Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு 53- காதல் ஓவியம்

வகைகள் : களஞ்சியம்/

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


களஞ்சியம்

53- காதல் ஓவியம்

 53- காதல் ஓவியம் 

இன்பமோ துன்பமோ, பகிரவும், அதைக் கடக்கவும் துணை இருந்து விட்டால் போதும், எதிர்வரும் எதையும் தாங்கலாம். கொண்டவன் துணை இருந்தால் கூரை ஏறியும் முழங்கலாம். இங்கு ஜானகியின் மனதைத் தனதாக்கிக் கொண்டவனின் துணை உண்டு, அவள் தான் ஏற்கவேண்டும். ஜானகிக்காக எதுவானாலும் செய்யத் தயாராக இருக்கிறான் ரகுவீர்.

திருமணப் பேச்சை எடுத்தால் மறுப்பவள் அவனோடு பழகுவதில் விலகலைக் காட்டவில்லை. பின்னர் அவனின் முயற்சியால் திருமணப் பேச்சிலும், இணையாகப் பேசினாள். இராஜஸ்தானிகள், ஆறு மாதம் வரை கூடப் புது மனைவியுடன் எங்கு வேண்டுமானாலும் சென்று விட்டு உல்லாசமாக இருந்து விட்டு வருவார்கள், என ரகுவீர் சொன்ன நொடியில் ஜானகி மறுத்தாள். ரகுவீருக்கு விசயம் கொஞ்சம் பிடிபட்டது.

ஜானகி வரைந்த ராதாகிருஷ்ணன், ஓவியத்தை அவள் முன் கொண்டு வந்து நிறுத்தினான். அதைப் பார்த்தாள். கண்களில் அதே காதல் ரசம் பொங்க, ரகுவீரைப் பார்த்து, "இதை எப்ப பார்த்தீங்க. அமித்துச் சொன்னாளா?" என வெட்கப் பார்வைப் பார்த்தாள் ஜானகி.

"அடிப் பாவி, இவ்வளவு லவ்வா, யாருடி அது?"  ரகுவீர் வேண்டுமென்றே கேட்க, "உங்களுக்கு அடையாளம் தெரியலையா வீரூஜி, நல்லாப் பாருங்க, அவ்வளவு மோசமாகவா வரைஞ்சு  இருக்கேன்." என்றாள். 

"நல்லா தான் இருக்கு. ஆனால் நான் ரகுவீர் ஏகப்பத்தினி விரதன். என் ஜானகி நீ. எதற்கு உன்னை ராதையாகவும், என்னைக் கிருஷ்ணனாகவும் வரைஞ்சு  வைத்திருக்க? ரொமான்டிக் கப்பில்னு சொல்லு ஒத்துக்குறேன். மற்றபடி, இந்தக் காவிய நாயகன் மாதிரி காதலி, பொண்டாட்டியை தியாகமெல்லாம் பண்ண முடியாது." என்றான். 

ஜானகி வாயடைத்து நின்றாள். பேச்சை மாற்றும் விதமாக  இருங்கள் உங்களுக்கு இன்னும் சர்ப்ரைஸ் இருக்கு ,என  தான் வரைந்த மற்ற ஓவியங்களைக் கபோர்டில் இருந்து எடுத்து வந்தாள்.

"வீரூஜி!" என அழைத்து ஒவ்வொன்றாக, தன் அன்னையை யசோதையாகவும், ரகுவீரை பாலகோபனாகவும் சித்தரித்து இருந்த பத்து படங்களையும் வரிசையாகக் காட்டினாள். தொட்டிலிடுதல், குளிப்பாட்டல், தவழ்தல், உலகம் காட்டல், வெண்ணெய் உண்ணுதல் என இருந்தது.

"நான் இதைப் பார்க்கலையே, புவாஷாவை யசோதையா மாற்றி இருக்க, என்னைச் சின்ன வயதில் பார்த்து இல்லையே, எப்படி வரைஞ்ச ?" என ஆச்சர்யமாகக் கேட்டான்.

 

"ஷப்னம், ஆண்டி உங்கள் போட்டோவை, காமிச்சாங்க, அதிலிருந்து சுட்டுட்டு வந்தேன்." எனவும்,. "என்னையவே சுட்டுட்ட, என் போட்டோ என்ன பெரிய விசயமா அப்கோர்ஸ், இது எல்லாமே புவாஷா எனக்குச் செய்து இருக்காங்க. அவங்ககிட்ட எடுத்துட்டுப் போய்க் காட்டலாம்." என்றவன் தொடர்ந்து,

"ஜானும்மா என்மேல் இவ்வளவு அன்பு வச்சிருக்க, நான் உனக்கு என்னடி தந்தேன். வெறும் காயங்கள் தான்." என அவன் வருந்த, அவன் வருத்தமும் தாழவில்லை ஜானகிக்கு.

