Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு 57- மாமன் சீர்.

வகைகள் : களஞ்சியம்/

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


களஞ்சியம்

57- மாமன் சீர்.

57- மாமன் சீர்.

 இந்தியத் திருமணங்களில், தாய்மாமனுக்கு என்று முக்கியமான ஸ்தானம் வழங்கப்படுகிறது. ஆணோ, பெண்ணோ, அவர்களுடைய ஜாதகம் பார்க்க ஆரம்பித்திலிருந்து மாமனுக்கு விவரத்தைச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். தாய் மாமன் வீட்டில் முறைப் பையனோ, பெண்ணோ இருந்தால், அவர்கள் விருப்பம் அறிந்த பின்னர், சம்பந்தம் செய்யாத பட்சத்தில் தகுந்த காரணங்களைச் சொல்லி சமாதானம் செய்த பின்னரே வேறு பக்கம் பேசுவார்கள்.

 மாலை நேரம், 'மாய்ரா தஸ்தூர்' எனப்படும் மாமன் சீர் செய்ய சௌஹான்கள் வரும் முன்னர், ராத்தோட்ஸ், ராகினி குடும்பத்திற்கு, சம்பந்தி சுருள் எனத் தமிழில் சொல்லப்படும் பத்திரிகை வைத்து அழைத்தல் மற்றும் சிவகுருவுக்கு  அவர்கள் ஜமாயீஷாவுக்கான அழைப்பிதழ் கொடுக்க வந்தனர்.

 

பெரியவர்கள் எல்லாரும், பரிசுப் பொருட்கள் கூடிய தட்டுடன், தாத்தா சிவபரங்கிரி அவர்களுக்குப் பத்திரிகை வைத்தனர். முறையாகச் சிவகுரு, சண்முகம், முருகானந்தம் அவரது மகன்கள் என எல்லாருக்கும் வைத்தனர்.

 மேல் தளத்தில், அத்தை முறைக்குச் சுந்தரவள்ளி ஜானகிக்குச் சீர் 'நாள்ட்' வைக்கிறார். இந்தச் சடங்குகளை ஜானகியின் உடல் நலம் கருதி சுருக்கமாகச் செய்கின்றனர்.

 அமிர்தா, தூங்கி எழுந்த ஜானகியிடம் வந்து, அழகிய கத்திரிப்பூ அடர் வண்ணப்பட்டுப் படவையை உடுத்த சொன்னாள். அப்பத்தா சிவகாமி, ஜானகிக்குத் தளரப் பின்னி தலை நிறைய மல்லிகைப் பூவை வைத்தார். அமிர்தா மிதமான ஒப்பனை செய்து அழகு ஓவியமாக ஜானகியை மாற்றினாள். குடை ஜிமிக்கி, நெக்லஸ் ஆரம் கை நிறைய வளையல்கள் எனத் தங்கத்தில் நிறைத்தனர். காலில் வெள்ளிக் கொலுசு அவள் நடையழகை ஜதி சொல்லி அறிவித்துக் கொண்டே வந்தது.

 குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கூடினர். சுந்தரவள்ளி சீர் பரப்பி விட்டு வந்தார். "என்ன வள்ளி ஊமை மாதிரி நின்னுகிட்டு எதற்கு வந்திருக்கேன்னு சொல்லு." என்றார் சிவகாமி. நாள் வைத்து சீரோடு சாப்பாடு செய்து போடுவது மாமன், அத்தை வீட்டுப் பழக்கம். அதற்கும் வந்து முறையாக அழைத்துச் செல்ல வேண்டும். அதற்காகத் தான் சிவகாமி அப்படிக் கேட்டார்.

 "என் அண்ணன் மகள் ஜானகிக்கு அத்தை முறை சீர் செய்ய வந்திருக்கிறேன், அப்பா,அம்மா, அண்ணன், அண்ணி, தம்பி, தெய்வா மருமகப் புள்ளைங்களா எல்லாரும் வாங்க." என முறைப்படி அழைப்பு விடுத்தார். "அப்படி வாயைத் திறந்துச் சொல்லு, அப்பத்தானே எல்லாருக்கும் தெரியும்." என்றார். சிவபரங்கிரி ஐயாவும்.

