க மேல அத்தனை அன்பு வச்சிருந்தாங்கனாலும், ‘நானும் அவ பிள்ளைகள் மட்டும் என்ற சுயநலம் மட்டும்தான் இருக்கும். கொஞ்சம் கூட என்னோட பொதுநல கருத்துக்களோ அதைச் சார்ந்த என்னோட உணர்வுகளோ அவளுக்குப் பெரியதாகப்பட்டது கிடையாது. அதை என்னமோ பெரிய அபத்தமாத்தான் பார்ப்பாள்.
அவ அன்புக்குக் கட்டுப்பட்ட என்னாலும் அவளை மீறி மனதினுள் அத்தனை ஆசை இருந்தாலும் முழுமூச்சா செய்ய நினைக்கிற நிறையப் பொதுக் காரியங்களில் கலந்துக்க முடியாம ஒதுங்கி நின்னுட்டேன்’ சொன்னீங்கதானே!” என்றான்.
அவன் அவ்வாறு சொன்னதும், “ஆமாம் சொன்னேன் விழியா, அதுனால என்ன கெட்டுப்போயிருச்சு? மில் சூப்ரவைசரா ஏழை குடும்பத்தில் பிறந்து ஆளான நான், இந்த வீட்டையும் கட்டி, ஒத்த மகனுக்கு வேண்டிய எல்லாம் என்னால செஞ்சு கொடுக்க வைத்து,
இதோ நான் ரிட்டயர்டு ஆன பணத்தை அப்படியே பேங்கில் போட்டு அந்த வட்டியை எடுத்து தேவைக்குச் சொர்ப்பமா கிடைக்கும் பென்சன் பணத்தையும் கொண்டு சொகுசா இருக்குறேன்.
இதெல்லாம் சாத்தியமானது அவ அப்படி இருந்ததாலத்தான். இல்லைன்னா இந்த வீடும் சாத்தியமில்லை. என் பேங்க் பேலன்சும் சாத்தியமில்லை. நடுத்தரவர்க்கம் என்ற நிலைக்கும் நாம வந்துருக்க முடியாது.” என்றார்.
அவர் அவ்வாறு சொன்னதும், “அப்போ பினான்சியலா தன்னிறைவு ஆகுறது மட்டும்தான் ஒவ்வொருத்தரோட வாழ்க்கையிலும் முக்கியக் குறிக்கோளா தாத்தா?
இப்படி ஒவ்வொருத்தரும் தன் குடும்பம் மட்டும் நல்லா இருந்தா போதும், அதுக்குத் தேவையானதை செய்ய எந்த அளவும் வளைந்து கொடுக்கலாம். நமக்கு எதுக்கு வம்புன்னு ஒதுங்கி போகலாம்ன்னு கற்று கொடுத்த எங்க முன்னால் தலைமுறையின் வழிகாட்டுதல், எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு? முதுகெலும்பில்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்கி இருக்கு.
‘பாதகஞ் செய்பவரைக் கண்டால் நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா- அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா’ன்னு பாடிய பாரதியின் வரிகளை வெறும் பாட்டோடு நிறுத்திக்கணுமா?
ஒதுங்கிப்போ, நமக்கெதுக்கு வம்பு, மாப்பிள்ளைன்னு பார்த்தா அவனுக்குக் காசு பணம் இருப்பதோடு, தான் உண்டு தன் வேலையுண்டுன்னு ஒதுங்கிப் போற தன்மை உள்ளவனா இருக்கணும் போன்ற குணங்களை இங்க வரையறை வச்சுது யார் தாத்தா? பொது நலத்தில் அக்கறை உள்ளவனா இருக்குறவனை, அந்தத் தீரம் உள்ளவனைக் கொண்டாடிய நம் சமூகம் ஏன் தாத்தா மறைஞ்சு போச்சு?
தனி மனுஷ வாழ்க்கையில் சுயநலமே பிரதானமா ஆனதால இன்னைக்குச் சமூகத்தில் பொதுநலம் கேள்வி குறியாகிடுச்சு. எனக்குச் சுயநலமில்லா வாழ்க்கை வேணும். சுத்தி இருக்கும் மக்களைக் கொஞ்சமாவது பொதுநலத்தை நினைக்க வைக்கணும்.
அதுக்குக் காசு பணம் மேல ரொம்ப ஆசை இல்லாத, உயிர் வாழ சம்பாதிச்சா போதுமென, இருக்குறதை கொண்டு பகிர்ந்து உண்டு நிறைவா வாழும் குணம் உள்ள பொண்ணு வேணும். அப்படி ஒருத்தியை பார்த்துட்டா மனைவியா கல்யாணம் செய்துக்குவேன்.” என்றான்.
“என்ன விழியா இப்படிச் சொல்லிட்ட? அப்போ தெற்குத் தெருவில உள்ள அந்தப் பொண்ணு?” என்று இழுத்தார். தனக்கு அவனின் விஷயம் தெரியும் எனக் காண்பிக்க.
“தாத்தா... உங்களுக்கு எப்படித் தெரியும்? ஆனா, அவ... அவ வேணாம் தாத்தா. அவளோட எதிர்பார்ப்புக்கும் என்னோட லைஃப் ஸ்டைலுக்கும் ஒத்துவராதுன்னு சொல்லிட்டா! யோசிச்சுப் பார்த்தா அவள் சொல்றதும் சரிதான்.
ஒரு நாளைக்கு மூனு நேரமும் சாப்டாச்சா, குட் மார்னிங், குட் நைட்டுன்னு பேசியவள், இதோ ஒரு வாரம் ஆச்சு. ஆனா எந்த மெசேஜும் இல்லை. எந்தப் போனும் இல்லை.
என்கூட ஒரு நாள் பேசாம இருந்தாலும் கிறுக்கு பிடிச்சிடும் செத்துருவேன்னு சொன்னவ, நான் தொடர்ந்து அவள் கிட்ட சென்னை வேலை எனக்குப் பிடிக்கலை விடப்போறேன்னு என் நிலை புரியவைக்க, ஒரு ஐம்பது தடவையாவது போன் பண்ணுறேன். ஆனா எடுத்து விளக்கம் கேட்க கூட அவ பிரியப்படலை. இனி அவ எனக்கு வேணாம்.
என்னோட சிந்தனைகளுக்குள் அவளை வலுக்கட்டாயமா இழுப்பது நல்லது இல்ல. இப்போவாவது இது எனக்குப் புரிஞ்சுச்சே. கல்யாணம் செய்து ஒருத்தரை ஒருத்தர் வெறுத்து பிரியறதுக்கு இப்போவே பிரியிறது மேல். என்ன கொஞ்ச காலம் மனசு வலிக்கும்... ஆனா, அதுவும் கடந்து போயிடும்ல தாத்தா.” என்றான்.
***
----தொடரும்----
அத்தியாயம் 04
வாட்ச்மேனோ ஸ்ரீராமிடம், “அதெல்லாம் உள்ள யாரும் போக முடியாது, அய்யா இல்ல. நீங்க போயிட்டு இன்னொரு நாள் வாங்க.” என்றார்.
“என்ன வாட்ச்மேன் இப்படிச் சொல்றீங்க? எத்தனை காரு வாசலில் இருக்கு. அத்தனை பேரும் எம்.எல்.ஏவை பார்த்து பேச வந்து உள்ளதானே இருக்காங்க. எம்.எல்.ஏவும் உள்ளதானே இருப்பாரு.” என்றான்.
“இங்க பாரு தம்பி, அய்யா முக்கியமான பேச்சு வார்த்தையில இருக்கார். தெரியாத யாரையும் இப்போ உள்ள விடக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா ஆர்டரு எனக்கு வந்திருக்கு. நீங்க இங்க நின்னு என் கூட வாதாடுறது வேஸ்ட்.
நீங்க என்ன சொன்னாலும் நான் உங்களை இப்போ உள்ள விடப்போறது கிடையாது. போயிட்டு இன்னொரு நாள் அய்யா ஃப்ரீயா இருக்குறப்போ வாங்க. உள்ள கேட்டுட்டு அய்யா விடச் சொன்னா உங்களுக்குக் கேட்ட திறந்து விடுறேன்.” என்றார்.
அவ்வாறாக வாட்ச்மேனுடன் விழியன் பேசிக்கொண்டிருக்கும் போது ஸ்ரீராம், தனது அப்பாவுக்குப் போன் செய்து தாங்கள் அங்கு நிற்கும் விஷயத்தைச் சொல்லி, “உள்ளே விடமாட்டேகிறாங்க!” என்று சொன்னான்.
“இரு நான் வந்து உள்ள கூப்பிட்டு போறேன். நீ என்ன சொன்னாலும் அவன் கேட்கமாட்டான் நான் நேர்ல வந்தாதான்.” என்று சொல்லிவிட்டு உள்ளிருந்த ஸ்ரீராமின் அப்பா ரங்கராஜன் கேட்டுக்கு வந்தார்.
வந்து வாட்ச்மேனிடம், “என் பையன் தான்... அய்யா இவங்களை இந்நேரம் வரச் சொன்னாங்க.” என்று சொல்லவும்,
வாட்ச்மேன், “நீங்க சொல்றீங்கன்னு தான் உள்ள விடுறேன். எதுவும் அய்யா திட்டுனா உங்களைத்தான் கைக்காட்டுவேன்.” எனச் சொல்லிவிட்டு அவர்கள் மூவரையும் உள்ளே விடக் கேட்டை திறந்து விட்டான்.
அந்தக் கேட்டினுள் நுழைந்தவர்கள் ஒரு பத்தடி தாண்டியதும் அந்தப் பில்டிங்கின் முன்னால் வராண்டாவில் சற்றுப் பெரிதாக, பிரம்மாண்டமாக இருந்த கிட்டத்தட்ட பத்து, பதினைந்து பேர் அமர்ந்துகொள்ளப் போட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.
எம்.எல்.ஏ அகத்தியனுக்கு வலது மூலையில் சுழல் இருக்கை போடப்பட்டு, அதில் அமர்ந்து தீவிரமாக மற்ற இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். இவர்கள் அருகில் போகப் போக அவர்களின் பேச்சின் சாராம்சம் இவர்கள் காதில் துல்லியமாக விழ ஆரம்பித்தது.
“யோவ் நைனா, எலக்சனுக்கு மனு தாக்கல் பண்ண நாள் நெருங்கிடுச்சு. எனக்குத்தான் சீட்டுன்னு மேலிடத்தில் முடிவு பண்ணியாச்சு. அதனால இப்போ இருந்தே வேலை என்னென்ன செய்யணும்கிறதை பத்தி பேசிடலாம்.
எந்தெந்த ஏரியால நமக்கு ஓட்டு கன்ஃபார்மா விழும், எந்தெந்த எடத்துல நமக்கு அகெய்ன்ஸ்ட்ட ஓட்டு போகுன்னு நினைக்கிறீர்? சாதிவாரியாக ஓட்ட எப்படி எப்படித் தேத்தலாம்? எல்லாம் சொல்லு.
