39- சொக்கநாதன் நான் தாண்டி
சங்கரி அதிகாலையில் அய்யாவு கிளம்பும் முன் எழுந்து காபி போட்டு வைத்தவர், இன்று இட்லியும் சுட்டு மல்லி தொக்கு, இட்லிப் பொடி குழப்பிப் பக்குவமாய் டிபன் பாக்ஸில் வைத்துத் தர, “எதுக்கு மம்மி சிரமப்படுற” எனவும் “அந்த காட்டுக்குள்ள உன் சின்னமாவா தோசை சுட்டுத் தர போகுது, சும்மா எடுத்துட்டு போ” என்றார்.
“அப்பாட்ட பேசினிங்களா” விசாரிக்க, “ மருமகளை வேலைக்கு அனுப்புறோம்னு பேசுவாங்க, கொஞ்சநாள் ஆகட்டும்னு சொல்றார்” சொல்லும் போதே, சங்கரிக்குக் குரல் இறங்கியது.
“அதுவும் சரி தானே, அவுங்கப்பா சும்மாவே நம்மளை குறை சொல்ல, எதுடா சாக்குன்னு தேடிகிட்டு இருக்கார்.”
“நான் மீனாட்சிக்கு நம்பிக்கை கொடுத்துட்டேனேடா. இப்போ வேண்டாம்னு சொன்னா, அப்பாவையும் தப்பா நினைக்கும். என் வார்த்தைக்கும் மதிப்பு இல்லைனு புரிஞ்சுக்கும் “
“மம்மி நீயா கற்பனை பண்ணிக்காத. உன் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்காமல் இருந்திருந்தா, இந்த வேலை,இம்புட்டு பெரிய பதவியிலிருந்திருக்க மாட்ட. அப்பாவை ,பொம்பளை சம்பாத்தியத்தில் சாப்பிடுறாருன்னு ஜாடை மாடையா ஊர் காரங்க பேசும் போது கூட ,சங்கரிக்குன்னு தனி அடையாளம், சம்பாத்தியம் இருக்கிறதில பெருமை தான்னு சொல்லியிருக்கார்.
எங்களை வளர்கிறதில் எவ்வளவு பிரச்சினை வந்தது, எப்பவாவது நீ வேலைக்குப் போக வேண்டாம்னு சொல்லியிருக்காரா. உனக்கு பிரச்சனை இருக்க இடத்துலயும் வந்து நிற்பார்.
எனக்கு தெரிஞ்சு, வீட்டு விசயத்திலையும், உங்க இரண்டு பேர் கிட்டையும் அபிப்பிராயம் கேட்பார். யார் சொன்னாங்கிறதை விட, எது சரின்னு விசயத்தைப் பொறுத்து முடிவெடுப்பீங்க. என்னை கண்டிக்கிறதுன்னு வந்துட்டா, இரண்டுபேருமே உன் பேச்சைத் தானே கேட்டாங்க.
மீனாட்சி விஷயத்தில், இவ்வளவு சீக்கிரம் வேலைக்கு அனுப்ப வேண்டாம்னு நினைச்சு இருப்பார். இதிலென்ன தப்பு”அப்பாவுக்கு மகன் வக்கீலாக மாறி, பெற்றவளிடம் பேச, 'இவ்வளவு கவனிக்கிறானா, அவன் சொல்வதும் உண்மை தானே.’ என்றது ஓர் மனம்.
“மம்மி நீ கேட்டேனு இந்த வயசில மரத்து மேல ஏறி மனோரஞ்சிதம் பூவெல்லாம் பறிச்சு தந்தார். இப்பவும் உன் பாதுகாப்புக்காக ஊர் பூரா சொல்லி வச்சிட்டு போயிருக்கார். அவரை போய் உன் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கிறது இல்லைனு சொல்றியே மம்மி”
“ ம்க்கூம்” என்ற சலிப்பு மட்டுமே பதிலாக வந்தது.
“மம்மி நீ அவரை ரொம்ப லவ் பண்ற அது தான், சின்ன பிரிவைக் கூட தாங்க முடியலை.” அம்மாவின் மனநிலையைப் படித்தவனாகச் சொல்ல,
“ஆமாம் போடா பெரிசா கண்டு பிடிச்சிட்ட. “ என்றவருக்கு மருமகளிடம் என்ன சொல்லப் போகிறோம் என்பதே பெரிய கவலையாக இருந்தது.
