Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு சிறுகதைகள்

வகைகள் : வாழ்வியல்

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


வாழ்வியல்
எங்க ஊரு, எங்க சாமி! நீ உள்ள வராதே! 

 

வயல்களுக்கு நடுவில் ஆலமரமும், மருதமரமும் பசுமை கோபுரங்களாக விண் நோக்கி இருக்க, அதன் கீழே, திறந்த வெளியில் அமைந்திருந்த கருப்பண்ணச்சாமி கோவில். ஆளுயரத்தில் படு கம்பீரமாக, முறுக்கு மீசைக்காரனாக, கோனைக் கொண்டையிட்டு, வலது கையில் வீச்சரிவாலும், இடது கையில் கதாயுதம் தாங்கி, தன் பரிவார தெய்வங்களோடு, அந்த பசும் பூமியில் தன் விழியோட்டி, அனைத்துக்கும் காவலனாய் நின்றார், மூன்று மாதங்களுக்கு முன் குடமுழுக்கு கண்ட மாவடி முத்துக்கருப்பணசாமி.  

ஏகாந்தமாய் மருதமரத்தடி நிழலில், அவன் வீற்றிருக்க,  மரங்கள் இரண்டும்,  இலைகளாலும், பூ, கனிகளாலும் அர்ச்சித்து, அவ்விடத்தையே நிறைத்திருந்தன. பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு இருந்த, கோவில் வளாகத்தை, கோவிலின் பூசாரியும், சாமியாடியுமான முத்துசாமியின் பேத்தி, முத்து பேச்சி, கூட்டி சுத்தம் செய்துக் கொண்டிருந்தாள். 

வயல் நடுவிலிருக்கும் கோவிலுக்கு, உள்ளூர்காரர்களே, "துடியான தெய்வம்." எனப் பயபக்தியோடு  கூட்டமாகத் தான் வந்து செல்வார்கள். பிறந்தது முதல், தாத்தா, அம்மாச்சியோடு வளர்ந்த முத்துப் பேச்சிக்கு, ஊருக்குள் இருக்கும் அவர்கள் வீடு போல், கருப்பன் கோவிலும் ஒரு வீடு தான் தாத்தா, முத்துச்சாமி போல், கருப்பண்ணச்சாமியும் அவளுக்குப் பூட்டன் முறை. அப்படிப் பாவித்துத் தான், அந்தத் தெய்வங்களிடம், உரிமை பாரட்டுவாள். 

"கூறு கெட்ட மனுசன், தலைபிரட்டு புடிச்சு அலையுது. யாருகிட்ட, என்ன பேசுறோமுன்னு, மட்டு மருவாதை இருக்கா. நாலு எழுத்து படிச்சு, கூட்டத்தில பேசிட்டா பெரிய ஆளாக்கும். இவுகளுக்குச் சப்போர்ட்டு பண்றதுக்கும், கை தட்டி துண்டு போர்த்தறதுக்கும் நாலு அல்லக்கை வேற. ஐயா, கருப்பா நீ தான் அவுகளுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கனும்." என வேலையைப் பார்த்துக் கொண்டே, தன் புலம்பலையே வேண்டுதலாக்கி கருப்பனிடம் முறையிட்டாள் முத்துப்பேச்சி. 

ஆனால் கருப்பண்ணசாமி அவள் வேண்டுதல் கேட்டும்  ஆனந்தமாகவே, அவளது தாத்தா முத்துசாமியைப் போல் சிரித்துக் கொண்டிருக்க, “யார், ஏசினாலும், பேசினாலும் நீயும், உன்னை சாமியாடுற  என் தாத்தாவும், ஒரே மாதிரி சிரிச்சுக்கிட்டு அப்படியே நில்லுங்க.” என்றாள். கருப்பன், தன்னோடு சேர்த்து அவர் பக்தனுக்கும் பேத்தியிடம், பேச்சு வாங்கிக் கொடுத்தார்.

“ஏண்டி நீ மட்டும், கருப்பனை வையலாமாக்கும்.” எனச் சாப்பாடு கூடையோடு வந்த, அவளது அம்மாச்சி பவளாயி கேட்க,

“நான் பேசுறதும்,அவுக பேசறதும் ஒண்ணா. அந்தாளு புத்தியில்லாத பேசுது, நான் அதுக்குப் புத்தியைக் கொடுக்கச் சொல்லி  கருப்பனை வேண்டுறேன்.” என அவள் வார்த்தையாட, “ஏசினாலும், பேசினாலும் அப்படியே நிக்கிறாகன்னு, யாரைச் சொன்ன!” எனக் கிழவி கிடுக்கி பிடி போட,

“அது இவரையும், இவரைத் தாங்கி ஆடுற உன் புருஷனையும் தான். பூசை வச்சு, மணி அடிச்சுக் கூப்பிடையில் மட்டும், ஆக்ரோஷமா இறங்குறது. மத்த நேரம், ஒண்ணும் நடக்காத மாதிரி தான நிக்கிறாரு. ஒருக்கா, இவர் சுய ரூபத்தைக் காட்டினா, பேசறவனுங்க நாக்கு மேலன்னத்தில ஓட்டிக்காது, அப்புறம் எப்படிச் சாமி, இருக்கு இல்லைனு பேசுவாங்க.” என அவள் விடாமல் யாரையோ வறுத்தெடுத்துக்க, பொங்கல் வைக்கும் கட்டாந் தரையில் சாப்பாட்டை இறக்கி வைத்து விட்டு, பேத்தியைப் பார்த்த பவளாயி,

“இப்ப யாருக்கு நல்ல புத்தியைக் கொடுக்கச் சொல்லி வேண்டிக்கிட்டு இருக்கவ!” என்றார். 

“எல்லாம் நீ வளர்த்து விட்ட, கோயில் காளை ஒன்னு, யாருக்கும் அடங்காமத் திரியுதே, உன் கொழுந்தன் மகன், அதுக்குத்தான்.“ என அவள் நொடிக்க,

“உனக்குப் பரிசம் போட்ட, என் மவன் ராசப்பாவ சொல்றீயாக்கும், அவனைத்தான், ஜில்லாவுலையே, பெரிய அறிவாளி, புரட்சி புயல்னு, கருப்புச் சட்டை, சிவப்புச் சட்டையெல்லாம் புகழுது, நீ என்னண்டா, அவனுக்கே புத்தி கொடுக்கச் சொல்லி வேண்டுறவ. ஒரு வேளை , நீ வேண்டிக்கிறதால தான், அவனுக்கு அம்புட்டு அறிவோ என்னமோ?“ எனப் பவளாயி நக்கலாகச் சிரித்தார்.

அவரை முறைத்து விட்டு , “நம்ம சாமி, அவருக்கு அறிவை கொடுத்திருந்தா, அதைத் தூக்கி ஆடுற, என் தாத்தனையே, எதிர்த்துக் கேள்வி கேட்டிருக்குமா. அகராதி திண்ட, அந்த மனுஷனைப் பத்தி, இனிமே நாம பேச வேண்டாம் அம்மாச்சி, இத்தோட, அவுக சம்பந்தப் பட்ட விஷயத்தை எல்லாம் முடிச்சுக்குவோம், அவுக சங்காதமே வேண்டாம்.“ என அவள் வேலையைத் தொடர்ந்தாள்.

“அதென்னடி, அப்படிச் சொல்லிபுட்ட, ஊரோட வந்து உனக்குப் பரிசம் போட்டுப் போயிருக்கான், ஐப்பசி பொறக்கவும் கல்யாணம் கட்ட போறவனோட, சங்காதம் வச்சுக்கக் கூடாதுன்னா என்ன அர்த்தமுன்னேன்.”

“அந்த நினைப்பு இருந்தா, சாமியாடியான என் தாத்தாகிட்டையே, ஊருக்கு நடுவுல வச்சு, சாமியுமில்லை, பூதமும்மில்லைனு தர்க்கம் பண்ணியிருக்குமா, அவுக சம்மதம் நமக்கு ஒத்து வராது.” என அவள் பேச்சை வெட்ட,

“அவன் நல்லவன், உன்னை வச்சு நல்லா பொழைப்பான்னு, உன் தாத்தனே, இந்தக் கருப்பன் கிட்ட உத்தரவு வாங்கிப் பேசி முடிச்சாரு, எனக்குத் தெரியாதுத்தா, நீயாச்சு உன் தாத்தாவாச்சு, இந்தக் கருப்பனாச்சு, நீங்களே பேசி முடிவுக்கு வாங்க.” எனப் பவளாயி கணவன் வரும் வழியைப் பார்த்தார்.

வயல் வேலையை முடித்து, முத்து சாமி பம்ப்செட்டில் கைகால்களைக் கழுவி கொண்டு, “கருப்பா, எல்லாரையும் நல்லா வை.“ என வேண்டியபடி, சன்னதியில் விழுந்து, விபூதியைப் பட்டையாய் அடித்துக் கொண்டு மனைவியும், பேத்தியும் இருக்குமிடம் வந்தமர்ந்தார்.

கோவிலைச் சுற்றியுள்ள வயல்கள், முத்துசாமியின் பொறுப்பு, அதில் இரண்டு ஏக்கர் இவர் பங்கு எனில் மீதமுள்ள, பத்து ஏக்கர் பங்காளிகளுடையது, மற்றவர்களுக்கு விளைச்சலில் பங்கு கொடுத்து விட்டு, பாட்டாளிகளுக்குக் கூலி கொடுத்து, கருப்பனுக்குப் போக, மீதியில் இவர் குடும்பம் வயிற்றை நிறைத்துக் கொள்ளும்.

“என்னா விஷயம், அம்மாச்சியும் பேத்தியும் கருப்பனையும், பேச்சிலே இழுத்து பஞ்சாயத்து பேசிகிட்டு இருக்கீங்க?” என முத்துசாமி கேள்வி எழுப்ப, ஒரு தூக்கு போணியை அவர் புறம் நகர்த்திய, பவளாயி, பேத்தி நறுக்கி வைத்திருந்த வாழை இலையில் வெஞ்சனத்தை வைத்து நீட்டி விட்டு, பேத்தியின் அங்கலாய்ப்பையும் சொன்னார்.

 

அதைக் கேட்டு ஹாஹாவெனச் சிரித்தவர், “ஏத்தா சின்னப் பயலுக, அறியாமைல பேசுறதுக்கெல்லாம், மனுஷ கழுதையாட்டம், கருப்பனும், அருவாளை தூக்கணும்னா எப்படி? நிண்டு நம்மையே ஆள்றது தான் சாமி. அதது, அவரவர் பக்குவதில தான் உணர முடியும்.” என்றவர், “கோபமில்லாத, கருப்பன் படியளந்ததைச் சாப்பிடு, வயித்தோட மனசும் குளிர்ந்து போகும்.” எனத் தேற்றியவருக்குப் பேத்தியின் கோபத்தில் ஒளிந்திருக்கும் ஆற்றாமை புரியாமல் இல்லை.

