தொடர் : 55
உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
ராத்தோட்களின் ஸ்வர்ண மாளிகையில், இந்த நாள் புயல் கரையைக் கடந்தது போல் மனதில் அச்சத்தை மிச்சம் வைத்துக் கடந்து சென்றது. தங்களது ஹேவேலியோ, மேன்சனோ பாதுகாப்பு வாய்ந்த கோட்டையாகக் கருதிய அவர்களுக்கு, ஜானகி கடத்தப்பட்டது பெரிய அடியாக இருந்தது.
தாதாஷா, தாதிஷா, ராஜேன், கஜேன், அமரேன் அவர்களின் இணைகள், என அனைவரும் இதையே நேற்று முதல் எண்ணிக் கலங்கி இருந்தனர். ஜானகி நல்ல முறையில் கிடைக்க வேண்டும் என்பது ஒரே பிரார்த்தனையாக இருந்தது. காலை நான்கு மணியளவில், அமரேன் தன் குடும்பத்தாருக்கு ஜானகி பத்திரமாக மீட்கப்பட்ட செய்தியைச் சொல்லி, அவர்கள் கவலையைப் போக்கினார்.
ரகுவீருக்கும் குண்டடி பட்டது எனவும், மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டவர்களைக் காண, பொழுது விடிந்ததும் கிளம்பிச் சென்றனர் ராத்தோட்ஸ். சிவகுரு குடும்பத்தினரும் அங்கிருந்தனர். ஜானகியை, மீட்கச் சென்ற எல்லோரும் ஏதோ ஒரு சிறு காயத்தோடு காணப்பட்டனர். தங்கள் பிள்ளைகளின் நிலையைப் பெற்றோரின் கண்கள், ஆற்றமாட்டாமல் வருடியது.
மயூரி, பூனம் அமரேனை மருத்துவமனை வரவேற்பு பகுதியில் பார்த்தனர், அவரிடம் ஓடிச் சென்று, நடந்தவற்றை விசாரித்தாள் மயூரி.
ஓ பி வார்டில் காயங்களுக்கு மருந்து கட்டிக் கொண்டிருந்த, அமுதனைச் சென்று பார்த்தாள். கைகளில் கன்னத்தில், வீக்கமும், சில இரத்தக் காயங்கள் என இருக்கவும் கண்ணீர் ததும்ப நின்றாள். "ஜானி, எப்படி இருக்கா?" எனக் கேட்டாள்.
"அதிர்ச்சியில் இருக்கா போல, இது போல அவளைப் பார்த்ததே இல்லை, வேற யாரோ ஒரு பொண்ணைக் கூட்டிட்டு வந்த மாதிரி இருக்கு ." என அமுதன், மனவேதனையை அவளிடம் பகிர்ந்தான்.
அங்கிருந்த கணேஷ், "அக்காதான் வந்துட்டாளே, நீங்க இப்படிச் சோகமா இருந்தா, அவள் எழுந்ததும் பாசமலர் சிவாஜின்னு நினைப்புன்னு கேலி பண்ணுவா, ஒண்ணும் இல்லை அண்ணன்." என அண்ணனை தேற்ற முயன்றான்.
"மயூ, கணேஷ் இவனால் தான் ஜானுவை இவ்வளவு சீக்கிரம் மீட்க முடிஞ்சது." என அறிமுகம் செய்ய, தன்னிலும் சிறியவனான, கணேஷிடம் மயூரியும், இயல்பாகப் பழகினாள்.
"நான் வந்ததுக்கு அப்புறம், நீ ஊருக்கே வரலையே?" என்ற மயூரியிடம். "இந்த மும்பை ட்ரிப்புக்காக ரெடி பண்ணிக்கிட்டு இருந்தேன் அத்தாச்சி." என்றான் கணேஷ்.
ஜெய்க்கு கட்டுப் போட்டு, அமித் அழைத்துச் சென்றிருந்தான். அமரேன் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தார். ராஜ், ரன்வீரின் காயங்களுடன் பார்த்த பூனம், அவர்களிடம் விசாரித்து நிற்க பின்னோடு வந்த ஸர்குனும், மகன்களைப் பார்த்து முகம் வாடினார்.
"ஜவான் லட்கே, இரண்டு நாளில் காயமெல்லாம் சரியாகிடும், நமக்கு ஜானிம்மா கிடைத்தது தான் சந்தோஷம்." என்றார் கஜேன் தொடர்ந்து, "நீங்க ஒரு எட்டு ஜானியை, பார்த்துட்டு வந்துட்டு , பசங்களைக் கூட்டிட்டுக் கிளம்புங்கள். ஹாஸ்பிடலில் கூட்டம் போட கூடாது." என்றார்.
ஜானகியைப் பார்க்க வந்த ராத்தோட்கள், துருதுருவெனச் சுற்றித் திரிந்தவளை இப்படி வாடிய கொடி போல் மயங்கிக் கிடந்ததைப் பார்த்துக் கலங்கினர்.
ஜானகி, கடத்தப்பட்ட பிறகு, ராகினியை இப்போது தான் பார்க்கும் பெற்றவர்கள் அந்த நேரம் மகள் துடித்த துடிப்பையும் உணர்ந்து, அவரைக் கட்டியணைத்து, ஆறுதல் தந்தனர்.
