அன்று இரவு மானாமதுரை ஆனந்தவல்லியம்மன் கோவிலில் புஷ்ப பல்லக்கு நாதஸ்வர கச்சேரி இருக்கிறது என்று என் நண்பர் அழைத்தார். இருவரும் கிளம்பி கோவிலுக்கு முன் உள்ள வைகை ஆற்றை அடைந்தோம் நாதஸ்வர கச்சேரி ஆரம்பமாக இன்னும் சற்று நேரம் செல்லும் என்று தோன்றியதால் வைகை கரையின் சரிவில் மணலில் உட்கார்ந்தோம்.
நிர்மலமான நீல வானத்தில் ஆட்சி செலுத்தி கொண்டிருந்த பூர்ண சந்திரன் அதிலாவண்யமான அமுத கிரணங்களை அள்ளிச் சொறிந்து பூலோகத்தை ஸ்வனப்புரியாக ஆக்கிக் கொண்டிருந்தான். தவழ்ந்து வந்த தென்றல் மானாமதுரை மரிக்கொழுந்தின் நறுமணத்தை சுமந்து கொண்டு வந்து எங்களை இன்பப் போதையில் ஆழ்த்தியது.
நாங்கள் அமர்ந்திருந்ததற்கு அருகிலேயே கற்சிலை ஒன்று புதையுண்டு ஒரு பகுதி வெளியே தெரியும்படியாக கிடந்தது. இதற்கு முன் பல தடவைகளிலும் இந்தச் சிலையை கவனித்திருக்கிறேன். வெகு அற்புதமான சிற்பமாகத்தான் அது தோன்றியது.
அதை வெளி கிளப்பி முழு உருவத்தையும் பார்க்க வேண்டும் என்ற பலமான ஆசை எனக்கு அடிக்கடி ஏற்பட்டதுண்டு. ஆனால் அவகாசம் கிடைக்கவில்லை.
இவ்வளவு உயர்ந்த சிற்பம் வெளியே கிடக்க காரணம் என்ன? இதை சிருஷ்டித்த சிற்பி யார்? என்று என் சிந்தனை வட்டமிட்டது. அந்த மகான் தன் கனவை எல்லாம் என்ன ஆசையுடன் இக்கல்லில் வடித்து வைத்தானோ? அவன் சிருஷ்டியாகிய இது இப்படிப் புழுதியிலே புதைந்து மறைந்து கிடப்பது போல் அவனும் காலப் பழுதியின் அடியிலே எப்படி எங்கே மறைந்து போனானோ? எங்கே மறைந்தான்?. இந்த உலகத்தில் தோன்றிய, தோன்றும் எண்ணற்ற ஜீவ கோடி உயிரினமும் எந்த பரம ஒடுக்கத்தில் போய் ஒடுங்கி மறைந்திருக்கின்றனவோ? அங்கேதான் அந்த சிற்பியும் மறைந்திருப்பானோ?
இப்படி யோசனை செய்த நானே திடீரென்று “இச்சிலையை இப்பொழுதே புரட்டிப் பார்த்து விடுவோமா” எனறு நண்பரை கேட்டேன்.
“யாரும் இந்த சிலையை தொடக்கூடாது” என்று அழுத்தமான குரல் எங்கள் பின்பக்கமாக கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினோம் எங்கள் பக்கத்திலேயே ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
“ஏன் தொடக்கூடாது?” என்று கேட்டோம். பதில் சொல்லாமல் எங்கள் பக்கத்தில் உட்கார்ந்தார். அவருடைய தீட்சண்யமான கண்கள் தொலைவில் எதையோ ஊடுருவிக் கொண்டு எங்கு சூனியம் நிலவுகின்றதோ அங்கே பதிந்து இருந்தன.
“இந்தக் கோவிலில் திருப்பணி நடந்தது உங்களுக்கு தெரியுமா?” என்று திடீரென்று கேட்டார்.
என்னவோ கேள்விக்கு பதில் சொல்லத் தோன்றவில்லை. ஆனால் அவர் எங்கள் பதிலை எதிர்பாராமலேயே மள மளவென்று ஆரம்பித்தார். அனுப்பு வரிகள் ஓடிக்கொண்டிருந்த அவருடைய கலையான முகமும் அக்னி பந்தங்கள் போன்ற கண்களும் எங்களை ஆகார்ஷித்தன. அவர் பேசினார், எங்களால் பேச முடியவில்லை. கதையாகச் சொன்னார். அசையாமல் இருந்து கேட்டோம்.
இங்கு கோவில் கொண்டுள்ள அம்பாள் ஆனந்தவல்லியின் மகிமையை கேள்வியுற்ற மதுரை மன்னன் மேலும் கோவிலை விஸ்தரிக்க நினைத்து திருப்பணிக்கு வேண்டிய செல்வத்தை தானமாக வழங்கினான். ஏராளமான திறமையுள்ள சிற்பிகள் திருப்பணிகளில் ஈடுபட்டிருந்தார்கள். ஆனால் அம்பாளின் சிலையை சற்று பெரியதாக செய்வதற்கு மதுரை கோவிலில் சிற்பங்களை திறம்படச் செய்து கொடுத்திருந்த பூபதி என்ற ஒரு சிற்பியை மன்னவனே தேர்ந்தெடுத்து அனுப்பியிருந்தான்.
பூபதிக்கு தனி குடிசை அவன் கற்பனை சிதறி விடாதபடடி, சிந்தனை சிதறி விடாதபடி தனியே மேடை போட்டிருந்தான். அந்திப்பொழுது ஆகும் வரை தொடர்ந்து கல், கல் என்ற ஓசை கேட்ட வண்ணமிருக்கும். தெய்வ சாந்நித்யம் பெறத்தக்க சிலைகளை சிருஷ்டிப்பதனால் ரொம்பவும் பக்தி சிறத்தையுடன் தெய்வப் பணியில் முனைந்திருந்தான். ஒவ்வொரு நாளும் வைகையில் நீராடி அம்பாள் சன்னதியில் வணங்கி விட்டே தன் வேலையை தொடங்குவான். வழக்கம்போல் அன்று பூபதி வைகையில் நீராடிக் கொண்டிருந்தான். அதே துறைக்கு பெண் ஒருத்தி இடையில் ஒரு மண் குடத்துடன் வந்தாள். வந்தவள் எதையும் யாரையும் கவனிக்கவில்லை. குடத்தை சுத்தமாக விளக்கினாள். அதில் நீரை நிரப்பினாள். அவிழ்ந்து தொங்கிய அளக பாரத்தை அலட்சியமாக அள்ளிச் சொருகினாள். குடத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டாள்.
சற்று நேரத்தில் நடந்து முடிந்து விட்ட இச்சிறு சம்பவம் பூபதியின் உள்ளத்தில் மின்னல் அலைவது போல் ஒருவித உணர்ச்சியை உண்டாக்கியது. குடத்தில் தண்ணீரை அள்ளியபோது தன் உள்ளத்தையும் அக்கள்ளி அள்ளிக் கொண்டு போய் விட்டாள் என்பதை உணர்ந்தான்.
அங்கு வந்து சென்ற பெண், கோவில் காரியஸ்தர் அம்பலவாணர் மகள் திலகவதி என்பதை பூபதி அன்றைய தினமே விசாரித்துத் தெரிந்து கொண்டான்.
மறுநாள் அதே துறைக்கு அதே பெண் அதே நேரத்தில் வந்தாள். முதல் நாள் போலவே எல்லாம் நடந்தது. அந்தக் கர்வம் பிடித்தவள் தன்னைக் கொஞ்சமும் சட்டை செய்யவில்லையே என்று பூபதியின் உள்ளம் வெம்பியது. பூபதியின் கவனம் வேறு பக்கம் திரும்பி இருந்த சமயம் “ஐயோ!” என்ற அலறும் குரல் கேட்டுத் திரும்பினான். அவள் கையில் இருந்த குடம் எப்படிக் கையை விட்டு நழுவியதோ நிச்சயமாகத் தெரியவில்லை. வெள்ளத்தால் இழுக்கப்பட்டு குடம் போய்க் கொண்டிருந்தது. ஆனாலும் அந்தப் பெண் முகத்தில் குறும்புத்தனத்தின் அறிகுறி தென்பட்டதே தவிர பதட்டமடைந்தவளாகத் தோன்றவில்லை. பூபதி இதைக் கவனித்தானோ இல்லையோ! மறுகணம் வெள்ளத்தில் பாய்ந்து குடத்தைக் கையில் எடுத்தான். ஆனால் வெள்ளத்தின் வேகம் அவனை புரட்டி மூழ்கடித்தது. இதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த திலகவதியின் முகத்தில் இருண்ட சாயல் படர்ந்து, அவள் பயத்தை வெளிப்படுத்தியது. இதற்குள் பூபதி வெள்ளத்தைச் சமாளித்து நீந்திக் கரை சேர்ந்தான்.
நன்றியறிதலும்,மகிழ்ச்சியும் பொங்க திலகவதி பூபதியிடமிருந்து குடத்தை வாங்கினாள்.
திலகவதி “தங்களுக்கு ரொம்பவும் சிரமம் கொடுத்து விட்டேன்.”
பூபதி “அப்படி ஒன்றும் அதிகச் சிரமம் இல்லையே!”
திலகவதி “வெள்ளத்தில் நீங்கள் மூழ்கியவுடன் பயந்தே போனேன்.”
பூபதி “என்னிடத்தில் தங்களுக்கு அவ்வளவு கருணை ஏற்பட்டு விட்டதா!”
திலகவதி “நான் உங்களுக்காக ஒன்றும் பயப்படவில்லை. என் குடம் போய்விடுமே என்று தான் பயந்தேன்.”
பூபதி “கையில் அகப்பட்டுக் கொண்டதை சாமானியமாய் நழுவ விடுவேனா?”
திலகவதி “தங்கள் உதவியை என்றும் மறக்க மாட்டேன். மறக்க முடியாது. வருகிறேன்.”
பூபதி “மீண்டும் வருவீர்களா?”
திலகவதி “இல்லை, போகிறேன்.”
மறுநாளும் இருவரும் அதே இடத்தில் சந்தித்தார்கள். பூபதிக்கு எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. திலகவதியே பேசத் தொடங்கினாள்
திலகவதி “நேற்று எனக்கு உதவி செய்தது இன்னார் என்று என் தந்தையிடம் சொல்லத் தெரியாமல் விழித்தேன். இன்று தெரிந்து கொள்ளலாமா?”
பூபதி “நேற்று என்னை முழுவதும் அறிந்து கொண்டிருப்பீர்கள் என்றல்லவா நினைத்தேன்? நான் இங்கு கோவில் திருப்பணி செய்யும் சிற்பிகளில் ஒருவன்.”
திலகவதி “ஓஹோ! கல்லையே உடைத்து வலுப்பெற்ற கைகளுக்கு வெள்ளத்தில் நீந்துவது கஷ்டம் இல்லை தானே!”
பூபதி “அம்பாளின் கிருபை மட்டும் இருந்தால், இங்கு கோவில் கொண்டுள்ள அம்பாளை குறிப்பிடுகிறேன். எந்த வெள்ளத்தையும் நீந்திக் கரை சேர என்னால் இயலும்.”
திலகவதி “வேகவதியாகிய வைகையிலே நான் இறங்கப் பயப்படுவதுண்டு. ஆனால் நீங்கள் இருக்கும் பொழுது இந்தத் துறையில் பயம் இல்லாமல் இறங்கலாம் போலிருக்கிறது.”
பூபதி “தைரியமா இறங்கலாம் கொஞ்சமும் சந்தேகம் வேண்டாம்.”
திலகவதி “தாங்கள் சிற்பி என்றதும் ஞாபகம் வருகிறது இங்கு மதுரையிலிருந்து வந்துள்ள சிற்பி யாரோ ஒருவர், அழகிய சிற்பங்கள் அமைப்பதில் மகாவல்லவராமே?”
பூபதி “உலகம் அப்படி நினைகிறதே தவிர,அவருக்கு தான் இதுவரை செய்த சிற்பம் எதுவும் அத்தனை அழகாகவே தோன்றவில்லையாம். சாமுத்திரிகா லட்சணத்தின் படி அமைந்த உண்மையான அழகு எப்படி என்பதை இப்பொழுது தான் உணர்கிறாராம். அழகுத் தெய்வத்தின் ஸ்வரூபத்தை இன்று தான் நேருக்கு நேர் கண்கூடாகக் காண்கிறாராம்.”
திலகவதி “ஏதோ பிரமாதமாகச் சொன்னார்களே என்று தான் கேட்டேன். யாரையும் ஒரு தடவை பார்த்தால் அப்படியே தத்ரூபமாய்ச் சிலையாகச் செய்யக் கூடியவர் என்று சொன்னார்களே.”
பூபதி “ஆம் அது உண்மைதான் உதாரணமாக உங்களை ஒரு தடவை பார்த்து விட்டாரானால் தன் வாழ்க்கையில் என்றும் மறந்து விடாமல சிலையிலே சிருஷ்டித்து விடக்கூடியவர் தான். ஆனால் கல்லிலே சிலை வடிப்பாரே தவிர தங்க விக்ரகம் செய்து பழக்கமில்லை.”
திலகவதி “தங்க விக்ரகம் எதற்கு?”
பூபதி “கவனித்துப் பார்த்தால் தங்க விக்ரகம் கூட அத்தனை உயர்வு இல்லை தான்.”
திலகவதி “ஆஹா…! நேரம் போனதே தெரியவில்லை வருகிறேன். இல்லை போகிறேன்.”
பூபதிக்கும் திலகவதிக்கும் இப்படியாக ஏற்பட்ட பரிச்சயம் காதலாக பரிணமித்து விட பல நாட்கள் செல்லவில்லை. இருவருக்கும் இவ்வுலகமே திடீரென்று இன்பமயமாக மாறியது. முன்பு சாதாரணமாக தோன்றிய மலர்களில் எல்லாம் புது மணமும், புது வனப்பும் எங்கிருந்தோ வந்து விட்டன. புத்தம் புது மலர்களை மாலையாக தொடுத்து கோவிலுக்கு அனுப்புவதில் திருப்தி அடைந்து வந்த திலகவதி, அம்மலர்களை எல்லாம் தன் கூந்தலில் சூட்டிக் கொள்ள ஆரம்பித்தாள். பூபதி தனக்களிக்கப்பட்ட வேலையை அடியோடு மறந்து திலகவதியுடன் இன்பகரமாய்ப் பொழுது போக்கிக் கொண்டிருந்தான்.
இதற்கிடையில் மதுரையிலிருந்து மன்னனே இங்கு விஜயம் செய்து, கோவில் திருப்பணி எம்மட்டில்லிருக்கிறது என்பதை நேரில் கவனித்தான். பூபதிக்கு இடப்பட்டிருந்த வேலையைத் தவிர மற்ற வேலைகள் யாவும் பூர்த்தி அடைந்திருந்தன. பூபதியின் பொறுப்பற்ற நடத்தை மன்னனுக்கு அளவற்ற கோபத்தை உண்டாக்கியது. ஆனாலும் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை பூபதிக்கு அளித்தான். கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்து விட்டபடியால் இன்னும் பதினைந்து தினத்திற்குள் அம்பாளின் சிலையை பூர்த்தி செய்து தரவேண்டும் என்றும் மறுபடியும் ராஜாங்கக் கட்டளையை மீறினால் பூபதி தன் எஞ்சிய வாழ்நாட்களைச் சிறையிலேயே கழிக்க நேரிடும் என்றும் கடுமையாய் எச்சரித்து அரசன் மதுரை திரும்பினான்.
பூபதி தன் சிற்பப் பணியை மீண்டும் தொடங்கினான். அன்று ஆரம்பிக்கும் முன்பு அம்பாள் சன்னதியில் போய் தான் ஆரம்பித்த வேலையை முடிக்கத் தகுந்த திட சித்தத்தை அளிக்க வேண்டி சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினான். எழுந்து மூலஸ்தானத்தை நோக்கினான். ‘இது என்ன ஆச்சரியம்! யார் அங்கு நிற்கிறது! ஆம் திலகவதியல்லவா இங்கு நிற்கிறாள்? இவள் எதற்காக இப்பொழுது இங்கே வந்தாள்?’ பூபதி கண்ணை கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தான். இல்லை, இல்லை எப்பொழுதும் உள்ள அம்பாளின் சிறிய விக்கிரகமே தூண்டாமணி விளக்கின் ஒளியில் ஸ்வட்சமாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. தன் மனப் பிரமையே இப்படி உருப்பெற்று இருக்கிறது என்று தெரிந்து மீண்டும் வணங்கி விட்டுப் போய் தன் வேலையைத் தொடங்கினான்.
பூபதியின் கவனத்தை இப்பொழுது வேறு எதுவும் கவரவில்லை. இரவு பகல் இடைவிடாமல் அவன் சிற்றுளி வேலை செய்தது. திலகவதியைக் கூட மறந்து விட்டான் என்று தோன்றியது. பூபதிக்கு இந்த மட்டில் புத்தி திரும்பியதைப் பற்றி இதர சிற்பிகளும் பேசி மகிழ்ச்சி அடைந்தார்கள்.
திலகவதியும் பூபதியை அணுகவில்லை. தான் போனால் பூபதியின் வேலை தடைபட்டு விடும் என்று அறிந்திருந்தாள். தவணை கொடுக்கப்பட்டிருந்த பதினைந்து தினங்களையும் பல்லைக் கடித்துக் கொண்டு போக்கினாள். பூபதிக்கு கொடுக்கப்பட்டிருந்த தவணை நாட்கள் எப்பொழுது முடியும் என்று திலகவதி எதிர்பார்த்துக் கொண்டிருந்ததற்கு வேறு காரணமும் இருந்தது. திலகவதியின் தந்தையாகிய அம்பலவாணர், தன் மகளுக்கும் பூபதிக்கும் ஏற்பட்டுள்ள பரிசுத்தமான காதலைத் தெரிந்துகொண்டு, பூபதிக்குத் தன் மகளை மனம் செய்து கொடுக்கத் தன் சம்மதத்தைத் தெரிவித்திருந்தார். ஆகையால் பூபதி இச்சிலையை முடித்துக் கொடுத்துவிட்டால் தாங்கள் நடத்தவிருக்கும் இன்ப வாழ்க்கையை தடை படுத்தக் கூடியது வேறெதுவுமில்லையாதலால், குறிப்பிட்ட நாள் முடிந்ததும், பூபதி சிலையைப் பூர்த்தி செய்து விட்டானா என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலுடன் திலகவதி அவன் குடிசைக்குள் விரைந்தாள்.
பூபதியின் குடிசையில் ஒரு சிலை பூர்த்தி பெற்று பூரணப் பொலிவுடன் நின்றது. சந்தோஷ மிகுதியுடன் சிலையை கூர்ந்து கவனித்த திலகவதி அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டாள். ஆச்சரியத்தினால் அல்ல,அளவு கடந்த பயத்தினால்! பயப்படுவதற்கு என்ன இருந்தது? வெறும் கற்சிலை தானே நின்றது. ஆம்! சிலை தான் யாருடைய சிலை? சொல், மனம், கடந்த சுயம் பிரகாசப் பொருளாய் ஆதி அந்த மற்றவனாய், அண்டபகிரண்டங்களையும், அதில் அடங்கிய எண்ணற்ற ஜீவ பேதங்களையும் தன் வயிற்றிலே வைத்துக் காக்கும் பராசக்தியாய் விளங்கும் ஜகன்மாதாவாகிய அம்பாளுடைய சிலைக்குப் பதிலாக அற்ப ஆயுள் படைத்த ஒரு மானிடப் பெண்ணின் சிலை நின்று கொண்டிருந்தது. ஆம்! திலகவதியின் உருவத்தையே இவ்வளவு அரும்பாடு பட்டு கல்லிலே வடித்திருந்தான் பூபதி. இது எத்தகைய பயங்கரப் பலனை அளிக்கப்போகிறதோ என்று தான் திலகவதி பயந்து ஸ்தம்பித்து நின்றாள்.
பூபதி “திலகவதி! என்ன மௌனமாய் நிற்கின்றாயே! ஒரு வேடிக்கையைக் கேள், நீ என் குடிசையில் நுழைந்ததை நான் கவனிக்கவில்லை ஆதலால் நீ இங்கு நிற்பதைப் பார்த்துவிட்டு என் சிலை தான் உயிர் பெற்று விட்டதோ என்று நினைத்தேன்.”
திலகவதி “உங்கள் விளையாட்டு ஒருபுறம் இருக்கட்டும். இது என்ன அபச்சாரம்? தெய்வத்திற்கு வேண்டிய உங்கள் கலையை இப்படி துஷ்பிரயோகம் செய்திருக்கிறீர்களே!”
பூபதி “திலகவதி! இங்கு கோவில் கொண்டுள்ள தெய்வத்திற்குத் தான் சிலை செய்ய ஆரம்பித்தேன். ஆனால் என் கைகள் என் உள்ளத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மற்றொரு தெய்வத்தின் உருவத்தை அமைத்து விட்டன. திலகவதி! இன்னும் கேள். உன்னை படைத்த பிரம்மன், தங்க விக்ரகம் ஒன்றை கடைந்தெடுத்து, அதில் அசாதாரண அழகுடன் உயிரையும், உணர்வையும் ஊற்றி இருப்பான். தன் படைப்பிலே தலைசிறந்த ஒரு பெண் என்று உன்னை பார்த்து பார்த்து பெருமை அடைந்து கொண்டிருப்பான். ஆனாலும் நன்முகம் படைத்த திலகவதி காலப்போக்கில் தன் யௌவனம் குன்றி அழகை இழுந்துவிடக் கூடியவள்தான். இதோ பார், நான் படைத்துள்ள திலகவதி, கல்லிலே உருவானவள்தான், ஆனாலும் இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு இதே பூரணப் பொலிவுடன் யௌவனமாய், பனி படர்ந்த ஹிமாலயம் இவ்வுலகில் தலை நிமிர்ந்து நிற்கும் வரையிலும் என் காதற்கிளியும் முகம் மலர்ந்து நின்று கொண்டிருப்பாள்.”
திலகவதி “ராஜாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள உங்கள் கடமையைச் செய்ய தவறியதற்கு எத்தகைய தண்டனை கிடைக்கப் போகிறதோ என்பதை மறந்து ஏதேதோ பேசுகிறீர்கள்.”
பூபதி “திலகவதி! இனி எந்தத் தண்டனையையும் நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன். நான் எடுக்கவிருக்கும் எத்தனை எத்தனையோ ஜென்மங்களிலும் ஈடு இணையற்ற இன்பமூட்டக்கூடிய இவ்வற்றாத அமுத கலசத்தை, யாராலும் விலை மதிக்க முடியாத இந்த மாணிக்க குவியலை, இம்மாநிதியை தேடி வைத்து விட்ட நான் தண்டனையை ஏற்றுக் கொள்ள தயங்குவேனா!”
திலகவதி “நீங்கள் தண்டனையை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் அதற்கு முன் ஒரு வரம் எனக்கு கொடுங்கள். அழியாத அமர சிற்பத்தை நிர்மாணித்த அதே கைகளினால் அன்றொரு நாள் என் குடத்தை வெள்ளத்திலிருந்து மீட்ட அதே திருக்கைகளினால் இவ்வைகையாற்று வெள்ளத்தில் ஆழமான பகுதியில் என்னை அமிழ்து விட்டுப் போங்கள். இந்த வரம் மட்டும் மறக்காமல் கொடுக்க வேண்டும். கெஞ்சி கேட்கிறேன்.”
இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே திலகவதியின் கரிய பெரிய கண்கள் கலங்கி, நீர் துளிகள் வழிந்தோடின.
பூபதி ஏதோ சமாதானம் சொல்ல வாய் எடுத்தான். அதே சமயத்தில் தன் குடிசைக்குள் திபு திபு என்று ஆட்கள் நுழைவதைப் பார்த்து பேச்சை நிறுத்தினான்.
அவர்கள் வேறு யாருமில்லை, அரசனால் அனுப்பப்பட்டவர்களே. அரசன் கட்டளைப்படி அம்பாளின் விக்ரகம் பூர்த்தி அடையாமல் இருந்தால் பூபதியைக் கைது செய்து மதுரைக்குக் கொண்டு போனார்கள். ஏற்கனவே அரசன் எச்சரித்திருந்தபடியே ஆயுள் தண்டனை அடைந்த பூபதி சிறையில் தள்ளப்பட்டான்.
திலகவதியின் சிலையை கோவிலுக்குள் வைத்திருப்பது தெய்வ நிந்தனை என்று கருதி வெளியே வீசிவிட்டார்கள்.
தமிழ்நாட்டின் தலைசிறந்த சிற்பி ஒருவனை சிறையில் அடைக்க நேர்ந்ததை குறித்துச் சிறந்த கலா ரசிகனாகிய மன்னன் மன அமைதி இழந்து தவித்தான். அதன் காரணமாக அரசனின் பிறந்த தின விழாவையொட்டி விடுதலை பெற்ற கைதிகளில் பூபதியிம் ஒருவனாயிருந்தான்.
சிறையிலிருந்து விடுதலை பெற்ற பூபதி, வில்லிலிருந்து கிளம்பிய அம்பை போல் விரைந்து இங்கு வந்தான். ஆனால் அவனுக்குப் பேரிடி போன்ற செய்தி காத்திருந்தது. பூபதி ஆயுள் தண்டனை பெற்றதால் இனி திரும்ப மாட்டான் என்று மனமுடைந்த திலகவதி வைகை ஆற்று வெள்ளத்துடன் ஒரு நாள் போய்விட்டாள் என்ற செய்தியைத் தான் கேட்க முடிந்தது.
இதுவரை கதை கேட்டு வந்த நான் என் மௌனத்தைக் கலைத்து, “அடடா அவர்கள் வாழ்வு இப்படியா பாழ்பட்டுப் போகவேண்டும்?“ என்று அனுதாபமாய்க் கேட்டேன்.
கதை சொன்னவர் மீண்டும் “எந்த பைத்தியக்காரன் சொன்னவன் அவர்கள் வாழ்க்கை பாழ்பட்டது என்று? ஆம் இந்த பைத்தியக்கார உலகம் அப்படி நினைக்கிறது. இன்று பௌர்ணமியல்லவா? இங்கே இருந்து கவனித்துக் கொண்டிரு. இந்தச் சந்திரன் உச்சியை அடைந்ததும் பூபதி இங்கு வந்து இச்சிலையைத் தொடுவான். உடனே துயில் நீங்கி எழுவது போல் திலகவதியும் எழுந்து இருவரும் கைகோர்த்த வண்ணமாய்க் காற்றிலே ஏறி விண்ணையும் தாண்டி அங்கு பட்டப் பகல் போல நிலவு பொழியும் வட்ட மதியில் போய் அமர்ந்து கொள்வார்கள். அச்சந்திரனையே தங்கள் வெள்ளிப் படகாகக் கொண்டு வானக் கடலில் மிதந்து விளையாடுவார்கள்” என்று சொல்லி நிறுத்தினார்.
இத்தகைய அற்புத சிற்பத்தை இப்பொழுதே பார்த்து விடுகிறேன் என்று எழுந்தேன். முதுகில் “பளார்” என்று ஒரு அடி விழுந்தது திடுக்கிட்டுக் கண் விழித்தேன்.
“நாதஸ்வரக் கச்சேரி கேட்க வந்து நாம் இருவரும் நன்றாக தூங்கி விட்டோமே” என்று என் நண்பன் என்னை எழுப்பினார்.
சொப்பனவஸ்தையிலிருந்த என் உணர்வு பழைய நிலையை அடைந்தது.
கோவில் வாசல் பக்கம் பார்த்தேன். புஷ்பப் பல்லலுக்கு வீதியை வலம் வந்து முடியும் கட்டத்திலிருந்தது.
audio link. புதைந்த சிற்பம் - ஆடியோ வடிவில்
குடகு மலை மீது “புலிமலை” என்று பொருள்படும் பாலிபெட்டா என்ற இடத்தில் உள்ள காபித் தோட்டத்தில் சில நாட்கள் நான் தங்கி இருந்தேன். அப்பொழுதுதான் அந்தப் புலி மலையில் ஒரு புலியிடம் போய் அகப்பட்டுக் கொண்டேன். எப்படியோ மீண்டு வந்தேன்.
ஆனால் அப்படி நான் என்னை மீட்டுக் கொண்டு வந்ததில் அன்றும், இன்றும், என்றும் நான் மகிழ்ச்சியடைந்ததே இல்லை. அந்தச் சம்பவத்தை நினைக்கும் பொழுதெல்லாம் என் உள்ளமானது அளவிட முடியாத சோகத்தையும், சொல்லில் அடங்காத துயரத்தையுமே அடைகிறது. ஆனாலும் அந்தச் சோகத்திற்கும், வேதனைக்கும், இடையிலும் மனதில் எங்கேயோ ஒரு மூலையில் ஒருவகை இன்பமும் எழத்தான் செய்கிறது. அந்த இன்ப வேதனையை எதிர்பார்த்து தான் இப்படி இதை எல்லோரிடமும் சொல்லிவிடத் துணிந்து விட்டேன்.
சென்னையில் தவிக்கின்ற வெயிலிலே கிடந்த எனக்கு, அந்த மலையில் எங்கும் நிழல் பரப்பி, நீண்டு வளர்ந்து நிரம்பியிருந்த மரங்களுக்கிடையில் வாழ்வது ஒரு குதூகலத்தை அளித்தது. கால் போன இடங்களுக்கு எல்லாம் போவேன். பயங்கரமான பாறை விளிம்புகளிலே நின்று பசுமை போர்த்த அந்தக் குன்றுகளின் அழகை அள்ளிப் பருகுவேன். நேரம் போவது தெரியாமல் நினைவிழந்து நிற்பேன்.
