55- இரட்டை நிச்சயம், முப்பெரும் விழா .
தொடர் : 59
உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
திருமணம் ஆணுக்கும், பெண்ணுக்கும் நடந்தாலும், பெண்ணின் பெயராலேயே அது அழைக்கப்படும். பார்வதி கல்யாணம், சீதா கல்யாணம், மீனாட்சித் திருக்கல்யாணம், எனப் பெண்களுக்குப் பெருமை சேர்த்து, கல்யாணம் எனும் சடங்கு புனிதம் அடைகிறது. வாழ்க்கை முழுமைக்கும் ஆன வைபவம் ஆதலால், எல்லாச் சடங்கு சம்பிரதாயங்களுடன், ஏழு நாட்கள் திருமணம் நடைபெறும். இப்போது உள்ள அவசர யுகத்தில், மூன்று நாட்களுக்குச் சுருக்கி விட்டோம்.
நிச்சயதார்த்தம் நிகழ்ச்சியில், இன்னார் மகனுக்கும் இன்னார் மகளுக்கும் என முறையான அழைப்பிதழ் எழுதப்படுகிறது.
ஜானகி-ரகுவீர் திருமணத்திற்கும் முறையாகப் பத்திரிகை அடிக்கப்பட்டது. டிஜிட்டல் மயமான இந்த உலகில் எதுவும் சாத்தியமே. தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் அழைப்பிதழ் அடிக்கப்பட்டது. காலை வேளையில் தயாராக வந்து விட்டது.
இன்று காலையில் ஆறு மணிக்கு கணபதி ஸ்தாபனா பூஜை வைத்திருந்தனர். கிரகச் சாந்தி பூஜை தொடர்ந்து நடக்கும். அது முடிந்து இவர்களது சம்பந்திகளுக்கு அழைப்பிதழ் வழங்க "ந்யோதா" சடங்கைச் செய்கின்றனர். தமிழ் முறைப்படி முகூர்த்தக் கால் ஊன்றுதல், அரிசி அள்ளிப் போடும் சடங்கும் செய்ய உத்தேசம்.
நிச்சயதார்த்தம் எனும் சகாயீ முடிந்து விட்டது. இது அவசரமாக நடத்தப்படும் கல்யாணம். ஆனால் எதிலும் குறை வைக்க ரகுவீர் விரும்பவில்லை. எனவே எல்லா விசயத்திலும் மெனக்கெட்டான். பாதி மேடை ஏறியிருக்கிறாள் ஜானகி, இந்த ஜோடிகளுக்கு, ஆளாளுக்குத் தனித்தனியே திருஷ்டி கழித்தனர். தாதிஷா பணத்தால் சுற்றி ஏழைகளுக்குக் கொடுக்க, லோடியின் போது, திருநங்கைகளை வரவழைத்து ஆசி வழங்க வைத்தார் ஷப்னம்.
காலடி மண் எடுத்து திருஷ்டி சுற்றிப் போட்டார் சிவகாமி. உப்புச் சுற்றி தண்ணீரில் கரைத்தார் ராகினி. ஒருவர் அறியாமல் மற்றொருவர், காலா டீக்கா(கருப்புப் பொட்டு), நெட்டி முறித்தல் என நீண்டது இந்தச் சடங்கு.
இவர்கள், ரகுவீர்-ஜானகி அவ்வளவு பிரியமானவர்களாக இருந்தனர். இரவு நேரம், தாயின் மடியில் தலை வைத்துச் சாய்ந்திருந்த ஜானகி, "மா, நான் வீருஜிக்கு பொருத்தமா இருப்பேனா?" எனக் கேட்டாள்.
"ஜானும்மா இந்த ராஜா, ராணி எப்படி இருக்காங்கன்னு சொல்லு, நான் சொல்றேன்." என மொபைலில் ஒரு படத்தைக் காட்டினார்.
இது எங்கோ பார்த்தோமே என யோசித்தவள், "இது ஹவேலியில் இருந்தது, உங்கள் தாதாஷா,தாதிஷா " என்றாள்.
"அடுத்தப் படத்தைப் பாரு." என்றார் ராகினி. அதில் முதல் படம் போன்ற தோற்றத்தில் இன்றைய ரகுவீர், ஜானகி இருந்தனர்.
"மாதாஜி, இதென்ன மார்பிங் பிச்சரா?" எனக் கேட்டாள். "போடி பாகல் கைகி, உங்கள் இரண்டு பேரையும் நானே போட்டோ எடுத்தேன். அப்படியே, எங்கள் தாதிஷா பேஸ் உனக்கு, நான் உங்கப்பா மாதிரின்னு நினைத்தேன், இல்லை எங்கள் தாதிஷா. ரகுவீர் பாரு அப்படியே தாதாஷா மாதிரி. நீங்க இரண்டு பேரும் மறுபிறவி எடுத்தீர்களோ?" என வியந்தார்.
அதே நேரம் அறைக்குள் வந்த தாதாஷா, "ஸ்வரூ, நீ சொல்றது தான் சரி. இவள் என் மாஷா தான்." என வந்தார். அவர்களைப் பார்த்து எழுந்த ஜானகியை, கட்டி அணைத்து உச்சி முகர்ந்தார்.