ஷப்னம், ரகுவீர் எங்கே என விசாரித்துப் பதட்டமாக வந்தார், ராகினி ஷப்னத்தைப் பார்க்கவும் பாபிஷா எனக் கட்டிக்கொண்டார். அன்னை இருவரும் தங்கள் பிள்ளைகளின் நிலை கண்டு கண்ணீர் விட்டனர்.
ரகுவீர் அருகில் சென்றவர், அவன் புஜத்தில் போடப்பட்டிருந்த கட்டைப் பார்த்துத் தவித்துப் போனார். தாயின் கேவல் மகனையும் எழுப்பியது. "மாஷா, ஒண்ணும் இல்லை, கட்டு தான் பெருசு காயம் சின்னதாகத் தான்." எனச் சமாதானம் சொன்னான்.
"ஏதாவது ஆகியிருந்தா?" எனத் தாயுள்ளம் பரிதவிக்க, தனையன், "ஒண்ணும் ஆகல மாஷா, உங்கள் மகன் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?" என்றான். அவனைத் தேடி வந்த ஹரிணி, "ரகுவீ காயம் பலமா பட்டிருக்கா, புல்லட் உரசிட்டு போச்சு, லேசான காயம் தான் ஜீஜூ சொன்னார், இவ்வளவு பெரிய கட்டாக இருக்கே?" எனக் கலங்கினாள் ஹரிணி.
"தீதீ, ஐயம் ஓகே, நீங்க ஜீஜூக்கு கூடச் சண்டை போட, இதை ஒரு சான்ஸா எடுத்துக்காதீங்க." எனக் கேலி செய்தான், ஞாபகம் வந்தவனாக,
"தீப்தி, வந்துட்டாளா தீதீ, அவளும், ராகேஷ் தங்கை சாந்தினியும் உதவி செய்யலைனா, இன்னும் அடி பலமா இருந்திருக்கும்." என விவரம் சொன்னான். "நைட்டே, ஜீஜூஷா கூட்டிட்டு வந்துட்டார். அவர் தான், நீ போய்ப் பாரு, பசங்களைப் பார்த்துக்கிறேன்னு அனுப்பி வைத்தார்." என்றாள் ஹரிணி. ராத்தோட்கள், அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்ததை ரகுவீர்ப் பார்த்தான்
"ஹேய், பூரா ராத்தோட் குடும்பமும் இங்க தானா, தாதாஷா, தாதிஷா எல்லாரையும் எதுக்கு அலைய வச்சீங்க பாபுஷா, என்ன இது நீங்களே எல்லாரையும் இப்படிக் கூட்டிட்டு வந்திருக்கீங்களே?" எனக் குறைபட்டான்.
"உங்கள் இரண்டு பேர் நிலைமைக் கேட்டுட்டு ஒரே அழுகை, கண்ணால் பார்த்தா தான் சமாதானம் ஆவாங்கன்னு கூட்டிட்டு வந்தேன். குண்டு, ஆழாமா பட்டுச்சா ரகுவீ." எனக் கேட்டார் ராஜேன்.
"இல்லை பாபுஷா, ஜானகி தலைக்கு நேரா கன்னை பிடித்திருந்தான் ரெனாவத், அவன் தலையில் பின்னால் இருந்து சாசாஷா அடிக்கவும், அவன் கை தன்னால் ட்ரிக்கரை அழுத்திடுச்சு, ஜானுவைக் காப்பாற்ற முன்னால் ஓடி அவளை இழுத்தேன். அதில் குறி தடுமாறி, புல்லட் என் கையில் உரசி போச்சு." என நடந்ததைத் தந்தையிடம் விளக்கியவன் .
"தாதிஷா, இவ்வளவு தூரம், தாதாஷா வையும் கூட்டிட்டு வந்திருக்கீங்க எதுக்கு இவ்வளவு சிரமம். ஒரு ஜெனரல் செக்கப்புக்குப் பிறகு, மதியம் வீட்டுக்கு வந்துடுவோம்." என்றான் ரகுவீர்.
"சுப்கர் ரகுவீ! எவ்வளவு பெரிய வேலை செஞ்சு, என் நாதியை மீட்டுட்டு வந்திருக்க. கையில் குண்டு பட்டிருச்சுன்னு சொன்ன பிறகு, உன் தாதிஷா, வீட்டில் உட்கார்ந்து பூ கட்டுவேனா?" என்றார் மயூரா தேவி.
"தாதிஷா நிஜமாகவே போய் இரண்டு மாலை கட்டி வையுங்கள், உங்கள் நாதியை (பேத்தியை) நான் வீட்டுக்கு வந்தவுடனே ஷாதி பணிக்கிறேன்." என விளையாட்டு போல் தன் எண்ணத்தைச் சொன்னான் ரகுவீர்.
'நீ முதலில், உன் லுகாயி கூட வீடு வந்து சேரு, பாரு தாதிசாஸ், (மாமியாருக்கு மாமியார் முறையைத் தாதிசாஸ், எனச் சொல்வார்கள்) அவளுக்கு டஃப் டாஸ் கொடுக்கத் தயாரா இருப்பேன்." என்றார்.