ஒரு நாள் நான் தங்கி இருந்த பங்களாவை விட்டுக் கிளம்பி வெளியே எங்கெல்லாமோ போனேன். போய்க்கொண்டே இருந்தேன். கடைசியில் ஒரு அருவி கரையில் வந்து நின்றேன். அந்த அருவியைப் பிடித்துக் கொண்டு இன்னும் மேலே போகப் போக, காடு அடர்ந்து இருண்டு கொண்டே போயிற்று. அந்த இருளில் தான் என்ன பயங்கரம், எவ்வளவு இனிமை.
அங்கே சுற்றிலும் நின்ற சரக்கொன்றை முதலிய காட்டு மரங்கள், மலர்களைக் கொத்துக் கொத்தாகக் கோர்த்து வைத்துக் கொண்டு நின்றன. ஏதோ மணவிழா நடக்கவிருக்கும் மனப்பந்தலைப் போல் காட்சி அளித்தது அந்த இடம். மணப்பெண் வரவேண்டியது தான் பாக்கி.
திடீரென்று பின்புறமாக புதருக்குள்ளே சரசரவென்று சப்தம் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன் ஒன்றையும் காணோம் என்றாலும் நான் வைத்திருந்த துப்பாக்கியை இறுகப் பற்றியது கை.
அப்பொழுதுதான் எனக்கு ஞாபகம் வந்தது பங்களா காவற்காரன் ‘அந்த அருவிக்கரைப் பக்கத்தில் ஒரு புலி திரிகிறது அங்கு போக வேண்டாம்’ என்று எச்சரித்து இருந்தான்.
சப்தம் வந்த புதரை நோக்கி துப்பாக்கியைக் குறி வைத்தேன். துப்பாக்கியின் குதிரை மீதும் விரலை வைத்து அழுத்தப் போனேன். அப்பொழுதுதான் எதிர்பாராத சம்பவம் நடந்து விட்டது. அந்தப் புதரை விலக்கிக் கொண்டு பயங்கரமான புலி எதுவும் அல்ல, அழகே உருவான இளம் பெண் ஒருத்தி வெளிப்பட்டாள்.
வந்தவள் வாயை மூடிக் கொண்டா வந்தாள்! கடகடவென்று சிரித்துக் கொண்டே வந்தாள். “ஏன்? என்னை புலி என்று நினைத்து விட்டாயா? என்னையே சுடு, தைரியமாய்ச்சுடு” என்ற மாதிரி ஏதோ ஒரு பாஷையில் பேசிக் கொண்டே வந்தாள்.
நான் அயர்ந்து போனேன். பக்கத்தில் இருந்த பாறை ஒன்றின் மேல் போய் உட்கார்ந்தேன். நான் எதிர்பார்க்கவே இல்லை, அந்தப் பெண்ணும் என் அருகில், என் காலடியில் வெகு உரிமையுடனும், நீண்ட நாள் பழகியவள் போலவும், வந்து உட்கார்ந்து கொண்டாள். அப்படி அவள் என் அருகிலே உட்கார்ந்ததை நான் ஆட்சேபிக்கவில்லை. காரணம், அவளை நான் வெறுக்கவில்லை. உண்மையில் அவள் அருகில் இருப்பதை என் மனம் விரும்பிற்று என்று தான் சொல்ல வேண்டும்.
“நீ எங்கிருந்து வந்தாய்” என்றேன் சிரித்தாள். “உன் வீடு எங்கே?” என்றேன் அதற்கும் சிரித்தாள். “உன் பெயர் என்ன?” என்றேன், ஏதோ சொல்லிவிட்டு சிரித்தாள். அவள் சொன்னது மோகினி என்ற மாதிரி காதில் பட்டது.
சிரிப்பதை நிறுத்திவிட்டு அவள் என்னையே கூர்ந்து கவனித்தாள். நானும் அவளையே பார்த்தேன். “மோகினி” என்று அவளுக்கு நான் இட்ட பெயர் மிக மிகப் பொருத்தமாகத் தோன்றியது.
வளர்ந்து கிடந்த குழல் கற்றையை அசிரத்தையயுடனும், அலட்சியமாகவும் அள்ளிச் செருகியிருந்தாள். அந்த முடிச்சிக்குத் தப்பிய முன் மயிர்கள் சில, அவள் கண்களிலே கொஞ்சி விளையாடின. கபடமற்ற உள்ளம் என்பதை எடுத்துக்காட்டும் களங்கமற்ற முகம். அவள் கண்களிலே தான் என்ன மருட்சி! பருவம் அவள் அவயங்கள் ஒவ்வொன்றிலும் தன் முத்திரையைப் பதித்திருந்தது. அவள் அணிந்திருந்த அந்தச் சாதாரண ஆடைக்குள்ளே அடைபடாமல் அவள் அழகும், இளமையின் பூரிப்பும், பொங்கி வழிந்து கொண்டிருந்தன. பொதுவாக அந்த இடத்திலே ஒரு வனதேவதையோ, மனமோகினியோ போல் விளங்கினாள் அவள்.
இப்படி இந்தக் காட்டிலே வளரும் பெண்ணுக்கு எப்படித்தான் இவ்வளவு அழகு அமைந்தது என்று எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. சற்று முன்பெல்லாம் மரகத போர்வை போத்திய அந்த மலையின் அழகைப் பார்த்துப் பார்த்து ரசித்தேன். அருவியை ரசித்தேன், அருகில் நின்ற மலர் நிறைந்த மரங்களைக் கண்டு ரசித்தேன். அவைகள் எல்லாம் அப்பொழுது என் கண்களுக்கு கவர்ச்சியற்ற, ஜடப்பொருளாகவே தென்பட்டன, அந்தப் பொருட்கள் யாவும் தங்கள் அழகை எல்லாம் திரட்டி இந்த மோகினியிடம் ஒப்படைத்து விட்டனவோ!
எங்கள் இருவருக்கும் இடையிலே பாஷை இல்லை. அவள் ஏதேதோ பேசினாள். என் காதுகள் அவள் பேசியதைக் கேட்கவில்லை. ஆனால், என் கண்கள் அவளை விட்டு அகல மறுத்துவிட்டன.
எத்தனை நேரம் இப்படி இருந்தோமோ தெரியாது. எங்கும் இருள் சூழ்ந்து விட்டது. “இங்கு புலி சிறுத்தை முதலிய துஷ்ட மிருகங்கள் வரக்கூடும். இங்கிருந்து போய் விடுவோம்” என்ற மாதிரி ஏதோ சொன்னாள். அந்த இடத்தை விட்டு கிளம்பினேன். அவளும் என்னைப் பின்தொடர்ந்தாள். சற்று தூரம் சென்ற பிறகு அங்கு சில குடிசைகள் தென்பட்டன. அங்கேதான் அவள் வீடு இருப்பதாக கூறினாள். “நான் அங்கே வரலாமா” என்று கேட்டேன் “கூடாது” என்று மறுத்துவிட்டாள். பின்னும் என்னைத் தொடர்ந்து பங்களா அருகில் என்னைக் கொண்டு வந்து விட்டுவிட்டு இருளில் ஓடி மறைந்து விட்டாள்.
பங்களாவிற்குள் நான் போனதும் அவள் காட்டிய அந்தக் குடிசையில் வாழுபவர்கள் தேன் குறும்பர்கள் என்ற மலை ஜாதியர் என்பதை முதலில் தெரிந்து கொண்டேன். என் மனது அன்று நடந்த சம்பவங்களை அசைபோட ஆரம்பித்தது.
எனக்கே ஆச்சர்யம்! மிகவும் வெட்கமாகவும் கூட இருந்தது. என்னுடைய மனம் எப்படி இந்தக் காட்டுமிராண்டிப் பெண்ணிடம் இவ்வளவு சீக்கிரம் ஓடிவிட்டது என்பது எனக்கே புரியவில்லை அப்படி அவளிடம் என்ன அழகைக் கண்டேன்! எத்தகைய அழகுதான் அவளிடம் இல்லை? உலகத்தின் நாகரிகத்தின் உச்சியிலே நிற்கும் அழகியிடம் கூட, இவளிடமுள்ள இத்தகைய கவர்ச்சி இருப்பதாக எனக்கு படவில்லையே!
“சார் தபால்” என்று சமையல்காரப் பையன் ஒரு கடிதத்தைக் கொடுத்தான். ஆகாயத்தில் பறந்த என் சிந்தனைச் சுடர் சடக்கென கீழே இறங்கியது.
என் மனைவி கடிதம் எழுதியிருந்தாள் “அங்கே மலை மீது குளிர் அதிகமாக இருக்கும் ஸ்வெட்டர் போடாமல் வெளியே போகாதீர்கள். உடம்பை ஜாக்கிரதையாக கவனித்துக் கொள்ளுங்கள். இன்னும் ஒரு விஷயம் தன்னை மறந்து எங்கேயாவது தனிமையில் நெடுந்தூரம் போய் விடாதீர்கள். நீங்கள் இருக்கும் இடத்திற்கே புலிமலை என்று பெயர் இருக்கிறது. புலி முதலிய துஷ்டமிருகங்கள் இருக்கப் போகின்றன ஜாக்கிரதை” என்று எழுதி இருந்தாள், எச்சரித்தாள்.
புலியிடம் அகப்பட்டுக் கொள்வேனோ என்று என் மனைவி பயந்து எழுதியிருக்கிறாள். ஆனால் நான் இப்படி ஒரு பெண் புலியின் பிடியில் சிக்கிக் கொண்டேன் என்பதை என் பேதை மனைவி அறிவாளா! என் மோகினியை பெண் புலி என்றா சொன்னேன்? இல்லை அவள் பெண் மான். அதுவும் இல்லை அவள் மயில். இது என்ன அவளை மிருகங்களோடும், பறவைகளோடும் ஒப்பிடுகிறேன்! அவள், அவள்தான், என் மோகினிக்குச் சமம் மோகினியேதான்.
சமையல்காரப் பையன் யாரிடமோ என்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான். என் காதிலும் அது விழுந்தது.
அம்மாவிடமிருந்து கடிதம் வந்திருக்கிறாப் போலிருக்கிறது. அதிலிருந்து ஐயா, அம்மா ஞாபகமாகவே உட்கார்ந்திருக்கிறார். இன்று சரியாகவே சாப்பிடவில்லை என்றான்.
அவன் சொன்னது என்னவோ உண்மைதான். ஆனால் அவன், நான் எந்த அம்மாள் ஞாபகத்தில் இருக்கிறேன் என்று என்ன கண்டான்.
படுக்கையில் படுத்தேன். என் கண் இமைகள் மூடிய உடனே மோகினி என் முன் வந்து களி நடனம் புரிந்தாள்.
இரவெல்லாம் என்னென்னவோ கனவுகள் காட்டுக்குள்ளே எங்கேயோ போகிறேன். புலி ஒன்று பாய்ந்து வந்தது. துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினேன். கீழே விழுந்த புலியை அருகில் போய்ப் பார்த்தேன் அது புலி அல்ல, என் மோகினி. பதைபதைத்துத் தூக்கப் போனேன். கலகலவென்று சிரித்துக்கொண்டே எழுந்தாள். நான் ஆச்சரியத்துடன் நின்று கொண்டிருக்கும் பொழுதே அவளே என் கையைப் பற்றினாள் அங்கிருந்து எங்கெல்லாமோ போனோம்.
மனம் கமழும் நறுமலர்களைச் சுமந்து நின்ற இன்பத் தருக்களிடையே அமைந்த சுந்தரத் தடாகத்திலே தங்கத் தோணியிலே ஏறி விளையாடினோம். வட்ட மதியிலே அமர்ந்து வானக்கடலிலே வளைய வளைய வந்தோம், காலை விடியும் வரை கைகோர்த்துச் சுற்றி வந்தோம்.
காலைக் காப்பியுடன் சமையல்கார பையன் என்னை எழுப்பினான். “என்ன சார், இப்படி முகம் வெளுத்துப் போய்விட்டது” என்று கேட்டான்.
நேற்று இரவு வெளியிலே உலவப் போனபொழுது என்னை ஒரு பிசாசு பிடித்துக் கொண்டது என்றேன்.
“ஆமாம் சார்! இந்த மலையிலே அந்தப் பக்கம் பிசாசுகள் அதிகம்” என்று பயம் கலந்த குரலில் பேசினான் பையன். ஒருவேளை நேற்று நான் பார்த்ததும் கூட ஒரு பிசாசுதானோ!
அன்று என் மனம் எதிலுமே பதியவில்லை. மாலைப் பொழுது எப்பொழுது வரும் என்று காத்துக் கிடந்தேன். இரண்டாம் வேளைக்கு வெங்காய வடை செய்து கொண்டு வந்து வைத்தான் சமையல்கார பையன். காப்பியை மட்டும் குடித்தேன். வடையை கட்டிக் கொடுக்கும் படி சொன்னேன்.
“யாருக்கு சார் வடை” என்றான் பையன்.
“காட்டிலே ஒரு புலி இருக்கிறது அதற்குக் கொடுக்க” என்றேன்.
“புலி கூட வெங்காய வடை சாப்பிடுகிறதா!” என்றான்.
“இல்லையப்பா வெங்காய வடையைக் கண்டவுடன் அந்த புலி பயந்து ஓடி விடாதா? அதற்குத்தான்” என்றேன்.
சீக்கிரமே அந்த அருவிக் கரையை அடைந்தேன். என் மோகினி என்னைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தாள். நான் வருவதைத் தெரிந்து கொண்டு வேறு பக்கமாக முகத்தை திருப்பிக் கொண்டாள்.
நான் அருகில் போய் “கோபமா” என்று கேட்டேன்.
“ஆமாம்” என்று தலையை ஆட்டினாள். அவளாலே அடக்க முடியவில்லை. சிரித்து விட்டாள்.
நான் வைத்திருந்த வெங்காய வடையை அவளிடம் கொடுத்தேன். அவளும் ஏதோ தொன்னையில் வைத்து நீட்டினாள். வாங்கிப் பார்த்தேன் நல்ல சுத்தமான குடகுத்தேன். மிக மிகச் சுவையாக இருந்தது காரணம் அவள் கைபட்டதாலோ என்னவோ.
வடையைத் தேனில் தோயத்து அவளிடம் நீட்டினேன். என்னை முதலில் சாப்பிடும்படி கெஞ்சினாள் தேன் துவைத்த வடையில் ஒரு பகுதியைக் கடித்தேன். மீதி இருந்ததை வெடுக்கென்று பறித்து போட்டுக் கொண்டாள். பிறகு கையை கழுவி விட்டு வந்து என் அருகில் இன்னும் நெருங்கி உட்கார்ந்தாள்.
முன் தினத்தை விட அவள் உடைகளிலே சற்று அலங்காரங்கள் அதிகமாக காணப்பட்டன. கழுத்திலே சில சங்கு மாலைகள் தொங்கின. தலையிலே செண்பக மலரைச் சூடி இருந்தாள். அதன் மென்மையான மனம் ஒரு வெறியை இன்னதென்று விவரிக்க இயலாத இன்ப போதையை எழுப்பிக் கொண்டிருந்தது.
அவள் முகத்தைப் பார்த்தேன் நேற்றுதான் பார்த்துப் பழகிய புதிய முகமாகவே தென்படவில்லை. எனக்கு அறிவு தெரிந்த நாள் முதலாக அவள் என்னுடனே இணைபிரியாதிருந்திருக்கிறாள். எனக்குத் துன்பம் நேர்ந்த போதெல்லாம் என் இதய யாழியில் இன்னிசையை எழுப்பியவள் அவள் தான். என் வாழ்க்கைப் பாதையில் இருள் கவிந்த போதெல்லாம் அந்த இருளகற்றிய இன்ப ஜோதியும் அவள்தான். எனக்கு அவள் புதியவளே இல்லை என்றும் மாறாத என் அன்பிற்குரியவள் அவளே தான்.
எங்களுக்கிடையிலே பேசிக்கொள்ள எதுவும் பாஷை இல்லை என்றா சொன்னேன். இல்லை இப்பொழுது ஒரு பாஷை ஏற்பட்டு விட்டது. ஆனால், அதில் பேச்சு இல்லை, வார்த்தைகள் இல்லை, பேசாத பேச்சு. வாய் பேசவில்லை, ஆனால் அவள் கண்கள் பேசின. நாவு அசையவில்லை, ஆனால் அவள் புருவங்கள் அசைந்தன. அந்த மௌன பாஷையிலே எழுத்தாலும் எழுதிக் காட்ட முடியாத சொல்லாலும் சொல்லிட முடியாத எல்லா விஷயங்களையும் சொல்லித் தீர்த்து விட்டாள்
அந்த இடத்தை விட்டுக் கிளம்பினோம். இன்றும் அழகான இடங்களுக்கு எல்லாம் என்னை அழைத்துச் சென்றாள். மலைமுகட்டின் மேலே ஓரிடத்தில் நின்று பார்த்தேன். கீழே அதல பாதாளமான காட்சி இன்னும் நன்றாகப் பார்க்க, பாறையின் ஓரமாக நகர்ந்தேன். என் பின்னால் நின்ற மோகினி சட்டென்று என் கையைப் பற்றி என்னை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள்.
“இந்தப் பள்ளத்திலே விழுந்தால் என்ன ஆவது” என்று என்னை கோபமாகப் பார்த்தாள். இவள் யார்? என் உயிரின் மீது இவளுக்கு ஏன் இத்தகைய அக்கறை. அடி பேதைப் பெண்ணே!
இப்படி எல்லாம் இவள் என்னிடம் காட்டும் இந்த அன்பிற்கு என்ன பெயரிட்டு அழைப்பது அன்பா, மரியாதையா, பக்தியா, இல்லை கா…த…ல்தானா! எதுவாய் இருந்தாலும் நான் அதற்கு அருகதையற்றவன் என்று மனம் வேதனை அடைந்தது.
இப்படி எத்தனையோ நாள், எத்தனையோ தடவை மீண்டும் அந்த அறிவிக்கரையிலே இருவரும் சந்தித்தோம். பேசினோம். இந்த இன்பம் என்றென்றைக்கும் நீடித்துவிடக்கூடாதா! என்றெல்லாம் இன்பக் கோட்டைகள் கட்டிக் கொண்டிருந்தேன்.
தந்தி வந்தது “உடனே சென்னைக்குப் புறப்பட்டு வரவும்” என்று. என் பிரம்மை கலைந்தது. என் நிலைமையையும் அப்புறம்தான் உணர ஆரம்பித்தேன். புறப்பட்டுத்தான் போக வேண்டுமா அப்படியானால் என் மோகினி என்ன ஆவது?
அன்று மோகினியைச் சந்தித்தேன். என் முக வாட்டத்தைத் தெரிந்து கொண்டு ஆயிரம் கேள்விகள் கேட்டுத் துளைத்தாள். கடைசியில் நான் போகப் போகிறேன் என்பதையும் சொல்லிவிட்டேன்.
அன்றுதான் முதல் தடவையாக அளவு கடந்த சோகத்தின் நிழல் அவள் முகத்திலே இருண்டு படிந்ததைப் பார்த்தேன். “போகத்தான் போகிறாயா” என்ற மாதிரி ஆச்சரியமும் ஆதங்கமும் நிறைந்த குரலில் கேட்டாள். அந்த கேள்வியில் “மோசம் செய்ய மாட்டாய் என்று உன்னை நம்பினேனே! அட வஞ்சகனே!” என்ற வார்த்தைகளும் சேர்ந்து இருப்பதைப் போல எனக்குப்பட்டது.
என் பக்கத்திலே கிடந்த துப்பாக்கியை எடுத்தாள். என் கையிலே அதைக் கொடுத்து அவளைச் சுட்டு விடும்படி மன்றாடினாள். நான் மௌனமாய் மரமாய் உட்கார்ந்திருந்தேன்
என் மடிமேல் விழுந்து ஆறாக, வெள்ளமாகக் கண்ணீரை வடித்தாள். வெகு நேரம் அசைவற்றுக் கிடந்தாள்.
சற்று நேரம் கழித்து என் மடியிலே கிடந்தவள் எழுந்து உட்கார்ந்தாள். இப்பொழுது அவள் முகத்தைப் பார்த்தேன். கவலை இல்லை, கண்ணீர் இல்லை, ஏதோ ஒரு திட்டமான முடிவுக்கு வந்தவள் போல் தோன்றினாள். “நீ போகத்தான் வேண்டுமா” என்று மீண்டும் கேட்டாள், அவள் முகத்திலே அளவுகடந்த கோபக்குறி இருந்தது. அவள் இப்பொழுது என் மனதைக் கவர்ந்த மோகினியாகவே என் கண்களுக்குத் தென்படவில்லை. பெண் புலி ஒன்று என் எதிரே நின்று சீறுவது போல் தோன்றியது.
திடீரென்று ஒரு பயங்கர உறுமல் சத்தம் என் பின்புறமாக கேட்டது. திரும்பிப் பார்த்தேன். புதருக்குப் பக்கத்திலே புலி ஒன்று நிஜப்புலியேதான் நின்றது. வாலை சுழற்றிக்கொண்டு, கண்ணிலே நெருப்பை உமிழ்ந்தபடி நின்றது. என் மீது பாயத் தயாராகி விட்டது. நான் அவசரமாகத் துப்பாக்கியை எடுத்தேன். சுடுவதற்குள் புலி என்மீது பாய்ந்து விட்டது.
புலியினுடைய ஒரு அறையில் நான் கீழே விழுந்திருப்பேன். ஆனால் அப்பொழுதுதான் அந்த எதிர்பாராத சம்பவம் நடந்து விட்டது. எனக்குப் பின்னால் நின்ற மோகினி என்னைப் புலியினின்றும் காப்பாற்ற வீல் என்ற அலறலுடன் எனக்கும் புலிக்கும் இடையிலே வந்து விழுந்தாள். புலியினுடைய பாய்ச்சலில் மோகினி அகப்பட்டு கொண்டாள்.
இப்பொழுது சுடுவதற்கு எனக்கு அவகாசம் கிடைத்து விட்டது. புலியையும், மோகினியையும் பிரித்துப் பார்க்க முடியாமல் சுடுவதற்குச் சற்று தயங்கினேன். பின் மனதைத் திடப்படுத்திக் கொண்டு சுட்டேன். ஒன்று, இரண்டு முறைகள், புலி செத்து கீழே விழுந்தது. மோகினியும் விழுந்தாள் ஓடிப்போய் அவளைத் தூக்கினேன். அவள் உடம்பிலிருந்தும் உதிரம் கொட்டிக் கொண்டிருந்தது. எனது துப்பாக்கிக் குண்டு தான் அவள் உடம்பிலேயும் பாய்ந்து விட்டது.
அவள் என் மீது காட்டிய அன்பிற்கும் அளவு கடந்த பிரேமைக்கும் நான் அளித்த பரிசு அதுதானா? ஆம்! அவள் எனக்குரியவள். அவளை நான் அடைய முடியவில்லை என்றால் யாரும் அவளை அடையக்கூடாது. அதற்காக என் கையாலே சுட்டேன், கொன்றேன். இப்படியெல்லாம் என் வெறி கொண்டுவிட்ட மனதிலே எண்ணங்கள் ஓடித் திரும்பின.
சற்று நேரத்திலே சிரிப்பு அடங்கியது, அவள் உடம்பிலேயிருந்து உயிர் அணுவாகப் பிரிந்து கொண்டிருந்தது. என் நெஞ்சத்தைக் கல்லாக்கிக் கொண்டு பார்த்துக் கொண்டே இருந்தேன் நான்.
மண்வெட்டி கொண்டு வந்து ஆழமாகக் குழி தோண்டினேன். அதிலே இறந்து கிடந்த புலியைத் தூக்கிப் போட்டேன். அந்த மெத்தென்ற படுக்கையிலே மோகினியைப் படுக்க வைத்தேன். மண்ணைத் தள்ளினேன். அவளுக்கும் எனக்கும் பிடித்தமான செண்பகமலரை மேலே தூவினேன். அந்தச் சமாதி மீது நான் எழுதிய வார்த்தை “பெண் புலி”.
பெண்புலி -ஆடியோ வடிவில்- செண்பக சோலையின் ஓசை சித்திரம். செவி கொடுங்கள்- மனதை நிறைப்போம்
பகைமையிலும் பண்பு
நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு போர் முரசுகள் பாசறையில் இருந்து பயங்கரமாய் முழங்கின. அதன் பேரொலி ஜீலம் நதியின் ‘சலசல’ சப்தத்துடன் கலந்து. அமைதி தவழ்ந்த அந்த பஞ்சாபின் நாடு நகரங்களிலும், காடு கழனிகளிலும், பரவி “யுத்தம் வந்துவிட்டது, யுத்தம் வந்துவிட்டது” என்ற செய்தியை அறிவித்து எதிரொலித்தது. அதற்குப் பதிலளிப்பது போல் தூரத்தில் எங்கிருந்தோ ஆந்தை ஒன்று அலறியது.
புருஷோத்தமரின் வீரப்படை ஜீலம் நதிக்கரையில் திரண்டிருந்தது. எதிர்கரையில் அங்கே ஒரு சமுத்திரமே வந்துவிட்டதோ! என்று ஐயுரும்படியாக மஹா அலெக்சாண்டரின் மாபெரும் சைன்யம் வந்து இறங்கி இருந்தது. மூளவிருக்கும் யுத்தத்திலே எத்தனை எத்தனை உயிர்கள் மாளவிருக்கிறதோ என்று இரு படைகளுக்கும் இடையிலே ஜுலம் நதி ஓலமிட்டுக் கொண்டிருந்தது.
நீல வானத்திலே நிறைந்திருந்த தாராகணங்கள், இரு கரைகளிலும் இறங்கி இருந்த படைகளின் பலாபலத்தைப் பற்றி தங்களுக்கே உரியதும் புரிவதும் ஆகிய மௌன பாஷையிலே கண்சிமிட்டி ஏதேதோ கதைகள் அளந்து கொண்டிருந்தன.
நள்ளிரவையும், நடுங்கும் குளிரையும், பொருட்படுத்தாது கிரேக்க பாசறையில் இருந்து கிளம்பிய இரு வீரர்கள் ஜீலம் நதிக்கரையின் ஓரத்திலே சிறிது தூரம் சென்று கொண்டிருந்தார்கள். குறிப்பிட்ட இடத்தில் ஆற்றில் எதையோ கூர்ந்து கவனித்தார்கள். அங்கு ஒரு மரத்தடியின் இருண்ட நிழலிலே ஒரு படகு கட்டப்பட்டிருந்தது. படகின் கட்டை அவிழ்த்து வீரர்கள் இருவரும் அதில் ஏறி அமர்ந்து கொண்டார்கள் அவர்களில் ஒருவன் படகை தள்ளிக் கொண்டு போனான். அவர்கள் இருவருமே அநேகமாக சமிக்கையின் மூலம் பேசிக் கொண்டார்களே தவிர வாயைத் திறக்கவில்லை.
ஆற்றிலே வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. முதலில் அவர்கள் நினைத்தபடி படகைத் தள்ளுவது இலகுவாய்த் தோன்றவில்லை. ஆனால் வீரர்களின் முகத்தில் தெரிந்த கடமை உணர்ச்சியும், கலங்காத நெஞ்சு ஊக்கமும், அப்படி ஒன்றும் சளைத்து விடக் கூடியவர்களாகக் காட்டவில்லை. போகப்போக ஒவ்வொரு அங்குலத்திற்கும் போராடினார்கள்.
எப்படியோ ஆற்றின் முக்கால் பாகத்திற்கு மேல் தாண்டி விட்டார்கள். இன்னும் சில கஜ தூரமே இருந்தது கரையை அடைய திடீரென்று படகு திசை மாறி சுழன்றது எவ்வளவு முயன்றும் திருப்ப முடியவில்லை. படகு சுழலிலே அகப்பட்டுக் கொண்டது என்பதையும் அவர்கள் உடனே அறிந்து கொண்டார்கள்.
இனி படகைக் காப்பாற்றுவது தங்கள் சக்திக்கும் புறம்பானது என்றும் தெரிந்து விட்டது. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள படகிலிலிருந்து உடனே குதித்து விடும்படி தள்ளி வந்தவனை எச்சரித்துவிட்டு மற்ற வீரன் வெள்ளத்தில் குதித்தான். படகியில் இருந்த மற்ற வீரனும் குதிப்பதற்குள் சுழலின் வேகம் படகைக் கவிழ்த்தது. கவிழ்ந்த படகு அந்த வீரனுடன் கீழே கீழே இன்னும் கீழே போயே போய்விட்டது.
தண்ணீரில் குதித்த வீரன் சுழலிலே சிக்கித் தடுமாறினான், தத்தளித்தான். சுழலிலன் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக, சுழலின் நடுவிற்கு அவனை இழுத்துக்கொண்டு இருந்தது. வீரனுடைய கையும் காலும் ஓய்ந்தது. கடைசி நேரத்தில் என்னென்ன நினைத்தானோ? கட்டி இருந்த மனக்கோட்டை தான் எத்தனையோ! அத்தனையும் பாழாகி இதோ அவனும் வெள்ளத்திலே மூழ்கி விட்டான்.
அதே சமயத்தில் எதிர்க் கரையிலிருந்து ஒரு மனிதன் தண்ணீருக்குள் குதித்தான். ஆனால் அவனுக்கு அந்த இடத்திலே சுழல் இருக்கிறது என்பதும், சுழலிலே எப்படி நீந்த வேண்டும் என்பதும் தெரிந்திருந்தன. சுழலுக்குள்ளே அகப்பட்டுக் கொள்ளாமல் மிக ஜாக்கிரதையாகவும், லாவகமாயும் நீந்தினான். நீண்ட நேரம் போராடி அமர்ந்து கொண்டிருந்த வீரனின் தலையைப் பற்றி இழுத்துக் கொண்டு கரை சேர்ந்தான்.
