Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு 55- இரட்டை நிச்சயம், முப்பெரும் விழா .

வகைகள் : களஞ்சியம்/

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


களஞ்சியம்

55- இரட்டை நிச்சயம், முப்பெரும் விழா .

55- இரட்டை நிச்சயம், முப்பெரும் விழா .

 தை மாதம் முதல் நாள் சுபமான இந்தத் தினத்தில், மாலை நேரம் மிகுந்த ஆரவாரமாக வந்து இறங்கினர் சௌஹான் குடும்பம். ராத்தோட்களின் ஸ்வர்ண மாளிகை தகதகவென மின்னியது. ஒளி ஒலி அலங்காரங்களால் நிறைந்து இருந்தது. ஷப்னம் ராஜேந்தர் சிங் ராத்தோட், பூனம் அமரேந்தர் சிங் ராத்தோட், இவர்கள் இருவருக்கும் தாய்வீடு சௌஹான் குடும்பம் தான்.

ஜெய்ப்பூரில் புகழ்பெற்ற குடும்பமாக இருந்தனர். வைர நகை வியாபாரத்தில் ஜொலிப்பவர்கள். தங்கள் மகள்கள் அழைத்ததின் பேரில், அவர்கள் பிள்ளைகளுக்குச் சீர் செய்து திருமணத்தைச் சிறப்பிக்க வந்து விட்டனர்.

இரண்டாம் தளத்தில் பார்ட்டி ஹாலில் நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்திருந்தனர். இன்று இரண்டு ஜோடிக்கு முறையாக நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது. ராத்தோட்கள், சம்பந்திகளை அவர்களுடைய முழு மிடுக்கோடு வரவேற்றனர். ஷப்னத்தின் தந்தை ப்ரித்வி சௌஹான், பூனத்தின் தந்தை சிவ்ராஜ் சௌஹான் மற்றும் குடும்பத்தினர் வந்திருந்தனர்.

வீரேந்தர் சிங் ராத்தோட், மயூரா தேவி, சம்பந்திகளை வரவேற்றனர், மாப்பிள்ளை வீட்டு மிடுக்கைக் காட்டினர் ராத்தோட்ஸ்.

பெண் கொடுத்த சம்பந்தி ஆதலால் மிகுந்த மரியாதையாக வணங்கினர் சௌஹான் குடும்பத்தினர். ரகுவீர் தன் நாநாஷா, நாநிஷாவின் கால்களில் விழுந்து வணங்கி வரவேற்றான். மாப்பிள்ளை கோலத்தில், பேரனைப் பார்த்து, ஷப்னம், ராஜேனிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

ராகினி, சிவகுரு மற்றும் குடும்பத்தினர் வந்து வரவேற்றனர். ராகினியை பார்த்த  ஷப்னத்தின் தாயார், கட்டியணைத்து,  நீ தூக்கி வளர்த்த ரகுவிக்கு, நீயே பொண்ணு பெற்று வளர்த்தியா, நல்லது." என மகிழ்ச்சியைத் தெரிவித்தார். தனது குடும்பத்தினரை, அறிமுகம் செய்து வைத்தார். அமுதனைக் கண்ட பூனத்தின் பெற்றோருக்கும், மிகுந்த மகிழ்ச்சி.

"ராகினி, எங்களுக்குப் பிறகு நீதான் ஒரே வீட்டில் இரண்டு சம்பந்தம் பண்ணுற." என்றனர்.

செகாவத் குடும்பத்தில், பைரவைத் தவிர எல்லோரும் வந்தனர். ஹேமந்த், பங்குரியை வரவேற்ற சிவகுருவிடம். "சிவா, நானும் நீயும், ராத்தோட்களுக்குத் தான் சம்பந்தி, நமக்குள் ஃபார்மாலிட்டி வேண்டாம்." எனத் தழுவிக் கொண்டனர். இவர்கள் நண்பர்கள் குழு, எல்லா டிக்கட்டையும் கேன்சல் செய்தனர். இதோ வந்து விட்டனர். பல்லாஜி வீட்டில் ஜாகை.

 

அமர்சிங், தன் பெற்றோர்களை, நவிமும்பை கெஸ்ட் ஹவுசில் தங்க வைத்து, அழைத்து வந்தான். இங்கே மடிந்து வணங்குவது, ராத்தோட்களின் முறையானது.

