தொடர் : 63
உங்கள் இன்பாக்ஸில் சிறந்த வலைப்பதிவுக் கதைகளைப் பெறுங்கள்
பூமழைத் தூவி சொந்தங்கள் வாழ்த்த இருமனம் இணையும் திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்க ஜானகி தயாராக நின்றாள். சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாக இருந்தவள், உண்மையில் ரகுவீரின் ஜானகியாகப் போகிறாள். கனவு மெய்ப்படும் நேரம் வந்தது.
பாராத், மண்டப வாசலை அடைந்தது. எதிர்சேவைச் செய்து, மாப்பிள்ளையை அழைத்து வரும் மரபு உண்டு. மணமகளைப் பெற்றவரும், உற்றவரும் ரகுவீரனை வரவேற்க வாசலுக்கு வந்தனர். நாதஸ்வரம் மேளம் ஒரு புறம் முழங்க, அது அடங்கும் போது கேரள ஜண்டை மேளம் இடியென முழங்கியது, அது ஓயும் போது, பேண்ட் வாத்தியம் ஒலித்தது. சுழற்சி முறையில் வாசித்து எல்லாம் சேர்ந்து உச்சம் அடைந்த போது, "தோரண் சூனா" என்ற சடங்கை ரகுவீர் தன் குதிரை மேலிருந்து எட்டித் தோரணத்தை வாளினால் தொட்டான்.
வாத்தியங்கள், ஒருவருக்கு ஒருவர் இயைந்து இனிமையைக் கூட்ட, வேட்டிக் கட்டிய தமிழர் கூட்டம் பெண் வீட்டார் இருகரம் கூப்பிச் சம்பந்திகளை வரவேற்றனர். சம்பந்தி வீட்டாருக்கு மாலையிட்டு மரியாதை செய்து அழைத்தனர்.
ரகுவீர் குதிரையிலிருந்து இறங்கினான். ஸ்வர்ண ராகினி, பெண்ணின் தாயார் வரவேற்கும் முறை செய்ய வந்தார். தமிழ் நாட்டு மருமகளாய் சேலை உடுத்தி, இராஜஸ்தானி சடங்குக்காக முக்காடு இட்டு இருந்தார்.
முதலில் ஆரத்தி தட்டில் விளக்கு ஏற்றிச் சுற்றியவர், "பதாரே ஜாமாயிஷா" என்று திலகமிட்டார். அடுத்துப் பானை தலையில் வைத்துக் குனியப் போனார் ராகினி, "புவாஷா ருகியே." என ரகுவீர் உயரே எட்டி சடங்கு காசை அதில் போட்டான். அடுத்து வேப்பிலை கொப்பால் உச்சந்தலை முதல் பாதம் வரை தட்டினார்.
கடைசியில் ஒரு நூற்கண்டால் ரகுவீர் பாதம் முதல் நூலைப் பிடித்து உச்சந்தலை வரை ஏறுமுகமாக வைத்து, இறங்குமுகமாக இறக்கி பின்னர் அதே நூலை அவன் தலையைச் சுற்றித் தூக்கிப் போட்டார். ரூபாய் நோட்டுக் கொத்தாகச் சிவகுருவிடம் இருந்து வாங்கி, ஸ்பெஷலாக தன் வீருவுக்குத் திருஷ்டி கழித்து, பஞ்சாராக்களிடம் கொடுத்தார். இந்தச் சடங்கு முடியவும் ரகுவீர் ஆவலாக ஜானகியை எதிர் பார்த்தான். ஒருவழியாகச் சாசுமா சடங்கு முடிந்தது என ஜானகியைப் பார்க்க ஆவலாக நின்றிருந்தான்.
ஆனால் அவன் பொறுமைக்குச் சோதனையாக, அமிர்தா, மஞ்சரி, ஶ்ரீ சிஸ்டர்ஸ், தேனு, மானூ பல்லா ஃபேமலி எனப் பதினோரு பெண்கள், விதவிதமான ஆரத்தி தட்டுகளுடன் வந்து நின்றனர். ரகுவீர் புன்னகை மாறாமல் நின்றான். ஒவ்வொருவராய் அலங்காரா ஆரத்தி சுற்றி பணக்கட்டை வாங்கியே ரகுவீருக்கு வழிவிட்டனர்.
