Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு

தொடர் :

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


மீட்டாத வீணை (தீபாஸ்) Epi-01

அவன் மனநிலை

அவன் மஹத்தேவன், விழிப்பு வந்ததும் அந்த இருட்டிலும் கைகள் துழாவி, அருகில் இருந்த கைக்கடிகாரத்தை எடுத்து அதனில் ஒளி வெளிப்படுத்தும் பொத்தானை அழுத்தவும், அதிகாலை 4.10 a.m என ரேடியம் பச்சையில் எண்கள் பளிச்சிட்டன.


“ராத்திரி முழுக்க ஏதோதோ நினைவுகள்.... ஆழ்ந்த தூக்கம் இல்லாம அலைக்கழிச்சது போதாதா...? அதிகாலையிலும் அவளோட நினைவுகளே என்னை எழுப்பிவிட்டுருச்சே...! இந்நேரத்தில் எழுந்தாலும், செய்ய ஆயிரத்தெட்டு வேலைய நானாக இழுத்து வச்சிருக்கிறேனே...!


என்னோட இந்தத் தனிமையையும் அதனால் வருகிற வெறுமையையும் தொலைக்க, நான் கடந்து வந்த அவளின் இனிமையான ஆழகிய நினைவுகளையே போர்வையாய் போர்த்திக்கிறேன்...!அவள் இல்லாத ஏக்கம்... போர்வையாகி மனசையும் அழுத்தி என் மூச்சையும் சேர்த்து அழுத்துகிறதே....!


திமிறி எழுந்து மூச்சை உள்ளிழுத்து என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளுறதுக்கே இவ்வளவு வேலைய துணையாக இழுத்து வச்சிருக்கிறேன்! வேலை செய்து களைத்துப்போய்க் கண் அசந்தாலும் அவளின் நினைவுகள் தூக்கத்திலும் என்னைத் துரத்தியபடியே இருக்குதே...!”


எனப் புலம்பியபடி எழுந்து அமர்ந்த மஹத்தேவன், கட்டிலின் தலை மாட்டில் வைத்திருந்த டீபாயின் மீதிருந்த மூக்குக் கண்ணாடியை துழாவி எடுத்துப் போட்டுக்கொண்டார்.
அத்துடன் தான் படுக்கச் செல்லும்முன் படுக்கையின் அருகே விட்டிருந்த அந்தச் சக்கர நாற்காலியை இன்னும் கிட்டத்தில் கையால் எட்டி இழுத்தார். நன்றாக இருக்கும் ஒற்றைக் காலை ஊன்றி சற்று சிரமப்பட்டே நகர்ந்து எழுந்து நாற்காலியில் அமர்ந்தார்.


சிரமப்பட்டு எழுந்தவன் ‘இப்போதெல்லாம் ஈசியாகக் கட்டிலில் இருந்து சக்கர நாற்காலிக்கு ஈசியா மாறிட முடியவில்லையே...? எனக்கு வயசாயிடுச்சுல்ல....’ தனக்குள்ளாகவே பேசிக்கொண்டார்.
இருட்டிலும், பழகிய இடமாதலால் அந்த அறையின் மூலையில் இருந்த மேஜைக்கு அருகில் தடுமாற்றமில்லாமல் சக்கர நாற்காலியிலேயே சென்றவர், மேஜையை ஒட்டியிருந்த சுவற்றில் அவருக்கு வசதியாகத் தணிவாக அமைக்கப்பட்டிருந்த மின்சார விளக்கின் சுவிட்சை அழுத்தி, குழல் விளக்கை ஒளிரவிட்டார் மஹத்தேவன்.


அந்த அறையின் இருளை விளக்கின் ஒளி கற்றைகள் விரட்டி, பளீரென வெளிச்சம் போட்டுக் காட்டியது. விசாலமான அந்த அறையின் ஒவ்வொரு இனுக்கும் செல்வத்தின் செழுமையில் தோய்ந்திருந்தது.
தாராளமாக நான்கு பேர் படுத்துறங்குவது போன்ற பெரிய மரத்தாலான கட்டிலை பார்த்தபடி, “துணையில்லாம ஒத்தையில் தூங்கியெழுவது மிகவும் பரிதாபமான நிகழ்வாக எனக்கு இப்போதெல்லாம் தோன்றுதே...! இந்த வயதிலும் எனக்கு ஏன் இப்படித் தோணனும்?” என்ற அவரின் கேள்விக்கு, அவரின் மனமே பதிலுரைத்தது.


‘நீ என்ன ஒருத்திகூடக் காமத்தில் மூழ்கிக் கிடக்கவா துணையோடு தூங்கி எழணும்னு நினைக்கிற...!?’


“ம்...கூம், அவள் இங்கே இருந்தபோதும், எனக்காக ஒவ்வொன்றையும் சிரத்தை எடுத்து பார்த்துப்பார்த்து செய்தபோதும் கூட அவளின் மேல் எனக்குக் காமம் பெருக்கெடுக்கவில்லையே...!
என்றைக்கு அவள் என்னைவிட்டு ஒரேயடியாகப் பிரிந்து செல்லப்போகிறாள்ன்ற நிதர்சனம் மரமண்டையில் உறைத்ததோ, அப்போதிருந்து அவளின் மேல் கிறுக்கு பிடிச்சிடுச்சு....

சிறுபிள்ளைகள் தனக்கான பொருளை வேறொருவரிடம் கொடுக்க முரண்டுபிடிப்பது போல...., என் மனமும் குழந்தையாகி அவளுக்காக அடம்பிடித்தது ஏங்கித்தான் போயிருச்சு....


அவள் இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னை அம்போவென அடியோடு விட்டுப் போகப் போறாள் அப்படின்னு தெரிஞ்சதுக்குப் பிறகுதான், எனக்கு அவள் எவ்வளவு முக்கியமானவள்னு உணரந்தேன். அவளின் அருகாமை எனக்கு எப்பொழுதும் வேண்டுமென மனம் பேரிரைச்சல் போட ஆரம்பித்தது.


கிடைக்காதென்று தெரிந்த பின்பே இழந்ததின் மீதான ஏக்கம், இந்த மனித மனங்களின் அடிமனதில் ஒரு வடுவாக எந்நேரமும் உறுத்திக்கொண்டே இருக்க ஆரம்பித்துவிடுகிறது....” என்று ஏதேதோ தனக்குள் பேசிக்கொண்டார் மஹத்.


அவரின் கட்டிலும் அதன் வேலைப்பாடும், அத்தோடு பொருந்தும் வகையில் அங்கிருக்கும் ஒவ்வொரு மரச்சாமான்களும் நுணுக்கமான தச்சு வேலை செய்யப்பட்டிருந்தது.
இந்தக் காலத்தில் ராஜாக்கள் இருந்திருந்தால் இதே போலத்தான், பழமையும் புதுமையும் ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் பிரமாண்டமாக வடிமைக்கப்பட்ட துயிலும் அறையினில் தூங்கி எழுந்திருப்பார்களோ...!? என நினைக்கும் வகையில் அந்த அறையிருந்தது.


அரசனை போன்ற கம்பீரமானவர் தான் மஹத்தேவன். பரம்பரை பரம்பரையாகப் பெரும் வணிகம் மேற்கொள்ளும் குடும்பம் அவருடையது. பல தொழிற்கூடங்கள் அவர்களின் குடும்பத்திற்கே உரியதாகயிருந்தது.
அத்தனையையும் திறம்படக் கட்டிக்காத்து வெற்றியுடன் நடத்திவரும் மஹத்தேவன், ஒற்றைச் சிங்கமாகவே இருக்கிறார். அவருக்கென்று தனிப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல், அவளின் நினைவுகளே போதுமென்று இருந்துவிட்டார்.


தனக்கு நெருங்கியவளாக, தன்மேல் உரிமை உள்ளவளாக, தன்னைப் புரிந்து மனமறிந்து நடக்கும் திறனுள்ளவளாக, தன்னை ஒரு பெரிய செல்வந்தனாகவோ முடமானவனாகவோ பார்க்காமல் சக உயிராக மதிக்கும் தன்மையுள்ளவளாக, உலகத்திலேயே அவளொருத்தி தான் பிறந்திருந்தாளென்று முடிவுகட்டிக் கொண்டவர் மஹத்.


ஆனால், அகந்தையால் வாய்விட்டு சொல்லாத காதலால், அவளைத் தொலைத்துவிட்டு இன்று தனியாக நிற்கிறேனேயெனப் புலம்புபவர்...


தன்னைக் கண்ணாடியில் பார்த்தவர் சரியாகத் தூக்கம் இல்லாததைக் காட்டிக்கொடுத்த முகத்தைக் கண்டு ‘தனிமை கொடுமை..., அதுவும் முதுமை வேளையில் இந்தத் தனிமையே எந்தன் மூச்சை பிடித்து அழுத்துகிறது. கொடுமையிலும் கொடுமை...., முதுமையும் முடமும் கொண்டவனுக்குத் தனிமை நோய் பெரும் சாபம் தான்’ என எண்ணினார்.


‘ஏனோ கடந்த இரண்டு நாட்களாக அவளின் நினைவு என்னைப் பாடாய் படுத்துது.... இப்பொழுது அவளுக்கும் என்னைய போல வயதாகியிருக்கும்’ல...., இப்போ பார்க்க எப்படி இருப்பாளோ...?’ என எண்ணிக்கொண்டவர் காலை கடன்களை முடிக்க எழுந்தார்.


எழுந்தவருக்கு எப்பொழுதும்போலச் சுறுக்கென்றொரு வலி, செயற்கைக்கால் பொருத்திய இடத்தில் எழுந்தது.
‘சக்கர நாற்காலியில் வெளியில் போனால் வீட்டிலுள்ள மற்றவர்களின் அனுதாப பார்வையை எதிர்கொள்ள வேண்டுமே..! அந்தப் பார்வை தரும் வலிக்கு, இந்தச் செயற்கைக்கால் தரும் வலி எவ்வளவோ கம்மிதான்.
மற்றவர்கள் பார்வைக்கு நானாக நடப்பது போல என்னுடன் பொருத்தப்பட்ட கட்டைக்கால், போட்டிருக்கும் உடுப்புக்குள்ளேயே மறைந்து போயிருது..., வீட்டிலிருக்கும் மற்றவர்களின் அனுதாபப் பார்வையும் எள்ளலான பார்வையையும் என்னால் இந்தக் கட்டைகால் மூலமா தவிர்க்க முடியுதே அது போதும்..


இந்தக் கட்டைக்கால் உண்டாகும் வலியை சகிப்பதில், எனக்கொன்றும் பிரச்சனை இல்லையென நான் முடிவெடுத்து இதைப் போட்டு நடக்க ஆரம்பித்து, 29 வருசம் ஆகிடுச்சு.... அவளும், என் அம்மாவும் என்னை விட்டுப்போய் முப்பது வருசம் ஆகிட்ச்சு...!’


என்று கடந்த காலத்தைக் கணக்கிட்டபடி, அந்தப் பிரமாண்டமான குளியல் அறையில் சுவற்றில் பொருத்தியிருந்த பெரிய கண்ணாடியில் தனது உருவத்தைப் பார்த்தார்.
அவரின் தலை முடியில் முக்கால்வாசி முடி நரையோடிவிட்டது. அவரின் முகத்தில் வயதிற்குண்டான முதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது.


அவளுக்கு மீசையை மழித்தெடுப்பது பிடிக்காதென அவள் சொல்லிக் கேட்டிருந்த காரணத்தினாலேயே, அவள் சென்றபின் இந்த முப்பது ஆண்டுக் காலமாக மஹத் மீசையை அகற்றவேயில்லை.
மீசையைத் தடவியபடி... ‘என் அம்மா இறந்த வீட்டில் சம்பிரதாயமாக மொட்டை போட அனுமதித்த நான், மீசையை மழிக்க மட்டும் சம்மதிக்கலை.... அதற்காகப் பிறரின் கேள்வியான பார்வையையும், என் அப்பாவின் வசவையும் பொருட்படுத்தாமல் இருந்தவன்தானே நான்....


ஆனால் அப்பொழுது அடர்த்தியாகக் கருப்பா இருந்த மீசையில் இப்பொழுது ஒன்றிரண்டு... நரைமுடி தலைகாட்டுது...! இப்பபோ என்னைய பார்த்து.... ஆண்களுக்கு மீசைதான் அழகுனு சொல்வாளா...? அல்லது, மாற்றிச் சொல்வாளா...?


அவள்தான் விட்டுட்டு எப்பொழுதோ போயிட்டாளே... திரும்ப முடியாத ஒற்றையடி பாதையில.... யாரோ ஒருத்தனின் கைப்பிடித்துப் போயிட்டாளே...
‘சின்னவரே... கங்கான்னு ஒரு குரல் கொடுங்க, ஓடிவந்து உங்க முன்னாடி நிப்பேன்....’ என்று சொன்னவ, நான் மனசுக்குள் கதற... கதற... கண்டுகொள்ளாது, இரண்டு சொட்டு கண்ணீரை மட்டும் எனக்காகச் சிந்திட்டு போயிட்டாளே!


சும்மாவா போனாள்? என் மனசில் அவளை அழிக்கவே முடியாத நினைவுகளை நெஞ்சில் விதைச்சுட்டு போயிட்டாளே...!’ என்று நினைத்த மஹத்,
“நீ இல்லாமல் நான் ஒன்றும் குறைந்து போகலை கங்கா...! என்னைய பார்...., நான் நகர்ந்துபோகச் சக்கரநாற்காலி கூடத் தேவைப்படுறதில்லை.
நான் தோட்டத்தில் உலாவப் போக நீ எந்தன் பின்னால் சக்கர நாற்காலி தள்ளிக்கொண்டு கதை பேசிட்டே வரத் தேவையில்லை.
இதோ நான் நடைப்பயிற்சி மத்தவங்க தயவில்லாமல் போகறேன்.... என்னைய நானே பார்த்துக்க இப்பொழுதெல்லாம் பழகிட்டேன்....


ஆனால்... என்னோட ரசனைகளையும், என் வெற்றி தோல்விகளைப் பகிர்ந்து கொள்ளத்தான் எனக்கு ஆளில்லை” என இதயத்தில் இருக்கும் கங்காவோடு பேசிக்கொண்டார்.
இரவில் அணிந்திருந்த உடையை மாற்றிக் காலை நடைப்பயிற்சி செய்வதற்குத் தோதான உடையைப் போட்டுக்கொண்டு அந்தச் சயன அறையின் கதவைத் திறந்தார்.
வாசலில் தனது முதலாளியான மஹத்தின் வருகையை எதிர்பார்த்து வேலைக்காரன் கண்ணப்பன் நின்றிருந்தார்.


“ஐயா, கிரீன்டீ இப்போ கொண்டு வரவா?”


“ம்...கூம், வேணாம் கண்ணப்பா, நான் வாக்கிங் முடிச்சு வரும்போது ரெடி பண்ணி எடுத்துட்டு வா...” எனச் சொல்லி நடந்து கொண்டிருந்தவரின் மனதுக்குள், கிரீன் டீயின் கசப்பு சுவையை நினைந்து சலிப்பு உண்டானது.


‘கங்கா இருந்தவரை எனக்குப் பிடித்த பதத்தில் இதமான சூட்டில், முதலில் வடித்தெடுத்த டிக்காசனில் பில்டர் காபி போட்டுத் தருவாள்.
அவள் போட்டுத் தரும் பக்குவத்தில் அவளுக்குப் பின் வேலைக்கு வந்த யாராலும் எனக்குப் பில்டர்காபி போட்டு தர முடியவில்லையெனச் சொல்லி காபி குடிப்பதையே விட்டுவிட்டேனே....!
கிரீன்டீ உடலுக்கு நல்லதெனவும் உடல் பருமன் கூடாதிருக்கவும் எடுத்துக்கொள்ளுங்களென மருத்துவர் சொன்ன அறிவுறுத்தலில் பிடிக்காத அச்சுவையை நாவிற்குப் பழக்கப்படுத்தியாச்சு.
இருந்தாலும் இத்தனை வருடம் சென்றும் அடிக்கடி அதைக் குடிக்காமல் தப்பித்துக்கொள்ள இதேபோலப் பிறகு குடிக்கிறேனென அடிக்கடி தள்ளிப்போடுகிறேனே....!?’ என்றெண்ணினார்.


‘ஆனாலும் இந்தக் கண்ணப்பன் அவனின் அன்றாட வேலையைச் செய்துமுடிக்காமல் விடுவதில்லை.... என்னை நச்சரித்தே அதைக் குடிக்க வைத்துவிடுவான்.
கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துவிட வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு..., எனக்குப் பிடித்த பக்குவம், பிடித்தவைகள் பற்றியெல்லாம் அவனுக்குத் தெரியலை.... என் முகக்குறிப்பையும் நான் சாப்பிடும் அளவும் வச்சு புரிஞ்சுக்க முயற்சி எடுக்குறது இல்ல....


அது சரி...! என்னைப் புரிந்து நடந்துகொள்ள அவனென்ன என் அம்மாவும், என்மீது உண்மையான அன்பு கொண்ட கங்காவுமா....? சம்பளத்துக்கு வேலை பார்க்கும் ஆள் தானே....’
என்ற சிந்தனைகளுடன், அந்தப் பிரமாண்டமான பங்களாவின் தோட்டத்தைச் சுற்றி நடப்பதற்காக, அந்த ஒன்றரை கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டிருந்த நடைப்பாதையை நோக்கி சென்றார்.


விடிந்தும் விடியாத காலை பொழுதில், லேசாக இருள் விலகியிருந்தாலும் பாதைகள் நன்கு புலப்பட வேண்டுமென்பதற்காக, மஹத் நடைப்பயிற்சி செல்ல தோதாக, நடைப்பாதையில் ஆங்காங்கு அலங்காரமாகப் பொருத்தப்பட்டிருந்த விளக்குகளை ஒளிர விட்டிருந்தார் வேலைக்கார கண்ணப்பன்.


அந்தப் பங்களாவில் தனிக்குடித்தனமாக, மஹத்தின் ஒண்டிக் குடித்தனமுடன் சேர்ந்து, நான்கு குடும்பங்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து கொண்டிருப்பதாக வெளியிலிருந்து பார்ப்பவர்கள் கணக்கிட்டனர்.
மஹத்தேவனின் அப்பா ஜெயதேவன் இறந்து இரண்டு வருடம் சென்றிருந்தது. அவரின் அப்பா ஜெயதேவன் மற்றும் சித்தப்பா இரத்தினதேவன் இருவருக்குமான சொத்துகள் அவர்களின் தாத்தா காலத்திலேயே சமமாகப் பிரிக்கப்பட்டு உயில் எழுதப்பட்டுவிட்டது.


இருவருக்குமான சொத்துகள் பிரிக்கப்பட்டுவிட்டாலும் இருவரும் சேர்ந்தே மொத்த தொழில்களையும் அதன் லாப நட்டங்களையும் ஒன்றாகவே பங்கிட்டும், தொழிலை செப்பனிட்டும் வழிநடத்திக் கொண்டும் வந்தார்கள்.


