Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு 58- சங்கீத்

வகைகள் : களஞ்சியம்/

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


களஞ்சியம்

58- சங்கீத்

58- சங்கீத் 

ஆண்டுத்தோறும் மீனாட்சி அம்மைக்குத் திருக்கல்யாண வைபவம் நடக்கும், மூன்று கொங்கைகளுடன் தோன்றிய முக்கண்ணன் நாயகி, அவரைப் பார்த்த பொழுதில் மூன்றாம் கொங்கை மறைந்து, அழகு மிக்க மங்கையானாள். அந்த மங்கையர்க்கரசியை வழிபட்டே திருமணப் பந்தத்தில் அடியெடுத்து வைப்பர் கன்னியர்.

 பொழுது விடிந்த அந்தக் காலையில், விரதம் இருந்து இரு குடும்பத்து மங்கையர் ஜானகி இருந்த தளத்தில் கூடிவிட்டனர். இராஜஸ்தானியில், 'பாலா தஸ்தூர்' என அழைக்கப்படும் கௌரி பூஜை, நம் ஊரில் சுமங்கலி பூஜை. மாப்பிள்ளை வீட்டிலிருந்து தாலிகட்டு சேலையைக் கொண்டு வருகின்றனர். அம்மன் சிலையை வைத்து, மணப்பெண் மூலமாக ஒவ்வொரு அபிஷேகமாகச் செய்ய வைக்கின்றனர். 

இங்கும் ராத்தோட்ஸ் பீந்தினிகள், அவர்களின் பாரம்பரிய உடையில் முக்காட்டோடு வந்தனர். ஜானகிக்கும் அதே போல் உடுக்க வைத்து, ஓரிடத்தில் அம்மனின் வெள்ளிச் சிலைக்கு ஐந்துவகை அபிஷேகம் செய்தாள் ஜானகி. பூ மஞ்சள் குங்குமம், அழகிய சுன்ரி எனப்படும் முக்காடு இட்டு அலங்கரித்தாள் ஜானகி.

 

அவளது தாலிக்கட்டுக்கு அவள் ஆசைப்படி கஜேந்தர் மும்பையில் உள்ள கடையில் அடர் சிவப்பு வண்ணத்தில் காஞ்சிப் பட்டுச் சேலை, வாங்கித் தந்தார். அசல் வெள்ளி ஜரிகையுடன் கூடிய லட்சங்களில் மதிப்புடைய சேலை. அதனை வைத்து மற்றவர்களுக்குக் கொடுக்கவென ராகினி வாங்கி வைத்திருந்த பட்டுப் புடவை வளையல், மஞ்சள்கிழங்கு, குங்குமம் பூ வெற்றிலைப் பாக்குச் சகிதமாக இரண்டு கலாச்சாரத்தையும் கலந்து பூஜையைச் செய்தனர். இரண்டையும் சேர்த்துச் செய்ததில் திருப்தி அடைந்தனர்.

ஜானகி அலங்கரித்து முடிக்கவும், அவளைக் கொண்டே ஆரத்திக் காட்டச் சொன்னார்கள். அவளை அமர்த்தி ஷப்னம், குங்குமம் வைத்து சேலையைக் கொடுத்தார். பின்னர்த் தாதிஷா, சிவகாமிப் பாட்டி முதல் தேனு, மானு வரை அனைவரையும் அமரவைத்து, குங்குமம் கொடுத்து, ஜானகி சுமங்கலி பூஜை பிரசாதமாகச் சேலையோடு சேர்த்து எல்லாவற்றையும் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கினாள்.

காலை உணவுக்குப் பின் மெஹந்தி போட்டு விடுவதற்கென இருபது பெண்கள் வந்தனர். ப்ரீத்தோ, பர்க்கா, பார்வதி, சிம்மி பிங்கி ஹர்லின் என ஒரு பட்டாளமே வந்தனர். வீட்டிலிருந்த ஆண்களைத் துரத்தி விட்டனர். பங்குரி அவர் மருமகள், மஞ்சரி, எனப் பெண்கள் கூட்டத்தால் நிறைந்தது ஸ்வர்ணமஹல்.

சகுன் மெஹந்தியை ஷப்னம், ஹரிணி, ஸர்குன், பூனம், மயூரி கொண்டு வந்தனர். இந்தப் பெண்களின் கைகளில் மோனல் ஷாதிக்கு வைத்த மெஹந்தி மங்கலாக இருந்தது. ஆனாலும் மெஹந்தி வாலி திறமையாக அதில் டிசைன் வரைந்தனர். தீப்தி தனது போட்டோகிராபி பெண் தோழிகளுடன் அதனைக் கேமராவில் சிறையெடுத்தாள் .