வட இந்தியர்களிடம் ஒருப் பழக்கம் .இன்றும் மாப்பிள்ளை வீட்டினர் என்ற கெத்தைக் காட்டுவார்கள். கடைசி என்ட்ரியாக, அமிர்தாவின் தாய் தந்தை, அண்ணன் அண்ணிகள், தங்கள் குழந்தைகளுடன் மண்மணம் மாறாது, தமிழருக்கே உரியக் காஞ்சிப் பட்டு, தங்கநகை கல் அட்டிகை என வந்து சேர்ந்தனர். பாலன் அவர்களை, விமானநிலையத்தில் பிக்கப் செய்து, ஒரு கெஸ்ட்ஹவுசில் தங்க வைத்து, நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்குத் தயாராகக் கூட்டி வந்தான்.

ராத்தோட்கள், அவர்களைப் பார்த்தவுடன் சிவகுரு குடும்பம் என அறிந்து கொண்டனர். ராகினி அவர்களை  தன் குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அமிர்தா நீண்ட நாட்களுக்குப் பின்னர்த் தன் குடும்பத்தைப் பார்த்தாள். அப்பா, என முருகானந்தத்தைக் கட்டிக் கொண்டாள். "அம்முக் குட்டி, நல்லா இருக்கியாடா?" எனக் கொஞ்சினார். சிவகுரு, சிவபரங்கிரி, சண்முகம் என எல்லாரும், கை எடுத்து வணங்கி அழைத்துச் சென்றனர்.

ரகுவீர், ஜானகியின் நிச்சயதார்த்தம் நடந்தது. ரகுவீர் சாக்லேட் கலர் செர்வானி, மெரூன்ஷால் பகடியிலும், முத்து மாணிக்கக் கற்கள் கோர்க்கப் பட்டு ராயலாக இருந்தான். கழுத்தைச் சுற்றி மாணிக்கக் கற்கள் பதித்த கல் மாலை அவர்கள் கௌரவத்தைப் பறை சாற்றியது.

"தெய்வா, மாப்பிள்ளையை, பார்த்தியா ராஜா மாதிரி, இருக்காரு, நம்ம ஊர் பூராத் தேடினாலும் இவ்வளவு அம்சமா கிடைக்காது." என்றார் சுந்தரவள்ளி.

“ஆமாம் அத்தாச்சி, அதைவிட அவர் குணம் சொக்கத் தங்கம். ஜானகி முகத்தைப் பார்த்தே, அவளுக்கு என்ன வேணும், வேண்டாம்னு  தெரிஞ்சுக்கிறார். கையில் வச்சு தாங்குகிறார்." எனப் பெருமை பேசினார் தெய்வா.

"என்னமோடி அம்மா, புள்ளிமான் மாதிரி, துள்ளிக் குதிச்சுக்கிட்டு போகிற நம்ம மகராசிக்கு ஏற்ற மகராசன் கிடைச்சா சந்தோஷம். நம்மளும் நிம்மதியா இருக்கலாம்." என்றார் அமிர்தாவின் தாய்.

ரகுவீருடன், கூடவே ரோஹன், ஹாசினி வந்தனர். ராஜ்வீர், ரன்வீர் தங்கள் படே பையாவின் செக்யூரிட்டி போல் வந்தனர்.

"பையா! சோட்டியும், பாபிஷாவும் அந்த ரூமில் தான் இருக்கங்க. மஞ்சரி இருக்கா, வீடியோ கால் போடவா. இவங்க அரேஞ்மெண்ட் பார்த்தா இன்னும் நேரமாகும் போல?" என ராஜ்வீர் பேசிக் கொண்டிருக்கும் போதே, ரன்வீர் தீப்திக்கு வீடியோ கால் போட்டு விட்டான்.

 

"ஹாய் தீபு, எங்க இருக்க?" என அவனின் பேசியதிலிருந்தே, தீப்தி கண்டு கொண்டாள்.

"ஏய், பந்தர் நீ என்ன சேஷ்டை செய்தாலும், ஜானி தீதீ பக்கம் கேமராத் திருப்ப மாட்டேன். தீதீ இன்னைக்குச் செம அழகு. நான் மட்டும் பையனா இருந்தேன், படே பையாவை விரட்டி விட்டுட்டு, சகாயி பண்ணிக்குவேன்." என ஆவலைத் தூண்டினாள்.

சும்மாவே ரகுவீர், தன்னவளைப் பிரிந்து ஐந்து மணி நேரம் ஆனதில், மனதில் ஃபீல் பண்ணிக் கொண்டு இருந்தான். அமிர்தாவிடம் ஐம்பது முறை பேசியிருப்பான். இதில் தீப்தி வேறு ஜானகியை வர்ணித்ததில் ரகுவீருக்கு நிலை கொள்ளவில்லை.