 அதே நேரம், ராத்தோட்ஸ் அனைவரும் ரகுவீரை தவிர்த்து மற்றவர் மேலே வந்தனர். ஜானகிக்கான சீர் தட்டு, அதுவும் அவர்களைப் போலவே ரிப்பன் சுற்றி அழகாக வந்தது.அத்தை வைத்திருந்த சீருக்குப் பின்னால் அதனை வைத்தனர். சிவமாளிகைகாரர்களும் முறைப்படி வரவேற்றனர்.

 சுந்தரவள்ளிக்கு முகம் சுருங்கியது, 'இத்தனை நாளாக நாம் முதல் உரிமையாகச் செய்தோம்,இப்போது இவர்கள் வந்து விட்டனரே ' என மனதில் நினைத்தார். ராகினக்கு நாத்தனாரின் மன ஓட்டம் புரிந்தது. ஜானகியைக் கண்ட ராத்தோட்கள் அவளின் தமிழ் பெண் அலங்காரத்தில் அசந்தனர்.

 

மேல் தளத்து ஹாலில், நடுவில் சேர் போடப்பட்டு அதற்கு முன்னால் தட்டுகள் அடுக்கப்பட்டிருந்தது. ஆலயத்தில் கொழுவிருக்கும் அழகுச் சிலையென ஜானகி வீற்றிருந்தாள்.

 தாதிஷா முன்னால் வந்து 'காலாடீக்கா' தன் கண் மையில் தொட்டு காதுக்குப் பின்புறம் வைத்தார். மாமன் வீடு வரும் போது அவர்களுக்குத்தான் முன்னுரிமை, இது காலம் காலமான நடை முறை.

 தாதிஷா, சுந்தரவள்ளியின் முகத்தைப் பார்த்து, சூழ்நிலை அறிந்து கொண்டார். "ஸ்வரு, உன் நாத்தனார் முதல் முறையைச் செய்யட்டும், இவ்வளவு நாள் ஜானிக்கு மாமன் முறையை அவர்கள் தானே செய்தாங்க. நாங்கள் இல்லாத குறையைத் தீர்த்த உன் நாத்தனார், அவர் கணவருக்குக் கடமைப் பட்டு இருக்கிறோம்." என்றார்.

ராகினி தன் தாய் சொன்னதை மொழிப் பெயர்த்தார். அத்தையம்மாவும் சந்தோஷமாக வந்தார். முருகானந்தம் வந்து ரோஜாப்பூ மாலையைப் போட்டார். சுந்தரவள்ளி சந்தனத்தைத் தொட்டு ஜானகியின் கையில் நலுங்கிட்டு, இரு கன்னங்களிலும் தடவினார். குங்குமத்தை நெற்றியில் வைத்து விட்டு, தாம்பூலத் தட்டைத் தூக்கி ஜானகி கைத் தொடவும், தெய்வா வந்து வாங்கிக் கொண்டார்.

அவள் தலையில் அட்சதை தூவி, "ஜானகியம்மா, நிறைஞ்ச வாழ்க்கை வாழனும்." பட்டுச் சேலை ஒரு நெக்லஸ் வைத்துக் கொடுத்தனர், அத்தையும் மாமனும். அடுத்துச் சங்கரப் பாண்டி மனைவியுடன் வந்தான். அவன் மனைவி கவிதா நலங்கு வைத்தாள். சீர் தட்டிலிருந்த வெள்ளிக் குத்துவிளக்கு இரண்டை அவளுக்குப் பரிசாகத் தந்தனர். "ஜானகி, இனிமே எங்களை வம்பிழுக்க உனக்கு நேரம் இருக்காது, அது தான் தம்பி வந்துட்டாரில்லை." என்றான் பாண்டி. 

"அத்தான், அப்படியெல்லாம் சந்தோஷப் படாதீங்க. வீருஜி வேலைனு வந்துட்டா, இராத்திரி பகல் பார்க்காமல் செய்வாங்க. வீட்டுக்கு வர்றதுக்கு 11மணியாகும். அதுவரை எனக்குப் பொழுது போகனுமே கட்டாயம் போன் பண்ணுவேன்." என்றாள் ஜானகி. எல்லாரும் சிரித்தனர்.