ஜானகியின் கைகளில் முதல் சடங்கு மெஹந்தியை தாதிஷா, ஷப்னம், சுந்தரவள்ளி வைத்தார்கள். ஹரிணியின் ஏற்பாட்டில் மெஹந்தி நடந்தது. எனவே ரகுவீர், ஜானகி போட்டோக்களை ஜெராக்ஸ் ப்ரதியாக மாற்றி அதே முகத்தை ஜானகியின் கைகளில் வலதுபுறம் ரகுவீர், இடது புறம் ஜானகி என வரைந்தனர். அவளுக்கு மட்டுமே மூன்று பேர் மெஹந்தி இட்டனர். நடுவில் அப்பத்தா சாப்பாடு ஊட்டி, ஜூஸ் கொடுத்து மாத்திரை கொடுத்துப் பார்த்துக் கொண்டார். 

மற்றவர்கள் டோல் வாசித்து, ஆடல் பாடல் எனக் கலக்கிக் கொண்டிருந்தனர். ஒரு வழியாக இரண்டு மணிக்கு ஜானகிக்குப் போட்டு முடிக்கவும் இரண்டு மணி நேரம் தூங்கி எழுந்தாள். அழகுக் கலை நிபுணர் தயாராக இருக்கப் பேசியல் செய்தார். மெஹந்தி நல்ல அடர் நிறத்தில் சிவந்து இருந்தது. மெஹந்தி சிவப்பை வைத்து கணவனின் அன்பைச் சொல்வார்கள். இங்கு ரகுவீர் அன்பைப் பறைசாற்ற மெஹந்தி வேண்டுமா என்ன 

அமிர்தாவின் அண்ணிமார் நன்றாக அனுபவித்தனர். தங்கள் கல்யாணத்துக்குக் கூட இப்படி மெஹந்திப் போடவில்லை எனச் சிலாகித்தனர். பாலன், அமிர்தாவை மடக்கி தன் பெயரைப் பார்த்தான். அவன் பார்வையில் அமிர்தாவின் கன்னங்கள் சிவந்து மிளிர்ந்தன. அவனைப் பொய் கோபமாகக் கடிந்து கொண்டாள்.

தீப்தியின் தோழிகளில் சாந்தினியும் இருந்தாள். காலை முதல் ஆட்கள் நிறைய இருந்ததால் கவனிக்கவில்லை. தீப்தி தன்னுடனே அவளை இருத்திக் கொண்டாள் பாதுகாப்பு ஏற்பாட்டிலும் ராத்தோட்ஸ் குறை வைக்கவில்லை. எல்லோரையும் பரிசோதித்தே உள்ளே அனுப்பினர். மண்டபத்தில் ஏற்பாடு, பத்திரிகை விநியோகம் என ஆண்களுக்கு வேலை சரியாக இருந்தது.

தாதிஷாவிடம் வந்த மயூரியும், மஞ்சரியும் மெஹ்பில் எனப்படும் சங்கீத் செர்மனியை எப்படி நடத்துவது எனக் கேட்டனர். பையா பாபி பார்க்கக் கூடாது என்றால் எப்படி எனச் சண்டையிட்டனர். இராஜஸ்தானி பொண்ணு மாப்பிள்ளை தனித் தனியாகத்தான் சங்கீத் வைப்போம் என்றார். கெஞ்சிக் கூத்தாடி ஒரு மெல்லிய முக்காடு அவசியம் என்ற பின்னர், என்ன செய்யலாம் என யோசித்து, மஞ்சரிக்குத் தோன்றிய ஐடியாப் படி ஜானகியை ரெடி செய்தனர்.

இரவு எட்டு மணி சுமார் சங்கீத் ஆரம்பித்தனர். மயூரி, மஞ்சரி, அமிர்தா ஆடல் பாடலில் ரகுவீர்-ஜானகி கதை சொல்வதிலும் அசத்தினர். மயூரி, மஞ்சரி ஹிந்தியில் பேசுவதை அமிர்தா தமிழில் அழகாகத் தருவாள்.