ரன்வீர் கைகளில் இருந்த  போனை வாங்கி, "தீப்தி, உனக்கும் கணேஷ்க்கு தந்த மாதிரி, கேமரா வாங்கித் தரேன். ஜானுவைக் காட்டு." என்றான் ரகுவீர்.

அவள் அந்தப் பக்கம், ஸ்பீக்கரில் போட்டிருந்தாள். மஞ்சரி அதை வாங்கிக் கொண்டு, "ஜீஜூஷா, ஒரு பத்து நிமிடம் பொறுக்க முடியாதா உங்களுக்கு. பேசாமல் போனை வைங்க." என கண்டிக்கவும், 

"மஞ்சரி, உன் ப்ராஜெட் நம்ம கம்பெனிக்கு மாற்றித் தர்றேன்." என ரகுவீர் டீலில் இறங்கவும், "அதைச் செய்யிங்க ஜீஜூ, உங்களுக்குப் புண்ணியமாப் போகுது." என்றாள் மஞ்சரி. "எனக்கு ஒரு வேலை செய்யனுமே, அப்படியே போனை திருப்பிக் காட்டு, மயூ ரெடி ஆகிட்டாளான்னு பார்க்கிறேன்." என்றான் ரகுவீர்.

"ஜீஜூஷா, நீங்க நல்ல பிஸ்னஸ் மேன் தான் ஒத்துக்குறேன். ஆனால் உங்கள் டீல் ரிஜெக்டட்." எனப் போனை கட் செய்தாள் . அமிர்தா, தீப்தி சிரித்தனர். "இருங்கடி, உங்கள் டேர்ன் வரும் போது பார்த்துக்குறேன்." என்றாள் மயூரி. 

ஜானகி, யாருக்கு வந்த விருந்தோ என உட்கார்ந்து இருந்தாள். அமிர்தாவின் குடும்பம் உள்ளே வந்தது. 

"அடி ஆத்தி என் மருமகள் தானா, ஏதோ வடக்கத்தி ராணி உட்கார்ந்து இருக்குன்னு நினைச்சேன்." என்றார் அத்தை. அத்தையைப் பார்த்ததும் ஜானகி ஒரு புன்னகையை உதிர்த்து வைத்தாள். அவர் நெட்டி முறித்துத் திருஷ்டி கழித்தார்.

"அம்மா!  முகூர்த்தத்துக்கு ஜானகி, தமிழ் பொண்ணாகச் சேலையில் தான் இருப்பேன்னு சொல்லிட்டா. அது தான் அவர்களுக்காக இராஜஸ்தானி மருமகளாக அலங்காரம். ராகினி அத்தை தான் ஏற்பாடு பண்ணுனாங்க." என விளக்கம் தந்தாள் அமிர்தா.

 

"எப்படி இருந்தாலும், எம் மருமகள் அழகு தான். ரெடியா இருங்கள். பொண்ணைக் கூப்பிடவும் வந்து சேரனும்." என்றவர்,  "இது தான், பெரிய மருமகனைக் கட்டிக்கப் போறப் பொண்ணா?" என மயூரியைப் பார்த்துக் கேட்டார். 

"ஆமாம்  இது மயூரி, அமுதன் அத்தான் மாமன் மகள். இது மஞ்சரி, ராகினி அத்தைக்கு, ஒன்று விட்ட தங்கச்சி மகள். மயூரியின் இன்னொரு அண்ணனைக் கல்யாணம் பண்ணப் போறா." என்றவள் தன் அம்மா அண்ணிகளை அறிமுகப் படுத்தினாள்.

ஹரிணி, உள்ளே வரவும், "இவுகளைத் தெரியும், ஜானகி நாத்தனார் இப்ப தான் பார்த்தேன்." என்றார் சுந்தரவள்ளி.

"ஆண்டி  திலக் நடக்கப்போகிறது, வாங்க புவாஷா கூட்டிட்டு வரச் சொன்னாங்க." என அழைத்துச் சென்றாள் ஹரிணி.

ரகுவீரை அமரவைத்து, அமுதன் முதலில், ப்ளாட்டினம் செயின், ட்ரெஸ் மெடீரியல், பணக்கட்டு என வைத்துக் கொடுத்து, செஞ்சாந்தில் திலகம் இட்டான்.