கிரேக்க வீரன் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் உணர்வை அடைந்தான். தன் நிலைமையையும் புரிந்து கொண்டான். தன்னைக் காப்பாற்றியவனை ஏறிட்டுப் பார்த்தான். அவன் உடையிலிருந்து, அவன் புருஷோத்தமரின் படையைச் சேர்ந்த பஞ்சாப் வீரன் என்பதையும் அறிந்து கொண்டான்.
பஞ்சாப் வீரன் “யாரய்யா நீ? எங்கிருந்து வருகிறாய்? இந்த நள்ளிரவிலே ஆற்றைக் கடக்க முயன்று உயிரை விட இருந்தாயே! யார் நீ?” என்று கேட்டான். அவன் குரலிலே அதிகாரமும் அதே சமயத்தில் பரிவும் கலந்திருந்தது.
கிரேக்க வீரன் பேசினான், “நண்பா! நான் உன்னிடத்தில் என்னைப் பற்றிய உண்மையை மறைக்க விரும்பவில்லை. நான் கிரேக்க சைன்யத்தின் ஒற்றர் படையைச் சேர்ந்தவன். எங்களது பிரம்மாண்டமான சைன்யத்தை எதிர்த்து நிற்கும் உங்கள் படை பலம் தான் என்ன என்பதை தெரிந்து வரும்படி எங்கள் அரசர் எங்களை அனுப்பினார். வந்த இடத்தில்தான் இப்படி ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டேன். நல்ல தருணத்தில் வந்து என் உயிரைக் காப்பாற்றினாய் உனக்கு என்ன வார்த்தை கொண்டு எப்படி நன்றி சொல்வது என்பது கூட எனக்குத் தெரியவில்லை.”
“வீரனே! நீ எனக்கு நன்றி செலுத்துவதற்கு முன் வெள்ளத்தைக் காட்டிலும் இப்பொழுது ஒரு பெரிய ஆபத்தில் ஆகப்பட்டு கொண்டதை அறிவாயா? நீ இப்பொழுது எதிரியின் கையில் சிக்கிக் கொண்டிருக்கிறாய் என்பதைத் தெரிந்து கொள்!”
“அதைப் பற்றி நான் பொருட்படுத்தவில்லை. இப்படி ஆற்றிலே விழுந்து, இறந்து யாரும் காணாத இடத்தில் அனாதை பிணமாகக் கிடந்து காக்கைக்கும், கழுகுக்கும் இரையாவதை விட உன் வாளுக்கு இரையாக நேர்ந்தால் அதை விருப்பமுடன் ஏற்றுக் கொள்வேன். அந்த வீர மரணத்தை மகிழ்ச்சியுடன் தழுவிக் கொள்வேன். உன் இஷ்டம் போல் செய்.”
“ஆனால் வீரனே! நீ நினைக்கிற படி உன் ஒருவனை இரையாகக் கொடுப்பதால் மட்டும் என் வாளின் ரத்த தாகம் அடங்கிவிடாது. அதை நான் விரும்பவும் இல்லை. நீ இத்துடன் திரும்பி விடுவதென்றால் உன்னை உன் பாசறைக்கு போகவும் அனுமதிக்கிறேன். ஆனால் இதற்கு மேலும் உனக்கிடப்பட்ட கடமையை நிறைவேற்ற எங்கள் படைபலத்தின் ரகசியத்தை அறிய நீ எங்கள் பாசறையை நெருங்கினால் நானும் என் கடமையை நிறைவேற்ற வேண்டியது வரும்.”
“நண்பா! நான் எதிரியின் படையைச் சேர்ந்தவன். வேவு பார்க்க வந்த குற்றத்தையும் ஒப்புக் கொள்கிறேன். கைது செய்து என்னை அழைத்துப் போ, கூட வருகிறேன். கொடுக்கும் எத்தகைய தண்டனையும் ஏற்றுக்கொள்கிறேன். தயங்காதே, உன் கடமையைச் செய்.”
பஞ்சாப் வீரன் லேசாக நகைத்து விட்டு பேசினான். “கிரேக்க வீரனே! நீ இப்படி விபத்திலே சிக்கிக் கொள்ளாமல் இந்த கரையிலே காலடி வைத்திருந்தாயனால் என் வாள் உன்னை வரவேற்றிருக்கும் அல்லது கைது செய்து கொண்டு போகவும் தயங்கி இருக்க மாட்டேன். ஆனால் நீ இப்படி ஒரு ஆபத்தில் அகப்பட்டுக் கொண்ட பொழுது உன்னை எதிரி என்று எண்ணாமல் உனக்கு உதவி செய்வது என் கடமை என்றே கருதுகிறேன். சந்தர்ப்பத்தால் என்னிடம் அடைக்கலப் பொருளாக நீ அகப்பட்டுக் கொண்டாய் உனக்கு எவ்விதத்திலும் என்னால் தீங்கு ஏற்படவே ஏற்படாது. வேறு படகு தருகிறேன். அதில் திரும்பிப் போய்விடு, நான் உன்னை கைது செய்ய மாட்டேன்.”
“நண்பா! உன் பெருந்தன்மை மிக மிகப் போற்றுதலுக்குறரியதுதான். ஆனாலும் அகப்பட்டுக் கொண்ட எதிரியை திருப்பி அனுப்பி விட்டாய் என்பதற்காக உங்கள் அரசரின் கடுமையான தண்டனைக்கு நீ ஆளாகலாம் யோசித்து முடிவு செய்.”
“எங்கள் அரசரின் நீதியும் நேர்மையும் எத்தகையது என்பது எனக்குத் தெரியும் உனக்கு அதைப் பற்றி கவலை வேண்டாம்.”
கிரேக்க வீரன் நன்றி கலந்த குரலில் பேசினான். “நண்பா! நீ எனக்குச் செய்திருக்கும் உதவியை என்றும் மறக்க முடியாது இன்னும் ஒரே ஒரு கோரிக்கை எனக்கு. எங்கள் மன்னர் அலெக்ஸாண்டரிடத்தில் மிகுந்த செல்வாக்குண்டு, நீ எங்கள் பாசறைக்கு வந்தாயானால் எங்கள் மன்னரிடம் சொல்லி நல்ல பரிசுகள் வழங்கச் செய்கிறேன்.”
“நண்பா! நீ உணர்ச்சி மிகுதியால் பேசுகிறாய், என் பிறந்த நாட்டின் சுதந்திரத்திற்கே ஆபத்து ஏற்பட்டு மக்கள் அனைவரும் வாழ்வதா, சாவதா என்ற போராட்டத்தில் குதித்திருக்கும் போது நான் மட்டும் என் சுயநலத்தைக் கருதி எதிரி அரசனிடத்திலே போய்ப் பரிசுகள் பெற்று மகிழ வேண்டும் என்று சொல்கிறாயா?”
“சரி, உன் சுயநலத்திற்காக வர வேண்டாம். நாட்டின் நலத்திற்காகவாவது இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டால் என்ன?”
“நாட்டின் நலனுக்காக, நாட்டின் சுதந்திரத்தைக் காப்பாற்ற இதோ ஆயிரம் ஆயிரம் வீரர்கள் தங்கள் இரத்தத்தைச் சிந்த,சித்தமாய் வந்து குவிந்து நிற்கும் பொழுது நான் எதிரியிடம் யாசித்து என் நாட்டை காப்பாற்ற வேண்டுமா, சொல்!”
“நண்பா! உன் வீரமும் உறுதியும் மிகவும் பாராட்டிற்குரியவை. உன்னைப் போன்ற சுத்த வீரர்கள் தன் படையில் இருக்கிறார்கள் என்ற தைரியத்தினால் தான் புருஷோத்தம மன்னன் இத்தனை பெரிய எங்களுடைய சைன்யத்தை எதிர்த்து நிற்கிறார் என்று நினைக்கிறேன். எனது உயிர்த் தோழனாகிவிட்ட உன்னிடத்தில் என்னைப் பற்றிய இன்னும் ஒரே ஒரு விஷயத்தையும் மறைக்காமல் சொல்லிவிடுகிறேன். நான் அலெக்சாண்டர் மன்னரின் சைன்யத்தில் உள்ள ஒற்றர் படையை சேர்ந்த ஒருவன் என்றா என்னைச் சொல்லிக் கொண்டேன்? இல்லை நானே தான் அந்த அலெக்சாண்டர்!”
அளவிட முடியாத ஆச்சரியத்தால் பஞ்சாப் வீரன் ஸ்தம்பித்துப் பதுமையாகிவிடவில்லை. அவன் புருவங்கள் கூட ஏறி இறங்கவில்லை. சாதாரணமாகவே பேசினான். “மன்னரே! தாங்கள் அலெக்சாண்டர் மன்னன் தான் என்பதையும் நான் ஏற்கனவே அறிவேன். எங்கள் ஒற்றன் ஒருவன் உங்களுக்கு முன் படகிலே இந்த ஆற்றைக் கடந்து நீங்கள் படகில் வந்து கொண்டிருப்பதாக கூறினான். இந்த இடத்தில் காவல் பொறுப்பு என்னைச் சேர்ந்ததால் தங்களை வரவேற்கத் தயாராக காத்து நின்றேன். தாங்கள் மன்னர் என்பதை மறைத்து பேசியதால் நானும் தெரிந்து கொண்டதாக காட்டிக் கொள்ளவில்லை”.
“உங்கள் ஒற்றர் படை அவ்வளவு திறமை வாய்ந்ததா? திறமை இருக்கிறதோ இல்லையோ, கடமையை உணர்ந்து இருக்கிறார்கள்.“
“நண்பனே! என் உயிரை காப்பாற்றி, நீ எனக்குச் செய்த பேருதவிக்கு நான் எப்படியும் கைமாறு செய்ய விரும்புகிறேன். உன்னை என்னுடனே என் நாட்டிற்கு அழைத்துச் சென்று என் உயிருக்கு உயிரான தோழனாக உன்னை என் அருகிலே வைத்துக் கொள்வேன். வருகிறாயா,சம்மதமா?”
“உலகமெல்லாம் புகழ் பரவிய பெரிய சாம்ராஜ்ய சக்கரவர்த்தியாகிய தங்களின் நட்பு இந்த ஏழை வீரனுக்கு கிடைப்பது என்றால், அது நான் செய்த மிகப்பெரிய பாக்கியம்தான். ஆனால் மன்னரே, தங்களுடன் வருவதற்கில்லை. சந்தர்ப்பம் சரியாக இல்லை. மேலும் எங்கள் அரசரும் அதற்கு சம்மதிக்க வேண்டும்.”
“உங்கள் அரசரைச் சந்திக்க முடிந்தால் அவசியம் உன்னை என்னுடன் அனுப்பும்படி கூறுவேன் ஆனால் அவரை எங்கே, எப்படி சந்திப்பது என்பது தான் தெரியவில்லை.”
“தங்களை யுத்த களத்தில் சந்திப்பதாக எங்கள் அரசர் உங்களுக்கு செய்தி அனுப்பி இருந்தாரே?”
“ஆம். துரதிஷ்டவசமாக சம்பவங்கள் அப்படி அமைந்துவிட்டன. சரி எப்படியும் முயன்று பார்க்கிறேன் உன் பெயர் என்ன?“
“அமர சிம்மன்”
சிறிது நேரத்தில் ஜீலம் நதியில் சுழலின் குறுக்கீடு இல்லாத பத்திரமான வழியில் படகு ஒன்று போய்க்கொண்டிருந்தது. அதில் ஆழ்ந்த சிந்தனை தேங்கிய முகத்தினனாய் மன்னர் அலெக்ஸாண்டர் அமர்ந்திருந்தார்.
பாசறைகளின் பரபரப்பான சூழ்நிலையிலிருந்து சற்று ஒதுங்கிய உயரமான இடத்தில் அமைந்த ஒரு அழகிய பெரிய கூடாரம். அதன் உச்சியிலே கம்பீரமாகப் பறந்த கிரேக்க நாட்டு பட்டுக் கொடி வானத்தை எட்டித் தொட்டு கொண்டிருந்தது. கூடாரத்தின் உள்ளே கிரேக்க நாட்டுச் சிற்பிகள் அற்புத சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்திருந்த அழகிய ஆசனமொன்றில் மன்னன் மகா அலெக்ஸாண்டர் கம்பீரமாக அமர்ந்திருந்தான். அவன் அருகிலே சரியாசனத்தில் வீர புருஷோத்தமனும் வீற்றிருந்தான். மன்னன் இருவரும் மனம் விட்டுப் பேசி அளவளாவிக் கொண்டிருந்தார்கள்.
அலெக்சாண்டர் பேசினான். “புருஷோத்தமரே! யுத்தத்திலே தங்களிடம் கைப்பற்றிய பொருட்கள் அத்தனையும் திருப்பிக் கொடுத்து விட்டேன். இப்பொழுது தங்கள் நண்பன் என்ற முறையில் ஒரே ஒரு பொருளைத் தங்களிடம் யாசிக்கிறேன் தயவு செய்து கொடுக்க வேண்டும்.”
“மன்னர் மன்னரே, யாசிப்பது என்ன நட்புரிமையுடன் கட்டளையிடுங்கள், கொடுக்க காத்திருக்கிறேன்.”
“இல்லை நண்பரே, கெஞ்சித்தான் கேட்கிறேன். நான் தங்களிடம் கேட்பது வேறு ஒரு பொருள் எதுவுமில்லை. தங்கள் படையைச் சேர்ந்த ஒரே ஒரு வீரனைத்தான் அனுப்பும்படி கூறுகிறேன். அதற்குக் காரணத்தைச் சொல்கிறேன். முதலில் சுமார் ஒரு வாரத்திற்கு முன் வேவு பார்ப்பதற்காக நானே இந்த ஜீலம் நதியை கடக்க முயன்றேன். இந்த நாட்டிலே பொதுமக்களும் போர் வீரர்களும் தான் நாட்டுப்பற்றும் ராஜ விசுவாசமும் உடையவர்கள் என்று நினைத்தேன். ஆனால் உணர்ச்சியற்ற வெறும் ஜடப் பொருளாகிய இந்த ஜீலம் நதி கூட இந்த நாட்டின் பகைவன் என்ற முறையிலே என்னிடம் பகைமை பாராட்டி, என் படகை மூழ்கடித்தது. சுழலில் அகப்பட்டுத் தவித்த என்னை அமரசிம்மன் காப்பாற்றினான். பிறகு வலிய வந்து அகப்பட்டு கொண்ட எதிரியாகிய என்னை திருப்பி அனுப்பி விட்டான் அந்தச் சம்பவம் தங்களுக்கு தெரியுமா? அந்த வீரனை என்ன செய்தீர்கள்? எப்படி நடத்தினீர்கள்?”
“எப்படி நடத்துவது? எதிரி என்றாலும் ஒரு ஆபத்தில் அகப்பட்டுக் கொண்ட பொழுது தான் நம் வஞ்சத்தை தீர்த்துக் கொள்வது, அந்த வீரன் அவன் கடமையைச் சரிவர செய்ததற்கு என் பாராட்டுதலைப் பெற்றான்”.
“ஆஹா! பகைவனிடத்திலும் கூட தங்கள் பண்பாடு குறையாது நடந்து கொள்ளும் இந்த நாட்டு மக்களே ஒரு தனி ரகமாய்த் தான் இருக்கிறார்கள். புருஷோத்தமரே! இப்பொழுது சொல்லுங்கள் என் உயிரைக் காப்பாற்றிய அந்த வீரனை, என் உயிருக்கு உயிரான தோழனாகக் கருதி என்னுடன் அழைத்துப் போக விரும்புகிறேன். அதில் தங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இல்லையே.”
“அந்த வீரனுக்கு அவ்வளவு பெரிய பாக்கியம் கிடைக்கவிருக்கிறதா?“
“புருஷோத்தமரே! அது மட்டும் இல்லை என் திக்விஜயம் முடிந்து என் நாடு திரும்பி, அங்குள்ள அனைவருக்கும் நான் அடைந்த அமோக வெற்றிகளைச் சொல்வேன். அள்ளிக் கொண்டு போகும் அளவற்ற செல்வங்களைக் காண்பித்து அவர்களை ஆச்சரியத்திலே ஆழ்த்துவேன். அதையெல்லாம் காட்டிலும் இன்னும் அதிகப் பெருமையுடனே நான் அழைத்துச் செல்லும் என் நண்பனை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவேன். அவன் தீரச் செயலையும், நேர்மையான நடத்தையும் பற்றிக் கூறி என் நாட்டு மக்களை திகைக்க வைப்பேன். தயவு செய்து அந்த வீரனை என்னுடனே அனுப்புங்கள். தங்களுடைய அதிவீரத்தினால் ஆகர்ஷிக்க பெற்றே தங்கள் நட்பை நான் நாடினேன். எனினும் தங்கள் அனுமதியுடன் அந்த வீரனையும் என்னுடன் அழைத்துப் போலாம் என்ற ஆசையும் என் உள்ளத்தின் ஆழத்திலே இருந்ததுண்டு” என்று நீண்ட பேச்சுப் பேசி நிறுத்தினான் அலெக்சாண்டர்.
“மன்னர் மன்னரே! இத்தகைய மாபெரும் அதிர்ஷ்டம் அவனுக்குக் காத்திருந்தும் அந்த வீரன் தங்களுடன் வருவதற்கு இயலாமல் இருக்கிறது. அவனை இந்த நாட்டு மக்களும் அனுப்பச் சம்மதியார்கள். மேலும் அவன் இந்த நாட்டிற்கு இன்னும் செய்ய வேண்டிய கடமையும் அவனைத் தடுத்து நிறுத்துகிறது.”
“நண்பரே! ஒரு ஒப்பற்ற வீரனே அனுப்பி விட வேண்டுமே என்று நினைக்கிறீர்களா? அவனுக்குப் பதிலாக தோல்வி என்பதே கண்டறியாத சண்ட மாருதத்தையொத்த என் குதிரைப்படையின் ஒரு பகுதியை வேண்டுமானாலும் தருகிறேன்”
“யுத்த வீரன் என்ற முறையிலே அவனுடைய சேவை இந்த நாட்டிற்கு அவ்வளவு தேவை என்று சொல்லவில்லை. அவனிலும் சிறந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் என் படையில் இருக்கிறார்கள். ஆனால்…”
“பின் எந்த முறையில் அந்த வீரன் இங்கு தேவைப்படுகிறான்?”
இந்த நாட்டு அரசன் என்ற முறையிலே.”
“அப்படியானால்!... அப்படியானால்!...”
“ஆம் தங்கள் முன் இதோ இருக்கும் இந்த புருஷோத்தமன் தான் தங்களை வெள்ளத்திலிருந்து மீட்டது தாங்களே ஆற்றைக் கடந்து வருகிறீர்கள் என்று ஒற்றன் மூலம் கேள்விப்பட்டு, ஒரு அரசரை அரசர் தான் வரவேற்க வேண்டும் என்று நானே எதிர்க் கரையில் வந்து தங்களுக்காக அன்று காத்து நின்றேன்”
அளவிட முடியாத ஆச்சரியத்தினால் அலெக்சாந்தர் மன்னனின் கண்கள் அகல விரிந்தன. உணர்ச்சி மிகுதியினால் ஊனுறுக, உடலுறுக, உள்ளமெல்லாம் உருக எழுந்து போய் புருஷோத்தமரை அப்படியே ஆர்வத்துடன் கட்டித் தழுவிக் கொண்டான். இருவரையும் பிரிக்க முடியாதபடி இணைத்த ஜீலம் நதி அமைதியாய் ஓடிக்கொண்டிருந்தது.
பகைமையிலும் பண்பு - ஆடியோ வடிவில் செண்பக சோலையின் ஓசை சித்திரம். செவி கொடுங்கள்- மனதை நிறைப்போம்
பரிசு
பிருதிவிராஜாவின் அரண்மனைக் கோபுரங்கள் முன்னைவிடப் பெருமையுடன் கம்பீரமாக தலை நிமிர்ந்து நின்றன. அதற்குக் காரணம் இருந்தது, உலகத்திலே சிறந்த அழகு ராணி என்று போற்றி புகழப்பட்ட சம்யுக்தை தங்கள் சொந்த ராணியாக நிரந்தரமாக அங்கே வந்து விட்டதில் அவைகளுக்கு பெருமை ஏற்படுத்தானே செய்யும்.
புயலுக்குப் பின் அமைதி என்பதைப் போல், பிருதிவிராஜன் சம்யுக்தையை சாகசமாகக் கைப்பற்றிக் கொண்டு வந்த வீரச் செய்கையை ஒட்டி நடந்த விறுவிறுப்பான சம்பவங்களுக்குப் பிறகு இப்பொழுது தலைநகரிலும் அரண்மனையிலும் எங்கும் அமைதி நிலவியது.
அரண்மனை அந்தப்புரத்தில் பயந்து பயந்து நடந்த பணிப் பெண்களின் பாதச் சிலம்பின் ஒலி அங்கு நிலவி இருந்த நிசப்தத்தை இன்னும் அதிகமாக எடுத்துக்காட்டியது. மனம் கமழும் மல்லிகை மலரை அள்ளிப் பரப்பி அலங்கரித்து இருந்த அழகிய தந்தக்கட்டிலின் அருகே விளக்கு ஒன்று ஏந்தி நின்ற வெண்கலச் சிலையின் முன்பாகத் தங்கச் சிலை ஒன்று தலை குனிந்து நின்றது.
“சம்யுக்தை” என்று அழைத்த குரல் கேட்டுத் தங்கச் சிலை தலை நிமிர்ந்தது.
“தேவியின் கருணைக்காக இத்தனை நேரம் காத்து நிற்கும் இந்தப் பக்தனைப் பார்க்க ஒட்டாது அப்படி தங்கள் கவனத்தைக் கவர்ந்தது எதுவோ” என்று பிருதிவி ராஜாவின் வார்த்தைகள் கொவ்வை இதழ்களில் ஒரு சிறு நகையைக் கொண்டு வந்தது.
அவள் பேசினாள், “சுவாமி மன்னிக்க வேண்டும் இதோ நிற்கும் இந்த வெண்கல சிலையின் அற்புத சிற்ப வேலைப்பாடு என்னை அப்படிக் கவர்ந்து விட்டது. தாங்கள் வந்து என் பின்னால் நின்றதைக் கூட கவனிக்காமல் இருந்து விட்டேன்.”
பிருதிவிராஜன் “ஆம் சம்யுக்தா, நீ அப்படி நின்றது ஒன்றும் ஆச்சரியம் இல்லை நானும் எத்தனையோ தடவைகளில் இச்சிலையின் கலை அழகில் ஈடுபட்டு என்னை மறைந்து நின்றிருக்கிறேன். மதுரையிலிருந்து வந்த மிகக் கைதேர்ந்த சிற்பி ஒருவனால் வார்த்தெடுக்கப்பட்டது இது.”
சம்யுக்தா “ஆனால் சுவாமி, நான் அந்தச் சிற்பியின் திறமையை அப்படியே ஒப்புக் கொள்ள முடியவில்லை!”
பிருத்விராஜன் “ஏன்? இந்தச் சிலை அழகாகத் தோன்றவில்லை உனக்கு.”
சம்யுக்தா “அழகு இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் அழகும் ஒரு அளவு கடந்து விட்டது. சிற்பியின் கற்பனையிலே உதித்த இந்தப் பெண்ணை போல் சர்வ லட்சணங்களும் பொருந்திய ஒரு சௌந்தர்யவதி இதுவரை இந்த உலகத்திலேயே தோன்றியிருக்க முடியாது. இனிமேலும் தோன்றப் போவதில்லை. இல்லாத ஒன்றை கனவு கண்டு நிர்மாணித்துள்ள சிற்பியின் மிகையான கற்பனை என்றுதான் இதைச் சொல்லுவேன்.”
பிருதிவிராஜன் “சம்யுக்தா! உன் தந்தையின் அரண்மனையில் பெரிய கண்ணாடி எதுவும் இல்லையா! அல்லது நீதான் உன் உருவத்தைக் கண்ணாடியில் சரியாகப் பார்த்துக் கொண்டதே இல்லையா?”
சம்யுக்தா “அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்!”
பிருதிவிராஜன் “சம்பந்தம் இருக்கிறது சம்யுக்தா. சம்பந்தம் இருக்கிறது. இதற்கு முன்பெல்லாம் இச்சிலையை பொதுத்து பிரம்மசிருஷ்டி வென்றுவிட்டதே என்று நான் நினைத்து ஆச்சரியப்படுவேன். ஆனால் அவ்விரண்டையும் அருகருகே வைத்து பரிசீலனை செய்யும் பாக்கியம் இதுவரையில் கிடைக்கவில்லை. அது சற்று முன்புதான் எனக்குக் கிடைத்தது. இப்பொழுது பிரம்மசிருஷ்டியே வென்று விட்டது. என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமே இல்லை.”
தன்னுடைய பேரழகையே குறிப்பிட்டு பேசுகிறான். பிருதிவிராஜன். என்பதை உணர்ந்து கொண்ட சம்யுக்தையின் முழுவெண் திங்களை ஒத்த முகராவிந்தத்தில் மகிழ்ச்சியும் நாணமும் கலந்த மோகனப்புன்னகை ஒன்று அரும்பி நின்ற அவளுடைய கடைத்தெடுத்த அழகிய கரங்கள் பிருதிவியின் அகன்ற கைக்குள்ளே அகப்பட்டிருந்தன. அருகில் இருந்த கட்டிலின் மீது அமர்ந்தான் அவன். அவளையும் பக்கத்தில் அமர்த்தினான்.
திடீரென்று எதையும் ஞாபகப்படுத்திக் கொண்ட சம்யுக்தை “தேவகுமார் என்ற சிற்பி தங்களிடத்தில் இருந்ததுண்டா என்று கேட்டாள்.”
“ஆம் இருந்ததுண்டு. அவனை உனக்கு எப்படித்தெரியும்” என்று கேட்டான் பிருதிவிராஜன்.”
சம்யுக்தையின் மனக்கண்ணில் அன்று நடந்த சம்பவம் தென்படலாயிற்று.
கண்னோசி நாட்டு மன்னன் ஜயச்சந்திரன் தன் மகள் சம்யுக்தையின் சுயம்வரத்திற்கு நாள் குறிப்பிட்டான். மன்னர்களுக்கெல்லாம் ஓலை அனுப்பப்பட்டன. பிருத்விராஜனுக்கு அத்தகைய அழைப்பு எதுவும் அனுப்பாததோடு சுயம்வர மண்டபத்தின் வாசலில் காப்பாளனாக பிருதிவியின் சிலையை வைத்து அவனை அவமானப்படுத்த எண்ணினான். பிருத்வி ராஜனை தான் நேரில் பார்த்திருப்பதாகக் கூறிய தேவகுமார் என்ற சிற்பியை அந்தச் சிலையை செய்து முடிக்கும் படி கட்டளையிட்டான் ஜயச்சந்திரன். காரியங்கள் துரிதமாய் நடந்தன.
இவ்விஷயங்கள் சம்யுக்தையின் காதுக்கும் எட்டின. அவள் இதய அந்தரங்கத்தை வாழ் கொண்டு அறுத்தது. எவனுடைய வீர சௌந்தர்யத்தைக் கேள்விப்பட்டு தன் மனத்தைப் பறிகொடுத்தாளோ அவனை அடைய முடியாதோ என்று ஏங்கினாள். யாரிடமும் சொல்ல முடியாது தனிமையில் கண்ணீர் வடித்தாள்.
ஒருநாள் சுயம்வர மண்டபத்தின் அலங்காரத்தைப் பார்க்க ஆசைப்படுவதாகத் தன் தோழியர் இருவருடன் அங்கு வந்தாள். ஆனால் அவள் உள்ளத்தின் ஆழமான பகுதியில் அங்கு அமைக்கப்பட்டு வரும் பிருதிவிராஜனின் சிலையையும் பார்த்து வர வேண்டும் என்ற எண்ணம் இருந்ததோ என்னவோ, நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. மண்டபத்தின் அலங்காரத்தைப் பார்த்து முடித்துவிட்டு வாயில் புறத்தே இருந்த பிருதிவிராஜனின் சிலை அருகிலே வந்தாள் சம்யுக்தை.
சிலை அமைப்பதிலே தன் சிந்தனையைச் செலுத்திக்கொண்டிருந்த சிற்பி பெண்களின் மெட்டி குலுங்கும் சத்தம் கேட்டுத் திரும்பினான். அங்கு வந்து நின்றவள் அரசகுமாரி என்பதை அறிந்து கொண்டு அவசரமாக எழுந்து, வணங்கி ஒதுங்கி மரியாதையாக நின்றான்.
சம்யுக்தை பிருதிவிராஜனின் சிலையைப் பார்த்தாள். எந்த மகாவீரனை மானசீகமாக வடித்து, தன் உள்ளக் கோவிலில் அவன் உருவத்தை பிரதிஷ்டை செய்து பூசித்து வருகிறாளோ, அவனுடைய உருவச் சிலையை இப்படி கேவலப்படுத்தி வாயில் காப்பானாக நிறுத்தி மற்ற அரசர்கள் முன்னிலையில் அவமானப்படுத்த எண்ணி இருக்கும் தன் தந்தையின் செயலைக் கண்டு அவள் இருதயம் வேதனையால் வெம்பியது. வெடித்து விடும் போல் இருந்தது ஆனால் அவள் மன வேதனையை எல்லாம் இத்தகைய சிலை செய்ய சம்மதித்து வந்துள்ள சிற்பியின் மீது கடுங்கோபமாக மாறியது.
சிலையின் மீது கண் பார்வையைச் செலுத்தியபடியே, “சிற்பியாரே, நீர் இதற்கு முன் பிருதிவிராஜனைப் பார்த்ததுண்டா?” என்று கேட்டாள் சம்யுக்தையின் குரலில் கடுமை கலந்திருந்தது.