பார்ட்டி ஹால் சிறிய மேடை அலங்கரிக்கப்பட்டுச் சுற்றியிருந்து பார்ப்பது போல் செட்டிங் செய்திருந்தனர். துணியில் தோரணங்கள் ஆர்கிட் மலர்கள், பர்ப்யூம் கேன்டில் என அந்த இடமே நைட் மோடில் ரொமான்டிக் லுக்கில் இருந்தது. எதிரே போடப்பட்டிருந்த ஷோபாவில் ரகுவீர் டிசைனர் கோட் சூட்டிலிருந்தான். மயூரியின் கட்டளைப் பேரில் அதை அணிந்திருந்தான்.

ஜானகியை அழைத்து வந்தனர், தேனு மானு ஹாசினி சில குட்டிக் குழந்தைகளுக்கு ஏஞ்சல் போல் உடை உடுத்தி, ஜானகி அமரேன் கொடுத்த வெஸ்டர்ன் லாங் கௌன், ப்ரேஸ்லெட் காதில், கழுத்தில் ஸ்டைலிஸ் டைமண் ஜொலிக்க, பாதிக் கொண்டையிட்டு மீதி ஃப்ரி ஸ்டைஸ் சுருள் முடியாகத் தொங்க விட்டு, நெட்டட் ஷாலை க்ரிஸ்டியன் மணப்பெண் போல் அலங்கரித்து இருந்தனர். டார் க்ரே கௌன், அவனுடைய சூட்டிற்குப் பொருத்தமாக இருந்தது. குட்டி ஏஞ்சல் புடை சூழ வானத்துத் தேவதையாகப் பார்பி பொம்மைக்கும் சவால் விடும் நளினத்தோடு வந்தாள்  ஜானகி.

 

பார்த்தவர்களுக்கு அது ஜானகி என நம்ப முடியவில்லை. ரகுவீருக்கு நெஞ்சம் அடித்துக் கொண்டது, எல்லா நிகழ்ச்சியிலும் அவளைப் பார்த்து ரசிப்பேன் என்றவன் அவள் பக்கம் கண்களைத் திருப்பவே இல்லை. ஜானகியும் பேசவும் முயன்றால் இல்லை. இருவருக்கும் இடையே மௌன நாடகம் அரங்கேறியது.

சங்கீத் ஆரம்பித்தார்கள். சகாயீ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் இன்றும் இருந்தனர். ரன்வீர் காம்பயரிங் செய்தான், இராஜஸ்தானி ஷான், எங்களது பாரம்பரிய நடனம் கூமர் ஆட வருகின்றனர் எங்கள் வீட்டு அழகு மங்கையர் என்றான். கணேஷ் தமிழில் அறிவிப்புக் கொடுத்தான்.

மஞ்சரி, மயூரி, அமிர்தா, தீப்தி இணைந்து இராஜஸ்தானி உடையில் பத்மாவத் படப்பாடல் கூமருக்கு டான்ஸ் ஆடினர். அதே போல் முக்காடு போட்டுச் சுற்றிச் சுழன்று ஆடினர். எல்லாரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். அடுத்து ஒரு மிக்ஸ்டு ஹிந்தி பாட்டைப் போட்டு அனைவரையும் ஆட வைத்தனர்.

அதற்குள் ஒரு ப்ளே நாடகம் காட்ட வந்தனர் இளையவர்கள். "எங்கள் படே பய்யா, பாபிஷாவின் மோதல் நிறைந்த காதல் கதை." என்ற அறிவிப்புடன் மயூரி அமுதன் கதைச் சொல்ல ராஜ்வீர் மஞ்சரி, ரகுவீர் ஜானகியாக மாறினர். ராஜ் கதாபாத்திரத்தை ரன்வீர் பார்த்துக் கொண்டான்.

அமுதன் ஆரம்பித்தான், மஞ்சரியுடன், அமிர்தா அவளாகவே வந்தாள். மும்பை ஏர்போர்ட் அதே சீனை மஞ்சரி அமிர்தாவோடு நடித்துக் காட்டினாள். மோதல் ஐஸ்கிரீம் சிந்தியது ஜானகி ருசித்தது என அத்தனையும் மஞ்சரி நடிப்பில் அசத்த தன் படே பையாவாக மாறினான் ராஜ். அதேபோல் அணைத்துத் தூக்கி, கோபப்பட்டு எனச் சீன் ஓடியது. அமிர்தா அதே போல் நடித்தாள்.