அடுத்து, பாலன் பிரேஸ்லெட் அணிவித்துத் திலகம் இட்டான். கணேஷ் அடுத்து வாட்ச் அணிவித்து, திலகமிட்டான். தாதிஷா, பக்கத்திலிருந்து சொல்லச் சொல்ல இராஜஸ்தானி முறையைச் செய்தனர். ஸ்வீட் எடுத்து மூவரும் ஊட்டி விட்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்தனர்.

ஜானகி அழைத்து வரப்பட்டாள். சாக்லேட் வித் மெரூன் காம்பினேஷன், லெஹங்காவில், கழுத்தை ஒட்டிய சோக்கர், லாங் ஆரம், கை நிறைய அடுக்கிய தங்கம்,கல் வளையல்கள், நெற்றியில் சூட்டி, மூக்கில் வளையம், காதணியோடு சேர்ந்திருக்க, அழகுக் கலை நிபுணரின் அலங்காரத்தில் உதட்டின் சாயம் மிளிர, ராணிகளுக்கே உரியக் கம்பீரத்தோடு வந்து நின்றாள்.

 நிச்சியத்திற்கு தயாராக அவள் தயங்கிய போது, "எனக்காக ப்ளீஸ் ஜானும்மா!" என்ற ரகுவீரின் கோரிக்கையில், காதலாகிக் கசிந்துருகி வந்து நின்றாள். பார்த்தவர், பார்த்தவண்ணம் சிலையாகினர். ஜானகி இதுவரை இந்தக் கோலத்தில் வந்தது இல்லை.

  வீரேந்தர் ராத்தோட் தன் தாயைத்தான் காணுகிறோமோ என ஐயமுற்றார். மயூராதேவி, "ஸீன்யேஜி, அப்படியே மாஷா மாதிரி இருக்கா!" எனத் திருஷ்டி பொட்டு வைத்தார். ராத்தோட்களும், மூத்த இராஜஸ்தானிகளும், அவள் நடை உடை பாவனையில், ஸ்வர்ண மஹாலக்ஷ்மியைக் கண்டனர்.சிவபரங்கிரி, சிவகாமி இவர்களும், படி தாதிஷாவைப் பார்த்து இருந்ததனால் அதே தான் அவர்களுக்கும் தோன்றியது. அமிர்தாவோடு அவள் அண்ணிமார்கள் ஹரிணி என நால்வரும் அவளை அழைத்து வந்தனர். உண்மையில் கண்கள் நிலம் பார்க்க, மணப்பெண்ணாகவே வந்து நின்றாள் ஜானகி தேவி.

 சிவகுருவும், ராகினியும் ஆனந்தக் கண்ணீர் சிந்தினர். தாத்தா அப்பத்தா அத்தை மாமா தெய்வா, சண்முகம் எல்லோரும் ஜானகி வாழ்க்கை சிறக்கப் பிரார்த்தனை செய்தனர். நம்ம ஜானியா இது என, சிவகுரு நண்பர்களே அதிசயித்தனர்.

தலையில் முக்காடு இட்டு, ஜோதாராணி போல் வந்தாள் ரகுவீரின் ராணி. ரகுவீர் அருகில் அமர வைத்தனர், அப்போதும் நிமிர்ந்தாள் இல்லை.

 "கம்மாகனி ராணிஷா கொஞ்சம் நிமிர்ந்து, தரிசனம் தருவது!" என ரகுவீர் கிசுகிசுத்தான். ஜானகி வெட்கத்தில் கண்களை கீழ் நோக்கியே அலைய விட அவளின் உதடு துடித்தது. ரகுவீருக்கு அவளின் கொள்ளைக் கொள்ளும் அழகு, உன்மத்தம் பிடிக்க வைத்தது.

 பெண்ணிற்கான, சீரைப் பரப்பினர் ஷப்னம், அவளுக்குச் சிகப்பு ஸுன்ரி(தாவணி) யை முக்காடாகப் போர்த்தி கையில் பரிசுகளைத் தந்து , நெற்றியில் திலகமிட்டார். அவரைத் தொடர்ந்து, தாதிஷா, ஸர்குன், பூனம், ஹரிணியையும் சடங்கு செய்தனர்.

இப்போது, தமிழ்நாட்டு முறைப்படி நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. சிவகுருவின் நண்பர்கள், இருவருக்கும் பொதுவாக வந்தனர். சந்திரசேகர ரெட்டி, முறையை விளக்கினார்.

