Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், Iruvachi2024@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
முகப்பு 59- பாராத்

வகைகள் : களஞ்சியம்/

உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்


களஞ்சியம்

59- பாராத்

59- பாராத் 

 திருமணங்கள்  சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. அதனைச் சொர்க்கமாகவே வைத்துக் கொள்வது நம் கையில் தான் உள்ளது.

திக்விஜயம் செய்த மீனாட்சி அம்மை மூவுலகையும் வென்று, கைலையை அடைந்தார். சிவனாரைத் தரிசித்த நொடி தாம் யாரென அறிந்தார். அம்மையார் அழைப்பு விடுக்க, அப்பன் புலி ஆடை தவிர்த்துப் பட்டாடை உடுத்தி, ஆபரணங்கள் சூடி, மாநிறம் கொண்ட எம் அம்மைக்கு, செக்கச் சிவந்த சொக்கநாதராக வந்தார். திருமணம் முடித்த அம்மை, அப்பனிடம் அரசாட்சியை ஒப்படைத்து அவருக்குச் சேவகம் செய்து மகிழ்ந்தார். இதில் உள்ள அன்பு ஒருவர் மற்றவர் மீது வைத்த அன்பு அவருக்காக எதையும் செய்ய வைக்கும். ரகுவீர், ஜானகியும் இந்த அன்பில் நிறைந்தவர்கள்.

 காலையில் ஜானகியுடனான குறுஞ்செய்தி பேச்சில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்த ரகுவீர், மாப்பிள்ளை கலையோடு, உற்சாகமாகக் குளிக்கப் போனான். அவளின் ஒரு பேச்சு அவனை அந்த அளவு மாற்றியிருந்தது. ஆணழகன் தான் ரகுவீர், பிஸ்னஸ் டென்ஷன், ஜானகி டென்ஷனில் முகம் எப்போதும் சிந்தனை கோட்டை நெற்றியில்  பதியவிட்டு இருக்கும். ஆனால் இப்போது கொண்டு வந்து இளவட்டக்கல்லைக் கொடுத்தாலும் ஒரே கையால் தூக்குவார் நமது துல்ஹா ராஜா. அந்த மேஜிக்கல் பவரை தன்னிடம் வைத்து ரகுவீரை ஆட்டுவித்துக் கொண்டிருந்தாள் ஜானகி தேவி.

 முகூர்த்த தினத்தில் காலையில், 'ஜானேவ்' எனப்படும், ஹோமம் வளர்க்கின்றனர். இதில் மாப்பிள்ளை காவி உடையோடு அமர்ந்திருப்பார். தனது மற்ற தேவைக்காகச் சுற்றித் திரிந்த துல்ஹா அதன் மீதுள்ள பற்றைத் துறந்து, திருமண வாழ்வில் அடியெடுத்து வைப்பதற்காகச் செய்யப்படும் ஹோமம் ஆகும்.

 ரகுவீர், தன் மாஷா தந்த காவி வண்ண தோதி, துண்டோடு வந்து அமர்ந்தான். பண்டிட்ஜி அவன் கையில் தண்ணீர் விட்டுச் சுத்தம் செய்து விட்டு ஹோமத்தை ஆரம்பித்தார். ராத்தோட் அனைவரும் அதில் கலந்து கொண்டனர்.

 கீழே எதையோ கேட்க வந்த பாலன் இதனைப் பார்த்து விட்டு அப்படியே மேலே ஏறிவிட்டான். நேரே ஹாலில் இருந்த சிவாப்பா ராகினியம்மாவிடம் சென்று நின்றவன், "அம்மா இது என்ன அத்தானைச் சாமியார் ஆக்கிக்கிட்டு இருக்கிறார்கள்." எனக் கேட்டான்.

 "என்னடா சொல்ற கல்யாண மாப்பிள்ளையை எதற்கு அப்படிச் செய்வாங்க?" என வந்தார் தெய்வா. ராகினி பதில் சொல்லும் முன் ஆளுக்கொரு கருத்துச் சொன்னார்கள். சுவாரஸ்யமான அந்தப் பேச்சைச் சிரித்தபடி கேட்டு நின்றார் ராகினி.