 ரகுவீர் தன் நினைவுகளில் கலந்து நாடகத்தை ரசிக்க ஜானகி வெட்கப் புன்னகையுடன் அமர்ந்திருந்தாள். அடுத்துக் காரில் என்ட்ரி அங்கே நடந்த சண்டை "ஆமாம் இவர் என் முறை பையன் பாரு ..." என்ற ஜானகியின் வார்த்தைகளைப் படித்தாள் மஞ்சரி, ரகுவீர் அமிர்தாவிடம் அர்த்தம் கேட்டதையும் சேர்த்து நடித்துக் காட்டப் பெரியவர் முதல் சிறியவர் வரை மகிழ்ந்தனர்.

 வீட்டில் கிரகப்பிரவேசம் ஆன சீனை நடித்தனர். ராத்தோட்ஸ் மறு ஒளிபரப்பாகப் பார்த்தனர். மெல்ல மெல்ல ஜானகி ரகுவீருக்குப் பரிமாறுவது ஸ்வாரஸ்யமான உரையாடல் எனக் கதையை நகர்த்தி டீல் க்ராக் செய்தது ஜானகிக்கு அடிப்பட்டது ரகுவீரின் படபடப்பு. ஜானகி தூக்கத்தில் ஐ லவ்யூ வீருஜி சொன்னது அவளது ராதாகிருஷ்ணன் பெயிண்டிங். கடைசியாக மோனல் சங்கீத்தில் ப்ரபோசல் என நாடகத்தை முடித்தனர்.

 

கூடியிருந்த அனைவரும் ரகுவீர் ஜானகி அன்பின் ஆழத்தை அறிந்தனர். சிவகுரு, ராகினி தங்கள் மகளின் மனதை இதில் தெள்ளத் தெளிவாக அறிந்தனர்.

அமுதன், மயூரி, அமிர்தா, பாலன், கணேஷ் சேர்ந்து "இடிச்ச பச்சரிசி" என்ற உத்தமப் புத்திரன் படப் பாடலுக்கு நடனம் ஆடினர். அது முடியும் போது நம்ம வீட்டுப் பிள்ளையிலிருந்து, "உன் கூடவே நான் பிறக்கனும் என்ற பாடலை ஜானகி ரகுவீரை நடுவில் கூட்டி வந்து வைத்து சிச்சுவேஷன் பாட்டுப் பாடினர். ஜானகியை அணைத்து அமுதன் கண்கலங்கி நின்ற போது சிவ மாளிகை வாசிகள் எல்லோருமே கண்கலங்கி இருந்தனர்.

 அடுத்துத் துல்ஹா துல்ஹன் எனக் குரல் கொடுத்தான் ரன்வீர். ஜானகிக்கு படப்பாக இருந்தது. ரகுவீர் வேண்டாம் என்றவுடன் ஜானகி முகம் வாடியது. "பையா ப்ளீஸ் பாபிஷா நீங்க நோ சொல்லவும் வருத்தப்படுறாங்க." என்றான். அடுத்த நொடி ரகுவீர் எழுந்து விட்டான்.

 "ஜானு என் கையை மட்டும் மாற்றி மாற்றிப் பிடிச்சுக்கோ." என்றான்.

அவன் பின்னால் நிற்க ஜானகி முன்னால் நின்றாள். "தனு இத்னா ப்யார் கரான்." என்ற ஏர்லிப்ட் படப் பாடலுக்குத் தன் காதலைக் கொட்டி அவளை மென்மையாக அசைத்து முகம் பார்க்காமலே ஆடினான். அதைத் தொடர்ந்து

" கண் அழகா கால் அழகா…

உயிரே உயிரே உனைவிட எதுவும்

உயிரில் பெரிதாய் இல்லையடி"

என்ற மூன்று படப் பாடலின் வரிகள் ஒலித்தது. அதன் பொருளுக்கு ஜானகி பாவத்துடன் நடனமாட ரகுவீர் அந்த இசைக்கு இசைந்து அவளை ஏந்திக் கொண்டு இருந்தான் ரகுவீர்.

 பாடல் இழையோடிய காதலுடன் ஒலிக்க அவர்கள் நயனங்களை ஒருவர் மற்றொருவரைப் பார்க்காமலும் காதலைப் பரிமாற இயலும் என்பதை நிரூபித்தனர். கடைசியில் அவனுள் புதைந்து அவள் முகம் தரைப் பார்த்திருக்க, ஜானகி தன் வலது கையை மட்டும் உயர்த்தி அவனுக்குக் காட்டினாள். ரகுவீர் சில்லூட் ஓவியமாக அவள் கைகளிலிருந்தான்.