பாலன், "அத்தான், ஜானகியை பிஸியா வச்சுக்கச் சொல்லி, ரகுவீர் அத்தான் கூட டீல் போட்டுடுங்க." என்றான்.

 அடுத்து சந்தன பாண்டி அவன் மனைவி சித்ரா வந்து நலுங்கு வைத்தனர். மற்ற வெள்ளிப் பொருட்கள் உள்ள தட்டை தூக்கிக் கொடுத்து விட்டு, "பாலா, நாங்கள் தட்டில், நுழைந்தால் உன் தங்கச்சி கோலத்தில் நுழைவாளே!" எனக் கலாய்த்தான்.

 அடுத்து ராத்தோட்கள், இதே போல் சந்தனம் தடவி நலங்கு வைத்தனர். ஷப்னம், ஜானகிக்கு முத்தம் கொடுத்தவர், "யார் கண்ணும் படாமல் இருக்கனும் என் பஹுராணிக்கு." எனக் கண் கலங்கினார். அதற்குப் பின் கஜேந்தர், ஸர்குன் நலங்கு பூசி, அவளுக்கென டிசைன் செய்யப்பட்ட லஹங்காவைக் கொடுத்து, அதற்கேற்ற நகைகளும் இருந்தது."இது மெஹந்திக்கு போட்டுக்கனும், சரியா?" என அவளை அணைத்துக் கொண்டனர்.

 அமரேன், பூனம் சங்கீத் நிகழ்ச்சிக்கான வெஸ்டர்ன் கவுன் நகை கொடுத்தனர். அமரேனும் மருமகளுக்கு நலங்கு வைத்தார். "இதென்ன நீங்களுமா?" எனப் பூனம் கேட்டார். "என்னுடைய டார்லிங்குக்கு நான் செய்யறேன், என்னடாம்மா?" என்றார்.

கண்கள் பனிக்க, "ஆமாம் டார்லிங்க்!" என்றாள் ஜானகி. மயூரி, அமிர்தாவையும் நலங்கு வைக்கச் சொன்னார்கள். அவர்கள் தங்கள் தோழிக்கு வைக்கும் போதே, மஞ்சரியும் வந்து சேர்ந்தாள். "நானும் வைப்பேன்." என நலங்கு வைத்துப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

 ரன்வீர் வந்து மாமன் வீட்டினர் வந்ததைச் சொல்லவும், ராத்தோட்ஸ் கிளம்பினர். கணேஷ் அனைத்தையும், ரகுவீர் தந்த கேமராவில் படம் பிடித்தான். ஒவ்வொரு குடும்பமாக ஜானகியுடன் வைத்துப் போட்டோ எடுத்தான்.

 மயூரி, அமுதன் இருக்குமிடம் வந்தாள், அவர்களுக்கு இடம் கொடுத்து பாலன் நகர்ந்தான். "அமுதன்." என மயூரி வந்தாள். அவளைத் தலை அசைவோடு வா என்றான். அவன் கையைப் பிடித்து மயூரி, "ஜானி சீக்கிரம் சரியாயிடுவா. கவலைப்படாதீங்க." என்றாள்.

"அவள் கஷ்டப்படுறதைப் பார்த்தும் ஒண்ணும் செய்ய முடியலை." எனக் கண் கலங்கினான்.

"நம்ம சப்போர்ட் தான் அவளுக்கு ரொம்ப முக்கியம். நீங்க மனசு விட்டுறாதீங்க." என அவனை அணைத்துச் சமாதானம் சொன்னாள். அவளோடு பேசிக் கொண்டு இருந்ததில் மனபாரம் குறைந்தது போல் உணர்ந்தான் அமுதன். மஞ்சரி வந்து, பூனம் கூப்பிடுவதாக மயூரியை அழைத்துச் சென்றாள்.

சிவகாமி, ராகினியிடம், "ஆத்தா நீ உன் மருமகனுக்கு அத்தை சீர் செஞ்சுட்டு வா. நாங்கள் ஜானகி கூட இருக்கிறோம்." என்றார்.

"சரிங்க அத்தை, அதுக்குத் தான் எடுத்து வச்சிட்டு இருக்கிறேன். தெய்வாவும் தம்பியும் எங்களோடு வரட்டும்." எனத் தயக்கமாகக் கேட்டார்.