"தாதிஷா, என் லுகாயி பவாரியா கொள்ளைக்காரனையே கதற விட்டவள், பார்த்து இருந்துக்குங்க." என ரகுவீர் ஜானகியின், வீரத்தைப் புகழ்ந்தான்.
பூனம், ஸர்குன், மயூரி, ரகுவீரின் கைக் கட்டைப் பார்த்துப் பதறிக் கேட்டனர், "சாசிஷா, இரண்டு பேரும் பயப்படாமல் இருங்க ஒண்ணும் இல்லை." என்றவன்
மயூரியை அழைத்து, "அமுதனை பார்த்தியா, ரொம்பக் கலங்கிட்டார். ஜானி, தாதாஷா, தாதிஷா எல்லாரும் வந்திருக்காங்க, வீட்டுக்கு கூட்டிட்டுப் போ." என அவளின் பொறுப்புகளை எடுத்துச் சொன்னான்.
"பையா, ஜானகி சீக்கிரம் சரியாகிடுவாள், ரொம்ப நேரம் கோபம்,வருத்தம் எதையுமே பிடிச்சு வச்சுக்க மாட்டாள். நீங்க கவலைப் படாதீங்க." எனத் தன் பையாவையே தேற்றிய தன் சோட்டி தங்கையைப் பெருமையாகப் பார்த்தான் ரகுவீர்.
மூத்த சம்பந்திகள், தாதாஷா வீரேந்தர் சிங் ராத்தோட், சிவபரங்கிரி அவர்களின் சந்திப்பும் நல்ல விதமாகவே அமைந்தது
அமரேந்தர், முதலிலேயே மருத்துவமனையில் இருந்தால், அவருக்கு அறிமுகம் ஆகியிருந்தார். தன் பேரன், பேத்திகளைப் பார்த்து வந்த பெரியவர்களை, அமரேன் தான் பக்கத்து அறைக்கு அழைத்துச் சென்றார்.
சிவகுரு, தன் குடும்பத்துடன் பேசிக் கொண்டிருந்தார். மாமனாரைப் பார்க்கவும் எழுந்து வந்தவர் , "வாங்க பாபுஷா!" என தன் குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்தார். சிவகாமி, தெய்வா இருவருக்கும் பதில் பேசத் தெரியாதே தவிர ஓரளவு ராகினியோடு இருந்ததில் ஹிந்தி புரிந்துக் கொள்வார்கள்.
தாதாஷா, தாத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு, "உங்களை, சந்தோஷமான சூழலில் சந்திக்கனும், உங்கள் ஊருக்கே வந்து நன்றி சொல்லனும்னு நினைச்சேன். இப்படி ஒரு சூழல் ஆகிப்போச்சு." என உணர்ச்சி ததும்பச் சொன்னார். "அதனால் என்ன சம்பந்தி, ஜானகி தான் கிடைச்சிட்டாளே, இதுவும் சந்தோஷமான விசயம் தான்." எனப் பெருந்தன்மையாகப் பேசினார் சிவபரங்கிரி.
"எங்கள் மகளை, உங்கள் மகளாட்டம் இத்தனை வருஷம், எவ்வளவு உயர்வா வச்சிருந்திருக்கீங்கன்னு, ஸ்வரூவை பார்த்தாலே தெரிகிறது சம்பந்தி. நான் தான் துரதிஷ்டமான தகப்பன், என் மகளை, தேவையில்லாமல் இத்தனை வருஷம் பிரிந்து இருந்தேன்." என்றார் ராத்தோட்.
"சம்பந்தி, நானும் மகளைப் பெத்தவன் தான், யாருக்கும் தன் மகளைப் பிரிந்து இருப்பது, பிடிச்ச விசயமா என்ன. மகள்கிட்ட தானே, நம்ம அம்மாவைப் பார்ப்போம். சந்தர்ப்பம் அப்படி அமைஞ்சு போச்சு, பெரிய இழப்பு தான். இனிமே உள்ள காலத்தை மகளோடு சந்தோஷமா செலவழியுங்கள். எங்கள் ஊருக்கு வாங்க, இனிமே என்ன? மகள், பேத்தி இரண்டு பேரும் அங்க இருப்பாங்களே!" என்றார் சிவபரங்கிரி.
"கட்டாயம் சம்பந்தி, இப்ப வாங்க நம்ம வீட்டுக்குப் போகலாம். ஜமாயீஷா நேற்று இருந்த நிலையில் அங்கே வரலைன்னுட்டார். நானும் முதன் முதலில் வரும்போது மனக் கஷ்டத்தோடு வர வேண்டாமென்று விட்டுட்டேன். இப்ப வாங்கப் போகலாம். உங்களுக்கும் பயணக் களைப்பு வேற இருக்கும்." என அழைத்தார் ராத்தோட்ஷா
"வர்றோம் சம்பந்தி, பேத்தி கண்ணு முழிக்கட்டும், நிம்மதியா உங்கள் கூட வருவோம் ." என்றார் சிவபரங்கிரி. இவர்கள் பேசிக் கொண்டிருந்த நேரம், தாதிஷாவும், பூனமும் சிவகாமி, தெய்வாவை சந்தித்தனர். இவர்களுக்கு இடையே இருந்த மொழிப் பிரச்சனையை, அமுதன் தீர்த்து வைத்தான்.