 அவளை முன்பக்கம் திருப்பி நிறுத்தி இரண்டு கைகளையும் அவளின் முகத்துக்கும் மேல் தூக்கிப் பிடித்து அவளின் மெஹந்தி ஓவியத்தையும் பார்த்தவன், அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டான். கண்களில் காதல் கசியக் கண்கள் கலக்காமல் அவர்கள் ஆடிய நடனம் கைத்தட்டலைப் பெற்றது.

சைலேந்தர் ராத்தோடும் மப்டியில் வந்து சேர்ந்தான். ராத்தோட் ப்ரதர்ஸ் இணைந்து ஹிந்திப் பாடலுக்கு ஆடினர். ஹரிணி, அமர்சிங் அவர்களோடு இணைந்து கொண்டனர். பத்தரை மணிக்கு சங்கீத் முடிந்தது. எல்லோரும் திருப்தியாக இருந்தனர். சிவகாமிப் பாட்டி ஆரத்தி சுற்றி திருஷ்டி கழித்தார். ஜானகியைச் சாப்பிட வைத்துக் கொண்டிருந்தார்.

 ஆரத்தி தண்ணீரை வெளியே ஊற்ற அமிர்தா சென்றாள். ஊற்றி விட்டு மேலே வருவதற்குத் திரும்பும் போது, ஒரு ஃபேமலி வந்தனர். செக்யூரிட்டிகளுடன் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தனர். அமிர்தா என்ன வென்று விசாரித்தாள், "எங்கள் மகளைக் கடத்தி வச்சிருக்கீங்க." என அவர்கள் குற்றம் சுமத்தவும். அவர்கள் மகள் யாரெனக் கேட்கும் போது "சாந்தினி ரெனாவத்." என்றனர்.

 அங்கிருந்த நாற்காலியில் உட்கார வைத்து விட்டு ராஜ்வீருக்கு போன் செய்தாள் அமிர்தா. ராஜ்வீர் விசயமறிந்து சைலேந்தருடன் இறங்கி வந்தான். அவர்கள் ராஜ் வீரைப் பார்க்கவும் கத்த ஆரம்பித்தனர். சத்தம் கேட்டு ரகுவீர் என்ன வென்று சாசாஷாக்களைக் கேட்கச் சொன்னான்.

ஜானகியைக் கூட்டிச் செல்லுமாறு சிவகுருவிடம் சொல்லி அனுப்பினான். அதற்குள் அவள் சாப்பிட்டு இருந்தாள். அப்பத்தா, தெய்வா அத்தை அவர் மருமகள்கள் என எல்லாரையும் மேலே கூட்டிச் சென்று விட்டனர்.

 அமிர்தா வந்து ரகுவீரிடம் விசயத்தைச் சொன்னாள். ரகுவீருக்குக் கோபம் முதலில் வந்தாலும் நேற்று கணேஷ் சொன்னதை நினைத்து, அவனிடம் "சாந்தினி இங்கே இருக்கிறாளா?" எனக் கேட்டான். தீப்தி முன்னே வந்தவள், எங்களுடைய போட்டோ கிராபி டீமில் அவளும் இருக்கிறாள். என்று சாந்தினியை அழைத்தாள்.

 அவள் பயந்தபடி வந்து, "பாய்ஷா என்னை அவங்களோடு அனுப்பிடாதீங்க. என்னை அடிச்சே கொன்னுடுவாங்க." என அழுதாள். ராஜேன், ஹேமந்த் மற்றும் ரகுவீரின் மாமா சௌஹான்களும், அவள் சொன்னதைக் கேட்டனர்.

 அதற்குள் கஜேந்தர் அவர்களை, "நீங்க எங்கள் தாதிஷா பிறந்த வீட்டு ஆட்கள். இப்படிக் கீழே நின்று பேசுவது சரியில்லை. இராஜஸ்தானிகளுக்கு என ஓர் மரியாதை உண்டு." எனச் சமாதானம் செய்து மேலே கூட்டி வந்தார். ரெனாவத் குடும்பம் முக்கிய இராஜஸ்தானி குடும்பங்களை அங்கே எதிர்பார்க்கவில்லை, கொஞ்சம் அதிர்ந்தனர்.

"ரெனாவத்ஷா, உங்கள் மகன் செய்ததும் சரியில்லை, நீங்க செய்யறதும் சரியில்லை." என்றார் ரத்தன் சிங் டாக்கூர். தீப்தி, அமர்சிங்கின் அப்பா. என் மகள் தான், உங்கள் மகளைக் கூட்டிட்டு வந்திருக்கா. இங்க யாரும் கடத்தவில்லை." என்றார்.