"ஆமாம் அவர்களும் கட்டாயம் கூட்டிட்டு போ. அடே பேராண்டிகளா, நீங்களும் போய்ட்டு வாங்க. இங்கே இருக்கிறவுகளை நான் பார்த்துக்கிறேன்." என்றார் சிவகாமி.

 தெய்வா, "அத்தாச்சி இதை வாங்கிக்குங்க." எனச் சீர் தட்டை பிரித்துத் தந்தார். "இதை எங்கன கொண்டு போவேன்." என்றார் சுந்தர வள்ளி. "அதெல்லாம் முறைப்படி நாங்கள் செய்வோம், சித்ரா கவிதா வாங்க." என அவர்களுக்கும் தட்டைப் பிரித்துக் கொடுத்தார் தெய்வா.

 ஜானகிக்கு ஆரத்தி எடுத்து, ஓய்வெடுக்கச் சொல்லி ரூமிற்கு அனுப்பி வைத்தனர். ஜானகி தூங்கி எழுந்தவள், சிந்திக்க நேரமின்றி நாள் வைக்கும் வைபவம் நிறைவேறியது.

 மதியம் நடந்ததை நினைத்துப் பார்த்தாள், தான் எப்படி மயங்கினோம் என யோசித்தாள். கண்ணாடியில் தன் பிம்பத்தையும் சந்தனம் பூசிய கன்னத்தையும் பார்த்தாள். தன் கன்னத்தைப் பார்க்கவும், அன்று ராத்தோட்ஸ் ஹவேலியில், இவர்கள் மஞ்சள் பூசி விளையாடியது ஞாபகம் வந்தது. அதையே ஒவ்வொன்றாக நினைத்த மோன நிலையிலிருந்தாள்.

 அமிர்தாவின் அண்ணன் மக்கள் அங்கு உட்கார்ந்து இருந்தனர். ஜானகி மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருந்தவர்கள், கைப்பட்டு ரகுவீருக்கு வீடியோ கால் போனது. ரகுவீர் ஜானகி பெயரைப் பார்க்கவும் ஆவலாக எடுத்தான்.

வீடியோவில், தேனு, மானு தான் தெரிந்தனர். திடீரென ரகுவீர் முகத்தைப் பார்க்கவும், "ஐயோ சித்தப்பாடி." என்றாள் ஒருத்தி.

"ஆமாம்டி." என்றாள் மற்றொருத்தி.

" ஹாய் குட்டீஸ்!" என ரகுவீர் கையை ஆட்டினான்.

"ஹாய்." என்றனர். இவர்களிடம் எந்த மொழியில் பேசுவது என அவன் யோசித்தபோது.

"ஹாய் சித்தா, யூ ஆர் லுக்கிங் ஹேண்ட்சம்." என்றது தேனு.

"ஹாங், யூ நோ,வாட் இஸ் ஹேண்ட்சம்?" என்றான்.

"ம் தெரியுமே, ப்ரைடை ப்யூட்டின்னு சொன்னா, க்ரூமை ஹேண்ட்சம் சொல்லனும்." என ஆங்கிலத்தில் பேசினர்.

"ஓ அப்படியா, ஜானகி எங்கே, நீங்க அவளை எப்படிக் கூப்புடுவீங்க?" எனக் கேட்டான்.

"ஜானகி இஸ் அவர் சித்தி, சோ யூ ஆர் அவர் சித்தா!" என்றனர்.

"ஒன் சீக்ரெட், ஜானகி சித்தி இஸ் ட்ரீமிங் அபௌட் யூ!" என்றனர்.

 

ரகுவீர் கலகலவெனச் சிரித்தான். " நீங்க எப்படிக் கண்டுபிடிச்சிங்க?" என்றான். "நாங்கள் சினிமாவில் பார்த்திருக்கிறோம், சித்தி கண்ணாடியில் பார்த்து சிரிச்சிகிட்டு இருக்கு." என்றனர். அந்த நேரம் உள்ளே வந்த அமிர்தா "யாரிடம் பேசுறீங்க, அம்மா சாப்பிட கூப்பிடுறாங்க." என அனுப்பி விட்டுப் போனை வாங்கினாள். ரகுவீர் காலில் இருக்கவும், "என்ன அண்ணா, ஜானியை பார்க்கனுமா?" என்றாள்.