சிற்பி “ஆம் தேவி! பார்த்திருக்கிறேன்! இன்னும் அவருடைய அரசாங்க சிற்பியாகக் கூட சிறிது காலம் இருந்திருக்கிறேன்.”
சம்யுக்தா “அப்படியானால் பிருதிவிராஜன் கலாரசனையற்றவரா?”
சிற்பி “ஆம் தேவி! கலை என்றால் என்ன விலை என்று கேட்கக் கூடியவர்; அது மட்டுமல்ல, அவரைப் பெரிய வீரர் என்று எல்லோரும் புகழ்வது கூட பொய்ப் பிரச்சாரத்தினால்தான் உண்மையைச் சொல்லப்போனால் பிருத்விராஜனைப் போன்ற ஒரு கோழை இருப்பது வீர ரஜபுத்திர குலத்துக்கே பெருத்த அவமானம் ஆகும்.”
“நிறுத்து உன் பேச்சை” என்ற ஆங்காரம் கலந்த குரல் சம்யுக்தையிடமிருந்து வெளிப்பட்டது. மறுகணம் அவள் ஆடையிலே சொருகி இருந்த கட்டாரி சிற்பியை நோக்கிப் பாய்ந்தது. சிற்பி தன் மார்பிலே பாயவிருந்த அந்தக் கத்தியை தன் கையாலே தடுத்துவிட்டான். அப்படியும் சிற்பியின் கையிலே ஆழமாக கத்தி பாய்ந்து, ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. இன்னும் அடிபட்ட பெண் புலி போல் சீறிக்கொண்டு நின்ற சம்யுக்தையைத் தோழிகள் பிடித்து நிறுத்தி சமாதானப்படுத்தினார்கள்.
இத்தகைய தாக்குதலை எதிர்பார்க்காத சிற்பி, கதிகலங்கிப் போனான். நடுநடுங்கிக் கொண்டே பேசினான். “தேவி மன்னிக்க வேண்டும், பிருதிவி ராஜனிடத்தில் தாங்கள் தந்தை காட்டும் துவேஷத்தை நினைத்து தங்களுடைய மனநிலையும் அத்தகையதாய் இருக்கக்கூடும் என்று கருதியே சில வார்த்தைகளைப் பேசி விட்டேன். மேலும் தங்களுடைய உள்ளக் கிடக்கையை ஒருவாறு உணர்ந்து கொண்ட பிறகும் தங்களுக்கு மனக்கசப்பு உண்டாக்கக்கூடிய காரியத்தை இன்னமும் செய்ய விரும்பவில்லை. எனக்கு விடை கொடுங்கள் போய்விடுகிறேன்” என்றான்.
“ஆம், இப்பொழுது இங்கிருந்து கிளம்பி உன் உயிரைக் காப்பாற்றிக் கொள். யாருக்கும் இங்கு நடந்தது தெரியக்கூடாது. இந்தக் கண்னோசி நாட்டிலே நீ மீண்டும் காலடி வைக்காதே, ஜாக்கிரதை!” என்று சம்யுத்தை சொல்லிக் கொண்டிருக்கும்போதே தன் மூட்டையைக் கட்டிக்கொண்டு பெரிய கும்பிடாய்ப் போட்டுவிட்டு கிளம்பினான் சிற்பி.
இந்தச் சம்பவத்தைத் தன் தந்தைக்குத் தெரியவிடாதபடி தன் தோழிகளை எச்சரித்து மறைத்து விட்டாள் சம்யுக்தை.
ஜயச்சந்திரனுக்கு மறைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் சரித்திரத்தின் ஏடுகளில் எழுதப்படாமல் இது என்றென்றைக்கும் மறைத்து மறந்து போகப்பட்டது.
என்ன காரணத்தினாலோ சிற்பி சிலையை முடிக்காமல் போய்விட்டான், என்று ஜயச்சந்திரன் வேறு ஒரு சிற்பியைக் கொண்டு அச்சிலையைப் பூர்த்தி செய்து வைத்தான்.
“என்ன சம்யுக்தா மௌனமாக இருக்கின்றாயே. தேவகுமார் என்ற சிற்பியைப் பற்றிக் கேட்டாயே அவன் இன்னும் இங்கேதான் இருக்கிறான்.” என்ற பிரிதிவிராஜனின் வார்த்தைகள் சம்யுத்தையை, அவள் சிந்தனை ஓட்டத்தை தடைபடுத்தி திடுக்கிட வைத்தது.
சம்யுக்தா “என்ன ஆச்சரியம்! அந்தச் சிற்பி மீண்டும் இங்கே வந்து விட்டானா?”
பிருவிராஜன் “வேறு எங்கு போவான் அவனை கன்னோசி நாட்டிற்கு நானே தான் அனுப்பி வைத்தேன். போய்விட்டுத் திரும்பி வந்திருக்கிறான்”
சம்யுக்தா “அவனை எதற்காக அங்கே அனுப்பினீர்கள்?”
பிருதிவிராஜன் “உருவச்சிலை செய்வது மட்டுமல்ல, மற்றவர்களின் உள்ளத்தின் நிலையையும் எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் கொண்டவன் அந்தச் சிற்பி. அதற்காகவே அவனை அங்கு அனுப்பி இருந்தேன்.”
சம்யுக்தா “யாருடைய உள்ளத்தை அறிந்து வந்து உங்களிடம் என்ன சொன்னான்.”
பிருதிவிராஜன் “அவன் என்னவோ சொன்னான். அவன் சொல்லாமலா இவ்வளவும் நடந்தது. இந்த ஆஜ்மீர் நாட்டு அரண்மனையில் மூளையில் எங்கேயோ கிடந்த கட்டிலுக்கு உலகத்தில் சிறந்த அழகியாகிய சம்யுக்தா தேவியை தாங்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.”
சம்யுக்தா “நீங்கள் அனுப்பிய சிற்பியாயிருந்தும் அவன் ஏன் என்னிடத்தில் தங்களைப் பற்றி இழிவாகப் பேசினான். உங்களைக் கலை ரசனை அற்றவர் என்றும், வீரமற்ற கோழை என்றும் ஏன் தூசித்தான்?”
பிருதிவிராஜன் “சம்யுக்தா தேவியின் முன்பு பிருத்திவிராஜனைப் பற்றி இழிவாகப் பேசக்கூடாது என்பதை அவன் அறிந்து இருக்க மாட்டான் அப்பொழுது.”
சம்யுக்தா “ஆஹா! என்ன எஜமான விசுவாசம். காரியம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடிய விதமாக நடந்து கொண்டானா அந்தச் சிற்பி. அவனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் சுவாமி. நான் ஒன்று செய்ய விரும்புகிறேன், அதற்குத் தங்கள் அனுமதி கோருகிறேன்.”
பிருதிவிராஜன் “அது என்ன என்பதைச் சொன்னால் அனுமதி கொடுக்கலாமா என்பதைப் பார்க்கலாம்.”
சம்யுக்தா “நான் இன்று வாழும் இன்ப வாழ்வில் நம்மை இணைத்து வைப்பதற்குப் பெரிதும் காரணமாய் இருந்த அந்தச் சிற்பிக்கு தகுந்த பரிசளிக்க விரும்புகிறேன்.”
பிருதிவிராஜன் “நீ பரிசளிப்பதைப் பற்றி எனக்கு சந்தோசம் தான். ஆனால் ஒரு நிபந்தனை அந்த பரிசை முதலில் நீ என்னிடம் கொடுக்க வேண்டும்.”
சம்யுக்தா “ஏன்? நீங்கள் தானே அவனை என்னிடத்தில் அனுப்பினீர்கள் என்பதற்காகவா?”
பிருத்விராஜன் “அது மட்டுமல்ல. எந்தக் கை அந்தக் கத்தி வீச்சை ஏற்றுக்கொண்டதோ அதே கை தானே இன்று இந்த பரிசையும் ஏற்றுக்கொள்ளத் தகுதியுடையது.”
இதைச் சொல்லிக் கொண்டே தனது இடது கரத்தை சம்யுக்தை எதிரில் நீட்டினான் பிருத்விராஜன். அவன் உள்ளங்கையிலே கத்தி பாய்ந்திருந்த ஆழமான புண் இப்பொழுது ஆறியிருந்தது. ஆனால் தழும்பு இன்னும் மாறவில்லை. சம்யுத்தை ஆச்சரியமும் காதலும் நிறைந்த பார்வையோடு பிருத்விராஜனின் முகத்தை நிமிர்ந்து நோக்கினாள்
பரிசு -ஆடியோ வடிவில் செண்பக சோலையின் ஓசை சித்திரம். செவி கொடுங்கள்- மனதை நிறைப்போம்
துறவு
அப்படி நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. கட்டுக் கட்டுகளாக இருந்த ரூபாய் நோட்டுகளைத் தூக்கி நெருப்பிலே எரிந்து விட்டார் அந்த மனிதர். அரசாங்கம் ஆகாது என்று தள்ளிவிட்ட ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அல்ல, நல்ல புத்தம் புதிய ரூபாய் நோட்டுக் கத்தைகள் முதலில் இந்தச் சம்பவம் எங்கே நடந்தது என்பதைச் சொல்லியிருக்கவேண்டும்.
வடக்கே இமயபர்வதத்தின் அடியில் ஆசிரமம் அமைத்து இருந்துவரும் நித்யானந்த சுவாமிகள், தமிழ்நாட்டின் பல பாகங்களிலும் சுற்றுப்பயணம் செய்து சமய சம்பந்தமான பிரசங்கங்கள் நிகழ்த்தி வந்தார். ஆழ்ந்த கருத்துக்களை அடிகள் எடுத்துச் சொல்லி, படித்தவர், பாமரர் யாவருடைய மனத்திலும் பதிய வைத்துவிட்டு தக்க முறையில் அவர் கையாண்ட அமுதொழுகும் தமிழின் இனிமை, ஜனங்களை அவர் பால் இழுத்தது. ஒவ்வொரு ஊரிலும் நான் முந்தி, நீ முந்தி என்று போட்டி போட்டுக்கொண்டு சுவாமிகளை வரவேற்றார்கள்.
ஆஸ்திகப் பெருமக்களின் அத்தகைய அழைப்பு ஒன்றின் பேரிலே தான் சுவாமிகள் அந்த ஊருக்கு விஜயம் செய்து, அவ்வூர் பெரிய மடத்தில் நமது சிஷ்யர் குழுவுடன் தங்கி இருந்தார். அன்று அவர் நடத்திய பூஜைக்காக வளர்த்த ஓம குண்டலத்தில் தான் அப்படி ஒருவர் பணத்தைப் பணம் என்று கருதாமல் தூக்கி எறிந்து விட்டார்.
அதிர்ச்சி தரத்தக்க அந்தச் சம்பவம் நடந்தேறியதும் ஜனங்கள் பலவாறாக அதைப்பற்றி பேசினர்.
“இது பெரிய அக்கிரமம் சட்டப்படி இவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் நாட்டு நடப்பிலே சட்டத்தை லாவகமாக் கற்றுக்கொண்ட ஒரு விவகாரப்புலி. நெருப்பிலே எறியப்பட்ட பணம் பதினாராயிரம் இருக்கும் என்றார் ஒருவர்.
“இல்லை இருபதினாயிரம்” என்றார் இன்னொருவர்.
இந்தச் செய்தி எங்கெல்லாம் எட்டியதோ அந்த ஊரின் தூரத்திற்குத் தகுந்தபடி பணமும் ஐம்பதினாயிரம், அறுபதினாயிரம் என்று பெருகி இலட்சத்தையும், லட்சத்திசொச்சத்தையும் தொட்டி விட்டது.
பணம் நெருப்பிலே எறியப்பட்ட உடனே அங்கு நிலவி இருந்த அமைதி கலைந்துவிட்டது. சூழ்ந்து நின்ற அத்தனை பேரிடத்திலும் ஒருவித பரபரப்பு தென்பட்டது. அங்கு ஆசனமிட்டு அமர்ந்து யோகசமாதியிலே ஆழ்ந்திருந்த நித்தியானந்த சுவாமிகளும் கூட இதற்கு விதிவிலக்காக முடியவில்லை. ஓடும் செம்பொன்னும் ஒக்க நோக்கம் பக்குவம் பெற்றிருந்த சுவாமிகளின் உள்ளத்திலும் கூட எதிர்பாராத இந்தச் சம்பவம் ஒருவித அதிர்ச்சியை ஆச்சரியத்தை உண்டு பண்ணி விட்டதாகத்தான் தோன்றியது. அவர் புருவத்தின் நெளிப்பிலே இது புலப்பட்டது.
பணம் இதோ நெருப்பில் துச்சமாகத் தூக்கி எறிந்து, எரிந்து போன இப்பணம் மனிதனுடைய வாழ்வை எப்படி எல்லாம் மாற்றி அமைத்து விடக்கூடிய மகா வல்லமை உடையது என்னும் விஷயமும் பூர்வாசிரமத்தில் தனக்குத் தெரிந்த அத்தகைய சம்பவம் ஒன்று ஞாபகத்துக்கு வந்தது.
பார்த்திபனூர் பத்மனாபபிள்ளை பரம்பரையாகப் பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். எனினும் இப்பொழுது கொஞ்சம் கஷ்ட நிலைமையிலேயே இருந்தார். பத்து வருடங்களுக்கு முன்பு கூட பத்மனாபப் பிள்ளையின் கையில் ஏராளமாக பணம் புரண்டது. உதவி என்று வந்தவர்களுக்கு ஒரு பொழுதும் இல்லை என்று சொன்னதில்லை. தர்மம் என்று வந்தவர்களுக்கு புண்ணியவான் எண்ணிக் கொடுத்ததில்லை, அள்ளித் தான் கொடுத்தார்.
வரவர நாளடைவில் பத்மனாபபிள்ளையின் கை வறண்டது.தொட்டது எதுவும் துலங்கவில்லை. அப்படியும் இப்படியுமாக எப்படியோ கடனாளியாகிவிட்டார். அவர் சொத்தையும் விழுங்கி மேலும் பத்தாயிரம் கடன் ஆகிவிட்டதாக பேசிக்கொள்ளப்பட்டது. கடன் கொடுத்த காசுக்கடை ஆறுமுகம் செட்டியார் கண்டிப்பாகக் கேட்காவிட்டாலும் பத்மனாபபிள்ளையை கண்ட போது ஞாபகப்படுத்தத் தவறியதில்லை.
இந்தக் கடன் தொல்லையிலிருந்து மீள வழி தெரியாமல் தவித்தார் பத்மநனாபபிள்ளை. அவரிடம் பணம் இருந்தபோது யார் யாருக்கோ கொடுத்து உதவினார். அவருக்கு இப்பொழுது கூட ஞாபகம் வந்தது. சுமார் பத்து வருடங்களுக்கு முன் இங்கே பிழைக்க வழியில்லாமல் மலேசியாவிற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த சின்னக் காசிம் ராவுத்தர் பத்மநனாபபிள்ளையிடம் ஏதாவது பண உதவி கோரினார்.அப்பொழுது பத்மனாபபிள்ளை அவர் கையில் ஆயிரம் ரூபாயை கொடுத்து இதை வைத்து வியாபாரம் செய்யுங்கள். உங்களுக்கு நல்ல ஊதியம் கிடைத்து கொடுக்கக்கூடிய நிலைமை ஏற்பட்ட பிறகு கொடுக்கலாம். என்று பெரிய மனதுடன் ஆசீர்வதித்தும் அனுப்பினார். பெரிய சலாம் போட்டு வாங்கிக் கொண்டு போனார் ராவுத்தர். போனவர் போனவர் தான் பத்து வருடமாக ஒரு தகவலும் இல்லை.
பத்மநனாபபிள்ளைக்கு கடன் கொடுத்த ஆறுமுகம் செட்டியார் வழக்குத் தொடர்ந்தார். அதை காட்டிலும் வழக்குத் தொடரும்படி தூண்டப்பட்டார். பத்மநனாபபிள்ளையின் கௌரவத்தை உத்தேசித்து அவரை கோர்ட்டுக்கு இழுக்க ஆறுமுகம் செட்டியார் தயங்கினார். ஆனால், எத்தகைய உத்தமர்களுக்கும் இன்னல் உண்டாக்குவதில் சிலருக்கு அக்கறை வந்துவிடுமே. அப்படி பத்மநாப பிள்ளையின் மீது அக்கறை கொண்ட சிலர், ஆறுமுகம் செட்டியாரைத் தூண்டி வழக்கு தொடரச் செய்தார்கள். வழக்கிலே வாதாட ஒன்றும் இல்லை தன் சொத்து அனைத்தும் போக பாக்கி வந்த பத்தாயிரம் கடனுக்கு சிறைக்குள்ளே தள்ளப்பட்டார் பத்மனாபபிள்ளை.
சிறை சென்ற பத்மனாபபிள்ளை சில நாள் வரையில் மனம் ஒடிந்து கிடந்தார். நாளடைவில் சிறையில் தனிமையிலும் ஒரு நிம்மதி, ஒரு இனிமை, இருப்பதை உணர்ந்தார். புண்பட்டுப் போன அவர் உள்ளம் பண்பற்று வர ஆரம்பித்தது.
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்
என்று எப்பொழுதோ படித்த திருமூலரின் திருமந்திரத்திற்குப் பொருள் விளங்க ஆரம்பித்தது.
அகண்ட பிரபஞ்சத்தின் பொருள்களிலும் கலந்து கடந்து நிற்கும் மெய்ப்பொருளின் தன்மையை உணர ஆரம்பித்தார். மனிதன் தன் வாழ்நாளில் அடைய வேண்டிய செல்வம் பொன்னும் பொருளும் அல்ல. அவை எத்தனை நிறைந்திருந்தாலும் மனம் என்னவோ நிறையவில்லை. செல்வம் என்பது சிந்தையின் நிறைவு என்ற அந்தக் குறைவில்லாத நிறைவைப் பெறுவதிலேயே அவருடைய முயற்சி திரும்பியது. அத்தகைய நிறைவை அழிக்க வல்ல ஆண்டவனின் பக்தியாகிய பெருஞ்செல்வத்தின் கொள்கலமாகத் தன்னை மாற்றிக் கொண்டார், மாறிவிட்டார்.
இந்த நிலைமையில் அவர் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானம் தாங்காது மனமுடைந்து அவர் மனைவி இறந்து விட்டாள், என்ற செய்தி கூட அவரை அவ்வளவாகப் பாதித்துவிடவில்லை. உலகத்தோடு தன்னைப் பிணைத்த கடைசிப் பந்தமும் கழன்று விட்டதாகவே கருதினார். விரக்தி வைராக்கியம் பூரணத்துவம் பெற்றது.
தண்டனைக்காலம் முடிந்து பத்மனாபபிள்ளை விடுதலை அடைந்தார். அவருடைய வைராக்கியத்தைச் சோதிக்கக் கூடிய சம்பவம் ஒன்று சிறை வாயிலேயே ஏற்பட்டு விட்டது.
பத்மனாபப்பிள்ளையின் பண உதவி பெற்று மலேசியாவிற்கு போயிருந்த சின்னக் காசிம் ராவுத்தர் திரும்பி வந்திருந்தார். ஆனால் அவர் இப்பொழுது லட்சாதிபதியாகிவிட்டார். பத்மனாபபிள்ளை கொடுத்த ஒரே ஆயிரம் ரூபாயை வைத்து ஆரம்பித்த வியாபாரம் அப்படி பெருகிவிட்டது. தனக்கு உதவி செய்த தருமத் தயாளுவாகிய பத்மனாபபிள்ளை கடனுக்காக சிறை சென்று விட்டார் என்ற செய்தி கேட்டு ராவுத்தர் வருந்திச் சிறைவாயிலேயே வந்து காத்து நின்றார்.
பத்மனாபபிள்ளையின் காலடியிலே பதினாராயாரம் ரூபாயை வைத்து அதை ஏற்றுக் கொள்ளும்படி கெஞ்சினார். நீங்கள் கொடுத்து உதவிய பணம் தான் என்னை இன்று லட்சாதிபதி ஆக்கியிருக்கிறது. தங்களுக்கு கஷ்டம் நேர்ந்த காலத்திலே உதவ முடியாமல் போய்விட்டது. தயவு செய்து இப்பொழுது இதையாவது ஏற்றுக் கொள்ளுங்கள் என்று மனம் உருகக் கேட்டுக் கொண்டார்.
பத்மனாபபிள்ளை எவ்வளவு மறுத்துச் சொல்லியும் முடியவில்லை. உலகத்தில் உள்ள ஆசைகளை வென்று விட்டோம் என்று நினைத்திருந்த பத்மனாபபிள்ளைக்கு இது ஒரு புதிய பிரச்சினையை உண்டு பண்ணியது. யோசித்து அதற்கும் ஒரு வழிகண்டார். இரண்டு தினங்களில் அதே பணம் காசுக்கடை ஆறுமுகம் செட்டியாரின் கதவை வந்து தட்டியது அடியில் கண்ட குறிப்புடன்.
ஐயா தங்களுக்கு பாக்கி கொடுக்க வேண்டிய பதினாராயிரத்திற்கு நான் சிறை சென்றேன். எனினும் தங்களுக்கு பணம் செல்லானதாக என் மனம் ஒப்பவில்லை. ஆகையால் இத்துடன் உள்ள பதினாராயிரத்தையும் தயவுசெய்து ஏற்றுக்கொள்ள கோருகிறேன். பத்மனாபன்.
“இதோ இவர் தான் பணத்தை நெருப்பிலே எறிந்தவர்” என்ற சிஷ்யர்களின் வார்த்தைகள் நித்தியானந்த சுவாமிகளின் நினைவுச் சுழலை நிறுத்திவிட்டது. தன்முன் கைகட்டி நின்ற அம்மனிதரைப் பார்த்த சுவாமிகளின் கண்கள் அகல விரிந்தன. ஆச்சரிய மிகுதியில் “ஆஹா! தாங்கள் பார்த்திபனூர் ஆறுமுகம் செட்டியார் அல்லவா” என்று உரக்க கத்தி விட்டார்.
“ஆம் தங்களைச் சிறையிலே அடைத்து தங்களுக்கு அபராதம் விதித்த அதே பாவிதான்” என்று ஆறுமுகம் செட்டியார் சுவாமிகளின் பாதத்தில் அடியற்ற மரம் போல் விழுந்தார்.
சுவாமிகள் அவரைத் தூக்கி நிறுத்தினார். “தாங்கள் என்னைச் சிறையில் அடைத்ததை அபச்சாரம் என்று நான் கருதவில்லை. உபகாரமாகவே நினைக்கின்றேன். நான் சிறை சென்றிராவிடாவிட்டால் பந்த பாசங்களில் கிடந்து உழலும் பழைய பத்மனாபபிள்ளையாக தானே இருந்திருப்பேன். இன்று பக்தி பெருஞ்செல்வத்தினால் பெற்றுள்ள பேரானந்தப் பெரும் பேற்றை பெற்றிருக்க முடியுமா? என்று அன்பு தோய்ந்த குரலில் பேசினார்.
மனம் கனிந்து நின்ற ஆறுமுகம் செட்டியார் மேலும் கூறினார், “யாரோ சொல்லிய துர்போதனையைக் கேட்டு தங்கள் மீது வழக்குத் தொடர்ந்து தங்களை சிறைக்கும் அனுப்பிவிட்டோமே என்று மனம் நிம்மதி இல்லாமல் தவித்தேன். இந்த நிலைமையில் தங்களிடமிருந்து பணம் பதினாராயிரம் ரூபாய் வந்ததும் என் உள்ளத்தை மிகவும் சுட்டது. தங்கள் பெருந்தன்மைக்கு முன் நான் மிக மிக அர்ப்பனாகவே ஆகிவிட்டேன். மீண்டும் இந்த பணத்தை உங்களிடம் சேர்ப்பிக்க இத்தனை வருடங்களாக எங்கெல்லாமோ தேடி அலைந்தேன் கடைசியில் இந்த ஊரில் இந்தக் கோலத்தில் இரண்டு தினங்களுக்கு முன் தங்களை கண்டு கொண்டேன்.
நான் நேரில் வந்தால் ஒருவேளை மறுந்துவிடுவிர்களோ என்று நினைத்து நான் கொடுத்ததாகவும் இல்லாமல் வேறு யாரோ கொடுப்பது போல் இந்த பதினாராயிரத்தையும் ஆசிரம நிர்வாகத்திற்கு நன்கொடையாக ஏற்றுக் கொள்ளும்படி தங்களிடம் கேட்கும்படி ஆட்களை அனுப்பி இருந்தேன். ஆனால் சுவாமிகள் யாரிடமிருந்தும் எத்தகைய பண உதவியும் பெறுவது வழக்கமில்லை என்று கண்டிப்பாக மறுத்து விட்டார்கள். ஆகையால் வேறு வழி இல்லாமல் அந்தப் பணத்தை தங்கள் முன்னிலையிலே இப்படி நெருப்பிலே எறிந்தேன். என் உள்ளத்தைச் சுட்டதை இன்று சுட்டு எரித்துவிட்டேன். இத்தனை வருடங்களாக இருந்த என் மனச்சுமையையும் இன்றுதான் மடிந்தது தங்களுக்கு இழைத்துவிட்ட துன்பங்களுக்கு என்னை மன்னிக்க வேண்டும்” என்று மீண்டும் சுவாமிகளின் பாதத்தில் விழுந்தார். சுவாமிகள் அவரை தடுத்து நிறுத்தி அப்படியே ஆலிங்கனம் செய்து கொண்டார்.
நெருப்பிலே விழுந்த பணம் எரிந்து கருகி துகள்களாகி காற்றிலே மிதந்து மறைந்தது. நித்தியானந்த சுவாமிகளின் திருமேனி தீண்டப்பட்டதால் அவரிடமிருந்து ஞானாக்கினி ஆறுமுகம் செட்டியாரின் ஞான இருளைச் சுட்டெரித்து அடியோடு போக்கியது. அவர் உள்ளத்திலும் உண்மை ஒளி உண்டாக்கியது.
வாரம் ஒன்று சென்று நித்தியானந்த சுவாமிகளின் பரிவாரங்கள் வேறு ஊருக்கு புறப்பட்டன. அதில் ஆறுமுகம் செட்டியாரும் இருந்தார். ஆனால் அவரை இப்பொழுது அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. காரணம் அவர் காவி உடை அணிந்திருந்தார்.
வாழ்விக்க வந்தவள்
ஆழ்ந்த நித்திரையிலிருந்து கண் விழித்துப் பார்த்தேன். படுக்கையில் பாஸ்கரனை காணவில்லை. இந்த நள்ளிரவில் தனிமையில் சொல்லாமல் கூட எங்கே எதற்காக போயிருப்பான் என்று என் சிந்தனை என்னென்னவோ கோடி ஆரம்பித்தது விடியதற்கு சற்று முன் திரும்பி வந்தான்.
“எங்கே போயிருந்தாய்?” என்று கேட்டேன் ஏதோ சொல்லி மழுப்பிவிட்டான்.
இப்படி அன்று மட்டுமல்ல, அடிக்கடி அவன் வெளியே போய் வந்தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணத்தைப் புதிதாக, பொருத்தம் இல்லாததாக, கற்பனை செய்து சொல்லி வந்தான். அவனுடைய இதய அந்தரங்கத்தில் எதையோ அமுக்கி வைத்துக் கொண்டிருக்கிறான் என்பதையும் நான் அறிந்து கொள்ளாமல் இல்லை. கடைசியில் அவற்றையும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. நான் சந்தேகித்து கொண்டிருந்தபடி அந்த பங்கஜாவின் வீட்டிற்குப் போய் வந்து கொண்டிருக்கிறான் என்பதும் தெரிந்து விட்டது.
இந்தப் பங்கஜா என்பவள் அந்தக் காலத்தில் பெங்களூருவில் பிரபலமாய் விளங்கிய மோகனா என்ற தாசியின் மகள். ஆனால், இந்த பங்கஜா படித்தவள், கண்ணியமாய், ஒழுங்காய் வாழ்க்கை நடத்துகிறவள். என்றெல்லாம் யாரோ சொல்ல கேள்விப்பட்டிருந்தேன். கடைசியில் அவள் தாசி குணத்தை காட்டி விட்டாள் பாஸ்கரனை மயக்கி இழுத்துக்கொண்டு விட்டாள்.
பாஸ்கரனுக்குச் சொந்த ஊர் மானாமதுரை தான். எங்கள் வீட்டிற்கு பக்கத்து வீடு. பாஸ்கரனைப் பார்த்த யாரும் இவன் யோக்கியவன் அறிவாளி என்ற முடிவுக்கு தான் வர முடியும். அப்படியே நினைத்து தான் நீலமேகம் பிள்ளையும் தனது மகள் கல்யாணிக்குத் தகுந்த கணவன் பாஸ்கரனே என்று தெரிந்தெடுத்தார். தங்கள் அருமை மகளையும், பெரிய செல்வத்தையும், பாஸ்கரன் கையில் ஒப்படைத்து விட்டு, நீலமேகம் பிள்ளையும், அவர் மனைவியும் ஒருவர் பின் ஒருவராக நிம்மதியாக் கண்ணை மூடினார்கள்.
பாஸ்கரன் கல்யாணி தாம்பத்ய வாழ்க்கை முதலில் ஆனந்தமாகவும், அமைதியாகவும் அமைந்திருந்தது. காலப்போக்கில் கல்யாணி தன்னைச் சற்று அலட்சியமாகக் கருதுகிறாள் என்று பாஸ்கரன் மனதில் பட்டது. தானும் சம்பாதிக்க வேண்டும் மனைவியின் கையை எதிர்பார்த்து வாழக் கூடாது என்று நினைத்தான். இந்த நிலைமையில் ஏற்பட்ட ஏதோ ஒரு சிறு பூசல் காரணமாக பாஸ்கரன் அங்கிருந்து கோபமாய் கிளம்பி விட்டான்.