இப்போவே எவன் எவன புடிக்கணும், பேசி கவுக்கணும்னு முடிவு பண்ணிடலாம். சீட் தாக்கல் பண்ணி அறிவிப்பு வந்த பின்னாடி செலவுக்கு மேலிடத்தில் குடுக்குற காச மட்டும் நம்பிட்டு இருக்குற ஆள் நானு இல்ல. அதைத் தெரிஞ்சு தான் நமக்கே சீட்டை ஒதுக்குறாங்க.” என்றார்.
அப்பொழுது நைனாவுக்கு அடுத்து உட்கார்ந்திருந்தவர், “தலைவரே! ஆனா, மேட்டுத் தெருவில கொஞ்சம் நம்ம மேல அதிருப்தி.” என்று இழுத்தான்.
“என்னய்யா சொல்றான் அவன்?” என அதற்கும் நைனாவை பார்த்தே கேட்டார் அகத்தியன்.
அதற்கு அவர், “அந்தத் தெருவுல போன தடவை ஓட்டு மொத்தமும் நம்மளுக்குத்தான் விழுந்துச்சு. ஆனா அதுக்குப் பிறகு தண்ணி பிரச்சனை, அந்தத் தெருவை ஒட்டி இருக்குற அந்த ஓடை, சாக்கடையா மாறி குப்பக் கிடங்காவும் மாறியிருக்குற பிரச்சனைன்னு எதையும் நாம கண்டுக்கலையாம். அதனால, இந்தத் தடவை அவிங்க ஏரியாக்குள்ள நாம ஓட்டு கேட்டு போனா, உள்ள விடக்கூடாதுன்னு முடிவெடுத்துருக்காங்க. அதைதான் ரத்தினம் சொல்றாப்ள!” என்றார்.
“அப்படியா ரத்தினம்?”
“ஆமாங்க தலைவரே... விஷயத்தைக் கொஞ்சம் சீரியஸாத்தான் கொண்டு போகப் பார்க்குறாங்க, நம்மளை எதிர்க்கணும் என்ற விஷயத்தில தீவிரமாத்தான் இருக்காங்க.
அதை அந்தத் தெருவுல உள்ள ஒரு நாலஞ்சு பேரு தூண்டி விட்டுக்கிட்டு இருக்காங்க, அந்தச் சமூகத்து நாட்டாமைய கூப்பிட்டு பேசி தன்னகட்டணும். அந்த நாலு பேரையும் கொஞ்சம் முடக்கிப் போடணும். அப்போதான் பிரச்சனையைச் சமாளிக்க முடியும்.” என்றான்.
அதைக் கேட்ட அகத்தியன், “போன எலக்சன்ல ஒவ்வொரு ஓட்டுக்கும் துட்டை அள்ளி வீசி இருக்கேன். கைநீட்டி காசு வாங்கிட்டு, பிறகு அது செய்யல இது செய்யலன்னு சொல்லுதுக சனியனுங்க. கோபம் வருது. ஆனா, இது எலக்சன் நேரம் கோபப்பட்டுப் பிரச்சனை ஆகிடுச்சுன்னா ஓட்டு விழாது. அதை நினச்சு அடங்கி இருக்க வேண்டியிருக்கு.
செலவழிச்ச காசை வட்டியோட நான் திரும்பி எடுத்தா தானே அடுத்தத் தேர்தலுக்குச் செலவழிக்க முடியும்? காசு வாங்கிட்டு ஓட்டு போட்ட நாய்களுக்கு ரோசம் ஒரு கேடா?
ஏன் நைனா அந்த ஏரியாவுல யார் பேச்சை ஜனங்க கேப்பாங்க? அந்த ஏரியா பெரியமனுசங்கன்னு சொல்ற நாலு நாட்டாமைங்க இருப்பாங்கள்ல அவங்களை ஆள்விட்டு இங்க கூட்டிட்டு வரவை. கொஞ்சம் அதுகளுக்குக் கூடுதலா காச குடுத்து அங்க துள்ளிக்கிட்டு இருக்குறவங்களை எப்படிச் சமாளிக்கணும்னு சொல்லி அனுப்புவோம்.” எனக் கூறினான்.
அகத்தியனின் பேச்சுக்கு, “ம்... செஞ்சுரலாம். அது ஒன்னும் பிரச்சனை இல்லை.” எனப் பதில் கொடுத்தார் நைனா.
அவர்கள் பேசிக் கொண்டிருந்ததைச் சற்று எட்ட நின்று கேட்டபடி கேட்ட விழியனுக்கோ, அகத்தியன் மேல் மனம் முழுதும் அத்தனை எரிச்சல் மற்றும் கோபம் உண்டானது.
ஆனால் எதையும் வெளிக்காட்ட முடியாமல் இறுகிப் போய் இருந்தான். அதற்குப் பின் எந்தெந்த ஏரியா யார் யாரை எல்லாம் பணப்பட்டு வாடாவுக்குப் பிடிக்க என்று அங்கு அமர்ந்திருப்பவர்களிடம் கலந்து பேசி அகத்தியன் முடிவெடுத்தான்.
அதன் பின் அவர்களிடம், “காலை டிபன், நம்ம தோப்புல ஏற்பாடு பண்ணி இருக்கேன். எல்லாரும் அங்க போய்ச் சாப்பிட்டு கிளம்புங்க.” என விடை கொடுத்தான் அகத்தியன்.
பின் இவர்களின் புறம் திரும்பி, “ரெங்கா யாருய்யா அந்த மூனு பசங்க?” என அவர்கள் வந்ததை அவர் கவனித்து விட்டார் எனக் காட்டிக்கொள்ள, தனக்கு நம்பிக்கையான எடுபிடிகளுக்குள் ஓராளாக இருக்கும் ஸ்ரீராமின் அப்பாவிடம் கேட்டார்.
“தலைவரே... நேத்து அந்தப் பஸ் ஸ்டாண்ட் பின்னாடி மூடிக்கிடக்குற கடைய லீசுக்கு விடுறதை பத்தி நீங்க சொன்னதை என் பையன் கிட்ட சொன்னேன். அவனே அவன் கூட இவுங்க இரண்டு பேரை சேர்த்துக் கடை எடுத்து நடத்தணும்னு பிரியபட்டான். அவனோட ஃப்ரெண்ட்ஸுங்க இவிங்க தான்.
அதான் யாரும் பேசறதுக்குள்ள முன்கூட்டி உங்ககிட்ட பேசிடுவோம்பான்னு சொன்னான். அதான்..... இப்போவே உங்க காதில போட்டு வைப்போம்னு காலையிலேயே வரச் சொன்னேன்.” என்றார்.
அவர் கூறியதை கேட்ட அகத்தியன், “எப்பா பெரிய தொகையாச்சே, அம்புட்டு காசு போட்டு லீசுக்கு எடுத்துட முடியுமா உன்னால? காசு உன்கிட்ட இருக்க வாய்ப்பில்லையே!” என்றார்.
அவர் சொன்னதைக் கேட்டு அசடாகச் சிரித்துத் தலையைச் சொறிந்தபடி, “மொத்தமா அம்புட்டு என்னால போட முடியாது தலைவரே! அதான், மூனு பேரும் சேர்ந்து முதல் போட்டு கடையை எடுத்து நடத்துவோம்னு சொன்னான்.” என்றார்.
“ம். சரி சரி, யாருக்கோ கொடுக்குறத உனக்குன்னு கேக்கற கொடுத்துட்டா போச்சு.” என்று சொன்ன அகத்தியன்,
இவர்கள் மூவரையும் பார்த்து, “இதுல ரங்கா மவன் எந்த ஏரியான்னு எனக்குத் தெரியும் நீங்க ரெண்டு பேரும்?” எனக் கேள்வி தொக்கி நின்றார்.
அதற்குக் கதிர் பதிலளித்தான். “நாங்க மூணு பேருமே மஞ்சப்பூ தெரு தானுங்கய்யா. எல்லாரும் ஒன்னுக்குள்ள ஒன்னு தான்.” என்று பூடகமாக எல்லோரும் ஒரே இனம் எனக் குறிப்பிட்டான்.
ஏனோ செவ்விழியனுக்குப் பேசவே பிடிக்கவில்லை. சற்று முன்பு கூட்டத்தில் பேசப்பட்ட சாரம்சங்கள் அவனை மனதளவில் அத்தனை கொதிப்படையச் செய்திருந்தது.
அவனின் நிலையை முழுவதும் உணர்ந்து கொண்டவன் கதிரும் ஸ்ரீராமும்.
‘எம்.எல்.ஏ பேசுறதை கேட்ட இந்த விழியன் காண்டாவானே......
கடை டீலிங் நல்லபடி முடியிற வரை இவன் வாயை தொறக்காம இருக்கணும் ஆண்டவா!’ என ஸ்ரீ பயந்தான்.
ஆனால், அகத்தியனோ இவர்கள் மூவரில் நிமிர்வுடன் நின்ற விழியன் மேல் ஆராய்ச்சியுடன் பார்வையைச் செலுத்தினார்.
மற்ற இருவரும் ஒருவித பவ்வியத்துடன் நின்றிருந்தனர். எனவே விழியனின் உடல்மொழி கண்டு, “இது யாரு ரெங்கா?” என விழியனை சுட்டிக் கேட்டார்.
“தலைவரே, அவன்தான். எங்க தெருவுல போன தடவை நீங்க ஓட்டு கேட்டு வரும்போது தெருவுக்கு என்னென்ன தேவை இருக்குன்னு பெட்டிசன் கொடுத்தாரே முன்னால் கம்யூனிஸ்ட் காளிதாஸ், அவரோட பேரன். பேரு விழியனுங்க.” என்றார்.
“செவ்விழியன்னு சொல்லுங்க மாமா!” என ஸ்ரீராமின் அப்பாவிடம் சொன்னான் விழியன்.
“ஓ, அப்போ தாத்தா போல நல்லா பேசுவன்னு சொல்லு. நம்ம கட்சியில பசங்க உறுப்பினரா சேர்ந்து இருக்காங்களா?” எனக் கேட்டார் அகத்தியன்.
உடனே ஸ்ரீராம், “நான் காலேஜ் முடிச்சதும் மெம்பராகிட்டேன். நம்ம கட்சியில உறுப்பினர் கார்டு எல்லாம் என்கிட்ட இருக்கு. ஆனா, இவிங்க ரெண்டு பேரும் எந்தக் கட்சியிலேயும் மெம்பரா சேரல. ஒரு தடவை தான் நாங்க எல்லாம் ஓட்டே போட்டிருக்கோம்.” என்றான்.
“அப்போ, உடனே மத்த ரெண்டு தம்பிகளையும் நம்ம கட்சியில் உறுப்பினராக்கிடுங்க. எலெக்சன் வருதுல்ல. உன் பேரு என்ன சொன்ன செவ்விழியன்தானே. உன் தாத்தாவுக்கு உங்க ஏரியால நல்ல செல்வாக்கு இருக்குதுல்ல. அதனால நீ, நம்ம கட்சியில் சேர்ந்து இறங்கி வேலை பார்த்தா கொஞ்சம் வெயிட்டா இருக்கும்.