 "இல்லைமா வேண்டாம், அது யார் உன் அண்ணன் பொண்ணுங்களா?" என்றான். "ஆமாம், பேசினாளுங்களா செம வாய்." என்றாள்.

"ஆமாம் அவங்க சித்தி அளவுக்கு, என்னைக் கூட அது...என்ன... சித்தா ன்னு சொல்லுச்சுங்க."என்றான்.

"உங்களை எப்படிக் கூப்பிடனும்னு கேட்டதுங்க, அம்மா சொன்னதை வச்சு சொல்லியிருக்குங்க. ஜானகிகிட்ட பேசினீங்களா?"

"ஜானு என்னை நினைச்சு ட்ரீமில் இருக்காலாம். நான் ஹேண்ட்சம்மா இருக்கேனாம்." எனச் சிரித்தான்.

 "ஹிந்தி தெரியாதே, எப்படிப் பேசுச்சுங்க?" என்றாள்.

"அம்ரூ, நல்லா இங்கிலீஷ் பேசுறாங்க." என்றான்.

"ஆமாம், அவங்க ஸ்கூலும் நல்லா டெவலப் ஆயிடுச்சு. ஜானி நிஜமாகவே ட்ரீம்ல தான் இருக்கா, நான் பேசுறது கூடக் கேட்கலை, காட்டவா?" என்றாள்.

 "இல்லைமா வேண்டாம் நேரா பார்க்கக்கூடாது. வைலட் சாரியில், பூவெல்லாம் வச்சு போட்டோ பார்த்துட்டேன். கணேஷ் ஸ்பான்சர்." எனச் சிரித்தான்.

"மாஷா கூப்பிடுறாங்க. மாமாஷா வந்திருப்பாங்க. டேக் கேர்." எனப் போனை கட் செய்தான்.

 ராத்தோட்களின் முதல் சம்பந்தி, சௌஹான் குடும்பத்தினர், செகாவத் குடும்பத்தினர் வந்திருந்தனர். எல்லாரையும் ஹாலில் அமர்த்திப் பேசிக் கொண்டிருந்தனர். "ரகுவீர் ஷாதியை, இவ்வளவு அவசரமாக நடத்துவீங்கன்னு எதிர்பார்க்கவில்லை." என்றார் ப்ரத்விராஜ் சௌஹான் ரகுவீரின் நாநாஷா. "மற்ற விஷேசங்களை வீட்டில் வைத்தாலும், பாராத் மண்டபத்துக்குப் போகட்டும், முகூர்த்தம் அங்கேயே வைக்கலாம், இது ஒன்று மட்டும் க்ராண்டாக நடக்கட்டும்." என்றார் மாமாஷா.

 ராத்தோட்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. "இது ரகுவியின் விருப்பம்." என்றார் தாதாஷா. "பாஞ்சேஷா, அப்படித் தான் சொல்லுவார், நாம் தான் எடுத்துச் சொல்லவேண்டும். இந்தத் தலைமுறைக்கு மகனுக்குச் செய்யும் முதல் ஷாதி. நாளை பின்ன உங்களுக்குக் குறையாகத் தோன்றக் கூடாது." என்றார் பூனத்தின் பாய்ஷா.

 ரகுவீர் அனைவரையும் வரவேற்று, "கம்மாகனி ஷா." எனக் கால்களைத் தொட்டான். அவர்கள்,ஆசீர்வாதம் செய்தனர். ஹேமந்த், பங்குரி, அவர் மகன் மருமகளும் வந்திருந்தார்கள்.

 ரகுவீரை அமர்த்தி, ஆரத்திக் காட்டி திலக் வைத்து, கையில் கிப்ட் பணம் துணி என வைத்துத் தந்தனர். சிவகுரு வருவதற்காக ஹேமந்த் காத்திருந்தார்.

சௌஹான் குடும்பத்தினர் முடித்த பின்பு சிவகுரு ராகினி தம்பதி அத்தை முறையைச் செய்ய வந்தனர். தெய்வா, தட்டுகளை எல்லாம் பரப்பினார். அமுதன், பாலன், கணேஷ் அதில் உதவி செய்தனர்.