மணமகன், மணமகள் வீட்டினர் இரண்டு புறமும் நின்றனர். ஹேமந்த் சிவகுரு பக்கம் நின்றார். மணமக்களின் பெற்றவர்கள், மாமன் மாமியை முன்னால் அழைத்தனர். ரகுவீருக்கு, மாமன் சுரேந்தர் சௌஹான் அவரது மனைவியுடன் முன்னால் வந்தார். 

ஜானகிக்கு மாமன் சீர் செய்ய வழக்கம் போல, முருகானந்தம் முன்னே வர யத்தனிக்க, "இருங்க ராகினி தம்பிங்க இருக்கிறாங்க." என்ற சுந்தரவள்ளியின் சொல்லவும், "ஆமாம், ஆமாம் பழக்கத் தோஷத்தில் வந்துட்டேன்." என நின்றார்.

 ஏற்கனவே சொன்னபடி, கஜேந்தர், ஸர்குன் முன்னே வந்தனர். இதிலும் மாமனுக்கு முக்கியத்துவம் தரும் தமிழர் பண்பாடு பற்றியும், ராகினி அந்த நேரங்களில் எவ்வளவு மனத்துயர் அடைந்திருப்பார் என எண்ணி அதற்கு ஈடு செய்ய வேண்டும் எனக் கஜேந்தர் மனதில் நினைத்தார்.

 சுரேந்தர் சௌஹான், கஜேந்தர் ராத்தோட், ஜோடிகள், சிவகாமி அப்பத்தா சொல்ல, ரெட்டி மொழி பெயர்க்க, நலங்கு வைத்துக் கொண்டனர். இது சம்பந்தம் செய்து கொள்ள மாமன்மாரின் சம்மதம் சொல்லி, முன்னே வந்து நடத்தித் தருவதற்கான மரியாதை என எடுத்துச் சொன்னார். மணமக்களுக்கு, அவரவர் தாய் மாமன்கள் மாலையிட்டனர்.

 "ஜானகிக்கு மாமனாகச் செய்வதில் உள்ள மகிழ்ச்சிக்கு, இணை இல்லை பஹன்ஷா, இவ்வளவு நாள் இதையெல்லாம் செய்யாததற்கு என்னை மன்னிச்சுக்குங்க. இந்த முறையெல்லாம் செய்த பாயீஷாவிற்கு நன்றி," என முருகானந்தத்தைப் பார்த்துக் கும்பிட்டு, ராணி போல் நின்ற தன் மருமகளுக்கு, மாலை அணிவித்தார் கஜேந்தர் சிங் ராத்தோட்.

பெற்றவர்கள், இருவரும் நலங்கு இட்டுக் கொண்டனர். இரு குடும்பத்துச் சம்பந்தம் பற்றிப் பத்திரிகை வாசிக்கப்பட்டது. பிறகு தேங்காய் பூ பழம் வெற்றிலைத் தாங்கிய தட்டை, தாதாஷா, தாதிஷா எடுத்துக் கொடுக்கச் சொல்லி, ஜானகியின் தாத்தா, அப்பத்தா பெற்றுக் கொண்டனர்.

ஜானகியின்  காலுக்கு அடியில், உப்புப் பருப்பை வைத்து, விரலால் தொடச் சொன்னார் சுந்தரவள்ளி, பின்னர் அவள் லெஹங்கா தலைப்பில், தேங்காய், வெற்றிலை பாக்கு, மஞ்சள் கிழங்கு, பூ ஒன்றை ஒரு பையோடு வைத்து, மடியில் வைத்துப் பிடிக்கச் சொன்னார்கள், முதலில் தெய்வா சுந்தரவள்ளியின் முந்தியில் மடி மாற்றி மூன்று முறை செய்ய வைத்தார். மூன்றாவது முறை சுந்தரவள்ளியிடம் தந்தனர். இதே போல் இரண்டாவது, மாமன் மனைவி முறைக்கு ஸர்குனிடமும், நாத்தனார் முறைக்கு ஹரிணியிடமும் மடி மாற்றினர்.