"இங்க பாருங்க, இப்படிச் சோகமான முகம்  எல்லாம் வேண்டாம். எனக்கு என் வீரூஜி, கோபமா கூட இருக்கலாம், ஆனால் வருத்தமா இருக்கக் கூடாது." என்றாள்.

"நான் வருத்தப்படக்கூடாது அவ்வளவு தானே. நீ என் கூடவே இரு. நான் வருத்தப்பட மாட்டேன். நம்ம ஷாதி பண்ணிக்கலாம். ஐ ப்ராமிஸ் யூ, உனக்குப் பிடிக்காத எதுவும் நடக்காது." என்றான்.

"ஐயோ வீரூஜி, நீங்க என்னைப் புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க. எனக்கு உங்கள் மேல் அன்பு, பாசம் எல்லாமே உண்டு. என்னையும் மீறி நான் உங்களைக் காயப்படுத்திடுவேன்னு பயமா இருக்கு." எனத் தவித்தாள் ஜானகி. ஜானகியை ஷோபாவில் அமர்த்தி நிதானமாகப் பேசினான் ரகுவீர். 

"நான் சொல்றத முழுசா கேட்டுட்டு அப்புறம் பேசு. இத்தனை வருஷம் கழிச்சு  புவாஷா அவங்க அம்மா வீட்டுக்கு வந்திருக்காங்களா. நீ ,அவங்க சந்தோஷமா இருக்கனும்னு தானே போராடின. அவங்க மகளை ஒருத்தன் கடத்திட்டு போய் விட்டான், கிடைச்சிட்டாலும், மகள் வாழ்க்கை என்ன ஆகுமோவென்று கவலை இருக்குமா? இருக்காதா?" என கேள்வி எழுப்ப, "கவலை இருக்கும், ஆனால்." என்றாள். 

"கேட்டதுக்கு மட்டும் பதில், இப்ப நம்ம ஷாதி முடிஞ்சா அவங்க நிம்மதி ஆயிடுவாங்க. நமக்கு அடுத்து, அமுதன், ராஜ், பாலன் எல்லாருக்கும் அடுத்தடுத்து ஷாதி நடக்கும். இது ஒரு பக்கம். இப்ப நம்ம ஷாதி நடக்கலைனா, இவர்கள் யாருக்குமே ஷாதி நடக்காது. எனக்கு ஷாதி செய்யாமல், ராஜ்வி, மயூக்குச் செய்ய மாட்டாங்க. அதே மாதிரி உனக்கு ஷாதி செய்யாமல் உங்கள் அண்ணன் இரண்டு பேருக்கும் நடக்காது. அதுமட்டும் இல்லை. ஏன்டா, நம்ம குடும்பத்தைத் திரும்ப வந்து  பார்த்தோம்னு  புவாஷா மனசு வேதனை படுவாங்க. இப்ப சொல்லு, ஷாதி செஞ்சுக்கலாமா?" என அவளின் முகத்தைக் கையில் ஏந்திக் கேட்டான்.

கண்ணீர் வழிய ஜானகி சொன்னாள், "வீரூஜி நீங்க என் குழந்தைப் பருவத்திலிருந்து வர்றது  என்னுடைய காதல். உங்களைப் பார்க்காமலே இருந்திருந்தாலும் நான் அதே நினைவோடதான் இருந்திருப்பேன். என் கனவு நீங்க, அது நிஜமாகவே கிடைக்கும் போது எவ்வளவு சந்தோஷம் தெரியுமா. ஆனால் எனக்கு, எனக்கு..." அவள் சொல்லமுடியாமல் அழ, அவள் அழுகையில் இவன் கரைந்தான்.

"போதும்டா போதும் நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம். எனக்கு எல்லாமே புரிஞ்சிடுச்சு. உன் மனதின் வார்த்தையைப் படிக்கிறவன் நான். எனக்குத் தெரியாதா என் ஜானுவை. இப்பவும் நீ எனக்காகத் தான் ஷாதி வேண்டாம்னு சொல்ற சரியா?" என அவன் கேட்கவும் ஜானகி, அதிர்ச்சியாகப் பார்த்தாள்.

"அதே மாதிரி, என் ஜானுக்காக நான் ஷாதி வேணும்னு  சொல்றேன் சரியா?" என ரகுவீர் விளக்கியும், ஜானகிக்கு இன்னும் குழப்பம் தீர்ந்தபாடு இல்லை.

"உன் மனசு திருப்திக்காகச் சொல்கிறேன், நம்ம ஷாதி செய்துக்குவோம். முழு மனசோடு செய்துக்குவோம். நான் ஓப்பனா பேசவா?" என்றதும் அவள் அவன் முகத்தை ஏக்கமாகப் பார்த்தாள்.