 சிவகுரு முதலில் வந்து ரோஜாப்பூ இதழ்களால் ஆன மாலையைப் போட்டார். பின்னர்ச் சந்தனம் தொட்டு மருமகன் கைகளில், கன்னங்களில் பூசினார். ரகுவீர் வித்தியாசமாகப் பார்த்தான். "இது உங்கள் அத்தை மாமா- பூபாஷா  செய்யும் முறை, உங்கள் மாமனார் மாமியார் செய்வது இல்லை." என விளக்கம் தந்தார். ராகினியும் சந்தனம் குங்குமம் பொட்டு வைத்தார். தாம்பூலத் தட்டைத் தூக்கித் தந்தனர்.

 ரகுவீரைக் கட்டியணைத்து, "என் வீருவுக்கு நான் தான் செய்யனும்னு இருந்திருக்கு." என அவன் கன்னத்தில் முத்தமிட்டார். "பெண்ணையே நீங்க தானே பெற்று வளர்த்திருக்கீங்க." என்றான் ரகுவீர்.

"வீரு பெற்றது தான் நான், வளர்த்தது எல்லாம் இவர்கள் தான். உனக்கு ஸாஸ், ஸசூர் அவங்கதான், எனச் சண்முகத்தையும், தெய்வாவையும் காட்டிச் சொன்னார்.

 ரகுவீர் அவர்களை வணங்கினான், சண்முகம் முறை செய்தார். கோட் சூட் தட்டை எடுத்துத் தந்தனர். ஹேமந்த், பங்குரி இதே முறையில் அத்தை வீட்டுச் சீர் செய்தனர். அமுதன், பாலன், கணேஷ், விக்ராந்த் செகாவத் என நலங்கு வைக்கும் போதே ஹரிணியும் வந்துவிட்டாள். அமர்சிங்கும், ஹரிணியும் சகோதர  முறைக்குச் சூட், செயின், பணம் வைத்துக் கொடுத்தான். பின்னர் ஆரத்தியுடன் மாய்ரா தஸ்தூர் முடிந்தது.

சாப்பாடு பரிமாறப்பட்டது. பின்னர் மீண்டும் மண்டபத்தில் திருமணத்தை வைக்க வலியுறுத்தினர். ரகுவீர் முதலில் எதிர்த்தான். சிவகுரு, ஹேமந்த் முதற்கொண்டு அனைவரும், ரகுவீரை சரிக்கட்டி, பாராத் மற்றும் முகூர்த்தம் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் வைப்பது என உறுதியானது. ராஜ்வீர் மண்டபத்தை ஏற்கனவே ப்ளாக் செய்து வைத்திருந்தான். அங்கேயே செய்வது என முடிவு செய்யப்பட்டது.

 

முக்கியமான விருந்தினர் உறவினர்கள் ஆகியோருக்கு, ஆண்கள் நால்வரும் பத்திரிகை வைப்பது, நண்பர்களுக்குச் சமூக வலைத்தளங்களின் மூலம் இன்விடேசன் அனுப்பப்பட்டது.ராத்தோட் க்ரூப்ஸ் கம்பெனியில் சுற்றறிக்கையாக, அவர்கள் எம்டி-ரகுவீர் சிங் ராத்தோடின்  ஷாதி தகவல் தெரிவிக்கப்பட்டது. ஸ்வீட்டுடன் ஐயாயிரம் பணம் வழங்கப்பட்டது. 

சிவகணேஷ்க்கு தீப்தியிடமிருந்து போன் வந்தது, "நீ இங்க ராத்தோட் மேன்சன்ல தானே இருக்க முக்கியமான விசயம் பேசனும், மொட்டை மாடிக்கு வா." என்றாள்.

 இருவரும் மொட்டை மாடியில் சந்தித்தனர், "கணேஷ், சாந்தினி போன் பண்ணினாள், அவர்கள் வீட்டில் இவள் நமக்கு ஹெல்ப் பண்ணியது தெரிந்து விட்டது போல இருக்கிறது அழுதாள். நமக்கு ஹெல்ப் பண்ண வந்தது அவளுக்கே கஷ்டத்தில் கொண்டுவந்து விட்டுடுச்சு." என்றாள்.