அமுதன், பாலன் சிவகணேஷ், அமித், ஆரவ், ஜெய் எனச் சிவகுரு வழி அத்தனை பேரும் ஜானகியின் சகோதரர்களாகப் பூப்பந்தல் பிடித்து வர ஜானகி நடுநாயகமாக, அடர் சிவப்பு வண்ணக் காஞ்சிப் பட்டில் வெள்ளி ஜரிகை டாலடிக்க தலையில் மெல்லிய வேலைப்பாட்டுடன் கூடிய 'கூங்கட்' (முக்காடு) அணிந்து அடிமேல் அடியெடுத்து வைத்து பதுமையென வந்தாள்.
நெற்றியில் 'மாங்க் டீக்கா' எனத் தங்கத்தில் ஜிமிக்கி உருண்டை போல் உருவாக்கப்பட்டு முத்து வைரம் பதிக்கப்பட்டு இருந்தது. 'நத்' எனப்படும் மூக்கு வளையம், தங்கம் முத்துக்களால் கோர்க்கப்பட்டு ஜடையில் மாட்டி இருந்தனர். காதுகளில் நெக்லஸ்க்குப் பொருத்தமான பெரிய தோடுகள், மாட்டல் காதைச் சுற்றி மாட்டியிருந்தாள். கை வளையல், தந்த நிற திருமணத்திற்குப் போடப்படும் வளையல்கள் மற்றும் கல், தங்க வளையல்கள், மணிக்கட்டிலிருந்து விரல்களைச் சேர்த்து அலங்கரிக்கும், 'ஹாத்பூல்' விரல்களில் மோதிரங்கள்.
சிவப்பு வண்ணக் காஞ்சிப் பட்டு, கழுத்தை ஒட்டிய நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட சோக்கர் நெக்லெஸ், அதைக் 'கன்தி' என அழைக்கின்றனர். அதன் கீழே பெரிய வைரம் மாணிக்கம் பதிக்கப்பட்ட, 'ராணி ஆரம்' அதன் கீழே இடுப்பில் ஒட்டியாணம் என அழைக்கப்படும் தங்கம் வெள்ளைக் கற்களால் ஆன, 'கமர் பந்த்' கால்களில் கெட்டி வெள்ளிக் கொலுசு, அவள் வரவைக் கொஞ்சி சொல்லியது. ஜடை அலங்காரம் சிவகாமிப் பாட்டி வழிக் காட்டலில் தமிழ்நாட்டு பாணியிலிருந்தது.
ஜானகியின் நகைகளைப் பார்த்து தாதாஷா, தாதிஷா, ராகினியைக் கேள்வியாக நோக்க, "ஆமாம் மாஷா, தாதிஷா எனக்குக் கொடுத்த நகைகள். பெண்வழி வாரிசு அதனால் ஜானகிக்குக் கொடுத்துவிட்டேன்." என்றார். தன் மாஷா தான் ஜானகியாக மறுபிறவி எடுத்தார் எனப் பூரணமாக நம்பினார் வீரேந்திர சிங் ராத்தோட். ஜானகியை நகைகளோடு பார்க்கவும், தன் மாஷா இந்த நகைகளை அணிந்திருந்து பார்த்தது நினைவில் வந்தது வீரேந்திர சிங் ராத்தோட்க்கு.
இந்த நகைக்காகவே ஷாதிக்குப் பாதுகாப்புக் கொடுக்கலாம். சிவகுரு முதலில் வந்துவிட்டதனால், தங்கள் வீட்டுச் சேஃபில் இருந்து பரம்பரை நகைகளை முருகானந்தத்தை எடுத்து வரச் சொன்னார்.
தலை குனிந்து ஜானகி தேவி,ரகுவீருக்கு முன்னால் வந்து நின்றாள். இருவரும் ஒருவரை மற்றொருவரைப் பார்க்க இயலாத முகத்திரை இருந்தது. ரகுவீர் "ஷெஹ்ரா" வைத் தூக்கி அவளைக் கூர்ந்து பார்த்தான். இருந்தும் திருப்தி இல்லை அவனுக்கு, நடுவில் ஒரு கூங்கட் மறைக்கிறதே.
நாதஸ்வரம் 'மாலை மாற்றினாள்' பாடலை வாசிக்க, ஜானகி கையில் ரோஜா இதழ்களால் ஆன மாலை வழங்கப்பட்டது. விழி உயர்த்தி அவனைப் பார்த்தாள், அவள் மாலை சூட்டும் முன் தன் உயரத்தை இன்னும் உயர்த்தி நிமிர்ந்து நின்றான் ரகுவீர்.