 

முத்துச்சாமிக்கு, விவசாயம் முதல், நாட்டு நடப்பு வரை அத்தனையும் அத்துப்படி. ஊருக்கே யோசனை சொல்லும் சிறந்த மனிதன். அவர் ஒரு வாக்குச் சொன்னால், அது கருப்பன் வாக்கு என்றே, ஊர் மக்கள் சிரம் தாழ்ந்து கேட்பார்கள். அவர் தெய்வ சன்னிதியில் சந்ததம் வந்து, கருப்பனைத் தாங்கி ஆடும் போது, ஊர் சனமே அவர் காலில் விழுந்து திருநீறு வாங்கும். அந்த நேரம், வழங்கப்படும் திருநீற்றை, கருப்பனே வந்து தருவதாகவும், வருடம் ஒரு முறை அவன் ஆசி பெற்றாலும் போதும், எந்த நோய் நொடியும், தீவினைகளும் தங்களை அண்டாது என்பது கிராம மக்களின் ஆழ்ந்த நம்பிக்கை.

 

தெய்வ நம்பிக்கை மிகுந்த அவரது குடும்பத்தில் தான், நாத்திகம் பேசும் மூன்றாம் பங்காளியின் வாரிசு ராசப்பாவும் இருந்தான். பெரியப்பாவோடு, மற்ற விசயங்களில் ஒத்துப் போகும் ராசப்பா, இந்த விசயத்தில் மட்டும் தர்க்கம் செய்து எதிர்த்துத் தான் நிற்பான். ஆனால் தன்னைப் போலவே, உடன் பிறந்தவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து, அம்மாவையும் பேணும் அவன் குணத்திலும், அவன் உழைப்பிலும் நம்பிக்கை வைத்து, பேத்தியை அவனுக்குக் கட்டித் தர சம்மததித்திருந்தார் முத்துச்சாமி. 

 

ஊரின் நடுவிலிருக்கும் டிக்கடையில் தான், காரசாரமான எல்லா விவாதங்களும் ஓடும். மூன்று நாட்களுக்கு முன், "ராசப்பா, பௌர்ணமி பூசை வருது. கோவில்ல இரண்டு நாளைக்கு, குழாயைக் கட்டி விடு. ஊர் பூரா கருப்பன் பாட்டு கேக்கட்டும்." என அவர், முன்பணத்தை  நீட்ட, அதை வாங்க மறுத்தவன்,

"கருப்பனுக்கு, கருப்பனுக்குனு, உழைச்ச காசை எல்லாம் அங்கயே கொண்டு போய்க் கொட்டுங்க. விளைச்சலையும் பங்காளிகளுக்குப் பங்கு வச்சிடுறீங்க. எவன்கிட்டையும் கோயில் வரி வாங்கிறதும் கிடையாது, கருப்பன் உங்களைக் காப்பாத்துறானா, இல்லை நீங்க கருப்பனை காப்பாத்துறீங்களான்னு தெரியலை." என பேச்சை ஆரம்பிக்க, 

"எல்லாருக்கும் படியளக்கிறதே, அவன் தான். அவனுக்கு நாம படியளக்க முடியுமா. இதையெல்லாம் புரிஞ்சுகிற பக்குவம் உனக்குக் கிடையாது. விடுய்யா!"  என்றார் பெரியவர். 

"புரிஞ்சுக்கிற மாதிரி, எடுத்துச் சொல்லுங்க. நீங்களும் உங்க வயசுக்கு, எழுபது வருசமா, உங்க சாமிக்குச் சேவகம் பண்றீங்க. கஷ்டத்தைத் தவிர அந்தச் சாமி என்ன கொடுத்துச்சு? கைகாலை முடக்கி போட்ட ஒரு மகனை கொடுத்துச்சு, காலம் பூரா, உங்க மகன் சின்ன கருப்பனை தூக்கி சுமந்திங்க, அவனும் அல்ப ஆய்ஸ்ல போயிட்டான். சரி ராக்கம்மா அக்களாவது நல்லா வாழ்ந்துச்சா, முதல்பிரசவத்துலையே அதுவும் போய் சேர்த்துடுச்சு, வயசான காலத்துல பேத்தியை காவல் காத்துகிட்டு திரியிறீங்க." என அவர், வாழ்வை வரிசையாய் பட்டியலிட்டு, சாமியே இல்லை என விதண்டாவாதம் பேசினான். 

“ராசப்பா, எல்லாமே நம்ம பார்க்கிற பார்வையில தான் இருக்கு, என் மகன் ஊனமா தான் பொறந்தான், நான் இல்லைங்கல, ஆனால் அவனை சுமக்க உடம்புலையும், மனசுலையும்  வலுவ கொடுத்தது என் கருப்பன் தான். அவன் என் வினைப்பயனை முடிக்க, எனக்கு வரமா வந்தவன். மகளும் அதே தான். ஆனால் போக கூடாத வயசில போனாலும், எங்க பிடிமானத்துக்கு பேத்தியை கொடுத்துட்டு போயிருக்கா, அவளை கட்டிக்க நல்ல மனசுக்காரன் நீ வந்துட்ட, நீ என்னை தூக்கி போடாதையா போயிடுவ?” என அதே விஷயத்தை தன் பார்வையில் சொன்னார். 

ஆனால், அதை அப்படியே ஒத்துக் கொண்டால், அவனெப்படி புரட்சியாளன், ஊர், நாட்டு நடப்பை இழுத்துப் பேசி, கடவுள் மறுப்பை அவன் ஆணித்தனமாக எடுத்து வைக்க, முத்துச்சாமி அமைதியானார். ஆனால் அவர் சார்பாகக் கிராம மக்கள், தங்கள் அறிவுக்கு எட்டிய தூரம், கடவுளைத் தாங்கிப் பேசினர். ராசப்பா பக்கமும், இளவட்டங்கள் பேசினர்.

இந்த விசயம், ஊருக்குள், சாமியாடியை, அவர் தம்பி மகன் எதிர்த்திட்டான் என அவரவர் புனைவு, பிறசேர்க்கை எல்லாம் சேர்த்துச் சொல்ல, விசயம் ஊருக்குள் பரவி முத்துபேச்சி காதுக்கும் சென்றது. 

ராசப்பா, நல்ல உழைப்பாளி. கொட்டகை, பாத்திரங்கள் முதல், விசேசங்களுக்குத் தேவையான பொருட்களை வாடகைக்கு விடும் கடை வைத்திருக்கிறான், நல்ல வருமானம். முத்துச்சாமியை காட்டிலும், அதிகம் அடிபட்டதாலும், சுயமரியாதை கூட்டங்கள், கம்யூனிஸ்ட் கட்சி மீட்டிங்க் என மைக் செட் அமைக்கும் வேலைக்கு போனவன், அவர்கள் பேச்சைச் செவி மடுத்து, இரண்டுக்கும் பொதுவாக, தனக்கென ஓர் கொள்கையை உருவாக்கிக் கொண்டான்.

போன மாதம் தான் முத்து பேச்சிக்குப் பரிசம் போட்டுச் சென்றான். அது முதல், அங்கங்கே அவளைப் பார்க்கும் நேரமெல்லாம், ஜாடையாய் பேசி, தன் பிரியத்தை அவன் உணர்த்த, அவளுக்குள்ளும் பூ மலர்ந்தது. ஆனால் இயல்பாகவே அவன் பேச்சில் வரும், இறை மறுப்பைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதவளுக்கு, இரண்டு நாட்களுக்கு முன் தன் தாத்தாவிடம் தர்க்கம் செய்ததில் ஏகத்துக்கும் கடுப்பு.

நாளை பௌர்ணமி பூஜை, எல்லாருக்கும் வழி காட்டும் இந்தத் தெய்வம், தனக்கும் நல்ல வழியைக் காட்டட்டும் என மனதில் மருகி நிற்க,

"ஆத்தா பேச்சியம்மா, ராசப்பா, ஆளுங்க, குழா கட்ட வருவானுங்க. இந்தத் தரம் கொஞ்சம், உச்சக்க ஏத்திக் கட்டச் சொல்லு. நாளைக்குப் பூசைக்கு அன்னதானம் யாரோ கொடுக்குறோமுன்னு சொன்னாகளாம், யார் என்னனு ப்ரசிடெண்டை விசாரிச்சிட்டு வந்துடுறேன்.” என அவர் கிளம்ப,

"அந்தாள விட்டா, உங்களுக்கு வேற மைக் செட்டே கிடைக்கலையாக்கும்." என நொடித்த பேத்தியைப் பார்த்து, ஓர் சிரிப்பை மட்டும் உதிர்த்துச் சென்றார்.

பௌர்ணமி அன்று, காலையிலிருந்தே ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். குடும்பம் குடும்பமாக வந்து பொங்கல் வைத்து, மாவிளக்கு போட்டு, சாமியை வணங்கிச் சென்றனர். இன்று கோவிலில், முத்துசாமி குடும்பம் மட்டுமின்றி, மற்ற பூசாரி, பங்காளி குடும்பங்களும், கருப்பனுக்குத் தொண்டூழியம் செய்து கொண்டிருந்தனர்.

உச்சி காலப் பூஜையில், ஆலய மணி முழங்க, தூப தீபம், பூக்களின் நறுமணம் அவ்விடத்தை நிறைக்க, எழில் கொஞ்சும் பசுமையோடு பூலோக கைலாயம் போல் கோவிலே தெய்வ கடாட்சம் நிறைந்து இருந்தது. ஆனந்தரூபனாய், அருள் பாலிக்கும் கருப்பன், கோவில் மணியடித்து, பக்தர்கள் சரணங்களை முழங்க  ஆக்ரோஷமாய் முத்துசாமி மேல் இறங்கினான். நாக்கை துருத்தி, கண்ணை மலர்த்தி, செவ்வெறி ஓடிய சிலிர்ப்புடன், அருவாளை ஏந்தி சன்னதி முன் ஆட்டம் ஆடியவன், தன் முன் மண்டியிட்டு விழும் பக்தருக்கெல்லாம், அருளாசி வழங்கினான். கண்ணீர் மல்க கதறியவர்களுக்கு, நல்வாக்குத் தந்தான்.

முத்துப்பேச்சி, கருப்பனாகிய தாத்தன் முன் மனக்குறையோடு மண்டியிட, பவளாயி, “அவள் மனச் சஞ்சலத்தைத் தீர்த்து வைங்க.” எனவும், ஓர் அட்டகாசமான சிரிப்போடு, “உன் மனசு குளிர,மனை அமையும்.” என ஆசிர்வதித்தார். 

ஊர் ப்ரசிடெண்ட்டிலிருந்து, காவிசட்டையிலிருந்த வெளியூர்காரர்கள் வரை பயபக்தியோடு வணங்கி நின்றனர். கருப்பன், அனைவருக்கும் அருளாசி வழங்கி மலை ஏறினார். சூட தீபாராதனை காட்டப்பட்டது.

அன்று முழுவதும், ஊர் மக்கள் அங்குத் தான் குடியிருந்தனர், பெரும் புள்ளி ஒருவர், அன்னதானம் வழங்கினார், மற்றொருவர் சுமங்கலிகளுக்குத் தாம்பூலம் வைத்துக் கொடுத்தார். சிலர் புதிதாகக் கோரிக்கை வைக்க வர, சிலர் நிறைவேறிய கோரிக்கைக்காகக் காணிக்கை செலுத்த வந்தனர். 