"ஷாதி செய்துக்குவோம். மனசால் இப்பவே நாம ஒன்று தான். நீ எனக்காக யோசிப்ப, நான் உனக்காக யோசிப்பேன். ஆனால் தாம்பத்தியம் இப்போதைக்கு வேண்டாம். ஒரு வருஷம் டைம் எடுத்துக்குவோம். நம்ம முதல் வெட்டிங்டே அன்னைக்கும், இதே நிலைமை, கணவன் மனைவியாக வாழ முடியாதுன்னா, அடுத்து என்னன்னு யோசிப்போம்." என ரகுவீர்,சிறு குழந்தைக்குப் புரிய வைப்பது போல் பாடம் நடத்தினான்.

ஜானகியின் கண்கள் அலை பாய்ந்தன. அவளை யோசிக்க விடக் கூடாது என முடிவெடுத்த ரகுவீர் கை வலிப்பது போல்  முகத்தைச் சுழித்தான்.

"வீரூஜி, வலிக்கிதா,ஒழுங்கா, மாத்திரை மருந்து போட்டீங்களா, எதுவுமே செய்திருக்க மாட்டீங்க." என்றபடி காயத்தை ஆராய்ந்தாள்.

"போடி, இதுக்கெல்லாம் ஒன்றும் குறைச்சல் இல்லை, பூஃபாஷா கிட்ட ஊருக்குப் போகனும்னு சொன்னவ தானே நீ, இப்போது என்னை விட்டுட்டு போனீன்னா, நானும் வேற எங்கேயாவது, பிஸ்னஸ் செட் பண்ணிக்கிட்டு, வெளிநாடு போய்டுவேன். இது தான் கடைசியா நீ, என்னைப் பார்க்கிறதா இருக்கும். உன்னால் நம் குடும்பமும் என்னைப் பிரிந்து இருக்கட்டும்." எனவும்,

"வீருஜி, சும்மா மிரட்டாதீங்க.அதெப்படி விட்டுட்டு போவீங்க." எனக் கண்ணீர் விட்டாள்.

"வேற என்ன செய்யச் சொல்ற, இங்கே அவனவன் என்னை ராத்தோட் மூத்த பையனுக்கு ஷாதி ராசியே இல்லை குண்டலியில்(ஜாதகம் ) பிரச்சனை. அதனால் தான் அவன் புவாஷா மகளையே ரிஸ்தா பேசுனாங்க, இவன் ராசி அந்தப் பெண்ணுக்கும் தொத்திடுச்சுப் பாவம் அந்தப் பெண். இவனுக்கெல்லாம், ஷாதி என்ன ஒரு குறையான்னு பேசுகிறாங்க. ஏன் அந்தப் பவாரியா சங்கிலியைக் கையில் கொடுத்துட்டு, கும்ரிஷா உங்களை, திருப்பி அவங்க கழுத்தில் இதைப் போட விடுவாங்களான்னு தெரியலைன்னு  சொன்னான். ரெனாவத் கூட இரண்டு ஷாதி செய்துகிட்டான் . கடைசி வரைக்கும் நான் ஹனுமான் பக்தனா இருந்துட்டுப் போறேன். நீ போ உங்கள் ஊருக்கு. சும்மா சொல்றது வீரூஜி, வீருஜின்னு." என ரகுவீர் புலம்பலாகப் பேசப் பேச ஜானகிக்கு அழுகைப் பீரிட்டது.

ரகுவீரின் சட்டைக் காலரைப் பிடித்து, "இன்னொரு வார்த்தை, அந்தக் கேடு கெட்டவனுங்க கூட உங்களைக் கம்பேர் பண்ணி பேசுனீங்கப் பாருங்க, கொன்னுடுவேன். மொதவே சொன்னது தான், நரை முடி வர வரைக்கும் என் வீரூஜி, எனக்காகத் தான் காத்து இருந்தார். வாங்க அடுத்த முகூர்த்தில் கல்யாணம் வச்சுக்கலாம்." என்று அவன் முகம் பார்க்காமல் முணுமுணுப்பாகச் சொன்னாள்.

"கடைசியா, ஏதாவது சொன்னியா ஜானும்மா? என் காதில் விழவே இல்லை." என்றான் ரகுவீர்.

"போங்க நீங்க!" என அவள் அவனுள்ளே முகத்தைப் புதைத்துக் கொள்ள, அப்படியே என்னைப் பாருடி, ஒரு போட்டோ என அவள் முகம் நிமிர்த்தி ஒரு செல்பி எடுத்துக் கொண்டவன். அவள் தலையில் முத்தமிட்டான்.