"ஜானிமா, இது தான் சவால், ரகுவி கழுத்தில் மாலை போடு பார்ப்போம்." என அவளின் மாமன்மார்களிலிருந்து அனைவரும் விளையாட, பக்கத்தில் திரும்பி அமுதனைப் பார்த்தாள், அண்ணன்கள், அலேக்காக ஜானகியைத் தூக்க, வெகு சுலபமாக ரகுவீர் கழுத்தில் மாலை போட்டாள்.
'வர்மாலா' ஜெயமாலையாக அவன் கழுத்தில் விழுந்தது. ரகுவீரிடம் மாலைக் கொடுக்கப்பட்டது, ஜானகியை இறக்கி விடாமல் சகோதரர்கள் தூக்கி இருந்தனர். ராஜ், ரன்வீர், சைலேன் மூவருமாக ரகுவீரைத் தூக்க, ஜானகி கழுத்தில் மாலையிட்டான்.
இருவரையும் ஜோடியாக உள்ளே அழைத்துச் செல்ல, சமயம் வாய்த்த போது, ஜானகியின் கையைத் தன் கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டான். நேரம் எட்டைக் கடந்தது.
அமித்பாண்டே ரகுவீரைக் கட்டியணைத்து, தன் பையா பாபியை அறிமுகம் செய்து வைத்தான். ஐஏஎஸ், ஆபிஸர்களான அவர்களின் கைபிடித்து நன்றி கூறினான் ரகுவீர்.
"ஜானகிக்குச் செய்யறது எங்கள் கடமை, இத்துனூண்டு குழந்தையிலிருந்து பார்க்கிறோம், பைனலி எங்கள் பஹனுக்கு அவள் 'வீரூஜி' கிடைத்துவிட்டார்." என்றான் ஆரவ்பாண்டே.
"எனக்குத்தான் கடைசியாத் தெரியுமா?" என ரகுவீர் கேட்டதற்கு, "இல்லை உங்கள் புவாஷா, பூஃபாஷா விற்குத் தான் கடைசியாகத் தெரியும். எங்கள் ஃப்ரண்ட்ஸ், கேங்க் எல்லாருக்கும் வீரூஜியைத் தெரியும்." எனச் சொல்லிச் சிரித்தனர்.
ராத்தோட் மருமகள்கள் ஷப்னம், ஸர்குன், பூனம் மூவரும், மணமேடையில் தேவையானதை செய்துக் கொண்டிருந்த தெய்வா சுந்தரவள்ளியுடன் சேர்ந்து வேலைகளை கவனித்தனர்.
பண்டிட்ஜியிடம் ஷப்னமும், ராகினியும் தமிழ் முறைப்படி மிஞ்சி அணிவிக்கும் சடங்கு போன்ற சிலவற்றைச் சேர்க்கச் சொன்னார்கள்,
மண்டபம் சௌகான்கள், டாக்கூர் செகாவத்துக்களென ராத்தோட் உறவினர்கள் மற்றும் சிவகுரு நண்பர்களால் நிறைந்தது.
ப்ரித்தோ, பார்க்கா, பார்வதி மூவரும் நாளை தங்கள் ஊருக்குச் செல்வதைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தனர். "நாமளும் இரண்டு வாரமா இவர்களோடே திரிகிறோம். பாவம் ராகினியும், பாய் சாப்பும் ரொம்பப் பயந்துட்டாங்க." எனப் பார்வதி சொன்னார்.
"ரகுவீர் நல்ல பையன் நிலைமை புரிந்து உடனே ஷாதியை வச்சிருச்சு." என்றார் பார்க்கா. "ஆமாம் பாபிஜி, ஜானகி மேல் உயிரையே வச்சிருக்கு நாமளும் பார்த்தோமே. ராகினி இனிமேலாவது நிம்மதியாக இருக்கட்டும்." என்றார் பிரித்தோ.
"பாபிஜி, ஸ்ரீ மேல் படிப்பு படிக்கவேண்டுமென்று சொல்கிறாள்." என்றார் பார்வதி. அங்கே வந்த ஆரவ் பாண்டேயின் மனைவி, "நான் இரண்டு பேர் கிட்டயும் பேசிட்டேன், டெல்லி, எய்ம்ஸில் நான் சீட் வாங்கித் தருகிறேன். ஆறு மாதம் கழித்து ஷாதி வைத்துக் கொள்ளலாம். நானும் ஸ்ரீமதியும் அதைத்தான் ஸ்ரீநிதிகிட்ட சொல்லிப் புரிய வைத்தோம்." என்றாள் .