இந்தத் தடவையும் நானே இங்க எம்.எல்.ஏ ஆகிட்டேன்னு வைங்க, அந்த ஹோட்டல் உங்களுக்குத்தான் லீசுக்குக் கொடுப்பேன். அதுவும் ஐம்பதே லட்சத்துக்கு. என்ன தம்பிகளா இறங்கி வேலை பார்ப்பீங்கதானே?” என்றார்.
அவர் அவ்வாறு சொன்னதும் விழியன், “அய்யா நாங்க எறங்கி வேலை பார்க்கலாம் தான். ஆனா பாருங்க, எங்க தெருவுக்குத் தண்ணியே சரியா வர மாட்டேங்குது. அதோட எங்க தெருல இருக்குற பப்ளிக் டாய்லெட்டில் கூடத் தண்ணி இல்லாம அடைச்சு போட்டுட்டாங்க.
ஒரு பத்து பதினைஞ்சு வீடுகள்ல கக்கூஸ் வசதி இல்ல. அந்த வீட்டுகாரங்க எல்லாம் அந்த டாய்லெட்டை தான் யூஸ் பண்றாங்க. அது அடைச்சு போட்டதால அந்த வீட்டுல இருக்குற பொண்ணு பிள்ளைங்க பாவம் கஷ்டப்படுறாங்க.
அதனால அந்த டாய்லெட்டிலும் தண்ணி வசதி உடனே ஏற்பாடு செஞ்சு, தொறந்து விட வழி செஞ்சா நல்லா இருக்கும். அதுபோல ரேஷனில் சீனி போடணும்னா ரவை வாங்கித்தான் ஆகணும், கோதுமை வாங்கணும்னா, சோப்பும் சேமியாவும் வாங்கித்தான் ஆகணும் இல்லன்னா போட முடியாது போ...னு விரட்டுறான் ரேஷன் கடைக்காரன்.
அன்றாடங்காட்சிங்க நாங்க என்ன பாயாசமா கிண்டப்போறோம்? சேமியா வாங்கச்சொல்லி கட்டாயப்படுத்துறான். அனாவசிய செலவு பண்ற நிலைமையிலேயா இருக்கோம்னு புலம்புறாங்க. அதை நீங்க வந்து என்னன்னு கொஞ்சம் கேக்கணும்.” என்று மேலும் பேசப் போனவனைத் தடுத்த ரெங்கா,
“விழியா அதெல்லாம் பக்காவா நம்ம ஏரியாவுக்குத் தலைவர் செஞ்சு கொடுத்துடுவாரு. இப்போ நாம பேச வந்ததைப் பத்தி மட்டும் தலைவர்கிட்ட பேசுப்பா!” என்றார்.
அவரிடம் விழியன், “மாமா, அய்யா தான் கட்சியில சேரச் சொல்லி அவர் எம்.எல்.ஏவாக எங்களை இறங்கி வேலை பார்க்கச் சொல்லி சொன்னாரு.
அதான், இதெல்லாம் செய்யச் சொன்னேன். உடனே செஞ்சு தந்துட்டா இதைச் சொல்லி அவருக்கே ஓட்டை போடுங்கன்னு நாங்க சொல்லலாம்ல அதுக்குத்தான் சொன்னேன்.” என்றான்.
அவன் அவ்வாறு சொன்னதும் அகத்தியன், “இங்க பாருடா, பய பாயிண்டை பிடிச்சுட்டான். ரங்கா இப்போ என்ன செய்றீருன்னா நாளைக்கே அந்தக் கக்கூஸ் தண்ணி பிரச்சனையைச் சரி செஞ்சு, அது தொறந்து விடச் சொல்லு.
தண்ணி சப்ளைக்கு என்னோட பி.ஏ.கிட்ட நான் சொன்னேன்னு சொன்னா அரேஞ் பண்ணிடுவான். அப்படியே முனிசிபல் தண்ணிக்கு வண்டி தண்ணி அடிக்கச் சொல்லு.
இவனைப் போல விவரமா மக்களும் நல்லது செய்யணும்ன்ற எண்ணம் இருக்குறவங்க தான்யா நம்ம கட்சிக்குத் தேவை. அப்போ தம்பி நீ சொன்ன பிரச்சனையில இரண்டையும் நாளைக்கே சரியாக்கிடுறேன்.
அந்த ரேஷன் கடை பிரச்சனையும் கூப்புட்டு பேசி என்ன எதுன்னு விசாரிச்சு சரி பண்றேன். அதே போல நீங்க சொன்னதுபோல நம்ம ஏரியால என்னோட சேவையைச் சொல்லி ஓட்டை நம்மளுக்கே போட வச்சு இந்தத் தடவையும் அமோகமா ஜெயிக்க வச்சிருங்க.” எனச் சொன்னார்.
கூட்டத்தில் அவர் பேசியதிற்கும் இப்போது தங்களிடம் பேசுவதற்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டு,
‘எல்லாம் இந்த நாற்காலிக்காகப் போடுற இரட்டை வேஷம். இருடி, இந்தத் தடவை நீ ஜெயிக்கக் கூடாதுன்னு அத்தனை வேலையும் பார்க்க நானே களம் இறங்குறேன்.’ என மனதினுள் சொல்லிக்கொண்டான் விழியன்.
“அப்போ, ரொம்பச் சந்தோசம் தம்பிகளா! கடை அட்வான்ஸ் உங்களால எவ்வளவு இப்போ கொடுக்க முடியுதோ, இன்னும் ஒரு பத்து நாளில வந்து கொடுத்துடுங்க.
நான், வேற யாருக்கும் லீசுக்கு விடுறதை பத்தி இனி யோசிக்க மாட்டேன். இன்னும் ஒன்னு ஞாபகம் வச்சுக்கோங்க. எலெக்சன் ஜோலி எல்லாம் முடிஞ்ச பிறகுதான் ரிஜிஸ்ட்ரேசன் எல்லாம் பண்ண முடியும்.
அதுவரை என்னால வேற எந்த ஜோலி பத்தியும் யோசிக்க முடியாது. அதே போல என்னை ஜெயிக்க வைக்கிறது உங்க ஜோலி மறந்துடாதீங்க. அப்போ பார்ப்போமா!” என அகத்தியன் எழுந்து நின்று கை குவித்தார் விடைகொடுக்கும் முகமாக..இவர்களும் பதில் வணக்கம் சொல்லிவிட்டு அந்தப் பங்களாவை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
---தொடரும்---
அத்தியாயம் 03
விடிந்து எழுந்ததுமே விழியனின் அம்மா வாணி அவன் முந்தைய தினம் சொன்ன சேதிக்கு மறுபடியும் திட்டி தொடர்ந்து அறிவுரை வழங்க ஆரம்பித்துவிட்டார்.
‘இன்னும் கொஞ்ச நேரத்தில் எம்.எல் ஏவை பார்க்க போகும் விஷயத்தைப் பற்றி வீட்டில இந்த அம்மாவிடம் எப்படிப் பேச? வேணாம் அப்பா வரட்டும்.’ என நினைத்தான்.
‘காலையில் ஐந்தரை மணிக்கு வீட்டில் இருந்து ஹோட்டலுக்குப் போகும் அவனது அப்பா, ஒன்பது மணிக்கு கடைப்பையன் குமரேசுனோடு வருவார்.
அமாவுக்குக் கடுபடியில் கூட வேலை செய்ய அமர்த்தியிருக்கும் சமுத்திரம் ஹோட்டலுக்கு வெள்ளைப்பூண்டு இஞ்சியை உரித்து அரைத்து வைத்திருப்பார். தேங்காய் துருவி வைத்திருப்பார் அதை உடன் வரும் குமரேசனிடம் குடுத்துவிட்டுவிட்டு ஒருமணி நேரம் ரெஸ்ட் எடுப்பார். அப்பொழுது அப்பாவிடம் பேசணும் என்று காத்திருந்தான்
அப்பாட்ட விஷயத்தை மட்டும் சொல்லிட்டு அவங்க எது சொன்னாலும் காதில் வாங்காமல் பதிலுக்குத் தர்க்கம் பண்ணாமல் கிளம்பிப் போயிடணும். போயி எம்.எல்.ஏ. கிட்ட அவரோட கடை எடுக்குறதைப்பத்தி பேசிட்டு வீட்டுக்கு வந்தப்பிறகு இங்க உள்ளவங்களைச் சமாளிக்கணும்.
இப்போ இந்தக் கடை தான் முக்கியம். இப்ப போய் மாடிய அண்ணே அண்ணி மட்டும்தான் சொந்தம் கொண்டாடனுமான்ற பிரச்சனை எடுத்தோம்னா வீட்டில் சுமூகமான சூழல் இருக்காது.’ என நினைத்தபடி குளிக்க ஆயத்தமானான்.
அப்பொழுது அவர்கள் காம்பவுண்டு சுவர் ஒட்டி போகும் பக்கத்துச் சந்தில் இவனின் வீட்டின் பின் சுவரோடு ஒட்டி இருக்கும் வீட்டில் வசிக்கும் காந்தா அத்தை, அவரது மகள் ஜோதியை திட்டும் சத்தம் அப்பட்டமாக அக்குளியலறை கிராதி வழி வந்து விழியனின் காதுகளில் விழுந்தது.
“ஏன்டி ஜோதி, நீ நேத்து மதியம் சாப்பிட்டது. அதுக்குப் பிறகு இப்பவரை எதுவும் சாப்பிடாம கிடக்குற. இந்தக் கஞ்சியாவது குடி, மயக்கம் கியக்கம் வந்துட்டா ஆஸ்பத்திரிக்கு இழுத்துகிட்டு ஓட என் கையில் காசு கூட இல்லை. உயிரை வாங்காம ஒரு வாய் இதைக் குடிச்சுட்டு படுடி!” எனக் கூறினார்.
அதற்கு அவள், “போமா, இதைச் சாப்பிட்டா அப்புறம் திரும்பவும் வயித்த கலக்கும். நம்ம வீட்டுல என்ன கக்கூசா இருக்கு? முன்னாடி எல்லாம் மேலத்தெருக்கு அடுத்து முள்ளுக்காடா இருந்தது. இப்போ அங்க எல்லாப் பக்கமும் வீடு வந்துருச்சு. மறவா போக எடமே இல்ல! பகல் வெளிச்சத்துல எங்குட்டு ஆய்க்கு போவேன். முன்ன போல நான் என்ன சின்னப் பிள்ளையா?” என்றாள்.
அதற்குப் பதில் குரலாக அவ்விதவைத்தாய் காந்தாவின் குரலே வந்தது. “தெரு கக்கூசுக்கு போடி!” என்று.
அதற்கு அச்ஜோதி, “எம்மா, அதான் அங்க தண்ணி வரலைன்னு அடைச்சு போட்டுட்டாங்கல்ல. அது தெரியாதது போலச் சொல்றம்மா!” என்றாள்.
“அது தெரியும் ஜோதி, கக்கூசுக்கு காசு வாங்குற முத்துமாரி கிட்ட நான் தண்ணி கொண்டு வரேன்னு சொல்லி தொறந்து விடச் சொல்லி கக்கூசுக்கு போ. நான் பின்னாடியே தண்ணி கொண்டுட்டு வரேன்.” என்றாள்.