ஜெயதேவன், பிருந்தா தம்பதிக்கு, மகன் மஹத்தேவன் ஒருவர்தான் வாரிசு. ஆனால் சித்தப்பா இரத்தினதேவனுக்கு மூன்று பிள்ளைகள், அந்தப் பிள்ளைகள், அவர்களின் பிள்ளைகள் என்று பறந்து விரிந்திருந்தது.
கார் விபத்தில் எதிர்பாராது தனது காலை இழந்த மஹத்தேவன், அதற்குப் பின்னும் அவரின் அம்மாவின் அறிவுறுத்தலில், தன்னைத் தனது அறிவை படிப்பை வீட்டிலிருந்தே சிறப்பாகச் செய்து முடித்தார்.
சக்கர நாற்காலியில் முடங்கி விட்டோமே என்ற வருத்தத்தில் மூலையில் முடங்காமல் தன்னைச் செதுக்கிக் கொண்டார் மஹத்.


இப்பொழுது அந்தக் குடும்பத்தின் மொத்த சொத்துக்களையும் தொழில்களையும் சிறப்புடன் கட்டிக்காத்து வழிநடத்தி செல்லும் ஆளுமையாக அவரே இருந்தார்.
முப்பது வருடத்திற்கு முன்பு, மஹத் மேல் படிப்பை முடித்துக் குடும்பத்தொழிலை எடுத்து நடத்த ஊக்கம் கொடுத்த அவன் அம்மா பிருந்தா, அவருக்குப் பெரிதும் பக்கபலமாய் இருந்தவர், ஹார்ட் அட்டாக்கால் திடீரென இறந்துபோனார்.


மஹத்துடன் சக்கரநாற்காலியை தள்ளிக்கொண்டே பின் செல்ல தாய்க்குப்பின், வீட்டில் அவர் தந்தை உட்பட ஒருவரும் முன்வரவில்லை.
அதனைத் தொடர்ந்து இரண்டு மாதம் முடங்கிப்போய்க் கிடந்த மஹத்தேவனுக்குத் தனக்காக யாருமில்லையென்ற தவிப்பும், தன்னைப் பரிகாசமாகப் பார்க்கும் வீட்டாரின் முகக்குறிப்பும், அவரின் தந்தை முதற்கொண்டு, இப்படி முடங்கிக்கிடக்கிறானே என்ற ஆதங்கத்தில் அவரின் மீது வீசிய சுடு சொல்லையும் தாங்கமுடியாது ஒருகட்டத்தில் பொங்கியெழுந்தார்.


தனக்கானதை தானே பார்த்துக்கொள்வதாக வீட்டில் உள்ள அனைவரிடமும் உரக்க பேசினார். அவரால் இயலாததைப் பேசுகிறாரென்ற வீட்டாரின் பரிகாச சொற்களைக் கண்டு கொதித்தார். முன்பு செயற்கைக்கால் பொருத்தி அதனை அணிவதால் உண்டான வலிபொறுக்க முடியாமல் தவிர்த்துவிட்டதை எண்ணி வருத்தம் கொண்டார்.


மீண்டும் மருத்துவரை அணுகி, மறுபடி செயற்கைக்கால் பொருத்தும்படியும் அதன் வலி உயிரே போவதாக இருந்தாலும் தான் தாங்கிக்கொள்ளத் தயாராக இருப்பதாகச் சொல்லி அதற்கான ஏற்பாடுகளைச் செய்து, பொருத்தி நடக்கத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டார்.


அத்துடன் தனது தந்தையிடம், தொழிலை தானே பழையபடி எடுத்துச் செய்யப்போவதாக அறிவித்து அதற்குண்டான வேலைகளை எடுத்துக் கொண்டார்.
அவர் தூங்குவாரா? மாட்டாரா? என்று நினைக்கும் வண்ணம் வேலை வேலை என்று சதா தொழில் பற்றியும் அதனின் வளர்ச்சி பற்றியுமே சிந்திப்பவனாக, நிறைய அதற்கான உத்திகளைக் கைகொள்ளப் பாடம் படிப்பவனாக மாறிப்போனார்.


அவரின் அறிவை, அம்மா பிருந்தா போட்டு வைத்த பாதையிலேயே போய்க் கூர்மையாக்கி, குடும்பத்தின் தொழில்களைப் பெரியளவில் எடுத்துச் சென்றார். இந்தியாவிலேயே பேசப்படும் முக்கியத் தொழிலதிபராக உருவெடுத்து நின்றார்.


மஹத்தேவன் முகம் தாங்கிய பிஸ்னஸ் மேகசீன்கள் வந்துகொண்டே இருக்க ஆரம்பித்தது. தேவன் அன்.கோ என்றாலே மஹத்தேவனென்ற தொழில் ஆளுமைதான் அனைவரின் நினைவுக்கும் வரும் வகையில் பிரசித்தி பெற்றவனாக உருவெடுத்தார்.


இத்தனையிலும் சிறப்புடன் தன்னை மெருகேற்றி கொண்டவர், வீட்டினுள் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். வீட்டின் ஒரு பகுதியை தனக்கானதாக ஒதுக்கி, அதைத் தனக்குத் தோதாக வடிவமைத்து மாற்றியமைத்துக் கொண்டார்.


அதற்குள் வேறுயாரும் அவரின் அனுமதியில்லாமல் நுழைய அனுமதிக்க மறுத்தார். தனக்கென அப்பகுதியை நிர்வகிக்க, தனது தேவைகளை மேற்கொள்ளவென வேலையாட்களை நியமித்துக் கொண்டார். வேலையாட்களையும் வீட்டை சுத்தம் செய்யவும், உணவு தயாரித்துத் தருவிக்கவும் மட்டுமே தன்னிடத்தினுள் அனுமதித்தார்.


ஏனெனில், அவரின் அப்பகுதியில் மட்டுமே அவர் அவராக, செயற்கைகால் பொருத்தாத சக்கரநாற்காலியில் தானே வலம் வருபவனாக இருந்தார்.
இத்தோற்றத்தில் முன்பு வாங்கிய பரிகாச எள்ளலான பார்வைகளினால், அவரை அக்கோலத்தில் பிறர் பார்க்க அனுமதிக்காமல், கதவினை பூட்டி முடங்கிக் கொண்டார்.


அவர் தன்னைத் தொழில்களில் நிலைநிறுத்தி, தனக்கென மிகப்பெரிய இடத்தைத் தக்கவைத்து பெரும் செல்வந்தனாகவும் இருந்தார், மேலும் அந்தக் குடும்பத்தின் மொத்த சொத்தில் சரிபாதி அவருக்கு மட்டும் சொந்தமானதாகவும் இருந்தது.


அவருக்கென்று தனிப்பட்ட வாரிசு இல்லாத நிலையில், தேவ் குழுமத்தின் மொத்த சாம்ராஜ்யத்தையும் கட்டிக்காக்கும் ஒருவனாக, அவர்களின் தேவ் குரூப்பின் தொழில் சாம்ராஜ்யத்தில் அடையாளமாக மாறிப்போன மஹத்தின் மேல் குடும்பத்தாரின் கவனம் திரும்பியது.


அவரைத் தங்கள் குடும்பத்தின் அடையாளமாகக் கருதினர். அவரையே வீட்டில் நிகழும் விஷேசம் அனைத்திலும் முன் நிறுத்தி எல்லாம் செய்தனர். அவரின் முன், குரல் உயர்த்திப் பேச அஞ்சினர்.
ஆகமொத்தம் வீட்டில் உள்ள ஒரு பொக்கிசமாகப் பாவிக்கப்பட்டார். இளையவர்கள் ஹீரோவாக மஹத்தை நினைக்க ஆரம்பித்தனர்.


கடவுளைப் போல உச்சாணியில் தள்ளிவைத்து, பங்களாவில் அவரின் இருப்பிடத்தைக் கோவில் போலப் பாவித்து, உள்ளே செல்லாமல் எட்டிப்பார்க்க மட்டுமே செய்தனர்.
ஆனால் இத்தனையையும் உடைக்க, அவரையும் தங்களைப் போல ஆசாபாசம் மிக்க மனிதனாக மற்றவர்கள் முன் அடையாளப்படுத்த, ஒரு ஜீவன் அங்கு வந்துகொண்டிருப்பது அப்பொழுது அவர்களுக்குத் தெரியாது.
***
 

மீட்டாத வீணை (தீபாஸ்) Epi-02

அவளின் வருகை

கங்கா அமர்ந்திருந்த ஜன்னலோர ரயில் இருக்கையில் எதிர்கொண்டு முகத்தில் அறையும் காற்று, அவரின் கருப்பும் வெளுப்பும் சேர்ந்த முடிக்கற்றைகளைக் கலைத்துவிட்டது முடிபோல அவரின் மனதில் அசைந்தாடிக்கொண்டிருந்த எண்ணங்களை, “அம்மா...” என்ற அவரின் மகனின் அழைப்புக் கலைத்தது.

“ம்... என்னடா...?” என்று கேட்டதும்,
“நீங்க சொன்னதை நம்பி.... நானும் சர்டிபிகேட்டை தூக்கிக்கிட்டு உங்களோடு கோயம்புத்தூர் கிளம்பிட்டேன். மஹத்தேவனை நல்லா தெரியும்ன்னு, நீங்க சொன்ன வார்த்தையை முதலில் நான் நம்பவேயில்லைம்மா......” என்றவனை மேலும் பேச்சை தொடரவிடாமல்,

“வாயிலேயே போடப்போறேன், சின்னய்யாவை மொட்டையா பேர் சொல்லி சொல்ற...?! ஐயா போட்டு பேசணும் மாதேஷ்” என்றார் சற்று கோபத்துடன்.

“சரிம்மா தெரியாம சொல்லிட்டேன். உங்க விசுவாசத்துக்கு அளவே இல்லைன்னு இப்போ தெரிஞ்சுகிட்டேன். பரண் மேலயிருந்த டிரங்கு பெட்டியை எடுத்து, மஹத்தேவன் ஐயா குடும்பத்தோடு உட்கார்ந்த போட்டோவில் அவரின் நாற்காலியை பிடிச்சபடியே பின்னாடி நின்னு நீங்க சிரிச்ச முகமா இருக்கிற போட்டோவை என்கிட்ட காட்டிய பிறகுதான் நான் நம்பினேன்.

ஆனா உங்களை இன்னுமா அந்தப் பெரிய வீட்டில் இருக்கிறவங்க மறக்காம இருப்பாங்க....? உங்களைப் போல எத்தனையோ வேலைக்காரங்க அந்த வீட்டில் வேலை பார்த்திருப்பாங்க.... இப்பவும் பல வேலையாட்கள் அந்த வீட்டில் இருப்பாங்க..... முன்னாடி எப்பவோ அங்க வேலை பார்த்தேன்னு சொல்லி, இப்போ போய் எனக்காக வேலை கேட்டா தருவாங்களாம்மா....?”

“மஹத்தேவன் ஐயா, கட்டாயம் அவரோட ஏதாவது கம்பெனியில் ஒரு வேலை போட்டுத் தருவாருன்னு நீங்க சொன்னதை நானும் நம்பி உங்க பின்னாடி புறப்பட்டாச்சு...
ஈசியா போய்ப் பார்க்க முடியிற ஆளா அவர்....? பிரஸ்காரனுங்களே அவரை எப்படியாச்சும் ஒரு படம் புடிச்சு தங்களோட பத்திரிக்கையில் போட்டுரணும்னு அவர் வீட்டு வாசல்ல நாள் கணக்கா தவமா தவமிருந்துக்கிட்டுக் கிடப்பாங்கலாம்.
அவரைப் பார்க்குறதை விட ஈசியா பிரைமினிஸ்டரை பார்த்திடலாம்ன்ற ஒரு பேச்சு அடிபடுது....! அப்படியிருக்க, நாம எப்படிம்மா அவரைப் பார்க்க முடியும்?”

“மாதேஷ், மத்தவங்களும் நானும் சின்னவருக்கு ஒன்னு கிடையாது. எத்தனை வேலைக்காரங்க வந்தாலும் இந்தக் கங்காவோட இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. நான் சொன்னது எத்தனை உண்மைன்னு அங்க போனதுக்குப் பிறகு நீயே தெரிஞ்சுக்கிடுவ.....”

“ஏம்மா...? இத்தனை நாளா இம்புட்டு பெரிய ஆளுங்க உங்களுக்குத் தெரியும்னு நீங்க காட்டிகிட்டதே இல்லையே.... ஏன்ம்மா?”

“எல்லாம் உன் அப்பாவாலத்தான், ஏனோ அந்த மனுசனுக்கு நான் ஒரு இடத்தில வேலைக்காரியா இருந்தேன்னு வெளிய சொல்றதில விருப்பம் இல்லை. என்கிட்டயும் நீ பெரிய வீட்டில வேலைக்கு இருந்ததை யார்கிட்டயாவது சொன்னா என் கெளரவம் கெட்டுப்போயிடும், அதனால வெளியில மூச்சு விடக்கூடாதுன்னு சொல்லிட்டார்.
நான் வேலைக்காரியா இருந்தாலும் நேர்மையா உழைச்சுத்தானே சம்பாதிச்சேன்னு உங்க அப்பாகிட்ட விவாதம் பண்ண முடியாது..... அந்த மனுசரை எதிர்த்து ஒரு வார்த்தை சொல்லிட்டா பயங்கரமா கோபம் வரும். அதனால நான் அவரோட போக்குலேயே போயிட்டேன்.”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது பயணித்த இரயில் சத்தம், தடக் தடக்கெனத் தேய்ந்து மதுரையில் நின்றது. அவர்கள் இருந்த கம்பார்ட்மெண்டினுள் இன்னும் நான்கு பேர் வந்து சேர்ந்தனர். அதில் இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் இருந்தனர்.
அந்தக் கம்பார்ட்மெண்டில் இருந்த ஆறு இருக்கைகளில் இவர்கள் இருவர் மட்டுமே இதுவரை பயணம் செய்தனர். மீதமிருக்கும் நான்கு சீட்டிற்கும் உரிய ஆட்கள் வந்ததால், அப்பர் சீட்டுக்கும் கீழிருந்த சீட்டுக்கும் இடையில் இருந்த மிடில் சீட் இருபுறமும் தூக்கி அதற்கான சங்கிலியால் மாட்டப்பட்டது.

அதுவரை உட்கார்ந்து செய்த பயணமும், திறந்திருந்த ஜன்னலில் வழி வந்த காற்றும் அந்தப் பயணத்தை எளிதானதாகவும் நினைவுகளைச் செளகரியமாக அசைபோடவும் வழிசெய்தது.

மிடில் சீட் தூக்கி மாட்டப்பட்ட பின்னால், அந்தப் படுக்கைகளில் உட்கார முடியாது. படுத்துக் கொண்டுதான் பயணம் செய்ய வேண்டுமென்ற நிலை. அதையும் மீறி உட்கார்ந்தால் தலை தட்டும், குனிந்தபடி முதுகை வளைத்து நீண்ட நேரம் உட்கார்ந்து செய்யும் பயணம் சாத்தியமற்றது.

மிடில் சீட்டுக்கு மகன் போய்விட்டதாலும், எதிர் சீட்டிலிருந்த பெண் கைபேசியும் காதில் ஹெட்போனையும் மாட்டிக்கொண்டு யாருடனோ பேசிக்கொண்டிருந்ததாலும், கங்காவும் படுத்துக்கொண்டார்.

அதுவரை ஜன்னல்வழி வந்த காற்று மிடில் சீட் மாட்டியதால் உள்ளே வர இயலாமல் தத்தளித்து. காற்றில்லாத காரணத்தால் புழுக்கத்தில் கங்காவின் உடல் வேர்க்க ஆரம்பித்ததால், தூக்கம் வர அடம்பிடித்தது. எனவே பழைய நினைவுகளைக் கங்கா அசைபோட ஆரம்பித்தார்.

கங்காவின் கணவர் நல்லகண்ணு, தனியார் கம்பெனியில் மூவாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலையில் இருந்தார்.
‘அவருக்கு, தான் மகாராஜா என்ற நினைப்பு..., என்னை அவருடைய சேடிப்பெண்ணாகவே எண்ணிக்கிட்டார், நானு அவரோட மனைவி என்பதை மறந்து. இறுதிநாள் வரை வேலையாளாவே வைத்திருந்தார். நான் ஒரு வீட்டில் வேலை பார்த்தேன்ன்ற காரணத்தால, என்னைய அவருக்கும் வேலைக்காரியாகவே நினைத்துக்கிட்டார் போல....

காலையில் எழுந்ததும் குடிக்கத் தண்ணிர் செம்பில் கொண்டுபோய் அவரின் கையில் கொடுப்பது முதல், பல் தேய்க்க பல்பொடி எடுத்துத் தரவெனத் தொடர்ந்துகொண்டே போகும் அவருக்கான என் பணிவிடை, சாப்பிட்டுவிட்டுக் கைத்துடைக்கத் துண்டு நீட்டி, கையில் சாப்பாடுக்கூடையைக் கொடுப்பது வரை எல்லாவற்றையும் நான் தான் செய்யணும்.

அவர் என்னைக் கூப்பிட்டால் நான் என்ன வேலை செய்துக்கிட்டிருந்தாலும், எனக்கு உடல்நிலை முடியாமல் இருந்தாலும், அவரின்முன் போய் நின்று அவர் சொல்வதைச் செய்துதான் ஆகணும்...
பலநேரங்களில் அவரின் சிடுசிடுப்பும், என்னை, ‘ஏய்... ஏய்...’ ன்னு கூப்பிடுவதும் கோபமாகத்தான் வரும்....
அப்படித்தான் ஒரு தரம் கல்யாணமான புதுசில் கிணத்திலிருந்து தண்ணீர் இறைச்சுக்கிட்டு இருந்தேன்.

“ஏய்... எங்க இருக்க? குடிக்கத் தண்ணி கொண்டு வா” என்று சத்தம் கொடுத்தார்.
அவர் குளிக்க, குளியலறைக்குள் இருந்த அண்டாவில் ஊற்ற நீர் இறைத்து நிரப்பிய குடத்தை இடுப்பினில் தூக்கிவைத்து நடந்துகொண்டே, “அங்கன தான உங்க அம்மா இருக்காங்க..., அவுகளை மோந்து கொடுக்கச் சொல்லுங்க. நான் வேலையா இருக்கேன்” எனச்சொல்லிவிட்டு,

“எப்பப்பாரு ஏய்... ஏய்...ன்னே கூப்பிடுறதை வழக்கமா வச்சுக்கிட்டார்.... நான் இவருக்குப் பொண்டாட்டி தானே..?! பேர் சொல்லி கூப்பிட வேண்டியது தானே....?! அதென்ன வேலைக்காரியை கூப்பிடுறதைப் போல ஏய்...ன்னு கூப்பிடுறது?” என்று சொல்லிக்கொண்டே இடுப்பில் உள்ள குடத்துடன் குளியல் அறையை நெருங்கினேன்.

“வேலைக்காரியா வேலை பார்த்தவத் தானடி நீ...?! உனக்கு வாய் நீளுதோ...?” என்று கேட்டபடி, பளாரென ஒரு அடி கன்னத்தில் விழுந்தது.

எதிர்பாராத அந்தத் தாக்குதலில் குடத்தை இடுப்பிலிருந்து டமாரென நழுவ விட்டு, நானும் தரையில் போய் விழுந்தேன்.