'ரொம்பச் சந்தோசம் எங்கள் குழப்பத்தைத் தீர்த்துட்டே." என மகிழ்ந்தார் பார்வதி. "அப்ப அடுத்து அடுத்த ஷாதி ஹைதராபாத், டெல்லி, சிறுமலை, சண்டிகர்னு, இந்த வருஷம் முழுவதும் ஷாதி தான்." என்றார் ப்ரீத்தோ.
பார்க்கா, "நீங்க எப்போ பிங்கி ஷாதி வைக்கிறீங்க?" என்றார்.
"அமித், ஸ்ரீநீதி ஷாதியை ஒட்டி வைச்சுக்குவோம், அதற்குள் அமுதன் ஷாதி முடிஞ்சுடும்." என்றார் ப்ரீத்தோ.
பார்வதி, "ஜானகி ராசியானப் பொண்ணு தான், இவள் கல்யாணம் முடியவும், வரிசையா எல்லார் கல்யாணமும் முடியுது பாருங்கள்." என்றார்.
"படே பையா, நேரமாகிறது, முகூர்த்தம் ஆரம்பிக்கப் போகிறது, படிமாஷா வர சொன்னார்கள்." என்றான் ரன்வீர்
"என்ன சோட்டே சாலேஷா ரொம்ப ஆர்வமா எல்லாம் செய்கிறார், ரூட் கிளியர் ஆகிறதோ " என்றான் அமுதன்.
"நீங்க எல்லாரும் செட்டில் ஆகிட்டீங்க, எனக்குத் தான் ஒர்க்அவுட் ஆக மாட்டேங்குது." என சோகமாகச் சொன்னான் ரன்வீர்.
'யாரென்று சொல்லுங்க பேசுவோம், யார்கிட்ட பேசணும்." என்றான் அமுதன் "அப்படியே திரும்பி அமர் ஜிஜுஷா கிட்ட பேசுங்க, ஷாதி அப்புறம் பிக்ஸ் ஆனால் போதும்." என்றான்.
"கேமராக் கையில் தான் அடி வாங்குவியோ?" என்றான் அமுதன்.
"நான் வாங்குகிறது இருக்கட்டும் உங்கள் தம்பியும் அதே தான் கேட்பான் போல, அது கொஞ்சம் வில்லங்கம் பார்த்துக்குங்க." எனக் கணேஷ் சாந்தினியுடன் நின்றதைக் காட்டி கொளுத்திப் போட்டுவிட்டுப் போனான். இது ஏதடா வம்பு எனச் சகோதரர்கள் முழித்தனர்.
பின்னர்ப் பெரியவர்கள் சொன்னதின் பேரில், அமுதன், பாலன், கணேஷ் ரகுவீரை மணிமேடைக்கு அழைத்துச் சென்றனர்.
பண்டிட்ஜி, முகூர்த்த நேரம் ஆரம்பித்தது என அறிவிப்பு கொடுத்தார். ரகுவீரை அழைத்து வந்து அமர்த்தினர். விநாயகர் துதியோடு, கங்கணம் கட்டினர். மணப்பெண்ணை அழைத்துவரச் சொன்னார், ஜானகியைப் பெற்றோர், தோழிகள் அழைத்துவந்தனர். அவளுக்கும் கங்கணம் கட்டப்பட்டது. யாகம் வளர்த்து, அக்னியை வேண்டினர்.
சிவகுரு ராகினியுடன் தங்கள் திருமகளை அவள் மனம் கவர்ந்த ரகுவரனுக்குக் கன்னிகாதானம் செய்ய வந்தனர். ஜானகி கையில் வெற்றிலை பாக்கு, மஞ்சள், பூ வைத்து ரகுவீரின் கைகளில் வைத்து, பால், தண்ணீர் ஊற்றி தாரை வார்த்தனர். தாரைவார்த்த தருணம் சிவகுருவுக்குத் தன் உணர்வு என்னவென்றே புரியவில்லை.
அடுத்துப் பொரி ஆகுதி அக்னிக்குத் தருவது, ரகுவீர், ஜானகியின் பின்னே நின்று கையைச் சேர்த்துப் பிடித்துக் கொள்ள அமுதன் பொரி அள்ளி இவர்கள் கையில் போட்டான். அதை மணமக்கள் அக்னியில் போட்டனர். இது அக்னி தேவனைத் தங்கள் வீட்டு அடுக்களையில் அடுப்பு அணையாமல் அன்னம் எப்போதும் பஞ்சமின்றிப் பெறவேண்டும் என வேண்டுவது.