“ச்சேய், அசிங்கமா தெருவெல்லாம் நான் ஆயிக்கு போறேன்னு தண்டோரா போட சொல்லுறியாம்மா நீ! சொந்த வீடுன்னு இந்த வீட்டைவிட்டு வேற கக்கூஸ் உள்ள வாடகை வீட்டுக்கு மாறவும் மாட்டேங்குற,
சரி, அதுதான் செய்யல வீட்டு முன்னாடி வராண்டா இருக்குற இடத்தில் ஒரு கக்கூஸ் போடுங்கனு சொல்றேன், அதுக்கும் ஒத்த பத்தி வீட்டுல கக்கூஸ் யாராவது போடுவாங்களான்னு சொல்ற. நான் என்ன சின்னப் புள்ளையாமா. இது போல ஆத்திர அவசரத்துக்குக் கண்ட இடத்தில போக?
எனக்குக் கஞ்சியும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம். கஞ்சிய தூக்கிட்டு அங்கிட்டு போமா.” என ஜோதி கூறுவது, குளிக்க ஆயத்தமான விழியனின் காதில் அப்பட்டமாக விழுந்தது.
அதைக் கேட்டதும் அவன் மனம் கனத்துப் போனது. இதற்கு ஏதாவது செய்யணும் என்ற எண்ணம் முளைத்தது. அவர்களின் வாழ்க்கை சூழலின் பாரம் அவனது மனதின் ஓரம் ஏறிக்கொண்டது.
குளித்துவிட்டு வந்தவன் என்றைக்கும் இல்லாத திருநாளாய் வீட்டு நடுக்கூடத்தில் இருந்த பூஜையறை அலமாரியைத் திறந்து சாமியைக் கும்பிட்டு விட்டு நெற்றி நிறையத் திருநீறு பூசினான் விழியன்.
விழியன் வந்ததும் மாடி ரூமுக்காக ஒரு ரகளையை உண்டாக்குவான் என எதிர்பார்த்து இருந்த அவனின் தாத்தாவுக்கு அவன் அவ்வாறெல்லாம் செய்யாமல் அமைதியாக இருக்கவும் யோசனையோடு அவனைக் கண்காணித்தார்.
மேலும் என்றைக்கும் இல்லாத திருநாளாகச் சாமி முன் நின்று அவனின் அம்மா ஏற்றி வைத்திருந்த விளக்கில், பத்தியைப் பொருத்தி சாமிக்கு காட்டி நெற்றியில் விபூதி பூசவுமே,
’ஆஹா பையன் எதுக்கோ பம்முறான், நல்ல புள்ளை வேசம் கட்டுறானே எதுக்காக இருக்கும்?’ என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே அவரின் மகனும் விழியனின் அப்பாவுமாகிய அறிவழகன் உள் நுழைந்தார்.
அவர் இவனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தபடி அவருடன் வந்தவனிடம், “குமரேசா சட்டுப்புட்டுன்னு உள்ள போய்ச் சமையலுக்கு வேண்டியதை வாங்கிட்டு கடைக்குப் போயிரு. மாஸ்டர் காத்துகிட்டு இருப்பாரு.” என்று சொல்லிவிட்டு அவர் போட்டிருந்த சட்டையின் பட்டனை அவிழ்த்துக் கொண்டே அவரின் ரூமிற்குள் நுழைந்தார்.
‘எப்பொழுதும் அப்பா இந்நேரம் வீட்டுக்கு வந்ததும் அம்மா அப்பாவுக்கு டீ கொண்டு போய்க் கொடுப்பாங்க. இன்னைக்கு நான் அம்மாகிட்ட டீயை வாங்கிக்கொண்டு போய் அப்பாகிட்ட கொடுத்துட்டு அப்படியே கடை எடுக்கும் விஷயத்தைப் பற்றிப் பேச ஆரம்பிப்போம்.’ என நினைத்து அடுப்பங்கரையை நோக்கி குரல் கொடுத்துக்கொண்டே முன்னேறினான்.
“அம்மா... எம்மா அப்பா வந்துட்டாங்க, டீ போட்டுட்டீங்களா? குடுங்க நான் அவர்கிட்ட போய்க் கொடுக்குறேன். நீங்க சமையலை கவனிங்க, உங்க பெரிய மகன் இன்னைக்குப் பொண்டாட்டியை கூட்டிகிட்டு இங்க வாரான்ல. அதனால, அவனுக்குப் பிடிச்சதா வெரைட்டியா சமைக்கிற வேலை உங்களுக்கு இருக்கும்.” எனச் சொன்னான்.
தன் கணவன் வந்த அரவம் உணர்ந்து டீ தயார் செய்துகொண்டிருந்த விழியனின் அம்மா வாணி, அவன் பேச ஆரம்பித்ததும், ‘என்ன புதுசா நான் கொண்டுபோய்த் தரேன்னு வந்து நிக்கிறான்?’ என யோசனையுடன் பார்த்தார். மேலும் விழியனின் அண்ணனின் மனைவியை, ‘உங்க பெரிய மகன் பொண்டாட்டி’ என்று சொல்லவும் கோபத்துடன் முறைத்தார்.
அவன் பேசி முடித்த மறுநிமிடம், “என்னடா பேச்சு இது? உன் அண்ணன் பொண்டாட்டி உனக்கு அண்ணிதானே? அண்ணனும் அண்ணியும் வாராங்கன்னு சொல்லிப் பழகு. நாம மரியாதை கொடுத்தாத்தான் நமக்கும் மரியாதை கிடைக்கும்.” எனச்சொல்லி டீயில் சர்க்கரை போட்டதை ஆற்ற மறந்து இவனுடன் தர்க்கம் செய்து கொண்டிருந்தார்.
எது பேசினாலும் பதிலுக்குப் பதில் தர்க்கம் பண்ணும் விழியனோ, இன்று அவ்வாறு செய்யாமல் அவள் ஆத்த மறந்த டீயை எடுத்து ஆத்திக்கொண்டே, “இப்போ என்ன? உன் மருமகளை அப்படிச் சொல்லக் கூடாது. அவ்வளவுதானே! சரி, இனி அண்ணின்னு சொல்றேன் போதுமா?” என்று சொல்லியபடி இரண்டு ஆத்து மட்டும் சர்க்கரை கரைய ஆத்தி கையோடு எடுத்துக் கொண்டு நகர்ந்தான்.
அவனை ஆச்சரியமாகப் பார்த்தபடி நின்ற அம்மாவைத் திரும்பிப் பார்த்து, “அதேபோல அண்ணியாரையும் இங்க இருக்குறவங்களையும் கொஞ்சம் மனுஷ மக்களா நினைக்கச் சொல்லுங்க.” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டான்.
அவனின் வார்த்தைகளில் ஸ்தம்பித்து நின்றவர் மனதினுள், ‘அவன் சொல்வது சரிதான். ஆனா, யாராவது ஒருத்தர் அட்ஜஸ்ட் பண்ணி போனாத்தானே குடும்பம் ஒத்துமையாகப் போகும்! இந்தத் தடவை அவ சகஜமா இங்கேயில்லாமல் இருந்தாலும் நாம அப்படியே விடக்கூடாது பேச வைக்கணும்.’ என நினைத்தவர்,
‘ஆமா இந்தப் பையன் என்ன புதுசா அவருக்கு டீ எடுத்துக்கிட்டுப் போறான்? அவங்க அப்பாட்ட அவனுக்கு ஏதாவது காரியம் சாதிச்சுக்கிடப் பேசப் போறானோ?
ஒருவேளை கடை எடுத்து நடத்த போறேன்னு நேத்து சொன்னானே, அதுவா இருக்குமோ?’ எனச் சிந்தித்தவர் செய்துகொண்டிருந்த வேலையை அப்படி அப்படியே போட்டுவிட்டு தன் கணவனிடம் விரைந்தார் வாணி.
விழியனின் அப்பா அறிவழகன் வீட்டிற்குள் நுழையும் போது தன் சின்ன மகனை கவனித்தார். ‘என்றும் இல்லாத திருநாளாய் சாமி கும்பிட்டுவிட்டு விபூதி எல்லாம் பூசுறானே! என்னவாக இருக்கும்? ஒருவேளை அவனுக்கு அவனே பொண்ணு பாத்துக்கிட்டேன்னு வந்து சொல்ல போறானோ?’ என நினைத்தார்.
அவருக்குத் தனது பெரிய மகன் மதியை விடச் சின்ன மகனின் மேல் நூலளவு பாசம் அதிகம். காரணம் அவனது குணம்.
‘பெரியவன் லைஃப்பில் செட்டில் ஆகிடுவான். அவன் வாழ்க்கையை நல்லபடி கொண்டு போயிடுவான். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பான்.
ஆனால், மதி சுயநலவாதி. நாங்க அவனுக்கு உதவும்வரை எங்கள் பக்கம் நிற்பான். எங்களுக்கு இன்னும் வயசாகத் துவங்கி அவனுக்குப் பாரமாக ஆகும்போது கடமைக்கு வச்சுப் பார்ப்பான் அம்புட்டுத்தான்.
ஆனா, சின்னவன் விழியன் வெடுவாச்சுட்டி. அதேபோலப் பாசக்காரன். நியாயவாதி. கடைசியில் அன்பா அக்கறையா நம்மளை கவனிக்கப் போவது என்னவோ சின்னவனாகத்தான் இருப்பான்.’ என்ற எண்ணம் அவருக்கு.
டீ டம்ளருடன் உள்நுழையும் விழியனிடம், “என்ன துரை! புதுசா இன்னைக்குப் பக்தி பழமா சாமி கும்பிட்டு விபூதி எல்லாம் வச்சிருக்க. என்கிட்ட எதுவும் அப்ளிகேஷன் போடணுமா?” எனக் கேட்டார்.
அவரின் முன் மேஜையில் தான் கொண்டு வந்த டீ டம்ளரை வைத்தவன் முகத்தில் ஒரு நிமிடம் அவர் தன்னைக் கண்டு கொண்டாரே என்பதை உணர்ந்து ஓர் அசட்டுச் சிரிப்பு வந்து மறைந்தது.
“உங்களுக்கு டீ இங்கே வைச்சிருக்கேன்பா!” என்று சொல்லிவிட்டு வைத்தவன், தானும் அங்கிருந்த கட்டிலில் அமர்ந்துகொண்டான்.
ஃபிரெஷ் ஆகிவிட்டு அப்பொழுதுதான் வந்தவர் டீ டம்ளரை கையில் எடுத்துக்கொண்டு அதே கட்டிலின் மறு முனையில் அமர்ந்து டீ குடிக்க ஆரம்பித்தார்.
“அப்பா நான் சென்னைக்கு இனி போகலை. இங்கேயே உங்களைப் போலவே கடை எடுத்து நடத்த போறேன்.” எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போது அவனின் வார்த்தைகளை உள்வாங்கியபடி அங்கு நுழைந்த அவனின் அம்மா வாணி,
”இதைப் பேசத்தான் உங்க அப்பாவுக்கு நீ புதுசா டீ ஆத்தியெல்லாம் கொண்டு போறீயோன்னு நான் நெனச்சேன். அதான் அடுப்படி வேலையை அப்படியே போட்டுட்டு வந்தேன்.” என்று அவனைப் பார்த்துக் கூறினார்.