அவரின் அம்மா ஓடியே வந்து, “அட நாசமா போறவனே..., அவ என்னத்த சொல்லிட்டான்னு கல்யாணமான மஞ்சத்தாலி காயிறதுக்குள்ள இப்படிக் கை நீட்டிட்ட...?” எனச் சொல்லிக்கொண்டே கீழே விழுந்த என்னைத் தூக்கி அமர்த்தினார்.

“அம்மாடி, விழுந்ததால அடியெதுவும் படலையே...?! கல்யாணத்துக்குப் பிறகாவது இவன் முன்கோபம் மாறிடும்னு நினைச்சேன்.... ஆனா, அவனோட அப்பனை போலவே அப்படியே இருக்கானே...!” என்ற மாமியாரிடம்,

அதிர்ச்சியிலும், வலியிலும், அவமானத்திலும், இயலாமையாலும் பேசமுடியாமல் கண்களில் வழியவிட்ட கண்ணீரோடு பதிலேதும் சொல்லாது எழுந்து, விந்தியபடி நடந்து போய்ப் படுக்கையில் படுத்துக் கொண்டேன்.

அன்று முழுவதும். எதுவும் சாப்பிடவுமில்லை படுத்தே இருந்தேன்.... வேலைக்குப் போனவரும் வீட்டுக்கு வந்ததும் என்னைய சமாதானபடுத்த இனிப்பு, பூ எல்லாம் வாங்கி வந்தார்தான்.... இருந்தாலும் அவரின் வார்த்தைகள் உவப்பானதாக இல்லையே....’

“ஏய், நான் கோவத்தில கை நீட்டிட்டேன். நீயும்தான் நான் சொன்னதை உடனே செய்திடேன்..... எதுக்கு நான் கோபப்படுவது போல நடந்துக்குற?! சரி சரி விடு, இனி இப்படி நடக்காம பார்த்துக்கலாம். வா... எழுந்து சாப்பிடு” என்றார்.

அவரின் பேச்சிலிருந்தே ஒரு விஷயம் தெரிஞ்சிருச்சு..., அவர் பேச்சுக்கு எதிர்பேச்சு நான் பேசுவதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியலை. அவருக்கு அடங்கி அவரின் சேவகியாக நான் இருக்கவேண்டுமென நினைக்கிறாரோன்ற புரிதல் எனக்கு உருவாக ஆரம்பித்தது.

‘இனி கைநீட்டும் சம்பவம் நடக்காமல் பார்த்துக்கொள்கிறேனெனச் சொன்னாலும், அடுத்த மூன்று மாதத்தில் இதே போல மறுபடி கை நீட்டுவதையும், தன்னை ‘ஏய்’ என்று கூறி அவருக்கான வேலையாளாக என்னை நடத்துவதையும் வழக்கமாகத்தானே வச்சிருந்தார்.....

அதன் பிறகு கல்யாணமாகி ஒன்றரை வருடம் சென்று கங்காவின் வயிற்றில் உருவான தனது மகனை ஈன்றெடுத்தப் பின்னால், மகனுக்கு அப்பாவின் அருகாமை வேண்டுமென்ற காரணத்திற்காகவே கங்கா தனது முதுகெலும்பை வளைத்துக் கொண்டார்....

அவரின் மனம் தனக்குள் பேசியது ‘நான் பிறந்தது, என் அப்பா வீட்டில், வேலை பார்த்தது பிருந்தாம்மா வீட்டில், கல்யாணமாகி வந்தது என் புருஷன் வீட்டில்... இத்தனை இடங்களிலும், நான் அங்கு இருக்கவும் அதனைப் பராமரிக்கவும் மட்டுமே உரிமை இருந்தது.

மற்றபடி அந்த வீட்டை இடித்து மாற்றியமைக்கவோ..., அல்லது என் இஷ்டம் போல அன்றைய நாளை அந்த வீட்டினுள் எனக்கான நாளாக மாற்றவோ...., எந்த உரிமையும் இல்லையே...! பிறகெப்படி என் வீடாகும்?

அப்படியானால், எனக்கு வீடே கிடையாதா.....? நான் யாருடைய வீட்டிலாவது அவர்களை அட்ஜஸ்ட் செய்து ஒட்டிக்கொண்டு திரியும் ஒட்டுண்ணி பிறவியாக வாழ வேண்டுமா....? இல்லையேல் உண்ணியை நசுக்குவது போல நானும் இந்தச் சமூகத்தால் நசுக்கப்படுவேனா....?’ என்று எப்பொழுதும் தனக்குள் எழும் கேள்வியை இப்பொழுதும் எண்ணிக்கொண்டார்.

கங்கா எப்பொழுதுமே அப்படித்தான் எதாவது ஒரு சம்பவம் நிகழ்ந்தால், அதனை மற்ற நிகழ்வுகளுடன் சேர்த்து முடிச்சுப்போட்டு இப்படிப் பலவாறு தனக்குள் பேசிக்கொள்வார்.

அவ்வாறு மனதினுள் நிறையப் பேசினாலும் பார்ப்பவர்கள் மிகுந்த அமைதி என்றே கூறுவார்கள். அவ்வாறு யாராவது சொன்னால் அதற்கும் மனதில் ‘நானா அமைதி...?! நான் நினைப்பதை எல்லாம் வெளியில் பேசினால் அவ்வளவுதான்...., என்னைய உலகத்திலேயே பெரிய வாயாடின்னு சொல்வீர்கள்...’ என்று தனக்குள் கவுண்டவுன் கொடுத்துக்கொள்வார்.

‘இருந்தாலும் நான் சந்தோசமாக இருந்த நாட்களெனச் சிலவைகள் உண்டு. ஆனால் அந்தச் சந்தோஷ நிழல் நான் பயணம் செய்யும் பாதையில் இடையில் இருக்கும் மரத்தின் நிழல் போல.... அது அக்கணத்தில் மட்டுமே அனுபவிக்க முடியும்..... அந்த இடம் எனக்கு நிரந்தரமில்லாததென எனக்குத் தெரியும்....

கல்யாணத்துக்கு முன் பிருந்தா அம்மாவும், சின்னய்யாவும் என்னை எப்படிப் பூப்போல வச்சுக்கிட்டாங்க..... நானென்ன அங்க வேலையாள் போலவா இருந்தேன்....? அவங்க வீட்டில் ஒரு ஆளாகத்தானே பிருந்தாம்மா என்னைப் பார்த்துக் கொண்டார்கள்...!’
மேலும் மஹத்தேவன் அய்யா பிறக்கும்போது கால் சோடையில்லாமல் நல்லபடியாகத்தான் பிறந்து வளர்ந்திருந்தாராம். ஆனால் அவரின் கல்லூரி காலத்தில் சந்தித்த ஒரு கார் விபத்தில் ஒரு கால் துண்டானது. உயிர் பிழைத்ததே மறுபிறப்பு என்றானதுனு பிருந்தாமா சொல்லி இருக்காங்க.
.
அன்றிலிருந்து ஒருவருடம் வரை அவரின் மனம் திடப்பட்டு நல்லபடி உலகில் அவர் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள, அவரின் அம்மா பிருந்தா இரவு பகலாகப் பாடுபட்டதைக் கேட்டப்போ எனக்கு எம்புட்டு அருமையான தாய் அவங்கன்னு தோணியிருக்கு.
.
அவருக்கு மகனை பார்க்க துணையாய், கிராமத்தில் ஏழை குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளுள் ஒருவராகப் பிறந்திருந்த என்னைய வருடச் சம்பளத்திற்குப் பேசி, தன்னுடன் அழைத்துக் கொண்டார் பிருந்தா.
என்றவரின் நினைவுகள் அன்றைய நாட்களுக்குள் சென்றது...
கங்கா தனது பதினைந்து வயதில் மஹத்தேவனுக்கு உதவிக்காக அந்தப் பிரமாண்டமான வீட்டுக்கு வேலைக்காரியாக உள்நுழைந்தார்.

அவர் தன்னை அழைத்து வந்த பிருந்தாம்மாவின் மீதும், அவரின் மகன் மீதும், அத்தனை மதிப்பும், அவர்களின் நலனில் அக்கறையும் உள்ளவராக நன்றியுணர்வு மிக்கவராக இருந்தார்.
அந்தப் பெரிய குடும்பத்திலிருந்த மற்ற குடும்ப உறுப்பினர்களினால் தனது சின்ன எஜமான் மஹத்தேவன், பரிகாசமாகப் பார்க்கப்படுவதைக் கண்டார் கங்கா. அதனால் மனதினுள் மற்றவர்களின் மேல் கோபம் கொண்டார்.

அதிகச் சிரத்தையுடன் மஹத்தேவனைக் கவனிக்கிறேன் என்ற நினைப்பில், மிகுந்த பிணைப்பை முதலாளி, தொழிலாளி என்ற நிலையைத் தாண்டி அவனுக்கு அவள்தான் பொறுப்பு என்று, தானே தலைமேல் சின்னய்யாவின் பொறுப்பைச் சுமந்து கொண்டார்.

‘முதலாளி, வேலையாள் என்ற கட்டத்துக்குள் அடக்காமல் என் குடும்பத்திலுள்ள ஒரு ஆளுக்காக நான் மனம் உவந்து பணிவிடை செய்வது போலத்தானே சின்னய்யாவுக்குச் செய்தேன்.... ஆனால், இதே போல என் கணவனுக்கு என்னால் ஏன் மனமுவந்து செய்ய முடியலை...?

காரணம், பிருந்தாம்மா வேலையாளாக நான் இருந்தாலும் என்னை மரியாதையுடன், என் உடல்நிலையையும் என்னால் எதைச் செய்ய இயலுமோ அதை மட்டுமே செய்யப் பணித்தலுமே. அங்கு வேலை பார்த்ததுக்கான மன நிறைவை அவர்களால் எனக்குக் கொடுக்க முடிந்தது.
ஆனால் கல்யாணத்துக்குப் பின் என் வீடெனக் கணவனின் வீட்டை சொன்னாலும், அதற்கு அவர் எஜமானனாகவும் நான் அதில் பணிபுரியும் சேவகனாகவுமே என்னால் உணர முடிந்தது.’

மனைவி என்பவளை தனக்குச் சரிபாதியாக உணர வைக்காமல், தானே உயர்வு என்று நிரூபிக்கவும், தனக்குக் கீழ்தான் நீயென்ற ஆணின் அகங்காரத்தை வெளிக்காட்டுவதும்தான் சிறந்ததென என் கணவர் வளர்ந்த சூழலில், அவரின் தந்தையின் நடவடிக்கையால் உணர்ந்து கொண்டு, அதைக் கடைப்பிடித்ததுமே காரணம் எனப் புரிய ஆரம்பித்தது.
தனது மகனும் தன் தந்தையைப் பார்த்து அதே போன்ற மனநிலை கொண்டு விடுவானோ என்ற பயம் அவருக்கு உண்டாக ஆரம்பித்தது.

‘சே சேச்சே, அவன் என் வளர்ப்பு அப்படியெல்லாம் நடக்கமாட்டான்’ என யோசித்தபடி கண்ணசந்துவிட்டவர் கோயம்புத்தூர் வந்தபின்பே விழித்தெழுந்தார் கங்கா.

ரயில் நிலையத்தில் மகனுடன் சேர்ந்து இறங்கியதும், “ஏம்மா, அட்ரஸ் எல்லாம் நினைவில் இருக்கா?” எனக்கேட்டன் மாதேஷ்.
“அதெல்லாம் இருக்கு, ஆனா அப்பவே ரிக்சா வண்டிகாரன்கிட்ட தேவன் மில் முதலாளி வீடுன்னு சொன்னாலே போதும் நேரா கூட்டிப்போயிடுவாங்க. இப்போ மட்டும் என்ன தெரியாமலா போயிடும்?” என்று சொன்னார்.
மகனுடன் பேசிக்கொண்டே ரயில் நிலையத்தின் பிளாட்பார்ம் கடந்து வாசல் வழியே வெளியே வந்தவர்கள் அங்கிருந்த ஆட்டோக்காரரிடம், “தேவன் மில் முதலாளி வீட்டுக்கு போகணும்” என்றனர்.

“ஏறுங்கம்மா பெரிய இடத்துக்குப் போகணும்னு சொல்றீங்க. அதனால பேரம் பேசாம கூட்டிட்டுப் போறேன்” என்றதும்,
ஆட்டோ உள்ளே ஏறி அமர்ந்த கங்கா, “எப்பா எப்பா இருப்பா, வண்டியை எடுக்காத. உன் ஆட்டோவில எங்களைக் கூட்டிட்டுப்போக எவ்வளவு கேப்ப அதைச் சொல்லு முதல்ல? எனக்குக் கட்டுமான்னு பார்த்துக்குறேன்.... மில் முதலாளி வீட்டுக்கு தான் போறோம், ஆனா நாங்க முதலாளியில்லை வேலைக்காரங்க” என்று படபடவெனச் சொல்லி முடித்தார்.

“ஏம்மா என்னம்மா நீங்க?! சரி எம்பது ரூபா குடுங்க” என்றார் ஆட்டோக்காரர்.
அவர் சொன்னதும், “சரிண்ணே ஆட்டோவை எடுங்க” என மாதேஷ் சொல்லி முடிப்பதற்குள்,
“நீ சும்மா இருடா மாதேஷ், எப்பா ஆட்டோ, உனக்கும் வேணாம் எனக்கும் வேணா அறுபது ரூபா வாங்கிக்கோ” என்றார் கங்கா.

“அறுபது ரூபாய்க்கெல்லாம் எந்த ஆட்டோவும் வராது. நீங்க வேலைக்காரங்கன்னு சொன்னதுனால நூறு ரூபாய் கேக்குற இடத்தில நம்ம இனம்னு எம்பது ரூபா கேட்டேன், இது சரிப்படாது. நீங்க இறங்குங்க. வேற ஆட்டோ பார்த்துகோங்க” என்றான்.

“அம்மா... ஏம்மா....?! கூட இருபது ரூபாய் தானே, விடுங்க... தந்துட்டுப் போயிடலாம். ஆட்டோகாரரே நான் எம்பது ரூபாய்க் கொடுக்கிறேன்” என்றதும், ஆட்டோ புறப்பட்டது.

ஊர் முற்றிலுமாக மாறுபட்டுப் போயிருந்தது. கங்கா இருபுறமும் பார்த்தபடி, ‘நானும் அப்போது இருந்தது போலவா இப்பவும் இருக்கிறேன்? வயசாகிடுச்சுல்ல. ஆனா மனுஷனுக்கு வயதானால் பவுசு குறையும், ஊர் பெருசானால் அதன் மவுசு கூடும்’ என நினைத்துக் கொண்டார்.

‘இப்போ சின்னவர் எப்படி இருப்பாரோ...? ஆனா சக்கர நாற்காலியிலெல்லாம் வருவதில்லைம்மா நடந்து வருவதுபோலத்தான் நான் டிவில அவரைப் பார்த்திருக்கிறேன் என்று மாதேஷ் சொல்றானே?’ என எண்ணிக்கொண்டு இருக்கையில் ஆட்டோ அந்த நீண்ட கோட்டைச் சுவர்களாய் பரந்து விரிந்திருந்த மதில்சுவர்களின் மைய நுழைவாய் கதவின் முன் ஆட்டோ நின்றது.

ஆட்டோவிலிருந்து இறங்கி அவன் கேட்ட எம்பது ரூபாயை கொடுத்துவிட்டு கேட்டின் அருகில் வந்ததும், கூர்க்கா இவர்கள் இருவரையும் பார்த்து, “யார் நீங்க...? இங்கெல்லாம் நிக்கக்கூடாது, போங்க அங்கிட்டு” என விரட்டினான்.

“வாட்ச்மேன், நான் கங்கா. முதலாளி அய்யாவை பார்க்கணும். பிருந்தாம்மாவோட கங்கா வந்துருக்கேன்னு உள்ள சொல்லுங்க, என்னைய உள்ள விடச் சொல்லுவாங்க” என்றார்.

அவர் பிருந்தாம்மா பெயர் சொன்னதும் யோசனையுடன் இன்டர்காமில் விஷயத்தைத் தெரிவித்தார் வாட்ச்மேன்.
நல்லவேளை இன்டர்காம் அட்டன் செய்தது மஹத்தின் சித்தப்பா இரத்தினதேவன். எனவே உடனே அடையாளம் கண்டு உள்ளே கூட்டிக்கொண்டு வரச் சொன்னார்.
***

மீட்டாத வீணை (தீபாஸ்) Epi-03

எதிர்பாராத சந்திப்பு 

 

பெரிய வாயில் கதவினை தாண்டி, பங்களாவை அடைய அரைக் கிலோமீட்டர் நடக்கவேண்டியிருந்தது. நடை பாதையின் இருமறுங்கும் அழகான புல்வெளிகளும் இடையிடையே மரங்களும் பூச்செடிகளும் அமைக்கப்பட்டு, அந்த இடமே அத்தனை ரம்யமாக இருந்தது.

 

மாதேஷ் சுற்றிலும் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டே நடக்க, கங்காவோ தான் வேலை செய்தயிடத்தில் தனக்கு அறிமுகமான முதலாளி மற்றும் வேலைக்காரர்களைப் பார்க்கும் ஆவலில், எப்பொழுதையும் விட வேகமாக எட்டுவைத்து முன்னேறினார்.

 

குடும்ப நபர்களும், அவர்களுக்கு நெருங்கிய உறவினர்கள் தவிர்த்து மற்றவர்களை, வாடச்மேன் முன்னாடி இருக்கும் ரிஷப்சன் அறையிலேயே அமர வைத்துவிடுவான். அங்கேயே பார்த்துப்பேசி அனுப்பிவிடுவார்கள்.

 

கங்காவையும் மாதேஷையும் ரிசப்சனுக்கு அழைத்துவந்து வாட்ச்மேன் அமர வைத்தான். அவன் நகரும் முன் அங்கிருந்த இன்டர்காம் சப்தம் எழுப்பியது. அழைப்பை ஏற்றவன், “ம்... சரிங்க பெரிய முதலாளி, இதோ உள்ள அனுப்பி வைக்கிறேன்எனச்சொல்லி வைத்துவிட்டு,

 

பெரியய்யா உங்களை உள்ள வரச் சொன்னாங்கஎன்றான் பவ்வியத்துடன்.

 

கங்கா ஒருவகை ஆர்வத்துடனும், மாதேஷ் பிரமிப்புடனும் அந்தக் கதவைத் தாண்டி பிரமாண்டமான அந்த ஹாலுக்குள் நுழைந்தனர்.

 

இந்திரதேவன், “வாமா... வாமா... கங்கா, எப்படி இருக்க?!” என்று ஹாலில் போடப்பட்டிருந்த அந்த அலங்காரமான பெரிய திவானில் உட்கார்ந்திருந்தபடி விசாரித்தார்.