 "நானும் யோசிச்சிக்கிட்டே தான் இருந்தேன் தீப்தி, வேற என்ன செய்யலாம், உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா?" என்றான்.

"எனக்கும் ஒண்ணும் புரியலை, அவர்கள் பாய்ஷா ஜெயிலில் இருந்து வந்தாரென்றால் நிச்சயம், சோட்டி பஹன்னு கூடப் பார்க்க மாட்டான்." என்றாள் தீப்தி.

தீப்தி பின்னோடு வந்த ரன்வீர், இவர்கள் பேசுவதைக் கேட்டான். அவனைப் பார்க்கவும், "நீ என்னை ஃபாலோ பண்றியா?" எனக் கேட்டாள். "ஆமாம், எல்லா இடத்திலும், ஐ மீன் சோசியல் மீடியாவில் ஃபாலோ பண்றேன்." என மொக்கைப் போட்டான்.

 "ரன்வீர் நாங்கள் சீரியஸாகப் பேசிகிட்டு இருக்கிறோம், நீ தொல்லை பண்ணாதே." என்றாள்.

"பிரச்சனையை என் கிட்ட சொல்லுங்கள், நான் தீர்த்து வைக்கிறேன்." என்றான். சாந்தினி விசயம் சொல்லவும், "இது பெரிய விசயம், படே பையாகிட்ட சொல்லுவோம்." என்றான்.

 "இது எங்களுக்குத் தெரியாதா, பெரிய இவனாட்டம் சொல்ற." என்றாள்.

"நான் அதாவது சொன்னேல." என்றான் ரன்வீர். இவர்கள் இதே போல் மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டிருக்க, கணேஷ் கடுப்பானான். "நீங்க இரண்டு பேரும் இப்படியே பேசிட்டு இருங்க. நான் அத்தானை பார்த்துட்டு வருகிறேன்." எனக் கிளம்பினான்.

 

ரகுவீர் தன்னுடைய அறையில் லாப்டாப்புடன் அமர்ந்திருந்தான். ராஜ்வீர் கதவைத் தட்டி உள்ளே வந்தான், "பையா, இது என்ன எப்பப் பார்த்தாலும் வேலை, வேலைனு இருக்கிறீர்கள். உங்களுக்குத் தான் ஷாதி. அந்த ஃபீல் இல்லாமல் கடமையை முடிக்கிற மாதிரி இருக்கீங்க." என்றான்.

 "ராஜ்வி, எவ்வளவு சீக்கிரம் இதைக் கம்ப்ளீட் பண்றனோ அவ்வளவு நல்லது. நானே உன்கிட்ட பேசனும்னு இருந்தேன். நம்ம புது ஆர்டர் சாம்பிள் இரண்டு நாளில் ஓகே ஆகிடும். இதை ராமுடைய மில்லில் கொடுத்துச் செய்யலாம். அவங்க மில் புவாஷா வீட்டுக்குப் பக்கம் தான். நான் ஷாதி முடிந்து, ஜான்வி யோட எப்படியும் அங்க ஒரு மாதம் இருக்கிற மாதிரி இருக்கும். அங்க நான் ஃபாலோ பண்ணிக்கிறேன்." என்றான்.

"பையா நீங்க ஜானியை மட்டும் பாருங்கள், மற்றதை நான் பார்த்துக்குறேன்." என்றான் ராஜ் "நீ எத்தனையைப் பார்ப்ப, அதுவும் இல்லாமல், அம்ரூவுக்கு ப்ராஜெக்ட் ட்ரைனிங் மாதிரியும் ஆச்சு." என்றான்.

இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே கணேஷ் வந்தான். அவன் சாந்தினியைப் பற்றிச் சொல்லவும், நான் விசாரிக்கச் சொல்கிறேன். சப்போஸ் ஏதாவது பிரச்சினைனா, நம்ம ரெய்க்யூ பண்ணிடலாம். அவள் மேஜர் தானே என்றான். கணேஷ் ஒரு நம்பிக்கையுடன் சென்றான். 