'பானிக்ரஹ்' ஜானகி கைக்கு மேலே ரகுவீரின் கையை வைத்து, அதில் அமுதன் கெண்டியில் தண்ணீர் ஊற்றினான். அந்தத் தண்ணீரை ரகுவீர் ஜானகி கையில் ஊற்றி. "உன்னை என்றும் அன்புடன் வைத்துக் கொள்வேன். என் உயிர் உனக்காகவே துடிக்கும், நீரின் சாட்சியாக மணந்து கொள்வோம் வா." என்று சத்தியம் செய்து அழைத்தான்.
அம்மி மிதித்தல், ஜானகியின் காலை அம்மியில் வைத்து, "நம்மை எதிர்க்கும் துர்க்குணம் கொண்டவர்களைக் கல்மனமாக இருந்து எதிர்ப்போம். நன்மை தீமையில் ஒன்றாகப் பயணிப்போம்." என ரகுவீர் சங்கல்பம் செய்தான். அதே நேரம் தமிழ் முறைப்படி மெட்டியை ரகுவீர் கைகளால் ஜானகிக்கு அணிவித்தனர்.
'கட்பந்தன்' ரகுவீர் தோள்களில் துணியைப் போட்டு அதனை ஜானகி முக்காட்டோடு இணைத்துக் கட்டுவர், ரகுவீர் அமிர்தாவை அழைத்துக் கட்டச் சொன்னான். அவர்கள் காதலுக்கு ஆதி முதலான சாட்சி அவள், சந்தோஷமாக முடிச்சுப் போட்டாள்.
அந்த நாளும் வந்த சுகத்தில் ரகுவீர் வலது கையை நீட்ட ஜானகி தன் கையை அவனிடம் ஒப்படைத்தாள். சில்லிட்ட அவள் கைக்கு, வெதுவெதுப்பான அவன் கரங்கள் ஆதரவு தந்தன. அவன் கையில் சிறைப்பட்டவள், தன் மனதையும் அவனுள் சிறை இருக்கக் கண்களால் தூது விட்டாள்.
'பிரே' அக்னி வலம் வருதல். முதல் நான்கு சுற்று மணமகள் முன்னால் செல்ல, மீதி மூன்று சுற்றுகளுக்கு மணமகன் முன்னே செல்வான். மங்கள வாத்தியங்கள் முழங்கியது, பண்டிட் மணமக்களை எழுந்து நிற்கச் சொன்னார்.
கைத்தலம் பற்றியவன் அவளை முன்னே கைப்பிடித்து அனுப்பிவிட்டான். ஜானகி அடிமேல் அடி வைத்து முன்னே சென்றாள். அவள் பின்னோடு ரகுவீர் வலம் வந்தான். ஒருவருக்கு ஒருவர் ஏழு சத்தியம் செய்து கொள்வார்கள். அக்னியைச் சாட்சியாக வைத்துச் செய்யும் இந்தச் சத்தியமே ஷாதி.
பண்டிட் ஏழு சத்தியங்களை ஸ்லோகங்களாகச் சொல்லச் சொன்னார். ரகுவீர், "பண்டிட்ஜி எங்கள் சத்தியத்தை நாங்களே சொல்வோம், ஜானும்மா சரிதானே?" என்றான்.
அவளும் சரி எனத் தலையை ஆட்டினாள். கூடி இருந்த ஷாதிக் கூட்டம் கலைக் கட்டியது, "ஆகா இதிலும் எங்கள் பேரன் பேத்தி புதுமை தான்." எனத் தாதாஷா சிலாகித்தார்.
முதல் சுற்று ஜானகி மெல்ல அடி எடுத்து வைத்தாள்.( "ரகுவீர் யோசிக்க நேரம் கொடுக்காதே!" எனக் கத்தியவர்களை ஜானகி பொருட்படுத்தவில்லை. இது அவள் வீரூஜி அவளுக்காகச் சொல்லும் சத்தியம்)
முதல் சுற்றில் ஜானகி மெல்ல அடியெடுத்து முன்னால் வந்தாள். அவள் நடக்க ஆரம்பித்ததும் தானும் பின் சென்று கொண்டே தனது முதல் வாக்கை சொன்னான் ரகுவீர், " எனது வாழ்க்கையின் வரமாக வந்தவளே! உனது தேவைகள், நல்வாழ்வு, மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் எனது பொறுப்பாகும். உன்னையும் நமது பிள்ளைகளையும் குறைவின்றி வாழவைப்பேன் என உறுதி அளிக்கிறேன்." என்றான் ரகுவீர்.