ஜானகி, என்ன சொல்வது என்று அறியாமல் குழம்பிக் கிடந்தாள். பக்கத்தில் அமர்ந்த தாதாஷா, "ஜானிமா, என் மாஷா கம்பீரமான பெண்மணி, நீ அந்த வாரிசு. இரண்டு தலைமுறை தாண்டி அதே மிடுக்கு உன்கிட்ட இருக்கிறது. உன்னை எதிர்த்து நின்று ஒரு காரியமும் சாதிக்க முடியாது. ஒன்று பாசமா சரண்டர் ஆகனும், இல்லையென்றால், நயவஞ்சகமா ஏமாத்தினா தான் உண்டு. உங்கம்மா ஷாதியில், பங்குரிக்காகப் பெருந்தன்மை காட்டினார்கள். பூஃபாஷா நயவஞ்சகத்தில் மாட்டினாலும், உங்கள் அம்மாவைக் காப்பாத்துனாங்க பார். இதெல்லாம் ராணிகளுக்கே உள்ள மிடுக்கு, நீயும் ரகுவியும் இந்த ராத்தோட் வம்சத்தை இன்னும் உசரத்துக்குக் கொண்டு போவீங்க." என்றார் தாதாஷா.
ஜானகி அந்த மொபைலில் தன் பர்நானியின் படத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். தானும் இவர்களைப் போல் இருப்பேனா? என ஆயிரம் எண்ணங்கள். சிறிது நேரம் பேசிவிட்டு தன் மாஷாவே பேத்தியாக வந்து இருக்கிறார் என்ற அசைக்கப் படாத நம்பிக்கையுடன் சென்றார்.
கணபதி பூஜை, கிரகசாந்தி பூஜை.
அதிகாலை நேரம் அழகாக விடிந்தது, ராத்தோட் மாளிகையில். அதிகாலையில் பண்டிட்ஜி வந்துவிட்டார். வீட்டில் உள்ள பெரியவர்கள் ஆஜராகி இருந்தனர். ராத்தோட்களும், சிவ குடும்பத்தினர் மட்டுமே இங்கே இருந்தனர். இரண்டு தளங்களை முழுமையாக அவர்களுக்கு ஒதுக்கித் தந்தனர். அதில் ஒரு தளத்தில் அடுப்படி இருந்தது, தேவைப்பட்டதை அங்கே செய்து கொண்டனர்.
வீட்டின் பூஜை அறைப் பகுதியில் கணபதியை அழைக்கும் சடங்கு நடந்தது. கணபதி என்றிடக் கலங்கிடும் வல்வினை. விக்னஹர்தா இருக்கையில், தடைகளைத் தகர்த்து வெற்றியைத் தந்திடுவார்.
ரகுவீரை அமரவைத்து, கணபதியின் சிலையை வைத்து முறைப்படி பூஜை செய்தனர். அடுத்து ஜானகியைக் கூட்டி வந்தனர். ரகுவீர் பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தான். பின்னே, நம் பெண்ணரசி அழகான சேலைக் கட்டில் அம்சமாக இருந்தாள், ஆசையாக முகம் பார்க்க ஏங்கும் போது, ராஜஸ்தானிகளைப் போல் முழுதாக மறைத்து முக்காடு இட்டிருந்தாள்.
லட்டு கிடைக்காத சிறுவன் போல் எல்லோரிடமும் சண்டைக் கட்டி ஏறிக் கொண்டிருந்தான் ரகுவீர். ஜானகிக்கு, சிரிப்புத் தாங்கவில்லை, அவள் குலுங்கிச் சிரிப்பதைக் கண்ட ரகுவீர், சிரித்த முகத்தைப் பார்க்க, கொள்ளை ஆசைப்பட்டான். ஜானகி அமர்ந்து கணபதி பூஜை, நம்ம ஊர் கணபதி ஹோமம் செய்தாள். அடுத்துக் கிரகச் சாந்திப் பூஜை, கிடைத்த நேரத்தில் ஜானகி யை ஓரங்கட்டிய ரகுவீர், "அவள் முகத் திரையைத் தூக்கப் போனான்."
அவசரமாகத் தடுத்த ஜானகி, "வீருஜி, பெரியவங்க சொல்வதில், ஏதாவது அர்த்தம் இருக்கும், எனக்காகக் காத்திருங்கள். அதற்குப் பிறகு வாழ்க்கையில் நல்லா இருப்போம்னா ஏன் கூடாது." என்றாள்.
அவளின் நம்பிக்கையில் அவனும் நம்பிக்கை வைத்தான். "சரிடி மெரி ஜான் , நீ சொல்கிறதுக்காகச் சரின்னு சொல்றேன்." என ரகுவீரும் சம்மதித்து அடுத்தக் கிரகசாந்தி பூஜையில் அமர்ந்து, இந்த ஷாதி நன்றாக நடப்பதற்காக நந்தியெம்பெருமானை வணங்கினர்.