அத்துடன் தனது கணவனிடம், “என்னங்க அவன் சொல்றதுக்கு நீங்க தலையை ஆட்டிக்கிட்டு இருக்காதீங்க. இதுக்காகவா அவனை இஞ்சினியரிங் படிக்க வச்சோம்? போதும் நம்மளோட இந்த ஹோட்டல் வேலை எல்லாம்.
வாரத்துல ஒரு நாள் கூட உஷ்ஷூன்னு உட்கார முடியாம, வடக்க, தெக்க போக முடியாம கடையே கதின்னு இராப் பகலா உழைச்சாத்தான் நாலு காசு பார்க்க முடியும். நம்ம பிள்ளைங்களாவது டிப்டாப்பா கிளம்பி போனோமா, வாரத்தில ஒருநாள் வீட்டில இருந்தோமான்னு இருக்கணும்.
அதை விட்டுட்டு ஹோட்டல் எடுத்து நடத்துறேன்னு சொல்றதுக்கு நீங்களும் ம்முனு சொல்லி அவன் ஆடுறதுக்கு ஆடி வைக்காதீங்க சொல்லிட்டேன்.” என்றார்.
அவரின் வார்த்தைகளைக் கேட்டவர், “நீ கொஞ்சம் சும்மா இரும்மா. அவன் என்னதான் சொல்றான்னு முதலில் கேட்போம்.” என அவளின் வாயை அடைத்தார்.
விழியனைப் பார்த்து, “உங்க அம்மா சொன்னதை எல்லாம் கேட்டேல்ல. கடை எடுத்து நடத்துறது, ஒன்னும் ஆபீஸ் போயிட்டு வருவது போல உன் பாஷையில் வொயிட்காலர் ஜாப் கிடையாது. நான் நிக்காம ஓடிகிட்டு இருக்கிறதை நீ பார்க்கத்தானே செய்ற?
அதோட இப்போ நான் நடத்திட்டு இருக்குற கடையோட லீஸ் இன்னும் ஒரு வருசத்தில் முடிஞ்சிடும். நானே மறு லீசுக்கு நமக்கே கொடுப்பாங்களா? அல்லது கடை வேணுமுன்னு சொல்லிருவாங்களான்னு தெரியாம முழிச்சிட்டு, அடுத்து என்ன செய்யன்னு பயந்துகிட்டு இருக்கேன்.” என்றார்.
அதனைக் கேட்ட விழியன், “அப்பா, நான் எடுத்து நடத்துறேன்னு சொன்னது, இப்போ நீங்க நடத்துற கடையை இல்ல... பஸ் ஸ்டான்ட் பின்னாடி உள்ள மெயின் பஜாரில், ஒரு ஹோட்டல் மூடிக் கிடக்குது கவனிச்சிருக்கீங்களா? அந்தக் கடையத்தான் லீசுக்கு எடுக்கலாம்னு நினைக்கிறோம்.
அது எம்.எல்.ஏ. அகத்தியனோடது. அதை நானும், ஸ்ரீராமும், கதிரும் சேர்ந்து எடுத்து நடத்தப் போறோம். ஸ்ரீராமோட அப்பாவுக்கு அந்த எம்.எல்.ஏ ரொம்ப வேண்டியவர். அதனால லீசு ரொம்பக் குறைஞ்ச விலைக்கு அவருக்காகக் கொடுக்குறார்.
நாங்க மூனு பேரும் ஆளுக்குப் பதினாறு லட்சம் தான் போட வேண்டி இருக்கும். அதுக்கு எம்.எல்.ஏ. அகத்தியனை பார்த்து பேசப் போகணும்.” எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போது அவனின் மொபைல் ஒலி எழுப்பியது.
அதை அட்டன் செய்து காதுக்குக் கொடுத்தவன், “இதோ கிளம்பிட்டேன், ஐந்து நிமிசத்தில் வந்துடுறேன்.” என மொபைலில் பதில் சொல்லிவிட்டு,
“அதுக்குத்தான் ஸ்ரீ இப்போ போன் போட்டான். அட்வான்ஸ் பத்தி எம்.எல்.ஏ கிட்ட பேச கூப்புடுறான். நான் போய் என்ன ஏதுன்னு பேசிட்டு வந்துடுறேன்.” என எழுந்து கொண்டான்.
“டேய் என்னடா சொல்ற? பதினாறு லட்சமா???” என்று கேட்டவரிடம்,
“நீங்க யோசிக்க வேணாம்பா. நான் வீட்டில இருந்து பக்கத்துக்குல இருக்கிற இஞ்சினியரிங் காலேஜூக்குத்தான் போயிட்டு வந்தேன். அண்ணனைப் போலச் சென்னையில் வருஷம் நாலு லட்சம் பீசு, ஹாஸ்டல் பீசு எல்லாம் சேர்த்து அஞ்சரை லட்சம் எல்லாம் நான் படிப்புக்குன்னு செலவு இழுத்து வைக்கலை.
இதுக்கும் அதுக்கும் சரியா போயிடுச்சு. அதுவும் இல்லாம உங்ககிட்ட வாங்குற இந்தப் பதினாறு லட்சம் பணத்தைச் சம்பாதிச்சுக் கொடுத்துட்டுத்தான் எனக்குக் கல்யாணம் செய்றதை பத்தி யோசிப்பேன். எனக்கு டைம் ஆகிடுச்சு உங்ககிட்ட சொல்லாம செய்யக்கூடாது. பிறகு துட்டு கேட்டா என்கிட்ட சொல்லிட்டா செஞ்சேன்னு சொல்லுவீங்க. அதான் இப்போவே சொல்லிட்டேன். நான் கிளம்புறேன், வந்து மத்ததைப் பேசிக்கலாம்.” எனச் சொல்லிவிட்டு வாசலுக்கு வந்தான்.
அங்கு அவனைப் பார்த்தபடி நின்றார் அவனின் தாத்தா.
“ஓய் ஜேம்ஸ்பாண்டு. என்ன லுக்கு, உன்கிட்ட முதலில் சொல்லி ஐடியா கேக்காம அப்பாட்ட பேசிட்டேன்னு கோபமா?
எல்லாம் அவசர அவசரமா முடிவு ஆகிடுச்சு. கடை பார்த்து உறுதி செய்யப் போகுறதுக்கு முன்ன வீட்டில உடனே சொல்ல வேண்டியதாகி போச்சு. உள்ள போங்க ஜேம்ஸ்பாண்டு, உங்க மகனும் என் அம்மாவும், என்னால சண்டை போட்டுட்டு இருக்காங்க. அங்க போயி பஞ்சாயத்து பண்ணிவிடுங்க, நான் வந்தபிறகு உங்களைச் சமாதானம் பண்றேன்.” என்று சொல்லிக்கொண்டே கண்ணாடி முன் நின்று தலை வாரினான்.
அதன்பின் வேகமாகத் தான் உடுத்தியிருந்த டிராக்பேண்டை மாற்றி விட்டு விட்டு ஜீன்ஸ் பேண்டும், வொயிட் சட்டையும் போட்டுக்கொண்டு வேகமாகத் தனது மிதியடியை மாட்டிக்கொண்டு வாசலில் நின்ற பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் .
ராஜபாளையத்தில் ஒரு பத்து வருடங்களுக்கு முன் அந்தப் பகுதியில் வெறும் முள்காடும் சுற்றிலும் புளியமரங்களும் வயல்காடுகளும் இருக்கும்.
ஆனால் இப்பொழுது அந்த ஏரியாவில் புதிதாகப் போடப்பட்ட நூறடி சாலையும், வரிசையாகக் கட்டப்பட்டிருந்த பெரிய பெரிய பங்களாக்களும் இருந்தது.
முன்னால் பைக்கில் போய்க்கொண்டிருந்த ஸ்ரீராமின் பின்னால் தன்னுடைய பைக்கில் கதிரேசனுடன் பயணப்பட்டுக் கொண்டே விழியன் சொன்னான்.
“கதிரு, நாம ஐந்தாவது, ஆறாவது படிக்கும் போது இந்த ரோடு ஆரம்பிக்கிற இடத்திலதானே கிரிக்கெட் விளையாடுவோம். பாரேன் இப்போ... அடையாளமே இல்லாம மாறிடுச்சு.
அப்போ இந்தப் பக்கம் நிலம் சொற்ப விலைக்கு வருதுன்னு தெரிஞ்சப்போ என் அம்மா சொன்னாங்க, அந்த முள்ளுக்காட்டுக்கு பின்னாடி இருக்குற வயக்காட்டில யாராவது வீடு கட்டுவாங்களா? அங்க நிலம் வாங்க வேணாம்னு சொன்னாங்க,
ஆனா, இப்போ இந்த ஏரியால செண்டு பத்து லட்சத்துக்கும் மேல அதுவும் வி.ஐ.பி ஏரியான்ற அடையாளத்தோட மாறியிருக்கு. நம்ம கண்ணுக்கு முன்னாடியே எம்புட்டு பெரிய மாற்றம் நடந்துருக்குல்ல கதிரு.” என்றான்.
“ஆமா விழியா, ஆனா அப்போ இருந்த காத்து, குளிர்ச்சி இப்போ இந்த ஏரியாவில இல்ல. இத்தனைக்கும் அப்போ வயக்காட்டுக்குள் இறங்குறதுக்கு முன்ன கரையில வரிசையா புளியமரமா இருக்கும்.
புளியமரம் சூடுன்னு சொல்லுவாங்க. ஆனா, நமக்கு அந்த மரத்துக்கடியில ஏம்புட்டு குளுகுளுன்னு காத்தும் நிழலுமா மதிய நேரத்தில இருக்கும்.” என்றான்.
“குளுகுளுன்னு இருந்ததுக்குக் காரணம், அதை அடுத்து இப்போ வீடுகளா இருக்குற இடத்தில் பச்சை பசுமையா இருந்த பயிர்களால கூட இருக்கலாம். இப்போ எல்லா இடமும் கான்கிரீட் வீடாகிடுச்சு. ஜனத்தொகை கூடக் கூட ஊரு விரிவடைஞ்சுகிட்டு வருவது சரிதான்.
ஆனா, அதுக்காக ஊரை சுத்தி இருக்குற வயற்காடெல்லாம் வீடா மாத்தியாச்சுன்னா மக்களுக்கு விளைச்சல் பண்ற இடம் சுருங்கிருமில்ல?
மக்கள் தொகை கூட அவங்களுக்கான சாப்பாட்டுக்கு விளைச்சல் அதிகமாகணுமில்ல? அதுக்கு விளைநிலங்களையும் விளைச்சலையும் அதிகரிக்கத்தானே செய்யணும்.
ஆனா, விளைநிலம் இங்க குறைஞ்சிருக்கு! இது என்ன லாஜிக்னே தெரியலடா!” என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டே எம்.எல்.ஏ அகத்தியன் வசிக்கும் தெருவிற்குள் அவர்கள் பைக் நுழைந்தது.