 

நல்லா இருக்கேன்ய்யா. இது என் மகன் மாதேஷ். இங்க வீட்டில எல்லோரும் சவுக்கியம் தானே?” என்று கங்காவும் பதில் நலம் விசாரித்தாள்

 

நடுக்கூடத்தில் அமர்ந்திருக்கும் தனது கணவர் யாரையோ வரவேற்று நலம் விசாரிக்கும் சத்தம்கேட்டு யாரெனப் பார்க்க, அடுத்திருந்த அந்தப் பெரிய சாப்பாட்டு அறைகுள்ளிருந்து வெளிவந்தார் பாக்கியம்.

 

அவருக்கும் கங்காவை பார்த்ததுமே அடையாளம் தெரிந்துவிட்டது. கங்கா, இன்னும் அப்போ பார்த்தது போலவே இருக்கியே நீ? எப்படி இருக்க? இது யார் உன் பையனா?” என்றதும்,

 

ஆமாம்மா, நல்லா இருக்கேன். பிள்ளைக எல்லோரும் சவுக்கியமாய் இருக்காங்கல்ல? இங்கதானே இருக்காங்க? சின்னவர் எப்படி இருக்கார்?” என எல்லோரையும் அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் பேசினார்.

 

அவ்வளவு தூரத்திலிருந்து வந்த அவர்களை வந்ததும் வாவென்று கேட்டதோடு சரி, இருவரையும் உட்காரெனச் சொல்லாமல், உள்ளிருந்து வந்த பாக்கியம் திவானில் உட்கார்ந்திருந்த கணவனின் அருகில் அமர்ந்து கொண்டார்.

 

தோட்டத்தில் நடைப்பயிற்சி முடித்துவந்து குளித்துவிட்டு காலை சிற்றுண்டி முடித்த மஹத், வீட்டிலிருந்தே பார்க்க வேண்டிய கோப்புகள் சிலவற்றை எடுத்து மேஜையின் முன் அமர்ந்தார்.

 

 

வீட்டின் பாதுகாப்புக்காக அங்காங்கே அமைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவாகும் காணொளி பதிவுகளை மஹத்தின் பார்வைக்கும் கிடைக்க, அங்கே அமைத்திருந்த திரையில் காணொளியாக ஒளிபரப்பாகிக்கொண்டே இருக்கும்.

 

தற்செயலாக அதைக் கவனித்த மஹத், தங்கள் பங்களா காம்பவுண்டுக்குள் ஒரு பெண் மற்றும் ஆணும் வருவதைக்கண்டு யாரென உற்று கவனித்தவருக்கு, வரும் அந்தப்பெண் கங்காவின் முகத்தோற்றத்தை ஒத்து இருப்பதாகத் தோன்றவும், இதயம் தடதடக்க உற்று கவனித்தார்.

 

ஆம்...! வருவது கங்காவேதானெனக் கண்டு கொண்டவர், நீண்ட காலத்துக்குப் பின் வாழ்வில் ஒரு தடவையாவது மீண்டும் அவளைப் பார்த்து எப்படியிருக்கிறாய் எனக்கேட்க நினைத்திருந்தவளை, தனது இடத்தில் கண்டு கொண்டார்.

 

அவளைப் பார்க்கும் சந்தர்ப்பம் இனி வரவே வாய்ப்பில்லையென நினைத்து, அவளின் நினைவுப்பந்தை மனமென்னும் கடலுக்குள் அழுத்தி பிடித்துக் கொண்டிருந்தார்.

 

அவ்வப்பொழுது அந்த அழுத்தத்தைத் தாங்காது, சோர்ந்த மன வெளியில் அந்நினைவுகளை மிதக்கவும் விடுவார். இன்று அவளை நேரில் பார்க்கும் சமயம் வந்துவிட்டதைக் கண்டு பரபரப்பான அவரது உடல், பல கலவையான உணர்வுகளுக்கு ஆட்பட்டு லேசாக நடுக்கமெடுத்தது.

 

ஆனால் இதுபோல உணர்வுகளை வெளியில் கொட்டுவது, அதுவும் தான் கங்காவுக்காக இப்படியொரு பரிதவிப்பை கொட்டுவது வெளியில் தெரிந்தால், அவளும் மற்றவர்களும் முகம் சுளிப்பார்கள் என்ற நிதர்சனம் உறைத்ததால், தனது உணர்வுகளைச் சமன்படுத்த எண்ணினார். அதற்குக் கொஞ்ச நேரம் தேவைப்பட்டது.

 

 

தன்னை ஆசுவாசப்படுத்திய பின் வெளியில் சென்று கங்காவை பார்க்க வேண்டுமென எண்ணிய மஹத், மெல்லமாகத் தன்னை நிதானப்படுத்திக்கொண்டே அவசரமாகத் தன்னைக் கண்ணாடியில் பார்த்து லேசாகக் கலைந்திருந்த தலையைக் கோதி விட்டவருக்கு, மனதில் ஒரு அசட்டுச் சிரிப்பும் தன்னை நினைத்தே ஒரு பரிதாபமும் உண்டானது.

 

ஒரு பெரிய மனுஷன் போலவா நான் நடந்துக்கிறேன்? பாவம் அவள், எந்தக் கள்ளம் கபடமும் இல்லாமல் என்மேல் முதலாளி என்ற கரிசனையில், அக்கறையில், விசுவாசத்தில், இங்கிருந்த வரை என்னை நன்றாகப் பார்த்துக்கொண்டாள்.

 

இப்பொழுதும் முன்னாள் வேலைப்பார்த்த இடமென்ற காரணத்தில் ஏதேனும் உதவி தேவைப்பட்டுக் கேட்டுப்பார்ப்போமென வந்திருப்பாள். நான் அவளை நினைத்து ஏங்கி கிடந்ததைப் போல அவளொன்றும் என்னை நினைத்து ஏங்கி தவித்தவள் இல்லையே!

அவளுக்குக் கல்யாணமாகும் கடைசி நிமிசத்துக்கு முன்பு வரை, ‘என்னை விட்டு அவளால் போகமுடியாது எப்படியாவது என்னிடம் வந்துவிடுவாள். கடவுளே! வரச்செய்துவிடுஎன்று நான் பைத்தியம் போல அன்று மனதினுள், வெளியில் சொல்ல முடியாமல் அனத்திக்கொண்டிருந்ததைப் பற்றிய எந்தச் சலசலப்பும் அவள் மனதை தாக்காது போனவள் தானே!

 

இயல்பாக என்னை வெறும் முதலாளி மட்டுமே என்ற எண்ணத்தில் விலகிப் போனவள் தானே!

 

நான் அவளின்மேல் கொண்டிருந்த பிடிப்பை ஒரு வேலைக்காரியிடம் கொண்டிருந்த உரிமையான அதிகாரமென்று நினைத்து, அவள் போனால் நான் தவித்துப் போய்விடுவேன் என்ற பிரஞ்சை இல்லாமல் என்னை விட்டுப்போனவள் தானே!

 

இதை எல்லாம் மனதில் வைத்து அவளிடம் பட்டும் படாதவாறு பேசி அனுப்பிவிடு மஹத்எனத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்.

 

கங்கா கூடத்துக்குள் வந்ததிலிருந்து சற்று மறைவாக நின்று கவனித்துக் கொண்டிருந்தவர், ‘சின்னவர் எப்படி இருக்கிறார்எனக் கேட்டுவிட்டுத் தன்னைப் பார்க்கும் ஆவலில் கங்காவின் கண்கள் வீட்டை துழாவுகின்றதோ, என்ற எண்ணத்தில் அனிச்சையாகக் கால்கள் அவளை நோக்கி எட்டு வைத்தது.

 

மஹத் வருவதைக் கண்டு, முகம் முழுவதும் மகிழ்ச்சியில் பிரகாசிக்க, அவரை உச்சியில் இருந்து கால் வரை பார்த்தார் கங்கா.

 

அவள் பார்ப்பதைக் கண்டு புன்னகைத்துக் கொண்டே வந்து திவானின் அருகில் இருந்த ஒன்றை சோபாவில் அமர்ந்தவர், “வா... கங்கா, இத்தனை வருஷம் சென்றுதான் இந்தப் பக்கம் வரத் தோணுச்சோ? எதுக்கு நிக்கிற, உட்கார்என்று முன்னால் இருந்த மற்ற இருக்கைகளைக் காட்டி சொல்லிவிட்டு, “நீயும் உட்காருப்பாஎன மாதேஷையும் கூறினார்.

 

இருவரும் தயக்கத்துடன் இருக்கையின் நுனியில் அமர்ந்தனர் என்றாலும், இன்னும் கங்கா அவரை ஆச்சர்யம் மற்றும் மகிழ்ச்சி இரண்டும் கலந்த ஒரு பாவனையோடு தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

என்ன கங்கா அப்படிப் பார்க்குற? என்னடா திடீர்ன்னு இவன் நல்லா நடந்து வாரானேன்னு பார்க்கறியா? நீ இருந்தவரை நான் வீல் சேரில் தான் இருந்தேன். நீயும் அம்மாவும் போன பிறகுதான் ஒருத்தரை சார்ந்தே வாழ்றது எவ்வளவு கஷ்டம்னு புரிஞ்சது. அதனால செயற்கைக்கால் பொருத்திக்கொண்டு இப்போ யார் தயவும் இல்லாமல் நடக்க ஆரம்பிச்சுட்டேன்.

 

ம்... புரியுது, நீ என்ன நினைக்கிறேன்னு. நீ இருக்கும் போதும் செயற்கைக்கால் பொருத்த அம்மாவோட முயற்சியால முயன்று பார்த்தேன். ஆனால் அப்போது பக்குவமில்லை. வலியை என்னால அப்போ சகிச்சிக்க முடியல. ஆனா அதுக்குப் பிறகு பழகிட்டேன். இப்போ என்னோட தயவில் பலரை வாழ வைக்கிறேன்என்றார்.

 

உங்களை இப்படிப் பார்க்கிறதில் ரொம்பச் சந்தோசம் சின்னய்யா? பிருந்தாம்மா இருந்திருந்தா பூரிச்சுப் போயிருப்பாங்க. அதே போல இப்படித் தனி மனுசனா உங்களை விட்டிருக்கவும் மாட்டாங்கஎன இயல்பாக அவருடன் உரையாட ஆரம்பித்தார்.

 

ஏன்?! இப்போ நான் தனியா இருப்பதில் என்ன குறைந்து போயிட்டேன்...? இதோ நல்லாத்தானே இருக்கேன். கல்யாணமானவங்க பொதுவா ஏன் தான் கல்யாணம் பண்ணினேனோ? கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாம் எவ்வளவு சுதந்திரமா சந்தோசமா இருந்தேன் தெரியுமா? அப்படின்னு  சொல்லாதவர்களே கிடையாது. அப்படிப் புலம்பும் கல்யாணம் எனக்கு வேண்டாம்னு தான் இருந்துட்டேன்..

 

அதை விடு கங்கா, என்ன திடீர்ன்னு இந்தப் பக்கம்? இது உன் மகன்தானே? என்ன படிச்சிருக்கான்?” என்றார்.

 

ஆமாங்க சின்னய்யா, இவன் என் மகன். பேரு மாதேஷ்... மாதேஷ் அய்யாகிட்ட நீ என்ன படிச்சிருக்கேன்னு சொல்லுஎன்றதும்,

வணக்கம் சார், நான் பி.எஸ்.சி, எம்.பி.ஏ முடிச்சிருக்கேன் சார். இதோ என் செர்டிபிகேட். செவெண்டி பெர்சண்டேஜ் மார்க் வச்சிருக்கேன் சார்எனச்சொல்லி எழுந்து தனது பைலை நீட்டினான்.

 

அதைக் கையில் வாங்காமல், “குட், இருக்கட்டும். இப்போவும் விருதுநகரில் தானே இருக்கீங்க?” எனக் கேட்டார்.

 

ம்... ஆமாம் சார்என்றவனை,

 

உட்கார்எனச்சொல்லிவிட்டுக் கங்காவிடம், “எந்த வருஷம் படிப்பை முடிச்சான்?” என்றார்.

 

இரண்டு வருஷம் ஆச்சு. அவங்க அப்பா போன வருசம் ரொம்ப உடம்புக்கு முடியாம போனதால ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரின்னு என் கூடப் புள்ளையை அலைய வச்சேன். ஆனா நாங்க எம்புட்டு கஷ்டப்பட்டும் லிவர் பெயிலியர்னால அவரைக் காப்பாத்த முடியாம ஆகிடுச்சு.

 

இவன் வேலை பார்த்த கம்பெனியில ஆள்குறைப்பு செய்தாங்க. இவன் என்கூட ஆஸ்பத்திரிக்கு அலைஞ்சு  வேலைக்கு ரொம்ப லீவு போட்டிருந்ததால முதல் ஆளா வேலையை விட்டு இவனைத்தான் தூக்கிட்டாங்க.

 

அதுக்குப் பிறகு இவனுக்கு ஏத்தது போல வேலை எதுவும் கிடைக்கலை. அவங்க அப்பா ஆஸ்பத்திரி செலவுக்கு வீட்டுமேல நிறையக் கடன் வாங்கியிருக்கோம், அதை அடைக்கவும் முடியலை. அதான் உங்ககிட்ட வந்து உதவி கேக்கலாம்னு கூட்டிட்டு வந்தேன்என்றார் கங்கா.

 

என்ன உதவி எதிர்பார்க்குற கங்கா?” என்றார்.

 

இவனோட படிப்புக்கேத்த ஒரு வேலை போட்டுக் கொடுப்பீங்கன்னு நான் நம்பிக்கை கொடுத்து கூட்டிகிட்டு வந்துட்டேன் சின்னய்யா, முதலாளி நீங்க பார்த்து உதவணும்என்றார் கங்கா.

 

அவள் சொன்னதும், “ம்... பார்க்கலாம், ஏதாவது ஏற்பாடு பண்றேன்எனப் பேசிக் கொண்டிருக்கும் போதே, உள்ளிருந்து கண்ணப்பன் இவர்கள் இருவருக்கும் குடிக்கக் காபி போட்டு எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தார்.

 

நேரத்தை பார்த்த கங்கா மணி பதினொன்றரையைத் தாண்டியிருக்கக் கண்டு, “சின்னய்யா, இந்நேரம் ஜூஸ் குடிக்கிற டைமாச்சே, என் கையால சின்னவருக்கு ஆக்கிப்போட்டு எத்தனை காலம் ஆச்சு!என்றார்.

 

டயட் எல்லாம் முன்னாடி போல இல்லை கங்கா, எல்லாம் மாறிப்போச்சு. இருந்தாலும் நீ இருக்கும் போது பார்த்துப்பார்த்து பக்குவமா எனக்காகச் செய்து தருவப் பாரு, அதிலும் அந்தப் பருப்பு உருண்டை குழம்பு... அதெல்லாம் இப்போ நினைச்சாலும் சாப்பிட ஆசையிருக்குஎன்றார்.

 

அவர் அவ்வாறு சொன்னதும், “ஏன் இப்பவும் செய்து சாப்பிடலாமே. இன்னைக்கு மதியம் உங்களுக்குப் பருப்புருண்ட குழம்புதான், என் கையால நானே செய்து தாரேன். இன்னைக்கு ஒரு நாள் உங்களுக்கு என்னென்ன வேணும்னு மெனு கொடுங்க, நானே சமைச்சிடுறேன். சமையல்காரர்கிட்ட பக்குவம் சொல்லிக் கொடுத்துட்டு போறேன்என்றார் கங்கா.

 

அங்கு நின்றுகொண்டிருந்த கண்ணப்பன் திருத் திருவென முழித்தார். எங்கே இந்தப் பொம்பளை என் வேலைக்கு உலை வச்சிடுமோ! என்ற வருத்தம் அவருக்கு.

 

அப்படியா சொல்ற, ரைட்டு நானும் இன்னைக்கு வெளிய எங்கயும் போகலைஎன்றவர் மொபைலில் தனது பி.ஏ.வை அழைத்தார். அவரின் வரவுக்காக வாசலில் காத்துக்கொண்டிருந்த பி.ஏ.செபாஸ்டின் வேகமாக உள்ளே வந்தார்.

செபாஸ்டின், இன்னைக்கு என்னோட ப்ரோகிராம் எல்லாத்தையும் கேன்சல் பண்ணு..., கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும். அப்படியே இந்தத் தம்பி சர்டிபிகேட் வாங்கிக்கோங்க, இவரோட குவாலிபிகேசனுக்கு ஏத்த ஜாப் எங்க ரெடி பண்ண முடியும்னு பார்த்து இன்னைக்குச் சாயந்திரத்துக்குள்ள ஒரு அப்பாய்ன்மென்ட் ஆர்டர் ரெடி பண்ணுங்கஎனச் சொன்னார்.

 

மாதேஷ் அங்கு நடப்பதை எல்லாம் ஒரு கனவு போல நினைத்து பிரமிப்புடன் அமர்ந்திருந்தவன், தன்னை அறியாமல் எழுந்து தனது பைலை செபாஸ்டினிடம் நீட்டியதும், அதை வாங்கிக் கொண்டவர், “பாஸ், நான் இவரை என்னோடு அழைச்சிட்டு போய், பார்மாலிட்டிக்கு ஒரு இன்டர்வியூ எடுத்துட்டு அப்பாய்ன்மென்ட் ரெடி பண்ணிடுறேன்என்றார்.

 

ம்... அவர் கூட நீ போப்பாஎன்று மஹத் சொன்னதும்,

 

சரி சார்என்று கூறியவன், தனது அம்மாவிடம், போய்வருகிறேன் என்று சொல்ல திரும்பிப் பார்த்தான்.

அவரோ கண்ணப்பனோடு உருண்டை குழம்பு செய்ய வீட்டின் ஆட்களைக் கணக்கு சொல்லச் சொல்லி, எவ்வளவு அளவு பருப்பு உடனே ஊறப்போட வேண்டுமெனச் சொல்லிக்கொண்டே, அவருடன் உள்ளே சென்று கொண்டிருந்தார்.

 

வேறு வழியில்லாமல் தனது அம்மாவிடம் சொல்லாமலே, ஒரு தலை அசைவை அங்கிருந்தவர்களிடம் பொதுவாகக் கொடுத்துவிட்டு செபாஸ்டினுடன் மாதேஷ் வெளியேறினான்.

 

வீட்டில் இருந்த அனைவரின் தலையும் கூடத்தில் நடப்பதை ஆச்சரியத்துடன் எட்டிப்பார்த்தது.

 

ஒரு சாதாரணமான மனுஷியாகத் தெரிந்த ஒரு பேரிளம் பெண்ணுடன் சகஜமாக நலம் விசாரித்து மஹத் பேசுவதையும், அந்த அவளோ அவரிடம், ‘பிருந்தாம்மா உங்களை இப்படியே விட்டுருக்க மாட்டாங்கஎன அவரின் வாழ்க்கை பற்றி விமர்சிப்பதையும் கண்டு ஆச்சர்யப்பட்டனர்.

 

அந்த வீட்டில் முப்பது வருடம் முன் இருந்த கங்காவை தெரியாத அந்த வீட்டு இளையவர்கள் அவர்கள்.

 

ஆம்... இது போல மஹத் யாரிடமும் ஒட்டுதலாகப் பேசியோ, குசலம் விசாரித்தோ பார்க்காதவர்கள் அவர்கள்.