"ஐயோ, ஜானும்மா எனக்கு ஒரு சந்தேகம். இந்த முத்தத்துக்கு மட்டும் ஸ்பெஷல் பர்மிஷன் குடுடி. ஏன்னா, இவ்வளவு க்யுட்டான லுகாயியை வச்சுக்கிட்டு, கிஸ் பண்ணாமல் இருந்தால், எனக்குப் பாவம் வந்து சேரும்." எனக் கலகலவெனச் சிரித்தான்.

"போங்க வீரூஜி!" என்றவள், அவனை நோக்கி எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டு, "நானும் பாவத்துக்கு ஆளாகமாட்டேன்." என்றபடி, சிரித்துக் கொண்டே லிப்டை நோக்கி விரைந்தாள்.

ரகுவீர் நிம்மதி பெரும் மூச்சு விட்டான். அலைபேசியில், மனோதத்துவ நிபுணருக்கு அழைத்து, அடுத்துச் செய்ய வேண்டியதைப் பேசிக் கொண்டான். ஜானகிக்கு, ரகுவீரே மருத்துவன் ஆனான்.

மாலை நேரம், வீட்டு ஹாலில் எல்லாரையும் கூட்டிவிட்டான் ரகுவீர். ஜானகி, அமிர்தா, மயூரியோடு உட்கார்ந்து இருந்தாள். "மாப்பிள்ளை முகத்தில் சந்தோஷக் கலையைப் பார்த்தால், மேலிடத்தில் அனுமதி வாங்கிட்டார் போல இருக்கே?" என்றார் சிவகுரு. "ரகுவீ, அதுக்குள்ள எங்கப் போய் மாட்டை அடக்கின?" என்றார் அமரேன்.

அமரேன், கால்களில் ஓடி வந்து விழுந்த ரகுவீர், "சாசாஷா, இப்ப தான் கஷ்டப்பட்டுச் சம்மதிக்க வைத்திருக்கிறேன், திருப்பி ஆரம்பிச்சு விட்டுறாதீங்க." என்றான் . அவன் செய்கையில் எல்லோரும் சிரித்தனர்.

 

"ஜானிமா, படே பையா சொல்லித் தரேன், இப்போதைக்கு ஷாதி பண்ணிக்க, மூன்று கண்டிசன் முடிச்சா தான், மத்தது எல்லாமென்று சொல்லிடு" என்றான் அமர்சிங். 'கண்டிசன் முடிச்சா மட்டும் என்ன ஆகப் போகுது, இந்த ஜீஜு வேற, எரிகிற கொள்ளியில் எண்ணெய்யை ஊத்துறார்.' என மனதில் நொந்து  கொண்டான்  ரகுவீர்.

"சாலேஷா என்ன சிலையாகிட்டீங்க, இத்தனை நாள் சோலோவா இருந்தேன், இப்போது, ஜானகி, அமுதன், மஞ்சரின்னு ஒரு டீம் ஆகிட்டோம், ரெடியா இருங்கள்." என சவால் விட  "ஜீஜுஷா, நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன், உங்கள் பஹனை ஷாதி மட்டும் பண்ணிக்கச் சொல்லுங்கள்." என ரகுவீர் மடங்கினான்.

"ஜானிமா போனாப் போகுது சரின்னு  சொல்லு, நாம சாலேஷாவைத் தனியா கவனிக்கலாம்." என்றான் அமர்சிங்.

"என்னடாம்மா, என்ன சொல்ற?" என்றார் சிவபரங்கிரி. எல்லாரும் ஜானகியையே பார்த்தனர். அவள் தலையை ஆட்டினாள். "இது என்னடி அதிசயமா இருக்கு, சிவகாமி பேத்திக்குப் பேசத் தெரியாமல் போயிடுச்சா?" என்றார் அப்பத்தா. 

"அத்தை, எம்மகளே இப்பத்தான வெக்கப்படுதுன்னு பார்த்துக் கிட்டு இருக்கிறேன். உங்களுக்கு அது பொறுக்கலையா." என்றார் தெய்வா. "ஆச்சி, மௌனம் சம்மதம்." என்றாள் அமிர்தா. 

"ஏண்டி, உன் கல்யாணத்துக்கா சம்மதம் கேட்டேன். ஜானகி வாயால் சொல்லனும். அப்பத்தான் எங்களுக்குத் திருப்தி, என்னங்க சம்பந்தி?" என மயூரா தேவியையும் அதில் இழுத்து, பேத்தியிடம் சம்மதம் கேட்டார் சிவகாமி.