நான் அப்பொழுது பெங்களூரில் இருந்ததால் அங்கே வந்து சேர்ந்தான். நானே சொல்லித்தான் ஒரு கம்பெனியில் வேலை வாங்கிக் கொடுத்தேன். அதிலிருந்து இருவரும் ஒரே அறையில் வசித்து வந்தோம், தன் திறமையாலும் கண்ணியமான நடத்தையாலும், பாஸ்கரன் சீக்கிரமே நல்ல பதவிக்கு வந்து விட்டான். அவனுக்கு சம்பள உயர்வு உத்தியோக உயர்வும் கிடைக்கும் போதெல்லாம் எனக்கு சந்தோசமாகவும், பெருமையாகவும் இருந்தன. ஆனால் அவனுடைய இந்த நடத்தை?
மறுநாள் பாஸ்கரன் இடத்தில் பலமாகச் சண்டை போட்டேன். மௌனமாக தலைகுனிந்தபடி உட்கார்ந்திருந்தான். அன்று அப்படி இருந்தானே தவிர மாசுபடுந்துவிட்ட அவன் நடவடிக்கையை மாற்றிக் கொண்டதாக இல்லை. அது தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தது. என் முணுமுணுப்பும் அதிகமாகிக் கொண்டே வந்தது. என்னுடைய தொல்லை சகிக்க முடியாமலோ என்னவோ என் அறையைக் காலி செய்து கொண்டே போய் விட்டான் ஒருநாள். எங்கே போனான்? அங்கே தான் அவளுடைய வீட்டிலே போய் நிரந்தரமாக ஐக்கியமாகி விட்டான்.
இதற்கு மேலும் பிறர் விஷயத்தில் தலையிடக்கூடாது என்று நானும் ஒதுங்கி விட்டேன். எங்கேயாவது சந்திக்க நேர்ந்தாலும் பாஸ்கரன் என்னைப் பார்க்காதது போல் போய் விடுவான், நானும் நமக்கென வந்தது என்று நிறுவி விடுவேன்.
நாம் நினைக்கிற படி என்ன நடக்கிறது? லீவில் எங்கள் சொந்த ஊர் போயிருந்தேன். அப்பொழுது அந்தப் பெண் கல்யாணி என்னிடத்தில் வந்து முறையிட்டால் நான் தாய் தந்தை இழந்துவிட்டால் அனாதை அண்ணன் தம்பிகளுடன் பிறந்து அறியாத அபாகியவதி உங்களையே என் உடன்பிறப்பாக கருதி சொல்லுகிறேன் எப்படியாவது அவரைக் கொண்டு வந்து சேருங்கள்.
அவர் சம்பாதிக்க வேண்டும் என்பது என்ன இருப்பதை வைத்துக் கொண்டு இன்னும் எத்தனையோ தலைமுறை நிம்மதியாக வாழலாமே அவரை அந்த மோகினி பிசாசின் இரும்பு பிடியிலிருந்து விடுவித்துக் கொடுங்கள் என்று கெஞ்சினாள் முறையிட்டாள் அழுதழுது கண்ணீரை சிந்தினாள்.
மற்றவர்கள் விஷயத்தில் தலையிடக்கூடாது என்றிருந்த என் மனோதிடம் எல்லாம் அந்த பெண்ணின் கண்ணீர் முன் கரைந்து விட்டது எப்படியும் பாஸ்கரனை கொண்டு வந்து சேர்ப்பிக்கிறேன் என்று கல்யாணியிடம் வாக்குறுதி அளித்துவிட்டு நான் பெங்களூரு வந்தேன்.
பாஸ்கரனை சந்தித்து தனியாக ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று அவனுடன் பேசிப் பார்த்தேன் நீயே சதம் என்று நம்பி வந்த ஒரு பேதைப் பெண் நற்கறியாய் நிற்கிறாள் கவலையே உருவாக கண்ணீர் வடிக்கிறாள் நீயோ உன்னையும் உன் நிலைமையையும் உன் கடமையை மறந்து இந்த மோகினி மாயாஜாலத்தில் மனதை பறிகொடுத்து நினைத்தபடி தெரிகிறார் கல்யாணியை இப்படி புறக்கணித்து விட்டது பெரிய தவறு என்று ஏன் உன் புத்தியில் படவில்லை என்று சற்று கோபமாகவே கேட்டேன்.
பாஸ்கரன் அமைதியாகவே பதில் சொன்னான், ”மனைவி என்பவள் உற்றார் உறவினர்களால் இவள்தான் உன் கணவன் என்று சுட்டிக்காட்டிய பிறகு சந்தர்ப்பத்தினாலோ நிர்பந்தத்தினாலோ அன்பு செலுத்துகிறாள். நேசிக்கிறாள் ஆனால் அவள் என்னை முன் பின் அறியாதவள் இந்த மாபெரும் மனித வெள்ளத்தின் மத்தியில் என்னை தேடிப்பிடித்து என் காலடியில் தன்னையும் தன் திரண்ட சொத்தையும் அர்ப்பணித்திருக்கிறாள். என்னை தெய்வமாக போதிக்கிறாள் இவளை பொய் என்று எப்படி நான் புறக்கணிக்க முடியும், மாயை என்று எப்படி நான் மறக்க முடியும்” என்று கேட்டான்.
அவனுக்கு சரியான பதில் என்னால் அந்த சமயம் சொல்ல முடியவில்லை கோபம் தான் வந்தது. மாதம் ஒன்று சென்றிருக்கும் பாஸ்கரன் நோய் வாய்ப்பட்டு படுத்து இருக்கிறான் என்ற தகவல் வந்தது பார்க்கப் போயிருந்தேன் வாடிய முகத்துடன் வரவேற்றான் பாஸ்கரன். ஆஸ்பத்திரிக்கு கூட அனுப்பாமல் தன் வீட்டிலேயே வைத்து கவனித்து வந்தாள் பங்கஜம். அது மட்டுமல்ல வேலைக்காரர்கள் இருந்தும் கூட பாஸ்கரனுக்கு படுக்கை தட்டி போடுவது வேளா வேளைக்கு மருந்து கொடுப்பது முதலிய வேலைகளையும் பங்கஜமே கவனித்து வந்தாள்.
அவள் முகத்தில் ஒரு குடும்பத்தில் உள்ள மனைவிக்கு இருக்க வேண்டிய அத்தனை அக்கறையும் பொறுப்பும் இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன். பாஸ்கரன் என்னை பார்த்தான் அந்தப் பார்வையில் ‘இத்தகைய அன்புடன் என்னை கவனித்துக் கொள்ளும் இவளை பொய் வேஷம் போடுகிறாள் என்றெல்லாம் சொன்னாயே’ என்ற கேள்வி இருந்தது.
அங்கிருந்த சூழ்நிலையில் உடம்பை கவனித்துக் கொள் என்று சொல்வதைத் தவிர வேறு எனக்கு ஒன்றும் பேசத் தோன்றவில்லை இத்தகைய அன்பும் அன்யோன்யமாக இருக்கும் இவர்களை பிரித்து விட நாம் முற்படுவது பெரிய தவறு என்று நினைத்துக் கொண்டேன். அதைவிட பெரிய தவறு கல்யாணி இடம் பாஸ்கரனை கொண்டு வந்து சேர்ப்பதாக வாக்குறுதி அளித்தது! என்று என்னையே கடிந்து கொண்டேன்.
திடீரென்று பாஸ்கரன் ஒருநாள் என் அறைக்கு வந்தான் அவன் முகம் பார்ப்பதற்கே பயமாய் இருந்தது நான் என்ன விஷயம் என்று கேட்பதற்குள் அவனே சொல்லிவிட்டான் “பங்கஜா எனக்கு துரோகம் செய்துவிட்டு வேறு யாருடனோ ஓடிவிட்டாள்” என்றான். பாஸ்கரன் இல்லாத பொழுது அடிக்கடி ஒரு வடநாட்டுக்காரன் வந்து போய்க் கொண்டிருந்ததாகவும் அவனுடனே பங்கஜாவும் வடநாட்டுக்கு போய் விட்டதாகவும் தெரிய வந்தது. இந்த விஷயங்களை எல்லாம் அங்குள்ள வேலைக்காரர்களை விசாரித்து தெரிந்து கொண்டு வந்திருந்தான் பாஸ்கரன்.
எனக்கு உண்மையிலேயே இந்த தகவல் மகிழ்ச்சி அளித்தது. “இன்று உன்னை பிடித்த சனியன் நீங்கிட்ரு கிளம்பு” என்று பாஸ்கரனையும் அழைத்துக் கொண்டு மானாமதுரை வந்து சேர்ந்தேன். கல்யாணி இடத்தில் “அம்மா உனக்கு வாக்குறுதி அளித்தபடி உன் கணவனை கொண்டு வந்து சேர்த்து விட்டேன், இனிமேல் அவனை அந்த தூணிலே கட்டிப் போட்டு வை”.என்றேன்.
கல்யாணியின் முகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்றுதான் சிரிப்பை பார்த்தேன். அந்த சிரிப்பிலே நன்றியறிதல் நிறைந்திருந்தது சிறிது நேரம் கழித்து கல்யாணி நான் தனிமையில் இருக்கும்போது என்னிடம் ஒரு கடிதத்தை கொடுத்தாள். அக்கடிதம் பங்கஜவால் கல்யாணிக்கு எழுதப்பட்டிருந்தது.
“சகோதரி கல்யாணிக்கு,
உன் இன்ப வாழ்விலே எங்கிருந்தோ வந்து துன்ப நிழல் படிய வைத்து துயரம் கொடுத்த ஒரு பாவி என்று என்னை நீ நினைத்திருக்கும் பொழுது உனக்கே நான் கடிதம் எழுத துணிந்தது குறித்து நீ ஆச்சரியமும் அடையலாம், ஆனாலும் அப்படி எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டதாலேயே எழுதுகிறேன்.
நான் பலருடனே வாழ்ந்து பழக்கம் பெற்றுவிட்ட பரதையர் குலத்தின் வழி வந்தவள் தான் எனினும் கருத்தொருமித்த ஒரு கணவனை கைபிடித்து கண்ணியமாக வாழவே எண்ணி இருந்தேன். மணமாகாதவர் என்று உரைத்த உன் கணவரின் வார்த்தையை நம்பினேன். மனமார காதலித்தேன் நாட்கள் பல சென்ற பிறகே நான் மற்றொரு சகோதரிக்கு உரிய ஸ்தானத்தை அபகரித்து ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை அறிய முடிந்தது. ஆனால் அதே சமயத்தில் எங்களில் ஒருவரை ஒருவர் என்றுமே விட்டுப் பிரிய முடியாதபடி அன்பும் பாசமும் எங்களில் வேரூன்றி வளர்ந்து விட்டன. உரிமையுள்ள மனைவியைப் போல் என் மீது உயிரையே வைத்திருந்தார் உன் கணவர். ஆனாலும் என்றோ தம்பதியை தெய்வம் பிணைந்து வைத்துவிட்ட உங்களை நான் கூட வந்து பிரித்து வைப்பது பெரிய தவறு என்பதை அடிக்கடி என் முழு உணர்வு உணர்த்தியது, உறுத்திக் கொண்டும் இருந்தது.
என் மீது உன் கணவருக்கு ஏற்பட்டிருந்த மாறாத அன்பை எல்லாம் தீராத தேசமாக மாற்றி விடுவது இதற்கு சரியான வழி என்று கண்டு கண்டேன் அதற்காகவே நான் யாரோ ஒரு வடநாட்டுகாரனோடு ஓடி விட்டதாக என் வேலைக்காரர்கள் மூலம் நானே ஒரு கதையை கட்டி விட்டேன். உன் கணவர் மீண்டும் என்னை தேடியும் காண முடியாத தூரத்தில் வடநாட்டுக்கு எங்காவது போய் ஓர் அனாதை ஆசிரமத்தில் என் சொத்து அத்தனையும் ஒப்படைத்துவிட்டு அங்குள்ள அனாதைகளுடன் வாழவே எண்ணி உள்ளேன். என் வாழ்வு இனியது அற்ற நிலை குலைந்ததாலே இந்த நிர்ணயமற்ற பயணத்தை தொடங்குகின்றேன்.
உன் கணவர் என்னை ஒழுக்கம் கெட்டவள் என்று எண்ணிக் கொள்ளட்டும் உண்மை தெரிய வேண்டும் என்பதில்லை. உலகம் என்னை எப்படி நினைத்தாலும் அதை நான் பொருட்படுத்த போவதில்லை நீ மட்டும் என்னை எத்தகவியவள் என்பதை தெரிந்து கொண்டால் அதுவே போதும்.
கல்யாணி! கடந்து போனவற்றை கணவனை கருதி என்னை மன்னித்துவிடு மீண்டும் நீ என்னை என்றென்றும் நினைக்காமல் மறந்து விடு -.பங்கஜா.“
இந்த கடிதத்தை பாஸ்கரிடம் என்றும் காட்ட.வேண்டாம் என்று கல்யாணியை எச்சரித்து விட்டு வந்தேன்.
வருஷம் ஒன்று சென்று மீண்டும் லீவில் ஊர் போயிருந்த போது பாஸ்கரன் வீட்டிற்கு போய் இருந்தேன். கணவனும் மனைவியும் விழுந்து விழுந்து என்னை உபசரித்தார்கள். “என்ன உன்னை வெளியே பார்க்க முடியவில்லை” என்று பாஸ்கரனை கேட்டேன். “அது தான் கல்யாணி என்னை கட்டிப் போட்டு விட்டாலே” என்றான் பாஸ்கரன், சிரித்துக்கொண்டேன். கல்யாணியின் முகத்தில் பெருமை பிடிபடவில்லை கையில் பெண் குழந்தை ஒன்று இருந்தது.
“என்ன பெயர் வைத்திருக்கிறாய்?” என்றேன்.
“அதைக் கேள், கல்யாணியின் முட்டாள்தனத்தை! அந்த ஒழுக்கம் கெட்டு எங்கோ ஓடிப் போனவள் பெயரை வைத்து பங்கஜா என்று கூப்பிடுகிறாள் என்ன சொல்லியும் கேட்கவில்லை” என்று கத்தினான்.
‘ஐயோ அந்த உத்தமியை ஒழுக்கம் கெட்டவள் என்று சொல்லலாமா’ என்பதே போல் ஒரு அனுதாபம் கலந்த வேதனைக்குறி கல்யாணியின் முகத்தில் படர்ந்து மறைந்தது.
தன் வாழ்க்கை பாதையிலே வந்து கவிழ்ந்து கொண்ட பயங்கர இருளை நீக்கி தன்னை வாழ்விக்க வந்தவள் பங்கஜா என்பதனாலேயே தன் அருமை மகளுக்கு அவள் பெயரை வைத்திருக்கிறாள் என்று மனதில் பட்டது.
“என்ன மௌனமாய் இருக்கிறாய்? வேறு ஏதாவது பெயர் வைத்து விட்டு போ!” என்று பாஸ்கரன் என்னை மீண்டும் தூண்டினான்.
“இல்லை அந்த பெயரே இருக்கட்டும்!” என்று சொல்லி விட்டு வந்தேன்.
செண்பகச் சோலையின் ஓசை சித்திரம் - செவி கொடுங்கள் மனதை நிறைப்போம்
சதி
மகத நாட்டு மன்னன் சந்திரகுப்தனின் மாபெரும் சயினத்திற்கும், செலியூக சிகரட்டரின் கிரேக்க சேனைக்கும் இடையில் வெற்றி தோல்வியின்றி நீண்டு கொண்டிருந்த யுத்தம், நிலை மாற ஆரம்பித்த சந்திரகுப்தனை, யுத்த களத்தில் வீரர்களுக்கு இடையில் நின்று உற்சாகமூட்டி யுத்தத்தை நடத்தியதால் மகதநாட்டு வீரர்களின் மூத்தன்யமான தாக்குதலை கிரேக்க வீரர்கள் சமாளிக்க முடியாமல் தடுமாறினார்கள். சமாதானத்திற்கு வந்தான்.
சமாதான பேச்சின் போது தன்னிடம் இருந்த ஏராளமான செல்வங்களையும் ரத்தின குவியல்களையும் கொடுத்து ஹிந்துஷ் மலை வரையில் உள்ள நாட்டையுமே விட்டுக் கொடுக்க முன்வந்த போதும் கூட சந்திரகுப்தன் சமாதானத்திற்கு இணங்கி விடவில்லை ஆனால் தன்னுடைய விலைமதிப்பில்லாத மாணிக்கமாக கருதி காத்து வந்த அழகு மகள் ஹெலனை சந்திரகுப்தன் முன் நிறுத்தி இவளையும் எடுத்துக்கொள் என்று சொன்ன பொழுதுதான் மகத நாட்டு மன்னன் அவள் பேரழகை கண்டு பிரமித்து போனார். மறுமொழி ஏதுமின்றி சமாதானத்திற்கு சம்மதித்து விட்டான் ஹெலனையும் தன் மனைவியாக்கிக்கொண்டான்.
சமாதானமாகி சில நாட்கள் தெளிவாக சந்திரகுப்தனின் தலைநகரமாகிய பாடலிபுத்திரத்தில் தங்கி இருந்தான் பிறகு தன் நாடு திரும்பும் பொழுது தன் மகள் ஹெலனை பார்த்து அந்தரங்கமாக சில வார்த்தைகள் பேசினார்.
“அருமை மகளே!, நான் ஏற்கனவே நமது திட்டத்தை உன்னிடம் கூறிவிட்டேன் என்றாலும் மீண்டும் உன் மனதில் நன்றாக பதிய வைக்கவே இப்பொழுது சொல்கிறேன். நான் இப்படியே நம் நாடு திரும்பி போய் அங்கு இயன்ற அளவு இன்னும் பெரிதாக ஒரு சைனியத்தை திரட்டி கொண்டு வந்து மறுபடியும் இந்த மகத நாட்டை தாக்குவதாக நினைத்திருக்கிறேன். அப்படி நம் சைன்யம் வரும் பொழுது இங்கு நமக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படுத்திக் கொடுக்கவே உன்னை இங்கு இப்படி விட்டுப் போகிறேன்.
அந்த சமயத்தில் அவசியம் ஏற்பட்டால் இந்த சந்திரகுப்தனையே வஞ்சமாக கொலை செய்து விடக்கூட நீ தயாராக இருக்க வேண்டும். நம் திட்டத்தை சந்திரகுப்தன் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவனிடம் சிநேகம் கொண்டு விட்டது போல் நடித்து, உன்னையும் அவனுக்கு மனைவியாக ஆக்கி வைத்திருக்கிறேன்.
இதற்கிடையில், உன் சாகசத்தால் இந்த சந்திரகுப்தனை மயக்கி, உன் வசப்படுத்திட வேண்டும். இயன்ற அளவு அதிகாரங்களை எல்லாம் உன் கைக்கு கொண்டு வந்து விட வேண்டும். அதில் வெற்றி பெற்று விடுவாயா? ஜாக்கிரதையாக நடந்து கொள்வாயா?” என்று சிரத்தையுடன் பேசினான் செல்யூகஸ்.
“அப்பா தாங்கள் சொல்கிறபடி இந்த மகத நாட்டு மன்னனை என் இஷ்டத்திற்கு இழுத்துக் கொள்ள என்னால் இயலாது போய் விடுமோ என்று சந்தேகிக்கிறீர்களா?” என்று நிதானமாக கேட்டாள் ஹெலன்.
ஒரு கேலி சிரிப்புடன் பேசினான் செல்யூகஸ், “என் அருமை மகளே! என் அழகு செல்வமே! உன் போன்ற இளமையும், எழில் மிகுந்த பெண்களின் வேல் விழிகளுக்கு எத்தனையோ மகத்தான சக்தி உண்டு என்பதை அறியாதவன் அல்ல நான். உன் அழகுக்கு இந்த சந்திரகுப்தன் அடிமையாகத்தான் போகிறான். ஆனாலும்…”
“ஆனாலும், என்னப்பா?” என்று ஒரு புன்முறுவலுடன் கேட்டாள் ஹெலன்.
செல்யூகஸ், மேலும் பேசினான், “சந்திரகுப்தனும் நல்ல கட்டமைந்த வாலிபப் பருவத்தினன். ஒப்பற்ற சுத்த வீரன். அவனுடைய வீர சௌந்தரியமும் கம்பீரமும் உன்னை கவரும்படி விட்டுவிடாதே. அவன் உனக்கு அடிமையாக வேண்டுமே தவிர, நீ அவனுக்கு அடிமையாகி விடலாகாது! நாட்டிற்காக நீ இந்த தியாகத்தை செய்ய வேண்டும், கண்ணே!” என்றான்.
“நீங்கள் அதிகம் சொல்ல வேண்டாம் அப்பா! நானே மனமுவந்து இதைச் செய்கிறேன் என்று ஏற்றுக்கொண்டு விட்டேனே!” என்று உறுதிப்பாட்டுடன் பேசினாள்.
செல்யூகஸ் பெருமை கலந்த குரலில் பேசினான், ”ஆம் ஹெலன், வீர கிரேக்க மரபிலே வந்த உனக்கு இத்தகைய தியாக புத்தியும் துணிவும் திடீரென்று ஏற்பட்டதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இனி என் கனவு நனவாகி விடும் என்றே கருதுகிறேன்” என்று கூறிவிட்டு சந்தோஷ மிகுதியில் தன் மகளை அப்படியே கட்டித் தழுவி கொண்டான்.
அவளை அன்பு கனிய பார்த்தபடியே பேசினான், “என் செல்ல குழந்தையே கடைசியாக உன்னிடத்தில் இன்னும் சொல்ல வேண்டிய அதி முக்கியமான விஷயம் ஒன்று இருக்கின்றது. அதையும் சொல்லி விடுகிறேன்.இந்த சந்திரகுப்தனுக்கு சாணக்கியன் என்ற ஒரு மந்திரி இருக்கிறான். அந்தப் பரதேசி பையலுக்கு தெரியாத விஷயம் உலகத்திலே எதுவும் இருக்காது போலிருக்கிறது. உன் முகத்தை பார்த்தே நீ என்ன நினைக்கிறாய், இனிமேல் என்ன நினைக்க போகிறாய், என்பதையும் கூட அவன் கண்டு கொள்வான். மிக மிக ஜாக்கிரதை நடந்து கொள்ள வேண்டும். இயன்ற அளவு அவன் எதிரிலே நீ வராமல் பார்த்துக்கொள் நிச்சயமாக அவனுடன் எதுவும் பேச்சு வைத்துக் கொள்ளாதே“ என்று எச்சரித்தான்.
அதற்கு “ஆகட்டும் அப்பா! ஜாக்கிரதையாகவே நடந்து கொள்கிறேன்” என்று சுருக்கமாக பதிலளித்தாள் ஹெலன் பிறகு இருவரும் பிரிய மனமில்லாமல் பிரிந்தார்கள்.
ஐந்து ஆண்டுகள் சென்று மறைந்து விட்டன.செல்யூகேஸ் நிகேடரின் புதல்வனும் ஹெலனின் சகோதரனுமான ஃபிலிப்ஸ் மகத நாட்டிற்கு விருந்தினராக வந்தான். அரசாங்க மரியாதைகளுடன் ஆடம்பரமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பும் விருந்து உபச்சாரங்களின் தடபுடலும் சற்று குறைந்த பிறகு ஃபிலிப்ஸ், தனது சகோதரியிடம் அந்தரங்கமாக பேசிக் கொண்டிருந்தான்.
“ஹெலன்!, நான் உன் அரண்மனையில் இப்பொழுது விருந்து சாப்பிடுவதற்காக இங்கு வரவில்லை. நான் என்ன நோக்கத்தோடு இப்போது வந்திருக்கிறேன் என்பதை நீயே யூகித்திருப்பாய் என்று கருதுகிறேன்” என்றான்.
“நீ எதைப் பற்றி சொல்ல விரும்புகிறாய்? தயவு செய்து கொஞ்சம் விளக்கமாக சொல்! அண்ணா” என்றாள் ஹெலன். முகத்தில் ஒருவித கலவர கூறி தென்பட்டது.
“ஐந்து வருடங்களுக்கு முன் நமக்கும் இந்த சந்திரகுப்தனுக்கும் ஒப்பந்தமாகி உன்னையும் அவனுக்கு மனம் முடித்துவிட்டு நாங்கள் நாடு திரும்பும் பொழுது நமது தந்தை உன்னிடம் பேசியது ஞாபகம் இருக்கத்தான் வேண்டும். அன்று பேசிக்கொண்ட திட்டத்தின் படி இன்று ஒரு பெரிய படையை தயார் செய்து கொண்டு வந்திருக்கிறோம். அந்தப் படை யாருக்கும் தெரியாமல் ஹிந்துஷ் மலையின் பள்ளத்தாக்குகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் இங்கு ஏதாவது குழப்பத்தை எப்படியும் நாம் உண்டு பண்ணிவிட்டு நம் ஒற்றர்கள் மூலம் செய்தி அனுப்பினால் நம் சைன்யம் உடனே புறப்பட்டு வந்து இந்த பாடலிபுத்திரத்தையே கைப்பற்றிக் கொள்ளும். நமது புனிதமான கிரக்க நாட்டு பட்டுக்கொடி பாடலிபுத்திரத்திர அரண்மனை கோபுரத்தை அலங்கரிக்கும். இதற்கு முதலில் நாம் என்ன செய்ய வேண்டும், நீ என்ன ஏற்பாடுகள் செய்து வைத்திருக்கிறாய்? சொல் ஹெலன்!” என்று படபடப்பாக பேசினான் ஃபிலிப்ஸ்.
ஹெலன் சற்று நேரம் எதுவுமே பேசவில்லை, அவள் பார்வை தொலைவில் பதிந்து இருந்தது. பிறகு தொண்டை கம்மியாகிய குரலில் “அண்ணா உனக்கு நான் என்ன பதில், எப்படி சொல்வது என்றே தெரியவில்லை உன்னுடைய ஆர்வத்தையும் அவசரத்தையும் பார்க்கும்போது அச்சமாய் இருக்கிறது. நான் உங்கள் சதி திட்டத்திற்கு இணங்க மறுப்பதோடு மட்டுமல்ல அத்தகைய சதி எதுவும் நிறைவேற விடாமல் தடுக்கவும் நான் இப்போது தயாராகி விட்டேன் என்பதை நீ அறிந்து கொள்ளும் பொழுது உன் உணர்ச்சி எத்தகைய நிலைமை அடையுமோ நான் அறியவில்லை” என்றாள்.
“ஹெலன், நீ என்ன சொல்ல விரும்புகிறாய்?” என்று ஆத்திரமாக கேட்டான் ஃபிலிப்ஸ்.
ஹெலன் அமைதியை தருவித்துக் கொண்டு பேசினாள், “அண்ணா அன்று நம் தந்தை போட்ட திட்டத்திற்கு நானும் இசைந்தது உண்மை தான். நான் வாக்குறுதி அளித்ததையும் மறந்து விடவில்லை. ஆனால் இப்பொழுது என் மனம் மாறிவிட்டது. அமைதியும் ஆனந்தமும் மிகுந்த எங்கள் தாம்பத்திய வாழ்வை எக்காரணத்தை கொண்டும் பாழ்படுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை. எங்கள் அன்னியோன்ய உறவிலே கிட்டும் இந்த இன்பத்தை விட எத்தகைய பதவியும் எனக்கு பெரிதாக தோன்றவில்லை. அண்ணா! என் அருமை சகோதரன் என்ற முறையிலே கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன் உன் தங்கையின் வாழ்வை சிதைத்து விட நினைக்காதே. உன் தங்கை வாழ விரும்புகிறாள். இவளை வாழ்வதற்கு விட்டுவிடு. சதி, குழப்பம், யுத்தம் என்ற வார்த்தைகளை கேட்க கூட எனக்கு பிடிக்கவில்லை.”
ஃபிலிப்ஸ், பல்லைக் கடித்துக் கொண்டான் “ஹெலன்! அன்று உன்னை தந்தை எச்சரித்தது சரியாகி விட்டது சந்திரகுப்தனை மயக்குவதற்கு பதிலாக இன்று நீயல்லவா மதி மயங்கி அவனிடம் அடிமையாகி கிடக்கின்றாய்.“ என்றான்
“ஆம் அண்ணா! அப்படி அடிமையாகி விட்டதில் நான் பெருமை அடைகிறேன்” என்று கம்பீரமாக பதில் கொடுத்தாள் ஹெலன். “கிரேக்க நாட்டைச் சேர்ந்த செல்யூகஸின் மகள் என்பதை நீ மறந்து விடாதே ஹெலன்” என்றான் ஃபிலிப்ஸ்.
“அதே சமயத்தில் நான் மகத நாட்டு மன்னன், மௌரிய சந்திரகுப்தனின் அருமை மனைவி என்பதையும் மறந்துவிட முடியுமா சொல் அண்ணா” என்று ஆணித்தரமாக கேட்டாள் ஹெலன்.