"அப்பத்தா, அம்மாவோட அம்மா இவங்க மயூரியோட அம்மா." என அறிமுகம் செய்தான் அமுதன்.
"நல்லா தான், வக்கணையா சொல்ற பேராண்டி, இது எங்க ஆச்சி, அத்தைனு சொல்லு." என்றார். சிவகாமி பேச்சு அதிகாரமாக இருக்கவும், தாதிஷா யோசனையாகப் பார்த்தார். அமுதன் சிரித்துக் கொண்டே, தன் நாநிஷாவிடம் அப்பத்தா சொன்னதை விளக்கினான்.
முகம் மலர்ந்த மயூரா தேவி, சிவகாமியின் கையைப் பிடித்துக் கொண்டு, "என் மகள் கொடுத்து வைத்தவள், உங்களை மாதிரி அருமையான மாமியார் கிடைத்தற்கு. நான் தான் அவளுக்கு எதுவுமே செய்தது இல்லை. கண்ணை மூடும் முன்னே பார்க்க மாட்டமான்னு தவிச்சேன்." என்றவரை அவர் உடல் மொழியில் புரிந்து கொண்ட சிவகாமி அம்மாள்.
"வருத்தப்படாதீங்க அண்ணி, உங்கள் மகளுக்கு எல்லாமே ஒரு குறையும் இல்லாமல் நல்லா தான் நடந்தது. எங்கள் குரு பொண்டாட்டியை, முகம் வாட விடமாட்டான்." எனவும்,அமுதன் மொழி பெயர்த்தான்.
ஜானகி கண் முழித்தாள் என ஹரிணி வந்து கூப்பிட்ட. சிவகுரு குடும்பத்தை முதலில் அனுப்பினர். தன் அப்பத்தா தெய்வாம்மாவைப் பார்த்த ஜானகி, கலங்கிப் போனாள். "ஜானகி கண்ணு." என வந்த அப்பத்தாவிடம், ட்ரிப் ஏறிய போதும் பொருட்படுத்தாமல், அவரைக் கட்டிக் கொண்டாள்.
ஜானகியின் அணைப்பில் அவளின் மனம் துன்பப்படுவதை அறிந்த சிவகாமி அவளை அணைத்து, "என் இராசாத்தி, எவன் கண்ணு பட்டுச்சோ இந்த நிலைமை, மனசைப் போட்டு அலட்டிக்காத கண்ணு, உனக்கு நாங்கள் எல்லாரும் இருக்கோம்." என்று முதுகைத் தடவிவிடவும். அப்பத்தா தோளில் குலுங்கி அழுதாள் ஜானகி. அவள் பார்வையில் சுற்றி நின்றவரைத் தாண்டி, இவளின் கண்ணீரில் ரகுவீரின் கண்களில் வலியைப் பார்த்தவள் சுதாரித்தவள்,
"ஏன் கிழவி, பேத்தியை கடத்தினவன் யாருடான்னு பார்க்க வந்தியா?" என வம்பிழுத்தாள் . ஜானகி துக்கத்திலிருந்து வெளியே வர முயல்கிறாள் என்று புரிந்த அப்பத்தா எசப் பாட்டுப் பாடினார்.
"ஆமாடியம்மா, புலியை முறத்தால் அடிச்சு துரத்தினப் பரம்பரையில் வந்த பெண்ணரசியை, கடத்தினவனுக்கு எம்புட்டு துணிச்சல்னு பார்க்க வந்தேன். அது தான் பேராண்டி பறந்து வந்து காப்பாத்தினாராம், உங்கப்பன் சொன்னான்." என சிவகாமி, நீட்டி முழங்கவும்,ஜானகி பேசாமடந்தையானாள்.
"சிவகாமி, உன் பேச்சை எல்லாம் அப்புறம் வச்சுக்க. புள்ளை ஓய்வெடுக்கட்டும்." என்றார் தாத்தா. தெய்வாவிடமும் அதே போல் அணைத்துக் கொண்டவள், "அம்மா, உங்கள் கூடவே வந்துடுறேன். கூட்டிட்டு போங்க சண்முப்பா." என அவள் அம்மாவிடம் ஆரம்பித்து, அப்பாவிடம் கண்ணீர் சிந்தினாள்.
"நீ மனசைப் போட்டு மருகிக்காதே கண்ணு . போதும் உன் படிப்பும் வேலையும். இங்க பாருங்க, உங்கள் அண்ணன் கிட்ட சொல்லிருங்க. நம்ம மகளை நாம கூட்டிட்டுப் போவோம். பாலா, பெரியப்பா கிட்டக் கேட்டு டிக்கெட் போடு." என்றார் தெய்வா.