"ஜானகிட்ட மாட்டிட்டு முழிக்கிறதுக்குப் பதிலா சாமியார் ஆகலாமென்று முடிவெடுத்துட்டாரோ?" என்றான் சங்கரப்பாண்டி.

 "அண்ணன், நாம போய்ச் சொல்லுவோம், எங்கள் ஜானகி அவ்வளவு டெரர் கிடையாதுன்னு." என்றான் சந்தன பாண்டி. இவர்கள் பேசும் போதே வந்த ஜானகி, "ஹலோ, அப்படிப் பார்த்தா எங்கள் அக்கா இரண்டு பேரும் உங்களைக் கட்டுகிறதுக்கு முன்னாலேயே மடத்தில் போய்ச் சேர்ந்திருப்பாங்க." என்றாள்.

 

"யாரு உங்க அக்காளுங்க, நல்லாச் சொன்னப் போ, ஏவுனு வேலையைச் செய்ய அடிமை புருஷனுங்க இருக்கும் போது எதற்குப் போறாளுங்க. நாங்கள் தான் சன்னியாசம் போகணும்." என்றான் பெரியவன். 

"நல்லாப் போனாரு உங்க அயித்தான், மொட்டை மாடிக்குக் கூட ஏற மாட்டார்." என்றாள் சித்ரா. "அப்புறம் எதுக்குடி உங்களைக் கட்டிவச்சது." என்றார் சுந்தரவள்ளி.

 "உங்கள் பஞ்சாயத்தை விடுங்கள், அத்தான் சாமியார் ஆகாமல் இருக்க நம்ம என்ன செய்யவேண்டும். ஜானும்மா நீ ஏதாவது சண்டை போட்டியா?" என்றான் பாலன். "ஜானி சண்டை போடறதுக்கெல்லாம், சாமியாராகனும்னா, நாங்கள் வந்த அன்னைக்கே அண்ணன் சாமியார் ஆகியிருப்பார்." என்றாள் அமிர்தா.

"அடியே கூடவே இருந்துக்கிட்டுச் சப்போர்ட் மட்டும் அண்ணனுக்கா." என்றாள் ஜானகி. ராகினி இவர்கள் பேசுவதில் சிரித்து முடித்தவர், "அதுக்குப் பேர் 'ஜானேவ்' னு சொல்லுவோம். தேவையில்லாத பற்றைத் துறந்து புனிதமான இல்லற வாழ்க்கைக்கு வருவதற்காக அனுமதி." என்றார் ராகினி.

"சாமியார் ட்ரெஸ்சிலையா அனுமதி வாங்கனும். ஐயர் வீட்டில் காசி யாத்திரை மாதிரியா இருக்கும்." என்றார் சிவகாமி.

"இதைச் செய்துகிட்டா தான் மாப்பிள்ளை, ஷாதி செய்யத் தகுதியானவராக ஆவார். பூணூல் போட்டுவிடுவாங்க." என்றார் ராகினி.

"ஜானகி, பூணூல் போடுவாங்களாமே, கறி மீன் சாப்பிட மாட்டாங்களா?" என்றார் சுந்தரவள்ளி. "வீட்டில் சமைக்கிறது இல்லை அத்தை. ஆனால் வீரூஜி, தவிர்க்க முடியாத பிஸ்னஸ் மீட்டில் சாப்பிட்டுப் பழக்கம் உண்டென்று சொன்னாங்க." என்றாள் ஜானகி. "அப்ப உன் வீட்டுக்கு வந்தால் பருப்பும், இனிப்பும் தான் சாப்பிடனும்." எனக் குறைபட்டார் அத்தை.

"உங்கள் மகன் கிட்டச் சொல்லி மீன் பொரித்துத் தரச் சொல்கிறேன். கடல் பக்கத்தில் தானே இருக்கு. அந்த ரிசார்டில் கூடப் பொரித்த வாடை வந்துச்சு." என்றாள் ஜானகி. "எந்த ரிசார்ட்ல மீனு பொரிக்கிறானுங்க?" என அத்தை வெள்ளந்தியாகக் கேட்டு விட்டார். 