கோபம் கொண்ட ஃபிலிப்ஸ் சற்று அடங்கியே பேசினான், “உன்னை குறை சொல்வதற்கு எதுவும் இல்லை எங்களுடைய குற்றம். பெண்கள் சபல புத்தி படைத்தவர்கள் என்பது யாவரும் அறிந்த விஷயம். அதில் நீ மட்டும் விதிவிலக்காக இருந்து விடுவாய் என்று நானும் தந்தையும் எதிர்பார்த்தது எங்களுடைய முட்டாள்தனம் என்று தான் சொல்ல வேண்டும். இங்கு உனக்கு கிடைத்துள்ள அரண்மனை வாழ்வும் சுகபோகமும் உன்னை எளிதில் கவர்ந்து உன் மனதை மாற்றி விட்டன.“
ஃபிலிப்ஸ் பேச்சை முடிப்பதற்குள் ஹெலன் குறிக்கிட்டு பேசினாள். “அண்ணா நீ நினைப்பதை போல் இங்கு குவிந்து கிடக்கும் இந்த செல்வம் கிட்டி விட்டதற்காக நான் பெருமைப் படவில்லை அதை காட்டிலும் விலைமதிக்க முடியாதது அன்பு என்னும் செல்வம். எனது அருமை கணவரிடம் இருந்து கிடைத்திருக்கிறது. அதை நான் எக்காரணத்தை கொண்டும் யாருக்காகவும் இழக்கச் சம்மதியேன்”
“ஹெலன் நீ என்னவெல்லாமோ கனவு காண்கிறாய். இந்த மகத ராஜ்ஜியமும் இந்த சந்திரகுப்தனும் என்றும் நிரந்தரமா நிலைத்து விடும் என்று நினைக்கின்றாயா? எத்தனையோ பெரிய சாம்ராஜ்யங்களும் இன்று இருந்த இடம் தெரியாமல் தேய்ந்து மறைந்து விட்டன உலகத்தையே கட்டி ஆள போகிறேன் என்று மார் தட்டிய மன்னாதி மன்னர்களும் மண்ணோடு மண்ணாய் போய்விடவில்லையா ஆகவே எதையும் சாஸ்வதம் என எண்ணி மனப்பால் குடிக்காதே” என்றான் ஃபிலிப்ஸ் குரோதம் நிறைந்த குரலில்.
ஹெலன் அமைதியாகவே பதில் சொன்னாள், “அண்ணா நீ என்னை இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. இன்று என் கணவரின் ராஜ்ஜியம் அவரிடம் இருந்து அபகரிக்கப்பட்டு அவர் காட்டிலோ குடிசையிலோ வாழ நேர்ந்தால், அவரை பின்தொடர்ந்து போய் அவருடன் வாழ்ந்து அவருக்கு தர்ம பத்தினியாக பணிவிடை செய்ய உன் தங்கை தயங்கமாட்டாள் அண்ணா. அல்லது நீ நினைப்பதை போல் யுத்தம் மூண்டு அவர் அதிலே வீர மரணம் எய்தினால், நானும் அவர் உடலை தழுவி கொண்டே என் உயிரை விடுவதை தான் நான் பாக்கியமாக கருதுவேன் அண்ணா!”
ஃபிலிப்ஸ் வேறு தந்திரத்தை கையாண்டு பார்த்தான். ஹெலனை உற்சாகப்படுத்தி பேசினான், “ஹெலன்! நீ மட்டும் எங்களுடைய திட்டத்திற்கு சம்மதித்து நடந்தாயானால் சரித்திரத்திலே உன் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். மன்னர் மன்னன் மகா அலெக்சாண்டராலும் சாதிக்க முடியாமல் விட்டுப் போன காரியத்தை ஒரு மங்கை தன் சாகசத்தால் செய்து முடித்தாள், என்ற பெயரும் பெருமையும் உனக்கு கிடைக்கும். அத்தகைய புகழை எல்லாம் இழந்து விடாதே!”
“அண்ணா! அப்படி சரித்திரம் எழுதப்படும் பொழுது, அந்த மங்கை அவள் மீது அன்பை சொரிந்து உயிரையே வைத்திருந்த, அவள் அருமை கணவனுக்கு துரோகம் செய்துவிட்டாள், என்றும் தானே எழுதப்படும்?”
இதற்கு பதில் எதுவும் உடனே சொல்ல இயலாமல் ஃபிலிப்ஸ் மௌனமானான். பிறகு, “ஹெலன்! நானும் என் தந்தையும் எப்படியில்லாமோ போட்டிருந்த திட்டத்தை, கட்டியிருந்த மனக்கோட்டையை உன் பிடிவாதம் என்ற ஒரே ஆயுதத்தால் தகர்த்து எறிந்து விட்டாய்!” என்று மனமுடைந்து பேசினான்.
ஹெலன்,”அப்படி நீ, நிராசை அடைந்துவிட வேண்டாம் அண்ணா. உனக்கு இந்த ராஜ்ஜியம் தானே வேண்டும்? நான் என் கணவரிடம் போய் நாட்டை என் சகோதரனுக்காக விட்டுக் கொடுக்கத்தான் வேண்டும் என்று கேட்பேனாகில், அப்போதே என் அருமை கணவர் இந்த மகத நாட்டை என் காலடியில் வைக்க தயங்க மாட்டார். அவருடைய தயாள குணத்தையும் வீரத்தையும் நான் அறியாதவள் அல்ல. என் மீது வைத்திருக்கும் அன்பிற்காக அவர் எதையும் செய்வார். பின்வாங்க மாட்டார்.”
“நீ அதிகப் பிரசங்கி ஆகிவிட்டாய் ஹெலன். நான் யாசிக்கவா வந்திருக்கிறேன்?” என்று ஆத்திரமாக பேசிய ஃபிலிப்ஸ், உட்கார்ந்து இருந்த இடத்தை விட்டு எழுந்தான். சற்று நேரம் கூண்டுக்குள் அடைபட்ட சிங்கம் போல் உலாவி கொண்டிருந்தான். அங்கு அமைதி நிலவியது.
பிறகு, தன் ஆசனத்தில் வந்து அமர்ந்தான். இப்பொழுது ஏதோ திட்டமான முடிவுக்கு வந்துவிட்டவன் போல் அவன் முகக்குறி காட்டியது. “என் அருமை தங்கையே! உன் தூய்மையான அன்பிற்கு முன் என் துரோக சிந்தனை மறைந்து விட்டது. என்னை மன்னித்துவிடு ஹெலன். உன் வாழ்வை சீர்குலைக்க நான் சதி செய்தேன் என்று நினைக்கும் போதே நாணத்தால் என் உடல் கூசுகிறது. உனக்கும் உன் கணவருக்கும் ஏற்பட்டுள்ள புனிதமான அன்பு பிணைப்பை எக்காரணத்தை கொண்டும் அறுத்துவிடுதல் யாராலும் முடியாது என்பதை இப்பொழுதுதான் உணருகிறேன்.”
“மேலும் அப்படி ஒரு சதி திட்டத்துடன் நான் வந்திருக்கிறேன் என்பதே யாருக்கும் தெரிய வேண்டாம். நான் இத்துடன் அதை பற்றியே மறந்து விடுகிறேன். நீயும் மறந்து விடு. ஏதோ விருந்தினராக நான் வந்ததை போல் இன்னும் சில நாட்கள் இங்கு தங்கி இருந்துவிட்டு போய்விடுகிறேன். உன் மனதில் ஒரு சலனத்தையும் சஞ்சலத்தையும் ஏற்படுத்தி விட்டதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினான்.
ஹெலன் ஆனந்த மிகுதியால், “அண்ணா…” என்ற ஒரு வார்த்தைக்கு மேல் எதுவும் பேச முடியாமல் தத்தளித்தாள்.
பாடலிபுத்திரத்து அரண்மனையில் பாரா மாறியது. நள்ளிரவு என்பதை அறிவிக்க எங்கிருந்தோ சங்கு ஒன்று அலறி ஓய்ந்தது.
வானவெளியின் மேற்கு விளிம்பில் அரைவட்ட சந்திரன் ஒளி இழந்து வதங்கிக் கொண்டிருந்தது.
அரண்மனை உப்பரிகையின் ஒரு பக்கத்தில், விசாலமான ஒரு பெரிய அறை. கீழே வர்ண விசித்திரமான மலர்களைத்தான் கொட்டிப் பரப்பி இருக்கின்றதோ என்று ஐயுறும்படியாக அத்தனை அழகான கம்பளங்கள் தரையில் விரிக்கப்பட்டிருந்தன. முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட பட்டு விதானத்தின் கீழ் அமைந்த தங்க கட்டில் ஒன்றில் சந்திரகுப்தன் நித்திரையில் ஆழ்ந்திருந்தான்.
பக்கத்திலே கிடந்த மற்றொரு கட்டிலின் மேல், ஹெலன் என்ற அத்தங்கநிறக் கொடி துவண்டு கிடந்தது. ஹெலன் நன்றாக உறங்கியதாக தெரியவில்லை, அடிக்கடி புரண்டு படுத்தாள். அப்படி அவள் புரளும் பொழுதெல்லாம், அங்கு தொங்கிய தூண்டாமணி விளக்கின் ஒளி பட்டு அவள் மார்பில் இருந்த இரத்தின ஹாரம் பளபளத்தது.
இப்பொழுது எங்கும் இருள் கவிழ்ந்து விட்டது. இருளிலே மறைந்து, மறைந்து ஒரு உருவம் அந்த அறையில் நுழைந்தது. அதன் கையிலே நீண்ட கூர்மையான வாள் இருந்தது. சற்று நிதானித்து தெரிந்து கொண்டு சந்திரகுப்தனின் படுக்கைக்கு சமீபம் வந்து நின்றது.
மறுகணம் தன் பலத்தை எல்லாம் திரட்டி அந்த நீண்ட வாளை சந்திரகுப்தனின் மார்பிலே ஆழமாக பாய்ச்சியது.
அதே சமயத்தில், “ஆ” என்ற அலறலுடன் ஹெலன் விழித்துக் கொண்டாள். தன் கணவன் குத்திக் கொல்லப்பட்டு விட்டான் என்பதையும், அந்த துரோக செயலை செய்தவன் தன் சகோதரனே தான் என்பதையும் கண்டு கொண்டாள்.
ஃபிலிப்ஸ் அறையை விட்டு வெளியே ஓடினான். “அடே! துரோகி!, இதோ நில்!” என்று அவன் மீது பாய்ந்து ஹெலன், அவனை பிடித்து நிறுத்தினாள்.” இதோ பார்! உன்னை பழிக்கு பழி வாங்குகிறேன். சண்டாளா! சதிகாரா! இத்துடன் ஒழிந்து போ!” என்று தன் கையில் வைத்திருந்த கட்டாரியை அவன் மார்பிலே பாய்ச்சினாள்.
அதே சமயத்தில் ஹெலனின் பின்புறமாக இருந்து ஒரு வலிமையான கரம் அவள் கையை தடுத்து நிறுத்தியது. பெண் புலி போல் சீறிக்கொண்டே பின்புறமாக திரும்பிப் பார்த்தாள் ஹெலன். அங்கு நின்றது சந்திரகுப்தனே தான்.
“தேவி! உன்னுடைய அழகிய மென்மையான கரத்தை எதற்காக கறை படுத்தி கொள்ள வேண்டும்? அவன் செய்த துரோகச் செயலுக்கு அரசாங்கம் உரிய தண்டனையை வழங்கும்” என்று எவ்வித சலனமும் இல்லாமல் பேசினான் சந்திரகுப்தன்.
அதற்குள் அரண்மனை காவலர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்து ஃபிலிப்ஸை பிடித்துக் கொண்டார்கள். ஃபிலிப்ஸின் மீதிருந்த பிடியை விட்டுவிட்ட ஹெலன், ஆச்சரியத்துடன் தன் கணவனை கூர்ந்து கவனித்தாள்.
“இது என்ன! நான் காண்பது கனவில்லையே! சற்றுமுன் நீங்கள் வாளால் குத்தப்பட்டு படுக்கையில் கிடந்தீர்களே!” என்று ஆச்சரியம் தாங்க மாட்டாமல் கேட்டாள் ஹெலன்.
சந்திரகுப்தன் ஹெலனையும் அழைத்துக்கொண்டு அவர்கள் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தான். இது என்ன பேராச்சரியம் அங்கு கட்டில் மீது சந்திரகுப்தன் நெஞ்சிலே கத்தியால் குத்தப்பட்டு இன்னமும் அப்படியே தான் கிடக்கிறான். இது என்ன இரண்டு சந்திரகுப்தர்களா! ஹெலன் ஓடி போய் கட்டில் மீது கிடந்த உருவத்தை தொட்டு அசைத்து பார்த்தாள்.
பிறகு தான் தெரிந்தது. அது மெழுகினால் செய்த ஒரு பொம்மை என்பது ஆச்சரியமும் ஆனந்தமும் அடக்க முடியாமல் ஹெலன் திகைத்து நின்ற போது சந்திரகுப்தன்,”தேவி! ராஜபாரம் என்பது இலகுவான காரியம் அல்ல. தன் நாட்டிலே ஒவ்வொரு மனிதனும் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதை அறிந்து கொள்வதோடு மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனின் இதய அந்தரங்கத்திலும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான், என்பதையும் அறிந்திருக்க வேண்டும்” என்று கூறினார்.
“சுவாமி! உங்கள் மதிநுட்பத்திற்கு ஈடாக இந்த உலகிலே யாரையும் சொல்ல முடியாது” என்று ஹெலனின் குரல் தழுதழுக்க கூறியது.
சந்திரகுப்தன், ”ஹெலன் உண்மையாக பார்க்கப் போனால் இந்த புகழுக்கு உரியவன் நான் இல்லை. எனக்கு மதி மந்திரியாகவும், குருநாதனுமாக வந்து வாய்த்திருக்கும் சாணக்கியர் என்ற அந்த மகான் தான் இந்த பெருமைக்கு எல்லாம் உரியவர். அவருடைய திறமையினால் தான் நான் இன்று இந்த மகதநாட்டு முடியை தலையில் வைத்துக் கொண்டிருக்க முடிகிறது. ஏன் இன்று இங்கு நான் உயிரோடு நிற்பதுமே அவர் அளித்த பிச்சை தான்” என்று பக்தி கலந்த குரலில் பேசினான்.
அந்த மேதையை நினைத்து தலை வழங்கினாள் ஹெலன். அப்படியே சந்திரகுப்தனின் அகன்ற மார்பகத்தில் தன் தலையை சாய்த்துக் கொண்டாள்.
செண்பகச் சோலையின் ஓசை சித்திரம் - செவி கொடுங்கள் மனதை நிறைப்போம்
விஷம்
அந்த நள்ளிரவில் யாரோ படபடவென்று கதவை அடித்தார்கள். நான் பரபரப்புடன் எழுந்து விளக்கை போட்டேன். என் நண்பன் டாக்டர் சந்திரன் கதவை திறந்தான். வெளியே வீட்டுக்காரர் வேதாச்சலம் முதலியார் நின்று கொண்டிருந்தார்.முதலியாரின் முகத்தை பார்க்கவே பயங்கரமாய் இருந்தது. என்ன விஷயம் என்று நாங்கள் கேட்பதற்குள் அவர் ஆரம்பித்தார் “ஐயா எனக்கு அவசரமாக ஒரு உதவி செய்ய வேண்டும் என் அருமை மகள் சாக கிடக்கிறாள். டாக்டர் சார் உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் ஏதாவது மருந்து கொடுத்து எப்படியாவது அவளைக் காப்பாற்றுங்கள்” என்று பரபரப்புடன் பேசினார்.
“அவள் உடம்பிற்கு என்ன?” என்று நாங்கள் இருவருமே ஏக காலத்தில் கேட்டோம்.
முதலியார் சொல்வதற்கு சற்று தயங்கினார். பின் “உங்களிடம் சொல்லாமல் என்ன அவள் விஷத்தை குடித்து விட்டாள், இல்லை அது கூட இல்லை நானே தான் அவளை பெற்று அருமையுடன் வளர்த்த இந்த பாவியே தான் விஷத்தைக் கலந்து அவளைக் குடிக்க வைத்து விட்டேன்” என்று மனிதர் தன்மையே மறந்து பேசினார்.
தாமதம் செய்யாமல் அறையில் கதவை பூட்டிக் கொண்டு நானும் சந்திரனும் அவரை பின் தொடர்ந்தோம்.
வேதாச்சல முதலியார் வியாபார வட்டாரங்களில் நல்ல வியாபகஸ்தர். கட்டிட காண்ட்ராக்டிலே நல்ல பணம் சேர்த்து வைத்திருந்தார். அல்லுச் செல்லு ஒன்றும் கிடையாது. ஒரே மகள். சுகவாச ஜீவனம். சென்னையிலே நாலு வீடுகள் இருந்தன. லிங்கிச்செட்டி தெருவில் அவர் வசித்த அவர் வீட்டின் மேல் மாடியில் தான் நானும் என் நண்பன் சந்திரனும் இருந்து வந்தோம்.
சந்திரன் டாக்டர் பரீட்சை பாஸ் செய்து விட்டு இப்பொழுதுதான் தொழிலை ஆரம்பித்து இருந்தான் வேதாச்சலம் முதலியாருடைய அந்த வீட்டின் மேல்மாடி முழுவதையும் வாடகைக்கு எடுத்திருந்தோம். அதில் ஒரு பகுதியில் அவனுடைய டிஸ்பென்சரி மற்றொரு பகுதியில் நானும் அவனும் வசித்தோம். ஹோட்டலில் சாப்பாடு. சந்திரன் ஆள் தான் வாட்டசாட்டமாய் இருப்பானே தவிர இன்னும் ஒரு கத்துக்குட்டி டாக்டர் தான்.
வேதாச்சலம் முதலியாரின் மகள் ரேவதி பல தடவைகளில் நான் பார்த்திருக்கிறேன். நல்ல பண்புமிக்கவளாகத்தான் தோன்றினாள். படித்து பட்டம் பெற்றவள் தான் என்றாலும் படாடோபம் கிடையாது நல்ல அழகி.
அந்த ரேவதியை பற்றி இன்னும் ஒரு செய்தியும் எங்கள் காதுகளுக்கு எட்டி இருந்தது. அவளுடன் காலேஜில் படித்த ஒரு இளைஞனை அவள் காதலித்ததாகவும் அநேகமாக கல்யாணமே நடைபெறப் போவதாகவும் பேச்சா இருந்தது. திடீரென்று அந்த பையன் வேறு யாரையும் மனம் செய்து கொண்டான் என்று தகவல் எட்டியது அந்த காரணத்தால் தான் இந்த பெண் இப்படி விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொள்ள துணிந்து விட்டாளோ என்ன பேதமை இது?
ரேவதி படுத்திருந்த அறைக்குள் எங்களை அழைத்துச் சென்றார் வேதாச்சல முதலியார். படுக்கையில் கிடந்தாள் ரேவதி. பெண்களின் அழகு அவர்கள் தூக்க மயக்கத்தில் இருக்கும் போது தான் அதிகமாக சோபிக்கும் என்று யாரோ எங்கேயோ சொல்லியிருப்பது என் ஞாபகத்திற்கு வந்தது. தூக்க கலக்கத்தின் காரணமாகவோ அல்லது அவள் உடலுக்குள் புகுந்திருந்த அந்த கொடிய விஷத்தினால் ஏற்பட்ட மயக்கத்தின் காரணமாகவோ துவண்டு குழைந்து கிடந்த அவள் உடம்பில் ஒவ்வொரு அவயத்திலும் அழகு மிதந்து திகழ்ந்து கொண்டிருந்தது.
இத்தனை எழில் மிக்க அந்த சௌந்தர்ய வதியின் வாழ்வு இவ்விதமாகவா வியத்தமாக வீணாக போய்விட வேண்டும்? பஞ்ச பூதங்களாகிய வர்ண கலவை கொண்டு படைப்பு தெய்வம் உலகப் படுதாவிலே தீட்டி வைத்த சிறந்த வண்ண ஓவியமும் இன்னும் ஒரு நொடியில் கால தேவன் என்னும் அந்த கலை உள்ளமற்ற கல் நெஞ்சன் கையில் பட்டு கசங்கி உருக்குலைந்து விழவே தான் போகிறதோ!
ரேவதியை படுக்கையில் இருந்து தூக்கி உட்கார வைத்தார் முதலியார். எழுந்து உட்கார்ந்த ரேவதி முதலில் தயக்கம் நிறைந்த விழிகளால் தன் தந்தையை பார்த்தாள். சந்திரனை சற்றே கூர்ந்து நோக்கினாள். பிறகு தொலைவில் தூரத்தில் சூனியத்தில் அவளது பார்வை சிறிது நேரம் நிலைத்து நின்றது. நீண்ட ஒரு பெருமூச்சுக்குப் பிறகு “அப்பா எதற்காக இவர்களை எல்லாம் இந்த அகாலத்தில் போய் சிரமப்பட்டு அழைத்து வந்திருக்கிறீர்கள் நமது துன்பம் நம்மோடே இருக்கட்டுமே” என்று சோகம் கலந்த ஈன ஸ்வரத்தில் பேச முடியாமல் பேசினாள்.
“அம்மா ரேவதி அப்படியெல்லாம் எதுவும் சொல்லாதே. இதோ டாக்டர் வந்திருக்கிறார். உடனே ஏதாவது ஊசி போட்டுக் கொள். தாமதிக்காதே பேசவோ விவாதிக்கவோ இது நேரமில்லை” என்று துரிதப்படுத்தினார் முதலியார்.
“அப்பா என் வாழ்நாளிலேயே முதல் தடவையாகவும் கடைசி தடவையாகவும் உங்கள் வார்த்தையை இன்று மீறத்தான் போகிறேன். நான் மருந்து குடிக்கவும் முடியாது. ஊசி போட்டுக் கொள்ளவும் மாட்டேன். நான் வேண்டுமென்று விரும்பித்தானே மரணத்தை வரவழைத்துக் கொண்டேன். பின் எதற்கு இந்த சிகிச்சை எல்லாம்” என்று உறுதியோடு பேசினாள். அவள் முகத்திலே படர்ந்து இருந்த அந்த உறுதிப்பாட்டை யாராலும் மாற்ற முடியாது போல் தான் தோன்றியது.
ஆனால் அப்பொழுது முதலியார் போட்டாரே பார்க்கலாம் ஒரு அணுகுண்டை,”இதோ பார் ரேவதி நான் சொல்கிறபடி நீ உடனே வைத்தியம் செய்து கொள்ளவில்லை என்றால் நீ எந்த விஷயத்தை குடித்து இருக்கிறாயோ, அந்த விஷத்தில் இன்னும் ஒரு பொட்டலம் இதோ வைத்திருக்கிறேன். இதை இங்கேயே கலக்கி உன் முன்னிலையிலேயே நான் குடித்து விடுகிறேன். நான் மட்டும் சாக பயந்தவன் என்று நினைக்கிறாயா” என்று ஆத்திரத்துடன் கோபத்துடனும் பேசினார்.
ரேவதி அப்படியே அசந்து போனாள் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை கண்களிலே கண்ணீர் மல்க “சரி அப்பா! உங்கள் இஷ்டம் நான் ஊசி போட்டுக் கொள்ளத் தானே வேண்டும். இந்தாருங்கள் டாக்டர்” என்று தன் கையை டாக்டர் சந்திரனிடம் நீட்டினாள்.
சந்திரன் விரைவிலேயே ரேவதியை பரிசோதித்துப் பார்த்துவிட்டு வேதாச்சலம் முதலியார் வைத்திருந்த அந்த விஷப்பொடியையும் வாங்கிப் பார்த்தான். ”அடேயப்பா மிகக் கொடிய விஷயமாயிற்றே இது. இதை குடித்துவிட்டு இதுவரை பிழைத்து இருப்பதே ஆச்சரியம்தான். சரி இதற்கு சரியான மாற்று மருந்து கொடுக்க வேண்டும். வேறு மருந்து கொண்டு வருகிறேன்” என்று அவன் மேல்மாடிக்கு போக கிளம்பினான்.
அவனை ஊசி போடுவதற்கான மற்ற வேலைகளை கவனிக்க சொல்லிவிட்டு ஒரே தாவலில் நானே மாடிக்கு போய் அவன் குறிப்பிட்ட மருந்தை எடுத்து வந்து கொடுத்தேன். உடனே ஊசியை போட்டான் உள்ளே மருந்தும் கொடுத்தான் அந்த மருந்தையே இரண்டு மணிக்கு ஒரு தரம் கொடுக்கும்படி முதலியாரிடம் கலந்து கொடுத்துவிட்டு அவனும் நானும் அந்த அறையை விட்டு வெளியே வந்து ஹாலில் உட்கார்ந்தோம்.
ஆனால் இத்தனைக்கும் இடையில் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது முதலியார் தானே அந்த விஷயத்தை கலந்து தன் மகளுக்கு கொடுத்து விட்டதாக சொன்னார்.ஆனால் ரேவதியோ அவளே விரும்பித்தான் விஷத்தை குடித்து விட்டதாக கூறினாள். இதில் எது உண்மை இவர்கள் ஏன் இப்படி பேச வேண்டும் இதையெல்லாம் அறிந்து கொள்ளாமல் அங்கிருந்து போக எனக்கு இஷ்டமே இல்லை. என் நோக்கத்தை அறிந்து கொண்டவர் போல முதலியார் எங்களை உட்கார வைத்து அத்தனை விவரத்தையும் சொன்னார்.
நாங்கள் கேள்விப்பட்டிருந்த படி ரேவதிக்கும் ராகவன் என்ற அவளுடன் படித்த ஒரு வாலிபனுக்கும் காதல் ஏற்பட்டு இருந்தது உண்மை தான். ராகவன் ஒரு பெரிய சர்க்கார் உத்தியோகஸ்தரின் மகன். ராகவனும் ரேவதியும் மணம் செய்து கொள்வதற்கு இரு தரப்பிலும் சம்மதம் கிடைத்துவிட்டது கல்யாணத்திற்கு நாள் குறிப்பிட வேண்டியதுதான் பாக்கி. இந்த நிலையில் வேதாச்சலம் முதலியாரின் பூர்வாசரம் வாழ்க்கையை பற்றிய வரலாறு ஒன்று வெளியானது.
வேதாசல முதலியாரும் ஆரம்ப காலத்தில் சர்க்கார் உபயோகம் பார்த்தவர் தான் அப்பொழுது இவர் மீது லஞ்ச கேஸ் ஒன்று தொடரப்பட்டு அது நிரூபிக்கப்பட்டு விட்டது. அவர் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதுடன் சிறிது காலம் சிறையிலும் இருக்க வேண்டி இருந்தது அதற்கு பிறகு தான் முதலியார் தம் சொந்த ஊராகிய திருநெல்வேலி ஜில்லாவை விட்டு கிளம்பி சென்னைக்கு வந்தார். வந்த இடத்தில் கொஞ்ச நாட்களிலேயே பணம் சேர்ந்து விட்டது பெரிய மனிதராகவும் ஆகிவிட்டார் அந்த பழைய சம்பவம் அனேகமாக மறைந்து மறந்து போன விஷயமாகவே நினைத்து கொண்டு இருந்தார் முதலியார். அது திடீரென இந்த சமயத்தில் வந்து முளைத்தது.
ராகவனின் தந்தை இத்தகைய இடத்தில் சம்பந்தம் வைத்துக்கொள்ள இஷ்டப்படவில்லை தன் தந்தையின் பேச்சை தட்ட முடியாத ராகவன் அவர் குறிப்பிட்ட வேறு ஒரு பெண்ணையே மணந்து கொண்டான்.
முதலியார் மனம் உடைந்து போய் வீட்டிற்குள்ளே அடைந்து கிடந்தார். தம் மகளின் வாழ்விற்கு குந்தகம் ஏற்படுவதற்கு அவரே காரணமாகி விட்டார் மேலும் அவர் பழகிய வட்டாரங்களிலும் அவருக்கு இருந்த அந்தஸ்து குறைந்து விட்டது இதனாலெல்லாம் அதற்கு மேலும் உயிர் வாழ பிடிக்காமல் தன் உயிரை முடித்துக் கொள்ள முடிவு செய்துவிட்டார்.
அன்று இரவு எல்லோரும் படுத்த பிறகு முதலில் யார் தாம் என்று மகளுக்கு சுருக்கமாக ஒரு கடிதம் எழுதினார்.
“எனது அருமை மகள் ரேவதி, உன் வாழ்க்கையில் மாறாத துன்ப நிழல் படிவதற்கு காரணமாகி விட்ட எனக்கு இந்த உலகத்தின் முகத்திலே விழிக்கவே வெட்கமாய் இருக்கிறது. நானே பாலில் விஷத்தை கலந்து குடித்து விட்டேன். உன்னை யார் துணையும் இன்றி தனித்து விட்டு செல்கிறேன் என்பது ஒன்றே என் வருத்தம். நீ படித்தவள் பணம் இருக்கிறது எப்படியும் பிழைத்துக் கொள்வாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது உன் தந்தை”
கடிதத்தை மடித்துவிட்டு பாலிலே விஷத்தை கலக்கும் போது வீட்டு வெளி கதவை தட்டும் சத்தம் கேட்டது. அப்படியே டம்ளரை வைத்து விட்டு வெளியே வந்தார். வந்தவரை விசாரித்து அனுப்பி பின் மீண்டும் தம் அறைக்குள் வந்தார் முதலியார். ஆனால் ஆச்சரியம் பால் பாத்திரம் காலியாய் இருந்தது அவர் ரேவதிக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தின் கீழே வேறு என்னவோ எழுதி இருந்தது. அதை ரேவதியின் கையெழுத்து தான்.
“என்னால் ஏற்பட்ட துன்பத்தை என் உயிரைப் போக்கியே துடைத்துக் கொள்கிறேன். நீங்கள் விஷம் கலந்து வைத்திருந்த பாலை நானே குடித்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் - ரேவதி”
முதலியார் அறையை விட்டு வெளியே போன அதே நேரத்தில் கதவு தட்டிய சப்தம் கேட்டு ரேவதியும் எழுந்திருக்கிறாள். தன் தந்தையின் அறையில் விளக்கு எரிவதை பார்த்துவிட்டு அங்கே வந்திருக்கிறாள் பிறகு தான் அப்படி நடந்து கொண்டிருக்கிறாள்
அவ்வளவுதான்! முதலியார் அலறி அடித்துக் கொண்டு ரேவதி படுத்திருந்த அறைக்குள் ஓடி வந்து அவளை கட்டிக்கொண்டு கதறி இருக்கிறார் மேலே வந்து எங்களையும் அழைத்துப் போய் இருக்கிறார்.