 

மஹத் சற்று மனம் விட்டு இயல்பாக வீட்டில் உள்ளவர்களில் அவரது அப்பா மற்றும் சித்தப்பாவிடம் மட்டுமே பேசுவார். அதுவும் பிசினெஸ் விசயங்களை மட்டுமே மணிக்கணக்காகப் பேசுவார்.

 

அதைத் தாண்டி வீட்டில் நல்லதோ கெட்டதோ நடந்தால், கடைசி நேரத்தில் சபையில் வந்து தானும் அந்த வீட்டில் ஒருத்தரெனக் காட்டிக்கொள்ள அவர் பங்கு பரிசுகளை வழங்க மட்டுமே வந்து நிற்பார்.

 

அவர் எப்போதடா வருவாரெனக் காத்திருக்கும் அவரின் குடும்பத்தார், அவர் நேரத்திற்கு வந்ததும் அவரையே அவர்கள் குடும்பத்தின் முதன்மையாக, தங்களின் வழிகாட்டியாக, பேச்சிலும் செயலிலும் உணர்த்தி அங்கே முன்னிலை படுத்திவிடுவார்கள்.

 

அத்தனையையும் ஒரு அமைதியான சிரிப்புடன் ஏற்றுக்கொள்வார். யாரிடமாவது எதற்காவது ஒரு வார்த்தை பேசிவிட்டால் கூட, அது பெரிய விஷயமாகப் பேசி அந்த வீட்டு இளசுகள் பெருமைப்பட்டுக் கொள்வார்கள்.

 

அவர் இந்த அளவு அங்கு ஒட்டுதல் இல்லாமல் இருப்பதற்குக் காரணம், அவரின் அம்மா இறந்த பிறகு வீட்டில் அந்தக் குடும்பத்தார் அவரிடம் நடந்துகொண்ட விதம், அவரை அந்தளவு அவர்களிடம் இருந்து மனதால் தூரமாக ஒதுங்க வைத்தது.

 

இப்பொழுது அவர்கள் அவரைக் கொண்டாடுகிறார்கள்தான். காரணம், அவரின் திறமை மற்றும் அவரின் வாரிசில்லா சொத்துக்குத் தங்களின் குடும்பத்தார்தான் வாரிசு என்ற எண்ணத்தாலுமே என்ற எண்ணம் அவரின் ஆழ்மனதில் பதிந்து போய்விட்டது.

 

தன்னைத் தனக்குரிய அடையாளங்கள் திறமைகள் விட்டு,  சகமனிதனாக நினைத்து அன்பை பொழிந்தவர்கள் இந்த உலகத்திலேயே இருவர். ஒன்று அவனின் அம்மா, மற்றொன்று இதோ எதிரில் இருக்கிறாரே இந்தக் கங்கா, என்ற நிதர்சனம் அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லையே.

***

மீட்டாத வீணை (தீபாஸ்) Epi-04

4 அவளை வேலைக்கு அமர்த்துதல் 

மஹத், என்றைக்கும் இல்லாத திருநாளாக வீட்டில் அனைவரோடும் சேர்ந்து அந்தப் பெரிய சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து மதியவுணவு உண்டார். அதோடு மட்டுமில்லாது சாப்பிடுகையில் வீட்டாருடன் இயல்பாகப் பேசி சிரித்தபடி, அவரின் பின்னால் நின்று பார்த்துப் பார்த்து ஒரு வேலையாளாகக் கங்கா பரிமாறச் சாப்பிட்டார்.

கங்காவோடு இயல்பாய்பேசி அவனின் வீட்டாரோடு ஒருவராகத் தன்னை அறியாமல் இணைத்தார். கங்காவோ அவளை அறியாமல் வீட்டில் உள்ளவர்கள் அவரோடு பேசிவுறவாட பாலமாக விளங்கினார்.

நீண்டகாலம் சென்று சந்திக்கும் சிறுவயது நண்பர்கள் போல, கங்காவும் மஹத்தும் பழையவைகளை நினைவுகூர்ந்து பேசினர். பேச்சினூடே மஹத்தின் சித்தப்பாவாகிய இரத்தினதேவனின் மூத்த மகளான அவர்களின் வயதொத்த ரேகாவும், அவர்களின் நினைவுகளுடன் இணைந்து கொண்டார் மஹத்.

இரத்தினதேவனுக்கு மூன்று பிள்ளைகள். மூன்று பேரில் மூத்தவள் ரேகா, மஹத்தேவனை விட நான்கு மாதமே அவள் இளையவர். எனவே சிறுவயதில் மஹத் கார் விபத்தில் காலை இழக்கும் முன்பு வரை அண்ணன் தங்கை உறவை விட நல்ல நண்பர்களாகவே இருந்தனர்.

கால் ஊனமானதிலிருந்து அவருக்கு இப்படியாகிப்போனதே என்ற வருத்தத்தில் ரேக்கா மிகவும் அன்பாகத்தான் மஹத்தை பார்த்துக்கொண்டார். காலப்போக்கில் அன்பை விட ரேகாவுக்கு இரக்கமே மஹத்தின் மீது அதிகரித்தது. அவர்களின் நண்பர்களுடன் அவுட்டிங் போகும்போது முன்பெல்லாம் மஹத்தும் அதில் ஒருவராக இருந்து நிறைய வேடிக்கை விளையாட்டில் பங்கு கொள்வார்.

இப்பொழுது அவர் வீட்டில் முடங்கிக்கிடக்கத் தான் மட்டும் அவுட்டிங் போய்விட்டு வரும்படியாகிவிட்டதே... பாவம் மஹத்... இனி அப்படி எல்லாம் நண்பர்களோடு அவுட்டிங் போய் என்ஜாய் பண்ண முடியாதில்லையா பாவம்... எப்படி இனி காதல் கல்யாணமெல்லாம் அவருக்குச் சாத்தியப்படுமோ...? பாவம் என்று நிறையப் பாவம் பார்பதாய் வார்த்தையை அவரின் முன் அவிழ்த்துவிட ஆரம்பித்தாள். அதிலிருந்து மஹத் அவளிடமிருந்து ஒதுங்க ஆரம்பித்தார்.

கங்கா முன்பு அங்கு வேலையில் இருந்தபோதே ரேகா அவரோடு படித்த உத்தமனை காதல் திருமணம் செய்துகொண்டு பெரியோர்களிளிடம் சம்மதம்பெற்று வீட்டோடு மாப்பிள்ளையாக உத்தமனை கொண்டுவந்திருந்தார்..

கங்கா சென்றபின் ரத்தினத்தின் இரண்டாவது மகள் ராதிகா மற்றும் மூன்றாவது பெற்றெடுத்த விசாகதேவன் உட்படக் கல்யாணம் முடிந்து குழந்தை குட்டியோடு அங்கேயே வாழ்ந்துகொண்டிருந்தனர்.

இவ்வாறாக மஹத்தேவனின் சித்தப்பா ரத்தினத்தின் வாரிசுகள் அத்தனைபேரும் அன்று வீட்டில் இருந்தனர். இளையவர்கள் அனைவரையும் யார் யார் யாருடைய பிள்ளைகளெனக் கங்காவுக்குச் சொல்லி, ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார் மஹத்.

கங்காவுடன் இணக்கமாகப் பேசக்கூடாது என்று நினைத்தாலும், கங்காவின் இயல்பான பேச்சாலும் தன்னைக் கண்டு வாஞ்சையாக அன்பு தெறிக்கும் குரலில் பேசிய அவரின் அருகாமையாலும் நெகிழ்ந்து போனார். அவருக்கான கூட்டுக்குள்ளிருந்து வெளியேற ஆரம்பித்தார்.

அங்கிருப்பவர்கள் மனதினுல் ‘கங்கா இங்கிருந்தால் மஹத்துடன் தங்களால் நெருங்கிப் பழகமுடியுமென’ எண்ணினர். கங்காவை வைத்து மஹத்துடன் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள நினைத்தனர்.
மஹத்தின் கைவசமுள்ள சொத்துக்களை அவரின் காலமிருக்கும் போதே கைப்பற்றி அனுபவிக்க, அவரின் தொழில் பார்முலாக்களை உடனிருந்து பழகி தொழிலில் அவரின் அடுத்த இடத்தைத் தாங்கள் பிடித்துக்கொள்ள, கங்காவின் மூலம் வழி ஏற்படுத்திக்கொள்ள நினைத்தனர்.

சாப்பிட்டதும், “ரொம்பக் காலம் ஆச்சு கங்கா.... உன் கை பக்குவத்தில வீட்டில எல்லோரோடு சேர்ந்து பேசிக்கிட்டே சாப்பிட்டது சந்தோசமாய் ஃபீல் பண்ண வச்சுது” என்றார் மஹத்.

“சின்னய்யா, இத்தனை நாள் தனியாவா உட்கார்ந்து சாப்பிட்டீங்க...?” என்று கங்கா ஆச்சர்யத்துடன் கேட்டதும்,

“தனியா மட்டுமில்ல..., எனக்குத் தனிச் சமையல். என்னோட போர்சனிலேயே மாடர்ன் கிச்சன்ல கண்ணப்பன் ரெடி பண்ணிருவான். டாக்டர் கொடுத்த டயட்டை சரியா செய்றதில் கண்ணப்பன் கில்லாடி.. சேர்ந்து சாப்பிட்டா நான் மட்டும் பச்சை இலை தழை, பழ ஜூஸ், கேப்ப, கம்பு இப்படிச் சாப்பிடுவது நல்லா இருக்காதுல்ல. அதனால கண்ணப்பன் எனக்குத் தனியா என் போர்சனில் சமைத்ததை அங்க என்னோட டைனிங் டேபிளில் வச்சிட்டுப் போயிடுவான். நானா எடுத்துப்போட்டு சாப்பிடுவேன்.

நீ போனதுக்குப் பிறகு நிறைய இங்க மாறிடுச்சு கங்கா. வாயேன் என் போர்ஷனை காட்டுறேன். உனக்கே வித்தியாசம் புரியும்” என்று சொல்லி அவளைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு போனார். தனக்காக மாற்றியமைக்கப்பட்ட அந்தப் பங்களாவின் சரிபாதி பகுதியைச் சுற்றிகாட்ட, கங்காவை உடன் அழைத்துச் சென்றார்.

அங்குள்ளவர்கள் கங்காவின் விசுவாசத்தையும், மஹத் அவரின் மீது வைத்திருந்த நல்ல அபிப்ராயத்துடன் கூடிய நட்பையும் கண்டு வியந்தனர். அவரை அவரின் கூட்டுக்குள் இருந்து வெளியில் கொண்டு வர நம்மோடு அவரை இணைக்கக் கங்காவால் முடியும், அவளை இங்கிருந்து அனுப்பக்கூடாதென்று எண்ணினர். எனவே தனியாக அவர்களுக்குள் பேசி கங்கா திரும்பச் சென்னைக்குப் போகவிடாமல் தடுக்க வேண்டுமெனப் பேசிக்கொண்டனர்.

“கங்காவின் ஊரான விருதுநகரில் அவரின் மகனுக்கு அங்குள்ள கிளை கம்பெனியில் வேலை ஏற்பாடு செய்துவிட்டால் மகனுடன் அங்குக் கிளம்பி விடுவார். இங்கேயே அவனுக்கு வேலைக்கான அப்பாய்ன்மென்ட் கொடுக்க ஏற்பாடு செய்யணும். அதற்கு மஹத்தின் பி.ஏவிடம் நீங்க பேசுங்க” என்று அவர்களின் வீட்டில் உள்ள பெரியவரான இரத்தினதேவனிடம் அவரது மனைவி பாக்கியம் கட்டாயப்படுத்தினார்.

இரத்தினம் அவர்களின் பேச்சை செவிசாய்க்க மிகவும் யோசித்தார். ஏனெனில் கங்கா இங்கு வேலையில் இருக்கும்போது மஹத்துக்கு அரணாக இருந்தவள் அவள் என்று தெரியுமே....

அவரின் ஊனத்தை உணரவிடாமல் பார்த்துக் கொண்டவள்.... தாய் பறவை அடைகாக்கும் சேய் பறவை போல அவனை அரவணைத்திருந்தவள்.. அவர் விட்டுச் சென்றபின் அதற்கான பாதிப்பு மஹத்தை பெரிதும் தாக்கியது வரை கூர்ந்து அவதாநித்திருந்தவர்.

மஹத் சித்தப்பாவாகிய தான்தான், சிறிது பணத்தைக் கங்காவின் வீட்டின் வறுமையைப் பயன்படுத்தி.... யாருக்கும் தெரியாமல் கொடுத்து...., ஒரு வரனையும் பார்த்துக் கொடுத்து வேகவேகமாகப் பின்னிருந்து கங்காவுக்குக் கல்யாண ஏற்பாட்டைச் செய்து இங்கிருந்து அவளை வெளியேற்றிவர்.

ஏனெனில், கங்கா முதலாளி என்ற விசுவாசத்தில் மஹத்தை கவனித்துக் கொண்டது பெரிய விஷயமில்லை.... ஆனால் அவரின் அண்ணியார் பிருந்தாவும், அண்ணன் மகன் மஹத்தும் கங்காவின் விசுவாசம் பொருட்டுக் காட்டிய சலுகைகளும்..., அவளின் மேல் மஹத் அதிகாரத்தைச் செலுத்தும் பாங்கும்.... அவருக்கு நெருடலாக இருந்தது.
அண்ணனுக்கு மஹத் ஒற்றை வாரிசு. ஆனால் தனக்கோ மூன்று பிள்ளைகள். அப்படி இருக்கச் சொத்தில் அண்ணனுக்கே அவர் விரும்பிய சொத்துக்களில் பெரும் பகுதி பெரியவர்களால் உயில் எழுதப்பட்டுவிட்டது.

மேலும் அவரின் ஒன்றை மகனுக்கு ஆக்சிடென்டாகி கால் ஊனமாகப் போகாமல் ஆளே போயிருந்தால், அவரின் சொத்தும் தனது பிள்ளைகளுக்கே வந்து சேந்திருக்கும் என்ற அற்ப ஆசைப்பட்டவர். ஆனால் அது தான் நடக்கவில்லை.

என்றாலும், முடமான இவனை யார் கல்யாணம் செய்ய முன்வருவார்கள்? எப்படியாவது அவனுக்குக் கல்யாணம் முடியாமல் போய்விட்டால் கூட நல்லதுதான்.. கொஞ்சம் மெதுவாகவாவது சொத்துகள் நம் கைக்கு வந்துவிடும் என நினைத்தார்.

அதற்கு ஊனமான மஹத்தை தனது கன்ட்ரோலில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அவரின் அண்ணியார் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தார். மகனை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டார். அத்தோடு எந்நேரமும் தானோ அல்லது கங்காவோ மாறி மாறி அவனுடன் இருப்பது போலப் பார்த்துக் கொண்டார்.

நாள் செல்லச் செல்ல கங்காவுக்குப் பிருந்தாவும், மஹத்தும் கொடுத்த முக்கியத்துவத்தைக் கண்டவர், ஒருவேளை நம் ஸ்டேட்டசில் உள்ள யாரும் ஊனமான மஹத்துக்குப் பெண் கொடுக்க முன் வரவில்லை என்றால், இந்தக் கங்காவையே அவனுக்குப் பணிவிடை செய்யவென்று மருமகளாகக் கொண்டு வந்துவிடுவார்களோ என்ற கவலை அவருக்கு வந்தது.

அப்படி நடந்தால் மஹத் அவனுக்கென்று குடும்பம் குட்டி என்றானால் சொத்தில் சரிபாதி பிரிந்து போய்விடுமே! தனக்குத் தோன்றிய இதேபோன்ற எண்ணம் அண்ணி பிருந்தாவுக்கு உண்டாகும் முன் டக்கென்று கங்காவை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று திட்டம் போட்டார்.

பிருந்தாவுக்கு யோசிக்கக் கூட வகையாக நேரமில்லாத படி, மூன்றே நாளில் நிச்சயதார்த்தம் பத்து நாளில் கல்யாணம் என்ற நிலையில் கங்காவை அவர்கள் வீட்டிலிருந்து கூட்டிக்கொண்டு போக வந்து நின்று விட்டார்கள்.

இத்தனைக்கும் பின்னால் இரத்தினதேவனின் சூழ்ச்சி இருந்தது இதுவரை யாருக்கும் தெரியாது. அப்படிக் கஷ்டப்பட்டு வெளியேற்றிய கங்காவை இத்தனை வயதுக்குப் பின், கல்யாண வயதில் ஒரு மகனுடன் இங்கு வந்து உதவி கேட்டவளை, தன் மூலமாகவே மறுபடி இங்கே உள் இழுத்துக் கொள்வதா!? அதனால் எதுவும் பாதகம் வருமா?

‘சேச்... சே... இரண்டு பேரோட வயசென்ன, பக்குவமென்ன, நான் இப்படி யோசிச்சேன்னு பிள்ளைங்க முன்னாடி தெரிஞ்சா அவங்களே என்னை இப்படி மட்டமா யோசிக்கிறீங்கன்னு அற்பமாய்ப் பேசுவாங்க’ என எண்ணினார்.

தனது மொபைல் எடுத்து மஹத்தின் பி.ஏ செபாஸ்டினுக்கு அழைப்பு விடுத்தார். அவருக்குத் தெரியும் செபாஸ்டின் மஹத்தின் விசுவாசமான வேலையாளென்று. தான் அவனை எந்த வகையிலும் விலைக்கு வாங்க முடியாது. ஆனால் தனது பாஸ் மஹத்துக்குத் தான் செய்யும் விஷயம் நன்மை பயக்கும் என்றால் அதைச் செய்து முடிப்பவன் செபாஸ்டினெனத் தெரியும். எனவே அவனின் போக்கிலேயே பேசி காரியத்தைச் சாதிக்கப் பேசினார்.

தனது கைபேசி அழைப்பை ஏற்றவனிடம், “செபாஸ்டின், இப்போ ஒரு பையனுக்கு வேலை போட்டு தரச்சொல்லி மஹத் அனுப்பினார்ல. எங்க அந்தப் பையனுக்கு வேலை ஏற்பாடு பண்ண போறீங்க?” எனக் கேட்டார்.

பெரியவர் பேசவும் மிகவும் மரியாதையாக, “சார் சென்னையில் இருக்கும் நம்ம டெக்ஸ்டைல் பேக்டரில தான் மேனேஜெர் போஸ்டிங்ல போடலாம்னு பார்த்துகிட்டு இருக்கேன். குவாலிபிகேசன்லாம் ஓகே தான், கொஞ்சம் டிரைன் பண்ணினா போதும். ஸ்மார்ட்டா இருக்கான் பையன்” என்றார்.

“இல்லை செபாஸ்டின், நம் மஹத்தை அந்தப் பையனோட அம்மா நல்லா கவனிச்சுகிறாப்ல. ஏற்கனவே கங்கா இங்க மஹத்தை கவனிச்சுக்கிட்டு இருந்தவங்கதான். இன்னைக்கு ஒரு நாள் அவங்களோட கவனிப்பில், மஹத் பல வருஷம் கழிச்சு ரொம்பச் சந்தோசமா இருந்தார். வீட்டிலயும் எல்லோரோடும் சேர்ந்து இன்னைக்குத்தான் பேசி சிரிச்சு ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட்டார். அதான் பெர்மனென்ட்டா கங்காவை இங்க மஹத்தை கவனிக்க வச்சுகிட்டா நல்லதுன்னு நினைக்கிறேன். மஹத்தை புரிஞ்சு கவனிச்சு இயல்பா சந்தோசமா இருக்க வைக்கக் கங்காவால் முடியும்னு தோணுது.