அமர்சிங், ஹரிணி வந்து மோதிரத்தைத் தட்டுகளில் வைத்து நீட்டினர். முதலில், ஜானகியை, ரகுவீருக்கு மோதிரம் அணிவிக்கச் சொன்னார்கள். ஹரிணி அவளிடம் நீட்டியபடி இருக்க, தலை குனிந்திருந்த ஜானகியின் கண்களில் இருந்து  முத்துக்கள் உருண்டது, அதைக் கவனித்த ரகுவீர், அவளின் இரண்டு கையையும் பிடித்துக் கொண்டு,

"மேரி ஜான், எனக்கு ரிங் போடும் முன், உங்கள் எல்லாருக்கும் சொல்ல ஆசைப் படுகிறேன். அவள் என்னைப் பார்த்தும், நான் அவளைப் பார்த்தும் ஒரு மாதம் தான் ஆகிறது. ஆனால் எங்கள் பந்தம், அவள் புவாஷா கருவில் இருந்ததிலிருந்து, இந்த வீரூவை, மணமகனாக வரித்து வந்திருக்கா. இவளுக்காகத் தான் என் ஆத்மாவும் காத்திருந்தது, இன்பம், துன்பம் இரண்டையும் நாங்கள் சேர்ந்தே எதிர் கொள்வோம், அப்படித்தானே ஜானும்மா?" என அவளின் சலனமடைந்த மனதைக் கட்டுக்குள் கொண்டுவர ரகுவீர் பேசினான்.

ஆம், எனத் தலையாட்டிய ஜானகி கண்ணீர் மல்க, தன் காதல் நாயகனின் கைகளில், அவனைப் பார்த்த வண்ணம், உணர்ச்சி வயப்பட்ட உணர்வோடு, மோதிரத்தை அணிவித்தாள். அந்த நேரம் சலனம் மறைந்து, ரகுவீர் அவளை ஆட்கொண்டான்.

 

ரகுவீர் ஏற்கனவே போட்ட மோதிரம், ஜானகி கையில் இருந்தது. தன் கையை நீட்டியபோது பார்த்தவள் அதைக் கழட்ட மனமின்றி தவித்தாள். அதற்கும் ரகுவீர் சமாதானம் தந்தான், "மேரிஜான், என் வாழ்வில் வந்ததற்கான முதல் முத்திரை, உதய்பூரில் நான் போட்ட மோதிரம், அதுவே அவள் இதயத்தைத் தொட்டது தான், ஆனாலும் மற்றொரு முறை, என அதே விரலில் மீண்டும்." என அவளின் கண்களைப் பார்த்தவாறே அவள் விரல்களில் தன் இதழொற்றி, மோதிரத்தை அணிவித்தான்.

சுற்றியிருந்த இளைய தலைமுறை, "ஹேய், பாயீஷா செம ரொமான்டிக் போஸ்." எனக் கேமராக்கள், மொபைல்களில் வீடியோ, போட்டோ எடுத்துக் கொண்டனர். ரகுவீர், ஸ்வீட் எடுத்து, தன் சரி பாதிக்கு ஊட்டினான். அவள் ஒரு வாய் சாப்பிட்டாள். அவன் கையைத் திருப்பி அவனுக்கே ஊட்டி விட்டாள் ஜானகி. 

அடுத்து மனையில், அமுதனை அமர வைத்தனர். ரகுவீர், முதலில் திலக் சடங்கு செய்ய வந்தான். பரிசுப் பொருட்கள், ஒரு புதுக் கார் சாவி கையில் கொடுத்து, செயின் அனுவித்து, செஞ்சாந்து திலகமிட்டான்.

ராஜ்வீர், அடுத்து, பரிசுப் பொருட்களுடன், பணக் கட்டு வைத்துக் கொடுத்து, திலக் வைத்தான். ரன்வீர், பிரேஸ்லெட், வாட்ச் பரிசளித்துத் திலக் இட்டான்.

மயூரியை அழைத்து வந்தனர், அமுதன், டார்க் மெரூன், ஷெர்வானி, பீச் கலர் ஷாலில் இருக்க, மயூரி பீச் கலர் லெஹங்காவில் தேவதைப் போல் வந்தாள். மெரூன் தாவணி, அந்த வண்ணத்தை எடுத்துக் காட்டியது. 

அவளை, அமர வைத்தவுடன், சிவ குடும்பத்தினர், நமது ஊர் பாணியில், 51 தட்டு சீர் பரப்பினர். சிறுமலையில் விளைந்த பழங்கள், தாம்பூலத் தட்டு, மயூரிக்கான சேலை துணிகள், காஸ்மெடிக்ஸ், அரிசி கருப்பட்டி, ஸ்வீட் எனப் பரிசம் போட சீர் பரப்பினர்.