ஜானகி முகம் போன போக்கில் சுதாரித்த அப்பத்தா, "காலை நேரம் அரட்டையா அடிக்கிறீங்க. ஜானகி நீ போய்க் குளிச்சிட்டு வா, மஞ்சள்  பூச வந்திடுவாகல்ல." என்றார். ஜானகி ரூமிற்குள் சென்றுவிட்டாள்.

"என்னது மஞ்சள் தண்ணீர் ஊற்றுவோமே, சடங்குக்குத் தானே ஊற்றுவோம், கல்யாணத்துக்கு எதற்கு?" என்றாள் அமிர்தாவின் அண்ணி கவிதா.

 

"இங்கே அந்த முறை இருக்கு கவிதா, மாப்பிள்ளைக்குச் சந்தனம் மஞ்சள் கலந்து கால் கையில் பூசுவார்கள், அவர்கள் மேல் பூசிய ஹல்தியில் கொஞ்சம் எடுத்துக் கிண்ணத்தில் போட்டு, இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கொண்டு வந்து பெண்ணுக்கு பூசுவாங்க." என்றார் ராகினி.

ரகுவீருக்கு ஜான்வே சடங்கு முடித்துப் பூணூல் அணிவித்தனர். அதே பண்டிட்ஜி பெண் வீட்டுக்கு வந்து, அதாவது ஜானகி தங்கிய மாடிக்கு, ஒரு தூணில் பூஜை செய்து கயிறு கட்டினார். இது 'தம்ப்  பூஜா' என்று அழைக்கப்படுகிறது. இது இரு குடும்பத்தாருக்கும் நல்ல பிணைப்பு உருவாக்க நடத்தப்படும் சடங்கு ஆகும். இதை முடித்த பின்னர் ராத்தோட்ஸ் பதினோரு பிராமணர்களுக்கு, துணி பணம் வைத்துக் கொடுத்து சாப்பாடு போட்டு அனுப்பினர்.

ரகுவீர் வெள்ளை பைஜாமாவுடன், கழுத்தில் துண்டு மட்டும் போட்டு அமர்ந்திருந்தான். "ஹல்தி" சடங்கு ஆரம்பமானது. தாதாஷா, தாதிஷா விலிருந்து வரிசையாகச் சந்தனம், மஞ்சள், பன்னீர் விட்டுக் குழைக்கப்பட்ட ஹல்தியை மாவிலை கொண்டு பூசினர். தொடர்ந்து அமர்சிங், ஹரிணி என ராத்தோடகள் பூச சிவமாளிகை ஆண்கள் மற்றும் ராகினி வந்து ஹல்தி பூசினர்.

ரகுவீர், காலையில் தன் லுகாயி அனுப்பிய குறுஞ்செய்திகளால் முழுச் சந்தோஷத்திலிருந்தான். அவனின் முகம் மாப்பிள்ளைக் கலை பூசி இருந்தது. அனைவரும் திருப்தியுடன் மகிழ்ந்தனர். அவன் மேனியிலிருந்து வழித்து எடுக்கப்பட்ட ஹல்தியோடு ஷப்னம் இன்னும் கொஞ்சம் சேர்த்து ஹல்தி கரைத்தார். ஆண்களைக் கீழே விட்டு விட்டு, பெண்கள் மட்டும் மேல் தளம் சென்றனர்.

மொட்டை மாடியில் ஹல்திக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அங்கே இருக்கும் சிறிய நீச்சல் குளத்தில் பூக்களால் அலங்கரித்துப் பன்னீர் ரோஜாப்பூ போட்டு வைத்திருந்தனர்.

ஜானகி, ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ், பாவாடை தாவணியில் இருந்தாள். கழுத்து,கை காது, கால்,இடுப்புத் தலையில் சூட்டி முதற்கொண்டு மல்லிகை, செவ்வந்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூக்களால் ஆன நகைகள். கந்தர்வக்கன்னியாக இருந்தாள்.