பாலனைக் கண்ட ஜானகி, தலை கவிழ்ந்து உதட்டைக் கடித்து வேறு புறம் பார்த்தாள். பாலன் அவளை ஒரு முறைப் பார்த்து விட்டு, ராத்தோட்ஸ் வரவும் அங்கிருந்து நகர்ந்தான். அனைவரும் கிளம்பும் போது வந்த அமிர்தா, ஆச்சி தாத்தாவிடம் அழுதாள். தெய்வா, "அழாதடா அம்மு, எல்லாம் தெரிஞ்சா நடந்தது." எனத் தேற்றினார்.
ஜானகியின் செய்கையில் ரகுவீர் ஒன்றை அறிந்தான், அவள் தங்கள் ஊருக்குச் செல்வதில் குறியாக இருக்கிறாள். அதற்காக எமோசனலாக சிவகுரு, சண்முகம், தெய்வா அப்பத்தாவிடம் மட்டுமே பேசுகிறாள். மற்றவர் முன்னால் தலை கவிழ்ந்தே இருந்தாள்.
ராகினி, சிவகுருவைப் பக்கத்து அறையில் ஓய்வு எடுக்கச் சொல்லி விட்டு அமிர்தா மட்டும் அங்கிருந்தாள். ஶ்ரீநிதி, ஹேமந்துடன், டாக்டரைப் பார்க்கச் சென்றாள்.
அமிர்தா, ஜானகியிடம் வந்தவள் அவளைக் கட்டியணைத்து அழவும், "அமித்து ஒண்ணும் இல்லைடி விடுடி." என கடித்தாள் . "என்னால் தான் என் பாழாப் போன தூக்கத்தால் தான், உன்னைக் கடத்திட்டான்." எனத் தன் தலையில் அடித்துக் கொள்ளவும்,
ஜானகி சொல்லிப் பார்த்தும் கேட்கவில்லை. எரிச்சலான ஜானகி, அடக்கி வைத்திருந்த அத்தனை கோபத்தையும் அவளிடம் காட்டினாள். ரகுவீரும் அமிர்தாவும் மட்டுமே அந்த அறையிலிருந்தனர்.
ஜானகி எரிச்சல் மேலிட, "நான் என்ன செத்தாப் போயிட்டேன், உயிரோடு தானடி இருக்கேன். சும்மா அழாதே அழுகறதுன்னா நான் அழனும்டி. போ." என வார்த்தைகளை நெருப்பாகக் கொட்டினாள். அமிர்தா அதிர்ந்து பார்க்க, ரகுவீர், எழுந்து வந்து விட்டான்.," ஜான்வி என்ன பேச்சு இது, அம்ரூ மனசு கேட்காமல் தானே அழறா!" என அதட்டினான்.
"ஆமாம், உங்க மனசெல்லாம் சரியில்லைனு இங்க வந்து கொட்டுங்க. என் மனசுக் குப்பைத் தொட்டி தானே, எதை வேணாலும் கொட்டலாம்." என்றவள், எதையோ நினைத்து ஓங்கரித்து தன் கையில் போடப்பட்டிருந்த ட்ரிப்ஸை, பிடுங்கி எறிந்து ஓடப் போனாள். ரகுவீர் அவளை இறுக்கமாக அணைத்துப் பிடித்துக் கொண்டவன், "அம்ரூ டாக்டரை கூட்டிட்டு வா." என அனுப்பி வைத்தான்.
அவளை தன்னுள் வைத்துக் கொண்டு, "ஜானும்மா எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுடி நான் சரி பண்றேன், நீ என்னோட ஜானு டி. ஜானு, ஜானு!" எனும் போதே அவன் கைகளில் மயங்கிச் சரிந்தாள்.
கட்டுப் போட்டக் கையோடு அவளைத் தாங்கியவன் கஷ்டப்பட்டுத் தூக்கி கட்டிலில் படுக்க வைத்தான். அம்ரூ புயலென ஓடிச் சென்று மருத்துவரை அழைத்தாள். ஹேமந்த், ஶ்ரீநிதியும் அவர்களோடே வந்தனர்.
இரத்தம் சொட்டிய ட்ரிப்ஸ் போட்டக் கையை சரியாக மாட்டி விட்டு. ஊசியும் போட்டார் மருத்துவர். சிவகுரு, ராகினியும் வந்து சேர்ந்தனர்.
"உடலால், அவங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. சீ இஸ் வெர்ஜின். ஆனால் அதைத் தாண்டி ஏதோ மன பாதிப்பு, அதை நினைக்கும் போதே இப்படி ஹைப்பர் ஆகுறாங்க. நான் சைகாலஜிஸ்டை ரெஃபர் பண்றேன். அவர் வந்து பார்க்கட்டும், அதுகப்புறம் முடிவு பண்ணலாம்." என்று விட்டு சென்றார்.
ரகுவீரின், கைக்கட்டிலிருந்து இரத்தம் வந்தது. நர்ஸைக் கூப்பிட்டு, அதனைச் சரி செய்தனர். ஆற்றாமையோடு அமர்ந்திருந்தான் ரகுவீர். எங்கே பிரச்சினை நடந்தது. கணேஷ் காண்பித்த போட்டோவில், பயம் என்பதே இல்லாமல் மிடுக்காக இருந்தாள். சாந்தினி பேசும் போது, ஜானகியை, காணவில்லை என்றனர். அதற்குப் பிறகு ரகுவீர் அவளைக் கண்டது, மூன்று அல்லது நான்கு மணி நேரத்தில் அதற்குள் என்ன நடந்தது எனக் குழப்பமாக இருந்தது.