"சொல்லுடா, ஜானிமா, ரகுவீரை ஷாதி பண்ணச் சம்மதமா?" என்றார் தாதிஷா. ரகுவீர், என்ன சொல்லப் போறாளோ என ஜானகியையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"எனக்கு வீருஜியை கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம், ஆனால் ஒரு கண்டிசன்." என்றாள். ரகுவீர் அவளிடம் பேசியதில் கொஞ்சம் பயம் தெளிந்து இருந்தாள். அவன் சொன்னக் காரணம் அத்தனையும் சரியானதே. தங்கள் திருமணத்தில் இத்தனை சந்தோஷம் அடங்கியுள்ளது. ஒரு வருடம் இல்லை, இவர்கள் மூன்று ஜோடித் திருமணம் முடிந்த பிறகு, வீருஜியை சரிக்கட்டி வேறு வழி யோசிக்கலாம். என முடிவெடுத்து, மற்றவருக்காகத் தன் பயத்தையும் மறைக்க முயற்சி செய்தாள்.

ரகுவீர் அடுத்து என்ன வரப் போகிறதோ எனப் பயந்து பார்த்திருந்தான். "தமிழ் பெண்ணாகத் தான் நான் வீருஜியை கல்யாணம் பண்ணிக்குவேன். காஞ்சிபுரம் சேலை வேண்டும், இரண்டு முறையும் கலந்து எதையும் விட்டுக் கொடுக்காமல் ஷாதி நடக்க வேண்டும்." என்றாள்.

ரகுவீருக்கு, இப்போது தான், உயிரே வந்தது. முகத்திலும் மலர்ச்சி வந்தது. "ஜானிமா,நீ என்ன விரும்புறியோ, அதே மாதிரி நடத்திடுவோம்." என்றார் ராஜேன்.

"ஜானிமாவின் ஷாதி சாரியிலிருந்து நகை வரை அத்தனையும், மாயிரா தஸ்தூராக, (தாய் மாமன் சீர்) நான் தான் செய்வேன். பாயீஷாவும், அமரேனும் தீதீஷா கூடச் சம்பந்தியாகப் போகிறாங்க, அதுனால தீதீஷா, என்ன சொல்லுவீங்க ஹாங் தாய் மாமன் சீர், ஆமாம் தாய்மாமன் சீர் என்னுடையது தான்." என்றார் கஜேன்.

"சரியா சொன்னீங்கஜீ, ஜானி மாதிரி மகள் வேணும்னு  ஆசைப் பட்டோம், அதுனால நாங்கள் தான் அதைச் செய்வோம்." என்றார் ஸ்ர்குன்.

"ஜீஜுஷா உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லையே?" எனச் சிவகுருவிடம் கேட்டார் கஜேந்தர்.

"சாலேஷா, இதென்ன கேள்வி எங்கள் ஊரில் தாய்க்கு அடுத்து தாய் மாமனுக்குத் தான் முதல் உரிமை, உங்கள் மருமகள், கேட்கனுமா என்ன?" என்றார் சிவகுரு.

ஷப்னம், ஜானகியின் அருகில் வந்து, "பாயீஷா, எங்கள் பஹுராணிக்காக எது வேணும்னாலும் செய்வோம். ஷாதியே வேண்டாம்னு  ஓடிக்கிட்டே இருந்த ரகுவியை, நாலு நாளில் முகூர்த்தம் வைங்கன்னு சொல்ல வச்சிட்டாளே இதே போதும்." என ஜானகியை அணைத்து முத்தம் தந்தார்.

ஜானகிக்குத் தான்  ஒரு தாயை ஏமாற்றுகிறோமோ, என மனம் அடித்துக் கொண்டது. அதை மாற்றுவதற்காக ரகுவீர் அவர்கள் அருகில் வந்தவன் ஷப்னத்தின் தோளில் சாய்ந்து ஜானகியைப் பார்த்த வண்ணம், "மாஷா, எனக்காகப் புவாஷா அழகான பெண்ணைப் பெற்று, அனுப்பி இருக்கிறார்கள், அதை மிஸ் பண்ணலாமா?" எனக் கேட்டான்.

"வீரு, இந்தப் பாராட்டு புவாஷாவுக்கா, இல்லை புவாஷா மகளுக்கா." எனக் கேட்டார் ராகினி.

"புவாஷா, உங்களுக்குத் தான் பாராட்டுத் தாங்க்ஸ் எல்லாம். நீங்க என் புராணம் பாடப் போய்த் தானே, ரகுவீரின் ஜானகி கிடைச்சிருக்கா." என்றான் ரகுவீர்.

"மாப்பிள்ளை, எனக்கும் நீங்க தான் மூத்த மகன் தெரிஞ்சுக்குங்க, உங்கள் புவாஷா யசோதைனா, நான் நந்த கோபர் தானே?" என்றார் சிவகுரு.