"அத்தை பத்திரிகை அடித்தவுடனே முதலில் குலதெய்வம் கோவிலில் பத்திரிகை வைப்போமே, இப்போது என்ன பண்றது?" எனச் சிவகாமியிடம் கேட்டார் தெய்வா.
"ஒரு மஞ்சத்துணியில் காணிக்கையை முடிஞ்சுப் போடு, அதை வச்சு சண்முகத்துக்கிட்ட சின்னப் படம் இருக்கும், அதையும் வச்சு சாமி கும்பிடுவோம்." என்றார். அதன்படி சிவகுரு குடும்பமும், பொங்கல் வைத்துப் படைத்து, அழைப்பிதழ் வைத்துக் கும்பிட்டனர்.
முதல் அழைப்பிதழைக் குலதெய்வத்துக்கு வைத்து விட்டு, அடுத்து தாய்மாமன் வீட்டுக்கு, அவர்கள் தங்கியிருப்பதே, ராத்தோட் மேன்சன் என்பதால், முதலில் தாதாஷா, தாதிஷாவிற்குத் தாத்தா அப்பத்தா தாம்பூலத்தில் பழங்கள் ஸ்வீட் வைத்து, வெற்றிலைப் பாக்குப் பணம் ஒரு கட்டு வைத்து, வெள்ளிக் குங்குமச் சிமிழில் குங்குமம் வைத்து, "எங்கள் மகன் வழிப் பேத்திக்குக் கல்யாணம் வைத்திருக்கிறோம், வந்து சிறப்பித்துக் கொடுங்கள்." எனக் கூறி நீட்டினர். அவர்களும் சந்தோஷமாகப் பெற்றுக் கொண்டனர்.
அதேபோல் தட்டை, ராகினி சிவகுரு, ராஜேன்-ஷப்னம், கஜேன்-ஸர்குன், அமரேன்-பூனத்திற்கும் வைத்து முறைப்படி அழைத்தனர். ஹரிணி அமர்சிங் ஜோடிக்கும் பத்திரிகை வைத்தனர். முருகானந்தம்-சுந்தரவள்ளி, மகன்கள் சங்கரப் பாண்டி, சந்தனப் பாண்டி ஆகியோருக்கும் பணம்-பாக்கு வைத்தனர்.
ராத்தோட்ஸ், சௌஹான் குடும்பத்துக்கு ந்யோதா- அழைப்பிதழ் வைக்கச் செல்லும் முன், தமிழ் முறைப்படி முகூர்த்தக் கால் ஊன்றினார்கள்.
மாப்பிள்ளை வீட்டினரையும் அழைத்து, வீட்டின் நுழைவாயில் பகுதியில், சிமிண்டைப் பெயர்த்து, ஓர் குழி தோண்டினர், அதில் நவரத்தினம் நவதானியங்கள் போட்டு, மூங்கில் கம்பில் வெள்ளைக் காவி பட்டை அடித்து, மாவிலை கட்டி , ரகுவீர், ஹரிணி, சங்கரப்பாண்டி அவன் மனைவி , சிவகாமிப் பாட்டி, அமிர்தா, ஹாசினி எனக் கலவையாக ஏழு பேர் பிடிக்க முகூர்த்தக் கால் ஊன்றினர். பால் ஊற்றி பூ, சந்தனம், குங்குமமும் வைத்தனர்.
முகூர்த்த நெல் அள்ளிப் போடும் சடங்கு. இதிலும் அப்பத்தா சிவகாமியின் வழிகாட்டலில் மூன்று பானைகள் வரிசையாக வைக்கப்பட்டு, அரிசி அள்ளிப் போட சொன்னார். ஜானகி முதலில் செய்யட்டும் என ரகுவீர் சொல்லவும், அன்னபூரணி தாயை நினைத்து ஜானகி ஒவ்வொரு பானையிலும் மூன்று கை அரிசி அள்ளிப் போட்டால். அதைப் பார்த்துப் படித்து ரகுவீர் அதே போல் செய்தான். அவனைத் தொடர்ந்து, குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பானை நிறைத்து வழிய அரிசி அள்ளிப் போட்டனர்.
அப்பத்தா இதற்கான விளக்கத்தைச் சொல்ல, ராகினி மொழி பெயர்த்தார். ராத்தோட்ஸ், சௌஹான் செகாவத், டாக்கூர் குடும்பங்களுக்கு அழைப்பிதழ் வைக்கக் கிளம்பினர்.
சுந்தரவள்ளி, மாலையில் ஜானகிக்கு நாள் வைப்பதற்காகத் தேவையான சீர் வாங்க, குடும்பத்தோடு வெளியே சென்றார்.
சிவமாளிகை குடும்பத்தினர் மட்டும் இருக்க, அவர்களோடு மேல் தளத்தில் இருந்தாள் ஜானகி. ரகுவீர் லேப்டாப்புடன், அமுதன், பாலனிடம் வந்து அமர்ந்து கொண்டான். முக்காடு இல்லாமல், இயல்பாக இருப்பவள், ரகுவீர் சத்தம் கேட்கவும், அவசரமாகத் துப்பட்டாவைப் போட்டுக் கொள்வாள். காலையிலிருந்து அவர்களுக்கு மத்தியில் இந்த விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது.