 

"மகனை வளர்க்கத் தெரியாமல் வளர்த்து இருக்கீங்க. ராத்தோட்ஷா, நாதியைக் கடத்தி இருக்கான். அதுவும் நம்ம ஊரிலிருந்து. அந்தத் தமிழ் குடும்பம் நம்மளை என்ன நினைப்பாங்க." என்றார்,ப்ரித்விராஜ் சௌஹான், ரகுவீரின் நாநாஷா. 

 "தலைமுறை கடந்து இருக்கலாம், உங்கள் புவாஷா ஸ்வர்ண மஹாலக்ஷ்மி வாரிசு என்பதை எப்படி மறந்தீங்க." என்றார் சிவராஜ் சௌஹான்.

"இதில் என் படேபாபுஷாவும் கூட்டு. எனக்கு அசிங்கமா இருக்கிறது. இராஜஸ்தானி ன்னு சொல்லிக்கிட்டு இப்படி ஒரு ஈனச் செயல்." என்றார் ஹேமந்த் செகாவத். "நம்ம எல்லாருமே ராத்தோட்களுடன் சம்பந்தி உறவு வைத்திருப்பவங்க  தான். அவர்களுக்கு ஒரு அவமானம்னா நமக்கும் அதில் பங்குண்டு." என்றார் டாக்கூர்.

 ரெனாவத் பேசாமல் இருந்தார். ரகுவீர் பேச ஆரம்பித்தான், "ரெனாவத் ஷா, என்னுடைய தொழிலில் உங்கள் பேட்டா நிறையத் தில்லுமுல்லு செய்தான். என்னுடைய டென்டர் கொடேசனை ஹேக் பண்றது, கம்பெனி சிஸ்டம் சைட் ஹேக் பண்றதுன்னு நிறைய  செய்தான், ஜான்வி வரும் முன்னாடியே எனக்குத் தெரியும். இருந்தும் ஒரே ஊர்காரன்னு விட்டேன். அவளைக் காயப்படுத்தியபோதே அவனைப் போட்ருக்கனும். அப்ப விட்டது நான் செய்த தப்பு. இல்லைனா என் உயிரானவளை இந்த நிலையில் பார்க்கும் நிலைமை வந்திருக்காது." என்றான். தொடர்ந்து.

"உங்கள் மகள், உங்ககிட்ட பாதுகாப்பு இல்லைனு, எங்கள் வீட்டுக்கு வந்தபோதே உங்களுக்கான உரிமை இல்லாமல் போயிடுச்சு. அங்க வந்தா அவள் உயிருக்கு என்ன பாதுகாப்பு. சாந்தினிக்கு 18 வயது முடிந்தது. அவள் மேஜர் என் ஜானுவை காப்பாற்றியதால் அவளுக்குப் பிரச்சினைனா ,அவளை என் தங்கையாக ஏத்துக்குறேன். அவள் என் பொறுப்பு." என்றான்.

ரெனாவத்களிடம் சொல்வதற்கு வார்த்தை இல்லை. இருந்தாலும், "எங்கள் மகளைக் கண்டிக்க எங்களுக்கு உரிமை உள்ளது. கூடப் பிறந்தவனுக்கு எதிராக வேலை செய்யும் போது நாலு வார்த்தை சொல்லத்தான் செய்வோம்." என்றனர்.

 "இதே நாலு வார்த்தை உங்கள் பேட்டா செய்யும் போது ஏன் செய்யலை. உங்கள் மூத்த பஹுவை அவன் கொடுமைப்படுத்தும் போதே எதிராக நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைக்கு இந்த நிலை வந்திருக்காது. ஆனால் ராகேஷ் திருந்த மாட்டான், எனக்கு அவனை நன்றாகத் தெரியும். உங்கள் மகளையாவது பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை." என்றான் ரகுவீர்.

"பாயீஷா, இப்போதைக்கு நான் வீட்டுக்குப் போவதாக இல்லை. இன்னும் ஆறுமாத படிப்பு தான், ஜெய்ப்பூரில் ஹால்டலில் இருந்து படிச்சுக்குவேன். போட்டோகிராபி தொழில் இருக்கு, அதன் பிறகு நானே சொந்தக்காலில் இருந்துக்குவேன். பெண்களை இழிவாக நடத்தும் ஒருத்தனுடைய தங்கையா என்னை அடையாளப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை." எனச் சாந்தினி தகவலாகச் சொன்னாள்.