(வாரே வா எனக் கைதட்டினர்) பாதிச் சுற்றில் ரகுவீர் சொல்லி முடிக்க மீதி சுற்றில் ஜானகி, " பூர்வ ஜென்ம பந்தமாக வந்த என் வீரனே! ஏழேழு பிறவி எடுத்தாலும் நீங்கள் என் வரனாகவும், நான் உங்கள் வதுவாகவும் இருப்போம். நான் உங்கள் வீட்டையும், குடும்பத்தையும் பொறுப்பாகப் பார்த்துக் கொள்வேன் ,என உறுதியளிக்கிறேன்." எனச் சொல்லும் போதே நெகிழ்ந்தாள்.
இரண்டாம் சுற்றில் ரகுவீர்: " என் அன்பிற்குரிய ஜான்வியே, வாழ்க்கை முழுமைக்கும் , நான் உனக்கு நேர்மையானவனாகவும், உண்மையானவனாகவும் உனக்காக நின்றிருப்பேன். உன் மனம், உடல், பொருள், ஆகியவற்றைக் காத்து உனக்கு என்றும் துணையிருப்பேன்." என அவளது கரத்தில் அழுத்தம் தந்தான். அதைப் புரிந்து கொண்ட ஜானகி, "நினைவு தெரிந்த நாளிலிருந்து என்னுள் நிறைந்தவனே, உங்களுடைய எல்லாக் கடமைகளிலும் பொறுப்புகளிலும் நானே முன்வந்து என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன் என உளமார உறுதி அளிக்கிறேன்." என்ற போது ராத்தோட் குடும்பமே அவள் அதை ஏற்கெனவே செய்து விட்டாளே, என உணர்வு மிகுதியிலிருந்தது.
மூன்றாம் சுற்றில், பார்த்திருந்தவர் எதிர் பார்ப்பை ஏற்றிவிட்ட ரகுவீர் "என்னை முழுமையாய் ஆட்கொண்ட பிரியமானவளே, என் முழுத் திறனும், ஆற்றலும் கொண்டு செல்வ வளத்தைப் பெருக்குவேன். பொன் பொருள் குறைவின்றி வளமான வாழ்க்கைக்கு நான் பொறுப்பாவேன். நம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்து நன்மக்களாக ஆக்குவோம்." என்றான்.
பிள்ளை என்றதும் நாணமுற்ற அந்த அணங்கு ஜானகி, "எனக்காகத் துடிக்கும் என் இதயமே! நீங்கள் கொண்டு வரும் பொருள் கையளவே ஆனாலும் நான் குடும்பம் நடத்துவேன். நீரே என் வாழ்வின் முதலுரிமையாவீர். உம் கரம் பற்றி எல்லா இன்பம் துன்பத்திலும் பங்கேற்பேன்." என்றவளின் வார்த்தைகளில் பூரித்து நின்றான்.
அடுத்தச் சுற்று நடந்து கொண்டிருக்கச் சிலையெனச் சென்ற ரகுவீரை, "பையா அடுத்ததைச் சொல்லுங்கள்." என மயூரி சுயநினைவில் இழுத்துவரத் தொண்டை கரகரப்புடன், ரகுவீர், "என் மனதைக் கொள்ளைக் கொண்டவளே! ஷாதி எனும் இந்தப் பவித்ர பந்தத்தில் என்னுடன் இணைந்து பயணிக்க வந்தமைக்கு நன்றி. என் வாழ்வை வண்ணங்களால் வரைந்திட வா மேரி ஜான். நமது இரண்டு குடும்பத்தையும் அன்பால் அரவணைத்துச் செல்வோம். எந்த ஒரு விசயத்திலும் முடிவெடுக்கும் முன் உன்னை நான் கலந்தாலோசிப்பேன்." என நெகிழ்ச்சியாகச் சொன்னான்.