ரகுவீர் வேண்டுமென்றே சத்தமில்லாமல் வந்து நிற்பான். சில நேரம் குரல் மட்டும் கொடுத்து, வராமல் இருப்பான். விதவிதமாக அவளை வம்பிலுத்து, எந்நேரமும் அவனைப் பற்றியே ஜானகியை யோசிக்க வைத்தான். வீட்டில் அனைவருக்கும் அவர்களின்,இந்த விளையாட்டுத் தெரியும், அவ்வப்போது, அவர்களும் இதில் கலந்துக் கொள்வார்கள். சாதாரணமாகத் துப்பட்டாவைத் தூக்கி அலைவதையே விரும்பாதவள் ஜானகி. இது பெரும் அவஸ்தையாக இருந்தது.
ஓரிடத்தில் ரகுவீர் அவளிடம் தனியாக மாட்டினான், இருவரும் திரும்பி நின்றுக் கொண்டனர். வைத்து வகையாகச் செய்தாள் ஜானகி, "வீரூஜி நான் தான் தோற்றுப் போனேன், என் முகத்தைப் பார்த்துக்குங்க நீங்க." என்றாள்.
"அதெல்லாம் முடியாது, தாதிஷா கட்டளை மீற மாட்டேன். மாஷா என் மேல் கோபப்பட்டு எமோசனல் ஆகி நோ சான்ஸ்." என்றான்.
இப்படியே பேச்சுக் கொடுத்துக் கொண்டே, சங்கரப்பாண்டி மகள், லிப்ஸ்டிக் போட்டு விட்டு வைத்துச் சென்றதை தன் இரு விரல்களில் உதடு போல் வரைந்தவள், அவன் முன்னாடி வரவும் கண்ணை இறுக்கி மூடிக் கொண்டான், காலையில் ப்ராமிஸ் வாங்கியது ஜானகி ஆச்சே. அவளுக்கும் தெரியும், அவன் பார்க்க மாட்டான் என்பது, எனவே முக்காட்டோடு வந்தவள், லிப்ஸ்டிக் விரலை அவன் முகத்தை உயர்த்துவது போல் பாவனைச் செய்து கழுத்தில் பதித்து விட்டாள், சாதாரணமாகப் பார்த்தால் தெரியாது, அவன் திரும்பும் போது தெரியும்.
"இனிமே என்னை டார்ச்சர் பண்ணுவிங்களா? சும்மா சும்மா வரக் கூடாது." என மிரட்டி விட்டு நகர்ந்தாள்.
பழைய ஜானகி திரும்பி வரும் திருப்தியுடன் ஹாலுக்கு வந்தான், தெய்வாவிடம் திக்கித் திணறி, அவருக்குப் புரிய வைத்துப் பேசி விட்டுக் கிளம்பும் போது, "தம்பி." எனத் தெய்வா அழைக்க, அவனுக்குப் பின்னால் நின்று ஜானகி, "உஸ்" என உதட்டின் மேல் விரல் வைத்துச் சைகை செய்தாள். இத்தனை நாள் கழித்து மகளின் உற்சாகம் பார்த்து தெய்வா அமைதியானாள்.
ரகுவீர் திரும்பி என்னவெனக் கேட்கவும், "குச் நஹி." என்றார். ரகுவீர் அவர் ஹிந்தியில் சிரித்து நகர்ந்தான். எதிரே வந்தவர் எல்லாம் ஏதோ சொல்லப் போக, ஜானகி பின்னால் இருந்து அபிநயம் பிடிப்பாள்
ரகுவீர், லேப்டாப்பை தன் அறையில் வைத்து விட்டு, மதிய உணவுக்குக் கீழே வந்த நேரம், பத்திரிகை வைக்கச் சென்றவர்கள் வந்திருந்தனர். எல்லாரும் அப்பாடா என ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்த போது ஷப்னம் தான் முதலில் ரகுவீர் கழுத்தில் லிப்ஸ்டிக் கரையைப் பார்த்தார்.
"ரகுவி, என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிற, உன் நன்மைக்குத் தானே சொல்றேன். சில ரீத்தி ரிவாஸ் பெரியவர்கள் சொல்றதைக் கேட்டா என்ன?" என்றார் ஷப்னம்.
"மாஷா, நான் என்ன பண்ணேன்?" என்றான் ரகுவீர். "இங்க பாரு, பூனம் உன் பாஞ்சாவுக்கு நீயே சொல்லு." என்றார் ஷப்னம்.
"ரகுவீர், இது சரியில்லை, உன் லக்கு, ஜானி இதே வீட்டில் இருக்கா. நாங்கல்லாம் ஷாதி பேசிட்டா குறைந்தது 21 நாள் பார்த்துக்கொள்ள மாட்டோம். இரண்டு நாள் பொறுத்துக் கொள் ரகுவீ." என்றார் பூனம்.