“கவலைபடாத மம்மி, மீனாட்சிக்கிட்ட வேற மாதிரி சொல்லிக்கிறேன்” எனத் தேறுதல் சொல்லிக் கிளம்பினான்.
அய்யாவு, கிளம்பிய பின் எழுந்து வந்த ராஜி, “அத்தை எனக்குச் சமையல் சொல்லி குடுங்க” என்றாள்.“ஏண்டா, ஆபீஸ் வரேன்னு சொன்ன”
“சொன்னேன் தான். வீட்டிலிருந்தே ஆரம்பிப்போம்.” அவளும் முகம் கூம்பிச் சொல்லவும், “யாரும் எதுவும் சொன்னாங்களா “ விசாரிக்க,
“எனக்கு முதல்ல சமையல் தான் தெரியணும், வேற மாமியார்கிட்ட போயிருந்தா என்னை வாயிலேயே வடை சுட்டு இருப்பங்களாம். தம்பி மகள்னு தான் பெரியத்தையும், நீங்களும் கொஞ்சிட்டு இருக்கீங்களாம்” பொரிந்து தள்ள,
“அப்படின்னு உன் புருஷன் சொன்னானா”
ஆம் எனத் தலையை ஆட்டியவள், “நானும் சமையல் கத்துக்கணும்ல” சமாதானமாகவும் சொன்னாள்
“கட்டாயம் கத்துக்கணும், மத்தவங்களுக்கு செஞ்சு போடுறது இருக்கட்டும், நமக்கு பிடிச்சதை செஞ்சு சாப்பிடவாவது தெரிஞ்சுக்கணும். நான் சுமாரா தான் செய்வேன். பாலா அக்கா வரவும் அவங்க கிட்ட கத்துக்குவேன்” என்றார்.
“அவுங்ககிட்டையும் கத்துக்குறேன், நீங்களும் சொல்லி குடுங்க. பெரியம்மாட்டையும் கத்துக்குறேன். ஆக மொத்தத்தில் சமையல் கத்துக்கனும்” அவள் முடிவோடு சொல்ல,
“கருணைக்கிழங்கு புளிக்குழம்பு, பீர்க்கங்காய் கூட்டு வைப்போம், அப்புறமா கீரை கடைஞ்சு, வாழைப்பூ பொரிச்சுக்குங்க” என்றார்.
“கருணை கிழங்குன்னா” அதிலிருந்து சந்தேகம் கேட்க ஆரம்பித்தாள் ராஜி.
கிழங்கை வேகவைத்தல் , புளியை ஊறவைத்தல் , பாசிப் பருப்பை, லேசாக வறுத்து கல் வேக வைத்தல், வெங்காயம் நறுக்குவது முதற்கொண்டு அவளைச் செய்யவைத்து, தானும் சேர்ந்து செய்ய, ராஜி நோட்ஸ் எடுக்காத குறையாக ஒவ்வொன்றையும் இரு முறை சொல்லிப் பார்க்க, சங்கரி சிரித்தார்.
“இவ்வளவு கஷ்டப்பட வேணாம். ஆர்வம் இருந்தால் போதும், சமைக்கும் போது கூட வந்து நின்னாலே தன்னால கத்துக்கலாம்.” என்றவர், லெட்சுமி அம்மாள் மேல் வேலைகள் பழக்கி விட்டதையும், பாலாவுக்கு உடல் நிலை சரியில்லாத பொழுதெல்லாம் இந்த வீட்டில் வந்து சமையல் செய்ததையும் சொன்னார்.
“ஒரு நாள், உப்பு கூடும், மறுநாள் காரம், அடுத்த நாள் புளிப்பு, இந்த அடுப்படியில் தான் நானும் பழகினேன், அம்மாச்சி, தாத்தா, மாமா மூணு பேரும் பாவம், சின்னப்பொண்ணு மெனெக்கிடறேன்னு பொருத்துக்குவாங்க. என் சமையலுக்குப் பயந்து தான் சமையலுக்கு ஆளே போட்டாங்க” எனச் சொல்லிச் சிரிக்க,
“அப்போ உங்களுக்குக் கல்யாணம் ஆகியிருக்காதே, அப்பத்தா எப்படி அனுப்புனாங்க” எனக் கேட்டாள்.