ராஜ் " பையா, ஒரு விசயம் எனக்குப் புரியவே இல்லை. கணேஷ் எடுத்த போட்டோவில் ஜானி தைரியமாக இருந்த மாதிரி இருந்தது. இருங்க.” எனத் தன் மொபைலில் காட்டினான். ராஜ் கேட்க வரும் விசயம் ரகுவீருக்குப் புரிந்தது. கேட்பவன் சகலத்திலும் அவனுக்குத் தோள் கொடுக்கும் சகோதரன், அவன் கேட்டால் இவனால் மறைக்கவும் முடியாது. அவனிடமிருந்தே வார்த்தைகள் வரட்டும் என அமைதியாக இருந்தான்.

போட்டோவைக் காட்டினான். "அதன் பிறகு, கணேஷ் சொன்னப் பொண்ணு பேசியது, அந்த நேரம் ஜானி தப்பிக்க முயற்சி செய்திருக்க வேண்டும். அப்போது நம்பிக்கையோட இருந்திருக்கனும். ஆனால் நம்ம பார்க்கும் போது, யாரையுமே நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. ஜானி பொதுவா அப்படி யார் மிரட்டலுக்கும் பயப்படற ஆள் இல்லையே." எனப் பேசிக் கொண்டே போனவன் ரகுவீர் இறுக்கமாக இருந்ததைப் பார்த்துச் சந்தேகப் பட்டான்.

"பையா, நீங்க எதையோ மறைக்கிறீங்க, என்ன பையா சொல்லுங்கள். நீங்க ஷாதிக்கு அவசரப் படுத்துவது, ஜானியின் நிலைமை, ஏதாவது நடந்ததா?" என்றான். ரகுவீர் அப்போதும் அப்படியே இருந்தான்.

"பையா, உங்களுக்கு உள்ளேயே வச்சுக்காதீங்க. ஜானி கதவைச் சார்த்திய போது, நீங்க துடிச்சது." எனப் பேசிக் கொண்டே போன ராஜ் ஒரு கட்டத்தில் அமைதியானான். அதிர்ந்த முகமாக இருந்தது. "பையா பயமறியாத பெண்ணைக் கூட்டிட்டு வந்து, ரெனாவத் கிட்ட தொலைச்சிட்டமா?" என நடுங்கியபடியே கேட்டான்.

 அவன் நடுக்கத்தைப் பார்த்த ரகுவீர், "ராஜ் நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லைடா. ரெனாவத் ஜானுவை தொட்டு இருந்தான்னா, இவளே கொன்னுருப்பா."என்றவன். தனக்குத் தெரிந்த விசயங்கள், அதை ஒட்டிய தன் முடிவு ஆகியவற்றைச் சொன்னான். ராஜ் வீருக்கு விசயம் புரிந்தது, "ஜானி கிட்ட விசாரிச்சீங்களா, இது அந்தப் பெண்ணுக்கு நடந்தது தானே. நமக்கு உறுதியாகத் தெரியாதே?" என்றான் ராஜ்.

"எனக்கு ஜானும்மா கிட்ட பேசுகிற அளவு தைரியம் எல்லாம் கிடையாது, டாக்டரும் நீ சொன்னதைத் தான் சொன்னார். ஆனால் மன உளைச்சல் நிச்சயம் உண்டு. அவளுக்கு ட்ரீட்மெண்ட் எடுத்தாலும், மிஸஸ் ராத்தோட் ஆகத் தான் இருக்கனும் அதுக்குத் தான் இத்தனையும்." என்றான்.

"நல்லதையே யோசிப்போம் பையா, கொஞ்சம் வேலையை மூட்ட கட்டிட்டு, துல்ஹா ராஜாவா இருங்கள்." எனச் சொல்லிவிட்டுப் போனான் ராஜ்.

ரகுவீர், 'ராஜ் சொல்வது போல், அது அந்தப் பெண்ணுக்கு நடந்ததாக மட்டுமே இருக்கட்டும்.' என மனதில் நினைத்துக் கொண்டான்.

ஜானகிக்கு என்ன நேர்ந்தது என்பதை ஜானகியே அறிவாள். சாந்தினி ஏதேனும் பிரச்சனையோடு வருவாளா? இல்லை குழப்பம் தீர்ப்பாளா? இரண்டு நாளில், நாற்பத்தெட்டு மணிநேரத்தில் ஜானகி கல்யாணம் எப்படி நடக்கும் பார்ப்போம்.

 

0 கருத்துகள்
ஒரு கருத்தை விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!