அகத்தியன் வீட்டின் இருபக்கமும் வரிசையாகக் கார்கள் நிறுத்தப்பட்டிருந்தது.
அதைப் பார்த்த விழியன், “கதிர் இந்த இடம் மட்டும் மாறல, நம்ம எம்.எல்.ஏ வோட லைப் ஸ்டைலும் மாறிப்போச்சு. போன எலெக்சனப்போ ஒத்த மாருதி காரும், ஊருக்குள்ள ஒரு வீடும் மட்டும் சொந்தமா வச்சிருந்த ஆளோட இப்போதைய வீட்ட பாரேன். பரம்பரை சொத்துக்காரன் கூட இம்புட்டு பெரிய வீடு வச்சிருக்கானோ, என்னவோ தெரியல. எல்லாம் நம்ம கவர்மெண்ட் கஜானா காசுல வாங்கியிருக்காரு.” என்று சொன்னான்.
“டேய் விழியா, போதும். இந்தத் தெருவத் தாண்டிய பின்னாடி இந்தப் பேச்ச வச்சுக்குவோம். அங்கன அங்கன எம்.எல்.ஏ.வின் அடியாட்கள் நிக்கிறாங்க... எதுவும் காதில் விழுந்துச்சு நம்மைப் பொளந்து கட்டிடுவாங்க.” என்று தணிந்த குரலில் கதிர் கூறினான். உடனே அப்பேச்சை அத்துடன் நிறுத்திக் கொண்டான் விழியன்.
அவனுக்கு முன் வண்டியை நிறுத்திவிட்டு வாட்ச்மேனிடம், கேட்டை திறந்து விடச் சொல்லியும், தாங்கள் உள்ளே போக வேண்டும் என வாதடிக்கொண்டிருந்தான் ஸ்ரீராம். அவனுடன் இருவரும் இணைந்து கொண்டனர்.
***
----தொடரும்----
அத்தியாயம் 02
மாடியில் இருக்கும் விழியனின் உடைகள் அனைத்தும் கீழே இருக்கும் அவனது தாத்தாவின் அறைக்கு மாற்றப்பட்டிருந்தது.
கீழ் வீடு போலவே, மாடியிலும் இரண்டு அறைகள் இருந்தன. வரவேற்பு அறையும், இரண்டு படுக்கை அறைகளும் மாடியில் உண்டு. அட்டாச்டு பாத்ரூம் வசதியுள்ள ஒரு படுக்கை அறையும், அவ்வசதியில்லா மற்றொரு படுக்கை அறையும் கொண்டது மாடி.
இரண்டில் ஒன்றில் விழியன் தங்கி மாடியில் புழங்கினான். பெரிய வீட்டிலிருந்து அவன் அண்ணன் மதிக்கு வாக்கப்பட்டு வந்த அந்த அதிசய அண்ணி திவ்யாவுக்குச் சங்கடமாக இருக்குமாம். எனவே, கீழே தாத்தாவின் அறையில் விழியன் தங்கிக்கொள்ள வேண்டுமாம்.
‘என்னங்கடா இது அநியாயமா இருக்கு? என் வீட்டுல எனக்கே இப்படி ஒரு சோதனை.’ என்று நினைத்துக்கொண்டான் விழியன்.
ஆனால் அவனது எண்ணத்தை வீட்டில் சொல்லாமல் அமைதியானான். அவனது அம்மா சற்று முன் மாடியிலிருந்து எடுத்து வந்து அலமாரியில் அடுக்கியிருந்த உடைகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு, வீட்டின் பின்பக்கம் தாத்தா உபயோகப்படுத்தும் குளியல் அறைக்குச் சென்றான்.
அந்தக் குளியலறை வீட்டினைச் சுற்றியிருக்கும் காம்பவுண்டு சுவரையும் வீட்டு மதிலையும் இணைத்து நீளவாக்கில் மேல் கூரை சிமெண்ட் ஸ்லாபால் மூடப்பட்டு, சிமெண்ட் கிராதி கொண்டு சுவற்றின் மேல்பகுதியில் கால்வாசி வெண்டிலேசனுக்காக வைத்துக் கட்டப்பட்டிருந்தது.
மேலும் அதற்குள் சிறியதாக ஓர் இரும்பு கதவுடன் சேர்ந்த மறைவு குறுக்குச்சுவரும் இருக்கும். அந்த இரும்புக்கதவைத் திறந்தால் கக்கூஸ் வசதியும் இருக்கும்.
அதன் வலது மூலையில் பெரியதாகச் சுவற்றோடு கட்டப்பட்டிருக்கும் சிமெண்ட் தொட்டியில் முனிசிபல் தண்ணீர் வந்து விழும். அதைத் தேக்கி வைத்துத் தேவைகளுக்குப் புழங்கிக்கொள்ளவே அப்பெரிய தொட்டி மேல்மூடி வசதியுடன் இருக்கும்.
தாத்தா காளிதாஸ் முன்னால் கம்யூனிஸ்ட். தற்பொழுது அக்கட்சியில் அவர் இல்லையென்றாலும் அதன் கொள்கையில் பற்றுள்ளவர். தெருவில் முனிசிபல் தண்ணீர் வரவில்லை என்றாலோ, தெருவிளக்கு எரியவில்லை என்றாலோ விண்ணப்பம் எழுதி எல்லோரிடமும் கையெழுத்து வாங்கி, நகராட்சியிடம் பெட்டிசன் கொடுத்த பின்பே ஓய்வார்.
அரசு திட்டங்கள் பற்றிய விமர்சனங்களைச் சுற்றி உள்ளோருக்கு விமர்சிப்பார். அத்திட்டங்களை எவ்வழிகளில் பெற வேண்டும் என்ற ஆலோசனைகளை உரியோருக்கு வழங்குவார்.
இதுபோன்ற அவரின் செயல்பாடுகளால், அரசு உதவி விவரம் தேவைப்படுவோர்களிடம், ‘நம்ம காளிதாஸ் அய்யாவ போய்க் கேளுங்க. விவரம் தெரிஞ்ச மனிதர்.’ என்று பரவலாகச் சொல்லுவர்.
இத்தன்மை பிறருக்கு உதவுபவர் என்ற அடையாளத்தை அவருக்கு உருவாக்கியிருந்தது.
குறிப்பாகப் பாட்டாளிகளுக்கும், இயலாமையில் உள்ளோர்களுக்கும், பணத்தைக் கொண்டு உதவி செய்யாவிடிலும், இதுபோன்ற அரசு உதவிகளைப் பெற்றுத் தருவதில் அவரின் உதவும் ஆதங்கத்தை ஓரளவு தனித்துக்கொள்பவர்.
அவர் செய்யும் இதுபோல விஷயங்களை அருகில் தனது பேரன் விழியனை வைத்துக்கொண்டே செய்வார். அவரின் சமூகம் பற்றிய ஆதங்கத்தையும் தனது பேரன் விழியனிடமே பகிர்ந்து கொள்வார். அவரது மனைவி இறந்த சமயம் அவரின் மருமகள் வயிற்றில் ஜனித்த இரண்டாம் பேரப்பிள்ளையான விழியனிடம் தனது துணையின் ஜாடையைத் தேடினார்.
விழியனை அவரின் தனிமைக்குத் துணையாகத் தன் மனைவி அனுப்பிய வரம் என்று நினைத்தார். மூத்த பேரன் மதி மீது அன்பிருந்தாலும் மதி அவனுண்டு, அவன் படிப்புண்டு, அவனின் அம்மாவுண்டு என்று குறுகிய வட்டத்துக்குள் இருந்தான்.
ஆனால் துடிப்பும் குறும்பும் ஒருங்கே கொண்ட விழியனோ தன்னைப் பிடிப்பாக நோக்கும் அவரின் தாத்தாவைப் பற்றிக்கொண்டான். அவருடனே அதிகம் இருக்க விரும்பி அவரின் நியாய, அநியாயக் கொள்கைகளையும் தனதாக்கிக் கொண்டான் செவ்விழியன்.
அந்தப் போராளி குணம்தான் இப்பொழுதும் மாடி முழுக்கத் தனது அண்ணனுக்கே தாரை வார்க்க வேண்டும் என்ற பேச்சில் காண்டானது.
‘ஏன்? நான் அந்த இன்னொரு அறையில் தங்கி கொள்வதில் என்ன பிரச்சனை? மாடி தனியா இல்லாத வீட்டில் எல்லாம் ஒத்த அறையைக் கல்யாணம் ஆன ஜோடிக்கு கொடுத்துட்டு மத்தவங்க எல்லோரும் ஹாலில் படுத்து ஒரே கூரையின் கீழ ஒன்னாகக் குழுமி வாழலையா? அதுதானே வாழ்க்கை.
ஆனா இங்க இவங்க மாடியில மட்டும்தான் இருப்பாங்களாம், பகல்லகூட யாரும் சும்மா அங்க போகக் கூடாதாம். ஆனா, மூனு வேலை கொட்டிக்கிறதுக்கு மட்டும் கீழ வருவாங்களாம்.
எங்க அம்மா வீட்டு வேலை, கடை வேலைக்குச் சமுத்திரத்தை வைத்து அரைக்க வேண்டியது, நறுக்க வேண்டியது எல்லாத்தையும் செய்துவிட்டு இவுங்களுக்கும் விதவிதமா தனியா சாப்பாடு வேற செய்து வைப்பாங்களாம்.
இந்த நொண்ணன் அவன் பொண்டாட்டிய உடம்பு நோகவிடாம, சாப்பிட மட்டும் மகாராணிபோலக் கீழே கூட்டிட்டு வருவானாம்.’ என்ற கோபம் விழியனுக்கு உண்டு.
அவனின் புதுப் பிஸ்னஸ் ஆரம்பிக்க வீட்டில் பேச வேண்டியிருந்தது. அதனால் மாடிப்பிரச்சனை பற்றிய கோபத்தை இப்போது காட்டாது அமைதி காத்தான்.
அவன் தனக்குத்தானே ‘ம்கூம்... இப்போ இதுக்காக எதுவும் பிரச்சனை பண்ண கூடாதுடா விழியா’ என அவனுக்கு அவனே மனதினுள் சொல்லிக்கொண்டான்.
‘குளித்துவிட்டுச் சாப்பிடும்போது எம்.எல்.ஏ கடையை லீசுக்கு எடுக்கும் விஷயத்தை வீட்டில் பேசி, சம்மதம் வாங்கணும். இந்தத் தாத்தா என் பக்கம்தான் நிப்பாரு. இருந்தாலும் இந்த நேரத்தில் அவர்கிட்ட எகிறி கிட்டு இருந்தால் வேணும் என்றே காலை வாரிவிடவும் வாய்ப்பிருக்குது.’
முந்தைய நாளின் இரவில், ஸ்ரீராம் தன்னிடம் பேசவந்த போது இருவரும் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து எம்.எல்.ஏ அகத்தியனின் கடையை எடுத்து சேர்ந்து நடத்துவது பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். வீட்டினுள் தனது அம்மாவிடம் சித்தி மாலதி பேசிக்கொண்டிருந்தார்.