மதியத்துக்கு மேல் கூட்டம் குறையவும், பிரசிடெண்ட் அழைத்து வந்த காவி சட்டை, தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு ,தான் இருக்கும் அமைப்பைப் பற்றியும், இந்தக் கோவிகளைப் பாதுகாத்து, கருப்பனின்  அருளை வெளியுலகுக்கு பிரபலப்படுத்தும்  யோசனையும்  சொன்னார். அதன் மூலம் பக்தியையும், மதத்தையும் வளர்க்கலாம் என்றார். தங்கள் அமைப்பை, கட்சியின் செல்வாக்கைப் பற்றி அடுக்கியவர் கடைசியில் முத்துசாமியை தங்கள் அரசியல் கட்சியில் சேரச்சொல்லி வலியுறுத்தினார்.

“நம்ம கட்சியில் சேர்ந்துட்டீங்கன்னா, மத்த மதத்துக்காரங்க உங்களை எதிர்க்கத் துணிய மாட்டாங்க. நம்ம மதத்திலிருந்து, மதம் மாறுவதைத் தடுக்கலாம். நாத்திக கூட்டம், உங்களை ஒரு வார்த்தை பேசும் முன்ன யோசிப்பாக. நீங்க தனி ஆளா இருக்கப் போய்த் தானே, உங்க சொந்தக்காரன், ஊர் மத்தியில் உங்களை அசிங்க படுத்தியிருக்கான். இனிமே அதெல்லாம் நடக்காது, நாங்க உங்களுக்குத் துணையா இருப்போம், பேசுறவனுக்கு, நம்ம சாமி, அங்கேயே தண்டனை தருவார், அவன் பல் உடையும்.” என முத்துசாமியை மூளைச் சலவை செய்து கொண்டிருக்க, அம்மாச்சியும், பேத்தியும் தூரத்திலிருந்த பார்த்துக் கொண்டே இருந்தனர்.

 மைக் செட்டை அவிழ்க்க, ராசப்பவே வந்தான், நேற்றே அவன் எடுபிடி  சீனி, குழாய் கட்ட வந்தவன் முத்து பேச்சியின் வாயை பிடுங்கி , அவளது மனத்தாங்கலை, கேட்டு அறிந்து, “நயன்டிஸ் கிட்ஸ்சுக்கு பொண்ணே கிடைக்க மாட்டேங்குது அண்ணன், உனக்கு மேடையில் பேசுற அளவுக்கு, வீடு விவகாரத்தில் விவரம் பாத்ததுன்னேன், மதனிகிட்ட அடங்கிப் போ, அப்பத்தான், அது உன்னைக் கட்டும். அதை விட்டு, அவுக தாத்தா, சாமியாடிகிட்டையே போய் ஒரண்டை இழுத்துகிட்டு இருக்க!” என அறிவுரை வழங்க, 

“பொடிப்பய, நீயெல்லாம் எனக்கு யோசனை சொல்ல வந்துட்ட!” என  முறைத்தவன், 'காவி கூட்டமெல்லாம், உள்ள வர்றது இந்த ஊருக்கு நல்லதில்லை, அதுக்காகவாவது, நாளைக்குக் கோவிலுக்குப் போகணும்.' என வந்து சேர்ந்தான்.

பவளாயி, அவனை வரவேற்றுச் சாப்பிடச் சொல்ல, முத்துப் பேச்சி முகத்தைத் திருப்பிக் கொண்டு அம்மன் பீடத்துக்கு அருகில் சென்று நின்று கொண்டாள், அவன் தான் அங்கு வரமாட்டானே!

ராசப்பாவை பார்க்கவும், காவி சட்டை கொஞ்சம் ஸ்ருதியைக் குறைத்து, “சரிங்க ஐயா, நாளைக்குப் பார்ப்போம், இப்ப நீங்களும், கருப்பனும் எனக்கு உத்தரவு கொடுங்க.” எனக் கையைக் கூப்ப.

“இருங்க தம்பி, கருப்பனை கும்பிட வந்துட்டு, சும்மா போகலாமா.” என்றவர், ராசப்பாவையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, கருப்பன் சன்னதிக்குச் சென்று, நறநறவென இருந்த சாம்பல் விபூதியை, தன் நெற்றியிலும், உடலிலும் பட்டையாக அடித்துக் கொண்டு வந்து தன் உயரத்துக்கு நிமிர்ந்து நின்றார்.

“இது, எங்க ஊரு, எங்க சாமி. நாங்க பாட்டன், பூட்டன் காலத்திலிருந்து, இந்த வயல் வெளியில் வச்சு, அவனைக் கும்பிட்டு வரோம். காவி சட்டைக்காரன் சொல்லித் தான், நாங்க எங்க சாமியை கும்புடணுங்கிறதும் இல்லை, கருப்பு சட்டைக்காரன் சொல்லி, அவனை மறுக்கணும்கிறதும் இல்லை. எவன் வந்தாலும், போனாலும், சொன்னாலும் சொல்லைனாலும், எங்க அப்பனை ஆத்தாளை, நாங்க கும்பிடத் தான் செய்வோம்.

நாட்டில் நடுக்கிற அக்கிரமத்தையெல்லாம் பட்டியல் போட்டு, உங்க சாமி இருக்கா, இருந்தா இதெல்லாம் ஏன் நடக்குதுன்னு கருப்பு சட்டைகாரன் கேட்கிறான். அவனுங்களுக்குப் பதில் சொல்ல, காவி சட்டைக்காரன் கச்சை கட்டிட்டு இறங்குறீங்க.

'தீதும், நன்றும் பிறர் தர வாரா' நம்ம செஞ்ச தப்பு தான், நமக்குத் தண்டனையா வரும், அந்தத் தப்பு எப்போ செஞ்சேன்னு கேட்காத, அப்பாவியா இருக்கச் சின்னப் பிள்ளைகளைக் கூடச் சீரழியுதுங்களேன்னு கேட்டுத் தர்க்கம் பண்ணாதே. எந்தச் ஜென்மத்துல, எந்த உசிரு என்ன பாவம் செஞ்சது, இப்ப பாவம் செய்யிறவன் என்ன கதி ஆவான், என்ன கணக்குன்னு நமக்குத் தெரியாது, ஆனால் அவனுக்குத் தெரியும். அவன் கணக்கு தப்பவும் தப்பாது. 

ஒருத்தன் சீரழிச்ச புள்ளைக்கு, அது சீரழிவு இல்லைனு புரிய வை. மனசு சுத்தம் தான் கடவுள். நல்லதோ கெட்டதோ சமநிலையில் பார்க்கிற பக்குவம் தான் அவன் அருள் கொடை. உன் பக்குவத்துக்கு ஏத்த மாதிரி அவன் காட்சி கொடுப்பான். இது அவனவனா உணர்ந்து தெளிய வேண்டிய விஷயம்.

இது சரி, இது தப்பு, நீ கும்பிடு, கும்புடாதேன்னு அடுத்தவனுக்குச் சொல்லித் தராதே. எங்க பிள்ளைகளுக்கு நாங்க சொல்லி கொடுத்துவுக்கோம்.” என முத்து சாமி, ஆக்ரோசம், ஆவேசமின்றி அமர்த்தலாகச் சொன்னார்.

“அப்ப மதம் மாறி போறவங்களுக்கு என்ன சொல்றிங்க?“ எனக் காவி சட்டைகேட்க. “எல்லாச் சாமியும் ஒன்னு தான், அவனுக்குக் கடவுள் எந்த  விதத்தில் காட்சி கொடுத்தாரோ, அதை  பிடிச்சுக்குறான். ஆனால், நீ இதைச் செய், நான் உன்னைக் கும்புடுறேன்னு போறவன், எந்த மதத்துக்கும், ஏன் அவனுக்கு அவனே உண்மையானவனா இருக்க மாட்டான்.” என்றார்.

“சாமி கும்பிபுடுங்கிற மாதிரி, சாமி இல்லைங்கிறதும் ஒரு கொள்கை தானே, அதைச் சொன்ன எதுக்கு ஒதுக்கி வைக்கிறிங்க?” என் ராசப்பா கேள்வி எழுப்ப, முத்துப்பேச்சி  மறுபடியும் ஆரம்பிக்கிறியா  என முறைத்தாள்.

“உன்னை எப்ப நான் ஒதுக்கி வச்சேன், அப்படி ஒதுக்கி வச்சா என் பேத்தியை உனக்குக் கட்டி கொடுக்கச் சம்மதிச்சு இருப்பேனா. உன்னைக் கேள்வி கேட்க கூடாதுன்னும் சொல்லலை, ஆனால் அரைகுறையா தெரிஞ்சுக்கிட்டு ஒரு முடிவுக்கு வந்தவனா, பிடிவாதமா கேட்காத, உனக்குள்ள கேள்வியைக் கேளு. 

சங்கடம் வரும் போது, தானே சாமியே இல்லைனு வசனம் பேசுறீங்க, அந்தச் சங்கடம் தான், உன்னை வலுவான மனுசனா மாத்தும், மனுச சித்தம், நாளுக்கு நாள் மாறக் கூடியது. உன் கையும், காலுக்கு ஓயும் போது, உன் மேலையே உனக்கு நம்பிக்கை குறையும். நம்பிக்கை குறைஞ்ச மனுஷன் ரொம்ப ஆபத்தானவன். அவனையும் காத்து, சமுதாயத்தையும் காத்து நிக்கிறது இறை நம்பிக்கை, அங்க துணை நிக்கிறவன் தான் கடவுள்.“ என முத்துசாமி பேச,ராசய்யா சிந்திக்க ஆரம்பித்தான்.

அவன் யோசித்து நிற்கும் நேரமே, 'கருப்பா, இந்த விபூதியை, மாமன் பூசிக்கிச்சுன்னா, நான் அதைக் கட்டிக்குவேன், இல்லையினா உனக்குச் சேவகம் பார்த்துகிட்டு இருந்துக்குறேன், முடிவு உன்னது தான்.‘ என முத்துப்பேச்சி, விபூதியை ராசப்பாவின் நெற்றியில் பூச வர, ஒரு நிமிடம் தயங்கியவன், அவள் முகம் சுருங்கவும், “உன் நம்பிக்கைக்காகப் பூசிக்கிறேன்.” என நெற்றியை நீட்டினான். “கருப்பா, என் மாமனுக்கு நல்ல புத்தியைக் கொடு." என்ற வேண்டுதலோடு பூசி விட, பவளாயி சிரித்தார்.

“அய்யா, கடவுள் இருக்கார்னு ஒத்துக்குறிங்க, நம்ம மதத்து கடவுளைத் தான் கும்புடுறீங்க, நம்ம கட்சியில் சேரலாமே!” எனக் காவி சட்டை கருத்து தெரிவிக்க,

மீண்டும் கலகலவெனச் சிரித்த, முத்துசாமி, “நீங்க, உங்க கட்சியை வளர்க்க மதத்துக்குக் காவலன் வேஷம் கட்டுறீங்க, அவுங்க சாமி எது, பிற்பாடு வந்த சம்பிரதாயம் எதுன்னே தெரியாமல் எதிர்த்து நிக்கிறாங்க. உங்க இரண்டு கட்சியும் ஆரம்பிக்கும் முன்னையும், நாங்க சாமி கும்பிட்டோம், உங்களுக்கு அப்புறமும் நாங்க சாமி கும்பிடுவோம். 