இரஜஸ்தானி முறைப்படி, மெரூன் வண்ண ஸுன்ரி, (தாவணி) காஞ்சிப் பட்டில் நெய்து கொண்டு வந்திருந்தனர். தெய்வா, சண்முகத்தை அமுதனுக்குப் பெற்றவர் ஸ்தானத்தில் இருந்து, சடங்கைச் செய்தனர். எல்லோரும் ஆச்சரியமாகப் பார்க்கவும், ஒரே நாளில் இரண்டு பிள்ளைகளுக்கும் நிச்சயம், நடக்கும் போது, ஒருவரே இரண்டையும் செய்ய மாட்டோம். அதனால் எனது சின்ன மகன் மருமகள், அமுதனின் தாய் தந்தை ஸ்தானத்தில் முறை செய்வார்கள். இதுவே எங்கள் பழக்கம், என அப்பத்தா சிவகாமி, விளக்கம் தந்தார்.

 தெய்வா மயூரிக்கு, முக்காடு போட்டு திலகமிட்டார். மாமன் முறைக்குப் பூனத்தின் பையா, பாபியும், அமுதனுக்குக் கஜேந்தர், ஸர்குனும், மாலை போடுதல், நலங்கு வைத்துக் கொண்டனர்.

 

அமரேன் - பூனம், சண்முகம் - தெய்வா தாம்பூலம் மாற்றிக் கொண்டனர். மடி மாற்றுவதற்கு, மயூரியின் மாமி, பம்மி மற்றும் அமிர்தாவின் மூத்த அண்ணி, மடி மாற்றிக் கொண்டனர். உப்பு, பருப்பை மிதிக்க வைத்து, அந்தச் சடங்கையும் செய்தனர்.

ராஜ்வீர், மஞ்சரி மோதிரத் தட்டை அமுதன், மயூரியிடம் நீட்டினர். அமுதன் வேகமாக எடுக்க வந்தான், "பாயீஷா கொஞ்சம் பொறுமை, மயூரி தான் முதலில் போடுவா அதுக்கப்புறம் நீங்க போடுங்கள்." எனக் கேலி செய்தாள். பாலன்,"அது எங்கள் அண்ணனுக்குத் தெரியாதா அண்ணி கஷ்டப் படுவாங்களேன்னு, எடுத்துக் கொடுக்கப் போனார். இல்லைண்ணே!" எனக் காலை வாரினான். "மஞ்சரி, நீ பேச ஆரம்பித்தால், முடிக்க மாட்ட, சீக்கிரம் ஸ்வர்ணிகிட்டக் கொடு." என்றான் அமுதன். "ஜமாயீஷா, மயூரி உங்களுக்குத் தான் நிச்சயம் முடிந்தது கவலைப் படாதீர்கள்." என்றான் ரகுவீர்.

ஹேய், என எல்லாரும் சூழ நின்று கத்திய பின்பு, மஞ்சரி நீட்டிய மோதிரத்தை எடுத்து  அமுதனின் வலது கையில் அணிவித்தாள்.

ராஜ் வீர் நீட்டிய தட்டை, "ராஜ், தப்பா எடுத்துக்காதே, ஜானும்மா தரட்டும்." என்றான் அமுதன்.

"அமுதன், இதிலென்ன இருக்கிறது என்றவன். ஜானி வாடா." என அழைக்க, 

"ராஜ், அவள் உன் பாபிஷா!" என்றார் ஸர்குன். "ஆமாம் மாஷா நான் மறுக்கலை, அதை விட என்னுடைய இனிய தோழி. பையாக்கும் தெரியும்." என்றபடி, ஜானகியை, ஒரு கைப்பற்றி அழைத்து வந்தான்.

"சாசிஷா, ராஜ்வி சொல்கிறது சரி, இன்ஃபேக்ட், ஜானுவை அறிமுகப் படுத்தியதே அவன் தான்." என்றான் ரகுவீர். 

ஜானகி, கையில் தட்டை கொடுத்த ராஜ்வீரிடம், சேர்ந்து பிடிக்கச் சொல்லி, ரகுவீர் தந்த ஜாடையில், "ஜானி, நம்ம மிஷன், இந்த ஸகாயீ செய்து வைப்பதில் முடிகிறது." எனச் சொல்லி, அவள் கையைப் பிடித்து, தட்டை அமுதனிடம் நீட்டினான் ராஜ்வீர். அமுதன், ஜானகியை பார்த்த வண்ணம் இருந்தான்.