இவ்வளவு விவரங்களையும் முதலியார் எங்களிடம் சொல்லிவிட்டு இதையெல்லாம் தயவு செய்து வெளியிலே யாரிடமும் சொல்லி விடாதீர்கள் என்று திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டார்.
மறுநாளும் சந்திரன் போய் ரேவதிக்கு மருந்து கொடுத்து விட்டு வந்தான். ஆபத்து குறைந்துவிட்டது என்றாலும் அவள் இன்னும் பலவீனமான நிலையிலேயே படுத்திருந்தாள்.
எனக்கு அன்று மாலையே வெளியூர் போகவேண்டிய அவசர வேலை இருந்ததால் நான் போய்விட்டேன் போன இடத்தில் பத்து நாட்களுக்கு மேல் தங்க வேண்டியது ஏற்பட்டு விட்டது தங்கிவிட்டேன். அங்கு இருக்கும்போது ரேவதி என்ன ஆனால் என்ற எண்ணம் ஏற்பட்டு கொண்டே தான் இருந்தது.
கடைசியில் நான் பயந்தபடி தான் நடந்து விட்டது. திடீரென எனக்கு ஒரு அவசர தந்தி வந்து இருந்தது. சந்திரன் தான் கொடுத்திருந்தான். “நிலைமை மிகவும் ஆபத்தாகி விட்டது உடனே புறப்பட்டு வா” என்று கொடுத்திருந்தான்.
என் வேலைகளை எல்லாம் அப்படியே போட்டுவிட்டு அவசரமாக அன்றே சென்னைக்கு ஓடி வந்தேன்.
நான் வீட்டை நெருங்கும் பொழுதே வாசலில் வேதாச்சலம் முதலியார் நின்று கொண்டிருந்தார். மனிதர் முகத்தில் ஈயாடவே இல்லை. என்னை கண்டதும் என்னுடன் பேச விரும்பாதவர் போல் உள்ளே போய்விட்டார்.
என்னவோ விபரீதம் நடந்து விட்டது என்று எனக்கு நிச்சயமாய் தெரிந்தது மாடிக்கு அவசரமாய் ஓடினேன் அங்கு டிஸ்பென்சரையும் கூட திறக்காமல் சந்திரன் அறையின் ஒரு மூலையில் இடிந்து போய் உட்கார்ந்து இருந்தான் என்னை கண்டதும் கொஞ்சம் தெம்பு ஏற்பட்டவன் போல் காணப்பட்டவன் எழுந்து வந்து “எவ்வளவு முயன்றும் முடியவில்லை மிக ஆபத்தான நிலைமையில் இருக்கிறாள்” என்றான்.
“உன்னால் முடியாது என்பதை முதலிலேயே சொல்லியிருந்தால் அவர்கள் வேறு டாக்டரை கொண்டு பார்த்திருப்பார்கள் அல்லவா” என்று கேட்டேன் என்னை அறியாமலேயே என் குரலில் கடுமை கலந்திருந்தது.
“அவள் மிகக் கொடிய விஷத்தை குடித்து விட்டாளே என்று நானும் சுத்தமான குழாய் தண்ணீரை மட்டுமே மருந்து,மருந்து என்று கொடுத்தேன் அப்படியும் குணமடையவில்லை நான் என்ன செய்வது” என்று சொல்லிவிட்டு சிரித்தான் சந்திரன்.
அவனுடைய பேச்சும் சிரிப்பும் அப்போதைய சந்தர்ப்பத்திற்கு பொருத்தம் இல்லாது இருக்கிறதே என்று சந்திரனை வெறித்துப் பார்த்தபடியே “நீ என்ன பேசுகிறாய்” என்று இன்னும் கோபமாக கேட்டேன்.
“அட நீ ஒரு பைத்தியக்காரன் அவள் விஷத்தை குடித்து இருந்தால் தானே நான் மருந்தை கொடுப்பதற்கு. அத்தனையும் பச்சை பொய், பகல் வேஷம் நான் பார்த்ததில் போய்விட்டது என்று நீ என் பிரார்த்தனை வாங்குகிறாயே. முதலில் இப்படி உட்கார் சொல்கிறேன்” என்று என் தோளை பிடித்து கீழே உட்கார வைத்துவிட்டு விவரமாய் சொன்னான் சந்திரன்.
அன்று நீ மருந்து எடுப்பதற்காக மாடிக்கு வந்துவிட்ட அதே சமயத்தில் கொஞ்சம் வெந்நீர் வேண்டுமென்று தன் தந்தையை அங்கிருந்து போக செய்து விட்டு ரேவதி என்னிடம் உண்மையை கூறிவிட்டாள். “டாக்டர் சார் நான் உண்மையில் விஷத்தை குடிக்கவில்லை. விஷம் கலந்த பால் இன்னும் இதோ இருக்கிறது இதை உங்கள் முன்னிலையிலே முதலில் கொட்டி விடுகிறேன்” என்று எழுந்து ஜன்னல் வழியாக வெளியே பாலை கொட்டி விட்டு வந்து மேலும் சொன்னாள், “நான் விஷத்தை குடிக்கவில்லை என்றாலும் என் தந்தையின் தற்போதைய மனநிலையை மாற்றி அவருடைய கவனத்தை வேறு வழியில் இழுப்பதற்காகவே, இப்படி நான் விஷத்தை குடித்துவிட்டதைப் போல் நடிக்கிறேன். நீங்களும் தயவுசெய்து டாக்டராக நடித்தால் மட்டும் போதும் எதுவும் மருந்து கொடுத்து என்னை கொன்று விடாதீர்கள். இந்த ரகசியம் தங்களுக்கு மட்டும் தெரிந்ததாக இருக்கட்டும்” என்று கெஞ்சி கேட்டுக் கொண்டாள் என்றான்.
“அடப்பாவிகளா நீங்கள் ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்து அடித்த கூத்து தானா இது. ஊரையே பைத்தியமாக்கி விட்டீர்களே. அன்று அவள் விஷத்தை குடித்துவிட்டு சகா கிடக்கிறாளே, ஐயோ பாவம் என்று அவளுக்காக நான் எத்தனை வருத்தப்பட்டு விட்டேன்” என்றேன்.
சந்திரன் சொன்னான்,”அதற்கு ரேவதி என்ன சொல்கிறாள் தெரியுமா? அப்படி விஷத்தை குடித்துவிட்டு சாக என்ன அவசியம் ஏற்பட்டுவிட்டது வாழ்க்கை வாழ்வதற்கே என்றபடி சந்தோஷமாய் வாழ வாழ்க்கை பாதையை வகுத்துக் கொள்ள எனக்கு தெரியும். முடியும் என்றெல்லாம் அவள் தன்னம்பிக்கையோடு பேசுகிறாளே” என்றான்.
“ரேவதி யாரோ காதலித்ததால் அவன் கைவிட்டு விட்டான் என்பதற்காக மனம் உடைந்து போயிருக்கிறாள் என்பதெல்லாம் கூட நடிப்பு தானா.”
“அதுதான் அவள் சொல்கிறாளே, நான் அவரை விரும்பியது என்னவோ உண்மைதான். எங்களுக்குள் பரஸ்பரம் அன்பும் இருக்கத்தான் செய்தது ஆனால் என்றோ என் தந்தை செய்து விட்ட தவறுக்காக என்னை புறக்கணித்துவிட்ட அவரை காதலர் என்று எப்படி சொல்ல முடியும்? காதல் என்ற தெய்வீகமான பதத்திற்கு பொருள் தெரியாதவர்கள் தான் அப்படி நினைக்கக் கூடும்” என்கிறாள் என்றான்.
“அதெல்லாம் சரிதான் ரேவதி இதையெல்லாம் உன்னிடம் சொல்லி வேண்டிய அவசியம் என்ன வந்தது”
“ஒருவேளை காதல் என்ற தெய்வீகமான பதத்திற்கு பொருள் தெரிந்து கொள்வதற்காக இருக்கும்” என்று சொல்லி விட்டு அமர்த்தலாக சிரித்துக் கொண்டே “இந்த கடிதத்தை படி எல்லாம் தெரியும்” என்று என் கையில் ஒரு கடிதத்தை கொடுத்தான் அதை ரேவதி தான் எழுதியிருந்தாள்.
“அன்புள்ள டாக்டர், நம் நாடகம் ஒரு ஆபத்தான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை தங்களுக்கு எச்சரிக்க விரும்புகிறேன் என் நாடியை பிடித்து பார்க்கிறேன் என்று என் தந்தை அருகில் இருப்பதையும் மறந்து, என் கையை பிடித்தபடியே கால் மணி அரை மணி என்று உட்கார்ந்து விடுகிறீர்களே.கையை விட்டு விடும்படி நான் சமிக்கை செய்தால் பிடி இன்னமும் இருகுகிறதே தவிர தளர்வதாக இல்லை. என் நாடி பிடித்து என் ரத்த ஓட்டத்தை அளந்து அறிவதை காட்டிலும் என் மன ஓட்டத்தை இதற்குள் நீங்கள் தெரிந்து புரிந்து கொண்டிருந்தால் அதுவே போதும்.என் அன்பிற்குரிய டாக்டர் அதுவே போதும்.”
“அன்று என் தந்தை கலந்து வைத்த விஷம் என் கைக்கு வந்த போது அப்படியே குடித்து உயிரைப் போக்கிக் கொள்ளலாமா என்ற அளவுக்கு என் மன குழப்பம் இருக்கத்தான் செய்தது. யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் என் தந்தை அங்கு வந்து விட்டார் பின்பு நீங்களும் வந்தீர்கள். உங்களைப் பார்த்த பிறகு விஷத்தை குடிக்காமல் இருந்தது எவ்வளவு நல்லதாய் போயிற்று என்ற எண்ணம் எப்படியோ என் உள்ளத்திலே எழுந்தது. அத்துடன் இன்னும் வாழ வேண்டும் என்று ஆசையும், வாழ முடியும், என்ற நம்பிக்கையும் கூட என் இதயத்திலே இடம் பெற்றன.”
உண்மையில் விஷத்தை குடிக்கவில்லை என்ற என் ரகசியத்தை உங்களிடம் மட்டும் டாக்டர் என்ற முறையில் இல்லை வேறு ஏதோ ஒரு காரணத்தால் சொன்னேன். நான் விஷத்தை குடிக்கவில்லை என்று சொன்ன மாத்திரத்தில் உங்கள் முகம் மலர்ந்ததைக் கண்டு அப்போதே என் மீது உங்களுக்கு அத்தனை அக்கறையும் அன்பும் ஏற்பட்டு இருக்கிறது என்பது தெரிந்து ஆனந்தம் எய்தினேன்.”
“அன்று நான் விஷத்தை குடிக்கவில்லை என்பது என்னவோ உண்மைதான் ஆனால் அதைவிட ஆயிரம் மடங்கு அதிகமாய் பரவக்கூடியதும் மிக மிக பயங்கரமானதும் ஆபத்தும் ஆனதுமான ஒரு கொடிய விஷம் என் உடலிலே புகுந்து விட்டது. வைத்தியத்திற்கு என்று தாங்கள் வந்து என் கரம் பற்றிய அன்று தான் அப்பொழுது தான் அந்த விஷம் என் உடலிலே உள்ளத்திலே புகுந்து விட்டது. அது முதல் வினாடிக்கு வினாடி அதன் வேகம் வளர்ந்து வேதனையும் மிகுந்து கொண்டே வருகிறது.”
“இந்த தீராத நோயை தீர்த்துக் கொள்ள என் வாழ்நாள் எல்லாம் நிரந்தரமாய் உங்களிடமே வந்து உங்கள் கைப்படவே சிகிச்சை பெற்றுக் கொள்வதை தவிர வேறு வழியே இல்லை. அதற்கு விருப்பம் இருப்பின் ஆம் என்று சொல்லி நாம் நடிக்கும் இந்த நாடகத்தை முடித்து வையுங்கள் இல்லையேல் என்னையே முடித்து விடுங்கள் - ரேவதி”
கடிதத்தை படித்து முடித்துவிட்டு சந்திரனை பார்த்தேன். ரேவதியின் உடலுக்குள்ளே புகுந்திருக்கும் அந்த ஆபத்தான பயங்கரமான கொடிய விஷம் சந்திரன் உடலுக்குள்ளும் புகுந்து விட்டது என்பது அவன் நெற்றியில் எழுதி ஒட்டி இருந்தது. அவன் தந்தி கொடுத்து இருந்தபடி என் நிலைமையும் மிகவும் ஆபத்தாகி விட்டது என்பதை தெரிந்து கொண்டேன்.
அப்புறம் காரியங்கள் எல்லாம் மளமளவென நடந்தேறின. மறுநாளைக்கு மறுநாளே ரேவதி படுக்கையை உதறிவிட்டு எழுந்து உட்கார்ந்தாள். வேதாச்சலம் முதலியாரிடம் விஷயத்தை பிரஸ்தாபித்தேன் அவர் உடனே சம்மதித்து விட்டார் சந்திரனின் பெற்றோர்களின் சம்மதமும் கிடைத்தது.
மாதம் ஒன்று சென்று முதலியார் வீட்டிற்கு போனேன். சந்திரனும் ரேவதியும் குதூகலமாய் வரவேற்று அன்போடு பேசினார்கள். ரேவதி காபி கொண்டு வந்து வைத்தாள்.
“என்ன ரேவதி இந்த காபியில் விஷம் எதுவும் கலந்து விடவில்லையே பார்த்து விட்டாயா” என்று சிரித்துக் கொண்டே கேட்டேன்.
“அப்படியே விஷத்தை குடித்து விட்டால் தான் என்ன? உங்கள் டாக்டர் நண்பர் பக்கத்திலேயே இருக்கிறார். குழாய் தண்ணீரும் வேறு வேண்டியது இருக்கிறது. அப்புறம் என்ன பயம்” என்று சொல்லிவிட்டு ரேவதி விழுந்து விழுந்து சிரித்தாள். நானும் சந்திரனும் சேர்ந்து சிரித்தோம்.
நல்ல நாடகம். நல்ல விஷம்.
சமீபத்தில் சென்னையில் நடந்த புஷ்பக் கண்காட்சி பார்க்க சென்றிருந்தேன் காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக பல நிறங்களில் பரப்பி வைக்கப்பட்டிருந்த அவ்வழகிய பூக்கள், வர்ணஜால ஒளி வீசும் வைரம் வைடூரியம் முதலிய நவரத்தினங்களை குவித்து வைத்திருப்பது போன்ற தோற்றமளித்தனர்.
அதில் என்னை மறந்து ஈடுபட்டுக் கொண்டிருந்த நான் யார் மீதோ பலமாக மோதி விட்டேன். மோதிக்கொண்டவரிடத்தில் மன்னிப்புக் கோருவதற்காக அவரை ஏறிட்டுப் பார்த்தேன். ஆனால் அவர் நான் மோதி விட்டதையும் கூட பொருட்படுத்தாது எதையோ பார்த்துக் கொண்டிருந்தார். அப்படி அவருடைய கவனத்தைக் கவர்ந்தது என்ன என்று நானும் கவனித்தேன். ஒரு புஷ்ப மேடையின் எதிரில் ஒரு இளம் பெண்ணும் ஒரு பெரியவரும் நின்று கொண்டிருந்தார்கள். அந்தப் பெண் மிகச்சிறந்த அழகியாக விளங்கினாள். அவள் அணிந்திருந்த கச்சிதமான உடை அவளுடைய நிர்மலமான அழகை துலாம்பரமாக வடித்து எடுத்துக் கொடுத்தது. அங்குள்ள மலர் குவியல்களில் தேங்கியிருந்த வனப்பை எல்லாம் ஒன்று திரட்டினாலும் அந்த அதிரூபவதியிடத்தில் பொங்கி வழிந்து கொண்டிருந்த சாதாரண சௌந்தரியத்திற்கு ஈடாக கூற முடியாது.
“சரி என்னதான் அழகா இருந்தாலும் பிறர் பெண்ணை இப்படி விழுங்கி விடுவது போல் பார்க்கிறானே இவன் என்ன மனிதன் இங்கிதம் தெரியாதவன்” என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே இன்னும் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்து விட்டது.
பார்த்துக்கொண்டே இருந்த அவன் முகத்தில் அளவிட முடியாத ஆச்சரியக்குறி படர்ந்தது மறுகணம் வெறிகொண்டவன் போல் பாய்ந்து சென்று அப்பெண்ணின் கையை பற்றினான். கையை பலமாக பிடித்துக்கொண்டு “நீ நீ.. என்..என்” என்று ஏதோ கத்தினான். அப்பெண் பயந்து அலறி “அப்பா” என்று அருகில் நின்று தன் தந்தையை பிடித்துக் கொண்டாள்.
அப்பெரியவர் அளவிட முடியாத கோபம் கொண்டு தன் கையில் இருந்த தடியை சுழற்றி அம்மனிதனை ஓங்கி அடித்தார். இதற்கிடையில் அந்த மனிதனின் பிடியிலிருந்து விடுபட்டுக் கொண்ட அப்பெண் பெரியவருக்கும் அவனுக்கும் இடையிலே அகப்பட்டதால் அந்த பெரியவர் அடித்த அடி அந்த பெண்ணின் தலை மேல் பலமாக விழுந்துவிட்டது. இரத்தம் பீறிட்டு வெளிவர அவள் அடிபட்ட மான்போல் சுருண்டு கீழே விழுந்ததால் கூட்டம் கூடிவிட்டது மேலும் அம்மனிதன் மீது பாய்ந்து கொண்டிருந்த பெரியவரை வந்தவர்கள் பிடித்து நிறுத்தினார்கள். கடைசியில் போலீசும் வந்து விட்டது.
இதில் இன்னும் ஒரு சங்கடம் அந்தப் பெரியவரும் அவர் பெண்ணும் ஹிந்துவாகவும் அந்த மனிதன் ஒரு முஸ்லிமாகவும் இருந்ததால் இந்த விவகாரத்தை இங்கே பேசக்கூடாது என்று போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விட்டார்கள். அந்தப் பெரியவர் பெயர் ஹரிலால் என்றும் அந்தப் பெண் அவர் மகள் என்றும் வகுப்பு கலவரத்திற்கு பயந்து வடநாட்டில் இருந்து வந்து சென்னையில் குடியேறியவர்கள் என்றும் பேசிக் கொண்டார்கள். ஆனால் அந்த முஸ்லிமைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை. இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. இதை தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆவலினால் நானும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனேன். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் எனது நண்பராக இருந்ததால் உள்ளே போய் தகவல் தெரிந்து கொள்ள முடிந்தது.
இதற்கிடையில் அப்பெண்
காயத்திற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக கொண்டு போகப்பட்டாள். அந்த முஸ்லீமை இன்ஸ்பெக்டர் விசாரித்தார் அவன் தன் பெயர் அப்துல் என்றும் கல்கத்தாவில் ஒரு கம்பெனியில் வேலை பார்ப்பதாகவும் சென்னையில் உள்ள அதன் கிளை ஆபீசுக்கு ஒரு அலுவலாக வந்திருப்பதாகவும் கூறினான்.அதற்கு மேல் அந்த அப்துல் சொல்லிய தகவல் தான் ஆச்சரியமாய் இருந்தது.
நான்கு வருடங்களுக்கு முன் வடநாட்டில் நடந்த வகுப்பு கலவரத்தில் தன் மனைவியை பிரிந்து விட்டதாகவும் அந்த பெண் தான் தன் மனைவி என்றும் கூறினான். மேலும் அவள் தனக்கு கிடைக்கும்படி செய்ய இன்ஸ்பெக்டர் உதவி செய்ய வேண்டும் என்றும் கெஞ்சி கேட்டுக் கொண்டான்.
ஹரிலால் என்ற அந்த பெரியவரின் மகள் இந்த முஸ்லீமின் மனைவியாக எப்படி இருக்க முடியும் என்று எல்லோருக்கும் ஆச்சரியமாய் இருந்தது. ஆனால் அந்தப் பெண் எப்படியும் மயக்கம் தீர்ந்து வந்து விட்டால் எது உண்மை என்று தெரிந்து விடும் ஆதலால் மறுநாளைக்கு அந்த அப்துலையும் மேற்கொண்டு விசாரணை செய்வதற்காக வரச் சொல்லி அனுப்பினார்.
இன்ஸ்பெக்டர் அந்தப் பெண் மயக்கம் தெளிந்து நன்றாக பேசக்கூடிய நிலைமை ஏற்பட மூன்று தினங்களாகி விட்டன அதற்கு மறுநாள் அப்துல் அந்த பெரியவர் எல்லோரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தார்கள். ஆனால் இப்பொழுது அந்த அப்துல் சொன்ன தகவல் இன்னும் வினோதமா இருந்தது அன்று தான் தவறு செய்து விட்டதாகவும் அந்தப் பெண் தன் மனைவியின் சாயலாக இருப்பதைக் கொண்டு அப்படி நினைத்து விட்டதாகவும் ஆஸ்பத்திரியில் போய் அருகில் பார்த்ததில் உண்மை விளங்கியது என்றும் அவன் சொன்னான் ஹரிலாலை கூப்பிட்டு இன்ஸ்பெக்டர் விசாரித்தார் இது சம்பந்தமாக அப்துல் மீது வழக்கு எதுவும் தொடர்ந்தால் தமது மகள் கோர்ட்க்கோ போலீஸ் ஸ்டேஷனுக்கோ போக நேரிடும் என்ற காரணத்தினால் அவனை மன்னித்து அனுப்பிவிட அவர் இசைந்தார். வாரம் ஒன்று சென்று இருக்கும் ஏதோ அலுவலாக அந்தப் பக்கம் போன நான் போலீஸ் ஸ்டேஷனை எனது இன்ஸ்பெக்டர் நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.
கடிதம் ஹிந்தியில் எழுதப்பட்டிருந்ததால் என்னுடைய உதவியை நாடினார் இன்ஸ்பெக்டர் நான் படித்து விளக்கி கூறினேன்.
“அன்புமிக்க அருமை தந்தையே, தங்கள் மகள் என்று சொல்லிக் கொள்வதற்கு கூட அருகதை அற்றுப் போன இந்த பாவி எழுதிக் கொள்கிறேன் எழுதுவதற்கு என் கை நடுங்குகிறது கண்களில் நீர் நிறைந்து நின்று என்னை எழுத ஒட்டாமல் தடை செய்கிறது.
என் அருமை தந்தையே! தாயே! உங்களையெல்லாம் விட்டு பிரிந்து விடுவதென்ற முடிவுக்கு வந்துவிட்டேன். அந்த புஷ்ப கண்காட்சியில் என்னை கையை பற்றி இழுத்த அதே முஸ்லீம் இளைஞருடன் நானும் போய் விடுவதென்று முடிவுக்கு வந்து விட்டேன் ஒரு இந்து பெண் ஒரு முஸ்லீமுடன் ஓடிவிட துணிந்து விட்டாளா என்று வைதீகத்தில் ஊறிப்போன உங்கள் இந்து ரத்தம் கொதிப்பதை அறிவேன் இனி மேலும் உங்கள் இடத்தில் என்னைப் பற்றிய உண்மையை மறைப்பது கூடாது நானும் முஸ்லீம் தான்” மேலே படியுங்கள் தெரியும் என்று சுருக்கமாக பதிலளித்தார்.
ஹிரிலால் கடிதத்தை தொடர்ந்து படித்தேன். “வடநாட்டில் வகுப்பு கலவரம் தலைவிரித்தாட ஆரம்பித்தது ஒரு நாள் என் கணவர் வெளியூருக்கு சென்று இருந்தவர் திரும்பி வர முடியவில்லை. இரண்டு மூன்று நாட்களாகி விட்டன நாங்கள் இருந்த ஊரில் முஸ்லீம்கள் சிறுபான்மையினராக இருந்ததால் இனி மேலும் நான் அங்கு தனிமையில் இருப்பது ஆபத்து என்று கருதி முஸ்லீம்கள் அதிகமாய் உள்ள பக்கத்து ஊருக்கு போய்விட ரயில் நிலையத்திற்கு வந்தேன்.
அந்த ஊரில் முஸ்லீம் பெண் தனிமையில் வெளிவருவது ஆபத்து என்பதனால் ஒரு ஹிந்து பெண் போலவே உடை அணிந்து ரயில் நிலையம் வந்தேன் ரயில் நிலையம் வந்து விசாரித்ததில் கலவரம் மிகுதியாகிவிட்டதால் எல்லா போக்குவரத்தும் நின்று விட்டதாகவும் சென்னைக்கு மட்டும் ரயில் போகக்கூடும் என்றும் தெரிந்தது.
ஆயிரக்கணக்கான அகதிகளை சுமந்து கொண்டு சென்னை செல்வதற்கு ஒரு ரயில் தயாராய் நின்றது அப்பொழுது என் மானத்தை காப்பாற்றிக் கொள்ள ஒரே வழி தான் தோன்றியது அதுதான் தற்கொலை அந்த திக்கற்ற நிலைமையிலே என் அருகில் வந்து குழந்தாய் என்று அழைத்தீர்கள் அன்னையும் நீங்களும். அன்பொழுக பேசினீர்கள், ஆறுதல் கூறினீர்கள், நான் அப்பொழுது அணிந்திருந்த உடைக்கு ஏற்ப என்னை ஒரு இந்துப் பெண் என்றே சொல்லிக் கொண்டேன். தாங்களும் கலவரத்துக்கு பயந்தே இன்னும் வடக்கே இருந்து வருவதாகவும் தங்களுடன் வருவதாக இருந்தால் சென்னைக்கு அழைத்துச் செல்வதாகவும் கூறினீர்கள். இன்னும் சிறிது காலம் உயிரை வைத்திருக்க ஆசை கொண்டு உடனே உங்களுடன் சென்னை வந்து சேர்ந்தேன் என் மீது தாங்கள் அன்பு செலுத்துவதற்கு வேறு காரணம் இருந்ததையும் தெரிந்து கொண்டேன். தங்களுக்கு ஒரு மகள் இருந்ததாகவும் அவள் என் உருவச் சாயலாகவே இருந்தாள் என்பதையும் தங்கள் பேச்சிலிருந்து தெரிந்து கொண்டேன்.
இந்த நாலு வருஷ காலமாக தங்கள் அன்பிலே வளர்ந்தேன். செல்வத்திலே பிறந்தேன் இறந்துவிட்ட தங்கள் அருமை மகள் பெயரிலேயே பத்மா என்று என்னையும் அழைத்து மகிழ்ந்தீர்கள் தங்களை அறியாமல் என் கணவரின் பழைய விலாசத்திற்கு நான் பல கடிதங்கள் எழுதியும் பதில் வராததால் என் கணவரின் கதி என்ன ஆயிற்று என்று ஏக்கம் என் உள்ளத்தின் ஆழத்தில் அமைதியை இழக்க செய்து இருந்தது.
ஆனால் பெற்றோரை சிறுபிள்ளை பருவத்திலே இழந்து விட்டு அவர்கள் அன்பிற்காக துடித்த நான், தங்களிடத்திலே அத்தகைய பாசமும் பற்றுதலும் ஏற்பட்டு விட்டதை உணர்ந்து ஆறுதல் கொண்டேன். என்றாவது ஒரு நாள் நான் ஒரு முஸ்லீம் பெண் என்று தெரிந்தால் நீங்கள் எப்படி என்னை வெறுப்பீர்களோ என்று பயந்தேன். இத்தகைய உத்தமர்கள் ஆகிய தங்களுடைய அன்பை நான் தவறுதலாக பெற்றுக் கொள்ளக் கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். ஒரு நாள் உங்கள் காலடியில் விழுந்து கண்ணீர் விட்டு கதறி, அப்பா நான் உங்கள் மகள் அல்ல நீங்கள் பாலூட்டி வளர்த்த விஷப்பாம்பு. உங்கள் மகளை கொன்று விட்டார்கள் என்பதற்காக எந்த வகுப்பறை நீங்கள் வெறுக்கிறீர்களோ அதே இனத்தைச் சேர்ந்தவள் தான் நான் என்று சொல்லி விடுவதாக இருந்தேன்.
அதற்குள் புஷ்ப கண்காட்சியில் அன்று அந்த சம்பவம் நடந்துவிட்டது. முதலில் யாரோ வேற்றுவாழ் என் கையைப் பிடித்து விட்டானே என்று பயந்து கத்தி விட்டேன். மறுகணம் அவர்தான் என் கணவர் என்னை பற்றிய அக்கை தான் எனக்கு மனமார்ந்த மாலையிட்ட கை என்பதை அறிந்து கொண்டேன். தெரிந்து கொண்டுதான் தாங்கள் தடியால் அடித்த அடி அவர் மீது விழுந்து விடக்கூடாது என்று என் தலையை கொடுத்து அந்த அடியை தாங்கிக் கொண்டேன் பிறகு ஆஸ்பத்திரியில் படுக்கையில் படுத்து கண்ணை மூடிக்கொண்டே யோசித்தேன்.
பலபேர் முன்னிலையில் போலீஸ் ஸ்டேஷனில் நான் தாங்கள் மகள் அல்ல என்பதை என் கணவர் வாதாடி வழக்கிட்டு நிரூபிக்கும் பொழுது தங்களுக்கு ஏற்படும் அவமானத்தை நான் நேரில் பார்க்க விரும்பவில்லை அதற்காகவே திட்டமிட்டு என் கணவருக்கு செய்தி அனுப்பினேன். அதன்படியே தான் தவறு செய்து விட்டதாக போலீஸ் ஸ்டேஷனில் என் கணவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார் நீங்களும் வழக்கு எதுவும் தொடராமல் விட்டீர்கள் இன்று அவருடன் நான் வடநாடு போகிறேன் தங்களிடம் நேரில் விடைபெற்று தங்கள் ஆசியுடன் செல்வதற்கு பாக்கியமற்றவள் ஆகிவிட்டேன்.