ரகுவீர் ஜானகியுடன் ராகினி மட்டும் அங்கே இருந்தார். தன் புவாஷாவின் மடியில் தலைவைத்து, தன் கவலையை அவரோடு பகிர்ந்தான் ரகுவீர். ஜானகி ஊசி மருந்தின் வீரியத்தில் அசந்து தூங்கினாள்.
அமிர்தாவிடம் நடந்ததைக் கேட்டுக் கொண்டிருந்தார் சிவகுரு. ஶ்ரீநிதிக்கு, பிரச்சினையின் போக்குப் புரிந்தது. ஆனால் பிரச்சனை என்னவெனப் புரியவில்லை. ரகுவீர், ரூமை விட்டு வெளியே வந்தவன், அமரேன் சாசாஷாவை அழைத்தான். தனக்கு, ராகேஷ் ரெனாவத்தின் டீடைல் ரிபோர்ட் வேண்டும் என்றான்.
சைலேந்தருக்கு போன் செய்தான். மும்பையில் காவலில் வைத்திருப்பதாகச் சொன்னான். வேறு ஏதாவது விசேஷமான தகவல் எனக் கேட்டதற்கு, பப்பில் குடிச்சிட்டு அரைகுறையா இருந்தவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பினோம் என்றான்.
மாலை நேரம், மனோதத்துவ நிபுணர் வந்தவர், ஜானகியைப் பார்த்தார். இப்ப வீட்டுக்கு கூட்டிட்டு போங்க. தனியா விடாதீங்க. இந்தச் சம்பவத்தைப் பற்றிப் பேச்சே கூடாது. இரண்டு கவுன்சிலிங் உட்கார்ந்தால் தான், அவங்க மனதில் இருப்பது தெரியும். நான் மெடிசின் தருகிறேன். எடுத்துக்கட்டும். எனச் சொல்லிச் சென்றார்.
சிவகுருவும் ரகுவீரும் சேர்ந்து பேசி, ஜானகியைப் பற்றி வீட்டில் யாருக்கும் தெரிய வேண்டாம் என முடிவெடுத்தனர். அந்த மாலைப் பொழுதில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள் ஜானகி. ஸ்வர்ண மஹலில், சிவகுரு, ராகினிக்கு முறையாக ஆரத்தி எடுத்து தாதிஷா உள்ளே அழைத்தார். அதே போல் ரகுவீர், ஜானகிக்கும் ஆரத்தி எடுத்தார்.
ஜானகி, மறுப்பேதும் சொல்லாமல் ரகுவீருடன் சேர்ந்து நின்றாள். அவளுடைய அறையில் ஓய்வெடுக்க அனுப்பி வைத்தனர். இரண்டு குடும்பமும் சேர்ந்து ஜானகியை, சீராட்டியது. யாராவது மாற்றி, மாற்றி அவளைக் கவனித்துக் கொண்டே இருந்தனர்.
சிவகுருவின் நண்பர்களும் வந்தனர். பாண்டேயிடம், ராத்தோட்கள் நன்றி கூறினார்கள். "அமித் டூட்டி ஜாயின் பண்ணக் கிளம்பிட்டான். ஜானகி நல்லபடியா கிடைச்சுட்டா, நாங்கள் நாளைக்குக் காலை ப்ளைட்டில் கிளம்புகிறோம்." என்றார் பாண்டே.
"எனக்கு நைட் ட்ரெயின்." என்றார் ரெட்டி. பல்லாஜி, "நான் நாளைக்கு நைட் கிளம்புகிறேன்." என்றார். "அங்கிள், இரண்டு நாள் தங்கிட்டு போங்களேன்." என்ற ரகுவீரின் கோரிக்கைக்குச் சரி எனத் தலை சாய்த்தனர்.
அடுத்த நாள், அமர்சிங்குடன் வெளியே கிளம்பிய ரகுவீரை வீட்டில் அனைவரும் தடுத்தனர். ஆனால் யார் பேச்சையும் கேட்கும் நிலையில், ரகுவீர் இல்லை. மதியம் உணவு நேரத்தில் வீட்டுக்கு வந்தான்.
இரண்டு வீட்டுப் பெரியவர்களும் ஹாலில் அமர்ந்து இருந்தனர். ஜானகியும், ஒரு ஷோபாவில், அப்பத்தா, ஆச்சிக்கு நடுவில் அமர்ந்து இருந்தாள்..
தாதாஷா, தாத்தா இருவரிடமும் வந்த ரகுவீர், "உங்கள் பேத்தி ஜானகி தேவியை எனக்கு ஷாதி செய்து வையுங்கள்." எனக் கேட்டான். ஜானகி முகம் அதிர்ச்சி அடைந்ததை ரகுவீர் மனதில் குறித்துக் கொண்டான்.