ஸர்குன் வந்தவர், "ரகுவீ, நீ என்ன ரன்வீர் மாதிரி விளையாட்டுப் பிள்ளையா, நீயே இப்படிப் பண்ணுனா, உன் தம்பிகள் எப்படிக் கேட்பார்கள்." என்றார்.
'இவன் இதற்குச் சரிப்பட்டு வரமாட்டான்' என்ற வடிவேல் ஜோக் மாதிரி எதுக்குன்னு தெரியாமல் அம்மாக்களிடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்தான். ஜானகி உற்சாகமாக அவள் அறையில் கதவை நீக்கி வைத்து, ரகுவீர் திட்டு வாங்குவதை ரசித்துக் கொண்டிருந்தாள். மயூரி, மஞ்சரி கதவைத் தள்ளிக் கொண்டு வந்தனர். இவள் சிரிப்பையும், ரகுவீர் திருடன் போல் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்த மயூரி, "ஜானி என்னடி செய்த?" என்றாள்.
"நான் என்ன செய்தேன். ஒண்ணுமே இல்லையே!" என்றாள். மஞ்சரி வெளியே காதைத் தீட்டிக் கேட்டவள், ஆர்வம் தாங்காமல் நேரே என்னவெனத் தன் மாமிஷாக்களிடம் கேட்டாள்.
"நீதானே கேளு உன் ஜேட்ஷாவை." என அவனை நோக்கி பூனம் கைக் காட்டினார். கழுத்தில் லிப்ஸ்டிக் தடம் பார்த்துச் சிரித்தாள் அதற்குள் டோட்டல் குடும்பமும், சிவமாளிகை வாசிகளும் சிரிப்போடு வந்தனர்.
ராகினி தான், "எல்லாரும் சும்மா இருங்க, என் வீரு சொன்ன வாக்கு மீற மாட்டான். இது அவள் வேலையாக இருக்கும்." என்றார்.
"என்ன புவாஷா, எது?" என்றான். ஒரு கண்ணாடியைக் கொண்டு வந்து காட்டினாள் மஞ்சரி. "இது." என. ரகுவீர் அப்போது தான் பார்த்தான், "மாஷா, சத்தியமா இது எப்படி வந்ததுன்னு தெரியாது." என்றான்.
ஜானகி அப்போது தான் வெளியே வந்தவள், "மாஷா நான் முக்காடு போட்டுக்கிட்டே தான் இருக்கிறேன். வீருஜி பக்கத்தில் போறதே இல்லை. இதென்ன லிப்ஸ்டிக் கரை. யாரு குடுத்தான்னு கேளுங்கள்." என்றாள் சிணுங்கியபடி.
"ஜேட்ஷா, நீங்க நிஜமாகவே ஏகபத்தினி விரதன். ஜானியைத் தவிர யாரையும் பார்க்கமாட்டீங்ஙனு பார்த்தா, இது என்ன என் பஹன்ஷாவை ஏமாத்துறீங்க." குற்றம் சாட்டினாள் மஞ்சரி.
"மாஷா, உங்கள் பஹூ இரண்டும் சரியான சீட்டர்ஸ் நம்பாதீர்கள். ராஜ் சொல்றா." என்றான் ரகுவீர்.
"ஆமாம் எனக்குக் கூடச் சந்தேகம் தான்." என ராஜ் சொல்லவும், மஞ்சரி, "என்ன சந்தேகம், யார்கிட்ட போய்க் கழுத்தில் வாங்குனாருன்னு கேள்." என்றாள்.
"மாமிஷா! ஒன்னு ஜேட்ஷா, ஜானகிட்ட லிப்ஸ்டிக் கரை வாங்கி இருந்தால், நமது சடங்கை மீறி இருக்கிறார். இல்லை ஜானகி இல்லைனா, வரம்பையே மீறி இருக்கிறார். பதில் சொல்லுங்க." என்றாள் மஞ்சரி.
ஜானகி முக்காட்டுக்குள் சிரித்தாள். மயூரி இடைப் புகுந்து, "எங்கள் பையா அப்படிக் கிடையாது. நீங்க தான் ஏதோ செய்றீங்க." என்றாள். அமுதன், பாலன், கணேஷ் முதற்கொண்டு அமைதியாக இருந்தனர்.
ராஜேன், கஜேன், அமரேன், "ரகுவீ, சின்ன வயதில் எல்லாம் நடக்கிறது தான். இனிமே ஜானியைப் பார்க்காத." எனத் தீர்ப்பு தந்தனர். ரகுவீர், ஜானகியையே பார்த்தவன், அவள் சிரிப்பைக் கண்டு கொண்டான். அவள் கையைப் பார்த்தவன், "மாஷா, உங்கள் பஹூராணி கையில் எறும்பு ஊறுகிறது தட்டி விடுங்க." என்றான்.
ஷப்னம் பதறி, "எங்கடா?" எனக் கையைப் பிடிக்க, லிப்ஸ்டிக் கரை அவள் கைகளில் இருந்தது. "மாஷா, அதே லிப்ஸ்டிக் கரை தான் இங்கயுமா, பார்த்துச் சொல்லுங்கள்." என்றான் ரகுவீர். "சோரி ஔர் சோர்னி பகட்கையீ." என்றான் ரகுவீர்.