மயக்கும் பார்வையில் தன்னைச் செல்பி எடுத்து ரகுவீருக்கு அனுப்பி வைத்தாள். பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்டோன் பென்சில் உட்காரவைத்து, ஜானகிக்கு ஷப்னம் முதலில் ஹல்தி பூசினார். மஞ்சரி, மயூரி, அமிர்தா, தீப்தி, சாந்தினி எனக் கன்னியர் கூட்டமும் சூழ்ந்து பாடல்களைப் பாடினர்.

 

அமிர்தா, சிவகாமிச் சொல்லித் தந்த நலங்குப் பாடலைப் பாடினாள்.

"கந்தமலர் மீதுறையும் கட்டழகி சீதை.

இந்துமுகச் சுந்தரம் சேர் ராமர் மகிழ் கோதை.!

கோசலைக் குமாரனே கல்யாண ராமா

கெளசிகரின் வேள்விதனைக் காத்த பரந்தாமா!

கல்லைப் பெண்ணாக்கி வைத்த கமலமலர் பாதா.

தொல்லுலகில் கீர்த்தி மிகு துரையே ரகுவீரா!

சிவதனுசைத் தான் முறித்த சீர் மிகுந்த தோளா.

புவனம் புகழ் சனகர் பெற்ற ஜானகி மணவாளா!

வீட்டுப் பெண்கள் யாவரும் மஞ்சள் பூசி ஜானகியின் சிவந்த கன்னத்தை மறைத்தனர். தீப்தியும், சாந்தினியும், தங்கள் திறமைக்குத் தீனியாக இருந்த ஜானகியின் அழகை கேமராவில் சிறைபிடித்தனர்.

மாமியார், நாத்தனார், அம்மா, பாட்டி, தோழிகள் என அனைவரும் வரிசையாகப் பூசி மகிழ்ந்தனர். அதன் பின்னர் அவளை, கைத் தாங்களாகக் குளத்தில், இறக்கி வாசனைத் திரவம், பன்னீர் பால் என ஊற்றிக் குளிக்கவைத்து, நிஜமான "கும்ரிஷா" வாக ராஜகுமாரியாக நடத்தினர். 

மஞ்சளையும் தாண்டி நாணத்தில் சிவந்து ஜானகியின் முகம். தோழிகள் தங்கள் பங்குக்கு, ஜானகியைக் கிண்டல் கேலி செய்தனர். பாலை ஊற்றி மாலிஷ் செய்த மயூரி, "பளபளப்பா மாற்றினால் தான் படே பையா மயங்கி விழுவார்." என்றாள். "அதில் இல்லடி மயூ, வாசனைத் திரவங்கள் வாசனையில் ஜீஜூஷா கிறங்கிடுவார்." என்றாள் மஞ்சரி. "இந்தப் போஸில் போட்டோவை படேபையாக்கு அனுப்புறேன், ஆள் க்ளோஸ்." என்றாள் தீப்தி.

"போங்கடி, போங்கடி." என ஜானகி அவர்கள் மேல் தண்ணீர் அள்ளி வீசினாள்.

"மயூ, மஞ்சி ஏண்டி ஜானியை வம்பிழுக்குறீங்க. அம்மணி ஆல்ரெடி அண்ணன் மேலே மன்மதன் அம்பு விட்டுட்டு வந்திருக்காடி." என மொபைல் கேலரியில் இருந்த பிச்சரைக் காட்டினாள்.

"ஓஹோ, நாமெல்லாம் ஜானி கிட்டப் படிக்க வேண்டியது நிறைய இருக்கிறது." என்றாள் மஞ்சரி. இதே போல் கேலி கிண்டலுடன் ஹல்தி நிகழ்ச்சி நடைபெறும்போது, அரேபியக் கடலின் காற்று வந்து இவளைத் தீண்டிச் சென்றது. கன்னியாக இவள் சிற்றிடையில் பாவாடைக் கட்டி தாவணி உடுத்தும் கடைசி முறை. இனி அதை உடுத்த அவள் திருமதியாக ஆகியிருப்பாள். 