அதான் கங்காவை இங்க புடிச்சு வைக்கணும்னா, நம்ம ஊரில் இருக்கிற நம்ம டெக்ஸ்டைல்ல கங்கா மகனை வேலைக்கு அமர்த்தணும். மகனையும் அம்மாவையும் நம்ம கெஸ்ட் ஹவுஸ்ல தங்க வச்சுக்கலாம்ன்னு நினைக்கிறேன்” என்றார்.

“நிஜமாவா சார், பாஸ் வீட்டில் எல்லோர் கூடவும் சேர்ந்து பேசி சிரிச்சு இருந்தாரா? அதுவும் இந்தப் பையனோட அம்மாவாலா? ஆச்சரியமா இருக்கே...! பாஸோட சந்தோசம் நமக்குப் பெருசு. இதுவரை யாரையும் இப்படிக் கூப்பிட்டுத் திறமை, படிப்பு எதையும் கன்சிடர் பண்ணாம வேலை ரெடி பண்ண சொல்லாத பாஸ், இந்தப் பையனுக்கு அப்படிச் செய்யச் சொல்லவுமே ரொம்ப முக்கியமானவர்ன்னு புரிஞ்சது.

இருந்தாலும் பையனை கொஞ்சம் இன்டர்வியூ செய்து அவனோட தகுதிக்கு ஏற்ப ஒரு வேலையைக் கொடுக்கத்தான் கூடக் கூட்டிக்கொண்டு வந்து கொஞ்சம் மானிட்டர் பண்ணி பார்த்தேன். பெரிய வேலைக்குப் பொருத்தமான பையன்தான். ஆனா இங்க நம்ம பேக்டரி எதிலும் பெரிய போஸ்டிங் இல்லை. ஆனா நீங்க சொல்றதால ஒரு நியூ போஸ்டையே உருவாக்கிடலாம் சார்” எனச் சொல்லி வைத்தார்.
***
 

 

மீட்டாத வீணை (தீபாஸ்) Epi-05

அவரிடம் திரும்பும் உற்சாகம்

 

மஹத்தேவன் வாழும் பிரமாண்டமான பகுதிக்குள் நுழைந்த கங்காவின் கண்கள் விரிந்தது. நிறைய விஷயங்கள் அவரின் போர்சனில் மாற்றியமைக்கப்பட்டிருந்தது என்றாலும், பழமையின் நினைவுகளை உருப்போட தோதாக சில இடங்களை முன்பிருந்தது போலவே வைத்திருக்க, நிறைய மெனக்கிடல்களை இன்றளவும் செலவழித்துக் கொண்டிருப்பதைக் கவனித்தார்.

முன்பு கங்கா இங்கு வேலையில் இருந்தபோது, பிருந்தாம்மா மாடியிலிருந்த தனது கணவருடனான படுக்கை அறையிலிருந்து கீழே மகனின் படுக்கை அறைக்குப் பக்கத்தில் தனது படுக்கையை மாற்றியிருந்தார்.

அத்தோடு கங்காவுக்கும் அவரின் அறையிலேயே தனியாக ஒரு சின்ன மடக்குக்கட்டில் கொடுத்து அங்கேயே தங்க வைத்திருந்தார்.

கங்கா இங்கிருந்து சென்றபோது அந்த அறை எப்படி இருந்ததோ அதேபோல இன்றும் இருந்தது. கூடுதலாக மஹத் அறையில் இருந்த கீபோர்ட் மற்றும் கிட்டார் இரண்டும், பிருந்தாம்மாவும் கங்காவும் தங்கியிருந்த அறையில் ஒய்யாரமாகய் அழகான ஒரு மேஜையின் மேல் வீற்றிருந்தது.

அதைப் பார்த்தவுடன் கண்களில் நீர் திரள, பழைய நினைவுகளைக் கிளறியடக்குவது போல, வாஞ்சையாகத் தனது விரலால் கீபோர்டின் பட்டன்களைக் கோடாக இழுத்துச் சப்தம் எழுப்பிவிட்டார் கங்கா.

அதில் உருவான தடடட்டடட்ட... என்ற சத்தம் அவர்கள் இருவரின் நெஞ்சிலும் ஓர் அதிர்வினை ஏற்படுத்தியது.

சின்னய்யா, மறக்கமுடியாத நினைவுகள்ல...? கனவா எல்லாம் கலைஞ்சு போச்சுல்ல...? ஆமா இப்பவும் நீங்க கிட்டார் வாசிப்பீங்களா...?” எனக் கேட்டார்.

தூக்கம் வராதப்போ, அம்மாவோட நினைவு வரும்போதும் வாசிப்பேன் கங்காஎன்றவர் மனதினுள், ‘உன்னோட நினைவுகளிலும் பெரும்பாலும் நான் கிட்டாரை கையிலெடுத்து மணிக்கணக்கா வாசித்திருக்கிறேன்எனச் சொல்லிக் கொண்டார்.

சின்னய்யா, நான் இங்கயிருந்தது ஐஞ்சு வருசம்தான்.... ஆனா அந்த வருஷங்கள் தான் என் வாழ்க்கையில் பொன்னான நாட்கள். என் சந்தோசத்தில் யார் கண்ணு பட்டுச்சோ தெரியலை, எல்லாம் கலைஞ்சு போயிடுச்சு.

ஆனால், நான் இங்கிருந்து போனதுக்குப் பிறகு பிருந்தாம்மா என் இடத்துக்கு வேற யாரையாவது கொண்டு வந்துருப்பாங்க..., உங்களை எப்பவும் போலப் பத்திரமா பார்த்துக்குவாங்கன்னு நினைச்சேன்.

ஆனா இப்படி உங்களைத் தவிக்கவிட்டுப் போவாங்களென நான் சத்தியமா எதிர்பார்க்கலை, பிருந்தாம்மா தவறிய சேதிகூட ஒரு வருஷம் சென்றுதான் என் காதுக்கே எட்டுச்சு...

நீயும் போய், அம்மாவும் போனதுக்குப் பிறகு, என்னைய சுத்தி இருக்கிறவங்களோட உண்மையான முகம் எனக்குப் புரிய ஆரம்பிச்சது கங்கா.... என் கால் போனாலும் அம்மாவும் நீயும் எனைத் தாங்கிக்கிட்டு இருந்திருக்கீங்கன்ற விஷயமும் புரிஞ்சது. அம்மாவும் நீயும்  என்னோட உலகம் நந்தவனமா அழகானதா இருக்க வச்சிருந்தீங்க...

 .ஆனால் அதுக்குப் பிறகு, தனியா என்னைச் சுத்தி மிருகங்கள் இருக்கிற காட்டுக்குள்ள ஓடமுடியாமல் பயந்து பதுங்கியிருந்தேன். ஒரு கட்டத்துக்கு மேலதான் புரிஞ்சது, இந்த உலகத்தில் அம்மாவும் நீயும் தவிர மற்ற யாரும் எந்தவித பிரதிபலனும் இல்லாம யாருக்கும் எதுவும் செய்யமாட்டாங்கனு புரிஞ்சது.

கங்கா..., இங்க வலிமை இருக்கிறவன் தான் ஜெயிக்க முடியும். முன்பு வலிமை உடல் பலத்தில் இருக்கணும். ஆனால் இப்பொழுதைய காலக் கட்டத்தில் புத்தியில் வலிமையா இருக்கிறவனா ஒருத்தன் இருந்தாகணும். அதனால என்னோட அறிவை பலப்படுத்துற முயற்சியில இறங்கினேன்.

எந்நேரமும் என் புத்தியை தீட்டிக்கொண்டே இருந்தேன். அதை என்னோட பிஸ்னசில செலவழித்தேன். என்னோட வணிகம் விரிவடைஞ்சது, சவால்களும் கூடியது. சவால்களைச் சமாளிக்க நிறையப் பாடங்களைப் படிச்சேன்.

பிஸ்னசில் விழுந்த அடிகளும், படிப்பினைகளும் என்னால எதையும் எதிர்கொண்டு ஜெயிக்கக்கூடிய ஆற்றலை புத்திக்கு எட்டவச்சது. மனிதர்களை என்னால் படிக்க முடிஞ்சது. என்னை மத்தவங்ககிட்ட வெளிப்படுத்தாம இருக்கக் கத்துக்கிட்டேன்.

என்னை என்னோட பலம் பலவீனம் படிச்சு புரிஞ்சு செயல்பட்டு அதைக்கொண்டு என்னை வீழ்த்தக் கூடாதென நினைச்சேன். அதனால் என்னைப் பற்றிய எதையும் வெளிப்படுத்தாமலிருக்கப் பழகிக்கிட்டேன். என்னோட வெற்றி மட்டுமே பிறர் கண்ணுக்கு தெரியும்படி பார்த்துக்கிட்டேன். என்னைய மிக வலிமையானவனாகக் காட்டிக்கிட்டேன்.

ஆனால் நான் பயந்து ஓடிக்கொண்டிருக்கிறேன் கங்கா... சூது, நயவஞ்சகம், சுயநலம், பொறாமை, பேராசை, ஏமாற்றுப்பேர்வழி என்ற பலவகைக் குணம் கொண்ட மனிதர்களிடம் சிக்காமல் இருக்க ஓடிக்கொண்டே இருக்கிறேன்... என்னை இளைப்பாறச் சொல்லவோ ஆசுவாசப்படுத்தவோ யாருமே இல்லை கங்காஎன்றார்.

சின்னய்யா, ஏன் இப்படி எல்லாம் நினைக்கிறீங்க. பிருந்தாம்மா போனாலும் உங்க அப்பா, பெரியய்யா ஜெயதேவன் இருந்தாருல்ல. சமீபமா ஒன்னரை வருடம் முன்புதானே பெரியய்யாவும் தவறினார்என்றார்.

அப்பாவுக்கு நானும் அம்மாவும் எப்பவுமே முக்கியமில்லையென்ற விஷயம் உனக்குத் தெரியுமே கங்கா. அவருக்கு அவரோட இன்னொரு குடும்பத்தின் மீது தான் எப்பொழுதும் பாசம் அதிகம்.

ஏற்கனவே எங்கமேல ஒட்டுதல் இல்லாது இருந்தவர், என்னோட இந்த நிலைக்குப் பிறகு என்னைப் பொறுப்பு எடுத்து பார்த்துக்கிட எப்படி முன் வருவார்?

இவ்வளவு பெரிய குடும்பத்தில் சாயங்கால வேளையில் காற்றோட்டமாகத் தோட்டத்தில் என் சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு போக யாருமில்லை. இடையிடையே எனக்குத் தேவையான மருந்தை எட்டி எடுத்துக் கொடுக்க ஆள் இல்லை. ஒவ்வொரு சாப்பாட்டு வேளையிலும் என்னை ஞாபகம் வைத்து வந்து கூட்டிக்கொண்டு போய் டைனிங் டேபிளில் அமர்த்த யாருமில்லை..எனச் சொல்லிக்கொண்டு போனவரை,

சின்னய்யா போதும்..., தப்புப் பண்ணிட்டேன்... உங்களைப் பற்றி யோசிக்காம போயிட்டேன். திடீர்னு என் வீட்டில் வந்து கல்யாணம் பேசி முடிச்சாச்சுன்னு சொல்லி என்னைக் கூப்பிட வந்தப்போ, எனக்கு என்ன சொல்லன்னே தெரியலை...

அப்போ நான் உங்களை இப்படி நட்டாத்துல விட்டுட்டு வர முடியாதென என் அப்பாவிடம் நான் சொல்லியிருக்கணும். ஒருவேளை நான் இங்கே இருந்திருந்தால் பிருந்தாம்மா கூட நம்மோடு இன்னும் நிறைய ஆயுளோடு இருந்திருக்கலாம்

என்று மஹத்தின் வேதனையான வார்த்தைகளைப் பொறுக்காது, தன் பொறுப்பில் இருந்த சின்னய்யாவை அம்போவென விட்டுவிட்டு போய்விட்டேனே என்ற குற்றவுணர்வுக்கு ஆட்பட்டார் கங்கா.

சீ... ச்சீ... பைத்தியம், உன் மேல எதுக்குப் பழி போட்டுக்கிற...? உன் வீட்டில் வந்து கூப்பிடும்போது எப்படிப் போகாமல் இருக்க முடியும்...? உன்னைய வேலைக்காகத்தானே அம்மா கூட்டிக்கொண்டு வந்தாங்க.

நான் இங்கேயேத்தான் இருப்பேன், இது தான் என் வீடுன்னு உரிமையாக மறுத்துப் பேச உன்னைத் தத்தாயெடுத்துக்கிட்டோம்...? அல்லது...என்று வார்த்தையை விடப்போனவர், கடைசி நிமிடத்தில் சுதாரித்துப் பேச்சை மாற்றிவிட்டார்.

சரி... போனதை பேசி இனி என்ன பிரயோஜனம்? நடந்ததிலும் ஒரு நன்மை இருந்துச்சு. தேவைதான் ஒருத்தரோட ஆற்றலை வெளிக்கொண்டு வரவைக்குது, தன்னோட தேவைகளைத் தாங்களே கவனித்துக் கொள்ளணும் என்ற அவசியம் வரும்போது ஒருவன் தன்னைக் காப்பாத்த ஓடியாகணும்ற அவசியம் புரிஞ்சுக்கிறான்.

எனக்கு அப்படி ஒரு அவசியம் வந்தது. நீயும் அம்மாவும் என் பக்கத்திலேயே இருந்திருந்தால் நான் சந்தோசமா சாதாரண ஒரு மனுசனா வாழ்ந்து இறந்து போயிருப்பேன்.

ஆனால், என்னுடைய தேவையை நானே கவனிக்கணும், என்னைத் துரத்தும் ஒவ்வொன்றையும் எதிர்த்து நின்று விரட்டணும்ன்ற எதார்த்தம் வந்ததால் அதைப் புரிந்ததால், நான் வாழ்வதற்காக என்னோட அதிகப்படியான முயற்சியைக் கொடுத்தேன்.

என்னோட பலத்தை நானே அப்போதான் புரிஞ்சுக்கிட்டேன். அதைப் பிடிச்சே முன்னேறினேன். இப்போ சமூகத்து முன்னாடி வெற்றிப்பெற்ற ஒருவனாய் நிற்கிறேன்.

உனக்கு ஒன்று தெரியுமா...? என்னையப் பாரமாக நினைத்த என் அப்பா முதற்கொண்டு, இங்கே வீட்டில என்னை அற்பமாகவும் ஒன்றுக்கும் உதவாத ஒரு நொண்டிப்பயலா பார்த்த ஒவ்வொருத்தரும் என்னோட வளர்ச்சி கண்டு என்னை நெருங்கி வர, என்னைக் கொண்டாடி என்னுடைய நிழலில் இளைப்பாற, என் அருகாமையை விரும்பி வந்தார்கள்.

ஆனால் அப்பா முதற்கொண்டு யாரையும் என்கிட்ட நெருங்க விடலை நான். ஏன்னா அவங்களோட இன்னொரு முகத்தைப் பற்றி நான் புரிஞ்சுகிட்ட பிறகு எப்படி அவங்கக்கிட்ட ஒட்ட முடியும்?

சரி என்னை விடு, நீ எப்படி இருக்கக் கங்கா...? இங்க இருந்து போனதுக்குப் பிறகு எப்படி இருந்தது உன் வாழ்க்கை? போகும் முன்னாடி இங்கேயே நல்லா கீபோர்ட் வாசிக்க ஆரம்பிச்சிட்ட. இப்பவும் நினைவிருக்கா...?”

சின்னய்யா, உங்களுக்கு எங்களைப் போன்ற சாதாரணக் குடும்பத்து மக்களோட வாழ்க்கை முறை பற்றித் தெரியாது. மாதேஷ் அப்பாகிட்ட எனக்குக் கீபோர்ட் வாங்கித்தாங்கன்னு எல்லாம் கேட்க முடியாது.

கீபோர்டு கேட்டா அவர், ‘வீட்டில் இருக்கும் சாவியை எல்லாம் தொங்கப்போட போர்டு வேணுமாக்கும். ஒரு டப்பாவில் போட்டு வை போதும்என்பார்.

ஆனால் என் மகன் எனக்குக் கிடைத்த வரம் சின்னய்யா. என் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு எனக்கு வந்ததே அவன் வந்ததுக்குப் பிறகுதான். என் மேல நிறையப் பாசம் வச்சிருக்கான்.

பேசிக்கிட்டே இருந்துட்டோம். நேரமாகிடுச்சு பாருங்க...! உங்களுக்குக் குடிக்க இப்போ ஏதாவது கண்ணப்பன் கொண்டு வருவாரா...? அல்லது நான் போய் எடுத்துட்டு வரவா...?”

கங்கா முன்பு எனக்குப் போட்டுக் கொடுப்பியே பில்டர் காபி, அதுபோல இப்பொழுது கிடைக்குமா....?”

கங்கா அடுப்பாங்கரைக்கு மதியம் உணவு சமைக்கப்போகும்போது கண்ணப்பன் சாயங்காலம் கொடுக்க வீட்டு பெரியவர் இரத்தினதேவனுக்காக டிக்காசன் போட்டு வைக்கப் போனபோது கண்ணப்பனிடம், “நான் இதைப் பார்த்துக்குறேன். நீங்க இப்போ சமையலுக்கு நான் சொன்னதை எடுத்துவைங்கஎன்றது நினைவு வர,

இதோ சின்னய்யா, ஐந்தே நிமிசத்தில் போட்டு எடுத்துட்டு வாரேன்என அங்கிருந்து போகப்போனவரை,

ஒரு நிமிஷம் கங்கா, நம்ம ரெண்டு பேருக்கும் காபி போட்டு தோட்டத்துக்கு எடுத்துட்டு வா, கிச்சன்ல கண்ணப்பன் இருப்பான் அவனை இங்க அனுப்புஎன்றார்.

தோட்டத்தில் அழகிய கொடிவீடு தோற்றத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் உட்கார்ந்து நான்கு பேர் பேசி சிரித்துச் சாயங்காலம் பொழுதை செலவழிக்க வசதியாக, இருக்கைகளும் ஒரு டேபிளும் அமைக்கப்பட்டிருந்தது.

பிருந்தாம்மா அங்கு இருக்கும்போது புத்தகம் படிக்கவும், மகனுடன் இசையோடு நேரம் செலவழிக்கவும் அந்த இடத்தைத்தான் பொதுவாக நாடுவார். அவர்களுடன் கங்காவையும் இணைத்துக் கொள்வார் பிருந்தாம்மா.

ஆனால் அதுபோன்ற நேரங்களில் பிருந்தாம்மாவின் கண்கள் சில வேளைகளில் கலங்கியதை கவனித்ததுண்டு. காரணம் அவரின் கணவராக இருக்குமெனச் சிலநேரம் கங்கா யூகித்திருக்கிறார்.