அமர்சிங், "தீப்தியோட சேர்ந்து, நீயும் ஒரு தங்கை தான், யூஜி முடிங்க, போட்டோகிராபியில் மேலே படிங்க, நான் படிக்க வைக்கிறேன். ரெனாவத் ஷா, இனி இங்கே உங்களுக்கு வேலை இல்லை." என்றான்.

சைலேந்தர் ராத்தோட், "ரெனாவத்ஷா, உங்கள் மகளாகவே இருந்தாலும், இனி தொல்லை பண்ணாதீர்கள். வீட்டிலிருந்து வெளியே போகும் பெண் வீட்டுக்கு நல்லபடியா திரும்பனும்னு சாமியை வேண்டுவார்கள். இங்க வீடே பாதுகாப்பு இல்லையென்றால் என்ன செய்கிறது?" என்றான். எல்லாரும் பேசி முடித்ததில், தீப்தியுடன் சாந்தினி டாக்கூர்களுடன் செல்வதாக முடிவானது. ஷாதி வரை போட்டோ எடுக்கும் டீமில் இருப்பாள்.

வந்திருந்த உறவினர்கள் கிளம்பிவிட்டனர். சிவகுரு நண்பர்களும் குடும்பத்தோடு கிளம்பினர். "சிவா தைரியமா இரு ஜானகி ஷேரிணி தான். சீக்கிரம் நார்மலுக்கு வந்திடுவா!" என்றார் பல்லாஜீ. சிவகுரு நண்பர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார்.

சைலேந்தருக்கு போன் காலில் அவசர செய்தி வந்தது. அர்ஜென்ட் எனக் கிளம்பியவன். "காகாஷா வீட்டுக்குப் பாதுகாப்புப் பலப்படுத்துங்கள். தேவையில்லாத வெளி ஆட்களை வெளியேத்துங்க." என அவன் சொல்லவும்.

"சைலேன், எதுவும் பிரச்சனையா?" என்றார் அமரேன்.

"ஒரு தகவல் வந்திருக்குக் கன்பார்ம் பண்ணிட்டுச் சொல்கிறேன், ராகேஷ் இருந்த செல் திறந்து கடக்குதாம். ஆள் மிஸ்ஸிங் நான் செக்யூரிட்டி ஆள் போடுகிறேன்." என அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டு ரகுவீர் விரைத்தபடி நின்றான். அமரேன், கஜேந்தருடன் பேசி செக்யூரிட்டி ஆட்களை அதிகரித்தார். இன்னும் பல சிசிடிவி கேமராக்களைப் புதிதாக வைத்தனர்.

 ரகுவீர், அமுதன், பாலன், கணேஷ், ராஜ்வீர், ரன்வீருடன் வீட்டின் பாதுகாப்பு பற்றிச் சொல்லி, ஜானகியைப் பாதுகாக்க வேண்டும். அவளுக்கு விசயம் தெரியக்கூடாது என்றான். ஏற்கனவே மணி பதினொன்றைத் தாண்டி சென்று கொண்டிருந்தது. ரகுவீரை கவலைப் படாமல் தூங்கச் சொல்லிவிட்டு, அமுதன், பாலன், கணேஷ் சுழற்சி முறையில் அவளுடைய ரூமிற்கு வெளியே காவல் இருந்தனர். ஜானகியுடன் அப்பத்தா அமிர்தா தங்கியிருந்தனர். அவர்கள் பயந்தபடி எதுவும் நடக்கவில்லை.

 முகூர்த்தம் சந்திரனை அனுசரித்து அதன் சுப ஓரையில் வைப்பதால் இரவு ஒன்பது முதல் பத்தரை வரை நேரம் குறித்து இருந்தனர். மாலை ஏழு மணிக்கு பாராத் மண்டபத்திற்கு வந்து சேரும் என ஏற்பாடு.

 

முகூர்த்த நாளில் ஆதவன் ஆறுமணிக்கு எல்லாம் வளையவர ஆரம்பித்து விட்டான். நம் பெண்ணரசி உறங்கினால் எழுப்பலாம் என வந்தவனை அதிசயமாக ஏமாற்றி விட்டாள் ஜானகி. இன்று அவன் வரும் முன்னே துயில் நீங்கி இருந்தாள்.