அவள் மேனி தழுவி நின்ற தாவணி அவளுக்கு வாழ்த்துச் சொன்னது. இதே போல் மஞ்சள் நீராட்டி மாராப்பு போட்டப் பூ அவள். இன்று மஞ்சள் நீராடி மன்னவன் மஞ்சம் நிறைக்கச் செல்கிறாள். எத்தனை முறை அவள் ஆசைக்கும், அம்மா, அப்பத்தாவின் ஆசை நிறைவேற்றவென அணிந்திருப்பாள். தமிழ் நாட்டில் கட்டும் தாவணியே அழகுதான். இன்று மூழ்கி எழும் ஜானகி, தன் பாவாடை தாவணி ஆடைக்கும் முழுக்குப் போடுகிறாள். தாவணி கனவுகளைச் சுமந்து தன் 'வீரூஜி' யை மணம் முடிக்க மணம் கமழும் நீரில் நீராடி மணப்பெண்ணாய் பூச்சூட சிவகுரு ராகினியின் சீமந்தப் புத்திரி தயாரானாள்.

ஜானகி, அகத்தில் மறைத்துக் கண்ட கனாவெல்லாம், நிஜத்தில் உருவெடுத்து, தன் மணம் கவர்ந்த மணாளனாம் ரகுவீரனைக் கரம் பிடிக்க மண்டபம் நோக்கிப் புறப்படும் நேரம் வந்தது.

தங்கள் குலதெய்வத்தை மனதில் நிறுத்தி தாத்தா சிவபரங்கிரி திருநீறு பூசிவிட்டார். மீனாட்சியை வழிபட்டு அப்பத்தா சிவகாமி குங்குமப் பொட்டு வைத்தார். அண்ணன் மகள் சிறப்பாய் மங்கள நாண் கட்டிக் கொள்ள அத்தை சுந்தரவள்ளியும், மாமன் முருகானந்தமும் ஆசீர்வதித்தனர்.

சண்முகமும், தெய்வாவும் தம் மணிவயிறு பெறாத தங்கள் பெண் பிள்ளையை உச்சி முகர்ந்து வாழ்த்தினர். தான் பெற்ற மகள் தன் பிறந்த வீட்டு மருமகளாய் குல விளக்கு ஏந்திச் செல்லும், தான் தூக்கி வளர்த்த மருமகனின் மனம் நிறைக்கச் செல்லும் மகளை ராகினி உள்ளம் பூரிக்கப் பார்த்து நின்றார்.

தன் உயிரின் பாதியாய் உருவி வளர்த்த மகள், ஜானகி சிவகுரு நாதனாக இங்கிருந்து செல்லும் செல்வமகள், வரும் போது ஜானகி ரகுவீராக வருவாள். கன்னியான தன் மகளைத் தானம் செய்யும் சுகம், நாளைய குடும்பம் தழைக்கத் தகப்பன் தரும் கன்னிகாதானம். மகளை அழைத்துச் செல்கையில் தன் உரிமையையும் தாரை வார்க்கப் போவதாக எண்ணி தாரையாகக் கண்ணீர் வடித்த தகப்பனைக் கட்டியணைத்து அழுதாள் பொன்மகள் ஜானகி தேவி. கூடப் பிறந்த தன் தங்கையை மாற்றான் தோட்டத்தை நிறைக்கவென அண்ணன் அமுதன் கூட்டிச் செல்கிறான்.

முன்னும், பின்னும் வாகனங்களின் அணிவரிசை நடு நாயகமாய் ஜானகி பெற்றோருடன் பயணம் செய்தாள். சைலேந்தர் ராத்தோட் பாதுகாப்பு ஏற்பாட்டை ஸ்பெஷல் அனுமதியின் பேரில் ஏற்றிருந்தான். ரகுவீர் ஒவ்வொரு மணித் துளி அப்டேட்டுடன் காத்திருந்தான். தான் பாராத் மாப்பிள்ளை ஊர்வலம் கொண்டு செல்லும் நேரத்திற்காகத் தவித்துக் கொண்டிருந்தான்.