“சின்னவர் இங்க இருந்தா அனுப்பி இருக்க மாட்டாங்க. அக்காவோட உடல் நிலை, மாமா மேல இருக்க நம்பிக்கையில அனுப்புனாங்க.” என்றவர், சுந்தரன்,பாலா திருமணம் நடந்ததை பற்றி சொன்னார்.
“ உன் மாமா, அக்காவை வேற மாப்பிள்ளை கூட பார்க்க வரக்கூடாதுன்னு , பரீட்சை வச்சவர், அக்காவும் அவுங்க நினைப்புக்கு ஏத்தமாதிரி அவர் தான் மாப்பிள்ளைன்னு உறுதியா இருந்தாங்க. வீட்டில் பெரியம்மா பொண்ணு பார்த்துட்டு போனவங்க, ஒரு தாக்கல் சொல்ல வேணாம்? இப்படி இருக்காங்களேன்னு புலம்புவாங்க.
நான் தான் கோவில்ல வச்சு, “எங்க அக்காவை எப்போ கல்யாணம் பண்ணிக்க வர்றிங்கனே கேட்டேன். அவ்வளவு பொருத்தமான ஜோடி. ஒருத்தர் மனசில் நினைக்கிறதை அடுத்தவங்க சொல்லுவாங்க. பாலா அக்கா மடி நிறைஞ்சு இருந்தா, அவுங்களுக்கு இடையில் நான் வந்து நிற்கிற நிலைமை வராமல் போயிருக்கும்.” தன் அப்பா சொன்னதுக்கு நேர் மாறாய் புலம்பும், சங்கரியை ஆராய்ச்சியோடு பார்த்தாள். சங்கரியும் மகனிடம் புலம்பியதுக்கு நேர் மாறாய், கணவரைப் புகழ்ந்து கொண்டிருந்தார்.
அடுப்பில் ஏதோ பிடிப்பது போல் இருக்க, “அச்சோ , பருப்பில் தண்ணீர் இருக்கா பாரு” ராஜி உள்ளே ஓடியவள் , யோசனையின்றி மூடியை எடுக்க, கை சூடு தாங்காமல் கீழே போட்டாள் .
பின்னாடியே வந்த சங்கரி அடுப்பை அணைத்து விட்டு , “மீனாட்சி, கை சுட்டுடுச்சா” அவள் உதறிய கையை பிடித்துப் பார்க்க, “ஒன்னும் இல்லை அத்தை” என வலிந்து சிரித்தாள் .
இட்லி மாவைக் கையில் தடவி விட்டவர், “நல்ல பொண்ணு, சூடான பாத்திரத்தை வெறும் கையில் தொடுவியா” செல்லமாய் கோவித்து, “அக்காவுக்கு தெரிஞ்சா இரண்டு பேரையும் வைவாங்க” சாப்பாட்டுக் கூடத்தில் அமர்த்தியவர், நீட்டிய அவள் கையில் ஊதி விட
“ஒன்னும் இல்லை அத்தை” என்றாள்.
“கை சிவந்து போச்சு, இரண்டுநாள் சுறு சுறுங்கும். உங்கப்பா, மாமியார் கொடுமைனு போலீஸ் கம்பளைண்ட் கொடுக்காமல் இருக்கனும்” எனவும், “செஞ்சாலும் செய்வாங்க” என்றாள் மருமகள்.
“ஆத்தாடி பயந்து வருதே. உன் பெரியத்தை வரவும், அவுங்ககிட்டையே சமையல் கத்துக்கமா” விளையாட்டாய் சொல்ல,
“ம்கூம், நான் என் மாமியார் கிட்டத் தான் சமையல் கத்துக்குவேன். அந்த போஸ்டிங் உங்களுக்குத் தான்” என்றாள்.
“அது சரி, அப்பாவும் மகளும் ஒரு முடிவோட தான் இருக்கீங்க. நடத்துங்க” எனச் சிரிக்க,
“அம்மாவை உரிமையை விட்டுக் கொடுத்த, மம்மிக்கு மருமகள் கொடுக்கிற போஸ்டிங்” என்றாள் ராஜி.