எங்க நம்பிக்களுக்குள்ள, உங்க கட்சியை வளர்க்க பார்க்காதீங்க, அவுங்க அப்படி தான் கத்துவாங்கன்னு, உங்களை கடந்து போயிகிட்டே இருப்போம். நீங்க சட்டையில், அடையாளத்தில் காட்டுறிங்க, நாங்க வேட்டியில் பக்தியை காட்டுறவுங்க. எங்க ஊர், எங்க சாமி, நீங்க உள்ள வராதீங்க!“ என முடித்தார் சாமியாடி முத்துசாமி.

எங்க ஊரு எங்க சாமி! நீ உள்ள வராதே!

 

வாழ்வியல்
காலம்

 

காலமும் காலனும் யாருக்காகவும் இரக்கப்பட்டுவதில்லை‌.காலச் சக்கரம் நிற்காமல் சுழன்று கொண்டேயிருக்கிறது.

காலை 8 மணி

" என்னங்க குளிச்சாச்சா? ப்ரேக்ஃபாஸ்ட் டேபிளில் ரெடியா இருக்கு.சீக்கிரம் சாப்பிட வாங்க.ஆஃபிஸில் முக்கியமான மீட்டிங் இருக்குன்னீங்களே!".

" இதோ வந்துட்டேன்மா",

என்று வந்து அவசர அவசரமாகக் காலை உணவை முடித்து விட்டுக்
கிளம்பினான் அநிரன்.அன்பு மனைவி மாளவிகாவின் இதழில் அழுத்தமாக முத்தத்தைப் பதித்து விட்டு அந்த  இனிமையுடன் கிளம்பினான்.ஆறு மாத கர்ப்பிணியான அவளின் மேடிட்டிருந்த வயிற்றில் அடுத்த முத்தத்தைப் பதித்து
விட்டு வேகமாகக் கிளம்பினான்.

பகல் 11 மணி

ஸெல்ஃபோன் விடாமல் அடிக்க வேலைகளை முடித்து விட்டு அப்போது தான் உட்கார்ந்த மாளவிகா 
ஃபோனை எடுத்தாள்.

" ஹலோ மிஸஸ்.மாளவிகா தானே பேசறது? உங்கள் கணவருக்கு ஆக்ஸிடென்ட் ஆகி ஜி.ஹெச்சில் அட்மிட் ஆகியிருக்கிறார்.சீக்கிரமாகக் கிளம்பி வாங்க",

என்று மற்ற விவரங்கள் எதுவுமே சொல்லாமல் ஃபோனை வைத்து விட்டார் அந்த முகம் தெரியாத மனிதர்.

காதல் திருமணம் என்பதால். இரண்டு பக்கப் பெற்றோரும் இன்னமும் முறைப்பிலேயே இருக்கிறார்கள்.உதவிக்காக ஆஃபிஸ் நண்பருக்கு ஃபோன் செய்து விட்டுக் கையில் கொஞ்சம் பணத்துடன் கிளம்பினாள் மாளவிகா.

பகல் 3 மணி

ஜி.ஹெச்.சில் தலைமை மருத்துவரின் அறை.மாளவிகா கவலையுடன் அவர் எதிரில் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.ஆஃபிஸ் நண்பர் மாளவிகாவின் அருகில் நின்று கொண்டிருந்தார்.

" மேடம்.வெரி ஸாரி.உங்களுடைய கணவருக்குத் தலையில் பலத்த அடி.அவரைக் காப்பாற்ற எவ்வளவோ முயற்சிகள் செய்தோம்.ஒன்றும் பலனளிக்கவில்லை.இப்போது அவருக்கு மூளைச்சாவு ஆகி விட்டது.இப்போது நீங்கள் ஒரு முக்கியமான முடிவைத் துணிச்சலாக எடுக்க வேண்டும்.நீங்கள் ஓகே சொன்னால் உங்களுடைய கணவரின் ஆர்கன்களை தானம் செய்யலாம்.ஆர்கன்ஸுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் ஐந்து நோயாளிகள் பயனடைவார்கள்.நீங்கள் நன்றாக யோசித்து முடிவெடுங்கள்",

தலையில் கை வைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்த மாளவிகா  நிமிர்ந்து பார்த்தார்.

" இதில் யோசிக்க டயம் தேவையில்லை டாக்டர்.நான் முழு சம்மதம் தருகிறேன்.
எந்த பேப்பரில் கையெழுத்துப் போட வேண்டும் என்று சொல்லுங்கள்",

கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பேசிய மாளவிகாவை ஆச்சர்யத்துடன் பார்த்தார் அந்த டாக்டர்.

இரவு 8 மணி

கணவனின் உடலோடு வீட்டுக்கு வந்தாள் மாளவிகா.அடுத்த நாள் காலையில் அநிரனுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய அலுவலக நண்பர்கள் உதவி செய்து கொண்டிருந்தார்கள்.

அவளைப் பார்க்கப் புதிதாக ஐந்து பேர் வந்து கைகளைக் கூப்பிக் கண்ணீருடன் நன்றி கூறினார்கள்.அவர்களுடைய குழந்தைகளுக்குத் தான் அநிரனின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப் பட்டிருந்தன.

" அம்மா நீ தான் எங்களுக்கு இனி தெய்வம்.எங்கள் குழந்தைகளின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்திருக்கிறாய்.
உனக்கு எவ்வளவு பண உதவி வேணுமோ தயங்காமல் கேளும்மா",

என்ற அவர்களைக் கை கூப்பித் தடுத்து நிறுத்தினாள் மாளவிகா..

" பணத்தாசை காண்பித்து என் கணவரின் உடல் உறுப்புகளை விற்ற
பாவத்தை என் மேல் போட வேண்டாம். முடிந்தால் நீங்கள் யாராவது எனது தகுதிக்கேற்ற வேலை வாங்கித் தர முடியுமா? எனது குழந்தைக்காக நான் உயிர் வாழ வேண்டும்",

என்று சொன்ன அந்த வீரப் பெண்ணை பிரமிப்புடன் பார்த்தார்கள்.

" கண்டிப்பாக ஏற்பாடு செய்கிறோம்மா",

என்று சொல்லி நகர்ந்தார்கள்.

காலத்தை வென்ற அந்தப் பெண்
மனித நேயத்தில் உயர்ந்து நின்றாள்.

புவனா சந்திரசேகரன்.

வாழ்வியல்
பார்வைகள் பலவிதம்

பார்வைகள் பலவிதம்


வியாழக்கிழமை மாலை நேரம். ஷீரடி சாயிபாபா கோயில் வாசல். நிறையப் பிச்சைக்கார்கள் கையில் அலுமினியத் தட்டுடன் பிச்சைக்காகக் கையேந்தி நின்றார்கள். வியாழக்கிழமை என்பதால் நல்ல கூட்டம் அங்கு.

பார்வை 1

தங்கள் அருகில் புதிதாக வந்த அந்த வயதான பிச்சைக்காரனைக் கோபத்துடன் பார்த்தான் கொஞ்சம்
வயதில் சிறியவன்.

"எங்கேயிருந்தோ வந்து இன்னைக்கு நம்ப பக்கத்தில் வந்து உக்காந்துருச்சே இந்தக் கெழம்! போச்சு போச்சு வருமானமெல்லாம் போச்சு! ",
என்று மனதிற்குள் புலம்பினான் அந்த சக பிச்சைக்காரன்.

பார்வை 2

கோயிலில் தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்து பிச்சைக்காரர்களுக்கு வரிசையாகக் காசுகளைப் போட்டாள்
மாயா. வாராவாரம் வியாழக்கிழமை தவறாமல் வருவாள் குழந்தைப் பேறுக்காக வேண்டிக் கொள்ள மாயா வருகிறாள். புதிய பிச்சைக்காரர் மேல் பார்வை படிந்தது.

"ஐயோ பாவம், வயதான காலத்தில் இப்படிப் பிச்சையெடுக்கிறாரே? பிள்ளை இல்லை போல இருக்கு",

என்று நினைத்துக் கொண்டே நடந்தாள்.

பார்வை 3

அவசர அவசரமாகக் கோயிலில் தரிசனம் முடித்து விட்டு க் கிளம்பினான் தசரதன். வெளியில் பிச்சைக்காரர்களுக்கு அளவாகக் காசுகளைப் போட்டு நடக்கும் போது அவரைப் பார்த்தான்.

"கையையும் காலையும் பாத்தா நல்லாத் தெம்பாத் தானே இருக்காரு இவரு. எங்கேயாவது போய் வயசுக்கு ஏத்த வேலை செஞ்சு பொழைக்கலாமே? ஏன் தான் இந்த வயசில் வந்து பிச்சை எடுக்கறாரோ?",

என்று புலம்பிக் கொண்டே நடந்தான் தசரதன். அவனுக்குத் தான் தெரியும் நடுத்தர வர்க்கத்தில் குடும்பத்தின் தேவைகளைத் தீர்க்க எவ்வளவு உழைத்தாலும் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திணறுவதன் கஷ்டம்.

பார்வை 4

முதியவருக்குத் தட்டில் காசைப் போட்டு நடக்க ஆரம்பித்தார்கள் அந்த வயதான தம்பதி.

" பாவம், நம்பளை மாதிரி பொறுப்பான பிள்ளைங்க இல்லை போலிருக்கு. வயதான காலத்தில இப்படிப் பிச்சை எடுக்க வேண்டிய நிலைமைக்கு ஆண்டவன் தள்ளிட்டான்.
இதுக்குத் தான் அந்தக் காலத்தில் இருந்தே நாமும் சிக்கனமாக் குடும்பம் நடத்திக் குழந்தைகளையும் நல்லாப் படிக்க வச்சோம். நம்ப குழந்தைகளும் நல்லாப் படிச்சு முன்னுக்கு வந்து நம்மையும் வயசான காலத்துல நல்லாப் பாத்துக்கறாங்க. அப்படி அவங்க நம்மை முதியோர் இல்லத்தில் விட்டாலும் நம்ம கையில் பணபலம் இருக்கு. பயப்படத் தேவையில்லை",

என்று பேசிக் கொண்டே நடந்து சென்று ஆட்டோவில் ஏறினார்கள்.

விதவிதமான பார்வைகள் அங்கு கிடைத்தன. பிச்சைக்காரர்களாக ஒருவேளை உணவிற்குப் போராடினாலும் கிடைத்ததை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் அன்பான பார்வை, ஒருவருக்கொருவர் நலம் கேட்டு விசாரிக்கும் பரிவான பார்வை, பொறாமையுடன் பார்க்கும் பார்வை, தனது இடத்தை மற்றவன் பறித்து விடுவானோ என்ற எச்சரிக்கைப் பார்வை எல்லாமே மாலை வரை கிடைத்தது அந்தப் புதிய பிச்சைக்காரருக்கு. விதவிதமான மனிதர்கள்! பணத்தை அலட்சியமாகத் தூக்கிப் போடுவோர், அருகில் வந்து கருணையோடு போடுவோர் என்று
பிச்சை போடுபவர்களிலும் பல ரகம்.
மாலை இருட்ட ஆரம்பித்ததும் தனக்குக் கிடைத்த பணத்தை அங்கிருந்தவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார் அவர். அருகில் சிறிது தூரத்தில் ஒரு வீட்டின் எதிரே நிறுத்தப் பட்டிருந்த சொகுசுக் காரில் ஏறினார் அந்தப் பிச்சைக்காரப் பெரியவர்.
வேறு யாருமில்லை அவர். வளர்ந்து வரும் நடிகர். தனது புதிய படத்தில் பிச்சைக்கார வேடத்தில் நடிப்பதால் அந்த அனுபவத்தைக் கண்டுணர ஒரு நாள் பிச்சைக்கார வேடம் போட்டு
வெற்றிகரமாக நிறைவேற்றினார் எதிலும் பெர்ஃபெக்ஷனைத் தேடும் அந்த நடிகர்.