 

ராகேஷ் ரெனாவத், ருத்ரநாத் பவாரியா சிறையில் இருந்து தப்பியது உறுதி செய்யப்பட்டது. எனவே சைலேந்தர் மிகவும் கவனமாக ஏற்பாடுகளை மேற்பார்வை இட்டான். மண்டபத்தின், உணவு அலங்காரம், பீடாவாலா, சர்வீஸ், மேளம், பஞ்சாராக்கள் என அனைவரையும் போட்டோ எடுத்து சிப்போடு கார்ட் கொடுத்தே உள்ளே அனுப்பினர். போட்டோ எடுக்கும் போதே, அது ரெனாவத், பவாரியாவுடனும் மேட் செய்து ரிசல்ட் சொல்லும் விதமாக, ராத்தோட்ஸ் செக்யூரிட்டி சிஸ்டம் அப்டேட் செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் ராகேஷ் எல்லாவற்றையும் தாண்டி தொலைவிலிருந்து கண்காணித்துக் கொண்டிருந்தான். ஜானகி ஷாதிக்கு ஒப்புக்கொள்ள மாட்டாள் என்று நினைத்திருந்தான். ஆனால் சகாயீ முடிந்து மூன்று நாட்களில் ஷாதி என்ற செய்தி அவன் காதுகளை எட்டி இருந்தது. அதன் படி, அவனுடைய சகாக்களை வைத்து வெளியே தப்பித்து விட்டான். ஜானகியை பழி வாங்கிய பின்னர் ஒரு மாஃபியா கேங்குடன் போட் ஏற ப்ளான் செய்து விட்டான்.

 ஷாதி மண்டபத்திற்குள் நுழையும் வழியை ராத்தோட்ஸ் அடைத்திருந்தனர். உறவினர்கள், நண்பர்கள் என இருநூறு பேருக்கு மட்டுமே அழைப்பு. அதனால் அவர்களின் போட்டோக்களும் இருந்தது  எனவே ஷாதிக்கு வரும் எல்லாரும் அடையாளம் கண்ட பின்னே உள்ளே அனுப்பப் பட்டனர்.

சமையல் வெளியே செய்து இங்குக் கொண்டு வர இருப்பதால், கத்தி போன்ற ஆயுதங்களுக்கும் அனுமதி இல்லை. ஏசி மண்டபம், குறைந்த எண்ணிக்கையில் ஆட்கள் என்பதால் சுலபமாக இருந்தது.

சிவமாளிகை ஆட்கள் மண்டபத்திற்கு வந்து விட்டனர். இவர்களோடு ஹேமந்த், பல்லாஜீ, பாண்டேஜி, ரெட்டிகாரு பேமலியும் ஆஜர். இவர்கள் அனைவரும் பெண் வீட்டுச் சார்பாக வந்தனர். ஜானகிக்கு அலங்காரம் செய்ய ப்யூட்டி பார்லர் பெண்கள் காத்திருந்தனர். சிவகாமி மாத்திரை போட்டிருக்கும் பேத்தி, ஒரு மணிநேரம் தூங்கிய பின்னர் ஆரம்பிக்கலாம் என அவர்களைக் காக்க வைத்திருந்தார்.

ஆறுமணிக்கு பாராத் கிளம்பி ஏழு மணிக்கு வந்து சேரும். இரவு உணவை முடித்து ஒன்பது மணிக்கு முகூர்த்தம் ஆரம்பிக்கும். சிவ மாளிகை சொந்தங்களுக்கு இந்தத் திருமணம் ஏற்பாடு எல்லாம் வித்தியாசமாக இருந்தது. ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 மாலை ஐந்து மணி, ராத்தோட்ஸ் ஸ்வர்ண மஹலில், அவர்களது பூஜா மண்டபத்தில் ஆரத்திக் காட்டி தாதிஷா ரகுவீருக்குத் திலகம் இட்டார். ராத்தோட்ஸ் அனைவரும் தங்கள் பாணியில் ராயல் ஆடைகளில் தயாராகி இருந்தனர்.