"என்ன சொல்கிறீங்க  ஒன்றும் புரியலை, மருமகனை மகனென்று சொல்கிறீங்க ?" என ராகினி குழம்பவும்,"உன்னை யசோதை ஆக்கினது உன் மகள் தான், அங்க பார்!" என்றார் சிவகுரு. ஜானகி வரைந்த ஓவியத்தை இளைய தலைமுறையினர் ஆளுக்கு ஒன்றாகப் பிடித்து இருந்தனர். வீட்டினர், அனைவரும் அந்த ஓவியங்களைப் பார்த்து பிரமித்தனர்.

"ஜானிமா! இதையெல்லாம் எப்போது வரைஞ்ச?" என்றார் அமரேன்.

"மொட்டை மாடி அறையில் மாமூ, நீங்க இரண்டு பேரும் ஒரு நாள் மாடிக்கு வந்தீர்களே, அப்போ  இது தான் வரைந்தேன்." என்றாள்.

ராகினி, தன் இளமைக்கால நினைவுகளை, அதில் புரட்டிப் பார்த்தவர் உணர்ச்சி மிகுந்துக் காணப் பட்டார். ஜானகியை  அணைத்துக் கொண்ட ராகினி, "ஸுனியேஜீ, உங்களை மாதிரியே என் பிள்ளைகளும், எனக்காக எவ்வளவு செஞ்சிருக்காங்க. ஜானும்மா, உன் மாதாஜி கதை சொல்லியே, வீரூவை விரும்ப வச்சுட்டேனா, இவ்வளவு அன்பை வச்சிருக்கியேடா, நாம் பார்க்கும் முன்னையே வீருவுக்கு ஷாதி ஆகியிருந்தா, உனக்கு மாப்பிள்ளை தேட, நான் என்னடி செய்வேன்?" என ராகினி அவளைக் கட்டிக் கொண்டு அழுதார்.

"அம்மா, இப்ப என்ன அத்தான் தானே உங்களுக்கு மருமகனா வந்திருக்காரு. இவளாவது, நீங்க சொன்னதிலிருந்து மனசில் வச்சிருந்தா, ஜானுவைத் தெரியாமலே அத்தான் காத்திருந்தாரே, அதுக்கு என்ன சொல்லுவீங்க?" என்றான் அமுதன்.

ரகுவீரின் கையைப் பிடித்துக் கொண்ட ராகினி, "வீரு, எனக்கு நிஜமாகவே தெரியாது, ஜானும்மா உன்னை இவ்வளவு விரும்புவான்னு, இவங்க இரண்டு பேருக்கும் முன்னாடி நீ தானே நான் தூக்கி வளர்த்த பிள்ளை. உன்னைப் பிரிந்த ஏக்கம் வேற, அதையே சொல்லுவேன், அமுதனைக் கூடச் சோட்டா வீருன்னு கூப்பிடுவேன். ஜானு அதை இவ்வளவு சீரியசா நினைச்சிருப்பான்னு தெரியாது. அமரேன் முதல் தடவை போனில் பேசும் போது தான் உனக்கு, ஷாதி ஆகலைனு தெரியும். நம்ம ஊரில் இவ்வளவு நாள் விடமாட்டாங்களேன்னு நினைச்சேன். எல்லாம் மேல் இருப்பவனின் இஷ்டம்." என்றார் ராகினி.

"புவாஷா, அது தான் உங்களுக்கும், எனக்குமான பிணைப்பு. இந்தக் கல்பிரிட்ஸ் எல்லாம் என்கிட்ட முதலிலேயே சொல்லியிருந்தா, அப்பவே உங்கள் ஊருக்கு வந்திருப்பேன்." என்றான் ரகுவீர்.

"என் வீருவே, எனக்கு ஜமாயீஷான்னா எவ்வளவு சந்தோஷம் தெரியுமா, ஜானகியைக் கடத்தவும் பயந்துட்டேன், இவளுக்கு ஏதாவது ஆயிருந்தால், என்னை நானே மன்னித்திருக்க மாட்டேன். என்னோட துரதிஷ்டம் தான் இவளையும் பிடிச்சிருக்குன்னு வேதனைப் பட்டிருப்பேன்." என ராகினி அழவும், ரகுவீரின் கண்கள், ஜானகியை தொட்டு மீண்டது. ஜானகி ரகுவீருக்கு கண்களால் நன்றி சொன்னாள்.

"ஸ்வர்ணி, இதென்ன சின்னப் பிள்ளை மாதிரி." எனச் சிவகுரு கண்டித்தார்.