காட்சி ஒன்றே ஆனாலும் பார்வைகள் பலவிதமாகப் பார்ப்பவர்களின் மனநிலையையும் குணத்தையும் வைத்து அமைகிறது. உண்மை உள்ளுக்குள் ஒளிந்து நிற்கிறது.

புவனா சந்திரசேகரன்.

வாழ்வியல்
சுயம்பு (தீபாஸ்)

சுயம்பு           

மூத்தவள் திலோத்தமாக்கு கல்யாணமாகி நாலுவருஷம் ஆகப்போகுது இன்னும் குழந்தை பெத்துக்குறதை பத்தி யோசிச்ச மாதிரியே தெரியலை,  திலோத்தமாவைவிட ரெண்டு வயசுக்கு இளையவள் நித்தியா, அவளுக்கு  பிரசவமாகி ஆறு நாளாகிடுச்சு. நேத்தே குழந்தையையும் பெத்தவளையும் வீட்டுக்கு  அழைச்சுட்டு வந்தாச்சு.

     வீட்டோட புது வரவை  பார்க்க வருறவங்க எல்லாம் மூத்தவளுக்கு இன்னும் குழந்தை இல்லையான்னு என்கிட்டத்தானே கேக்குறாங்க,

       இன்னைக்கு திலோ வருறாள், வரட்டும் கையோட பிடிச்சு இழுத்துக் கொண்டு போய் டாக்டர்க்கிட்ட அவள் உண்டாக என்ன வழின்னு பார்க்கணும். எனத் தனக்குள்ளேயே நினைத்துக்கொண்டிருந்தார் விசாலி . அந்நேரம் குழந்தையின் சினுங்கள் கேட்டது.

     தாயின் கருவறைக்குள் வெதுவெதுப்பான அரவணைப்புடன்  இருந்த அப்பச்சிளம் குழந்தை பூமிக்கு வந்து ஆறு நாட்களான நிலையிலும் சூழல் மாறுபாட்டின் ஒவ்வாமையிஇலும் உடலை முறுக்கி முறுக்கி சினுங்க ஆரம்பித்தது.

        அதன் கண்களுக்குத் தெரியும் பொருட்களின் அசைவினை ஸ்கெலடைஸ்கோப் உருவாக்கும் வண்ணங்களின் சேர்க்கையாக மட்டுமே உள்வாங்க அக்குழந்தையால் முடிந்தது.

       பிள்ளையின் முதல் புரிதல், தான் உணர்ந்த தாயின் சூடும் அவரின் தொடுகையும் மட்டுமே.  அத்துடன் தாயின் மார்க்காம்பில் தனது வாய்ப்பதித்ததும் அன்னிச்சையாய் உதடு குவித்து தன் முதல் ஆகாரத்தை துய்க்கும்கலையில் தேர்ந்துவிடுகிறது குழந்தை.

       புதிதாக ஒன்றை கற்கும்போது மூலையில் டோபோமைன் என்னும் சுரபி சுரந்து அதற்கு ஆனந்தத்தை கொடுக்கிறது. புதியதை  கற்றுக்கொண்டதற்கான பாராட்டை ஒரு திருப்தி உண்டாகிறது. மீண்டும் அச்செயலை கற்றுத்தேற ஊக்கத்தை அச்சுரப்பி உண்டாக்குகிறது. முதல் துய்தலில் உண்டான டோபோமேன் அதன் மீதான பற்றுதலை கொடுத்து தான் உயிர்வாழுதலுக்கான தகுதியை ஆசையை தூண்டுகிறது.

      அந்த குளிரூட்டப்பட்ட அறையின் கட்டிலில் மெத்தைமேல் பிரத்தியோகமாக குழந்தைகளுக்காக என்றே மென்பஞ்சில் செய்யப்பட்ட அக்குட்டி மெத்தையில் தூங்கி விழித்த இன்னும் பெயர் சூட்டப்படாத அப்பச்சிளம் குழந்தை. தனது நினைவடுக்கில் நிறைவாய் துய்த்த அமிர்தத்தின் சுவை எட்டிப் பிடித்ததால் மறுபடி ஆட்கொள்ளநினைத்து தாயின் மார்த்தேடி வாய் திறந்தபடி அலைமோதியது. தேடியது கிடைக்காத ஆதங்கத்தில் அதனிடம் சிணுங்கல்கள் வர ஆரம்பித்தது.

      தனது பேரனின் அழுகையை கேட்ட விசாலி  “ஏய் நித்தி பாரு புள்ள முழிச்சிட்டான், உட்கார்ந்து பசி அமர்த்து.  அமத்தி மூனு மணி நேரத்துக்கும் மேல ஆகிருச்சு, பிள்ளைக்கு தொண்ட ஒனந்து போயிருக்கும்,  உட்கார்ந்து பசி அமத்து”  என்று அதட்டல் போட்டார்.

        “போங்கம்மா எனக்கு படுத்துக் கொடுக்கத்தான் வசதியா இருக்கு, உடம்பெல்லாம் வலிக்குது, நைட்டெல்லாம் நானு படுத்துத்தான் பீட் பண்ணினேன், நீங்க சொல்றது போல மூக்குல பால் ஏறலைஎனச் சொல்லிக்கொண்டே திரும்பி படுத்து தனது குழந்தைக்கு மீண்டும்  பசியமர்த்த முனைந்தாள் நித்தியா.

     அப்பொழுது வீட்டின் அழைப்பு மணி அடித்ததும் திலோவாத்தான் இருக்கும் என்று நினைத்தபடி போய் கதவை திறந்தார். நினைத்தது போலவே திலோத்தமாவும் மருமகன் விக்ரமும் கையில் தங்கை நித்தியாவுக்கு பிறந்திருக்கும் புதுவரவுக்கு அன்பின் பரிசாக கொடுக்க வாங்கிவந்த பரிசுகள் அடங்கிய ஜஸ்ட்பார்ன் பேபி அங்காடியின் பிக்ஷாப்பர்பைகளுடன் நின்று கொண்டிருந்தார்கள்.

         “திலோ வந்துட்டயா வா...வா...!என்று கூறியவர், “வாங்க... வாங்க தம்பிஎன்று மருமகனை வரவேற்று உள்ளே அவர்கள் வர ஒதுங்கி நின்றார் விசாலி.

         அந்த திரீ பி ஹைச் வீட்டினுள் தரைதளத்தில் இருந்த படுக்கை அறையை சுட்டி கீழே எங்க ரூம்ல தான் நித்தியும் பிள்ளையும்  இருக்காங்க, மாப்பிள்ளையை கூட்டிட்டு போய் பாரு, நல்ல வெயிலில் வந்திருக்கீங்க உங்களுக்கு ஜில்லுன்னு  குடிக்க எடுத்துட்டு வாரேன்என்று அடுப்படிக்குள் சென்றவர் மனதினுள் இப்போதானே வந்திருக்காள், மாப்பிள்ளை கூட இல்லாத நேரம் பார்த்து பேசணும்என்று நினைத்துக்கொண்டார்

      ஏற்கனவே பாதாம் பால் ரெடி செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்ததை அவர்களுக்கு ஊற்றி எடுத்துக்கொண்டிருக்கும் போது இரண்டு வீடு தள்ளி இருக்கும் ஸ்டெல்லாவும் ஆல்பர்ட்டும் குழந்தையை பார்க்க வீட்டிற்கு வந்தார்கள். எனவே அவர்களுக்கும் சேர்ந்து குளிர்பானத்தை கண்ணாடி டம்ளரில் இட்டுநிரப்பி  தட்டில் அடுக்கி  எடுத்துக்கொண்டு வந்தார்.

      அந்த அறைக்குள் நுழையும் போதே, பேபி பவுடர் வாசம் நாசியில் ஏறியது அதோடு  விசாலியின் மாமியார் கிழவியின் ஆலோசனையில் போட்டு விட்ட சாம்பிராணி வாடையும், பிள்ளையின் கையில் கட்டி விட்டிருந்த பேர்சொல்லாது மூலிகை வாடையுடன், சற்று முன்பு பிள்ளை பெற்றவளுக்கு செய்துகொடுத்த நாட்டுகோழி சூப் வாடை  எல்லாம் சேர்ந்து, முட்டு வீட்டு குழந்தைகள் இருக்கும் இடத்தில் வரும் மனம் அவர் மூக்கில் ஏறியது.

      முன் காலத்திலேயே அதற்கு பாபா வாசம்என்று அந்த மணத்திற்கு விசாலி பெயர் சூட்டியிருந்தார், ஆம், விசாலிக்கு கல்யாணம் முடிந்ததுக்கு பிந்தைய காலம் வேறுஉலகம், முன்காலம் வேறுஉலகமென இருவேறு உலகில் வாழ்வதாக எண்ணம்.  ஒரே பிறவியில் இருவேறு வாழ்கையில் அனுபவம் பெறுபவர்கள் இந்திய பெண்கள்.

       முந்தைய உலகில் விசாலி அவரின்  அக்காக்களுக்கு குழந்தைகள் பிறந்த காலத்தில் குழந்தையின் உடல் வாடையோடு அந்த அறையின் பிள்ளை மருந்து வாசத்தையையும் சேர்ந்து பாப்பா வாடைஎன்று பெயர் சூட்டி  ரசிக்கும் தன்மை கொண்டவராக இருந்தார்.

   தனது மகளுக்கே மகள் பிறந்தாலும் அந்த பாப்பா வாடை அவருக்கு முன்பு போலவே இப்பொழுதும் ஒரு பரசவத்தை கொடுத்தது . ஆனால் அதை அனுபவிக்க முடியாதபடி வந்திருந்த ஸ்டெல்லா

     “திலோத்தமா, உன் தங்கச்சியே மகன்  பெத்துக்கிட்டாள், நீ ஏன் இன்னும் பெத்துக்காம இருக்க? அது அது அந்தந்த காலத்தில நடக்கணும்”  என்றவள்

   அங்கு அமர்ந்திருந்த விசாலியின் மாமியாரிடம் பெரியம்மா, உங்களுக்குத் தெரியாததா, இருந்தாலும் இந்த காலத்து பிள்ளைங்க வேலைன்னு ஓடுறதில் கவனமா இருக்காங்க, ஓடி ஆடி சம்பாதிச்சு என்ன பிரயோஜனம்? வாழ்கையில் பிள்ளை இருந்தாத்தானே ஒரு பிடிப்பு வரும்.

    இப்போ குழந்தை உண்டாகுறதுல நிறைய பிரச்சனை வருதாம் ஒன்னு ரெண்டு பேருக்குத்தான் நித்தியா போல கல்யாணம் ஆனதும் பிள்ளை தங்குதாம். 