 

ஆண்கள் ஒரே மாதிரியான டர்பன் தலைப்பாகை கட்டி இருந்தனர். பெண்களில் பெரியவர்கள் மும்பை வாசிகளாக மாறியிருந்ததனால், வேலைப்பாட்டுடன் கூடிய விலையுயர்ந்த மெல்லிய சேலை முக்காடு அணிய ஏற்றது போல் அணிந்திருந்தனர். ஹரிணி, மயூரி ஆரஞ்சு வண்ணத்தில் லெஹங்கா பாவாடை, ப்ளவுஸ், ப்ளூ வண்ணத்தில் வேலைப்பாட்டோடு கூடிய தாவணி, குட்டி ஹாசினியும், மாம்&மீ கலெக்ஷன் லெஹங்கா உடுத்தி இருந்தது.

ரகுவீருக்கு, 'நகாஷி' எனும் சடங்கு, கண்களில் மை எழுதி, முகத்தை மறைத்து, முத்து மாலையால் ஆன ஸெஹ்ரா கட்டுவது. ஹரிணி, ரகுவீர் கண்களுக்கு மை எழுதினாள். மயூரி 'ஸெஹ்ரா' கட்டினாள். தாதாஷா,' வாள்-தல்வார்' அலங்கரிக்கப்பட்ட உறையுடன் கூடியதை ரகுவீர் கையில் கொடுத்தார். இது பரம்பரையாக அவர்களிடம் இருப்பது. ரகுவீர் இதற்கு முன்னரே தன்னுடைய செர்வானி பாக்கெட்டில் ஒரு 'கன்' பத்திரப்படுத்தி இருந்தான்.

ரகுவீர் கோல்டன் கலர் ஷெர்வானியில், தலையில் சிவப்பு டர்பன் நவரத்தினங்களால் கோர்க்கப்பட்டு அணிந்திருந்தான். முகத்தில் சந்தோஷத்தோடு சேர்ந்து பதட்டமும் ஏறியிருந்தது. தன் மிர்ச்சி டார்லிங் அனுப்பிய ஹல்திக்கு முன் செல்பி, ஹல்தியோடு அவளின் நனைந்த அழகில் ரகசியமாகத் தீப்தியிடம் இருந்து சுட்டு ப்ளையிங் கிஸ் பறக்கவிட்டு அனுப்பி இருந்தாள். அதில் கிறங்கி இருந்தான் ரகுவீர்.

'மேரிஜான், கொன்னுட்டடி." என ஏக்கமாக இதயத்தில் அம்பு பாய்ந்த ஜிஐஎப் மெஸேஜ் அனுப்பி வைத்தான்.

ஜானகியின் நினைவில், எத்தனை மனக்காயங்கள் அவளுக்குப் பட்டாலும், அதை ஆற்றும் சக்தி தன்னிடம் இருப்பதை உணர்ந்தான் ரகுவீர். அது முதல் மகிழ்ச்சி சூழ்ந்தது அவனை. வழக்கமான ஸ்ப்ரே, பவுடரிலேயே ஹேண்ட்சம்மாக இருந்தான், ரகுவீர் சிங் ராத்தோட். கழுத்தில் அவன் மாஷா போட்டுவிட்ட சிவப்பு ஜேட் மணிகள், அதனில் தொங்கிய நவரத்தின டாலர் என வாளும் சேர்ந்து, ரியல் ராஜ்புத்தான் ராஜாவாக இருந்தான்.

பாராத், மாப்பிள்ளை ஊர்வலம் தயாரானது. முன்னே பேண்ட் வாத்தியம், இராஜஸ்தானி டோல் அடி பட்டையைக் கிளப்ப, அவர்கள் வளர்க்கும் குதிரை, எனவே பழக்கம் இருந்தது ரகுவீருக்கு. அலங்கரிக்கப்பட்ட குதிரையில் ஏறி அமர்ந்தான். அவனுக்கு முன்னே கூமர் ஆடும் பஞ்சாராக்கள், பேண்ட் வாத்தியம், சைடில் ராஜ் வீர், ரன்வீர், சைலேன், அமர்சிங் பைக்கில் வந்தனர். திறந்தவெளி ஹை எண்ட் காரில் ராத்தோட்கள் வந்தனர். சௌஹான், டாக்கூர் போன்ற சம்பந்திகள், சில பங்காளிகளும், இவர்களோடு இணைந்தனர்.