"ஸ்வரூ, ஷாதி நிச்சயம் பண்ணின வீட்டில் கண் கலங்கக் கூடாது எந்திரி." எனத் தாதிஷா அவரைச் சமாதானம் செய்தார். ஹரிணி, தன் பிள்ளைகளுடன் உள்ளே வந்தவள், "என்னப்பா, எமோஷனல் காட்சி ஓடிக்கிட்டு இருக்கு, புவாஷா உங்கள் வீரு நாலு  நாளில் ஷாதி பண்ணுன்னு சொல்கிறான். உங்கள் மகள் இரண்டு சம்பிரதாயமும் விடாமல் ஷாதி நடக்கனும்னு சொல்றா, இதெல்லாம் என் வீட்டுக்காரர், சொன்னார். டைம் ரொம்பக் குறைவு. வாங்க ஷாதி ப்ளானிங் பண்ணலாம்." என்றாள்.

ஆமாம், ஆமாம் என ஒத்துக் கொண்டு, இராஜஸ்தானி, தமிழ் சம்பிரதாயங்களை இரு வீட்டாரும் மாற்றி  மாற்றிச் சொன்னார்கள்.

ரகுவீர் சந்தடி சாக்கில் அலுங்காமல், ஜானகியிடம் , ஒட்டி அமர்ந்து கொண்டு  " ஏய் மிர்ச்சி இப்ப சந்தோஷமாடி, அங்க பாரு எல்லாம் தலையைப் பிச்சுகிறாங்க." என ரகசியமாகக் கேட்டான் ரகவீர்.

"வீருஜி, இதுங்க பேசறதைப் பார்த்தால், கல்யாணமே ஆறு மாதம் செய்வார்கள் போல  வாங்க நாமப் பேசாமல், நம்ம வீட்டுப் பூஜையறையில் ஷாதி செஞ்சுக்கலாம்." என்றாள் ஜானகி.

"ஆமாம்டி, இதுங்க நம்மளை ஷாதி வரை நடுவில்  பார்க்க வேற விடாதுங்க, அந்தக் கண்டிசனுக்கு நான் ஒத்துக்க மாட்டேன், நீயும் ஒத்துக்காத." என அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, மஞ்சரி, மயூரியின் சைகையால், எல்லார் பார்வையும் இவர்கள் பக்கம் திரும்பியது. பூனம், "ரகுவி எந்திரி, இனி முஹ் திகாயீ முடிந்து தான் ஜானியைப் பார்க்கலாம்." என்றார்.

"சாசிஷா, அதெல்லாம் முடியாது, அவளைப் பார்த்துக் கிட்டே இருக்கத்தான் ஷாதியே, முடியாது, முடியாது. ஜானும்மா நீயும் முடியாதுன்னு சொல்லிடு." என ரகுவீர், சின்னப் பையன் போல் பிடிவாதம் பிடிக்க,  எல்லோரும் சிரித்தனர்.

"டேய் நல்லவன்களா, எனக்குச் சப்போர்ட் பண்ணினா தான் உங்கள் ஷாதிக்கு எல்லாம் ஹெல்ப் பண்ணுவேன்." என்ற  ரகுவீர் மிரட்டலில்.

"சாசிஷா, இது அன்ஃபேர், இதெல்லாம் செல்லாது." என்றான் ராஜ்வீர். "மாமிஷா, அதெப்படி, மயூவைப் பார்க்கக் கூடாதுன்னு  சொன்னா, நான் ஒத்துக்குவேனா, அதே மாதிரி தான் அத்தானும்." என்றான் அமுதன். "அண்ணா, பக்கத்து இலைக்கு நல்லா பாயாசம் ஊத்துற." என்றான் பாலன்.

மயூரி, அமுதனின் பேச்சில் முகம் சிவந்தாள்.

 

"ரகுவீ, இதெல்லாம் ரீதி ரிவாஸ் (சடங்கு, சம்பிரதாயம்), வழக்கமா கடைப்பிடிக்கிறது. பெரியவர்கள் சொன்னா கேட்டுக்கோ." என்றார் ஷப்னம். 

"மாஷா, எல்லாத்தையும் விட எனக்கு ஜான்வியின், பாதுகாப்பு முக்கியம். நான் அதில் எந்தச் சமரசமும் செய்வதாக இல்லை." என்றான். "ஆண்டி, நான் ஒண்ணு சொல்லவா, வீருஜி வரும் போது மட்டும் முகத்தை மறைச்சு  ஒரு ஷால் போட்டுக்குறேன்." என்றாள்  ஜானகி.

"ஜானி, இதென்ன இன்னும் ஆண்டின்னு கூப்பிடுகிற, மாமியென்று சொல்லு, இல்லையென்றால் மாஷான்னு சொல்லு." என்றார் ஷப்னம்.

"மற்ற இரண்டு பேரும் மாமிஷா, அதுனால உங்களை மட்டும் வீருஜி மாதிரி மாஷான்னு சொல்கிறேன், சரிங்க மாஷா." என்றாள் ஜானகி.