கண்கள் பனிக்கச் சிரித்தவர்,“வாயிலையே உன்னை வடை சுடுற மாமியாராவ” என கேட்க, “அப்டின்னாலும் எனக்கு ஓகே தான்” என்றாள்
“வாயை கொடுத்து மாட்டிக்காதே, நான் டெர்ரராக்கும்” பேசி சிரித்தபடி, மருமகளை அமர்த்தி, தன அறையிலிருந்து ஆயின்மென்டை கொண்டு வந்து தந்தவர், “சாப்பிட்டு, இதைப் போட்டுக்கோ. தேவைப்பட்டா சாயிந்திரம் ஆஸ்பத்திரி போகலாம்.” என்றார்.
“அவ்வளவு பெரிய காயமெல்லாம் இல்லை, பெரியத்தை கிட்ட சொல்லாதீங்க ” ராஜி சொல்ல, “நான் சொல்லை, நீ சொல்லிடு. சின்னதோ, பெரிசோ , விஷயத்தை மறைக்காமல் வெளிப்படையா பேசுறது தான் நல்லது” என்றார்.
காலை ஏழரை மணிக்கெல்லாம், சோமனுக்கு டிபன், சாப்பாடு செய்து வழி அனுப்பி வைத்த பாலா, கூழையனூர் நிலவரத்தைக் கேட்க, போன் அடித்தார்.
“உங்க மகன் காலையிலேயே கிளம்பி போயிட்டான். மீனாட்சி வெள்ளன எந்திரிச்சு கூட மாட சமையல் பார்த்துட்டு இருக்கு” எனவும்,
“மருமகளை வேலைவாங்கி, உன் மாமியார் பவரை காட்டறியாக்கும்”
“ஏன், அதுக்கும் எஜமானியம்மாட்ட அனுமதி வாங்கணுமா. நான் ஒன்னும் உங்க தம்பி மகளை வேலை வாங்கலை. அதுவா தான் செய்யிறேன்னு வந்துச்சு”
“அது சரி, நீயாச்சு, உன் மருமகள் ஆச்சு, அது யாரு நடுவுல எஜமானியம்மா”
“உங்க அழகரை கேளுங்க சொல்லுவாரு” என்றவள், “நான், கிளம்பனும் நேரமாச்சு, அப்புறமா மீனாட்சிக்கிட்ட பேசிக்கிங்க” அலைபேசியை அணைக்க, “புருஷன் கூட சண்டையினா, மத்தவங்ககிட்ட பேசறதுக்கு என்ன. இந்த பொம்பளைங்களே இப்படி தான். இன்னைக்கு ஆபீஸ்ல மாட்டுறவனுங்க, செத்தானுங்க” என்றபடி போனை வைக்க, சுந்தரன் சிரித்தார்.
“பொம்பளைங்களை பத்தி சொன்னியே, அதைக் கேட்டு சிரிச்சேன். நீயும் அப்படி தானே”
“எனக்கு உங்களோட பேசாமல் எல்லாம் இருக்க .முடியாது. ஆனா உங்க குறத்தி சாமானியமா மலை இறங்க மாட்டா”
“நானும் கோவமா தான் இருக்கேன், அதெப்படி அந்த வார்த்தையைச் சொல்லலாம்.” சுந்தரனும் முறுக்க, “என்னைப் பஞ்சாயத்துக்குக் கூப்பிடாமல் இருந்தால் சரி” என்றார் பாலா.
சங்கரி சொன்னது போல், ராஜிக்கு விரலில் லேசான லேசான எரிச்சல் மட்டும் இருந்தது, அதைச் சமாளித்துக் கொண்டு, அமிர்தா பெரியம்மாவோடு சேர்ந்து கீரை, வாழைப்பூ ஆய்ந்து சமையல்காரம்மா உதவியோடு சமையலையும் முடித்துக் காத்திருக்க, அய்யாவு வழக்கம் போல வளவளந்தபடி சாப்பிட, அமிர்தா அவன் பேச்சுக்கெல்லாம் சிரித்து மகிழ, மூவரும் சாப்பிட்டு எழுந்தனர்.