அந்த நேரங்களில், “பிருந்தாம்மா, பெரியய்யா கார் சத்தம் கேட்குது, அவருக்கும் சேர்த்து காப்பி இங்கேயே எடுத்துட்டு வரட்டா?” என ஆவலில் கேட்டிருக்கிறார்.

அப்பொழுதெல்லாம், “வேணாம் கங்கா, அவருக்குக் காபி, டீ, புத்தகம், பாட்டு, இது போன்ற அமைதியான இடமெல்லாம் பிடிக்காது. அவருக்கு ஏசி ரூமில் நான் கிரீன் டீ கொடுத்துவிட்டு வருகிறேன்எனச்சொல்லி எழுந்து போய்விடுவார் பிருந்தா.

கங்கா அங்கிருந்த பொழுதுகளில் அம்மாவும் பையனும் இசையில் மூழ்கியிருக்க, அவர்களுக்குக் காபி கலக்கிக் கொண்டு வரும் கங்கா அதிசயமாக அவர்களைப் பார்ப்பதுடன், அவர்கள் மேலை நாட்டு சங்கீதத்தையும் கர்நாடிக் இசையையும் அதில் மீட்டும் அழகை வியந்து பார்த்திருந்தவள், அவளுக்கும் அதை மீட்ட ஆசை உள்ளதாகச் சொல்ல, கங்காவுக்கு அவ்வப்போது அவைகளை இசைக்க, அம்மா, மகன் இருவராலும் மாறி மாறி டியூசன் எடுக்கப்பட்டது.

கீபோட்டில் கங்காவின் கவனமும் திறமையும் நன்றாக வெளிப்படக் கண்டு, அதை மட்டுமே சிரத்தையாகக் கற்று கொடுக்கவும் செய்தனர்.

ஆர்வத்தினால் கங்காவால் வேகமாக இசையை உள்வாங்க முடிந்தது. அப்படிப்பட்ட வேளைகளில்தான் கங்கா இருவரின் கவனத்தையும் சினிமா பாடல்களின் பக்கம் திருப்பினார். அதிலிருந்து மூன்று பேரின் பொழுதுகள் பெரும்பாலும் பாடல்களுடனே நகர்ந்தது.

ஏதேதோ எனக்குத் தெரியாத பாடலை எல்லாம் வாசிக்கிறீங்களே, எனக்குத் தெரிந்த பாடல்களையும்தான் வாசியுங்களேன் பிருந்தாம்மா...

சின்னய்யா, இதே போலக் கிட்டார் வைத்துக்கொண்டு படத்தில் பிரதாப், ‘என் இனிய பொன் நிலாவே, பொன் நினைவில் என் கனாவேபாட்டு வாசிப்பார் பாருங்களேன், கேட்க அத்தனை ரம்யமாக இருக்கும். அதே பாட்டை உங்களால் வாசிக்க முடியுமா?” என்றார்.

வாசிச்சிட்டா என்ன பண்ணுவ?” எனக் கங்காவை வம்பிழுக்கக் கேட்டதும்,

நான் என்ன பண்ண? அதையும் நீங்களே சொல்லுங்க சின்னய்யா.

நீ தினமும் ஒரு நோட்டு வச்சு என்னமோ எழுதிகிட்டு இருப்பேல்ல அதை என்கிட்ட காட்டணும்.

அடியாத்தி! பிருந்தாம்மா, இவுக இரண்டு நாளைக்கு முன்னாடிலயிருந்து, நான் ஸ்ரீ ராம ஜெயம் எழுதினா நல்லதுன்னு நீங்க சொன்னதால எழுதிகிட்டு இருக்கேன்ல அந்த நோட்டை கேட்டுக்கிட்டே இருக்காங்க. அதெல்லாம் குடுக்க முடியாது.

டேய் வாலு, எதுக்குடா அவளை வம்பிழுக்கிற? ஸ்ரீ ராம ஜெயம் எழுதிய நோட்டு உனக்கு எதுக்குடா?”

அம்மா, ஸ்ரீ ராம ஜெயம் மட்டும் எழுதியிருந்தா அந்த நோட்டை காமிக்க இவளுக்கு எதுக்கு இம்புட்டுத் தயக்கம்? அவ அன்னைக்கு அதில் எழுதிகிட்டு இருந்ததைப் போலத் தெரியலை என்னமோ வரைஞ்சது போல இருந்துச்சு, நான் கேட்டதும் டக்குன்னு மறைச்சு வச்சிக்கிட்டா.

இங்க பாரு கங்கா இன்னும் இரண்டே நாளில், இங்க வச்சே நீ கேட்ட பாட்டு வாசிச்சதும், அந்த நோட்டை என்கிட்ட குடுக்கணும். பெட் ஓகேவா?”

போங்க சின்னய்யாஎன அவர் சொன்னதை அசால்டாக நினைத்து விட்டுவிட்டார் கங்கா...

.இப்பொழுதெல்லாம் பாட்டின் நோட்சை இணையத்தில் கேட்டால் திரையில் கொடுத்துவிடும். அப்பொழுதெல்லாம் அவ்வாறு இல்லையல்லவா. இருந்த போதும் இரவுகளில் தூங்காமல் அமர்ந்து அந்தப் பாட்டுக்கான நோட்சில் தேர்ந்து, அதைப் படித்துவிட்டு அவர் சொன்னது போல இரண்டே நாட்களில் தனது அம்மாவையும் இணைத்துக்கொண்டு இவளை முன்னே அமர்த்தி, தோட்டத்தில் இருந்த அந்த இருக்கையில் அமர்ந்துதான், பாடலை அனுபவித்துக் கிட்டாரில் இசைத்துக் காட்டினார்.

என் இனிய பொன் நிலாவே, பொன் நினைவில் என் கனாவேஎன்ற வரிகளையும் அதோடு சேர்ந்து படித்தபடி அவன் வாசித்த பாடல் பிருந்தாவையும் கங்காவையும் சிலிர்க்க வைத்தது.

பன்னீரை தூவும் மழை, ஜில்லென்ற காற்றின் அலை,

சேர்ந்தாடும் இந்நேரமே... லா லால லா....

என் நெஞ்சில் என்னென்னவோ, எண்ணங்கள் ஆடும் நிலை

என் ஆசை உன்னோரமே... லா லால லா...

வெண்ணிலா வானில் அதில் என்னென்ன மேகம்

ஊர்கோலம் போகும் அதன்

உள்ளாடும் தாகம்

புரியாதோ என் எண்ணமே அன்பே...

என்று அன்று வாசித்துப் பாடியது, இன்றும் கங்காவின் காதில் ஒலித்து, அவரின் கண்களை நனைய வைத்ததை யாரும் பார்க்காமல் சட்டென்று தனது முந்தியில் கண்களைத் துடைத்துக் கொண்டார் கங்கா.

அன்று, கேட்டு முடித்து மறுவார்த்தை சொல்லாமல் அறைக்குள் சென்று தனது நோட்டினை எடுத்துக் கொண்டுவந்து பிருந்தாம்மாவிடம்தான் கங்கா கொடுத்தார், அதை மஹத்திடம் கொடுக்கச்சொல்லி.

அதை விரித்து அப்படி என்னதான் அதில் எழுதி வைத்திருக்கிறாரெனப் பார்த்தால், அவர், ‘ஸ்ரீ ராம ஜெயம்எழுதியிருந்ததென்னவோ கொஞ்சம் தான், ஆனால் அதன் கடைசிப் பக்கத்தில் பென்சிலினால் மஹத் வில்சேரில் இல்லாமல் நல்ல ஆரோக்கியத்துடன் நடப்பது போலத் தத்ரூபமாக வரைந்து வைத்திருந்தார்.

அதை எட்டி பார்த்ததும் எதுவுமே பேசாது அந்த நோட்டை கையில் வாங்கிக்கொண்டு மஹத் அங்கிருந்த தனது சக்கரநாற்காலியை திருப்பித் தனது அறைக்குப் போக ஆயத்தமானார்.

பிருந்தாம்மா கங்காவிடம், “உனக்கு இப்படி அழகா வரைய வருமா...? என் பையனை அப்படியே வரைஞ்சு வச்சிருக்க...? எதுக்கு வரைஞ்ச...?” எனக் கேட்டது, இரண்டு எட்டு வைக்கும் தூரத்திலிருந்த மஹத் காதில் விழுந்தது. கங்காவின் பதிலுக்காகச் சக்கரநாற்காலியை உருட்டுவதை நிறுத்தி கவனித்தார் மஹத்.

மன்னிச்சிருங்க பிருந்தாம்மா, சின்னய்யா எழுந்து நடந்தா எப்படி இருப்பாரென நினைச்சுப் பார்த்தேன். அப்படியே அதை வரைஞ்சிட்டேன்என்றார்.

கங்கா வரைந்த ஓவியம் மஹத் மனதை நிறையவே பாதித்திருக்குமென மூவருக்குமே புரிந்தது. கங்கா என்னவோ மஹத்தை நல்லபடியாக்கி பார்க்க வேண்டுமென ஆசைப்பட்டுதான் வரைந்தார். ஆனால், அது மஹத் மனதின் ஏக்கத்தை, நிறைவேறாத ஆசையைக் கிளறிவிடுவது போல இருந்திருக்கும்.

மறுநாள் மூவருமே நேற்று அப்படி ஒரு சம்பவம் நடந்ததைப் போலக் காட்டிக்கொள்ளாமல், இறுக்கம் தவிர்க்க இயல்பாக இருப்பது போலக் காட்ட முயன்று, நிஜமாகவே இயல்புக்கு திரும்பினர்.

 அந்த நினைவுகளை அசைபோட்டபடி காபி போட்டு காபியை பிளாஸ்கில் எடுத்துக்கொண்டு அழகிய கண்ணாடியிலான சதுரவடிவ தட்டில் காபியுடன் பிரிட்ஜிலிருந்து மஹத்துக்குப் பிடித்தமான பிரான்ட் பிஸ்கட்டையும் எடுத்துக்கொண்டு போனவளுக்குச் சந்தோசத்தில், ஆச்சரியத்தில் உள்ளம் நெகிழ்ந்த நிலையில் கண்கள் கண்ணீரில் பனித்தது.

பலவருடம் சென்று தனது சக்கரநாற்காலியில் கண்ணப்பனின் உதவியுடன் அங்கு வந்து காத்திருந்தார் மஹத். அத்துடன் அங்குக் கீ போர்டு, கிட்டாரெல்லாம் எடுத்து வைக்கப்பட்டிருந்தது.

மனதின் தாக்கத்தை வெளிக்காட்டாது சுதாரித்துக்கொண்டு இயல்பாக முகத்தை வைத்துக்கொண்டு, “அடடே சின்னய்யா, பழைய ஞாபகமோ?” என்று கேட்டார்.

யெஸ், அம்மாவும் இருந்திருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. அதனால்தான் அம்மா இடத்துக்குக் கீபோர்ட் எடுத்து வந்தேன்.

கங்கா, நானே எழுதி கம்போஸ் செய்த ஒரு பாட்டு இருக்கு, கேக்குறயா?” என அவரின் எதிரிலிருந்த இருக்கையில் அமர்ந்து பிளாஸ்கில் கொண்டு வந்த காபியை கப்புகளில் இருவருக்கும் ஊற்றிக் கொண்டிருந்தவரிடம் கேட்டார் மஹத்.

அப்படியா? கொஞ்சமா இந்தக் காபி குடிங்க, குடிச்சிட்டு பிளே பண்ணுங்க. கேட்கிறதுக்கு ஆவலா இருக்கு...! காபி குடிச்சுக்கிட்டே நான் உங்க பாட்டை ரசிக்கிறேன்என்றபடி அவரிடம் காபி கோப்பையை நீட்டினார்.

காபியை கோப்பையில் ஊற்றும்போதே வெளிப்பட்ட அதன் வாசத்தை நன்றாக இழுத்து அனுபவித்தவர், “இந்தக் காபி மணம் இருக்கே...! அட அட அடடா, இதையும் மிஸ் பண்ணி முப்பது வருஷம் ஆகிடுச்சு கங்கா. என் காலம் முடியறதுக்குள்ள இதுபோல ஒரு காபியை இப்படி நான் மறுபடி ஒரு தடவையாவது குடிச்சிடமாட்டேனான்னு ஏங்கியிருந்தேன் தெரியுமா?”

இது... இந்த நிமிஷம், நிஜம் சின்னய்யா. இதை மட்டும் அனுபவிங்க. நான் இன்னைக்கு இரவு இங்கிருந்து புறப்படும் முன்ன, சமையல்காரர் கண்ணப்பர்ட்ட பக்குவம் சொல்லி கொடுத்துட்டுப் போறேன்என்றார்.

இதிலொன்று கங்கா உணரவில்லை. மஹத்துக்குத் தேவை காபி மட்டுமல்ல, இந்தக் காபியை அக்கறையோடு அருகில் அமர்ந்து ஊற்றி கொடுத்து அவருடன் மனம் விட்டு பேசும் இந்தக் கங்காவின் மணமும் அந்தக் காபியில் கலந்திருக்குமென்று.

ஆம்... மஹத் மிஸ் பண்ணுவது வெறும் காபி மட்டுமல்ல!

***

 

மீட்டாத வீணை (தீபாஸ்) Epi-06

இசையும் அவரும் அவளும் 

 காஃபியை லோட்டாவில் விட்டு அவடிடம் கொடுத்ததும் ஆர்வமுடன் வாங்கியவனின் செயலில் மனதினுள் அத்தனை ஆதங்கம் கங்காவிற்கு...

 

எத்தனை குடும்பத்துக்குப் படியளக்கிறார். ஆனால் இவருக்குப் பிடிச்சதை வாய்க்கு ருசியா சாப்பிட வழி இல்லாம இப்படி ஏங்கிப் போயிருக்காரே...

 

ஆண்டவா... மஹத் ஐயா கல்யாணம் பொண்ணாட்டி, பிள்ளை குட்டின்னு தான் சொகப்படாம போயிட்டார்.... வாய்க்கு ருசியா ஆக்கிப்போட வேலையாள் கூடவா அவருக்கு அமைச்சுத்தர உனக்கு மனசு இல்ல...என்று நினைத்தாள்.

 

காஃபியை அறிந்திக்கொண்டே என்ன கங்கா... அப்படி என்னைய பார்த்துகிட்டே என்ன யோசிக்கிற...? இவன் என்ன... ஒரு காஃபிக்கு இந்தப் பறப்பு பறக்குரானேனு தானே...?”

 

நீங்க ராஜா சின்னய்யா... சொடக்குப் போட்ட ஆயிரம் சமையல் காரர்கள் உங்களுக்குச் சமையல பண்ணி போட கியூவில நிப்பாங்க..என்றாள்.

அவள் அவ்வாறு சொல்லவும் விரக்தியான சிரிப்பை உதிர்த்தவர் கையில் கிட்டாரை எடுத்து சுதி கூட்ட டுவெங்...என்ற சத்தம் எழுப்பிவிட்டு தொண்டையைச் செருமிக்கொண்டவர்.

 

அவர் பாடப்போகவும் ஆவலுடன் அவர் முகம் பார்த்தபடி கையில் காஃபியோடு அமர்ந்தார் கங்கா..

 

அண்ணாந்து பார்க்கும் அரசனென எனைச் சொன்னாலும்

ஆதரவற்றுப்போய் முடங்கும் முடவன் நானே!

பொய்க்காலை கட்டிக்கொண்டு உலகமேடையில்

ராஜா வேசமாடுகின்றேனே...!

 

(அவரின் வரிகளில் இருந்த அர்த்தம் கங்காவின் கண்களைக் கலங்க வைக்கப் பார்த்தது)

 

எனக்கான கார்கால நேசத்துளிகளைச் சுமந்திருக்கும் மேகராணியை

ஊழிக்காற்று திசைமாற்றி அடித்துச் சென்றதே!

பாலுக்கு அழுதபிள்ளையான என் பரிதவிப்பை

தீர்க்காத ஏக்கத்தில் தாயும்

மார்பின் வலியில் மாண்டு போனாளே!

(அவரின் மேகராணி... யாரு...? நானா...? ம்...கூம் இருக்காது. பிருந்தம்மா மரணத்தை நினைச்சுப் பாடுறாரு)

 

நரியும் சுயநலப் பேயும் வாழும் காட்டில்

முடங்கிய முடவன் நானே!

பொய்க்காலை கட்டிக்கொண்டு உலகமேடையில்

ராஜா வேசமாடுகின்றேனே!

 

(இவ்வரிகளைக் கேட்டதும் கண்ணீர் துளிகள் அவளின் கன்னத்தில் அடக்க முடியாமல் உருண்டு வீழ்ந்தது)

 

என்றேனும் எனது மனவாசலில் நீர் தெளிக்க

ஒருநாள் மட்டுமாவது

என் மேகராணி கருணை புரிவாளாவென

வழி மேல் விழி வைத்து

மேகம் பொழியாத பயிராக வாடி நின்றேனே!

காலம் கருணை காட்டவே இல்லையென

சருகாகிய போதிலே

எனது ஜீவன் அமைதியாய் துயில் கொள்ள

கருணை பார்வை சிந்தினாளே!

எனக்கான உலகமேடையில் இன்றொருநாள்

ராஜாவாகினேன்...

எனக்கு இது போதும் போதுமே...!

 

கனமான வரிகளுடன் மயக்கும் கிட்டார் ஒலி கூட்டி அவளின் முன் அரங்கேற்றம் முடித்தார் மஹத்.

 

இசைத்த பாடலின் வரிகள் அவரின் துக்கத்தை வெளிப்படுத்தித் தொண்டையை அடைக்க, தனக்காகக் கோப்பையிலிட்ட காபியின் வெம்மை இடம்மாறி கங்கா மனதினுள் பற்றியெரிய! சொல்லமுடியாத வார்த்தையில், ஆறுதல் கூற முடியாத நிலையில் விக்கித்து அமர்ந்து விட்டார் கங்கா.

 

அதே நேரம் மஹத்தின் பி.ஏ செபாஸ்டினும், அவருடன் சென்ற கங்காவின் மகன் மாதேஷூம் சிரித்த முகமாக அங்கே வந்து நின்றார்கள்.

 

வந்தாச்சா, உட்காருங்கமஹத் சொன்னதும், மாதேஷ் தனது அம்மாவின் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான். செபாஸ்டினோ அமரவில்லை. மரியாதை நிமித்தமாக நிற்கவே செய்தார்.

 

இருவரும் வரும் முன்பே, பெரியவர் இரத்தினத்தைக் கைபேசியில் தொடர்பு கொண்ட செபாஸ்டின் அவரிடம், “மாதேஷூக்கு, அவர்களின் கோயம்புத்தூர் பெரிய மில்லில் அவன் எதிர்பார்த்த சம்பளத்தில் மேனேஜர் போஸ்டில் நியமனம் செய்து, அதற்கான அப்பாய்ன்மென்ட்டை அவனிடம் கொடுத்தாச்சுஎனச் சொல்லிவிட்டார்.