"ஜானி, எதற்கு இப்படிச் செஞ்ச?" என்றார் ஷப்னம்.
"மாஷா, உங்கள் லாட்லா என்னை என்ன பண்றார் தெரியுமா, நானே இந்த வெயிலில் கஷ்டப்பட்டு முக்காடு போட்டிருக்கிறேன். கொஞ்சம் நேரம் ப்ரீயா முக்காடு இல்லாமல் இருக்க விடமாட்டேங்குறார். சத்தமா பேசுவார், நான் வேகமாப் போடுவேன் இவர் வேற பக்கம் போறது, இல்லைனா சத்தமே இல்லாமல் வந்து நிற்கிறது. நான் என்ன பண்றது சொல்லுங்கள்?" என யசோதையிடம் முறையிடும் ராதையாக மாறினாள்.
"ரகுவீ, என் பஹூவை ஏன் இப்படிக் கலாட்டா பண்ற, உனக்காகத் தானே முக்காடு போட்டு இருக்கா." என்றார் ஷப்னம். "மாஷா, கேட்டு சொல்லுங்க, நான் இரண்டு நாள் பல்லா மாமாஜீ வீட்டில் இருந்துக்குறேன். இல்லைனா ஏதாவது சர்வீஸ் ஹவுஸ் பாருங்கள் அப்பா." எனச் சிவகுருவிடம் தாவினாள்.
"அதெல்லாம் முடியாது ஜான்வி, நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ." என்றான் ரகுவீர். "யாராவது எனக்குச் சப்போர்ட் பண்றீங்களா? உங்கள் ஷாதி பொண்ணு வீட்டில் தானே நடக்கும், அப்பச் சிறுமலைக்கு வந்து பொண்ணு கட்டுங்கள். இல்லைனா இப்படியே இருந்துட்டுப் போகிறேன். சம்முப்பா நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போங்க." என ட்ராக் மாறி எமோசனல் ஆனாள்.
"ஜான்வி, செஞ்ச தப்பை மறைக்க நல்ல ட்ரிக் தான்." என்றான் ரகுவீர். "ஆமாம் உங்களுக்கு ட்ரிக்காகத் தான் தெரியும். எனக்குத் தலை எல்லாம் வலிக்கிறது போங்க வீருஜி!" என்றபடி அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டாள்.
"ஜானு, ஜானும்மா கதவைத் திறடா. மாப்பிள்ளை சும்மா விளையாட்டுக்கு செய்கிறதுக்குக் கோபப்படலாமா?" எனப் பின்னாடியே போய்ச் சமாதானம் பேசிக் கொண்டிருந்தார் சிவகுரு.
"ரகுவி, நீ வா சாப்பிட, அவள் ஒரு பாகல் கைகி, அவங்க அப்பா தான் அவளுக்குச் சரி." என ராகினி ரகுவீரை சாப்பிட அழைத்தார். "நீ உன் வீரூவுக்கே சப்போர்ட் பண்ணு, அவளுக்கு முக்காடுப் போட்டே பழக்கம் இல்லை, பாவம்டா ஜானி. நீ என்ன பண்ணுவியோ தெரியாது. அவள் சமாதானம் ஆகனும்." என்றார் ஷப்னம்.
ரகுவீர், அவள் உள்ளே சென்று கதவை அடைத்ததில் பயந்து கொண்டிருந்தான். வேகமாக அந்த அறையை நோக்கிச் சென்றவன் ஜானகியைக் கூப்பிட்டான். அமுதனும் வந்து கதவைத் தட்டினான். அவள் சத்தமே கொடுக்கவில்லை.
"ரகுவீ, அவள் வேணும்னு செய்வா." என்றார் ராகினி. சிவகுருவுக்குக் கோபம் வந்தது. அவர் பேசும் முன் ரகுவீர் கத்தினான். "புரியாமல் பேசாதீங்க புவாஷா, அவளை இப்படி விடக் கூடாது." எனப் பதறியவன் கதவு சாவி துவாரம் வழியாகப் பார்க்க முயன்றான்.
"ஜான்வி கதவைத் திறடி இல்லனா கதவை உடைப்பேன்." என எச்சரித்தான். பதில் இல்லை.
"பூஃபாஷா அந்தப் பக்கம் பெரிய விண்டோ இருக்குது." எனப் பதறியவன் கதவை பலம் கொண்ட மட்டும் இடிக்க ஆரம்பித்தான். ஸ்பேர் கீ கொண்டு திறந்தாலும் உள் தாழ்ப்பாள் போட்டிருந்தாள். ஜானு, ஜானும்மா என மாமனார் மருமகன் கதறி விட்டனர்.
ரகுவீர் மோதுவதைப் பார்த்து அமுதன், ராஜ்வீர், பாலன் எல்லாரும் அவனோடு சேர்ந்து மோதக் கதவு திறந்து கொண்டது. உள்ளே கட்டிலுக்கு முன்னால் ஜானகி மயக்கமாக முக்காடு போர்த்தியபடி கிடந்தாள்.