அவன் வார்த்தைகளால் விம்மிய நெஞ்சை அடக்கி ஜானகி தேவி, "என் வாழ்வின் வண்ணமே நீதானே என் அன்பே, நீங்கள் எடுக்கும் முடிவுகளில் நான் உடனிருப்பேன். நம் குடும்பம், சடங்குகள், சம்பிரதாயங்கள், பூஜை முதலான எல்லாவற்றிலும் உங்களோடு இணைந்திருப்பேன். வீரூஜி' உங்கள் வாழ்வில் வரும் தடைகள் எதுவாயினும், எனைக் கடந்தே உம்மிடம் வரும் இது சத்தியம்."
என ஜானகி உரைத்தபோது நான்காம் சுற்று முடிந்திருந்தது, அடுத்து ரகுவீர் முன்னால் போக வேண்டும். அவளின் கடைசி வாக்கியத்தில் கலங்கியவன் அவளை உச்சி முகர்ந்து முத்தமிட்டே முன்னேறினான்.
("செம ப்ரோ, இதுவரை இத்தனை ரொமான்டிக் 'பேரே' பார்த்தது இல்லை" என இளசுகள் கத்தினார்கள்)
அமர்சிங் ஹரிணியிடம், "ஹனி, உன் தம்பி எங்கிருந்து இந்த டயலாக் கற்றுக்கொண்டான் , ரொம்ப உணர்ச்சியோடு சொல்கிறானே!" என்றான்.
"பேசாமல் ஷாதி பாருங்கள், மற்றதை அவன் கிட்டயே கேட்போம்." என மிரட்டினாள் . ஐந்து, ஆறு, ஏழாம் சுற்றில் மாற்றி மாற்றிச் சத்தியங்களைச் சொல்லிக் கொண்டனர்.
*நாம் இன்ப துன்பங்களை நல்ல புரிதலுடனும், கவனமுடனும் பகிர்ந்து கொள்வோம்.
* நல்ல ஆரோக்கியமான குழந்தைகளை எமக்கு அளிக்கக் கடவுளை வேண்டுகிறோம்.
*எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பண்பும், மானிட புரிதலுடன் வாழக் கற்றுக் கொடுப்போம்.
*வாழ்வோ தாழ்வோ எந்தச் சூழ்நிலையிலும் அன்பும் காதலும் மதிப்பும் மரியாதையும் குன்றாமல் வாழ்க்கை முழுதும் வாழ்ந்திடுவோம்.
*வாழ்வில் மகிழ்ச்சியும், அன்பும் அமைதியும் தந்து எங்கள் கடமைகளை நாங்கள் செல்வனே செய்ய எல்லாம் வல்லக் கடவுள் அருள் புரிய வேண்டுகிறோம்.
*நாங்கள் இந்தப் புனித பந்தத்தை மதித்து இன்று முதல் கணவன் மனைவியாக உயிர் உள்ளவரை ஆத்மார்த்தமாக இணைகிறோம்.
* ஈருடல் ஓருயிராய் என்றும் இணைந்தே பயணிப்போம்.
"அன்பும் அரணும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது எனும் வள்ளுவன் வாக்கிற்கேற்ப வாழ்வோம்." என ஜானகி வாக்கு இது.
*இந்தச் சப்தபதி சத்தியத்தை உயிருள்ளவரைக் காப்போம். என ஏழு சுற்றுகளை முடித்து, சப்தபதி அடியும் வைத்து, ரகுவீருக்கு இதயத்தில் அமர்ந்தவள், சம்பிரதாயமாக இடப்புறம் அமரும் அர்தாங்கினியாக அமர்ந்தாள்.
கெட்டி மேளம் கொட்ட 'சிந்தூர் தான்' எனும் குங்குமம் வைக்கும் சடங்கை கூங்கட் வழியாகக் கை நீட்டி, வலம்புரிச் சங்கில் அள்ளி தனது பெயர் கொண்ட குங்குமத்தை மாங்க்டீக்காவை நிறைத்து , ஜானகியின் தலை வகிட்டில் நிறைத்தான். ஜானகி உள்ளம் நெகிழ்ந்து ஆனந்தக் கண்ணீர் உகுத்தாள்.
அடுத்து, தனது மாஷா தந்த கருகுமணியில் கோர்த்த வைரத் தாலியை அவள் சங்கு கழுத்தில் அணிவித்தான். சடங்கு சம்பிரதாயப்படி மந்திரங்கள் முழங்கப் பெற்றவரும் உற்றவரும் ஆசீர்வதிக்க, நண்பர்கள் மகிழ்ந்து கொண்டாடச் சுபமாக முடிந்தது ஜானகி தேவி ரகுவீரின் ஷாதி.