 

முன்னால் வெடி வெடித்து, வண்ணப் பட்டாசுகள் கொளுத்தி, பஞ்சாராக்களின் கூமர் நடனத்துடன், ஜானகியின் ஜானாவாசம், ரகுவீரின் பாராத் ஷாதி மண்டபத்தை நேக்கிப் புறப்பட்டது.

ஜானகி சர்வ அலங்கார பூசிதையாகத் தன் மணாளனுக்காகக் காத்திருந்தாள். மண்டபத்தின் வாசலில் ராகினி மருமகனை வரவேற்க, இராஜஸ்தானி முறைப்படி பானைக்கலையம், ஆரத்தி தட்டு, வேப்பிலை கொத்து, நூல் கயிறு எனச் சகலத்தோடு தயாராக இருந்தாள்.

சிவ மாளிகை பெண்கள் அவர்களோடு, பர்க்கா, ப்ரீத்தோ, பார்வதி, பங்குரி, சிம்மி, பிங்கி என இவர்களும் ராகினி வைத்துக் கொடுத்த பட்டுச் சேலையில் பாங்குடன் தமிழ் நாட்டுப் பெண்களாக மாறி இருந்தனர். மஞ்சரி இங்கி, பிங்கிப் போட்டுக் கடைசியாக ராத்தோட் பஹுவாக இல்லாமல், சிவகுரு நண்பர் மகளாகச் சேலையில் அம்சமாக இருந்தாள்.

ஆண்கள் அனைவரும், பட்டு வேஷ்டி, பட்டுச் சட்டையில் அங்கவஸ்திரம் அணிந்து தமிழராக இருந்தனர். சர்ப்ரைஸ் விசிட்டாக, அமித் பாண்டே, ஆரவ் பாண்டே, ஜெய் பல்லா, ஶ்ரீநிதி, ஶ்ரீமதி கணவனுடன் என வராத விருந்தினரும் வந்து சேர்ந்தனர். பெண் வீட்டுப் பக்கம் வெயிட்டாக, தமிழகத் திருமணம் போல் இருந்தது.

வாசலில், ஜண்டை மேளம், நாதஸ்வரம் எல்லாம் ஏற்பாடு செய்திருந்தனர். கரகாட்டம் முதலிய கிராமிய கலைகளை அழைக்க முடியவில்லையே என வருத்தத்திலிருந்தார் சண்முகம். ஜானகியின் பாராத் மண்டபத்தை அடைந்தே விட்டது. அந்த நாளும் வந்திடாதோ என மீராவாக உருகிய ஜானகியின் மாயக் கண்ணன் வீரு மாப்பிள்ளையாக வந்துவிட்டான். சிவதனுசை முறித்த ராமனில்லை இவன். சிவகுரு மகளின் மனம் கவர்ந்த ரகுவீரன்.

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!

பரமானந்தம் ஆனந்தம் ஆனந்தமே!

ரகுவீரும் மணமகன் ஆனானே!

ஜானகியும் மணமகள் ஆனாளே!

மாப்பிள்ளை ஊர்வலம் வந்ததுவே!

மணமகள் ஜெயமாலையிட தயாரானாளே!

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!

பரமானந்தம் ஆனந்தம் ஆனந்தமே!

'பாராத்' உடன் வந்த அனைவருக்கும் நல்வரவு. பாராத் வரவேற்பு, ஜெயமாலா, கன்னிகா தான், பேரே, ஷப்தபதி எனக் கல்யாணம் கலைக் கட்டுகிறது. தவறாமல் வாருங்கள் ஜானகி-ரகுவீர் கல்யாண வைபவம் முடித்துப் போஜனம் செய்யலாம். 

 

0 கருத்துகள்
ஒரு கருத்தை விடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது, தேவையான கோப்புகள் குறிக்கப்படும்*.

இருவாச்சி வலைப்பதிவுகள், புதிய இடுகைகள் பற்றிய அறிவிப்பை பெற!