மரணத்தின் அதிபயங்கர வாயிலே அனாதையாய் நின்ற என்னை அபயம் அளித்து ஆதரவு தந்த தங்கள் பொன்னான உள்ளத்தை புண்ணாக செய்துவிட்டு போகிறேன். தவறுதான் என்றாலும் தவிர்க்க முடியாதது. தந்தையே தாயே என்னை மன்னித்து விடுங்கள் இப்படிக்கு உங்கள் அருமை மகள் என்றும் பத்மா என்றும் அழைக்கப்பட்ட கதீஜா”
கற்பகத்தின் கண்ணீர்
விநாயகத்தின் மகள் வத்சலாவிற்கு அன்று திருமணம். பெரிய இடத்து கல்யாணம் என்றால் கேட்க வேண்டுமா? வாசலிலே அலங்காரமான பெரிய பந்தல், வகை வகையான கச்சேரிகள், மேளங்கள். வருவோரும் போவோருமாக ஜே ஜே என்று இருந்தது.
கல்யாண வீட்டை நோக்கி அழகிய பெரிய கார் ஒன்று வந்தது.வந்த கார் வாசல் புறமாக வராமல், வீட்டின் பின்புறத்தில் போய் நின்றது. ஏதோ வழி தெரியாமல் அப்படி போயிருக்க கூடும் என்று காருக்குள்ளே இருந்தவர்களின் முகபாவத்திலிருந்து தெரியவில்லை.அங்கு வந்ததை அதிகம் காட்டிக்கொள்ள விரும்பாதவர்கள் போல ஒருவித தயக்கம் அவர்களிடம் தென்பட்டது.
காருக்குள்ளே டிரைவரை தவிர சுமார் முப்பது, முப்பத்தைந்து வயது மதிப்பிடக்கூடிய ஒரு பெண்மணி மட்டும் இருந்தாள். அவள் உடம்பிலே காய்த்து தொங்கிய வைர நகைகளே அவள் ஒரு பெரிய இடத்தை சேர்ந்தவள் தான் என்பதை காட்டின. அந்த சீமாட்டி அங்கு நின்ற ஒரு வேலைக்காரியிடம் ஏதோ ரகசியமாய் சொன்னாள். சிறிது நேரத்தில் மணப்பெண் வத்சலாவே மணப்பெண் கோலத்துடனே அங்கு வந்துவிட்டாள்.
வந்தவள் காருக்குள்ளே பார்த்து “வாருங்கள் அத்தை” என்று அன்பும் ஆர்வமும் கலந்த குரலில் கூறிக்கொண்டே காருக்குள் ஏறி அந்த அம்மாவை அப்படியே கட்டி அணைத்துக் கொண்டாள். அத்தை என்று அழைக்கப்பட்ட அந்த பெண்மணி வத்சலாவை ஏதோ குழந்தையை தூக்குவதைப் போல் தூக்கி கட்டி அணைத்து கரை காணாத காதலுடன் முத்தமழைகளை பொழிந்து மூச்சு திணறடித்தாள்.
என்ன காரணத்தினாலோ இருவருடைய கண்களில் இருந்தும் கண்ணீர் ஏககாலத்தில் குபுகுபு என்று கொட்ட ஆரம்பித்தது அடக்கினார்கள் அடக்கினார்கள் அடக்க முடியவில்லை. ஆறாக வெள்ளமாக பெருகி ஓடியது உணர்ச்சி மிகுதியினால் இரண்டு பேருமே எதுவும் பேச முடியவில்லை பேச ஆரம்பித்தால் அழுகையாக மாறிவிடுமோ என்றே பேசாமல் இருந்தார்கள் இருவரும். இப்படி சிறிது நேரம் சென்ற பின் அந்த அம்மாள் தான் கொண்டு வந்திருந்த ஒரு சிறு வெல்வெட் பெட்டியை திறந்தாள் அதிலே சுமார் 10 பவுனில் செய்யப்பட்ட தங்கச் சங்கிலி ஒன்று பளபளத்தது அதை வத்சலாவின் கையிலே கொடுத்து “வத்சலா, இதை என் நான் அன்பின் அடையாளமாக வைத்துக்கொள்” என்று தழுதழுத்த குரலில் கூறினாள்.
இதே சமயத்தில் வீட்டிற்குள் ஏதோ வைதீகர் சடங்கு செய்ய மணப்பெண்ணை கூப்பிட்டார்கள் “பெண் எங்கே? எங்கே?” என்று பேச்சு கிளம்பியது. பெண்ணின் தந்தை விநாயகமே தேடிக் கொண்டு எப்படியோ வீட்டுக்கு பின்புறமே வந்துவிட்டார். காருக்குள் அவர் கண்ட காட்சி அவரை அப்படியே ஸ்தம்பிக்க வைத்து விட்டது. கோபத்தின் மிகுதியில் அவருடைய புருவங்கள் மேலேறின. “யார் அங்கே?” என்று அவருடைய குரல் வத்சலாவையும் அந்தப் பெண்மணியையும் திடுக்கிடச் செய்தது. இருவரும் அவசரமாக காரை விட்டு இறங்கினார்கள்.
“வத்சலா உள்ளே போ” என்ற விநாயகத்தின் குரல் நெருப்புப் பொறி சிந்தியது போல் இருந்தது. வத்சலா பயந்துக் கொண்டே உள்ளே நழுவினாள்.
“அது என்ன பெட்டி? இப்படி கொடு” என்று இன்னும் ஒரு அதட்டலோடு வத்சலாவின் கையில் இருந்த நகை பெட்டியை பிடுங்கினார் விநாயகம். தன் தந்தை இவ்வளவு கடுமையாக என்றும் தன்னுடன் பேசியதை அறியாத வத்சலா கண்ணை கசக்கி கொண்டே உள்ளே போனாள்.
விநாயகத்தின் பார்வை இப்பொழுது அந்த பெண்மணி மீது திரும்பியது அவள் ஏதோ கொலை குற்றம் செய்து விட்டு விநாயகத்தை ஏறிட்டு பார்க்க கூட பயந்து தலையை குனிந்து கொண்டு நின்றாள் இவ்வளவு உயர்ந்த அந்தஸ்தில் உள்ள அவள் விநாயகத்தை கண்டு ஏன் இப்படி நடுங்க வேண்டும்? அப்படி என்ன தவறு செய்துவிட்டாள் அவள்?
மிதமிஞ்சிப் போன தன் கோபத்தை அடக்கி கொண்டு விநாயகம் பேசினார். “கற்பகம் ஏன் நீ இங்கு வந்தாய் நான் தான் உன்னை அன்றோடு மறந்து விட்டேனே உன்னால் எனக்கு ஏற்பட்ட களங்கத்தையும் காலம் விழுங்கி விட்டது என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த மாசு இன்னும் மறைந்துவிடவில்லை இதோ இருக்கிறேன் என்று காட்ட வந்தாய் போல்,இன்று இந்த சந்தர்ப்பத்தில் இங்கு வந்து என் மானத்தை வாங்குகிறாயே”
கற்பகம் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசினாள், “அண்ணா தாங்கள் என்னை விரும்ப மாட்டீர்கள் விஷமென வெறுத்து தள்ளி விடுவீர்கள் என்று தெரிந்தும் தான் அண்ணா வந்தேன். எனக்கு எத்தனை அவமானம் கிடைப்பதாயிருந்தாலும் ஏற்றுக் கொள்ள துணிந்து தான் அண்ணா வந்திருக்கிறேன்.”
“கற்பகம் நான் நினைத்தபடி நடந்திருந்தால், நான் ஏன் உன்னை வெறுத்து தள்ளுகிறேன். வேண்டாம் என்று நினைக்கிறேன் இன்று இங்கு வந்திருக்கும் அத்தனை பேரையும் விட உனக்கும் உன் கணவனுக்கும் முதலிடம் கொடுத்திருக்க மாட்டேனா! இப்பொழுது கொல்லை புறத்தில் வந்து நீ ஒரு குற்றவாளியை போல் நிற்க வேண்டியதில்லையே. என் வாசல் புறமே உன்னை வரவேற்று இருக்கும். சரி இனி அதையெல்லாம் பேசி பிரயோஜனமும் இல்லை பேச இது நேரமும் இல்லை.நீ போய் விடு கற்பகம் போய் விடு“ என்று விநாயகம் துரிதப்படுத்தினார்.
“அண்ணா வத்சலாவின் மீது நான் வைத்திருந்த அன்பும் வாத்சல்யமும் எத்தகையது என்பதை தாங்கள் அறியாததில்லையே ஏன் நான் ஒரு காலத்தில் உன் மீது உடன்பிறந்தவன் என என் உயிரையே வைத்திருக்கவில்லையா? எந்த காரணத்தை கொண்டாவது இந்த பரிசை வத்சலாவிற்காக ஏற்றுக்கொள்ளுங்கள் அண்ணா” என்று அவள் கெஞ்சினாள்.
அடங்கிக் கிடந்த விநாயகத்தின் கோபம் அத்து மீறியது, ”கற்பகம் இனி உனக்கு பட்டவர்த்தனமாய் சொன்னால் தான் புரியும் போலிருக்கிறது! பாவக்கறை படிந்த பணத்தினால் வாங்கிய அந்த பரிசை நான் ஒருநாளும் ஏற்றுக்கொள்ளவே முடியாது! நீயே வைத்துக்கொள்” என்று விநாயகம் அந்த நகைப்பெட்டி ஆத்திரமாக காருக்குள் வீசி எறிந்தார்.
கற்பகத்தின் குரல் கம்மியது, “அண்ணா…’
“அப்படி அண்ணா என்று என்னை அழைக்க வேண்டாம் என்று முன்னமே சொல்லி இருக்கிறேன். மேலும் ஏதேதோ பேசி என் கோபத்தை கிளறாதே கோபம் மிகுதியானால் நான் மனிதன் அல்ல மிருகம்! என்ன செய்வேன் என்பது எனக்கே தெரியாது. இனி எதுவும் உன்னுடன் பேச நான் தயராய் இல்லை. நீ போய்விடு கற்பகம், இங்கே நில்லாதே!” என்று ஆவேசமாக பேசினார் விநாயகம்.
கற்பகத்தின் கண்கள் நீரை தாரைத் தாரையாக கொட்டின. அப்படியே தலை குனிந்தவளாய் காரில் ஏறிக் கொண்டாள் கார் போய்விட்டது.
விநாயகம் இதுவரை மனதை கல்லாக்கி கொண்டு தான் பேசினார். ஆனால் கற்பகத்தின் கண்களிலே வடிந்த அந்த நீர் பெருக்கு அவரையும் நிலைகுலையச் செய்தது. அவர் கண்களிலும் நீர் கசிய ஆரம்பித்தது கண்ணீரை துடைத்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார் விநாயகம் அவருடைய நினைவு பதினைந்து வருஷங்களுக்கு முன் நடந்த அந்த சில சம்பவங்களுக்கு தாவியது.
அம்மையநாயக்கனூர் ஆலாலசுந்தரம் பிள்ளை என்றால் அந்த வட்டாரத்திற்கே பெரிய மனிதர். ஏராளமான நில புலன்களும் தோட்டம் துறவுகளும் உடையவர். அவ்வளவு சுகபோகத்தையும் விட்டுவிட்டு விடை பெற்றுக் கொள்ளும் நிலையிலே மரணப் படுக்கையிலே கிடந்தார். அவருடைய மகன் விநாயகம் கண்கலங்கியவராய் பக்கத்திலே நின்றார்.
ஆலாலசுந்தரம் பிள்ளையின் ஆவி இன்னும் பிரியவில்லை கடைசியாக எதையோ மகனிடம் சொல்ல நினைக்கிறார். அதை சொல்லத்தான் அவர் ஆவியின்னும் உடலிலே ஒட்டிக்கொண்டு இருப்பதை போல் தோன்றியது. சொல்வதற்கு நாவு எழும்பவில்லை தம் தலையணை பக்கம் கையை காட்டினார். குறிப்பை அறிந்த விநாயகம் தலையணைக்குள் கையை விட்டுப் பார்த்தார் அதற்குள் ஒரு கடிதம் இருந்தது. ஆனால் சுந்தரம் பிள்ளைகளாலே எழுதப்பட்டிருந்த அந்த கடிதம் வருமாறு
“என் அன்பிற்குரிய அருமை மகன் விநாயகத்திற்கு,
உனக்கு இத்தனை பெரிய சொத்தையும் செல்வத்தையும் வைத்துவிட்டு போகும் நான் ஒரு கசப்பான கடமையை நிறைவேற்றும் படியான ஒரு கஷ்டமான பொறுப்பையும் உன் மீது சுமத்தி விட்டுப் போகிறேன். “இதை செய்” என்றால் செய்து விடக் கூடிய உத்தமபுத்திரன் ஆகிய உன்னிடத்திலும் விஷயத்தின் வேறுபாட்டை உத்திசித்து என் விருப்பத்தை நிறைவேற்றித் தர வேண்டும் என்று கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்.
“நம் தந்தை கௌரவமும் கண்ணியமும் மிக்கவர். ஒழுங்கான வாழ்க்கை நெறி என்றும் ஒருபொழுதும் பிறழாதவர் என்றெல்லாம் என்னை பற்றி நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்பதை நான் அறிவேன். ஆனாலும் நானும் வாழ்க்கையில் தவறு செய்தவன் தான். இனி சுற்றி வளைத்து பேசுவானேன் உனக்கு ஒரு தங்கை இருக்கிறாள். ஆனால் அவள் ஒரு தாசியின் மகள் மதுரையிலே மாசி வீதியிலே தாயுடன் வசிக்கிறாள்.
உன் தங்கை கற்பகம் சேற்றிலே முளைத்துவிட்ட செந்தாமரை அந்த மென்மலரை அதைச் சுற்றிலும் உள்ள சேற்றிலே மீண்டும் விழுந்து விட விட்டு விடாதே. வாழ்க்கையில் இதுவரை துன்பத்தின் நிழல் கூட அவள் மீது படிய விடாமல் நான் கவனித்து வந்துவிட்டேன். அவளும் வளர்ந்து விட்டாள் இனி அண்ணாவாகிய உன்னுடைய அன்பிலும் அரவணைப்பிலும் தான் உலகமறியாத அந்த பேதைப் பெண் கொடி வளர வேண்டும். எனக்கு பின் எந்த காரணத்தினாலும் எந்த சந்தர்ப்பத்திலும் அவள் கவலையடைதல் கூடாது. அவள் கண்களிலே என்றும் நீர் வடிய விட்டு விடாதே. இப்படி என் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உன்னிடம் இருந்து வாக்குறுதி கிடைத்தால் தான் நான் நிம்மதியாக என் கண்களை மூட முடியும். மனப்பூர்வமாக வாக்குறுதி தருவாயா? உன் அருமை தந்தை”
கடிதத்தை படித்து முடித்த விநாயகர் தன் தந்தையின் மெலிந்த கரத்தை மெதுவாக எடுத்து அதன் மேலே தன் கையை வைத்து உறுதி கொடுத்தார் ஆலாலசுந்தரம் பிள்ளையின் முகத்திலே இதுவரை இருண்டு படிந்திருந்த சஞ்சல ரேகைகள் விலகின சாந்தம் தவழ்ந்தது அப்படியே தன் மகனின் கையை மார்போடு அணைத்து கொண்டே கண்களை மூடினார் அவர்.
விநாயகம் தன் தந்தையின் அந்திமச் சடங்குகளை முடித்துவிட்டு முதல் வேலையாக மதுரைக்குப் போனார். குறிப்பிட்ட விலாசத்தில் கற்பகத்தையும் அவள் தாயையும் கண்டார். கற்பகம் ஆலாலசுந்தரம் பிள்ளையின் உருவ சாயலை அப்படியே கொண்டிருந்ததோடு இளமையும் எழிலும் பூரித்து பொங்கும் லாவண்யம் மிக்கவளாய் இருந்தாள். விநாயகத்தை அண்ணா! அண்ணா! என்று அருமையோடு அழைப்பதும் சதாநேரமும் அவரிடத்தில் வந்து ஏதாவது கொஞ்சி கொஞ்சிப் பேசி கேள்விகள் கேட்பதும் விநாயகத்திற்கு ரொம்பவும் பிடித்து விட்டது. சகோதரியின் பாசம் இத்தகையது என்பதை இதுவரை அறியாத விநாயகத்தின் உள்ளத்திலே ஒரு புதுவித அன்பு ஊற்றெடுத்தது.
அவளை தன்னுடனே அழைத்துப் போகவும் விநாயகம் விருப்பம் கொண்டார் அப்பொழுது தான் தாய் வந்து குறிப்பிட்டாள். “அப்பா, மகனே! உன் சகோதரி எப்படியும் உன்னிடத்தில் வந்து இருக்க வேண்டியவள் தான் இந்த உலகத்திலேயே அவளுக்கு உற்றார் உறவினரும் உன்னைத் தவிர வேறு யாரு இருக்கிறார்கள்? இருந்தாலும் இப்பொழுதே அவளை விட்டு பிரிந்திருக்க எனக்கு மனக்கஷ்டமாய் இருக்கிறது. நானும் வந்து உங்கள் வீட்டில் இருப்பது என்பது இயலாத காரியம் உங்கள் குடும்பத்தின் கௌரவமும் கண்ணியமும் எவ்வளவு உயர்ந்த நிலையில் உள்ளது என்பதை நானும் அறிவேன். எப்படி இருந்தாலும் நான் ஒரு தாசி அங்கு வந்து இருப்பது அவ்வளவு உசிதமாகாது. யோசித்துக் கொள் விநாயகம்” என்று இதமாக பேசினாள்.
விநாயகத்திற்கும் அவள் சொன்னது பொருத்தமாக தான் பட்டது ஆகவே கற்பகத்தை அவள் தாயிடம் தற்காலிகமாக விட்டு வைத்தார்.
ஆனாலும் அடிக்கடி மதுரைக்கு வந்து விநாயகம் அவர்கள் நலங்களை கவனித்துக் கொள்வதுடன் வேண்டிய பண உதவியும் செய்து வந்தார். அப்படி வரும் பொழுதெல்லாம் தன்மகள் ஐந்து வயது குழந்தை வத்சலாவையும் உடன் அழைத்து வருவார்.அப்பொழுதுதான் வத்சலாவும் கற்பகமும் அவ்வளவு அன்யோன்யமாக பழகிக் கொண்டார்கள்.
வழக்கம்போல் ஒரு நாள் விநாயகம் அந்த வீட்டிற்கு போனபோது ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் அவருக்கு காத்திருந்தது கதவு அடைத்து அதில் ஒரு பெரிய பூட்டாக போட்டு பூட்டி இருந்தது.
அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் அங்கிருந்து அவர்கள் கிளம்பி போய் பத்து தினங்களாகி விட்டன என்று தெரிய வந்தது. ஆனால் எங்கே போனார்கள் என்ன ஆனார்கள் என்ற விவரம் எதுவும் தெரிய வில்லை.
இன்னும் சில நாட்கள் தீர விசாரித்ததில் சென்னையில் இருக்கிறார் என்ற புலன் கிடைத்தது. விநாயகம் சென்னைக்கும் சென்றார். தேடி அலைந்து கற்பகமும் அவள் தாயும் இருந்த இடத்தையே கண்டுபிடித்து விட்டார், ஆனால் அவர்கள் இப்பொழுது இருந்தது சாதாரண வீடல்ல சகல ஆடம்பரங்களுடனும் வசதிகளுடனும் அமைந்து அழகிய பங்களா. இவை எல்லாம் இவர்களுக்கு எப்படி கிடைத்தது என்று விநாயகத்திற்கு மனதில் சந்தேகம் எட்டியது.
கற்பகம் வந்து “வாருங்கள் அண்ணா” என்றாள். ஆனால் எப்பொழுதும் போல் ஆர்வத்துடன் அவள் ஓடிவந்து பேசவில்லை. தயங்கிக் கொண்டே வந்து தலை குனிந்து நின்றாள், அவள் தாய் அதுவும் வரவில்லை கற்பகத்தை ஏறிட்டுப் பார்த்தார் விநாயகம். அவள் உடம்பிலே எங்கு பார்த்தாலும் வைர நகைகள் ஜொலித்தன. விலை உயர்ந்த பகட்டான ஆடைகள் அணிந்து இருந்தாள். விநாயகத்திற்கு விஷயங்கள் விளங்க நேரமாகவில்லை.
யாரோஒரு செல்வந்தனுடைய அந்தரங்க நாயகியாக அல்லது அபிமான ஸ்திரீயாக கற்பகம் ஆகி இருந்தாள் அல்லது ஆக்கப்பட்டு இருந்தாள். பணம் பொருள் நகை பங்களா எல்லாம் அவன் அதற்காக கொடுத்த விலை!
விநாயகம் என்ன நினைத்திருந்தார்? தன் தந்தைக்கு அளித்த வாக்குறுதிபடி அவளை அவள் வந்த பரத்தையர் குலத்தின் பாதையிலே போக விடாமல் பாதுகாத்து தன் உறவினர் ஒருவனுக்கு மனம் முடித்து வைத்து தன் சொத்தில் ஒரு பகுதியையும் கூட கொடுப்பது என திட்டமிட்டு இருந்தார். அவர் திட்டத்தை எல்லாம் தாயும் மகளும் சேர்ந்து தவிடு பொடி ஆக்கிவிட்டார்கள் சமூகத்தின் முன்னிலையில் அவரை தலைகுனிய செய்துவிட்டார்கள்
இதையெல்லாம் நினைத்த உடனே கோபத்திலும் ஆத்திரத்திலும் விநாயகத்தின் நெற்றி சுருங்கியது. தன் தந்தையாருக்கு எத்தகைய கடமையை செய்வதாக வாக்குறுதி கொடுத்திருந்தாரோ அதை நிறைவேற்றுவதற்கெல்லாம் இல்லாமல் போய்விட்டது. “சேற்றிலே முளைத்த செந்தாமரை மீண்டும் வந்து சேற்றிலே விழுந்து விட்டது” என்று எண்ணமிட்டவராய் , எதுவும் அதிகமாக சொல்லாமல் “வருகிறேன்” என்று மட்டும் கூறிவிட்டு கிளம்பினார்.
“அண்ணா…” என்று கற்பகம் அருகினில் வந்தாள். விநாயகத்தின் கோபம் வெளிப்பட்டு விட்டது “கற்பகம்! இனிமேல் என்னை அப்படி ‘அண்ணா’ என்று அழைக்காதே! அதற்குள்ள அருகதையையும் யோக்கியதையையும் நீ இழந்து விட்டாய். உன்னை ஒரு தாசியின் மகள் என்று தான் இதுவரை எண்ணியிருந்தேன். ஆனால் நீயும் ஒரு தாசி தான் என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டாய்” என்று சொல்லிக் கொண்டே விநாயகம் வெளியேறினார்.
கற்பகம் ஓடிவந்து விநாயகத்தின் காலை பிடித்தாள்.”சீ தொடாதே!” என்று காலை உதறிக் கொண்டு வெளியேறினார் விநாயகம்.
அன்று அவளை உதறித் தள்ளியதோடு அவளைப் பற்றிய எண்ணத்தையும் தன் எண்ணத்திலிருந்து உதறி எறிந்து விட்டார் இன்று 15 வருடங்களுக்கு பிறகு எதிரிலே வந்து நின்று மீண்டும் அவர் மன அமைதியை இழக்க செய்துவிட்டாள். அவள் எப்படியோ, தன் முன்னாலே வந்து கண்ணீர் விடுகிறாள். அதை பார்த்த உடனே விநாயகத்தின் கண்களும் அவரை மீறி கண்ணீரைக் கொட்டுகின்றன. காலப்போக்கில் இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன.
கற்பகத்தை பற்றி நினைப்பதையே கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொண்டார் விநாயகம் ஏதோ அலுவலாக மதுரை சென்ற விநாயகம் தற்செயலாக கற்பகம் இருந்த வீட்டின் வழியாக போக நேர்ந்தது. வீடு திறந்து இருந்தது ‘உள்ளே இருக்கிறது யார் பார்க்கலாம்’ என்று ஏதோ ஒரு எண்ணம் தூண்ட உள்ளே நுழைந்தார் அவர்.
வீட்டில் உள்ள ஒரு மூலையில் பாயில் எழும்பும் தோலுமாக இல்லை வெறும் எலும்பு கூடாக என்று கூட சொல்லும் படி ஒரு உருவத்தை கண்ணுற்ற விநாயகம் அவர் கண்களையே நம்ப முடியாமல் நின்றார் தன்னையும் மீறிய ஒரு உணர்ச்சியில் “கற்பகம்” என்று கத்தி விட்டார்.
கண்களை மூடி இருந்த கற்பகம் கஷ்டப்பட்டு திறந்து பார்த்தாள். ஒளி இழந்திருந்து அவள் கண்களிலும் உயிர் வந்தது. முகத்தில் ஒரு தெளிவும் தெம்பும் ஏற்பட்டன. “அண்ணா! இந்த துர்பாக்கியவதியையும் இன்னும் நினைவில் வைத்திருக்கின்றீர்களா” என்று சொல்லிக்கொண்டே கண்ணீரை வடித்தாள். விநாயகம் அவளுக்கு ஆறுதல் கூறி ஆசுவாசப்படுத்தினார்.
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கற்பகம் தழுதழுத்த குரலில் தன் சோகக் கதையை சொன்னாள். “அண்ணா என் அறியா பருவத்திலேயே பணத்தையும் பொருளையும் பகட்டான வாழ்க்கையும் சதமாக நினைத்து என் தாய் விரித்த வலையில் நான் விழுந்து உங்கள் அன்பையும் ஆதரவையும் இழக்க நேர்ந்தது.
அந்த வாழ்வு முதலிருந்தே எனக்கு பிடிக்கவில்லை என் தாய் இறந்த பிறகு வாழ்க்கை மிகவும் கசக்க ஆரம்பித்துவிட்டது. இந்த நிலைமையில் வத்சலாவின் கல்யாணம் என்று கேள்வியுற்று என் புண்பட்ட உள்ளத்திற்கு ஆறுதல் தேடிகொள்ள ஓடி வந்தேன் அப்பொழுது எனக்கு கிடைத்த அந்த வரவேற்பு என் சிந்தனையை இன்னும் தூண்டியது. சில நாட்களில் அந்த வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுவிட்டேன்.
என்னை ஆதரித்த அந்த கனவான் கொடுத்த பொருள் எதையும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டு இங்கு வந்தேன். நம் தந்தையார் வாங்கி வைத்து விட்டு போன இந்த வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டேன் என் காலட்சேபம் இன்றுவரை நடைபெறுகிறது.”
“அண்ணா! நீங்கள் இருக்கும் இடத்திற்கு வரலாம் என்று எத்தனையோ தடவை நான் எண்ணியதுண்டு ஆனால் இந்த பாவாத்மா அங்கு வருவதாலே உங்கள் கௌரவத்திற்கு களங்கம் ஏற்படக்கூடும் என்று பயந்தே தான் அண்ணா என் ஆவலை எல்லாம் என் உள்ளத்திலே அடைத்து வைத்ததோடு இந்த வீட்டிற்குள்ளே நானும் அடைத்து கொண்டே கிடந்தேன். ஆனாலும் இந்தப் பாவியினுடைய ஆவி இந்த கூட்டை விட்டு பிரிவதற்குள் என்றாவது உங்களை கண்டு உங்கள் காலடியில் விழுந்து கதறி என் ஆசை தீர அழுது கண்ணீர் விட வேண்டும் என்பதுதான் என் கடைசி ஆசை அண்ணா“ என்று கூறினாள்.
உணர்ச்சிவசப்பட்டு உட்கார்ந்திருந்த விநாயகம் பேசினார், ”கற்பகம் அப்படியெல்லாம் அலட்டி கொள்ளாதே அம்மா, என்று உன் தவறை உணர்ந்து திருத்திக் கொண்டாயோ அன்றே அதற்கு பிராயசித்தம் ஏற்பட்டுவிட்டது. மேலும் அன்று முதல் நீ என் அருமை தங்கையாக ஆருயிர் சகோதரியாக ஆகிவிட்டாய் கற்பகம்!”
“நம் தந்தையாரிடத்தில் உன்னை எந்த காரணத்தினாலும் எதற்காகவும் கண்கலங்க விடுவதில்லை என வாக்குறுதி கொடுத்திருந்தேன். ஆனால் அதற்கு நேர் மாறாகவே எல்லாம் நடந்து விட்டன நான் உன்னை காணும் பொழுதெல்லாம் கண்ணீரும் கம்பளையுமாகவே உன்னை காண வேண்டிய துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டுவிட்டது.
கற்பகம் இனி இந்த நிமிஷம் முதல் உன் கண்களிலே நீரை வடிய விட மாட்டேன் உன்னை என்னுடனே அழைத்துச் சென்று நானே உன் அருகில் இருந்து கண்ணை இமைக் காப்பதை போல உயிரை உடல் பார்ப்பது போல காப்பேன்”
விநாயகம் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அளவு கடந்த ஆனந்த பெருக்கால் கற்பகம் விம்மி விம்மி அழுதாள். கண்ணீரை தாரைதாரையாக உதிர்த்தாள். தன் சக்தி எல்லாம் திரட்டிக்கொண்டு எப்படியோ எழுந்து “உங்களுடைய உத்தமமான அத்தகைய அன்பை எல்லாம் அறியாது என் வாழ்க்கையை பாழ்படுத்திக் கொண்டேனே அண்ணா! இந்த பாவியையும் மன்னித்து விட்டீர்களா” என்று சொல்லிக் கொண்டே விநாயகத்தின் பாதங்களில் சுருண்டு விழுந்தால் விநாயகம் பரபரப்புடன் குனிந்து தூக்கினார்.
அவர் கையில் கற்பகத்தின் உயிரற்ற வெறும் கட்டை தான் சிக்கியிருந்தது.
செண்பகச் சோலையின் ஓசை சித்திரம் - செவி கொடுங்கள் மனதை நிறைப்போம்