"ரகுவீ, ஏற்கனவே பேசினது தானே பேட்டா எப்ப வச்சுக்கலாம், எங்க வச்சுக்கலாம் னு பேசிடுவோம்." என்றார் தாதாஷா.
"ஆமாம் பேராண்டி, அன்னைக்கே பேசியாச்சே குரு நீ என்னப்பா சொல்றே?" எனக் கேட்டார் சிவபரங்கிரி. "பெரியவர்கள் நீங்க முடிவு பண்ணுங்கப்பா." என்றார் சிவகுரு. ஜானகிக்குத் தவிப்பாக இருந்தது.
ராஜேனை பார்த்துத் தாதாஷா கேட்டார். "ராஜேன், நீ என்னப்பா சொல்ற, முதலில் ரகுவி ஷாதியை முடிச்சா அடுத்தடுத்து, ராஜ்வி, மயூரிக்கும் செய்திடலாம்."
"எல்லாரும் இங்க தான் இருக்கோம், அரேஞ்ச்மென்ட் பண்ண, பணமோ, ஆள் பலமோ பெரிய விசயம் இல்லை. ஷப்னம், ஸர்குன், பூனம் வீட்டு ஆட்கள், சம்பந்தியோட அக்கா வந்தால் போதும். அடுத்த முகூர்த்தத்தில் கூட ஷாதி வச்சுடலாம் பாபுஷா." என்றார்.
"பாபுஷா, அடுத்த முகூர்த்தம் இன்னும் நான்கு நாளில் இருக்கிறது, வரிசையா ஃபங்சன் வைத்து, முகூர்த்தம் வச்சுடுங்க. என்னால் இதற்கு மேல் வெயிட் பண்ண முடியாது." என்றான் ரகுவீர்.
"ஹேய், படே பய்யா அவசரத்தைப் பாரு." எனக் கலாய்த்தனர். "டேய், எது அவசரம் மேரி ஜானைக் கேளு, இப்பவே முடி நரைச்சிடுச்சு. டை அடிச்சிட்டாவது வந்து மணவறையில் உட்காரச் சொல்லுவா, என்ன ஜானு உண்மை தானே?" என அவளைப் பார்த்துக் கண் சிமிட்டினான். ஜானகி முறைத்தாள்.
"பெண்மணிகள், என்னம்மா சொல்றீங்க?" எனத் தாதாஷா, பொதுவாகக் கேட்டார். ஷப்னம், "பாபுஷா, நான் ரெடி, எப்படி வேணும்னாலும் ஷாதி நடக்கட்டும். என் பஹூராணி வீட்டுக்கு வந்தால் சரிதான்." என்றார்.
"ஆமாம் பாபுஷா, ரகுவீக்கு முடிந்தால், மூன்று மாசத்தில் ராஜ்வி, மஞ்சரி ஷாதியையும் முடிக்கலாம்." என்றார் ஸர்குன்.
"பாபுஷா, இந்த ஷாதியோட, மயூரிக்கும், ஜமாயீஷாவுக்கும் சாகயீ, திலக் முடிச்சிருவோம். மயூ படிப்பு முடிந்து ஷாதி வச்சுக்கலாம்." என்றார் பூனம்.
"ராகினி, உன் பாபிஷா எல்லாம் சொல்லிட்டாங்க, நீ என்னம்மா சொல்ற?" எனக் கேட்டார் தாதாஷா.
"அத்தை சொல்லட்டும் பாபுஷா, என்னை விடப் பேரன் பேத்திகள் என்ன நினைப்பாங்கன்னு அவர்களுக்குத் தான் நல்லாத் தெரியும்." என்றார் ராகினி.
தாதிஷா, தன் மகளின் பேச்சில் அதிசயித்துப் போனார், தன் மருமகள்கள், தங்கள் மகன், மகள் ஷாதிக்கு நாள் குறிப்பதில் மும்மரமாக இருக்க, ராகினி சிவகாமியைக் கை காட்டவும் யோசனையாகப் பார்த்தார்.
சிவகாமி கொஞ்சம் நிதானித்தார், "ஜானகி மாப்பிள்ளை, உடனே கல்யாணம் வைக்கனும்னு சொல்லுதுன்னா, ஏதோ காரணம் இருக்கும். அவுகளுக்கு ஜானகி மேல் இருக்கப் பாசத்தைக் காட்டுது. அதுவும் இல்லாமல், கண்ணுக்குள்ளேயே வச்சுப் பார்த்துக்கனும்னு நினைக்கிறாங்க. சரியா பேராண்டி. உங்கள் ஜான்வியை நாங்கள் கூட்டிக்கிட்டு போயிடுவோம், தாலியை கட்டிட்டா, உங்கள் சம்சாரமாகிடும், அப்படித்தானே?" என்றார் சிவகாமி. ராகினி தன் அத்தை சொன்னதை மொழி பெயர்த்தார்.