 காலையில் உற்சாகமாக எழுந்து தன் வீரூஜிக்கு, ஒரு குட்மார்னிங் GIF மெஸேஜ் ரோஜாப்பூ கொடுத்து அனுப்பினாள். அதைப் பார்த்தவுடன்,ஃப்ளையிங் கிஸ்ஸோட ஐ லவ் யூ, என அனுப்பினான். அன்றைய நாள் அவளின் குட்மார்னிங்குடன், அவனுக்கு மிகவும் சந்தோஷமாக விடிந்தது.

"வீரூஜி!" என அனுப்பினாள்.

"சொல்லுடி மேரிஜான்!"

" நீங்க ஹேப்பியா?"

"ரொம்ப ஹேப்பி, மேரிஜான் உண்மையில் மேரிஜான் ஆகப்போகிறாள். ஸோ ஹேப்பி!"

"என்னைக் கேட்கமாட்டீங்களா?"

"தெரிந்த பதிலுக்கு, எதற்குக் கேள்வி?"

"என்ன தெரியும்?"

" நினைவிலும், கனவிலும் நான் தான் உன்னில் நிறைஞ்சு இருக்கேன்னு தெரியும்." என்றான்.

"ஆகா, நினைப்பு தான் உங்களுக்கு. நான் ரொம்பப் பிஸி, உங்களை நினைக்கவே இல்லை." என்றாள்.

"ஹாஹாஹா." என ஒரு சிரிப்பை எமோஜாக அனுப்பியவன்.

"நம்பிட்டேன்." எனச் சேர்த்து அனுப்பினான்.

"நிஜமாவே சொல்றேன்." ஆங்ரி மோடோடு அனுப்பினாள்.

 " மேரிஜான், நீ என்னை நினைத்துக் கனவு காண்பதாக, தேனு, மானு கூடச் சொன்னதுங்க." எனச் செய்தி அனுப்பினான்.

"பொய் சொல்றீங்க." என்றாள்.

 "கூப்பிட்டு கேளு மிர்ச்சி, மாஷா கூப்பிடுறாங்க கீழே இன்னிக்கு நிறையச் சடங்கு இருக்கிறது நைட் பேசுவோம்." என்றான்.

"என் கல்யாணத்துக்கு வரலையா நீங்க?" என்றாள்.

 "உன் ஷாதிக்கு தான் பாராதோட வர்றேன், நீ என்ன தருவ?" என்றான்.

"என்கிட்ட என்ன இருக்கிறது, அப்பாஜான் கிட்டக் கேட்டு அவர் மகளை வாங்கிக்குங்க." என்றாள்.

"அது பூபாஷா தர்றது, நீ இன்னும் தரவேண்டிய பெண்டிங் இருக்கே ."

"என்னவாம்?" என்றாள்.

"மூன்று மேஜிக்கல் வார்த்தை". என்றான்.

"நேரம் ஆச்சுக் கிளம்புங்கள்." என அனுப்பினாள்.

"மேரி ஜான், இது சீட்டிங், நான் வட்டியும் முதலுமா வாங்கிக்கிறேன். தயாராக இரு." என்றவன் மீண்டும் ஓர் ஃப்ளையிங் கிஸ்ஸோடு ஆப் லைன் போனான்.

புன்னகையுடன் போனை வைத்த ஜானகிக்கு மனதில் மகிழ்ச்சி கரை புரண்டோடியது இது அவள் வாழ்க்கையில் எதிர்பார்த்த நாள். சிறுவயதில் பொம்மை கல்யாணத்தில் கூட அவள் மாப்பிள்ளை வீரூஜி தான். இன்று நிழல் நிஜமாகிறது. கனவில் நினைத்ததெல்லாம் நினைவில் கூடிவரும் வேலையில் ஜானகியின் மனம் படுத்தும் பாடு, ரகுவீரின் காதலுக்கான உரைகல்.

'அவ்வளவு சுலபமா இந்த ஜானகியைக் கட்டிட முடியுமா என்ன? மாட்டை அடக்கவேண்டும், இளவட்டக்கல் தூக்கவேண்டும், ரேக்ளா வண்டி ஓட்டனும்' இது ஜானகியின் வார்த்தைகள் தான். ஆனால் அதைவிடக் கடினமான டாஸ்க்காக, ஜானகியின் மன ஓட்டத்தை அனுசரித்து, ரெனாவத்திடம் இருந்து காப்பாற்றி, பிஸ்னஸ் சமாளித்துக் கைப் பிடிக்க இருக்கிறான்.

அவன் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் சொல்லி, ஆசிவழங்க இன்னும் சிலமணி நேரங்கள் காத்திருப்போம்.

 

0 கருத்துகள்
ஒரு கருத்தை விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!