அறைக்குள் வரவும் “மீனாட்சி, நீ கம்ப்யூட்டர் என்ஜினியர் தானே, உங்கள் சொக்கனை சினிமா படம் கணக்கா செஞ்சு தர்றியா” அவள் பதில் இல்லாமல் திரும்பிக்கொள்ள,
“மீனாட்சி, மீனாட்சி” அவளையே சுத்தி வந்தவன், “பேசமாட்டியா கோபமா” என அவள் கையை பிடிக்க, சூடு பட்ட விரலில் உரச, முகத்தை சுண்டி விட்டாள் “என்னாச்சு,எங்க கையை காட்டு” வலுக்கட்டாயமாய் கையை பற்றிப் பார்க்கச் சிவந்து கன்னி போயிருந்தது.
“இது எப்ப, எப்படி அது தான் ஸ்பூன்ல சாப்பிட்டியா” என்றவன் பதில் சொல்லாமல் இருக்கவும், அவள் சுதாரிக்கும் முன் சங்கரிக்கு போன் அடித்து விட்டான்.
“மம்மி” எனப் பேச ஆரம்பிக்கவும் அவள் , “இப்ப எதுக்கு அவுங்களை கூப்பிடுற” மெல்லமாய் கடிந்தபடி பிடுங்க வர, ஒரு கையால் அவளைப் பற்றிக் கொண்டவன், வசூல் சம்பந்தமாய் சில பேசி விட்டு நிறுத்த,
சங்கரியே, “ஏண்டா மீனாட்சியை என்ன சொன்ன, இன்னைக்கு சமையல் பழகுறேன்னு வந்து கையை சுட்டுகிடுச்சு. இக்கட்டான சூழிநிலையில் ஒரு பொண்ணை கல்யாணம் பண்றது பெரிசு இல்லை, விளையாட்டா கூட திருப்பி அதைச் சொல்லிக் காட்டக் கூடாது” அறிவுரை வழங்கியவர்,
“காலையில் ஆயின்மென்ட் குடுத்திட்டு வந்தேன். அதை போட்டுச்சான்னு பாரு” என்று சொல்லி போனை வைக்க, அவளை முறைத்தான்.
“நான் தான், விளையாட்ட சொல்லிப்புட்டேன், மன்னிச்சுக்கோன்னு சொன்னேன்ல, அப்புறம் என்னத்துக்கு இந்த வீம்பு” என்றவன், “மம்மி கொடுத்த மருந்து எங்க” எனவும், அவள் கையை இழுத்துக் கொள்ள,
“பேசமாட்டேன்கிறது தானே தண்டனை, சும்மா கையை குடு” என்றவன், அவள் படுக்கையில் கிடந்த ஆயின்மென்ட் எடுத்து நோகுமோ என்பது போல் போட்டு, அம்மாவைப் போலவே ஊதியும் விட்டான்.
அதற்கடுத்த வந்த நாட்கள் சொக்கன் மீனாட்சிக்குள் ஊடல் தீர்ந்தபாடில்லை. அய்யாவு குட்டிக்கரணம் அடித்துப் பார்த்தும் அவள் மசியவில்லை. மீனாட்சி மௌன விரதத்தைத் தொடர அவளுக்கும் சேர்த்து அவனே பேசினான். அத்தையின் கவனிப்பில் மாத சுழற்சி சரியாக வர, வயிற்று வலி இல்லாமல் இயல்பாய் நாட்களைக் கடந்தாள்.
சங்கரி, மிராசு இருவரும் ஊடலை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தனர்.
தினப்படி கணக்கு மட்டும் புலனத்தில் சென்று விடும். அதற்கு மேல் ஒரு விசாரிப்பு இல்லை, அவரும் இரண்டு நாளோடு பாட்டு அனுப்புவதையும் நிறுத்திக் கொள்ள, சங்கரிக்கு மனம் அடித்துக் கொண்டது.
சுந்தரனுக்கும் பாலா அருகிலேயே இருந்து பணிவிடைகள் செய்தாலும், சின்ன மகன், மகள், மருமகன் என குடும்பத்தோடு இருந்தாலும், சங்கரியோடு பேசாத இறுக்கம், மன வருத்தம் இருந்தது.
“என்ன வார்த்தை சொல்லிட்டா” நொந்துக் கொண்டவர், தனிமையில் வானத்தை வெறித்தார்.