     மேலத்தெருவில இருக்கிற சித்திரா டாக்டர்ட்ட திலோவையும் அவள் மாப்பிள்ளையையும் கூட்டிட்டுப் போய் என்ன ஏதுன்னு பாருங்க. அந்த ஹாஸ்பிட்டலில் குழந்தை இல்லாம வருறவங்களுக்கு நல்ல டிரீட்மென்டு கொடுத்து நிறைய பேர் குழந்தை உண்டாகி இருக்காங்கஎன்றார்.

      அந்த ஸ்டெல்லா என்பவள் திலோவிடம் குழந்தை இல்லை என்ற பேச்சை ஆரம்பித்ததுமே அங்கு உட்கார்ந்திருந்த விக்ரம் அந்த இடத்தை விட்டு எழுந்து தனது மனைவி திலோவிடம் மட்டும் ஒரு தலை அசைவை கொடுத்து வெளியே சென்று விட்டார்.      

    மருமகன்  விக்ரமுக்கும் குளிர்பானம் எடுத்து வந்திருந்த விசாலி, அதை குடிக்காமல் அங்கு எழுந்த பேச்சின் சாராம்சம் பிடிக்காமல் வெளியேறும் மருமகனை தடுத்து நிறுத்தவில்லை. அவரை சங்கடத்தில் மாட்டிவிட வேண்டாம் என்று நினைத்து தடுக்காமல் இருந்துவிட்டார். மேலும்  ஸ்டெல்லாவின் பேச்சை மாற்றும் பொருட்டு

    “இந்தாங்க ஸ்டெல்லா வெயிலுக்கு இதமா ஜில்லுன்னு பாதாம்பால்  கொண்டு வந்திருக்கேன் இதை குடிங்க, ஆமா உங்க மருமகளுக்கும் மகனுக்கும் பெரிய பிரச்சனையாமே ரெண்டுபேரும் டைவர்ஸுக்கு அப்ளை பண்ணியதா கேள்விப்பட்டேன்என்று அவரின் வீட்டு பிரச்னையை முன்னெடுத்துப் பேசி அவரின் வாயைக் கிளறி தனது வீட்டு பிள்ளைகளின் பேச்சை பேச விடாமல் வாயடைக்க வைத்தார்.

       “உங்களுக்கு என்ன விசாலி, ரெண்டும் பொம்பளை பிள்ளைகளா பெத்து வச்சிருக்கீங்க, இந்த காலத்தில் ஆம்பளை பிள்ளைங்களை பெத்தவங்க நிலைதான் ரொம்ப மோசமா இருக்கு,  புருஷனை இந்த காலத்துப் பெண்ணுங்க ஆட்டிப் படைக்கிறாங்க, பூம் பூம் மாடு மாறி அவங்க சொல்றதுக்கெல்லாம் தலையாட்டணும்னு நினைக்கிறாங்க,   வேலைக்கு போயி சம்பாதிக்கிற என் மகனுக்கு ஒழுங்கா சமைச்சுக்கூட  போடமாட்றாள். பின்ன எதுக்கு மருமகள்னு அவள் இருக்கணும்?” என்றார்.

    திலோத்தமாவுக்கு அவரின் பேச்சு எரிச்சலை கொடுத்ததால்  “ஆண்ட்டி உங்க மகன் ரத்தினத்தோட வொய்ப் சென்ரல் கவர்மென்ட் போஸ்ட்ல இருக்கிறதா கேள்விப் பட்டேனே, அப்போ ரத்தினம் மட்டும்தான் வேலைக்கு போறாரா? உங்க மருமகள் வீட்டில சும்மா தான் இருக்காங்களா?” என்று கேட்டாள்.

     பொதுவாக திலோ யாருடைய விஷயத்திலும் தலையிடமாட்டாள் ஆனால் வந்ததும் குழந்தை பெத்துக்காம அவள் இருப்பதை  காரணம் வைத்து  வீட்டில் உள்ளவர்களை சங்கடப்படுத்தியதுக்கு பதிலுக்கு பதில் வச்சு செய்யணும் என்றே அக்கேள்வியை கேட்டாள்.

    “வேலைக்கு அவள் போறதாலத்தான் இம்புட்டு திமிர், அதுதான் என் மகன் வேலைக்கும் போகவேணாம்  ஒழுங்கா சமைச்சுப் போட முடியலைனா பேசாம வேலையை ரிசைன் பண்ணிட்டு வீட்டில இருன்னு சொல்லிட்டான், அவன் சொல்றதுலேயும் ஒரு நியாயம் இருக்குதுல்ல, அவனுக்கு சமைச்சுப் போட்டு கவனிச்சுக்கத்தானே கல்யாணமே பண்ணி வச்சேன்என்றார்.

     “என்ன ஸ்டெல்லா இப்படி சொல்லிட்டீங்க, இந்த காலத்தில் சென்ரல் கவர்மென்டில் வேலை கிடைக்கிறது எம்புட்டு பெரிய விஷயம் கஷ்டப்பட்டு படிச்சு எக்ஸாம் எழுதி கிடைச்ச வேலையை இப்படி பொசுக்குன்னு   விடச்சொன்னா பிரச்சனை வரத்தானே செய்யும்என்ற விசாலியிடம்

     “விசாலிக்கா, காலையில் நாலு, அஞ்சு மணிக்கு  எழுத்து சமையலை முடிச்சிட்டு ஆபீசுக்கு கிளம்பிப் போகணும், நானும் டீச்சரா போன வருஷம் வரை வேலை பார்த்தவள் தானே, ஆனா என் புள்ள புருஷனுக்கு ஆக்கிப் போட்டுட்டுத்தானே வேலைக்கு போனேன்என்றதும் திலோத்தமா

     “ஆண்ட்டி, நீங்க ரத்தினத்துக்கு கல்யாணம் முடிக்க முன்னாடி  ஃப்ங்ஷன்ல நாம மீட் பண்றப்போ வீட்டுலேயும் ஸ்கூல்லேயும் வேலை செய்றதை சொல்லி எத்தனைவாட்டி பொலம்பி இருக்கீங்க, அப்படி இருக்கும் போது நீங்களே அந்த பொண்ணு வேலை செய்யலைன்னு குறை சொன்னா எப்படி?, ஏன் அவங்க சமையல் பண்ணாட்டி வீட்டில எல்லோரும் பட்டினியாவா இருந்துடுறீங்க? “ என்றாள்.

     “இதென்ன திலோ இப்படி சொல்லிட்ட? அவள் பிரட்டோஸ்ட்டும், கான்பிலக்சும் காலையில சாப்பாடா சாப்பிடச்சொல்றாள், மதியம் பொரியல் காய்னு இல்லாம வெரைட்டி ரைஸ்ன்னு என்னத்தையாவது ஒன்னு சமைச்சுப் போடுறா, வேற சமைக்கச் சொன்னா நானும் உங்களை போல வேலைக்கு கிளம்பணும், வெரைட்டியா வேணும்னா என் கூட அடுப்படியில் ஹெல்புக்கு வாங்க இல்லைன்னா ஸ்விக்கில உங்களுக்கு பிடிச்சதை ஆர்டர் போட்டு சாப்பிடுங்கன்னு என் மகன்கிட்ட தெனாவெட்டா பேசுறா, நல்ல குடும்பத்துப் பெண்ணு பேசுற பேச்சா இது?” என்றார்.

     அவர் அவ்வாறு பேச ஆரம்பித்ததும் மகள் டென்ஷனாகி மேலும் அவரை வார்த்தையில் வதைக்க ஆயத்தமானதை கண்ட விசாலி, “திலோ நீ கொஞ்சம் சும்மாயிருஎன்று அடக்கப் பார்த்தார்..

       “எதுக்குமா என் வாயை அடைக்கிறீங்க? இவங்க மகனை செல்லமா வீட்டுவேலை செய்யவிடாம படிப்பு வேலைன்னு குறிக்கோளோடு வளர்த்தது போலத்தானே அந்தப் பொண்ணு வீட்டிலயும் வளர்த்திருப்பாங்க. டைவர்ஸ்ன்னு பேசி பூச்சாண்டி காட்டி அந்த பொண்ணை இவங்க இஷ்டத்துக்கு ஆட்டிப்படைக்க நினைக்கிறாங்க.

      முன்னாடி வடிவேலு சொன்னது போல எவ்வளவு அடிச்சாலும் இவள்கள் தாங்குவாங்கன்னு சொல்லி பொண்ணுங்களை வீட்டு ஆம்பளைங்க, மாமியார், பிள்ளைங்கன்னு கும்மிக்கிட்டு இருந்தாங்க. 

     இப்போ பொண்ணுங்க ரொம்ப விவரம் ஆகிக்கிட்டு இருக்காங்க. என்னையும் உன்னைப்போல சக மனுஷியா புரிஞ்சு நடத்தி வச்சு வாழுறதா இருந்தா இருப்பேன், இந்த கல்லானாலும் கணவன்ற டயலாக்கு எல்லாம் என்கிட்ட எதிர்பார்க்காதன்னு உதரிட்டு போயிடுவாங்க.

    இப்படி தெளிவா பொண்ணுங்க அவங்க வாழ்கையை அவங்களே முடிவு செய்ய ஆரம்பிச்சதை உங்களை போல இத்தனைநாளா அடங்கி இருந்தவங்களாலேயும் ஆம்பளைன்ற திமிர் இருக்கிறவங்களாலேயும் தாங்கிக்க முடியலை.

   தூக்கி போட்டு மிதிக்க முதுகை காட்டலைன்னு கதறி கலாச்சாரம் அது இதுன்னுட்டு கரிச்சுக்கொட்டிட்டு இருந்தா உங்க மகன் கடைசி வரை தனி மனுஷனா நிக்க வேண்டியதுதான் ஆண்ட்டிஎன்றாள்.

     “விசாலிக்கா, திலோத்தமா இப்படி வாய் பேசிட்டு இருந்தா கூடிய சீக்கிரம் அவளும் வாழ்கையை இழந்துட்டு உங்க வீட்டில வந்து நிக்கப் போறாள், பொம்பளைன்னா ஒரு அடக்க ஒடுக்கம் இருக்கணும்னு அவளுக்கு கொஞ்சம் எடுத்துச்சொல்லுங்கஎன்றார்.

      “ஆண்ட்டி நானும் டைவர்ஸாகி அம்மா வீட்டுக்கு புருஷன் கூட வாழாம ஒன்டியா வந்துநின்னு கஷ்டப்படுத்தப் போறேன்னு அவங்களை பயம்காட்டுறீங்களா? தாங்காட், நீங்க நினைக்கிறது ஒருகாலமும் நடக்காது, ஏன்னா என் விக்ரம் அவரை போல என்னையும் சக மனுஷியா பார்த்து கவனிச்சுகிறார்.

       நீங்க வந்ததும் என்கிட்ட நானு பிள்ளை பெத்துக்காம இருக்கிறதை கேள்வி கேட்டீங்கல்ல அதுக்கான பதிலையும், இப்போ சொல்றேன்.