அங்கே ஓடிக்கொண்டிருந்த, ஷாதி பிரச்சனைக்கு, சிவகாமி தீர்வு சொன்னார், "நம்ம இரண்டு குடும்பத்துப் பழக்கமும் ராகினிக்குத் தெரியும், அதனால் எப்ப எதை நடத்தனும்னு, எம் மருமகள் சொல்லட்டும்." என்றார்.எல்லாரும் ஏக மனதாய் ஒத்துக் கொண்டனர்.

சிவகாமி தொடர்ந்து, "ஆத்தா ராகினி நாளைக்குத் தை பிறக்குது, நம்ம பொங்கல் வைப்போம். இங்க முடிஞ்சா காலையில பொங்கல் வச்சு  சாமியைக் கும்பிடனும்." எனவும், "சரிங்க அத்தை, நான் ஏற்பாடு பண்றேன்." என்றார்.

இரவு உணவுக்குப் பின் ஒரு அட்டவணைப் போட்டார் ராகினி. அதில் இரண்டு குடும்பங்களின் எல்லாச் சடங்குகளும் இருந்தது. ஒரே மாதிரியான நிகழ்ச்சிக்குப் பெயர் மட்டும் அவரவர் மொழியிலிருந்தது.

1,நிச்சயதார்த்தம்- திலக்- சகாயீ.

2,அழைப்பிதழ்,- ந்யோதா.

3, கணபதி ஸ்தாபனா- கிரகச் சாந்தி பூஜா- முகூர்த்தக்கால் ஊன்றுதல்.

4. மயேரா தஸ்தூர்- நாள் வைத்தல்- மாமா வீடு செய்யும் முறை.

5, மெஹந்தி

6, பிதாயி தஸ்தூர்- ஹல்தி- நலங்கு.

7,ஜானேவ்- பூணூல் அணிதல்

பாலா தஸ்தூர்- சுமங்கலி பூஜை

8,மெஹ்பில்- சங்கீத்

9,பாராத்- தோரணம் தொடுதல். தோரனாஞ்சூர்.

10, ஜெய்மாலா

11.முகூர்த்தம். கங்கணம் கட்டுதல். கட்பந்தன், பானிக்ரஹ், கன்யாதான், ஹவன்.ப்ரே, ஸப்தபதி, தாலி/ மங்கள் சூத்திர பஹன்னா, சிந்தூர் தான்.

13. விதாயி, க்ரஹ் ப்ரவேஷ்.

"இதுதான், இரண்டு குடும்பத்திலும் செய்யும் சடங்கு சம்பிரதாயங்கள். ஒரே மாதிரி இருக்கும் நிகழ்ச்சிகளை ஒன்றாகச் சேர்த்து இருக்கிறேன்." என அதனை அழகாக இரு குடும்பத்துக்கும் விளக்கிச் சொன்னார். மற்ற ஏற்பாடுகள் எப்படி எனப் பேசினர்.

ரகுவீர் வெட்டிங் ப்ளேனர் மூன்று பேரையும், காஸ்ட்யூம் டிசைனர் மூவரையும் அழைத்திருந்தான். "புவாஷா கொடுத்த லிஸ்ட் படி, நாளைக்கு மாலையில், திலக், சகாயீ - இரண்டு ஜோடிக்கும் நடக்கும். காலையில் அப்பத்தா, சரியா சொன்னேனா?  அப்பத்தா சொன்ன மாதிரி காலையில் பொங்கல் வைத்து சங்கராந்தி சூரிய வழிபாடு சாமி கும்பிடுவோம். அதுக்கப்புறம் பதங்-கைட் ஃபெஸ்டிவல்( பட்டம்). அதை முடித்து, ரெஸ்ட். மாலை சகாயீ." என முடித்தான்.

மற்ற ஏற்பாடுகளைப் பற்றி, அட்டவணைப் படி, ஒவ்வொரு வெட்டிங் ப்ளானரிடமும், ஒப்படைத்தனர். இடம் மற்றும் உணவு பற்றிப் பேசிய பின்னர் நிகழ்ச்சிகளுக்கும், ஒவ்வொருவர் பொறுப்பு ஏற்றனர்உறவுகளுக்கு அவசரமான அழைப்புச் சென்றது. தைப் பிறந்தால், வழி பிறக்கும். ஜானகி - ரகுவீருக்கும் நல்வழிப் பிறக்கட்டும். ஜானகி மனதில் இருக்கும் பயம் தலை தூக்காமல் இருக்க வேண்டும். ரகுவீர் அவளைச் சமாளித்து எப்படிக் கைத்தலம் பற்றுவான் எனப் பார்ப்போம்.

 

0 கருத்துகள்
ஒரு கருத்தை விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!