வந்திருந்த அனைவரும் மனதார வாழ்த்த, அட்சதை மலர்கள் தூவி, மணமக்களை அன்பில் திக்குமுக்காட வைத்தனர் உறவினர்கள். ராகினி தன் பாபுஷா, மாஷாவைக் கட்டிக் கொண்டு அழுதார். இது போல் தம் மகளைப் பார்க்கவில்லையே என அவர்களும் அழுதார்கள்.
அன்புள்ள அப்பாவா சிவாஜியாக மாறி இருந்த சிவகுருவை நண்பர்கள் நால்வரும் சேர்ந்து தேற்றினர். "இனிமே, என் ஜானு என் பேரை பின்னாடி போட மாட்டாள் தானே?" எனச் சிறு பிள்ளையாகக் கேட்ட தகப்பனை முதுகில் ஓர் அடி போட்டுச் சமாதானம் செய்தார் பல்லாஜீ.
ரகுவீர், "தாதிஷா இப்பவே முஹ் திகாயீ வையுங்கள், என்னால் முடியலை." எனக் கேட்ட பேரனுக்காகச் சரி என்றார் தாதிஷா. கையோடு அதையும் முடித்து, ராத்தோட்ஸ் சாப்பிடச் சென்றனர். பஹூவின் முகம் பார்த்தே விரதம் முடிக்கும் சம்பிரதாயம் உண்டு.
தாத்தா அப்பத்தா, தாதிஷா, தாதிஷா, நாநாஷா, நாநிஷா என அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கினர்.
ஜானகியை ஐந்து நிமிட பரோலில் ரகுவீரிடமிருந்து அழைத்துச் சென்ற அமிர்தா ப்யூட்டிசியன் உதவியால் தமிழ் பெண்ணாக மாற்றினாள்.
ரகுவீர் உள்ளே வந்து மற்றவரை வெளியே அனுப்பி விட்டு ஜானகியின் கொள்ளை அழகைக் கண்களால் அள்ள அள்ளப் பருகினான். அடக்க முடியா ஆசையுடன் அவளை அணைத்தான். அவள் இதழைச் சிறைபிடிக்க ஆசை தான், ஜானகியின் மனநிலை என்னவோ, அவன் யோசித்து நிற்கையில் அவளே அதைச் செய்தாள். தேன் பருகும் வண்டாக மயங்கியவன் கதவு தட்டும் ஓசையில் விலகி நின்றான். கண்களில் காதலோடு ஏங்கி நின்றவனை நினைவுலகில் இழுத்து வந்த ஜானகி, ட்ஸ்யூவை நீட்டினாள்.
அவன் என்ன என முழிக்கவும் கண்ணாடியில் காட்டினாள். "ஜானும்மா, இனிமே லிப்ஸ்டிக் போடாதடி. என் பிழைப்பு இப்படியா ஆகனும்?" எனப் புலம்பிக் கொண்டே வாஷ்ரூம் சென்றான்.
ஜானகி, "இந்த அமித்துவை?" என்றபடி கதவைத் திறக்க வெளியே ஷப்னமும், ராகினியும் நின்றனர்.
"எங்க உன் பதிதேவ்" என இருவரும் கோரசாகக் கேட்டனர். வெட்கம் பிடுங்கித் தள்ள வாஷ்ரூமைக் காட்டினாள். ராகினி அவள் மேக்கப்பை பார்த்து விட்டு, "ஜானும்மா லிப்ஸ்டிக் சரியாகவே போடலை." எனப் போட்டு விட்டார் ராகினி.
ராகினியின் பேச்சில் மஞ்சரி, மயூரி ஶ்ரீ, அமித்து எல்லோரும் சிரித்தனர். அவர்களுக்கு ஏற்கனவே தெரியுமே. அதே நேரம் வாஷ்ரூம் கதவைத் திறந்து ரகுவீர் வந்தான்.
"ஜீஜூஷா, உங்கள் லுகாயி போட்டிருக்கிற லிப்ஸ்டிக் ப்ராண்டடா?" எனக் குறும்பு மின்னக் கேட்டாள்.
முதலில் புரியாத ரகுவீர், "ராஜ்வி கூப்பிடு, அவனைக் கேட்டு எதெல்லாம் ப்ராண்ட்ன்னு கேட்டுச் சொல்கிறேன். அவனுக்குத் தான் எக்ஸ்பீர