      நானும் அவரும் எங்க கேரியரை ஓரளவு ஸ்டேபிள் பண்ணியதுக்கு பிறகு குழந்தை பெத்துக்கிடணும்னு முடிவு பண்ணிட்டோம். அதுக்கு முன்னாடி நாங்க குழந்தை பெத்தா அம்மா, பாட்டி, விக்ரமோட அம்மான்னு எல்லோரும் எங்களுக்கு ஹெல்ப்புக்கு வருவாங்க ஆனா குழந்தையை முழுக்க நாங்க கவனிச்சு வளர்க்க முடியாம அவங்க யாராவது ஒருத்தர் துணையில் தான் நாங்க வளர்க்க முடியும்.

      இப்போவரை என் அம்மாவும், விக்ரமோட அம்மாவும் பிள்ளைங்க  எங்களுக்காகவே வாழ்ந்துட்டாங்க, இனிமேலாவது அவங்க அவங்க லைபை அவங்களுக்காக வாழணும்.

      அதுமட்டுமில்ல எங்க பிள்ளையை நானும் விக்ரமும் முழுக்க முழுக்க கூட இருந்து வளர்க்க தோதாக கொஞ்சம் கெரியரில் மாறி மாறி பிரேக் எடுத்துக்கிற சூழலுக்கு வந்த பிறகுதான் குழந்தை பெத்துகணும்னு முடிவு எடுத்துருக்கோம். அடுத்த வருஷம் அதுக்கான சாத்தியம் எங்களுக்கு இருக்கு.

     இதை எல்லாம் உங்களுக்கு விளக்கிக்கிட்டு இருக்கணும்ற அவசியம் எனக்கு இல்லை, இருந்தாலும் நீங்க நான் டைவர்ஸ் பண்ணிட்டு வாழாம இருந்துருவேன்னு சொன்னீங்க, அதுக்குத்தான் நாங்க எப்படி புரிதலோடு வாழுறோம்னு சொல்ல வேண்டியதாகிடுச்சுஎன்றாள்.

     “திலோத்தமா, என்னதான் இருந்தாலும் புருஷனுக்கு ரெண்டுநாள் வேண்டியதை செய்யாம, ஒழுங்கா கேக்க

வாழ்வியல்
வாழ்வென்பது கையில் (தீபாஸ்)

 

வாழ்வென்பது கையில்

நான் இப்போதெல்லாம் இப்படித்தான் இருக்கேன். எந்த நேரமும் தலையணைக்கு தொல...தொல...ன்னு  உறை போட்டது போல ஒரு நைட்டி. ஒப்பனை எதுவுமில்லாத மூஞ்சி. தூக்கிப்போட்ட கொண்டையுமாகத் தான் அலைகிறேன் என்று கண்ணாடியில் தனது பிம்பம் பார்த்தவள் வாய்விட்டே சொல்லிக்கொண்டாள்.

நல்லா டிரஸ் பண்ணி, தலை வாரி மேக்கப் போட்டா மட்டும் எல்லாம் மாறிடவாப்போகுது? என்று அவள் மனசாட்சி அவளிடம் பேசியது.

அதை கேட்டதும் ஒரு விரக்தியான சிரிப்பொன்று அவளின் முகத்தில் வந்து போனது.

 

இவள் சந்திரா, தனது அழகுக்கும் தன் தந்தை தனக்கு சேர்த்து வைத்திருக்கும் நகைக்கும், டபட்டதாரியான தனக்கு லட்சத்தில் சம்பளம் வாங்கும் ஒருவன்  மாப்பிள்ளையாக வருவான்.

 

அவன் தன்மீது, உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த காதலையும் காட்டுவான். தான் சிறிது முகம் சிணுங்கக் கூட தாங்காது தன்னை தேற்றுவான். தான் ஒரு  பொருளை ஆசையாக பார்த்தால்  அது எத்தனை விலை உயர்ந்ததாக இருந்தாலும் முயன்று வாங்கித்தருபவனாக இருப்பானென நினைத்திருந்தாள். 

 

ஆனால் நிதர்சனம் வேறு என்று அவளுக்கு வாய்த்த கணவன் முரளி புரிய வைத்திருந்தான்.

 

சமையலுக்கு என்னென்ன காய்கறி வாங்கிட்டுவர?” என்று கேட்ட முரளியிடம் இதுபோன்ற குணங்கள் ஏதுமில்லை.

 

முரளியின் குரலில் தனது மண்டைக்குள் சுற்றிய கொசுவத்தி நினைவுகளிடம் இருந்து மீண்டு நடப்புக்கு வந்தவள். தக்காளியும் கொஞ்சம் மல்லி இலையும் மட்டும் வாங்கிட்டுவாங்க. ரெண்டுநாள் முன்னாடி வாங்கின காயே இன்னும் காலியாகாம பிரிஜ்ஜில் இருக்குஎனப் பதில் கொடுக்கவும்.

 

சரிஎன்ற ஒற்றை வார்த்தையை மட்டும் உதிர்த்துவிட்டு சாவிகள் கோர்க்கப்பட்டிருக்கும் ஸ்டேண்டில் இருந்த பைக் சாவியை எடுத்துகொண்டு வெளியேறிவிட்டான்.

 

அன்று சனிக்கிழமை, எப்பொழுதும் சனிகிழமையன்று பள்ளிக்கூடம் செல்லும் அவளது மகள் பவித்ராவுக்கு இன்று விடுமுறை ஆதலால் மதியம் சாப்பிட்டுவிட்டு தூங்கி எழுந்து அம்மா எனக்கு டீஎன்றபடி நடுக்கூடத்தில் இருந்த சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியை இயக்கி அதில் பாடல்களை ஒலிக்கவிட்டாள்.

 

என்ன பவி?? லீவுன்னாலே குளிக்காம செய்யாம இப்படி அட்டப்பிடிச்சு போய் அலையிற,! வயசுப்புள்ளை இப்படியா இருக்கிறது? காலையிலேயே எந்திரிச்சு குளிச்சு தலைவாரி பளிச்சுன்னு இருக்க வேணாமா? என்று கேட்டாள்.

 

இப்போ குளிச்சு டிரஸ் மாத்தி நான் எங்க போகப்போறேன்? வீட்டில தான இருக்கேன்ம்மா?” என்றதும் சந்திராவுக்கு திக்கென்றானது.

 

கண்ணாடியில் தன்னை பார்த்து தனக்குத் தானே கேள்வி கேட்டதுக்கு என் மனசாட்சி சொன்ன பதிலையே என் மகளும் சொல்றாளே! என்னைய இப்படி வீட்டில் பார்த்துப் பார்த்துப் பழகிப்போனதால  வீட்டில் இருந்தால் இப்படித்தான் இருக்கணும்ன்ற எண்ணம் பவிக்கு வந்துருச்சோ?

 

நானென்ன இவள் வயதில் இப்படியா இருந்தேன். எப்பவும் பளிச்சுன்னு டிரஸ்பண்ணிட்டு, வித விதமா முடியை பின்னிப்போட்டு, பவுடர், கண்மை எல்லாம் போட்டுட்டுத்தானே சுத்துவேன்.

 

என் அம்மா என்னை பார்த்து வீட்டிலதானடி இருக்க, எதுக்கு நல்ல டிரஸ் எல்லாத்தையும் போட்டு பாழாக்குற?” என்பார்.

 

அய்யே.... போங்கம்மா. வெளியில போனா மட்டும்தான் நீட்டா டிரஸ் பண்ணனுமா? ஊருக்கு முன்ன பவுசா காமிச்சிட்டு வீட்டுக்குள்ள மட்டும் அட்டப்புடிச்சுப் போய் உங்களை மாதிரியே என்னையும் இருக்கச் சொல்றீங்களா?. நான்லாம் எப்பவுமே நீட்டாத்தான் இருப்பேன்எனச் சொன்னவதானே நானு.

 

முரளியை இதுதான் மாப்பிள்ளைன்னு காட்டும்போது கூட என் அம்மா அப்பாவிடம் மாப்பிள்ளை என்னங்க இத்தனை கருப்பா, தொப்பை வச்சு மீறித் தெரியிறார் நம்ம சந்திராவுக்கு பொருத்தமா இல்லையேங்கஎன்று சொன்னதும்

 

அப்பாவோ மாப்பிள்ளை வீட்டுக்கு ஒரே பிள்ளை, வேலை எதுவும் செய்யவிடாம சொத்து சொகத்தோட சந்தோசமா வளர்ந்த பையன் அப்படித்தான் இருப்பான். பிக்கல் பிடுங்கல் இல்லை, கை நிறைய சம்பாதிக்கிறான். ரொம்ப சாதுவான பையன். ஆள் மட்டும் அழகா இருந்தால் போதுமா? அழகா சோறு போடுது?” என்றார்.

 

அம்மா முரளியை பார்த்ததும் இத்தனை கருப்பா இருக்கிறாரென ஆட்சேபனை தெரிவிப்பதை கண்டு அப்பொழுது கடுப்பாகத்தான் வந்தது சந்திராவுக்கு.

 

நான்தானே கட்டிக்கிடப் போறேன் இவங்க எதுக்கு நிறத்தை குறையா நினைக்கிறாங்க? கருப்பா அழகில் கம்மியா இருக்கிறவங்களுக்கு அழகான மனைவி கிடைச்சா அப்படியே பொண்டாட்டிகிட்ட சரண்டர் ஆகிடுவாங்கலாம். அதனால எனக்கு இப்படிப்பட்ட புருஷன் தான் வேணும்என தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

 

அத்தோடு முரளி தனது அழகின் மீது தீரா காதல் கொண்டு எந்நேரமும் தன்னையே சுற்றி வருவது போலவும் அவனுக்கு விளையாட்டாக போக்குக்காட்டுவது போலவும் எதிர்பாராத நேரம் பின்னாலிருந்து அவன் கட்டியணைப்பது போலவும் கல்யாணமாகும் பெண்களுக்கே உரிய கற்பனைகளுக்குள் மூழ்கிப்போயிருந்தாள் அப்போது.

 

எதார்த்தம் வேறாக இருந்தது முரளியோ வேலை விட்டு வீட்டுக்கு வந்தோமா டைனிங் டேபிளிலேயே அவனின் ஆபீஸ் பேக்கை போட்டோமா கைலியை மாத்தினோமா மெத்தையில் படுத்து செல்போனை நோண்டுனோமாவென இருப்பான்.

 

தான் அவனுக்காக பார்த்துப் பார்த்து அலங்காரம் செய்திருந்தாலும் அதேபோலத்தான் இருப்பான். அவனை ஈர்க்க எந்த மெனக்கெடல்களும் செய்யாவிட்டாலும் அப்படியேத்தான் இருப்பான் முரளி.

 

தன்னை கண்டு கொள்ளவே மாட்டேங்கிறானே என்ற ஆத்திரத்தில் நாமளும் கண்டு கொள்ளக்கூடாது இவருக்கு நானென்ன பித்தியா? என்று  வீம்பை இழுத்து பிடித்துக்கொண்டு நான்கைந்து நாள் பேசாமல் இவள் இருந்தாலும் புரயோஜனம் இருக்காது, தான் அவனுடன் நாலு நாள் பேசவே இல்லையென்பதை கூட முரளி உணர்ந்ததாக காட்டிக்கொள்ள மாட்டான்.