அவளைப் பார்த்து ரகுவீர் ஒரே தாவில் அவளருகில் சென்று, அவளைத் தூக்கி மடியில் கிடத்தினான். சிவகுரு அருகில் வந்து மகளைத் தாங்கிக் கொண்டவர், "மாப்பிள்ளை நகருங்கள், கண் முழிக்கும் போது உங்களைப் பார்த்தால் அதுக்கும் சங்கடப்படுவா!" என மகளைத் தன் மடியில் ஏந்திக் கொண்டார். சுற்றி நின்றவர்களை நான் பார்த்துக்குறேன் ப்ளீஸ் என்றார்
அமுதன் தண்ணீர் எடுத்து வந்து நீட்டவும், அதனைத் தொட்டு மகளின் கண்களைத் துடைத்தார். "ஜானும்மா ஜானு அப்பாவை பாருடா." எனக் கன்னம் தட்டி எழுப்பினார். ரகுவீர் அவள் கண் பார்வையிலிருந்து மறைந்து நின்றான். ராகினி பிரம்மை பிடித்தது போல் நின்றார்.
அப்பத்தா மற்றும் தெய்வா அறைக்குள் வந்தார்கள், சிவகாமி சிவகுருவிடமிருந்து ஜானகியைத் தன் மடிக்கு மாற்றிக் கொண்டு, கொஞ்சம் தண்ணீர் எடுத்து சடக்கென முகத்தில் அடித்தார். ஜானகி கண்ணை மூடியபடியே சுருக்கினாள், மற்றவர்களை ஒண்ணும் இல்லை போங்க எனச் சைகை காட்டி அனுப்பி விட்டு தன் சேலைத் தலைப்புக் கொண்டு அவள் முகம் துடைத்தார். அப்பத்தாவின் ஸ்பரிசம் அவளை எட்டியது. மெல்லக் கண் விழித்தாள் ஜானகி.அவசரமாக முக்காட்டைத் தேடினாள்.
"கிறுக்குப் பய மகளே! அதை விடு. நானும் போனால் போகுதுன்னு பார்த்தால் ரொம்பப் பண்றீங்க. ஆத்தா தெய்வா, நல்ல கத்தரிக்காய் முருங்கைக் காய் காரக் குழம்பு, அப்பளம் இன்னைக்கு வச்ச கூட்டு எல்லாம் வச்சுத் தட்டில் எடுத்துட்டு வா. சாப்பிடாமல் கிடந்தால் மயக்கம் போட்டு விழாமல் என்ன செய்வாங்க." எனக் கொஞ்சம் தண்ணீரைக் கொடுத்துப் பருக வைத்தார். கொஞ்சம் தெளிந்தவள், தலை வலித்தது, தலை சுற்றி விழுந்துட்டேனோ என யோசித்தாள்.
அவளை எழுப்பி ஷோபாவில் உட்கார வைத்து தானும் உட்கார்ந்தவர், "ஆமாம் மாப்பிள்ளை கழுத்தில் நீயா லிஸ்பிக்கை வரைஞ்ச?" என்றார்.
"அப்பத்தா, அது லிப்ஸ்டிக், நான் தான் வரைஞ்சேன் நீ பார்த்தியா?" எனக் கேட்டாள். "எனக்குச் சந்தேகமா இருக்கே, கைல வரைஞ்சியா இல்லை..." என அப்பத்தா இழுக்கவும். "நீ ஒரு விவஸ்தை கெட்ட அப்பத்தா, பேத்திக் கிட்ட எதைப் பேசனும்னு தெரியாது." என்றாள் ஜானகி.
தெய்வா கொண்டு வந்ததை, ஊர்க் கதையெல்லாம் சொல்லி, பேத்தியைச் சாப்பிட வைத்தார்.
"நீ மாத்திரையைப் போட்டப் பிறகு மாடிக்கு போயிடுவோம். நம்ம இருக்கிற இரண்டு மாடியும் பொண்ணு வீட்டுக்கு. சமையல் சாப்பாடு, விசேசம் எல்லாம் தனித் தனியா வச்சுக்குவோம். நீயும் நானும் மட்டும் அங்கேயே இருந்துக்குவோம் சரியா?" என்றார் சிவகாமி.
"இந்த டீல் நல்லா இருக்கு, அப்போ இந்த முக்காடு வேண்டாம்." என்றாள்.
"ஆமாம் வேண்டாம், மாப்பிள்ளையையும் பார்க்க வரக்கூடாதுன்னு சொல்லிடுவோம்." எனச் சிவகாமி சொல்லவும் பேத்திக்கு முகம் போன போக்கு சரியில்லை.
"அடியே, இரண்டு நாள் பார்க்காமல் இருந்து தவிச்ச பிறகு பார்க்கிறது சுவாரஸ்யமா இருக்கும். நீயும் அனுபவி. நமக்குன்னு கெத்து வேண்டாமா, இனிப்பே திண்ணுகிட்டு இருந்தால் திகட்டும். அப்பப்ப மிளகாய் வேண்டும்." என அப்பத்தா வாழ்க்கை பாடம் நடத்தினார் பேத்திக்கு.