மாலதியைத் தேடி அவரின் கணவர் வாசலுக்கு வந்ததைப் பார்த்த ஸ்ரீராம், “அப்போ விழியா, நாம சேர்ந்து கடை எடுத்து நடத்துறோம். மத்த விஷயங்களை நாளைக்குச் சொல்றேன். காலையில் ஊர் இடத்தில கம்பு சுத்த சொல்லித்தர வரும்போது பேசுவோம்.” எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
மாலதியின் கணவர் கிளம்பிய அவனைப் பார்த்து, “என்ன ஸ்ரீராம், எலெக்சனுக்கு மனு தாக்கல் செய்ய நாள் நெருங்கிடுச்சு. இந்தத் தடவையும் ஆளுங்கட்சி சார்பா நம்ம தொகுதியில் சீட் வாங்க போறது எம்.எல்.ஏ.அகத்தியன்தானே. ஓட்டுக்கு காசு போன தடவை ஐநூறு கொடுத்தது போல, இந்தத் தடவையும் தலைக்கு ஐநூறு கொடுத்துடுவாங்க தானே?” எனக் கேட்டார்.
அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டபடி அத்தெருவைச் சேர்ந்த இருவர் விழியனின் வீட்டை கடக்கையில், இவர்களின் வார்த்தைகளை உள்வாங்கிவிட்டு அவர்களும் பேச்சில் இணைந்தனர்.
“எப்பா ஸ்ரீராம், அப்போ ஓட்டுக்குப் பிரச்சாரம் இன்னும் நாலு நாளில களை கட்டிரும். பிரச்சாரத்துக்கு ஆள் சேர்க்கும் போது போன தடவைய போல மேலத்தெருவை மறந்துடாதே. உங்க அப்பாகிட்ட சொல்லி பிரச்சாரக் கூட்டத்துக்கு வரவங்களுக்கு ரூபாயும் புரோட்டாவும் தருவதுக்குப் பதிலா இந்தத் தடவை எம்.எல்.ஏவை ரூபாயும், பிரியாணி பொட்டலமும் குடுக்கச் சொல்லு.” என்றாள் ஒரு பெண்மணி.
அப்பொழுது தனது கணவன் குரல் கேட்டதும் வாசலுக்கு வந்த மாலதி, “என்ன கற்பகம் கா, விட்டா குவாட்டர் பாட்டிலும் சேர்த்துக் குடுக்கச் சொல்லுவீங்க போல?” எனச் சொன்னார்.
எப்படித்தான் இந்த மனைவிகள் அவர்களின் கணவன்மார்களின் வருகையை மட்டும் எட்டு அரங்குகளுக்கு அப்பால் இருந்தாலும் உணர்ந்து கொள்கிறார்களோ தெரியாது.
அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்த மாலதி சித்தி வெளியில் வந்ததும் அவரின் பின்னே அவளை வழியனுப்ப விழியனின் அம்மா வாணியும் வந்தார்.
மாலதி அவ்வாறு கேட்டதும் அந்தப் பெண், “ச்சேய் அந்தக் கண்றாவியை நான் எதுக்குக் கேட்க போறேன்? என் வீட்டுக்காரர் அதைக் கேப்பார். கட்சி கூட்டத்துக்கு ஆள் கணக்குக்குப் போனா, சம்பளமா குடுக்குற நூறும், இருநூறும் பெரும்பாலும் அந்த மனுசர் பிடிங்கிட்டு போய் டாஸ்மார்க் கடையில கொடுத்துருவாரு. கூட்டத்துக்குப் போனா சம்பளத்தோட அவருக்குப் பாட்டில் சேர்ந்து கொடுத்துட்டாங்கன்னா என் கைத்துட்டு அவர்கிட்ட களவு போகாம என் கையில இருக்கும்ல!” என்றாள்.
இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே வீட்டின் உட்புறம் இருந்து வந்த அவனின் தாத்தா காளிதாஸ், “ராஸ்கல்ஸ் நீங்க இப்படி இருந்தா எங்கடா நாடு உருப்படும்? இந்த ஐநூறும், நூறும் எத்தனை நாளைக்கு உன் வீட்டு அடுப்பை எரியவைக்கும்?
காசுக்கு உங்க ஓட்ட வித்துட்டா பதவிக்கு வந்தவன் என்ன நினைப்பான்? ஒவ்வொரு ஓட்டுக்கும் இவ்வளவு பணம் கொடுத்துருக்கோம். அப்போ மொத்த செலவு இவ்வளவு ஆகியிருக்கு. ஜெயிச்சு பதவிக்கு வந்தா ஓட்டுக்கு செலவளிச்ச துட்டை அதுக்கான வட்டி இம்புட்டுன்னு கணக்கு போட்டு இந்த ஐந்து வருடத்துக்குள் சம்பாதிச்சிடணும் அப்படின்ற எண்ணம்தான அவுங்களுக்கு நிக்கும்.
அப்போ கொள்ளை அடிச்சது போக மிச்சம் மீதியானதுதான நமக்கான திட்டங்களுக்குச் செலவு செய்வாங்க. நாட்டை வித்துட்டுப் போயிருவான்.
முன்னாடி எல்லாம் பிரச்சாரத்தப்போ தலைவர்கள் பேச்ச கேக்க ஜனங்கள் தானா திரண்டு வந்து விடிய விடிய பேச்சை கேப்பாங்க. ஆனா, இன்னைக்குப் பிரச்சாரம்னாலே எதிர்கட்சியைத் தாக்குவதுதான் நோக்கமுன்னு ஆகிப்போச்சு.
காசுக்கு ஆட்களை வரவச்சுக் கூட்டத்தைக் கூட்டி இம்புட்டு மக்கள் ஆதரவுன்னு பொய்யா காமிச்சு அரசியல்வாதி அவனையே ஏமாத்திக்கிறான். மத்தவங்களையும் ஏமாத்துறான். அப்படித் துட்டுக்கு மக்களைத் திரட்டுறவன் எவனுக்கும் வரலாறு தெரியல.
திட்டங்கள் பற்றிய தெளிவான அறிவு இல்ல. காருக்குள்ள இருந்தே கசங்காத வெள்ளை வேஷ்டி, சட்டையை மட்டும் மாட்டிக்கிட்டு ஜம்முனு வந்து அரசியல் பண்றேன் எனக் கெஜட் ஆபீசர் லுக் வேற. மடிப்பு கலையாம வேஷம் கட்டி, காச காட்டி மக்களை ஏமாத்த ஷோக்கு காட்டும் சொக்கட்டான்களா இன்னைக்கு அரசியல்ல இருக்காங்களே!” என்றார்.
அப்பொழுது அவர்கள் பேச்சில் இணையப்போன செவ்விழியனைத் தடுத்தான் ஸ்ரீராம்.
‘தான் இங்கு இருக்கும் இவ்வேளையில் அதுவும் அவரின் பிராப்பர்டியை லீசுக்கு எடுக்குற இந்த நேரத்தில் எம்.எல்.ஏவை பத்தி நெகடிவ்வா இவன் வேற வாயை விட்டு, கட்சிக்கு எதிரானவங்க நாங்கன்னு மேலிடத்தில் எவனாவது போட்டுக் கொடுத்துட்டானா காரியம் கெட்டுச்சு.’ என்ற எண்ணத்தில்.
“விழியா நாம பேசி எதுவும் ஆகப்போறதில்ல.” என்றவன், “அம்மா இவனை உள்ள கூட்டிகிட்டுப் போய்ச் சாப்பாடு போடுங்க.” என விழியனின் தாயிடம் கூறியவன், விழியனைப் பார்த்து, “அப்போ நீ சாப்பிடு. நான் வரேன் விழியா! எனக்கு வேலையிருக்கு.” எனச்சொல்லி அங்கிருந்து நழுவிச் சென்றுவிட்டான்.
அவன் சென்றபின் இன்னும் இருவர் கூடினர். அவர்களிடம் மாலதி சித்தியின் கணவர், “ஆமா, நாமளா காசு வேணுமுன்னு கேக்கலையே. அவனா குடுக்குறான். ஊர் காசை கொள்ளையடிச்சு வச்சிருக்கான். அது நமக்குச் சேரவேண்டிய காசுதான். யார் காசு கொடுத்தாலும் வேணாம்னு சொல்லாம வாங்கி வச்சுக்கோங்க.” எனப் பொதுப்படையாகக் கூறினார்.
அதைகேட்ட விழியன், “ஓட்டுக்கு துட்டுன்னு எவன் கொடுத்தாலும் வாங்கிட வேண்டியதுதானா சித்தப்பா? அதெப்படி அவன் நம்மளோட பணத்தைத்தான் தரான்னு சொல்லலாம்?
இப்படி உழைக்காம கை நீட்டி காசு வாங்குங்கன்னு பெரியவங்க நீங்களே சொல்லலாமா? ஏற்பது இகழ்ச்சி அப்படின்னு நிமிர்வா வாழ்ந்த காலம் மலை ஏறிப்போச்சா?
கொள்ளை அடிச்ச பணத்தைத்தானே கொடுக்குறான்னு சொல்றீங்களே. அப்போ அவன் கொள்ளை அடிச்சதை சரின்னு ஒத்துப்போவது போல ஆகிடாதா?
இதுபோல ஓட்டை காசு கொடுத்து வாங்கியவன் ஆட்சிக்கு வந்தா, செலவழிச்ச காசை பலமடங்கா மக்களோட திட்டத்துக்குச் செலவு செய்கிறதை விடக் கொள்ளையடிக்கிறது சரின்னு சொல்றது போல ஆகிடாதா? எப்படி இப்படிப் பேசுறீங்க? இங்க என்ன அரசியலா நடக்குது? அரசியலை ஒரு பிஸ்னசா மாத்தி வச்சிருக்காங்க.” என்று ஆதங்கப்பட்டான்.
அவன் அவ்வாறு சொன்னதும், “ஏப்பா விழியா, உனக்குத்தான் பழமொழி சொல்ல தெரியுமா? அதே ஆத்திச்சூடியில ‘ஐயம் இட்டு உண்’ சொல்லிருக்காங்கதானே! அவன்ட நிறைய இருக்குக் கொடுக்குறான். நாம வாங்குறோம் அவ்வளவுதான்.” என்றார்.
“அட சித்தப்பா, ஐயம்னா உணவு. ஐயம் வேறு பிச்சை வேறு; உணவில்லாதோர்க்கு வழங்குவது ஐயம்; பிச்சை எடுப்போருக்கு நாம் இடுவது பிச்சை. அதாவது, நீங்க சொன்ன ஐயமிட்டு உண் என்பதன் கருத்து என்னன்னா, உணவு தேவைப்படுவோர் யாராவது இருப்பின் அவருக்கு உணவிட்ட பின் உண்ணுதல் வேண்டும்.