ரகுவீர், அப்பத்தாவின் புத்திக் கூர்மையைப் பார்த்து வியந்தான். "ஆமாங்க அப்பட்டா, எனக்கு அவளைக் கூடவே இருபத்தி நான்கு மணி நேரமும் வைத்து பார்த்துக்கனும். அதுக்கான உரிமை தான் இந்த ஷாதி. மற்றபடி, என் ஆசையையோ தேவையையோ ஜான்வி மேல் ஃபோர்ஸ் பண்ண மாட்டேன். அவள் மனசு தான் முக்கியம். நீங்க எப்படிச் செய்து வைத்தாலும் சரிதான், அவள் இந்த வீட்டை விட்டு காலடி எடுத்து வைக்கிறது, 'திருமதி ஜானகி தேவி ரகுவீர் சிங் ராத்தோட்' ஆகத் தான் இருக்க வேண்டும்." என ரகுவீர் உறுதியாகச் சொன்னான்.
"மாப்பிள்ளை, ஜானகி மேல் உங்களுக்குச் சகல உரிமையும் உண்டு, பிறகு ஏன் இவ்வளவு அவசரமா செய்யனும்னு சொல்றீங்க. குடும்பத்துக்கு மூத்த வாரிசு உங்கள் கல்யாணத்தை ஆடம்பரமாக நடத்தனும்னு எல்லாரும் ஆசை படுவாங்க தானே?" என்றார் சிவகுரு. அவருக்கு, தங்கமான மாப்பிள்ளையை ஊர் மெச்ச மருமகன் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம்.
"ஜானகி மனசிலும், இப்படி இப்படி கல்யாணம் நடக்கனும்னு ஆசை இருக்கும்ல?" என்றார் சண்முகம்.
"அங்கிள்! உங்கள் மகள் தான் அடுத்த முகூர்த்தத்தில், இதோ இந்த வீட்டுப் பூஜை அறையில் நம்மவர்களை மட்டும் வச்சுக் ஷாதி பண்ணலாமென்று சொன்னாள்." என சண்முகத்திடம் சொன்னான் ரகுவீர்.
இவ்வளவு நேரம் மௌனம் காத்த ஜானகி, "வீரூஜி, நான் எப்ப உங்கக்கிட்ட சொன்னேன்." என வேகமாகக் கேட்டாள்.
ரகுவீருக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை, ஜானகி இந்தக் கடத்தல் நாடகம் முடிந்து இப்போது தான் இவ்வளவு உரிமையாகப் பேசுகிறாள். உற்சாகம் பிடிபடவில்லை அவனுக்கு, தான் தேர்ந்தெடுத்த பாதை சரியானது எனும் முடிவில் அவளிடம் வம்பிழுத்தான்.
"நீதானே, நம்ம ரிஸ்தா பேசின அன்னைக்கே ஹவேலியில் வச்சு சொன்ன, பேச்சு மாறாத." என்றான். "நான் ஒண்ணும் பேச்சு மாறலை. விளையாட்டா சொல்லியிருப்பேன்." என்றாள் ஜானகி.
"பூஃபாஷா, உங்கள் மகளே ஒத்துக்கிட்டா, இப்ப ஆக வேண்டியதைப் பார்ப்போம்." என்றான் ரகுவீர்.
"அப்பத்தா, எனக்கு நம்ம வீட்டில் வந்து இருக்கனும், நான் வேலைக்குத் தான் வந்தேன். உங்களை எல்லாம் விட்டுட்டு இவ்வளவு தூரத்தில் இருக்க முடியாது." என ஜானகி சிவகாமியிடம் முறையிட்டாள்.
"அப்பட்டா, அவளை நம்பாதீங்க, அங்க வந்து, வீருஜி வேணும்னு கேட்பாள்." என்றான் ரகுவீர். எல்லாருக்கும் முன்னே இப்படி வாக்கு வாதம் செய்தனர்.
"பேராண்டி நான் ஒரு யோசனை சொல்கிறேன், நீங்க முதலில் ஜானகியை சரி கட்டுங்க, அப்புறம் எல்லாரும் பேசுவோம்." என்றார் சிவபரங்கிரி.
மயூராதேவி, "ஆமாம் ரகுவீ, நீ உன் லுகாயி, கை பிடிப்பியோ, காலில் விழுவியோ எனக்குத் தெரியாது . நைட் டின்னருக்கு முடிவை சொல்லுங்கள். உங்கள் பூஃபாஷா தோஷ்த் எல்லாம் இன்னைக்குக் கிளம்புறேன்னு சொன்னவர்களை, நிறுத்தி வச்சிருக்கோம்." என்றார்.
பெரியவர்கள் ஓய்வெடுக்கச் சென்றனர். ரகுவீர், ஜானகியிடம் வந்தவன், "என் கூட வா!" எனக் கூப்பிட்டான். "எனக்குத் மாத்திரை போட்டது துக்கம் வருகிறது." என்றாள் ஜானகி. "வா, நான் தூங்க வைக்கிறேன்." என அவள் மறுத்தும் கேளாமல், கைப்பிடியாக மொட்டை மாடி அறைக்கு அழைத்துச் சென்றான்.
ஜானகி, 'இவனிடம் தனியா மாட்டினால் என் மனசை படிச்சிடுவானே' என வேதனையோடு சென்றாள். மாடி அறையின் கதவை அடைக்கவும், ஜானகி, "வீரு