“உன் மிராசோட பேசுறது இல்லையாடி , விட்டத்தை பார்த்துட்டு உட்கார்ந்து இருக்கார்” தங்கையுடன் தனியாகப் பேசிய பாலா கேட்க,
“அவர் தான் பேசுறது இல்லை. நான் வாட்சப்ல கணக்கு எல்லாம் அனுப்பிட்டு தான் இருக்கேன்”
“கணக்கு அனுப்புறதும் , பேசுறதும் ஒண்ணா. உங்க சண்டைக்குள்ள நான் வரலை. எதுவா இருந்தாலும் சீக்கிரம் தீர்த்துக்குங்க, அம்புட்டு தான் “சொல்லுவேன்” என்றார் பாலா.
சங்கரிக்கு, தன் சொல்லை அவர் தட்டிவிட்டார் என்ற கோபம் மட்டுமே பெரிதாக இருந்தது, தான் சொன்ன வார்த்தையை மறந்து விட்டாள் .
‘விட்டத்தைப் பார்க்கிறார்’ என்று சொன்னதிலேயே, ஏன் என யோசித்தவருக்கு விஷயம் புரிபட, அதன் பின் மிராசிடம் பேசப் பயம் வந்தது. நாளை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார்.
செல்வியிடம், “வீடெல்லாம் செட் ஆயிடுச்சுல்லடி. இன்னும் எத்தனை நாளைக்கு அப்பா, அம்மாவை பிடிச்சு வைப்ப” கேட்க, ஸ்பீக்கரில் போட்டவள்,
“வீடு தான் பழகி இருக்கு, ஊர் இன்னும் பழகலை. இப்போ தான் ஒவ்வொரு கோவிலுக்கா போயிட்டு இருக்கோம். அப்பாவும், அம்மாவும் மனசுக்கு நிறைவா இருக்குனு சொல்றாங்க. இன்னும் இரண்டு கோவில் சுத்தி பார்த்துட்டு வரட்டுமே. உங்களுக்கு ஏன் பொறாமை” அப்பாவைப் பார்த்துக் கொண்டே வேண்டும் என்றே கேட்க,
“எனக்கு என்ன பொறாமை, மனசு நிறைஞ்சு இருந்தா அங்கையே இருக்கட்டும். எத்தனை நாளைக்குன்னு நானும் பார்க்குறேன்” என்றவர்,
“ராஜா உன் அப்பாவும், அம்மாவும் உன்னை மறந்துட்டாங்கடா” எனக் கோர்த்து விட்டார்.
“பொறாமை இல்லேன்னா , எதுக்குடி என் மகனை எனக்கு எதிரா தூண்டி விடுற” பாலா உள்ளே புக, “அம்மா, நீங்க இருந்துட்டு வாங்க, எனக்கு ஒன்னும் கோபம் இல்லை” என்றான் அய்யாவு.
“அப்போ, நீயும் வேனா சென்னைக்கு வண்டியைக் கட்டு” சங்கரி கோபிக்க,
“சென்னையிலிருந்தவளை கூழையனூர்க்காரியா மாத்திட்டு, இங்க இருந்த எல்லாரும் சென்னை வாசியா மாறிட்டீங்க.” ராஜி பெரிய மாமியாரிடம் குறை பட, “அப்படியெல்லாம் இல்லடா கண்ணு, வந்துடுவோம்” என மருமகளைத் தாஜா செய்து பேசி போனை வைத்தார்.
சின்னமன்னூரில், சேவுகன், ஞானம் இல்லத்தில் புதுமண மக்களுக்கு விருந்து வைக்கவில்லை, தீபாவளிக்குப் பின் ஒருநாள் இரண்டு ஜோடிகளும் சென்று பாலும் பழமும் மட்டுமே சாப்பிட்டு வந்திருந்தனர். செல்வி சென்னைக்குச் சென்று விட, சுதா ஸ்ரீ மகனுக்கு நாற்பத்தெட்டாம் நாள் புண்ணியதானம் செய்து, பெயர் வைத்தனர்.
சங்கரி “ மருமகனுக்கு விருந்து வைக்கணும்னா தான் ,யோசிக்கணும். நம்ம வீட்டுக்கு வர்றதுக்கு என்ன அக்கா, நாங்க வந்துடுறோம்” என அந்த வாரம் ஞாயிற்றுக் கிழமையில்,சங்கரி, அமிர்தா,சொக்கன்,மீனாட்சி சின்னமன்னூர் கிளம்பிச் சென்றனர்.