சிவகாமி, மயூராதேவியிடம் சொல்லி விட்டு, பேத்தியை தன்னுடன் இருத்திக் கொண்டார். அவர் சென்ற பின்னர்த் தலையைப் பிடித்துக் கொண்டிருந்த ரகுவீரிடம் வீட்டினர் பேசினர். அவனும் மௌனம் கலைத்து, கடத்தலின் விளைவாக மன பாதிப்பு ஏற்பட்டு உள்ளது எனத் தெரிவித்தான்.
"அப்ப ஷாதியை தள்ளி வைப்பமா ரகுவி?" என்றார் ஷப்னம்.
"இல்லை மாஷா, கட்டாயம் ஷாதி நடக்கனும், அதுதான் அவளை மாற்றும் மருந்து. இப்ப நான் அவளை விட்டுட்டா எப்பவுமே எனக்குக் கிடைக்கவே மாட்டாள்." என்றான்.
"இப்ப என்ன செய்யலாம், மன அழுத்தம் இருக்கும் போது, இத்தனை சடங்குகள் தேவையா. அதிகப்படியா தெரியுது ரகுவி." என்றார் ராஜேன்.
"பாயீஷா சொல்றதும் சரிதான் ரகுவி, முக்கியமான சடங்கு மட்டும் செய்வோம்." என்றார் கஜேன். "ஜானி, ஹெல்த்தை விட வேற எதுவுமே முக்கியம் இல்லை ரகுவி, அவளைக் கஷ்டப்படுத்தி எதற்குச் செய்யனும்." என்றார் அமரேன்.
"நான் டாக்டரை கேட்டு தான் செய்தேன் பாபுஷா, தன்னை மறந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகிட்டா அவளுடைய தற்போதைய மனநிலை மாறும்னு நினைச்சேன்." என்றான் ரகுவீர்.
சிவகுரு, "மாப்பிள்ளை சொல்றது எனக்கும் சரின்னு படுது சம்பந்தி, கொஞ்சம் ஸ்ரஸ்ஸை குறைப்போம், கட்டுப்பாட்டைத் தளர்த்தலாம். நான் மாடியில் வச்சுக்குறேன் நீங்க கீழே இருங்கள். எங்கள் அம்மா பேசியே சமாளிப்பாங்க. அவர்கள் வளர்ப்பு ஜானகி, அதனால் அவர்கள் ஹேண்டில் பண்ணிக்குவாங்க, நம்ம மற்ற வேலையைப் பார்ப்போம். அவள் வரவேண்டிய கட்டாயம் இருந்தால் கூப்பிட்டுக்குவோம்." என்றார்.
ராகினி அப்படியே இருந்தவரிடம் வந்த சிவகுரு, "சாப்பாடு எடுத்து வைமா." என்றார். "சிவா நான் நல்ல அம்மா இல்லையா, என் மகள் எப்படி இருக்கான்னு கூட எனக்குத் தெரியலையே, உங்ககிட்ட அத்தை கிட்ட எப்படி இருக்கா, என்கிட்ட அதுமாதிரி ஏன் இல்லை?" என்றார் ராகினி.
"ஏன்னா ஜானும்மாவோ அமுதனோ நீ அவர்களுக்கு அம்மாவா பார்த்துக்கிட்டதை விட, அவர்கள் உன்னை மகளாட்டம், நீ மனசு கஷ்டப்படக் கூடாது, உன்னைச் சந்தோஷமா வச்சுக்கனும்னு யோசிச்சாங்க. நீ உன் அம்மா வீட்டில் இருப்பது தான் அதற்கான நிரூபணம்." என்றார் சிவகுரு.
"நான் என் பிறந்த வீட்டு ஏக்கத்தை அவ்வளவு காட்டிட்டேனா?" என்றார் ராகினி.
"இல்லை மா, நீ எங்கள் மத்தியில் இருக்கும் போது சங்கடப்படக் கூடாதுன்னு , நாங்கள் உன்னைப் பார்த்துக்கொண்டோம்." என்றார் சிவகுரு.
"புவாஷா, சாரி உங்கமேலேயே கோபப் பட்டுட்டேன்." என வருந்தினான் ரகுவீர்.
"இல்லை வீரு, நீ இந்தச் சொற்ப நாட்களில் அவளைப் புரிஞ்கிட்டது அளவு கூட நான் புரிஞ்சுக்கலை." என ராகினி ஆதங்கப்பட்டார்.
"உன் சோகத்தைக் காட்டாத ஸ்வர்ணி, மாப்பிள்ளை இன்னும் சாப்பிடலை, யார் யார் சாப்பிடாதவங்கன்னு பார்த்து கூட்டிட்டு வா. கல்யாண வீடு கலகலன்னு இருக்கனும்." என்றார் சிவகுரு. ஜானகி கல்யாணம் நடக்கும் முன் வேறு ஏதேனும் தடை வருமா, அவளே தடையாகிப் போவாளா, எல்லாம் கடந்து ரகுவீரின் ஜானகியாவது சாத்தியமா? பொறுத்திருந்து பார்ப்போம்.