"ஹேய் மேரிஜான், உங்கள் அண்ணனுக்கு அனுமதி கொடு. என் சோட்டி, கையை நீட்டிக்கொண்டே நிற்கிறாள்." என்ற ரகுவீர் வார்த்தைகளில், கீ கொடுத்த பொம்மை போல், "அண்ணா, அண்ணிக்கு மோதிரம் போடு." என நீட்டினாள்.

 அமுதன் உணர்ச்சிமிக்க இந்தத் தருணத்தில், தன்னைச் சமாளித்துக் கொண்டு, சகோதரப் பாசத்தில் உருகி, கடந்து காதலியின் நேசத்தில் கலந்து, மயூரிக்கு மோதிரத்தை அணிவிக்கும் பொழுதில் பார்வையில் காதலைக் கசிய விட்டு, தன் மனம் கவர்ந்தவளைத் தனது உரிமையாக்கிக் கொண்டான்.

 இரண்டு, நிச்சயதார்த்தம், இனிதே முடிந்தது. ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இராஜஸ்தானி, தென்னிந்திய உணவுகள் பரிமாறப்பட்டன.

 ரெட்டி, பார்வதி, பல்லாஜி-ப்ரீத்தோ, பாண்டேசாப்- பர்க்கா, ஹேமந்த்- பங்குரி என எல்லாரும் சிவகுரு- ராகினியோடு தங்கள் மகிழ்ச்சி யைப் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

"ப்ரீத்தோ, பாபிஜீ, எங்களால் நீங்க லோடி செலபரேட் செய்ய முடியாமல் போயிடுச்சு." என ராகினி வருத்தப்பட்டார். அதே நேரம், ரகுவீர் ஒரு அறிவிப்புச் செய்தான்.

"இன்றைய நாள் பல விசேஷங்களைக் கொண்டு கடந்து செல்கிறது. காலையில், தமிழ்நாட்டுப் பொங்கல் மகர சங்கராந்தி பூஜை, பட்டம் விடுதல், இரண்டு முறைகளில் இரண்டு நிச்சயதார்த்தம் , எல்லாம் கொண்ட ஸ்பெஷல் டே.

 இன்னும் முடியவில்லை, இந்த நாளின் ஸ்பெஷல், எங்களுக்காக, தங்கள் பிள்ளைகளை விட்டுப் பிரிந்து, ஸகாயீயை சிறப்பித்த, பல்லா அங்கிள், ப்ரீத்தோ ஆண்டிக்காக, லொடி நெருப்பைக் கீழே வளர்க்க இருக்கிறோம். சாப்பிட்டு முடித்தவர்கள், வாருங்கள், பஞ்சாபி தட்காவில், டோல், பாங்கரா நடனத்தோடு லோடி கொண்டாடுவோம்." என அழைப்பு விடுத்தான் ரகுவீர்.

"ப்ரீத்தோ, ஆண்டி வாங்கப் பூஜையோடு ஆரம்பிக்கலாம்." என அழைத்துச் சென்றான்.

ஜானகியை, சிவகுரு மற்றும் நண்பர்கள் கீழே அழைத்துச் சென்றனர். தமிழ் நாட்டுப் பொங்கல் செட், பஞ்சாபி பாங்கராக மாறி இருந்தது.

ஸர்ப்ரைசாக, பல்லாஜியின், பிள்ளைகள், பேரன் பேத்தி என எல்லாரும் அங்கிருந்தனர். "பல்லே,பல்லே,பல்லே" என டோல் வாசித்து ஆடினர்.

பல்லாஜீ, ப்ரீத்தோ ஜீ, முதலில் பூஜைப் போட்டு, பொறியைத் தூவி வலம் வந்தனர்.

 இந்தியக் கலாச்சாரத்தின் உச்சமாக, தமிழர், இராஜஸ்தானி, பஞ்சாபிகள் சேர்ந்து, லோடியைக் கொண்டாடி, தங்கள் கோரிக்கையை, அக்னி தேவனிடம் சமர்ப்பித்தனர்.

 

ரகுவீர், "ஹே அக்னி தேவா, உன்னைச் சாட்சியாக வைத்து வலம் வருகிறேன். என் ஜானுவை, நல்ல முறையில் குணமாக்கு, அவளின் மனத்துயர், பயம் நீக்க எனக்கு ஓர் வழி காட்டு. எனக்குச் சக்தி கொடு." என வேண்டினான். அவன் வேண்டுதல் பலிக்குமா, ரகுவீர் ஜானகியை, அவள் மனத்துயரில் இருந்து மீட்பான பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

0 கருத்துகள்
ஒரு கருத்தை விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!