 

கைநிறைய சம்பளம் கிடைக்கும் காலியிடம் மற்ற கிளை கம்பெனிகளில் இல்லை மாதேஷ். நீங்க இங்க ஜாயின் பண்ணினால் பங்களா கெஸ்ட்ஹவுசில் இருந்து கொள்ளலாம். வாடகை, போக்குவரத்து எதுக்கும் காசு செலவழியாது. உங்கள் விருப்பம் சொல்லுங்கள் எனக்கேட்டதும்,

 

மாதேஷ் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்க, இங்கேயே வேலை பார்க்கிறேனெனச் சம்மதித்து விட்டார் அய்யா. பத்து நிமிசத்தில் பங்களாவிற்கு மாதேஷோடு வந்துவிடுவேன் பெரியய்யா, நீங்கதான் பாஸ்கிட்ட பேசணும்.

 

எனச் செபாஸ்டின் தகவல் கொடுத்திருந்ததால், மஹத்தேவனின் சித்தப்பாவும் அந்த வீட்டின் மூத்தவருமான இரத்தினதேவன், நுணுக்கமான வேலைப்பாடுடைய தேக்கு மரத்தாலான தடியூன்றியபடி பூங்காவுக்கு வந்து சேர்ந்தார்.

 

அவர் வந்ததும், அமர்ந்திருந்த இருக்கையை விட்டு கங்காவும் மாதேஷூம் மரியாதைக்காக எழுந்து நின்றனர்.

உட்காருங்க, உட்காருங்க...எனச் சொல்லி அவரும் ஒரு இருக்கையில் அமர்ந்துகொண்டார்.

 

மஹத், நம்ம கங்கா வந்ததால ரொம்பக் காலம் சென்று நீ சந்தோசமா இருக்கிறதை பார்த்தேன். உன் அம்மாவின் செலக்சன் கங்கா. உன்னைக் கவனிப்பதில் கங்காவின் சின்சியாரிட்டி மற்ற யாருக்கும் வராது. முன்னாடி இருந்ததுபோலவே இப்பவும் அதே அக்கறையோடு கங்கா இருக்கிறாள்...

 

அதனால நான் ஒரு முடிவெடுத்துருக்கேன். கங்காவை நம்ம கெஸ்ட் ஹவுசில் தங்கச் சொல்லி, உனக்குத் தேவையான சாப்பாட்டைச் செய்து கொடுத்து, வீட்டில் இருக்கிறவங்களோடு உன்னையும் ஒண்ணா அமர்த்திச் சாப்பிட வச்சு கவனிச்சுக்கிட, இங்கேயே இருக்கிறது  நல்லதென நினைக்கிறேன்!

 

நீ மட்டும் வீட்டில் தனிச்சு இருக்காம, எல்லோரும் சேர்ந்து இருக்கணும்னு ஆசைப்படுறேன். வீட்டில் உள்ளவங்களும் கங்காவை பார்த்துட்டு இன்னைக்கு போல, எப்பவும் நீயும் எல்லாரோடும் சேர்ந்து இருந்தா நல்லா இருக்குமென நினைக்கிறாங்க.என்றவர்,

 

கங்கா, நீ என்ன சொல்ற? நம்ம கெஸ்ட் ஹவுசில் இருந்துகிட்டே மஹத்தை கவனிக்க உனக்குச் சம்மதமா?” எனக் கேட்டார்.

 

அவர் பேச ஆரம்பித்ததுமே மஹத் மனதினுள், ‘சித்தப்பா என்ன திடீரென எனக்காக யோசித்துப் பேசுகிறார்!? இதில் எதுவும் உள்நோக்கம் இருக்குமோ...? உள்நோக்கம் இருந்தாலென்ன, என்னால் அதைச் சமாளிக்க முடியாதா...?

 

கங்கா என் கண்முன்னால் காலம் முழுக்க இருப்பதை விடவா வேறு சந்தோசம் கிடைத்துவிடப் போகிறது!? கடவுளுக்குக் கடைசிக் காலத்தில் என் மேல் கருணை பிறந்திருச்சோ...?’ என நினைத்துக்கொண்டார்.

 

அப்பொழுது இரத்தினம் கங்காவிடம், “இங்கேயே இருந்து மஹத்தை கவனித்துக்கொள்ள உனக்குச் சம்மதமா...?” எனக் கேட்டதும், அவரின் பதிலுக்காக நிமிர்ந்து அமர்ந்தார் மஹத்.

 

இதை எதிர்பார்க்காத கங்கா, என்ன பதில் சொல்வதென ஒரு நிமிடம் திகைத்து நின்றார். வார்த்தைகளை மென்று விழுங்கியபடி, “இல்ல... என் மகனை விட்டுட்டு நானெப்படி?”

 

மாதேஷ் வேகமாக, “அம்மா எனக்கும் வேலை, இங்க கோயம்பத்தூரில் தான். அதனால நானும் இங்கதான். உங்களுக்குச் சாரை கவனிச்சுக்க எந்தப் பிரச்சனையும் இல்லைன்னா, எனக்கும் ஓகே தான்.

 

மகன் சொல்லவும் மறுத்தெதுவும் சொல்ல முடியாத சூழலில் அவரும், “ம்... சரிங்க பெரியய்யா, எனக்குச் சம்மதம்என யோசனையுடனே பதிலளித்தார்.

 

அவரின் பதிலில் அனைவரின் முகமும் பிரகாசமானது. ஆனால், மஹத் கங்காவின் அசைவுகள் ஒவ்வொன்றையும் கவனித்ததாலோ என்னவோ முழு மனதுடன் அவர் சம்மதிக்கவில்லையென உணர்ந்து கொண்டார்.

 

கங்கா, சித்தப்பா கேட்பதற்காக நீ சம்மதம் சொல்லித்தான் ஆகணுமென்ற அவசியமில்ல..., உனக்கெது வசதிப்படுமோ அதைச் செய்.

 

கழுத்தளவு கங்கா இருக்கவேண்டுமென ஆசையிருந்தும், தனது ஆசைக்காக அவரைக் கட்டாயப்படுத்த கூடாதென்று நினைத்தார்.

 

அவரின் பரிதவிப்பையும் மன உணர்வையும் பதட்டத்துடன் உள் வாங்கிய கங்கா, “அப்படியெல்லாம் இல்லை சின்னய்யா, ஊருக்குப் போய்ச் சில வேலைகள முடிச்சு வீட்டை ஒதுங்க வச்சிட்டு, ரெண்டு மூணு நாளில் வந்துடுறோம்என்றார்.

 

ரெண்டு மூணு நாளா!என மனதினுள் சிணுக்கம் வந்தாலும் வெளிக்காட்டது, “எதுல போயிட்டு ரிட்டர்ன் வரப்போறீங்க?” என்று கேட்டார்.

மாதேஷ் அவரிடம், “ரயிலில் சார்என்றான்.

 

செபாஸ்டின், இவங்களுக்குப் போக வர டிக்கெட் அரேஜ் பண்ணிக் கொடுத்திடுஎனச் சொன்னார்.

 

கோயம்புத்தூருக்குத் தேவ் நிறுவனத்தின் முதலாளி மஹத்திடம் வேலைக்கு உதவி கேட்டு ரயில் பயணம் செய்து வரும்போது சாதாரண வகுப்பிலேயே பயணம் செய்திருந்தனர்.

 

இப்பொழுது வேலை கிடைத்ததும் தனது வீட்டிற்குப் போய் வரவென முதல் வகுப்புக் குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டியில் பயணம் செய்ய, ரயில்வே ஸ்டேசனுக்குச் செபாஸ்டின் ஏற்படுத்திக் கொடுத்த வாகனத்தில் வந்திறங்கினர் கங்காவும் மாதேஷும்.

 

காரில் அங்கு வந்து இறங்கும் வரையில் உடன் ஆளிருந்ததால் மனம் விட்டு மகனிடம் பேசாதிருந்த கங்கா, இப்பொழுது தாங்கள் மட்டுமே இருப்பதால், “என்னடா பொசுக்குன்னு இங்க வேலைன்னு சொல்லிட்ட! நம்ம ஊர்கிட்ட உள்ள அவங்க கம்பெனியில் தானே வேலை போட்டு தரச் சொல்லி கேக்கச் சொன்னேன்.

 

அம்மா, நல்ல போஸ்டிங்கில் வேலை கிடைச்சிருக்கு, இது வேணாம் வேற எங்க ஊர்ல தாங்கன்னு கேக்குறது சரியில்லை. இது போல வேலை அங்க கிடைப்பதும் கஷ்டம். ரயில் வரும் சத்தம் கேக்குது வாங்க, பிளாட்பார்ம் பார்த்து நின்னுகிட்டே பேசலாம்எனச்சொல்லி அவர்களின் டிக்கெட்டுக்கு எந்தக் காத்திருப்பு நடைமேடையில் காத்திருக்கவெனப் பிளாட்பார்ம் நம்பரை அறிவிப்புப் பலகையில் பார்த்தவன்,

 

பிளாட்பார்ம் நம்பர் மூணு, வாங்கம்மா அந்தக் கடைசிக்கு போகணும். நாம அங்க போவதுக்குள்ள ரயில் வந்து நின்னுடுச்சுன்னா அவசர அவசமாக ஓடிப்போய் ஏறணும், உங்களால ஓட முடியாதுஎனச் சொல்லி ஒற்றைப் பேக்பேக்கை தோளில் சுமந்தபடி முன்னேறினான்.

 

சூழல் அறிந்து மகனின் பின்னே நடந்துகொண்டே, ஆங்காங்கே நின்று பேசிக்கொண்டிருக்கும் மக்களைக் கடந்து நடந்த கங்காவின் நெஞ்சுக்குள் பல எண்ணங்கள்.

 

ஒரு நாள் சின்னய்யா ஆசைப்பட்டதைச் சமைத்துக் கொடுத்தது மனதுக்கு நிறைவாகத்தான் இருக்கு, அந்த நல்ல மனுசனுக்காக, மத்தவங்களின் துளைக்கும் பார்வை..., அவர்களின் விதர்ப்பமான எண்ணங்களைக் கண்டுகொள்ளாது ஒரு நாள் மட்டும் விரும்பி சாப்பிடுவதைச் செய்து கொடுத்துட்டு வந்திடலாமென நினைச்சேன்.

 

என் கைப்பக்குவத்துக்கு அடித்தளம் போட்டவர் பிருந்தாம்மா. அவர் சொல்லிக் கொடுத்த பக்குவத்தில்தான் என் சமையல் மணக்கவும் ருசிக்கவும் ஆரம்பிச்சது.

 

அதோடு முன்பு சின்னய்யா வீட்டில் என்னை வீட்டு வேலையாளாகவா நடத்தினார்கள்?

 

அதே பாசம் குறையாம சின்னய்யா இப்பவும் இருக்கிறார். ஒரு சாதாரண வேலைக்காரிக்கு இம்புட்டுக் கருணை காட்டும் அவருக்கு ஒரு நாள் சமைத்துக் கொடுத்தது எனக்குச் சந்தோசம் தான். ஆனால் காலம் முழுக்க அங்கிருந்து சமைத்துத் தருதல் என்பது பல சங்கடங்களை உருவாக்குமோ?’ என்ற கேள்வி அவருக்குள் வந்தது.

 

முன்பு தான் தனி மனுஷி, எதையும் கண்டுகொள்ளாது இருந்துவிட்டேன். ஆனால் இப்போது அப்படியல்ல...

 

சின்னய்யா அவர் வீட்டில் எல்லோருடனும் சகஜமாகப் பேசினார். அதற்கு நான்தான் காரணமெனச் சொல்லி நிரந்தரமாக என்னை வேலையாளாகப் பிடித்து வைக்கிறார்கள். சின்னய்யாவுக்குச் சமையலும், அவரை எல்லோரோடும் சேர்த்து அமர வைத்து பறிமாறுதல் மட்டும் வீட்டில் உள்ளவர்கள் எண்ணமாகக் கொண்டிருந்தால் பிரச்சனையில்லை.

 

குடும்பத்தில் ஒருவராகச் சின்னவரை இழுத்துக்கொள்ள வேண்டுமென அந்த வீட்டில் உள்ளவர்கள் நினைத்திருந்தால், அன்பாலேயே அவரை அவர்களின் பக்கம் இத்தனை வருசங்களில் கொண்டு வந்திருக்க முடியாமலா போயிருக்கும்...? ஆனால் அவ்வாறு இதுவரை நடக்கவில்லையே...!

தன்னுடன் சின்னய்யா பேசுவதையும், அவர்களைத் தான் சின்னய்யாவோடு இணைத்துப் பேச்சில் கொண்டு வரவும் போட்ட மெனக்கிடல்கள் கண்டவர்களின் கண்கள் ஆச்சர்யமாகப் பார்ப்பதையும் கங்கா உணர்ந்திருந்தார்.

 

சின்னய்யாவோடு அவர் இருக்கும் பகுதிக்கு தான் செல்லும்போது யாருமே இயல்பாக எங்களுடன் அங்கு வர முன்வரவில்லையே, அவர் போர்சனின் வாசலோடு நின்றுவிட்டார்களே!

 

அவரின் இருப்பிடத்தில் நாலு சுவற்றுக்குள் இருவரும் இருந்தது கொஞ்சம் நேரம்தான், மீதி நேரம் தோட்டத்தில் அமர்ந்துதானே அவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.

 

சின்னய்யாவுடன் நான் பேசிக் கொண்டிருப்பதை அங்குச் சென்று வரும் கடைசி நிமிடம் வரை வீட்டில் இருந்தவர்கள் ஆங்காங்கே இருந்து முதுகை துளைக்கும் பார்வை கணைகளை என்னை நோக்கி வீசுவதை என்னால் உணர முடிந்ததே...

 

பெண்கள் சூட்சுமமான பார்வையை ஓரளவு புரிந்து கொள்ளக் கூடியவர்கள்!

 

இன்னுமொரு முக்கியக் காரணம், ‘தான் அங்கிருந்து கிளம்பும் முன் சின்னய்யா பாடிய பாடல்... அதில் எதேனும் உட்பொருள் இருக்குமோ?’ என்ற ஐயப்பாடும் அவருக்குள் எழுந்தது.

மறுநிமிடமே, ‘சேச்..சே... என்ன எண்ணம் இது!? அவர் எங்கே! நான் எங்கே!? இத்தனை வசதியும், பேரும், புகழும் உள்ள மனிதர் அவர். அதோடு எங்கள் இருவரின் வயதென்ன? இப்போதுதான் இளமை ஊஞ்சலாடுகின்றதாக நினைப்போ?

 

பாவம் சின்னய்யா, இத்தனை காசும், பவுசும் இருந்தென்ன புரயோஜனம்? அவருக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைத்து புள்ள குட்டியென வாழாமலேயே தனியா நின்னுட்டாரே!

 

இந்தச் சமூகம் துணை இல்லாது தனித்து இருப்பவரை குடும்பம் என்ற கூட்டை விட்டு ஒதுக்கி வைக்கிறது. கல்யாண சந்தையில் விலை போகாதவர்களை, விலை போக இஷ்டமில்லாது துணையைக் கொள்ளாது இருப்பவர்களை, துணை இழந்தவர்களை, இச்சமூகம் பயத்துடனே பார்க்கிறது.

 

எங்கே தனது குடும்பத்தில் உள்ளவர்களை அவர்கள் தங்களின் துணையாகக் கவர்ந்து விடுவார்களோ என்ற பயம் பிடித்து ஆட்டிவைக்கிறது.

 

தங்கள் வீட்டு பிள்ளைகளை, தங்களது துணையை அவர்கள் தங்களின் இச்சைக்குத் திரை மறைவாகப் பயன்படுத்திக் கொள்வார்களோ என்ற பயம் உண்டாகிறது.

அவர்களின் முன்னால் தாங்கள் ஜோடியாக உலாவுவதால், பிள்ளை குட்டியோடு பாசமாக மகிழ்ந்திருந்தால், பொறாமை கொள்வார்கள் அந்த ஒற்றைப் புறா மனிதர்களென எண்ணி தள்ளிவைக்க நினைக்கிறார்கள்.

 

இத்தனையும் எண்ணிக்கொண்டே வந்து மூன்றாம் எண் நடைமேடையில் நிற்கவும், ரயில் அவர்களின் நடைமேடையின் முன் வந்து நிற்கவும் நேரம் சரியாக இருந்தது.

 

முதல்வகுப்பு ரயில் பெட்டி என்பதால் வரும்போது இருந்ததைப் போல மிடில் சீட் இல்லை. மிடில் சீட் இல்லாததால் நன்றாகச் சௌகர்யமாக அமர்ந்தும் பயணம் செய்யலாம், படுத்தும் பயணிக்கலாமென்று மலர்ச்சி உதித்தது.

 

ஏசி கம்பார்ட்மெண்டில் இப்பொழுதெல்லாம் போர்வைகள் வழங்கப்படுவதில்லை. போர்த்திக்கொள்ளப் போர்வை கொண்டு வர வேண்டுமெனக் கங்காவுக்குத் தெரியாததால் அதிகக் குளிர் அவரை வெடவெடக்க வைத்தது.

 

அடுத்தக் கம்பார்ட்மெண்டில் அழுதுகொண்டே இருக்கும் குழந்தையின் ஓசை வேறு அவரைப் பாடாய்ப் படுத்தியது. போய் அந்தக் குழந்தையைத் தூக்கி சமாதானப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் உருவாகி, அதைத் தனக்குள் அமுக்கி அழுத்திக் கொண்டார்.

 

நகரவாசிகளாகி அடுத்தடுத்த வீட்டோடு இணங்கி பழகாதிருக்கும் இந்தத் தலைமுறையின் இளம் தம்பதிகள், ரயிலில் யாரோ ஒருவரான தன்னைப் போன்றோரின் வலிய உதவிடும் குணத்தைச் சந்தேகம் கொண்டே பார்க்கின்றனர்.

 

குழந்தைகளை ஆசையாகத் தொட்டு தூக்கி கள்ளமில்லாது கொஞ்ச இங்குக் குழந்தைகளின் மேல் நடக்கும் அக்கிரமங்கள், வாய்ப்பு வழங்க விடாமல் செய்துவிட்டது.

 

இப்படிக் குளிரில் வாட வைத்தால் பாவம் குழந்தை எப்படித் தாங்கும்? அதனால்தான் அழுதுகொண்டே இருக்கிறது. பிள்ளையின் அம்மா முந்தானையோடு சேர்ந்து போர்த்தித் தனது கதகதப்பை அதற்குக் கொடுத்து அணைத்துக் கொண்டாலே அழுகை நிறுத்தி தூங்கி விடுமே!என நினைத்தார்.

 

அதே வேளையில் பங்களாவில் படுக்கையில் படுத்திருந்த மஹத்துக்குப் பொட்டுத் தூக்கம் கண்ணில் வரவில்லை. இத்தனை நாள் இல்லாத ஒரு மகிழ்வு அவரின் மனதை ஆக்கிரமித்ததாலோ என்னவோ, மனம் மிகவும் விழிப்புடன் சுறுசுறுப்பாக இருந்தது.

 

அவரது எண்ணங்கள் அவரின் அம்மா பிருந்தா முதன் முதலில் கங்காவை தனது வீட்டிற்கு அழைத்து வந்த நாளுக்கு அழைத்துச் சென்றது.

***

WhatsApp

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!