ராஜி குழந்தையை ஆசையாகப் பார்க்க, “இதே மாதிரி அடுத்த வருஷம், ஒரு பையனை பெத்து குடுதுடி அம்மா, உன் பெரியத்தை மனசு நிறைஞ்சுடும்” என்றார் ஞானம்.
“பேபியா,எனக்கா, போங்க அத்தை, நான் அதுக்கெல்லாம் ரெடியாவே இல்லை ” மீனாட்சி சிணுங்க,
“இப்படி சொன்னதுங்க தான், பத்தாம் மாசம் புள்ளையை பெத்துடுங்க” சுதா சொல்லிச் சிரிக்க, மீனாட்சி , சொக்கன் பக்கம் திரும்பவும் வெட்கப்பட்டு குழந்தையை கொஞ்சுவது போல் தலையைக் குனிந்து கொண்டாள் .
சுதா கணவன், “என்னா மாப்பிள்ளை, தங்கச்சி படக்குனு இப்படிச் சொல்லி புடுச்சசு. இன்னும் ஒன்னும் நடக்கலையா” விசாரிக்க,
“நீங்க வேற கடுப்பை கிளப்பாதீங்க மாம்ஸ்” என்றான்.
“குமரன்” எனக் குழந்தைக்கு முருகன் பெயரைச் சூட்ட, அய்யாவு மாமன் முறைக்கு செயின் போட்டான். மகள் வந்திருப்பாள் எனக் கீர்த்தி அக்காள் வீட்டுக்கு வர, “மகளைக் கட்டிக் கொடுக்கவும் தான், அக்கா வீடெல்லாம் கண்ணனுக்கு தெரியுது” என்றார் சேவுகன்.
“அது தான் வந்துட்டேன்ல, விடுங்க” என்றவன்,தானும் முறைக்கு ஒரு செயின் போட்டு விட்டு, “என்னத்தா இப்ப சந்தோசம் தானே” சுதாவைக் கேட்க,
“என் மகனுக்கு செயினு ,வந்ததை விட, பொண்ணு பெத்து தர்ற அத்தை வந்தது தான் சந்தோசம்” என்றாள்.
“ம்க்கும், அப்ப மாமாங்கம் ஆகும். இன்னும் சாந்தி கல்யாணத்துக்கே நேரம் குறிக்கலையாம்” கீர்த்தி வம்பிழுக்க, அய்யாவுக்கு சுர்ரென கோபம் ஏறியது, அருகிலிருந்த சங்கரி மகன் கையை பிடித்து அமைதிப்படுத்தினார்.
“அப்பா, எனக்குத் தான் ஹெல்த் இஸ்யூஸ். அவுங்களை எதுவும் சொல்லாதீங்க” ராஜி சொல்ல,
“ அதெல்லாம் இல்லை, நீ நல்லா தான் இருக்க ராஜிமா. டாக்டர் கிட்ட விசாரிச்சுட்டேன். பெரிசா சீரெல்லாம் வேண்டாம்னு, நகைநட்டை கழட்டி கொடுக்கச் சொல்லி கூட்டிட்டு போனவன், சரியான ஆம்பளையா இருந்தா உன் குடும்பம் நடத்தியிருக்கனுமுள்ள, எல்லாம் நடிப்பு” என்றான்.
“யோவ், உனக்கு அம்புட்டு தான் மரியாதையை. மீனாட்சியைத் தாரைவார்த்துக் கொடுக்கிறது கூட உன் கடமை இல்லைனு ஒதுங்குனே இல்லை. அப்படியே ஓடிடு. என் பொண்டாட்டி கூட, எப்ப, எப்படி குடும்பம் நடத்தணும்னு எனக்குத் தெரியும்” அய்யாவு எகிற,
“டயலாக் நல்லா தாண்டா அடிப்ப. குடும்பம் நடத்திக் காட்டு. ஒரு வேளை..” என நக்கலாகச் சிரிக்க, அய்யாவுக்கு வெறி வந்தது, மாமனாரை ஒரு கை பார்க்கும் உத்தேசத்தோடு அவன் முன்னேறினான். சங்கரியும் தடுக்க வில்லை.
மீண்டும், மாமன் மருமகனுக்குள் கைகலப்பு ஏற்படுமா, ராஜமீனாட்சி என்ன செய்வாள்.