அரசியல்வாதி என்ன அப்படியா? வேட்பாளர்கள் சாப்பிட்டாதான் சாப்பிடுவானா? அவன் நமக்குப் பிச்சை போடுவதாதான் நினைப்பான். பிச்சை கூடச் சக மனுசனுக்குப் போடுவது. அவன் நம்மைச் சக மனுஷனா எல்லாம் பார்த்துப் பணம் தரலை. நம்மளை அவனோட ப்ராடெக்டா பார்க்கிறான். அவனோட தேவைக்கு உபயோகப்படுத்திவிட்டுக் குப்பை போலத் தூக்கி போட்டுட்டு போயிடுவான்.” என்றான்.
அங்குத் தர்க்கம் வலுப்பதுபோலத் தெரியவும் செவ்விழியனின் அம்மா, “விழியா, வயிறு பசிக்குதுன்னு அப்போவே சொன்ன. உள்ள வா சாப்பாடு போடுறேன்.” என விழியனை அழைத்தவர்,
தங்கையிடம் திரும்பி, “மாலதி, உன் வீட்டுகாரர் உன்னைக் காணோம்னு தேடி வாசல்வரை வந்துட்டாரு பாரு, நீ கிளம்பு அவரோட. நாம இன்னொரு நாள் பேசலாம்.” எனச்சொல்லி அங்குக் குழுமியிருந்த அந்த நான்கைந்து பேரையும் கலைத்தும் விட்டவர், மகனை வீட்டுக்குள் கைப்பிடியாகக் கூட்டிக்கொண்டு வந்தும் விட்டார்.
வீட்டிற்குள் வந்ததும் விழியனிடம், “என்னடா இது தேவையில்லாம ஊருக்கு உபதேசம் பண்ண கிளம்பிட்ட? அதுவும் அந்த மனுசர் அதுதான் மாலதி புருஷன்ட போய், அந்த ஆளே கிறுக்கு புடிச்சவன். எதுக்குத் தேவையில்லாம நீ வார்த்தையை விடணும்? ஊரை திருத்தவா உன்னைப் பெத்திருக்கேன். இங்க இருந்தா இப்படித்தான் தேவையில்லாத பிரச்சனையைப் பேசி வம்பை இழுத்துக்கிட்டு வந்துருவ. அதான் இப்போ லாக்டவுன் எல்லாம் கொஞ்சம் தளர்த்திட்டாங்கதானே. அதனால உன் பெட்டியை கட்டிக்கிட்டு சென்னைக்குப் போயி உன் ஆபீசுக்கு போகும் வழியைப் பாரு.” என்றார்.அவர் அவ்வாறு சொன்னதும், “நான் இனி சென்னைக்கெல்லாம் போகலை.” என்றான் விழியன்.
“என்னடா சொல்ற, அப்போ வேலை?” என்று அதிர்ந்து கேட்டார் வாணி.
“நான், அப்பாவை போல ஹோட்டல் நடத்தப் போறேன்.” என்று அவரிடம் சொன்னான் விழியன்.
அவன் சொல்லி முடித்த மறுநிமிடம் சரமாரியான வசவுகள் வாணியிடம் இருந்து அவனை நோக்கி வந்தது. ‘இதுக்கு மேல இப்போ பேசக்கூடாது, நாளைக்கு அப்பா இருக்கும் போது பேசலாம்.’ என நினைத்த விழியன் அவரின் வசவுகளைக் காதில் வாங்காமல் தட்டில் உள்ளதை பேருக்கு வயிற்றில் தள்ளிவிட்டு மாடிக்குச் சென்று படுத்துவிட்டான்.
***
---தொடரும்---
செவ்விழியன்
நூல் குறிப்பு
நூல் தலைப்பு : : செவ்விழியன
ஆசிரியர் : தீபாஸ்
மொழி : தமிழ்
முதற் பதிப்பு : டிசம்பர் 2022
உரிமை : ஆசிரியருக்கு
மொத்தப்பக்கங்கள்: 385
வெளியிடுவோர்: சுயமிபதிப்பகம்
suyami2023@gmail.com
விலை : 320
எடிட்டர்: தீபாஸ்
baskardeebamasu@gmail.com
முன்னுரை
அரசு, அரசியல்வாதி இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தது. ஒருவன் அதிகாரத்தைக் கைகொண்டு செயல்படவேண்டுமானால் அரசாங்க பதவியில் இருக்கவேண்டும்.
மனிதனின் ஆகச் சிறந்த போதை அதிகாரம் கொள்வதன் மூலமே கிடைக்கிறது. இந்த அதிகாரத்தைக் கைகொள்ள முயற்சிக்கும் ஒருவன் தலைமை பண்பு கொண்டு மட்டும் இருப்பது போதாது அத்தலைமை பண்பு கொண்டவன் தன்மையே அவனது அரசியலை கட்டமைக்கும்.
அரசியலை விஷச் செடியாகவோ அல்லது பிரச்சனைகளைத் தீர்க்கும் மூலிகையாகவோ ஆக்கும் வல்லமை அரசியல்வாதியை பொறுத்து அவன் ஏற்றுள்ள பதிவியின் மூலம் அச் சமூகத்தை அவனின் தன்மை ஆட்டுவிக்கிறது.
நல்ல தன்மை கொண்ட ஒருவன் பதவிக்கு வருவதால் இச் சமூகம் சுபம் பெரும்.அவனின் செயல்பாடுகள் சமுதாயத்தின் புரையோடிய புண்களை அகற்றும் மூலிகையாகும்..
அப்படியான நல்லதன்மை கொண்ட ஒருவன் பதவிக்கு வர முயன்றால் இங்கு என்னென்ன சூழலை அவன் சந்திக்க நேரிடும் என்ற கற்பனையில் உருவான கதையே செவ்விழியன்.
அரசியல் சாக்கடை என்று சொல்லி அனைவரும் விலகிப் போய் அரசாங்கமே இல்லாது போனாள் தெருக்கள் தோறும் சாக்கடை நிரம்பிப் போகும்.
ஒரு நாள்கூட அரசாங்க அச்சுச் சுழலாமல் நின்றால், அச் சமூகமே ஸ்தம்பித்துவிடும். அரசியல் விட்டு தள்ளி நிற்கிறேன் அது சாக்கடை என்று விலகிப் போய் நிற்பதாக எண்ணுகிறவர்களின் வாழ்க்கை சூழல் அந்த அரசாங்கத்தால்தான் கட்டமைக்கபடுகிறது. விடாது அரசியல்.
நட்புடன்
தீபாஸ்
அத்தியாயம் 01
கதிரேசன் அவர்களின் சமூகத்திற்கான சாவடியைச் சேர்ந்து இருக்கும் மைதானத்தில், என்றும் போல அன்றைக்கும் விடிகாலையிலேயே தங்களின் தெருவில் இருக்கும் ஆர்வம் உள்ள பிள்ளைகளுக்குச் சிலம்பாட்டம் சொல்லித்தரக் கிளம்பினான்.
செல்லும் வழியில் இருக்கும் செவ்விழியனை எப்போதும் போல அழைத்துக்கொண்டு போக, அவனின் வீட்டு வாசல் படியேறினான் கதிர்.
வீட்டின் உள்ளிருந்து செவ்விழியனின் அம்மாவின் வார்த்தைகள் வந்து அவனில் காதில் மோதியது,
“உனக்கு ஏன்டா இந்தப் பொல்லாப்பு? உனக்கு வேணாம்னா வாங்காத. எதுக்கு, வாங்குவேன்னு சொல்றவங்க கூடச் சண்டைக்கு நிற்கிற? ஓட்டுக்கு நிக்கிறவன் கொடுக்குறான், அவன் என்ன சும்மாவா கொடுக்குறான்?
நம்மகிட்ட வாங்கின வரிப்பணத்தைச் சுருட்டி வச்சிருக்க அரசியல்வாதிகிட்ட ரூபா வாங்கறதுக்கு, எதுக்குத் தயங்கணுமுன்னு கேட்குறதுல என்ன தப்பு இருக்கு?
உன் தாத்தா நீதி, நியாயம்னு பேசி என்னத்த சாதிச்சிட்டார்? இவரைப்போல இருக்குற மத்த பெரியவங்க எல்லாம் பேரனை வம்பு சண்டைக்குப் போக விடாம அடக்கி வப்பாங்க.
ஆனா, இங்க உன்னைய தூண்டிவிடுவதே அவர்தான். எல்லாம் என் நேரம்.” என்று செவ்விழியனைச் சொல்லிக் கொண்டிருந்தார் அவனின் அம்மா வாணி.
அமைதியாக இருந்த விழியன் கடைசியாக அவனின் தாத்தாவைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்ததும், பேருக்கு ஏற்றாற்போல் செவ்வரியோடிய கண்ணாக மாறி பேச எத்தனித்தான்.
சற்று எட்ட உட்கார்ந்திருந்த அவனின் தாத்தா காளிதாஸ், அவரின் கையில், ‘ஸ்டைலுக்காக நான் உபயோகிக்கிறேன்.’ என்று வைத்திருக்கும் அந்த நீண்ட ஊன்றுகோலை வைத்து விழியனின் முதுகில் சுள்ளென்று ஒரு போடு போட்டார்.
அதில் கோபத்துடன் அவரின் பக்கம் திரும்பியவனை, ‘ஸ்... பேசாதே!’ என்னும் விதமாகச் சைகை செய்தார்.
அவர் அவ்வாறு சைகை செய்ததும், “உச்!” என்ற சலிப்புச் சத்தம் எழுப்பியபடி செவ்விழியன் எழுந்து, தானும் மைதானத்துக்குக் கிளம்ப ஆரம்பித்தான்.
விழியனைக் கூப்பிட வந்த கதிர், காதில் விழுந்த வாணி அம்மாவின் சத்தத்தில் உள்ளே போகத் தயங்கி அங்கேயே நின்று கொண்டான்.
மனதினுள், ‘அடடா! நைட் ஆரம்பிச்ச பஞ்சாயத்து இன்னும் முடியலபோல! சகுனம் சரியில்ல அதனால உள்ளே போக வேணாம்’ என்று நினைத்து,
“விழியா... டேய் மாப்ள, வாடா... இன்னும் என்ன பண்ற?” எனச் சத்தம் கொடுத்தான்.
அவனின் சத்தம் கேட்டு சட்டையைப் போட்டுக் கொண்டே வாசலுக்கு வந்த விழியனைத் தொடர்ந்து வந்த அவனின் அம்மா,
“ஏன்பா கதிர், நீயாவது இவனுக்குச் சொல்லக்கூடாதா? சென்னையில பார்த்துக்கிட்டு இருக்குற வேலையை விட்டுட்டு, ஹோட்டலை எடுத்து நடத்த போறேன்னு சொல்றான்.
இவங்கப்பா நடத்திக்கிட்டு இருக்கிற அந்த ஹோட்டல் என்ன நம்ம சொந்த கடையா? பதினைஞ்சு வருஷம் லீசுக்கு எடுத்தது.
அடுத்த வருஷம் அந்தக்கடையோட லீசு முடியப்போகுது. கடை உரிமைக்காரங்க காலி பண்ண சொன்னா இப்போ இருக்கிற விலைவாசியில வாடகைக்கு வேறு கடை போட்டு உழைச்சா கையில மிஞ்சுமா?
இதுக்காகவா இவனைப் படிக