 

எல்லாமே என் தப்புத்தான் இவர்கூட பேசாம இருந்தாலும் நேரத்துக்கு சூடா டீயும், மூணுவேளை சாப்பாடுன்னு ஆக்கிக்கொடுத்துடுறேன்ல, அதுக்கு மேல வேற எதையும் அவர் என் கிட்ட எதிர்பார்க்கலை. இத்தனை நாளா என்கிட்ட இல்லாத தேவை இனிமேலா முளைச்சிடப் போகுது?

 

நான் நல்லாத்தானே இருக்கேன். என் வீட்டிலேயே நான் தான் அழகுன்னு என் அம்மா அடிக்கடி சொல்வாங்களே அழகான பொண்ணுங்களை கண்டா ஆண்களுக்கு அவளை உரசிப் பார்க்கணும்னு தோணும்னு சொல்றது எல்லாம் சும்மா பேச்சுக்குத்தானா?

 

இவர் ஒரு நாள்கூட என் அழகில் ஈர்க்கபட்டதா காட்டிக்கிட்டதே இல்லையே. விளக்கை அணைச்சதுக்கு பின்னாடி ரசனையே இல்லாது இயந்திரத்தனமா என்னோடு கலந்ததுகூட முதல் மூனு நாலு வருசமாகத்தான். அவர் வீட்டில் சேர்த்துவைத்திருக்கும் சொத்தை பாதுகாக்க பராமரிக்க வாரிசு கிடைக்கணுமென்ற காரணத்துக்குத்தான் என்னோடு கலந்தாரோ?

 

மத்த நேரம் எப்படியோ விளக்கை அணைச்சுட்டா என் அருகாமை இல்லாம அவரால இருக்க முடியாது. அவருக்கு பாசத்தை வெளியில் காமிக்கத்தெரியலை அப்படின்னு முன்னாடி நான் மனதை சமாதானப்படுத்திக்கிட்டது எம்புட்டுப் பெரிய பைத்தியக்காரத்தனம்.

 

என்மேல அவருக்கு ஈடுபாடு இருந்திருந்தா நான் பேசாம இருக்கிறச்ச மண்ணுமாதிரி இப்படியிருக்க முடியுமா?

 

எதில்தான் இவருக்கு ஈடுபாடு இருக்கு?. நல்லா சாப்பிடணும் எந்நேரமும் படுக்கையில கைகாலை பரப்பிப்படுக்கணும் இருக்கிற சொத்தை டூர், ஹோட்டல், சினிமா, பீச்சுக்கு போய் செலவு பண்ணாம பூட்டி பாதுகாப்பா வச்சுக்கணும்.

 

கடைசிவரை இப்படி சாப்பிட்டு சும்மாயிருக்கும் போதெல்லாம் படுக்கையில் படுத்து வெட்டியா போனில் வாட்ஸப் பேஸ்புக்குன்னு ஸ்குரோல் பண்ணிகிட்டே இருக்கணும். ஆனா எதிலும் எந்த போஸ்ட்டும் போடுறதில்லை மத்த போஸ்ட்டுக்கு கூட எந்த கமெண்டும் யாருக்கும் குடுக்கிறதில்லை. இப்படி எப்படித்தான் எல்லாத்திலேயும் பிடித்தமில்லாம இவரால் இருக்க முடியுதோ?

 

வீட்டை கவனிக்க ஒருத்தியை கழுத்தில் தாலியக்கட்டி பிடிச்சுக்கிட்டு வந்து கூட்டுக்குள்ள அடைச்சாச்சு. இனி வீடு அவ பொறுப்பு. அது குப்பையா இருந்தாலென்ன சுத்தமா இருந்தாலென்ன நமக்கு வேண்டியது மூணு வேளை சாப்பாடு, ரெண்டு வேளை குடிக்க டீ. அதுக்கு தேவையான சாமானை  வாங்கிப் போட்டுட்டு  கம்முனு இருந்திடணும் என்ற டைப்பில் இருந்தான் முரளி.

 

இவள் சினிமா போகணும் என்றாலோ, பீச் போகணும் என்றாலோ என்னங்க வீட்டில இந்த இடத்தில் பெருசா ஊஞ்சல் கட்டினா நல்லா இருக்கும் என்றாலோ. மொட்டமாடியில் ரோஜா செடி வைக்கணும் பிளீஸ் வாங்கித்தாங்க என்றாலோ. முரளி அழைத்துப்போக முடியாதென சொல்லமாட்டான்.

 

அதேநேரம் வாங்கிக் கொடுப்பதுமில்லை. ம்... வாங்குவோம் ம்...இன்னொரு நாள் போகலாம், கொஞ்சம் பொறுஎன்ற வார்த்தைகள் மட்டுமே உதிர்ப்பான். பொறு என்ற வார்த்தை ஒரு மாசம் ஒரு இரண்டு மாசம் வரை என்றால் கூட கொஞ்சம் அவள் மனச் சாந்தியடைந்திருப்பாள். அந்த பொறு செய்யலாம் என்பது வருடங்கள் தாண்டி நீண்டுகொண்டே போகும்.

 

ஒன்றை அவள் கேட்டு வாங்கித்தர முடியாதென சொன்னால் தானே சண்டை வரும். பொறு என்று சொல்லி காலத்தைக் கடத்திச்செல்வது அப்போதைக்கு இருவருக்குமான சச்சரவுகளை தவிர்க்கவே அவ்வாறு சமாளிக்கிறான் அவன் கொஞ்ச காலம் சென்றே  இவள் உணர்ந்து கொண்டாள்.

 

வாய்விட்டு கேட்டபின்னும், அதுவும் விரும்பி ஒரு ரோஜா செடி கேட்டும் அதை கூட தனக்காக ஆர்வமுடன் வாங்கித்தர மனதில்லாத, அதற்கான சிரத்தை எடுக்காத ஒரு மனிதருடனா இத்தனை வருசமா  நான் வாழறேன் இப்படி வாழ்ந்தென்ன பயன்.

 

எத்தனை நாளைக்குத்தான் இப்படி மனசு ஒட்டாம பொய்யா ஊர் உலகத்துக்காக பெத்த பிள்ளைக்காகன்னு இந்த மனுஷர் கூட அன்னியோன்யமா இருக்கிறதா காட்டிக்கிட?

 

நானென்ன படிக்கலையா? இல்லை, எனக்கு பொய்யான இந்த வாழ்க்கை விட்டு, மூச்சு முட்டும் இந்த கூட்டைவிட்டு தனியா பறக்க திறன் இல்லையா? கொஞ்சமா காசு இருந்தாலும் அதைவச்சு ஆசை பட்டதைச்செய்து, என்னை நானே ரசிச்சு வாழுற வாழ்க்கை அற்புதமானது அழகானது.

 

அப்படி இருக்கிறது பட்டாம்பூச்சு சிறகை விரித்து பறக்கும் நிலை போன்றது மரத்திலிருந்து உதிரும் இலை அண்டத்தில் பற்றருந்து மிதக்கும் பரவசமான நிலையது.

 

அதெல்லாம் சரி, இதெல்லாம் நடக்கணும்னா நான் தனியா என் காலில் நிற்க எனக்குன்னு சம்பாத்தியம் வேணுமே!

 

ஏன் என்னால சம்பாதிக்க முடியாதா? கல்யாணத்துக்கு முன்னாடி வீட்டில சும்மாயிருந்து படித்தப்படிப்பு வீணாகக்கூடாதுன்னு மெட்ரிக்குலேஷன் ஸ்கூலில் டீச்சராக வேலைக்கு போனவள் தானே நானு.

 

எனக்கும் என் மகளுக்கும் தேவையானத என்னால சம்பாதிக்க முடியாதா? என்று எண்ணம் போகும்போதே அவள் மனம் விழித்துக்கொண்டது.

 

அச்சோ நானா இப்படி? பொம்பளை பிள்ளையை வச்சுகிட்டு அவளின் அப்பாவைவிட்டு பிரிந்து போகணும்னு நினைக்கிறேன்! அவர் மகளுக்கு ஒரு நல்ல அப்பாவா தேவையானதை செய்து கொடுத்து நல்லபடியாகத்தானே பார்த்துக்கிறார்.

 

அப்படியிருக்க என் மகளுக்கு அப்பாவின் அருகாமை இல்லாமல் போக நானெப்படி நினைக்கலாம் ஐயோ இன்னைக்கு எனக்கென்னவோ கிறுக்கு புடிச்சிருச்சு. என் மூளை தப்புத்தப்பா யோசிக்குது.

 

இப்போ என்ன தனியாகப் போய்தான் என்னால சிறப்பாக வாழ்ந்து காட்ட முடியுமா? என் பிள்ளைக்காக இங்க  இருந்தே அப்படி வாழ்ந்து காட்ட முடியாதா?

 

கணவனே என்றாலும் ஒருவரை கட்டாயப்படுத்தி எனக்காக இதைச் செய் அதைச் செய்னு நச்சரித்து செய்யவைக்கிறது  அற்பத்தனமானது.

 

இனிமே என்னுடைய சின்ன சின்ன ஆசைகளை நானே நிறைவேத்திக்கிட  ஏதாவது சம்பாதிக்க முடியுமானு பார்க்கணும்.

 

பிள்ளையை வளர்க்கணும், அவளுக்கு படிப்பு சொல்லிக்கொடுக்கணும் வேலைக்கு போனால் அவளை நல்லா வளர்க்க முடியாம போயிடும்னு இதுவரை  வீட்டில இருந்தேன்.

 

இப்போதான் அவள் வளர்ந்துட்டால்ல. எனக்காகவும் என்னை பார்த்து வளரும் பிள்ளைக்காகவும் நான் உற்சாகமாக இருக்கணும்.

 

கல்யாணத்து முன்னாடி இவர் என் கிட்டயில்ல, இவரின் பார்வைக்காக ஒன்றும் நான் வாழலை. அப்போதெல்லாம் நான் நல்லா டிரஸ் செய்து எப்பொழுதும் நீட்டாகத்தானே இருந்தேன்.

 

இப்போதும் எனக்காக என்னை எப்போதும் பளிச்சென்று வச்சுக்கணும். பவித்திராவுக்கு என்னைப் பார்த்து இப்படித்தான் நாமளும் எப்பொழுதும் பளிச்சென இருக்காணுனு  தோணனுமென நினைத்தபடி அன்றைய வேலையை கிடுகிடுவென  முடித்து அடுப்படி ஒதுங்க வைத்து படுக்கைக்குப் போனவளுக்கு நிறைய நாள் சென்று மனதிற்குள் கனத்துக்கொண்டிருந்த இயலாமை விடுபட்டு நிம்மதியான தூக்கம் வந்தது.

 

என்றைக்கும் இல்லாதவகையில் மறுநாளின் விடிகாலை வெளிச்சம் புத்துணர்வை அவள் மனம் போலவே அவளுள் பரவச்செய்தது.

 

குளித்து முடித்து புத்தம் புது பூவாக தனது சமையல் வேலையை பார்த்துக்கொண்டே. எந்தெந்த தனியார் பள்ளிகளுக்கெல்லாம் போய் அப்பிளிகேசன் கொடுக்கணும் என்று மனதினுள் கணக்கிட்டுக்கொண்டே நேர்த்தியாக அவளின் விரல்கள் சமையலுக்கான காய்கறிகளை நறுக்கியது.

 

தீபாஸ்

WhatsApp

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!